வள்ளுவத்தில் நவீன மேலாண்மைச் சிந்தனைகள்

0

-முனைவர் வீ. மீனாட்சி

தமிழ்ச்செவ்வியல் படைப்புகளில் உலகப்பொதுமறை என்ற உயர்வைப் பெற்றது திருக்குறள். இரண்டாயிரம் ஆண்டுகள் தொன்மைகொண்ட வள்ளுவத்தின் கருத்துக்கள் இன்றைய நவீன கோட்பாடுகளுக்கும் பொருந்தி இருப்பது இதன் தனிச்சிறப்பாகும். பொதுவாக வளர்ந்தவரும் துறைகளில் ஒரு கோட்பாட்டினைப் பொருத்திப்பார்க்கும்போது அத்துறையில் அக்கோட்பாடு சிறப்பாகப் பொருந்துமானால் அது உலகப் பொதுக்கோட்பாடாக நிலைபெறும். வள்ளுவத்தின் மேலாண்மைக் கோட்பாடுகளை இன்றைய நவீன உலகின் மேலாண்மைக் கோட்பாடுகளோடு பொருத்திப்பார்க்கின்ற போது வள்ளுவரின் கோட்பாடுகள் உலகப் பொதுக்கோட்பாடாக விளங்கும் தன்மையினை உணரமுடிகிறது. இதனடிப்படையில் வள்ளுவத்தில் நவீன மேலாண்மைச் சிந்தனைகள் எனும் பொருண்மையில் இவ்வாய்வுக் கட்டுரை அமைகின்றது.

மேலாண்மை

மேலாண்மை என்பதற்கு ஓர் அமைப்பு, துறை, நிறுவனம் முதலியவற்றில் கட்டுப்படுத்துதல், கண்காணித்தல், பராமரித்தல் போன்றவற்றை உள்ளடக்கிய செயல்பாடு என க்ரியாவின் தற்காலத் தமிழ்அகராதி பொருள் உரைக்கின்றது.

ஒரு தனி நபரோ, ஒரு குழு சார்ந்த தனி நபர்களோ ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியினைக் கருத்தில்கொண்டு ஆய்ந்தறிந்த முடிவுகளைத் திட்டமிடுவதோடு அவற்றைச் செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுப்பதும் பொதுவாக மேலாண்மை எனப்படுகிறது.

மேலாண்மைத் துறையில் புகழ்பெற்ற வல்லுநரான பீட்டர் டிரக்கர் (Peter F. Drucker) நவீன நிறுவனங்களில் மேலாண்மை என்பது தவிர்க்க முடியாத அங்கமாக அமைகின்றது. இந்த அங்கத்தின் செயல்பாட்டைப் பொறுத்தே நிறுவனத்தின் நிலைப்பாடும் மேம்பாடும் அமையும் என்று மேலாண்மையின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றார்.

மேலாண்மைத் துறையின் செயல்பாடுகள் மேலாண்மை இயக்குநர் என்பவரின் தலைமையின்கீழ் இயக்கப்படுகின்றது. ஒரு தொழில் நிறுவனத்தின் சிறந்த வளர்ச்சி அதன் தலைமையின் ஆளுமைத் திறத்தின் அடிப்படையில் அமைகிறது. அதனால் தான் ஒரு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரின் பணிகள்குறித்து இன்றைய நவீன மேலாண்மை சிந்தனையாளர்களான லூதர் குளிக் (Luther Gulick), நவீன மேலாண்மையியலின் தந்தை என்று அழைக்கப்படும் ஹென்றி ஃபாயல் (Henry Fayol), லிண்டால் அர்விக் (Lyndall Urwick) ரால்வ் டேவிஷ் (Ralph Davis) E.F.L பிரச் ((E.F.L. Brech) கூன்ஸ் ரூ ஓடோனல் (Koontz and O’ Donnell) போன்றோர் பல்வேறு வகையில் கருத்துரைத்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் ஒரு நிறுவனத்தின் திட்டமிடல், ஒழுங்கமைவு, ஒருங்கிணைப்பு, கட்டுப்படுத்தல், பணியாளர் நியமனம், வழிநடத்துதல், ஊக்கப்படுத்துதல் போன்ற பல்வேறு செயல்பாடுகள் குறித்து விளக்கியுள்ளனர்.

இதில் லூர்தர் குளிக் (Luther Gulic) எனும் நவீன மேலாண்மை அறிஞரின் நிர்வாகப் பணிகள் குறித்த ‘POSDCORB’ எனும் மேலாண்மைச் சிந்தனைகளைத் திருக்குறளில் பொருத்தி ஆராய்வதாக பின்வரும் பகுதி அமைகின்றது.

 ‘POSDCORB’ எனும் நவீன மேலாண்மைச் சிந்தனை

  1. திட்டமிடல் – Planning (P)
  2. ஒழுங்கமைவு – Organising (O)
  3. பணியமர்தல் – Staffing (S)
  4. வழிநடத்துதல் – Directing (D)
  5. ஒருங்கிணைத்தல் – Co.ordinating (CO)
  6. முறைப்படி எடுத்துரைத்தல் – Reporting (R)
  7. வரவுசெலவுத் திட்டமிடல் – Budgeting (B)

இந்த ஏழு படிநிலைகளும் ஒரு நிர்வாகத்தில் சிறப்பாக அமைந்து விடுமானால் அந்த நிர்வாகம் ஆண்டுதோறும் பரிசினையும், பாராட்டினையும் பெறும் என்பது திண்ணம்.

திட்டமிடல் (Planning)

நிர்வாக இயலில் ஆழ்ந்து ஆராய்ந்து திட்டமிடல் என்பது அடிப்படைக் கூறாக அமைகிறது. எந்த ஒரு நிர்வாகமும் குறைந்த செலவில் முழுப்பயனையும் விரைவில் பெற்றிடவே விரும்பும். இதனை நன்குணர்ந்த திருவள்ளுவரும் இக்கால மேலாண்மைக் கொள்கைகளை விளக்குவது போல அருமையான கொள்கைகளை உருவாக்கித் தந்துள்ளார். தெரிந்து செயல்வகை என்ற அதிகாரம் மிகச் சிறப்பாகத் திட்டமிடலை பற்றிக் குறித்துள்ளது என்றே கூறலாம்.

எந்த ஒரு செயலையும் முதலில் திட்டமிட்டு அதன் பிறகே செயல்படுத்த வேண்டும். முதலில் தொடங்கிவிட்டு அதற்குப்பிறகு திட்டமிட்டுக்கொள்ளலாம் என்று கருதினால் இழப்பும், தோல்வியும் வந்து சேரும். இதனை வள்ளுவர்,

     ‘எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு’
(467) என்கிறார்.

நல்ல மேலாண்மை என்பது செய்யும் செயலின் நன்மை தீமைகளைத் தெளிவாக ஆராய்ந்து திட்டமிடுதலின் தன்மையைப் பொறுத்து அமைகின்றது. இதனை

     ‘அழிவதூம்உம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்’
(461)

என்கிறது குறள். எந்த ஒரு செயலையும் செய்யும்பொழுது அச்செயலால் அழிவது எது? அடுத்து ஆவது எது? அதனால் வரும் லாபம் எது? என்பதை ஆராய்ந்து பார்த்து செய்தல் வேண்டும். இவ்வாறு ஒரு மேலாண்மை இயக்குநர் தன் நிறுவனத்திற்கான திட்டங்களை நன்கு ஆராய்ந்து அமைக்க வேண்டும். பின்பு,

      ‘தெரிந்த இனத்தொடு தேர்ந்துஎண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல்’
(462)

என்ற குறளின்வழி அத்திட்டத்தினைத் தேர்ந்தெடுத்த அறிஞர்களோடு கலந்து ஆராய்ந்து தானும் தனித்திருந்து எண்ணி அதனைச் செயல்படுத்த வேண்டும். இத்தகைய திறமைபடைத்தவனுக்கு அடைய முடியாத அரும்பொருள் எதுவும் இல்லை. அவனுக்கு வெற்றி உறுதி என்பதை வள்ளுவர் உணர்த்துகின்றார்.

இவ்வாறு அறிஞர்களோடு கலந்து ஆராய்ந்து கிடைத்திருக்கும் காலம், பொருள்மாற்றம் இதர வசதிகள், முயற்சிகள், மனிதவள வசதிகள் எல்லாவற்றையும் வைத்து ஒரு நிறுவனத்தை எவ்வாறு நடத்தப்போகிறோம் என்பதை திட்டமிட்டு அதனை யார், எதை, எவ்வாறு, எவ்வளவு கால அளவில் நிறைவு செய்வர் என்பதை எல்லாம் கணக்கிட்டு எதிர்நோக்கி செயல்படுவதுதான் திட்டமிடுதலின் அடுத்த கட்டமாகும். இத்தகைய திட்டமிடுதலின் கூறுகளை,

     ‘பொருள்கருவி காலம் வினைஇடனொடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்’
(675)

என்று ஒரு செயலைச் செய்யும்பொழுது அதற்கு வேண்டிய பொருள், துணை புரியும் கருவிகள், செய்வதற்குரிய காலம், செயலின் இயல்பு ஆகிய இவ் ஐந்தையும் தெளிவாக ஆராய்ந்து செயல்பட வேண்டும் என்கிறது வள்ளுவம்.

மேலும் திட்டமிட வேண்டாததைத் திட்டமிடவும், திட்டமிட வேண்டியதைத் திட்டமிடாததும் நிர்வாகம் சீர்குலைவதற்குக் காரணமாகும் என வள்ளுவர் குறித்துள்ளார்.

      ‘செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்’
(466) என்கிறது குறள்.

திட்டமிடுகிறபோதே ஒரு நிர்வாகத்துக்கு எந்த வகையில் எல்லாம் பகை வரும் என்பதையும் சிந்தித்துப் பார்க்கவேண்டும். நிர்வாக இடையூறுகளைப் போலவே பகை பற்றியும் சிந்திக்க வேண்டும். இதனையே வள்ளுவர்,

‘வகையறச் சூழாது எழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பது ஓராறு’
(465)

அதாவது எச்செயலையும் செய்யும்முன் அதன் வகை தொகைகளை எல்லாம் ஐயமற ஆராய்ந்த பின்னரே தொடங்க வேண்டும். இன்றேல் தோல்வியே நேரும். அது பாத்தி வகுத்து அதில் பகைவர்களை நிலைபெறச் செய்வது போலாகும் என்று திட்டமிடும் தகுதிகளை எப்படியெல்லாம் வளர்த்துக்கொள்ள வேண்டும் என வள்ளுவர் வரையறுத்துள்ள இந்தச் சிந்தனைகள் மேலாண்மையியலின் சிந்தனைகளுடன் பொருந்தியிருப்பது வள்ளுவத்தின் மாண்பை நமக்கு உணர்த்துகிறது.

ஒழுங்கமைவு (Organising)

நல்ல நிர்வாகத்திற்குத் தேவையான அங்கங்களைக் குறிக்கும் வள்ளுவம்,

     ‘படைகுடி கூழ்அமைச்சு நட்புஅரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு’
(381) என்கிறது.

இக்குறட்பா நாட்டின் அரசனுக்குக் கூறப்பட்டதாயினும் நிறுவனத்தின் அமைப்பு முறைக்கும் பொருந்தும். நிறுவனத்தில் நல்ல பணியாட்கள், பொருளாதாரம், நல்ல ஆலோசகர்கள் அமையும்போது அந்நிறுவனம் முன்னேற்றமடையும். இத்தகைய வகையில் ஒரு நிறுவனம் அமைக்கப்பட வேண்டும் என்பதை வள்ளுவர் இனம் காட்டுகின்றார்.

பணியமர்தல் (Staffing)

சிறந்த மேலாண்மை இயக்குநர் பணியாளரைத் தேர்வு செய்வதிலும், பணிகளைப் பகிர்ந்து அளிப்பதிலும் திறமுடையவராக இருத்தல் வேண்டும். இதனை வலி அறிதல் அதிகாரத்தின் முதல் குறளே அருமையாக விளக்குகிறது.

      ‘வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்’
(471)

எச்செயலைச் செய்யும்பொழுதும் அச்செயலின் தன்மை பற்றியும், அதனை செய்து முடிக்கும் வல்லமைப் பற்றியும், அதனைத் தடுக்கக்கூடியோர் வலிமைப் பற்றியும் தமக்குத் துணையாக இருந்து செய்து முடிக்கக்கூடிய பணியாளருடைய வலிமை பற்றியும் அறிந்தவரே சிறந்த மேலாண்மையாளர் ஆவார் என்றும்,

     ‘இதனை இதனால் இவன்முடிக்கும் என்றுஆய்ந்து
அதனை அவன்கண் விடல்’
(517)

செயலின் தன்மை இத்தகையது. செய்யும் வழிகள் இன்னின்னவை, இச்செயலை இன்னின்ன வழிகளால் செய்து முடிக்க வல்லவன் இவன் என்பதை ஆராய்ந்து உணர்ந்து அதற்குரியவனிடம் அச்செயலை ஒப்படைக்க வேண்டும் என்றும் வள்ளுவர் வலியுறுத்துகிறார்.

வழிநடத்துதல் (Directing)

மேலாண்மை குறித்து ஆராயும் அறிஞர்கள் ஒரு தொழில் நிறுவனத்தின் தலைமையில் இருப்பவர் தலைவராக இருப்பதைவிட தலைமைப் பண்புகளுக்கு உரியவராகவும் இருப்பது அவசியமானது என அறிவுறுத்துகின்றனர். இத்தகைய தலைமைப் பண்புடையோரால் மட்டுமே நிறுவனத்தை நன்கு வழிநடத்த முடியும் என்கின்றனர்.

நிறுவனத்தின் தலைவன் தனது ஊழியனுக்கு ஒரு முன்மாதிரியாகவும், நம்பிக்கைக்கு உரியவனாக இருக்க வேண்டும். காட்சிக்கு எளியவனாகவும், கடுஞ்சொல் பேசாதவனாகவும், ஊக்கமூட்டுபவனாகவும் இருக்க வேண்டும்.

     ‘அஞ்சாமை ஈகை அறிவுஊக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தற்கு இயல்பு’
(382)

      தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலன்ஆள் பவர்க்கு’
(383)

     காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்’
(386)

எனும் குறட்பாக்களின் வழி  அஞ்சாமை, கொடைப்பண்பு, அறிவு, ஊக்கம் எதையும் விரைந்து செய்யும் விடாமுயற்சியும், அவற்றை அறியவல்ல கல்வியும், துணிவுடைமை ஆகிய பண்புகளும், காட்சிக்கு எளியவனாகவும் கடுஞ்சொல் கூறாதவனாகவும், மற்றவரின் குறைகளைக் கேட்கும் மனம் கொண்டவனாக இருக்கும்போது அவன் வழிகாட்டுதலின்படி அந்நிறுவனம் இயங்கும் என்பதை வள்ளுவர் இனம் காட்டுவதை உணர இயலுகிறது.

மன உறுதி

ஒரு தலைவன் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்துத் திட்டமிடுவதோடு மட்டுமல்லாமல் அதில் வரும் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் நிலையில் மனஉறுதி படைத்தவராக இருத்தல் வேண்டும் என்பதற்கு

     ‘எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்டம்
வேண்டாரை வேண்டாது உலகு’
(670)

எனும் குறள் பொருந்துவதாக உள்ளது. பிற வலிமைகளும், பெருமைகளும், ஒருவருக்கு இருந்தாலும் நடத்தும் தொழிலில் நல்ல உறுதி இல்லாதவர்களை இவ்வுலகம் என்றுமே பாராட்டிப் போற்றாது என்பது ஒரு தலைவன்ன உலகம் போற்ற வேண்டுமானால் அவன் மனஉறுதி படைத்தவனாக செயல்பட வேண்டும் என்பதை உணர்த்துகிறது. மேலும் ஒரு நிர்வாகத் தலைவன்

‘சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதைஅம்பின்
பட்டுப்பாடு ஊன்றும் களிறு’
(597) என்னும் குறள்வழி உடம்பெல்லாம் அம்புகள் புதைந்து புண்பட்டாலும் யானை ஊக்கத்தில் தளராமல் தன் பெருமையில் நிலைநாட்டும். அதுபோல தம் உயர்விற்கு ஊறுகள் பல வந்தாலும் ஊக்கமுடையோர் உள்ளம் கலங்காமல் தம் பெருமையை நிலைநாட்டுவர் என்று உரைக்கும் வள்ளுவர் நிர்வாகத் தலைவன் தன் உயர்விற்கு தடைபல வந்தாலும் உள்ளம் கலங்காமல் மன உறுதியுடன் செயல்பட வேண்டும் என்கிறார். இன்றைய சூழலில் பல கோடி முதலீடு செய்து நிறுவனத்தை இயக்குபவர்களுக்கு இக்குறள் சாலப்பொருந்துவதாக அமைகின்றது.

நுண்ணறிவு

மேலும் ஒரு நிறுவனத்தின் தலைவன் தேர்ந்த நூலறிவு பெற்றவனாக இருந்தாலும் தன் நிறுவனத்தைச் செம்மையான முறையில் வழிநடத்த வேண்டுமானால் இயற்கையான நுண்ணறிவும் பெற்றிருக்க வேண்டும். இத்தகைய திறன் படைத்தவன் முன் பகைவர்களின் அதிநுட்பமான சூழ்ச்சிகளும் தகர்ந்து போகும் என்பதை,

     ‘மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
யாஉள முன் நிற்பவை’
(636)

என்று வள்ளுவம் உரைக்கின்றது. ஒரு நிர்வாகத்தின் மேலாண்மை இயக்குநருக்கு ஆராய்ச்சி அறிவும் இன்றியமையாததாகும். ஒரு பணியைத் தொடங்கும் முன்பு பலம், பலவீனம், அந்தப் பணிக்குரிய எதிர்கால வாய்ப்பு, அதற்கு வரவிருக்கும் இடையூறு ஆகிய நான்கினையும் ஆராய்ந்து அறியும் திறனுடையவராக மேலாண்மை இயக்குநர் இருத்தல் வேண்டும். இந்த நான்கு கூறுகளுள் எந்த ஒன்றைப் பற்றியும் ஆராய்ச்சியில் குறை இருக்குமானால் அப்பணி வெற்றிப்பெறாது என்பது இன்றைய மேலாண்மை கொள்கையாகும். இதனையே வள்ளுவர்,

      ‘பீலிபெய் சாகாடும் அச்சு இறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்’
(475)

அதாவது, எதிர்ப்பு மிகுந்தாலும், பலவீனம் மிகுந்தாலும் செய்யும் பணியில் தொய்வு ஏற்படும். தன் பலத்தை மிகுதியாகப் பயன்படுத்தினாலும் வாய்ப்புகளைத் தேவைக்கு அதிகமாக உருவாக்கிக் கொண்டாலும் பணியின் தரம் கெட்டுப்போகும் என்பதையே இக்குறள் பொதுக்கோட்பாடாக விளக்குகின்றது.

நிறுவனத்தின் இலக்கு நோக்கிய விழிப்புணர்வு

ஒரு நிறுவனத்தின் இலக்கு பற்றிய சிந்தனையை நோக்கும்போது உயர்ந்த இலக்கை நோக்கியே அந்நிறுவனத்தின் பயணம் இருக்க வேண்டும் என்பதை ‘ஊக்கம் உடைமை’ என்னும் அதிகாரத்தில்

     ‘உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல் மற்றது
தள்ளினும், தள்ளாமை நீர்த்து’
(596)

என்கிறார் வள்ளுவர். அதாவது நிறுவனத்தின் தலைவன் எப்பொழுதும் உயர்ந்த குறிக்கோளை எண்ண வேண்டும். எண்ணியதை எய்த முடியாவிட்டாலும் உயர்ந்ததை எண்ணுவதற்கு ஒரு நாளும் தவறக்கூடாது.

      மேலும் ‘படைச் செருக்கு’ எனும் அதிகாரத்தில்

     ‘கானமுயல் எய்த அம்பினில் யானை
பிழைத்த வேல் ஏந்தல் இனிது’
(772) எனும் குறள்வழி

காட்டு முயலைக் குறிதப்பாமல் வீழ்த்திய அம்பைக் கையால் ஏந்துவதை விட, யானை மேல்பட்டுத் தவறிய வேலை ஏந்துதல் மிகச் சிறந்ததாகும். அடைய முடியாவிட்டாலும் உன் குறிக்கோள் உயர்ந்ததாகவே இருக்கட்டும் என்கிறார். இது படைவீரர்களின் ஆண்மைக்குச் சொல்லப்பட்ட குறளாக இருந்தாலும் ஒரு நிர்வாகத்தின் தலைவன் உயர்ந்த குறிக்கோளை உடையவனாக இருக்க வேண்டும் என்பதை நமக்குத் தெளிவுறுத்துகிறது.

இத்தகைய உயர்ந்த குறிக்கோளை அடைய விடாமுயற்சியுடன் தலைவன் செயல்படவேண்டும் என்பதை,

     ‘வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு’
(612)

என்கிறது குறள். நிர்வாகத்தின் இலக்கினை அடைய அதன் தலைவன் தொடங்கிய செயலை அரைகுறையாகக் கைவிட்டுவிட்டால் உலகம் அவனைப் போற்றாது. எனவே எடுத்த செயலை, எப்படியும் முயற்சிசெய்துக் குறையின்றி முடித்துவிட வேண்டும் என்கிறார் வள்ளுவர். தலைவன் செய்த செயல் அவன்நினைத்த பயனைத் தராமல் போனாலும், அவன் வருந்தி உழைத்த உழைப்பு, மேற்கண்ட முயற்சிக்கான பலன் என்பது கட்டாயம் ஒரு நாள் கிடைக்கும் என்பதை,

     ‘தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்’
(619)

என்கிறது குறள். இது மேலாண்மையியல் நீண்ட நாள் திட்டம் வகுப்பவருக்குச் சாலப்பொருந்தும். ஒரு செயலைச் செய்யும்பொழுது காலநிலைமையை அனுசரித்து, இடத்தையும் தோதுபார்த்துச் செயல் செய்தால் உலகம் முழுவதையும் வெல்ல முடியும் என்பதை,

      ‘ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தால் செயின்’
(484) என்னும் குறள்வழி திருவள்ளுவர் வலியுறுத்துகிறார்.

நிர்வாக சிக்கல்களுக்குத் தீர்வு காணும் திறன்

ஒரு நிர்வாகத்தைத் திட்டமிட்டு, இலக்கை அடைய முயற்சி மேற்கொண்டு வழிநடத்தும் மேலாண்மை இயக்குநர் நிர்வாகத்தில் ஏற்படும் சிக்கல்களுக்குச் சிறந்த முடிவெடுக்க வேண்டும்.

     ‘தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்
சொல்லலும் வல்லது அமைச்சு’
(634) என்பதன் மூலம்

நிர்வாகச் சிக்கல்குறித்து நன்றாக ஆராய வேண்டும். அதனை முடிக்கும் வழிகளைச் சிந்தித்துச் செய்தல் வேண்டும். எடுக்கும் முடிவினை மற்றவரின் ஐயத்திற்கு இடமின்றித் துணிந்து கூறுதல். இத்தகைய பண்புள்ள தலைவன் எடுக்கும் முடிவு சிறப்பானதாக அமையும் என்பதை திருக்குறள் வழி அறியலாம்.

ஊழியன் போற்றும் பண்பாளன்

மேலாண்மையியல் ஒரு நிர்வாகத்தின் தலைவன் என்பவன் ஒரு நாட்டின் அரசனுக்கு ஒப்பானவன் என்கிறது. அத்தகைய சிறப்புக்குரிய தலைவன் என்பவன் ஊழியன் போற்றும் பண்பாளனாக இருக்க வேண்டும் என்பதை,

      ‘முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறை என்று வகைப்படும்’
(388) என்கிறது குறள்.

நேர்மையாக, நீதி செலுத்தி, மனம் கலங்காமல் மக்களை (ஊழியர்களை) காத்தால், ஊழியர்கள் அனைவரும் அத்தலைவனைக் கண்கண்ட தெய்வமாகக் கருதிப் போற்றுவர். மேலும்

      ‘செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவு இன்றி
எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து’
(112)

எனும் குறள்வழி நடுவுநிலைமையோடு ஒரு தலைவன் செயல் புரிந்தால் அந்நிறுவனத்தில் பொருளாதாரம் என்றும் நிலைப்பெறும் என்பதை அறிவுறுத்துகிறார்.

ஓர் ஊழியனிடம் பணியினை ஒப்படைக்கும்போது அவனைப் பற்றி ஆராய்ந்து பார்க்காமல் அவனை நம்பக்கூடாது. நம்பியபின் அவனிடத்தில் ஐயப்படுவது நிர்வாகத்திற்குத் தீராத தொல்லையாக அமையும் என்பதை,

     ‘தேரான் தெளிவும் தெளிந்தான் கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்’
(510) என்கிறது வள்ளுவம்.

தான் ஒரு திறன்படைத்த மேலாளரிடம் பணியாற்றுகிறோம் என்ற சிந்தனை ஒவ்வொரு ஊழியனுக்கும் இயல்பாகவே ஏற்படும் நிலையில் அந்த மேலாளரின் நடத்தை நெறிகள் அமைய வேண்டும் என்பதை,

      ‘செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து’
(431)

என்னும் குறள்வழி கர்வம், கோபம், இழிந்த குணம், ஆகிய குற்றங்கள் இல்லாத தலைவனின் பெருவாழ்வே மதிப்பிற்குரியதாகும் என்றார் திருவள்ளுவர்.

மேலும் ஒரு தலைவன் தன்னுடைய சக அலுவலர்கள், பணியாட்களின் எதிர்பார்ப்பை அவரின் முகக் குறிப்பால் அறியும் ஆற்றல் பெற்றவனாக இருக்க வேண்டும் என்பதை,

      ‘கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
      மாறாநீர் வையக்கு அணி’ (701)

என்று ஒருவர் கூறாமலே அவனின் உள்ளக் கருத்தை கூர்ந்து நோக்கி அறிய வல்லவன் எப்பொழுதும் இவ்வுலகிற்கு ஓர் ஒப்பற்ற அணி ஆவான் என்கிறது வள்ளுவம். இத்தகைய பண்புடையவராக ஒரு மேலாண்மை இயக்குநர் இருப்பாரேயானால் அவர், அவரை சூழ்ந்துள்ள அனைவராலும் போற்றப்படுவார்.

மேலாண்மைத் துறையில் தலைவனுக்கான பண்புகள் குறித்துச் சொல்லப்படும் கோட்பாடுகள் அனைத்தும் வள்ளுவத்தின் தலைமைப் பண்பு குறித்த சிந்தனைகளுடன் பொருந்தி இருப்பது வள்ளுவரின் தொலைநோக்குப் பார்வையை தெளிவுறுத்துகிறது.

ஒருங்கிணைத்தல் (Co-ordinating)

நிறுவனத்தின் வளர்ச்சியினைக் கருத்தில்கொண்டு செயல்படும் தலைவன் நிறுவனத்தின் பகுதிகளை ஒருங்கிணைப்பது மட்டுமல்லாமல் வளர்ச்சிக்கு அடிப்படையாக இருக்கும் ஊழியனையும் மகிழ்ச்சியோடு இலக்குகளை ஒப்புக்கொண்டு பணியாற்றும் நிலையினை ஏற்படுத்த வேண்டும்.

     ‘பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர்’
(528)

அரசன் எல்லோரையும் பொதுவகையாக நோக்காமல் அவரவர் சிறப்புக்கு ஏற்றவாறு நோக்கினால், அதை விரும்பிச் சுற்றமாக வாழ்கின்றவர் பலர் ஆவர். அதைப்போலவே, ஊழியர்களின் தகுதியினையும் பணிச்சிறப்பினையும் ஆராய்ந்து அவர்களைத் தகுந்த நேரத்தில் சிறப்பித்து ஊக்கப்படுத்தும் தலைமையின் கீழ் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவர் என்பதை வள்ளுவத்தின் வழி அறியமுடிகிறது.

முறைப்படி எடுத்துரைத்தல் (Reporting)

நிறுவனத்தின் அறிக்கைகள், ஆக்கச் செயல்பாடுகள் குறித்து முறைப்படி எடுத்துரைக்கும் திறனைத் தலைவன் பெற்றிருக்க வேண்டும்.

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
      வெல்லும்சொல் இன்மை அறிந்து’ (645) என்பதோடு மட்டுமல்லாமல்

‘கேட்டார் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்’
(643)

தான் கருத்தினைச் சொல்லும்போது கேட்டவரைத் தன்வயப்படுத்தும் பண்புகளுடன், கேட்காதவரும் கேட்க விரும்புமாறு கூறும் ஆற்றல் கொண்டவனாகத் தலைவன் விளங்க வேண்டும் என வள்ளுவர் உரைப்பதும், இதனையே தலைமைப் பண்பின் முக்கியத்துவம் வாய்ந்த கூறாக மேலாண்மை வல்லுநர்களும் எடுத்துரைப்பதும் குறிப்பிடத்தகுந்தது.

வரவு செலவுத் திட்டமிடல் (Budgeting)

மேலாண்மையியல் துறையில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுவது நிதி மேலாண்மையாகும். செயல் திட்டங்களை நெறிப்படுத்தி நிதியினை மேம்படுத்துவதே மேலாண்மையின் இலக்காகும். இதனை,

     ‘இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு’
(385)

பொருள்வரும் வழிகளை உருவாக்கி, அவற்றைச் சேர்த்துப் பின்னர் பாதுகாத்து, அவற்றைப் பயன்தரும் வழிகளில் செலவிட வல்லவனே சிறந்த தலைவன் என்கிறது வள்ளுவம். மேலும்,

      ‘ஆகாறு அளவிட்டிது ஆயினும் கேடில்லை
போகாறு அகலாக் கடை’
(478)

     ‘அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்’
(479)

என்னும் குறள்களின்வழி நிர்வாகத்தில் வருமானம் குறைவாக இருந்தாலும் செலவினம் அதைவிடப் பெருகிவிடக் கூடாது. அது பேரழிவைத் தரும் என்றும், வரவுஅறிந்து அதற்கேற்ப நிர்வாகத்தை நடத்தத் தெரியாதவனின் வாழ்க்கை பார்ப்பதற்கு பகட்டாகத் தோன்றி இறுதியில் பாழ்பட்டு விடும் என்கிறார் வள்ளுவர்.

இதனோடு மட்டுமல்லாமல் இன்றைய சூழலில் மிகவும் தேவையான ஒவ்வொரு நிறுவனமும் கடைப்பிடிக்க வேண்டிய தொழில் அறம் (Business ethics) பற்றியும் வள்ளுவம் எடுத்துரைக்கின்றது.

தொழில் அறம்

தொழில் முனைவோர்கள் தான் சார்ந்துள்ள சமூகத்தின் மீது அக்கறை கொண்டவராக இருக்க வேண்டும். செல்வத்தைப் பெருக்க வேண்டும் என்ற நோக்குடன் மட்டும் செயல்படக் கூடாது. இதனை வள்ளுவர்,

      ‘நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே ஒழிய விடல்’
(113)

முறைதவறி நடப்பதால் வரும் செல்வம் நல்ல காரியத்திற்கே பயன்படுவதாக இருந்தாலும், கறைபட்ட அச்செல்வத்தை அப்பொழுதே கைவிட்டு விடவேண்டும் என்கிறார்.

இவ்வாறு ஒரு நிறுவனத்தின் அமைப்புக் குறித்தும் அந்நிறுவனத்தை வழிநடத்தும் தலைவனின் பண்புகள் குறித்தும், நிறுவனம் முன்னேற்றமடையச் செய்யவேண்டிய வழிமுறைகள் பற்றியும் வரையறுக்கப்பட்டுள்ள இன்றைய நவீன மேலாண்மைச் சிந்தனைகள் அனைத்தும் வள்ளுவம் வகுத்துள்ள மேலாண்மைக் கோட்பாடுகளுடன் பொருந்தியிருப்பது வள்ளுவத்தின் ஆழத்தை நமக்குக் காட்டுகிறது. இதுமட்டுமல்லாமல் இனிவரும் காலங்களில் உருவாகும் புதிய கோட்பாடுகளுக்கும் வள்ளுவம் பொருந்தும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

துணைநூற்பட்டியல்

  1. திருக்குறள் தெளிவுரை – டாக்டர் மு.வரதராசனார் கழக வெளியீடு 2011
  2. Principles and Practice of Management – L.M. Prasad, Sultan Chand & Sons Educational Publishers New Delhi 2006
  3. Principles and Practice of Management – Harold Koontz, Heinz Weihrich, A.Ramachandra Aryasri, Tata MC Grow-Hill Publishing Company Limited, New Delhi 2008
  4. Organisational Behaviour – Nirmal Singh Deep & Deep Publication Private Limited, New Delhi 2009
  5. Foundations pf Financial Management Stanley B.Block, Geoffrey A.Hirt, Bartley R.Danielsen, Published Tata MC Grow-Hill Publishing Company Limited, New Delhi 2009
  6. Leadership Theory and Practice – Peter G.Northouse, Sage Publications India Private Limited, New Delhi 2010
  7. கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி

*****

கட்டுரையாளர்
உதவிப் பேராசிரியர்
தமிழாய்வுத்துறை
பிஷப் ஹீபர் கல்லூரி
திருச்சிராப்பள்ளி – 620 017
அலைபேசி எண்: 9790382356

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *