Blog

  • சொர்க்கமாய் இருக்குமன்றோ  

     

               ( எம் . ஜெயராமசர்மா … மெல்பேண் …. அவுஸ்திரேலியா ) 

     

     

    நிலவுலகில் நாம்வாழ நிம்மதிதான் முக்கியமே

    தலைகனத்து வாழ்ந்துவிடின் நிலையிழந்து போய்விடுவோம்

    விலையில்லா அன்பினைநாம் விலைபேசி நிற்கின்றோம்

    நலமிழக்கும் வழிநாடி நாம்போதல் முறையன்றோ

    உலகினிலே வாழுதற்கு உயர்வழிகள் பலவிருக்கு

    அதைத்தொலைத்து விட்டுவிடின் அமைந்துவிடா நல்வாழ்வு

    நிலையுணர்ந்து செயற்பட்டால் நிம்மதியாய் வாழ்ந்திடலாம்

    எனும்நினைப்பை மனமிருத்தி எல்லோரும் இயங்கிடுவோம் !

     

     

    பண்பாடு கலாசாரம் பலவாறு இருந்தாலும்

    மண்மீது வாழுதற்கு மனம்சிறத்தல் வேண்டுமன்றோ

    கண்ணான ஒழுக்கமதை கருத்தினிலே இருத்தாமல்

    எண்ணமதைச் சிதறவிடல் எவருக்கும் ஏற்றதன்று

    உண்ணாமல் உறங்காமல் ஓய்வின்றி உழைத்துழைத்து

    உபகாரம் செய்வதனை உளமிருத்த மறந்துவிட்டோம்

    எண்ணமதில் என்னாளும் இரக்ககுணம் இருத்திவிடல்

    இவ்வுலக வாழ்வினிலே எல்லோர்க்கும் தேவையன்றோ !

     

    எத்தனைதான் நிறமிருந்தும் எண்ணமெலாம் ஒருநிறமே

    என்கின்ற உயர்கருத்து எல்லோர்க்கும் வரவேண்டும்

    சத்தியத்தை மனமிருத்தி சமத்துவத்தை நிலைநிறுத்தி

    உத்தமரைப் போற்றுகின்ற உயரெண்ணம் எழல்வேண்டும்

    சுத்திவரப் பகைவரினும் சோர்ந்துவிடா மனமுடனே

    அத்தனையும் தகர்த்தெறியும் ஆற்றலினைப் பெறல்வேண்டும்

    எத்தனைநாள் வாழ்ந்தாலும் அத்தனையும் இப்புவிக்கு

    சொத்தாக அமைந்துவிடின் சொர்க்கமாய் இருக்குமன்றோ !

     

    Share
  • வரலாற்றை மீளயெழுதலும் மனித மனங்களின் இயல்புகளும் – “ஆடிப்பாவைபோல” பிரதியை முன்வைத்து…

    -செ.ர. கார்த்திக் குமரன்

    முன்னுரை

    சமகாலத் தமிழ்ப் புனைகதைப் படைப்பிலக்கியச் சூழலானது, பல்வேறு விதமான மாற்றங்களுடன் தொடர்ந்து இயங்கி வருகின்றது. இதற்குக் காரணம், தற்காலப் புனைகதைகளின் போக்கானது உலகளாவிய தளத்தில் விஸ்தரித்துள்ளதுதான். மரபுவழிப்பட்ட புனைகதைகளானவை குறிப்பிட்ட சட்டகத்துள் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுதான் படைப்புகள் வெளிவந்துள்ளன. மேலும், இவ்வகைப் படைப்புகள் பெரும்பாலும் அடிப்படை வடிவக்கூறுகளான காலவரிசையில் கதைகூறல், தர்க்கபூர்வமான நேர்கோட்டுக் கதைபின்னல், தனித்த மொழிநடை, விவரணைகளைக் களமாகக் கொள்ளுதல் என இதன் இயங்கியல் அமைந்துள்ளது. இவற்றையெல்லாம் சமகாலப்  புனைகதைகள் தவிர்த்து, பன்முகப்பட்ட, ஒன்றுக்கொன்று மாறுபாடான அல்லது முரண்பாடான கருத்தாக்கங்களை ஒரே சமயத்தில் இடம்பெறச் செய்வித்து, அதற்கேற்றாற்போல மாற்றுவடிவங்களையும் உண்டாக்கியுள்ளன. இதன்படி, அதன் உருவத்திலும் உள்ளடக்கத்திலும் உத்திகளிலும் புதுவிதமான முறைகளையும் புகுத்தியுள்ளன. புனைவுகள் வெறுமனே கற்பனைக் கதைகளை மட்டுமே வெளிக்கொணரும் என்ற நிலையினைத் தாண்டி, அரசியல், சமூகம், வரலாறு மற்றும் வாழ்வியல் சார்ந்த உளவியல் பிரச்சினைகளைச் சொல்லுக்கூடிய வகையில் அமைந்துள்ளன.

     

    மேலும் நவீன புனைகதைப் பிரதிகள், பெரும்பாலும் தற்காலச் சூழலுக்கேற்ப எழுதப்படுவது மட்டுமல்லாமல் அதில் சோதனைகளை நிகழ்த்தியும் உள்ளடக்கப் பிறழ்வோடும் எழுத்தாக்கம் பெறுகின்றன. இத்தகைய பிரதிகளை ஆய்வுக்கு உட்படுத்தும்போது அல்லது வாசிக்கும்போது நம் வாழ்க்கையில் அல்லது தேசத்தில் நிகழ்ந்த/நிகழ்ந்து கொண்டிருக்கும் சூழலை விளங்கிக்கொள்ள முடிகின்றது. அந்தவகையில், தமிழவனின் ’ஆடிப்பாவைபோல’ பிரதியானது, இந்திய – தமிழகச் சூழலில் நிகழ்ந்த வரலாற்றினையும் நவீன காலத்தில் மனித உணர்வுகளுக்கு ஏற்படும் சிக்கல்களையும் தன் எழுத்தினூடாக வெளிப்படுத்தியுள்ளதை ஆராய்வது தற்காலத் தேவையாகும்.

    தமிழவன்

    மேற்கத்திய நவீன கோட்பாடான அமைப்பியலை 1982இல் தமிழில் அறிமுகப்படுத்தியதுடன், புனைகதைகளிலும் நவநவீனக் கோட்பாடுகளை உட்புகுத்தி, மொழியில் சோதனைகளை நிகழ்த்தியவர். இவருடைய எழுத்துகள் பெரும்பாலும் எதார்த்தத்தை மீறிய குறியீட்டுத் தன்மைகொண்ட, தர்க்கபூர்வமான விவாதங்களை எழுப்பவதோடு, சமகாலப் பிரச்சினைகளையும் பேசுகின்றன. “நம்மைச் சுற்றியுள்ள உலகம் மாறிக்கொண்டிருக்கிறது. அம்மாற்றம் புதுச் சூழல்களைப் படைக்கிறது. உருவாகிவரும் புதுச் சூழல்களில் மனிதன் வாழ வேண்டியவனாகிறான். அந்நிலையில் தன்னைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் அறிந்துகொள்ள வேண்டியவனாகிறான். தனது மொழி, மனம், நாகரிகம், வரலாறு போன்றவற்றைப் பலவிதக் கேள்விகளுக்குட்படுத்துகிறான். இங்குதான் அறிவுமுறை ஒன்று மிகக் கவர்ச்சியாக உருப்பெறுவதைக் காண்கிறோம்.” என்று தமிழவன் சமகால சிந்தனைமுறைகள் மாற மாற இலக்கியங்களிலும் மாற்றம்பெறச் செய்யவேண்டும். இவற்றை அறியாமல் இருந்தால் அறிவுசார் பின்னடைவைச் சந்திக்க நேரிடும். மேலும், எல்லாச் சிந்தனைமுறைகளையும் அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் அவற்றை உள்வாங்கி ஆராய்ந்து, தமிழ்ச்சூழலில் புதியவகை மாற்றங்களை நிகழ்த்தவேண்டும் எனக் கூறுகிறார்.

    ஆடிப்பாவைபோல

    ஆடிப்பாவைபோல பிரதியானது, அகம், புறமாக இருப்பதோடு, மூன்று வாசிப்புமுறைகளிலும் அமைந்துள்ளது. இதில், மூன்றாவது வாசிப்புமுறையான மரபான வாசிப்பில் வாசிக்க நேர்ந்ததற்கான காரணம், அகம், புறம் என மாற்றிமாற்றி நம் வாழ்க்கை அல்லது தேசம் இயங்கிக்கொண்டிருப்பதால்தான். அகம் என்ற பகுதி நவீனகால அகவுலகில்/அகவுணர்ச்சியில் ஏற்படும் சிக்கல்களை எடுத்துரைப்பதாகவும் புறம் என்ற பகுதி மாணவர்களின் இந்தி எதிர்ப்புப் போராட்டம், அரசியல் அரசியல்வாதிகளின் தன்மை ஆகியவற்றை வெளிப்படுத்துவதோடு, சமகால அரசியல் குறித்த பார்வையையும் எடுத்துரைப்பதாகவும் உள்ளது எனலாம்.

    நவீனகாலச் சூழலில் அகவுணர்ச்சிகளில் ஏற்படும் சிக்கல்கள்

    வின்சென்ட், கிருபாநிதி, காந்திமதி, ஹெலன் ஆகிய கதாபாத்திரங்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின்வழி கதை இயங்குகிறது. கல்லூரியில் படிக்கும் வின்சென்ட், காந்திமதி ஆகிய இருவருக்கும் ஏற்படும் மனஉணர்வை இதில் வெளிப்படுத்தியுள்ளார். இவ்விருவரும் மரபான பண்பாட்டுத் தன்மை கொண்டவர்களாகவும் அதனைச் சார்ந்து செயல்படுபவர்களாகவும் இருக்கின்றனர். எந்தச் சூழலிலும் தங்கள் உள்ளுணர்வை வெளிப்படுத்துவதில் தயக்கங்கொண்டு, தம்மைத்தாமே பல இன்னல்களுக்கு ஆளாக்குகின்றனர். இத்துடன், பிறரிடம் எதார்த்தமாகவோ இயல்பாகவோ இருப்பதுபோல அவர்கள் பாவனை செய்ய நேர்கிறது. இன்றைய சூழலில் தன்மான உணர்வுக்குக் கட்டுப்பட்டு வாழும் மனிதர்கள் இருக்கவே செய்கின்றனர் என்பதை இதன்வழி உணரமுடிகிறது. மேலும், காந்திமதியின் குடும்பச்சூழலானது தமிழ் நாகரிகம்தான் அதனை நடத்திச் செல்கிறது என இப்பிரதியின் வாயிலாகக் கூற வைக்கிறது. இவர்கள் இருவரின் எதிர்கால வாழ்க்கை குறித்து முதல் இயலிலேயே (அகம்: இயல் 1) கதைக்குள் கதையாக சந்திப்பின் ஊடாக வெளிப்படுத்தியுள்ளார். சான்றாக,

    “வின்சென்ட் தன் எதிரில் இருக்கும் கல்லூரி மாணவி எத்தகையவள் என்று அறியும் ஆசையோடு,
    “அந்தப் பாத்திரம் பற்றிச் சொல்ல நீங்க மறந்துட்டீங்க” என்றான்.

    “மங்கையர்க்கரசி பாத்திரம் பற்றி உங்களுக்குத் தெரியாதா? சொல்றேன். சிறு வயதில் ஒரு கனவு வருகிறது இவளுக்கு. அந்தக் கனவில் ஓர் இளைஞனைப் பார்க்கிறாள். பள்ளிப்படிப்பை முடித்து ஆசிரியர் பயிற்சியையும் முடித்து ஒரு கிராமத்துக்கு –  யாரும் துணிந்து போகாதபடி தண்ணீர் இல்லாத கிராமம் – அதுக்கு ஆசிரியராகப் போகிறாள்…” …

    …அங்கே ஒருநாள், ஓர் இளைஞன். அவன் வந்த அன்றிலிருந்து அந்த ஊர் சிறுவர்களுக்குப் பல விஷயங்களைச் சொல்லிக் கொடுக்கிறான். ஊரில் அவன் புகழ் பரவுகிறது. ஊர்ப் பண்ணையாரின் மகள் இவனைக் காதலிக்கிறாள். மங்கையர்க்கரசி அறிகிறாள், அந்த இளைஞன் அவள் சிறுவயதில் கனவில் கண்ட இளைஞன் என்று. இந்த நினைவு அவளை அலைக்கழிக்க ஆரம்பிக்கிறது. இந்தமாதிரி சூழ்நிலையில் ஒருநாள் கிராமத்துப் பண்ணையாரின் மகள் இவள் தங்கியிருக்கும் வீட்டிற்கு வருகிறாள். இவளிடம் தனது காதலைப் பற்றிக் கூறுகிறாள். பண்ணையாரின் மகள் சந்தோஷத்தோடு வீடு திரும்புகிறாள். மறுநாள் என்ன நடக்கிறது தெரியுமா? கிராமத்து ஆசையோடு வந்த இந்த டீச்சர் மங்கையர்க்கரசி யாருக்கும் சொல்லாமல் கொள்ளாமல் போய்விட்டிருக்கிறாள்.”

    “கதை முடிந்ததா?” என்றான்.

    “ஆம்” என்ற காந்திமதி உணர்ச்சிவயப்பட்டவளாகக் காணப்பட்டாள். தான் ஏதும் கிண்டலடிக்கலாம் என்று தோன்றினாலும் அவள் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல் ஏதும் சொல்லி நோகடிக்கக்கூடாது என்று எண்ணியோ என்னவோ மௌனமாக இருந்தான்…

    வாயை கிளறுவோமே என்று நினைத்ததாலோ என்னவோ வின்சென்ட் காந்திமதியிடம் இப்படிக் கேட்டான்.

    “ஏன் அந்தப் பாத்திரம் பிடிக்கிறது உங்களுக்கு?”

    “தன்னுடையவன் என்று அந்த இளைஞனைப் பற்றி நினைக்காமல் இடத்தைக் காலி செய்கிறாளே. அதாவது எப்போதும் துக்கப்பட தயாராக இருக்கிறாளே.”

    “என்ன துக்கம் அவளுக்கு?” என்றும் “இது வெறும் கதைதானே” என்றும் தன் ஆள்காட்டி  விரலை வாயில் வைத்து அழுத்தியபடியே கேட்டான்.

    “முதலில் கனவில் மட்டும் கிடைப்பவன் அவன் என்று ஏற்படும் வருத்தம், துக்கம்; அதுவும் நிஜத்தில் அப்படி ஒருவன் இருக்கிறான் என்பதை அறிந்தவுடன் ஏற்படும் சந்தோஷம், அவனுக்காகச் சொந்தம் கொண்டாடிக்கொண்டு ஒருத்தி வருகிறாள் என்றவுடன் துக்கமாகிறது. அதற்கும் அடுத்துச் சாதாரணப் பெண்களைப் போல் அல்லாமல் போட்டியிடப் போகாமல் தனக்கும் பெருமை தன் துக்கத்தைத் தானே தாங்கியபடி வாழ்வது என்று முடிவு எடுத்து ஊரைவிட்டுப் புறப்படுகிறாளே… சரி இதெல்லாம் நம்ம வாழ்க்கையில் நடக்காததா? கதைதானே என்று சாதாரணமா சொல்லீட்டிங்களே” என்றாள்.” (ஆடிப்பாவைபோல, பக்.14-16)

    எனக் காந்திமதி சொல்லும் கதையில், மங்கையர்க்கரசி என்ற இளம்பெண்ணுக்கு நிகழ்ந்ததைப் போலவே தனக்கும் இறுதியில் நிகழ்கிறது. “இதெல்லாம் நம்ம வாழ்க்கையில் நடக்காததா?” என்பது தன் அகவுணர்வின் ஏற்பட்ட சிந்தனையின் படியே, இயல்பாகச் சொல்வது போல இருந்தாலும் உண்மையில் தன் வாழ்க்கையில் நடந்துவிட்டது. இதனை இறுதியான இயலில் (இயல் 19) 25 வருடங்களுக்குப் பிறகு இருவரும் ஆம்ஸ்டர்டாம் என்ற இடத்தில்  சந்திக்க நேர்கிறபோது அவர்கள் இணைகின்றதாக முடிகிறது.

    “அடுத்து சம்பந்தா சம்பந்தமில்லாமல் கேட்பவன்போல், “காந்தி” என்று அன்பு ததும்ப அழைத்தான்.

    “ம்” என்று மறுமொழி அவளிடமிருந்து எழுந்ததும் பழைய ஓர் இளமைக்கால ஆனந்த நினைப்பில் திளைப்பவள்போல் கேட்டான்.

    “கவிதை எழுதற பழக்கம் உண்டா?”

    “கவிதை எல்லாம் முழுசா மறந்துபோச்சு. நீங்க ஒங்க கட்டுரைகளைத் தவிர…?” என்று அவன் ஏதாவது வேறு எழுதுகிறானா என்று அறியும் நோக்கத்கோடு அவன் முகத்தைப் பார்த்துக் கேட்டாள். அவன், “ஒரு நாவல் எழுதியிருக்கிறேன்” என்றான் வெட்கப்பட்டுக்கொண்டே.

    அப்போது இரண்டு விமானங்கள் மெதுவாக நீலவானில் மிதந்து நிதானமாய் தூரத்தில் மறைந்தன.” (ஆடிப்பாவைபோல, ப.404) நவீன காலகட்டத்தில் இருந்தாலும் அவர்களது அகஉணர்வில் ஏற்பட்ட சிக்கல்களால் தன் அன்பை வெளிக்காட்டாமல், குறிப்பிட்ட பருவத்தில் சேரமுடியாமல் 25 வருடம் காலஇடைவெளிவிட்டு இருவரும் இணைவதை இப்பிரதி தத்ரூபமாக வெளிப்படுத்தியுள்ளது. மரபான காப்பிய இலக்கண மரபு (வருபொருள் உரைத்தல்) இந்நவீன பிரதிக்கும் பொருந்தும்படி அமைந்துள்ளது.

    இதற்கு நேர்மாறான தன்மையுடன் இருக்கும் கிருபாநிதி – ஹெலன் ஆகிய இருவரும் நவீன காலத்திற்கு ஏற்றவாறு வெளிப்படையாக இருக்கின்றனர். கிண்டல், கேலி, நகைச்சுவை உணர்வு எனச் சந்தோஷமாக இயங்குகின்றனர். இவ்விருவருக்கிடையே சிக்கல்கள் ஏற்படுவதையும் இப்பிரதி சொல்கிறது. கிருபாநிதி ஹெலன் மீது கொண்ட அதீத காதல் அல்லது உடல்ரீதியான ஆசையினால் ஏற்படும் மனச்சிக்கல் காட்டப்படுகிறது. சான்றாக,

    “காதலி கடிதம் எழுதினா என்ன தப்பு?” கிண்டல் செய்ய ஆரம்பித்தான் கிருபாநிதி.

    “உன்னப் பத்தி.”

    “நான் டெய்லி ஹாஸ்டல்ல போய் நிற்கிறேன். ஹெலன் பயப்படுறா, அப்படித்தானே?”

    “ஆமாடா, ஏன் அங்கே போய் அந்தப் பொண்ணு லைஃபைக் கெடுக்கப் பார்க்கிற. நீ அவள விரும்பினா அதுக்கு இதா வழி? மெதுவா நிதானமா இரு. மெதுவா அவளிடம் பேசி, அவ அப்பா, அம்மா பற்றி எல்லாம் தெரிந்து, அதுபோல் உன் வீட்டிலயும் பேசணும் இல்லியா?” (ஆடிப்பாவைபோல, ப.162) என கிருபாநிதி இளமைக்காலச்சூழலுக்கேற்ற வேகத்துடன், தன் காதலியை அடைய அவசரப்படுவதையும், இதனால் ஹெலனுக்கு சிக்கல்கள் ஏற்படுவதையும் இது காட்டுகிறது.

    “காந்திமதியின் வீட்டுச் சம்பவங்கள் பற்றி ஏதேனும் செய்தி கிடைத்தால் உடனடியாகத் தங்களுக்குத் தெரிவிக்கவேண்டும் என்று வின்சென்டும் கிருபாநிதியும் கூறினர் ஹெலனிடம். புறப்பட இருந்த சமயம், “சாரி” என்றான் கிருபாநிதி தயங்கியபடி.

    “எதுக்கு?” என்றாள் ஹெலன்.

    “டெய்லி ஆஜர் ஆனதுக்கு” என்று நகைச்சுவையை மீண்டும் புகுத்தினான் கிருபாநிதி.

    “அதுக்கல்ல எனக்குக் கோபம். தலைமுடி குலைஞ்சு, அழுக்குச் சட்டையும்  போட்டுக் கொண்டு. . .

    இப்படியா ஆட்கள் மாறணும்? ஹாஸ்டல விட்டு வெளியில் வந்தா எல்லாம் போயிடணுமா?” என்றாள் கோபமாக ஹெலன்.” (ஆடிப்பாவைபோல, பக்.173-174)

    நவீன காலச்சூழலில் இவர்கள் செய்யும் காதலானது, மற்றவர்களுக்கு வெளிப்படையாக தெரிந்தாலும் அதைப்பற்றிய எந்தவிதக் கவலையுமில்லை. ஆனால், தன் காதலன் தன்னைப் பார்க்கவரும்போது, அவன் பிறர் பார்வைக்கு எப்போதும் மிடுக்குடன் மற்றவரைக் கவரும்வண்ணம் நவீன ஆடவனாக இருக்கவேண்டுமென்று அவள் நினைப்பது இதன்வழி தெரிகிறது. அப்படி அவன் இல்லாதபோது அவளுக்கு பெரும் மனச்சிக்கல் ஏற்படுவதை இதில் பார்க்கமுடிகிறது. இறுதியில் இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்துகொண்ட பின்னரும் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு நீக்குவதும் நவீன காலப் பிரச்சினையாகப் புரிந்துகொள்ள முடிகிறது. இதேபோல, வின்சென்ட்டின் நண்பன் சந்தோஷம் கீழ்சாதிக்காரனாக இருப்பதால், மேல்சாதிக்காரப் பெண்ணைக் காதலித்த காரணத்தினால் கொலைச் செய்யப்படுவதும், காந்திமதியின் தந்தை விநாயகமூர்த்தி தன் மூத்தமகள் விசாலாட்சி மீது அதிக அன்பு கொண்டதால், அவருக்கு ஏற்படும் மனச்சிக்கல் குறித்தும் அவள் தற்கொலை செய்துகொண்டதால் ஏற்படும் விரக்தி குறித்தும் இப்பிரதி தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. இவ்வாறாக, அகம் என்ற பகுதியில் நவீன கால வாழ்க்கையில் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் நிகழும் அகஉணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார். மனித மனங்கள் இயங்கும் சூழலை, தத்துவார்த்தத் தன்மையில் தன் எழுத்தினூடாக சித்திரித்துள்ளார் தமிழவன்.

    மாணவர்களின் போராட்டமும் அரசியல்வாதிகள் செய்யும் அரசியலும்

    அமரன், ஜி.கே.சாமி, நெல்சன், சபாஷ் ராஜ், ஜோசப், ரவி ஆகிய கதாபாத்திரங்களுடன் பொன்வண்ணன் – மலர்க்கொடி, வான்மீகநாதன் – காமாட்சி எம்.எல்.ஏ., சுரேந்திரன், அரங்கநாதன், காம்ரேட் சட்டர்ஜி, வெங்கட்ராமன், கம்யூனிஸ்ட் சுப்ரமணியம், தர்மலிங்கம் ஆகிய அரசியல் கதாபாத்திரங்களையும் கொண்டு புறம் என்னும் பகுதியின் கதை இயங்குகிறது. இதில் அமரன் மற்றும் ஜி.கே.சாமி ஆகிய இருமாணவர்கள் கல்லூரியில் படித்துக்கொண்டே இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலும் ஈடுபடுகின்றனர். தமிழ், ஆங்கிலம் நன்கு கற்றதுடன், மேடைகளில் இந்தி எதிர்ப்பு குறித்துத் திறமையுடன் சொற்பொழிவாற்றுகிறான். இருப்பினும், மாணவர்களுக்குத் தலைமையாக இருப்பதால் அரசியலில் அவனுக்கு இடம் கிடைப்பதில்லை. ஆனால், ஜி.கே.சாமி பேச்சுத்திறனில் திறமை சற்றுக் குறைந்திருந்தாலும் அரசியல் தொடர்புடன் இயங்குவதால், அவன் அரசியலில் எளிதாக இடம்பிடித்து விடுகிறான். இம்மாணவ அமைப்புடன் சபாஷ் ராஜ் என்னும் பேராசிரியர், அரசியல் குறித்தும் அரசியல்வாதிகள் மாணவர்களை வைத்து அரசியல் செய்வதையும் எடுத்துரைக்கிறார். இன்றைய சூழலில் மாணவர்கள் அரசியலுக்கு வரத் தயங்குகின்ற அல்லது மறுக்கின்ற வேளையில், நம் முந்தைய வரலாற்றில், மாணவர்கள் போராட்டத்தின் வாயிலாக மேற்கொண்ட அரசியலை இப்பிரதி எடுத்துக்காட்டுகிறது.

    “நகரின் இந்தி எதிர்ப்பு வரலாறு – என்றைக்கும் அடிமைகளைப் போல் அடங்கி ஒடுங்கிப் பார்த்துக்கொண்டிருக்கும் கத்தோலிக்கக் கல்லூரி இக்னேஷியஸ் ஹாஸ்டல் மாணவர்களைக்கூட கோபங்கொள்ளச் செய்து – கறுப்புக் கொடி கட்ட வைத்ததோ – அன்றே தொடங்கி விட்டது…!

    …சொற்பொழிவாளன் அமரன், பேச்சில் கொச்சைப் பேச்சுப் பாணியைத் திடீரென்று புகுத்தினான்.

    “ஏங்க, முட்டாள்ள இரண்டு வகை உண்டு” என்று சொல்லி ஜனக்கூட்டத்தை வலது கையால் சுட்டியபடியே நின்றான். முழுக்கைச் சட்டை அவனை அவனுக்கே ஒரு தீர்க்கதரிசி போல் காட்டியது. ஜனக்கூட்டம் அமைதியானது. முட்டாள்களின் அந்த இரண்டு வகைமையைப் புரிந்துகொள்ள ஆர்வம் காட்டி வாய்பிளந்து நிற்கும் ஜனக்கூட்டம்.

    “ஒருத்தன் அடிமுட்டாள்…”

    என்று நிறுத்தினான். பத்து செகண்டுகள் இடைவெளிவிட்டு அடுத்து, முகத்தைக் கைக்குட்டையில் துடைத்துவிட்டுச் சொன்னான். கூட்டத்தில் அப்படி ஒரு மௌனம்.

    “இன்னொருத்தன் வடிகட்டின முட்டாள்…”

    ஜனங்கள் சிரிக்கத் தயாரானார்கள். அவர்களைத் தடுக்க கையைக் காட்டிவிட்டுத் தொடர்ந்தான்.

    “இந்த இரண்டும் சேர்ந்த ஒரு முட்டாள் இருக்கான். யாரு சொல்லுங்க…?”

    என்று ஜனக்கூட்டத்தைப் பார்த்தான். அவர்கள் ஒரு நிமிடம் விழித்தார்கள். எங்கே சொல்லிவிடுவார்களோ என்று கணநேரத்தில் உணர்ந்த பேச்சாளர் அமரன், இரண்டு கைகளையும் வானத்தில் உயர்த்தி, பின் அதே விசையில் கீழே இறக்கும் தறுவாயில் இப்படிச் சொன்னான்.

    “அவன்…

    தான்…

    நமது…

    முதலமைச்சர்…”

    ‘ஓ’ என்ற கூக்குரலும் கைத்தட்டலும் வானத்தைப் பிளந்தன.” (ஆடிப்பாவைபோல, பக்.46-47) என அமரனின் சொற்பொழிவு, அன்றைய அரசியல் தலைவர்களின் நிலையை மக்களுக்கு எடுத்துரைக்கிறது. மாணவர்கள் வெகுஜன மக்களோடு இயங்கும்போது, மேடையேறி பேசும்போது யாருக்கும் பயப்படாமல் இருக்கின்ற சூழலை இது எடுத்துக்காட்டுகிறது.

    “பின்பு பேச்சு மொழிப்போர் பற்றித் திரும்பியது. சபாஷ்ராஜ் மிகவும் தெளிவாகக் கூறினார்.

    “இன்றைக்கு நடந்துகொண்டிருப்பது ஒரு சரியான போராட்டம். ஆனால் மாணவர்களுக்கு அதைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள போதிய பலம் இல்லை. தியாகம் செய்வது அவர்கள்; தீக்குளிப்பது அவர்கள். உங்களுக்குச் சமீபத்தில் நடந்த சம்பவம் ஒன்று தெரியாது என்று நினைக்கிறேன். ஒரு ஸ்கூல் பாலகன் சமீபத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி எரிந்து செத்துப் போனான்…” …

    “எரிந்து கொண்டிருந்த பாலகனைக் காப்பாற்றாமல் ஒரு கட்சிக்காரன் என்ன செய்தான் தெரியுமா? எரிந்து கொண்டிருக்கும் தீயில் ஒரு தாளை நுழைத்து, பாதி எரிந்த தாளை எடுத்துப் பத்திரப்படுத்தினான். பின்பு அந்தத் தாள் வேறு ஒரு சிறுவனின் கையில் எழுதப்பட்டது. பத்திரிகைகளில் எல்லாம் செய்தி! என்ன தெரியுமா? தங்கள் கட்சியைச் சார்ந்த சிறுவன் ஒருவனின் தியாகம் என்று, உண்மை திரிக்கப்பட்டது. அந்தச் சிறுவன் தீ வைப்பதற்கு முன் எழுதிய கடிதமாம். அவன் அந்தக் கட்சியைச் சார்ந்தவன் என்று எழுதி வைத்திருந்தானாம்.

    “ஃபிராட்… ஃபிராட்…” என்று ஆங்கிலத்தில் சொல்லி நிறுத்தினான்.” (பக்.52-53) அரசியல்வாதிகள் மாணவர்களைத் தங்களுக்கு ஏதுவாக பயன்படுத்திக்கொண்டு அரசியல் செய்வதை இது எடுத்துக்காட்டுகிறது. மாணவர்கள் தாங்கள் நடத்தும் உண்மையான போராட்டத்தின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல் அதில் பலன்தேடும் கட்சிகளை நம்பி நம்நாடு இயங்குவதைத் தமிழவன் இதில் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார். அரசியல்வாதிகள் தங்கள் சுயலாபத்திற்காக ஒரு போராட்டத்தினைக்கூடத் திசைதிருப்பி விடுவதைச் சமகாலச் சூழலில் பதிவுசெய்வதன் வாயிலாக நம் தேசத்தின் மோசடி நிலையை உணர்ந்துகொள்ள முடிகின்றது.

    இதேபோல, நாட்டை ஆளும் ஆளுங்கட்சியினர் தங்களுடைய பதவிகளை நிலைநிறுத்திக்கொள்ளச் செய்யும் அரசியலையும் (282 – 283) எதிர்க்கட்சியினர் பதவியைப்பெறச் செய்யும் அரசியலையும் (272) அழுத்தமாகத் தன் எழுத்தினூடாகப் பதிவு செய்துள்ளார். இத்துடன், வருங்கால அரசியல்நிலை குறித்தும் குறிப்பிடுகிறார்.

    “வான்மீகநாதன்  புதிய ஆட்சியில் முக்கியமான ஆள். நான் அவருடைய காரியதரிசி. படிப்பு வரல்ல. வேற வழி. மாசம்தோறும் முந்நூறு ரூபா வந்திருதில்ல. அப்பா டிரான்ஸ்போர்ட் கம்பெனியிலிருந்து ரிட்டையர் ஆன பின்பு வான்மீகநாதனுடைய ஆபீஸில் வேலை போட்டுக் குடுத்தாரு. அவரும் நல்லா சம்பாதிக்கிறாரு. மெடிக்கல் ஸீட், இன்ஜினீயரியங்க் சீட் எல்லாம் ஊர் பக்கத்தில் உள்ளவங்க இவர்கிட்டதான் வர்றாங்க. எல்லாம் எனக்குத் தெரியும். ரயில்வே ட்ராக் பக்கத்தில பத்து ஏக்கர் இரண்டு துண்டா இரண்டு ஆட்கள் கிட்டயிருந்து வாங்கினாரு. இடையில் ரயில்வே நிலம். அதான் அந்த நிலத்தை வளைச்சு ஒட்டுமொத்தமா பெரிய நிலம் வான்மீகநாதனுக்கு வரும். எதிர்காலத்தில் ரியல் எஸ்டேட் தான் இந்தியாவில பெரிய பிஸினஸாம். மனைகளாக வருமாமே.”

    “ஆஹா, ஊரில இருக்கிற அயோக்கியன் எல்லாம் எதிர்கால இந்தியா பற்றிச் சரியாகக் கணிக்கிறான் பாரு. சரி, பொன்வண்ணன் எப்படி?”

    “பொன்வண்ணன்தான் வான்மீகநாதனுக்குப் பெரிய நண்பன். அவனும் மனைவி பெயரிலும் பள்ளிக்குப் போகிற குழந்தைகள் பெயரிலும் நிறைய நிலம் வாங்கியிருக்கிறான். கட்சிக்குள்ளே வான்மீகநாதனைக் கொண்டுவந்ததில் பெரிய பங்கு பொன்வண்ணனுக்கு ஸார்.”

    “பின்ன இருக்காதா? வேறு யாரையாவது மேல வரவிடாமலிருப்பதற்காகப் பழனி செய்திருப்பான். அவனும் இந்த அயோக்கிய கும்பலச் சேர்ந்தவன்தானே.” ” (ப.365) அரசியல்வாதிகள் எதிர்காலத்தில் தங்களுக்கு வேண்டிய வகையில் பொருளாதார ரீதியில் உயர்த்திக்கொள்ள, ஆட்சியில் இருந்தபோது செய்யும் செயல்களைச் சுட்டிக்காட்டுகிறார். மேலும், ஆளுங்கட்சியினரான வான்மீகநாதன், எதிர்கட்சியைச் சார்ந்த பொன்வண்ணனிடம் மறைமுகமாக நட்பு பாராட்டி இருப்பதும், இதனால் இவர்கள் இருவர் கையில்தான் ஆட்சியிருக்க வேண்டும் என்ற தந்திரமும் இதன்வழி வெளிப்படுகிறது. நாட்டின் தேவையையும் பொதுமக்களின் தேவையையும் நிறைவேற்றத் தவறிய ஆட்சியாளர்கள், தம் சுயநலத்தினையே பெரிதாகக் கருதிச் செயல்படுவது அப்பட்டமாக எடுத்தாளப்பட்டுள்ளது. சமகால அரசியல் சூழலும் தற்சமயம் இப்படிப்பட்ட நிலையைத்தான் கொண்டுள்ளது என்பதை எடுத்துக்காட்டும் விதமாகத் தமிழவன் தகுந்த சூழலில் இப்பிரதியினைப் படைத்துள்ளார்.

    முடிவுரை

    தமிழவன் படைத்த இந்நாவலின் பெயருக்கேற்றபடி, இன்றைய மனிதர்கள் பெரும்பாலும் அறிவு பெற்றிருந்தாலும் தொழில்நுட்ப வளர்ச்சியடைந்திருந்தாலும் பிறர் ஆட்டிவைக்க, ஆடும் பொம்மைகளாகவே சமகாலத்திலும் இயங்குவதைப் புனைவின்வழி எடுத்துரைத்துள்ளார். இன்றைய நவீன ஊடகங்களாலும் ஸ்மார்ட் ஃபோன் போன்ற பல பொருட்களாலும் நாம் சிந்தனை ரீதியான அடிமைப்பட்டு இருக்கின்ற சூழலில், இப்பிரதி, வரலாற்றினை மீளயெழுதி, எதிர்ப்புநிலை சார்ந்த சிந்தனையைக் கோரும் விதமாக படைக்கப்பட்டுள்ளது. மனித மனங்களின் உணர்வுகள் மற்றும் தேசியத்தின் அரசியலின் இயங்குநிலைகள் ஆகியவற்றைக் கூறுவதன் வாயிலாக உடல்ரீதியாக நாம் எதிர்காலத்தில் அடிமையாகிவிடக் கூடாது என்பதை உணர்த்துவதாக உள்ளது.

    இவருடைய பிற பிரதிகளில் உள்ளதைப் போன்ற மொழிநடை, உத்திமுறை, குறியீட்டுத் தன்மை போன்றவைகள் இதில் இல்லாமலிருந்தாலும், இப்பிரதியின் எதார்த்த மொழியானது, 21ஆம் நூற்றாண்டில் இருக்கும் மாணவர்கள், கல்வியாளர்கள், ஆய்வாளர்கள் எனப் பலதரப்பட்டவர்கள் வாசித்துச் செயல்படவேண்டிய பிரதியாகவும் உள்ளது எனலாம்.

    *****

    கட்டுரையாளர்
    உதவிப் பேராசிரியர்
    தமிழ்த்துறை
    தியாகராசர் கல்லூரி
    மதுரை – 625 009
    செல் : 99443 77853,
    70924 44163.

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . (265)

     

    சக்திசக்திதாசன்

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்களுடன் இந்த வார மடலில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்வடைகிறேன். மனித வாழ்க்கை என்பது நம்பிக்கையின் அத்திவாரத்திலே தான் கட்டியெழுப்பப்படுகிறது. நம்பிக்கையற்ற மனிதர் வாழ்வில் வெற்றி பெற்றதாகச் சரித்திரமேயில்லை. நம்பிக்கை என்பதை ஒவ்வொருவரும் ஏதோ ஒன்றில் அவர்களின் அறிவுக்குத் தமது வாழ்வினைச் செப்பனிடத் தேவையானது எனும் ஏதோ ஒன்றில் வைக்கிறார்கள். இவ்வகிலத்தில் பல நாடுகள் இருக்கின்றன அப்பல நாடுகளிலும் பல இன மக்கள் பல்வேறு மொழிகளைப் பேசுபவர்களாக இருக்கிறார்கள். கற்கால மனிதர் தமக்கென கொண்டிருந்த நம்பிக்கைகள், தற்கால மனிதர்களிடம் நம்பிக்கைகளிலும் இருந்து வேறுபட்டவை. அன்றைய மனிதரைக் கட்டுப்படுத்துவதற்கு அனைவருக்கும் பொதுவாக, அனைவரையும் இணைக்கக் கூடிய வலிமை மிக்க ஒரு நம்பிக்கையாக தமக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியின் மீது நம்பிக்கை வைக்கத் தலைப்பட்டார்கள்.

    அன்றைய அவர்களின் அறிவுக்கு எட்டியபடி அவர்களால் விளக்கப்பட முடியாத பல நிகழ்வுகளை விளக்குவதற்காகவும், மக்களின் வாழ்வை ஒரு நெறிமுறைக்குள் கொண்டு வருவதற்கும் ஏதுவாக இறை நம்பிக்கையை மக்களின் மனதில் நிலை நிறுத்தினார்கள். இவ்விறை நம்பிக்கையின் படி அவரவர் சமுதாயங்களில் வழிபடும் தெய்வங்களை முன்னிலைப்படுத்தி மதப்பிரிவுகளை ஏற்படுத்தினார்கள். அதைத் தொடர்ந்து காலகாலமாக இம்மத உணர்வுகளின் அடிப்படையே சமுதாயங்களின் ஸ்திரத் தன்மைக்கு அடித்தளமாக அமைந்துள்ளது. எப்படியும் வாழலாம் என்பதிலிருந்து இப்படித்தான் வாழவேண்டும் எனும் கோட்பாட்டைத் தக்க வைத்துக் கொள்வதற்காக மதக் கோட்பாடுகளை உபயோகித்தார்கள். அன்றைய காலகட்டத்தில் இதன் தேவை அவசியமாகவிருந்தது.

    காலச்சக்கரம் உருண்டோட மனித இனமானது பல மாற்றங்களுக்குள்ளானது. மனிதனுடைய விஞ்ஞான அறிவு விஸ்தீரணமடையத் தொடங்கியது. புரியாமல் இருந்த பல நிகழ்வுகளுக்கு விஞ்ஞானரீதியான விளக்கமளிக்கும் அறிவை மனித இனம் பெற்றது. அன்றைய மனிதன் கடவுளாக வழிபட்ட நிலவினிலே இன்றைய மனிதன் கால் பதிக்குமளவுக்கு அவனது விஞ்ஞான அறிவு வளர்ந்தது. இறைசக்தி என்று எதை நம்பினோமோ அவற்றை நோக்கிய எமது கேள்விகள் பல அர்த்தம் நிறைந்ததாகப் பட்டது. மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி இறைவன் எனும் மாயையின் மூலம் பலர் தமது வாழ்வை உயர்த்திக் கொள்கிறார்கள் எனும் எண்ணம் பலரின் மனதில் பலமாக தலைதூக்கியது. விளவு ஆத்திகம், நாத்திகம் எனும் பிரிவுகளின் வாதம் தலைதூக்கியது. அதன் அதிஉச்சக் கட்டமாக இன்றைய காலகட்டத்தைப் பார்க்கிறோம்.

    இங்கேதான் ஒரு பலமான கேள்வி எழுகிறது. “இறை நம்பிக்கை ” என்பது மக்களை ஏமாற்றுவதற்காக கையாளப்படும் ஒரு வழிமுறையா ? வாழ்க்கை என்பது நிலையற்றது. நாளை எமது வாழ்வில் என்ன நிகழும் என்பதனை யாருமே அறுதியிட்டுக் கூறமுடியாது. நாம் எதிர்பார்க்காத எத்தனையோ நிகழ்வுகள் பாதகமாக இருந்தாலும் சரி, சாதகமாக இருந்தாலும் சரி எம் வாழ்வினில் நிகழ்ந்திருக்கிறது, நிகழும் என்பதனை நாம் யாருமே மறுக்க முடியாது. இதுதான் யதார்த்தம். இது ஏன் எமக்கு நடந்தது ? எனும் கேள்வி எம் எல்லோருடைய மனதிலும் ஏதோ ஒரு கால கட்டத்தில் எழுந்திருக்கும் என்பதுவே உண்மை. எமக்கு நிகழ்ந்தவைகள், நிகழப் போகிறவைகளுக்கு விளக்கம் அளிக்க யாருக்குமே முடியாத நிலையில் நாம் சிலவேளைகளில் எமக்கும் மேலே ஒரு சக்தி எம்மீது இவற்றை நிகழ்விக்கிறது எனும் நம்பிக்கை கொண்டாக வேண்டியிருக்கிறது. அப்படியான நம்பிக்கை அலைபாய்ந்தோடும் எமது மனநிலையைச் சீராக்க உதவுகிறது. இன்று தனிமனித சுதந்திரம், ஜனநாயகம் என்பன பல இடங்களில் முன்னிறுத்தப்படுகின்றன.

    இறைநம்பிக்கை கொள்வது ஒவ்வொரு மனிதனதும் தனிஉரிமையாவது போல, இறைநம்பிக்கை அற்றிருப்பதுவும் அவர்களின் தனி உரிமையே. எங்கே எப்போது இவையிரண்டுக்கும் இடையில் முரண்பாடு ஏற்படுகிறது என்றால் ஒன்றின் மீது மற்றொன்றைத் திணிக்க முயலும்போதுதான்.

    சமயம், மதம் எனும் பெயரில் அடுத்தவரின் தனிஉரிமைகளைப் பறிக்கும் செயல்களை மூடநம்பிக்கை எனும் பெயரில் விமர்சித்து மாற்ற முயற்சிப்பது என்றும் தவறேயாகாது. ஆனால் அம்மூடநம்பிக்கைகள் எனும் பெயரில் ஒரு மனிதன் தன் மனதில் கொண்டிருக்கும் நம்பிக்கையின் ஆணிவேரைப் பிடுங்க முயற்சிப்பது தவறாகும். அதேபோல அர்த்தமில்லாத பல விதிமுறைகளைச் சம்பிரதாயம் எனும் பெயரில் அதை ஏற்க மறுப்போரின் மீது புகுத்த முயற்சிப்பதோ அன்றி அவற்றின் பெயரில் ஒருவரின் நியாயமான முன்னேற்றங்களைத் தடுப்பதோ தவறாகும்.

    ஆனால் இன்றைய அவசர உலகில் பலர் இறை நம்பிக்கை என்பதனைத் தவறாகப் புரிந்து கொண்டுள்ளார்கள். சமுதாயத்தில் குறுகிய மனப்பான்மை கொண்டவர்களால் மேற்கொள்ளப்படும் சுயநலப் போக்குகளை ஆத்திகவாதம் என்று பிழையாக அடையாளப் படுத்திக் கொண்டுள்ளார்கள். இன்றைய உலகில் ஏமாற்றிப் பிழைப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது உண்மையே ! நாளுக்குநாள் அதிகரித்து வரும் இந்த நிலையற்ற போக்கினைச் சமாளிப்பதாக பலர் ஆன்மீக விளக்கங்களைத் தேடி ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையால் ஆன்மீகத்தின் பெயரால் மோசடி செய்வோர் அதிகரித்திருப்பது உண்மையே ஆனால் அதற்காக இறை நம்பிக்கை கொண்ட அனைவருமே, உண்மையாக மக்களுக்கு ஆறுதலை அளிக்க ஆன்மீக வழிகளைக் காட்டும் அனைவரையும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாகப் பார்ப்பதுதான் தவறான செய்கை. தமிழின் பெயரால் பலரை ஏமாற்றி வாழ்வோரும் இருப்பதனால் நாம் அன்னைத் தமிழையே எதிர்க்கிறோமா? இல்லையே ! அது போலத்தான் ஒரு சிலரின் தவறான நடவடிக்கைக்காக ஆத்திக நம்பிக்கை உடையவர்களை தவறான கண்ணோட்டத்துடன் பார்ப்பது தவறாகிறது.

    ஒரு குழந்தைக்கு எது தவறு, எது சரி என்ற முதல் பாடம் பெற்றவர்களிடமிருந்தே கற்றுக் கொடுக்கப்படுகிறது. அப்போதிருந்தே வாழ்வில் ஒரு பிடிப்பு, நம்பிக்கை ஆகியவற்றின் முக்கியத்துவமும் கற்றுக் கொடுக்கப்படுகிறது. உண்மையான இறை நம்பிக்கை உடையவர்கள் மனிதர்களுக்குள் பேதம் பார்க்க மாட்டார்கள். மனிதர்கள் அனைவருமே சமமானவர்கள் எனும் எண்ணமே அவர்கள் மனதில் நிலைநிறுத்தப்படும். தமது மனதிலுள்ள நம்பிக்கையை வெறி எனும் நிலைக்கு உயர்த்தும்போதுதான் அங்கே வேறுபாடுகளின் எல்லைகளுக்குள் தள்ளப்படுகிறார்கள். ஆனால் இன்று இறைநம்பிக்கையைக் கடைப்பிடிப்பவர்கள் கேலி செய்யப்படும் ஒரு நிலை உருவாகிறது.அதனால் பலர் தமது ந,ம்பிக்கைகளை மறைத்து வைத்து வாழும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

    “நான் ஒரு இந்து” என்று சொல்வதில் எதுவிதமான மதவெறி உணர்வும் கிடையாது. ஆனால் எனது மதம் தான் முதன்மையானது என்று அடுத்த மதங்களையும் அதனைப் பின்பற்றுபவர்களையும் அவமரியாதை செய்வதே பிரச்சனைகளுக்கு வழி வகுக்கிறது. நாம் எவ்வாறு நாம் வணங்கும் தெய்வத்தினை நம்புகிறோமோ, அதே போலத்தான் அடுத்தவரின் நம்பிக்கையும் இருக்கும் என்பதினை நன்கு புரிந்து கொள்ளத் தவறுவதே தவறுகளின் ஆரம்பமாகிறது. அனைவரையும் மனிதர்களாக ஜாதி, மத வேறுபாடின்றி மதிக்கப் பழகுவதே முதன்மையானது. கவியரசர் கூறியது போல மதம் மனிதனுக்கு ஆடையல்ல, அணிகலன் மட்டுமே !

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • 4,500 ஆண்டுகள் பழமையான தமிழ் மொழி!

     

    பவள சங்கரி

     

    செருமனியில் உள்ள மாஃக்சு பிளான்க் என்ற அறிவியல் – மானுடவியல் வரலாற்று கல்வி நிறுவனமும், உத்தரகண்டின் டேராடூனில் அமைந்துள்ள இந்திய வன உயிர்க்கல்வி நிறுவனமும் இணைந்து நடத்திய மொழி சார்ந்த ஆய்வின் முடிவில், தமிழ் உள்ளிட்ட 82 மொழிகளைக் கொண்ட திராவிட மொழிக்குடும்பம் 4,500 ஆண்டுகள் பழமையானது என்றும் குறிப்பாக தமிழ் மொழி மிகப்பழமையான மொழி என்றும், செழுமையோடு இன்றளவிலும் பயன்பாட்டில் உள்ள மொழி என்றும் கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. சமசுகிருத மொழியும் உலகின் மூத்த மொழிகளில் ஒன்றாகக் கருதப்பட்டாலும் தமிழ் மொழியின் இலக்கியங்கள், காப்பியங்கள், கல்வெட்டுகள் போன்றவைகள் சிதையாமல் உள்ளது போன்று சமசுகிருத்தத்தில் இல்லையென்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக கி.மு. முதலாம் நூற்றாண்டில் கொரிய நாட்டிற்குச் சென்று அந்நாட்டையே உருவாக்கியவள் தமிழ் நாட்டுப் பெண்ணாக இருக்கலாம் என்பதற்கும் இந்த ஆய்வு ஆதாரமாக இருக்கின்றது!

    Share
  • கேசவ் வண்ணம் கிரேசி எண்ணம்

    கண்ணன்கை கோர்த்து காண்டீபர் செல்வதை
    கண்ணில்லா மன்னரதைக் கேட்டதும் -கண்ணன்காண்
    மந்திரி சஞ்சயா மன்னனெனை வாட்டாதே!
    எந்திரி போநீ எழவு’’….!

    திருதராட்டிரன் கோபம் கண்டு சஞ்சயன் சுதாரித்து….!

    அந்தக மன்னன் அறிவுசால் மந்திரி
    சஞ்சயன் கண்டதைக் கேட்டனன் -வெஞ்சமர்
    கூடிநின்று பாண்டவர் கூடா கெளரவரை
    வாடிநின்று பார்த்த விதம்….கிரேசி மோகன்….!

    Share
  • மனம் வென்றிடும் நேர்

    நாகினி

     

    மனம் வென்றிடும் நேர்..
    (நொண்டிச்சிந்து)

    உண்மையில் அன்பினா லே .. இனி
    .. உள்ளொன்று வைக்காத பேச்சினி லே
    சண்டைகள் வந்தாலு மே .. உயர்
    .. சங்கட மேதுமி லாதோடு மே

    தங்கிடும் அன்புட னே.. உயர்
    .. தானங்கள் செய்கின்ற தொண்டுட னே
    மங்காத பேறுபெற் றோர்..வாழும்
    .. மண்ணிதை வாழ்த்திட ஆவலுற் றோர்

    வேண்டிடும் நல்வரம் வந்தினி தே.. பேர்
    ..வெற்றியை வாங்கிடும் காலமி தே
    தூண்டிய ஊக்கமும் தந்தநல் லோர்..வாக்கு
    .. துன்பத்தை நீக்கிட வந்தசான் றோர்

    சொல்லிய அன்புடன் வாழ்வது தான்.. மேன்மை
    .. சொந்தமும் பந்தமும் உற்சாகத் தேன்
    துல்லிய மாகவே பெற்றிடுந் தேர்.. என்றே
    ..தூயம னத்தாசை வென்றிடும் நேர்!

    … நாகினி

    Share
  • விடியலை நோக்கிப் புறப்படு

    ஆ. செந்தில் குமார்.

     

     

     

     

     

     

     

     

     

     

     

    இளைஞனே!
    உன்னில் உறங்கும் ஆற்றல் உலகளவு -அது
    உன்னுள் உறங்கிப் பயனென்ன?

    உன்னை
    நசுக்கும் வலியிங்கு ஏராளம் – அதை
    நறுக்கிக் களைந்து வெளியே வா!

    உன்
    நாடு நலிந்து மெலிந்து போவதனை
    வேடிக்கை பார்த்து நிற்காதே!

    உன்
    உள்ளத்தின் அச்சத்தை அறவே தவிர்!
    உலகாளும் வல்லமை உனக்குண்டு!

    நீ
    சோம்பித் தூங்கி கழித்தது போதும்!
    சொக்கும் கண்ணைத் திற!

    நீ
    விட்டில் பூச்சியாய் வீழ்ந்தது போதும்!
    வீரு கொண்டு எழு!

    இளைஞனே!
    விடியலை நோக்கிப் புறப்படு – உலகு
    வியக்கும் வண்ணம் செயல்படு!!

    Share
  • குறியீட்டு முறைகளில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் – பகுதி 2

    -பேரா. முனைவர். வெ.இராமன்

    ஒருங்குறியில் எழுத்துக்களைச் சேர்க்க, அவை அச்சிலும் புழக்கத்திலும் இருந்ததற்கான ஆதாரம் இருந்தால் போதுமானது. சில அகராதிகளில் மட்டும் உள்ள பொதுப்பயன்பாட்டில் இல்லாத எழுத்துக்களெல்லாம் ஒருங்குறியில் ஏறி உள்ளன. இத்தனைக்கும், ஹிந்து சாத்திர, ஸ்தோத்திர நூல்களை அச்சிடுவோர் பல்லாண்டுகளாக பெரும்பான்மையாகத் துணை எண்களுடன் கூடிய எழுத்துக்களைப் பயன்படுத்துகின்றனர்.

    இதன் அடிப்படையில்தான், தமிழிலும் 2,3,4 ஆகிய துணைக்குறிகள் அடங்கிய எழுத்துக்களுக்கு தனி இடம் கேட்டு, “Extended Tamil” என்ற பகுதியை ஒதுக்கி, அதில் இவ்வெழுத்துக்களை சேர்க்க ஒருங்குறி நிறுவனத்திடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. எழுத்துமுறையும் மொழியும் ஒன்றல்ல. ஒரு மொழியானது பல்வேறு எழுத்துமுறைகளில் எழுதப்படலாம், அதே போல ஒரு எழுத்துமுறையானது பல்வேறு மொழிகளை எழுதப் பயன்படலாம். உதாரணமாக, செர்பிய மொழியானது இலத்தீன், சிரில்லிக் என்ற இரு எழுத்துமுறைகளிலும் எழுதப்படுகிறது. தேவநாகரி எழுத்துமுறையானது மராட்டி, ஹிந்தி, நேபாளம் முதலிய மொழிகளை குறிக்கப்பயன்படுகிறது. ஆகவே, ஒரு எழுத்துமுறையானது அதைச்சார்ந்த மொழியும் கூடுதலாக பிற மொழிகளையும் குறிக்கும் வேளைகளில், பல்வேறு புதிய எழுத்துக்கள் துணைக்குறிகளுடன் நீட்சியாக எழுகின்றன. இது உலகின் அனைத்து எழுத்துமுறைகளுக்கும் பொருந்தும்.

    பிற இந்திய மொழிகளை மூலபாடம் மாறாமல் தமிழ் எழுத்துமுறையில் எழுத இந்தத் துணை எண்களுடன் கூடிய எழுத்துக்கள் நிச்சயமாக உபயோகப்படும். நம்முடைய பாரம்பரிய பண்டைய சூத்திர, சாத்திர, உரைகளில் இருந்து தமிழ் நூல்களில் உச்சரிப்பும் மூலமும் மாறாமல், மேற்கோளாக காட்ட இவ்வெழுத்துக்கள் மிகவும் பயன்படும். இந்த எழுத்துக்களை பயன்படுத்த விரும்பாதவர்கள், பயன்படுத்த வேண்டாம். ஜ, ஹ, ஷ, ஸ போன்ற எழுத்துக்கள் இருந்தும் சிலர் பயன்படுத்தாதது போலத்தான் இதுவும்.

    இது போன்ற கூடுதல் எழுத்துக்கள், உதாரணமாகத் தற்காலத்தில் தமிழில் இல்லாத dha ध என்ற எழுத்துக்கூட மிக முன்னதாகவே 2000 காலத்துக்கு முற்பட்ட தமிழ் பிராமி கல்வெட்டில் காணப்படுகின்றன. இது ஜைன சமயக் கல்வெட்டு, धम्मम् த⁴ம்ம்ம் என்ற பிராகிருத சொல்லை குறிக்க இவ்வெழுத்து பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பழமையான தமிழ்க்கல்வெட்டை தற்காலத்தில் மொழிப்பெயர்க்க வேண்டுமென்றாலும் கூட த⁴ என்ற எழுத்து வேண்டும். மயிலையாரின் கூற்றுப்படி பௌத்த ஜைன சமயத்தவர்கள் தான் மணிப்பிரவாளத்தையே உருவாக்கியவர்கள். ஏதோ தமிழ் – வடமொழி தொடர்பு என்றாலே ஹிந்து மதச் சம்பந்தம் உடையது என்று கூறுபவர்கள் நிச்சயம் கருத்தில் கொள்ள வேண்டிய விஷயம் இது.

    துணை எண்களுடன் கூடிய எழுத்துக்களைச் சேர்ப்பதற்கான முன்மொழிவு ஒருங்குறி அமைப்பிடம் அளிக்கப்பட்டது. நம்முடைய சாத்திரங்கள் கிரந்தங்கள் முதலியவற்றை மூலபாடம் தவறாது தமிழ் எழுத்துமுறையில் எழுதக்கூடிய நுட்பத்தேடல் காரணங்களுக்காகவே இம்முறை கோரப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    இதற்குத் தமிழ்கூறும் நல்லுலகத்துக் கணினி உபயோகிப்பாளர்களிடமிருந்து பலத்த எதிர்ப்பும் எழுந்தது. பேராசிரியர் இ.அண்ணாமலை[1] போன்றோர் இதற்கு விரிவான விளக்கமும் தெரிவித்தனர்.

    ஒருங்குறியில் சீன மொழிக்கு 25000 (சரியான எண்ணிக்கை 20902) குறியீட்டு இடங்கள், சிங்களத்திற்கு 400 (சரியான எண்ணிக்கை, தமிழைப் போல், 128) இடங்கள், செம்மொழித் தமிழுக்கு 128 இடங்கள்தானா?” என்ற கேள்வியுடன் துவங்குகிறது. இந்தக் கேள்வி, ஒருங்குறி பற்றிய அடிப்படையான புரிதல் இல்லை என்பதைக் காட்டுகிறது. ஒருங்குறி ஒரு கருவி, உலகத்து மொழிகளை அவற்றின் எழுத்தில் கணினியில் கையாள உதவும் கருவி, எழுதுவதைத் தரப்படுத்தும் கருவி. ஒரு வரிசையில் ஒவ்வொரு மொழிக்கும் அதன் எழுத்துகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் இடம்கொடுத்து, ஒவ்வொரு எழுத்துக்கும் தனிக் குறியீட்டு எண் (code point) கொடுக்கிறது ஒருங்குறிக் கூட்டமைப்பு. சொல்லை அலகாகக் கொண்டு எழுத்து முறை அமைந்த சீன மொழியில் எழுத்துகள் அதிகமாக இருப்பது இயற்கை. தமிழ், ஒலியின் அடிப்படையில் குறைந்த எழுத்துகளைக் கொண்டு எல்லாச் சொற்களையும் படைக்கிறது. எழுத்துகள் குறைவாக இருப்பதால், தமிழுக்கு ஒருங்குறியில் குறைந்த இடங்கள். ஒருங்குறியில் இடம், மொழியின் தகுதியைப் பொறுத்து அமைவதல்ல. அதனால் குறைந்த இடங்கள் தமிழின் தரத்தைத் தாழ்த்துவது ஆகாது.

    தமிழ் எழுத்துகளுக்கு அதிக இடம் வேண்டும் என்று கணித்தமிழ் சங்கம் முதலான அமைப்புகளும், தமிழக அரசும் கேட்டது தொழில்நுட்ப அடிப்படையில். தற்போது ஒருங்குறியில் தமிழ் உயிரெழுத்துகளும் அகரமேறிய மெய்யெழுத்துகளும் தனித்தனியே குறியீட்டு எண்கள் பெறுகின்றன. உயிர்மெய் எழுத்துகளுக்குத் தனிஎண் கிடையாது. தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கையைச் சொல்லும் தொல்காப்பியம் உயிர்மெய்யெழுத்துகளைச் சேர்க்கவில்லை என்பதை இங்கே மனத்தில் கொள்ளலாம். உயிர்மெய் எழுத்துகளைக் கணினி ஒரு மென்பொருளால், (இதற்கு rendering engine என்று பெயர்), அகரமேறிய மெய்யையும் உயிர்க்குறியையும் சேர்த்து,  உருவாக்குகிறது. உயிர்மெய் எழுத்துகளுக்குத் தனியே குறியீட்டு எண்கள் ஒதுக்க வேண்டும் என்பதே மேலே சொன்ன கோரிக்கையின் மூலக் கருத்து.

    தமிழ் எழுத்துகளுக்குக் குறியீட்டு எண், ஒருங்குறியில், மற்ற இந்திய மொழிகளைப் போல, 7 பிட் அலகைப் பயன்படுத்தித் தரப்பட்டிருக்கிறது. (இது எல்லா இந்திய மொழிகளுக்கும் இந்திய அரசு அங்கீரித்த ISCII எனப்படும் குறியீட்டு முறை). அதாவது, 0, 1 என்ற இரண்டே எண்களைப் பயன்படுத்தி எந்தத் தகவலையும் எண்வயப்படுத்தும் கணினியில், 27 தகவல்களை இந்த அலகால் எண்வயப்படுத்த முடியும். கணினித் துறையில் இந்த அலகு காலாவதி ஆகி வருகிறது. இப்போது 16 பிட் அலகே (216) பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. தமிழ் எழுத்துகளை எண்வயப்படுத்த இந்த விரிந்த அலகை வேண்டுகிறது மேலே சொன்ன கோரிக்கை. தமிழ் எழுத்துகளின் விரிந்த எண்வய முறைக்கு TACE (Tamil All Character Encoding) என்று பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது. தற்போது இது ஒருங்குறியில் தனியார் பயன்படுத்த மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ள பகுதியில் இடப்பட்டிருக்கிறது.

    ஒருங்குறிக் கூட்டமைப்பு, இப்போது தமிழ் எழுத்துகளுக்குக் கொடுத்துள்ள எண்வய முறையை மாற்ற விரும்பவில்லை. ஏற்கனவே முடிவு செய்த தமிழ் எழுத்துக்கான  எண்வய முறையை மாற்றுவதால் எழும் நடைமுறைச் சிக்கல்களே இதற்குக் காரணம். முதலாவது, ஒருங்குறியில் ஒரே மாதிரியாக இந்திய மொழிகளுக்குக் கொடுக்கப்பட்டுள்ள உள்ளமைப்பை இந்த மாற்றம் பாதிக்கும். இரண்டாவது, விரிந்த எண்வய முறை அமுலுக்கு வந்தால், தமிழில் பழைய முறையில் கோக்கப்பட்ட ஆவணங்களை எளிதாகப் படிக்க முடியாது. மூன்றாவது, புதிய எண்வயமுறை இல்லாமல், சில பயனேற்ற மென்பொருள்களை (application software) – குறுஞ்செய்தி அனுப்ப, அச்சிடத் தேவையானவை – தமிழில் பிசிறில்லாமல் பயன்படுத்த முடியாது என்று சொல்லும் குறை ஒரு தொழில்நுட்பப் பிரச்சனை; கணினி வல்லுநர்கள் தீர்வு காணக் கூடிய பிரச்சனை. ஒருங்குறிக் கூட்டமைப்பின் இந்தச் சிந்தனை, தமிழின் தகுதி பற்றியது அல்ல.

    ஒருங்குறியில் தமிழுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 128 இடங்களில் 41 இடங்கள் கிரந்தத்தோடு பகிர்ந்துகொள்ளப்படும் என்பது அழைப்பில் காணப்படும் மற்றொரு தவறான விபரம். வழக்கில் உள்ள சில கிரந்த எழுத்துகளோடு சேர்த்துத் தமிழ் எழுத்துகளுக்குக் கொடுக்கப்பட்டுள்ள இடங்கள் 48. மீதியுள்ள இடங்கள் தமிழ் எண்களுக்கும் வேறு சில குறிகளுக்கும் கொடுக்கப்பட்டு, சில இடங்கள் எதிர்காலத்தில் தேவைப்படலாம் என்பதற்காகக் காலியாக விடப்பட்டுள்ளன. 41 இடங்களில் புதிய கிரந்த எழுத்துகள் இல்லை.

    டாக்டர் ஸ்ரீரமண சர்மாவின் நீட்டித்த தமிழ்[2] (Extended Tamil) பற்றிய முன்வரைவில் கிரந்த எழுத்துகளை அப்படியே தமிழ் எழுத்துகளோடு சேர்த்து எழுதும்படிச் சொல்லவில்லை. சமஸ்கிருதத்தைத் தமிழ் எழுத்துகளைக் கொண்டு எழுதும்போது, அதில் உள்ள, ஆனால் தமிழில் இல்லாத, வர்க்க எழுத்துகளையும் வேறு சில எழுத்துகளையும் (மொத்தம் 26 எழுத்துகள்) இணையான தமிழ் எழுத்துகளில் மேல்குறியிட்டு (super script) எழுதலாம் என்றே சொல்லியிருக்கிறார். அதாவது, சமஸ்கிருதத்தில் உள்ள kha, ga, gha போன்ற வர்க்க ஒலிகளை க2 க3, க4 என்றும் உயிர்ப்புடைய ரு, லு போன்ற ஒலிகளை ரு2, ல2 என்றும் எழுதலாம் என்றே சொல்கிறார். சமஸ்கிருதத்தின் இந்த ஒலிகளை கிரந்த எழுத்துகளால் எழுதும் சாத்தியத்தோடு ஒப்பிட்டு, எண்குறியிட்ட தமிழ் எழுத்துகளே ஏற்றவை என்ற தன் முடிவைச் சொல்கிறார்.

    சர்மாவின் விரிவுத் தமிழ் பரிந்துரை, சமஸ்கிருதத்தைத் தமிழ் எழுத்துகளைக் கொண்டு எழுதும், இன்றும் உள்ள, ஒரு மரபிற்குக் கணினியின் துணையை நாடுகிறது. புதிதாக ஒரு எழுத்து வழக்கைப் பரிந்துரைக்கவில்லை. இந்த மரபில் தமிழ் எழுத்துகளில் எண்குறியிட்டு எழுதும் வழக்கம் இருக்கிறது. சமஸ்கிருதத்தைத் தமிழ் எழுத்துகளைக் கொண்டு எழுதும் மரபு, அதை கிரந்த எழுத்துகளில் எழுதும் மரபிலிருந்து வேறுபட்டது.

    இந்தப் பரிந்துரை சமஸ்கிருதத்தை, தேவநாகரியில் அல்லாமல், தமிழ் எழுத்துகளில் எழுதும் முறை பற்றிய பிரச்சனை. இங்கு மொழிவேறு, எழுத்துரு வேறு என்ற உண்மையைச் சுட்ட வேண்டும். தேவநாகரி, ரோமன் போன்ற எழுத்துருக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை எழுதப் பயன்படுவது பலரும் அறிந்த உண்மை. ஒரு மொழி ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துருக்களில் எழுதப்படுவதும் உண்மை. வலைப்பதிவில் கருத்துத் தெரிவிக்கும் சிலர், தமிழ் எழுத்துரு அவர்களுக்குக் கிடைக்காததால், தமிழை ரோமன் எழுத்துகளில் எழுதினாலும் அது தமிழ் மொழிதான்.  சமஸ்கிருதத்தை, தமிழ் எழுத்துரு உட்பட, இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் வழங்கும் பல எழுத்துருக்களில் எழுதுவது வரலாறு காட்டும் உண்மை.

    சமஸ்கிருதத்தைத் தமிழ் எழுத்துருவில் எழுதுவதைத் தமிழ்மொழியின் பிரச்சனையாகப் பார்ப்பது, அது தமிழ் நெடுங்கணக்கை நீட்டிக்கிறது என்ற எண்ணத்தால், தமிழ் மக்கள் (தோசை, தலித், போகம் (‘crop’) போன்று) தாங்கள் பேசும் சொற்களில் உள்ள ஒலிப்புடைய (voiced) எழுத்துகளை (ga, da, dha, ba என்ற அவற்றின் உச்சரிப்பைக் காட்டும் முறையில்) எழுத விரும்பி, கிரந்த எழுத்துகளை (அல்லது எண் மேலேற்றிய தமிழ் எழுத்துகளைப் (க2, ட2, த2, ப2)) பயன்படுத்திவிடலாம் என்னும் பயத்தால்.

    சர்மாவின் முன்வரைவை உத்தமம் (INFITT) என்னும் தமிழைக் கணினியில் பயன்படுத்தும் முயற்சிகளில் முன்னணியில் நிற்கும் அமைப்பும், சில நிறுவனங்களும், சில தமிழ் அறிஞர்களும் ஒப்புக்கொள்ளவில்லை. இவர்கள் விரிவுத் தமிழ் ஒருங்குறியில் இடம்பெற வேண்டாம் என்று ஒருங்குறிக் குழுமியத்திற்குக் கோரிக்கை அனுப்பினார்கள்.

    இரண்டாயிரம் ஆண்டுப் பாரம்பரியம் உள்ள தமிழ் நெடுங்கணக்கை இது மாற்றுகிறது என்னும் வாதம், சமஸ்கிருதத்தைத் தமிழ்நாட்டில் எழுதும் மரபில் உள்ள பிரச்சனையைத் தமிழ் நெடுங்கணக்கிற்குள் கொண்டுவர வேண்டாம் என்னும் எண்ணத்தை அடிப்படையாகக் கொண்டது.

    விரிவுத் தமிழை எதிர்க்கும் வாதத்தின் நிலைப்பாடு இதுவே. “தமிழுக்குப் புதிய எழுத்துகள் தேவை இல்லை; தமிழர்கள் தங்கள் தமிழ் உச்சரிப்பில் காட்டும் சில புதிய ஒலிகளை வடிக்க எழுத்து வேண்டாம். தமிழ்நாட்டில் வழங்கும் தமிழல்லாத எந்த மொழியையும் தமிழ் எழுத்துகளைக் கொண்டு எழுதத் தேவை இல்லை. அதனால், ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை எழுதப் பயன்படும் ரோமன், தேவநாகரி போன்ற எழுத்து முறைகளுக்கு விரிவாக்கப்பட்ட எழுத்து (Extended Roman, Extended  Devanagari) இருப்பது போல், தமிழுக்கு எழுத்துமுறை விரிவு, கணினிக்கு மட்டுமே என்றாலும், தேவை இல்லை.”

    ஒருங்குறிக் கூட்டமைப்பு, சர்மாவின் விரிவுத் தமிழ் பரிந்துரையை ஏற்றுக்கொள்ளவில்லை. இதற்குக் காரணம் தொழில்நுட்ப ரீதியில் தேவை இல்லை என்பதே. புதிய ஒலிகளை எண் குறியீடாக ஒருங்குறியில் ஏற்கனவே இருக்கும் எண்களை வைத்தே எழுதலாம் என்பது அதன் கருத்து.

    தமிழ் எழுத்துகளுக்கு யாரும் எண்குறியிட்டுப் புதிய உச்சரிப்புகளைக் காட்ட விரும்பினால், கிரந்தம் தேவை இல்லை. இப்போது ஒருங்குறியில் உள்ள எண்களை வைத்தே, விரிவுத் தமிழ் இல்லாமலே, எழுதலாம். ஒருங்குறியில் கிரந்தத்தைத் தடுத்தாலும் இதைத் தடுக்க முடியாது.

    கிரந்த எழுத்துகளுக்கு ஒருங்குறியில் தனி இடம் ஒதுக்க வேண்டும் என்பது தனியான வேறு கோரிக்கை. ஒருங்குறியில் உள்ள எத்தனையோ எழுத்துருக்களைப் போல, கிரந்தத்திற்கும் இடம் வேண்டும் என்பதே இந்தக் கோரிக்கை. இந்தக் கோரிக்கையை இந்திய அரசு, கிரந்த எழுத்து முறை வல்லுநர் குழுவின் பரிந்துரையின் பேரில், ஒருங்குறிக் குழுமியத்திற்கு அனுப்பியது.

    கிரந்த எழுத்துக்கள் அட்டவணை[3]

    கிரந்தக் கோரிக்கையில் சில தமிழ் எழுத்துகளைக் கிரந்த நெடுங்கணக்கில் சேர்த்திருப்பதை மறுபரிசீலனை செய்யத் தமிழக அரசு நேரம் கேட்டதால், இதன் மீது முடிவெடுப்பதைக் கூட்டமைப்பு தள்ளிவைத்திருக்கிறது. இந்திய அரசின் பார்வையில் இது தமிழ் பற்றிய பிரச்சனை அல்ல. கிரந்தம் பற்றிய பிரச்சனை. எனவே, இது தமிழைப் பாதிக்கும் என்ற வாதத்தை ஒப்புக்கொள்ளாது.

    ஒருங்குறியில் கிரந்த எழுத்துகள் இடம்பெறும் தேவைக்கான பல காரணங்களில் சமஸ்கிருத்தைக் கிரந்த எழுத்துகளில் எழுதும் மரபு ஒன்று. சர்மா இந்த மரபின் தேவைக்காகவே ஒருங்குறியில் கிரந்தத்தைச் சேர்ப்பது பற்றித் தனியாக வேறு ஒரு முன்வரைவு அனுப்பினார். டாக்டர் நா. கணேசன் ஒரு முன்வரைவை அனுப்பினார். ஒருங்குறிக்கு யாரும் பரிந்துரைகள் அனுப்பலாம். தமிழும் தகவல் தொழில்நுட்பமும் அறிந்த சிலர் அனுப்புகிறார்கள். கூட்டமைப்பு தொழில்நுட்ப அடிப்படையில் பரிந்துரைகளைப் பரிசீலித்து முடிவெடுக்கிறது.  அது  நடைமுறைச் சிக்கல் உட்பட எல்லாவற்றையும் சீர்தூக்கி முடிவுசெய்யும். அரசின் பலமோ, அரசியல் விளைவுகளோ அந்த முடிவில் முக்கிய இடம் வகிப்பதில்லை.

    தமிழுக்கே உரிய மூன்று (ழ, ற ன) எழுத்துக்களையும், எ, ஒ என்ற இரண்டு உயிர்கள் மெய்யோடு சேரும்போது எழுதும் இரண்டு உயிர்க்குறிகளையும் விரிவாக்கப்பட்ட கிரந்தத்தில் சேர்க்கும் பரிந்துரை, இந்திய அரசின் கோரிக்கையில் இருக்கிறது. (எ, ஒ என்ற  இரண்டு உயிர் எழுத்துகளுக்கு கிரந்த எழுத்திலேயே கூடுதல் குறியிட்டு (diacritic marks) எழுதவே பரிந்துரை இருக்கிறது). இது, கிரந்த வல்லுநர்கள் பலர் சேர்ந்த ஒரு குழு செய்த முடிவு. ‘தமிழ் வரிவடிவம் கிரந்த வரிவடிவத்திற்குள் ஒரு சிறு பகுதியாக அடங்கிவிடுகின்றது’ என்று தவறாகவும் மிகைப்படுத்தியும் கூறுவது இதைத்தான்.

    சர்மாவின் முன்வரைவில் தமிழுக்கே உரிய ஐந்து எழுத்துகளைக் கிரந்த எழுத்துகளோடு சேர்க்கும் பரிந்துரை இல்லை. அவர் நவீன சமஸ்கிருத்தில் தமிழ் உட்பட பிறமொழிச் சொற்களை, முக்கியமாகப் பெயர்களை (names), எழுதும் தேவை ஏற்படும். அந்தத் தேவையை நிறைவு செய்யக் கிரந்த விரிவு (Extended Grantha) தேவைப்படும். அதில் கூடுதல் குறி சேர்த்த கிரந்த எழுத்துகளைச் சேர்க்கலாம் என்று சொல்கிறார். எடுத்துக்காட்டாக, z என்ற ஒலியுள்ள Xerox, zebra என்ற ஆங்கிலச் சொற்களை ஜ-இன் கீழ் இருபுள்ளி இட்டுக் காட்டலாம் என்று சொல்கிறார். தொல்காப்பியர், தமிழ் என்ற தமிழ்ச் சொற்களைச் சமஸ்கிருத்தில் எழுதும்போது, தமிழ்நாட்டில் கிரந்தம் படிக்கத் தெரிந்தவர்களுக்குத் தமிழும் படிக்கத் தெரியும் என்பதால், கிரந்தத்தில் இல்லாத எழுத்துகளையும் உயிர்க் குறிகளையும் ஒருங்குறியில் உள்ள தமிழ் எழுத்துப் பகுதியிலிருந்து இறக்கிக்கொள்ளலாம் என்று சொல்கிறார். ஆனால், இது ஒருங்குறிக் கூட்டமைப்பின் ஒவ்வொரு எழுத்து முறைக்கும் தனிப்பகுதி (block) இருக்க வேண்டும் என்னும் கொள்கைக்கு  முரணானது. எனவே, இந்திய அரசின் கோரிக்கையில் தமிழில் உள்ள மூன்று எழுத்துகள் கிரந்தப் பகுதியிலேயே சேர்க்கப்பட்டிருக்கின்றன. கிரந்த எழுத்துகளில் பல காலமாகத் தமிழ் எழுத்துகளோடு ஒரே அல்லது ஒத்த வரிவடிவம் உடைய உ, ஊ, ய, வ, ண, (த, ந) என்ற எழுத்துகள் இருந்து வருகின்றன. இந்தக் கோரிக்கையின்படி மூன்று எழுத்துகள் அதிகமாக இருக்கும்.

    கிரந்த எழுத்து முறை பற்றிய பிரச்சனையைத் தமிழின் பிரச்சனை ஆக்கத் தேவை இல்லை. இது கிரந்த எழுத்து முறையை நவீனமாக்கும் முயற்சி. தமிழ் நெடுங்கணக்கின் சில எழுத்துகள் கிரந்த எழுத்து முறையில் சேர்வது தமிழைக் கெடுப்பது ஆகாது. தமிழ் என்ற சொல்லை ஆங்கிலத்தில் ஆங்கிலேயர் உச்சரிப்பில் Tamil என்று எழுதுகிறார்கள்; தமிழ் உச்சரிப்பின்படி எழுத வேண்டும் என்றால் Thamizh என்று எழுதலாம். ஓர் ஆங்கிலேயர் Thamil என்று எழுதலாம் என்று சொன்னால், தமிழ் கெட்டுப் போகும் என்று சொல்ல மாட்டோம், அல்லவா? ஆங்கிலத்தைக் கெடுக்கிறது என்று ஆங்கிலேயர்கள் சொல்லலாம். இதேபோல், புதிய எழுத்துகள் கிரந்தத்தைக் கெடுக்கிறது என்று பழமையைப் போற்றும் சில கிரந்தவாதிகள் சொல்லலாம்.

    தமிழ் எழுத்துகளும் ரோமன் எழுத்துகளும் ஒருங்குறியில் தனித்தனியே இருந்தும், தமிழில் எழுதும்போது ரோமன் எழுத்துகளைச் சேர்க்க முடிவதுபோல, தமிழ் எழுத்துகளும் கிரந்த எழுத்துகளும் தனித்தனியே இருந்தாலும், தமிழர்கள் தமிழில் எழுதும்போது கிரந்த எழுத்துகள் சேர்ப்பதைத் தடுக்க முடியாது. அதைத் தடுக்க வேண்டுமென்றால், தொழில்நுட்பத்தை முடக்குவது வழி அல்ல, அவர்களுடைய மொழி நடத்தையை மாற்ற இசைவு வழியில் முயலுவதே வழி.

    இதுதவிர பல்வேறு குறியீட்டு முறைகள் புழங்கிய காலத்தில் தமிழக அரசு அலுவலகங்களில் வானவில் என்ற தனியார் அளித்த குறியீட்டு முறையையும் அதன் எழுத்துருக்களையும் பயன்படுத்தினர். அதன்பிறகு குறியீட்டு முறைகள் தரப்படுத்தத் துவங்கியபோதும் தமிழக அரசு அலுவலகங்கள் அதே வானவில் குறியீட்டையே பயன்படுத்தின. பின் டேம், டேப் குறியீட்டு முறையை அதிகாரப்பூர்வ குறியீட்டு முறையை அரசு அறிவித்தது. ஆனாலும் தமிழக அரசு அலுவலகங்கள் அதே வானவில் குறியீட்டையே பயன்படுத்தின. பிறகு ஒருங்குறிக்கு உலகமே மாறிய போதிலும், அரசு 2010-ல் ஒருங்குறியை அதிகாரபூர்வ குறியீட்டு முறையாக அறிவித்தபோதிலும் தற்போது வரை வானவில் முறையே பல அரசு அலுவலகங்களில் நடைமுறையில் உள்ளது. இதற்குக் காரணம் வானவில் முறை அவர்களுக்கு பழகிவிட்டது மற்றும் புதிய செயலைக் கற்றுக்கொள்ள அவர்கள் காட்டும் சோம்பலும் தான் எனலாம். அதுதவிர பழைய கோப்புகளை புதிய முறையில் மாற்றும்போது வேலைப்பளு அதிகரிக்கும் என்ற தவறான எண்ணமும்தான் காரணம் என்கிறார்கள் வல்லுநர்கள். இம்முறையிலிருந்து அதிகாரபூர்வ குறியீட்டுமுறைக்கு மாற்றுவதற்கு சரியான அதிகார பலத்துடன் ஆணையிடும் அதிகாரிகள் இல்லை என்பதும் தொழில்நுட்ப வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.

    மேலும் பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், பொதுமக்கள் ஆகியோரிடம் ஒருங்குறி, குறியீட்டு முறைகள் மற்றும் கணினியில் தமிழ் உபயோகம் குறித்த விழிப்புணர்வு இன்னமும் ஏற்படவில்லை என்பதே தொழில்நுட்ப வல்லுநர்களின் கருத்து. தமிழ் தட்டச்சு என்பது மிகப்பெரிய கடினமான பணி என்றே பலரும் கருதுகிறார்கள். கணினியும், தமிழும் தெரிந்தவர்கள் சில மணித்துளிகளிலேயே தமிழ்த் தட்டச்சு முறையைக் கற்றுக்கொள்ளலாம் என்பதே பலருக்கும் தெரியாத ஒன்று. இவ்வகையில் கற்றறிந்தவர்களிடையேயும் அறியாமை நிலவுகிறது என்பதற்கு இது ஒரு சரியான சான்று என்கிறார்கள் கல்வியாளர்கள். எனவே பல்கலைக்கழகங்கள், உயர்கல்விக்கூடங்களில்  ஆய்வுப்பணிகள் ஒன்றிணைக்கப்படாமலேயே இன்னும் சிதறிக்கிடக்கின்றன.

    இவ்வகையில் குறியீட்டு முறைகள், எழுத்துருக்கள், விசைப்பலகைகள் என மூவகைப் பணிகளையும் போதிக்கத் தேவையான மனித ஆற்றல் ஏறக்குறைய தமிழகத்தில் மிக மிகக்குறைவாகவே உள்ளது எனலாம். இத்தகைய ஆற்றல் தமிழர்கள் வாழும் அனைத்து தேசங்களிலும் பரவினால் தமிழ்க்கணினியானது உலகெங்கும் மிக அதிகமான பயன்பாட்டில் வரும் என்பதில் ஐயமில்லை.

    இங்ஙனம் பல்வேறு வகைகளில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் குறியீட்டு முறைகளைச் சிக்கலில் வைத்துள்ளன எனலாம்.

    *****

    குறிப்புகள்

    [1] http://tdil.mit.gov.in/Standards/ISCII.aspx

    [2] http://www.tscii.org/

    [3] http://www.tamilvu.org/Tamilnet99/index.htm

    [4] Tamilnadu Government, Information Technology Department, GO (Ms) No.29, dated 23.06.2010

    [5] http://unicode.org/

    [6] http://www.tamilvu.org/Tamilnet99/order.htm

    [7] கணினியில் தமிழ் நிகழ்வுகள் அமைப்பதில் உள்ள சிக்கல்கள், பக். 876 – 878

    [8] Tamilnadu Government, Information Technology department, GO (Ms) No.13, dated 10.11.2006

    [9] http://www.unicode.org/L2/L2008/08101-tace-report.pdf

    [10] Ibid

    [11] http://www.sangatham.com/news/grantha-whats-happening.html/comment-page-1

    [12] http://www.vallamai.com/?p=1666

    [13] http://tamil.oneindia.com/news/2010/10/28/insert-sanskrit-unicode-font-tamil.html

    [14] http://unicode.org/charts/

    “கணினியில் தமிழ் எழுத்துருக்களும், குறியீட்டு முறைகளும்” வெ.இராமன் (2016) மதுரை காமராசர் பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வேடு.

    *****

    கட்டுரையாளர்
    முதன்மையர், இரத்தினம் கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் – 641021
    மின்னஞ்சல்: raman600@gmail.com

     

     

    Share
  • வள்ளுவத்தில் நவீன மேலாண்மைச் சிந்தனைகள்

    -முனைவர் வீ. மீனாட்சி

    தமிழ்ச்செவ்வியல் படைப்புகளில் உலகப்பொதுமறை என்ற உயர்வைப் பெற்றது திருக்குறள். இரண்டாயிரம் ஆண்டுகள் தொன்மைகொண்ட வள்ளுவத்தின் கருத்துக்கள் இன்றைய நவீன கோட்பாடுகளுக்கும் பொருந்தி இருப்பது இதன் தனிச்சிறப்பாகும். பொதுவாக வளர்ந்தவரும் துறைகளில் ஒரு கோட்பாட்டினைப் பொருத்திப்பார்க்கும்போது அத்துறையில் அக்கோட்பாடு சிறப்பாகப் பொருந்துமானால் அது உலகப் பொதுக்கோட்பாடாக நிலைபெறும். வள்ளுவத்தின் மேலாண்மைக் கோட்பாடுகளை இன்றைய நவீன உலகின் மேலாண்மைக் கோட்பாடுகளோடு பொருத்திப்பார்க்கின்ற போது வள்ளுவரின் கோட்பாடுகள் உலகப் பொதுக்கோட்பாடாக விளங்கும் தன்மையினை உணரமுடிகிறது. இதனடிப்படையில் வள்ளுவத்தில் நவீன மேலாண்மைச் சிந்தனைகள் எனும் பொருண்மையில் இவ்வாய்வுக் கட்டுரை அமைகின்றது.

    மேலாண்மை

    மேலாண்மை என்பதற்கு ஓர் அமைப்பு, துறை, நிறுவனம் முதலியவற்றில் கட்டுப்படுத்துதல், கண்காணித்தல், பராமரித்தல் போன்றவற்றை உள்ளடக்கிய செயல்பாடு என க்ரியாவின் தற்காலத் தமிழ்அகராதி பொருள் உரைக்கின்றது.

    ஒரு தனி நபரோ, ஒரு குழு சார்ந்த தனி நபர்களோ ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியினைக் கருத்தில்கொண்டு ஆய்ந்தறிந்த முடிவுகளைத் திட்டமிடுவதோடு அவற்றைச் செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுப்பதும் பொதுவாக மேலாண்மை எனப்படுகிறது.

    மேலாண்மைத் துறையில் புகழ்பெற்ற வல்லுநரான பீட்டர் டிரக்கர் (Peter F. Drucker) நவீன நிறுவனங்களில் மேலாண்மை என்பது தவிர்க்க முடியாத அங்கமாக அமைகின்றது. இந்த அங்கத்தின் செயல்பாட்டைப் பொறுத்தே நிறுவனத்தின் நிலைப்பாடும் மேம்பாடும் அமையும் என்று மேலாண்மையின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றார்.

    மேலாண்மைத் துறையின் செயல்பாடுகள் மேலாண்மை இயக்குநர் என்பவரின் தலைமையின்கீழ் இயக்கப்படுகின்றது. ஒரு தொழில் நிறுவனத்தின் சிறந்த வளர்ச்சி அதன் தலைமையின் ஆளுமைத் திறத்தின் அடிப்படையில் அமைகிறது. அதனால் தான் ஒரு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரின் பணிகள்குறித்து இன்றைய நவீன மேலாண்மை சிந்தனையாளர்களான லூதர் குளிக் (Luther Gulick), நவீன மேலாண்மையியலின் தந்தை என்று அழைக்கப்படும் ஹென்றி ஃபாயல் (Henry Fayol), லிண்டால் அர்விக் (Lyndall Urwick) ரால்வ் டேவிஷ் (Ralph Davis) E.F.L பிரச் ((E.F.L. Brech) கூன்ஸ் ரூ ஓடோனல் (Koontz and O’ Donnell) போன்றோர் பல்வேறு வகையில் கருத்துரைத்துள்ளனர்.

    இவர்கள் அனைவரும் ஒரு நிறுவனத்தின் திட்டமிடல், ஒழுங்கமைவு, ஒருங்கிணைப்பு, கட்டுப்படுத்தல், பணியாளர் நியமனம், வழிநடத்துதல், ஊக்கப்படுத்துதல் போன்ற பல்வேறு செயல்பாடுகள் குறித்து விளக்கியுள்ளனர்.

    இதில் லூர்தர் குளிக் (Luther Gulic) எனும் நவீன மேலாண்மை அறிஞரின் நிர்வாகப் பணிகள் குறித்த ‘POSDCORB’ எனும் மேலாண்மைச் சிந்தனைகளைத் திருக்குறளில் பொருத்தி ஆராய்வதாக பின்வரும் பகுதி அமைகின்றது.

     ‘POSDCORB’ எனும் நவீன மேலாண்மைச் சிந்தனை

    1. திட்டமிடல் – Planning (P)
    2. ஒழுங்கமைவு – Organising (O)
    3. பணியமர்தல் – Staffing (S)
    4. வழிநடத்துதல் – Directing (D)
    5. ஒருங்கிணைத்தல் – Co.ordinating (CO)
    6. முறைப்படி எடுத்துரைத்தல் – Reporting (R)
    7. வரவுசெலவுத் திட்டமிடல் – Budgeting (B)

    இந்த ஏழு படிநிலைகளும் ஒரு நிர்வாகத்தில் சிறப்பாக அமைந்து விடுமானால் அந்த நிர்வாகம் ஆண்டுதோறும் பரிசினையும், பாராட்டினையும் பெறும் என்பது திண்ணம்.

    திட்டமிடல் (Planning)

    நிர்வாக இயலில் ஆழ்ந்து ஆராய்ந்து திட்டமிடல் என்பது அடிப்படைக் கூறாக அமைகிறது. எந்த ஒரு நிர்வாகமும் குறைந்த செலவில் முழுப்பயனையும் விரைவில் பெற்றிடவே விரும்பும். இதனை நன்குணர்ந்த திருவள்ளுவரும் இக்கால மேலாண்மைக் கொள்கைகளை விளக்குவது போல அருமையான கொள்கைகளை உருவாக்கித் தந்துள்ளார். தெரிந்து செயல்வகை என்ற அதிகாரம் மிகச் சிறப்பாகத் திட்டமிடலை பற்றிக் குறித்துள்ளது என்றே கூறலாம்.

    எந்த ஒரு செயலையும் முதலில் திட்டமிட்டு அதன் பிறகே செயல்படுத்த வேண்டும். முதலில் தொடங்கிவிட்டு அதற்குப்பிறகு திட்டமிட்டுக்கொள்ளலாம் என்று கருதினால் இழப்பும், தோல்வியும் வந்து சேரும். இதனை வள்ளுவர்,

         ‘எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
    எண்ணுவம் என்பது இழுக்கு’
    (467) என்கிறார்.

    நல்ல மேலாண்மை என்பது செய்யும் செயலின் நன்மை தீமைகளைத் தெளிவாக ஆராய்ந்து திட்டமிடுதலின் தன்மையைப் பொறுத்து அமைகின்றது. இதனை

         ‘அழிவதூம்உம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
    ஊதியமும் சூழ்ந்து செயல்’
    (461)

    என்கிறது குறள். எந்த ஒரு செயலையும் செய்யும்பொழுது அச்செயலால் அழிவது எது? அடுத்து ஆவது எது? அதனால் வரும் லாபம் எது? என்பதை ஆராய்ந்து பார்த்து செய்தல் வேண்டும். இவ்வாறு ஒரு மேலாண்மை இயக்குநர் தன் நிறுவனத்திற்கான திட்டங்களை நன்கு ஆராய்ந்து அமைக்க வேண்டும். பின்பு,

          ‘தெரிந்த இனத்தொடு தேர்ந்துஎண்ணிச் செய்வார்க்கு
    அரும்பொருள் யாதொன்றும் இல்’
    (462)

    என்ற குறளின்வழி அத்திட்டத்தினைத் தேர்ந்தெடுத்த அறிஞர்களோடு கலந்து ஆராய்ந்து தானும் தனித்திருந்து எண்ணி அதனைச் செயல்படுத்த வேண்டும். இத்தகைய திறமைபடைத்தவனுக்கு அடைய முடியாத அரும்பொருள் எதுவும் இல்லை. அவனுக்கு வெற்றி உறுதி என்பதை வள்ளுவர் உணர்த்துகின்றார்.

    இவ்வாறு அறிஞர்களோடு கலந்து ஆராய்ந்து கிடைத்திருக்கும் காலம், பொருள்மாற்றம் இதர வசதிகள், முயற்சிகள், மனிதவள வசதிகள் எல்லாவற்றையும் வைத்து ஒரு நிறுவனத்தை எவ்வாறு நடத்தப்போகிறோம் என்பதை திட்டமிட்டு அதனை யார், எதை, எவ்வாறு, எவ்வளவு கால அளவில் நிறைவு செய்வர் என்பதை எல்லாம் கணக்கிட்டு எதிர்நோக்கி செயல்படுவதுதான் திட்டமிடுதலின் அடுத்த கட்டமாகும். இத்தகைய திட்டமிடுதலின் கூறுகளை,

         ‘பொருள்கருவி காலம் வினைஇடனொடு ஐந்தும்
    இருள்தீர எண்ணிச் செயல்’
    (675)

    என்று ஒரு செயலைச் செய்யும்பொழுது அதற்கு வேண்டிய பொருள், துணை புரியும் கருவிகள், செய்வதற்குரிய காலம், செயலின் இயல்பு ஆகிய இவ் ஐந்தையும் தெளிவாக ஆராய்ந்து செயல்பட வேண்டும் என்கிறது வள்ளுவம்.

    மேலும் திட்டமிட வேண்டாததைத் திட்டமிடவும், திட்டமிட வேண்டியதைத் திட்டமிடாததும் நிர்வாகம் சீர்குலைவதற்குக் காரணமாகும் என வள்ளுவர் குறித்துள்ளார்.

          ‘செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
    செய்யாமை யானும் கெடும்’
    (466) என்கிறது குறள்.

    திட்டமிடுகிறபோதே ஒரு நிர்வாகத்துக்கு எந்த வகையில் எல்லாம் பகை வரும் என்பதையும் சிந்தித்துப் பார்க்கவேண்டும். நிர்வாக இடையூறுகளைப் போலவே பகை பற்றியும் சிந்திக்க வேண்டும். இதனையே வள்ளுவர்,

    ‘வகையறச் சூழாது எழுதல் பகைவரைப்
    பாத்திப் படுப்பது ஓராறு’
    (465)

    அதாவது எச்செயலையும் செய்யும்முன் அதன் வகை தொகைகளை எல்லாம் ஐயமற ஆராய்ந்த பின்னரே தொடங்க வேண்டும். இன்றேல் தோல்வியே நேரும். அது பாத்தி வகுத்து அதில் பகைவர்களை நிலைபெறச் செய்வது போலாகும் என்று திட்டமிடும் தகுதிகளை எப்படியெல்லாம் வளர்த்துக்கொள்ள வேண்டும் என வள்ளுவர் வரையறுத்துள்ள இந்தச் சிந்தனைகள் மேலாண்மையியலின் சிந்தனைகளுடன் பொருந்தியிருப்பது வள்ளுவத்தின் மாண்பை நமக்கு உணர்த்துகிறது.

    ஒழுங்கமைவு (Organising)

    நல்ல நிர்வாகத்திற்குத் தேவையான அங்கங்களைக் குறிக்கும் வள்ளுவம்,

         ‘படைகுடி கூழ்அமைச்சு நட்புஅரண் ஆறும்
    உடையான் அரசருள் ஏறு’
    (381) என்கிறது.

    இக்குறட்பா நாட்டின் அரசனுக்குக் கூறப்பட்டதாயினும் நிறுவனத்தின் அமைப்பு முறைக்கும் பொருந்தும். நிறுவனத்தில் நல்ல பணியாட்கள், பொருளாதாரம், நல்ல ஆலோசகர்கள் அமையும்போது அந்நிறுவனம் முன்னேற்றமடையும். இத்தகைய வகையில் ஒரு நிறுவனம் அமைக்கப்பட வேண்டும் என்பதை வள்ளுவர் இனம் காட்டுகின்றார்.

    பணியமர்தல் (Staffing)

    சிறந்த மேலாண்மை இயக்குநர் பணியாளரைத் தேர்வு செய்வதிலும், பணிகளைப் பகிர்ந்து அளிப்பதிலும் திறமுடையவராக இருத்தல் வேண்டும். இதனை வலி அறிதல் அதிகாரத்தின் முதல் குறளே அருமையாக விளக்குகிறது.

          ‘வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
    துணைவலியும் தூக்கிச் செயல்’
    (471)

    எச்செயலைச் செய்யும்பொழுதும் அச்செயலின் தன்மை பற்றியும், அதனை செய்து முடிக்கும் வல்லமைப் பற்றியும், அதனைத் தடுக்கக்கூடியோர் வலிமைப் பற்றியும் தமக்குத் துணையாக இருந்து செய்து முடிக்கக்கூடிய பணியாளருடைய வலிமை பற்றியும் அறிந்தவரே சிறந்த மேலாண்மையாளர் ஆவார் என்றும்,

         ‘இதனை இதனால் இவன்முடிக்கும் என்றுஆய்ந்து
    அதனை அவன்கண் விடல்’
    (517)

    செயலின் தன்மை இத்தகையது. செய்யும் வழிகள் இன்னின்னவை, இச்செயலை இன்னின்ன வழிகளால் செய்து முடிக்க வல்லவன் இவன் என்பதை ஆராய்ந்து உணர்ந்து அதற்குரியவனிடம் அச்செயலை ஒப்படைக்க வேண்டும் என்றும் வள்ளுவர் வலியுறுத்துகிறார்.

    வழிநடத்துதல் (Directing)

    மேலாண்மை குறித்து ஆராயும் அறிஞர்கள் ஒரு தொழில் நிறுவனத்தின் தலைமையில் இருப்பவர் தலைவராக இருப்பதைவிட தலைமைப் பண்புகளுக்கு உரியவராகவும் இருப்பது அவசியமானது என அறிவுறுத்துகின்றனர். இத்தகைய தலைமைப் பண்புடையோரால் மட்டுமே நிறுவனத்தை நன்கு வழிநடத்த முடியும் என்கின்றனர்.

    நிறுவனத்தின் தலைவன் தனது ஊழியனுக்கு ஒரு முன்மாதிரியாகவும், நம்பிக்கைக்கு உரியவனாக இருக்க வேண்டும். காட்சிக்கு எளியவனாகவும், கடுஞ்சொல் பேசாதவனாகவும், ஊக்கமூட்டுபவனாகவும் இருக்க வேண்டும்.

         ‘அஞ்சாமை ஈகை அறிவுஊக்கம் இந்நான்கும்
    எஞ்சாமை வேந்தற்கு இயல்பு’
    (382)

          தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
    நீங்கா நிலன்ஆள் பவர்க்கு’
    (383)

         காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
    மீக்கூறும் மன்னன் நிலம்’
    (386)

    எனும் குறட்பாக்களின் வழி  அஞ்சாமை, கொடைப்பண்பு, அறிவு, ஊக்கம் எதையும் விரைந்து செய்யும் விடாமுயற்சியும், அவற்றை அறியவல்ல கல்வியும், துணிவுடைமை ஆகிய பண்புகளும், காட்சிக்கு எளியவனாகவும் கடுஞ்சொல் கூறாதவனாகவும், மற்றவரின் குறைகளைக் கேட்கும் மனம் கொண்டவனாக இருக்கும்போது அவன் வழிகாட்டுதலின்படி அந்நிறுவனம் இயங்கும் என்பதை வள்ளுவர் இனம் காட்டுவதை உணர இயலுகிறது.

    மன உறுதி

    ஒரு தலைவன் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்துத் திட்டமிடுவதோடு மட்டுமல்லாமல் அதில் வரும் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் நிலையில் மனஉறுதி படைத்தவராக இருத்தல் வேண்டும் என்பதற்கு

         ‘எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்டம்
    வேண்டாரை வேண்டாது உலகு’
    (670)

    எனும் குறள் பொருந்துவதாக உள்ளது. பிற வலிமைகளும், பெருமைகளும், ஒருவருக்கு இருந்தாலும் நடத்தும் தொழிலில் நல்ல உறுதி இல்லாதவர்களை இவ்வுலகம் என்றுமே பாராட்டிப் போற்றாது என்பது ஒரு தலைவன்ன உலகம் போற்ற வேண்டுமானால் அவன் மனஉறுதி படைத்தவனாக செயல்பட வேண்டும் என்பதை உணர்த்துகிறது. மேலும் ஒரு நிர்வாகத் தலைவன்

    ‘சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதைஅம்பின்
    பட்டுப்பாடு ஊன்றும் களிறு’
    (597) என்னும் குறள்வழி உடம்பெல்லாம் அம்புகள் புதைந்து புண்பட்டாலும் யானை ஊக்கத்தில் தளராமல் தன் பெருமையில் நிலைநாட்டும். அதுபோல தம் உயர்விற்கு ஊறுகள் பல வந்தாலும் ஊக்கமுடையோர் உள்ளம் கலங்காமல் தம் பெருமையை நிலைநாட்டுவர் என்று உரைக்கும் வள்ளுவர் நிர்வாகத் தலைவன் தன் உயர்விற்கு தடைபல வந்தாலும் உள்ளம் கலங்காமல் மன உறுதியுடன் செயல்பட வேண்டும் என்கிறார். இன்றைய சூழலில் பல கோடி முதலீடு செய்து நிறுவனத்தை இயக்குபவர்களுக்கு இக்குறள் சாலப்பொருந்துவதாக அமைகின்றது.

    நுண்ணறிவு

    மேலும் ஒரு நிறுவனத்தின் தலைவன் தேர்ந்த நூலறிவு பெற்றவனாக இருந்தாலும் தன் நிறுவனத்தைச் செம்மையான முறையில் வழிநடத்த வேண்டுமானால் இயற்கையான நுண்ணறிவும் பெற்றிருக்க வேண்டும். இத்தகைய திறன் படைத்தவன் முன் பகைவர்களின் அதிநுட்பமான சூழ்ச்சிகளும் தகர்ந்து போகும் என்பதை,

         ‘மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
    யாஉள முன் நிற்பவை’
    (636)

    என்று வள்ளுவம் உரைக்கின்றது. ஒரு நிர்வாகத்தின் மேலாண்மை இயக்குநருக்கு ஆராய்ச்சி அறிவும் இன்றியமையாததாகும். ஒரு பணியைத் தொடங்கும் முன்பு பலம், பலவீனம், அந்தப் பணிக்குரிய எதிர்கால வாய்ப்பு, அதற்கு வரவிருக்கும் இடையூறு ஆகிய நான்கினையும் ஆராய்ந்து அறியும் திறனுடையவராக மேலாண்மை இயக்குநர் இருத்தல் வேண்டும். இந்த நான்கு கூறுகளுள் எந்த ஒன்றைப் பற்றியும் ஆராய்ச்சியில் குறை இருக்குமானால் அப்பணி வெற்றிப்பெறாது என்பது இன்றைய மேலாண்மை கொள்கையாகும். இதனையே வள்ளுவர்,

          ‘பீலிபெய் சாகாடும் அச்சு இறும் அப்பண்டம்
    சால மிகுத்துப் பெயின்’
    (475)

    அதாவது, எதிர்ப்பு மிகுந்தாலும், பலவீனம் மிகுந்தாலும் செய்யும் பணியில் தொய்வு ஏற்படும். தன் பலத்தை மிகுதியாகப் பயன்படுத்தினாலும் வாய்ப்புகளைத் தேவைக்கு அதிகமாக உருவாக்கிக் கொண்டாலும் பணியின் தரம் கெட்டுப்போகும் என்பதையே இக்குறள் பொதுக்கோட்பாடாக விளக்குகின்றது.

    நிறுவனத்தின் இலக்கு நோக்கிய விழிப்புணர்வு

    ஒரு நிறுவனத்தின் இலக்கு பற்றிய சிந்தனையை நோக்கும்போது உயர்ந்த இலக்கை நோக்கியே அந்நிறுவனத்தின் பயணம் இருக்க வேண்டும் என்பதை ‘ஊக்கம் உடைமை’ என்னும் அதிகாரத்தில்

         ‘உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல் மற்றது
    தள்ளினும், தள்ளாமை நீர்த்து’
    (596)

    என்கிறார் வள்ளுவர். அதாவது நிறுவனத்தின் தலைவன் எப்பொழுதும் உயர்ந்த குறிக்கோளை எண்ண வேண்டும். எண்ணியதை எய்த முடியாவிட்டாலும் உயர்ந்ததை எண்ணுவதற்கு ஒரு நாளும் தவறக்கூடாது.

          மேலும் ‘படைச் செருக்கு’ எனும் அதிகாரத்தில்

         ‘கானமுயல் எய்த அம்பினில் யானை
    பிழைத்த வேல் ஏந்தல் இனிது’
    (772) எனும் குறள்வழி

    காட்டு முயலைக் குறிதப்பாமல் வீழ்த்திய அம்பைக் கையால் ஏந்துவதை விட, யானை மேல்பட்டுத் தவறிய வேலை ஏந்துதல் மிகச் சிறந்ததாகும். அடைய முடியாவிட்டாலும் உன் குறிக்கோள் உயர்ந்ததாகவே இருக்கட்டும் என்கிறார். இது படைவீரர்களின் ஆண்மைக்குச் சொல்லப்பட்ட குறளாக இருந்தாலும் ஒரு நிர்வாகத்தின் தலைவன் உயர்ந்த குறிக்கோளை உடையவனாக இருக்க வேண்டும் என்பதை நமக்குத் தெளிவுறுத்துகிறது.

    இத்தகைய உயர்ந்த குறிக்கோளை அடைய விடாமுயற்சியுடன் தலைவன் செயல்படவேண்டும் என்பதை,

         ‘வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
    தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு’
    (612)

    என்கிறது குறள். நிர்வாகத்தின் இலக்கினை அடைய அதன் தலைவன் தொடங்கிய செயலை அரைகுறையாகக் கைவிட்டுவிட்டால் உலகம் அவனைப் போற்றாது. எனவே எடுத்த செயலை, எப்படியும் முயற்சிசெய்துக் குறையின்றி முடித்துவிட வேண்டும் என்கிறார் வள்ளுவர். தலைவன் செய்த செயல் அவன்நினைத்த பயனைத் தராமல் போனாலும், அவன் வருந்தி உழைத்த உழைப்பு, மேற்கண்ட முயற்சிக்கான பலன் என்பது கட்டாயம் ஒரு நாள் கிடைக்கும் என்பதை,

         ‘தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சிதன்
    மெய்வருத்தக் கூலி தரும்’
    (619)

    என்கிறது குறள். இது மேலாண்மையியல் நீண்ட நாள் திட்டம் வகுப்பவருக்குச் சாலப்பொருந்தும். ஒரு செயலைச் செய்யும்பொழுது காலநிலைமையை அனுசரித்து, இடத்தையும் தோதுபார்த்துச் செயல் செய்தால் உலகம் முழுவதையும் வெல்ல முடியும் என்பதை,

          ‘ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
    கருதி இடத்தால் செயின்’
    (484) என்னும் குறள்வழி திருவள்ளுவர் வலியுறுத்துகிறார்.

    நிர்வாக சிக்கல்களுக்குத் தீர்வு காணும் திறன்

    ஒரு நிர்வாகத்தைத் திட்டமிட்டு, இலக்கை அடைய முயற்சி மேற்கொண்டு வழிநடத்தும் மேலாண்மை இயக்குநர் நிர்வாகத்தில் ஏற்படும் சிக்கல்களுக்குச் சிறந்த முடிவெடுக்க வேண்டும்.

         ‘தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்
    சொல்லலும் வல்லது அமைச்சு’
    (634) என்பதன் மூலம்

    நிர்வாகச் சிக்கல்குறித்து நன்றாக ஆராய வேண்டும். அதனை முடிக்கும் வழிகளைச் சிந்தித்துச் செய்தல் வேண்டும். எடுக்கும் முடிவினை மற்றவரின் ஐயத்திற்கு இடமின்றித் துணிந்து கூறுதல். இத்தகைய பண்புள்ள தலைவன் எடுக்கும் முடிவு சிறப்பானதாக அமையும் என்பதை திருக்குறள் வழி அறியலாம்.

    ஊழியன் போற்றும் பண்பாளன்

    மேலாண்மையியல் ஒரு நிர்வாகத்தின் தலைவன் என்பவன் ஒரு நாட்டின் அரசனுக்கு ஒப்பானவன் என்கிறது. அத்தகைய சிறப்புக்குரிய தலைவன் என்பவன் ஊழியன் போற்றும் பண்பாளனாக இருக்க வேண்டும் என்பதை,

          ‘முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
    இறை என்று வகைப்படும்’
    (388) என்கிறது குறள்.

    நேர்மையாக, நீதி செலுத்தி, மனம் கலங்காமல் மக்களை (ஊழியர்களை) காத்தால், ஊழியர்கள் அனைவரும் அத்தலைவனைக் கண்கண்ட தெய்வமாகக் கருதிப் போற்றுவர். மேலும்

          ‘செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவு இன்றி
    எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து’
    (112)

    எனும் குறள்வழி நடுவுநிலைமையோடு ஒரு தலைவன் செயல் புரிந்தால் அந்நிறுவனத்தில் பொருளாதாரம் என்றும் நிலைப்பெறும் என்பதை அறிவுறுத்துகிறார்.

    ஓர் ஊழியனிடம் பணியினை ஒப்படைக்கும்போது அவனைப் பற்றி ஆராய்ந்து பார்க்காமல் அவனை நம்பக்கூடாது. நம்பியபின் அவனிடத்தில் ஐயப்படுவது நிர்வாகத்திற்குத் தீராத தொல்லையாக அமையும் என்பதை,

         ‘தேரான் தெளிவும் தெளிந்தான் கண் ஐயுறவும்
    தீரா இடும்பை தரும்’
    (510) என்கிறது வள்ளுவம்.

    தான் ஒரு திறன்படைத்த மேலாளரிடம் பணியாற்றுகிறோம் என்ற சிந்தனை ஒவ்வொரு ஊழியனுக்கும் இயல்பாகவே ஏற்படும் நிலையில் அந்த மேலாளரின் நடத்தை நெறிகள் அமைய வேண்டும் என்பதை,

          ‘செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார்
    பெருக்கம் பெருமித நீர்த்து’
    (431)

    என்னும் குறள்வழி கர்வம், கோபம், இழிந்த குணம், ஆகிய குற்றங்கள் இல்லாத தலைவனின் பெருவாழ்வே மதிப்பிற்குரியதாகும் என்றார் திருவள்ளுவர்.

    மேலும் ஒரு தலைவன் தன்னுடைய சக அலுவலர்கள், பணியாட்களின் எதிர்பார்ப்பை அவரின் முகக் குறிப்பால் அறியும் ஆற்றல் பெற்றவனாக இருக்க வேண்டும் என்பதை,

          ‘கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
          மாறாநீர் வையக்கு அணி’ (701)

    என்று ஒருவர் கூறாமலே அவனின் உள்ளக் கருத்தை கூர்ந்து நோக்கி அறிய வல்லவன் எப்பொழுதும் இவ்வுலகிற்கு ஓர் ஒப்பற்ற அணி ஆவான் என்கிறது வள்ளுவம். இத்தகைய பண்புடையவராக ஒரு மேலாண்மை இயக்குநர் இருப்பாரேயானால் அவர், அவரை சூழ்ந்துள்ள அனைவராலும் போற்றப்படுவார்.

    மேலாண்மைத் துறையில் தலைவனுக்கான பண்புகள் குறித்துச் சொல்லப்படும் கோட்பாடுகள் அனைத்தும் வள்ளுவத்தின் தலைமைப் பண்பு குறித்த சிந்தனைகளுடன் பொருந்தி இருப்பது வள்ளுவரின் தொலைநோக்குப் பார்வையை தெளிவுறுத்துகிறது.

    ஒருங்கிணைத்தல் (Co-ordinating)

    நிறுவனத்தின் வளர்ச்சியினைக் கருத்தில்கொண்டு செயல்படும் தலைவன் நிறுவனத்தின் பகுதிகளை ஒருங்கிணைப்பது மட்டுமல்லாமல் வளர்ச்சிக்கு அடிப்படையாக இருக்கும் ஊழியனையும் மகிழ்ச்சியோடு இலக்குகளை ஒப்புக்கொண்டு பணியாற்றும் நிலையினை ஏற்படுத்த வேண்டும்.

         ‘பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
    அதுநோக்கி வாழ்வார் பலர்’
    (528)

    அரசன் எல்லோரையும் பொதுவகையாக நோக்காமல் அவரவர் சிறப்புக்கு ஏற்றவாறு நோக்கினால், அதை விரும்பிச் சுற்றமாக வாழ்கின்றவர் பலர் ஆவர். அதைப்போலவே, ஊழியர்களின் தகுதியினையும் பணிச்சிறப்பினையும் ஆராய்ந்து அவர்களைத் தகுந்த நேரத்தில் சிறப்பித்து ஊக்கப்படுத்தும் தலைமையின் கீழ் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவர் என்பதை வள்ளுவத்தின் வழி அறியமுடிகிறது.

    முறைப்படி எடுத்துரைத்தல் (Reporting)

    நிறுவனத்தின் அறிக்கைகள், ஆக்கச் செயல்பாடுகள் குறித்து முறைப்படி எடுத்துரைக்கும் திறனைத் தலைவன் பெற்றிருக்க வேண்டும்.

    சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
          வெல்லும்சொல் இன்மை அறிந்து’ (645) என்பதோடு மட்டுமல்லாமல்

    ‘கேட்டார் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
    வேட்ப மொழிவதாம் சொல்’
    (643)

    தான் கருத்தினைச் சொல்லும்போது கேட்டவரைத் தன்வயப்படுத்தும் பண்புகளுடன், கேட்காதவரும் கேட்க விரும்புமாறு கூறும் ஆற்றல் கொண்டவனாகத் தலைவன் விளங்க வேண்டும் என வள்ளுவர் உரைப்பதும், இதனையே தலைமைப் பண்பின் முக்கியத்துவம் வாய்ந்த கூறாக மேலாண்மை வல்லுநர்களும் எடுத்துரைப்பதும் குறிப்பிடத்தகுந்தது.

    வரவு செலவுத் திட்டமிடல் (Budgeting)

    மேலாண்மையியல் துறையில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுவது நிதி மேலாண்மையாகும். செயல் திட்டங்களை நெறிப்படுத்தி நிதியினை மேம்படுத்துவதே மேலாண்மையின் இலக்காகும். இதனை,

         ‘இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
    வகுத்தலும் வல்லது அரசு’
    (385)

    பொருள்வரும் வழிகளை உருவாக்கி, அவற்றைச் சேர்த்துப் பின்னர் பாதுகாத்து, அவற்றைப் பயன்தரும் வழிகளில் செலவிட வல்லவனே சிறந்த தலைவன் என்கிறது வள்ளுவம். மேலும்,

          ‘ஆகாறு அளவிட்டிது ஆயினும் கேடில்லை
    போகாறு அகலாக் கடை’
    (478)

         ‘அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
    இல்லாகித் தோன்றாக் கெடும்’
    (479)

    என்னும் குறள்களின்வழி நிர்வாகத்தில் வருமானம் குறைவாக இருந்தாலும் செலவினம் அதைவிடப் பெருகிவிடக் கூடாது. அது பேரழிவைத் தரும் என்றும், வரவுஅறிந்து அதற்கேற்ப நிர்வாகத்தை நடத்தத் தெரியாதவனின் வாழ்க்கை பார்ப்பதற்கு பகட்டாகத் தோன்றி இறுதியில் பாழ்பட்டு விடும் என்கிறார் வள்ளுவர்.

    இதனோடு மட்டுமல்லாமல் இன்றைய சூழலில் மிகவும் தேவையான ஒவ்வொரு நிறுவனமும் கடைப்பிடிக்க வேண்டிய தொழில் அறம் (Business ethics) பற்றியும் வள்ளுவம் எடுத்துரைக்கின்றது.

    தொழில் அறம்

    தொழில் முனைவோர்கள் தான் சார்ந்துள்ள சமூகத்தின் மீது அக்கறை கொண்டவராக இருக்க வேண்டும். செல்வத்தைப் பெருக்க வேண்டும் என்ற நோக்குடன் மட்டும் செயல்படக் கூடாது. இதனை வள்ளுவர்,

          ‘நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
    அன்றே ஒழிய விடல்’
    (113)

    முறைதவறி நடப்பதால் வரும் செல்வம் நல்ல காரியத்திற்கே பயன்படுவதாக இருந்தாலும், கறைபட்ட அச்செல்வத்தை அப்பொழுதே கைவிட்டு விடவேண்டும் என்கிறார்.

    இவ்வாறு ஒரு நிறுவனத்தின் அமைப்புக் குறித்தும் அந்நிறுவனத்தை வழிநடத்தும் தலைவனின் பண்புகள் குறித்தும், நிறுவனம் முன்னேற்றமடையச் செய்யவேண்டிய வழிமுறைகள் பற்றியும் வரையறுக்கப்பட்டுள்ள இன்றைய நவீன மேலாண்மைச் சிந்தனைகள் அனைத்தும் வள்ளுவம் வகுத்துள்ள மேலாண்மைக் கோட்பாடுகளுடன் பொருந்தியிருப்பது வள்ளுவத்தின் ஆழத்தை நமக்குக் காட்டுகிறது. இதுமட்டுமல்லாமல் இனிவரும் காலங்களில் உருவாகும் புதிய கோட்பாடுகளுக்கும் வள்ளுவம் பொருந்தும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

    துணைநூற்பட்டியல்

    1. திருக்குறள் தெளிவுரை – டாக்டர் மு.வரதராசனார் கழக வெளியீடு 2011
    2. Principles and Practice of Management – L.M. Prasad, Sultan Chand & Sons Educational Publishers New Delhi 2006
    3. Principles and Practice of Management – Harold Koontz, Heinz Weihrich, A.Ramachandra Aryasri, Tata MC Grow-Hill Publishing Company Limited, New Delhi 2008
    4. Organisational Behaviour – Nirmal Singh Deep & Deep Publication Private Limited, New Delhi 2009
    5. Foundations pf Financial Management Stanley B.Block, Geoffrey A.Hirt, Bartley R.Danielsen, Published Tata MC Grow-Hill Publishing Company Limited, New Delhi 2009
    6. Leadership Theory and Practice – Peter G.Northouse, Sage Publications India Private Limited, New Delhi 2010
    7. கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி

    *****

    கட்டுரையாளர்
    உதவிப் பேராசிரியர்
    தமிழாய்வுத்துறை
    பிஷப் ஹீபர் கல்லூரி
    திருச்சிராப்பள்ளி – 620 017
    அலைபேசி எண்: 9790382356

     

    Share
  • சிட்டுக்கு செல்லச் சிட்டுக்கு…

    சிட்டே நீதான் எங்களை
    விட்டுப் பிரியவில்லையே
    சின்னஞ்சிறு மழலைபோல்
    சிங்காரமாய் நீயுமே
    தத்தித் தத்தி நடந்து வந்து
    தாளம் கற்றுத் தருகிறாய்

    உருட்டும் விழி பார்வையால்
    சுற்றுமுற்றும் நீயுமே
    ஒய்யாரமாய் பார்த்துப் பின்
    ஓட எத்தனிப்ப தென்ன?
    வைத்த அரிசி தன்னை நீ
    கொத்தித் தின்னும் அழகையே
    பெற்ற அன்னை போல் மனம்
    பார்த்து ரசித்து மகிழுமே
    கீச்சு கீச்சு என்று நீ
    கூச்சலிடும் அழகைத்தான்
    மூச்சு முட்ட நாங்களும்
    ரசித்து மகிழ்ச்சி கொள்வோமே
    அலைபேசி கோபுரங்கள் தாம்
    உன்னை அசைய வைத்தாலும்
    அசராது இன்னும் நீயே
    எங்களுக்காய் வாழ்கிறாய்
    அழகிய சிட்டே நீயும்தான்
    எங்களின் அன்புச் செல்லமடி
    எங்கள் அனைவரின் இதயமுமே
    என்றும் உனக்கான அன்னை மடி.

    – சித்ரப்ரியங்கா ராஜா.
    திருவண்ணாமலை

    Share
  • இந்த வார வல்லமையாளர் (266)

    இந்த வார வல்லமையாளராக சென்னை காவல்துறை கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் அவர்களை தேர்ந்தெடுத்து அறிவிக்கிறோம்

    போரூரில் சாலையில் வைத்து இளைஞர்களைத் தாக்கிய விவகாரம் தொடர்பாக காவல் ஆணையர் உத்தரவின் பேரில் பாதிக்கப்பட்ட இளைஞர்களின் வீட்டிற்கே நேரில் சென்று போலீஸார் மன்னிப்பு கேட்டு சம்பவம் பொதுமக்களை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

    சென்னை போரூர் பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் 3 பேரை மடக்கிய போரூர் காவல் நிலைய தலைமைக் காவலர் பாபு என்பவர் அவர்கள் செய்த ஒரு தவறுக்காக சாலையில் பொதுமக்கள் முன்னிலையில் அடித்ததால் இளைஞர்கள் அவமானத்தால் குறுகி நின்றனர்.

    நட்டநடு சாலையில் பொதுமக்கள் பலர் முன்னிலையில் காவலர் ஒருவர் இளைஞர்களைத் தாக்கும் சம்பவத்தை அவ்வழியாக சென்ற ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துப் பகிர்ந்தார்.

    இந்த வீடியோ பதிவு காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இது குறித்து விசாரிக்க அவர் உத்தரவிட்டார்.

    விசாரணையில் காவலர் மீது தவறு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட இளைஞர்களின் வீட்டுக்குச் சென்று அந்தக் காவலரை மன்னிப்பு கேட்க ஆணையர் உத்தரவிட்டார்.

    ஆணையரின் உத்தரவை அடுத்து ராமாபுரத்தில் உள்ள சம்பந்தப்பட்ட இளைஞர்களின் வீடுகளுக்கு அம்பத்தூர் காவல் துணை ஆணையர் சர்வேஷ்ராஜ் மற்றும் உதவி ஆணையர் கண்ணன் உள்ளிட்ட காவல்துறையினர் காவலர் பாபுவுடன் சென்றனர். மொத்தமாக போலீஸார் வந்ததைப் பார்த்த பாதிக்கப்பட்ட இளைஞர்களின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

    ஆனால் அவர்களிடம் பேச்சுகொடுத்த துணை ஆணையரும், உதவி ஆணையரும் ‘பயப்படாதீர்கள், அன்று நடந்த சம்பவத்தில் எங்கள் காவலர் தவறிழைத்துள்ளார். பாதிக்கப்பட்ட தம்பிகளைப் பார்த்து தனது வருத்தத்தைக் கூறி மன்னிப்பு கேட்க வந்துள்ளார்’ என்று கூறியுள்ளனர்.

    ஒரு கணம் தங்களை மறந்த பெற்றோர் ‘பரவாயில்லை சார்’ என்று கூறியுள்ளனர். இல்லை. சம்பந்தப்பட்ட இளைஞர்களை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்க, கமிஷனர் உத்தரவு என்று அதிகாரிகள் கூறி 3 இளைஞர்களையும் அழைத்து வருமாறு கூறினர்.

    பின்னர் அழைத்து வரப்பட்ட இளைஞர்களிடம், அதிகாரிகள் முன்னிலையில் காவலர் பாபு மன்னிப்பு கேட்டு, ‘எதையும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டாம்’ என்று கூற நெகிழ்ந்து போன அந்த இளைஞர்கள் சார் நாங்கள் அதை அன்றே மறந்துவிட்டோம். எங்களுக்கு ஒரு அண்ணன் இருந்து கண்டித்தது போல் எடுத்துக்கொண்டோம் என்று கூறியுள்ளனர்.

    ஆனாலும் காவலர் பாபு, ‘நான் செய்தது தவறுதான், அவர்களை அடித்திருக்கக் கூடாது’ என்று கூற, ‘நாங்கள் தான் சார் தவறு செய்துவிட்டோம் என்று இளைஞர்கள் கூற நெகிழ்ச்சியான ஒரு நிகழ்வை பார்த்த அக்கம் பக்கத்தினரும் நெகிழ்ந்து போயுள்ளனர்.

    இளைஞர்களுக்கு அப்துல்கலாமின் அக்னி சிறகுகள் புத்தகமும், இனிப்புகளும் அளித்த துணை ஆணையர் சர்வேஸ்ராஜ் அறிவுரை வழங்கினார். பின்னர், காவலர் பாபுவிற்கு அந்த இடத்திலேயே உதவி ஆணையர் கண்ணன் ஆலோசனை வழங்கினார்.

    காவலரால் தாக்கப்பட்ட இளைஞர்களின் மனநிலை பாதிக்கப்படும், அவர்கள் போலீஸாரை விரோதியாகவே பார்ப்பார்கள் என்பதை உணர்ந்து போலீஸாருக்கும் பாடமாக, அதே சமயத்தில் இளைஞர்களும் அவர்கள் தவறை உணரும் வண்ணம் அவர்கள் வீட்டிற்கே போலீஸ் உயரதிகாரிகள் சென்று வருத்தம் தெரிவித்தது நெகிழ்ச்சியானதாக அமைந்தது.

    இந்த நல்ல மாற்றம் நாடெங்கும் தொடர கமிஷனர் விஸ்வநாதன் அவர்களின் முன்னுதாரணம் உதவும் எனும் நோக்கில் அவரை இவ்வார வல்லமையாளராக அறிவிக்கிறோம்.

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.comvallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 )

    Share
  • படக்கவிதைப் போட்டி 152-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    நெகிழியின் உள்ளிருக்கும் குடத்தைத் தொட்டு நெகிழும் மக்களைத் தன் ஒளிப்படப்பெட்டிக்குள் அழகாய் ஒளித்து வந்திருக்கிறார் திரு. ஜேக்சன் ஹெர்பி. இப்படத்தைப் போட்டிக்குத் தெரிவுசெய்து தந்திருக்கிறார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன்.  இவர்கள் இருவருக்கும் என் நன்றி.

    இலவசங்கள்மூலம் மக்களைத் தம் வசப்படுத்தி அவற்றிற்கு அடிமையாய் அவர்களை மாற்றும் அவலத்தை ஆரம்பித்துவைத்த பெருமை அரசியல்கட்சிகளையே சாரும். சுயஉழைப்பின்றிக் கிடைக்கும் பொருட்களுக்கும் களவாடிக் கைக்கொள்ளும் பொருட்களுக்கும் பெரிய வேறுபாடில்லை. ஆதலால், இலவசப் பொருட்களைப் பொருட்படுத்தாது அவற்றை உதறித்தள்ளும் தன்மானத்தோடு மக்கள் வாழும் நாளே நன்னாள்…போற்றத்தக்க பொன்னாள்!

    இனி,  கவிபாட கவிஞர்களை அழைப்போம்!

    ’கையூட்டு இல்லாச் சமூகம் மலர, மக்கள் கையேந்தாமல் உழைத்து வாழ உறுதி ஏற்பதே ஒரே வழி’ என்பது திரு. ஏ.ஆர்.முருகன், மயிலம்பாடியின் கருத்து.

    உழைப்பே உயர்வு!!

    முண்டியடித்து முன்னேறிச்சென்று
    கைகளை நீட்டி யாசகம் கேட்பது
    அடிக்கடி நிகழ்கின்ற அவலம்!!
    ஆன்மீக விழாவோ அரசியலோ
    எதுவாயினும் இலவசங்கள்
    இல்லாமல் நடப்பதே யில்லை!!
    வாங்கும் வசதி வாய்க்கவேண்டி
    வாழ்ந்திடப் பழகிக்கணும்!!
    வாக்குகளையும் விலை தந்து
    வாங்கும் நிலை வந்ததினால்
    அதிகம் தருபவன் வெற்றிபெற்று
    அதைவிடத் திருடுபனாகிறான்!!
    தவறுகளுக்குக் காரணகர்த்தா
    தருபவரைவிட பெறுபவர்தானே!!
    மீன்களைபெற்றால் உணவாகும்
    அதைப்பிடிக்ககற்க உயர்வுவரும்!!
    கையூட்டு இல்லா நல்லசமுதாயம்
    கண்டிட வேணுமென்றால் யாரும்
    கண்டிப்பாய் ஏந்திட மாட்டோம்
    கரங்களை எனஉறுதியேற்கணும்!!
    உழைத்துச்சேர்த்து பொண்டுபுள்ள
    உறவு நட்புக்கு கடமை செய்வதே
    உண்மையான அன்பளிப்பாகும்!!
    ஊரான்காசு எதுக்கு வேணும்???..

    *****

    ’ஏற்பது இகழ்ச்சி’ எனும் ஔவை சொல்லை அமுதமாய்க் கொண்டு உழைத்துப் பிழைப்போம் என்கிறார் திரு. பழ.செல்வமாணிக்கம்.

    உழைத்து வாழ்வோம்

    “ஏற்பது இகழ்ச்சி”!
    இது ஔவையின் அமுத மொழி!
    இதை உணர்ந்தோர் வாழ்க்கை!
    என்றும் மகிழ்ச்சி வழி!
    இலவசம் என்ற ஒன்று உலகில் இல்லை!
    இலவசத்தின் முடிவு என்றும் தொல்லை!
    தூண்டில் புழு,மீனுக்கு எமனாகும்!
    இலவசம், நம் வளர்ச்சிக்கு எமனாகும்!
    இதை உணர்ந்தவர் வாழ்வு என்றும் இனிதாகும்!
    வாங்கும் கைகள் தாழ்ந்திருக்கும்!
    உழைப்பை நாளும் மறந்திருக்கும்!
    சோம்பல் தானே துணையிருக்கும்!
    உழைப்பை இன்றே விதைத்திடுவோம்!
    பலனை உரிமையுடன் அனுபவிப்போம்!
    உழைப்பின்றி கிடைக்கும் பயனெல்லாம்!
    களவில் வந்ததாய் புறக்கணிப்போம்!

    ***** 

    ’குடமும் குத்துவிளக்கும் கொடுத்து ஆட்சியைப் பிடிக்கும் மடமைக்குத் துணை போகாதீர் மானிடரே!’ என்று மக்களை எச்சரிக்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    பரிசாய்…

    பரிசுகள் வேண்டும் வெற்றிக்கு
    பார்க்கும் இலவசம் பரிசில்லை,
    பெரிதாய்க் குடமும் குத்துவிளக்கும்
    கொடுப்ப தில்லை வெற்றியையே,
    அரசியல் அவலமாய் வந்ததிதுவே
    ஆசை அதன்மேல் வேண்டாமே,
    உரிய பரிசினைப் பெற்றிடவே
    உழைத்திடு உண்மையாய் வாழ்வினிலே…!

    ***** 

    ’உழைப்பின் உயர்வறியா மூடர்களே…! ஈயென இரத்தல் இழிவென்பதை உணர்ந்து உழைக்க வாரீர்!’ என்று இலவசங்களில் சுகம் கண்டவரைச் சாடுகின்றார் திருமிகு. மா. பத்மபிரியா, உதவிப்பேராசிரியர், எஸ்.எஃப். ஆர். மகளிர் கல்லூரி, சிவகாசி.

    இலவசங்களில் தடம்புரளும் உள்ளங்கள்
    இரண்டு கரங்கள் இருந்தென்ன
    இரத்தல் இழிவென புரியாதா
    உழைப்பின் உயர்வறியா மூடர்களே !
    உயர்த்தும் கரங்களில் கறை காணீர் !
    இலவசம் வழங்கியே பிழைப்போரும்
    இலவசம் வாங்கியே பிழைப்போரும்
    மனிதர்களில் பிழைகளாக……
    உடல் களைக்க உழைப்பவரும்
    உடல் ஊனம் மறந்து உழைப்பவரும்
    உணர்த்தும் நியதி புரியாது
    உண்டுறங்கும் மானிடமே
    இருக்கிறவர் இல்லாதவர் பேதமின்றி ……..
    இலவசத்தின் வசமானவரே !
    இளமையின் வேகம் இது தானா
    இலட்சியம் தொலைப்பது சரி தானா
    ஈயென இரத்தல் இழிவாகும்
    ஈயாய் மொய்ப்பது அவமானம்
    இல்லாமை ஒழிக்க இலவசமா
    பிழைப்பற்ற மானுடரே !
    பிழைத்தெழுவீர் இப்போது

     ***** 

    ஓட்டுக்குப் பேரம் பேசும் அரசியல்வாதிகளையும் அதை நம்பி ஓட்டை விற்கும் மக்களையும் பகடிசெய்து கவிதை படைத்திருக்கின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    வருகின்ற தேர்தலில்..!

    வருகின்ற தேர்தலில் மறக்காமல் வாக்களிக்க.
    ……….வாரிக் கொடுக்கிறோம் பெற்றுச் செல்லுங்கள்..!.
    தருகின்ற இனாமெல்லாம் போதா தென்றால்.
    ……….தராசுக் கிணையாய் மேலும்பலவும் தருவோம்..!.
    பொறுத்திருந்து பாரும்!நாங்கள் ஆட்சியைப்.
    ……….பிடித்தால் நீங்களினி பொதி சுமக்கவேணாம்..!.
    தருமிந்த இனாமுக்கு வெகுமதியாக உங்கள்.
    ……….தங்கமான ஓட்டை எங்களுக்குத் தந்திடுவீரே..! 

    இப்போது பெற்றிடுவீர் ஈதொரு அடையாளம்.
    ……….இந்தச்சிறிய எவர்சில்வர் குடத்தை மட்டுமே..!.
    அப்போது கொடுத் திடுவோம் ஆளுக்கொரு.
    ……….அண்டா குண்டாவும் அரிதான வெள்ளியிலே..!.
    ஒப்பாகா உங்களுயர்ந்த வாக்குரிமையை வேறு.
    ……….ஒருவருக்கும் விற்று விடாதீர் வேண்டுகிறோம்..!.
    தப்பாது வாக்களியுங்கள் தாங்கள் மனசாட்சி.
    ……….தவறா தெங்களை வெற்றியுறச் செய்யுங்கள் ..!

    ***** 

    இலவசக் குடத்துக்கு ஆசைப்பட்டு தம் குடிப்பெருமையை அடகுவைக்கும் மக்களின் மடமையை சுருக்கென்று அருமையாய்ச்  சொல்லியுள்ளார் திருமிகு. அவ்வைமகள்.

    குடிமுழுக்கு

    குடமொழுக்கிக் குடமுயக்கில் குடமுழுக்கிக் குடிப்பூட்டிக்
    குடி வழுத்தும் குடிமுழுக்கு

    *****

    இலவசக் குடத்தை வைத்து மனித உளவியலை இனிய சொல்லோவியங்களாய்த் தீட்டிக் காட்டியுள்ள புலவர்களுக்கு என் பாராட்டு!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தேர்வாகியிருப்பது அடுத்து… 

    மனிதா உணர்ந்திடு உன் ஆற்றலை…!

    சுடரொளிச் கண்கள், செப்பும் நல்வாய்,
    வயிரம் பாய்ந்த மரநிகர் உடம்பில்
    வயதின் மூப்பு தோன்றிட வில்லை..
    நாற்றம் உணர்ந்திட அமைந்தவோர் நாசியில்
    நலமே யன்றி குறைவேது மில்லை…
    கேட்டு இன்புறும் செவிக ளிரண்டில்
    கூரிய செவித்திறன் குறையவு மில்லை…
    இத்தனைச் சிறப்புகள் மெத்தவும் இருந்தும்…
    இலவசம் என்பதற் கலைவதும் ஏனோ…?

    ஐம்பொறி யனைத்தையும் ஒருங்கே பெற்று…
    ஐயத்திற் கிடமில்லா ஆற்றலும் பெற்று…
    கைகளும் கால்களும் உறுதியைப் பெற்று…
    கையாளும் வினைகளில் வல்லமை பெற்று…
    சுட்டும் அறிவாம் பகுத்தறி வுடனே…
    சிந்திக்கும் திறமை எல்லாம் பெற்று…
    இலங்கும் இனிய மானிடப் பிறப்பே…
    இத்தனை இத்தனை ஆற்றல் இருந்தும்…
    இரந்து வாழ்தல் என்பது நலமா…?

    ஓரறிவு முதலாய் ஐந்தறிவு வரையுள்ள…
    ஓர்மம் கொண்ட உயிர்கள் யாவும்…
    தனக்கென் றேதும் கேட்ப தில்லை…
    தனக்கென் றேதும் கொள்வ தில்லை…
    இருப்பதைக் கொண்டு மகிழா விட்டால்..
    இதயம் அமைதி பெற இயன்றிடுமா…? 

    ஓரறிவு முதலாய் ஐயறிவுயிர்கள் ஈறாய்த் தமக்கென்று எதுவும் கேட்காமல் உழைத்துப் பிழைக்கையில், ஐம்புலன்களிலும் அளப்பரிய ஆற்றலை வரமாய்ப் பெற்றிருக்கும் மானுடர் மட்டும் ஏன் பகுத்தறிவிழந்து இலவசங்களின் வசம் சிக்கிச் சீரழிகின்றனர்? ’செல்வம் என்பது சிந்தையின் நிறைவே’ என்பதை என்றுணரும் இந்த மானுடச் சாதி? என்று தன் அறச்சீற்றத்தை அழகாய்க் கவிதையில் பதிவுசெய்திருக்கும் திரு. ஆ. செந்தில் குமார் இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்வுசெய்யப்படுகின்றார். அவருக்கு என் பாராட்டு!

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    கிருஷ்ணகாளி
    ———————-


    “யாதுமாகி நின்றவள் எங்கும் நிறைந்தவள்
    யாதவனாய் இங்கே எழுந்தருளி -ஊதுகுழல்
    கண்ணனாய் காட்சி கொடுக்கின்றாள்(ன்), கல்கத்தா
    மண்ணின் மயானத்தின் மீது”….கிரேசி மோகன்….

    Kannamma!

    Kali and Krishna are one and the same. Both names mean “Black”…

    Picture below is from Krishnakali Mandir in Kolkata… Where Krishna and Kali are seen as a single form! The temple
    stands on a cremation ground associated with the great Kalighat Temple in Kolkata…

    Share
  • ஆண்டவன் விருது…..

     

    படமும் பாடலும்….!
    ——————————————-


    ’’பாண்டவன் தேருச்சி பாய்ந்து பறந்தவர்,
    ஆண்டவன் பஞ்சமுக ஆஞ்சனேயர், -தூண்டவும்,
    ஆண்டவனால் புத்தாண்டு ஆரம்பம் நாளின்று
    வேண்டுதல்வேண் டாமை விருது’’….கிரேசி மோகன்….

    ஆண்டவன் ஸ்வாமிகள் சித்தி….!

    Share
  • சுப்ரபாரதிமணியனின் நாவல் “ கோமணம் “ மலையாளத்தில்

     

    சுப்ரபாரதிமணியனின் நாவல் “ கோமணம் “ மலையாளத்தில் ‘ஹரா ஹரோ ஹரா “ என்ற தலைப்பில் வெள்ளியன்று கொல்லம் ( கேரளா) பிரஸ் கிளப்பில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்படடது. மற்றும் நான்கு மலையாள நூல்களும் வெளியிடப்பட்டன. சுப்ரபாரதிமணியன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கலை, இலக்கியம் , நடனம் போன்ற துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு பரிசுகள் வழங்கிப் பேசினார். அவரின் “ சாயத்திரை “, சுடுமணல் ‘ ஆகிய நாவல்கள் முன்பே மலையாளத்தில் வெளியாகி உள்ளன. ( இவற்றை திருவன்ந்தபுரம் சிந்தா பதிப்பகம் வெளியிட்டுள்ளது ) சுப்ரபாரதிமணியனின் நாவல் “ கோமணம் “ மலையாளத்தில் ‘ஹரா ஹரோ ஹரா “ என்ற தலைப்பில் மொழிபெயர்த்திருப்பவர் கன்னனூரைச்சார்ந்த ஷாபி செருமாவிலயி. இதை வெளியிட்டிருப்பது யுவமேளா பதிப்பகம், கொல்லம், கேரளா. இதன் அதிபர் பதிப்பாளர் கொல்லம் மது 35 ஆண்டுகளாக யுவமேளா பதிப்ப முயற்சிகளில் உள்ளார். இதுவரை 435 புத்தகங்களை வெளியிட்டுள்ளா. “ கோமணம் “ நாவல் தமிழில் இரு பதிப்புகள் ( 1. முன்னேற்றப்பதிப்பகம், 2. கிழக்குப் பதிப்ப்கம் சென்னை ) வெளியாகி உள்ளன.

    சுப்ரபாரதிமணியன் உரையில் ; முன்பு என் சிறுகதைகளை மளையாளத்தில் ஜெயமோகன், ஆற்றூர் ரவிவர்மா , ஷாபி போன்றோரும் நாவல்களை ஸ்டான்லி, ஷாபி ஆகியோரும் மொழிபெயர்த்திருக்கிறார்கள். ஜெயகேரளம் இதழில் “ ஒவ்வொரு ராஜகுமாரிகளுக்குள்ளும் “ சிறுகதையை 1986 ல் ஜெயமோகன் மொழிபெயர்த்த போது அக்கதையின் தன்மையும் சூழலும் கேரளசூழலோடு இயைந்து இருப்பதை ஆற்றூர் ரவிவர்மா போன்றோர் குறிப்பிட்டிருக்கிறார்கள். கோமணம் நாவலில் பழனி பாதயாத்திரை அனுபவங்கள் கேரள மக்கள் பழனிக்கு அதிக அளவில் செல்பவர்கள் என்ற் அளவில் கேரளா மக்களின் வாழ்க்கையோடு இணைந்த்து என்ற அளவில் இந்நாவல் விரைவில் மலையாளத்தில் வெளிவ்ந்திருக்கிறது. பதிப்பாளர் மது இது பாதயாத்திரையை முன்வைத்து சாதாரண மக்களின் இயல்புகள், கேள்விக்குறியாக்கப்படும் மதம் சார்ந்த விசயங்களுக்காக கேரள இயல்போடு வெகுவாக இயைந்து வருவதால் உடனே பதிப்பிப்பதாகச் சொன்னார். சமூக சூழலியல் விசயங்கள் படைப்பிலக்கியத்திற்குள் வர வேண்டிய முக்கியத்துவத்தை நோக்கம் நிறைவேற்றுகிறது. .இலக்கியத்தின் பயன்பாடு அது சமகாலப் பிரச்சினைகளைப் பேசுவதில் இருக்கிறது. இல+க்கிய ரசனை என்பதை மீறி சமூக சூழலியல் அக்கறை வெளிப்பாட்டை படைப்பிலக்கியத்தில் முக்கியத்துவப்படுத்துவது என்பது இன்றைக்கு எழுத்தாளர்களுக்கு உள்ள முக்கிய கடமையாகும். என்றார் .

    Share