பழந்தமிழக வரலாறு -3
காலகட்டக் கணிப்பும், துல்லியமும்
கணியன்பாலன்
வரலாறு என்பது தற்செயலான நிகழ்வுகளால் ஆனது போல் தோன்றினாலும் அது தனக்கென வகுத்தளிக்கப்பட்ட விதிப்படிதான் இயங்கி வருகிறது. சமூகத்தின் பொருளாதார உற்பத்தி முறைதான் வரலாற்றின் திசைவழியை நிர்ணயிக்கிறது. மனித வரலாற்றில் ஆண்-பெண் உறவு நிலையை எடுத்துக்கொண்டால், காட்டுமிராண்டி காலத்தில் குழு மணமும், அநாகரிக காலத்தில் இணை மணமும் இருந்தது. நாகரிக காலத்தில் குடும்பமும், ஒருதார மணமும் உருவாகியது. நிலப்பிரபுத்துவக் காலத்தில் இருந்த கூட்டுக்குடும்பம் முதலாளித்துவம் வளர்ந்தபின் தனிக்குடும்பம் என ஆனது. நவீன முதலாளித்துவத்தின் அதீதத் தொழில்நுட்ப வளர்ச்சி, தனிக்குடும்பத்தைக் கேள்விக்குள்ளாகி உள்ளது.
வேளாண்மை உற்பத்தியை அடிப்படையாகக் கொண்ட நிலப்பிரபுத்துவ காலத்தில் நிலவிய அரசர்களின் ஆட்சி என்பது தொழில் புரட்சிக்குப்பின் ஏற்பட்ட முதலாளித்துவ காலத்தில் இல்லாதுபோய், மக்கள் ஆட்சி என்கிற சனநாயக ஆட்சி உருவானது. ஆனால் நவீன முதலாளித்துவத்தில் உருவான பன்னாட்டுக்குழுமங்களின் வளர்ச்சி, சனநாயகத்தை கேள்விக்குள்ளாக்கி, அதன் நிறுவனங்களைச் சீரழித்து, பணநாயகத்தை கொண்டுவந்துள்ளது. ஆகவே ஒவ்வொரு காலகட்டமும் அதற்கேயுரிய, பொருளாதார உற்பத்தி முறை, சமூக நிறுவனங்கள், சமூகச் சிந்தனைகள் முதலியனவற்றை ஒன்றிணைத்து அந்தந்த காலகட்டத்துக்குரிய வரலாற்றைப் படைக்கின்றன. ஆகவே அறிவியல் அடிப்படையில், தனக்கான விதிகளுக்குட்பட்டு வரலாறு இயங்குகிறது, என்பதுதான் இங்கு கவனம் பெறவேண்டிய மிகமுக்கிய விடயமாகும். நமது பழந்தமிழக வரலாறும் அதற்கு விதிவிலக்கல்ல. கி.மு. 750 முதல் கி.மு. 50 வரையான சங்ககாலப் பாடல்களில், கி.மு. 350க்கு முந்தைய சங்ககாலப் பாடல்கள் மிகக் குறைவு என்பதோடு அதில் ஆட்சியாளர்கள் குறித்த வரலாற்றுக் குறிப்புகள் எதுவும் இல்லை. ஆகையால் கி.மு. 350க்கு முந்தைய வரலாற்றைக் கட்டமைக்க இயலவில்லை.
சங்க இலக்கிய நூல்களான குறுந்தொகை(401), நற்றிணை(399), அகநானூறூ(400), ஐங்குறுநூறு(500), புறநானூறு(398), பதிற்றுப்பத்து(80), பரிபாடல்(22+11=33), கலித்தொகை(150) ஆகிய எட்டுத் தொகையின் 2361 பாடல்களும் பத்துப்பாட்டின் 10 பாடல்களும் சேர்ந்து மொத்தம் 2371 பாடல்கள் ஆகின்றன. இதனை 473 புலவர்கள் பாடியுள்ளனர். இவற்றில் பரிபாடல் (22+11=33), கலித்தொகை(150), பத்துப்பாட்டில் 2 பாடல்கள் என 185 பாடல்கள் போக, சங்ககாலகட்டத்தைச் சேர்ந்த தகடூர் யாத்திரை(48), முத்தொள்ளாயிரம் (108+22=130) ஆகியவற்றின் 178 பாடல்களைச் சேர்த்து மொத்தம் 2364 பாடல்கள் மட்டுமே ஆய்வு செய்யப்பட்டன.
இந்த ஆய்வின்படி 450க்கும் மேற்பட்ட புலவர்களில், கி.மு. 350 முதல் கி.மு. 50 வரையான காலகட்டத்தைச் சேர்ந்த 126(109+14=3) புலவர்கள் மட்டுமே வரலாற்றுக் குறிப்புகளைத் தந்துள்ளனர் என்பது கண்டறியப்பட்டது. இதில் 109 பேர் மட்டுமே புலவர்கள் ஆவர். மீதியுள்ள 17 பேரும் அரச குலத்தைச்சேர்ந்த கவிஞர்கள் ஆவர். அந்த 17 பேரில் பெருங்கோப்பெண்டு, பாரி மகளிர், தொண்டைமான் இளந்திரையன் ஆகிய மூவர் அரசர்கள் கணக்கில் சேர்க்கப்படவில்லை. “பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும்” என்ற எனது நூலில் உள்ள தரவுகளின் அடிப்படையில் காலகட்டம் வாரியாக இந்த 126 புலவர்கள், அவர்களது பாடல்கள் குறித்த எண்ணிக்கை அட்டவணை தயாரிக்கப்பட்டு கீழே தரப்பட்டுள்ளது. இந்த அட்டவணைப்படி 126 புலவர்கள் மொத்தம் 1517 பாடல்களைப் பாடியுள்ளனர். தகடூர் யாத்திரையில் பாடியவர்கள் இந்த 126 புலவர்களில் அடங்குவர். கி.மு. 350 முதல் கி.மு. 50 வரையான காலகட்டத்தைச் சேர்ந்த இந்த 126 புலவர்கள் போக வேறு புலவர்களும் இருக்கலாம். ஆனால் அவர்களின் பாடல்களில் வரலாற்றுக் குறிப்புகள் இல்லாததால் அவர்களின் காலத்தைக் கண்டறிய இயலவில்லை. எனினும் சுமார் மொத்தமுள்ள 473 புலவர்களில் நான்கில் ஒரு பங்கு புலவர்களின்(126) காலமும், சங்ககால மொத்தப் பாடல்களில்(2364) மூன்றில் இருபங்கு(1517) பாடல்களின் காலமும் காலகட்டம் வாரியாகக் கணிக்கப்பட்டுள்ளது. “தகடூர் யாத்திரை” நூலின் 48 பாடல்கள் 6ஆம் காலகட்டத்தைச் சேர்ந்தவையாகும். முத்தொள்ளாயிரத்தின் 130 பாடல்கள் பத்தாம் கால கட்டத்தைச் சேர்ந்தவையாகும்.
புலவர்கள், கவிஞர்கள், பாடல்கள் குறித்த அட்டவணை.:
காலகட்டம் புலவர்கள் கவிஞர்கள் மொத்தம் பாடல்கள்
முதல் 5 – 5 28
இரண்டாம் 11 2 13 95
மூன்றாம் 8 1 9 238
நான்காம் 7 2 9 56
ஐந்தாம் 14 1 15 255
ஆறாம் 16 2 18 293
ஏழாம் 16 2 18 113
எட்டாம் 16 3 19 170
ஒன்பதாம் 7 2 9 37
பத்தாம் 9 2 11 184
தகடூர் யாத்திரை (ஆறாம் காலகட்டம்) – 48
மொத்தம் 109 17 126 1517.
ஆகவே இந்த 126 புலவர்களின் 1517 பாடல்கள் மட்டுமே நமது காலகட்டக் கணிப்பு குறித்த ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மேற்கண்ட சங்ககாலப் பாடல்களில் உள்ள வரலாற்றுக் குறிப்புகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கோட்டியல் வரைபட முறையின் மூலம் கணிக்கப்பட்ட காலகட்ட ஆண்டுகள், கல்வெட்டுகள், நாணயங்கள், அகழாய்வுகள், இந்தியத் தமிழகத் தத்துவ வரலாறு, வெளிநாட்டார் குறிப்புகள், வட இந்திய வரலாறு, உலக வரலாறு, சிவப்பிந்திய, கிரேக்க, இரோம், ஆரிய இனக்குழு வரலாறுகள் போன்ற பிற வரலாற்று ஆய்வுகளின் காலக்கணிப்புகளோடு பொருத்தமாக இணைக்கப்பட்டுள்ளதன் காரணமாக, காலகட்ட அடிப்படையில் கணிக்கப்பட்ட ஆட்சியாளர்கள், புலவர்கள், வரலாற்று நிகழ்வுகள் ஆகியவற்றின் ஆண்டுகள் ஓரளவு துல்லியமானவை எனலாம். இவ்வாறு கணிக்கப்பட்ட காலத்தை அடிப்படையாகக் கொண்டுதான் “பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும்” என்ற எனது நூல் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை முன்பே குறிப்பிட்டோம். பெரும்பாலான சங்ககாலப் பாடல்களின் காலகட்ட ஆண்டுகள் நமக்குக் கிடைத்துள்ளது என்பதால் எதிர்காலத்தில் அவைகளைக் காலகட்ட அடிப்படையில் ஆய்வு செய்வதற்கான வாய்ப்பு நமக்குக் கிடைத்துள்ளது.
பொதுவாக ஒரு தலைமுறை என்பது சராசரியாக 25 ஆண்டுகள் ஆகும். ஒரு புலவர் சாதாரணமாகத் தனது தலைமுறை போகத் தனக்கு முந்தைய ஒரு தலைமுறை, தனக்கு பிந்தைய ஒரு தலைமுறை என மூன்று தலைமுறைப் புரவலர்களைப் பாட முடியும். அதற்கு மேல் பாடுவது என்பது சாதாரணமாக இயலாது. ஆகவே ஒரு காலகட்டத்துக்கான காலத்தை மூன்று தலைமுறைகள் எனக் கொண்டு 70 முதல் 80 ஆண்டுகளை, அதாவது சராசரியாக 75 ஆண்டுகளை ஒருகாலகட்டம் எனக் கணக்கில் கொள்ளப்பட்டுள்ளது. அதே சமயம் ஒரு காலகட்டத்துக்கும் இன்னொரு காலகட்டத்துக்கும் இடையே உள்ள இடைவெளி என்பது 20-30 ஆண்டுகள்தான் இருக்கும். சான்றாக முதல் மூன்று காலகட்டங்கள் வருமாறு 1.கி.மு. 350-270; 2.கி.மு. 330-250; 3.கி.மு. 300-230. இவ்விதமாக 10 காலகட்டங்களுக்கான காலங்களும் கணிக்கப்பட்டன.
ஒவ்வொரு காலகட்டமும் ஒரு தலைமுறைக் காலத்தை(25 ஆண்டுகள்) மட்டுமே கொண்டது எனினும், இக்காலகட்டங்களிடையே குறிப்பிடத்தக்கச் சில சிறப்பு விடயங்கள் இருப்பதை நாம் காண முடிகிறது.
1.முதல் காலகட்டத்தில் உதியன் சேரலாதனுடைய தலைமையில் கருவூரேரிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை கொங்குக் கருவூரைக் கைப்பற்றி அங்கு பொறையர்களின் சேர ஆட்சியை நிறுவினான். இதன் விளைவாக கரூரையும் அதைச்சுற்றியுமுள்ள கொங்குப் பகுதிகளையும் கொண்ட ஒரு புதிய சேர அரசு உருவாகி இருந்தது. கரூர் சோழர்களின் மேற்கு எல்லையில் இருக்கும் ஒரு முக்கிய ஊர் ஆகும். அங்கு ஒரு புதிய சேரகுல அரசு உருவாகி இருப்பது சோழர்களுக்குச் சேரர்களின் மேல் அச்சத்தையும் பகைமையையும் உருவாக்கி இருந்தது. இதன் விளைவாக முதல் காலகட்டத்தில் சோழன் பெரும்பூட் சென்னி நடத்திய கழுமலப்போர் தொடங்கி 9ஆம் காலகட்டத்தில் சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவன் நடத்திய கரூர்ப் போர் வரை சேரர்களுக்கும் சோழர்களுக்கும் இடையே பகைமையும் போரும் தொடர்ந்து நடந்து வந்தது. இதற்குக் கொங்குப்பகுதியில் சேரர்கள் உருவாக்கிய பொறையர்களின் சேர அரசுதான் முக்கியக் காரணமாகும். 9ஆம் காலகட்டக் கரூர்ப் போருக்குப்பின் சேரமான் மாக்கோதை கிள்ளிவளவனோடு சமாதானம் செய்து கொண்டான். அதன் பிறகு அப்பகைமை முடிந்து சேர, சோழர்கள் 10ஆம் காலகட்டம் வரை நட்போடு இருந்தனர்.
2.சேரர்கள் முதல் காலகட்டம் தொடங்கி 6ஆம் காலகட்டம்வரை சோழ பாண்டியர்களைவிட வலிமையோடும் பெரும்புகழோடும் இருந்தனர். 3ஆம் காலகட்டத்தில் முதல் கரிகாலன் காலத்தில் மட்டும் அவர்களின் வலிமை ஓரளவு குன்றியிருந்தது. ஆனால் 7ஆம் காலகட்டத்தில் நடந்த தலையானங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் தலையாலங்கானத்துப் போர் இந்நிலையை அடியோடு மாற்றியமைத்தது. தலையாலங்கானத்துப்போரும், அதன்பின் நடந்த முசிறிப்படையெடுப்பும் சேரர்களை 10ஆம் காலகட்டம் வரை வலிமை குன்றியவர்களாக ஆக்கியது. முதல் காலகட்டம் முதல் 6ஆம் காலகட்டம் வரை வலிமை குன்றியவர்களாக இருந்த பாண்டியர்கள் இப்போருக்குப்பின் 10ஆம் காலகட்டம் வரை ஓரளவு வலிமை மிக்கவர்களாக ஆனார்கள்.
3.சென்னிகுலச்சோழர்களும், பாண்டியர்களும் முதல் காலகட்டம் முதல் 10ஆம் காலகட்டம் வரை நட்பு கொண்டவர்களாகவே இருந்து வந்துள்ளனர். கிள்ளிகுலச் சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் மட்டுமே அவ்வப்பொழுது பகைமை இருந்து வந்தது. ஆனால் 7ஆம் காலகட்டத்துக்குப்பின் 10ஆம் காலகட்டம் வரை இரு குலச்சோழர்களும் பாண்டியர்களோடு நட்பு கொண்டவர்களாக ஆனார்கள். இதற்கு 7ஆம் காலகட்டத்தின் மாபெரும் வேந்தர்களாக இருந்த இரண்டாம் கரிகாலனுக்கும், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனுக்கும் இடையே நிலவிய நட்புதான் காரணம் ஆகும். இரண்டாம் கரிகாலன் சென்னிகுலச் சோழன் எனினும் கிள்ளிகுலச் சோழர்களையும் தம் மக்களாக அரவணைத்து ஆதரித்ததும் ஒரு முக்கியக் காரணம் ஆகும். இவன் கிள்ளிகுலச்சொழர்களின் பாழடைந்து போயிருந்த உறையூரைப் புகார் நகர் அளவுக்குப் புதுப்பித்து ஒரு பெரு நகராக ஆக்கினான். அதன் காரணமாக அதன்பின் வந்த சோழ வேந்தர்கள் உறையூரை சோழவேந்தர்களின் தலைநகரமாக ஆக்கினார்கள். இரண்டாம்கரிகாலனின் நடவடிக்கையால் இவனுக்குப்பின் சென்னி குலமும் கிள்ளி குலமும் இரண்டறக்கலந்துவிட்டது எனலாம்.
4.சிறு, குறு அரசுகளும் வேளிர்குல அரசுகளும் அழிக்கப்பட்டு அவைகளை வேந்தர் ஆட்சியில் இணைத்துக்கொள்ளும் பேரரசுக்கொள்கை சார்ந்த நடவடிக்கைகள் 5ஆம் காலகட்டத்தில் இருந்து சிறிது சிறிதாக தமிழகத்தில் இடம்பெறத் தொடங்கின. அதன் விளைவாக முதலில் ஓரியின் கொல்லிமலை சேரர்களின் ஆட்சிக்குள் கொண்டுவரப்பட்டது. அதன்பின் பாரி, அதியமான் போன்றவர்களின் ஆட்சிப்பகுதிகளும் மூவேந்தர் ஆட்சிக்குள் கொண்டுவரப்பட்டன. 10ஆம் காலகட்டத்துக்குள் பெரும்பாலான சிறுகுறு அரசுகள் அழிக்கப்பட்டு மூவேந்தர் ஆட்சியில் இணைக்கப்பட்டன. பேரரசுக்கொள்கையின் காரணமாக சேர, சோழ, பாண்டியர்களின் கிளை அரசர்களும் நீக்கப்பட்டனர். வேந்தர்களின் வேறு வேறு குலங்கள் ஒன்றாக ஆக்கப்பட்டு 10ஆம் காலகட்டத்தில் ஒருகுலம், ஒருவேந்தர் ஆட்சி உருவாகியது. சோழர்களின் சென்னி குலமும், கிள்ளி குலமும் ஒன்றாக ஆக்கப்பட்டு நலங்கிள்ளி சேட்சென்னி என்பவன் சோழ வேந்தனாக ஆனான். அதுபோன்றே குட்டுவன், கோதை ஆகிய சேர குலங்கள் ஒன்றாக ஆக்கப்பட்டு சேரமான் குட்டுவன் கோதை என்பவன் சேர வேந்தனாகவும், மாறன், வழுதி ஆகிய பாண்டிய குலங்கள் ஒன்றாக ஆக்கப்பட்டு பாண்டியன் கூடகாரத்துத்துஞ்சிய மாறன்வழுதி என்பவன் பாண்டிய வேந்தனாகவும் ஆனான். இவர்கள் மூவரும் 10ஆம் காலகட்ட இறுதிச் சங்ககால வேந்தர்கள் ஆவர்.
5.ஓரியைக்கொன்று கொல்லிமலையைச் சேரர்களுக்கு 5ஆம் காலகட்டத்தில் வழங்கிய மலையமான் காரியும் அவனது வாரிசுகளும் ஆறுமுதல் 8ஆம் காலகட்டம்வரை சோழர்களுக்கு ஆதரவாக இருந்தார்கள் எனினும் 9ஆம் காலகட்டச் சோழ வேந்தன், பேரரசுக்கொள்கையின் காரணமாக மலையமான் காரியினுடைய வாரிசுகளின் குறுநில அரசை அழித்து அதைத் தனது வேந்தர் ஆட்சியோடு சேர்த்துக்கொண்டான்.
6.பாரி, ஓரி, காரி, நள்ளி, ஆய் அண்டிரன், எழினி, பேகன் ஆகிய ஏழு வள்ளல்களும் 5ஆம், 6ஆம் காலகட்டத்தைச்சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களைப் பாடிய பெருஞ்சித்திரனார் 7ஆம் காலகட்டம். ஏழாம் காலகட்டக் குமணன், 10ஆம் காலகட்ட நல்லியக்கோடன் ஆகிய இருவரையும் சேர்த்து மொத்தம் 9 வள்ளல்கள் எனலாம்.
7.மூன்றாம் காலகட்டக் கழார்த்தலையார் 5ஆம் காலகட்டக் கபிலராலும், 4ஆம் காலகட்டப் பரணர் 6ஆம் காலகட்ட ஔவையாராலும், 5ஆம் காலகட்டக் கபிலர் 7ஆம் காலகட்ட நக்கீரராலும் பாடப்பட்டுள்ளனர். ஆகவே இத்தரவுகள் 3ஆம் காலகட்டம் முதல் 7ஆம் காலகட்டம் வரையான ஒரு வரலாற்றுத்தொடர்ச்சியை உறுதி செய்கிறது எனலாம். இவர்கள் போக 9ஆம் காலகட்ட கோட்டம்பலத்துத்துஞ்சிய மாக்கோதை என்ற சேர வேந்தன் முதல் காலகட்ட உதியஞ்சேரலாதனையும், 10ஆம் காலகட்ட இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் 6ஆம் காலகட்ட ஔவையாரையும் பாடியுள்ளார்.
8.புராணக் கதைகளை பாடலில் பாடுவதும், கடவுளோடு வேந்தனை ஒப்பிடுவதும், அவனை தெய்வநிலைக்கு உயர்த்துவதும் ஆகிய பேரரசுக் கொள்கை சார்ந்த பாடல்கள் எட்டாம் காலகட்டத்தில் இருந்து அதிகமாகின எனலாம். வேந்தனை தெய்வநிலைக்கு உயர்த்தும் இந்தச் சிந்தனை பத்தாம் காலகட்டத்தில் உச்சநிலையை அடைந்து. முத்தொள்ளாயிரம் போன்ற பாடல்கள் உருவாகி வேந்தனை நகர மகளிர் அனைவரும் ஒருதலைக் காதல்கொள்வது போன்ற கைக்கிளைப் பாடல்களும் அதிகமாகின. எட்டாம் காலகட்டப் பாண்டியன் நன்மாறனை, நக்கீரர், மருதன் இளநாகனார் போன்ற பெரும்புலவர்கள் கடவுள்களோடு ஒப்பிட்டார்கள். முதல் காலகட்டத்தில் இருந்து ஏழாம் காலகட்டம்வரை இதுபோன்ற பாடல்கள் சங்க இலக்கியங்களில் மிகமிகக் குறைவு எனலாம்.
9.பாண்டியர்களின் மதுரை என்கிற கூடல் நகரம் தமிழுடன் தொடர்பு கொண்டதாக ஏழாம் காலகட்டத்தில் இருந்து மாறத்தொடங்கியது. ஏழாம் காலகட்ட தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் பாண்டிய அரசில் இருந்த “புலவர்கள் அவை“ யின் தலைவராக பெரும்புகழும் சிறந்த அறிவும் உடைய மாங்குடி மருதனார் என்கிற புலவர் இருந்தார். அதுமுதல் பாண்டிய நாட்டில் தமிழ் புலவர்களுக்கு மிக அதிக மதிப்பும் மரியாதையும் வழங்கப்பட்டு வந்தது என்பதோடு மிக அதிகமான புலவர்கள் பாண்டிய நாட்டையும் மதுரை நகரையும் சேர்ந்தவர்களாக இருந்தனர். இவைகளின் காரணமாக ஏழாம் காலகட்டம் முதல் மதுரை நகரானது தமிழ் மதுரையாகக் கருதப்பட்டது. எட்டாம் காலகட்டப் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி அகநானூறைத் தொகுப்பித்தான். பத்தாம் காலகட்டப் பாண்டியன் கூடகாரத் துஞ்சிய மாறன் வழுதி நற்றிணையைத் தொகுப்பித்தான். இப்படி மதுரையானது தமிழ் வளர்த்த மதுரையாக ஏழாம் காலகட்டத்தில் இருந்து மாறிப்போனதால் மதுரையைத் ‘தமிழ்மதுரை’ என்று அழைக்கும் வழக்கம் உருவானது. அதனால்தான் பத்தாம் காலகட்ட நல்லூர் நத்தத்தனார் மதுரையைக் குறித்துப் பாடும் பொழுது “தமிழ் நிலைபெற்ற மதுரை” என்கிறார். ஆறாம் காலகட்டம்வரை தமிழை மதுரையோடு இணைத்துச் சொல்லும் வழக்கம் இருக்கவில்லை.
10.தமிழரசுகளிடம் ஐக்கியக் கூட்டணி மிக நீண்ட காலமாக இருந்து வந்துள்ளது என்பதை காரவேலன் கல்வெட்டும், மாமூலனாரின் அகம் 31ஆம் பாடலும் உறுதி செய்துள்ளன. மூவேந்தர்களிடையே பகைமையும், போரும் இருந்து வந்தாலும் தமிழர் அல்லாத பிற அரசுகளோடு போர் புரியும் பொழுது தமிழரசுகள் ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டும் என்பதும் தமிழ் அரசுகளிடையே கடற்போர் நடக்கக் கூடாது என்பதும் ஒரு மீறப்படாத உடன்படிக்கையாகும். சங்ககாலத்துவக்கம் முதல் தமிழரசுகள் பெரும் கடற்படைகளைக் கொண்டிருந்தபோதிலும் அவைகள், கடம்பர், பரதவர் போன்றவர்களை அடக்கவும், தமிழர் அல்லாத பிரதேசங்களின் கடற்கரை நகரங்களைக் கொள்ளையடிக்கவும், அவைகளைத் தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் வைக்கவும், தமிழர்களின் கடல்வணிகத்தைப் பாதுகாக்கவும் பயன்படுத்தப்பட்டதே ஒழிய தமிழரசுகள் தங்களுக்குள் போரிட்டுக் கொள்ளவும், ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளவும் பயன்படுத்திக் கொள்ளப்படவில்லை.
இம்மரபு 7ஆம் காலகட்டத்தில் கி.மு. 175-170 வாக்கில் முதல் முறையாக மீறப்பட்டு, சேரர்களின் முசிறித் துறைமுகத்தை பாண்டியர்களின் கடற்படை தாக்கிக் கொள்ளையடித்துச் சென்றது. இதன் விளைவாக கலிங்க மன்னன் காரவேலன் தமிழர்களின் காவல் அரணாகக் கலிங்கத்தில் இருந்த பித்துண்டா நகரத்தைத் தாக்கிக் கைப்பற்றிக்கொண்டதாகவும் 1300 ஆண்டுகாலமாக இருந்துவந்த தமிழரசுகளின் ஐக்கியக் கூட்டணியை உடைத்து விட்டதாகவும் தனது அத்திக்கும்பா கல்வெட்டில்(கி.மு. 165) பொறித்து வைத்தான். முதல் காலகட்டம் முதல் பத்தாவது காலகட்டம் வரை, இந்த ஒருமுறை மட்டுமே கடற்படை கொண்டு மூவேந்தருக்குள் தாக்கிக்கொள்ளக்கூடாது என்ற மரபு மீறப்பட்டு முசிறி தாக்கப்பட்டது. அதன்பின் அந்த மரபு மீறப்படவில்லை.
11.வடநாட்டுப்படையெடுப்பு, வடதிசைப் படையெடுப்பு ஆகியவற்றின்போது தமிழரசுகளிடையே ஒற்றுமை இருந்து வந்துள்ளது. அது சில சமயங்களில் வலிந்து திணிக்கப்பட்ட ஒற்றுமையாகவும் இருந்தது. சான்றாக முதல் கரிகாலன், சேரன்செங்குட்டுவன் ஆகியவர்காலத்தில் ஏற்பட்ட ஒற்றுமை வலிந்து திணிக்கப்பட்ட ஒற்றுமை எனலாம். ஆனால் இப்படையெடுப்புகள் அனைத்துத் தமிழ் அரசுகளுக்கும் நன்மை தருவதாக இருந்ததால் அவை இப்படையெடுப்புகளை ஆதரித்தன என்பதோடு விருப்பத்தோடு அதில் அவை பங்குகொண்டன எனலாம். பத்து காலகட்டங்களில் 6, 8 ஆகிய இரு காலகட்டங்களைத்தவிர பிற காலகட்டங்களில் இப்படையெடுப்புகள் நடந்தன. இமயவரம்பன், சேரன்செங்குட்டுவன், நலங்கிள்ளி ஆகிய மூவரும் வடநாட்டுப் படையெடுப்புக்களை நடத்தினர். இதர ஐந்துபேர் வடதிசைப் படையெடுப்புகளை நடத்தினர். தமிழரசுகளிடையே இருந்த ஐக்கிய கூட்டணியும், தமிழர் அல்லாத பிற அரசுகளோடு போர் புரியும் பொழுது தமிழரசுகள் ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டும்; தமிழ் அரசுகளிடையே கடற்போர் நடக்கக் கூடாது போன்ற மரபுகளும் தான் தமிழரசுகள் மௌரியப்பேரரசை தோற்கடித்ததற்கும், வடநாட்டு, வடதிசைப் படையெடுப்புகளை வெற்றிகரமாக நடத்தியதற்கும் காரணம் எனலாம்.
12.பதிற்றுப்பத்தும், ஐங்குறுநூறும் ஏழாம் காலகட்டச் சேரன் யானைக்கண் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையால் தொகுப்பிக்கப்பட்டது. அகநானூறு எட்டாம் காலகட்டப் பாண்டியன் கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதியால் தொகுப்பிக்கப்பட்டது. ஆதலால் பதிற்றுப்பத்து, ஐங்குறுநூறு ஆகியவற்றைப் பாடிய புலவர்கள், அவர்களால் பாடப்பட்ட வேந்தர்கள், அரசர்கள், இதர ஆட்சியாளர்கள் முதலானோர் 8 முதல் 10 வரையான காலகட்டங்களைச் சேர்ந்தவர்களாக இருக்க மாட்டார்கள். அது போன்றே அகநானூறு எட்டாம் காலகட்டத்தைச் சேர்ந்தது என்பதால் அதில் பாடிய புலவர்களும், பாடப்பட்ட புரவலர்களும் 9ஆம், 10ஆம் காலகட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க மாட்டார்கள். அகநானூறு எட்டாம் காலகட்டம் என்பதால் ஒரு சில 9ஆம் காலகட்டத்தைச் சேர்ந்தவர்கள் இடம்பெற வாய்ப்புள்ளது. ஆனால் கண்டிப்பாக 10ஆம் காலகட்டத்தைச் சேர்ந்தவர்கள் இடம்பெற மாட்டார்கள்.
தமிழக வரலாற்றில் ஒரு காலகட்டத்தில் நடந்த நிகழ்வு அடுத்த காலகட்டங்களில் ஏற்படுத்திய விளைவுகள், ஒரு சில காலகட்டங்களில் இருந்த தொடர்ச்சி வேறு சில காலகட்டங்களில் இல்லாது போனது, தமிழக அரசுகளிடம் இருந்த ஐக்கியக் கூட்டணி, வேந்தர் குலங்களிடையே இருந்த நட்பும், பகைமையும் ஒரு சில காலகட்டங்களுக்குத் தொடர்ந்து இருந்து வந்திருப்பது முதலியன குறித்து மேலே தரப்பட்ட விடயங்கள் பேசுகின்றன. இவ்விடயங்கள் சில முடிவுகளைத் தருகின்றன. சான்றாக 1.ஏழாம் காலகட்டத்திலிருந்து பாண்டியர்கள் வலிமை மிக்கவர்களாகவும், சேரர்கள் வலிமை குன்றியவர்களாகவும் ஆனார்கள். 2.வேந்தனைக் கடவுளோடு ஒப்பிடும் பாடல்கள் முதல் ஏழு காலகட்டப் பாடல்களில் அதிகளவு இருக்காது. 3.பதிற்றுப்பத்துப் பாடல்களில் பாடப்பட்ட வேந்தர்கள் 8 முதல் 10ஆம் காலகட்டத்தைச்சேர்ந்த வேந்தர்களாக இருக்க மாட்டார்கள். 4.அகநானூற்றில் 10ஆம் காலகட்டத்தைச் சேர்ந்த புலவர்களோ, புரவலர்களோ இருக்கமாட்டார்கள். 5.பத்து காலகட்டங்களிலும் சென்னிகுலச்சோழ வேந்தர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இடையே போர் நடந்திருக்காது போன்றவை சில முடிவுகளாகும். ஆகவே இதுபோன்ற பல முடிவுகளை எடுக்கக் கூடிய அளவு நமது காலகட்டங்களும் அதில் நடந்த நிகழ்வுகளும் அவைகளுக்கான ஆண்டுகளும் ஓரளவு துல்லியமாகக் கணிக்கப்பட்டுள்ளன எனக்கருதலாம்.
ஆதார நூல்: பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர்வெளியீடு, சூன்-2016, பகுதி – 4, பக்: 381–681.