குறுந்தொகையில் பெண்கவிஞர்களின் பாடலில் நகை மெய்ப்பாடு வழி பெண் மொழியாடல்
குறுந்தொகையில் பெண் கவிஞர்களின் பாடலில் நகை மெய்ப்பாடு வழி பெண் மொழியாடல்
சூர்யலெக்ஷ்மி.ப , முனைவர்ப்பட்ட ஆய்வாளர், தமிழ் உயராய்வு மையம், தமிழியல் துறை, ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி, திருநெல்வேலி.
முன்னுரை:-
தொல்காப்பியர் கூறிய மெய்ப்பாட்டினை முன் வைத்து குறுந்தொகையில் ‘நகை’ மெய்ப்பாடு வழி பெண் மொழியினை ஆய்வதாக இக்கட்டுரையானது அமைகிறது.
மெய்ப்பாடு விளக்கம்:-
மெய்ப்பாடு என்பது உள்ளத்தில் நிகழும் குறிப்பினை வெளிப்படுத்துவது என்பதாகும். மெய்-உடல், பாடு-நிகழும் தன்மை. உள்ளத்தில் தோன்றும் நிகழ்ச்சிக்கு ஏற்ப உடலின்கண் ஏற்படும் வேறுபாடு மெய்ப்பாடு என்று இளம்பூரணார் கூறுகிறார். நகை முதலாகிய பொருண்மை வெளிப்படுத்துதல் மெய்ப்பாடு என்பது பேராசிரியர் கருத்தாகும். (வாழ்வியற்களஞ்சியம், 2008, ப:85)
தொல்காப்பியத்தில் மெய்ப்பாடு:-
நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்ற எண் வகை மெய்ப்பாடும் பொது மெய்ப்பாடுகளாகும். ஒவ்வொரு பொது மெய்ப்பாடுகளிலும் நான்கு சிறப்பு மெய்ப்பாடுகள் உள்ளன. அவை 32 மெய்ப்பாடுகள் ஆகும். பிற மெய்ப்பாடுகள் 32, அகத்திணைக்குரிய மெய்ப்பாடுகளில் களவுக்கான மெய்ப்பாடுகள் புணர்ச்சிக்கு முன் மூன்று மெய்ப்பாடுகள், புணர்ச்சிக்கு பின் மூன்று மெய்ப்பாடுகள் அவை ஒவ்வொன்றிலும் நான்கு மெய்ப்பாடுகள் மொத்தம் 24 மெய்ப்பாடுகள் ஆகும். அகத்திணைக்குரிய பிற மெய்ப்பாடுகள் 20, கற்பு மெய்ப்பாடுகள் 10, மொத்த மெய்ப்பாடுகள் 126 ஆகும்.
நகை-விளக்கம்:-
தொல்காப்பியர் மெய்ப்பாட்டியல் என்ற இயலில் பொது மெய்ப்பாடு எண் வகையில் முதலாவதாக நகையைக் கூறுகிறார்.
நகை என்ற சொல்லிற்கு ஆபரணம், இகழ்ச்சி மகிழ்ச்சிதோன்றக் கூறுமலங்காரம், இன்பம், எயிறு, ஒளி, களிப்பு, சிரிப்பு, நகையென்னேவல், பல், பூ, மொட்டு, மலர்ச்சி (தமிழ் மொழி அகராதி, 1984,ப:851) ஆகியவையாகும், எள்ளல் என்ற அவமதிச்சிரிப்பு, இழிவாகப் பேசல், தள்ளல், நகைத்தல், நிந்தை என்ற பொருள்படும் (தமிழ் மொழி அகராதி 1984 ப:321). இளமை என்பது உன்மத்தம், பாலப்பருவம், வாலைப்பருவம் என்ற பொருளில் வரும் ( தமிழ் மொழி அகராதி, 1984 ப:246) பேதைமை என்ற சொல் அறிவின்மை (தமிழ் மொழி அகராதி, 1984,ப:1069). மடன் என்பது அறிவின்மை இது பெண்கள் நாற்குணத்துமொன்று, கபடின்மை, புத்தியீனம் என்று பொருள்படும். தமிழ் மொழி அகராதியில் நா.கதிரைவேல் பிள்ளை பொருள் கூறுகிறார்
பரதர் எழுதிய வடமொழி ரசக் கோட்பாட்டில் சிருங்காரம், கரணம், வீரம், ரௌத்திரம், ஹாஸ்யம், பயானகம், பீபத்ஸம், அற்புதம், சாந்தம் ஆகும். இதில் ஹாஸ்யம் என்பது நகை என்று கூறப்படுகிறது.
நகை என்ற மெய்ப்பாட்டில் நான்கு சிறப்பு மெய்ப்பாடு பிறக்கும். அவை எள்ளல், இளமை, பேதைமை, மடன் என்பதாகும்.
“எள்ளல் இளமை பேதைமை மடனென்று
உள்ளப் பட்ட நகைதான் கென்ப” (தொல்.பொருள்.இளம்.மெய்ப்.நூ.எண்:248,).
இலக்குவனார் நகைக்குரிய மெய்ப்பாட்டினை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்துள்ளார். அவை பின்வருமாறு
“THEY SAY THAT LAUGHTER HAS REPROACH,
YOUTH, FOOLISHNESS AND FEIGNED IGNORANCE-
THESE FOUR- AS ITS SOURCE” (இலக்குவனார், 1998,ப:12)
நகைப் பிறக்கும் சூழலை உரையாசிரியர்களின் கருத்து பின்வருமாறு, நகை என்பது இகழ்ச்சியிற் பிறப்பது என்று இளம்பூரணர் கூறுகிறார். நகையென்பது சிரிப்பு, அது முறுவலித்து நகுதலும், அளவே சிரித்தலும், பெருகச் சிரித்தலுமென மூன்றென்ப என்று பேராசிரியர் கூறுகிறார். (பேராசிரியர் ஆண்டு:2007,ப:8) நகை என்பதற்கு THEY SAY LAUGHTER என்று இலக்குவனார் கூறுகிறார். (இலக்குவனார், 1998, ப:10) நகை என்பதற்கு முடவர்கள் நடக்கும் நடை, அறிவற்றோர் பேசும் பேச்சு, கவலை பெரிதுற்றுப் பேசுவோர் பேச்சு, பித்தர் பேச்சு, குழந்தை கூறும் மழலை, மெலியோர் கூறும் வலிமைப் பேச்சு, வலியோர் கூறும் எளிமைப் பேச்சு, கல்லார் கூறும் கல்வி, ஆரியர் கூறும் தமிழ், கூனர்செயல், குறளர் செயல், ஊமை செயல் ஆகிய பிற என்று செயிற்றியனார் கூறுகிறார்.
எள்ளல்:-
பேராசிரியர் எள்ளல் என்பது தான் பிறரை எள்ளி நகுதலும், பிறரால் எள்ளப்பட்டவழித் தான் நகுதலும் என இரண்டாகும் என்கிறார். (பேரா. 1998,ப:15). தமிழண்ணல் எள்ளல் என்பது இகழ்தல் என்கிறார். (தமிழண்ணல்,1986,4:49). பாரதியார் எள்ளல் என்பது நகைமொழி அதாவது கேலி என்கிறார்,(பாரதியார் 1986,)
அள்ளூர் நன்முல்லையாரின் பாடலில் தலைவன் வரையாது ஒழுகுவது முறையல்ல என்று தோழி கடிந்துரைந்தாள். தலைவி, தோழியிடம் நீ கூறுவதை விளையாட்டாக எடுத்தேன் இல்லையெனில் உன் நிலை என்னவாகும் என்று நகுகிறாள். ” யான்எவன் செய்கோ? என்றியான் அது, நகை என உணரேன் ஆயின், என்ஆ குவைக்கொல் நன்னுதல் நீயே” (குறுந் 96,2-4).
ஒக்கூர் மாசாத்தியாரின் பாடலில் கார் காலத்தில் தலைவியின் அருகில் தலைவன் இல்லை. கார் காலம் மாலை நேரம் தலைவியுடன் தலைவன் கூடி இருக்கும் நேரமாகும். அவ்வாறு அங்கே நிகழவில்லை, தலைவனுடன் இல்லாத தலைவியைக் கண்டு முல்லைப்பூவானது எள்ளி நகுவதாக அத்தலைவிக்கு தோன்றுகிறது.
“நகுமே தோழி! நறுந்தண் காரே” (குறுந் 126, 3-5). ஒக்கூர் மாசாத்தியாரின் மற்றொரு பாடலில் தலைவனுடன் இல்லாத தலைவியைக் கண்டு முல்லைப்பூ காட்டுப்பூனை சிரிப்பதைப் போன்று சிரிக்கின்றது. பாடலில் “இருவி சேர் மருங்கில் பூத்த முல்லை, வெருகு சிரித்தன்ன பசுவீ மென்பிணிக்” (குறுந் 220, 3-5). தலைவனுடன் கூடியிருப்பவர்களுக்கு கார்காலம் மாலைநேரமும், முல்லையின் மணமும் இன்பத்தைக் கொடுக்கும். பிரிந்து இருப்பவர்களுக்கு கார்காலத்தின் மாலைநேரமும், முல்லையின் மணமும் துன்பத்தை விளைவிப்பதாக உள்ளது.
பெண்கள் தங்கள் அனுபவங்களை மொழி வரம்புகளையும், சமூக வரம்புகளையும் மீறி பதிவு செய்யும் போது தான் பெண்ணிய மொழி உருவாகும் என்கிறார், எல்.இராமமூர்த்தி. ஓக்கூர் மாசாத்தியாரின் பாடலில் தலைவி தன் மண உணர்வின் இயல்பான வெளிபாட்டினை காணமுடிகிறது. ஓக்கூர் மாசாத்தியாரின் பாடலில் தலைவிக்கு கார்காலமும் மாலையும் துன்பத்தை தருவிப்பதாக உள்ளது.
ஔவையாரின் பாடலில் தலைவியின் பாங்காயினர் கேட்ப பரத்தை கூறியது. பரத்தை தான் புனல் விளையாட்டு சென்றால் தலைவனும் உடன்வருவான். எழினி பசுக்களைக் காத்ததைப் போல தலைவனின் மார்பை தலைவி காக்கட்டும் என்கிறார். இதில் தலைவியை தனக்குப் போட்டியாக பரத்தை கருதி அவளை எள்ளி நகுகிறாள். பரத்தையின் மொழியாடல் ” முனைஆள் பெருநிரை போல, கிளையொடு காக்க, தன்கொழுநன் மார்பே” என்பதில் காணமுடிகிறது
பேதைமை:-
பேதைமை என்பது அறிவின்மை என்று பேராசிரியர் (பேரா.1998,ப:15) தமிழண்ணல் (தமிழண்ணல் 1986, ப:49) பாரதியாரும் (பாரதியார் 1986) கூறுகிறார்கள்.
பொன்மணியாரின் பாடலில் பிரிந்த தலைவனை நினைத்து தலைவி வருந்தினாள். அத்தருணத்தில் இடியுடன் பெரிய மழை பெய்தது. அதனை கண்ட மயிலோ கார்காலம் என்று கூவி நின்றது. அவைகள் பேதைமையுடையது என்று தலைவி எண்ணுகிறாள். தலைவன் நேர்மையானவன், அவன் கார்காலத்தில் வருவேன் என்று வாக்குறுதியை கொடுத்தவனாக காணப்படுகிறான். இயற்கை தன் இயல்பில் மாறி நடந்தாலும் தன் தலைவன் மேல் அளவற்ற நம்பிக்கைக் கொண்டவனாக காணப்படுகிறாள். அதனால் தான் மயில்கள் கூவியதை பேதைமையுடையது என்று கருதுகிறாள்.பாடலில்,
” தாநீர் நனந்தலை புலம்பக
கூஉந் தோழி பெரும்பே தையவே” (குறுந் 391 8-9)
மடமை:-
மடமையென்பது பெரும்பான்மையுங் கொளுத்தக் கொண்டு விடாமை என்பதாகும். இது தன் மாட்டும் பிறர் மாட்டும் நிகழும் (பேரா.1998,ப:15) தமிழண்ணல் மடமை என்பது ஒன்றை வேறொன்றாகத் திரியக் கோடல் என்கிறார்( தமிழண்ணல், 1986 ப:49) பாரதியார் மடன் என்பதை ஏழைமை என்று கூறுகிறார்.
வெள்ளிவீதீயாரின் பாடலில் தலைவனின் பரத்தைமை உறவுநிலை அறிந்த தலைவி, பாலை நிலத்தில் யானை தன் தந்தத்தை பாறையில் குத்தியது போல, அவனோடு சிரித்தப் பற்கள் உடைபட்டு விழட்டும் என்கிறாள். இதில் தலைவன் உண்மையற்றவனாக தலைவிக்கு காணப்படுகிறான். அவனோடு கொண்ட உறவினை நினைத்து தலைவி மிகுந்த துன்பத்தை அடைந்து அவனோடு சிரித்த பற்கள் உடையட்டும் என்கிறாள். தலைவியின் மொழியாடல் பாடலில்,
“சுரம்செல் யானைக் கல்உறு கோட்டின்,
நும்மொடு நக்க வால்வெள் எயிறே” (குறுந் 169,1-3)
முடிவுரை:-
ஆண் கவிஞர்கள் பெண் மொழியினைப் பற்றி எழுதுவதற்கும், பெண் கவிஞர்கள் பெண் மொழியினைப் பற்றி எழுதுவதற்கும் வேறுபாடு உள்ளது. பெண் தனக்கான மனஉணர்வுகளின் சுதந்திரத்தை தன் கவிதை வாயிலாக வெளியிடும்போது அவளின் பெண் மொழி வெளிப்பட்டு அவளுக்கான அடையாளங்களாக மாறுகிறது. ஓக்கூர் மாசாத்தியாரின் பாடலில் கார்காலத்தில் மலரும் முல்லை தலைவியைக் கண்டு ஏளனமாக சிரிப்பதும், வெள்ளிவீதியாரின் பாடலில் பரத்தைக்கு எதிர் மொழியாக தலைவனுடன் சிரித்த பற்கள் உடைபடட்டும் என்கிறாள். பொன்மணியாரின் பாடலில் மயிலின் பேதைமையைக் கண்டு தலைவி நகுவதும், அள்ளூர் நன்முல்லையாரின் பாடலில் தலைவனை குறைகூறிய தோழியைக் கண்டு தலைவி சாடுவதும் பின்பு அதுகண்டு நகுவதும் இவ்வாறு பலவிதமாக நகையில் பெண் மொழியாடல் வெளிப்படுகிறது.
துணை நூற்பட்டியல்:-
- சிவலிங்கனார்.ஆ 1998 : தொல்காப்பியம் உரைவளம் பொருளதிகாரம், சென்னை.
- தாயம்மாள் அறவாணன் 2004 : மகடூஉ முன்னிலை பெண் புலவர் களஞ்சியம், சென்னை.
- முருகேசப்பாண்டியன்.ந 2014 : அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் சங்கப்பெண் கவிஞர்கள் முதல் ஆண்டாள் வரை