Blog

  • 100 நாட்களாக ஸ்ரீ மஹா கணபதி யாகம், ஸ்ரீ மஹா சுதர்சன யாகம், ஸ்ரீ மஹா தன்வந்திரி யாகம், ஸ்ரீ மஹாலக்ஷ்மி யாகம், ஸ்ரீ சுவர்ணகால பைரவர் யாகம் ஆகிய ஐந்து ஹோமங்கள் தன்வந்திரி பீடத்தில் நடைபெற்றது

     

     

    வாலாஜாபேட்டை, தன்வந்திரி பீடத்தில்கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் நோய் தீர்க்கும் கடவுளும், ஸ்ரீ மஹா விஷ்ணுவின் ஆவதாரமான ஸ்ரீ ஆரோக்யலக்ஷ்மி சமேத ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு இன்று 19-03-2018 முதல் 26-03-2018 வரை தன்வந்திரி பீடத்தின் 14ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற உள்ள சகல ஐஸ்வர்யம் தரும் சகல தேவதா ஹோமத்துடன், சஹஸ்ர கலசாபிஷேகம் முன்னிட்டு சென்ற 06.12.2017 புதன்கிழமை, புனர்பூசம் நட்சத்திரம் மற்றும் சங்கடஹர சதுர்த்தி ஆன்று தொடங்கி இன்று 19.03.2018 திங்கட்கிழமை வரை உலக நலன் கருதி 100 நாட்கள் ஸ்ரீ மஹா கணபதி யாகம், ஸ்ரீ மஹா சுதர்சன யாகம், ஸ்ரீ மஹா தன்வந்திரி யாகம், ஸ்ரீ மஹாலக்ஷ்மி யாகம், ஸ்ரீ சுவர்ணகால பைரவர் யாகம் ஆகிய ஐந்து ஹோமங்கள் தன்வந்திரி பீடத்தில் நடைபெற்றது. 100 நாட்கள் நிறைவு பெற்றதை முன்னிட்டு இன்று மேற்கண்ட தெய்வங்களுக்கு மஹா அபிஷேகம் நடைபெற்றது. மேற்காணும் ஐந்து யாகங்களிலும் வைத்து பூஜித்த தன்வந்திரி டாலருடன் ஹோம மஹா பிரசாதம் பெற விரும்புவோர் தன்வந்திரி பீடத்தை தொடர்புகொள்ளலாம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    Share
  • படக்கவிதைப் போட்டி (153)

     

    பவள சங்கரி

     

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    முத்துக்குமார் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனைக் கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (24.03.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • குறுந்தொகையில் பெண்கவிஞர்களின் பாடலில் நகை மெய்ப்பாடு வழி பெண் மொழியாடல்

    குறுந்தொகையில் பெண் கவிஞர்களின் பாடலில் நகை மெய்ப்பாடு வழி பெண் மொழியாடல்

    சூர்யலெக்ஷ்மி.ப , முனைவர்ப்பட்ட ஆய்வாளர், தமிழ் உயராய்வு மையம், தமிழியல் துறை, ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி, திருநெல்வேலி.

    முன்னுரை:-

    தொல்காப்பியர் கூறிய மெய்ப்பாட்டினை முன் வைத்து குறுந்தொகையில் ‘நகை’ மெய்ப்பாடு வழி பெண் மொழியினை ஆய்வதாக இக்கட்டுரையானது அமைகிறது.

    மெய்ப்பாடு விளக்கம்:-

    மெய்ப்பாடு என்பது உள்ளத்தில் நிகழும் குறிப்பினை வெளிப்படுத்துவது என்பதாகும். மெய்-உடல், பாடு-நிகழும் தன்மை. உள்ளத்தில் தோன்றும் நிகழ்ச்சிக்கு ஏற்ப உடலின்கண் ஏற்படும் வேறுபாடு மெய்ப்பாடு என்று இளம்பூரணார் கூறுகிறார். நகை முதலாகிய பொருண்மை வெளிப்படுத்துதல் மெய்ப்பாடு என்பது பேராசிரியர் கருத்தாகும். (வாழ்வியற்களஞ்சியம், 2008, ப:85)

    தொல்காப்பியத்தில் மெய்ப்பாடு:-

    நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்ற எண் வகை மெய்ப்பாடும் பொது மெய்ப்பாடுகளாகும். ஒவ்வொரு பொது மெய்ப்பாடுகளிலும் நான்கு சிறப்பு மெய்ப்பாடுகள் உள்ளன. அவை 32 மெய்ப்பாடுகள் ஆகும். பிற மெய்ப்பாடுகள் 32, அகத்திணைக்குரிய மெய்ப்பாடுகளில் களவுக்கான மெய்ப்பாடுகள் புணர்ச்சிக்கு முன் மூன்று மெய்ப்பாடுகள், புணர்ச்சிக்கு பின் மூன்று மெய்ப்பாடுகள் அவை ஒவ்வொன்றிலும் நான்கு மெய்ப்பாடுகள் மொத்தம் 24 மெய்ப்பாடுகள் ஆகும். அகத்திணைக்குரிய பிற மெய்ப்பாடுகள் 20, கற்பு மெய்ப்பாடுகள் 10, மொத்த மெய்ப்பாடுகள் 126 ஆகும்.

    நகை-விளக்கம்:-

    தொல்காப்பியர் மெய்ப்பாட்டியல் என்ற இயலில் பொது மெய்ப்பாடு எண் வகையில் முதலாவதாக நகையைக் கூறுகிறார்.

    நகை என்ற சொல்லிற்கு ஆபரணம், இகழ்ச்சி மகிழ்ச்சிதோன்றக் கூறுமலங்காரம், இன்பம், எயிறு, ஒளி, களிப்பு, சிரிப்பு, நகையென்னேவல், பல், பூ, மொட்டு, மலர்ச்சி (தமிழ் மொழி அகராதி, 1984,ப:851) ஆகியவையாகும், எள்ளல் என்ற அவமதிச்சிரிப்பு, இழிவாகப் பேசல், தள்ளல், நகைத்தல், நிந்தை என்ற பொருள்படும் (தமிழ் மொழி அகராதி 1984 ப:321). இளமை என்பது உன்மத்தம், பாலப்பருவம், வாலைப்பருவம் என்ற பொருளில் வரும் ( தமிழ் மொழி அகராதி, 1984 ப:246) பேதைமை என்ற சொல் அறிவின்மை (தமிழ் மொழி அகராதி, 1984,ப:1069). மடன் என்பது அறிவின்மை இது பெண்கள் நாற்குணத்துமொன்று, கபடின்மை, புத்தியீனம் என்று பொருள்படும். தமிழ் மொழி அகராதியில் நா.கதிரைவேல் பிள்ளை பொருள் கூறுகிறார்

    பரதர் எழுதிய வடமொழி ரசக் கோட்பாட்டில் சிருங்காரம், கரணம், வீரம், ரௌத்திரம், ஹாஸ்யம், பயானகம், பீபத்ஸம், அற்புதம், சாந்தம் ஆகும். இதில் ஹாஸ்யம் என்பது நகை என்று கூறப்படுகிறது.

    நகை என்ற மெய்ப்பாட்டில் நான்கு சிறப்பு மெய்ப்பாடு பிறக்கும். அவை எள்ளல், இளமை, பேதைமை, மடன் என்பதாகும்.

    “எள்ளல் இளமை பேதைமை மடனென்று

    உள்ளப் பட்ட நகைதான் கென்ப” (தொல்.பொருள்.இளம்.மெய்ப்.நூ.எண்:248,).

    இலக்குவனார் நகைக்குரிய மெய்ப்பாட்டினை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்துள்ளார். அவை பின்வருமாறு

    “THEY SAY THAT LAUGHTER HAS REPROACH,

    YOUTH, FOOLISHNESS AND FEIGNED IGNORANCE-

    THESE FOUR- AS ITS SOURCE”   (இலக்குவனார், 1998,ப:12)

    நகைப் பிறக்கும் சூழலை உரையாசிரியர்களின் கருத்து பின்வருமாறு, நகை என்பது இகழ்ச்சியிற் பிறப்பது என்று இளம்பூரணர் கூறுகிறார். நகையென்பது சிரிப்பு, அது முறுவலித்து நகுதலும், அளவே சிரித்தலும், பெருகச் சிரித்தலுமென மூன்றென்ப என்று பேராசிரியர் கூறுகிறார். (பேராசிரியர் ஆண்டு:2007,ப:8) நகை என்பதற்கு THEY SAY LAUGHTER என்று இலக்குவனார் கூறுகிறார். (இலக்குவனார், 1998, ப:10) நகை என்பதற்கு முடவர்கள் நடக்கும் நடை, அறிவற்றோர் பேசும் பேச்சு, கவலை பெரிதுற்றுப் பேசுவோர் பேச்சு, பித்தர் பேச்சு, குழந்தை கூறும் மழலை, மெலியோர் கூறும் வலிமைப் பேச்சு, வலியோர் கூறும் எளிமைப் பேச்சு, கல்லார் கூறும் கல்வி, ஆரியர் கூறும் தமிழ், கூனர்செயல், குறளர் செயல், ஊமை செயல் ஆகிய பிற என்று செயிற்றியனார் கூறுகிறார்.

    எள்ளல்:-

    பேராசிரியர் எள்ளல் என்பது தான் பிறரை எள்ளி நகுதலும், பிறரால் எள்ளப்பட்டவழித் தான் நகுதலும் என இரண்டாகும் என்கிறார். (பேரா. 1998,ப:15). தமிழண்ணல் எள்ளல் என்பது இகழ்தல் என்கிறார். (தமிழண்ணல்,1986,4:49). பாரதியார் எள்ளல் என்பது நகைமொழி அதாவது கேலி என்கிறார்,(பாரதியார் 1986,)

    அள்ளூர் நன்முல்லையாரின் பாடலில் தலைவன் வரையாது ஒழுகுவது முறையல்ல என்று தோழி கடிந்துரைந்தாள். தலைவி, தோழியிடம் நீ கூறுவதை விளையாட்டாக எடுத்தேன் இல்லையெனில் உன் நிலை என்னவாகும் என்று நகுகிறாள். ” யான்எவன் செய்கோ? என்றியான் அது, நகை என உணரேன் ஆயின், என்ஆ குவைக்கொல் நன்னுதல் நீயே” (குறுந் 96,2-4).

    ஒக்கூர் மாசாத்தியாரின் பாடலில் கார் காலத்தில் தலைவியின் அருகில் தலைவன் இல்லை. கார் காலம் மாலை நேரம் தலைவியுடன் தலைவன் கூடி இருக்கும் நேரமாகும். அவ்வாறு அங்கே நிகழவில்லை, தலைவனுடன் இல்லாத தலைவியைக் கண்டு முல்லைப்பூவானது எள்ளி நகுவதாக அத்தலைவிக்கு தோன்றுகிறது.

    “நகுமே தோழி! நறுந்தண் காரே” (குறுந் 126, 3-5). ஒக்கூர் மாசாத்தியாரின் மற்றொரு பாடலில் தலைவனுடன் இல்லாத தலைவியைக் கண்டு முல்லைப்பூ காட்டுப்பூனை சிரிப்பதைப் போன்று சிரிக்கின்றது. பாடலில் “இருவி சேர் மருங்கில் பூத்த முல்லை, வெருகு சிரித்தன்ன பசுவீ மென்பிணிக்” (குறுந் 220, 3-5). தலைவனுடன் கூடியிருப்பவர்களுக்கு கார்காலம் மாலைநேரமும், முல்லையின் மணமும் இன்பத்தைக் கொடுக்கும். பிரிந்து இருப்பவர்களுக்கு கார்காலத்தின் மாலைநேரமும், முல்லையின் மணமும் துன்பத்தை விளைவிப்பதாக உள்ளது.

    பெண்கள் தங்கள் அனுபவங்களை மொழி வரம்புகளையும், சமூக வரம்புகளையும் மீறி பதிவு செய்யும் போது தான் பெண்ணிய மொழி உருவாகும் என்கிறார், எல்.இராமமூர்த்தி. ஓக்கூர் மாசாத்தியாரின் பாடலில் தலைவி தன் மண உணர்வின் இயல்பான வெளிபாட்டினை காணமுடிகிறது. ஓக்கூர் மாசாத்தியாரின் பாடலில் தலைவிக்கு கார்காலமும் மாலையும் துன்பத்தை தருவிப்பதாக உள்ளது.

    ஔவையாரின் பாடலில் தலைவியின் பாங்காயினர் கேட்ப பரத்தை கூறியது. பரத்தை தான் புனல் விளையாட்டு சென்றால் தலைவனும் உடன்வருவான். எழினி பசுக்களைக் காத்ததைப் போல தலைவனின் மார்பை தலைவி காக்கட்டும் என்கிறார். இதில் தலைவியை தனக்குப் போட்டியாக பரத்தை கருதி அவளை எள்ளி நகுகிறாள். பரத்தையின் மொழியாடல் ” முனைஆள் பெருநிரை போல, கிளையொடு காக்க, தன்கொழுநன் மார்பே” என்பதில் காணமுடிகிறது

    பேதைமை:-

    பேதைமை என்பது அறிவின்மை என்று பேராசிரியர் (பேரா.1998,ப:15) தமிழண்ணல் (தமிழண்ணல் 1986, ப:49) பாரதியாரும் (பாரதியார் 1986) கூறுகிறார்கள்.

    பொன்மணியாரின் பாடலில் பிரிந்த தலைவனை நினைத்து தலைவி வருந்தினாள். அத்தருணத்தில் இடியுடன் பெரிய மழை பெய்தது. அதனை கண்ட மயிலோ கார்காலம் என்று கூவி நின்றது. அவைகள் பேதைமையுடையது என்று தலைவி எண்ணுகிறாள். தலைவன் நேர்மையானவன், அவன் கார்காலத்தில் வருவேன் என்று வாக்குறுதியை கொடுத்தவனாக காணப்படுகிறான். இயற்கை தன் இயல்பில் மாறி நடந்தாலும் தன் தலைவன் மேல் அளவற்ற நம்பிக்கைக் கொண்டவனாக காணப்படுகிறாள். அதனால் தான் மயில்கள் கூவியதை பேதைமையுடையது என்று கருதுகிறாள்.பாடலில்,

    ” தாநீர் நனந்தலை புலம்பக

    கூஉந் தோழி பெரும்பே தையவே” (குறுந் 391 8-9)

    மடமை:-

    மடமையென்பது பெரும்பான்மையுங் கொளுத்தக் கொண்டு விடாமை என்பதாகும். இது தன் மாட்டும் பிறர் மாட்டும் நிகழும் (பேரா.1998,ப:15) தமிழண்ணல் மடமை என்பது ஒன்றை வேறொன்றாகத் திரியக் கோடல் என்கிறார்( தமிழண்ணல், 1986 ப:49) பாரதியார் மடன் என்பதை ஏழைமை என்று கூறுகிறார்.

    வெள்ளிவீதீயாரின் பாடலில் தலைவனின் பரத்தைமை உறவுநிலை அறிந்த தலைவி, பாலை நிலத்தில் யானை தன் தந்தத்தை பாறையில் குத்தியது போல, அவனோடு சிரித்தப் பற்கள் உடைபட்டு விழட்டும் என்கிறாள். இதில் தலைவன் உண்மையற்றவனாக தலைவிக்கு காணப்படுகிறான். அவனோடு கொண்ட உறவினை நினைத்து தலைவி மிகுந்த துன்பத்தை அடைந்து அவனோடு சிரித்த பற்கள் உடையட்டும் என்கிறாள். தலைவியின் மொழியாடல் பாடலில்,

    “சுரம்செல் யானைக் கல்உறு கோட்டின்,

    நும்மொடு நக்க வால்வெள் எயிறே” (குறுந் 169,1-3)

    முடிவுரை:-

    ஆண் கவிஞர்கள் பெண் மொழியினைப் பற்றி எழுதுவதற்கும், பெண் கவிஞர்கள் பெண் மொழியினைப் பற்றி எழுதுவதற்கும் வேறுபாடு உள்ளது. பெண் தனக்கான மனஉணர்வுகளின் சுதந்திரத்தை தன் கவிதை வாயிலாக வெளியிடும்போது அவளின் பெண் மொழி வெளிப்பட்டு அவளுக்கான அடையாளங்களாக மாறுகிறது. ஓக்கூர் மாசாத்தியாரின் பாடலில் கார்காலத்தில் மலரும் முல்லை தலைவியைக் கண்டு ஏளனமாக சிரிப்பதும், வெள்ளிவீதியாரின் பாடலில் பரத்தைக்கு எதிர் மொழியாக தலைவனுடன் சிரித்த பற்கள் உடைபடட்டும் என்கிறாள். பொன்மணியாரின் பாடலில் மயிலின் பேதைமையைக் கண்டு தலைவி நகுவதும், அள்ளூர் நன்முல்லையாரின் பாடலில் தலைவனை குறைகூறிய தோழியைக் கண்டு தலைவி சாடுவதும் பின்பு அதுகண்டு நகுவதும் இவ்வாறு பலவிதமாக நகையில் பெண் மொழியாடல் வெளிப்படுகிறது.

    துணை நூற்பட்டியல்:-

    1. சிவலிங்கனார்.ஆ 1998   : தொல்காப்பியம் உரைவளம்   பொருளதிகாரம், சென்னை.
    2. தாயம்மாள் அறவாணன் 2004 : மகடூஉ முன்னிலை பெண் புலவர் களஞ்சியம், சென்னை.
    3. முருகேசப்பாண்டியன்.ந 2014   : அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்  சங்கப்பெண் கவிஞர்கள் முதல் ஆண்டாள்  வரை

     

     

    Share
  • தமிழா! விழித்திரு! செயல்படு!

    இன்னம்பூரான்

    தமிழர்களாகிய நாம் கடந்த அறுபது வருடங்களுக்கு மேல் படாத பாடு பட்டு வருகிறோம்.நம்மை ஆண்ட ‘திராவிட’கட்சிகளும் அந்த அடைமொழியை இரவல் வாங்கிய கட்சிகளும் நமக்கு சிறந்த நிர்வாகம் தரவில்லை; ஊழல் அதிகரித்து விட்டது; பகைமை வளர்க்கப்படுகிறது; பதவியை கைபற்றியவர்கள் காசு பார்ப்பதில் மட்டும் குறியாக இருந்திருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுகள் பொது மன்றத்தில் அறுபது வருடங்களாக வைக்கப்பட்டு வருகின்றன. ஈ.வே.ரா. அவர்களை தந்தை ஸ்தானத்தில் வைத்திருக்கும் அவர்களுக்கு அவருடைய அறிவுரைகள் வேப்பங்காய்.தந்தை சொல் மிக்க மந்திரங்களில்/ சடங்குகளில்/இறை வணக்கத்தில்/அசட்டு நேர்த்திகளில்/சோதிட,யாக, வாஸ்து போன்றவற்றில் தான் அவர்களுக்கு ஆதாயம் கிடைக்கிறது. அவரும் தன் பங்குக்கு முரண்கள் பலவற்றில் ஈடுபட்டிருந்தார்; கரடுமுரடாக பேசினார்; வன்முறையை உரம் போட்டு வளர்த்தார்; மத்திய அரசுடன் கூடாநட்பு வைத்திருந்த இரு கட்சிகளும் டில்லியில் கோலோச்சின. கூவி, கூவி, தி.மு.க. பசையுள்ள அமைச்சரகங்களை கைப்பற்றி அவப்பெயர் சம்பாதித்தது. தற்காலம் நடப்பதை எல்லாரும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். காலத்தின் போக்கு இவ்வாறு இருக்கையில், இன்று ஹிண்டு இதழில் வந்த இந்த இரு கட்டுரைகளும் கூறும் தகவல்களை,கருத்துக்களை தமிழர்களாகிய நாம் ஆழமாக ஆராய்ந்து அவரவர் அணுகுமுறையை தேர்ந்து எடுத்துக்கொள்ளலாம். அரசு, சமுதாயம் ஆகியவற்றை மக்கள் நலன் பொருட்டு இயக்குவது பற்றி தெளிவு பெற்று நலமும் செய்யலாம்; தீமையும் செய்யலாம். தற்காலம் வெளி நாடுகளில் வாழும் தமிழர்கள் ஆர்வத்துடன் இதை எல்லாம் கவனிக்க விரும்புகிறார்கள். சிலர் விஷமப்பிரச்சாரமும் செய்கிறார்கள். இந்த பின்னணியில் நாம் ஒவ்வொருவரும் சுய ஆலோசனையின் வெளிப்பாடாக தமிழர்கள் விழித்திருப்பதற்கு செயல் படவேண்டும் என்ற என் அவாவை பகிர்ந்து கொள்கிறேன்.

    நன்றி,வணக்கம்,

    இன்னம்பூரான்

    மார்ச் 19, 2018

    Dravida Nadu: from political oblivion to centre-stage

    The demand for a separate Dravida Nadu has become a talking point exactly 55 years after the DMK dropped the idea in 1963.

    Though the idea was in the air for quiet sometime, especially after actor Kamal Haasan sought to theorise it before the run-up to the launch of his party, it was DMK working president M.K. Stalin who brought the issue to the fore when he responded to a question on the perceived momentum gaining in support of the demand.Mr. Stalin subsequently argued that the neglect of the southern States by the BJP government at the Centre had actually fuelled the idea. To drive home the point, he quoted DMK founder C.N. Annadurai’s famous statement that “the reasons for creation of the Dravida Nadu continue to hold good.”

    Interestingly, the concept of Dravida is a philological term introduced by Christian missionary Robert Caldwell, and according to his biographer Vincent Kumaradoss, the word gained currency following the publication of his Comparative Grammar in 1856.

    Caldwell said he used the word Dravidian instead of the narrower term “Tamulian”, which has found its place in all works on the Indian languages, and argued that Dravidian languages were fundamentally different from Sanskrit and had a common origin.

    The Dravida Nadu as a political idea was originally floated by Periyar E.V. Ramasamy who came out with the slogan “Tamil Nadu for Tamils” in 1938 in response to the plan to introduce compulsory learning of Hindi across India. By the following year, his clamour had changed to Dravida Nadu because of the South’s cultural oneness. Though Periyar said the two demands were the same, it never gained traction outside the Tamil areas.

    ‘Outdated idea’“The idea of Dravida Nadu is passé. It never gained traction.

    Among other things non-Tamils did not share the concerns of the Tamils and perhaps felt that they would be dominated by the Tamils in any such arrangement,” explained R. Kannan, the biographer of DMK founder C.N. Annadurai.

    “Ironically, in 1955 when the idea of Dakshin Pradesh was proposed by the Centre, Periyar “killed” the idea at its birth telegramming Chief Minister Kamaraj to oppose it as the non-Tamils would dominate in such an arrangement,” said Mr. Kannan.

    Today, the demand for more powers and autonomy are being articulated by the other southern States in the same way as it was articulated by the DMK as early as in the late sixties, he pointed out.

    However, describing the Dravida Nadu as an “outdated idea”, Su. Venkatesan, general secretary of the Tamil Nadu Progressive Writers and Artistes Association, contended that Periyar had defined non-Brahmins as Dravidian.

    “Today the Dravidian identity has transformed into nationalities based on languages. The BJP is launching all-out attack to erase the linguistic identity of various nationalities, there is a need to protect their rights and identity,” he said.

    Those wedded to the ideology of Tamil nationalism are also highly critical of the idea of Dravidian concept and P. Maniarasan, the leader of Tamil Desiya Periyakkam, felt that it was a ploy to quell the emergence of Tamil Nationalism.

    “If Mr. Stalin is really serious about creating a Dravida Nadu, let him visit the neighbouring States and muster support. Is he ready to include the proposal in the election manifesto of his party? Is he ready to convene a special general council of the DMK to propagate the idea,” he asked.

    http://www.thehindu.com/news/national/tamil-nadu/dravida-nadu-from-political-oblivion-to-centre-stage/article23288419.ece?homepage=true

    The Jinnah connection

    It was the idea of Pakistan, articulated by Muhammad Ali Jinnah, that served as a precursor to Periyar reiterating his demand for Dravida Nadu. He even led a delegation to Bombay [modern-day Mumbai] in 1940 to meet Jinnah.

    He had gone to Bombay on an invitation from the non-Brahmins there and was accompanied by his lieutenants P. Balasubramaniam, T.A.V. Nathan, Thiruvasagamani K.M. Balasubramaniam, T.P.S. Ponnappa, C. Panjatcharam and C.N. Annadurai.

    Periyar would meet with B.R. Ambedkar and Jinnah. But Annadurai was not present when the delegation met the leader.

    According to R. Kannan, the biographer of Annadurai, the former Chief Minister was not interested in the delegation simply meeting Jinnah as a matter of courtesy, and pleaded with Periyar to have a definitive plan and seek Jinnah’s support.

    While Annadurai said the delegation returned with bitterness, Periyar touted the meeting as a success, assuring that there need not be fear among anyone that they—Jinnah and Periyar—had entered into an ‘alliance’.

    ‘As populous as England’

    “On 7 January 1940, at a public meeting in Dharavi, Bombay, Periyar maintained that Tamil Nadu was as populous as England and as large as Germany, and that with Jinnah’s and Ambedkar’s help, he would establish its freedom,” Mr. Kannan said in his book.

    The difference of opinion over India’s independence and Periyar’s marriage to Maniammal led to the creation of the DMK in 1949. Annadurai was vociferous about his demand for Dravida Nadu and dropped it in 1963, in the wake of the 16th amendment banning secession and its advocacy.

    The DMK also dropped the idea of separation from its constitution, settling for a closer political and cultural union between the southern States.

    In the 1970s, this was again changed to limit the party’s aims to striving for a closer cultural association between the southern States.

    Periyar maintained that with Jinnah’s and Ambedkar’s help, he would establish T.N.’s freedom

    http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/tracing-the-jinnah-connection/article23289001.ece

    இன்னம்பூரான்

    http://innamburan.blogspot.co.uk

    http://innamburan.blogspot.de/view/magazine

    www.olitamizh.com

    Share
  • ஆரிய திராவிடக் கருத்துருவாக்கம்

    ஆரிய திராவிடக் கருத்துருவாக்கம்

     பிரதீப் குமார்.பி., முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, அரசுக் கல்லூரி, சித்தூர், பாலக்காடு,கேரளம்.

     “ஆரியப் படையெடுப்பு” பற்றிய கோட்பாடுகள், வேறு பல அறிஞர்களால் மறுத்துரைக்கப் பட்டன. உண்மையில் ஆரியர்களின் படையெடுப்பு என்று கூறுவதை விட, “ஆரியமயமாக்கல்” என்ற சொல்லைப் பயனாக்கம் செய்வதே இங்கு பொருத்தமானது. அனேகமாக, வெள்ளை நிறவெறிக் கொள்கைகளை ஆதரிக்கும் சரித்திர ஆசிரியர்கள் தான், “ஆரியர் படையெடுப்பு” என்ற கோட்பாட்டை உருவாக்கி பரப்பி வந்திருக்க வேண்டும். தங்களின் ஆளுமை குணாதிசியத்தை வெளிப்படுத்தும் விதமாக இவ்விதமான கற்பிதங்களை அவர்கள் உருவாக்கியிருந்தனர்.

    தொடக்கத்தில், வேதகால இந்தியச் சமூகத்தில், இந் நிலைகள் ஒருவருடைய குணம், நடத்தை, இயல்பு போன்றவற்றால் அடையப்படுவதாக இருந்திருக்கிறது. ஒருவர் அல்லது ஒரு குழுவினர் ஒரு பிரிவில் இருந்து இன்னொரு பிரிவுக்கு உயர்த்தப்படுவதும், தாழ்த்தப்படுவதும் நடைமுறையில் இருந்ததாகத் தெரிகிறது. காலப்போக்கில், இந் நிலை மரபுவழியாக அடையப்படும் ஒன்றாக மாறிவிட்டது. தற்காலத்தில் இவ் வருணமுறை கடைப்பிடிக்கப்படுவது இல்லை ஆயினும், பிராமணர்களாகத் தங்களைக் கருதிக் கொள்பவர்கள், பல்வேறு தகுதி நிலைகளிலும் உள்ள பல்வேறு சாதிப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.தமிழகத்தில் ஐயர், ஐயங்கார் என இரு பிரிவுகளில் பல உட்பிரிவுகளாக உள்ளனர். சமூகநீதி இயக்கங்கள் வலுப்பெறும் வரை இவர்களது ஆளுமை அனைத்து அரசு, கல்வி மற்றும் வணிகத் துறைகளில் ஓங்கியிருந்தது.

    இது தமிழ் இனம் கடந்து வந்த ஆரியத் தாக்குறவினால் என்பதை எளிதில் இனம் கண்டுவிடலாம். நூற்றாண்டு காலமாக இயங்கி வரும் சமூகவியல் ஊடாட்டங்கள் தமிழ் மற்றும் ஆரிய இனங்களில் செயல்படுத்திவரும் புதியதான மெய்மைகள் அவ்வினத்தின் அடையாளங்களில் கலந்துவிடுவதை தடுக்க இயலாமல் செய்துவிடுகிறது.

    “இந்தியாவில் ஆரியர்களின் வருகைக்கு முன்பிருந்த திராவிடர்கள் ஆரியர்களைவிட வளர்ச்சியடைந்த நிலையில் இருந்தார்கள். இவர்கள் ஆரியர்களை எதிர்த்து விடாப்படியாகப் போராடி, இறுதியில் தோற்கடிக்கப்பட்டார்கள். தோற்கடிக்கப்பட்ட திராவிடர்கள் ஆரியமானார்கள். ஆனால் அவர்களுடைய மொழியின் அடிப்படை அமைப்பை மட்டும் பாதுகாத்துக் கொண்டார்கள். நிகழ்காலத்து தென்னிந்தியர்கள் தமது பண்பாட்டில் ஆரியனிஸம் முழுவதையும் ஜீரணித்துக் கொண்டிருக்கிறார்கள்.” ( எஸ்.ஏ.டாங்கே, பண்டைக்கால இந்தியா, ப.38)

     ஆரிய மேலாண்மையும் திராவிட அரசியல் கோட்பாடும் :

                    “அரசுக் கோட்பாடு என்பது அரசு எனும் பொறியின் இயங்கு முறை, அதிகாரப்படிநிலை, சமூகம் குறித்த மதிப்பீடு, தனிமனித உரிமைகள் குறித்த பார்வை அரசுத் தலைமைக்குத் தேவையான இயல்புகள் ஆகியவற்றைக் கொண்டதாகும் ” (ம.செந்தமிழன், ஆரிய மேலாண்மையின் அரசுக் கோட்பாடு). இந்திய நிலப்பரப்பில் அரசுகள் உருவான வரலாற்றில், ஆரியப் பார்ப்பனியத்தின் மேலாதிக்கமே பெரும் பங்கு வகித்தது. அரசு உருவாக்கம் என்பது, நிலவுடைமையின் தீவிர வளர்ச்சியின் விளைவாகும். நிலம் உள்ளிட்ட இயற்கை வளங்களை ‘உடைமை’ ஆக்குதல் எனும் கருத்தியல் ஆரியர்களது அரசியல் தலையீட்டுக்குப் பிறகே தீவிரமடைந்தது.

    தமிழர்கள் இனக்குழு வாழ்க்கை முறையை மேற்கொண்டு, கூட்டு உழைப்பு, கூட்டுப் பகிர்வு எனும் பேரளவு சமத்துவ சமூகத்தைக் கட்டமைத்து வாழ்ந்தனர். இச்சமூகத்தில், இனக்குழு தலைவருக்கும் மக்களுக்குமான இடைவெளி மிகவும் குறைவு. ‘உடைமையாக்கல்’ இல்லாததால் – குறிப்பிட்ட இனக்குழு சமூகங்களுக்குள் வர்க்க ஏற்றத் தாழ்வுகள் இல்லை. சாதிகளே இல்லாத சமூகங்கள் அவை. ஆகவே, சாதியப் பாகுபாடு குறித்த பேச்சுக்கே இடமில்லை. தொழில் அடிப்படையிலான வேலைப் பிரிவினை மட்டுமே இருந்தன. ஒரு தொழில் செய்வோர், பிற தொழில் செய்யத் தடை ஏதும் இல்லை. பிறப்பின் அடிப்படையில் தொழில் பிரிவினையும் வகுக்கப்படவில்லை. சாதியத்தின் மூலம், பிறப்பை அடிப்டையாகக் கொண்டது. ஆகவே, தமிழர் இனக்குழு நாகரிகத்தில் சாதிகள் இல்லை.

    தமிழரது நாகரிகம் ஆரியர்களின் சுரண்டல் கோட்பாடுகளுக்குப் பெரும் தடையாக இருந்தது. அனைத்தையும் உடைமைகளாக்கி, சுரண்டிக் கொழுக்கும் வெறி பிடித்த ஆரியர்கள், நிலத்தை உடைமையாக்குவதைத் தீவிரப்படுத்தினர். ‘அரசு’ எனும் அமைப்பு அதன் இயல்பிலேயே ஒடுக்குமுறையின் வடிவமாக உள்ளது. அதிகாரக்குவிப்பு, மூலதனக்குவிப்பு இவ்விரண்டும் அரசின் அடிப்படைகள். இவை தான் அரசின் கட்டமைப்பைத் தாங்கி நிற்கின்றன.

    இனக்குழுக்கள் இவற்றிற்கு நேர் எதிரானவை. அதிகாரம் – உழைப்புப் பங்களிப்பின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்படும். அவ்வதிகாரமும் நிலையானதல்ல. மூலதனம் எந்த இடத்திலும் குவிக்கப்படுவதில்லை. ஏனெனில், கூட்டு உழைப்பு – கூட்டுப் பகிர்வு என்பதே இனக்குழுவின் பொருளியல் அடிப்படை . தமிழரின் இத்தகைய சமத்துவ வாழ்வு, ஆரியருக்குப் பெரும் சவாலாகவும், அவர்களின் ஆதிக்க வெறிக்கு இடையூறாகவும் இருந்தது. இந்தப் பின்புலத்திலிருந்து தான் ‘இந்தியாவில் அரசு’ உருவானது. இந்திய நிலப்பரப்பில் அரசு உருவாக்கம் என்பது, ஆரியர் தமிழரை வெற்றி கொண்ட வரலாற்றுடன் தொடர்புடையதாகும்.

    ஆரியப் பார்ப்பன நலன்களுக்கான அரசை உருவாக்குவதில், ருக் வேதம், மனுதர்மம், அர்த்த சாஸ்திரம் ஆகிய நூல்கள் பெரும் பங்காற்றியுள்ளன.

    ருக் வேதம், சிந்து வெளித் தமிழர் நாகரிகத்தை ஆரியர் வெற்றி கொண்ட வரலாற்றுப் பதிவையும், தமிழரை வீழ்த்தி ஆரிய அரசுகள் அமைக்கப்பட்டவிதத்தையும் விளக்குகிறது.

    மனுதர்மம், ஆரிய அரசுகள் அமையத் தொடங்கியப் பிறகு, அவ்வரசுகளின் சாதிய வர்க்க ஒடுக்குமுறைகளைப் பொது நியதிகளாக்கிய ஆவணமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

    கௌடில்யரின் அர்த்த சாஸ்திரமோ, ஆரிய அரசின் ஒட்டு மொத்தக் கட்டமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதை மிக விரிவாக அறிவிக்கும் நூலாகும். சிறிய அரசுகள் எனும் நிலையைத் தாண்டி ‘ஆரியப் பேரரசுகள்’ அமைப்பதை வலியுறுத்தி அவற்றுகான வழி முறைகளை கற்பித்த நூல். இந்த நூலில் செயல்படுத்தபடும் கடமை அரசியல் இதுவரையிலான இந்திய இனவியலில் தனது முக்கியமான பங்களிப்பைச் செய்து வருகிறது. இது கூறும் அரசுக் கட்டமைப்பை நாம் இங்கு ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோமெனில் இது நன்கு விளங்கும்.

    அரசனின் முதல் கடமை

    அர்த்த சாஸ்திரத்தில் அரசனின் கடமை என்று முதல் முறையாகக் குறிப்பிட்டிருப்பன, ‘…மன்னன், மக்களில் எவரும் சுயதர்மத்தை மீறாமலிருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்’ (அர்த்த சாஸ்திரங்கள் எனும் சாஸ்திரங்களின் நீதி நூல், ஸ்ரீ ஆனந்த நாச்சியாரம்மா (மொ.), ப.12) என்பதாகும். மக்களது சுயதர்மம் என்று சாணக்கியன் குறிப்பிடுபவை.

    வேதத்தை ஓதுதல், கற்பித்தல், யாகம் செய்தல், தானம் கொடுப்பது, தானம் வாங்குவது – பிராமணர் சுயதர்மம்.

    வேதம் ஓதுவது, யாகம் செய்தல், தானம் கொடுப்பது, ஆயுதங்கள் செய்து கொள்வது, பிற உயிர்களைக் காப்பாற்றுவது – சத்ரியர் சுயதர்மம்.

    வேதம் ஓதுவது, யாகம் செய்தல், தானம் கொடுப்பது, விவசாயம், கால்நடைப் பராமரிப்பு, வாணிபம் – வைசியர் சுயதர்மம்.

    மேற்கண்ட மூன்று பிரிவினருக்கும் பணி செய்தல், விவசாயம், கால்நடைப் பராமரிப்பு, வாணிகம் செய்தல், மரம், கல், உலோகங்களாலான சிற்பங்களை வடித்தல், பாடல், நடனம் – சூத்திரர் சுயதர்மம்.

    இந்த ‘சுயதர்மங்களைப் பாதுகாப்பதே அரசனது முதல் கடமை என்கிறான் சாணக்கியன். அரசு உருவாகும் போது, அதிகாரக் குவிப்பு – அரசனிடத்தும், மூலதனக்குவிப்பு – அரசன் மற்றும் வணிகத்திடத்தும் சென்றது. மூவகைக் குவிப்பிற்கு அடிப்படை பெருவாரி மக்களின் உற்பத்தித் திறனும் உழைப்பும் ஆகும். சூத்திரன் எனப்பட்ட பெருவாரி மக்களே – அறிவாளர்களாகவும், உற்பத்தி ஆற்றல் மிக்கவர்களாகவும் இருந்தனர்.

    ஆகவே, இம்மக்களை உற்பத்தியில் ஈடுபடுத்தி அவர்களது உழைப்பைச் சுரண்டுவதே ஆரிய அரசுக் கோட்பாட்டின் மையக் கருத்து. இம்மக்கள் தமது அமைப்பு சுரண்டப்படுவதை எதிர்த்துப் போராடக் கூடாது என்பதற்காக, மிக மோசமான ஒடுக்குமுறைகள் இவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன. இவை அனைத்தும் அரசனது ‘கடமைகள்’ என்றாக்கப்பட்டன. சுருங்கக் கூறின், பெருவாரி அறிவாளர் உழைப்பாளரின் உற்பத்தித் திறனைச் சுரண்டி மூலதனக் குவிப்பை உருவாக்க வைசியர் எனும் வணிகப் பிரிவினரும், இம்மூலதனக் குவிப்பைப் பாதுகாக்கவும், புரட்சிகர நடவடிக்கைகளை ஒடுக்கவும் தேவையான அதிகாரக்குவிப்பு அரசனிடத்திலும் ஒப்படைக்கப் பட்டன. இந்த ‘ஒழுங்குகள்’ முறையாக நடக்கின்றனவா என மேற்பார்வையிட்டு ஆரியப் பார்ப்பன மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தும் நிலையில் பார்ப்பனர்கள் இருந்தனர். இதுவே ஆரியரது அரசுக் கோட்பாடு. இதற்கு பலியானவர்கள் ஆரியர்களால் அடக்குமுறைக்கு உள்ளான திராவிடர்கள். இது பிற்பாடு திராவிடர்களின் எல்லாவிதமான செயலாக்கங்களிலும் தென்பட்டு வருகின்றன.

    இவை தவிர, புரோகிதர்களின் செல்வாக்கு குறித்து அர்த்த சாஸ்திரம் பின்வரும் விதியைக் கூறுகிறது. ‘மன்னன் புரோகிதனிடத்தில், தந்தையிடம் பிள்ளை போன்றும், எஜமானிடம் வேலையாள் போன்றும் பணிவுடன் அனுசரித்து நடக்க வேண்டும்’ என்பதே அது. (மேலது.) அரசன், பார்ப்பனர்களின் ஆலோசனைகளையும், கட்டளைகளையும் நிறைவேற்றுபவனாகவே வைக்கப்பட்டான். இதன் பொருள், அரசன் ஒன்றுமறியா அப்பாவி நிலையில் வைக்கப்பட்டான் என்பதல்ல!

    அரசர்கள் மூலதனம் மற்றும் அதிகாரம் ஆகியவற்றின் அனைத்துப் பலன்களையும் அனுபவித்தனர். அதே வேளை, நிர்வாகம், நீதி உள்ளிட்ட பொறுப்புகளைப் பார்ப்பன மேலாதிக்கத்திடம் ஒப்படைத்தனர். உழைப்பு மற்றும் அறிவாற்றல் கொண்டு உற்பத்தியில் ஈடுபடும் பெருவாரி மக்கள் ஒரு முனையிலும், அரசன் மறுமுனையிலும் எதிரெதிர் துருவங்களில் நிறுத்தப்பட்டனர். இவ்விரு எதிர்வுகளின் இணைப்பாகவும் முரணாகவும் பார்ப்பனர்கள் செயல்பட்டனர். இதன் வழியே வர்க்க, சாதி ஏற்றத் தாழ்வுகள் பெருகத் தொடங்கின. உற்பத்தியில் ஈடுபட்ட உழைப்பாளர், அறிவாளர் மீது ஒடுக்குமுறைகள் பலவும் ஏவப்பட்டன.

     பண்பாடு மீதான ஆரியத் தாக்கமும் புதிய கோட்பாட்டு சாத்தியங்களும்

    கிராமங்கள் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டன. அதோடு அங்கு செயல்படுத்த வேண்டிய வேலைகளின் பிரிவுகள் பற்றியும் அர்த்தசாஸ்திரம் விரிவாகப் பேசுகிறது. சுருங்கக் கூறின் உழைக்கும் மக்கள் மன்னரின் மேற்பார்வையில் பார்ப்பன ஆதிக்கத்திற்கு கீழானார்கள். அதோடு பண்பாடு சார்ந்த ஆதிக்கமும் அது சார்ந்த புதிய அணுகுமுறைகளின் மக்களின் வாழ்வில் இடம்பெறலாயின. “ உத்யானவனங்களோ இருக்கக்கூடாது. நடிகர்கள், நடனக் கலைஞர்கள், கதை சொல்பவர்கள், பாடகர்கள் முதலானோர் கிராமங்களில் விவசாய வேலைகளுக்கு இடையூறு விளைவிக்கக் கூடாது, கிராமங்கள், நடன, நாடகக் கலைஞர்கள் கூட வேண்டிய இடங்கள் அல்ல. அவர்கள் அனைவரும் தத்தமது நிலங்களில் வேலை பார்த்துக் கொண்டேயிருப்பதால் அவர்களும் மேன்மைக்கு வருவார்கள் கருவூலத்தில் செல்வமும் பெருகும் ” என அர்த்த சாஸ்திரத்தை மேற்கோள் காட்டி ம.செந்தமிழன், பண்பாட்டுக் கட்டமைப்பில் ஆரிய ஆளுமையை பதிவு செய்கிறார். (ம.செந்தமிழன், ஆரிய மேலாண்மையின் அரசுக் கோட்பாடு)

    கலை மற்றும் கலைஞர்கள் மீதான அடக்குமுறைகள் எல்லா நிலைகளிலும் நிகழ்ந்துள்ளன. இது அவ்வினத்தின் மீதான ஒடுக்குமுறைகளையும், பண்பாட்டு அழிவினையும் குறிப்பிடுகிறது. விபசாரம் அரசால் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்பது ஆரியர் கோட்பாடு. அர்த்த சாஸ்திரம் இதையே பதிவு செய்துள்ளது.

    விபசாரம், அரசால் அங்கீகரிக்கப்பட்ட ‘தொழில்’ ஆகும். இதற்கென வரி விதிக்கப்பட்டது. ‘கண்ணிகையரில், அவர்களின் அழகு, அலங்காரம் இவற்றையெல்லாம் பார்த்து, மூன்று வகையாக அவர்களைப் பிரித்து அரசு சேவகத்தில் சேர்க்க வேண்டும்’ என்கிறது அர்த்த சாஸ்திரம். இது தவிர விபசாரம் தொடர்பான ஏராளமான விதிகள் அர்த்த சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழர் மெய்யியலுக்கு நேர் விரோதமான அர்த்த சாஸ்திரம், கால ஓட்டத்தில் தமிழரை அடிமை கொண்டது வரலாறு. இடைச்சங்க மற்றும் கடைச் சங்க காலத்தில் அரசு உருவாகத் தொடங்கிய போது, அதற்கு எதிரான கருத்தியல்கள் தமிழரிடையே வளர்ந்தன. ஆரியத்தின் பண்பாட்டுப் படையெடுப்பின் விளைவாக, தமிழரின் கருத்தியல்கள் தோற்கடிக்கப்பட்டு, அரசுகள் ஆரிய மேலாதிக்கத்தோடு உருவாகின. இன்றைய இந்திய அரசு, நவீன அர்த்த சாஸ்திரக் கோட்பாடு என்பதாலேயே நடக்கிறது. அரசுத் தலைமையைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தைப் பார்ப்பனீய மேலாதிக்கவாதிகளே வைத்திருக்கின்றனர்.

    கோட்பாட்டு உருவாக்கம் (Policy Making) என்பது, இன்றும் பார்ப்பன ஆதிக்கம் நிறைந்த இந்துத்துவ மத நிறுவனங்கள், பெரு முதலாளிகள் ஆகியோர் இடத்திலே தான் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உற்பத்தியில் ஈடுபடும் உழைப்பாளர், அறிவாளர் மிக மோசமாக சுரண்டப்படுகின்றனர். விவசாயம் சார்ந்த அனைத்துத் தொழில்களும் கடுமையான நெருக்கடிகளுக்குள் தள்ளப்படுகின்றன. விவசாயிகள், நிலத்தோடு பிணைக்கப்பட்ட அடிமைகளாகவே நடத்தப்படுகின்றனர்.

     இந்தியச் சாதி அமைப்பு

    இந்திய துணைக்கண்டத்தில் சாதி தொழிலின் அடிப்படையில் தோன்றி பின்னர் பிறப்படிப்படையில் மாற்றம் பெற்றது. இந்தியாவில் 3000 ஆண்டுகளுக்கும் மேலாக உலகின் பல்வேறு இடங்களில் இருந்தும் வந்து பல்வேறு மொழிகள் பேசும் மக்கள் கூடி வாழ்ந்திருக்கிறார்கள். பல்வேறு போக்குகளால் பிறப்படிப்படையில் சாதிகள் அடையாளம் கொண்டு இன்றளவும் நிலைப்பெற்றுள்ளன.

    தமிழரிடையே சாதி என்பது, வழிவழியாய் தொழில் அடிப்படையில் (பரம்பரைத்தொழில்) இருந்த குழுக்களும் கூட்டங்களும் நாளடைவில், பிறப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சமூக அமைப்பாய் மாறி, பின் படிமுறை அமைப்பும் ஏற்பட்டது. சாதிகளில் படிமுறை ஏற்றாத்தாழ்வுகள் தமிழரிடம் தொன்றுதொட்டு இருந்ததல்ல; ஆனால், எப்பொழுது எவ்வப்பகுதிகளில், எத்தனை வலுப்பெற்று இருந்தது என்பது திண்ணமாய்த் தெரியவில்லை. சாதி வகுப்பு முறைமைகளும் படிமுறை அமைப்பும் இடத்துக்கிடம் வேறுபடும். பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும், முற்கால அரசரிடமும், பிற செல்வந்தர்களிடமும் இருந்த நெருக்கம், அணுக்கம் பற்றிய உறவாட்ட வேறுபாடுகளினாலும், சாதிகளில் ஏற்றத்தாழ்வுகள் மாறி வந்துள்ளன. வடமொழியில் உள்ள மனு ஸ்ம்ரிதி ( மனுநீதி சாத்திரம் ) என்னும் நூலும் அவ்வரிசையில் உள்ள பிற வடமொழி நூல்களும், தமிழரிடையே சாதியின் அடிப்படையில் பிறப்படிப்படையில் ஏற்றத்தாழ்வுகள் ஊட்டவும் வலியுறுத்தவும் துணை செய்தன. தமிழில் பிறப்பின் அடிப்படையில் படிமுறையில் ஏற்றத்தாழ்வுகள் கூறும் நூல்கள் யாதும் 16 ஆம் நூற்றாண்டு வரையிலும் ஆன காலப்பகுதியில் இருப்பதாகத் தெரியவில்லை.

    சாதீயம் பற்றியதான கோட்பாட்டு அமைப்பு முறை:

    சாதி என்பது இந்தியப் பாணியிலான சமூகத்தின் அடிப்படைச் சமூக அலகு ஆகும். இதன் தனித்தன்மை பிறப்பின் அடிப்படையிலான வேலைப்பிரிவினையே. இது இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் நிலவுகிறது. ஒருவரின் சாதி அவரின் பிறப்பைக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. ஆகவே இதனை வெளியேற வழியற்று அடைபட்ட வகுப்பு என்று கூறலாம். இது சமூக வழக்கு, அதிலிருந்து தோன்றிய அரசுகள் போன்றவற்றால் பாதுகாக்கப்படுகிறது.

    ஒருவர் சாதி அடிப்படையில் ஒடுக்குமுறைக்கு, மனித உரிமை மீறல்களுக்கு, பாகுபாட்டுக்கு உட்படுதல் சாதிய ஒடுக்குமுறை ஆகும். தெற்காசியாவில் சாதிய ஒடுக்குமுறையால் பெரும்பான்மை மக்கள் நெடுங்காலமாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இவை வெளிப்படையான தீவிர வன்முறையான ஒடுக்குமுறைகள், சமூக நிறுவனக் கட்டமைப்புகளின் ஊடாக நடைபெறும் ஒடுக்குமுறைகள், நுண் ஒடுக்குமுறைகள் என்று பல வகைகளில் அமைகின்றன. சாதியின் தோற்றம் பற்றிய பல்வேறு கருதுகோள்கள் வேறுபட்ட அறிஞர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன. சாதியின் தோற்றம் குறித்து பக்தவச்சல பாரதி ஆறு கோட்பாடுகளைக் குறிப்பிடுகிறார். அவை: மரபுக் கோட்பாடு (traditional theory), தொழிற் கோட்பாடு (occupational theory), சமயக் கோட்பாடு (religious theory), அரசியற் கோட்பாடு (political theory), இனக் கோட்பாடு (racial theory), படிமலர்ச்சிக் கோட்பாடு (evolutionary theory) என்பனவாகும்.

    இதனுள் மிக உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டிய கோட்பாடு, மரபுக் கோட்பாடு. சாதி இறைவனால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு என்பதுவே மரபுக் கோட்பாடு. ரிக் வேதம், மனு தர்மம், பகவத்கீதை ஆகியவை சாதி இறைவனால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு என்றே கூறுகின்றன. பகவத்கீதை குணத்தின் அடிப்படையில் சாதி அமைகின்றது என குறிப்பிட்டாலும், பிற பிறப்பின் அடிப்படையிலேயே சாதி அமைகின்றது என்பதை வலியுறுத்துகின்றது. இது இந்திய சாதியியல் வகைமையில் இன்றுவரை மிகப்பெரிய ஆளுமையை செலுத்தி வருகின்றது.

    தொழிற் கோட்பாடு என்பது சாதியானது, மக்கள் குழுக்கள் செய்யும் தொழில் அடிப்படையில் அமைந்தன என்கிறது. தொழில்களின் தன்மை காரணமாக ‘தூய்மை’, ‘தீட்டு’ போன்றவை வரையறை செய்யப்பட்டன. இதன் வழியாக பார்ப்பனர் என்ற பிரிவு மேலானது என்றும் அவர்கள் தீட்டு மற்றும் தூய்மை சார்ந்த சடங்கு முறைகளை வகுத்தும் அது சார்ந்த மேலாண்மைகளைப் பெற்றும் வந்தது திராவிட சமூகத்தில் மிகப்பெரிய வர்க்க பாகுபாடுகளைத் தோற்றுவித்தது. ஆனால் பிறப்பு ரீதியிலான தமிழ் சமூக அமைப்பை மறுக்கும் பலர், தொழில் ரீதியிலான தமிழ் சமூக அமைப்பு இயல்பானது என்றும் கருத்தாக்கம் செய்துள்ளார்கள்.

    ஆரியர்கள் இந்தியாவுக்கு புலம்பெயர்ந்த போது தொல் திராவிடர்களை அடிமைப்படுத்தி நிறுவிய அமைப்பே சாதி அமைப்பு என்கிறது இனக் கோட்பாடு. “குடியேறிய ஆரியர்கள் இங்கிருந்தவர்களைக் காட்டிலும் உடல் தோற்றத்தில் பொலிவானவர்களாக திகழ்ந்ததால் அதனைப் பயன்படுத்தி அவர்கள் வருணப் பாகுபாட்டை காட்டத் தொடங்கினர்.” ( பக்தவச்சல பாரதி, மானிடவியல் கோட்பாடுகள், ப.330)

    மொழி குறித்தான கோட்பாட்டு சூழல் மற்றும் விமர்சனங்கள் :

    மொழி என்ற அலகின் வழி செயல்பட்ட இனப் பண்புகள் அவ்வினம் குறித்தன அடையாளங்களாகத் திகழ்கின்றன. திராவிட மொழிகளில் முதன்மையான தமிழ் மொழியில், தமிழ் இனம் குறித்தான பதிவுகளை உற்று நோக்குகையில் அது ஆரிய மொழிக் கோட்பாட்டோடு கொண்டுள்ள விலகல்களை வெளிப்படுத்துகிறது.

    “ சமஸ்கிருத யுக துவக்கத்தில் தமிழகத்தின் வடக்கில் தமிழ், வடமொழி, ஆரிய மொழி ஆகிய மூன்று மொழிகள் பயன்பட்டன. சமஸ்கிருதத்தின் வரலாற்றுக் குறைபாடுகளை மறைக்க எழுந்தவைகளே மத்திய காலத்து மாயக் கதைகள். இவற்றால் கி.பி. ஆறாம், ஏழாம் நூற்றாண்டுகளில் இந்தியாவில் ஒரு சமஸ்கிருத மொழிப் பேரரசும் பண்பாட்டுப் பேரரசும் உறுதி செய்யப்பட்டன.” ( வே.தி.செல்லம், தமிழக வரலாறும் பண்பாடும், ப.502)

    தமிழர் ஆரியரினும் 500 ஆண்டுகளாவது முற்பட்டவர். ரிக் வேத காலகட்டத்தில் ஆரியர் சிந்துப் பள்ளத்தாக்குகளிலும், கங்கைப் பள்ளத்தாக்குகளிலும் பரவியிருக்க வேண்டும். ஆனால் தொல்காப்பியரின் ஆரியச் சார்பினை அவர் பொருளதிகாரம் வகுக்கின்ற போது காண முடிகின்றது. இதனால் இக்காலத்தில் ஆரியக் கொள்கைகள் சில தென்னாட்டுக்கு வந்துவிட்டதெனத் தெரிகிறது.

    கால்டுவெல், திராவிட ஒப்பிலக்கணம் (1856) என்னும் தனது நூலில் ‘வடமொழிக் குடும்பத்திலிருந்து தமிழ் வேறுபட்டது. அது திராவிட மொழிக் குடும்பத்தின் தாய்மொழி. அதிலிருந்தே தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகள் தோன்றின. வடமொழியின் துணையின்றி தனித்தியங்கும் திறன் பெற்றது தமிழ் மொழி. வடமொழியின் கலப்பை எந்த அளவிற்கு நீக்குகிறதோ அந்த அளவிற்கு தமிழ் தூய்மை அடையும்’ என்கிறார் . இது பிற்பாடு தோற்றம் பெற்ற மறைமலை அடிகளாரின் தனித்தமிழ் கொள்கைக்கு அரண் சேர்த்தது.

    தனித்தமிழ் இயக்கம் என்பது தமிழ் மொழியில் பிறமொழிச் சொற்களைக் கலக்காமல் தனித்தமிழில் எழுதப்பட வேண்டும் அல்லது பேசப்பட வேண்டும், அவ்வாறு கலப்பதால் தமிழ்மொழிக்கு நன்மையில்லை, பெருந்தீமை என்று சொல்லும் இயக்கம் ஆகும். தமிழ் மொழி, இயற்கையாகவே தனித்தியங்கக்கூடியது; அதற்குப் பிறமொழிகளின் துணை தேவையில்லை என்பது இக்கொள்கையின் அடிப்படையாகும்.

    சமஸ்கிருத சொற்களும் மணிப்பிரவாள அல்லது மணிப்பவழ நடையும் தமிழில் மிகுதியாக பயன்படுத்தப்பட்ட சூழ்நிலையில் தமிழ் மொழியை முன்னிறுத்தி முன்னெடுக்கப்பட்ட இயக்கமே தனித்தமிழ் இயக்கமாகும். இந்த இயக்கம் 1916 ஆம் ஆண்டு அளவில் தோற்றுவிக்கப்பட்டது. தேவநேயப் பாவாணர், மறைமலை அடிகள், பாரதிதாசன், பெருஞ்சித்திரனார் ஆகியவர்கள் தனித்தமிழ் இயக்கத்தில் குறிப்பிடத்தக்கவர்கள். “சிறந்தது எதற்கும் பார்ப்பன மூலங் கற்பிக்கும் தன்மை வடமொழிப்பண்டிதர்களின் இயற்கை”யை முற்றிலும் நிராகரிக்கும் சூழலை இவ்வியக்கம் அடிப்படையாகக் கொண்டது.

    விடுதலைக் காலத்தில் தமிழ்நாட்டில் திராவிடம் என்னும் பெயரில் தென்னாட்டு உணர்வு தோன்றிக் கொண்டிருந்தது. அதற்குக் காரணம் வடநாட்டுப் பேராயத்தின் (காங்கிரசு) நிலைப்பாடேயாகும். அப்போது அக்கட்சி அய்யர்கள், அய்யங்கார்கள் பிடியில் இருந்தது. அவர்கள் பெரும்பாலும் தெலுங்கு பேசும் பார்ப்பனர்கள். அரசுப் பதவிகள், பணிகள் அவர்களுக்கே சென்று சேர்ந்தன. பார்ப்பனர் அல்லாதவர்க்கு மிகச்சிறிய அளவில் மட்டுமே கிடைத்தது. ஆங்கில அரசு நிலவிய அக்காலத்தில் அரசுடன் உடன்பட்டுப் தங்களின் ஆங்கில அறிவால் பல நன்மைகளை அவர்களே அடைந்தார்கள். பார்ப்பனர் அல்லாதவர்க்கு நன்மை கிடைக்க வேண்டும் என்று எண்ணிய சில பெரியோர்கள் அது பற்றித் திட்டமிட்டனர். இது திராவிட இயக்கங்கள் தோன்றுவதற்குக் காரணமாகியது.

    மொழி என்ற நிலையில் தமிழ் மீதும் அதன் இனத்தின் மீதும் ஆரியம் செய்கின்ற ஆளுமை இயல்பு அடிமைத்தனத்தை பறை சாற்றுவதாகவே இருப்பதாக கொள்ள முடியும். மொழியின் வழி அந்நாட்டின் பண்பாட்டு விழுமியங்களை அழிக்கவும், திரிக்கவும் இயலும் என்ற வகையிலான கோட்பாடுகள் மணிப்பிரவாள இலக்கியங்களில் பின்னால் செயல்பட்டுள்ளன என்பதை மறுக்கவியலாது. ஆரியத்தை நீக்கிய தமிழ்த்திருமணம், திருவள்ளுவர் ஆண்டுமுறை, தமிழர் மதம், தமிழரின் நான்மறை முதலிய கோட்பாடுகள் முதன்முறையாகத் தமிழ் நிலத்தில் மறைமலை அடிகளால் அறிமுகப்படுத்தப்பட்டன. இது கலப்படமற்ற தூய தமிழ் இனத்திற்கான அடையாளமாகக் கொள்ளப்பட்டன.

    மொழியின் மீதான வடமொழியின் ஆளுமை கல்வியிலும் தனது பலத்தை செலுத்திய பிற்பாடுதான் ஆரியம் எதிர்க்கப்பட வேண்டும் என்ற எண்ணம் பேராயக் கட்சியினருக்கும் ஏற்பட்டது. ஆனால் தமிழ அறிஞர்கள் பலரும் ஆரியத்தையும் வடமொழியையும் ஆதரித்து வந்ததும் திராவிட சூழலில் பெரும் வியப்பையும் அதிர்ச்சியையும் தந்தது. வ.வே.சு. ஐய்யர் சேரன்மாதேவியில் நால் வருணப் பாகுபாடோடு நடந்துகொண்டது இதற்குச் சான்றாகக் கொள்ளலாம். ஆனால் பெரியாரின் திராவிடக் கழகத்தின் செயல்பாடுகள் ஆரியக் கோட்பாடுகளை எதிர்க்கும் விதத்திலும், திராவிட மக்களை உயர்த்துவதிலும் மும்முரமாக செயல்பட்டன. ஆரிய ஏமாற்று, மூடநம்பிக்கைகள், மதச்சடங்குகள், முதலியவற்றையும் பெரியார் மக்களிடத்தில் பரப்பினார்.

    பிற்பாடு தோற்றம் பெற்ற பல திராவிடக் கட்சிகள் ஆரியர்க்கும் அவர்க்குத் துணைபோகும் பேராயத்துக்கும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அப்போக்கு மக்களிடத்தில் நன்றாகப் பரவியது. பண்பாட்டு மீட்பும் தமிழ்க் காப்புணர்வும் மக்களிடத்தில் ஏற்படத்தொடங்கின. அவர்கள் ஆட்சிக்கு வந்த போது தமிழ் வழிக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். 

    சமயம் மற்றும் வழிபாடு பற்றியதான கோட்பாட்டுத் தாக்கங்கள்             

    சமய வழிபாட்டில் தெய்வங்களைப் புகுத்துதல் புதியதான ஒரு வழிபாட்டுக் கோட்பாடுகளை உருவாக்குகிறது. நாடோடி வாழ்க்கையை மேற்கொண்டிருந்த ஆரியர்கள் தமிழகத்தில் புகுந்த பிறகு தங்களை குருமார்களின் நிலைக்கு உயர்த்துகின்றனர். நிகமுறை வழிபாடுகளையும், இந்திரன் மரபினயும் தமிழகத்துக்கு அறிமுகப்படுத்துகிறார்கள். அதோடு நால்வருணச் சாதிக் கோட்பாட்டையும் வலியுறுத்துகின்றனர். வழிபாடு முறைகள் இவ்வருணப் பாகுபாட்டிற்கேற்ப மாற்றம் அடைகிறது.

    திராவிட வழிபாட்டுக் கோட்பாடுகள் சிவனையும், தாய்த்தெய்வ வழிபாட்டையும் முன்னிறுத்தி செயல்படுகின்றன. யோகம், தவம் ஆகியவற்றின் உயர்வையும் அறிந்துள்ளதைக் காட்டுகிறது. வைதீக சமயத்தில் வருகின்ற மரபுகளும், புராணங்களில் வருகின்ற கதைகளும், வீரர் வரலாற்றுக் குறிப்புகளும் ஆரியர்களின் வருகைக்கு முற்பட்ட திராவிட இந்தியாவில் நிலவிய மரபுகளிலிருந்தும் கதைகளிலிருந்துமே தோன்றியவைகளே என்கிறார் எஸ்.கே.சாட்டர்ஜி. ( vedic age, p.163)

    ரிக் வேதம் குறிப்பிடும் புருட சூக்த கோட்பாடு ஆதி திராவிடர்கள் வகுத்த கொள்கையே என்கிறார் நீலகண்ட சாஸ்திரி. ( Aryans and Dravidians cultural contacts, p.13). அகிலத்தின் தோற்றத்தை உருவகப்படுத்தும் இக்கோட்பாடு பின்னாளில் மனுவின் நால்வருணக் கோட்பாடாக மாறுகிறது. இன்றைக்கும் மக்களுக்குமிடையில் நிலவிய குருமார் இனத்தின் வலிமையும் ஆதிக்கமும் பெருகிக் கொண்டிருக்கிறது.

    பிராமணர் – பிராமணரல்லாதோர் பாகுபாடு

    இந்திய சமூக அமைப்பில் வட இந்திய பிராமணர்களுடன் ஒப்பிடுகையில் சென்னை மாகாணத்தில் தென்னிந்திய பிராமணர்கள் உயரிய இடத்தைப் பெற்றிருந்தனர். மொத்த மக்கள் தொகையில் 3.2 விழுக்காடே இருந்த தமிழ் பிராமணர்கள் 1850களில் இந்தியர்கள் வகிக்கக் கூடிய அரசு பதவிகளில் பெருமளவில் இடம்பெறத் தொடங்கினர். இதன் மூலம் அவர்களது அரசியல் செல்வாக்குப் பெருகியது.

    19ம் நூற்றாண்டிலும் 20ம் நூற்றாண்டின் துவக்கத்திலும் இந்திய நிருவாகப் பணிகள் மற்றும் நகர்ப்புறங்களில் புதிதாக உருவான தொழில்களிலும் பிராமணர்களே ஆதிக்கம் செலுத்தினர். பிராமணர் சாதியில் கல்வியறிவும் ஆங்கில அறிவும் அதிகமாக இருந்ததே இந்த முன்னேற்றத்துக்கு முக்கிய காரணம். இதனால் பிராமணரல்லாதோருக்கும் பிராமணருக்குமிடையே இருந்த அரசியல், சமூக, மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகமாயின. அன்னி பெசண்டின் ஹோம் ரூல் இயக்கத்தால் இந்தப் பாகுபாடு மேலும் அதிகரித்தது.

    திராவிட இயக்கம்

    திராவிட இயக்கம் என்பது கி.பி 19 ஆம் நூற்றாண்டின் இறுதி மற்றும் 20-ஆம் நூற்றாண்டுகளில் தமிழ்ச் சமுதாயத்தில் உருவாகிய ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சமூக மற்றும் அரசியல் இயக்கமாகும். இக் காலகட்டத்தில் சாதாரண மக்களுக்குக் கிடைத்த கல்வி வாய்ப்புக்கள் அவர்களிடையே சமூக உணர்வுகளைத் தட்டி எழுப்பியிருந்தன. இவ்வாறானவர்களில் சிலர் சாதாரண மக்களில் உரிமைகளுக்காக வாதிட்டதுடன், அக்காலத்தில் இருந்த பிராமண ஆதிக்கத்தையும் எதிர்த்து வந்தனர். நாட்டுக்கு விடுதலை வரும்போது அது பிராமண ஆதிக்கத்தின் கீழ் வருமே ஒழிய அதன் பயன்கள் மக்களுக்குக் கிட்டாது என அவர்கள் நம்பினர். இவ்வாறான கருத்துக்களை முன்வைத்துப் போராடியோரில், டி. எம். நாயர், தியாகராசச் செட்டியார், கேசவப் பிள்ளை, நடேச முதலியார் போன்றோர் முன்னணியில் இருந்தனர்.

    திராவிட இயக்கங்கள் தமிழ்ப் பண்பாடு, தமிழர் கலை, தமிழர் சமயம் என்ற தளங்களில் செயல்படுகின்றன. தொடக்கத்தில் ஆரியர் X திராவிடர் என்ற எதிர் நிலைகளில் திராவிட இயக்க இலக்கியங்கள் கருத்துப்பரப்பல் புரிந்தன. பின்னர் சடங்குகளை விலக்குதல், மனுதரும சாத்திரத்தை மறுதலித்தல், கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, கலப்புத் திருமணமத்திற்கும் கைம்பெண் திருமணத்திற்கும் சுயமரியாதைத் திருமணத்திற்கும் வரவேற்பு என்ற தளங்களில் அவற்றின் செயல்பாடுகள் விரிவடைந்தன.

    பொதுவாகவே வைதீக எதிர்ப்பாளர்கள், தமிழர் மத்தியில் நிலவிய சாதிக் கொடுமை முதலியவற்றுக்கு, வைதீகத்தையும், பிராமணரையுமே குற்றஞ்சாட்டினர். வைதீகத்துக்கு முந்திய பண்டைத் தமிழகம் சாதிப் பாகுபாடற்ற சமூகமாக இருந்ததை எடுத்துக்காட்டிய அவர்கள், இனம், மொழி, பண்பாடு ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி மக்களை அணிதிரட்டினர். 1916 ஆம் ஆண்டில் இதன் பெயர் தென்னிந்திய நல உரிமைக் கழகம் என மாற்றப்பட்டது. தென்னிந்திய நல உரிமைக் கழகத்தின் அரசியல் பிரிவு நீதிக் கட்சி என்ற பெயருடன் இயங்கியது. 1919 ஆம் ஆண்டில் பிரித்தானிய அரசினால் சட்ட வடிவம் கொடுக்கப்பட்ட இந்திய அரசியல் சீர்திருத்தத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இரட்டை ஆட்சிமுறையின் கீழ் மாநிலங்களுக்குப் பொறுப்பாட்சி வழங்கப்பட்டது. இந்திய தேசிய காங்கிரஸ் இம்முறையை ஆதரிக்காவிடினும், நீதிக் கட்சி அதனை ஆதரித்தது. இம் முறை மூலம் வைதீக ஆதிக்கத்தை உடைத்து மக்களாட்சியை ஏற்படுத்தமுடியும் என அது நம்பியது. 1937 க்குப் பின்னர் தலைமைப் பதவியைப் பெரியார் என அழைக்கப்பட்ட ஈ. வெ. ராமசாமி ஏற்றுக்கொண்டார். திராவிட இனக் கொள்கையில் பிடிப்புக் கொண்டிருந்த இவர், மூலம் புகழ் பெற்றிருந்தார். இதனால், நீதிக் கட்சியின் வீழ்ச்சியையும் கடந்து திராவிட இயக்கம் நிலைக்க முடிந்தது.

    முடிவுரை :

    ஆரியர்களாலேயே திராவிடர்களின் வரலாறு எழுதப்பட்டது. மேலும் இனவரலாறு என்பதைனையும் தாண்டி, இது ஒரு அரசியல் இணைப்பும் கொண்டிருப்பதால் ஆரிய அல்லது பிராமணிய குழுக்களுக்கு சமஸ்கிருதத்தின் பெருமைக்கும், அதன் மீது இழுக்கு ஏற்படும் செய்திகளையும் வரலாறாக மாற்ற விரும்பவில்லை. இதன் காரணமாக உண்மையான திராவிட வரலாறுகள் வெளிவரவில்லை.

    வரலாறுகள் என்றுமே தலைமைக் குடிகளை முன்னிறுத்தியே எழுதப்பட்டிருக்கின்றன. இந்திய வரலாறும் அவ்வாறே. ஆனால் நம்மை அழிக்க முயன்ற அந்நிய விரோதியிடமிருந்து தற்காத்துக் கொள்ளவும் நமது பழம் பெருமைகளை தோண்டி எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இது ஆங்கிலேய ஆட்சியின் போது தீவிரமடைந்தது என்பதை மறுக்கவியலாது. வளர்ந்து வந்த விடுதலை இயக்கத்தினைத் தளர்வுறச் செய்வதற்காக ஆங்கிலேய அதிபர்களால் இந்திய பாரம்பரியம் குறித்த சொல்லாடல்கள் உலக வரலாற்றோடு ஒப்புமை செய்யப்பட்டு தரம் தாழ்த்தப்பட்டன. காலம் காலமாக அடிமை மனப்பான்மை கொண்டவர்கள் இந்தியர்கள் என்ற கற்பிதம் இந்திய வரலாறாகத் திரிக்கப்பட்டது. ஆனால் இதை எதிர்த்துப் போராடுவதற்காக இந்திய வரலாற்றை மீள் கண்டுபிடிப்பு செய்யும் நோக்கில் ஆரியக் கோட்பாடுகள் உருவாக்கப்பட்டன. ஆரியத் திறன்கள் உலக மேலாண்மையாக உருவாக்குவதில் நமது வரலாற்றாசிரியர்கள் ஈடுபட்டார்கள். இது விடுதலை இயக்கத்திற்கு ஒருவகையில் பயனளித்தாலும் மற்ற குலங்களின் திறன்களும் பெருமைகளும், குறிப்பாக திராவிடப் பண்பாக்கம் முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டது. கடந்த காலத்தைப் பற்றிய பொய்யான நிர்ணயத்தையும், நிகழ்காலத்திற்கு பயனற்றதுமான இதை இந்தியர்கள் பூஜிக்கும்படி ஆகிவிட்டது.

    துணைநூற்பட்டியல் :

    • செல்லம்.வே.தி., தமிழக வரலாறும் பண்பாடும்,மணிவாசகர் பதிப்பகம்.
    • பக்தவத்சல பாரதி, மானிடவியல் கோட்பாடுகள், அடையாளம்.
    • டாங்கே.எஸ்.ஏ, பண்டைக்கால இந்தியா, அலைகள் வெளியீடு.
    • ஸ்ரீ ஆனந்த நாச்சியாரம்மா (மொ.), அர்த்த சாஸ்திரங்கள் எனும் சாஸ்திரங்களின் நீதி நூல், , ஸ்ரீ இந்து பதிப்பகம்.
    • Chatterjee.S.K, Vedic Age, Bharathiya Vidhya Bhavn.
    • Neelaganda Sastri, Aryans and Dravidians Cultural Contact, Manaktalas

     

     

    Share
  • தமிழ் எழுத்தின் பழமை-1

    கணியன்பாலன்

     

    தமிழ்மொழியும் அதன் இலக்கியங்களும் மிகப் பழமையானது என்பதற்கு அதன் ‘தமிழி’ எழுத்துத் தோன்றிய காலத்தை அறிதலே போதுமானது. தமிழகத்தில் பழனி அருகே உள்ள பொருந்தல் என்ற இடத்தில் நடந்த அகழாய்வின்போது  கிடைத்த மட்பாண்டங்களில் இருந்த இருநெல் மாதிரிகள் அமெரிக்காவில் உள்ள பீட்டா ஆய்வு நிலையத்தில், அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு (Accelerator Mass  Spectrometry  by the Beta Analytic Lab , USA ), அவைகளின் காலம் கி.மு.490, கி.மு. 450 எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு நெல் மாதிரிகளுமே, பொருந்தல் அகழாய்வில் கிடைத்த, இரு வெவ்வேறு மட்பாண்டங்களிலிருந்து எடுக்கப்பட்டவைகளாகும்.

    இந்த மட்பண்டங்களில் தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளது. இதன் அகழாய்வு இயக்குநர் பாண்டிச்சேரிப் பல்கலைக்கழகப் பேராசிரியர், முனைவர் கா.இராசன் அவர்கள், இந்தக்காலக் கணிப்புகளின்படி, தமிழ் பிராமியின்(தமிழி) காலம் கி.மு. 5ஆம் நூற்றாண்டு என்கிறார். மேலும் தமிழ்பிராமி எழுத்து அசோகர் பிராமிக்கு இரு நூற்றாண்டுகள் முற்பட்டது என்பதோடு, அசோகர் பிராமியில் இருந்து தமிழ் பிராமி(தமிழி) உருவாக வில்லை என்பதும் நிரூபிக்கப்படுகிறது என்கிறார்(1).

    பொருந்தலும், ஆதிச்சநல்லூ ரும்:

    இந்த 5ஆம் நூற்றாண்டுப் பொருந்தல் எழுத்துக்கள் குறித்து டாக்டர் சுப்பராயலு அவர்கள் 29-8-2011 இந்து நாளிதழுக்குக் கொடுத்த தகவலில், இந்த எழுத்துக்கள் ஐராவதம் மகாதேவன் அவர்களின் கணிப்புப்படி இரண்டாம் நிலைத் தமிழி எழுத்துக்கள் ஆகும் எனவும், ஆகவே அதன் காலத்தை கி.மு 490 க்குக் கொண்டுபோக முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார். இதனை அவர் குறிப்பிட்ட பொழுது ஒரு மட்பாண்ட நெல் மாதிரி மட்டுமே அமெரிக்காவில் உள்ள பீட்டா ஆய்வு நிலையத்தில் அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அதன் காலம் கி.மு 490 என கண்டறியப்பட்டிருந்தது.  அதன்பின் இரண்டாவது நெல் மாதிரியும் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டு அதன் காலம் கி.மு. 450 என கண்டறியப்பட்டது.  ஆகவே பொருந்தல் தமிழி எழுத்துக்களின் காலம் கிமு. 5ஆம் நூற்றாண்டு என்பது சந்தேகத்திற்கு இடமின்றி இரண்டு மாதிரிகளின் அறிவியல் ஆய்வு மூலம் இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

    தமிழி(தமிழ் பிராமி) எழுத்துக்களை அதன் எழுத்தமைதி, வடிவம், எழுதும்விதம் ஆகிய பல காரணிகளைக் கொண்டு ஐராவதம் மகாதேவன் அவர்கள் மூன்று நிலைகளாகப் பிரித்துள்ளார். ஒவ்வொன்றுக்கும் இடையே சில நூற்றாண்டுகள் இடைவெளிகள் இருந்துள்ளன என்கிறார் அவர். ஐராவதம் மகாதேவன் அவர்கள் பிரித்த மூன்று நிலை தமிழி எழுத்துகளில், பொருந்தல் தமிழி எழுத்துக்கள் இரண்டாம் நிலை தமிழி எழுத்துக்கள் என்கிறார் டாக்டர் சுப்பராயலு அவர்கள்(2). ஆதலால் முதல் நிலை தமிழி எழுத்துக்கள் இந்த இரண்டாம் நிலை தமிழி எழுத்துக்களுக்குச் சில நூற்றாண்டுகள் முந்தையவையாக இருந்தாக வேண்டும். இரண்டாம் நிலை தமிழி எழுத்துக்களான பொருந்தல் தமிழி எழுத்துக்களின் காலம் கி.மு. 5ஆம் நூற்றாண்டு என்பதால் முதல்நிலை தமிழி எழுத்துக்களின் தொடக்க காலம் அதற்கு இரண்டு மூன்று நூற்றாண்டுகள் முந்தையவையாக இருந்தாக வேண்டும். அதன் அடிப்படையில் கி.மு. 5ஆம் நூற்றாண்டுக்கு முன் இரண்டு, மூன்று நூற்றாண்டுகள் எனில் முதல்நிலை தமிழி எழுத்துக்களின் தொடக்க காலத்தை கி.மு. 8ஆம் நூற்றாண்டு எனக் கொள்ளலாம்.

    கொற்கையில் தமிழி எழுத்துக்கள்:

    1970ல் நடந்த கொற்கை அகழாய்வில் மௌரியர் காலத்து மட்பாண்டங்கள் கிடைத்தன. அத்துடன் தமிழி எழுத்துக்களைக் கொண்ட மட்பாண்டங்களும் கிடைத்தன. அவைகளின் காலம் கி.மு. 3ஆம் 2ஆம் நூற்றாண்டு என ஆய்வாளர் திரு ஆர். நாகசுவாமி அவர்கள் குறிப்பிட்டுள்ளார். அவருடைய அறிக்கை அத்துடன் அதன் அடியாழத்தில் அதாவது 2.69 மீட்டர் ஆழத்தில் ‘கேஆர்கே-4’ என்கிற குழியில் கரித்துண்டு மாதிரிகள் கிடைத்தன எனவும் அதனை கார்பன்-14 ஆய்வுக்கு உட்படுத்தி அதன் காலம் கி.மு. 850க்கும் 660க்கும் இடையே கி.மு. 755 என கண்டறியப் பட்டது எனவும் தெரிவிக்கிறது. மேலும் அதே குழியில் தமிழி எழுத்துப் பொறிப்புகளுடன் கூடிய மட்பாண்ட ஓடுகள் கிடைத்துள்ளன. ஆதலால் ஆய்வுக்கு அனுப்பப்பட்ட கரித்துண்டின் காலம்தான் இந்த எழுத்துப் பொறிப்பின் காலம் என்பதால், கொற்கை அகழாய்வின் அடியாழத்தில் கிடைத்த எழுத்துப் பொறிப்பின் காலம் கி.மு. 755, அதாவது கி.மு.8 ஆம் நூற்றாண்டு என ஆகிறது-(3).

    ஆதிச்சநல்லூர்-தமிழிஎழுத்து:

     

    ஆதிச்சநல்லூரில் நடைபெற்ற அகழாய்வின் இயக்குநர்                                                    சத்தியமூர்த்தி அவர்கள், அங்கு கிடைத்தத் தமிழி  எழுத்துப் பொறிப்பின் காலம், அறிவியல் ஆய்வின் படி (PRELIMINARY  THERMO  LUMINESCENCE  DATING), கி.மு.1500 முதல் கி.மு.500 வரை எனவும், குறைந்த பட்சம் கி.மு.500 க்கும் முற்பட்டதாக இருக்க வேண்டும் எனவும் கூறுகிறார்-(4). அதே   ஆதிச்ச நல்லூரில் நடைபெற்ற அகழாய்விlல் கி.மு 800ஆம் ஆண்டு தமிழி எழுத்துப் பொறிப்பு கிடைத்ததாக 26.5.2004 இந்து நாளிதழ் தெரிவித்துள்ளது-(5).  ஆகவே இந்த ஆதிச்சநல்லூர் தமிழி எழுத்துப் பொறிப்பின் காலத்தைக் குறைந்தபட்சம் கி.மு.800 எனக் கொள்ளலாம். ஆதிச்சநல்லூரில் முழுமையான ஆய்வுகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. ஒரு விழுக்காட்டிற்கும் குறைவான ஆய்வுகளே அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆதிச்சநல்லூரில் முழுமையான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்பொழுது தமிழி எழுத்துப் பொறிப்புகளின் காலம் கி.மு. 800 அல்லது அதற்கும் முன் கொண்டு செல்லப்படும் என்பது உறுதி.

    ஆதிச்சநல்லூர் – காலம்:

     

    பண்டைய ஆதிச்ச நல்லூரின் காலத்தை அறிய மணிப்பூர் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராக உள்ள முனைவர் இராசு கிசோர் கார்சியாவின் தலைமையில் இருந்த அறிவியலாளர்கள், புதிய அறிவியல் தொழிநுட்ப முறைப்படி(OPTICALLY STIMULATED THERMO  LUMINESCENCE  TEST) ஆதிச்ச நல்லூர் மட்பாண்டங்களின் பாகங்களை ஆய்வு செய்து, அதன் காலத்தை கண்டறிந்தனர். அதன்படி தாழி எண் 10இன் காலம் 3400+700 (அல்) 3400-700 எனவும், தாழி எண் 29இன் காலம் 1920+350 (அல்) 1920-350 எனவும் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது ஆதிச்சநல்லூரின் காலம் கி.மு. 1750 முதல் கி.மு. 270 வரை என உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு கிடைத்த மிகப் பழமையான மட்பாண்டங்களின் காலம் கி.மு. 4000 என எசு. பத்ரி நாராயணன்(S.BADRINARAYANAN) அவர்கள் தெரிவிக்கிறார். ஆதிச்ச நல்லூரில் இருந்த சுரங்கத் தொழிற்சாலையின் காலம் கி.மு 1500 என பி. சசிசேகரனும் (B.SASISEKARAN et al.) அவருடன் ஆய்வு செய்தவர்களும் தெரிவிக்கின்றனர். ஆகவே ஆதிச்சநல்லூர் நாகரிகத்தின் காலம் கி.மு. 2000 அளவில் என உறுதியாக முடிவு செய்யலாம் என்கிறார் முனைவர் இராமசாமி அவர்கள்-(6).

    ‘தமிழி’ அசோகர் பிராமிக்கும் முற்பட்டது: 

    1.நடன காசிநாதன்:

    பொருந்தல் அகழாய்வு, ஆதிச்சநல்லூர் அகழாய்வு போன்ற ஆய்வுகளுக்கு முன்னரே தமிழி எழுத்துக்கள் அசோகன் பிராமிக்கு முற்பட்டது எனப் பல ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். “தமிழ்பிராமி பற்றி அண்மைக்காலம்வரை வெளிவந்துள்ள பல்வேறு ஆய்வுக்கருத்துக்களை ஒப்பிட்டு ஆராய்ந்து, தமிழ்பிராமிக் கல்வெட்டுக்கள் தமிழுக்கே உரியவை என்றும் இவ்வெழுத்து அசோகன் பிராமியிலிருந்து கடனாகப் பெறப்பட்டது அல்ல என்றும், இது கி.மு. 6ஆம், 5ஆம் நூற்றாண்டுகளுக்கு உரியது என்றும் 2004ஆம் ஆண்டிலேயே முன்னாள் அகழாய்வு இயக்குநர் நடன காசிநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார்-(7).

    2டாக்டர் கிப்ட் சிரோமணி:

    டாக்டர் கிப்ட் சிரோமணி அவர்கள் 1983 வாக்கிலேயே தமிழி எழுத்து அசோகன் எழுத்துக்கு முந்தையதாக இருக்க வேண்டும் என்கிற கருத்தை வெளியிட்டுள்ளார். ஐராவதம் மகாதேவன் அவர்கள் தமிழி(தமிழ் பிராமி) எழுத்தை மூன்று நிலைகளாகப் பிரித்துள்ளார் எனவும் பட்டிப்பொருளு என்பது இன்னொரு வகை எனவும் இந்த நான்கும் இல்லாத வேறொரு வகைதான் அசோகன்பிராமி எனவும் அவர் குறிப்பிடுகிறார். அசோகன் பிராமியில் ஒரேநிலைதான் இருக்கிறது எனவும், தமிழியில் பலநிலைகள் இருக்கிறது எனவும் ஆதலால் தமிழி எழுத்து தான் முதலில் தோன்றியிருக்க வேண்டும் எனவும் முதல்நிலை தமிழி எழுத்து அசோகன் பிராமிக்கு முற்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒன்று புதிதாகத் தோன்றுகிற போது பல நிலைகளை கடந்த பின்னரே புதியதாக உருவாகும். தமிழி தமிழகத்தில் தோன்றியதால்தான் இங்கு தமிழியில் பல நிலை எழுத்து வகைகள் இருக்கின்றன. அசோகன் பிராமி புதியதாகத் தோன்றியதல்ல. அது மற்றதைப் பார்த்து உருவாக்கப்பட்டது என்பதால் அங்கு பல நிலைகள் இல்லை என்பதே டாக்டர் கிப்ட் சிரோமணி அவர்களின் அடிப்படை வாதமாகும். இந்தக் கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியதும் சரியானதுமாகும்.

    சம்பை கல்வெட்டில் உள்ள ‘சதியபுதோ’ என்கிற சொல்லில் உள்ள எழுத்துகளும் அசோகன் கல்வெட்டில் உள்ள ‘சதியபுதோ’ என்கிற சொல்லில் உள்ள எழுத்துகளும் எந்தவித வேறுபாடும் இன்றி ஒரே மாதிரி உள்ளன என்கிறார் அவர். ஆதலால் சேரன் செங்குட்டுவன், அதியமான் போன்றவர்கள் அசோகனின் சமகாலத்தவர்களா அல்லது 400வருடங்களுக்குப் பிறகு வந்தவர்களா என்கிற அடிப்படையான கேள்வியை 1983 வாக்கிலேயே  டாக்டர் கிப்ட் சிரோமணி அவர்கள் எழுப்பியுள்ளார். சேரன் செங்குட்டுவன், அதியமான் போன்றவர்களின் காலம் கி.பி. 2ஆம் நூற்றாண்டு என தற்போதைய வரலாற்று மாணவன் கருதுகிறான். அது உண்மையானால் சம்பை கல்வெட்டின் காலம் கி.பி. 2ஆம் நூற்றாண்டு என ஆகிறது. ஆனால் கி.பி. 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புகழ்பெற்ற சாதவ கன்ன அரசன் சதகர்ணியின் நாணயங்களில் உள்ள தமிழி எழுத்துகளுக்கும் சம்பை கல்வெட்டு எழுத்துகளுக்கும் இடையே மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது.

    தற்பொழுது தமிழி எழுத்தின் அடிப்படையில் தரப்படும் காலத்திற்கு வலிமையான அடிப்படை எதுவும் இல்லை. ஆதலால் மாங்குளம், சம்பை ஆகிய கல்வெட்டுகளிலுள்ள தமிழி எழுத்தின் அடிப்படையில் பாண்டியன் நெடுஞ்செழியன், அதியமான் ஆகியவர்களுக்கு தற்போது தரப்பட்டிருக்கும் காலத்தை மறு பரிசீலனை செய்யவேண்டும் என்கிறார் அவர். அவருடைய கருத்துப்படி அசோகனும், அதியமானும், சேரன் செங்குட்டுவனும் சம காலத்தவர்கள். தற்போது அவர்களிடையே இருக்கும் 400 ஆண்டுகள் இடைவெளி நீக்கப்படவேண்டும் என 1983 லேயே அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்-(8). நமது ஆய்வு அதனைத்தான் செய்துள்ளது. அதியமானும் சேரன் செங்குட்டுவனும் நமது கணிப்புப்படி கி.மு. 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள், அதாவது அசோகன் காலத்தைச் சேர்ந்தவர்கள்.

    தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், மொழியியல் போன்ற பல்வேறு சான்றுகளின் அடிப்படையில் தமிழி எழுத்து அசோகன் பிராமிக்கு முற்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அசோகன் பிராமிக்கு சுமார் 500 ஆண்டுகள் முந்தைய தமிழி எழுத்தை அசோகன் பிராமியில் இருந்து உருவானது என இன்றும் சில அறிஞர்கள் சொல்லி வருகின்றனர். இது குறித்து “தமிழகத்தில் சுமார் 500 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கில் இருந்த ஒரு வரிவடிவம் அசோகர் காலத்திற்குப் பின்பு, சமணர்களால் அல்லது சமண வணிகர்களால் தமிழகத்தில் புகுத்தப்பட்டது போன்ற கருதுகோள்களை உரசிப்பார்க்க வேண்டியதுள்ளது” என்கிறார் முனைவர் கா. இராசன்-(9)

    இறுதியாக தமிழகத்தில் கிடைக்கும் தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், மொழியியல் தரவுகளின் அடிப்படையிலும், மண்ணடுக்கு ஆய்வின் அடிப்படையிலும், தமிழகத்தில் கிடைக்கின்ற பல்வேறு வகைப்பட்ட பண்பாட்டுக்கூறுகளின் தோற்றம், வளர்ச்சி, பரவல் ஆகியவற்றின் அடிப்படையிலும், குறியீடுகளின் அமைப்பு, எழுதும்முறை, எண்ணிக்கை, பரவல் ஆகியவற்றின் அடிப்படையிலும், தமிழகத்திற்கும் பிற பகுதிகளுக்கும் இடையே காணப்படுகின்ற பண்பாட்டு உறவுகளின் அடிப்படையிலும் தமிழகத்தில் கிடைக்கும் பழந்தமிழ் வரிவடிவங்களான தமிழ்பிராமிக் கல்வெட்டுகள் அசோகர் காலத்திற்கும் முற்பட்டவை என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை என்கிறார் முனைவர் க.இராசன் அவர்கள்-(10).

    சங்கச் செவ்வியல் இலக்கியம்:

    சங்ககாலச் செவ்விலக்கியம் கி.மு 6ஆம் நூற்றாண்டு முதல் கி.மு. முதல் நூற்றாண்டு வரை(கி.மு. 550-50) படைக்கப்பட்டு வந்துள்ளது எனத் தற்போதைய நமது கணிப்பு வெளிப்படுத்துகிறது. இந்த சங்ககாலச் செவ்விலக்கிய படைப்பாக்க காலத்திற்கு இரண்டு மூன்று நூற்றாண்டுகளுக்கு முற்பட்டதாகத் தமிழி எழுத்தின் தொடக்க காலம் இருந்திருக்கவேண்டும். அதன் அடிப்படையில் தமிழி எழுத்தின் தொடக்ககாலத்தை கி.மு 8ஆம் நூற்றாண்டு எனக் கணிக்கலாம். பொருந்தல் அகழாய்வு, கொற்கை அகழாய்வு, ஆதிச்சநல்லூர் அகழாய்வு ஆகிய மூன்று அகழாய்வு இடங்களிலும் கிடைத்த தமிழி எழுத்துப் பொறிப்புகளின் காலம் அறிவியல் ஆய்வு முடிவுகளின்படி கி.மு. 8ஆம் நூற்றாண்டு எனக் கண்டறியப்பட்டுள்ளது.

    சங்ககால செவ்வியல் இலக்கியப் படைப்பாக்க காலத்தின் அடிப்படையிலும் தமிழி எழுத்தின் காலம் கி.மு 8ஆம் நூற்றாண்டு எனக் கணிக்கப்பட்டுள்ளது. ஆதலால் மேற்கண்ட பல்வேறு தரவுகளின் படி, தமிழி எழுத்தின் தொடக்க காலத்தைக் கி.மு. 8ஆம் நூற்றாண்டு என உறுதிபடக் கூறலாம்.  தமிழ் இலக்கியத்தின் தொடக்ககாலம் கி.மு. 750 என முன்பே கண்டறிந்துள்ளோம். ஆதலால் அதற்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் எழுத்து வடிவத்தைப் பயன்படுத்தியிருக்கவேண்டும். தமிழகத்தில் கி.மு. 1000 வக்கில் குறியீடுகள் ஒரு எழுத்து வடிவமாக பயன்படுத்தப்பட்டுள்ளது என அறிய முடிகிறது. ஆதலால் தமிழகக் குறியீடுகள் குறித்து அறிதல் அவசியமாகிறது.

     

    குறியீடுகள்(GARAFFITI SYMBOLS):

     

    தமிழகத்தின் புதிய கற்கால கட்டத்திலும் அதற்குப் பிந்தைய முதுமக்கள் தாழி மற்றும் பெருங்கற்படை காலகட்டத்திலும் உருவான ஓவிய வரைவுகளில், மட்பாண்டங்களில், காசுகளில், அணிகளில், முத்திரைகளில், கல்வெட்டுகளில் இறுதியாகத் தமிழ் எழுத்துகள் இடையேயும் கூட ‘குறியீடுகள்’ இடம்பெற்றுள்ளன. தமிழகக் குறியீடுகளில் பல, பண்டைக்கால சுமேரிய, எகிப்திய, சீன, கிரேக்க, யப்பான் நாட்டுக் குறியீடுகளோடும், முக்கியமாகச் சிந்து வெளிக் குறியீடுகளோடும் ஒப்புமை உடையனவாக உள்ளன. அவைகளின் தரவுகள் இங்கு கீழே தரப்பட்டுள்ளன-(11).

    1.சுமேரியன், அக்கேடியன், இட்டடைட் ஆகிய மூன்று தொன்மையான மொழி எழுத்து மரபுகளுடன் பெருங்கற்காலத் தமிழகக் குறியீடுகளின் வடிவங்கள் ஒப்புமை உடையனவாக உள்ளன(பக்:237).

    2.சுமேரிய-எகிப்து மொழியில், இலினியர்(Linear-B)  எழுத்துமுறை கலந்திருக்கிறது. இலினியர் எழுத்துக்களில் 87 குறியீடுகள் உயிர்மெய் எழுத்துக்கள். அந்த 87 எழுத்துக்களும் தென்னிந்தியக் குறியீடுகள், வரிவடிவங்களோடு ஒப்புமை உடையனவாக உள்ளன(பக்: 248).

    3.தமிழகத்தில் கண்டறியப்பட்ட பண்டைய குறியீடுகளையும், சிந்து வெளிக் குறியீடுகளையும்  தொகுத்துக் காணும் பொழுது அவற்றிற்கு இடையே காணப்படும் வரைவு ஒற்றுமைகளும், மொழி, எழுத்து குறித்த சிந்தனைகளும் ஒரு தொடர்ச்சியான வரலாற்றைப் பெற்றுத் திகழ்கின்றன என்பதை  அறிய முடிகிறது(பக்:252). மேலும் சிந்துவெளிக் குறியீடுகளின் எழுத்துரு அமைப்பில் தமிழின் தொடர்பையும், தொல்குறியீடாகிப் பின்னர் மொழியாக்கம் பெற்ற தமிழியில் சிந்துவெளிக்குறியீடுகளின் ஒப்புமையையும் காணமுடிகிறது (பக்:253).

    4.தமிழகப் பெருங்கற்காலக் குறியீடுகளுக்கும், கி.மு. 500 – கி.பி. 200 ஆம் காலத்திய யப்பானிய யாயோய்(Yayoi)  பண்பாட்டு மட்பாண்டக் குறியீட்டு வரைவுகளுக்கும் இடையே தெளிவான வடிவ ஒற்றுமை இருக்கிறது(பக்:230).

    5.சீனம், எகிப்து, இலங்கை, யப்பான், கிரேக்கம் ஆகிய நாடுகளின் 130 பழங்காலக் குறியீடுகள் தமிழகப் பெருங்கற்காலக் குறியீடுகளுடன் ஒப்பிடப்பட்டுள்ளன(பக்:239-244). அதில் எகிப்து நாட்டுக் குறியீடுகளோடு 121 குறியீடுகளும், சீனத்தோடு 103 குறியீடுகளும், யப்பானோடு 94 குறியீடுகளும், கிரேக்கத்தோடு 64 குறியீடுகளும் ஒப்புமை கொண்டுள்ளன என்பது கணக்கிட்டு அறியப்பட்டது.

    6.பண்டைய உலக நாகரிகங்களின் சமகாலத்துப் பண்பாட்டிற்கு இணை -யாகவே சங்ககாலத் தமிழகம் திகழ்ந்தது என்பதை, உறுதி செய்யும் வண்ணம் இப்பெருங்கற்காலக் குறியீடுகள் அமைகின்றன(பக்:262).

    மேலே தரப்பட்ட தரவுகள் கி.மு.3000 முதல் கி.மு.1500 வரையும், கி.மு.800 முதல் கி.மு. 200 வரையுமான இரு காலத்தைக் கொண்டவை. இதில் எகிப்து, சிந்து, சீனம், சுமேரியா போன்ற பண்டைய நாகரிகங்கள் முதல் காலத்தையும், இலங்கை, யப்பான், கிரேக்கம் போன்ற நாடுகள் இரண்டாம் காலத்தையும் சார்ந்தவை-(12). பண்டைய நாகரிக நாடுகளின் குறியீடுகளோடு கொண்டுள்ள இந்த ஒப்புமையைத் தற்செயலானவை எனக் கருத இயலாது.  பண்டைய தமிழகம் இந்த நாடுகளோடு பண்டையகாலம் முதல் வணிகப் பண்பாட்டுத் தொடர்பைக் கொண்டிருந்தன என்பதற்கு இக்குறியீடுகளின் ஒப்புமை ஒரு ஆதாரமாகத் திகழ்கிறது எனலாம்.

    குறியீடுகள்-எழுத்து வரி வடிவம்:

     

    அகழாய்வுகளின், கீழ் அடுக்கில் உள்ள மட்பாண்டங்களில், அதிக அளவு குறியீடுகளும், குறைந்த அளவு தமிழி எழுத்துக்களும் உள்ளன. அதே சமயம் மேல் அடுக்குகளில் உள்ள மட்பாண்டங்களில், அதிக அளவு தமிழி எழுத்துகளும் குறைந்த அளவு குறியீடுகளும் உள்ளன. அதாவது அகழாய்வுகளில் தமிழி எழுத்துகள் கிடைக்கத் தொடங்கியவுடன் குறியீடுகளின் எண்ணிக்கை குறையத் தொடங்குகிறது எனலாம். இதன் காரணமாகவும், தமிழி எழுத்துகள் இடையே இக்குறியீடுகள் இடம்பெறும் தன்மை காரணமாகவும், தமிழி எழுத்து பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பு, கருத்துப் பரிமாற்றத்திற்கான வரி வடிவமாக, தமிழர்களால் இக்குறியீடுகள் பயன்படுத்தப்பட்டன எனலாம். “தமிழகத்தில் அகழாய்வு செய்யப்பட்ட அனைத்து இடங்களிலும் இக்குறியீடுகள் கிடைப்பதாலும், தமிழ் வரிவடிவங்களைப் போன்றே இவையும் இடமிருந்து வலமாக எழுதப்பட்டுள்ளதாலும், தமிழ் பிராமி (தமிழி) வரி வடிவம் வழக்கில் வந்தவுடன் இக்குறியீடுகளின் பயன்பாடு குறைந்து வருவதாலும், பானை ஓடுகள், நாணயங்கள், கல்வெட்டுகள் மற்றும் மோதிரங்கள் என எண்ணற்ற ஊடகங்களின் வாயிலாக இவை வெளிப்படுவதாலும், சங்க காலத்திற்கு முன்பிருந்தே அதாவது சிந்து சமவெளிப் பண்பாடு தொட்டு, சில வடிவ மாற்றங்களுடன் தொடர்ந்து இவை இருந்து வந்துள்ளதாலும், தமிழ் பிராமி (தமிழி) வரி வடிவம் தமிழகத்தில் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பாக இக்குறியீடுகள் சங்ககால மக்களின் எண்ணங்கள் அல்லது கருத்துப் பரிமாற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட ஒருவகை வரிவடிவமே என எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது” என்கிறார் முனைவர் கா.இராசன் அவர்கள்-(13).

    தனது ‘பண்டையத் தமிழக வரைவுகளும் குறியீடுகளும்’ என்கிற நூலில் “குறியீடுகளின் எண்ணிக்கைகளும் பயன்பாடும் மிகுதியாக இருக்கும் காலத்தில் எழுத்துகளின் பொறிப்புக் குறைவாகவும், எழுத்துப் பொறிப்பு மிகுதியாகும் பொழுது குறியீடுகளின் பொறிப்புக் குறைந்தும் அமைகின்றன என்பது இந்த ஆய்வால் உறுதி செய்யப்படுகின்றது. இந்த ஆய்வு முடிவினைக் காணும் பொழுது குறியீடுகளை முதலில் ஒலி எழுத்துகளாகவோ, பொருள் வெளிப்பாட்டு வரைவுகளாகவோ அக்காலத்தில் பயன்படுத்தி வந்துள்ளனர் எனக் கருதலாம்“ என்கிறார் முனைவர் இராசு.பவுன்துரை அவர்கள்-(14)

    மேலும், இக்குறியீடுகளின் வளர்ச்சி தந்த பங்களிப்பு தான், எழுத்துருவாக்கமும் மொழியாக்கமும் என்பதோடு, தமிழகப் பெருங்கற் காலத்து மட்பாண்டக் குறியீடுகள், தமிழி அல்லது பிராமி எழுத்துத் தோற்றத்தையும் அதன் வளர்ச்சிக் கூறுகளையும் அறிய உதவும் அடிப்படைச் சான்றுகளாகவும் உள்ளன என்கிறார் அவர். இறுதியாக “தமிழ் மொழியின் வளர்ச்சியில், குறியீடுகளின் பங்களிப்பு தனிச் சிறப்பிற்குரியதாகவும், எழுத்துச் சான்றுகளாக மாற்றம் பெறுவதற்கு முன்னர் வலுவான வரைவுடன் கூடிய தகவல் தொடர்புச் சாதனமாகவும், குறியீடுகள் திகழ்ந்தன எனக் கருதலாம்“ என்கிறார் முனைவர் திரு. பவுன்துரை அவர்கள்-(15). திரு. இராசன் மற்றும் திரு. பவுன்துரை ஆகியவர்களின் கருத்துப்படி தமிழி எழுத்துக்கு முன்பு, தமிழகத்தில் இக்குறியீடுகள் மிக நீண்ட காலமாக கருத்துப் பரிமாற்றத்திற்கு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன என்பது உறுதியாகிறது. மேற்கண்ட இருவரும் சிந்துவெளி எழுத்துகளுக்கும் தமிழக குறியீடுகளுக்கும் இடையே நல்ல ஒப்புமை உள்ளது என்பதையும் தங்கள் நூல்களில் தெரிவித்துள்ளனர். பண்டைய தமிழ் மக்கள் கி.மு.1000 ஆண்டு வாக்கிலேயே ஒருவகையான எழுத்துப்பொறிப்புகளை அல்லது வரிவடிவத்தை தமது கருத்துப் பரிமாற்றத்திற்குப் பயன்படுத்தினர். தமிழகத்தில் இக்குறியீடுகள் பரவலாகக் கிடைப்பதால் இந்நிலையை அடையப் பல்லாண்டு காலம் ஆகியிருக்கவேண்டும் என்கிறார் முனைவர் கா. இராசன் அவர்கள்-(16).

    பார்வை:

    1. Porunthal Excavations prove existence of Indian scripts in 5th century BC : expert , News paper Dated 15.10.2011,

    2.PALANI EXCAVATION  TRIGGERS  FRESH DEPATE- THE HINDU  News paper Dated  29-8-2011.

    3.முன்னாள் அகழாய்வுத் துறை இயக்குநர் நடனகாசிநாதன் அவர்கள், ஏப்ரல்-2006, Tamils Heritage, Page:31.

    4.Rudimentary Tamil-Brahmi Script  unearthed at adichanallur, THE HINDU Newspaper Dated 17.2.2005

    5.Three of them(human skeletons), which may be 2,800 years old, bear inscriptions that resemble the early Tamil Brahmi script: , THE HINDU  Newspaper Dated 26.5.2004.

    6.அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் அ. இராமசாமி அவர்கள் நூல்: தொன்மைத்தமிழர் நாகரிக வரலாறு, டிசம்பர் 2013, பக்: 61, 62;    D. VENKAT RAO  et al.,  RECENT  SCIENTIFIC  STUDIES  AT  ADICHANALLUR:  A PRE HISTORIC MINING SITE  IN  SANGAM:  NUMISMATICS  AND CULTURAL  HISTORAY  CHENNAI- 2006,    PP.  150-151;         .S.BADRINARAYANAN, OP.CIT., P-38;     B.SASISEKARAN et al. ADICHANALLUR:  A PRE HISTORIC MINING SITE IN INDIAN JOURNAL OF HISTORY OF SCIENCE, 45. 3, 2010,  P-383. &  adichanallur: a prehistoric mining site – Indian National … http://www.insa.nic.in/writereaddata/UpLoadedFiles/IJHS/Vol45_3_3_BSasisekara.pdf

    7.தொகை இயல்-பேராசிரியர் அ. பாண்டுரங்கன், பக்: 193; Date of early Tamil Epigraphs: Journal of Tamil Studies No. 65, June, 2004.

    8.கிப்ட் சிரோமணி அவர்களின் இணையதளப் பக்கம். “WWWDR. GIFT SIROMONEY’S HOME PAGE”.

    9, 10.முனைவர் கா. இராசன் அவர்கள், ‘தொல்லியல் நோக்கில் சங்ககாலம்’ உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், 2010, பக்: 77.

    11.முனைவர் இராசு பவுன்துரை அவர்கள், “பண்டையத்தமிழக வரைவுகளும் குறியீடுகளும்” உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2004, பக்: 237, 248, 252, 253, 230, 239-244, 262.

    1. “ “ பக்:263.

    13.முனைவர் கா. இராசன் அவர்கள், ‘தொல்லியல் நோக்கில் சங்ககாலம்’ உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், 2010, பக்: 55, 56.

    14.முனைவர் இராசு பவுன்துரை அவர்கள், “பண்டையத்தமிழக வரைவுகளும் குறியீடுகளும்” உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2004, பக்: 257.

    1. “ “ பக்: 263.

    16.முனைவர் கா. இராசன் அவர்கள், ‘தொல்லியல் நோக்கில் சங்ககாலம்’ உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், 2010, பக்: 74, 56.

     

    Share
  • குறியீட்டு முறைகளில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் – பகுதி 1

    -பேரா. முனைவர். வெ.இராமன்

    தமிழில் இதுவரை உருவாக்கியுள்ள அனைத்துக் குறியீட்டு முறைகளையும் இதுவரை அலசியிருந்த போதும்  அனைத்துக் குறியீட்டு முறைகளும் பயன்பாட்டில் இருந்த விதம் விளக்கப்படவில்லையாதலால், அவை பயன்பாட்டில் இடம் பெற்றது குறித்தும், நடைமுறையில் உள்ள சிக்கல்களும் அவற்றிற்கான காரணங்களையும் இனி விரிவாகக் காணலாம்.

    இஸ்கி (ISCII) குறியீட்டு முறை[i] இந்திய அரசால் கொண்டுவரப்பட்ட முறையாகும். இது பெரும்பாலும் தேவநாகரி முறையினைச் சார்ந்து அமைக்கப்பட்டிருந்தது. அதுதவிர இந்திய அரசு மாநில மொழிகளின் வளர்ச்சிக்கென பெரிய திட்டங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை என்பது வல்லுநர்களின் கருத்து. எனவே இஸ்கி முறையானது தமிழ் மொழியின் மீது எந்தவொரு தாக்கத்தையும் கொண்டிருக்கவில்லை எனலாம். எனவே இஸ்கி குறியீட்டு முறையானது தமிழர்களிடையே பரவவில்லை என்பதே கண்கூடு. அதுதவிர இந்தியாவிற்கு வெளியே தமிழர்கள் அதிகம் வசிக்கும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், கனடா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் இஸ்கியின் ஆக்கம் குறித்து அந்த நாட்டில் வசித்த+ நன்பல ஆசினி தமிழ் மக்கள் அறிந்திருக்கவில்லை என்பது தொழில்நுட்ப வல்லுனர்களின் கருத்தாகும்.

    திஸ்கி (TSCII) குறியீட்டு முறை[ii] உலகம் சார்ந்த தமிழ் வல்லுநர்களின் கூட்டுறவு முயற்சியால் உருவான குறியீட்டு முறையாகும். இது உலகம் முழுவதுமுள்ள கணினி உபயோகிப்பாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் தமிழ் உபயோகத்தில் புழக்கத்தில் இருந்த குறியீட்டு முறையாகும். வலைத்தளங்கள், மின்னஞ்சல் போன்ற கணினி உபயோகத்தில் மிகவும் பயன் உடைய குறியீட்டு முறையாகத் திகழ்ந்தது. பல்வேறு இலக்கிய நூல்கள் இக்குறியீடு முறையில் உருவாக்கப்பட்டு வலைத்தளங்களில் வெளியிடப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது. உதராணமாக நூற்றுக்கணக்கான தமிழ் இலக்கிய நூல்கள் இக்குறியீட்டு முறையில் புதுப்பிக்கப்பட்டு ’மதுரைத் திட்டம்’ வலைத்தளத்தில் வெளியிட்டதை இங்கு சுட்டிக்காட்டலாம். ஆயினும் உலகெங்கும் பரவிய ஒருங்குறி குறியீட்டு முறையானது கால வெள்ள நீரோட்டத்தில் திஸ்கி முறையினை அடித்துக் கொண்டு சென்றுவிட்டது எனலாம்.

    வ்ட்ட்தனிப்பட்டவர்கள் உண்டாக்கிய குறியீட்டு முறைகள் என்பது ஆரம்பத்திலிருந்தே தனித்தீவுகளாகவே இருந்து வந்தன. இம்முறையினைப் பயன்படுத்தி இருவர் தொடர்பு கொள்ள வேண்டுமெனில் இருவரிடமும் அக்குறியீட்டு முறைகான மென்பொருள் இருப்பது அவசியமாகிறது. மற்றவர் வேறு மென்பொருள் வைத்திருப்பினும் அல்லது மென்பொருட்கள் இல்லாதிருந்தாலும்  தமிழ் எழுத்துருக்களானது படிக்க இயலாத குறியீடுகளாகவே தோன்றும். இக்குறியீட்டு முறையில் நூற்றுக்கணக்கான மென்பொருட்கள் உலகெமெங்குமிருந்து தோன்றியிருந்தன. அவை அனைத்தையும் பற்றி அறிந்திருக்கவோ, வாங்கிப் பயன்படுத்தவோ இயலாது. இக்குறியீட்டு முறைகள் தன்னிச்சையாக உருவாக்கப்பட்டிருந்தால் தரப்படுத்தலுக்கும் வழியின்றி முறைப்படுத்த வழியில்லாத முறைகளாகவே திகழ்ந்தன. எனவே கணினி உபயோகிப்பாளர்களிடம் இக்குறியீட்டு முறைகள் வரவேற்பைப் பெறாமல் பயன்பாட்டிற்கு வராமலே போயின.

    டேம், டேப் (TAM, TAB) குறியீட்டு முறைகள்[iii] ஏற்கனவே குறிப்பிட்டது போல் விசைப்பலகை பயன்படுத்த வழிகாட்டுதல் இல்லாமை, தமிழகத்திற்கு வெளியே வசிக்கும் தமிழர்களிடையே கொண்டு சேர்க்கும் காரணிகள் இல்லாமை ஆகியவை இக்குறியீட்டு முறைகள் பரவாமல் போனதற்கு முக்கிய காரணங்களாகும்.

    அதுதவிர அரசியல் காரணங்களாலும் இக்குறியீட்டு முறை பெரிதும் பாதிப்படைந்தது. இதை அறிமுகப்படுத்தி அரசாணை பிறப்பித்த அரசு ஆட்சிக்குப்பின்னர் வந்த அரசு இதனை கண்டுகொள்ளவில்லை எனலாம். அதுதவிர இம்முறையில் அரசு வழங்கிய எழுத்துருக்கள் அரசியல் தலைவர்களின் பெயர்களைக் கொண்டிருந்ததை பின்னர் வந்த அரசு விரும்பவில்லை. எனவே அவை பயன்படுத்தப்படாமலேயே ஒதுக்கப்பட்டன.

    இவற்றை எல்லாம் தாண்டி ஒருங்குறி செயலாக்கத்திற்காக 2010 ஜூன் மாதம் 23ஆம் தேதி அன்று தமிழக அரசு அரசாணை[iv] எம்.எஸ் எண் 29, தகவல் தொழில்நுட்பத்துறை மூலம் ஓர் அரசாணையை வெளியிட்டது. அதன்படி அரசு முன் வெளியிட்ட டேப், டேம் (TAB, TAM) உட்பட அனைத்து 8பிட் குறியீட்டு முறைகளையும் நிறுத்துவதுடன் 16 பிட் குறியீட்டிற்கு மாறுவதாக அறிவித்தது. அத்துடன் தமிழ் கணினியில் உபயோகப்படுத்தப்படும் இடங்களிலெல்லாம் 16 பிட் ஒருங்குறி முறைதான் முக்கிய குறியீட்டு முறையாகும் எனவும் அரசாணை பிறப்பித்தது. இத்துடன் டேப், டேம் (TAB, TAM) குறியீட்டு முறையானது முடிவுக்கு வந்தது எனலாம்.

    ஒருங்குறி குறியீட்டு முறை[v] தற்போது நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள குறியீட்டு முறையாகும். ஒருங்குறிக்கு முக்கியத்துவம் இருந்தபோதிலும் தமிழின் கணினிப் பயன்பாட்டை தரப்படுத்துவதற்காக தமிழக அரசு ஒரு அரசாணை (அரசாணை எம்.எஸ் எண் 653 தேதி 08.10.1998) மூலம் பேராசிரியர் முனைவர் எம். அனந்தகிருஷ்ணன் அவர்களைத் தலைவராகக் கொண்டு, தமிழக முதலமைச்சர் தலைமையின்கீழ் செயல்படும் தகவல் தொழில்நுட்ப மாநில செயற்குழுவின் கீழ் தமிழ் தொழில்நுட்பத்திற்காக ஒரு துணைக்குழுவை அமைத்தது. இக்குழுவானது 1999ம் பிப்ரவரி 7 மற்றும் 8 தேதிகளில் சென்னையில் ’தமிழ்நெட்99’[vi] எனும் மாநாட்டை நடத்தியது. டேம், டேப் (TAM, TAB) எனும் குறியீட்டு முறைகளை இம்மாநாடு அறிமுகப்படுத்தியது. இருப்பினும் ஒருங்குறி வளர்ந்து வருவதைக் கண்டு ஒருங்குறி கூட்டமைப்பில் தமிழக அரசு இணை உறுப்பினராகவும் இம்மாநாடு வலியுறுத்தியது. தமிழ் இணையப் பல்கலைக்கழகத்துடன் இத்துணைக்குழுவானது இணைந்து ஒருங்குறையைப் பற்றி ஆராயத்துவங்கியது. இவ்வாரய்ச்சியின் விளைவாக கீழ்காணும் கருத்துகள் வெளிப்பட்டன.

    1999-இல் வெளியிடப்பட்ட இந்த ஒருங்குறியின் தரமானது தமிழ்க் கணினி உபயோகத்திற்கு திறமையாகச் செயல்பட போதுமானது இல்லை எனக் கருதப்பட்டது. அதற்கான காரணங்களாவன[vii]:

    1. ஒருங்குறியில் தமிழ் குறியீடானது 247 எழுத்துக்களுக்குப் பதிலாக 31 எழுத்துக்களை மட்டுமே உள்ளீடு செய்திருந்தது. இந்த 31 எழுத்துக்களாவன 12 உயிரெழுத்துக்கள், 18 அகரமேறிய உயிர்மெய் எழுத்துக்கள் மற்றும் ஒரு ஆயுத எழுத்து. இதுதவிர 5 கிரந்த அகரமேறிய உயிர்மெய் எழுத்துக்களையும் ஒருங்குறி உள்ளீடு செய்திருந்தது. எனவே தமிழ் எழுத்துக்களில் 10% மட்டுமே தமிழ் எழுத்துக்களுக்காக ஒதுக்கப்பட்டு இருந்தது.
    2. ஒதுக்கப்பட்ட உயிர்மெய் எழுத்துக்கள் ஒவ்வொன்றும் தனி எழுத்துக்களே. அவை எழுத்துக்களின் துணை வடிவங்களோ அல்லது இணை எழுத்துக்களோ அல்ல.
    3. பொதுவாக தமிழ் எழுத்துவடிவக்கட்டுரைகளில் உயிர்மெய் எழுத்துக்களானது 64% முதல் 70% வரையிலும், உயிர் எழுத்துக்களானது 5% முதல் 6% வரையிலும், மற்றும் மெய் எழுத்துக்களானது 25% முதல் 30% வரையிலும் இருக்கும் என ஆய்வுகள் சுட்டுகின்றன. எனவே உயிர்மெய் எழுத்துக்களை இணை எழுத்துக்களாக உடைப்பது திறமையான கணினி உபயோகத்திற்கு வழிவகுக்காது.
    4. கணினியில் எழுத்துக்கள் ஒழுங்கமைவுக்கு (rendering) இந்த குறியீட்டு முறையானது சரியான வழியாக அமையாது. தமிழின் இயற்கை மொழி செயல்முறைக்கும் (Natural Language Process), எழுத்துக்களை வரிசைப்படுத்துவதற்கும் இம்முறை ஒத்துழைக்காது. மேலும் அதிக நேரம், இடம் ஆகியவற்றைக் கணினியில் எடுத்துக் கொள்வதுடன் திறமையான செயல்பாட்டிற்கு எதிராக அமையும்.
    5. இக்குறியீட்டு முறையானது இஸ்கி – 1988 (ISCII – 1988) குறியீட்டு முறையின் அடிப்படையிலானது. இதனால் எழுத்துக்கள் இயற்கையான வரிசையில் அமைந்திருக்காது. இதனை இயற்கை வரிசைக்குக் கொண்டு வருவதற்கு சிக்கலான தொகுப்பு வழிமுறை நிரல் தேவைப்படும்.
    6. தனி ஒரு எழுத்து அமைப்பதற்கு பல கூட்டுக் குறிகள் தேவைப்படும். இந்த பல கூட்டுக் குறிகள் பாதுகாப்புக் குறைபாடு, குழப்பமான கூட்டு ஆகியவற்றிற்கு வழி வகுப்பதுடன் இயல்பு நிலைப்படுத்துதல் செயல்பாட்டையும் செய்ய வேண்டியிருக்கும்.
    7. சாதாரண எண்ணுதல், வரிசைப்படுத்துதல், தேடுதல் போன்றவை திறமையற்று இருக்கும்.
    8. சட்டவிரோத கூட்டு எழுத்துக்களைத் தவிர்ப்பதற்காக தனி விதிவிலக்கு அட்டவணை தேவைப்படும்.
    9. தேவநாகரியின் அடிப்படையில் இது அமைக்கபட்டுள்ளதால் அதே எழுத்தை எழுதும் போது குழப்பமேற்படுத்தும்.
    10. இது 23 உயிர் மெய் எழுத்துக்களை கொண்டு அதை மெய் எழுத்து என வழங்குவது தமிழ் இலக்கணத்துக்கு எதிரானது.
    11. பேச்சிலிருந்து எழுத்திற்கும், எழுத்திலிருந்து பேச்சிற்கும் மாற்றுவது இயற்கைக்கு மாறாக அமைந்துள்ளது.
    12. சேமிப்பதற்கும், மாற்றுவதற்கும் மற்றும் திரும்பப் பெறுவதற்கும் திறனற்ற வகையில் அமைந்துள்ளது.
    13. தமிழ் எழுத்துக்களை இது கூட்டெழுத்தாகக் சுட்டுகிறது. உதாரணமாக ச + ெ◌ + ◌ா =சொ என்கிறது. சொ என்பது இங்கு கூட்டெழுத்து ச, ெ◌, ◌ா என்பவை எழுத்துக்கள். இது தமிழ் இலக்கணத்துக்கு எதிரானது.
    14. எழுத்துக்களை எண்ணுவதற்கும் இம்முறை பயன்படாது. உதாரணமாக மணிவண்ணன் என்ற பெயர் ஆறெழுத்துக் கொண்டது. ஆனால் இங்கு அது ’ம ண ◌ி வ ண ◌் ண ன ◌்’ என்ற ஒன்பது எழுத்தாகக் காட்டப்படும்.
    15. இக்குறியீட்டு முறை சட்ட பிரச்சனைகளையும் ஏற்படுத்தக்கூடும். உதராணமாக ஒரு பத்திரத்தின் வாசகமானது ’வீட்டின் முழு உரிமையையும் திருமதி ரோஜாவுக்குக் கொடுத்து விடுகிறேன்”. ஆனால் சில மென்பொருட்களில் கிரந்த எழுத்துக்களான ஜ, ஷ, ஹ போன்ற எழுத்துக்கள் பிழைபட்டு விடுகின்றன. இவை “’வீட்டின் முழு உரிமையையும் திருமதி ரோf◌ாவுக்குக் கொடுத்து விடுகிறேன்” என்று தோன்றக்கூடும். இது ’திருமதி ரோஜா’ அல்லது ’திருமதி ரோஷா’ என்று குழப்பம் ஏற்படுத்தக்கூடும்.

    இதுபோன்ற குழப்பங்களைக் களைவதற்காக 2006ம் ஆண்டு நவம்பர் மாதம் 11ம் தேதி அன்று தமிழக அரசானது ஒரு அரசாணை[viii] வழியாக (அரசாணை எம்.எஸ். எண் 13, தகவல் தொழில்நுட்பத்துறை, தமிழ்நாடு) பேராசிரியர் எம்.அனந்தகிருஷ்ணன் அவர்களைத் தலைவராகவும், முனைவர் எம்.பொன்னவைக்கோ அவர்களைத் துணைத்தலைவராகவும், முனைவர் பி.ஆர்.நக்கீரன் அவர்களை கூட்டுநராகவும் மற்றும் 10 வல்லுனர்களை உறுப்பினர்களாகவும் கொண்ட செயல் குழு ஒன்றை அமைத்தது. இக்குழுவானது புதிய தமிழ் 16 – பிட் குறியீட்டு முறைக்கான வழிவகைகளை ஆராய ஆரம்பித்தது. இக்குறியீட்டு முறை டேஸ் 16 (TACE 16 – Tamil All Character Encoding – 16 Bit)[ix] வழங்கப்பட்டது. அதாவது 16 பிட் குறியீட்டு முறையில் அனைத்து தமிழ் எழுத்துக்கள் மற்றும் கிரந்த எழுத்துக்களை அமைக்கும் முறையாகும்.

    இரு ஆண்டுகள் சோதனைகளுக்குப் பிறகு இக்குழுவானது தனது அறிக்கையினைச் சமர்ப்பித்தது.

    1. டேஸ் 16 ஆனது ஒருங்குறியைவிட தரவு சேமிப்பு உபயோகத்தின்போது 46% முதல் 11.94% வரை திறன் பெற்று விளங்குகிறது.
    2. டேஸ் 16 ஆனது ஒருங்குறியைவிட தரவு தலைப்புகள் வரிசைப்படுத்தலின்போது 69% முதல் 22.99% வரை திறன் பெற்று விளங்குகிறது.
    3. டேஸ் 16 ஆனது ஒருங்குறியைவிட அனைத்துத் தரவுகளும் தமிழில் உள்ளபோது 39% அதிகத் திறன் பெற்று விளங்குகிறது.
    4. டேஸ் 16 ஆனது ஒருங்குறியைவிட வரிசைப்படுத்தலின்போது 31% முதல் 16.96% வரை வேகமாக செயல்படுகிறது.
    5. டேஸ் 16 ஆனது ஒருங்குறியைவிட தலைப்புகள் உருவாக்கத்தின் போது 7% வேகமாகச் செயல்படுகிறது.

    இதுபோன்ற பல்வேறு சோதனை முடிவுகளையும் காரணங்களையும் சுட்டிக்காட்டி ஒருங்குறியில் தமிழின் அனைத்து எழுத்துக்களையும் டேஸ்-16 அடிப்படையில் அமைக்கக் கோரியது.

    இது குறித்த முழு விவர அறிக்கையினை L2/08-101 என்ற எண்ணின்[x] கீழ் ஒருங்குறி கூட்டமைப்பிடம் சமர்ப்பித்தது. ஆயினும் ஒருங்குறி கூட்டமைப்பானது வரிசைப்படுத்துதல், இயற்கை மொழி செயல்முறை ஆகிய காரணங்களை நிராகரித்ததுடன் அனைத்து எழுத்துக்கள் முறை கோரிக்கையையும் நிராகரித்தது. இது ஒருங்குறி கூட்டமைப்பின் தத்துவத்திற்கு எதிராக அமைந்துள்ளதால் நிராகரிக்கப்படுவதாகக் காரணமும் கூறியுள்ளது. எனவே தற்போதுள்ள ஒருங்குறி முறையே நடைமுறையில் தொடரும் என்றும் கூறிவிட்டது.

    இருப்பினும் தமிழக அரசானது டேஸ்-16 குறியீட்டு முறையை அங்கீகரித்துடன் அதற்கான எழுத்துருக்களையும் தமிழ் இணையப்பல்கலைக்கழக வலைத்தளத்தில் வழங்கி வருகிறது. அச்சுத்துறை, சில மென்பொருட்கள் ஆகியவற்றின் பயன்பாட்டில் ஒருங்குறி பயன்பாடு போதுமானதாக இல்லை எனவே அவ்விடங்களில் டேஸ்-16 குறியீட்டு முறையை உபயோகப்படுத்திக் கொள்ளவும் அனுமதித்துள்ளது. 

    விரிவாக்கப்பட்ட தமிழ் – ஆதரிப்பும், எதிர்ப்பும்

    தமிழ் ஒருங்குறி எழுத்துருவின் பயன்பாட்டை இன்னும் விரிவாக்கும் முகமாக இன்னும் சில எழுத்துக் குறியீடுகளை சேர்த்து “விரிவாக்கப்பட்ட தமிழ்” (extended Tamil) என்ற எழுத்துருவையும் புழக்கத்தில் கொண்டுவர வேண்டும் என்று தமிழ் மென்பொருள் ஆர்வலர்கள் சிலர் ஒருங்குறி நிர்வாகத்திற்கு யோசனை தெரிவித்துள்ளனர். ஒருங்குறி நிர்வாகக் குழுவினருக்கு அனுப்பப்பட்ட “விரிவாக்கப்பட்ட தமிழ்” குறியீட்டு முறை தொடர்பாகப் பல குழப்பங்கள் நிகழ்ந்துவரும் காரணத்தினால், அது குறித்துச் சில அடிப்படையை விளக்கங்கள் தரப்பட வேண்டிஉள்ளது என்கிறார் ஆய்வாளர் வினோத் ராஜன்[xi].

    தற்சமயத்தில் இணையம் எங்கும் தமிழ் ஒருங்குறி கோடு சார்ட்டில் (Unicode Code Chart) தமிழில் கூடுதலாக 26 கிரந்த எழுத்துக்கள் சேர்க்கப்படுவதற்கான முயற்சிகள் நடைபெறுவதாக சில தேவையற்ற குழப்பங்கள் நிலவி வருகின்றன. “விரிவாக்கப்பட்ட தமிழ்” என்பது ஒரு தனி விஷயம் இதற்கும் கிரந்தத்துக்கும் சம்பந்தமே இல்லை. இது போன்ற குழப்பங்களுக்கு, “விரிவாக்கப்பட்ட தமிழுக்கான” ஒருங்குறி முன்மொழிவை திறந்து கூட பார்க்காதது தான் காரணம் என்று தெள்ளத்தெளிவாக தெரிகிறது. அதில் மிகத்தெளிவாகவே, முன்மொழியப்பட்ட “விரிவாக்கப்பட்ட தமிழ்” அட்டவணையில் துணை எண்களுடன் கூடிய தமிழ் எழுத்துக்கள் தான் உள்ளன.

    கிரந்த எழுத்துமுறையானது பாரம்பரியமாக சமஸ்கிருதத்தை எழுத பெருமளவு பழங்காலத்தில் பயன்பாட்டில் இருந்தது, பழங்கால தமிழர்கள் கிரந்த லிபி கொண்டே சமஸ்கிருதத்தைக் கற்றனர். நம்முடைய பழைய கல்வெட்டுகளில் பலவற்றிலும் கிரந்த லிபி உள்ளது. கிரந்த லிபியானது இப்போதும் கூட சிறு அளவில் இன்னும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழிலிருந்து தனிப்பட்ட எழுத்துமுறை அது. அதை தனியாகத்தான் ஒருங்குறியில் ஏற்ற முடிவு செய்யப்பட்டு, அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நம்முடைய பாரம்பரிய கிரந்த லிபியானது இன்னும் ஏறக்குறைய ஓராண்டில் ஒருங்குறியில் ஏறிவிடும். கிரந்த லிபியானது தமிழ் ஒருங்குறிக்குச் சம்பந்தமற்றதாக தனியாக ஒருங்குறியில் ஏறவிருக்கிறது. இத்தோடு கிரந்த சம்பந்தம் முற்றிற்று.

    கிரந்த எழுத்துமுறைக்கான முன்மொழிவை ஒருங்குறி நிறுவனத்திடம், சென்ற ஆண்டு அளித்த போது, மேற்கத்தியர் ஒருவர், ஏன் கிரந்தத்தையும் தமிழையும் ஒன்றிணைக்கக்கூடாது, தமிழ் ஒருங்குறியில் நிறைய காலி இடங்கள் உள்ளனவே, ஏன் தேவை இல்லாமல் கிரந்தத்தை தனியாக ஒருங்குறியில் ஏற்றப்பட வேண்டும் என்ற பரிந்துரையை ஒருங்குறி நிறுவனத்திடம் சமர்பித்தார். அப்போதே, அதை மறுத்து, சில எழுத்துக்கள் இரண்டுக்கும் பொதுவாக இருந்தாலும், தமிழ் லிபியும், கிரந்த லிபியும் ஒன்றல்ல. இரண்டும் வெவ்வேறான பாரம்பரிய லிபிகள். எனவே தமிழில் இருந்து தனியாகத்தான் கிரந்தம் ஒருங்குறியில் இணைக்கப்பட வேண்டும் என்று உடனே மறுமொழி, இதே விரிவாக்கப்பட்ட தமிழை முன்மொழிந்த தரப்பினால், ஒருங்குறி அமைப்பிடம் கொடுக்கப்பட்டது, தனியாகவே கிரந்தம் இப்போது ஒருங்குறியில் சேர்க்கப்படவிருக்கிறது.

    இந்த நிகழ்வை ஒருங்குறி நிறுவனத்தில் உறுப்பினராக உள்ளவர்களும், கிரந்த லிபியை ஒருங்குறியில் சேர்க்க முயன்றவர்களும் நன்றாக அறிவர். இந்த “விரிவாக்கப்பட்ட தமிழ்” முன்மொழிவானது அனுப்பப்பட்டு, ஒருங்குறி தொழில்நுட்ப குழுவினரின் பரிசீலனைக்கும் சென்றது. இதுவும் ஒருங்குறி உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு நிச்சயம் தெரிந்த விஷயம். அப்போதே கூட தொழில்நுட்ப ரீதியான ஆட்சேபணைகள் தெரிவிக்கப்படவில்லை. மற்ற இந்திய எழுத்துமுறைகளை போல் அல்லாது தமிழில் kha, gha, jha, dha, ba போன்ற எழுத்துக்களுக்கு வடிவமில்லை. ஆகவே, தமிழில் சமஸ்கிருதம் உட்பட்ட பிற இந்திய மொழிகளை மூல உச்சரிப்பு மாறாமல் அச்சிட விரும்பியவர்கள், தமிழ் எழுத்துக்களுடன் 2,3,4 முதலிய எழுத்துக்களை சேர்த்து க² க⁴ ஜ² த⁴ ப³ என்றவாறு தமிழில் இல்லாத வர்க்க எழுத்துக்களை குறிக்க பயன்படுத்தினர். பல ஆண்டுகளாக இது வழக்கில் உள்ள ஒரு முறை. இது இலத்தீன் எழுத்துக்களை grave, accent, caret போன்ற துணைக்குறியீடுகளை இணைத்து புதிய ஒலிகளை குறிப்பிடுவது போலத்தான். உதாரணமாக, e என்ற எழுத்து è é ê ë xஎன்றவாறாக பல்வேறு துணைகுறியீடுகளை ஏற்றுக்கொண்டு பல்வேறு ஒலிகளை வெளியிடுவது போல. இதே போல், தமிழிலும் துணைஎண்களுடன் கூடிய இது போன்ற எழுத்துக்களையே, தமிழ் அட்டவணையில், ஒரு “விரிவாக்கப்பட்ட தள”த்தை உருவாக்கி, அதில் இவ்வெழுத்துக்களைச் சேர்க்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

    இலத்தீன் எழுத்துமுறை ஆங்கிலம் உட்பட உலகின் பல்வேறு மொழிகளை குறிக்க பயன்படுத்தப்படுகிறது. ஆகவே, ஒவ்வொரு மொழிக்கும் ஏற்றவாறு, துணைக்குறிகளுடன் கூடிய எழுத்துக்களையும் இன்னபிற புது எழுத்துக்களையும் சேர்த்துக்கொண்டது. அடிப்படை எழுத்துக்களை மீறிய இதுபோன்ற துணைக்குறிகள் கொண்ட கூடுதல் எழுத்துக்கள் பல்வேறு விரிவாக்கப்பட்ட ஒருங்குறி பகுதிகளில் சேர்க்கப்பட்டது. இலத்தீன் எழுத்துமுறைக்கு, LATIN-1 SUPPLEMENT, LATIN EXTENDED-A, LATIN EXTENDED-B , LATIN EXTENDED-C, LATIN EXTENDED-D, LATIN EXTENDED ADDITIONAL என்றவாறும், ரஷ்ய சிரில்லிக் எழுத்துமுறையில் CYRILLIC SUPPLEMENT , CYRILLIC EXTENDED-A CYRILLIC EXTENDED-B என்றவாறும், ஜப்பானிய மொழியை எழுதுவதையே பிரதானமாக கொண்ட ஜப்பானிய எழுத்துக்களுக்கு கூட சிறுபான்மை மொழியான ஐனு மொழியை எழுத, Katakana Phonetic Extensions என தனியே கூடுதல் எழுத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

    ஒருங்குறியின் தேவநாகரி அடிப்படை அட்டவணையில் கூட சமஸ்கிருத ஒலிகளை மட்டும் அல்லாது, எ, ஒ, ற, ழ, ள, ன போன்ற திராவிட மொழி ஒலிகளுக்கான எழுத்துக்களும், சிந்தி, காஷ்மீரி மொழிகளை எழுதுவதற்காக பயன்படுத்துப்படும் எழுத்துக்களும் இணைக்கப்பட்டுள்ளன. இதனால் சமஸ்கிருதம், ஹிந்தி முதலான வடமொழி கணினி முயற்சிகளோ, அல்லது மென்பொருள் செயல்பாடுகளோ செயலற்று போய்விடவில்லை. சமஸ்கிருதம் மற்றும் பிற வட மொழிகளை எழுதுவோர் அவ்வெழுத்துக்களைப் பயன்படுத்தப்போவதில்லை.

    காஷ்மீரி மொழியை எழுத முனைவோர் தங்களுக்கு தேவையான எழுத்துக்களை பயன்படுத்தப்போகின்றனர். 19ஆம் நூற்றாண்டு மேற்கத்திய மொழியியலாளர்கள் சிருஷ்டித்த புதிய தேவநாகரி வடிவங்கள் மற்றும் அவெஸ்தன் மொழியை எழுதுவதற்கு தேவையான எழுத்துக்கள் கூட தேவநாகரி ஒருங்குறியில் சேர்க்க முன்மொழியப்பட்டுள்ளது.

    [தொடரும்]

    *****

    குறிப்புகள்

    [1] http://tdil.mit.gov.in/Standards/ISCII.aspx

    [2] http://www.tscii.org/

    [3] http://www.tamilvu.org/Tamilnet99/index.htm

    [4] Tamilnadu Government, Information Technology Department, GO (Ms) No.29, dated 23.06.2010

    [5] http://unicode.org/

    [6] http://www.tamilvu.org/Tamilnet99/order.htm

    *****

    கட்டுரையாளர்
    முதன்மையர், இரத்தினம் கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் – 641021
    மின்னஞ்சல்: raman600@gmail.com

     

     

    Share
  • அருள்மிகு நாகேசுவர சுவாமி திருக்கோயில், கும்பகோணம்

    சேசாத்திரி சிறீதரன்

     

    தஞ்சையை விட அதிக விறுவிறுப்பும், பரபரப்பும் கொண்டு இயங்கும் நகரம் கும்பகோணம் என்பதை காண்பவர் யாவரும் உணருவர். இதற்கு காரணம் இங்குள்ள பாடல் பெற்ற தளங்கள் தாம். அதிலும் கும்பகோணத்தை சுற்றியுள்ள கோவில்கள் பலவும் 12 ராசிக்குரிய அதிபதிகளை, சிறப்பாக 9 கோள்களை முதன்மைப்படுத்தும் வகையினவாக உள்ளன. இவை எல்லாம் கும்பகோணத்தை சுற்றி 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து உள்ளன. இதனால் 9 கோள்களின் தோஷம் நீங்க பரிகாரம் செய்யவேண்டி பலவேறு ஊர்களிலிருந்து மக்கள் நாள்தோறும் வருவதால் கும்பகோணம் ஒரு ஆன்மீகத் திருச்சுற்றுலா தலமாக உள்ளது. அதன் காரணமாகவே இவ்வூரில் பல தங்கும் விடுதிகள், கடைகள் என சுற்றுலாவினால் தொழில்வளமையும் பொருளியல் வளமையும் பொங்குகிறது. திருச்செலவு தான் இவ்வூர் இயக்கத்திற்கு உயிர்நாடி.

    இவ்வூரில் பல கோவில்கள் அமையப்பெற்றாலும் கல்வெட்டு, சிற்பம் பழமை ஆகியவற்றில் முதன்மையானது என குறிக்கத்தக்க பெருமை உடைய கோவில் .அருள்மிகு நாகேசுவர சுவாமி திருக்கோயில்.. ஆதி கும்பேசுவரர் கோவில் போல் மிகப் பெரிதாக இல்லாவிட்டாலும் மக்கள் கூட்டம் நிரம்பி இராவிட்டாலும் சிறப்பு என்னவோ இந்த கோவிலுக்கு தான்.

    பொதுவாக கும்பகோணத்தை சுற்றியுள்ள கோவில்களில் கருவறையையோ அல்லது மண்டபத்தையோ ஒட்டி தேர்ச்சக்கரங்கள் பொருத்தி குதிரை பூட்டி இழுப்பது போலவும் யானை இழுப்பது போலவும் கட்டி இருக்கிறார்கள். இது கட்டடபாணி பிற்கால சேர்கையாக இருக்குமோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது. தொண்டைமண்டல கோவில் தூண்களில் புடைப்பு சிற்பம் இருப்பது போல இக்கோயில்களில் புடைப்பு சிற்பம் அவ்வளவாக காணப்படாமல் பூக்கோலம், மரம், கொடி போன்றவையே அதிகமாக பொதுவாக வடிக்கப்பட்டுள்ள்ளன. மேலும் பல மண்டபத் தூண்கள் கருநாடக கோவில் கட்டட அமைப்பை கொண்டுள்ளதானது இவை விசயநகர ஆட்சியில் 14 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்குகின்றன, அதிக எண்ணிக்கையில் பணியாளர்களை அமர்த்தி இக்கோயில்கள் நன்றாகக் பேணப்பட்டு வருகின்றன..

    பேருந்து நிலையத்திலிருந்து கோவில்கள் 2 கிலோ மீட்டர் தொலைவில் அருகருகே அமைந்துள்ளதானது இவ்வூர் முன்பு 2 கிலோமீட்டர் பரப்பளவிற்கும் குறைவாக இருந்திருக்கும் என்பதை காட்டுகிறது. இனி படங்கள் காண்போம்.

     

    இளமை குலுங்கும் இளவரசி அல்லது இளைய அரசி
    தாலி அணிந்த வேந்தி /அரசி
    நகையணி துறந்து பூணூல் மட்டுமே அணிந்து நோன்பு கோலத்தில் வேந்தர்

    கருவறை புறச்சுவரை சுற்றிலும் சோழ வேந்தர், வேந்திகளின் சிலைகள் கண்கொட்டாமல் பார்க்கும்படியாக அழகுற செதுக்கி வடிவமைக்கப்பட்டுள்ளன. கச்சை இல்லா முலைமார்பு பல்லவர் உருவங்கள் தாமோ என மதிமயக்குகின்றன. எனினும் சிலைகளுக்கு அருகிலேயே வடிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளைக் கொண்டு இவற்றின் காலத்தை அறியமுடியும் பல்லவரா/ சோழரா? என்றும் அறிய முடியும் என நம்பலாம்.

    காதில் குழையுடன் நோன்பிருந்த வேந்தன் இப்போது ஒயிலாக நிற்கிறான்
    சோழ வேந்தருக்கே உரிய தலைமயிர்கட்டு அணி. சிவப்பு கல்லில் இருந்து மாறுபட்ட பழுப்பு கல் பிறப்பட்டதோ
    உலகப் பேரழகு தோற்கும் இந்த வேந்தியிடம்
    பேரமைதி தவழும் தோற்றம்
    வேந்தனுக்கு உரிய மிடுக்கு

     

    3 & 4 படங்கள் ஒரே ஆளுடையன. பிற வெவ்வேறு  ஆள்களுடையவை .
    தேராக மாற்றப்பட்ட மண்டபம். சக்கரத்தில் 12 ராசிக்கு உரிய அதிபதிகள் புடைப்பு சிற்பம்

    Share
  • சொல்லத்தான் நினைக்கிறேன் !

     

    சொல்லத்தான் நினைக்கிறேன் !

    மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    +++++++++++++++

    சொல்லத்தான் நினைக்கிறேன்

    மண்டைக் குள்ளே நிரம்பி யுள்ளதை !

    ஆயினும் என்னருகில்

    நீயிங்கு உள்ள போது, சொல்ல வரும்

    வார்த்தைகள் எல்லாம் எந்தன்

    வாய் நழுவிச் செல்லும் !

    உன்னை நான் நெருங்கும் போது,

    என்னைத் தாழ்ச்சி செய்துன் ,

    திருவிளை யாடல் துவங்கும் !

    பொறுத்துக் கொள்வேன்.

    அடுத்த முறை வரும் போது,

    கொடுப்பேன் உனக்கோர் பரிசு !

    உன்மேல் பரிவின்றி நான்

    நடமாடி வந்தால் ,

    நான் தான் அதற்கு காரணம்

    என் மனமில்லை !

    குழப்பம் உண்டாக்குது அது !

    சொல்லத்தான் நினைக்கிறேன் !

    என்னை நீ தவிர்க்கிறாய்

    என்றெண்ணித் தவிக்கிறேன் !

    ஏனென அறிந்திலேன் !

    கவலை இல்லை எனக்கதற்கு !

    காத்தி ருப்பேன் நான் உனக்கு

    நாளை முதல் நிரந்தரமாய் !

    நேரம் உண்டு ! சில சமயம்

    நினைத்துக் கொள்வேன் உனை நன்றாய்

    அடுத்த முறை என் மனது

    விடுக்க வேண்டும் தன் கருத்தை !

    புரியும் உனக்கு அத்தருணம் !

    சொல்லத்தான் நினைக்கிறேன் !

    என்னை நீ தவிர்க்கிறா யென

    எண்ணிக் கொண்டு தவிக்கிறேன் !

    ஏனென அறிந்திலேன் !

    கவலை இல்லை எனக் கதற்கு !

    காத்தி ருப்பேன் நான் உனக்கு !

    நேரம் உள்ளது ! இனி எனக்கு

    நேரம் உள்ளது !

    +++++++++++

    Share
  • பழந்தமிழக வரலாறு -3

     

     

               காலகட்டக் கணிப்பும், துல்லியமும்

     கணியன்பாலன்

                  வரலாறு என்பது தற்செயலான நிகழ்வுகளால் ஆனது போல் தோன்றினாலும் அது தனக்கென வகுத்தளிக்கப்பட்ட விதிப்படிதான் இயங்கி வருகிறது. சமூகத்தின் பொருளாதார உற்பத்தி முறைதான் வரலாற்றின் திசைவழியை நிர்ணயிக்கிறது.  மனித வரலாற்றில் ஆண்-பெண் உறவு நிலையை எடுத்துக்கொண்டால், காட்டுமிராண்டி காலத்தில் குழு மணமும், அநாகரிக காலத்தில் இணை மணமும் இருந்தது. நாகரிக காலத்தில் குடும்பமும், ஒருதார மணமும் உருவாகியது. நிலப்பிரபுத்துவக் காலத்தில் இருந்த கூட்டுக்குடும்பம் முதலாளித்துவம் வளர்ந்தபின் தனிக்குடும்பம் என ஆனது. நவீன முதலாளித்துவத்தின் அதீதத் தொழில்நுட்ப வளர்ச்சி, தனிக்குடும்பத்தைக் கேள்விக்குள்ளாகி உள்ளது.

    வேளாண்மை உற்பத்தியை அடிப்படையாகக் கொண்ட நிலப்பிரபுத்துவ காலத்தில் நிலவிய அரசர்களின் ஆட்சி என்பது தொழில் புரட்சிக்குப்பின் ஏற்பட்ட முதலாளித்துவ காலத்தில் இல்லாதுபோய், மக்கள் ஆட்சி என்கிற சனநாயக ஆட்சி உருவானது. ஆனால் நவீன முதலாளித்துவத்தில் உருவான பன்னாட்டுக்குழுமங்களின் வளர்ச்சி, சனநாயகத்தை கேள்விக்குள்ளாக்கி, அதன் நிறுவனங்களைச் சீரழித்து, பணநாயகத்தை கொண்டுவந்துள்ளது. ஆகவே ஒவ்வொரு காலகட்டமும் அதற்கேயுரிய, பொருளாதார உற்பத்தி முறை, சமூக நிறுவனங்கள், சமூகச் சிந்தனைகள் முதலியனவற்றை ஒன்றிணைத்து அந்தந்த காலகட்டத்துக்குரிய வரலாற்றைப் படைக்கின்றன. ஆகவே அறிவியல் அடிப்படையில், தனக்கான விதிகளுக்குட்பட்டு வரலாறு இயங்குகிறது, என்பதுதான் இங்கு கவனம் பெறவேண்டிய மிகமுக்கிய விடயமாகும். நமது பழந்தமிழக வரலாறும் அதற்கு விதிவிலக்கல்ல. கி.மு. 750 முதல் கி.மு. 50 வரையான சங்ககாலப் பாடல்களில், கி.மு. 350க்கு முந்தைய சங்ககாலப் பாடல்கள் மிகக் குறைவு என்பதோடு அதில் ஆட்சியாளர்கள் குறித்த வரலாற்றுக் குறிப்புகள் எதுவும் இல்லை. ஆகையால் கி.மு. 350க்கு முந்தைய வரலாற்றைக் கட்டமைக்க இயலவில்லை.

    சங்க இலக்கிய நூல்களான குறுந்தொகை(401), நற்றிணை(399), அகநானூறூ(400), ஐங்குறுநூறு(500), புறநானூறு(398), பதிற்றுப்பத்து(80), பரிபாடல்(22+11=33), கலித்தொகை(150) ஆகிய எட்டுத் தொகையின் 2361 பாடல்களும் பத்துப்பாட்டின் 10 பாடல்களும் சேர்ந்து மொத்தம் 2371 பாடல்கள் ஆகின்றன. இதனை 473 புலவர்கள் பாடியுள்ளனர். இவற்றில் பரிபாடல் (22+11=33), கலித்தொகை(150), பத்துப்பாட்டில் 2 பாடல்கள் என 185 பாடல்கள் போக, சங்ககாலகட்டத்தைச் சேர்ந்த தகடூர் யாத்திரை(48), முத்தொள்ளாயிரம் (108+22=130) ஆகியவற்றின் 178 பாடல்களைச் சேர்த்து மொத்தம் 2364 பாடல்கள் மட்டுமே ஆய்வு செய்யப்பட்டன.

    இந்த ஆய்வின்படி 450க்கும் மேற்பட்ட புலவர்களில், கி.மு. 350 முதல் கி.மு. 50 வரையான காலகட்டத்தைச் சேர்ந்த 126(109+14=3) புலவர்கள் மட்டுமே வரலாற்றுக் குறிப்புகளைத் தந்துள்ளனர் என்பது கண்டறியப்பட்டது. இதில் 109 பேர் மட்டுமே புலவர்கள் ஆவர். மீதியுள்ள 17 பேரும் அரச குலத்தைச்சேர்ந்த கவிஞர்கள் ஆவர். அந்த 17 பேரில் பெருங்கோப்பெண்டு, பாரி மகளிர், தொண்டைமான் இளந்திரையன் ஆகிய மூவர் அரசர்கள் கணக்கில் சேர்க்கப்படவில்லை. “பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும்” என்ற எனது நூலில் உள்ள தரவுகளின் அடிப்படையில் காலகட்டம் வாரியாக இந்த 126 புலவர்கள், அவர்களது பாடல்கள் குறித்த எண்ணிக்கை அட்டவணை தயாரிக்கப்பட்டு கீழே தரப்பட்டுள்ளது. இந்த அட்டவணைப்படி 126 புலவர்கள் மொத்தம் 1517 பாடல்களைப் பாடியுள்ளனர். தகடூர் யாத்திரையில் பாடியவர்கள் இந்த 126 புலவர்களில் அடங்குவர். கி.மு. 350 முதல் கி.மு. 50 வரையான காலகட்டத்தைச் சேர்ந்த இந்த 126 புலவர்கள் போக வேறு புலவர்களும் இருக்கலாம். ஆனால் அவர்களின் பாடல்களில் வரலாற்றுக் குறிப்புகள் இல்லாததால் அவர்களின் காலத்தைக் கண்டறிய இயலவில்லை. எனினும் சுமார் மொத்தமுள்ள 473 புலவர்களில் நான்கில் ஒரு பங்கு புலவர்களின்(126) காலமும், சங்ககால மொத்தப் பாடல்களில்(2364) மூன்றில் இருபங்கு(1517) பாடல்களின் காலமும் காலகட்டம் வாரியாகக் கணிக்கப்பட்டுள்ளது. “தகடூர் யாத்திரை” நூலின் 48 பாடல்கள் 6ஆம் காலகட்டத்தைச் சேர்ந்தவையாகும். முத்தொள்ளாயிரத்தின் 130 பாடல்கள் பத்தாம் கால கட்டத்தைச் சேர்ந்தவையாகும்.

    புலவர்கள், கவிஞர்கள், பாடல்கள் குறித்த அட்டவணை.:

    காலகட்டம்    புலவர்கள்     கவிஞர்கள்     மொத்தம்      பாடல்கள்

    முதல்            5               –             5              28

    இரண்டாம்       11               2            13              95

    மூன்றாம்        8                1            9              238

    நான்காம்        7                2            9               56

    ஐந்தாம்         14               1            15              255

    ஆறாம்          16              2             18             293

    ஏழாம்           16              2             18             113

    எட்டாம்         16              3             19              170

    ஒன்பதாம்        7              2             9               37

    பத்தாம்          9              2             11              184

    தகடூர் யாத்திரை (ஆறாம் காலகட்டம்)           –              48

    மொத்தம்       109             17             126            1517.

     

    ஆகவே இந்த 126 புலவர்களின் 1517 பாடல்கள் மட்டுமே நமது காலகட்டக் கணிப்பு குறித்த ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மேற்கண்ட சங்ககாலப் பாடல்களில் உள்ள வரலாற்றுக் குறிப்புகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கோட்டியல் வரைபட முறையின் மூலம் கணிக்கப்பட்ட காலகட்ட ஆண்டுகள், கல்வெட்டுகள், நாணயங்கள், அகழாய்வுகள், இந்தியத் தமிழகத் தத்துவ வரலாறு, வெளிநாட்டார் குறிப்புகள், வட இந்திய வரலாறு, உலக வரலாறு, சிவப்பிந்திய, கிரேக்க, இரோம், ஆரிய இனக்குழு வரலாறுகள் போன்ற பிற வரலாற்று ஆய்வுகளின் காலக்கணிப்புகளோடு பொருத்தமாக இணைக்கப்பட்டுள்ளதன் காரணமாக, காலகட்ட அடிப்படையில் கணிக்கப்பட்ட ஆட்சியாளர்கள், புலவர்கள், வரலாற்று நிகழ்வுகள் ஆகியவற்றின் ஆண்டுகள் ஓரளவு துல்லியமானவை எனலாம். இவ்வாறு கணிக்கப்பட்ட காலத்தை அடிப்படையாகக் கொண்டுதான் “பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும்” என்ற எனது நூல் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை முன்பே குறிப்பிட்டோம். பெரும்பாலான சங்ககாலப் பாடல்களின் காலகட்ட ஆண்டுகள் நமக்குக் கிடைத்துள்ளது என்பதால் எதிர்காலத்தில் அவைகளைக் காலகட்ட அடிப்படையில் ஆய்வு செய்வதற்கான வாய்ப்பு நமக்குக் கிடைத்துள்ளது.

    பொதுவாக ஒரு தலைமுறை  என்பது சராசரியாக 25 ஆண்டுகள் ஆகும். ஒரு புலவர் சாதாரணமாகத் தனது தலைமுறை போகத் தனக்கு முந்தைய ஒரு தலைமுறை, தனக்கு பிந்தைய ஒரு தலைமுறை என மூன்று தலைமுறைப் புரவலர்களைப் பாட முடியும். அதற்கு மேல் பாடுவது என்பது சாதாரணமாக இயலாது. ஆகவே ஒரு காலகட்டத்துக்கான காலத்தை மூன்று தலைமுறைகள் எனக் கொண்டு 70 முதல் 80 ஆண்டுகளை, அதாவது சராசரியாக 75 ஆண்டுகளை ஒருகாலகட்டம் எனக் கணக்கில் கொள்ளப்பட்டுள்ளது. அதே சமயம் ஒரு காலகட்டத்துக்கும் இன்னொரு காலகட்டத்துக்கும் இடையே உள்ள இடைவெளி என்பது  20-30 ஆண்டுகள்தான் இருக்கும். சான்றாக முதல் மூன்று காலகட்டங்கள் வருமாறு 1.கி.மு. 350-270; 2.கி.மு. 330-250; 3.கி.மு. 300-230. இவ்விதமாக 10 காலகட்டங்களுக்கான காலங்களும் கணிக்கப்பட்டன.

    ஒவ்வொரு காலகட்டமும் ஒரு தலைமுறைக் காலத்தை(25 ஆண்டுகள்) மட்டுமே கொண்டது எனினும், இக்காலகட்டங்களிடையே குறிப்பிடத்தக்கச் சில சிறப்பு விடயங்கள் இருப்பதை நாம் காண முடிகிறது.

    1.முதல் காலகட்டத்தில் உதியன் சேரலாதனுடைய தலைமையில் கருவூரேரிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை கொங்குக் கருவூரைக் கைப்பற்றி அங்கு பொறையர்களின் சேர ஆட்சியை நிறுவினான். இதன் விளைவாக கரூரையும் அதைச்சுற்றியுமுள்ள கொங்குப் பகுதிகளையும் கொண்ட ஒரு புதிய சேர அரசு உருவாகி இருந்தது. கரூர் சோழர்களின் மேற்கு எல்லையில் இருக்கும் ஒரு முக்கிய ஊர் ஆகும். அங்கு ஒரு புதிய சேரகுல அரசு உருவாகி இருப்பது சோழர்களுக்குச் சேரர்களின் மேல் அச்சத்தையும் பகைமையையும் உருவாக்கி இருந்தது. இதன் விளைவாக முதல் காலகட்டத்தில் சோழன் பெரும்பூட் சென்னி நடத்திய கழுமலப்போர் தொடங்கி 9ஆம் காலகட்டத்தில் சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவன் நடத்திய கரூர்ப் போர் வரை சேரர்களுக்கும் சோழர்களுக்கும் இடையே பகைமையும் போரும் தொடர்ந்து நடந்து வந்தது. இதற்குக் கொங்குப்பகுதியில் சேரர்கள் உருவாக்கிய பொறையர்களின் சேர அரசுதான் முக்கியக் காரணமாகும். 9ஆம் காலகட்டக் கரூர்ப் போருக்குப்பின் சேரமான் மாக்கோதை கிள்ளிவளவனோடு சமாதானம் செய்து கொண்டான். அதன் பிறகு அப்பகைமை முடிந்து சேர, சோழர்கள் 10ஆம் காலகட்டம் வரை நட்போடு இருந்தனர்.

    2.சேரர்கள் முதல் காலகட்டம் தொடங்கி 6ஆம் காலகட்டம்வரை சோழ பாண்டியர்களைவிட வலிமையோடும் பெரும்புகழோடும் இருந்தனர். 3ஆம் காலகட்டத்தில் முதல் கரிகாலன் காலத்தில் மட்டும் அவர்களின் வலிமை ஓரளவு குன்றியிருந்தது. ஆனால் 7ஆம் காலகட்டத்தில் நடந்த தலையானங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் தலையாலங்கானத்துப் போர் இந்நிலையை அடியோடு மாற்றியமைத்தது. தலையாலங்கானத்துப்போரும், அதன்பின் நடந்த முசிறிப்படையெடுப்பும் சேரர்களை 10ஆம் காலகட்டம் வரை வலிமை குன்றியவர்களாக ஆக்கியது.  முதல் காலகட்டம் முதல் 6ஆம் காலகட்டம் வரை வலிமை குன்றியவர்களாக இருந்த பாண்டியர்கள் இப்போருக்குப்பின் 10ஆம் காலகட்டம் வரை ஓரளவு வலிமை மிக்கவர்களாக ஆனார்கள்.

    3.சென்னிகுலச்சோழர்களும், பாண்டியர்களும் முதல் காலகட்டம் முதல் 10ஆம் காலகட்டம் வரை நட்பு கொண்டவர்களாகவே இருந்து வந்துள்ளனர். கிள்ளிகுலச் சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் மட்டுமே அவ்வப்பொழுது பகைமை இருந்து வந்தது. ஆனால் 7ஆம் காலகட்டத்துக்குப்பின் 10ஆம் காலகட்டம் வரை இரு குலச்சோழர்களும் பாண்டியர்களோடு நட்பு கொண்டவர்களாக ஆனார்கள். இதற்கு 7ஆம் காலகட்டத்தின் மாபெரும் வேந்தர்களாக இருந்த இரண்டாம் கரிகாலனுக்கும், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனுக்கும் இடையே நிலவிய நட்புதான் காரணம் ஆகும். இரண்டாம் கரிகாலன் சென்னிகுலச் சோழன் எனினும் கிள்ளிகுலச் சோழர்களையும் தம் மக்களாக அரவணைத்து ஆதரித்ததும் ஒரு முக்கியக் காரணம் ஆகும். இவன் கிள்ளிகுலச்சொழர்களின் பாழடைந்து போயிருந்த உறையூரைப் புகார் நகர் அளவுக்குப் புதுப்பித்து ஒரு பெரு நகராக ஆக்கினான். அதன் காரணமாக அதன்பின் வந்த சோழ வேந்தர்கள் உறையூரை சோழவேந்தர்களின் தலைநகரமாக ஆக்கினார்கள். இரண்டாம்கரிகாலனின் நடவடிக்கையால் இவனுக்குப்பின் சென்னி குலமும் கிள்ளி குலமும் இரண்டறக்கலந்துவிட்டது எனலாம்.

    4.சிறு, குறு அரசுகளும் வேளிர்குல அரசுகளும் அழிக்கப்பட்டு அவைகளை வேந்தர் ஆட்சியில் இணைத்துக்கொள்ளும் பேரரசுக்கொள்கை சார்ந்த நடவடிக்கைகள் 5ஆம் காலகட்டத்தில் இருந்து சிறிது சிறிதாக தமிழகத்தில் இடம்பெறத் தொடங்கின. அதன் விளைவாக முதலில் ஓரியின் கொல்லிமலை சேரர்களின் ஆட்சிக்குள் கொண்டுவரப்பட்டது. அதன்பின் பாரி, அதியமான் போன்றவர்களின் ஆட்சிப்பகுதிகளும் மூவேந்தர் ஆட்சிக்குள் கொண்டுவரப்பட்டன. 10ஆம் காலகட்டத்துக்குள் பெரும்பாலான சிறுகுறு அரசுகள் அழிக்கப்பட்டு மூவேந்தர் ஆட்சியில் இணைக்கப்பட்டன. பேரரசுக்கொள்கையின் காரணமாக சேர, சோழ, பாண்டியர்களின் கிளை அரசர்களும் நீக்கப்பட்டனர். வேந்தர்களின் வேறு வேறு குலங்கள் ஒன்றாக ஆக்கப்பட்டு 10ஆம் காலகட்டத்தில் ஒருகுலம், ஒருவேந்தர் ஆட்சி உருவாகியது. சோழர்களின் சென்னி குலமும், கிள்ளி குலமும் ஒன்றாக ஆக்கப்பட்டு நலங்கிள்ளி சேட்சென்னி என்பவன் சோழ வேந்தனாக ஆனான். அதுபோன்றே குட்டுவன், கோதை ஆகிய சேர குலங்கள் ஒன்றாக ஆக்கப்பட்டு சேரமான் குட்டுவன் கோதை என்பவன் சேர வேந்தனாகவும், மாறன், வழுதி ஆகிய பாண்டிய குலங்கள் ஒன்றாக ஆக்கப்பட்டு பாண்டியன் கூடகாரத்துத்துஞ்சிய மாறன்வழுதி என்பவன் பாண்டிய வேந்தனாகவும் ஆனான். இவர்கள் மூவரும் 10ஆம் காலகட்ட இறுதிச் சங்ககால வேந்தர்கள் ஆவர்.

    5.ஓரியைக்கொன்று கொல்லிமலையைச் சேரர்களுக்கு 5ஆம் காலகட்டத்தில் வழங்கிய மலையமான்  காரியும் அவனது வாரிசுகளும் ஆறுமுதல் 8ஆம் காலகட்டம்வரை சோழர்களுக்கு ஆதரவாக இருந்தார்கள் எனினும் 9ஆம் காலகட்டச் சோழ வேந்தன், பேரரசுக்கொள்கையின் காரணமாக மலையமான்  காரியினுடைய வாரிசுகளின் குறுநில அரசை அழித்து அதைத் தனது வேந்தர் ஆட்சியோடு சேர்த்துக்கொண்டான்.

    6.பாரி, ஓரி, காரி, நள்ளி, ஆய் அண்டிரன், எழினி, பேகன் ஆகிய ஏழு வள்ளல்களும் 5ஆம், 6ஆம் காலகட்டத்தைச்சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களைப் பாடிய பெருஞ்சித்திரனார் 7ஆம் காலகட்டம். ஏழாம் காலகட்டக் குமணன், 10ஆம் காலகட்ட நல்லியக்கோடன் ஆகிய இருவரையும் சேர்த்து மொத்தம் 9 வள்ளல்கள் எனலாம்.

    7.மூன்றாம் காலகட்டக் கழார்த்தலையார் 5ஆம் காலகட்டக் கபிலராலும், 4ஆம் காலகட்டப் பரணர் 6ஆம் காலகட்ட ஔவையாராலும், 5ஆம் காலகட்டக் கபிலர் 7ஆம் காலகட்ட நக்கீரராலும் பாடப்பட்டுள்ளனர். ஆகவே இத்தரவுகள்  3ஆம் காலகட்டம் முதல் 7ஆம் காலகட்டம் வரையான ஒரு வரலாற்றுத்தொடர்ச்சியை உறுதி செய்கிறது எனலாம். இவர்கள் போக 9ஆம் காலகட்ட கோட்டம்பலத்துத்துஞ்சிய மாக்கோதை என்ற சேர வேந்தன் முதல் காலகட்ட உதியஞ்சேரலாதனையும், 10ஆம் காலகட்ட இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் 6ஆம் காலகட்ட ஔவையாரையும் பாடியுள்ளார்.

    8.புராணக் கதைகளை பாடலில் பாடுவதும், கடவுளோடு வேந்தனை ஒப்பிடுவதும், அவனை தெய்வநிலைக்கு உயர்த்துவதும் ஆகிய பேரரசுக் கொள்கை சார்ந்த பாடல்கள் எட்டாம் காலகட்டத்தில் இருந்து அதிகமாகின எனலாம். வேந்தனை தெய்வநிலைக்கு உயர்த்தும் இந்தச் சிந்தனை பத்தாம் காலகட்டத்தில் உச்சநிலையை அடைந்து. முத்தொள்ளாயிரம் போன்ற பாடல்கள் உருவாகி வேந்தனை நகர மகளிர் அனைவரும் ஒருதலைக் காதல்கொள்வது போன்ற கைக்கிளைப் பாடல்களும் அதிகமாகின. எட்டாம் காலகட்டப் பாண்டியன் நன்மாறனை, நக்கீரர், மருதன் இளநாகனார் போன்ற பெரும்புலவர்கள் கடவுள்களோடு ஒப்பிட்டார்கள். முதல் காலகட்டத்தில் இருந்து ஏழாம் காலகட்டம்வரை இதுபோன்ற பாடல்கள் சங்க இலக்கியங்களில் மிகமிகக் குறைவு எனலாம்.

    9.பாண்டியர்களின் மதுரை என்கிற கூடல் நகரம் தமிழுடன் தொடர்பு கொண்டதாக ஏழாம் காலகட்டத்தில் இருந்து மாறத்தொடங்கியது. ஏழாம் காலகட்ட தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின்  பாண்டிய அரசில் இருந்த “புலவர்கள் அவை“ யின் தலைவராக பெரும்புகழும் சிறந்த அறிவும் உடைய மாங்குடி மருதனார் என்கிற புலவர் இருந்தார். அதுமுதல் பாண்டிய நாட்டில் தமிழ் புலவர்களுக்கு மிக அதிக மதிப்பும் மரியாதையும் வழங்கப்பட்டு வந்தது என்பதோடு மிக அதிகமான புலவர்கள் பாண்டிய நாட்டையும் மதுரை நகரையும் சேர்ந்தவர்களாக இருந்தனர். இவைகளின் காரணமாக ஏழாம் காலகட்டம் முதல் மதுரை நகரானது தமிழ் மதுரையாகக் கருதப்பட்டது. எட்டாம் காலகட்டப் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி அகநானூறைத் தொகுப்பித்தான். பத்தாம் காலகட்டப் பாண்டியன் கூடகாரத் துஞ்சிய மாறன் வழுதி நற்றிணையைத் தொகுப்பித்தான். இப்படி மதுரையானது தமிழ் வளர்த்த மதுரையாக ஏழாம் காலகட்டத்தில் இருந்து மாறிப்போனதால் மதுரையைத் ‘தமிழ்மதுரை’ என்று அழைக்கும் வழக்கம் உருவானது. அதனால்தான் பத்தாம் காலகட்ட நல்லூர் நத்தத்தனார் மதுரையைக் குறித்துப் பாடும் பொழுது “தமிழ் நிலைபெற்ற மதுரை” என்கிறார். ஆறாம் காலகட்டம்வரை தமிழை மதுரையோடு இணைத்துச் சொல்லும் வழக்கம் இருக்கவில்லை.

    10.தமிழரசுகளிடம் ஐக்கியக் கூட்டணி மிக நீண்ட காலமாக இருந்து வந்துள்ளது என்பதை காரவேலன் கல்வெட்டும், மாமூலனாரின் அகம் 31ஆம் பாடலும் உறுதி செய்துள்ளன. மூவேந்தர்களிடையே பகைமையும், போரும் இருந்து வந்தாலும் தமிழர் அல்லாத பிற அரசுகளோடு போர் புரியும் பொழுது தமிழரசுகள் ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டும் என்பதும் தமிழ் அரசுகளிடையே கடற்போர் நடக்கக் கூடாது என்பதும் ஒரு மீறப்படாத உடன்படிக்கையாகும். சங்ககாலத்துவக்கம் முதல் தமிழரசுகள் பெரும் கடற்படைகளைக் கொண்டிருந்தபோதிலும் அவைகள், கடம்பர், பரதவர் போன்றவர்களை அடக்கவும், தமிழர் அல்லாத பிரதேசங்களின் கடற்கரை நகரங்களைக் கொள்ளையடிக்கவும், அவைகளைத் தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் வைக்கவும், தமிழர்களின் கடல்வணிகத்தைப் பாதுகாக்கவும் பயன்படுத்தப்பட்டதே ஒழிய தமிழரசுகள் தங்களுக்குள் போரிட்டுக் கொள்ளவும், ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளவும் பயன்படுத்திக் கொள்ளப்படவில்லை.

    இம்மரபு 7ஆம் காலகட்டத்தில் கி.மு. 175-170 வாக்கில் முதல் முறையாக மீறப்பட்டு, சேரர்களின் முசிறித் துறைமுகத்தை பாண்டியர்களின் கடற்படை தாக்கிக் கொள்ளையடித்துச் சென்றது. இதன் விளைவாக கலிங்க மன்னன் காரவேலன் தமிழர்களின் காவல் அரணாகக் கலிங்கத்தில் இருந்த பித்துண்டா நகரத்தைத் தாக்கிக் கைப்பற்றிக்கொண்டதாகவும் 1300 ஆண்டுகாலமாக இருந்துவந்த தமிழரசுகளின் ஐக்கியக் கூட்டணியை உடைத்து விட்டதாகவும் தனது அத்திக்கும்பா கல்வெட்டில்(கி.மு. 165) பொறித்து வைத்தான். முதல் காலகட்டம் முதல் பத்தாவது காலகட்டம் வரை, இந்த ஒருமுறை மட்டுமே கடற்படை கொண்டு மூவேந்தருக்குள் தாக்கிக்கொள்ளக்கூடாது என்ற மரபு  மீறப்பட்டு முசிறி தாக்கப்பட்டது. அதன்பின் அந்த மரபு மீறப்படவில்லை.

    11.வடநாட்டுப்படையெடுப்பு, வடதிசைப் படையெடுப்பு ஆகியவற்றின்போது தமிழரசுகளிடையே ஒற்றுமை இருந்து வந்துள்ளது. அது சில சமயங்களில் வலிந்து திணிக்கப்பட்ட ஒற்றுமையாகவும் இருந்தது. சான்றாக முதல் கரிகாலன், சேரன்செங்குட்டுவன் ஆகியவர்காலத்தில் ஏற்பட்ட ஒற்றுமை வலிந்து திணிக்கப்பட்ட ஒற்றுமை எனலாம். ஆனால் இப்படையெடுப்புகள் அனைத்துத் தமிழ் அரசுகளுக்கும் நன்மை தருவதாக இருந்ததால் அவை இப்படையெடுப்புகளை ஆதரித்தன என்பதோடு விருப்பத்தோடு அதில் அவை பங்குகொண்டன எனலாம். பத்து காலகட்டங்களில் 6, 8 ஆகிய இரு காலகட்டங்களைத்தவிர பிற காலகட்டங்களில் இப்படையெடுப்புகள் நடந்தன. இமயவரம்பன், சேரன்செங்குட்டுவன், நலங்கிள்ளி ஆகிய மூவரும் வடநாட்டுப் படையெடுப்புக்களை நடத்தினர். இதர ஐந்துபேர் வடதிசைப் படையெடுப்புகளை நடத்தினர். தமிழரசுகளிடையே இருந்த ஐக்கிய கூட்டணியும், தமிழர் அல்லாத பிற அரசுகளோடு போர் புரியும் பொழுது தமிழரசுகள் ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டும்; தமிழ் அரசுகளிடையே கடற்போர் நடக்கக் கூடாது போன்ற மரபுகளும் தான் தமிழரசுகள் மௌரியப்பேரரசை தோற்கடித்ததற்கும், வடநாட்டு, வடதிசைப் படையெடுப்புகளை வெற்றிகரமாக நடத்தியதற்கும் காரணம் எனலாம்.

    12.பதிற்றுப்பத்தும், ஐங்குறுநூறும் ஏழாம் காலகட்டச் சேரன் யானைக்கண் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையால் தொகுப்பிக்கப்பட்டது. அகநானூறு எட்டாம் காலகட்டப் பாண்டியன் கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதியால் தொகுப்பிக்கப்பட்டது. ஆதலால் பதிற்றுப்பத்து, ஐங்குறுநூறு ஆகியவற்றைப் பாடிய புலவர்கள், அவர்களால் பாடப்பட்ட வேந்தர்கள், அரசர்கள், இதர ஆட்சியாளர்கள் முதலானோர் 8 முதல் 10 வரையான காலகட்டங்களைச் சேர்ந்தவர்களாக இருக்க மாட்டார்கள். அது போன்றே அகநானூறு எட்டாம் காலகட்டத்தைச் சேர்ந்தது என்பதால் அதில் பாடிய புலவர்களும், பாடப்பட்ட புரவலர்களும் 9ஆம், 10ஆம் காலகட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க மாட்டார்கள். அகநானூறு எட்டாம் காலகட்டம் என்பதால் ஒரு சில 9ஆம் காலகட்டத்தைச் சேர்ந்தவர்கள் இடம்பெற வாய்ப்புள்ளது. ஆனால் கண்டிப்பாக 10ஆம் காலகட்டத்தைச் சேர்ந்தவர்கள் இடம்பெற மாட்டார்கள்.

    தமிழக வரலாற்றில் ஒரு காலகட்டத்தில் நடந்த நிகழ்வு அடுத்த காலகட்டங்களில் ஏற்படுத்திய விளைவுகள், ஒரு சில காலகட்டங்களில் இருந்த தொடர்ச்சி வேறு சில காலகட்டங்களில் இல்லாது போனது, தமிழக அரசுகளிடம் இருந்த ஐக்கியக் கூட்டணி, வேந்தர் குலங்களிடையே இருந்த நட்பும், பகைமையும் ஒரு சில காலகட்டங்களுக்குத் தொடர்ந்து இருந்து வந்திருப்பது முதலியன குறித்து மேலே தரப்பட்ட விடயங்கள் பேசுகின்றன. இவ்விடயங்கள் சில முடிவுகளைத் தருகின்றன. சான்றாக 1.ஏழாம் காலகட்டத்திலிருந்து பாண்டியர்கள் வலிமை மிக்கவர்களாகவும், சேரர்கள் வலிமை குன்றியவர்களாகவும் ஆனார்கள். 2.வேந்தனைக் கடவுளோடு ஒப்பிடும் பாடல்கள் முதல் ஏழு காலகட்டப் பாடல்களில் அதிகளவு இருக்காது. 3.பதிற்றுப்பத்துப் பாடல்களில் பாடப்பட்ட வேந்தர்கள் 8 முதல் 10ஆம் காலகட்டத்தைச்சேர்ந்த வேந்தர்களாக இருக்க மாட்டார்கள்.  4.அகநானூற்றில் 10ஆம் காலகட்டத்தைச் சேர்ந்த புலவர்களோ, புரவலர்களோ இருக்கமாட்டார்கள். 5.பத்து காலகட்டங்களிலும் சென்னிகுலச்சோழ வேந்தர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இடையே போர் நடந்திருக்காது போன்றவை சில முடிவுகளாகும். ஆகவே இதுபோன்ற பல முடிவுகளை எடுக்கக் கூடிய அளவு நமது காலகட்டங்களும் அதில் நடந்த நிகழ்வுகளும் அவைகளுக்கான ஆண்டுகளும் ஓரளவு துல்லியமாகக் கணிக்கப்பட்டுள்ளன எனக்கருதலாம்.

    ஆதார நூல்:    பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர்வெளியீடு, சூன்-2016, பகுதி – 4, பக்: 381–681.

     

     

     

     

     

     

     

     

     

     

     

    Share
  • திருமுருகாற்றுப்படை இலக்கணப் பொருத்தம்

    – கா.பெரியகருப்பன்

    முகவுரை:

    தமிழ் இலக்கிய வரலாற்றில் இலக்கியப் பாகுபாடு என்பது பலரால் பலவிதமாகப் பகுக்கப்பட்டுள்ளது. அவற்றுள், சங்கஇலக்கியம் என்பதுவும் ஒன்றே. அதன் அடிப்படையில் சங்ககால இலக்கியங்கள் என்று கூறப்படும் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய இரண்டும் இன்றளவும் தமிழர் வாழ்வையும் பண்பாட்டையும் பறைசாற்றுவனவாகத் திகழ்கின்றன எனில் மிகையல்ல. இத்தகு சிறப்புமிகு தமிழ் இலக்கியங்களில் இருக்கும் நன்மை தீமைகளைக் கண்டுதெளிவதும் அதன் உண்மைத்தன்மையை அறிவதுமே ஆய்வாளர்களின் கடமை என்பதை உணர்ந்து திருமுருகாற்றுப்படை இலக்கியத்தின் இலக்கணப் பொருத்தம் குறித்து ஆய்வதே இவ்வாய்வின் நோக்கமாகக் கைக்கொள்ளப்படுகிறது.

    பாகுபாடு

    பதினெண்மேற்கணக்கு, பதினெண்கீழ்க்கணக்கு என்ற பாகுபாடு காலத்தால் பகுக்கப்பட்டவை என்பது நாம் அறிந்தவையே. இத்தகைய பாகுபாடுகள் பல்வேறு முரண்பாடுகளுக்கிடையே நிகழ்த்தப்பெற்றிருக்கலாம். இத்தகு கண்ணோட்டத்தோடே பத்துப்பாட்டை ஆராயும் நோக்கில், அதன்கண் இறைவணக்கம் போன்று திகழ்கின்ற திருமுருகாற்றுப்படை குறித்து நாம் அறியலாகும் பல்வேறு செய்திகள் வாயிலாக, அதன் இலக்கணப் பொருத்தம் குறித்து பல்வேறு முரண்பாடுகள் கண்டறியப்பட்டதன் விளைவே இவ்வாய்வு கட்டுரை.

    ஆற்றுப்படை இலக்கணப் பொருத்தப்பாடு

    “இலக்கியம் கண்டதற்கோர் இலக்கணம்” என்ற கூற்று ஒருபுறம். இலக்கண நூல்கள் குறிப்பிடும் இலக்கியத்திற்கான இலக்கணங்கள் ஒருபுறம். ஆய்வின்வழி அறிஞர்கள் சொன்ன இலக்கணப் பொருத்தப்பாடு ஒருபுறம் என்று பல்வேறு நிலைகளில் திருமுருகாற்றுப்படையின் இலக்கண, இலக்கியப் பொருத்தப்பாட்டை உற்றுநோக்குங்கால், ஆற்றுப்படை என்பது ஆறு-வழி; படை – படுத்துவது எனவே, வறியவரை வலியவர் ஆற்றுப்படுத்துவது ஆற்றுப்படை நூல்களென பல்வேறு  இலக்கிய வரலாற்று நூல்கள் சான்று பகர்கின்றன. ஆனால், பிற ஆற்றுப்படை இலக்கியப் பொருண்மையை உற்றுநோக்கும்போதும் திருமுருகாற்றுப்படையின் செய்திகள் வாயிலாக, அதன் பொருண்மையை உற்றுநோக்கும்போதும் பல்வேறு வேறுபாடுகள் இருப்பது வெளிப்படையாகின்றது. மேலும், அதன் பாவகை, இலக்கண நூல்கள் காட்டும் ஆற்றுப்படை இலக்கியத்திலிருந்து வேறுபடுதல், பொருண்மை அடிப்படையில் வேறுபடுதல், மையப் பொருள் அடிப்படையில் மாற்றம் பெற்றமை போன்ற காரணங்களை ஆராயும்போது  பெயரளவிலேயே இது சற்று முரணாகவே தோன்றுகின்றது. பின்னாளில் பதினோராம் திருமுறையில் இது சேர்க்கப்பட்டதும் இதனை உறுதி செய்யும் நிகழ்வாகவே இருக்கிறது.

    இலக்கண நூலார் சுட்டும் ஆற்றுப்படை இலக்கணம்

    தொல்காப்பியம்:

    “கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
           ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்
           பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறீஇச்
           சென்று பயனெ திரச்சொன்ன பக்கமும்”1                            (தொல். பொருள் -1037)

    தொல்காப்பியர் கூற்றுப்படி, நாம் ஆற்றுப்படை நூல்களை அணுகினோமானால் ஆற்றுப்படை நூல்களாகத் தற்போது உள்ள ஐந்து நூல்களுள்,

    1. கூத்தராற்றுப்படை
    2. பொருநர் ஆற்றுப்படை
    3. பாணர் ஆற்றுப்படை
    4. விறலி ஆற்றுப்படையுமே ஆற்றுப்படைப் பாடல்கள் என்பதை நாம் தெளிவாக உணரமுடியும். இவ்வாறு வெளிப்படையான கருத்து இருக்கையில் திருமுருகாற்றுப்படை என்ற நூலானது, ஆற்றுப்படை இலக்கணத்திற்கு மறுதலைப்பட்டது என்பதை உணரவேண்டும்.

    காரணம், கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும் என்று கூறினாரே தவிர இவர்களுடன் பிறரும் என்று குறிப்பிடவில்லை. ஆகவே தொல்காப்பியர் காலத்தில் மேற்சொன்ன நான்கு ஆற்றுப்படை நூல்களே அமைந்திருந்தன என்பதும், பிற ஆற்றுப்படை நூல்களை அவர் ஏற்கவில்லை என்பதும் இங்கு வெளிப்படை.

    பன்னிருபாட்டியல்

    தொல்காப்பியத்தை அடியொற்றி அதன்பின் எழுந்த பாட்டியல் நூல்களும் ஆற்றுப்படை இலக்கணங்கள் கூறுகின்றன.

         “புரவலன் பரிசில் கொண்டு மீண்ட
           இரவலன் வெயில்தெறும் இருங்கா னத்திடை
           வறுமை யுடன்வரூஉம் புலவர் பாணர்
           பொருநர் விறலியர் கூத்தர்க் கண்டப்
           புரவலன் நாடூர் பெயர்கொடை பார்அய்
           ஆங்குநீ செல்கென விடுப்பதாற் றுப்படை
           அதுதான் அகவலின் வருமே”2 (பன்னிரு.பா.நூற்-202)

    தன்னிடம் பரிசில்பெற்று மீண்ட வறியவராகிய பாணர், பொருநர், விறலியர், கூத்தர் ஆகிய நால்வரும் தன்போன்ற பிற வறியவரை ஆங்கொரு புரவலன் நம் வறுமை போக்கும் வள்ளலாக இருக்கிறான் அவனிடத்தே சென்று உன் வறுமையைப் போக்கிக்கொள் என்று ஆற்றுப்படுத்தும் பொருண்மையே ஆற்றுப்படைக்கான இலக்கணமென பன்னிருபாட்டியல் இயம்புகிறது.

    ஆனால், திருமுருகாற்றுப்படையானது புலவரை ஆற்றுப்படுத்துவதாக அமைந்துள்ளது.

    வெண்பாபாட்டியல்

    “ஒன்றா அகவலா லொண்புலவர் யாழ்ப்பாணர்
           குன்றாத சீர்ப்பொருநர் கூத்தரே – என்றிவரை
           ஆங்கொருவன் னாற்றுப் படுத்த பரிசறைந்தால்
           பாங்காய ஆற்றுப்படை”3     (வெண்.பா.நூற்-52)

    குணவீரபண்டிதர், தொல்காப்பியர் போல் இல்லாது பாணர், பொருநர், கூத்தர் இவர்கள் ஆற்றுப்படுத்துவது போல் ஆசிரியப்பாவால் புலவன் இயற்றுவதே ஆற்றுப்படையின் பாற்படும் என இயம்புகிறார்.

    இருப்பினும், நக்கீரர்-இறை அருள்வேண்டி புலவன் மற்றொரு புலவனை ஆற்றுப்படுத்துவதாக திருமுருகாற்றுப்படையை இயற்றியுள்ளார் என்பதே அதன் பொருண்மையின் வழி அறியலாகிறது.

    நவநீதப்பாட்டியல்

          …… புலவர்கள் வாழ்த்து நலம்
          நிறைந்த பொருநரைப் பாணரைக் கூத்தரை நீணிதியம்
          பெறும்படி யாற்றுப் படுப்பன வாசிரியம் பெறுமே”4                   (நவநீ.பா.நூற்-53)

    நவநீதநாடன், பொருநரும் பாணரும் கூத்தரும் மன்னனிடம் அளவில்லாத (அழியக்கூடிய) பொருட்களைப் பெற்று வருமாறு, தம் இனத்தாரை தாம் வழிப்படுத்துவதாகவும் ஆசிரியப்பாவிலும் அமைவதே ஆற்றுப்படையாகும் என விளம்புகிறார்.

    சிதம்பரப்பாட்டியல்

          “கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
           பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறீஇச்
           சென்று பயன் றெரிந்த ஆற்றுப்படை”5                              (சித.பா.நூற்-34)

    தொல்காப்பியரும் சிதம்பரப்பாட்டியல் ஆசிரியரும் ஆற்றுப்படை குறித்த ஒத்த கருத்தினையே மொழிகின்றனர்.

    மேலும், ‘பத்துப்பாட்டுஆராய்ச்சி’ என்ற நூலில், மா.இராசமாணிக்கனார் திருமுருகாற்றுப்படை குறித்து கூறும் கூற்றானது “சில ஆற்றுப்படைகளில் காணப்படும் ஆற்றுப்படுத்தப்படுபவனின் நிலையை விவரித்தல், ஆற்றுப்படுத்தப்படுவோன் தனது பழைய நிலையை விளக்குதல், பரிசில் பெற்ற முறையைக் கூறுதல் என்பன தெளிவாகச் சுட்டப்பெறவில்லை”6 (பத்து.ஆராய்ச்சி-ப.57)எனக் கூறும் கூற்றின் அடிப்படையிலும், திருமுருகாற்றுப்படையானது ஆற்றுப்படை இலக்கியத்திற்கு முற்றிலும் மாறுபாடுடையது என்பது வெளிப்படை.

    ஆற்றுப்படைப் பொருண்மையில் பொருத்தப்பாடின்மை)-(திருமுருகாற்றுப்படை)

    திருமுருகாற்றுப்படையில் ஆற்றுப்படுத்தபடுபவனின் நிலைகளாக,

    1. முதல் பகுதியில், திருப்பரங்குன்றம் என்ற மலைக்கோவில், இயற்கை வளம், திருக்கோலம், சூரனுடன் செய்த போர்முறை போன்றன குறிப்பிடப்பட்டுள்ளன.

    சான்றாக, “ மால்வரை நிவந்த சேணுயர் வெற்பிற்7                              (திருமுருகு.-12)

    இவ்வரிகள் இயற்கை வளம் குறித்துக் கூறுகிறது.

    1. இரண்டாம் பகுதியில்,முருகனின் ஆறுமுகம் பற்றிய குறிப்புகள் – பன்னிரு கைகள் – திருச்செந்தூர் சிறப்புகள் சொல்லப்பட்டுள்ளன.

    சான்றாக- “மனன்நேர்பு எழுதரு வாள்நிறம் முகனே” 8                             (திருமுருகு.-90)

    இவ்வரிகள் முருகனின் திருமுகங்கள் குறித்துக் கூறுகின்றன.

    1. மூன்றாம் பகுதியில், முனிவர்களின் பெருமை, முருகனின் சிறப்புகள் பேசப்படுகின்றன.

    சான்றாக, “காமமொடு கடுஞ்சினம் கடிந்த காட்சியர்”9    (திருமுருகு.135 )

    எனும் அடிகளில்,முனிவர்கள் அவாவொடு கூடிய சினத்தையும் போக்கின அறிவினையுடையவர்கள்  என்று முனிவர்களின் சிறப்புகளைக் கூறுகிறார் நக்கீரர்.

    4.நான்காம் பகுதியில், பழனிக்கு வரும் வழிபாட்டுப் பெண்மாந்தர்களின் இயல்பு எடுத்தோதப்படுகிறது.

    சான்றாக, “புலராக் காழகம் புலர உடீஇ” 10      (திருமுருகு.184)

    முருகனை வழிபடும் மகளிர் ஈரம் புலராத ஆடையொடு வழிபாடு நடத்தினர் எனும் காட்சிகளை ஆசிரியர் எடுத்தியம்புகிறார்.

    1. ஐந்தாம் பகுதியில்,குன்றுதோராடலில் மக்கள் நிலை – குரவைக்கூத்து போன்ற நிகழ்வுகள் சொல்லப்படுகின்றன.

    சான்றாக, “மயில் கண்டன்ன மடநடை மகளிரொடு ” 11      (திருமுருகு.205)

    இவ்வடிகள்,குரவைக்கூத்து ஆடும் மகளிரின் நடை குறித்துக் கூறப்படுகிறது.

    1. ஆறாம் பகுதியில், பழமுதிர்ச்சோலையின் சிறப்பு, அருவியின் வருணனை கூறப்படுகிறது.

    சான்றாக, “நன்பல ஆசினி முதுசுளை கலாவ” 12       (திருமுருகு.301)

    இதில்,பழமுதிர்சோலையின் இயற்கை வருணனை குறிப்பிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு நக்கீரர்- முருகன், அவரை வழிபட வரும் முனிவர், மகளிர் இயல்பு மற்றும் தலச்சிறப்புகளையும் எடுத்துக் கூறுகிறார். மேலும், அழிவில்லாத அருள்நிலை பெறுவதையே மையமிட்டு எடுத்துரைக்கிறார்.  ஆனால் இதில், நீணிதியம் எனப்படக்கூடிய பொருட்செல்வம் குறித்து யாங்கேனும் ஓரிடத்தில் கூட இயம்பவில்லை என்பது புலவரது திருமுருகாற்றுப்படை செய்தியின் வழி வெளிப்படை.

    மையப்பொருள் அடிப்படையில் வேறுபட்டு நிற்றல்:

    புரவலனிடம் பரிசு பெற்று வலியவனாகப் பெற்றவன், தன் போன்ற வறியவனை ஆற்றுப்படுத்துவடதே ஆற்றுப்படை இலக்கணம்.ஆனால் இதில் வறியவன் பெறும் பொருளானது அழியக்கூடியது,நிலை இல்லாதது,அளவானது. அத்தகு மையப்பொருண்மையுடையதே ஆற்றுப்படை என எல்லா நூல்களும் இயம்புகின்றன. இந்நிலையில் இருந்து திருமுருகாற்றுப்படையானது முற்றிலும் மாற்றம் எய்தி நிற்கிறது என்பது மேற்கண்ட செய்திகளின் வழி வெளிப்படை.

    முடிவுரை

     திருமுருகாற்றுப்படையானது முருகனிடம் ஆற்றுப்படுத்தப்படுவதால் அவனது அருள்வேண்டி ஆற்றுப்படுத்துவதாகவேகொள்ள வேண்டும். அவ்வகையில், நோக்கும்போது இரவலனிடம் முருகன் தரும் அருளானது நீங்காதது. அது, அளவிட முடியாதது. ஆனால், பிற ஆற்றுப்படை இலக்கியங்களானது நிலையில்லாதது, அழியக்கூடியது, அளவிடக்கூடியது. அச்செல்வத்தைப் பெற்ற இரவலன் தன் போன்ற இரவலன் அப்பரிசிலைப் பெறுவதற்கு ஆற்றுப்படுத்தும் பொருண்மையில் பிற ஆற்றுப்படை இலக்கியங்கள் பாடப்பெற்றுள்ளன. அதுவே, ஆற்றுப்படை இலக்கணமென தொல்காப்பியம் முதலாக பின்னெழுந்த பாட்டியல் நூல்களும் இயம்புகின்றன.

         எனவே திருமுருகாற்றுப்படையானது, ஆற்றுப்படை இலக்கணத்திற்கு அப்பாற்பட்ட ஒர் இலக்கண மரபை ஒட்டி நக்கீரரால் எடுத்தியம்பப்பட்டுள்ளது என்பதே இவ்வாய்வின் முடிந்த முடிபு.

    முதன்மைச் சான்றாதாரங்கள்

    1. நக்கீரர் – திருமுருகாற்றுப்படை (உரைவிளக்கம்)      முனைவர் ம.பெ.சீனிவாசன் (பதிப்பு – 2009)
    2. ஆறுமுகநாவலர்- திருமுருகாற்றுப்படை முல்லை நிலையம் (பதிப்பு – 2010)

    துணைமைச் சான்றாதாரங்கள்

    1. சிங்காரவேலு முதலியார் – அபிதான சிந்தாமணி
    2. மா. இராசமாணிக்கனார் – பத்துப்பாட்டு ஆராய்ச்சி
    3. மது.ச. விமலானந்தம் – தமிழ் இலக்கிய வரலாறு
    4. இளம்பூரணர் – தொல்காப்பியம் (பொருளதிகாரம்)

    *****

    கட்டுரையாளர்
    முனைவர்பட்ட ஆய்வாளர்
    தமிழ்த்துறை
    தியாகராசர் கல்லூரி
    மதுரை-09

     

                                           

     

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (99)

    நிர்மலா ராகவன்

    உண்மையாக இருத்தல்

    உண்மையைச் சொல். என் கதை நன்றாக இருக்கிறதா?’ அரும்பாடுபட்டு, ஒரு கதை எழுதி அது பிரசுரமும் ஆனபின், எழுத்தாளராகும் கனவுடன் பலரும் கேட்கும் கேள்வி இது.

    நானும் கேட்டேன், `நன்..றாக இருக்கு!’ என்று யார் கூறுவார்கள் என்று தேடி! ஒரு தோழி மாட்டிக்கொண்டாள். தன்னிடமிருந்து என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்று புரிந்து, அவளும் ஆமோதித்தாள்.

    `சும்மா சொல்றே!’ என்றாலும், பெருமையாகத்தான் இருந்தது. புகழவேண்டும் என்றுதானே அவளைத் தேடிப் பிடித்தேன்!

    `எப்பவோ வந்தமாதிரி இருக்கே!’ `நம்ப குடும்பத்திலே நடக்கறதையே எழுதியிருக்கா!’ என்றெல்லாம் நமட்டுச்சிரிப்புடன் உண்மையைச் சொல்பவர்களை நமக்குப் பிடிக்காமல் போகும்.

    புள்ளி விவரங்கள், நாம் காண்பது, கேட்பது எதிலுமே உண்மை கிடையாது. நுண்கலைகளில் பொய் உண்டு. ஆனால், அவைமூலம் உண்மையை அறியலாம்.

    கதை

    ஊர் சுற்றிப்பார்க்கவென்று தன் தூரத்து உறவினரான முரளியின் வீட்டுக்குப் போயிருந்தாள் பூரணி. போனவள் ஒரு மாத காலம் தங்கிவிட்டாள். அவளை எப்படிக் கிளப்புவதென்று முரளிக்கும், மனைவிக்கும் புரியவில்லை. வாக்குவாதம் நிகழ்ந்தது.

    `நான் என்ன ஹோட்டலா நடத்தறேன்! ஓயாம சமைக்க வேண்டியிருக்கு! நான் சமைக்கிறதிலேயும் ஆயிரம் லொட்டு லொசுக்கு!’ என்று மனைவி கத்த, `வந்தவளை எப்படிப் `போ’ன்னு சொல்றது!’ என்று முரளி தயங்கினார். இதன் சம்பந்தமாக அடிக்கடி அவர்களுக்குள் தகறாறு எழுந்தது.

    ஒரு வழியாக அங்கிருந்து புறப்பட்ட விருந்தாளி பூரணி, பார்ப்பவர்களிடமெல்லாம், `பாவம், நம்ப முரளி! பெண்டாட்டி பிசாசு! எப்பவும் கத்தறா!’ என்று சொல்லிக்கொண்டே இருந்தாள்.

    யாராவது அபூர்வமாக, `இதை ஏன் எங்கிட்ட சொல்றே?’ என்று முகத்தைச் சுளித்தால், `உண்மையைத்தானே சொல்றேன்!’ என்பாள் பூரணி.

    யாருக்கும் பயனில்லாத உண்மையை, பிறருக்குச் சங்கடம் விளைவிக்கும் உண்மையை, சொல்லாதிருப்பதே மேல். பூரணியிடம் ஒரு சமாசாரத்தையும் சொல்லக்கூடாது, ஒன்றைப் பத்தாக்கிவிடுவாள் என்ற பயம் அவள் உறவினருக்கு வந்தது. பொய்யைப் பரப்புகிறவர்கள் நீண்ட காலம் நிலைப்பதில்லை.

    நன்மை விளையும் என்றால், பொய்யே சிறந்தது. உடல் நிலை மோசமாக இருக்கும் ஒருவரைப் பார்த்து, `சீக்கிரமே குணமாகிவிடுவீர்கள்!’ என்று ஆறுதல் சொல்வதில்லையா, அதுபோல்தான்.

    கதை

    நான் அடிக்கடி போகும் வாசகசாலையில் இருந்த காதரீனுக்கு முப்பது வயதுக்குள்தான் இருக்கும். சில சமயம், குழந்தைமாதிரி அன்புடன் பழகுவாள். பிற சமயங்களில் மரியாதை இல்லாது கத்துவாள்.

    ஒரு முறை, என்னிடம் மன்னிப்பு கேட்கும் பாவனையில், “எனக்கு மனநிலை சரியில்லை. மருந்து சாப்பிடுகிறேன்,” என்றாள்.

    சில மாதங்களுக்குப்பின், அவளுக்குப் பதில் அவ்விடத்தின் சொந்தக்காரி மேரிதான் இருந்தாள்.

    “காதரீன் இல்லையா?” என்று கேட்டாள் புத்தகம் இரவல் வாங்க வந்த ஒருத்தி.

    “இப்போதெல்லாம் வருவதில்லை,” என்று பதில் வந்தது.

    காதரீனின் நிலைமை மோசமாகி, அவளை மருத்துவமனையில் சேர்த்துவிட்டார்கள் என்று எனக்குத் தெரியும்.

    “இப்போ எங்கே வேலை செய்கிறாள்?” (தெரிந்து இவளுக்கு என்ன ஆகப்போகிறது!)

    “தெரியாது!” வெடுக்கென்று சொல்லிவிட்டு, “என்னிடம் சொல்லவில்லை,” என்று சமாளித்தாள் மேரி.

    மேரி உரைத்தது பொய்தான். ஆனாலும் உண்மையைச் சொன்னால் அவதூறு பேசுவதுபோல் ஆகிவிடாதா! அவள் செய்தது சரிதான் என்றே தோன்றியது.

    உண்மையே பேசுகிறாளாம்! காந்தி என்ற நினைப்பு!

    மன நிறைவுக்கு உண்மை அவசியம். உண்மை எப்போதும் ஒன்றுதான். மாறுவது கிடையாது.

    தனக்குத்தானே உண்மையாக இருப்பவர்கள் பிறரிடமும் உண்மைதான் பேசுவார்கள். இக்குணத்தால் நிறைய எதிரிகளைச் சந்திக்க நேரலாம். இருந்தாலும் அவர்கள் மாற விரும்புவதில்லை.

    இப்படியெல்லாம் அவதிப்பட்டுக்கொண்டு எதற்காக உண்மையாக இருக்க வேண்டும் என்றுதான் பலருக்கும் தோன்றிப்போகிறது. தம்மைப்போல் இல்லாதவர்களைப் பழிக்கிறார்கள்.

    முகமூடி மனிதர்கள்

    தம்மைப்பற்றிய கசப்பான உண்மைகளை ஏற்க முடியாதவர்கள் பிறர் தம்மை எப்படி ஏற்பார்கள் என்பதற்கேற்ப நடக்கிறார்கள். அதாவது, மனிதருக்கு மனிதர் மாறுகிறார்கள்; வெவ்வேறு முகம் காட்டுகிறார்கள். அப்படிச் செய்தால்தானே பிறரது பாராட்டு கிடைக்கும்!

    கதை

    சங்கரின் இளமைக்காலம் பொறுக்க முடியாததாக இருந்தது. சிறு வயதிலிருந்தே, முடிந்தவரை வீட்டில் தங்காது, நண்பர்களுடன் பேசி, விளையாடுவதிலேயே கழிக்க ஆரம்பித்தான். அவன் போக்கிற்காகத் தந்தை தண்டிக்க, இன்னும் விலகிப்போனான். மகிழ்ச்சி என்றால் தெரிந்தவர்களுடன் ஓயாது, உரக்கப் பேசிச் சிரிப்பது என்று தோன்றிப்போயிற்று.

    பெரியவன் ஆனதும், தன்னைப்பற்றிச் சிறிதும் நினைக்க விரும்பாது, பிறருக்குத் தன் சக்திக்குமீறி உதவி செய்து, அவர்களது புகழ்ச்சியில் ஆறுதல் பெற்றான்.

    `இவன் சரியான ஏமாளி!’ என்று பலரும் சங்கரைப் பயன்படுத்திக்கொண்டனர், ஏமாற்றினர். வருத்தம் மிகுந்தது. யாரையும் நம்ப முடியவில்லை. இருந்தாலும், அவனால் மாற முடியவில்லை.

    பிறரிடம் ஒருவர் பொய்முகம் காட்டிவருவது தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்வதுபோல்தான். தன்னையே புரிந்துகொள்ள முடியாது போய்விடும். இதனால் சுற்றி நடப்பவைகளையும் புரிந்துகொள்ள முடியாது போகிறது.

    அனுபவித்துச் செய்வது

    சமீபத்தில் ஒரு நடன நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன். அடிக்கடி எழுந்த கைதட்டல் பலமாக ஒலித்தாலும், என் முகத்தில் ஏன் மகிழ்ச்சியுடன் கூடிய புன்னகை வரவில்லை என்று யோசித்தேன். பிறரை எப்படிக் கவர்வது என்று யோசித்துச் செய்ததுபோல் இருந்தது. அதாவது, நாட்டியமணியின் அங்க அசைவுகள் அவள் மனத்தின் ஆழத்திலிருந்து வரவில்லை! காதலியின் பாவத்தைக் காட்ட, அவளாகவே மாறும் திறமை, முயற்சி, இருக்க வேண்டும்.

    இதேபோன்று, இசை, நடிப்பு, எழுத்து எல்லாமே ஒருவர் அனுபவித்துச் செய்யும்போதுதான் பிறரிடமும் அதன் எதிரொலி எழும்பும். கதாபாத்திரமாக நம்மையே எண்ணிக்கொள்ளும்பொது அவர்களுடைய உணர்ச்சிகளை நடிப்பிலோ, எழுத்திலோ வடிக்க இயலுகிறது.

    நமக்கே உண்மையாக இருக்க

    `நான் ஏன் இப்படி இருக்கிறேன்?’ என்று கேட்டுக்கொண்டால், நமக்கு உண்மையான விடை கிடைக்கும்.

    `எனக்கு ஏன் வருத்தமாக இருக்கிறது?’ என்று உங்களையே கேட்டுப்பார்த்தால், உங்களை எது பாதிக்கிறது என்று புரியும். என்றோ நடந்தது இன்னமும் உங்களைப் பாதித்தால், அதைத் தாண்டி வரும் துணிவை வளர்த்துக்கொள்ளவேண்டும்.

    அறியாப்பருவத்திலிருந்தே பலவகைத் துயரங்களுக்கு ஆளாகியிருப்போம். காரணமில்லாமல் பெற்றோர் அல்லது ஆசிரியை தண்டித்தது, உறவினர் செய்த பாலியல் வதை, உற்ற நண்பரின் துரோகம் – இப்படி.

    நடந்து முடிந்ததை மாற்ற முடியாது என்ற நிலையில், தீமை இழைத்தவர்களை மன்னித்து, மறக்கலாம். `நான் என்ன, மகாத்மாவா?’ என்று கோபிப்பவர்களுக்கு: வேண்டாதவர்கள் நினைவை மானசீகக் குப்பை மேட்டில் சேர்த்துவிடலாம். அல்லும் பகலும் ஒருவரது நினைவு உங்களைக் கடுமையாகப் பாதித்தால் அதைப் போக்கும் வழி: பாறாங்கல்லில் அவரைக் கட்டி, கடலில் எறிந்துவிடுவதுபோல் கற்பனை செய்துகொள்ளுங்கள். மீண்டு வரமாட்டார். (இதெல்லாம் நான் எப்போதோ படித்து, பின்பற்றி, மனப்பாரத்தை இறக்கிவைத்த வழிகள்).

    அன்றாட வாழ்க்கையில் சுடுசொற்களாலும் செயல்களாலும் நம்மை வீழ்த்த நினைப்பவர்கள் பொறாமையால்தான் அப்படிச் செய்கிறார்கள். `நம் மீது குற்றம் இல்லையே,’ என்று தெளிந்தாலே போதும். அமைதி குன்றாது.

    இதேபோல், `மனம் லேசாக, மகிழ்ச்சியாக இருக்கிறதே, எப்படி?’ என்று கேட்டுக்கொள்வதும் நம்மை நாமே புரிந்துகொள்ள வழிவகுக்கும்.

    நான் ஒரு முறை அப்படி கேட்டுக்கொள்ள, நான் ஆசையாக நட்டுவைத்த செடியின் கிளை பிழைத்து, அதில் துளிர் விட்டிருக்கிறதுதான் காரணம் என்று புரிந்தது.

    சிறு குழந்தை முதன்முதலாக முகம் பார்த்துச் சிரிக்கும்போது, தவழும்போது என்று எத்தனை மகிழ்ச்சியூட்டும் நிகழ்வுகள் இல்லை நம் வாழ்வில்! இவைகளை விடுத்து, வேண்டாத நினைவுகளை ஏன் கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருக்க வேண்டும்!

    தொடருவோம்

    Share
  • குறளின் கதிர்களாய்…(207)

    -செண்பக ஜெகதீசன் 

    கற்றில னாயினுங் கேட்க வஃதொருவற்
    கொற்கத்தி னூற்றாந் துணை. (திருக்குறள் –414: கேள்வி) 

    புதுக் கவிதையில்… 

    கற்கவில்லை கல்வியெனிலும்,
    கற்றறிந்தோரிடம்
    கேட்டுத் தெரிந்துகொள்!

    அது,
    தளர்ச்சியுறும்போது
    தாங்கிப் பிடிக்கும்
    ஊன்றுகோல் போல்
    உதவும் துணையாகும்…! 

    குறும்பாவில்… 

    கேட்டறிந்துகொள் கற்றோரிடம், நீ கற்காதபோதும்,
    கேள்வியது ஊன்றுகோலாய் உனைத்தாங்கும்-
    தளர்வுறும்போது துணையாகி…! 

    மரபுக் கவிதையில் 

    தளர்வுறும் போதில் ஊன்றுகோலாய்த்
    -தாங்கிப் பிடிக்கும் துணையாகும்
    வளர்த்திடும் கேள்வி யறிவதுவே
    -வாழ்வில் என்றும் மறவாதே,
    உளத்தினில் இதனைக் கொண்டிடுவாய்
    -உயர்ந்த கல்வி பெறாவிடிலும்,
    வளமாம் கல்வி கற்றோரிடம்
    -வாங்கிடு கேட்டே அறிவதையே…! 

    லிமரைக்கூ… 

    கற்கவில்லை யெனிலும் கேட்டிடு,
    தளர்வுறும்போது ஊன்றுகோலாய் உறுதுணையாவதால்
    கேள்வியறிவை நீநிலை நாட்டிடு…! 

    கிராமிய பாணியில்… 

    வளத்துக்கோ வளத்துக்கோ
    நல்ல அறிவ வளத்துக்கோ,
    கேள்வி அறிவ வளத்துக்கோ…

    படிப்பறிவு இல்லண்ணாலும்
    படிச்சவங்கிட்ட கேட்டுத்தானே
    நல்ல அறிவ வளத்துக்கோ,
    கேள்வி அறிவ வளத்துக்கோ…

    அதுதான் ஒனக்குத் தொணயாவும்
    ஆபத்துக்கு ஒதவியாவும்,
    தளர்வாநீ இருக்கும்போது
    தாங்கிப்புடிக்கும் தடிக்கம்பா
    தொணயா ஒனக்கு வருமிதுவே…

    அதால,
    வளத்துக்கோ வளத்துக்கோ
    நல்ல அறிவ வளத்துக்கோ,
    கேள்வி அறிவ வளத்துக்கோ…!

     

     

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே 12

    க. பாலசுப்பிரமணியன்

     

    முயற்சி திருவினையாக்கும்

    ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் கேரள மாநிலத்தைச் சார்ந்த ஒரு இளைஞர் சொற்பொழிவு செய்துகொண்டிருந்தார். தன்னுடைய வெற்றிப்படிகளை அடைந்ததற்கான வழிகளையும் முயற்சிகளையும் அங்கு படித்துக்கொண்டிருந்த மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டிருந்தார். “நான் சிறுவனாக இருந்த பொழுது ஒரு வறுமையான குடும்பத்தில் பிறந்திருந்தேன். ஒரு வேளை உணவுக்குக்கூட மிகவும் கஷ்டப்பட்டிருக்கின்றேன். மூன்று வேளை  உணவு என்பதோ பகல் கனவாக இருந்தது. ஆனால் இன்று பல கோடிகளை சேர்த்திருக்கும் ஒரு நிறுவனத்திற்குச் சொந்தமானவனாக இருக்கின்றேன்.” இவ்வளவு கடினமான குடும்பச் சூழ்நிலைகளிலும் அவர் பல மைல்கள் நடந்து சென்று ஒரு அரசுப் பள்ளியில் தன் தாய்மொழி மூலம் கல்வி பெற்று தொழிற்கல்வி பயின்று மேலும் இந்திய மேலாண்மைக் கழகத்தில் (ஐ. ஐ. எம்) படித்து வளர்ந்ததற்குப் பின்னணி என்ன இருக்கின்றது? .. உழைப்பு!. முயற்சி!!.

    தன்னுடைய சொந்த அறிவையும் திறனையும் நம்பி ஒரு புதிய முயற்சியில் ஈடுபட்ட அவர் “இட்லி,தோசை” மாவுகளை இரசாயனக் கலப்பின்றி தயாரிக்கும் ஒரு தொழிலை ஆரம்பித்து உலக அளவில் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு வளர்ந்து விட்டார். அவர் மாணவர்களுக்கு கொடுத்த அறிவுரை என்ன?  “தன்னம்பிக்கையை எப்பொழுதும் கைவிட்டுவிடாதீர்கள்”

    நாம் என்ன தொழில் செய்கின்றோம் என்பதை விட செய்கின்ற தொழிலில் நமது ஈடுபாடு எவ்வளவு உள்ளது. அதில் கவனம் எவ்வளவு உள்ளது. அதில் நாம் உணர்வுப்பூர்வமாக ஈடுபட்டிருக்கின்றோமா? அதில் வளர வேண்டும் என்ற ஆர்வம் இருக்கின்றதா? அந்தத் தொழிலை நாம் நேர்மையாகச் செய்து கொண்டிருக்கின்றோமா ?- என்ற கேள்விகளுக்கான பதில்கள் நம்மிடம் இருக்க வேண்டும். வாழ்க்கையில் கீழே விழுந்து விழுந்து மேலே எழுந்தவர்கள் எத்தனை பேர் சாதனையாளர்களாக மாறியிருக்கின்றனர்? ஆப்ரஹாம் லிங்கனின் வாழ்க்கை சரிதம் எத்தனை வியப்பைத் தரக்கூடியது? தோல்விக்கு மேல் தோல்வியை ஒவ்வொரு படியிலும் சந்தித்தும் அவர் தன்னுடைய நம்பிக்கையை விட்டு விடாமல் வளர்ந்தவர் அல்லவா?

    தோல்வியைக் கண்டு துவளுவதும் வெற்றியைக் கண்டு ஆர்பரிப்பதும் ஒரு முதிர்ச்சி அடைந்த மனிதனுக்கு அறிகுறி அல்ல. இரண்டையும் நடுநிலையுடனும் நிதானத்துடனும் எடுத்துக்கொள்ளவும் பகிர்ந்து கொள்ளவும் பழகிக்கொள்ள வேண்டும். இதுவே உணர்வுசார் புத்திக்கூர்மைக்கு (Emotional Intelligence) அடையாளம். மனித வளத்தின் வளர்ச்சிப்பாதையில் மூன்று விதமான புத்திக்கூர்மைகளின் ஒருங்கிணைந்த வளர்ச்சியின் அவசியத்தின் தேவையை மனநல வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர். அவை:  அறிவுசார்  புத்திகூர்மை ( Cognitive Intelligence) , உணர்வுசார் புத்திகூர்மை, (Emotional Intelligence) திறன்சார் புத்திகூர்மை (Skill-Quotient). இவற்றில் உணர்வுசார் புத்திகூர்மை மிகவும் அவசியமானதாகக் கருதப்படுகின்றது. இதுவே வாழ்க்கையின் வெற்றிக்கு அடிப்படையாகக் கருதப்படுகின்றது. கல்வியின் அடிப்படை நோக்கமும் இதுவே. தன்னுடைய உணர்வுகளைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியாதவர்களும் தன்னுடைய கட்டுப்பாடற்ற உணர்வுகளுக்கு அடிமையாகி விட்டவர்களும் வாழ்க்கையில் வெற்றி பெற்றதாகச் சரித்தரமே இல்லை !

    ஒவ்வொரு மனிதனும் தன்னுள் எல்லையற்ற வளங்களைத் தன்னடக்கிக் கொண்டிருக்கின்றான். ஒவ்வொரு மனிதனும் அறிவு மற்றும் திறன் சார்ந்த வளங்களின் ஊற்றுக்களாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றான். ஆனால் நம்மில் பலரும் தம்முடைய சொந்தத் திறன்களையும் உணர்வுகளையும் மறந்து மற்றவர்களைப் பார்த்தது ஏங்கிக் கொண்டும் அவர்களுடைய வாழ்க்கையை நாம் வாழவேண்டும் என்ற தவறான குறிக்கோளிலும் தவித்துக்கொண்டிருக்கின்றோம். துரதிருஷ்ட வசமாக, நம்முடைய கல்வித்திட்டங்களும் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் பொருள்களைப்போல மாணவர்களை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளது. பெற்றோர்களும் தங்களுடய குழந்தைகளின் உண்மையான திறன்களையும் கனவுகளையும் ஒதுக்கிவிட்டு அவர்களை தங்களுடைய நிறைவேறாத கனவுகளுக்கு இரையாக்கிக் கொண்டிருக்கின்றனர். இதில் மாற்றம் நிச்சயமாகத் தேவை.

    உள்ளமைந்த திறன். மூளை எதையாவது படைப்பதற்கு எப்பொழுதும் உறுதுணையாக இருக்கின்றது. அதற்கு உரமிட வேண்டும். கற்றலை வெறும் புதையலாக்கி நிலத்திற்கு அடியில் புதைத்து வைக்க முயற்சிக்கக்கூடாது.  அதை எப்படி உபயோகிப்பது என்று சிந்தித்துக்கொண்டே இருக்க வேண்டும்.

    என்னால் மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சி. ஒரு முறை ஒரு வெளிநாட்டுக்குச் சென்றிருந்த பொழுது அங்கு கரையோரத்தில் உள்ள ஒரு இயற்கைசார் விடுதியில் தங்கியிருந்தேன். மாலையில் அந்தப் பரந்த இடத்தைச் சுற்றி வரும்பொழுது அங்கே இருந்த பலகையில் “விளையாட்டு கிராமம்” (Games Village) என்று எழுதப் பட்டிருந்தது. அதற்கான நுழைவுக்கட்டணம் பத்து டாலராக இருந்தது. கூட இருந்தவர்கள் “உள்ளே சென்று பார்க்கலாமே” என்று விரும்பியபோது “இவ்வளவு பணம் செலவழித்து உள்ளே சொல்லவேண்டுமா” என்ற தயக்கம். ஆனால் மற்றவர்களின் விருப்பத்தை மதித்து உள்ளே சென்ற எனக்கு ஒரு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

    அங்கே முதல் விளையாட்டாக சுமார் பத்து அடி நீளத்தில் செய்யப்பட்ட ஒரு பல்லாங்குழி மண்ணில் புதைக்கப்பட்டு சோழிகளுடன் விளையாடுவதற்குத் தயாராக இருந்தது. இதென்ன விளையாட்டு?  சிறிய வயதில் நாம் எவ்வளவு விளையாடியிருக்கின்றோம் ? இதைக் காசு கொடுத்துப் பார்க்க வேண்டுமா? என்று நினைத்துக்கொண்டே அடுத்த விளையாட்டிற்குச் சென்ற பொழுது அது “ஆடு புலி ஆட்டம்: !

    இப்படி ஒவ்வொரு விளையாட்டும் சிறிய வயதில் நம்முடைய தமிழ்நாட்டில் நான் மதுரையில் வாழ்ந்தபோது விளையாடிய ஆட்டங்கள் ! மனம் நொந்து போய் “இதற்கா பத்து டாலர் ஒருவர்க்கு கொடுத்தோம்?’ என்று நினைத்து அதை நிர்வகிக்கும் அந்த நாட்டின் நபரிடம் கேட்ட பொழுது , அவர் இதைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும், இதை கண்காணிப்பவர் வேறு ஒருவர் என்றும் சொல்லி அவரை அழைக்க, அவரோ தமிழ்நாட்டைச் சார்ந்தவர்,. தனது பெயரைத் “தங்கபாண்டி” என்று சொல்லி “நான் தூத்துக்குடியைச் சார்ந்தவன் ” என்றதும் நான் கேட்டேன் ” இது என்னய்யா.. ஏமாற்று வேலைபோல இருக்கிறது.. இதெல்லாம் நாங்கள் சிறு வயதில் விளையாடியது அல்லவா?” என்றதும் அவர் கூறிய பதில் வியப்பாக இருந்தது. “அய்யா, பல நாட்டு மனிதர்கள்  இங்கு வந்து தங்கி பகலும் இரவும் இந்த விளையாட்டுக்களை விளையாடுகின்றார்கள். அவர்களுக்கு மகிழ்ச்சியும் மனநிறைவையும் தருகின்றது. இதற்காக அவர்கள் நிறையப் பணமும் செலவழிக்கின்றார்கள். நான் என்னுடைய அறிவில் என்ன இருக்கின்றதோ அதை வைத்து வியாபாரம் செய்து கொண்டிருக்கின்றேன். இதில் என்ன தவறு?” எனக் கேட்டார். அவர் பதிலுக்குத் தலை வணங்கியது மட்டுமின்றி அவருடைய புத்திக்கூர்மைக்கும் திறனுக்கும் பாராட்டுக்கள் தெரிவித்தேன். அறிவையும் திறனையும் உபயோகித்து மற்றவர்களை ஏமாற்றாமல் நேர்மையான முறையில் எந்தத் தொழில் செய்தால் என்ன? தன்னைத் தானே தோற்கடித்துக்கொண்டு மூலையில் முடங்கி நம்முடைய தோல்விக்கு மற்றவர்களை இரையாக்கிக் கொண்டிருப்பதில் பயன் என்ன ?

    வாழ்ந்து பார்க்கலாமே !

     

    தொடருவோம்

    Share
  • வ.சுப.மாணிக்கனாரின் மொழிச்சிந்தனைகள்

     

        முனைவர் செ.செந்தில்பிரகாஷ்,

                         உதவிப் பேராசிரியர்,

                         தமிழாய்வுத்துறை,

         அ.வ.அ.கல்லூரி (தன்.),

         மன்னன் பந்தல்,    

         மயிலாடுதுறை.

     

     

    ஞால முதன்மொழியாய் உயர்தனிச் செம்மொழியாய் வீற்றிருக்கும் தமிழ்மொழி தான் தோன்றிய காலந்தொட்டு இன்று வரை பல்வேறு வகைப்பட்ட தாக்குதல்களுக்கும் அழிப்பு வேலைகளுக்கும் ஆட்பட்டே வருகின்றது. இத்தகைய வரலாற்று நிகழ்வுகளைத் தொல்காப்பியர் காலந்தொட்டு இன்றளவுமான நெடிய வரலாற்றுப் பாதையில் நம்மால் காணமுடிகின்றது. இவ்வகையில் இருபதாம் நூற்றாண்டின் மொழிப்போராட்ட வரலாற்றில் தமிழ்த்தாய்க்குத் துணை நின்ற தமிழறிஞர்களுள் ஒப்பற்ற மணியாய் திகழ்பவர் வ.சுப.மாணிக்கனார் ஆவார். இவர் தம் வாழ்நாள் முழுவதும் தமிழுக்காகவே வாழ்ந்து தமிழ் வளர்ச்சி பற்றியே சிந்தித்து தமிழின் சிறப்புகள் பற்றி பல ஆய்வுகள் செய்தமையால் `தமிழ் இமையம்’ என்று தமிழறிஞர்களால் போற்றப்பட்டவர். தமிழுக்கு ஆக்கம் சேர்க்கும் நூல்கள் பல படைத்தவர். தமிழ் கலைச்சொற்கள் பல உருவாக்கியவர். தன் வாழ்வில் படிப்படியாய் உயர்ந்து தான் வகித்தப் பதவிகளுக்குப் பெருமை சேர்த்தவர். தமிழின் உரிமையினை நிலைநிறுத்த சிதம்பரம் கோயிலில் திருமுறைகள் பாடப்பெற வேண்டும் என்று தமிழ் ஆர்வலர் துணையோடு போராட்டம் நடத்தி வெற்றி கண்டவர். தமிழ் வழிக் கல்வி இயக்கம் தொடங்கி தமிழ் நலக்கருத்து பரப்புரை செய்து மழலையர் பள்ளிகள் எல்லாம் தமிழ் வழிப்பள்ளிகளாக விளங்க வேண்டும் என்று வற்புறுத்தி வந்தவர். இவர் படைத்த நூல்கள் யாவிலும் தமிழ் மொழி, இனம், நாடு குறித்த சிந்தனைகள் பெரிதும் மிளிர்வதைக் காணலாம். அவற்றுள் தலைவர்களுக்கு என்ற தலைப்பில் எழுதப்பட்ட கடித வகையிலான நூலில் தமிழ்மொழி குறித்த சிந்தனையோடு இந்திய மொழிகளின் எதிர்கால நிலை குறித்த சிந்தனைகளும் இடம்பெறுவதைக்காணலாம்.

    வ.சுப.மாணிக்கனாரின் தலைவர்களுக்கு

           வ.சுப.மாணிக்கனாரால் கடித வடிவில் எழுதப்பட்ட தலைவர்களுக்கு என்ற தலைப்பிலான 25 கடிதங்களைக் கொண்ட இந்நூல் இந்திய மொழிகளின் எதிர்கால வளர்ச்சிக்கான சிந்தனைகளை முன் வைப்பதோடு இன்று நிலவும் மொழிச்சிக்கலுக்கான தீர்வினைக் கொடுக்கும் வகையிலும் அமைந்துள்ளது. இந்நூல் எழுதப்பட்ட சூழலானது மிக நீண்ட வரலாற்றுப் பின்புலத்தினைக் கொண்டுள்ளது. அவற்றை இக்கட்டுரையின் முதல் பகுதியில் காணலாம்.

    பன்மொழி தேசிய கூட்டாட்சி நாடாக உருவாக்கப்பட வேண்டிய இந்தியத் துணைக்கண்டம் ஒரு மொழித் தேசியமாகக் கட்டப்படுகின்றது. இதனால் பிற மொழித் தேசியங்கள் நசுக்கப்பட்டு வருகின்றன. இந்தியானது இந்தியத் துணைக்கண்டத்தில் வாழும் பல மொழிகள் மீது ஆதிக்கம் செலுத்துவதால் மொழிச்சிக்கல் உருவாகின்றது. இதனைக் கண்டுகொள்ளாமல் மெத்தனமாக இருந்தால் இந்தியா பல பகுதிகளாக உடையும் என்பதையும் கணித்த வ.சுப.மாணிக்கனார் இந்திய ஒருமைப்பாடு என்பது சிதையாமல் காக்கப்பட அவர் முன்மொழியும் மொழிச்சித்தாந்தங்களை இக்கட்டுரையின் பின்பகுதியில் காணலாம். மாணிக்கனார் நூல் எழுதப்புகுமுன் மூன்று முத்தான கருத்துக்களை முன் வைத்தே தொடங்குகிறார். அவற்றில் உடன்பாடு உள்ளோரே மேற்கொண்டு தன் கடிதத்தைத் தொடரவேண்டும் என்று தெளிவுறுத்துகிறார். அவை,

    1. வன்முறை எதற்கும் என்றும் எவரும் கையாளக்கூடாது.
    2. பாரதத்தின் ஒருமை பாழ்படக்கூடாது.
    3. அடிப்படை உரிமையில் ஏற்றத்தாழ்வு கூடாது.

    என்பதுவேயாகும். இவற்றின் மூலம் அவரின் உண்மையான இந்திய ஒருமைப்பாட்டுணர்வு புலப்படும். மேலும் ஒவ்வொரு கடிதத்தின் இறுதியிலும் தன்னை `இந்தியத் தமிழன்’ என்றே அடையாளப்படுத்திக் கொள்கிறார். இவ்வுணர்வுடனேயே அவரின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டே இக்கட்டுரையும் எழுதப்படுகின்றது என்பதை உறுதிப்படுத்திக் கொள்கின்றேன். ஏனெனில் இந்தித் திணிப்பிற்கு எதிராகப் பேசுபவர்கள் இந்திய நாட்டிற்கே எதிரானவர்களாகவும் இந்தியை ஏற்றுக் கொள்பவர்களே இந்திய தேசபக்தர்கள் என்று பார்க்கப்படும் தவறான போக்கு இன்று பெருகிக் கொண்டிருப்பது முதன்மைக் காரணியாகும்.

    நூல் இயற்றப்படுவதற்கான வரலாற்றுப் பின்புலம்

           இன்று இந்தியா என்றழைக்கப்படும் ஒருங்கிணைக்கப்பட்ட இப்பெரு நிலப்பரப்பு வரலாற்றில் ஆங்கிலேயர் வருவதற்கு முன்னர் ஒருங்கே இருந்தது இல்லை. இப்பெரு நிலப்பரப்பினை ஆட்சி செய்து வந்த மன்னர்கள் தங்கள் வலிமையின் வழி ஒருசில பகுதிகளைத் தவிர்த்த ஒற்றைப் பேரரசாகவோ பலநூறு குறுநில மன்னர்களால் ஆளப்படும் பகுதிகளாகவோ பல காலகட்டங்களில் மாறுதல்களுக்கு உட்பட்டே இருந்தது. ஓர் பகுதியை பிறமொழி இனத்தவர்கள் வந்து ஆள நேரிட்டபோதிலும், மக்கள் மொழியே நீதி மன்றங்களிலும் அலுவல் நிலைகளிலும் ஆட்சிமொழியாகப் பயன்பட்டு வந்தது. முகலாயர் ஆட்சியில் இந்நிலை சற்று மாறினாலும் பாதிப்பு பெருமளவு இல்லை. ஆனால் ஆங்கிலேயர் இம்மண்ணைப் பிடித்து ஆட்சி செய்ய முற்பட்டபோதுதான் ஆட்சிமொழி பற்றிய சிக்கல் ஏற்படத் தொடங்கியது. இந்தியத் துணைக்கண்டம் பற்பல நாடுகளாகவும் சிற்றரசுகளாகவும் சுதந்திரம் உள்ளவை, சுயாட்சி பெற்றவை, கப்பம் கட்டுபவை என மூவகையாக இருந்து வந்தன. எனவே இந்தியப் பேரரசு என்பது இல்லாது இருந்ததால் மத்திய அரசு என்ற ஒன்று

    இருந்ததில்லை. இவ்வாறாக அதுவரை இல்லாத இந்தியத் துணைக்கண்டத்தினையே ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனி தன் துப்பாக்கியின் வலிமையால் ஒரு நாடாக உருவாக்கியது. ஆங்கிலேயர்கள் தங்களின் நிர்வாக வசதிக்காகப் பலமொழி பேசும் மக்களை ஒன்றாக இணைத்து ஆளும் மாகாண ஆட்சி முறையைப் புகுத்தினர். இம்மாகாண ஆட்சி முறையில் மக்களின் மொழிகள் பயன்படுத்தப்படாமல் ஆங்கில மொழி பயன்படுத்தப்பட்டது. பல்லாண்டுகளாக அடிமைப்பட்டிருந்த பாரத துணைக்கண்டத்தின் பல தேசிய இனங்கள் ஒன்றிணைந்து ஓரு குடையின்கீழ் நின்று தங்களது விடுதலைக்காக போராடி வந்த நிகழ்வுகளை வரலாற்றில் நாம் கண்கூடாகக் காணலாம்.

    இந்திய ஒன்றியத்தின்கீழ் ஏற்பட்ட மொழிச்சிக்கல்

    ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற நிலை எடுத்தபோது விடுதலைப் போராட்டத் தலைவர்களுக்கும் அறிஞர்களுக்கும் இடையில் அடுத்து எவ்வகை அரசு ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற கேள்வி எழுந்தது. பல்வேறு மொழிவழித் தேசிய இனங்களும், மத அடிப்படையில் இஸ்லாமியர்கள் செறிவாக உள்ள மாகாணங்களும் உள்ள இந்தியத் துணைக்கண்டத்திற்கு `மாகாண சுயாட்சி’ ஏற்றதாக இருக்கும் என்ற கருத்து நிலவியது. மாநில சுயாட்சி என்ற அரசியல் தீர்வு பல்வேறு மொழிவழித் தேசிய இனக்கோரிக்கைகளை நிறைவு செய்யவல்லது என்பது பல இந்தியத் தலைவர்களும் ஆங்கிலேயர்களும் கண்ட முடிவு. ஆகவேதான் 1935இல் மாநில சுயாட்சி என்ற அமைப்பை ஆங்கிலேயர்கள் அறிவித்தனர். அக்கால காங்கிரஸ் கட்சியும் மாநில சுயாட்சியை மிக வலிந்து கோரியது. 1920ஆம் ஆண்டு முதல் 1945 ஆம் ஆண்டு வரை மாநிலங்கள் மொழி அடிப்படையில் பிரிய வேண்டும் என்ற கொள்கையை பலமுறை காங்கிரஸ் உறுதி செய்தது.

    ஆனால் இந்திய விடுதலையின் போது நடந்தது என்பது வேறு கதை. இந்தியா இரண்டாகப் பிரிந்த நிலையில் கலவரங்களும் வன்முறைகளும் நிகழ்ந்ததைக் காரணம் காட்டி ஒரு வலிமையான மத்திய அரசை காங்கிரஸ் உருவாக்கியது. இந்நிலை ஒற்றை மொழி வளர்ச்சிக்காகவும் ஒற்றை ஆதிக்க தேசிய இன மேலாண்மைக்காகவும் வட இந்தியப் பெரு முதலாளிகளின் ஒட்டுமொத்த சுரண்டலுக்கும் நிலைக்களனாக அமைந்தது. மொழிவழி மாநில சுயாட்சி உருவாக்கப்பட்டு தங்கள் மொழிசார்ந்த கலை, பண்பாட்டுக் கூறுகள் மேம்பாடடையும் என்று எண்ணியிருந்த மொழியுணர்வாளர்களின் தலையில் பேரிடியாக விழுந்தது. இந்தியா முழுவதும் மொழிவழி மாநிலம் வேண்டி போராட்டங்கள் எழ ஆரம்பித்தன. சிலபகுதிகள் மாநிலங்களாகப் பிரிந்தன. மேலும் கிளர்ச்சிகள் தோன்ற 1956ஆம் ஆண்டு பசுல் அலி என்பவர் தலைமையில் மாநிலச் சீரமைப்புக்குழு அமைக்கப்பட்டது. 15 மொழிகள் தேசிய மொழிகளாக அறிவிக்கப்பட்டன. இன்று 22 மொழிகள் இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் தேசியமொழிகளாக இடம்பெற்றுள்ளன. இன்னும் சில மொழிகள் வரிசையில் காத்துக்கிடக்கின்றன.

     

    பயனற்ற மொழிவழி மாநிலம்

    1956இல் ஏற்படுத்தப்பட்ட மொழிவாரி மாநிலங்கள் இவர்களது தேசிய இன உணர்வின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யவில்லை. ஏனெனில் 1950ஆம் ஆண்டே இந்திதான் இந்தியாவின் ஆட்சிமொழி என்று முடிவு செய்யப்பட்டுவிட்டது. இறையாண்மையற்ற தேசிய இன வரையறையற்ற, அதிகாரமற்ற மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டு இந்தியாவின் மத்திய அரசிற்கு ஆடும் கைப்பாவை போல மாநிலங்கள் அமைக்கப்பட்டன. மேலும் சுயமாக நடக்கக் கூடிய மாநில அரசை கலைப்பதற்கு இந்திய அரசுச் சட்டம் 356 ஏற்படுத்தப்பட்டது. இதனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை ஒரே இரவில் கலைத்துவிடலாம். இந்திய அரசியல் வரலாற்றில் பல மாநில அரசுகள் கலைக்கப்பட்டும் உள்ளன.

    தேசிய இனங்களின் மொழிப்போராட்டம்

    தேசிய இனங்களின் தன்னெழுச்சிப் போராட்டங்களுக்கு இடையில் ஆட்சிமொழி ஆணைக்குழு மற்றும் நாடாளுமன்ற ஆய்வுக்குழு தந்த பரிந்துரைகளின் அடிப்படையில் ஆட்சிமொழிச் சட்டத்தை 1963 ஏப்ரல் 13ஆம் நாள் அன்றைய உள்துறை அமைச்சர் இலால் பகதூர் சாஸ்திரி அவர்கள் நாடாளுமன்றத்தில் முன்மொழிந்தார். அதில் 26.01.1965 ஆம் நாள் முதல் இந்தியே இந்தியாவின் ஆட்சிமொழி மேலும் ஆங்கிலம் இந்தியுடன் கூடுதல் மொழியாகப் பயன்படுத்தலாம் எனப்பட்டது. இதில் ஆங்கிலம் தொடர்ந்து ஆட்சிமொழியாக நீடிக்கும் என்று அதில் உறுதியாகச் சொல்லப்படவில்லை. இது இந்தி பேசாத மாநில மக்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. 26.01.1965 க்குப் பின்னர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் மத்திய அரசால் இந்தியில் வெளியிடப்படும் மத்திய அரசுச் சட்டங்கள், ஆணைகள், கட்டளைகள், நெறிமுறைகள் ஆகியவை மட்டும்தான் அதிகாரப்பூர்வமானவை. மாநில அரசுகள் மைய அரசினை தொடர்பு கொள்ளும்போது இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டு மாநில ஆளுநர் அனுமதியுடன் வெளியிடப்பட வேண்டும். 1965 செப்டம்பர் முதல் I.A.S மற்றும் I.P.S போன்ற மத்திய அரசுப் பணிகளுக்கான தேர்வுகளை ஆங்கிலத்தோடு இந்தியிலும் எழுதுவதற்கு இந்தி ஆட்சி மொழிச்சட்டம் வகை செய்தது.

    நூல் எழுந்த காலச்சூழல்

    இந்தி மொழியின் தடையில்லா வளர்ச்சி காரணமாக இந்தி பேசும் மக்கள் அரசுப்பணி, நிர்வாகம், நீதித்துறை என அனைத்துத் துறைகளிலும் மேம்பாடு அடைந்து வருவர் அதற்கு மாறாக இந்தி பேசாதவர்கள் மொழி மூலமாக வாய்ப்பு மறுக்கப்படுவதால் தாழ்வு அடைகின்றனர். தங்களின் உரிமைகளை இழந்த இந்தி பேசாத மாநில மக்கள் தங்கள் மாநிலங்களில் இந்திய அரசுக்கு எதிராகப் பல போராட்டங்களை நடத்தினர். இதில் இந்திய ஆட்சி மொழிச் சட்டத்தை எதிர்த்து மத்திய அரசை எதிர்த்து தமிழ்நாடு நடத்தியப் போராட்டம் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்ததாகும். இப்போராட்டத்தில் பல ஊர்களில் உள்ள அஞ்சலகங்களும் தொடர்வண்டி நிலையங்களும் காவல்துறை வண்டிகளும் மட்டுமல்லாமல் இராணுவ வண்டி பஞ்சாலை திரையரங்கம் என பல தீக்கிரையாக்கப்பட்டதாகத் தெரிகிறது. இப்போராட்டத்தை கலைக்கவும் அடக்கவும் தமிழகக் காவல் துறையினர் 33,000 பேர்களும் ஆந்திர, மைசூர், கேரளா, மகாராட்டிரம், மத்தியப்பிரதேச காவல் துறையினர் 4,000 பேர்களும் 5,000க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களும் ஈடுபடுத்தப்பட்டனர். காவலர்கள் ஆர்ப்பாட்டக் கூட்டத்தினரைக் கலைக்க 70க்கும் மேற்பட்ட இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தினர். ஒரு இடத்தில் மட்டும் இராணுவத்தினர் இயந்திரத் துப்பாக்கியால் சுட்டனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 500க்கும் மேற்பட்ட தமிழர்கள் இறந்ததாகத் தெரிகிறது. ஆனால் 70 பேர்களே இறந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. காவலர்கள் 4பேர் இறந்தனர். 210பேர் காயமுற்றனர். ஐம்பது நாட்கள் நடைபெற்ற இப்போராட்டத்தில் மொத்தம் 6 மொழியுணவாளர்கள் இந்தித் திணிப்பை எதிர்த்து தீக்குளித்தும் 2பேர் நஞ்சுண்டும் இறந்தனர். இவ்வாறாக தமிழர்கள் தங்கள் உடல் உறுப்புகளையும் உடைமைகளையும் இழந்து இன்னுயிரையும் ஈகம் செய்து நடத்தப்பட்ட இத்தகைய போராட்டச் சூழலை மையமிட்டே மாணிக்கனாரின் தலைவர்களுக்கு என்ற கடித நூல் எழுதப்பட்டது. இதில் இந்திய ஆட்சிமொழி குறித்துச் சிந்தித்த இந்தியத்தலைவர்கள் தெளிவுற வேண்டிய இடங்கள் குறித்தும் இந்தி மொழியானது பிற இந்திய தேசிய மொழிகள் மீது ஆதிக்கம் செலுத்துவதால் ஏற்படும் மொழிச்சிக்கல்கள் குறித்தும் அதற்கு தீர்வுகள் கொடுக்கும் அவரது சிந்தனைகளையும் இனிக் காணலாம்.

    சிதையும் தேசிய மொழிகள் குறித்தச் சிந்தனை

    இந்தியத் துணைக்கண்டமானது பன்மொழித் தேசிய இனங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. அவற்றுள் இந்தி ஒரு திசை வழக்கு, தமிழ் ஒரு திசை வழக்கு இவை போல பல மொழிகள் உள்ளன. இவற்றுள் இந்தியை மட்டும் பொதுமொழியாகவும் நடுவணரசின் வளர்ப்பு மொழியாகவும் இருப்பதனால் பிறமொழிகளின் வாழ்வு தடைபடும். பிறமொழி வட்டாரங்களில் எல்லாம் இந்தி வழக்குப் பெருகும். எல்லா மாநிலங்களிலும் இந்தித் தாய்மொழியாளர் என்ற புதுவினம் இடையிடையே முளைக்கும். இந்தி ஒரு திசை வட்டார வழக்கு என்ற தன்மை ஒழிந்து பரந்து வழங்கும் பாரத மொழியாகிவிடும். அரசுக்கு எது மதமோ அதுதான் நாடெங்கும் பரவும், அரசுக்கு எது மொழியோ அதுதான் நாடெங்கும் சிறக்கும். அதுபோல அரசுக்கு எது மொழியோ அதுதான் நாடெங்கும் ஆதிக்கம் செலுத்தும். மற்ற தேசிய மொழிகளை மிகச் சிறுமொழி, குறுமொழியாக்கிவிடும். முன்னர் வடக்கே வாழ்ந்த முண்டா பெருமொழியும் அதன் கிளை மொழிகளான சந்தாலி, முண்டாரி, சவேரா, கரியா போன்ற மொழிகள் தன்னிலையிலிருந்து திரிந்தன. வடக்கில் வாழ்ந்த திராவிட மொழிகளான ஒரோவான், மால்டோ, கோந்து, கோலமி, பிராகூய் முதலானவை சுருங்கிக் குன்றிப் போனமைக்கு வட இந்திய மொழிகளின் ஆதிக்கமே காரணமாக அமைந்தது. இம்மொழியாளர்களுக்கு நாளடைவில் வட இந்திய மொழிகளே தாய்மொழிகளாகிவிட்டன. என்ற எடுத்துக்காட்டோடு தேசிய மொழிகளுக்கும் இத்தகைய நிலை ஏற்பட்டுவிடும் என்று வ.சுப.மாணிக்கனார் எச்சரிக்கை செய்தார்.

     

     

    இந்தி ஒன்றே பொதுமொழி என்பதால் அதனைப் பாரத அரசு கோடி கோடிப் பொருள் செலவிட்டு அதிகாரத்தோடு மூலை முடுக்கெல்லாம் பரப்புகிறது. அதனால் பழைய மதமாற்றம் போன்று புதிய மொழிமாற்றம் ஏற்படும். ஏனைய மொழியினர் வாழ்வு நச்சி இந்தியைத் தாய்மொழியாகவே தழுவும் நிலை வரும். வந்தால் அஞ்சத்தக்க விளைவுகளும் கொடுமைகளும் உண்டாகும். இந்தியை மட்டும் படித்தால் போதும், தன் மாநிலத்திலும் வேலை கிடைக்கும், பிற மாநிலங்களிலும் வேலை கிடைக்கும். மத்திய அரசிலும் வேலை கிடைக்கும், மதிப்பு உயரும், பொருள் உயரும், பதவி உயரும், அதிகாரம் உயரும் என்று எண்ணுவதுதான் உலகியல். இப்படிப் போவதுதான் உயிரியல், வாழ்வியல், தமிழ் ஒன்றே பொதுமொழியானாலும் மற்ற மொழிகளானாலும் பிற மொழியினத்தவர்களின் நிலை இப்படித்தான் இருக்கும். வேலை வாய்ப்பை எங்கும் தரும் இந்திப் பட்டதாரி ஆவதையே எல்லோரும் விரும்புவர். தமிழில் சொல்லிக் கொடுக்கும் பொறியியல், கலையியல், மருத்துவ இயல் எல்லாம் அணிலாடு முன்றில் போல மாணவர் தொகையின்றி எடுபட்டுவிடும். தமிழிற்கு ஆள் வரவில்லையே, மாணவர்களும் பெற்றோர்களும் விரும்பவில்லையே, தமிழ்ப்பற்று இல்லையே என்று இன்றுபோல் அரசு ஒப்பாரி வைக்கும் நிலை வரும் என்று மாணிக்கனார் கூறியது இன்று உண்மையாகிவிட்டது.

    மக்களின் மொழிச்சிந்தனை

    இந்தி ஒன்றே பொதுமொழி, தென்னக மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமும் இணை மொழியாக இருக்கும் என்பது அரசின் நிலை. ஆனால் மக்களோ எப்படியும் சட்டப்படி ஒருநாள் இந்தி பொதுமொழியாகிவிடும். அதற்குண்டான நடவடிக்கைகளை நடுவணரசும் செய்து கொண்டிருக்கிறது என்பதால் நாள் தள்ளிப் படிப்பதை விட இப்போதே படிக்க முந்திக்கொண்டு விடுவோமே என்று படிக்கத் தொடங்கிவிடுவர். குழந்தைகளையும் படிக்கச் செய்வர். ஆங்கிலம் அகலும்போது அவ்விடத்தை இந்தி கைப்பற்றுமாதலின் என்றும் மாநில மொழிகள் வளராது. இவற்றுக்கு ஒருநாளும் விடுதலை இல்லை. இம்மொழிகளுக்கு தனி வளர்ச்சி என்பது இல்லை. என்று தொலைநோக்குப் பார்வையுடன் எழுதிய வ.சுப.மாணிக்கணாரின் கருத்துக்கள் இன்று எந்த அளவு மெய்யாகி இருக்கின்றன என்பதை நாம் உணரலாம். இந்தியை எதிர்த்துப் போராட்டம் நடத்திய தமிழ் மக்களே இன்று சி.பி.எஸ்.சி. பள்ளிகளில் சேர்க்கப் பாடுபடுகின்றனர். சமச்சீர் பாடத்திட்டத்தால் பதின்மப் பள்ளிகள் (மெட்ரிகுலேசன்), ஆங்கிலோ – இந்தியப் பள்ளிகள், ஓரியண்டல் பாடத்திட்டப் பள்ளிகள் போன்றவற்றின் பாடத்திட்டங்கள் ஒழியும் என்பதால் பதின்மப் பள்ளிகளைத் திறக்கலானார்கள், இது மட்டுமல்லாமல் இன்று தமிழகத்தின் பன்னாட்டுப் பாடத்திட்டப் பள்ளிகளும் பெருமளவில் முளைக்கத் தொடங்கியுள்ளன. இதற்கு மக்களின் வரவேற்பும் மிகுதியாக உள்ளது. இப்பள்ளிகளில் படித்து முடித்தவுடன் தங்களின் பிள்ளைகளை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்துவிடலாம் என்ற

     

    எண்ணம் பெற்றவர்களுக்கு உருவாகிவிட்டது. இப்படி வளரும் குழந்தைகளுக்கு எப்படித் தாய் நாட்டுப்பற்று வளரும்? `தாய்மொழிப் பற்றே தாய் நாட்டுப் பற்றை உருவாக்கும்’ என்று தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்கள் சொன்னதை நாம் நினைவுகூற வேண்டாமா? நாட்டுப்பற்று இல்லாத நாடு பிற நாட்டினரின் கையில் எளிமையாக அடிமையாகிவிடும் என்ற வரலாறு சொல்லிக் கொடுத்த பாடத்தை நாம் மறக்கக்கூடாது.

    தென்னாட்டு வடநாட்டுத் தலைவர்களின் மொழிச்சிந்தனை

           நாட்டுப்பற்றில் ஓருணர்வு கொண்ட நம் தலைவர்கள் மொழிப்பற்றில் ஈருணர்வு கொண்டவர்களாக விளங்குகின்றனர் என்பதாக வ.சுப.மாணிக்கனார் கூறுகின்றார். இந்தி மக்களும் இந்தித் தலைவர்களும் தங்களுடைய மொழிப்பற்றில் எந்தவித வேறுபாடுமின்றி உள்ளனர். வடநாட்டைச் சார்ந்த தலைவர்கள் இந்தி மக்களின் தலைவராகக் கருதிப் பேசுகின்றனரேயன்றி, இந்திய மக்களின் தலைவராகக் கருதிக் கருத்துக்களை தெரிவிப்பது இல்லை என்பதை ஜவகர்லால் நேரு, வினோபாபாவே, மாவ்லங்கர் போன்ற தலைவர்களின் கூற்றினை ஆராய்ந்து இந்நூலில் தெளிவுறுத்துகின்றார். சென்னைப் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் இலக்குமணசாமி முதலியார் 1951 இல் பாராள்மன்றத்தின் அவை நாயகராக இருந்த திரு மாவ்லங்கருக்கு ஒரு நற்கடிதம் எழுதினார். ஐ.நா. அவையில் ஒரே சமயத்துப் பன்மொழி நடப்புக்களை மொழிபெயர்க்கும் கருவிகள் உள எனவும் அக்கருவிகளை நம் மன்றத்திலும் வைத்துக் கொள்ளலாம் இதற்கு மூன்று இலட்ச ரூபாய் இருந்தாற் போதும், சபையின் நடப்புக்கள் உறுப்பினர் எல்லாருக்கும் புரியும் என்று எழுதினார். இதற்குத் தலைவர் மாவ்லங்கர் `இவ்விதம் செய்தால் இந்தி பரவுமா, பரப்ப உதவியாகுமா?’ என்று விடைகூறினார் என்பதை எடுத்துரைக்கும் மாணிக்கனார் வடநாட்டுத் தலைவர்கள் இந்தியத் தலைவர்களாக இல்லாமல் வெறும் இந்தித் தலைவர்களாகவே இருக்கின்றனர் என்பதற்கு சான்று பகர்வதாக அமைகின்றது.

    தென்னாட்டுத் தலைவர்களோ தென்னாட்டு மக்களின் மொழியுணர்வோடு கலக்காமல் பேசுகின்றனர். தென்னாட்டு மக்களின் மொழியுணர்வை வளர்க்காமலும் இந்தி மொழிக்கு ஒப்ப விடுதலை செய்து வளர்க்கும் அன்புத் துணிவு இல்லாமலும் இருக்கின்றனர். இவர்கள் தம் மொழிகளுக்குத் தலைமையுரிமை கொடாமல் நாட்டொருமை சுட்டியும், ஆட்சியெளிமை சுட்டியும் வேலைவாய்ப்புச் சுட்டியும் இன்னொரு மொழிக்கே எக்காலத்தும் தலைமை வழங்கும் அறியாமை தென்னாட்டுத் தலைவர்களிடம் வளர்ந்தோங்கிவிட்டது என்று சாடுகின்றார். மேலும் இந்தித்திணிப்பு என்றபொழுது நாம் அதிலிருந்து தற்காத்துக் கொள்ள ஆங்கிலத்தை நாமே திணித்துக் கொள்கின்றோம். ஆங்கிலம் என்றால் இமயம் முதற்  குமரி வரை ஆங்கிலமே இருக்க வேண்டும். தாய்மொழிகள் என்றால் அவரவர் தாய்மொழிகளே இடம்பிடிக்க வேண்டும் என்ற சமநிலைக் கருத்தினை வ.சுப.மாணிக்கனார் முன்மொழிகின்றார்.

     

    மொழியுரிமைச் சிந்தனை

    மக்களுரிமைகளுள் தலை சிறந்த உரிமையாகக் கருதப்படுவது மொழியுரிமையே ஆகும். நாடு சீராக இயங்க வேண்டுமானால் அடிப்படை உரிமைகளுள் கை வைக்கக்கூடாது. உரிமையில் கைவைப்பது உயிரிற் கை வைப்பதற்கு ஒப்பாகும் மக்களுரிமையினைக் காப்பாற்றுவதே ஓர் நல்லரசிற்கான இலக்கணமாகும். உரிமைகளை மேடைப் பொருளாகவோ தேர்தற் பொருளாகவோ, கட்சிப் பொருளாகவோ வாக்கெடுப்புப் பொருளாகவோ மக்களுரிமையை நிறுத்தக் கூடாது. மாறக்கூடிய மதவுரிமை, கட்சியுரிமைகளிலும் மாற இயலா தாய்மொழி உரிமை தலையானது. அதுவே பிறப்புரிமை என்று மொழியுரிமைக்கான முதன்மைத்துவத்தை இந்நூலின் பல இடங்களில் வலியுறுத்திச் செல்வதைக் காணலாம்.

    ஆங்கிலேயர்கள் இந்நாட்டை விட்டகன்ற பின்னர் நம்மவர்கள் ஆட்சியில் தலைமையிடம் பெற்றனர். கல்வித்துறையிலும் பிற துறைகளிலும் தலைமையிடத்தை அடைந்தனர். தாங்கள் தலைமை பெற்றது போலத் தங்கள் மொழிகளும் தலைமையிடம் பெற வேண்டும் என்று சிந்திக்காமல் விடுத்தனர். விடுதலைக்கு முன் இருந்த துணிவும் தியாகமும் விடுதலைக்குப்பின் இல்லை என்றே கூறலாம். நாட்டுக்கு உரிமை பெற்ற நாமே நம் மொழிகளை அடிமைப்படுத்தி வைத்துக் கொண்டோம். அதனால் உரிமைப்பெற்றதன் முழுப்பயனை நுகரமுடியாமல் வளர்ச்சிகளைச் சிந்தனை செய்யாமல் இடையூறுகளையே சிந்தனை செய்துகொண்டிருக்கின்றோம்.

    நம் நாட்டு மொழிகளையெல்லாம் நம்பிக்கையோடு துணிவாக உயர்த்தி மொழிப்புரட்சி செய்துவிட்டோமானால் கங்கை, காவிரி பாய்ந்த நிலம் போல வளம் பல பெருக காணலாம். இதனால் உடல் நலம் பெருகும், கல்வித்தெளிவு உண்டாகும், அறிவுப் புரட்சி ஏற்படும், எண்ணவீறு செறியும், இனிய உறவு தழைக்கும், ஒற்றுமையுரன் கூடும், உள்ளம் உயரும், நோபல் பரிசு வாங்கும் பல்லுயிர்கள் பிறக்கும் நிலை உருவாகும் என்பதை மாணிக்கனார் தன் உள்ளத்தெளிவுடன் கூறுகிறார்.

    ஆங்கிலப் பயன்பாட்டளவு

           நம் தாய்மொழிகள் பல துறையில் ஆழ்ந்து அகன்று ஆக்கம் கூறுவதற்கு ஆங்கிலத்தைத் தவிர வேறு துணையில்லை. ஆங்கில மொழியின் உலக மதிப்பையும் இந்திய உறவையும் நாம் புறக்கணித்துப் பேசுவது தற்கொலைக்கு ஒப்பாகும். ஆங்கிலமே ஞாலத்திற்கும் இந்தியாவிற்கும் ஒரு நூற்றாண்டிற்கு மேல் அறிவுப் பாலமாக இருந்து வருகின்றது. தற்கால நிலைமைக்கு நம் மொழிகள் 20 விழுக்காடு கூட வளராத நிலையில் நம் மொழிவளர்ச்சிக்கு நாம் ஆங்கிலத்தையே சிக்கென பிடித்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு பயன்படுத்திக்கொள்ள வேண்டிய ஆங்கிலத்திற்கு பதவிநிலை கொடாது உதவிநிலை பெறும் முறையே சிறந்ததாகும். ஆங்கிலத் தேவைக்கு சட்டம் இயற்றத் தேவையில்லை. பொதுமொழிப் பதவிநிலை வேண்டியதில்லை. ஆங்கிலத்திற்குச் சிறப்பு அதன் பதவியைப்

    பொறுத்தது அன்று அறிவு வளர்ச்சிக்குச் செய்யும் உதவியைப் பொறுத்ததாகும். ஆற்றலற்ற ஆற்றல் சேரவேண்டும் என்று நினைக்கின்ற ஒன்றுக்குத்தான் பதவியளிக்க வேண்டும். நம் நாட்டு மொழிகள் தற்கால வளர்ச்சி பெறவில்லை. பெறும்படி செய்வதற்கு ஆட்சிப்பீடத்தில் தூக்கி வைக்க வேண்டும் என்று நம் இந்திய மொழிகளையும் ஆங்கிலத்தையும் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நுட்பத்தினை இந்நூலின் ஏழாவது கடிதத்தில் கூறிச்செல்கின்றார்.

    மொழிச்சிக்கலுக்கான தீர்வுச்சிந்தனை

    பாரதப் பங்கு எல்லா மொழிகளுக்கும் இருக்குமாறு, பாரதப் பற்று எல்லா மொழி மக்களுக்கும் பிறக்குமாறு, பாரத எண்ணம் எல்லா மொழி நிலத்தும் படியுமாறு பாராள்மன்றம் பதினான்கு மொழி (அட்டவணை மொழி 22) மன்றமாக ஆங்கிலத்தையும் பல்லாண்டு தழுவிப் பதினைந்து மொழி மன்றமாக இயங்க வேண்டும் என்பதுவே மாணிக்கனாரின் எதிர்பார்ப்பாகும். மேலும் பன்மொழி வைப்பு பல குழப்பத்தைத் தரும் என்று கூறுவதை விடுத்து ஒருமொழி வைப்பால் ஏற்படும் ஒற்றுமைக் குழப்பத்தை சிந்திக்க வேண்டும். ஒருமொழி வைப்பால் ஏற்படும் ஒற்றுமைச் சிக்கலை விட பன்மொழி வைப்பால் ஏற்படும் நிர்வாகச் சிக்கல் பெரிது இல்லை. என்று கூறிப் பன்மொழி வைப்பால் ஏற்படும் நிர்வாகச் சிக்கலுக்கு வழிமுறைகளையும் கூறுகிறார். அவை

    1. பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தாய்மொழியிலேயே பேசவேண்டும். அவர்கள் கற்ற, சிந்தித்த மொழியிலேயே தங்கள் எண்ணங்களைப் புலப்படுத்த வேண்டும் என்று மொழியுரிமை வழங்குதலே குடியரசு முறை, அவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் தத்தம் தாய்மொழியில் பேசும் பேச்சுக்களை மொழிபெயர்ப்புக் கருவி அமைத்தும் மொழிபெயர்ப்புச் சிறுதுறை அமைத்து மொழிபெயர்ப்பாளர்களை நியமித்தும் பாராளுமன்ற நடவடிக்கைகளை நடத்த வேண்டும்.
    2. பன்மொழி வைப்பு நம் நாட்டிற்கு எளிது; ஏற்றது; ஏன்? ஒவ்வொரு மொழிக்கும் தனிநிலம், தனிமக்கள், தனி வளர்ச்சியுண்டு. மத்திய அரசுக்கோ பாராள் மன்றத்துக்கோ வேண்டிய மொழி நடவடிக்கைகளையும் அச்சுக்களையும் பதிப்புகளையும் மாநிலங்களிடம் ஒப்படைத்துவிடலாம். இவை பற்றிய செலவினங்களை மாநிலங்கள் ஏற்றுக் கொள்ளும். மத்திய அரசுக்குப் பெருகும் மொழிச்செலவு இராது. ஒரு மொழிச் சார்வு என்ற மாசும் வராது. மாநில ஆட்சி முழுவதும் வட்டார மொழிகளில் நடக்கும் போது அப்படியே அம்மொழிகளை மத்திய ஆட்சி மொழிகளாகவும் தழுவிக் கொள்வது தானே படிமுறை? அதனால் மேலும் எளிமைக்கும் சிக்கனத்துக்கும் இடமுண்டல்லவா? மத்திய ஆட்சி என்பது தனியாட்சியன்று, மாநில அரசுகளின் கூட்டாட்சி, பாரதம் என ஒரு தனிநிலம் இல்லை. மாநிலங்கள் கூடிய பரப்பே பாரதம். பாரதமொழி என ஒன்று இல்லை, ஒன்றை உருவாக்குவதும் உருப்படியாகப்

     

    போவதில்லை. மாநில மொழிகளே பாரத மொழிகளாகும். இங்ஙனம் சிந்திப்பதே இயற்கை சிந்திப்பு, ஆதலின் வீட்டுமொழி, வட்டாரமொழி, பாரதமொழி என்று மொழிப்பிரிவினை செய்யாது முத்தன்மையும் எல்லா மொழிகளுக்கும் கிடைக்குமாறு மொழியுரிமை அளிப்பதே குடியரசு முறையாகும்.

    1. அஞ்சலகம், வருமான வரியகம், உயிர்க்காப்பகம், புகைவண்டி நிலையம், வானொலி நிலையம் முதலான பல பொதுத்துறைகளுள் ஒவ்வொரு மாநிலத்துக்கும் உள்ளன அல்லவா? இம்மத்தியத் துறைகளில் மாநில மொழிகள் ஆட்சி செய்ய வேண்டும்.
    2. வானொலியை மாநிலங்களின் மொழிகளை பண்பாட்டினைக் காக்கும் சாதனமாக பயன்படுத்த வேண்டும். (அக்காலத்தில் தொலைக்காட்சி இல்லை) ஆனால் திரைப்படம் இருந்தது. ஆகையால் திரைப்படத்தினை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற அறிவுரை கூறுகிறார். திரைப்படம் என்பது குழந்தை, பெண்டிர் முதலான எல்லா நிலையினர்க்கும் வாழைப்பழத்தில் ஊசிபோல எளிதில் மொழியுணர்ச்சி ஊட்டும் வழியாகும். இப்படங்களில் மாநில மொழிகளின் இடங்களை இந்தியும் ஆங்கிலமும் பறித்துக் கொள்கின்றன. இது குடியரசு முறையன்று இயல்பான தாய்மொழி உணர்ச்சிக்கும் பெருந்தடையாகும். தமிழ் நாட்டில் காட்டப்படும் ஒவ்வொரு செய்திப் படத்திலும் தமிழ் வாசகங்கள் திரையில் இடம்பெற வேண்டும். ஏனை மாநில மொழிகளும் அவ்வவ்நிலத்து இடம்பெற வேண்டும்.
    3. இந்திய நாடு பன்மொழி நாடாதலின் அப்பன்மொழியும் நிகரான வளம் பெற்று வாழ வேண்டும் என்பது நம் விழைவாதலின் செய்ய வேண்டுவது என்ன? ஒவ்வொரு மாநிலத்தும் இந்தி என்னும் ஒரு மொழி மட்டுமின்றிப் பன்மொழி பரவுதற்கு அடிகோல வேண்டும். பன்மொழி நிலையங்கள், பன்மொழி பெயர்ப்பாளர்கள் பன்மொழிச் சிறு நூல்கள் எல்லாம் நகரங்கள் தோறும் பேரூர்கள் தோறும் பரவ வழி காணவேண்டும். பன்மொழிக் காற்று இமய முதற் குமரி வரை நாலாறு திசையிலும் வீச வேண்டும். இக்காற்று வீசினால், நம் பாராள் மன்றம் நாலைந்து மொழியளவில் இயங்கும் மன்றமாக விளங்கக் காண்பீர்கள். மத்திய அலுவலர்கள் சில முக்கிய மொழிகளைக் கற்றிருத்தல் காண்பீர்கள். குடியரசு என்னும் கோடாச் செல்வி இந்திய கோல் ஏந்தி இனிய நடை பயின்று எங்கும் உலாவி வரக்காண்பீர்கள்.
    4. மத்திய அலுவலகங்கட்கும் மாநில அலுவலகங்கட்கும் இந்தியப் பொதுமக்கள் எத்திசையிலிருந்து எம்மொழியிற் கடிதம் எழுதினாலும் எழுதிய மொழியிலேயே பதில் பெற வேண்டும்.
      7. பன்மொழி ஆட்சிமொழிகளாக உள்ள சுவிட்சர்லாந்து, அயர்லாந்து, பின்லாந்து, கனடா, யூகோசுலேவியா, இரசியா, மலேசியா முதலான நாடுகளுக்கும் ஐக்கிய நாட்டவைக்கும் மொழிக்குழுக்களை அனுப்பி ஆட்சி நடைமுறைகளைப் பார்த்து வரச்செய்ய வேண்டும்.

    என்பனவாகப் பல முத்தாய்ப்பான கருத்துக்களைக் கூறும் வ.சுப.மாணிக்கனார் தனது 24வது கடிதத்தில், தான் நூல் முழுவதும் கூறிய மொழிபற்றிய கருத்துக்களைத் தொகுத்து ஒரு வரிச்செய்தியாக கருத்துத் தெளிவுடன் படிப்போர் யாவரும் எளிமையாகப் புரிந்து கொள்ளும் வகையில் 12 கருத்துக்களாகக் கூறியுள்ளார்.

    1. இந்தி ஒன்றே பொதுமொழியாதல் கூடாது.
    2. இந்தி ஆங்கிலம் என்ற இரட்டையாட்சி கூடாது.
    3. மத்திய அரசுக்கு ஒருமொழிச் சார்பு கூடாது.
    4. ஆங்கிலம் கல்வித்திட்டத்தில் பேரிடம் பெறுக.
    5. பதினான்கும் (அட்டவணை மொழிகள் 22) பாரதப் பொதுமொழிகள் ஆகுக.
    6. பதினான்கும் (அட்டவணை மொழிகள்22) பாராள்மன்ற மொழிகள் ஆகுக.
    7. பதினான்கும் (அட்டவணை மொழிகள்22) பாரதப் பணித்தேர்வு மொழிகள் ஆகுக.
    8. தாய் மொழியைத் தன்னிறைவாக்குக.
    9. நம்மொழிகள் உயர்கல்வி மொழியாக ஆண்டு குறிக்க.
    10. பன்மொழியறிவை நாட்டிற் பரப்புமின்.
    11. பங்கு நல்கிப் பற்று வளர்மின்.
    12. வன்முறை என்னும் சின்முறை ஒழிமின்.

    என்று மாணிக்கனார் அரசுக்குக் கூறும் அறவுரை மொழிகள் இக்காலக்கட்டத்திற்கும் பொருந்தும் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை. இன்று உயிர்ப்புடன் பலத்த உத்வேகத்துடன் செயல்படுத்திக் கொண்டிருக்கும் நடுவணரசின் மொழிப்பரப்புத் திட்டம் என்ற ஆலமரத்தின்கீழ் மாழில மொழிகள் என்ற சிறு செடிகள் வளர முடியாது என்பது தெளிவாகத் தெரிகிறது. இன்று மாநில அரசுகள் தங்களது மாநில ஆட்சிமொழித் திட்டத்தில் மட்டுமல்லாமல் கல்வித் திட்டத்திலும் தோல்வியடைவதற்கு ஆங்கில மோகம் என்பதோடு இந்தியின் வல்லாதிக்கமும் ஒரு காரணமாக அமைந்துள்ளது. நடுவணரசு படிப்பில் சலுகைகள் தந்தும் வேலையில் சலுகைகள் தந்தும் புகட்டப்படும் கல்வியே வெற்றிபெறும். தமிழ் படித்தால் தமிழில் படித்தால் தமிழ் நாட்டளவில் மட்டுமே வேலை வாய்ப்பு; ஆனால் இந்தியில் படித்தால் இந்தியா முழுவதும் வேலை வாய்ப்பு; ஆங்கிலம் படித்தால் உலகம் முழுவதும் வேலை வாய்ப்பு பெறலாம் என்ற நிலையில் தமிழ் படிப்பதற்கும் தமிழில் படிப்பதற்கும் யார் முன் வருவார்கள்? இந்நிலை தமிழகத்திற்கு மட்டுமல்ல அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும். எனவே இத்தகைய நிலையிலிருந்து இந்தியாவில் வதியும் தேசிய மொழிகளைக் காக்க அட்டவணை மொழிகள் அனைத்தையும் ஆட்சி மொழிகளாக்கும் திட்டம் வகுத்து செயல்படுத்த  வேண்டும். அப்பொழுதுதான் இந்தியா, மொழிச்சிக்கல் இல்லாத உண்மையான குடியரசு நாடாகத் தோற்றம் தரும்.

    நிறைவாக

    மனிதனின் நாகரிக வளர்ச்சிக்கும் பண்பாட்டு அயர்ச்சிக்கும் அவனிடம் தோன்றும் சிந்தனை இன்றியமையாத்து ஆகும். அச்சிந்தனை செயற்பாட்டிற்கும் பரவுவதற்கும் மொழி மிகவும் இன்றியமையாதது ஆகும். அப்படிப்பட்ட மொழியைப் பயன்படுத்துவதற்கு அரசிடம் சிக்கல் தோன்றுமானால் அங்கு தெளிந்த அறிவு வளர்ச்சிக்கு இடம் இல்லாமல் போய்விடும் என்பதை உணர்ந்து மொழிச்சிக்கல் அறிவுக்குத் தடை, நாட்டன்புக்குத் தடை என்று கூறி இந்திய மொழிச்சிக்கலுக்குத் தீர்வினை வழங்கியவர்தான் மூதறிஞர் வ.சுப.மாணிக்கனார் ஆவார். அவரின் மொழிக்கொள்கைகளை இந்திய அரசு ஏற்றுக் கொண்டிருந்தால் மொழிச்சிக்கல் என்ற தொல்லை என்றோ ஒழிந்து பிரிவினைக் கொள்கை அழிந்து அடிமையுணர்வு அகன்று நாம் இந்தியர் என்று மெய்யாக மார்தட்டிக் கொள்ளும் நிலை பிறந்திருக்கும். ஆனால் இன்றோ நாம் இந்தியர் என்ற உணர்வு திரைப்படத்தின் மூலமாகவும், மட்டப்பந்து விளையாட்டின் மூலமாகவும் பள்ளிப்பாடத்திட்டத்தின் மூலமாகவும் விளம்புகை செய்வதின் மூலமாக மட்டுமே மேலோங்கி உள்ளது. இதை விடுத்து ஒரு மாணவன் இந்த மாயையிலிருந்து விடுபட்டு ஆராயும்போது சிந்திக்கும்போது இவையெல்லாம் உடைபட்ட பொம்மையின் விரிசல் தெரியாமல் இருக்க பூசப்பட்ட மேல்பூச்சு என்ற குட்டு மண் பொம்மை உடைவது போல உடைபட்டுப் போகின்றது. இந்நிலையில் நாம் ஒன்றை முழுமையாக நம்பி அதன்வழி நடந்து அதுவே தன் வாழ்க்கையாக எண்ணி நடந்து வருபவர்க்கு தான் நம்பியது பொய் என்ற உண்மை தெரியும் இடத்தில் எந்த அளவிற்கு மன வலியும் நெருடலும் தோன்றுமோ அந்த நிலை ஏற்படுகிறது. முன்பு தமிழகத்தில் மட்டும் காணப்பட்ட இந்தித்திணிப்பு எதிப்புப் போராட்டம் இன்று இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் பரவியிருப்பதை நம்மால் காணமுடிகின்றது. எனவே மொழியுணர்வாளர்களை தேசத்துரோகிகள் என்று முத்திரை குத்துவது இந்திய ஒற்றுமைக்குக் குந்தகம் விளைவிக்கும் சதிச்செயல் என்பதை உணர்ந்து, மொழியறிஞர்களின் சிந்தனைகளை மதித்து செயலாக்கி இந்திய அரசாங்கம் இந்திய மொழிச்சிக்கலைத் தீர்த்து தேசிய இனங்களின் வளர்ச்சிக்குப் பாடுபட வேண்டும். இது இன்று கூர்மையாகிக் கொண்டிருக்கும் மொழிச்சிக்கல் எதிர்காலத்தில் பெரிய மொழிப்போராக வெடிக்காமல் இருப்பதற்கான வழியாகும் என்பதை புரிந்து செயல்படவேண்டும்.

    ——————————————-

     

    துணைநூற் பட்டியல்

    1. வ.சுப. மாணிக்கம் – இந்திய ஆட்சிமொழி – சாரதா பதிப்பகம் – சென்னை.
    2. செ. செந்தில் பிரகாஷ் – மொழிப்போர் வரலாற்றில் தமிழகம் – முனைவர் பட்ட ஆய்வேடு – தமிழ்ப்பல்கலைக்கழகம் – தஞ்சாவூர்.
    3. அ. இராமசாமி – என்று முடியும் இந்த மொழிப்போர்? – செம்புலம் பதிப்பகம் – மதுரை.
    4. த. சுந்தரராசன் – தமிழ் ஆட்சிமொழி – மணிவாசகர் பதிப்பகம் – சென்னை.
    5. 02.2000 – தினகரன் வசந்தம் இதழ், ப.20.

     

     

     

    Share