வரலாற்றை மீளயெழுதலும் மனித மனங்களின் இயல்புகளும் – “ஆடிப்பாவைபோல” பிரதியை முன்வைத்து…

0

-செ.ர. கார்த்திக் குமரன்

முன்னுரை

சமகாலத் தமிழ்ப் புனைகதைப் படைப்பிலக்கியச் சூழலானது, பல்வேறு விதமான மாற்றங்களுடன் தொடர்ந்து இயங்கி வருகின்றது. இதற்குக் காரணம், தற்காலப் புனைகதைகளின் போக்கானது உலகளாவிய தளத்தில் விஸ்தரித்துள்ளதுதான். மரபுவழிப்பட்ட புனைகதைகளானவை குறிப்பிட்ட சட்டகத்துள் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுதான் படைப்புகள் வெளிவந்துள்ளன. மேலும், இவ்வகைப் படைப்புகள் பெரும்பாலும் அடிப்படை வடிவக்கூறுகளான காலவரிசையில் கதைகூறல், தர்க்கபூர்வமான நேர்கோட்டுக் கதைபின்னல், தனித்த மொழிநடை, விவரணைகளைக் களமாகக் கொள்ளுதல் என இதன் இயங்கியல் அமைந்துள்ளது. இவற்றையெல்லாம் சமகாலப்  புனைகதைகள் தவிர்த்து, பன்முகப்பட்ட, ஒன்றுக்கொன்று மாறுபாடான அல்லது முரண்பாடான கருத்தாக்கங்களை ஒரே சமயத்தில் இடம்பெறச் செய்வித்து, அதற்கேற்றாற்போல மாற்றுவடிவங்களையும் உண்டாக்கியுள்ளன. இதன்படி, அதன் உருவத்திலும் உள்ளடக்கத்திலும் உத்திகளிலும் புதுவிதமான முறைகளையும் புகுத்தியுள்ளன. புனைவுகள் வெறுமனே கற்பனைக் கதைகளை மட்டுமே வெளிக்கொணரும் என்ற நிலையினைத் தாண்டி, அரசியல், சமூகம், வரலாறு மற்றும் வாழ்வியல் சார்ந்த உளவியல் பிரச்சினைகளைச் சொல்லுக்கூடிய வகையில் அமைந்துள்ளன.

 

மேலும் நவீன புனைகதைப் பிரதிகள், பெரும்பாலும் தற்காலச் சூழலுக்கேற்ப எழுதப்படுவது மட்டுமல்லாமல் அதில் சோதனைகளை நிகழ்த்தியும் உள்ளடக்கப் பிறழ்வோடும் எழுத்தாக்கம் பெறுகின்றன. இத்தகைய பிரதிகளை ஆய்வுக்கு உட்படுத்தும்போது அல்லது வாசிக்கும்போது நம் வாழ்க்கையில் அல்லது தேசத்தில் நிகழ்ந்த/நிகழ்ந்து கொண்டிருக்கும் சூழலை விளங்கிக்கொள்ள முடிகின்றது. அந்தவகையில், தமிழவனின் ’ஆடிப்பாவைபோல’ பிரதியானது, இந்திய – தமிழகச் சூழலில் நிகழ்ந்த வரலாற்றினையும் நவீன காலத்தில் மனித உணர்வுகளுக்கு ஏற்படும் சிக்கல்களையும் தன் எழுத்தினூடாக வெளிப்படுத்தியுள்ளதை ஆராய்வது தற்காலத் தேவையாகும்.

தமிழவன்

மேற்கத்திய நவீன கோட்பாடான அமைப்பியலை 1982இல் தமிழில் அறிமுகப்படுத்தியதுடன், புனைகதைகளிலும் நவநவீனக் கோட்பாடுகளை உட்புகுத்தி, மொழியில் சோதனைகளை நிகழ்த்தியவர். இவருடைய எழுத்துகள் பெரும்பாலும் எதார்த்தத்தை மீறிய குறியீட்டுத் தன்மைகொண்ட, தர்க்கபூர்வமான விவாதங்களை எழுப்பவதோடு, சமகாலப் பிரச்சினைகளையும் பேசுகின்றன. “நம்மைச் சுற்றியுள்ள உலகம் மாறிக்கொண்டிருக்கிறது. அம்மாற்றம் புதுச் சூழல்களைப் படைக்கிறது. உருவாகிவரும் புதுச் சூழல்களில் மனிதன் வாழ வேண்டியவனாகிறான். அந்நிலையில் தன்னைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் அறிந்துகொள்ள வேண்டியவனாகிறான். தனது மொழி, மனம், நாகரிகம், வரலாறு போன்றவற்றைப் பலவிதக் கேள்விகளுக்குட்படுத்துகிறான். இங்குதான் அறிவுமுறை ஒன்று மிகக் கவர்ச்சியாக உருப்பெறுவதைக் காண்கிறோம்.” என்று தமிழவன் சமகால சிந்தனைமுறைகள் மாற மாற இலக்கியங்களிலும் மாற்றம்பெறச் செய்யவேண்டும். இவற்றை அறியாமல் இருந்தால் அறிவுசார் பின்னடைவைச் சந்திக்க நேரிடும். மேலும், எல்லாச் சிந்தனைமுறைகளையும் அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் அவற்றை உள்வாங்கி ஆராய்ந்து, தமிழ்ச்சூழலில் புதியவகை மாற்றங்களை நிகழ்த்தவேண்டும் எனக் கூறுகிறார்.

ஆடிப்பாவைபோல

ஆடிப்பாவைபோல பிரதியானது, அகம், புறமாக இருப்பதோடு, மூன்று வாசிப்புமுறைகளிலும் அமைந்துள்ளது. இதில், மூன்றாவது வாசிப்புமுறையான மரபான வாசிப்பில் வாசிக்க நேர்ந்ததற்கான காரணம், அகம், புறம் என மாற்றிமாற்றி நம் வாழ்க்கை அல்லது தேசம் இயங்கிக்கொண்டிருப்பதால்தான். அகம் என்ற பகுதி நவீனகால அகவுலகில்/அகவுணர்ச்சியில் ஏற்படும் சிக்கல்களை எடுத்துரைப்பதாகவும் புறம் என்ற பகுதி மாணவர்களின் இந்தி எதிர்ப்புப் போராட்டம், அரசியல் அரசியல்வாதிகளின் தன்மை ஆகியவற்றை வெளிப்படுத்துவதோடு, சமகால அரசியல் குறித்த பார்வையையும் எடுத்துரைப்பதாகவும் உள்ளது எனலாம்.

நவீனகாலச் சூழலில் அகவுணர்ச்சிகளில் ஏற்படும் சிக்கல்கள்

வின்சென்ட், கிருபாநிதி, காந்திமதி, ஹெலன் ஆகிய கதாபாத்திரங்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின்வழி கதை இயங்குகிறது. கல்லூரியில் படிக்கும் வின்சென்ட், காந்திமதி ஆகிய இருவருக்கும் ஏற்படும் மனஉணர்வை இதில் வெளிப்படுத்தியுள்ளார். இவ்விருவரும் மரபான பண்பாட்டுத் தன்மை கொண்டவர்களாகவும் அதனைச் சார்ந்து செயல்படுபவர்களாகவும் இருக்கின்றனர். எந்தச் சூழலிலும் தங்கள் உள்ளுணர்வை வெளிப்படுத்துவதில் தயக்கங்கொண்டு, தம்மைத்தாமே பல இன்னல்களுக்கு ஆளாக்குகின்றனர். இத்துடன், பிறரிடம் எதார்த்தமாகவோ இயல்பாகவோ இருப்பதுபோல அவர்கள் பாவனை செய்ய நேர்கிறது. இன்றைய சூழலில் தன்மான உணர்வுக்குக் கட்டுப்பட்டு வாழும் மனிதர்கள் இருக்கவே செய்கின்றனர் என்பதை இதன்வழி உணரமுடிகிறது. மேலும், காந்திமதியின் குடும்பச்சூழலானது தமிழ் நாகரிகம்தான் அதனை நடத்திச் செல்கிறது என இப்பிரதியின் வாயிலாகக் கூற வைக்கிறது. இவர்கள் இருவரின் எதிர்கால வாழ்க்கை குறித்து முதல் இயலிலேயே (அகம்: இயல் 1) கதைக்குள் கதையாக சந்திப்பின் ஊடாக வெளிப்படுத்தியுள்ளார். சான்றாக,

“வின்சென்ட் தன் எதிரில் இருக்கும் கல்லூரி மாணவி எத்தகையவள் என்று அறியும் ஆசையோடு,
“அந்தப் பாத்திரம் பற்றிச் சொல்ல நீங்க மறந்துட்டீங்க” என்றான்.

“மங்கையர்க்கரசி பாத்திரம் பற்றி உங்களுக்குத் தெரியாதா? சொல்றேன். சிறு வயதில் ஒரு கனவு வருகிறது இவளுக்கு. அந்தக் கனவில் ஓர் இளைஞனைப் பார்க்கிறாள். பள்ளிப்படிப்பை முடித்து ஆசிரியர் பயிற்சியையும் முடித்து ஒரு கிராமத்துக்கு –  யாரும் துணிந்து போகாதபடி தண்ணீர் இல்லாத கிராமம் – அதுக்கு ஆசிரியராகப் போகிறாள்…” …

…அங்கே ஒருநாள், ஓர் இளைஞன். அவன் வந்த அன்றிலிருந்து அந்த ஊர் சிறுவர்களுக்குப் பல விஷயங்களைச் சொல்லிக் கொடுக்கிறான். ஊரில் அவன் புகழ் பரவுகிறது. ஊர்ப் பண்ணையாரின் மகள் இவனைக் காதலிக்கிறாள். மங்கையர்க்கரசி அறிகிறாள், அந்த இளைஞன் அவள் சிறுவயதில் கனவில் கண்ட இளைஞன் என்று. இந்த நினைவு அவளை அலைக்கழிக்க ஆரம்பிக்கிறது. இந்தமாதிரி சூழ்நிலையில் ஒருநாள் கிராமத்துப் பண்ணையாரின் மகள் இவள் தங்கியிருக்கும் வீட்டிற்கு வருகிறாள். இவளிடம் தனது காதலைப் பற்றிக் கூறுகிறாள். பண்ணையாரின் மகள் சந்தோஷத்தோடு வீடு திரும்புகிறாள். மறுநாள் என்ன நடக்கிறது தெரியுமா? கிராமத்து ஆசையோடு வந்த இந்த டீச்சர் மங்கையர்க்கரசி யாருக்கும் சொல்லாமல் கொள்ளாமல் போய்விட்டிருக்கிறாள்.”

“கதை முடிந்ததா?” என்றான்.

“ஆம்” என்ற காந்திமதி உணர்ச்சிவயப்பட்டவளாகக் காணப்பட்டாள். தான் ஏதும் கிண்டலடிக்கலாம் என்று தோன்றினாலும் அவள் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல் ஏதும் சொல்லி நோகடிக்கக்கூடாது என்று எண்ணியோ என்னவோ மௌனமாக இருந்தான்…

வாயை கிளறுவோமே என்று நினைத்ததாலோ என்னவோ வின்சென்ட் காந்திமதியிடம் இப்படிக் கேட்டான்.

“ஏன் அந்தப் பாத்திரம் பிடிக்கிறது உங்களுக்கு?”

“தன்னுடையவன் என்று அந்த இளைஞனைப் பற்றி நினைக்காமல் இடத்தைக் காலி செய்கிறாளே. அதாவது எப்போதும் துக்கப்பட தயாராக இருக்கிறாளே.”

“என்ன துக்கம் அவளுக்கு?” என்றும் “இது வெறும் கதைதானே” என்றும் தன் ஆள்காட்டி  விரலை வாயில் வைத்து அழுத்தியபடியே கேட்டான்.

“முதலில் கனவில் மட்டும் கிடைப்பவன் அவன் என்று ஏற்படும் வருத்தம், துக்கம்; அதுவும் நிஜத்தில் அப்படி ஒருவன் இருக்கிறான் என்பதை அறிந்தவுடன் ஏற்படும் சந்தோஷம், அவனுக்காகச் சொந்தம் கொண்டாடிக்கொண்டு ஒருத்தி வருகிறாள் என்றவுடன் துக்கமாகிறது. அதற்கும் அடுத்துச் சாதாரணப் பெண்களைப் போல் அல்லாமல் போட்டியிடப் போகாமல் தனக்கும் பெருமை தன் துக்கத்தைத் தானே தாங்கியபடி வாழ்வது என்று முடிவு எடுத்து ஊரைவிட்டுப் புறப்படுகிறாளே… சரி இதெல்லாம் நம்ம வாழ்க்கையில் நடக்காததா? கதைதானே என்று சாதாரணமா சொல்லீட்டிங்களே” என்றாள்.” (ஆடிப்பாவைபோல, பக்.14-16)

எனக் காந்திமதி சொல்லும் கதையில், மங்கையர்க்கரசி என்ற இளம்பெண்ணுக்கு நிகழ்ந்ததைப் போலவே தனக்கும் இறுதியில் நிகழ்கிறது. “இதெல்லாம் நம்ம வாழ்க்கையில் நடக்காததா?” என்பது தன் அகவுணர்வின் ஏற்பட்ட சிந்தனையின் படியே, இயல்பாகச் சொல்வது போல இருந்தாலும் உண்மையில் தன் வாழ்க்கையில் நடந்துவிட்டது. இதனை இறுதியான இயலில் (இயல் 19) 25 வருடங்களுக்குப் பிறகு இருவரும் ஆம்ஸ்டர்டாம் என்ற இடத்தில்  சந்திக்க நேர்கிறபோது அவர்கள் இணைகின்றதாக முடிகிறது.

“அடுத்து சம்பந்தா சம்பந்தமில்லாமல் கேட்பவன்போல், “காந்தி” என்று அன்பு ததும்ப அழைத்தான்.

“ம்” என்று மறுமொழி அவளிடமிருந்து எழுந்ததும் பழைய ஓர் இளமைக்கால ஆனந்த நினைப்பில் திளைப்பவள்போல் கேட்டான்.

“கவிதை எழுதற பழக்கம் உண்டா?”

“கவிதை எல்லாம் முழுசா மறந்துபோச்சு. நீங்க ஒங்க கட்டுரைகளைத் தவிர…?” என்று அவன் ஏதாவது வேறு எழுதுகிறானா என்று அறியும் நோக்கத்கோடு அவன் முகத்தைப் பார்த்துக் கேட்டாள். அவன், “ஒரு நாவல் எழுதியிருக்கிறேன்” என்றான் வெட்கப்பட்டுக்கொண்டே.

அப்போது இரண்டு விமானங்கள் மெதுவாக நீலவானில் மிதந்து நிதானமாய் தூரத்தில் மறைந்தன.” (ஆடிப்பாவைபோல, ப.404) நவீன காலகட்டத்தில் இருந்தாலும் அவர்களது அகஉணர்வில் ஏற்பட்ட சிக்கல்களால் தன் அன்பை வெளிக்காட்டாமல், குறிப்பிட்ட பருவத்தில் சேரமுடியாமல் 25 வருடம் காலஇடைவெளிவிட்டு இருவரும் இணைவதை இப்பிரதி தத்ரூபமாக வெளிப்படுத்தியுள்ளது. மரபான காப்பிய இலக்கண மரபு (வருபொருள் உரைத்தல்) இந்நவீன பிரதிக்கும் பொருந்தும்படி அமைந்துள்ளது.

இதற்கு நேர்மாறான தன்மையுடன் இருக்கும் கிருபாநிதி – ஹெலன் ஆகிய இருவரும் நவீன காலத்திற்கு ஏற்றவாறு வெளிப்படையாக இருக்கின்றனர். கிண்டல், கேலி, நகைச்சுவை உணர்வு எனச் சந்தோஷமாக இயங்குகின்றனர். இவ்விருவருக்கிடையே சிக்கல்கள் ஏற்படுவதையும் இப்பிரதி சொல்கிறது. கிருபாநிதி ஹெலன் மீது கொண்ட அதீத காதல் அல்லது உடல்ரீதியான ஆசையினால் ஏற்படும் மனச்சிக்கல் காட்டப்படுகிறது. சான்றாக,

“காதலி கடிதம் எழுதினா என்ன தப்பு?” கிண்டல் செய்ய ஆரம்பித்தான் கிருபாநிதி.

“உன்னப் பத்தி.”

“நான் டெய்லி ஹாஸ்டல்ல போய் நிற்கிறேன். ஹெலன் பயப்படுறா, அப்படித்தானே?”

“ஆமாடா, ஏன் அங்கே போய் அந்தப் பொண்ணு லைஃபைக் கெடுக்கப் பார்க்கிற. நீ அவள விரும்பினா அதுக்கு இதா வழி? மெதுவா நிதானமா இரு. மெதுவா அவளிடம் பேசி, அவ அப்பா, அம்மா பற்றி எல்லாம் தெரிந்து, அதுபோல் உன் வீட்டிலயும் பேசணும் இல்லியா?” (ஆடிப்பாவைபோல, ப.162) என கிருபாநிதி இளமைக்காலச்சூழலுக்கேற்ற வேகத்துடன், தன் காதலியை அடைய அவசரப்படுவதையும், இதனால் ஹெலனுக்கு சிக்கல்கள் ஏற்படுவதையும் இது காட்டுகிறது.

“காந்திமதியின் வீட்டுச் சம்பவங்கள் பற்றி ஏதேனும் செய்தி கிடைத்தால் உடனடியாகத் தங்களுக்குத் தெரிவிக்கவேண்டும் என்று வின்சென்டும் கிருபாநிதியும் கூறினர் ஹெலனிடம். புறப்பட இருந்த சமயம், “சாரி” என்றான் கிருபாநிதி தயங்கியபடி.

“எதுக்கு?” என்றாள் ஹெலன்.

“டெய்லி ஆஜர் ஆனதுக்கு” என்று நகைச்சுவையை மீண்டும் புகுத்தினான் கிருபாநிதி.

“அதுக்கல்ல எனக்குக் கோபம். தலைமுடி குலைஞ்சு, அழுக்குச் சட்டையும்  போட்டுக் கொண்டு. . .

இப்படியா ஆட்கள் மாறணும்? ஹாஸ்டல விட்டு வெளியில் வந்தா எல்லாம் போயிடணுமா?” என்றாள் கோபமாக ஹெலன்.” (ஆடிப்பாவைபோல, பக்.173-174)

நவீன காலச்சூழலில் இவர்கள் செய்யும் காதலானது, மற்றவர்களுக்கு வெளிப்படையாக தெரிந்தாலும் அதைப்பற்றிய எந்தவிதக் கவலையுமில்லை. ஆனால், தன் காதலன் தன்னைப் பார்க்கவரும்போது, அவன் பிறர் பார்வைக்கு எப்போதும் மிடுக்குடன் மற்றவரைக் கவரும்வண்ணம் நவீன ஆடவனாக இருக்கவேண்டுமென்று அவள் நினைப்பது இதன்வழி தெரிகிறது. அப்படி அவன் இல்லாதபோது அவளுக்கு பெரும் மனச்சிக்கல் ஏற்படுவதை இதில் பார்க்கமுடிகிறது. இறுதியில் இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்துகொண்ட பின்னரும் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு நீக்குவதும் நவீன காலப் பிரச்சினையாகப் புரிந்துகொள்ள முடிகிறது. இதேபோல, வின்சென்ட்டின் நண்பன் சந்தோஷம் கீழ்சாதிக்காரனாக இருப்பதால், மேல்சாதிக்காரப் பெண்ணைக் காதலித்த காரணத்தினால் கொலைச் செய்யப்படுவதும், காந்திமதியின் தந்தை விநாயகமூர்த்தி தன் மூத்தமகள் விசாலாட்சி மீது அதிக அன்பு கொண்டதால், அவருக்கு ஏற்படும் மனச்சிக்கல் குறித்தும் அவள் தற்கொலை செய்துகொண்டதால் ஏற்படும் விரக்தி குறித்தும் இப்பிரதி தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. இவ்வாறாக, அகம் என்ற பகுதியில் நவீன கால வாழ்க்கையில் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் நிகழும் அகஉணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார். மனித மனங்கள் இயங்கும் சூழலை, தத்துவார்த்தத் தன்மையில் தன் எழுத்தினூடாக சித்திரித்துள்ளார் தமிழவன்.

மாணவர்களின் போராட்டமும் அரசியல்வாதிகள் செய்யும் அரசியலும்

அமரன், ஜி.கே.சாமி, நெல்சன், சபாஷ் ராஜ், ஜோசப், ரவி ஆகிய கதாபாத்திரங்களுடன் பொன்வண்ணன் – மலர்க்கொடி, வான்மீகநாதன் – காமாட்சி எம்.எல்.ஏ., சுரேந்திரன், அரங்கநாதன், காம்ரேட் சட்டர்ஜி, வெங்கட்ராமன், கம்யூனிஸ்ட் சுப்ரமணியம், தர்மலிங்கம் ஆகிய அரசியல் கதாபாத்திரங்களையும் கொண்டு புறம் என்னும் பகுதியின் கதை இயங்குகிறது. இதில் அமரன் மற்றும் ஜி.கே.சாமி ஆகிய இருமாணவர்கள் கல்லூரியில் படித்துக்கொண்டே இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலும் ஈடுபடுகின்றனர். தமிழ், ஆங்கிலம் நன்கு கற்றதுடன், மேடைகளில் இந்தி எதிர்ப்பு குறித்துத் திறமையுடன் சொற்பொழிவாற்றுகிறான். இருப்பினும், மாணவர்களுக்குத் தலைமையாக இருப்பதால் அரசியலில் அவனுக்கு இடம் கிடைப்பதில்லை. ஆனால், ஜி.கே.சாமி பேச்சுத்திறனில் திறமை சற்றுக் குறைந்திருந்தாலும் அரசியல் தொடர்புடன் இயங்குவதால், அவன் அரசியலில் எளிதாக இடம்பிடித்து விடுகிறான். இம்மாணவ அமைப்புடன் சபாஷ் ராஜ் என்னும் பேராசிரியர், அரசியல் குறித்தும் அரசியல்வாதிகள் மாணவர்களை வைத்து அரசியல் செய்வதையும் எடுத்துரைக்கிறார். இன்றைய சூழலில் மாணவர்கள் அரசியலுக்கு வரத் தயங்குகின்ற அல்லது மறுக்கின்ற வேளையில், நம் முந்தைய வரலாற்றில், மாணவர்கள் போராட்டத்தின் வாயிலாக மேற்கொண்ட அரசியலை இப்பிரதி எடுத்துக்காட்டுகிறது.

“நகரின் இந்தி எதிர்ப்பு வரலாறு – என்றைக்கும் அடிமைகளைப் போல் அடங்கி ஒடுங்கிப் பார்த்துக்கொண்டிருக்கும் கத்தோலிக்கக் கல்லூரி இக்னேஷியஸ் ஹாஸ்டல் மாணவர்களைக்கூட கோபங்கொள்ளச் செய்து – கறுப்புக் கொடி கட்ட வைத்ததோ – அன்றே தொடங்கி விட்டது…!

…சொற்பொழிவாளன் அமரன், பேச்சில் கொச்சைப் பேச்சுப் பாணியைத் திடீரென்று புகுத்தினான்.

“ஏங்க, முட்டாள்ள இரண்டு வகை உண்டு” என்று சொல்லி ஜனக்கூட்டத்தை வலது கையால் சுட்டியபடியே நின்றான். முழுக்கைச் சட்டை அவனை அவனுக்கே ஒரு தீர்க்கதரிசி போல் காட்டியது. ஜனக்கூட்டம் அமைதியானது. முட்டாள்களின் அந்த இரண்டு வகைமையைப் புரிந்துகொள்ள ஆர்வம் காட்டி வாய்பிளந்து நிற்கும் ஜனக்கூட்டம்.

“ஒருத்தன் அடிமுட்டாள்…”

என்று நிறுத்தினான். பத்து செகண்டுகள் இடைவெளிவிட்டு அடுத்து, முகத்தைக் கைக்குட்டையில் துடைத்துவிட்டுச் சொன்னான். கூட்டத்தில் அப்படி ஒரு மௌனம்.

“இன்னொருத்தன் வடிகட்டின முட்டாள்…”

ஜனங்கள் சிரிக்கத் தயாரானார்கள். அவர்களைத் தடுக்க கையைக் காட்டிவிட்டுத் தொடர்ந்தான்.

“இந்த இரண்டும் சேர்ந்த ஒரு முட்டாள் இருக்கான். யாரு சொல்லுங்க…?”

என்று ஜனக்கூட்டத்தைப் பார்த்தான். அவர்கள் ஒரு நிமிடம் விழித்தார்கள். எங்கே சொல்லிவிடுவார்களோ என்று கணநேரத்தில் உணர்ந்த பேச்சாளர் அமரன், இரண்டு கைகளையும் வானத்தில் உயர்த்தி, பின் அதே விசையில் கீழே இறக்கும் தறுவாயில் இப்படிச் சொன்னான்.

“அவன்…

தான்…

நமது…

முதலமைச்சர்…”

‘ஓ’ என்ற கூக்குரலும் கைத்தட்டலும் வானத்தைப் பிளந்தன.” (ஆடிப்பாவைபோல, பக்.46-47) என அமரனின் சொற்பொழிவு, அன்றைய அரசியல் தலைவர்களின் நிலையை மக்களுக்கு எடுத்துரைக்கிறது. மாணவர்கள் வெகுஜன மக்களோடு இயங்கும்போது, மேடையேறி பேசும்போது யாருக்கும் பயப்படாமல் இருக்கின்ற சூழலை இது எடுத்துக்காட்டுகிறது.

“பின்பு பேச்சு மொழிப்போர் பற்றித் திரும்பியது. சபாஷ்ராஜ் மிகவும் தெளிவாகக் கூறினார்.

“இன்றைக்கு நடந்துகொண்டிருப்பது ஒரு சரியான போராட்டம். ஆனால் மாணவர்களுக்கு அதைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள போதிய பலம் இல்லை. தியாகம் செய்வது அவர்கள்; தீக்குளிப்பது அவர்கள். உங்களுக்குச் சமீபத்தில் நடந்த சம்பவம் ஒன்று தெரியாது என்று நினைக்கிறேன். ஒரு ஸ்கூல் பாலகன் சமீபத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி எரிந்து செத்துப் போனான்…” …

“எரிந்து கொண்டிருந்த பாலகனைக் காப்பாற்றாமல் ஒரு கட்சிக்காரன் என்ன செய்தான் தெரியுமா? எரிந்து கொண்டிருக்கும் தீயில் ஒரு தாளை நுழைத்து, பாதி எரிந்த தாளை எடுத்துப் பத்திரப்படுத்தினான். பின்பு அந்தத் தாள் வேறு ஒரு சிறுவனின் கையில் எழுதப்பட்டது. பத்திரிகைகளில் எல்லாம் செய்தி! என்ன தெரியுமா? தங்கள் கட்சியைச் சார்ந்த சிறுவன் ஒருவனின் தியாகம் என்று, உண்மை திரிக்கப்பட்டது. அந்தச் சிறுவன் தீ வைப்பதற்கு முன் எழுதிய கடிதமாம். அவன் அந்தக் கட்சியைச் சார்ந்தவன் என்று எழுதி வைத்திருந்தானாம்.

“ஃபிராட்… ஃபிராட்…” என்று ஆங்கிலத்தில் சொல்லி நிறுத்தினான்.” (பக்.52-53) அரசியல்வாதிகள் மாணவர்களைத் தங்களுக்கு ஏதுவாக பயன்படுத்திக்கொண்டு அரசியல் செய்வதை இது எடுத்துக்காட்டுகிறது. மாணவர்கள் தாங்கள் நடத்தும் உண்மையான போராட்டத்தின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல் அதில் பலன்தேடும் கட்சிகளை நம்பி நம்நாடு இயங்குவதைத் தமிழவன் இதில் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார். அரசியல்வாதிகள் தங்கள் சுயலாபத்திற்காக ஒரு போராட்டத்தினைக்கூடத் திசைதிருப்பி விடுவதைச் சமகாலச் சூழலில் பதிவுசெய்வதன் வாயிலாக நம் தேசத்தின் மோசடி நிலையை உணர்ந்துகொள்ள முடிகின்றது.

இதேபோல, நாட்டை ஆளும் ஆளுங்கட்சியினர் தங்களுடைய பதவிகளை நிலைநிறுத்திக்கொள்ளச் செய்யும் அரசியலையும் (282 – 283) எதிர்க்கட்சியினர் பதவியைப்பெறச் செய்யும் அரசியலையும் (272) அழுத்தமாகத் தன் எழுத்தினூடாகப் பதிவு செய்துள்ளார். இத்துடன், வருங்கால அரசியல்நிலை குறித்தும் குறிப்பிடுகிறார்.

“வான்மீகநாதன்  புதிய ஆட்சியில் முக்கியமான ஆள். நான் அவருடைய காரியதரிசி. படிப்பு வரல்ல. வேற வழி. மாசம்தோறும் முந்நூறு ரூபா வந்திருதில்ல. அப்பா டிரான்ஸ்போர்ட் கம்பெனியிலிருந்து ரிட்டையர் ஆன பின்பு வான்மீகநாதனுடைய ஆபீஸில் வேலை போட்டுக் குடுத்தாரு. அவரும் நல்லா சம்பாதிக்கிறாரு. மெடிக்கல் ஸீட், இன்ஜினீயரியங்க் சீட் எல்லாம் ஊர் பக்கத்தில் உள்ளவங்க இவர்கிட்டதான் வர்றாங்க. எல்லாம் எனக்குத் தெரியும். ரயில்வே ட்ராக் பக்கத்தில பத்து ஏக்கர் இரண்டு துண்டா இரண்டு ஆட்கள் கிட்டயிருந்து வாங்கினாரு. இடையில் ரயில்வே நிலம். அதான் அந்த நிலத்தை வளைச்சு ஒட்டுமொத்தமா பெரிய நிலம் வான்மீகநாதனுக்கு வரும். எதிர்காலத்தில் ரியல் எஸ்டேட் தான் இந்தியாவில பெரிய பிஸினஸாம். மனைகளாக வருமாமே.”

“ஆஹா, ஊரில இருக்கிற அயோக்கியன் எல்லாம் எதிர்கால இந்தியா பற்றிச் சரியாகக் கணிக்கிறான் பாரு. சரி, பொன்வண்ணன் எப்படி?”

“பொன்வண்ணன்தான் வான்மீகநாதனுக்குப் பெரிய நண்பன். அவனும் மனைவி பெயரிலும் பள்ளிக்குப் போகிற குழந்தைகள் பெயரிலும் நிறைய நிலம் வாங்கியிருக்கிறான். கட்சிக்குள்ளே வான்மீகநாதனைக் கொண்டுவந்ததில் பெரிய பங்கு பொன்வண்ணனுக்கு ஸார்.”

“பின்ன இருக்காதா? வேறு யாரையாவது மேல வரவிடாமலிருப்பதற்காகப் பழனி செய்திருப்பான். அவனும் இந்த அயோக்கிய கும்பலச் சேர்ந்தவன்தானே.” ” (ப.365) அரசியல்வாதிகள் எதிர்காலத்தில் தங்களுக்கு வேண்டிய வகையில் பொருளாதார ரீதியில் உயர்த்திக்கொள்ள, ஆட்சியில் இருந்தபோது செய்யும் செயல்களைச் சுட்டிக்காட்டுகிறார். மேலும், ஆளுங்கட்சியினரான வான்மீகநாதன், எதிர்கட்சியைச் சார்ந்த பொன்வண்ணனிடம் மறைமுகமாக நட்பு பாராட்டி இருப்பதும், இதனால் இவர்கள் இருவர் கையில்தான் ஆட்சியிருக்க வேண்டும் என்ற தந்திரமும் இதன்வழி வெளிப்படுகிறது. நாட்டின் தேவையையும் பொதுமக்களின் தேவையையும் நிறைவேற்றத் தவறிய ஆட்சியாளர்கள், தம் சுயநலத்தினையே பெரிதாகக் கருதிச் செயல்படுவது அப்பட்டமாக எடுத்தாளப்பட்டுள்ளது. சமகால அரசியல் சூழலும் தற்சமயம் இப்படிப்பட்ட நிலையைத்தான் கொண்டுள்ளது என்பதை எடுத்துக்காட்டும் விதமாகத் தமிழவன் தகுந்த சூழலில் இப்பிரதியினைப் படைத்துள்ளார்.

முடிவுரை

தமிழவன் படைத்த இந்நாவலின் பெயருக்கேற்றபடி, இன்றைய மனிதர்கள் பெரும்பாலும் அறிவு பெற்றிருந்தாலும் தொழில்நுட்ப வளர்ச்சியடைந்திருந்தாலும் பிறர் ஆட்டிவைக்க, ஆடும் பொம்மைகளாகவே சமகாலத்திலும் இயங்குவதைப் புனைவின்வழி எடுத்துரைத்துள்ளார். இன்றைய நவீன ஊடகங்களாலும் ஸ்மார்ட் ஃபோன் போன்ற பல பொருட்களாலும் நாம் சிந்தனை ரீதியான அடிமைப்பட்டு இருக்கின்ற சூழலில், இப்பிரதி, வரலாற்றினை மீளயெழுதி, எதிர்ப்புநிலை சார்ந்த சிந்தனையைக் கோரும் விதமாக படைக்கப்பட்டுள்ளது. மனித மனங்களின் உணர்வுகள் மற்றும் தேசியத்தின் அரசியலின் இயங்குநிலைகள் ஆகியவற்றைக் கூறுவதன் வாயிலாக உடல்ரீதியாக நாம் எதிர்காலத்தில் அடிமையாகிவிடக் கூடாது என்பதை உணர்த்துவதாக உள்ளது.

இவருடைய பிற பிரதிகளில் உள்ளதைப் போன்ற மொழிநடை, உத்திமுறை, குறியீட்டுத் தன்மை போன்றவைகள் இதில் இல்லாமலிருந்தாலும், இப்பிரதியின் எதார்த்த மொழியானது, 21ஆம் நூற்றாண்டில் இருக்கும் மாணவர்கள், கல்வியாளர்கள், ஆய்வாளர்கள் எனப் பலதரப்பட்டவர்கள் வாசித்துச் செயல்படவேண்டிய பிரதியாகவும் உள்ளது எனலாம்.

*****

கட்டுரையாளர்
உதவிப் பேராசிரியர்
தமிழ்த்துறை
தியாகராசர் கல்லூரி
மதுரை – 625 009
செல் : 99443 77853,
70924 44163.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *