ஆரிய திராவிடக் கருத்துருவாக்கம்

0

ஆரிய திராவிடக் கருத்துருவாக்கம்

 பிரதீப் குமார்.பி., முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, அரசுக் கல்லூரி, சித்தூர், பாலக்காடு,கேரளம்.

 “ஆரியப் படையெடுப்பு” பற்றிய கோட்பாடுகள், வேறு பல அறிஞர்களால் மறுத்துரைக்கப் பட்டன. உண்மையில் ஆரியர்களின் படையெடுப்பு என்று கூறுவதை விட, “ஆரியமயமாக்கல்” என்ற சொல்லைப் பயனாக்கம் செய்வதே இங்கு பொருத்தமானது. அனேகமாக, வெள்ளை நிறவெறிக் கொள்கைகளை ஆதரிக்கும் சரித்திர ஆசிரியர்கள் தான், “ஆரியர் படையெடுப்பு” என்ற கோட்பாட்டை உருவாக்கி பரப்பி வந்திருக்க வேண்டும். தங்களின் ஆளுமை குணாதிசியத்தை வெளிப்படுத்தும் விதமாக இவ்விதமான கற்பிதங்களை அவர்கள் உருவாக்கியிருந்தனர்.

தொடக்கத்தில், வேதகால இந்தியச் சமூகத்தில், இந் நிலைகள் ஒருவருடைய குணம், நடத்தை, இயல்பு போன்றவற்றால் அடையப்படுவதாக இருந்திருக்கிறது. ஒருவர் அல்லது ஒரு குழுவினர் ஒரு பிரிவில் இருந்து இன்னொரு பிரிவுக்கு உயர்த்தப்படுவதும், தாழ்த்தப்படுவதும் நடைமுறையில் இருந்ததாகத் தெரிகிறது. காலப்போக்கில், இந் நிலை மரபுவழியாக அடையப்படும் ஒன்றாக மாறிவிட்டது. தற்காலத்தில் இவ் வருணமுறை கடைப்பிடிக்கப்படுவது இல்லை ஆயினும், பிராமணர்களாகத் தங்களைக் கருதிக் கொள்பவர்கள், பல்வேறு தகுதி நிலைகளிலும் உள்ள பல்வேறு சாதிப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.தமிழகத்தில் ஐயர், ஐயங்கார் என இரு பிரிவுகளில் பல உட்பிரிவுகளாக உள்ளனர். சமூகநீதி இயக்கங்கள் வலுப்பெறும் வரை இவர்களது ஆளுமை அனைத்து அரசு, கல்வி மற்றும் வணிகத் துறைகளில் ஓங்கியிருந்தது.

இது தமிழ் இனம் கடந்து வந்த ஆரியத் தாக்குறவினால் என்பதை எளிதில் இனம் கண்டுவிடலாம். நூற்றாண்டு காலமாக இயங்கி வரும் சமூகவியல் ஊடாட்டங்கள் தமிழ் மற்றும் ஆரிய இனங்களில் செயல்படுத்திவரும் புதியதான மெய்மைகள் அவ்வினத்தின் அடையாளங்களில் கலந்துவிடுவதை தடுக்க இயலாமல் செய்துவிடுகிறது.

“இந்தியாவில் ஆரியர்களின் வருகைக்கு முன்பிருந்த திராவிடர்கள் ஆரியர்களைவிட வளர்ச்சியடைந்த நிலையில் இருந்தார்கள். இவர்கள் ஆரியர்களை எதிர்த்து விடாப்படியாகப் போராடி, இறுதியில் தோற்கடிக்கப்பட்டார்கள். தோற்கடிக்கப்பட்ட திராவிடர்கள் ஆரியமானார்கள். ஆனால் அவர்களுடைய மொழியின் அடிப்படை அமைப்பை மட்டும் பாதுகாத்துக் கொண்டார்கள். நிகழ்காலத்து தென்னிந்தியர்கள் தமது பண்பாட்டில் ஆரியனிஸம் முழுவதையும் ஜீரணித்துக் கொண்டிருக்கிறார்கள்.” ( எஸ்.ஏ.டாங்கே, பண்டைக்கால இந்தியா, ப.38)

 ஆரிய மேலாண்மையும் திராவிட அரசியல் கோட்பாடும் :

                “அரசுக் கோட்பாடு என்பது அரசு எனும் பொறியின் இயங்கு முறை, அதிகாரப்படிநிலை, சமூகம் குறித்த மதிப்பீடு, தனிமனித உரிமைகள் குறித்த பார்வை அரசுத் தலைமைக்குத் தேவையான இயல்புகள் ஆகியவற்றைக் கொண்டதாகும் ” (ம.செந்தமிழன், ஆரிய மேலாண்மையின் அரசுக் கோட்பாடு). இந்திய நிலப்பரப்பில் அரசுகள் உருவான வரலாற்றில், ஆரியப் பார்ப்பனியத்தின் மேலாதிக்கமே பெரும் பங்கு வகித்தது. அரசு உருவாக்கம் என்பது, நிலவுடைமையின் தீவிர வளர்ச்சியின் விளைவாகும். நிலம் உள்ளிட்ட இயற்கை வளங்களை ‘உடைமை’ ஆக்குதல் எனும் கருத்தியல் ஆரியர்களது அரசியல் தலையீட்டுக்குப் பிறகே தீவிரமடைந்தது.

தமிழர்கள் இனக்குழு வாழ்க்கை முறையை மேற்கொண்டு, கூட்டு உழைப்பு, கூட்டுப் பகிர்வு எனும் பேரளவு சமத்துவ சமூகத்தைக் கட்டமைத்து வாழ்ந்தனர். இச்சமூகத்தில், இனக்குழு தலைவருக்கும் மக்களுக்குமான இடைவெளி மிகவும் குறைவு. ‘உடைமையாக்கல்’ இல்லாததால் – குறிப்பிட்ட இனக்குழு சமூகங்களுக்குள் வர்க்க ஏற்றத் தாழ்வுகள் இல்லை. சாதிகளே இல்லாத சமூகங்கள் அவை. ஆகவே, சாதியப் பாகுபாடு குறித்த பேச்சுக்கே இடமில்லை. தொழில் அடிப்படையிலான வேலைப் பிரிவினை மட்டுமே இருந்தன. ஒரு தொழில் செய்வோர், பிற தொழில் செய்யத் தடை ஏதும் இல்லை. பிறப்பின் அடிப்படையில் தொழில் பிரிவினையும் வகுக்கப்படவில்லை. சாதியத்தின் மூலம், பிறப்பை அடிப்டையாகக் கொண்டது. ஆகவே, தமிழர் இனக்குழு நாகரிகத்தில் சாதிகள் இல்லை.

தமிழரது நாகரிகம் ஆரியர்களின் சுரண்டல் கோட்பாடுகளுக்குப் பெரும் தடையாக இருந்தது. அனைத்தையும் உடைமைகளாக்கி, சுரண்டிக் கொழுக்கும் வெறி பிடித்த ஆரியர்கள், நிலத்தை உடைமையாக்குவதைத் தீவிரப்படுத்தினர். ‘அரசு’ எனும் அமைப்பு அதன் இயல்பிலேயே ஒடுக்குமுறையின் வடிவமாக உள்ளது. அதிகாரக்குவிப்பு, மூலதனக்குவிப்பு இவ்விரண்டும் அரசின் அடிப்படைகள். இவை தான் அரசின் கட்டமைப்பைத் தாங்கி நிற்கின்றன.

இனக்குழுக்கள் இவற்றிற்கு நேர் எதிரானவை. அதிகாரம் – உழைப்புப் பங்களிப்பின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்படும். அவ்வதிகாரமும் நிலையானதல்ல. மூலதனம் எந்த இடத்திலும் குவிக்கப்படுவதில்லை. ஏனெனில், கூட்டு உழைப்பு – கூட்டுப் பகிர்வு என்பதே இனக்குழுவின் பொருளியல் அடிப்படை . தமிழரின் இத்தகைய சமத்துவ வாழ்வு, ஆரியருக்குப் பெரும் சவாலாகவும், அவர்களின் ஆதிக்க வெறிக்கு இடையூறாகவும் இருந்தது. இந்தப் பின்புலத்திலிருந்து தான் ‘இந்தியாவில் அரசு’ உருவானது. இந்திய நிலப்பரப்பில் அரசு உருவாக்கம் என்பது, ஆரியர் தமிழரை வெற்றி கொண்ட வரலாற்றுடன் தொடர்புடையதாகும்.

ஆரியப் பார்ப்பன நலன்களுக்கான அரசை உருவாக்குவதில், ருக் வேதம், மனுதர்மம், அர்த்த சாஸ்திரம் ஆகிய நூல்கள் பெரும் பங்காற்றியுள்ளன.

ருக் வேதம், சிந்து வெளித் தமிழர் நாகரிகத்தை ஆரியர் வெற்றி கொண்ட வரலாற்றுப் பதிவையும், தமிழரை வீழ்த்தி ஆரிய அரசுகள் அமைக்கப்பட்டவிதத்தையும் விளக்குகிறது.

மனுதர்மம், ஆரிய அரசுகள் அமையத் தொடங்கியப் பிறகு, அவ்வரசுகளின் சாதிய வர்க்க ஒடுக்குமுறைகளைப் பொது நியதிகளாக்கிய ஆவணமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

கௌடில்யரின் அர்த்த சாஸ்திரமோ, ஆரிய அரசின் ஒட்டு மொத்தக் கட்டமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதை மிக விரிவாக அறிவிக்கும் நூலாகும். சிறிய அரசுகள் எனும் நிலையைத் தாண்டி ‘ஆரியப் பேரரசுகள்’ அமைப்பதை வலியுறுத்தி அவற்றுகான வழி முறைகளை கற்பித்த நூல். இந்த நூலில் செயல்படுத்தபடும் கடமை அரசியல் இதுவரையிலான இந்திய இனவியலில் தனது முக்கியமான பங்களிப்பைச் செய்து வருகிறது. இது கூறும் அரசுக் கட்டமைப்பை நாம் இங்கு ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோமெனில் இது நன்கு விளங்கும்.

அரசனின் முதல் கடமை

அர்த்த சாஸ்திரத்தில் அரசனின் கடமை என்று முதல் முறையாகக் குறிப்பிட்டிருப்பன, ‘…மன்னன், மக்களில் எவரும் சுயதர்மத்தை மீறாமலிருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்’ (அர்த்த சாஸ்திரங்கள் எனும் சாஸ்திரங்களின் நீதி நூல், ஸ்ரீ ஆனந்த நாச்சியாரம்மா (மொ.), ப.12) என்பதாகும். மக்களது சுயதர்மம் என்று சாணக்கியன் குறிப்பிடுபவை.

வேதத்தை ஓதுதல், கற்பித்தல், யாகம் செய்தல், தானம் கொடுப்பது, தானம் வாங்குவது – பிராமணர் சுயதர்மம்.

வேதம் ஓதுவது, யாகம் செய்தல், தானம் கொடுப்பது, ஆயுதங்கள் செய்து கொள்வது, பிற உயிர்களைக் காப்பாற்றுவது – சத்ரியர் சுயதர்மம்.

வேதம் ஓதுவது, யாகம் செய்தல், தானம் கொடுப்பது, விவசாயம், கால்நடைப் பராமரிப்பு, வாணிபம் – வைசியர் சுயதர்மம்.

மேற்கண்ட மூன்று பிரிவினருக்கும் பணி செய்தல், விவசாயம், கால்நடைப் பராமரிப்பு, வாணிகம் செய்தல், மரம், கல், உலோகங்களாலான சிற்பங்களை வடித்தல், பாடல், நடனம் – சூத்திரர் சுயதர்மம்.

இந்த ‘சுயதர்மங்களைப் பாதுகாப்பதே அரசனது முதல் கடமை என்கிறான் சாணக்கியன். அரசு உருவாகும் போது, அதிகாரக் குவிப்பு – அரசனிடத்தும், மூலதனக்குவிப்பு – அரசன் மற்றும் வணிகத்திடத்தும் சென்றது. மூவகைக் குவிப்பிற்கு அடிப்படை பெருவாரி மக்களின் உற்பத்தித் திறனும் உழைப்பும் ஆகும். சூத்திரன் எனப்பட்ட பெருவாரி மக்களே – அறிவாளர்களாகவும், உற்பத்தி ஆற்றல் மிக்கவர்களாகவும் இருந்தனர்.

ஆகவே, இம்மக்களை உற்பத்தியில் ஈடுபடுத்தி அவர்களது உழைப்பைச் சுரண்டுவதே ஆரிய அரசுக் கோட்பாட்டின் மையக் கருத்து. இம்மக்கள் தமது அமைப்பு சுரண்டப்படுவதை எதிர்த்துப் போராடக் கூடாது என்பதற்காக, மிக மோசமான ஒடுக்குமுறைகள் இவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன. இவை அனைத்தும் அரசனது ‘கடமைகள்’ என்றாக்கப்பட்டன. சுருங்கக் கூறின், பெருவாரி அறிவாளர் உழைப்பாளரின் உற்பத்தித் திறனைச் சுரண்டி மூலதனக் குவிப்பை உருவாக்க வைசியர் எனும் வணிகப் பிரிவினரும், இம்மூலதனக் குவிப்பைப் பாதுகாக்கவும், புரட்சிகர நடவடிக்கைகளை ஒடுக்கவும் தேவையான அதிகாரக்குவிப்பு அரசனிடத்திலும் ஒப்படைக்கப் பட்டன. இந்த ‘ஒழுங்குகள்’ முறையாக நடக்கின்றனவா என மேற்பார்வையிட்டு ஆரியப் பார்ப்பன மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தும் நிலையில் பார்ப்பனர்கள் இருந்தனர். இதுவே ஆரியரது அரசுக் கோட்பாடு. இதற்கு பலியானவர்கள் ஆரியர்களால் அடக்குமுறைக்கு உள்ளான திராவிடர்கள். இது பிற்பாடு திராவிடர்களின் எல்லாவிதமான செயலாக்கங்களிலும் தென்பட்டு வருகின்றன.

இவை தவிர, புரோகிதர்களின் செல்வாக்கு குறித்து அர்த்த சாஸ்திரம் பின்வரும் விதியைக் கூறுகிறது. ‘மன்னன் புரோகிதனிடத்தில், தந்தையிடம் பிள்ளை போன்றும், எஜமானிடம் வேலையாள் போன்றும் பணிவுடன் அனுசரித்து நடக்க வேண்டும்’ என்பதே அது. (மேலது.) அரசன், பார்ப்பனர்களின் ஆலோசனைகளையும், கட்டளைகளையும் நிறைவேற்றுபவனாகவே வைக்கப்பட்டான். இதன் பொருள், அரசன் ஒன்றுமறியா அப்பாவி நிலையில் வைக்கப்பட்டான் என்பதல்ல!

அரசர்கள் மூலதனம் மற்றும் அதிகாரம் ஆகியவற்றின் அனைத்துப் பலன்களையும் அனுபவித்தனர். அதே வேளை, நிர்வாகம், நீதி உள்ளிட்ட பொறுப்புகளைப் பார்ப்பன மேலாதிக்கத்திடம் ஒப்படைத்தனர். உழைப்பு மற்றும் அறிவாற்றல் கொண்டு உற்பத்தியில் ஈடுபடும் பெருவாரி மக்கள் ஒரு முனையிலும், அரசன் மறுமுனையிலும் எதிரெதிர் துருவங்களில் நிறுத்தப்பட்டனர். இவ்விரு எதிர்வுகளின் இணைப்பாகவும் முரணாகவும் பார்ப்பனர்கள் செயல்பட்டனர். இதன் வழியே வர்க்க, சாதி ஏற்றத் தாழ்வுகள் பெருகத் தொடங்கின. உற்பத்தியில் ஈடுபட்ட உழைப்பாளர், அறிவாளர் மீது ஒடுக்குமுறைகள் பலவும் ஏவப்பட்டன.

 பண்பாடு மீதான ஆரியத் தாக்கமும் புதிய கோட்பாட்டு சாத்தியங்களும்

கிராமங்கள் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டன. அதோடு அங்கு செயல்படுத்த வேண்டிய வேலைகளின் பிரிவுகள் பற்றியும் அர்த்தசாஸ்திரம் விரிவாகப் பேசுகிறது. சுருங்கக் கூறின் உழைக்கும் மக்கள் மன்னரின் மேற்பார்வையில் பார்ப்பன ஆதிக்கத்திற்கு கீழானார்கள். அதோடு பண்பாடு சார்ந்த ஆதிக்கமும் அது சார்ந்த புதிய அணுகுமுறைகளின் மக்களின் வாழ்வில் இடம்பெறலாயின. “ உத்யானவனங்களோ இருக்கக்கூடாது. நடிகர்கள், நடனக் கலைஞர்கள், கதை சொல்பவர்கள், பாடகர்கள் முதலானோர் கிராமங்களில் விவசாய வேலைகளுக்கு இடையூறு விளைவிக்கக் கூடாது, கிராமங்கள், நடன, நாடகக் கலைஞர்கள் கூட வேண்டிய இடங்கள் அல்ல. அவர்கள் அனைவரும் தத்தமது நிலங்களில் வேலை பார்த்துக் கொண்டேயிருப்பதால் அவர்களும் மேன்மைக்கு வருவார்கள் கருவூலத்தில் செல்வமும் பெருகும் ” என அர்த்த சாஸ்திரத்தை மேற்கோள் காட்டி ம.செந்தமிழன், பண்பாட்டுக் கட்டமைப்பில் ஆரிய ஆளுமையை பதிவு செய்கிறார். (ம.செந்தமிழன், ஆரிய மேலாண்மையின் அரசுக் கோட்பாடு)

கலை மற்றும் கலைஞர்கள் மீதான அடக்குமுறைகள் எல்லா நிலைகளிலும் நிகழ்ந்துள்ளன. இது அவ்வினத்தின் மீதான ஒடுக்குமுறைகளையும், பண்பாட்டு அழிவினையும் குறிப்பிடுகிறது. விபசாரம் அரசால் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்பது ஆரியர் கோட்பாடு. அர்த்த சாஸ்திரம் இதையே பதிவு செய்துள்ளது.

விபசாரம், அரசால் அங்கீகரிக்கப்பட்ட ‘தொழில்’ ஆகும். இதற்கென வரி விதிக்கப்பட்டது. ‘கண்ணிகையரில், அவர்களின் அழகு, அலங்காரம் இவற்றையெல்லாம் பார்த்து, மூன்று வகையாக அவர்களைப் பிரித்து அரசு சேவகத்தில் சேர்க்க வேண்டும்’ என்கிறது அர்த்த சாஸ்திரம். இது தவிர விபசாரம் தொடர்பான ஏராளமான விதிகள் அர்த்த சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழர் மெய்யியலுக்கு நேர் விரோதமான அர்த்த சாஸ்திரம், கால ஓட்டத்தில் தமிழரை அடிமை கொண்டது வரலாறு. இடைச்சங்க மற்றும் கடைச் சங்க காலத்தில் அரசு உருவாகத் தொடங்கிய போது, அதற்கு எதிரான கருத்தியல்கள் தமிழரிடையே வளர்ந்தன. ஆரியத்தின் பண்பாட்டுப் படையெடுப்பின் விளைவாக, தமிழரின் கருத்தியல்கள் தோற்கடிக்கப்பட்டு, அரசுகள் ஆரிய மேலாதிக்கத்தோடு உருவாகின. இன்றைய இந்திய அரசு, நவீன அர்த்த சாஸ்திரக் கோட்பாடு என்பதாலேயே நடக்கிறது. அரசுத் தலைமையைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தைப் பார்ப்பனீய மேலாதிக்கவாதிகளே வைத்திருக்கின்றனர்.

கோட்பாட்டு உருவாக்கம் (Policy Making) என்பது, இன்றும் பார்ப்பன ஆதிக்கம் நிறைந்த இந்துத்துவ மத நிறுவனங்கள், பெரு முதலாளிகள் ஆகியோர் இடத்திலே தான் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உற்பத்தியில் ஈடுபடும் உழைப்பாளர், அறிவாளர் மிக மோசமாக சுரண்டப்படுகின்றனர். விவசாயம் சார்ந்த அனைத்துத் தொழில்களும் கடுமையான நெருக்கடிகளுக்குள் தள்ளப்படுகின்றன. விவசாயிகள், நிலத்தோடு பிணைக்கப்பட்ட அடிமைகளாகவே நடத்தப்படுகின்றனர்.

 இந்தியச் சாதி அமைப்பு

இந்திய துணைக்கண்டத்தில் சாதி தொழிலின் அடிப்படையில் தோன்றி பின்னர் பிறப்படிப்படையில் மாற்றம் பெற்றது. இந்தியாவில் 3000 ஆண்டுகளுக்கும் மேலாக உலகின் பல்வேறு இடங்களில் இருந்தும் வந்து பல்வேறு மொழிகள் பேசும் மக்கள் கூடி வாழ்ந்திருக்கிறார்கள். பல்வேறு போக்குகளால் பிறப்படிப்படையில் சாதிகள் அடையாளம் கொண்டு இன்றளவும் நிலைப்பெற்றுள்ளன.

தமிழரிடையே சாதி என்பது, வழிவழியாய் தொழில் அடிப்படையில் (பரம்பரைத்தொழில்) இருந்த குழுக்களும் கூட்டங்களும் நாளடைவில், பிறப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சமூக அமைப்பாய் மாறி, பின் படிமுறை அமைப்பும் ஏற்பட்டது. சாதிகளில் படிமுறை ஏற்றாத்தாழ்வுகள் தமிழரிடம் தொன்றுதொட்டு இருந்ததல்ல; ஆனால், எப்பொழுது எவ்வப்பகுதிகளில், எத்தனை வலுப்பெற்று இருந்தது என்பது திண்ணமாய்த் தெரியவில்லை. சாதி வகுப்பு முறைமைகளும் படிமுறை அமைப்பும் இடத்துக்கிடம் வேறுபடும். பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும், முற்கால அரசரிடமும், பிற செல்வந்தர்களிடமும் இருந்த நெருக்கம், அணுக்கம் பற்றிய உறவாட்ட வேறுபாடுகளினாலும், சாதிகளில் ஏற்றத்தாழ்வுகள் மாறி வந்துள்ளன. வடமொழியில் உள்ள மனு ஸ்ம்ரிதி ( மனுநீதி சாத்திரம் ) என்னும் நூலும் அவ்வரிசையில் உள்ள பிற வடமொழி நூல்களும், தமிழரிடையே சாதியின் அடிப்படையில் பிறப்படிப்படையில் ஏற்றத்தாழ்வுகள் ஊட்டவும் வலியுறுத்தவும் துணை செய்தன. தமிழில் பிறப்பின் அடிப்படையில் படிமுறையில் ஏற்றத்தாழ்வுகள் கூறும் நூல்கள் யாதும் 16 ஆம் நூற்றாண்டு வரையிலும் ஆன காலப்பகுதியில் இருப்பதாகத் தெரியவில்லை.

சாதீயம் பற்றியதான கோட்பாட்டு அமைப்பு முறை:

சாதி என்பது இந்தியப் பாணியிலான சமூகத்தின் அடிப்படைச் சமூக அலகு ஆகும். இதன் தனித்தன்மை பிறப்பின் அடிப்படையிலான வேலைப்பிரிவினையே. இது இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் நிலவுகிறது. ஒருவரின் சாதி அவரின் பிறப்பைக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. ஆகவே இதனை வெளியேற வழியற்று அடைபட்ட வகுப்பு என்று கூறலாம். இது சமூக வழக்கு, அதிலிருந்து தோன்றிய அரசுகள் போன்றவற்றால் பாதுகாக்கப்படுகிறது.

ஒருவர் சாதி அடிப்படையில் ஒடுக்குமுறைக்கு, மனித உரிமை மீறல்களுக்கு, பாகுபாட்டுக்கு உட்படுதல் சாதிய ஒடுக்குமுறை ஆகும். தெற்காசியாவில் சாதிய ஒடுக்குமுறையால் பெரும்பான்மை மக்கள் நெடுங்காலமாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இவை வெளிப்படையான தீவிர வன்முறையான ஒடுக்குமுறைகள், சமூக நிறுவனக் கட்டமைப்புகளின் ஊடாக நடைபெறும் ஒடுக்குமுறைகள், நுண் ஒடுக்குமுறைகள் என்று பல வகைகளில் அமைகின்றன. சாதியின் தோற்றம் பற்றிய பல்வேறு கருதுகோள்கள் வேறுபட்ட அறிஞர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன. சாதியின் தோற்றம் குறித்து பக்தவச்சல பாரதி ஆறு கோட்பாடுகளைக் குறிப்பிடுகிறார். அவை: மரபுக் கோட்பாடு (traditional theory), தொழிற் கோட்பாடு (occupational theory), சமயக் கோட்பாடு (religious theory), அரசியற் கோட்பாடு (political theory), இனக் கோட்பாடு (racial theory), படிமலர்ச்சிக் கோட்பாடு (evolutionary theory) என்பனவாகும்.

இதனுள் மிக உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டிய கோட்பாடு, மரபுக் கோட்பாடு. சாதி இறைவனால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு என்பதுவே மரபுக் கோட்பாடு. ரிக் வேதம், மனு தர்மம், பகவத்கீதை ஆகியவை சாதி இறைவனால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு என்றே கூறுகின்றன. பகவத்கீதை குணத்தின் அடிப்படையில் சாதி அமைகின்றது என குறிப்பிட்டாலும், பிற பிறப்பின் அடிப்படையிலேயே சாதி அமைகின்றது என்பதை வலியுறுத்துகின்றது. இது இந்திய சாதியியல் வகைமையில் இன்றுவரை மிகப்பெரிய ஆளுமையை செலுத்தி வருகின்றது.

தொழிற் கோட்பாடு என்பது சாதியானது, மக்கள் குழுக்கள் செய்யும் தொழில் அடிப்படையில் அமைந்தன என்கிறது. தொழில்களின் தன்மை காரணமாக ‘தூய்மை’, ‘தீட்டு’ போன்றவை வரையறை செய்யப்பட்டன. இதன் வழியாக பார்ப்பனர் என்ற பிரிவு மேலானது என்றும் அவர்கள் தீட்டு மற்றும் தூய்மை சார்ந்த சடங்கு முறைகளை வகுத்தும் அது சார்ந்த மேலாண்மைகளைப் பெற்றும் வந்தது திராவிட சமூகத்தில் மிகப்பெரிய வர்க்க பாகுபாடுகளைத் தோற்றுவித்தது. ஆனால் பிறப்பு ரீதியிலான தமிழ் சமூக அமைப்பை மறுக்கும் பலர், தொழில் ரீதியிலான தமிழ் சமூக அமைப்பு இயல்பானது என்றும் கருத்தாக்கம் செய்துள்ளார்கள்.

ஆரியர்கள் இந்தியாவுக்கு புலம்பெயர்ந்த போது தொல் திராவிடர்களை அடிமைப்படுத்தி நிறுவிய அமைப்பே சாதி அமைப்பு என்கிறது இனக் கோட்பாடு. “குடியேறிய ஆரியர்கள் இங்கிருந்தவர்களைக் காட்டிலும் உடல் தோற்றத்தில் பொலிவானவர்களாக திகழ்ந்ததால் அதனைப் பயன்படுத்தி அவர்கள் வருணப் பாகுபாட்டை காட்டத் தொடங்கினர்.” ( பக்தவச்சல பாரதி, மானிடவியல் கோட்பாடுகள், ப.330)

மொழி குறித்தான கோட்பாட்டு சூழல் மற்றும் விமர்சனங்கள் :

மொழி என்ற அலகின் வழி செயல்பட்ட இனப் பண்புகள் அவ்வினம் குறித்தன அடையாளங்களாகத் திகழ்கின்றன. திராவிட மொழிகளில் முதன்மையான தமிழ் மொழியில், தமிழ் இனம் குறித்தான பதிவுகளை உற்று நோக்குகையில் அது ஆரிய மொழிக் கோட்பாட்டோடு கொண்டுள்ள விலகல்களை வெளிப்படுத்துகிறது.

“ சமஸ்கிருத யுக துவக்கத்தில் தமிழகத்தின் வடக்கில் தமிழ், வடமொழி, ஆரிய மொழி ஆகிய மூன்று மொழிகள் பயன்பட்டன. சமஸ்கிருதத்தின் வரலாற்றுக் குறைபாடுகளை மறைக்க எழுந்தவைகளே மத்திய காலத்து மாயக் கதைகள். இவற்றால் கி.பி. ஆறாம், ஏழாம் நூற்றாண்டுகளில் இந்தியாவில் ஒரு சமஸ்கிருத மொழிப் பேரரசும் பண்பாட்டுப் பேரரசும் உறுதி செய்யப்பட்டன.” ( வே.தி.செல்லம், தமிழக வரலாறும் பண்பாடும், ப.502)

தமிழர் ஆரியரினும் 500 ஆண்டுகளாவது முற்பட்டவர். ரிக் வேத காலகட்டத்தில் ஆரியர் சிந்துப் பள்ளத்தாக்குகளிலும், கங்கைப் பள்ளத்தாக்குகளிலும் பரவியிருக்க வேண்டும். ஆனால் தொல்காப்பியரின் ஆரியச் சார்பினை அவர் பொருளதிகாரம் வகுக்கின்ற போது காண முடிகின்றது. இதனால் இக்காலத்தில் ஆரியக் கொள்கைகள் சில தென்னாட்டுக்கு வந்துவிட்டதெனத் தெரிகிறது.

கால்டுவெல், திராவிட ஒப்பிலக்கணம் (1856) என்னும் தனது நூலில் ‘வடமொழிக் குடும்பத்திலிருந்து தமிழ் வேறுபட்டது. அது திராவிட மொழிக் குடும்பத்தின் தாய்மொழி. அதிலிருந்தே தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகள் தோன்றின. வடமொழியின் துணையின்றி தனித்தியங்கும் திறன் பெற்றது தமிழ் மொழி. வடமொழியின் கலப்பை எந்த அளவிற்கு நீக்குகிறதோ அந்த அளவிற்கு தமிழ் தூய்மை அடையும்’ என்கிறார் . இது பிற்பாடு தோற்றம் பெற்ற மறைமலை அடிகளாரின் தனித்தமிழ் கொள்கைக்கு அரண் சேர்த்தது.

தனித்தமிழ் இயக்கம் என்பது தமிழ் மொழியில் பிறமொழிச் சொற்களைக் கலக்காமல் தனித்தமிழில் எழுதப்பட வேண்டும் அல்லது பேசப்பட வேண்டும், அவ்வாறு கலப்பதால் தமிழ்மொழிக்கு நன்மையில்லை, பெருந்தீமை என்று சொல்லும் இயக்கம் ஆகும். தமிழ் மொழி, இயற்கையாகவே தனித்தியங்கக்கூடியது; அதற்குப் பிறமொழிகளின் துணை தேவையில்லை என்பது இக்கொள்கையின் அடிப்படையாகும்.

சமஸ்கிருத சொற்களும் மணிப்பிரவாள அல்லது மணிப்பவழ நடையும் தமிழில் மிகுதியாக பயன்படுத்தப்பட்ட சூழ்நிலையில் தமிழ் மொழியை முன்னிறுத்தி முன்னெடுக்கப்பட்ட இயக்கமே தனித்தமிழ் இயக்கமாகும். இந்த இயக்கம் 1916 ஆம் ஆண்டு அளவில் தோற்றுவிக்கப்பட்டது. தேவநேயப் பாவாணர், மறைமலை அடிகள், பாரதிதாசன், பெருஞ்சித்திரனார் ஆகியவர்கள் தனித்தமிழ் இயக்கத்தில் குறிப்பிடத்தக்கவர்கள். “சிறந்தது எதற்கும் பார்ப்பன மூலங் கற்பிக்கும் தன்மை வடமொழிப்பண்டிதர்களின் இயற்கை”யை முற்றிலும் நிராகரிக்கும் சூழலை இவ்வியக்கம் அடிப்படையாகக் கொண்டது.

விடுதலைக் காலத்தில் தமிழ்நாட்டில் திராவிடம் என்னும் பெயரில் தென்னாட்டு உணர்வு தோன்றிக் கொண்டிருந்தது. அதற்குக் காரணம் வடநாட்டுப் பேராயத்தின் (காங்கிரசு) நிலைப்பாடேயாகும். அப்போது அக்கட்சி அய்யர்கள், அய்யங்கார்கள் பிடியில் இருந்தது. அவர்கள் பெரும்பாலும் தெலுங்கு பேசும் பார்ப்பனர்கள். அரசுப் பதவிகள், பணிகள் அவர்களுக்கே சென்று சேர்ந்தன. பார்ப்பனர் அல்லாதவர்க்கு மிகச்சிறிய அளவில் மட்டுமே கிடைத்தது. ஆங்கில அரசு நிலவிய அக்காலத்தில் அரசுடன் உடன்பட்டுப் தங்களின் ஆங்கில அறிவால் பல நன்மைகளை அவர்களே அடைந்தார்கள். பார்ப்பனர் அல்லாதவர்க்கு நன்மை கிடைக்க வேண்டும் என்று எண்ணிய சில பெரியோர்கள் அது பற்றித் திட்டமிட்டனர். இது திராவிட இயக்கங்கள் தோன்றுவதற்குக் காரணமாகியது.

மொழி என்ற நிலையில் தமிழ் மீதும் அதன் இனத்தின் மீதும் ஆரியம் செய்கின்ற ஆளுமை இயல்பு அடிமைத்தனத்தை பறை சாற்றுவதாகவே இருப்பதாக கொள்ள முடியும். மொழியின் வழி அந்நாட்டின் பண்பாட்டு விழுமியங்களை அழிக்கவும், திரிக்கவும் இயலும் என்ற வகையிலான கோட்பாடுகள் மணிப்பிரவாள இலக்கியங்களில் பின்னால் செயல்பட்டுள்ளன என்பதை மறுக்கவியலாது. ஆரியத்தை நீக்கிய தமிழ்த்திருமணம், திருவள்ளுவர் ஆண்டுமுறை, தமிழர் மதம், தமிழரின் நான்மறை முதலிய கோட்பாடுகள் முதன்முறையாகத் தமிழ் நிலத்தில் மறைமலை அடிகளால் அறிமுகப்படுத்தப்பட்டன. இது கலப்படமற்ற தூய தமிழ் இனத்திற்கான அடையாளமாகக் கொள்ளப்பட்டன.

மொழியின் மீதான வடமொழியின் ஆளுமை கல்வியிலும் தனது பலத்தை செலுத்திய பிற்பாடுதான் ஆரியம் எதிர்க்கப்பட வேண்டும் என்ற எண்ணம் பேராயக் கட்சியினருக்கும் ஏற்பட்டது. ஆனால் தமிழ அறிஞர்கள் பலரும் ஆரியத்தையும் வடமொழியையும் ஆதரித்து வந்ததும் திராவிட சூழலில் பெரும் வியப்பையும் அதிர்ச்சியையும் தந்தது. வ.வே.சு. ஐய்யர் சேரன்மாதேவியில் நால் வருணப் பாகுபாடோடு நடந்துகொண்டது இதற்குச் சான்றாகக் கொள்ளலாம். ஆனால் பெரியாரின் திராவிடக் கழகத்தின் செயல்பாடுகள் ஆரியக் கோட்பாடுகளை எதிர்க்கும் விதத்திலும், திராவிட மக்களை உயர்த்துவதிலும் மும்முரமாக செயல்பட்டன. ஆரிய ஏமாற்று, மூடநம்பிக்கைகள், மதச்சடங்குகள், முதலியவற்றையும் பெரியார் மக்களிடத்தில் பரப்பினார்.

பிற்பாடு தோற்றம் பெற்ற பல திராவிடக் கட்சிகள் ஆரியர்க்கும் அவர்க்குத் துணைபோகும் பேராயத்துக்கும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அப்போக்கு மக்களிடத்தில் நன்றாகப் பரவியது. பண்பாட்டு மீட்பும் தமிழ்க் காப்புணர்வும் மக்களிடத்தில் ஏற்படத்தொடங்கின. அவர்கள் ஆட்சிக்கு வந்த போது தமிழ் வழிக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். 

சமயம் மற்றும் வழிபாடு பற்றியதான கோட்பாட்டுத் தாக்கங்கள்             

சமய வழிபாட்டில் தெய்வங்களைப் புகுத்துதல் புதியதான ஒரு வழிபாட்டுக் கோட்பாடுகளை உருவாக்குகிறது. நாடோடி வாழ்க்கையை மேற்கொண்டிருந்த ஆரியர்கள் தமிழகத்தில் புகுந்த பிறகு தங்களை குருமார்களின் நிலைக்கு உயர்த்துகின்றனர். நிகமுறை வழிபாடுகளையும், இந்திரன் மரபினயும் தமிழகத்துக்கு அறிமுகப்படுத்துகிறார்கள். அதோடு நால்வருணச் சாதிக் கோட்பாட்டையும் வலியுறுத்துகின்றனர். வழிபாடு முறைகள் இவ்வருணப் பாகுபாட்டிற்கேற்ப மாற்றம் அடைகிறது.

திராவிட வழிபாட்டுக் கோட்பாடுகள் சிவனையும், தாய்த்தெய்வ வழிபாட்டையும் முன்னிறுத்தி செயல்படுகின்றன. யோகம், தவம் ஆகியவற்றின் உயர்வையும் அறிந்துள்ளதைக் காட்டுகிறது. வைதீக சமயத்தில் வருகின்ற மரபுகளும், புராணங்களில் வருகின்ற கதைகளும், வீரர் வரலாற்றுக் குறிப்புகளும் ஆரியர்களின் வருகைக்கு முற்பட்ட திராவிட இந்தியாவில் நிலவிய மரபுகளிலிருந்தும் கதைகளிலிருந்துமே தோன்றியவைகளே என்கிறார் எஸ்.கே.சாட்டர்ஜி. ( vedic age, p.163)

ரிக் வேதம் குறிப்பிடும் புருட சூக்த கோட்பாடு ஆதி திராவிடர்கள் வகுத்த கொள்கையே என்கிறார் நீலகண்ட சாஸ்திரி. ( Aryans and Dravidians cultural contacts, p.13). அகிலத்தின் தோற்றத்தை உருவகப்படுத்தும் இக்கோட்பாடு பின்னாளில் மனுவின் நால்வருணக் கோட்பாடாக மாறுகிறது. இன்றைக்கும் மக்களுக்குமிடையில் நிலவிய குருமார் இனத்தின் வலிமையும் ஆதிக்கமும் பெருகிக் கொண்டிருக்கிறது.

பிராமணர் – பிராமணரல்லாதோர் பாகுபாடு

இந்திய சமூக அமைப்பில் வட இந்திய பிராமணர்களுடன் ஒப்பிடுகையில் சென்னை மாகாணத்தில் தென்னிந்திய பிராமணர்கள் உயரிய இடத்தைப் பெற்றிருந்தனர். மொத்த மக்கள் தொகையில் 3.2 விழுக்காடே இருந்த தமிழ் பிராமணர்கள் 1850களில் இந்தியர்கள் வகிக்கக் கூடிய அரசு பதவிகளில் பெருமளவில் இடம்பெறத் தொடங்கினர். இதன் மூலம் அவர்களது அரசியல் செல்வாக்குப் பெருகியது.

19ம் நூற்றாண்டிலும் 20ம் நூற்றாண்டின் துவக்கத்திலும் இந்திய நிருவாகப் பணிகள் மற்றும் நகர்ப்புறங்களில் புதிதாக உருவான தொழில்களிலும் பிராமணர்களே ஆதிக்கம் செலுத்தினர். பிராமணர் சாதியில் கல்வியறிவும் ஆங்கில அறிவும் அதிகமாக இருந்ததே இந்த முன்னேற்றத்துக்கு முக்கிய காரணம். இதனால் பிராமணரல்லாதோருக்கும் பிராமணருக்குமிடையே இருந்த அரசியல், சமூக, மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகமாயின. அன்னி பெசண்டின் ஹோம் ரூல் இயக்கத்தால் இந்தப் பாகுபாடு மேலும் அதிகரித்தது.

திராவிட இயக்கம்

திராவிட இயக்கம் என்பது கி.பி 19 ஆம் நூற்றாண்டின் இறுதி மற்றும் 20-ஆம் நூற்றாண்டுகளில் தமிழ்ச் சமுதாயத்தில் உருவாகிய ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சமூக மற்றும் அரசியல் இயக்கமாகும். இக் காலகட்டத்தில் சாதாரண மக்களுக்குக் கிடைத்த கல்வி வாய்ப்புக்கள் அவர்களிடையே சமூக உணர்வுகளைத் தட்டி எழுப்பியிருந்தன. இவ்வாறானவர்களில் சிலர் சாதாரண மக்களில் உரிமைகளுக்காக வாதிட்டதுடன், அக்காலத்தில் இருந்த பிராமண ஆதிக்கத்தையும் எதிர்த்து வந்தனர். நாட்டுக்கு விடுதலை வரும்போது அது பிராமண ஆதிக்கத்தின் கீழ் வருமே ஒழிய அதன் பயன்கள் மக்களுக்குக் கிட்டாது என அவர்கள் நம்பினர். இவ்வாறான கருத்துக்களை முன்வைத்துப் போராடியோரில், டி. எம். நாயர், தியாகராசச் செட்டியார், கேசவப் பிள்ளை, நடேச முதலியார் போன்றோர் முன்னணியில் இருந்தனர்.

திராவிட இயக்கங்கள் தமிழ்ப் பண்பாடு, தமிழர் கலை, தமிழர் சமயம் என்ற தளங்களில் செயல்படுகின்றன. தொடக்கத்தில் ஆரியர் X திராவிடர் என்ற எதிர் நிலைகளில் திராவிட இயக்க இலக்கியங்கள் கருத்துப்பரப்பல் புரிந்தன. பின்னர் சடங்குகளை விலக்குதல், மனுதரும சாத்திரத்தை மறுதலித்தல், கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, கலப்புத் திருமணமத்திற்கும் கைம்பெண் திருமணத்திற்கும் சுயமரியாதைத் திருமணத்திற்கும் வரவேற்பு என்ற தளங்களில் அவற்றின் செயல்பாடுகள் விரிவடைந்தன.

பொதுவாகவே வைதீக எதிர்ப்பாளர்கள், தமிழர் மத்தியில் நிலவிய சாதிக் கொடுமை முதலியவற்றுக்கு, வைதீகத்தையும், பிராமணரையுமே குற்றஞ்சாட்டினர். வைதீகத்துக்கு முந்திய பண்டைத் தமிழகம் சாதிப் பாகுபாடற்ற சமூகமாக இருந்ததை எடுத்துக்காட்டிய அவர்கள், இனம், மொழி, பண்பாடு ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி மக்களை அணிதிரட்டினர். 1916 ஆம் ஆண்டில் இதன் பெயர் தென்னிந்திய நல உரிமைக் கழகம் என மாற்றப்பட்டது. தென்னிந்திய நல உரிமைக் கழகத்தின் அரசியல் பிரிவு நீதிக் கட்சி என்ற பெயருடன் இயங்கியது. 1919 ஆம் ஆண்டில் பிரித்தானிய அரசினால் சட்ட வடிவம் கொடுக்கப்பட்ட இந்திய அரசியல் சீர்திருத்தத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இரட்டை ஆட்சிமுறையின் கீழ் மாநிலங்களுக்குப் பொறுப்பாட்சி வழங்கப்பட்டது. இந்திய தேசிய காங்கிரஸ் இம்முறையை ஆதரிக்காவிடினும், நீதிக் கட்சி அதனை ஆதரித்தது. இம் முறை மூலம் வைதீக ஆதிக்கத்தை உடைத்து மக்களாட்சியை ஏற்படுத்தமுடியும் என அது நம்பியது. 1937 க்குப் பின்னர் தலைமைப் பதவியைப் பெரியார் என அழைக்கப்பட்ட ஈ. வெ. ராமசாமி ஏற்றுக்கொண்டார். திராவிட இனக் கொள்கையில் பிடிப்புக் கொண்டிருந்த இவர், மூலம் புகழ் பெற்றிருந்தார். இதனால், நீதிக் கட்சியின் வீழ்ச்சியையும் கடந்து திராவிட இயக்கம் நிலைக்க முடிந்தது.

முடிவுரை :

ஆரியர்களாலேயே திராவிடர்களின் வரலாறு எழுதப்பட்டது. மேலும் இனவரலாறு என்பதைனையும் தாண்டி, இது ஒரு அரசியல் இணைப்பும் கொண்டிருப்பதால் ஆரிய அல்லது பிராமணிய குழுக்களுக்கு சமஸ்கிருதத்தின் பெருமைக்கும், அதன் மீது இழுக்கு ஏற்படும் செய்திகளையும் வரலாறாக மாற்ற விரும்பவில்லை. இதன் காரணமாக உண்மையான திராவிட வரலாறுகள் வெளிவரவில்லை.

வரலாறுகள் என்றுமே தலைமைக் குடிகளை முன்னிறுத்தியே எழுதப்பட்டிருக்கின்றன. இந்திய வரலாறும் அவ்வாறே. ஆனால் நம்மை அழிக்க முயன்ற அந்நிய விரோதியிடமிருந்து தற்காத்துக் கொள்ளவும் நமது பழம் பெருமைகளை தோண்டி எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இது ஆங்கிலேய ஆட்சியின் போது தீவிரமடைந்தது என்பதை மறுக்கவியலாது. வளர்ந்து வந்த விடுதலை இயக்கத்தினைத் தளர்வுறச் செய்வதற்காக ஆங்கிலேய அதிபர்களால் இந்திய பாரம்பரியம் குறித்த சொல்லாடல்கள் உலக வரலாற்றோடு ஒப்புமை செய்யப்பட்டு தரம் தாழ்த்தப்பட்டன. காலம் காலமாக அடிமை மனப்பான்மை கொண்டவர்கள் இந்தியர்கள் என்ற கற்பிதம் இந்திய வரலாறாகத் திரிக்கப்பட்டது. ஆனால் இதை எதிர்த்துப் போராடுவதற்காக இந்திய வரலாற்றை மீள் கண்டுபிடிப்பு செய்யும் நோக்கில் ஆரியக் கோட்பாடுகள் உருவாக்கப்பட்டன. ஆரியத் திறன்கள் உலக மேலாண்மையாக உருவாக்குவதில் நமது வரலாற்றாசிரியர்கள் ஈடுபட்டார்கள். இது விடுதலை இயக்கத்திற்கு ஒருவகையில் பயனளித்தாலும் மற்ற குலங்களின் திறன்களும் பெருமைகளும், குறிப்பாக திராவிடப் பண்பாக்கம் முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டது. கடந்த காலத்தைப் பற்றிய பொய்யான நிர்ணயத்தையும், நிகழ்காலத்திற்கு பயனற்றதுமான இதை இந்தியர்கள் பூஜிக்கும்படி ஆகிவிட்டது.

துணைநூற்பட்டியல் :

  • செல்லம்.வே.தி., தமிழக வரலாறும் பண்பாடும்,மணிவாசகர் பதிப்பகம்.
  • பக்தவத்சல பாரதி, மானிடவியல் கோட்பாடுகள், அடையாளம்.
  • டாங்கே.எஸ்.ஏ, பண்டைக்கால இந்தியா, அலைகள் வெளியீடு.
  • ஸ்ரீ ஆனந்த நாச்சியாரம்மா (மொ.), அர்த்த சாஸ்திரங்கள் எனும் சாஸ்திரங்களின் நீதி நூல், , ஸ்ரீ இந்து பதிப்பகம்.
  • Chatterjee.S.K, Vedic Age, Bharathiya Vidhya Bhavn.
  • Neelaganda Sastri, Aryans and Dravidians Cultural Contact, Manaktalas

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *