பெண்களின் வித்தக விந்தைகள்

சக்தி சக்திதாசன்
என் இனிய அன்பு உள்ளங்களே !
மார்ச் 8ம் திகதி உலக மகளிர் தினம். இத்தினத்தில் எனை இவ்வுலகில் ஈன்ற என் அன்னைக்கு, என்னை ஒரு மனிதனாய் உருமாற்றம் செய்ய அவள் செய்த அளப்பரிய தியாகங்களுக்கு, என்னை பண்புடை மனிதனாக வளர உதவிய என் சகோதரிகளுக்காக, சிதைந்து போன என் வாழ்வை தூக்கி நிறுத்தி இன்று என் அனுபவங்களை என் இனிய உறவுகளுடன் பகிர்ந்து கொள்ள வழி சமைத்த என் மனைவி, என் உயிர்த்தோழி, என் அன்பு மனைவிக்காக, இன்று என்னோடு உடன் பிறக்காவிட்டாலும் அண்ணா என்றும் தம்பி என்றும் என்னைத் தம் உடன்பிறப்புகளாக கெளரவிக்கும் என் தமிழன்னை தந்த சகோதரிகளுக்காகவும் இதோ இக்கவிதையைச் சமர்ப்பிக்கிறேன்
சக்தியெனக்கு கொடுத்தவள் என் அன்னை
சித்தியெனக்களித்தவள் என் அன்னை
புத்தியெனக்களித்தவள் என் அன்னை
முற்று முதலாய் அவளுக்கே என் வணக்கம்
தன்னில் ஒரு பாகம் கொடுத்து உலகில்
தந்தான் ஆதிமூலம் தந்த மகத்துவம்
எத்தனை வடிவங்கள் எடுத்துப் பெண்கள்
வித்தக விந்தைகள் புரிவர் இவ்வுலகில்
அன்னையாராக அன்பு மழை பொழிவர்
சகோதரியராக பந்தம் வளர்த்திடுவர்
காதலியராக கனவுகளை உயிர்ப்பிப்பர்
தோழியராக எம் துயர் பகிர்ந்திடுவர்
அன்றெம் முப்பாட்டன் பாரதி
ஆணித்தரமாய் அடித்துரைத்தான்
அந்நியர் அடிமை கொள்ளல் போல்
அன்னையரை அடிமை கொள்ளலாமோ?
தெள்ளிய உண்மைகளைத் தமிழில்
தெள்ளத் தெளிவாய்ச் சொன்னார் பாரதி
உள்ளத்தில் வாங்கினோமா உண்மைகளை?
உங்கள் இதயத்தைச் தொட்டுச் சொல்லுங்கள்
வேதனை பல தாங்கி உலகில் மாதர்கள்
சோதனை பல வென்று தன்னிரகற்ற
சாதனையான மகவுகள் தந்தனர் தோழரே!
போதனையல்ல சத்தியமே உண்மை
மகளிர் தினம் இதுவென்று உலகில் நாம்
மார் தட்டிக் கொள்வதில்லை பெருமை
மகளிரும் உயர்ந்தோரெனும் உண்மை
விளக்கிட்டோமா என்பதே கேள்வி?
சமுதாயக்கலாச்சாரம் எனும் போர்வையில்
மாதர்கள் கால்களில் பூட்டிட்ட விலங்குகளை
சமத்துவம் கொண்டு என்று நாமதை
உடைக்கின்றோமோ அதுவே மகளிர் தினம்
எமையீன்ற அன்னையரைப் போன்றே
சேய்களுக்கு வாழ்வை அர்ப்பணித்த
தியாகச் செம்மல்கள் அனைவருக்கும்
வணக்கங்களோடு வாழ்த்துகள்.