கணியன்பாலன்

 

தமிழ்மொழியும் அதன் இலக்கியங்களும் மிகப் பழமையானது என்பதற்கு அதன் ‘தமிழி’ எழுத்துத் தோன்றிய காலத்தை அறிதலே போதுமானது. தமிழகத்தில் பழனி அருகே உள்ள பொருந்தல் என்ற இடத்தில் நடந்த அகழாய்வின்போது  கிடைத்த மட்பாண்டங்களில் இருந்த இருநெல் மாதிரிகள் அமெரிக்காவில் உள்ள பீட்டா ஆய்வு நிலையத்தில், அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு (Accelerator Mass  Spectrometry  by the Beta Analytic Lab , USA ), அவைகளின் காலம் கி.மு.490, கி.மு. 450 எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு நெல் மாதிரிகளுமே, பொருந்தல் அகழாய்வில் கிடைத்த, இரு வெவ்வேறு மட்பாண்டங்களிலிருந்து எடுக்கப்பட்டவைகளாகும்.

இந்த மட்பண்டங்களில் தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளது. இதன் அகழாய்வு இயக்குநர் பாண்டிச்சேரிப் பல்கலைக்கழகப் பேராசிரியர், முனைவர் கா.இராசன் அவர்கள், இந்தக்காலக் கணிப்புகளின்படி, தமிழ் பிராமியின்(தமிழி) காலம் கி.மு. 5ஆம் நூற்றாண்டு என்கிறார். மேலும் தமிழ்பிராமி எழுத்து அசோகர் பிராமிக்கு இரு நூற்றாண்டுகள் முற்பட்டது என்பதோடு, அசோகர் பிராமியில் இருந்து தமிழ் பிராமி(தமிழி) உருவாக வில்லை என்பதும் நிரூபிக்கப்படுகிறது என்கிறார்(1).

பொருந்தலும், ஆதிச்சநல்லூ ரும்:

இந்த 5ஆம் நூற்றாண்டுப் பொருந்தல் எழுத்துக்கள் குறித்து டாக்டர் சுப்பராயலு அவர்கள் 29-8-2011 இந்து நாளிதழுக்குக் கொடுத்த தகவலில், இந்த எழுத்துக்கள் ஐராவதம் மகாதேவன் அவர்களின் கணிப்புப்படி இரண்டாம் நிலைத் தமிழி எழுத்துக்கள் ஆகும் எனவும், ஆகவே அதன் காலத்தை கி.மு 490 க்குக் கொண்டுபோக முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார். இதனை அவர் குறிப்பிட்ட பொழுது ஒரு மட்பாண்ட நெல் மாதிரி மட்டுமே அமெரிக்காவில் உள்ள பீட்டா ஆய்வு நிலையத்தில் அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அதன் காலம் கி.மு 490 என கண்டறியப்பட்டிருந்தது.  அதன்பின் இரண்டாவது நெல் மாதிரியும் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டு அதன் காலம் கி.மு. 450 என கண்டறியப்பட்டது.  ஆகவே பொருந்தல் தமிழி எழுத்துக்களின் காலம் கிமு. 5ஆம் நூற்றாண்டு என்பது சந்தேகத்திற்கு இடமின்றி இரண்டு மாதிரிகளின் அறிவியல் ஆய்வு மூலம் இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

தமிழி(தமிழ் பிராமி) எழுத்துக்களை அதன் எழுத்தமைதி, வடிவம், எழுதும்விதம் ஆகிய பல காரணிகளைக் கொண்டு ஐராவதம் மகாதேவன் அவர்கள் மூன்று நிலைகளாகப் பிரித்துள்ளார். ஒவ்வொன்றுக்கும் இடையே சில நூற்றாண்டுகள் இடைவெளிகள் இருந்துள்ளன என்கிறார் அவர். ஐராவதம் மகாதேவன் அவர்கள் பிரித்த மூன்று நிலை தமிழி எழுத்துகளில், பொருந்தல் தமிழி எழுத்துக்கள் இரண்டாம் நிலை தமிழி எழுத்துக்கள் என்கிறார் டாக்டர் சுப்பராயலு அவர்கள்(2). ஆதலால் முதல் நிலை தமிழி எழுத்துக்கள் இந்த இரண்டாம் நிலை தமிழி எழுத்துக்களுக்குச் சில நூற்றாண்டுகள் முந்தையவையாக இருந்தாக வேண்டும். இரண்டாம் நிலை தமிழி எழுத்துக்களான பொருந்தல் தமிழி எழுத்துக்களின் காலம் கி.மு. 5ஆம் நூற்றாண்டு என்பதால் முதல்நிலை தமிழி எழுத்துக்களின் தொடக்க காலம் அதற்கு இரண்டு மூன்று நூற்றாண்டுகள் முந்தையவையாக இருந்தாக வேண்டும். அதன் அடிப்படையில் கி.மு. 5ஆம் நூற்றாண்டுக்கு முன் இரண்டு, மூன்று நூற்றாண்டுகள் எனில் முதல்நிலை தமிழி எழுத்துக்களின் தொடக்க காலத்தை கி.மு. 8ஆம் நூற்றாண்டு எனக் கொள்ளலாம்.

கொற்கையில் தமிழி எழுத்துக்கள்:

1970ல் நடந்த கொற்கை அகழாய்வில் மௌரியர் காலத்து மட்பாண்டங்கள் கிடைத்தன. அத்துடன் தமிழி எழுத்துக்களைக் கொண்ட மட்பாண்டங்களும் கிடைத்தன. அவைகளின் காலம் கி.மு. 3ஆம் 2ஆம் நூற்றாண்டு என ஆய்வாளர் திரு ஆர். நாகசுவாமி அவர்கள் குறிப்பிட்டுள்ளார். அவருடைய அறிக்கை அத்துடன் அதன் அடியாழத்தில் அதாவது 2.69 மீட்டர் ஆழத்தில் ‘கேஆர்கே-4’ என்கிற குழியில் கரித்துண்டு மாதிரிகள் கிடைத்தன எனவும் அதனை கார்பன்-14 ஆய்வுக்கு உட்படுத்தி அதன் காலம் கி.மு. 850க்கும் 660க்கும் இடையே கி.மு. 755 என கண்டறியப் பட்டது எனவும் தெரிவிக்கிறது. மேலும் அதே குழியில் தமிழி எழுத்துப் பொறிப்புகளுடன் கூடிய மட்பாண்ட ஓடுகள் கிடைத்துள்ளன. ஆதலால் ஆய்வுக்கு அனுப்பப்பட்ட கரித்துண்டின் காலம்தான் இந்த எழுத்துப் பொறிப்பின் காலம் என்பதால், கொற்கை அகழாய்வின் அடியாழத்தில் கிடைத்த எழுத்துப் பொறிப்பின் காலம் கி.மு. 755, அதாவது கி.மு.8 ஆம் நூற்றாண்டு என ஆகிறது-(3).

ஆதிச்சநல்லூர்-தமிழிஎழுத்து:

 

ஆதிச்சநல்லூரில் நடைபெற்ற அகழாய்வின் இயக்குநர்                                                    சத்தியமூர்த்தி அவர்கள், அங்கு கிடைத்தத் தமிழி  எழுத்துப் பொறிப்பின் காலம், அறிவியல் ஆய்வின் படி (PRELIMINARY  THERMO  LUMINESCENCE  DATING), கி.மு.1500 முதல் கி.மு.500 வரை எனவும், குறைந்த பட்சம் கி.மு.500 க்கும் முற்பட்டதாக இருக்க வேண்டும் எனவும் கூறுகிறார்-(4). அதே   ஆதிச்ச நல்லூரில் நடைபெற்ற அகழாய்விlல் கி.மு 800ஆம் ஆண்டு தமிழி எழுத்துப் பொறிப்பு கிடைத்ததாக 26.5.2004 இந்து நாளிதழ் தெரிவித்துள்ளது-(5).  ஆகவே இந்த ஆதிச்சநல்லூர் தமிழி எழுத்துப் பொறிப்பின் காலத்தைக் குறைந்தபட்சம் கி.மு.800 எனக் கொள்ளலாம். ஆதிச்சநல்லூரில் முழுமையான ஆய்வுகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. ஒரு விழுக்காட்டிற்கும் குறைவான ஆய்வுகளே அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆதிச்சநல்லூரில் முழுமையான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்பொழுது தமிழி எழுத்துப் பொறிப்புகளின் காலம் கி.மு. 800 அல்லது அதற்கும் முன் கொண்டு செல்லப்படும் என்பது உறுதி.

ஆதிச்சநல்லூர் – காலம்:

 

பண்டைய ஆதிச்ச நல்லூரின் காலத்தை அறிய மணிப்பூர் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராக உள்ள முனைவர் இராசு கிசோர் கார்சியாவின் தலைமையில் இருந்த அறிவியலாளர்கள், புதிய அறிவியல் தொழிநுட்ப முறைப்படி(OPTICALLY STIMULATED THERMO  LUMINESCENCE  TEST) ஆதிச்ச நல்லூர் மட்பாண்டங்களின் பாகங்களை ஆய்வு செய்து, அதன் காலத்தை கண்டறிந்தனர். அதன்படி தாழி எண் 10இன் காலம் 3400+700 (அல்) 3400-700 எனவும், தாழி எண் 29இன் காலம் 1920+350 (அல்) 1920-350 எனவும் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது ஆதிச்சநல்லூரின் காலம் கி.மு. 1750 முதல் கி.மு. 270 வரை என உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு கிடைத்த மிகப் பழமையான மட்பாண்டங்களின் காலம் கி.மு. 4000 என எசு. பத்ரி நாராயணன்(S.BADRINARAYANAN) அவர்கள் தெரிவிக்கிறார். ஆதிச்ச நல்லூரில் இருந்த சுரங்கத் தொழிற்சாலையின் காலம் கி.மு 1500 என பி. சசிசேகரனும் (B.SASISEKARAN et al.) அவருடன் ஆய்வு செய்தவர்களும் தெரிவிக்கின்றனர். ஆகவே ஆதிச்சநல்லூர் நாகரிகத்தின் காலம் கி.மு. 2000 அளவில் என உறுதியாக முடிவு செய்யலாம் என்கிறார் முனைவர் இராமசாமி அவர்கள்-(6).

‘தமிழி’ அசோகர் பிராமிக்கும் முற்பட்டது: 

1.நடன காசிநாதன்:

பொருந்தல் அகழாய்வு, ஆதிச்சநல்லூர் அகழாய்வு போன்ற ஆய்வுகளுக்கு முன்னரே தமிழி எழுத்துக்கள் அசோகன் பிராமிக்கு முற்பட்டது எனப் பல ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். “தமிழ்பிராமி பற்றி அண்மைக்காலம்வரை வெளிவந்துள்ள பல்வேறு ஆய்வுக்கருத்துக்களை ஒப்பிட்டு ஆராய்ந்து, தமிழ்பிராமிக் கல்வெட்டுக்கள் தமிழுக்கே உரியவை என்றும் இவ்வெழுத்து அசோகன் பிராமியிலிருந்து கடனாகப் பெறப்பட்டது அல்ல என்றும், இது கி.மு. 6ஆம், 5ஆம் நூற்றாண்டுகளுக்கு உரியது என்றும் 2004ஆம் ஆண்டிலேயே முன்னாள் அகழாய்வு இயக்குநர் நடன காசிநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார்-(7).

2டாக்டர் கிப்ட் சிரோமணி:

டாக்டர் கிப்ட் சிரோமணி அவர்கள் 1983 வாக்கிலேயே தமிழி எழுத்து அசோகன் எழுத்துக்கு முந்தையதாக இருக்க வேண்டும் என்கிற கருத்தை வெளியிட்டுள்ளார். ஐராவதம் மகாதேவன் அவர்கள் தமிழி(தமிழ் பிராமி) எழுத்தை மூன்று நிலைகளாகப் பிரித்துள்ளார் எனவும் பட்டிப்பொருளு என்பது இன்னொரு வகை எனவும் இந்த நான்கும் இல்லாத வேறொரு வகைதான் அசோகன்பிராமி எனவும் அவர் குறிப்பிடுகிறார். அசோகன் பிராமியில் ஒரேநிலைதான் இருக்கிறது எனவும், தமிழியில் பலநிலைகள் இருக்கிறது எனவும் ஆதலால் தமிழி எழுத்து தான் முதலில் தோன்றியிருக்க வேண்டும் எனவும் முதல்நிலை தமிழி எழுத்து அசோகன் பிராமிக்கு முற்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒன்று புதிதாகத் தோன்றுகிற போது பல நிலைகளை கடந்த பின்னரே புதியதாக உருவாகும். தமிழி தமிழகத்தில் தோன்றியதால்தான் இங்கு தமிழியில் பல நிலை எழுத்து வகைகள் இருக்கின்றன. அசோகன் பிராமி புதியதாகத் தோன்றியதல்ல. அது மற்றதைப் பார்த்து உருவாக்கப்பட்டது என்பதால் அங்கு பல நிலைகள் இல்லை என்பதே டாக்டர் கிப்ட் சிரோமணி அவர்களின் அடிப்படை வாதமாகும். இந்தக் கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியதும் சரியானதுமாகும்.

சம்பை கல்வெட்டில் உள்ள ‘சதியபுதோ’ என்கிற சொல்லில் உள்ள எழுத்துகளும் அசோகன் கல்வெட்டில் உள்ள ‘சதியபுதோ’ என்கிற சொல்லில் உள்ள எழுத்துகளும் எந்தவித வேறுபாடும் இன்றி ஒரே மாதிரி உள்ளன என்கிறார் அவர். ஆதலால் சேரன் செங்குட்டுவன், அதியமான் போன்றவர்கள் அசோகனின் சமகாலத்தவர்களா அல்லது 400வருடங்களுக்குப் பிறகு வந்தவர்களா என்கிற அடிப்படையான கேள்வியை 1983 வாக்கிலேயே  டாக்டர் கிப்ட் சிரோமணி அவர்கள் எழுப்பியுள்ளார். சேரன் செங்குட்டுவன், அதியமான் போன்றவர்களின் காலம் கி.பி. 2ஆம் நூற்றாண்டு என தற்போதைய வரலாற்று மாணவன் கருதுகிறான். அது உண்மையானால் சம்பை கல்வெட்டின் காலம் கி.பி. 2ஆம் நூற்றாண்டு என ஆகிறது. ஆனால் கி.பி. 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புகழ்பெற்ற சாதவ கன்ன அரசன் சதகர்ணியின் நாணயங்களில் உள்ள தமிழி எழுத்துகளுக்கும் சம்பை கல்வெட்டு எழுத்துகளுக்கும் இடையே மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது.

தற்பொழுது தமிழி எழுத்தின் அடிப்படையில் தரப்படும் காலத்திற்கு வலிமையான அடிப்படை எதுவும் இல்லை. ஆதலால் மாங்குளம், சம்பை ஆகிய கல்வெட்டுகளிலுள்ள தமிழி எழுத்தின் அடிப்படையில் பாண்டியன் நெடுஞ்செழியன், அதியமான் ஆகியவர்களுக்கு தற்போது தரப்பட்டிருக்கும் காலத்தை மறு பரிசீலனை செய்யவேண்டும் என்கிறார் அவர். அவருடைய கருத்துப்படி அசோகனும், அதியமானும், சேரன் செங்குட்டுவனும் சம காலத்தவர்கள். தற்போது அவர்களிடையே இருக்கும் 400 ஆண்டுகள் இடைவெளி நீக்கப்படவேண்டும் என 1983 லேயே அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்-(8). நமது ஆய்வு அதனைத்தான் செய்துள்ளது. அதியமானும் சேரன் செங்குட்டுவனும் நமது கணிப்புப்படி கி.மு. 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள், அதாவது அசோகன் காலத்தைச் சேர்ந்தவர்கள்.

தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், மொழியியல் போன்ற பல்வேறு சான்றுகளின் அடிப்படையில் தமிழி எழுத்து அசோகன் பிராமிக்கு முற்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அசோகன் பிராமிக்கு சுமார் 500 ஆண்டுகள் முந்தைய தமிழி எழுத்தை அசோகன் பிராமியில் இருந்து உருவானது என இன்றும் சில அறிஞர்கள் சொல்லி வருகின்றனர். இது குறித்து “தமிழகத்தில் சுமார் 500 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கில் இருந்த ஒரு வரிவடிவம் அசோகர் காலத்திற்குப் பின்பு, சமணர்களால் அல்லது சமண வணிகர்களால் தமிழகத்தில் புகுத்தப்பட்டது போன்ற கருதுகோள்களை உரசிப்பார்க்க வேண்டியதுள்ளது” என்கிறார் முனைவர் கா. இராசன்-(9)

இறுதியாக தமிழகத்தில் கிடைக்கும் தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், மொழியியல் தரவுகளின் அடிப்படையிலும், மண்ணடுக்கு ஆய்வின் அடிப்படையிலும், தமிழகத்தில் கிடைக்கின்ற பல்வேறு வகைப்பட்ட பண்பாட்டுக்கூறுகளின் தோற்றம், வளர்ச்சி, பரவல் ஆகியவற்றின் அடிப்படையிலும், குறியீடுகளின் அமைப்பு, எழுதும்முறை, எண்ணிக்கை, பரவல் ஆகியவற்றின் அடிப்படையிலும், தமிழகத்திற்கும் பிற பகுதிகளுக்கும் இடையே காணப்படுகின்ற பண்பாட்டு உறவுகளின் அடிப்படையிலும் தமிழகத்தில் கிடைக்கும் பழந்தமிழ் வரிவடிவங்களான தமிழ்பிராமிக் கல்வெட்டுகள் அசோகர் காலத்திற்கும் முற்பட்டவை என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை என்கிறார் முனைவர் க.இராசன் அவர்கள்-(10).

சங்கச் செவ்வியல் இலக்கியம்:

சங்ககாலச் செவ்விலக்கியம் கி.மு 6ஆம் நூற்றாண்டு முதல் கி.மு. முதல் நூற்றாண்டு வரை(கி.மு. 550-50) படைக்கப்பட்டு வந்துள்ளது எனத் தற்போதைய நமது கணிப்பு வெளிப்படுத்துகிறது. இந்த சங்ககாலச் செவ்விலக்கிய படைப்பாக்க காலத்திற்கு இரண்டு மூன்று நூற்றாண்டுகளுக்கு முற்பட்டதாகத் தமிழி எழுத்தின் தொடக்க காலம் இருந்திருக்கவேண்டும். அதன் அடிப்படையில் தமிழி எழுத்தின் தொடக்ககாலத்தை கி.மு 8ஆம் நூற்றாண்டு எனக் கணிக்கலாம். பொருந்தல் அகழாய்வு, கொற்கை அகழாய்வு, ஆதிச்சநல்லூர் அகழாய்வு ஆகிய மூன்று அகழாய்வு இடங்களிலும் கிடைத்த தமிழி எழுத்துப் பொறிப்புகளின் காலம் அறிவியல் ஆய்வு முடிவுகளின்படி கி.மு. 8ஆம் நூற்றாண்டு எனக் கண்டறியப்பட்டுள்ளது.

சங்ககால செவ்வியல் இலக்கியப் படைப்பாக்க காலத்தின் அடிப்படையிலும் தமிழி எழுத்தின் காலம் கி.மு 8ஆம் நூற்றாண்டு எனக் கணிக்கப்பட்டுள்ளது. ஆதலால் மேற்கண்ட பல்வேறு தரவுகளின் படி, தமிழி எழுத்தின் தொடக்க காலத்தைக் கி.மு. 8ஆம் நூற்றாண்டு என உறுதிபடக் கூறலாம்.  தமிழ் இலக்கியத்தின் தொடக்ககாலம் கி.மு. 750 என முன்பே கண்டறிந்துள்ளோம். ஆதலால் அதற்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் எழுத்து வடிவத்தைப் பயன்படுத்தியிருக்கவேண்டும். தமிழகத்தில் கி.மு. 1000 வக்கில் குறியீடுகள் ஒரு எழுத்து வடிவமாக பயன்படுத்தப்பட்டுள்ளது என அறிய முடிகிறது. ஆதலால் தமிழகக் குறியீடுகள் குறித்து அறிதல் அவசியமாகிறது.

 

குறியீடுகள்(GARAFFITI SYMBOLS):

 

தமிழகத்தின் புதிய கற்கால கட்டத்திலும் அதற்குப் பிந்தைய முதுமக்கள் தாழி மற்றும் பெருங்கற்படை காலகட்டத்திலும் உருவான ஓவிய வரைவுகளில், மட்பாண்டங்களில், காசுகளில், அணிகளில், முத்திரைகளில், கல்வெட்டுகளில் இறுதியாகத் தமிழ் எழுத்துகள் இடையேயும் கூட ‘குறியீடுகள்’ இடம்பெற்றுள்ளன. தமிழகக் குறியீடுகளில் பல, பண்டைக்கால சுமேரிய, எகிப்திய, சீன, கிரேக்க, யப்பான் நாட்டுக் குறியீடுகளோடும், முக்கியமாகச் சிந்து வெளிக் குறியீடுகளோடும் ஒப்புமை உடையனவாக உள்ளன. அவைகளின் தரவுகள் இங்கு கீழே தரப்பட்டுள்ளன-(11).

1.சுமேரியன், அக்கேடியன், இட்டடைட் ஆகிய மூன்று தொன்மையான மொழி எழுத்து மரபுகளுடன் பெருங்கற்காலத் தமிழகக் குறியீடுகளின் வடிவங்கள் ஒப்புமை உடையனவாக உள்ளன(பக்:237).

2.சுமேரிய-எகிப்து மொழியில், இலினியர்(Linear-B)  எழுத்துமுறை கலந்திருக்கிறது. இலினியர் எழுத்துக்களில் 87 குறியீடுகள் உயிர்மெய் எழுத்துக்கள். அந்த 87 எழுத்துக்களும் தென்னிந்தியக் குறியீடுகள், வரிவடிவங்களோடு ஒப்புமை உடையனவாக உள்ளன(பக்: 248).

3.தமிழகத்தில் கண்டறியப்பட்ட பண்டைய குறியீடுகளையும், சிந்து வெளிக் குறியீடுகளையும்  தொகுத்துக் காணும் பொழுது அவற்றிற்கு இடையே காணப்படும் வரைவு ஒற்றுமைகளும், மொழி, எழுத்து குறித்த சிந்தனைகளும் ஒரு தொடர்ச்சியான வரலாற்றைப் பெற்றுத் திகழ்கின்றன என்பதை  அறிய முடிகிறது(பக்:252). மேலும் சிந்துவெளிக் குறியீடுகளின் எழுத்துரு அமைப்பில் தமிழின் தொடர்பையும், தொல்குறியீடாகிப் பின்னர் மொழியாக்கம் பெற்ற தமிழியில் சிந்துவெளிக்குறியீடுகளின் ஒப்புமையையும் காணமுடிகிறது (பக்:253).

4.தமிழகப் பெருங்கற்காலக் குறியீடுகளுக்கும், கி.மு. 500 – கி.பி. 200 ஆம் காலத்திய யப்பானிய யாயோய்(Yayoi)  பண்பாட்டு மட்பாண்டக் குறியீட்டு வரைவுகளுக்கும் இடையே தெளிவான வடிவ ஒற்றுமை இருக்கிறது(பக்:230).

5.சீனம், எகிப்து, இலங்கை, யப்பான், கிரேக்கம் ஆகிய நாடுகளின் 130 பழங்காலக் குறியீடுகள் தமிழகப் பெருங்கற்காலக் குறியீடுகளுடன் ஒப்பிடப்பட்டுள்ளன(பக்:239-244). அதில் எகிப்து நாட்டுக் குறியீடுகளோடு 121 குறியீடுகளும், சீனத்தோடு 103 குறியீடுகளும், யப்பானோடு 94 குறியீடுகளும், கிரேக்கத்தோடு 64 குறியீடுகளும் ஒப்புமை கொண்டுள்ளன என்பது கணக்கிட்டு அறியப்பட்டது.

6.பண்டைய உலக நாகரிகங்களின் சமகாலத்துப் பண்பாட்டிற்கு இணை -யாகவே சங்ககாலத் தமிழகம் திகழ்ந்தது என்பதை, உறுதி செய்யும் வண்ணம் இப்பெருங்கற்காலக் குறியீடுகள் அமைகின்றன(பக்:262).

மேலே தரப்பட்ட தரவுகள் கி.மு.3000 முதல் கி.மு.1500 வரையும், கி.மு.800 முதல் கி.மு. 200 வரையுமான இரு காலத்தைக் கொண்டவை. இதில் எகிப்து, சிந்து, சீனம், சுமேரியா போன்ற பண்டைய நாகரிகங்கள் முதல் காலத்தையும், இலங்கை, யப்பான், கிரேக்கம் போன்ற நாடுகள் இரண்டாம் காலத்தையும் சார்ந்தவை-(12). பண்டைய நாகரிக நாடுகளின் குறியீடுகளோடு கொண்டுள்ள இந்த ஒப்புமையைத் தற்செயலானவை எனக் கருத இயலாது.  பண்டைய தமிழகம் இந்த நாடுகளோடு பண்டையகாலம் முதல் வணிகப் பண்பாட்டுத் தொடர்பைக் கொண்டிருந்தன என்பதற்கு இக்குறியீடுகளின் ஒப்புமை ஒரு ஆதாரமாகத் திகழ்கிறது எனலாம்.

குறியீடுகள்-எழுத்து வரி வடிவம்:

 

அகழாய்வுகளின், கீழ் அடுக்கில் உள்ள மட்பாண்டங்களில், அதிக அளவு குறியீடுகளும், குறைந்த அளவு தமிழி எழுத்துக்களும் உள்ளன. அதே சமயம் மேல் அடுக்குகளில் உள்ள மட்பாண்டங்களில், அதிக அளவு தமிழி எழுத்துகளும் குறைந்த அளவு குறியீடுகளும் உள்ளன. அதாவது அகழாய்வுகளில் தமிழி எழுத்துகள் கிடைக்கத் தொடங்கியவுடன் குறியீடுகளின் எண்ணிக்கை குறையத் தொடங்குகிறது எனலாம். இதன் காரணமாகவும், தமிழி எழுத்துகள் இடையே இக்குறியீடுகள் இடம்பெறும் தன்மை காரணமாகவும், தமிழி எழுத்து பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பு, கருத்துப் பரிமாற்றத்திற்கான வரி வடிவமாக, தமிழர்களால் இக்குறியீடுகள் பயன்படுத்தப்பட்டன எனலாம். “தமிழகத்தில் அகழாய்வு செய்யப்பட்ட அனைத்து இடங்களிலும் இக்குறியீடுகள் கிடைப்பதாலும், தமிழ் வரிவடிவங்களைப் போன்றே இவையும் இடமிருந்து வலமாக எழுதப்பட்டுள்ளதாலும், தமிழ் பிராமி (தமிழி) வரி வடிவம் வழக்கில் வந்தவுடன் இக்குறியீடுகளின் பயன்பாடு குறைந்து வருவதாலும், பானை ஓடுகள், நாணயங்கள், கல்வெட்டுகள் மற்றும் மோதிரங்கள் என எண்ணற்ற ஊடகங்களின் வாயிலாக இவை வெளிப்படுவதாலும், சங்க காலத்திற்கு முன்பிருந்தே அதாவது சிந்து சமவெளிப் பண்பாடு தொட்டு, சில வடிவ மாற்றங்களுடன் தொடர்ந்து இவை இருந்து வந்துள்ளதாலும், தமிழ் பிராமி (தமிழி) வரி வடிவம் தமிழகத்தில் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பாக இக்குறியீடுகள் சங்ககால மக்களின் எண்ணங்கள் அல்லது கருத்துப் பரிமாற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட ஒருவகை வரிவடிவமே என எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது” என்கிறார் முனைவர் கா.இராசன் அவர்கள்-(13).

தனது ‘பண்டையத் தமிழக வரைவுகளும் குறியீடுகளும்’ என்கிற நூலில் “குறியீடுகளின் எண்ணிக்கைகளும் பயன்பாடும் மிகுதியாக இருக்கும் காலத்தில் எழுத்துகளின் பொறிப்புக் குறைவாகவும், எழுத்துப் பொறிப்பு மிகுதியாகும் பொழுது குறியீடுகளின் பொறிப்புக் குறைந்தும் அமைகின்றன என்பது இந்த ஆய்வால் உறுதி செய்யப்படுகின்றது. இந்த ஆய்வு முடிவினைக் காணும் பொழுது குறியீடுகளை முதலில் ஒலி எழுத்துகளாகவோ, பொருள் வெளிப்பாட்டு வரைவுகளாகவோ அக்காலத்தில் பயன்படுத்தி வந்துள்ளனர் எனக் கருதலாம்“ என்கிறார் முனைவர் இராசு.பவுன்துரை அவர்கள்-(14)

மேலும், இக்குறியீடுகளின் வளர்ச்சி தந்த பங்களிப்பு தான், எழுத்துருவாக்கமும் மொழியாக்கமும் என்பதோடு, தமிழகப் பெருங்கற் காலத்து மட்பாண்டக் குறியீடுகள், தமிழி அல்லது பிராமி எழுத்துத் தோற்றத்தையும் அதன் வளர்ச்சிக் கூறுகளையும் அறிய உதவும் அடிப்படைச் சான்றுகளாகவும் உள்ளன என்கிறார் அவர். இறுதியாக “தமிழ் மொழியின் வளர்ச்சியில், குறியீடுகளின் பங்களிப்பு தனிச் சிறப்பிற்குரியதாகவும், எழுத்துச் சான்றுகளாக மாற்றம் பெறுவதற்கு முன்னர் வலுவான வரைவுடன் கூடிய தகவல் தொடர்புச் சாதனமாகவும், குறியீடுகள் திகழ்ந்தன எனக் கருதலாம்“ என்கிறார் முனைவர் திரு. பவுன்துரை அவர்கள்-(15). திரு. இராசன் மற்றும் திரு. பவுன்துரை ஆகியவர்களின் கருத்துப்படி தமிழி எழுத்துக்கு முன்பு, தமிழகத்தில் இக்குறியீடுகள் மிக நீண்ட காலமாக கருத்துப் பரிமாற்றத்திற்கு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன என்பது உறுதியாகிறது. மேற்கண்ட இருவரும் சிந்துவெளி எழுத்துகளுக்கும் தமிழக குறியீடுகளுக்கும் இடையே நல்ல ஒப்புமை உள்ளது என்பதையும் தங்கள் நூல்களில் தெரிவித்துள்ளனர். பண்டைய தமிழ் மக்கள் கி.மு.1000 ஆண்டு வாக்கிலேயே ஒருவகையான எழுத்துப்பொறிப்புகளை அல்லது வரிவடிவத்தை தமது கருத்துப் பரிமாற்றத்திற்குப் பயன்படுத்தினர். தமிழகத்தில் இக்குறியீடுகள் பரவலாகக் கிடைப்பதால் இந்நிலையை அடையப் பல்லாண்டு காலம் ஆகியிருக்கவேண்டும் என்கிறார் முனைவர் கா. இராசன் அவர்கள்-(16).

பார்வை:

  1. Porunthal Excavations prove existence of Indian scripts in 5th century BC : expert , News paper Dated 15.10.2011,

2.PALANI EXCAVATION  TRIGGERS  FRESH DEPATE- THE HINDU  News paper Dated  29-8-2011.

3.முன்னாள் அகழாய்வுத் துறை இயக்குநர் நடனகாசிநாதன் அவர்கள், ஏப்ரல்-2006, Tamils Heritage, Page:31.

4.Rudimentary Tamil-Brahmi Script  unearthed at adichanallur, THE HINDU Newspaper Dated 17.2.2005

5.Three of them(human skeletons), which may be 2,800 years old, bear inscriptions that resemble the early Tamil Brahmi script: , THE HINDU  Newspaper Dated 26.5.2004.

6.அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் அ. இராமசாமி அவர்கள் நூல்: தொன்மைத்தமிழர் நாகரிக வரலாறு, டிசம்பர் 2013, பக்: 61, 62;    D. VENKAT RAO  et al.,  RECENT  SCIENTIFIC  STUDIES  AT  ADICHANALLUR:  A PRE HISTORIC MINING SITE  IN  SANGAM:  NUMISMATICS  AND CULTURAL  HISTORAY  CHENNAI- 2006,    PP.  150-151;         .S.BADRINARAYANAN, OP.CIT., P-38;     B.SASISEKARAN et al. ADICHANALLUR:  A PRE HISTORIC MINING SITE IN INDIAN JOURNAL OF HISTORY OF SCIENCE, 45. 3, 2010,  P-383. &  adichanallur: a prehistoric mining site – Indian National … http://www.insa.nic.in/writereaddata/UpLoadedFiles/IJHS/Vol45_3_3_BSasisekara.pdf

7.தொகை இயல்-பேராசிரியர் அ. பாண்டுரங்கன், பக்: 193; Date of early Tamil Epigraphs: Journal of Tamil Studies No. 65, June, 2004.

8.கிப்ட் சிரோமணி அவர்களின் இணையதளப் பக்கம். “WWWDR. GIFT SIROMONEY’S HOME PAGE”.

9, 10.முனைவர் கா. இராசன் அவர்கள், ‘தொல்லியல் நோக்கில் சங்ககாலம்’ உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், 2010, பக்: 77.

11.முனைவர் இராசு பவுன்துரை அவர்கள், “பண்டையத்தமிழக வரைவுகளும் குறியீடுகளும்” உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2004, பக்: 237, 248, 252, 253, 230, 239-244, 262.

  1. “ “ பக்:263.

13.முனைவர் கா. இராசன் அவர்கள், ‘தொல்லியல் நோக்கில் சங்ககாலம்’ உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், 2010, பக்: 55, 56.

14.முனைவர் இராசு பவுன்துரை அவர்கள், “பண்டையத்தமிழக வரைவுகளும் குறியீடுகளும்” உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2004, பக்: 257.

  1. “ “ பக்: 263.

16.முனைவர் கா. இராசன் அவர்கள், ‘தொல்லியல் நோக்கில் சங்ககாலம்’ உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், 2010, பக்: 74, 56.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *