இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . (265)

 

சக்திசக்திதாசன்

அன்பினியவர்களே !

அன்பான வணக்கங்களுடன் இந்த வார மடலில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்வடைகிறேன். மனித வாழ்க்கை என்பது நம்பிக்கையின் அத்திவாரத்திலே தான் கட்டியெழுப்பப்படுகிறது. நம்பிக்கையற்ற மனிதர் வாழ்வில் வெற்றி பெற்றதாகச் சரித்திரமேயில்லை. நம்பிக்கை என்பதை ஒவ்வொருவரும் ஏதோ ஒன்றில் அவர்களின் அறிவுக்குத் தமது வாழ்வினைச் செப்பனிடத் தேவையானது எனும் ஏதோ ஒன்றில் வைக்கிறார்கள். இவ்வகிலத்தில் பல நாடுகள் இருக்கின்றன அப்பல நாடுகளிலும் பல இன மக்கள் பல்வேறு மொழிகளைப் பேசுபவர்களாக இருக்கிறார்கள். கற்கால மனிதர் தமக்கென கொண்டிருந்த நம்பிக்கைகள், தற்கால மனிதர்களிடம் நம்பிக்கைகளிலும் இருந்து வேறுபட்டவை. அன்றைய மனிதரைக் கட்டுப்படுத்துவதற்கு அனைவருக்கும் பொதுவாக, அனைவரையும் இணைக்கக் கூடிய வலிமை மிக்க ஒரு நம்பிக்கையாக தமக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியின் மீது நம்பிக்கை வைக்கத் தலைப்பட்டார்கள்.

அன்றைய அவர்களின் அறிவுக்கு எட்டியபடி அவர்களால் விளக்கப்பட முடியாத பல நிகழ்வுகளை விளக்குவதற்காகவும், மக்களின் வாழ்வை ஒரு நெறிமுறைக்குள் கொண்டு வருவதற்கும் ஏதுவாக இறை நம்பிக்கையை மக்களின் மனதில் நிலை நிறுத்தினார்கள். இவ்விறை நம்பிக்கையின் படி அவரவர் சமுதாயங்களில் வழிபடும் தெய்வங்களை முன்னிலைப்படுத்தி மதப்பிரிவுகளை ஏற்படுத்தினார்கள். அதைத் தொடர்ந்து காலகாலமாக இம்மத உணர்வுகளின் அடிப்படையே சமுதாயங்களின் ஸ்திரத் தன்மைக்கு அடித்தளமாக அமைந்துள்ளது. எப்படியும் வாழலாம் என்பதிலிருந்து இப்படித்தான் வாழவேண்டும் எனும் கோட்பாட்டைத் தக்க வைத்துக் கொள்வதற்காக மதக் கோட்பாடுகளை உபயோகித்தார்கள். அன்றைய காலகட்டத்தில் இதன் தேவை அவசியமாகவிருந்தது.

காலச்சக்கரம் உருண்டோட மனித இனமானது பல மாற்றங்களுக்குள்ளானது. மனிதனுடைய விஞ்ஞான அறிவு விஸ்தீரணமடையத் தொடங்கியது. புரியாமல் இருந்த பல நிகழ்வுகளுக்கு விஞ்ஞானரீதியான விளக்கமளிக்கும் அறிவை மனித இனம் பெற்றது. அன்றைய மனிதன் கடவுளாக வழிபட்ட நிலவினிலே இன்றைய மனிதன் கால் பதிக்குமளவுக்கு அவனது விஞ்ஞான அறிவு வளர்ந்தது. இறைசக்தி என்று எதை நம்பினோமோ அவற்றை நோக்கிய எமது கேள்விகள் பல அர்த்தம் நிறைந்ததாகப் பட்டது. மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி இறைவன் எனும் மாயையின் மூலம் பலர் தமது வாழ்வை உயர்த்திக் கொள்கிறார்கள் எனும் எண்ணம் பலரின் மனதில் பலமாக தலைதூக்கியது. விளவு ஆத்திகம், நாத்திகம் எனும் பிரிவுகளின் வாதம் தலைதூக்கியது. அதன் அதிஉச்சக் கட்டமாக இன்றைய காலகட்டத்தைப் பார்க்கிறோம்.

இங்கேதான் ஒரு பலமான கேள்வி எழுகிறது. “இறை நம்பிக்கை ” என்பது மக்களை ஏமாற்றுவதற்காக கையாளப்படும் ஒரு வழிமுறையா ? வாழ்க்கை என்பது நிலையற்றது. நாளை எமது வாழ்வில் என்ன நிகழும் என்பதனை யாருமே அறுதியிட்டுக் கூறமுடியாது. நாம் எதிர்பார்க்காத எத்தனையோ நிகழ்வுகள் பாதகமாக இருந்தாலும் சரி, சாதகமாக இருந்தாலும் சரி எம் வாழ்வினில் நிகழ்ந்திருக்கிறது, நிகழும் என்பதனை நாம் யாருமே மறுக்க முடியாது. இதுதான் யதார்த்தம். இது ஏன் எமக்கு நடந்தது ? எனும் கேள்வி எம் எல்லோருடைய மனதிலும் ஏதோ ஒரு கால கட்டத்தில் எழுந்திருக்கும் என்பதுவே உண்மை. எமக்கு நிகழ்ந்தவைகள், நிகழப் போகிறவைகளுக்கு விளக்கம் அளிக்க யாருக்குமே முடியாத நிலையில் நாம் சிலவேளைகளில் எமக்கும் மேலே ஒரு சக்தி எம்மீது இவற்றை நிகழ்விக்கிறது எனும் நம்பிக்கை கொண்டாக வேண்டியிருக்கிறது. அப்படியான நம்பிக்கை அலைபாய்ந்தோடும் எமது மனநிலையைச் சீராக்க உதவுகிறது. இன்று தனிமனித சுதந்திரம், ஜனநாயகம் என்பன பல இடங்களில் முன்னிறுத்தப்படுகின்றன.

இறைநம்பிக்கை கொள்வது ஒவ்வொரு மனிதனதும் தனிஉரிமையாவது போல, இறைநம்பிக்கை அற்றிருப்பதுவும் அவர்களின் தனி உரிமையே. எங்கே எப்போது இவையிரண்டுக்கும் இடையில் முரண்பாடு ஏற்படுகிறது என்றால் ஒன்றின் மீது மற்றொன்றைத் திணிக்க முயலும்போதுதான்.

சமயம், மதம் எனும் பெயரில் அடுத்தவரின் தனிஉரிமைகளைப் பறிக்கும் செயல்களை மூடநம்பிக்கை எனும் பெயரில் விமர்சித்து மாற்ற முயற்சிப்பது என்றும் தவறேயாகாது. ஆனால் அம்மூடநம்பிக்கைகள் எனும் பெயரில் ஒரு மனிதன் தன் மனதில் கொண்டிருக்கும் நம்பிக்கையின் ஆணிவேரைப் பிடுங்க முயற்சிப்பது தவறாகும். அதேபோல அர்த்தமில்லாத பல விதிமுறைகளைச் சம்பிரதாயம் எனும் பெயரில் அதை ஏற்க மறுப்போரின் மீது புகுத்த முயற்சிப்பதோ அன்றி அவற்றின் பெயரில் ஒருவரின் நியாயமான முன்னேற்றங்களைத் தடுப்பதோ தவறாகும்.

ஆனால் இன்றைய அவசர உலகில் பலர் இறை நம்பிக்கை என்பதனைத் தவறாகப் புரிந்து கொண்டுள்ளார்கள். சமுதாயத்தில் குறுகிய மனப்பான்மை கொண்டவர்களால் மேற்கொள்ளப்படும் சுயநலப் போக்குகளை ஆத்திகவாதம் என்று பிழையாக அடையாளப் படுத்திக் கொண்டுள்ளார்கள். இன்றைய உலகில் ஏமாற்றிப் பிழைப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது உண்மையே ! நாளுக்குநாள் அதிகரித்து வரும் இந்த நிலையற்ற போக்கினைச் சமாளிப்பதாக பலர் ஆன்மீக விளக்கங்களைத் தேடி ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையால் ஆன்மீகத்தின் பெயரால் மோசடி செய்வோர் அதிகரித்திருப்பது உண்மையே ஆனால் அதற்காக இறை நம்பிக்கை கொண்ட அனைவருமே, உண்மையாக மக்களுக்கு ஆறுதலை அளிக்க ஆன்மீக வழிகளைக் காட்டும் அனைவரையும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாகப் பார்ப்பதுதான் தவறான செய்கை. தமிழின் பெயரால் பலரை ஏமாற்றி வாழ்வோரும் இருப்பதனால் நாம் அன்னைத் தமிழையே எதிர்க்கிறோமா? இல்லையே ! அது போலத்தான் ஒரு சிலரின் தவறான நடவடிக்கைக்காக ஆத்திக நம்பிக்கை உடையவர்களை தவறான கண்ணோட்டத்துடன் பார்ப்பது தவறாகிறது.

ஒரு குழந்தைக்கு எது தவறு, எது சரி என்ற முதல் பாடம் பெற்றவர்களிடமிருந்தே கற்றுக் கொடுக்கப்படுகிறது. அப்போதிருந்தே வாழ்வில் ஒரு பிடிப்பு, நம்பிக்கை ஆகியவற்றின் முக்கியத்துவமும் கற்றுக் கொடுக்கப்படுகிறது. உண்மையான இறை நம்பிக்கை உடையவர்கள் மனிதர்களுக்குள் பேதம் பார்க்க மாட்டார்கள். மனிதர்கள் அனைவருமே சமமானவர்கள் எனும் எண்ணமே அவர்கள் மனதில் நிலைநிறுத்தப்படும். தமது மனதிலுள்ள நம்பிக்கையை வெறி எனும் நிலைக்கு உயர்த்தும்போதுதான் அங்கே வேறுபாடுகளின் எல்லைகளுக்குள் தள்ளப்படுகிறார்கள். ஆனால் இன்று இறைநம்பிக்கையைக் கடைப்பிடிப்பவர்கள் கேலி செய்யப்படும் ஒரு நிலை உருவாகிறது.அதனால் பலர் தமது ந,ம்பிக்கைகளை மறைத்து வைத்து வாழும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

“நான் ஒரு இந்து” என்று சொல்வதில் எதுவிதமான மதவெறி உணர்வும் கிடையாது. ஆனால் எனது மதம் தான் முதன்மையானது என்று அடுத்த மதங்களையும் அதனைப் பின்பற்றுபவர்களையும் அவமரியாதை செய்வதே பிரச்சனைகளுக்கு வழி வகுக்கிறது. நாம் எவ்வாறு நாம் வணங்கும் தெய்வத்தினை நம்புகிறோமோ, அதே போலத்தான் அடுத்தவரின் நம்பிக்கையும் இருக்கும் என்பதினை நன்கு புரிந்து கொள்ளத் தவறுவதே தவறுகளின் ஆரம்பமாகிறது. அனைவரையும் மனிதர்களாக ஜாதி, மத வேறுபாடின்றி மதிக்கப் பழகுவதே முதன்மையானது. கவியரசர் கூறியது போல மதம் மனிதனுக்கு ஆடையல்ல, அணிகலன் மட்டுமே !

மீண்டும் அடுத்த மடலில்

அன்புடன்

சக்தி சக்திதாசன்

http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க