Blog

  • நூல்நோக்கம்

    -விவேக்பாரதி

    சித்தார்த்தனாகும் புத்தன்கள் – கவிஞர் சிபு

    போதிமரம், சித்தார்த்தன், புத்தன், ஞானம் இவற்றை அடித்துத் துவைத்துப் பிழிந்து சாயம் உலர்த்திப் போட்டிருக்கும் புத்தகம் “சித்தார்த்தனாகும் புத்தன்கள்”. ஏழெட்டு மாதங்கள் தவமாய்த் தவம் கிடந்து இந்தப் புத்தகம் வெளிவந்திருக்கிறது என்றால் எத்தனை வெட்டல் ஒட்டல்களைக் கடந்து வந்திருக்கும் என்று நம்மால் யூகிக்க முடிகிறது. ஆனால் மற்ற புத்தகங்களைப் போல ஓரிரவில் கடந்து சென்றுவிட முடியாத அடர்த்தி பக்கத்திற்குப் பக்கம் வலுக்கிறது. இடையிலோ, தொடக்கத்திலேயோ, நிறைவிலோ நம்மை ஒருகணம் புத்தக வரிகளை மறந்து அகவரிக்குள் பயணப்பட வைக்கும் கவிதைகள். நான்கே நான்கு கதாப்பாத்திரங்களைக் குழந்தை விளையாடும் பொம்மை ராஜாங்கத்தைப் போல மாற்றிமாற்றி நண்பனாய், சேவகனாய், அரசனாய், அடிமையாய், கேள்வியாய், விடையாய் போட்டு உருட்டி எடுத்து நம்மையும் தன்னுடன் இழுத்துக்கொண்டே போகிறது இந்தப் புத்தகத்தின் மூலம் தான் பிறந்தாகச் சொல்லிக் கொள்ளும் “சிபு” என்கிற குழந்தை.

    ஆரம்பத்திலேயே நம் அகத்தை வென்று விடுகிறார் சிபு,

    “இந்தப் புத்தகத்தில் புத்தர் உட்பட மனிதர்கள் யாரும் துன்புறுத்தப்படவில்லை” மற்றும் “கற்பனைகளைத் தவிற மற்ற எதுவும் கற்பனைகள் அல்ல”

    இந்த வரிகளே நம்மை அப்படி என்னதான் சொல்லியிருக்கிறார் என்று படிக்கத் தூண்டுகிறது.

    எடுத்த எடுப்பில் எடுப்பான அணிந்துரை வழங்கியிருக்கிறார் கார்த்திக் இமயவரம்பன் அவர்கள். கவிஞர் சிபுவிடன் மிக நெருக்கமாகப் பழகிக் கொண்டிருக்கும் அவர் சிபுவைக் குறித்து அளவிட்டுச் சொல்லியிருப்பவை யாவும் புத்தகத்தில் மறைமுகமாக அவர் முகம் பார்க்கத் தோதாக அமைகின்றன. வைரவரி வானரசன் அவர்களது நயவுரை நயம் மிகுந்த உரை. தன்னுடைய உரையாகக் கவிஞர் தான் சொல்லியிருப்பதையும் சொல்லவிருப்பதையும் காட்டுகிறார். இவையெல்லாம் எல்லாப் புத்தகத்திலும் இயல்புதான் என்றாலும் எல்லாப் புத்தகத்தை விட இதனை மாறுதலாகச் செய்ய வேண்டுமென்ற எத்தணம் வெற்றியைத்தான் சேர்த்திருக்கிறது. எதார்த்தமே இந்தக் கவிஞரின் உயிர்நாதமாக விளங்குகிறது என்பது மிகவும் பாராட்டவும் வரவேற்கவும் தக்கது. பொதுவாகவே “கவிதை விற்பனைப் பொருளன்று” இது அனைவரும் அறிந்த வாசகம். மேலும் கவிஞர்கள் விற்பனை உத்திகளில் விலைபோவதில்லை. ஆனாலும் விற்பனை உத்திகளைக் கவிஞர்கள், சிபு போல வளர்த்துக்கொள்ளலாம் என்று நான் எங்கும் நிறுவத் தயாராக உள்ளேன். அகம் சார்ந்த ஒரு பயணத்தை இந்தச் சமுதயத்திற்குத் தர நினைக்கும் சிபு, அதனை இந்தக் கால நவீன இலக்கிய வடிவத்திலும், அதிகப் படியான கவிதை உள்ளீட்டு ஜாலங்கள் இல்லாத நிலையிலும் படைத்திருப்பது மிகவும் பாராட்டுவதற்கும் பின்பற்றுவதற்கும் உரியது.

    கவிதைக்குள், கதைக்குள், சரி கவிதைக் கதைக்குள் நுழைந்தால் முதலில் நாம் சந்திப்பது ஒரு செய்தியாளனை,

    “செய்தியாளன்
    ஆவதற்கு முதற்தகுதி
    பிணங்களைக் கண்டு
    அழக்கூடாது…

    எரியும் உடலை
    எக்காரணம் கொண்டும்
    அணைக்கக் கூடாது…”

    இவை சிபுவின் எதார்த்த அளவீட்டின் உச்சம் என்று கொள்ளலாம். படிப்படியாக செய்தியாளன் ஞானத்தையும் புத்தனையும் சித்தார்த்தனையும் போதி மரத்தையும் சந்திக்கிறான். அவற்றிடம் வழக்கமாகக் கேள்வி கேட்டு வாங்கிக் கொள்கிறான். திறனாய்வு அல்லது விமர்சனம் என்று இதனை நகர்த்திக் கொண்டு போவதற்கு முன்னம் ரசித்த பகுதிகளை வாசக ரசிகனாகச் சொல்லிவிடுவது என்று எனக்குத் தோணுகிறது. அதன்படி பார்த்தோமானால் சித்தார்த்தனாகும் புத்தன்கள் மொத்தமும் எதார்த்தத்தின் சிகரம். இந்த எதார்த்தத்தையும் கற்பனைக் கதையையும் வடதுருவ தென்துருவமாகக் கண்டுவந்த நம் சமுதாயத்திற்கு இவை இரண்டும் பக்கத்து வீட்டு அங்காளி பங்காளிகள் என்று காட்ட முயன்றிருக்கிறார் கவிஞர். என்னைப் பொறுத்தமட்டில் வெற்றியும் கண்டிருக்கிறார்.

    “எனக்குத் தெரியும்
    அந்தப் பூக்காரிக்குக்
    கணவன் இல்லை…
    எதற்கவளுக்கு
    இத்துணைப் பெரிய பொட்டு?
    பூக்கள் விற்கவா?”

    இந்த வரிகள் நம்மை அந்தப் பூக்காரி அருகில் அமர வைக்காமல் செல்லா. சமுதாயம் சில நிலைகளில் சில வேஷங்களைச் சீருடையாக நம்பி ஏற்கின்றது. விபூதி பட்டை அடித்த முதல் பெஞ்ச் மாணவன், சிடுமூஞ்சி பேருந்து நடத்துநர் என்பது போல..

    செய்தியாளன் ஞானம் என்கிற பொருளை, ஆளை, சக்தியை என்னவோ ஒன்றைத் தன் கண்களால் காண்கிறான். தன் பழக்க தோஷத்தில் அதற்கு முன்னமும் பேனாவை நீட்டிக் கேள்விகள் கேட்கத் தொடங்குகிறான்., அவன்,

    “நீதான் புத்தனுக்குக் கிடைத்தாயா?” என்று கேட்க,

    “நான் கிடைத்ததால்தான்
    அவன் புத்தன்,
    இல்லையேலவன்
    சிறுவன் சித்தார்த்தன்”

    என்று ஏளனமாக ஞானம் பதில் சொல்கிறது. இவ்விடம் நம்மை ஆழ்ந்து சிந்திக்க வைப்பதில் வியப்பொன்றும் இல்லை. பொதுவாக நாம் பொருட்களின் மீதும் தகுதிகளின் மீதும் பற்று கொள்கிறோம். சில சமயங்களில் அவற்றால் கர்வமும் கொள்கிறோம். நம் மனம் அதனால் ஆனந்தமும் திருப்தியும் அடைகிறது, இஃதொரு பக்கம் இருக்க, பொருட்களோ, தகுதிகளோ நம்மை என்ன நினைக்கும்? புத்தனை நான் அடைந்ததால் தான் அவன் புத்தன் ஆனான், இல்லையேல் அவன் சித்தார்த்தனாகவே இருந்திருப்பான் என்று ஞானம் சொல்வதாக இங்குக் காட்டப்பட்டிருக்கும் நிலை, நம் வாழ்வில் எதுவும் நிலையானது இல்லை என்ற நிலைப்பாட்டிற்கு நம்மை இழுத்துக் கொண்டு போகிறது.

    நான் முன்னம் குழம்பினேன், அல்லது குழப்பினேன் என்று வைத்துக்கொள்வோம். எது ஞானம்? சக்தியா? தகுதியா? ஆற்றலா? அடிப்படையா? ஆளா? பொருளா? மாயையா? குணமா? எத்தனை கேள்விகள்! இதற்கு விடையைக் குழப்பி விட்ட சிபுவிடமே கேட்கலாம் என்று பக்கங்களைப் புரட்டிப் பாருங்கள்.

    “உன்னைக் கிழித்து
    உன்னையே தைக்க,
    உன் கையிலுள்ள
    கத்திரிக்கோலும், ஊசி நூலும்
    தான் ஞானம்”

    உலகியல் என்பது நம் யாவருக்கும் அனுக்கமான ஒரு புள்ளி தான். அது நம்மால் கற்பனை செய்யப் படவேண்டியது அன்று. கண்ணால் கண்டுகொள்ளத் தக்கது. அப்படிப்பட்ட உலகியல் இந்தப் புத்தகத்தில் நிரம்பிக் கிடக்கின்றது. தற்போதைய சமுதாயத்தின் இருள் பக்கங்கள் வெட்டவெளிச்சமாக கவிஞரின் சொற்களில் அம்பலமாகின்றன.

    “போதிமரமெங்கே?
    யார் வீட்டுக் கொட்டகையில்
    கரையான் அரித்துக் கிடக்கிறது?”

    “இராஜகுமாரனுக்கு
    மட்டும் தான்
    உன் ஞானக் கீற்றில்
    கூரை போடுவாயா?

    சொல்

    முதலில் நீ
    எந்தக் காக்கையின்
    மலக்குடலிலிருந்து
    சுகப்பிரசவமாய்க்
    கபிலவஸ்துவில்
    விழுந்து முளைத்தாய்
    நினைவிருக்கிறதா?”

    போன்றவை அந்த உலகியலின் எடுத்துக்காட்டுகள். கவிஞர் தத்துவம், அறிவியல், காதல், விரக்தி என்று எல்லா துறைகளையும் வம்புக்கிழுத்தபடியே இருக்கிறார். இவர் கதையில் போதிமரமே பாவம் மரம் வெட்டிப் பிழைக்கக் கையில் கோடரியோடு அலைகின்றது.

    சிபுவின் எள்ளல் முழுக்கமுழுக்க சமுதாய நலத்தின் விழைவாக ஒலிக்கின்றது.

    “வேண்டுமென்றால்
    அரசு போதி மரங்களுக்கு
    மேற்கூரை போடுங்கள்,

    ஒருவேளை
    ஏழைச் சித்தார்த்தன்கள்
    தியானிக்க வரலாம்!”

    இதைவிடச் சிறந்த துள்ளலும் எள்ளலும் கிடைக்குமா? வானம்பாடி காலத்துக் கவிஞர் தான் இங்கு வந்தாரோ என்றெண்ண வைக்கும் அற்புதமான வீச்சு.

    “கிட்டுவதை எல்லாம்
    புனிதமாகக்
    கருதுங்கள், உங்களை
    விட்டுச் சென்ற
    அத்தனையும்
    போதிமரம் தான்..”.

    “பசியின்மையில்
    சிந்திய சோற்றுப் பருக்கை
    பசியில் போதிமரம்!

    குளிருக்கு இதம்,
    கருகும் விறகு
    போதிமரம்..
    விழுந்து
    எழுந்திரு,
    தாயின் அதட்டல்
    போதிமரம்..
    பிரம்பை நேசி,
    பள்ளியே போதிமரம்.
    துரோகம் சுவை,
    தந்தவன் போதிமரம்,
    நெரிசல்தான் மன்னித்துவிடு
    மிதித்தவன் போதிமரம்,

    இறங்கித் தேடு
    உன் இன்னொரு பையை,
    பயணம் போதிமரம்..

    போதிமரங்கள், வெறும்
    நிழலை மட்டும் தருவதில்லை,

    சொட்டும் சூட்டையும்
    சுறுக்கென்ற பாடத்தையும்
    தரும்..”

    கவிஞர் வரையறைகள் செய்வதில் வாழ்க்கையைக் கழிக்கிறார் போலும். கண் பார்க்கும் அனைத்தையும் வரையறுக்கிறார்.

    “பூமியின் மேல்பக்கம்
    தோண்டப்பட்ட
    நுணுக்கமான
    ஆழம்தாம், நம்வானம்..”

    ஒருநாள் என் பராசக்தி அந்தாதியில் எழுதினேன்,

    “அறிந்தவை யாவும் அரியதென் றேதான் அளத்திடுவார்!
    அறிந்தவை ஏதும் அவறறி வில்லை அறிந்தவர்கள்
    அறிந்தவை தம்மை அனுபவிப் பாரன்றி ஆள்நிறைந்தே
    அறிந்தவை தோறும் அலட்டுகி லாரென தம்பிகையே! (50)”

    இதனை மிகவும் எளிமையாக்கித் தர இயலும் என்றால் அது கவிஞர் சிபுவால் நிகழ்ந்திருக்கிறது.

    “ஆழத்தில் இறங்கியவர்கள்
    ஆசிரமத்துக்குத்
    திரும்பியதில்லை,
    அவர்கள் ஆழமாகவே
    ஆகிவிடுகிறார்கள்..”

    அடுத்தென்ன சித்தார்த்தனைத் தேடுகிறான் செய்தியாளன். அவனைத் தேடும் தருவாயில் இவன் உதிர்த்துக்கொண்டே செல்லும் புலம்பல்களை உங்களுக்குச் சொல்லி வீணாக்க விரும்பவில்லை என்று கடந்தாலும்,

    “இப்போது
    எந்தக் குப்பைத் தொட்டிக்குள்
    தொப்புள்கொடியில்
    எறும்பு மொய்க்கத்
    தியானம் செய்கிறாய்?”

    என்ற இந்த வரிகள் என்னை கடக்க முடியாமல் நிறுத்துகின்றன. இளவரசன் சித்தார்த்தனை மட்டுமே பார்த்திருக்கும் நமக்கு இந்தக் கேள்விகள் எத்தனை சித்தார்த்தன்கள் உலகத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு பயணித்துக்கொண்டும் படுத்துக்கொண்டும் இருக்கிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது.

    இதோ அதையும் கவிஞரே சொல்கிறார்,

    “இன்று
    எத்தனையோ
    சித்தார்த்தன்கள்
    இருக்கிறார்கள்,
    ஒரு புத்தன்கூட
    வெளிச்சத்திற்கு
    வருவதில்லை.”

    விட்டால் இப்படி வரிக்குவரி ரசனைக் குவியல்களைக் காட்டி நீங்கள் ரசிக்கவே வைக்கப்பட்டிருக்கும் சில பிரத்யேகமான இடங்களை வெளிக்காட்ட விரும்பவில்லை. மேற்படி சித்தார்த்தனாகும் புத்தன்கள் நூல் இந்தக் காலத்து நவீன கவிதை வடிவத்தில் எழுதப் பட்டிருப்பதும், கவித்துவ உள்ளீடுகள் என்று வலிந்து திணிக்கப்படாமல் இயல்பாக இருப்பதும் நான் முன்னமே சொன்னதைப் போல மிகவும் மெச்சி வியக்கத்தக்கது.

    இலக்கண மரபைக் கழற்றிய ஒரு மனநிலையில் பயணிக்கும் உரைவீச்சுக் கவிதைகளுக்கும் இலக்கணம் என்பது கட்டாயமாகிறது. உரைவீச்சுக் கவிதைகளும் எழுதப்படுகிற மொழி தமிழ் என்பதனால் தமிழ் மொழிக்கே உரிய சில அடிப்படை இலக்கணங்களை இன்றைய நவீன கவிஞர்கள் தங்கள் மனத்துக்குள் ஆழப் பதித்தாக வேண்டும். காட்டாற்று வெள்ளமும் கண்களுக்கு அச்சம் கொடுத்தால் பயனில்லை தானே. அந்த வகையில் புத்தகம் முழுக்க கவிச்சுவையைப் போலவே எதார்த்தமாக நிரம்பிக் கிடக்கின்றன ஒற்றுப் பிழைகளும், புணர்ச்சிப் பிழைகளும். தற்போது கவிதை எழுதும் நவீன கவிஞர்களிடம் நான் கண்டு மிகவும் நொந்து போகும் இன்னொரு சகிக்கமுடியாத பிழை, ஒருமைப் பன்மை மயக்கம். “கனவுகள் வந்தது, காட்சி விரிந்தன” என்றெல்லாம் மாற்றிமாற்றி எழுதும் பாங்கு மிகவும் சகஜமாகிப் போய்விட்டது இந்த முகநூல் சூழ் உலகில். எனது இந்த வருத்தத்தை இவ்விடம் சொல்லக் காரணம் சித்தார்த்தனாகும் புத்தன்கள் புத்தகமும் தன் பங்கிற்கு ஒருமைப் பன்மையில் பெரிய மயக்கத்தைத் தந்துகொண்டுதான் இருக்கிறது.

    கதைநோக்கமோ கற்பனை ஆற்றலோ எவ்விதச் சலனமும் இல்லாமல் இனியதொரு பிரவாகமாகத்தான் நடந்து நிறைகிறது. ஆனால் என்னைப் பொருத்தமட்டில் அதிகப்படியான எதார்த்தம் ரொம்பவே திகட்டச் செய்கின்றது. ஒருநாள்தான் வாழ்வு என்று தெரிந்திருந்தாலும் மலரை நாம் ரசிப்பதை நிறுத்துவதில்லை. கடந்தது மறையும் என்று தெரிந்திருந்தாலும் நாம் மணங்களை வெறுப்பதில்லை. நாளையே நிச்சயம் இல்லை என்ற வாழ்க்கையை நாம் வாழ்கிறோம் என்றாலும் அதற்காக நாளையைத் திட்டமிடாமல் நகர்வதில்லை. உலகியலின் எதார்த்தங்கள் என்பன எப்போதும் எல்லாராலும் உணர்ந்து அறியப்படுவன தாம். அவற்றை உணர்த்தும் முகத்தான் இந்த நூல் இருக்கிறது என்று எடுத்துக்கொண்டாலும் எனக்கிது அதிகப்படியான பயத்தையும் தயக்கத்தையும் உருவாக்குகிறது என்பது திண்ணம். இந்தப் பயம் எனக்குப் புதியதல்ல, பட்டிணத்தாரின் பாடல்களைப் படித்தபோது எப்படியெல்லாம் நடுங்கினேனோ அவற்றைச் சித்தார்த்தனாகும் புத்தன்களும் எனக்குள் செய்கிறது என்பது, பல நூற்றாண்டுகள் தொடாமல் இருந்த பட்டிணத்தாரின் உணர்வுக் கடத்தலை இந்த வருடம் வெளியான ஒரு நூல் செய்திருக்கிறது என்கிற மகிழ்ச்சியைத் தருகிறது. கூடவே எதார்த்தங்களின் பட்டியலால் இலேசான பயமும் என்னைப் பீடிக்கிறது.

    ஆகமொத்தம் சித்தார்த்தனாகும் புத்தன்கள் உலகம் ஒருமுறையேனும் படிக்க வேண்டிய புத்தகம். கற்பனை, எதார்த்தம் இரண்டையும் எப்படியெல்லாம் இணைத்து, ஞான மார்க்கத்தில் கொண்டுசெல்ல முடியும் என்று ஏழெட்டு மாதங்கள் ரூம் போட்டு யோசித்திருக்கும் கவிஞர் சிபு வின் முயற்சி வானத்துக் கீழே வாழ்ந்து, வாசிக்கத் தெரிந்த அத்தனை உயிர்களுக்கும் ஒரு வரம்.

    _______________________________________

    புத்தக விமர்சனமாக வரவிருக்கும் இந்தத் தொடரில் தங்கள் புத்தகம் குறித்த விமர்சனம் இடம்பெற வேண்டில் தங்கள் புத்தகத்தின் மென்நகலையும் (SOFT COPY) அட்டைப் படத்தையும் vallamaieditor@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

     

    Share
  • வேதாளங்கள் வாழும் கன்னக்குழி

    – கவிஞர் பூராம்

    முகத்தின் அருகில் நிலவின் ஒளி
    அவளைப் பிடிக்கவில்லை என்றாலும்
    முகம்பாா்க்கத் துண்டும்  அவளின் கன்னக்குழி!

    பூமுகத்தில் வாசனைச் சிரிப்பில்
    அடிமைப்படுத்தும் ஆவேசத்தோடு
    மனம் அப்பிக்கொண்ட முகத்தில்
    வெட்கமில்லாமல் நானும்
    அவளைப் பிடிக்கவில்லை என்றாலும்…

    ஆனந்தத்தில் தோன்றி மறையும்
    இறைகுழி அவள் கன்னத்தில்,
    வேறொன்றும் அறிய மறுக்கும்
    அறியாமையுடன் நான்
    அவளைப் பிடிக்கவில்லை என்றாலும்…

    தொிந்துதான் இருந்தது அவளுக்கு
    ரசிக்கும் ஆன்மாவின் அன்பு
    சொல்ல மறுக்கும் அவளும்
    சொல்லத் தயங்கும் நானும்
    தன்முனைப்பின் உச்சத்தில்
    அவளைப் பிடிக்கவில்லை என்றாலும்
    தப்பித்துக்கொள்ள தனியறையில்…

    பாம்பின் விடத்தோடும் ஆதி கனவுகளின்
    மங்களான நினைவோடும்
    அவளது கன்னக்குழி கண்ணின் பாவையாய்!
    அவளைப் பிடிக்கவில்லை என்றாலும்

    அவளாகிப்போனேன் அவளில்லாமல்!

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 16

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 16 – பொறையுடைமை

    குறள் 151:

    அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
    இகழ்வார்ப் பொறுத்தல் தலை

    தம்மேல குழி தோண்டுதவன கீழவிழாம தாங்குத நெலம் போல தன்னைய எளக்காரமா பேசுதவனோட செயல கூட பொறுத்துக்கிடதுதான்  ஒசந்த கொணம்.

    குறள் 152:

    பொறுத்த லிறப்பினை யென்றும் அதனை
    மறத்த லதனினும் நன்று

    அளவுக்கதிகமா செஞ்ச தீமயக் கூட பொறுத்துக்கிடணும். அத நெனைப்புல வச்சிக்கிடாம மறக்குதது பொறுத்துப் போவத விட நல்லது.

    குறள் 153:

    இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள்
    வன்மை மடவார்ப் பொறை

    வறுமையிலயும் பெரிய வறும வந்த விருந்தாளிய சரியா கவனிக்காம உடுதது. வலிமையிலும் பெரிய வலிம புத்திகெட்டவங்களோட செயல  பொறுத்துக்கிடதது.

    குறள் 154:

    நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
    போற்றி யொழுகப் படும்

    பொறுமையுள்ளவனா வாழுதவன தான் ஒலகம் நிறைவான மனுசன் னு சொல்லும்.

    குறள் 155:

    ஒறுத்தாரை யொன்றாக வையாரே வைப்பர்
    பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து

    தனக்கு கெட்டது செய்தவன தண்டிச்சவங்கள பெரிய மனுசங்க ஒரு பொருட்டா மதிக்க மாட்டாங்க. பொறுத்துக்கிட்டவங்கள  மனசுக்குள்ளார வச்சி தங்கத்துக்கு சமமா மதிப்பாங்க.

    குறள் 156:

    ஒறுத்தார்க் கொருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
    பொன்றுந் துணையும் புகழ்

    தனக்கு கெட்டது செஞ்சவன தண்டிச்சவனுக்கு அன்னிக்கு மட்டுந்தான் சந்தோசம். அத பொறுத்துக்கிட்டவனுக்கு ஒலகம் அழியற வர புகழ் நெலச்சி நிக்கும்.

    குறள் 157:

    திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்
    தறனல்ல செய்யாமை நன்று

    மத்தவன் நமக்கு கொடுமைய செஞ்சாலும் அத திரும்ப செஞ்சோம்னா அவனுக்கு நோவுமே ன்னு நெனச்சி பழி வாங்காம விடுதது நல்லது.

    குறள் 158:

    மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தந்
    தகுதியான் வென்று விடல்

    அகராதியால (ஆணவம்) அக்கிரமம் செய்யுதவங்கள நாம நம்மளோட  பொறும கொணத்தால செயிச்சிடலாம்.

    குறள் 159:

    துறந்தாரின் தூய்மை யுடையர் இறந்தார்வாய்
    இன்னாச்சொல் நோற்கிற் பவர்

    அத்துமீறி நடந்துகிடுதவங்க பேசுத கடுஞ் சொல்ல பொறுத்துக்கிட்டவங்க குடும்ப வாழ்க்க வாழ்ந்தாலும் எல்லாத்தையும் துறந்த தூய துறவிக்கு சமானம் தான்.

    குறள் 160:

    உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
    இன்னாச்சொ னோற்பாரிற் பின்

    சோறு திங்காம நோன்பு இருக்கவங்களுக்கு இருக்க மதிப்பு கூட கடுஞ்சொல்ல பொறுத்துகிட்டவங்களுக்கு அடுத்தபடியா தான்.

    ______________________________________

    கட்டுரையாளரைப் பற்றி

    இயற்பெயர் –  பத்மா ஸ்ரீதர்
    புனைப் பெயர் – நாங்குநேரி வாசஸ்ரீ
    தமிழார்வம் கொண்ட இல்லத்தரசி. முன்னாள் ஆசிரியை.
    கதைகள், கவிதைகள் எழுதுவதில் விருப்பம் அதிகம்.
    இதுவரை எழுதிய தளங்கள் : சிறுகதைகள்.காம், எழுத்து.காம், ப்ரதிலிபி.காம்

    Share
  • படக்கவிதைப் போட்டி – 202

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    ராமலக்ஷ்மி எடுத்த இந்தப் படத்தை, சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (02.03.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 201-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திரு. ஹஃபீஸ் இஸ்ஸாதீன் எடுத்த வர்ணசாலம் காட்டும் இவ் எழிற்படத்தை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து படக்கவிதைப் போட்டி 201க்கு வழங்கியிருக்கிறார் திருமதி. சாந்தி மாரியப்பன். நிழற்பட நிபுணர்க்கும், அதனைத் தெரிவுசெய்த நங்கைக்கும் என் நன்றி!

    வண்ணங்களின் கலவையால் உருவானதே வனப்புமிகு இயற்கை. வண்ணங்களோடு தம் எண்ணங்களையும் பொருத்திப் பார்த்திருக்கின்றது இம் மன்பதை. ஆம்! மங்கலத்தின் அடையாளம் மஞ்சள்; வளமைக்குக் குறியீடு பசுமை; அச்சத்தின் வெளிப்பாடு சிவப்பு; தூய்மைக்குத் துணைநிற்கும் வெண்மை என்று வகைபிரித்து வைத்திருக்கின்றது அது!

    வண்ணங்களுக்கு மனித உளவியலில் தாக்கத்தை உண்டாக்கும் தன்மையும் உண்டென்கிறது இன்றைய மருத்துவ அறிவியல்.

    இதோ…நீர்த்துளிகளுக்குள் நிழற்படங்களாய் ஒளிரும் இப்பூக்களுக்குப் பாக்கள் புனையப் புறப்பட்டுவிட்டார்கள் நம் வல்லமைக் கவிஞர்கள்! அவர்களை வரவேற்போம்!

    ***** 

    பளிங்குச் சிறைக்குள் ஒளிந்திருக்கும் பாவையோ? ஆதவ ஓவியன் ஆக்கிய அற்புதச் சித்திரமோ? அகந்தை இருளுக்குள் ஒளியாய்த் துலங்கும் மறைபொருளோ? என்று இப்புகைப்படம் குறித்த தன் ஐயங்களை வரிசையாய் வெளிப்படுத்தியிருக்கின்றார் திரு. ஆ. செந்தில் குமார்.

    பளிங்குச் சிறைக்குள்ளே அகப்பட்ட பாவை…

    பின்புலத்தில் இருக்கின்ற மஞ்சள் வண்ணப் பூவொன்று..
    தன் நிறத்தால் அஞ்சனம் தீட்டிய அழகுப் பனித்துளிகள்..
    தேன் துளிபோல் உருமாறிக் கண்களுக்கு விருந்தான நிகழ்வு..
    வானத்து விண்மீன்கள் தரையிறங்கிப் படைத்த பொற்குமிழ்களாய்..!!

    பளிங்குச் சிறைக்குள்ளே அகப்பட்ட..
    பாவையாக மஞ்சள் மலர்..!!

    வெளியுலகைக் காணுதற்கு மலர்ச்சியுடன்
    வர ஆயத்தமாகும் கருக்குழந்தை..!!

    தலைகீழாய்த் தொங்கியது மலைத்தொடர்..
    தனைத்தாங்கும் இத்தரணியைக் காண..!!

    பரப்பு இழுவிசையால் கட்டுண்ட..
    பனித்துளிகளின் படை அணிவரிசை..!!

    ஆதவனெனும் ஓவியன் ஒளித்தூரிகையால்..
    ஆக்கிய அற்புத வண்ணச் சித்திரம்..!!

    அகந்தையெனும் கரிய மாயத்திரையுள்ளே..
    அறிவாய் ஒளியாய் விளங்கும் மறைபொருள்..!! 

    ***** 

    ”நீர்த்துளிகளுக்குள் அழகாய் முகங்காட்டும் மலர்களைப்போல் அயர்வின்றி முயன்றால் முன்னேற்றப் பாதையும் மனத்துக்குள் காட்சியாய் விரியும்” என்று நம்பிக்கையூட்டும் நன்மொழிகளை நவில்கின்றார் திருமிகு. நாங்குநேரி வாசஸ்ரீ.

    கடவுள் காட்டிய காட்சி

    சோர்ந்துவிடாதே மனிதா
    சோகப்படாதே சோம்பலில்லாமல்
    தேட விழைந்தால் காணலாம்
    தேடிய பொருளைக் கண்ணெதிரே
    உன்னால் முடியாதது என
    உலகில் எப்போதும் இல்லை ஒன்று.
    மனம் இருந்தால்
    மார்க்கம் உண்டு
    தினமும் அறிவுரை கூறி
    திருத்த முயன்ற ஞானி
    புரிந்துகொள்ளாமல் மனிதர்கள்
    புத்திகெட்டு அலைவதைக்கண்டு
    வருத்தமுற்று கடவுளிடம்
    வழிகாட்ட வேண்டியதால்
    புதுவிதமாய் மனிதனுக்கு
    புத்திபுகட்ட கடவுள்
    காட்டிய எடுத்துக்காட்டே
    காட்சியாய்க் கண்ணெதிரே
    வண்ண வண்ண மலர்கள் இங்கே
    வரிசையாய் உள்ள துளிகளுக்குள்ளே
    திரும்பிப் பார்த்தால் தெரியும் அதன்
    தெளிவான முழு உருவம் அதுபோல்
    முயற்சித்துப் பார் ஒளிந்துள்ள
    முன்னேற்றப்பாதை தெரியும்
    கடவுள் சொன்ன வார்த்தைகளைக்
    காதால் கேட்டு முயற்சித்தால்
    வாழ்க்கை வளமாகும்
    வசந்தங்கள் வாடிக்கையாகும்.

     *****

    ”திரவியம் தேடி தினம் ஓடும் மனிதா…! உதிக்கும் சூரியன்; உதிரும் இலைகள், மூக்குக் கண்ணாடியாய்ப் பனித்துளி; அதிலே முகங்காட்டும் மார்கழிப் பூ என்று தினந்தோறும் நான் நிகழ்த்தும் வர்ணசாலங்களைக் கண்டு இரசித்ததுண்டோ நீ?” என்று இயற்கையன்னையின் சார்பாய் வினாவெழுப்புகின்றார் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ்.

    பாடம் புகட்டிய பனித்துளிகள்

    உதிக்கும் சூரியன், உலா வரும் நிலா
    உதிரும் இலைகள், மலரும் பூக்கள்
    கூவும் குயில்கள் என
    இயற்கையின் அழகு
    அரங்கேறும் தினந்தோறும்
    திரவியம் தேடி
    தினம் ஓடும் மனிதா
    இதை என்றேனும் கண்டு ரசித்ததுண்டோ?
    தாயின் மடியில்
    உறங்கும் சுகம் தேடி
    பூமித்தாயின் மடியில் படர்ந்தாயோ?
    நடுங்கும் குளிரில் அவளைக் காத்திட
    வெண்போர்வையாய் விழுந்தாயோ?
    காலைக் கதிரவன் கைகளாய்க்
    கதிர்கள் வந்து உன்னை எழுப்பிட
    எழ மறுத்து அழுதாயோ?
    பனி உருகி நீராய்க் கரைந்தாயோ?
    நித்தம் நிகழும் நிகழ்வுகளைத்
    தெள்ளத்தெளிவாய்க் கண்டிட
    இயற்கை தந்த மூக்குக்கண்ணாடியோ
    இந்தப் பனித் துளிகள்?
    பனியில் நனைந்து
    பகலவன் கண்டு
    மலர்ந்த மார்கழிப் பூவைப்
    பனித்துளிக்குள்
    படம் பிடித்து வைத்தாயோ?
    ஓடும் மனிதா!
    ஒரு நிமிடம் நின்று இந்த
    ஒளிப்படத்தை கண்டிடு
    என்னுள் ஒளிந்திருக்கும்
    ஓராயிரம் அழகுகளைக் கண்டு ரசித்திடு!

    *****

    மென்காலைப் புலர்பொழுது பொன்மஞ்சள் மலர் கொய்து வெண்பனியாம் நூலெடுத்து நெய்த கண்ணாடிச் சித்திரச் சேலையோ இது? என்று இப்புகைப்படக் காட்சியை வி(ந)யக்கிறார் திரு. யாழ். பாஸ்கரன்.

    முத்து முத்துப் பனித்துளியில்
    முகம் காட்டிச் சிரிக்கும் மலர் இதழ்களை
    முத்தமிடத் துடிக்கும் வண்டினங்கள்
    நித்தம் நித்தம் தவிக்கிறது

    மென் காலைப் புலர் பொழுது
    பொன் மஞ்சள் மலர் கொய்து
    மின் வெண்பனி நூலெடுத்து நெய்த
    கண்ணாடிச் சித்திரச் சேலையோ இது?

    கண்கள் மயங்கும் காட்சிப்பிழைதான்
    காணக்கிடைக்காத கலை எழிலின் நிலைதான்!
    காற்று நுழைந்தால் கலைந்து விடும்
    கவனம் சிதைந்தால் கணத்தில் மறைந்துவிடும்

    சின்னச் சின்ன நீர்க்குமிழிகளுக்குள்
    சித்திரத் தூரிகைக் கொண்டு வரைந்த
    சிதைவுறா இயற்கையின் சிறந்த படைப்பு ஒளிச்
    சிதறலில் விளைந்த அழகின் சிரிப்பு

    விந்தைகள் படைக்கும் இயற்கை ஒரு தீராத விளையாட்டுப் பிள்ளை
    விரியட்டும் வியப்பின் எல்லை இந்த
    விடியலின் விடுகதை அழகை
    விழி பருகி மதி மயங்காதார் யார் ஒருவர் உண்டோ?

    *****

    வண்ண மலர்களுக்கும் அவற்றைத் தாங்கிநிற்கும் பனித்துளிகளுக்கும் தம் எண்ணத் தூரிகைகொண்டு சொல்லோவியம் தீட்டியிருக்கும் பெருமக்களுக்கு என் பாராட்டுக்கள்!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதை இனி…

    நிரந்தரமா…?

    தற்காலிகத் தஞ்சமாய்க்
    கிளையில் தொங்கும்
    நீர்த்துளிகள்…

    கிடைத்த தருணத்தை
    விடாத
    மஞ்சள் மலர்கள்,
    முகம் பார்க்கின்றன
    நீர்த்துளிக் கண்ணாடியில்-
    தற்காலிக இலவசங்களால்
    தடம்மாறும் மனிதன்போல்!

    சுடு கதிர்கள் காட்டிச்
    சூரியன் வருகிறான்,
    கதை முடிக்க…

    நிரந்தரத்தின் முன்
    தற்காலிகங்கள்
    நிலைகெட்டுப் போவதுதான்
    இயற்கையோ…?!

    ”தற்காலிகத் தஞ்சமாய்க் கிளையில் தொங்கும் நீர்த்துளிகளில் முகம்பார்க்கும் மலர்களைப் போல், தற்காலிக இலவசங்கள்பால் வசப்பட்டு நிலைகெட்டுப்போகும் மாந்தனே! என்றுணர்வாய் நீ நிரந்தரத்தின் மகத்துவத்தை?” என்ற தன் வருத்தத்தைப் பாவில் பதிவுசெய்திருக்கும், திரு. செண்பக ஜெகதீசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

     

    Share
  • பஞ்சரத்னம்

    -நிர்மலா ராகவன்

    பஞ்சரத்ன கீர்த்தனை அஞ்சு இருக்கு. ஆனா, நம்பகூட சேர்ந்து பாட இந்தத் தடவை அஞ்சுபேர்கூட இல்லியே!” என்று அங்கலாய்த்தாள் காமாட்சி மாமி.

    “அதனால என்ன? வீணை வாசிக்க ஒருத்தர் இருக்காங்க, இன்னும் புல்லாங்குழல் வாசிக்க, வயலின் வாசிக்க,” என்று அடுக்கிக்கொண்டே போனாள் பரம் சோதி.

    அந்த இசைக்குழுவில் இருந்தவர்களிடையே இருந்த ஒரே ஒற்றுமை – அந்த சிலரே இந்தியாவில் முறையாக கர்னாடக இசை பயின்றவர்கள் என்பதுதான்.

    அவர்களில் மூவர் திருமணத்திற்குப்பின் கோலாலம்பூர் வந்தவர்கள். கல்லூரிப்படிப்புக்கு நிறைய செலவாகும், போதாத குறைக்கு அதிகம் படித்த மாப்பிள்ளையைத் தேட வேண்டும், அவன் வரதட்சணை நிறைய கேட்பான் என்று ஏதேதோ பயங்கள் எழ, கல்யாணத்துக்கு உரிய காலம் வரும்வரை பாட்டாவது கற்றுக்கொள்ளட்டும், பெண்பார்க்க வரும்போது மதிப்பாக இருக்கும் என்ற பெற்றோரின் திட்டத்தால் பாட்டு கற்றுக்கொண்டவர்கள்.

    பரம் சோதி மட்டும்தான் மலேசிய நாட்டில் பிறந்து வளர்ந்தவள். அதனாலேயே தான் பிறரைவிட உயர்த்தி என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டவள்.

    பதினைந்து வயதாக இருக்கையில், மூன்றாம் படிவ அரசாங்கப் பரீட்சையில் நிச்சயம் தேர்ச்சி பெறமுடியாது என்று புரிந்ததும், “நான் `ஊருக்குப்’ போய் பாட்டு கத்துக்கறேன்!” என்று முடிவெடுத்தாள்.

    குண்டும் கறுப்புமாக இருந்த மகளைக் கல்யாணம் செய்துகொள்ள ஒரு லட்சம் வெள்ளி கொடுத்தால்கூட ஒருவனும் வரமாட்டான் என்று தாய்க்குத் தெரிந்துதான் இருந்தது. அப்படி அள்ளிக் கொடுக்க வசதியும் இருக்கவில்லை. மகள் இந்தியா சென்றாவது தனக்கென ஒரு வழி செய்துகொள்ளட்டுமே என்று சம்மதித்தாள்.

    போன இரு வருடங்களுக்குள் ஒரு பட்டத்துடன் திரும்பிவந்தாள் பரம் சோதி.

    `இசை அரசி அப்படின்னு ஊரிலேயே பட்டம் குடுத்திருக்காங்கன்னா சும்மாவா!’ என்று, அவளிடம் வாய்ப்பாட்டும் வாத்தியமும் கற்க வந்தார்கள் பலரும். எந்தப் பரிசோதனையுமின்றி, வானொலி, தொலைகாட்சியில் பக்கவாத்தியம் வாசிக்கவும் அவள் தேர்ந்தெடுக்கப்பட்டாள்.

    முதலில் பெருமையாக இருந்தது. ஆனால், போகப்போக, இப்படியே இனிய குரலோ, ஞானமோ இல்லாதவர்களுக்குப் பாட்டு படித்துக்கொடுத்துக் கொண்டேதான் வாழ்க்கையை ஓட்ட வேண்டும் என்ற நிதரிசனம் புரிந்துபோக, விரக்தி எழுந்தது பரம் சோதிக்கு.

    தொலைகாட்சி நிகழ்ச்சியில், நளினி என்ற இளம்பெண் காமராவுக்கு முன்னால் கம்பீரமாக உட்கார, வாத்தியத்துடன் தான் ஒரு பக்கத்தில் அமரவேண்டிய நிலை அவமானகரமாக இருந்தது.

    புதிய மணப்பெண்ணாக இந்தியாவிலிருந்து வந்திருந்தவள்! தன்னைவிட பத்து வயதாவது இளையவளாக இருப்பாள்!

    ஆண்களுக்கு அது என்ன வழக்கம், வெகு தூரத்தில் போய் பெண்களைத் தேடிப் பிடித்து கல்யாணம் பண்ணிக்கொண்டு வருவது? மலேசிய நாட்டில் பெண்களே கிடையாதா?

    பரம் சோதியின் மனப்போராட்டத்தைக் கவனியாது, நளினி இசையிலேயே தன் முழுமையான கவனத்தைச் செலுத்திக்கொண்டிருந்தாள்.

    `இவளை மிஞ்சவேண்டும்!’ என்று வெறியுடன் வாசித்தாள் பரம் சோதி. ஆனால் ஒன்றரை வருட இசைக்கல்வியால் நளினிக்கு ஈடுகொடுக்க முடியவில்லை.

    அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானபோது ஒரு சிறு திருப்தி எழுந்தது சோதிக்குள்.

    `காமராவையே பாத்துக்கிட்டு பாடுங்க,’ என்று இயக்குனர் சொல்லியிருந்ததைத் தப்பாமல் கடைப்பிடித்திருந்தாள் நளினி.

    சீனர்களின் மிகச் சிறிய கண் சற்றுப் பெரியதாகத் தெரிய, வழக்கமாக காமராவை கீழிருந்து மேல் நோக்கித் திருப்புவார்கள். அதேபோல் நளினிக்கும் செய்ததில், ஏற்கெனவே பெரிதாக இருந்த அவளுடைய `இந்திய நயனங்கள்’ அளவுக்கு மீறி பெரியதாக, முறைப்பதுபோல் தோற்றமளித்தன.

    “சகிக்கலே!” என்று சொல்லிக்கொண்ட பரம் சோதி, தான் சற்றுக் கூன்போட்டு அமர்ந்திருந்ததையும் பார்க்காதிருக்க முயன்றாள்.

    `அம்மாவுக்கும் வயசாகிடுச்சு. வீட்டிலே, வெளியிலே எல்லா வேலையும் நான்தான் பாத்துக்கணும். முடியற காரியமா!’ என்று தனக்குத்தானே பரிதாபப்பட்டுக்கொண்டாள்.

    தாய் எவ்வளவு மறுத்தாலும் கேளாது, தான் எங்கு போனாலும் அவளையும் அழைத்துப்போவதை வழக்கமாக வைத்துக்கொண்டாள். அப்போதெல்லாம், `உங்களுக்குத்தான் துணை இருக்கிறதோ?’ என்று பிறரிடம் சவால் விடுவதுபோல் அவள் தலை வழக்கத்திற்கு அதிகமாகவே நிமிர்ந்திருக்கும்.

    ஆனால், அவள் நினைத்தமாதிரி அது ஒரு நல்ல மாற்று மருந்தாக இருக்கவில்லை.

    “ஹலோ, பரம் சோதி! சௌக்கியமா?” என்று முகமெல்லாம் புன்னகையாக நளினியைக் கோயிலில் பார்த்தபோது, பதிலுக்கு அவளை வெறிக்கத்தான் முடிந்தது.

    நளினியின் பக்கத்தில் அழகழகான இரு குழந்தைகள்!

    சுதாரித்துக்கொண்டு, “நீ இப்போ எல்லாம் பாடறதில்லே போல இருக்கு!” என்றாள், உபசாரமாக. மாணவ மாணவிகளின் வெவ்வேறு ஸ்ருதிக்கேற்ப ஓயாமல் கத்திக் கத்தி, தொண்டையில் இரண்டு குரல்கள் பேசின.

    நளினி புன்னகைத்தாள். “வீட்டிலே இதுகள் ரெண்டையும் பாத்துக்க வேண்டியிருக்கு. வேலைக்குவேற போறேன், இல்லையா? சாதகம் பண்ண நேரமே கிடைக்கறதில்லே, போங்கோ!”

    அவள் யதார்த்தமாகக் கூறியது சோதியின் ஆத்திரத்தைக்கிளப்பிவிட்டது. `உனக்கில்லாத குழந்தை பாக்கியம் எனக்குக் கிட்டியிருக்கிறது!’ என்று குத்திக்காட்டுகிறாள்!

    பட்டப்படிப்புப் படித்து வேலைக்குப் போனால்தான் பெருமையோ? தானும்தான் ஓர் ஆசிரியை – இசை ஆசிரியை!

    அதிகம் யோசிக்கவில்லை அவள். நளினியை எப்படி மட்டம் தட்டுவது என்று உடனே புரிந்துபோயிற்று.

    “தியாகராஜ ஆராதனை வருதில்ல? வந்து பாடலாமே!” என்றாள் தேன்சொட்ட. பிறகு, “பஞ்சரத்ன கீர்த்தனை பாடம்தானே?” என்றும் கேட்டுக்கொண்டாள், சந்தேகம் இல்லாவிட்டாலும்.

    ஆமோதிப்பதுபோல் தலையை ஆட்டிவிட்டு, “பத்து வருஷம் கத்துண்டு இருக்கேனே!” என்றாள் நளினி.

    `இரு! அப்போ உனக்கு நல்ல பாடம் கற்பிக்கறேன்,’ என்று கறுவிக்கொண்டாள் சோதி.

    அரங்கத்தில் இசைப்பிரியர்கள் நிரம்பி இருந்தார்கள்.

    சில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மேடையில் பாடப்போகும் உற்சாகத்தில் நளினி நடுவில் அமரப்போனாள்.

    “நீ அங்கே போய் உக்காரு!” என்ற ஆணை பிறந்தது. பரம் சோதியின் கட்டளைக்கு மறுபேச்சின்றி கீழ்ப்படிந்தாள் அவள்.

    கடவுளுக்காகப் பாடுகிறோம். எங்கே உட்கார்ந்தால் என்ன! அதுதான் மூன்று ஒலிபெருக்கிகள் வைத்திருக்கிறார்களே என்றுதான் அவள் எண்ணம் ஓடிற்று.

    ஆனால், யாருமே எதிர்பாராவிதமாக அவை மூன்றையும் தன் எதிரில் வைத்துக்கொண்டு, வாத்தியத்துடன் நட்டநடுவில் பரம் சோதி அமர்ந்துகொண்டாள்.

    முதலில் சற்று அயர்ந்தாலும், `இந்த நல்ல நாளில் இவளுடன்போய் சண்டை பிடிப்பதாவது!’ என்று மற்றவர்கள் ஒதுங்கினார்கள். அவர்களுடைய ஆத்திரம் அடுத்து வந்த கானமழையில் வெளியாகும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

    “நீங்க எல்லாரும் பாடினீங்களா, இல்லே மல்லுக்கு நின்னீங்களா? நல்லவேளை, தியாகராஜர் இந்தக் கண்ராவியைப் பாக்காம சமாதி ஆயிட்டார்!” என்று ஒரு ரசிகர் வெளிப்படையாகவே கூறினார், தலையைப் பக்கவாட்டில் ஆட்டியபடி.

    அடுத்த ஆண்டு குழுவுடன் சேர்ந்து பாட காமாட்சி மாமியிடமிருந்து அழைப்பு வந்தபோது, மெல்ல மறுத்தாள் நளினி.

    “வரலியா?” கேட்டவளுக்கு ஏமாற்றம்.

    “பரம் சோதி, பரம் சோதி, பரம் சோதின்னு மூணு தடவை அழைப்பிலே போட்டு, மூணு மைக்கையும் அவ முன்னால வெச்சுடுங்கோ! நான் வரலே!” என்றாள் நளினி. தீர்மானமாக.

    தொண்டை கட்டிக்கொண்டிருந்தாலும், குரல் கம்மியிருந்தாலும், `நீதானே இப்படிப் பண்ணினே?’ என்று கடவுளிடம் சண்டைபிடித்துவிட்டு, கோயிலில் பாடுவதே மேல் என்று தோன்றிப்போயிருந்தது.

    மேலும் சில ஆண்டுகள் கழிந்தன.

    ஒரு சாயந்திர வேளையில், கோயிலுக்குள் மிகுந்த பிரயாசையுடன் நடந்து வந்துகொண்டிருந்த பரம் சோதி, நளினியைப் பார்த்தும் பாராததுபோல் போக முயற்சித்தாள். அவள் கையைப் பிடித்து நடத்திச்செல்ல ஒரு பணிப்பெண்!

    நளினியின் மனதில் ஏதோ அசைந்தது. `காலமெல்லாம் தனிமையில் வாட வேண்டியிருக்கும் என்ற வருத்தம், பாவம்! அதைத்தான் அதிகாரமாக காட்டிக்கொண்டிருக்கிறாள்!’

    அவளருகே விரைந்து, “சௌக்கியமா, சோதி? அப்பாடி! பாத்து எத்தனை நாளாச்சு!” என்று பரிவுடன் விசாரித்தாள்.

    நீட்டிய அவள் கையைத் தன் இரு கரங்களாலும் பற்றிக்கொண்டாள் பரம் சோதி.

    (குறிப்பு: பதினெட்டாம் நூற்றாண்டில் பிறந்த தியாகப்பிரம்மம் என்ற மகான் தெலுங்கில் அமைத்த எழுநூறு பக்திப்பாடல்கள் பிரசித்தமானவை. நூற்றுக்கணக்கான புதிய ராகங்களைக் கண்டுபிடித்த பெருமை இவரைச்சாரும். இன்றுவரை, கர்னாடக இசைக்கலைஞர்கள் ஒன்றுசேர்ந்து, பஞ்சரத்தினக் கீர்த்தனைகளைப் பாடி, அவரது நினைவு நாளைக் கொண்டாடுகிறார்கள் – பல நாடுகளிலும்).

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 15

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 15 – பிறனில் விழையாமை

    குறள் 141:

    பிறன்பொருளான் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்
    தறம்பொருள் கண்டார்க ணில்

    மத்தவன் பொஞ்சாதி மேல ஆசப்படுத அறியாம இந்த ஒலகத்துல அறத்தையும் பொருளையும் ஆஞ்சு அறிஞ்சவங்ககிட்ட கெடையாது.

    குறள் 142:

    அறன்கடை நின்றாரு ளெல்லாம் பிறன்கடை
    நின்றாரிற் பேதையா ரில்

    அடுத்தவன் பொஞ்சாதி மேல ஆசப்பட்டு அவன் வீட்டு வாசல்ல போயி நிக்குதவன் மத்த எல்லா வழிலயும் பாவம் செஞ்ச கெட்ட மனுசன விட தாழ்த்தியானவன்.

    குறள் 143:

    விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
    தீமை புரிந்தொழுகு வார்

    சந்தேகப்படாம நம்பி பழகின மனுசரோட பொஞ்சாதி மேல ஆசப்பட்டு தப்பா நடக்குதவனக்கு  உயிர் இருந்தாலும் செத்த பொணத்துக்கு சமந்தான்.

    குறள் 144:

    எனைத்துணைய ராயினும் என்னாந் தினைத்துணையும்
    தேரான் பிறனில் புகல்

    தினையளவு கூட யோசிக்காம அடுத்தவன் பொஞ்சாதி மேல ஆசப்படுதவரு எத்தாம் பெரிய மனுசனா இருந்தாலும் அவரோட மரியாத கெட்டுப் போவும்.

    குறள் 145:

    எளிதென இல்லிறப்பா னெய்துமெஞ் ஞான்றும்
    விளியாது நிற்கும் பழி

    இது சுளுவான காரியம்னு நெனைச்சி அடுத்தவன் பொஞ்சாதிக்கிட்ட தப்பா நடக்குதவன் எப்பமும் மறஞ்சு போவாம நெலச்சு நிக்க பாவத்துக்கு ஆளாவான்.

    குறள் 146:

    பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
    இகவாவாம் இல்லிறப்பான் கண்

    அடுத்தவன் பொஞ்சாதிகிட்ட அத்து மீறி நடக்குதவன விட்டுபோட்டு பகை, பாவம், பயம், பழி ங்குத நாலும் விலகி போவாது.

    குறள் 147:

    அறனியலான் இல்வாழ்வா னென்பான் பிறனியலான்
    பெண்மை நயவா தவன்

    அடுத்தவன் பொஞ்சாதி மேல ஆசப்படாதவன தான் அற வழில குடும்பம் நடத்துதவன்னு சொல்லுதோம்.

    குறள் 148:

    பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்
    கறனென்றோ ஆன்ற வொழுக்கு

    மத்தவன் பொஞ்சாதி மேல ஆசப்படாம இருக்குதது அறம் மட்டுமில்ல. படிச்ச பெருமக்களுக்கு அது நெறஞ்ச ஒழுக்கமும் கூட.

    குறள் 149:

    நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
    பிறற்குரியாள் தோள்தோயா தார்

    சுத்திவர கடல் இருக்குத இந்த ஒலகத்துல எல்லா நல்லதும் யாருக்கு கெடைக்கும்னு நெனைச்சு பாத்தோம்னா அது அடுத்தவருக்கு சொந்தமானவளோட தோள சேராம இருக்குதவருக்குதான்..

    குறள் 150:

    அறன்வரையா னல்ல செயினும் பிறன்வரையாள்
    பெண்மை நயவாமை நன்று

    ஒருத்தன் நல்லது செய்யாம பாவத்தையே செய்யுதவனா இருந்தாக்கூடா அடுத்தவன் பொஞ்சாதி மேல ஆசப்படாம இருக்குதது நல்லது.

    ______________________________________

    கட்டுரையாளரைப் பற்றி

    இயற்பெயர் –  பத்மா ஸ்ரீதர்
    புனைப் பெயர் – நாங்குநேரி வாசஸ்ரீ
    தமிழார்வம் கொண்ட இல்லத்தரசி. முன்னாள் ஆசிரியை.
    கதைகள், கவிதைகள் எழுதுவதில் விருப்பம் அதிகம்.
    இதுவரை எழுதிய தளங்கள் : சிறுகதைகள்.காம், எழுத்து.காம், ப்ரதிலிபி.காம்

    Share
  • தமிழாட்டாரே

    – ஏறன் சிவா
    அறிவென நினைத்துக் கொண்டு
            ஆங்கிலப் பள்ளி நூறு
    தெருவெலாம் திறந்து வைத்தோம்!
             தென்மொழியை மறந்தோம்!
    பெருமையாய் அதனை எண்ணிப்
             பேதமைக் கடல் குளித்தோம்!
    சிறையினில் மாட்டிக் கொண்டோம்!
              செந்தமிழ் நாடிழந்தோம்!
    அருந்தமிழ் வேண்டா மென்று
              அயலாரின் சூழ்ச்சி தன்னில்
    அறிவினை இழந்து விட்டோம்!
               ஆண்மையைத் தொலைத்து விட்டோம்!
    திறமைகள் மறந்து விட்டோம்!
             தீந்தமிழ்ச் சுவடி யை..நாம்
    இரையெனக் கொடுத்து விட்டோம்
             இழிநிலை அடைந்து விட்டோம்!
    அருந்தமிழ் மீட்சி ஒன்றே
                அழிந்ததை மீட்டெடுக்கும்!
    அறையினில் தூங்கு கின்ற
               அரிச்சுவடிகளை யெல்லாம்;
    முறையாகத் தொகுத்து மக்கள்
               மூளையில் புகுத்தி விட்டால்;
    உறக்கங்கள்  முற்றாய்த்  தீரும்
                உணர்வெழும் தமிழ்நாட் டாரே!
     26/02/2019
    Share
  • சேக்கிழார் பா நயம் – 26

    -திருச்சி புலவர் இரா.இராமமூர்த்தி .

    ஆட்சியில் ஆவணத்தில் அன்றி மற்று அயலார் தங்கள்
    காட்சியில் மூன்றில் ஒன்று காட்டுவாய் என்ன “முன்னே
    மூட்சியிற் கிழித்த ஓலை படியோஓலை மூல ஓலை
    மாட்சியில் காட்ட வைத்தேன்” என்றனன் மாயை வல்லான்.

    அடிமை ஓலை உண்டு என்று முதிய அந்தணர் கூறக் கேட்ட  சுந்தரர்  ‘’ஆளோலை உண்டு!’’  என்று கூறிய  இவ்வந்தணர் மொழியின் உண்மையை அறிந்து கொள்ளும் அவாவினராய் அவரைநோக்கி `ஐயா! அடிமை ஓலை இருக்கிறதென்று கூறினீரே. அதனைக் காட்டுக! உண்மையை அறிவேன்` என்றார்.

    `நீ அவ்வோலையைக் காணுதற்குத் தகுதி உடையவனா? அதனை இவ் அவையோர் முன்னிலையில் காட்டி நீ எனக்கு அடிமை என்பதை உறுதிப்படுத்திய நிலையில் எனக்கு நீ அடிமைத் தொழில் செய்தற்கே உரியவன்` என்றார் அந்தணர். அம்மொழிகேட்டு வெகுண்ட நம்பிகள் விரைந்தெழுந்து அவ்வேதியர் கையிலுள்ள ஓலையைப் பறிக்கச் சென்றார். அந்நிலையில் அம்முதியவர் விரைந்து ஓடினார். அவரைத் தொடர்ந்து நம்பியாரூரரும் ஓடினார். மாலும் அயனும் தொடர ஒண்ணாத அவரைவலிந்து பின்தொடர்ந்த ஆரூரர் அம் முதியவர் கையிலுள்ள ஓலையைப்பறித்து `அந்தணர்கள் வேறோர் அந்தணர்க்கு அடிமையாதல் என்ன முறை` என்று சொல்லிக் கொண்டு அவ்வோலையைக் கிழித்து எறிந்தார்.

    இந்த  இடத்தில் மையல் மானுடமாய்  சுந்தரர்  தவறு செய்யத்   தொடங்கி  விட்டார்.  ஓலையைப் பறிகொடுத்த முதியவர் `இது முறையோ முறையோ` வெனக் கூவி அழுதரற்றினார். அதனைக்கேட்ட அங்குள்ளவர்கள் அவ்விருவரையும் விலக்கினர். முதியவரை நோக்கி `உலகில் இதுவரை இல்லாத இவ்வழக்கைக் கொண்டுவந்து நிற்கும் முதியவரே! நீர் வாழும் ஊர் எது` என்று வினவினர். அதுகேட்ட முனிவர் `நான் வாழும் ஊர் நெடுந்தொலைவிலுள்ள தன்று; மிகவும் அண்மையிலுள்ளதாகிய திருவெண்ணெய் நல்லூரேயாகும். நம்பி யாரூரனாகிய இவன் என்கையிலுள்ள ஓலையை வலியப் பிடுங்கிக் கிழித்தெறிந்துவிட்டான். அதன் மூலமாக அவன் என் அடிமை என்ற உண்மையை உறுதிப்படுத்திவிட்டான்` என்றார். அம் மொழிகேட்ட நம்பியாரூரர் இம் முதியவர் வழக்காடுவதில் பழக்கப்பட்டவர் போலும் என்று தம்முள் எண்ணி அம் முதியவரை நோக்கி `நும்முடைய ஊர் திருவெண்ணெய்நல்லூராய் இருக்கு மானால் உமது பிழைபட்ட வழக்கை அங்கேயே பேசித் தீர்த்துக்கொள்வோம்` என்றார்.

    முதியவர் `நீ திருவெண்ணெய்நல்லூர்க்கு வந்தாலும் நான்மறை உணர்ந்த அவையத்தார் முன்னிலையில் உன் பாட்டன் எழுதிக்கொடுத்த மூல ஓலையைக் காட்டி நீ எனக்கு அடிமை என்பதை உறுதிப்படுத்துவேன்` என்று கூறிக் கோலை ஊன்றிக் கொண்டு முன்னே சென்றார். அவரைப் பின்தொடர்ந்து நம்பியாரூரரும் சென்றார். இவ்வழக்கு என்னாகுமோ எனக் கலங்கிய நிலையில் சுற்றத்தாரும் உடன் சென்றனர்.

    திருவெண்ணெய்நல்லூர் அவையில்:

    திருவெண்ணெய் நல்லூரை அடைந்த முதியவர், அந்தணர் நிறைந்த பெரும் சபையின் முன் சென்றார். அவையத்தாரை நோக்கித் `திருநாவலூரனாகிய இவன் என் அடியான். என் அடிமை ஓலையை வலிந்து பிடுங்கிக்கிழித் தெறிந்துவிட்டு உங்கள் முன் வந்துள்ளான். இதுவே என் வழக்காகும்` என்று கூறினார். அது கேட்ட அவையத்தார் `ஐயா! அந்தணர் மற்ற வர்க்கு அடிமையாதல் இவ்வுலகில் இதுவரை இல்லையே` என்றனர். இது பொருந்தாவழக்கு என்றும் தெரிவித்தனர். அம் முதியவர் அவர்களைநோக்கி `இவ்வழக்கு எவ்வாறு பொருத்தமற்றதாகும்? இவன் கிழித்த ஓலை அவன் பாட்டன் எழுதிக்கொடுத்ததாகும்` என்று கூறினார்.

    அதைக்கேட்ட அவையோர் ஆரூரரை நோக்கி `நும் பாட்டனார் எழுதிக்கொடுத்த ஓலையை வலியவாங்கிக் கிழித் தெறிவது உனக்கு வெற்றிதரும் செயலோ? இம்மறையவர், தம் வழக்கைப் பொருத்தமாக எடுத்துக் கூறினார். உம்முடைய கருத்து யாது` என்று கேட்டார்கள்.

    நாவலூரர் அவையோரைப்பார்த்துப் `பெரியோர்களே நான் ஆதிசைவ அந்தணன் என்பதை நீங்கள் அறிவீர்கள் முதியோராகிய இவ் அந்தணர் உலக வழக்குக்கு மாறாக என்னை அடிமை கொண்ட தாகச் சாதிப்பது மனத்தால் உணர்தற்கெட்டாத மாயையாக உள்ளது. இதைக் குறித்துத் தெளிந்து உணர என்னால இயலவில்லை எனக் கூறினார். அதைக்கேட்ட அவையத்தார் அம்மறையவரை நோக்கி `நம்பியாரூரரை அடிமைஎனக் கூறும் இவ்வழக்கிற்கு ஆட்சி, ஆவணம், சாட்சி என்ற மூன்றனுள் ஒன்றைக்கொண்டு உறுதிப் படுத்தல் வேண்டும்` என்று கூறினர்.

     ஆட்சியில் , ஆவணத்தில், அன்றி மற்று அயலார் தங்கள்
    காட்சியில்,  மூன்றில் ஒன்று காட்டுவாய் என்ன “

    முதியவர் `நாவலூரன் சினம் மிகுதியால் என் கையிலிருந்து பறித்துக்கிழித்த அடிமைச் சீட்டு படியோலையாகும். அதன் மூல ஓலையை அவையத்தார்முன் காட்டுதற்கென்றே போற்றிவைத் துள்ளேன். இவன் முன்போல் கிழித்தெறியாதபடி நீங்கள் பார்த்துக் கொள்வீரேயாயின் அவ்வோலையைக் காட்டுவேன்` என்றார்.

     “முன்னே  மூட்சியிற் கிழித்த ஓலை படியோஓலை மூல ஓலை
    மாட்சியில் காட்ட வைத்தேன்” என்றனன் மாயை வல்லான்.

    அவையத்தாரும் அதற்கு உறுதியளித்தனர். முதியவர் மூல ஓலை யாகிய ஆவணத்தை அவையோரிடம் கொடுத்தார். கரணத்தான் ஓலையைப் படிக்கத் தொடங்கினான்.

     இந்த அந்தணர்  அவைநிகழ்ச்சிகளில், முதலில் அந்த முதிய  அந்தணர், ‘’நின்ற இசைவால்  யான் முன் உடையதோர்  பெரு வழக்கு!’’ என்கிறார். இதனை இக்காலக் குற்றவியல்  சட்டம், ‘’cause  based on mutual  agreement’’ என்று காட்டும். அடுத்து, சுந்தரர்,’’அந்தணர்மற்றோர்அந்தணருக்கு  அடிமையாதல் இல்லை.’’  என்றார். இது,  ஆட்சி வகையின் , சாதிக் செருக்கு எனப்படும் உலகியலைக்  குறிக்கும். இதனை இக்காலச்  சட்டம், ‘’cause  based  on  common   rights ‘’ என்று ஆவணப்படுத்தும்.அடுத்து  சுந்தரர் அந்தணரைத்  தொடர்ந்து விரட்டிச் சென்று , ஓலையைக் கவர்ந்து , கிழிக்கிறார்! இது செய்த தவறுக்கு மேலும் தவறு செய்தல் என்ற குற்றத்தின் பாற்படும்.  மேலும் இது , சாட்சியத்தைக் கலைத்தல் என்ற non bailable offence ஆகும். ‘‘அந்தணர், மற்றோர் அந்தணருக்கு  அடிமை யாகலாம் ‘ என்பதற்கு ஆதாரம் evidance உண்டா? அதனை ஆட்சி conventional , ஆவணம்  documental  ,அயலார் தங்கள்  சாட்சி witness  ஆகிய மூவகை ஆதாரங்களுள்  ஒன்றைக் காட்டுக’’ என்று அவையோர் கூறினர். அப்போது முதிய அந்தணர்  என்னிடம் ‘மூல ஓலை’ original evidence  உள்ளது! அதையும் சுந்தரர் கிழித்து விட்டால்? என்று கேட்கிறார். இதனைச் சட்டப் பாதுகாப்பு என்பர். அந்த ஓலையை வாங்கிய அந்தணர்கள்  அவை மரபு  தெரிந்த கரணத்தான்  ஒருவரிடம் கொடுத்து அதன் உண்மை genuneness  , தொன்மை antiquity ஆகியவற்றை ஆராயக் கேட்டுக் கொண்டனர். இந்நிகழ்ச்சி யில் அந்தக்காலச்  சோழரின் அமைச்ச ராகிய சேக்கிழாரின்  நீதி , சட்டம் பற்றிய  அறிவைக் காட்டும் நயம் மிகுந்துள்ளது!

    Share
  • அழியாத பிளாஸ்டிக்

    -நாகேஸ்வரி அண்ணாமலை

     

    அடுத்த அறுபது நொடிகளில், அதாவது ஒரு நிமிடத்தில் உலகம் முழுவதுமுள்ள மக்கள் பத்து லட்சம் பிளாஸ்டிக் பாட்டில்களையும் இருபது லட்சம் பிளாஸ்டிக் பைகளையும் வாங்குவார்களாம். இவையெல்லாம் முற்றிலும் அழிந்து போவதற்கு ஆயிரம் வருஷங்களுக்கு மேல் ஆகுமாம். இது இப்படி நடந்துகொண்டிருக்க அவற்றில் சில மிகவும் நுண்ணிய துகள்களாக உடைந்து எண்ணிலடங்காத அளவில் கடலில் கலந்துவிடுகின்றன. இவை கடல் நீரிலும் குடிநீரிலும் நாம் தினமும் உபயோகிக்கும் உப்பிலும் காணப்படுகின்றன. மேலே குறிப்பிட்டவற்றோடு அவை போய்ச் சேரும் இன்னொரு இடம் மனிதனின் குடலுமாகும்.

    ஃபின்லாந்து, இத்தாலி, ஜப்பான், நெதர்லாந்து, போலந்து, ரஷ்யா, பிரிட்டன், ஆஸ்ட்ரியா ஆகிய நாடுகளிலிருந்து எட்டு பேரின் மலத்தைச் சோதித்தபோது எல்லோர் மலங்களிலும் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் இருந்தனவாம். இப்போதைக்கு மனிதனின் ஆரோக்கியத்திற்கு எந்தவித ஆபத்தும் இவற்றால் இல்லையென்றாலும் இன்னும் நிறையப் பேர்களைப் பரிசோதித்து விபரம் சேகரிக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் முடிவுசெய்திருக்கிறார்கள்.

    பிளாஸ்டிக் நுண்துகள்களால் மனிதனுக்கு ஆபத்து எதுவும் இல்லையென்று இப்போதைக்கு முடிவுசெய்யப்பட்டிருந்தாலும் எத்தனையோ மிருகங்கள் பிளாஸ்டிக்கினால் பாதிக்கப்படுகின்றன. கடல்வாழ் மீன்கள் எத்தனையோ இந்த பிளாஸ்டிக் பைகளை விழுங்கி உயிர் இழந்திருக்கின்றன.

    சமீபத்தில் பதினேழு பவுண்டு எடையுள்ள பிளாஸ்டிக் பைகள் ஒரு திமிங்கலத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. பிளாஸ்டிக்கின் கெடுதல்கள் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம். போப் பிரான்சிஸ், இந்த பூமி கடவுளால் நமக்குக் கொடுக்கப்பட்டது. இதை மாசுபடுத்தினால் கடவுளை நிந்திப்பதற்குச் சமம் என்கிறார். உலகில் எல்லோருக்கும் பிளாஸ்டிக்கின் இன்னொரு பக்கம் தெரியத்தான் செய்கிறது. ஆனாலும் அதன் உபயோகத்தால் பல வசதிகள் இருப்பதால் தொடர்ந்து உபயோகித்து வருகிறோம். சிலர் அது மறு சுழற்சி செய்யப்பட்டால் வீணாவதில்லை என்று நினைக்கிறார்கள். இது மிகவும் தவறு. மறுசுழற்சி செய்யப்படும்போது எத்தனை பொருள்கள் வீணாகின்றன. மேலும் ஒரு குறுகிய சதவிகிதமே மறுசுழற்சி செய்வதன் மூலம் திரும்பக் கிடைக்கிறது. அதனால் reduce, reuse, recycle என்ற மந்திரத்தை நாம் பின்பற்ற வேண்டும். முதலில் கூடியவரை பிளாஸ்டிக் பொருள்களின் (எல்லாப் பொருள்களையும் என்றுகூட நான் சொல்லுவேன்) உபயோகத்தைக் குறைக்க வேண்டும். இயற்கை வளங்களைக் குறைவாகப் பயன்படுத்துங்கள். அதற்குமேல் வாங்கித்தான் தீர வேண்டுமென்றால் அந்தப் பொருளைத் தாங்கிவந்த டப்பாக்களை மறுபடி உபயோகப்படுத்துங்கள். அதற்கு மேலும் தேவையென்றால் இவற்றை மறுசுழற்சி செய்யும் இடங்களில் சேர்த்துவிடுங்கள்.

    அமெரிக்காவில் இப்போது பால், தயிர், வெண்ணெய் ஆகிய எல்லாம் பிளாஸ்டிக்கில் அல்லது பிளாஸ்டிக்கோடு இன்னொரு பொருள் சேர்த்துச் செய்யப்பட்ட டப்பாக்களில்தான் கிடைக்கின்றன. அமெரிக்கர்கள் இவற்றையெல்லாம் உபயோகித்துவிட்டுக் கீழே தூக்கி எறிவதைப் பார்த்தால் என் நெஞ்சமெல்லாம் வலிக்கும். சில சூப்பர்மார்க்கெட்டுகளில் சொந்தப் பைகளைக் கொண்டுவருபவர்களுக்கு ஒரு பைக்கு ஏழு சென்ட் திருப்பிக் கொடுத்தார்கள். இந்த மாதிரி உத்திகள்கூட அதிகப் பலனை விளைவிக்கவில்லை. அமெரிக்காவில் எல்லா நகரங்களும் பிளாஸ்டிக்கின் உபயோகத்தைக் குறைக்கத் தங்களாலான முயற்சிகளைக் கடைப்பிடிக்க முயன்று வருகின்றன. எதுவும் பிளாஸ்டிக் உபயோகத்தைக் குறைத்த மாதிரி தெரியவில்லை.

    அமெரிக்காவில் எதையும் sterilize பண்ணுவதால் அமெரிக்கர்களுக்கு நோய்தடுப்புச் சக்தி மிகவும் குறைந்துபோய்விட்டது. யாரும் குழாயிலிருந்து தண்ணீர் குடிப்பதில்லை. எல்லாம் பாட்டில்கள்தான்.

    அமெரிக்காவில் வசித்தாலும் நாங்கள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பிளாஸ்டிக்கின் உபயோகத்தைக் குறைத்து வருகிறோம். பார்ட்டிகளுக்குப் போனால் எங்கள் சொந்தப் பிளேட்டுகளையும் டம்ளர்களையும் எடுத்துச் செல்கிறோம். பிரயாணம் செய்யும்போதோ வேறு எங்காவது வெளியில் செல்லும்போதோ கையோடு உணவை எடுத்துச் சென்றால் திரும்ப உபயோக்கிக்கக் கூடிய பிளேட்டுகளில்தான் எடுத்துச் செல்கிறோம். அவற்றைத் திரும்பக் கொண்டுவந்து கழுவி உபயோகப்படுத்துகிறோம். பிளாஸ்டிக்கில் கொண்டுபோயிருந்தால் அங்கேயே குப்பைக் கூடையில் எறிவதற்கு வசதியாகத்தான் இருந்திருக்கும். ஆனாலும் அப்படிச் செய்வதில்லை.

    அமெரிக்காவில் ஓட்டல்களில் நாம் உண்டதுபோக மீதியை வீட்டிற்கு எடுத்து வந்துவிடலாம். அதனால் நம்மை யாரும் குறைவாக நினைக்க மாட்டார்கள். இப்போது இது எல்லோரும் ஒப்புக்கொண்ட பழக்கமாகிவிட்டது. ஓட்டல் சர்வர்களே doggie bag-ல்போட்டுக் கொடுக்கவா என்று நம்மிடம் கேட்பார்கள். இப்படி மிஞ்சிய உணவை வீட்டிற்கு எடுத்துச் செல்லும் பைகளுக்கு doggie bag என்று பெயர். (அமெரிக்கர்கள் தாங்கள் உபயோகிக்கும் உணவில் 40 சதவிகிதத்தை வீணடிக்கிறார்கள் என்று ஒரு புள்ளி விபரம் கூறுவது இன்னொரு விஷயம்.)

    ரொட்டித் துண்டுகளோடு சாப்பிடும் peanut butter என்னும் நிலக்கடலை வெண்ணெயைச் சூப்பர் மார்க்கெட்டுகளில் பாட்டில்களிலோ பிளாஸ்டிக் டப்பாக்களிலோ விற்கிறார்கள். இப்போது கடைகளில் தினமும் மெஷினில் அரைத்து விற்கிறார்கள். தினமும் தயாரிக்கப்படும் இதில் preservative எதுவும் சேர்ப்பதில்லை. ஆனால் இப்படித் தினமும் தயாரிக்கப்படுவதையும் பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்து விற்கிறார்கள். பிளாஸ்டிக்கின் உபயோகத்தைக் குறைக்க எண்ணிய நாங்கள் எங்கள் வீட்டிலிருந்து கண்ணாடி பாட்டில்களைக் கொண்டுபோய் கடையிலேயே அரைத்து எங்கள் பாட்டில்களில் போட்டுத் தரச் சொன்னோம். நாங்கள் அப்படிக் கேட்டவுடன், “ஷெல்பில் நிறைய இருக்கிறது. அதில் ஒன்றை எடுத்துக்கொள்ளுங்கள்” என்றார்கள். திரும்பத் திரும்ப உபயோகிக்கக் கூடிய பாட்டில்களையே நாங்கள் விரும்புவதால் பிளாஸ்டிக் வேண்டாம் என்றும் எங்கள் பாட்டில்களிலேயே மெஷினில் அரைத்ததைப் போடும்படியும் சொன்னோம். கடை ஊழியர்களுக்கு அது புரியவே இல்லை. பிளாஸ்டிக்கை விட கண்ணாடி பாட்டில் கனமாக இருக்கும், அதனால் எங்களுக்குக் கொஞ்சம் குறைவாகவே கடலை வெண்ணெய் கிடைக்கும் (பிளாஸ்டிக் டப்பாக்களில் கடலை வெண்ணெயை நிரப்பி அதன் எடையைக் கணக்கிட்டு விலையைக் குறிப்பார்கள்) என்று கூறிப் பார்த்தார்கள். நாங்கள், “அதனால் பரவாயில்லை. பாட்டில்களில் அதைப் பெறுவதுதான் எங்கள் முக்கிய நோக்கம்” என்று எவ்வளவோ கூறிப்பார்த்தும் அவர்களுக்கு விளங்கவில்லை. பின் கடை மேனேஜரை வரவழைத்துப் பல முறை அவருக்கு விளக்கிய பிறகு வேண்டா வெறுப்பாக எங்கள் பாட்டில்களில் கொடுக்க ஒப்புக்கொண்டார்கள்.

    சென்ற ஒரு வருஷமாகக் கடை ஊழியர்களுக்கு எங்களுடைய இந்தப் பழக்கம் பழகிவிட்டதால் போனவுடனேயே எந்தத் தகராறும் செய்யாமல் எங்கள் பாட்டில்களிலேயே கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அந்தக் கடை இப்போது மூடப்பட்டுவிட்டது. இன்னொரு கடையிலும் இதே மாதிரி அன்றன்றே செய்து விற்கிறார்கள் என்று அறிந்து அங்கு போய் வாங்க முயன்றோம். இந்தக் கடையிலும் முதலில் ஒத்துக் கொள்ளவில்லை. அவர்கள் அதற்குச் சொன்ன காரணம் எங்களிடம் சிரிப்பை வரவழைத்துவிட்டது. அவர்கள் கொடுக்கும் பிளாஸ்டிக் டப்பாக்கள் சுத்தமானவையாம் (sterilized); எங்கள் பாட்டில்கள் சுத்தம் செய்யப்படாதவையாம் (unsterilized); இதனால் எங்களுக்கு ஏதாவது உடல் உபாதை ஏற்பட்டு நாங்கள் அவர்கள் மீது வழக்குத் தொடர்ந்துவிடுவோமாம்! “எங்கள் பாட்டில்களில் நீங்கள் கொடுத்தாலும் நாங்கள் உங்கள் மீது வழக்குப் போட மாட்டோம் என்று எழுதிக் கொடுத்தால் எங்கள் பாட்டில்களில் நிரப்பிக் கொடுப்பீர்களா?” என்று கேட்டும் அந்தப் பகுதியில் இருந்த ஊழியர் ஒத்துக் கொள்ளவில்லை. பின் கடை மேனேஜரிடம் கேட்டு, அவரிடம் நிறைய பேசி அவரை இதற்குச் சம்மதிக்க வைப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. கடைசியாக அவர் சம்மதித்தாலும் கடலை வெண்ணெயின் எடையையும் விலையையும் கடையின் பெயரையும் குறிக்கும் ‘ஸ்லிப்பை’ பாட்டிலின் மேல் ஒட்டக் கூடாது என்று கூறிவிட்டார்கள். அந்த ‘ஸ்லிப்பை’க் கையில் வைத்திருந்து எல்லாச் சாமான்களுக்கும் விலைபோட்டு மொத்த பில்லையும் தயாரிப்பவரிடம் அதைக் காட்டிவிட்டு அதைக் கீழே போட்டுவிடுமாறு கூறினார்கள். எங்கள் பாட்டில்களில் அவர்கள் போட்டுக் கொடுத்ததற்கு எந்த ஆதாரமும் இருக்கக் கூடாதாம்!

    சுத்தம் என்ற பெயரில் அமெரிக்கா எவ்வளவு தூரம் வந்திருக்கிறது என்று பாருங்கள்!

    அமெரிக்கா இருக்கட்டும். இப்போது தமிழ்நாட்டில் 2019 ஜனவரி 1-ஆம் தேதியிலிருந்து பிளாஸ்டிக் உபயோகத்திற்குத் தடை வந்திருப்பதாக அறிந்தோம். ஊழலுக்கு ஒரு உதாரணமாகத் திகழும் தமிழ்நாட்டில் இந்தத் தடை எப்படி அமுல்படுத்தப்படுகிறது என்றும் மக்கள் எவ்வளவு தூரம் ஒத்துழைக்கிறார்கள் இருக்கிறார்கள் என்றும் அறிய மிகவும் ஆவலாக இருக்கிறது.

    Share
  • 22 பேர் பெற்ற பிரமதேய நிலக் கல்வெட்டு

    -சேஷாத்ரி ஸ்ரீதரன்

    மேலதிருமாணிக்கம் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் 

    மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம் உசிலம்பட்டி அருகே மேலத்திருமாணிக்கம் என்ற ஊரில் அமைந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கருவறை வடக்குச் சுவர் கல்வெட்டு.

    பிரமதேயம் என்றால் பிராமணர்க்கு இறையிலியாக வழங்கும் நிலம் என்று தெரியும் ஆனால் அது எப்படியானது என்று விளங்கத் தெரியாது. இக்கல்வெட்டில் அது பற்றிய தெளிவு ஏற்படுகின்றது. வாணகோவரையன் கட்டித் தந்த 22 வீட்டுக் கல்வெட்டை நினைவுபடுத்துவதாக இக்கல்வெட்டு உள்ளது. 13 ஆம் நூற்றாண்டில் விக்கிரம பாண்டியனின் 13 ஆம் ஆட்சி ஆண்டில் தென்முட்ட நாட்டு மணிக்கயத்து சிவன் கோவிலுக்கும், குலசேகர மங்கலத்து நாயனார்க்கும் வழங்கிய தேவதானத்தின் எல்லையும் கருநிலக்குடி நாட்டு பிரம்மதேயத்தில் ஒவ்வொரு பிராமணரின் பெயரைக் குறிப்பிட்டு அவருக்கான பங்கினை அரை முதல் ஒன்றேகால் நிலம் வரை குறிப்பிடுகின்றது. இந்த வேறுபாடு அவரவர் பொறுப்பிற்கும் தகுதிக்கும் தக்கவாறு அமைந்ததாகலாம். இவர்கள் பெரும்பாலும் சுற்றத்தாராகவே உள்ளனர் என்பது எண்ணிப் பார்க்கத்தக்கதாக உள்ளது. இதில் செய்தி கிடைக்கின்ற அளவில் 21 பிராமணர்கள் இருப்பது தெரிகின்றது இதற்கு மேலும் இருக்கக்கூடும். ஆனால் இக்கல்வெட்டு இறுதி முற்றும் முன்பு உள்ள பகுதி சிதைந்துள்ளதால் அதில் இடம்பெற்றோரின் பெயர்கள் அவர்கான பங்குகள் அறிய முடியாமல் உள்ளது.   இந்த பிரமதேயம் நன்செய், புன்செய் அல்லாத வீட்டு அடிமனை என்றே கொள்ளத்தக்கது. அப்படியானால் வீடு கட்டித் தரப்பட்டதா என்ற செய்தியும் அறியமுடியாமல் உள்ளது.

    கல்வெட்டு:

    ஸ்வஸ்திஸ்ரீ திருமகள் ஜயமகள் / திருப்புயத்திருப்ப எழுக / டலளவு நிலமகள் புணர / க் கடவுள் மேருவி[ற்] கயல் / விளையாட _ _ _ / வந்தம் _ _ _/ நெடு _ _ _ வெண்கு / டைநிழ _ _ _ செங்கோ / ல் நடப்பக் [கருங்]கலி துரந்து / வேத வீதி _ _ / _ _ _ / ஞ்ச வீரமும் _ _ _ புகழுமிகளணி விளங்க _ _ _ / மதிப்பெருச் சடை முடி நாத / னிம்ப திகழ்மணி முடி சூடி வி / ளங்கிய மணியணி வீரஸிம்ஹா / சனத்து வீற்றிருந்தருளிய [கோ] மாறபன்மரான திரிபுவனச் சக்கரவ / த்திகள் ஸ்ரீ விக்கிரம பாண்டிய [தே] / வற்கு யாண்டு13 வது ஸ்ரீ பாண் / டி மண்டலத்து மதுரை உதைய / வளநாட்டுத் தென் / முட்ட நாட்டு திரு / மணிக்கயத்து உடை / யார்த் திருமணிக்கய / முடைய  நாயனார் தேவ / தானம். கருநிலக்குடி நா / ட்டு ப்ரஹ்மதேய[ம்] ஸ்ரீ குலைசே / கரச் [சதுர்வேதி மங்]கலத்து / டைய நாயனார் தேவதான / _ _ _ க் கய நல்லூர் மூலப்பி /_ _ _ / லை[ப் பெ]ருந்தலைக் குளத்தில் வய / லில் மேல் வரம்புக்கு மேற்[கு] / பெருந்தலை குளத்தில் வயலில் / வாயல்ப் பவளசேரிக்கு நின்றும் / _ _ _ ப்போன பெருவ / [ழியே]ய்க் கொண்டு நாலப் பொய் / [கையார்] இக் குளத்துக்கு பாய்கி / ற காலுக்கு மேற்கும் தென்னெல்லை /அத்தாணி நல்லூர்[க்கா] லுக்கு  வடக்கும் மேல்லெல் / லை கிழவர்குறிச்சி வயலுக் / கு கிழக்கும் ஆனை சுரத்தில் நின் / றும் தெற்கு நோக்கிப் போகிற / வழிக்கு கிழக்கும் வடவெல்லை /  தலைமலை ஆற்றுக்கு தெற்கும் இ / _ _ _ / [மா] _ _ _ மும் கீணோக்கிய கிணறும் [மற்றும்] / யெப் பேற்பட்டனவும் / _ _ _ ளிச் / _ _ த்து இருந்து ஸ்ரீ மாஹே[ஸ்வர] _ _ _ / வாஜ கோத்ரத்து _ _ _ / த்துமு _ _  திறபடி _ _ _  / _ _ _ _ / தம்பி ஸுப்ரஹ்மண்ய பட் / டன் பாக[ம்] ஒன்றும் இக்குடியில் / இக்கோத்திரத்து இச்சூத் / திரத்து சுந்தரத் தோளுடை / யான் பட்டன் பாகம் முக்கா / லும் இவன் தம்பி சோலை பிரா / ன் பட்டன் பாகம் அரையும் இவ / ன் மகன் ஸுப்ரஹ்மண்ய பட்டன் பாகம் / அரையும் இக்குடியில் ஸ்ரீ க்ருஷ்ண பட்டன் பாக / ம் ஒன்றும் இக்குடியில் சோலைப் பி / [ரான் பாக]ம் ஒன்றும் இக்[குடியி] / _ _ _ ட வில்லி பட்டன் பா _ _ _ / _ _ _ ப கோத்திரத்து வெ / பிரான் பட்டன் பாகம் _ _ _  கோத்திரத்து / _ _ _ _ / ஒன்றும் இவன் _ _ _ / ண் காடுடைய _ _ _ / இவன் தம்பி _ _ _ / பாகம் ஒன்று _ _ _ / ம் ஹரி கோத்ரத்து இ / ஸுத்திரத்து குரவசேரி ஸ்ரீ / குமார பட்டன் பாகம் ஒன் / றும் [ஸ்வத்தாப] கோத்ரத்து வேற்புறத்து ஸுப்ரஹ்மண்ய ப / ட்டன் பாகம் ஒன்றே காலும் / இக்குடியில் இவன் தம்பி மருளாள / ப் பெருமாள் பட்டன் பாகம்  ஒன்றும் பாரத்து / வாரிய கோத்திரத்து இஸூத்திரத்துக்கு ரோவி / கேசவ பட்டன் பாகம் ஒன்றும் ஹரிதகோத் / திரத்து _ _ _ ஸூத்திரத்து பிறையம்புரத்து சிவநாரா / யண பட்டன் பாகம் ஒன்று இவன் தம்பி / அருளாளப் பெருமாள் பட்டன் பாகம் ஒன்றும் காஸ்ய / ப கோத்திரத்து உருப்புட்டூர் இராமபிரான் பட்டன் / பாகம் ஹரித கோத்ரத்து இஸூத்திரத்து கோமபுறத்து பா / கம் ஒன்றே காலும் இவன் தம்பி முற்றுமாண்டான் _ _ _ / யும் _ _ _ இவன் மகன் திருவரங்கம் _ _ _ / இஸூத்திரத்து காரம்பி செட்டுதிருவேங் _ _ _ / யும் வஸிஷ்ட கோத்திரத்து இ ஸூத்திரத்து _ _ _ / ஒன்றும் இக் கோத்திரத்து இஸூத்திரத்து _ _ _ / பாகம் _ _ _ இ கோத்திரத்து இஸூத்திரத்து / _ _ _

    இக்குடியில் – இக்கோவிலில் பணிசெய்யும்; அல்லது இவ்வழியில், கோத்திரத்தில் வந்த (lineage) அல்லது இவ்வூரைச் சேர்ந்த.

    விளக்கம்: விக்கிரம பாண்டியனின் மெய்கீர்த்தி முதலில் இடம் பெறுகின்றது. அன்றைய திருமணிக்கயம் இன்று திருமாணிக்கம் ஆகிவிட்டது. மேற்கு திசையை குறிக்கும் மேல என்பது ஊருக்கு முன்னொட்டாகிவிட்டது. இதில் பிரமதேய நிலம் பெற்ற 22 பிராமணர் கோத்திரமும் பெயரும் இன்னார்க்கு இன்னார் உறவு என்பதும் தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ளது. 97 வரிகளுக்கு மேல் செல்வதாக இக்கல்வெட்டு உள்ளது. மன்னவர் கோவில் தமது எனக் கருதியதாலும் அதில் பணியாற்றுவோர் தமது பணியாளர் என்று கருதியதாலும் இவ்வாறு அளப்பரிய கொடைகளை ஈந்துள்ளனர் போலும். அடிமனையை வைத்து என்ன செய்வது? வீட்டை யார் கட்டித்தருவது என்ற கேள்வி எழுகிறது? ஆனால் கல்வெட்டு நடுநடுவே சிதைந்துள்ளதைப் போல இறுதியில் சிதைந்துள்ளதே!! அதனால் கற்பனையை கைவிடவேண்டியது தான். பிற பழங் கோவில்கள் போல இக்கோவிலை அண்டி ஆறு பாய்ந்தது கல்வெட்டில் குறிக்கப்பெறுகின்றது.

    Share
  • நலம்… நலமறிய ஆவல்…. (147)

    -நிர்மலா ராகவன்

    மதிப்பீடுகள்

    `எதிர்வீட்டில் என்ன, இப்படி கண்ணில் அறைகிறமாதிரி சுவருக்கு வண்ணம் பூசியிருக்கிறார்களே!’

    `இவ்வளவு குண்டாக இருக்கிறாள்! இவள் தினமும் உடுத்துவதோ கெட்டிச்சரிகைபோட்ட பட்டுப்புடவைதான்! நன்றாகவா இருக்கிறது?’

    ஒருவரை அறிமுகப்படுத்தினால், மேலும் கீழுமாகப் பார்த்து அவரை எடைபோடுவர் சிலர் — நம் ஆடையணிகள் நம் குணத்தை அப்படியே பறைசாற்றிவிடுவதுபோல்!

    அவன் என்ன அப்படி, இவள் என்ன இப்படி!

    பிறர் செய்வதில் தனக்கு என்னென்ன பிடிக்கவில்லை என்று ஆராய்ந்து, அதை வெளிப்படையாகக் கூறுவது சராசரி மனிதனின் குணம்.

    ஏன் மனிதனுக்கு இப்படி ஒரு குணம்?

    தன்னைப்பற்றி உயர்வாக எண்ணுகிறான், அல்லது தன் குறைகளைப் பிறர் அறிவதற்குமுன் தான் முந்திக்கொள்ளவேண்டும் என்ற துடிப்பு.

    எப்போதும் பிறரைக் குறைவாக மதிப்பிடுபவர்கள் தம்மையே பிறர் குறைகூறினால் கொதித்து எழுவார்கள்.

    நாம் ஒருவரிடம் என்னென்ன குணங்கள் பிடிக்கவில்லை என்கிறோமோ, அவையே நம்மிடமும் இருக்கிறது என்பதுதான் விந்தை.

    `கண்ணில் அறைகிறமாதிரி’ வீட்டின் வெளியே வண்ணம் பூச அந்த வீட்டுக்காரர் மூன்று இடங்களில் வேலை பார்த்து, நிறையச் செலவழித்து, தன் திருப்திக்கேற்ப அமைத்திருக்கிறார். அதைக் குற்றம் கூறப் பிறருக்கு என்ன தகுதி?

    பட்டுப்புடவைகளையே உடுத்துபவளுக்கு அதை வாங்க வசதி இருக்கிறது. அவளுக்குப் பிடித்ததைச் செய்கிறாள். `உடலை விமானப் பணிப்பெண்போல் ஆக்கிக்கொண்டு பிறகு அம்மாதிரியான புடவைகள் வாங்கலாம் அல்லது, இதற்காகவே இன்னொரு பிறவி எடுக்கலாம்,’ என்ற நியாயமான ஆசைகளைத் தள்ளிப்போட முடியுமா? பிறர் தன்னை ஏற்கும்படி அவள் எதற்காக நடக்க வேண்டும்?

    பிடிக்காதவர்களைப்பற்றியோ அல்லது பொறாமையாலோ, சிலர் அவதூறாகப் பேசுவது முற்றிலும் உண்மையாக இருக்காது.

    `நான் செய்வதுதான் சரி!’ என்று சாதிப்பவர்களால் பிறரைப் புரிந்துகொள்ள முடியாது. இவர்கள் சில வெற்றிகளை அடைந்திருக்கலாம். அதனால் மட்டும் அவர்கள் எண்ணங்கள் எல்லாமே சரியாகிவிடுமா?

    `ஒருவர் தன் மனதைப் பாதித்தவைகளைப்பற்றிக் கூறுவதை எவராலும் புரிந்துகொள்ளமுடியாது – அவர்களும் அதேபோல் ஒன்றை அனுபவித்திருந்தாலே ஒழிய,’ என்பவரின் கதையைக் கேட்போமா?

    கோபாலனின் காதல் திருமணம் சில ஆண்டுகளுக்குள் அவர் விவாகரத்து கேட்கும் அளவுக்கு முறிந்துபோயிற்று. தான் எவ்வளவு அனுசரணையாக இருந்தாலும் அதைப் பெரிதாக நினைக்காது, தனது கடந்தகால வாழ்க்கையை ஓயாது குத்திக்காட்டியவளுடன் வாழ்நாள் முழுவதும் இணைந்து வாழ்வது இயலாத காரியம் என்று தோன்றிப்போனதுதான் காரணம். பலரிடம் அதுபற்றிச் சொல்லி, தன் மனப்புண்ணுக்கு மருந்து தேடினார்.

    “ஒருத்தருக்குமே புரியவில்லை. `அப்படியா?’ என்று பட்டுக்கொள்ளாது கேட்டுவிட்டுப் போய்விடுகிறார்கள். இல்லையேல், அறிவுரை கூற ஆரம்பித்துவிடுகிறார்கள்,” என்று அரற்றினார் என்னிடம்.

    ஒருவர் மனம் நொந்து நம்மிடம் பேச ஆரம்பிக்கும்போது, அவருக்கு அந்த சமாசாரம் எவ்வளவு முக்கியம் என்று புரிந்து வாய் திறவாது கேட்டுக்கொள்ள வேண்டும்.

    நம் முகபாவத்திலிருந்தே, `இவளுக்கு நாம் சொல்ல வருவது புரியும்,’ என்ற நம்பிக்கை வர, மேற்கொண்டு பேசுவார்கள். சற்றே அமைதி பெறவும் வழியிருக்கிறது.

    ஆனால், பிறர் பேசிக்கொண்டிருக்கும்போதே, `அடுத்து நாம் என்ன சொல்லலாம்?’ என்றுதானே யோசனை போகிறது!

    கோபாலன் ஆறுதலை நாடினார் – மதுவில்.

    இப்போது உலகம் அவரைப் பழித்தது: `இந்தக் குடிகாரனுடன் எவளால் வாழமுடியும்?’

    அவர் அப்படி நடக்கும் சூழ்நிலை ஏன் அமைந்தது என்று யாருமே யோசிக்கவில்லை.

    பிறரைப் புரிந்துகொண்டு, அவர்களது கண்ணோட்டத்தில் பார்த்தால் எதுவும் தவறாகத் தோன்றாது.

    கதை

    தாய்லாந்தில் ஓர் உணவுக்கடையில் நானும் என் மகளும் உட்கார்ந்திருந்தோம். ஒரு பெண் குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கும் ஒலி கேட்டு, நான் திரும்பிப் பார்த்தேன்.

    சற்றுத் தொலைவில் பதினைந்து வயது மதிக்கத்தக்க அந்நாட்டுப் பெண் ஒருத்தியும், அவளைவிட முதியவர்களான இரு வெள்ளைக்காரர்களும் அமர்ந்திருந்தனர். அவர்கள் என்ன சொன்னாலும் அவள் சிரித்துக்கொண்டிருந்தாள்.

    `இவ்வளவு சிறிய பெண் இத்தொழிலைப்போய் செய்கிறாளே!’ என்ற அதிர்ச்சி எழுந்தது.

    என் கண்களை சந்தித்த அப்பெண்ணின் முகத்தில் சிரிப்பு மறைந்தது. அவமானம் எழ, தலை குனிந்தது.

    இந்தச் சிறுமியை நோகடித்துவிட்டோமே என்று என்னையே நான் கடிந்துகொண்டேன்.

    அதன்பிறகு என் மகள் என்னுடன் சண்டை பிடித்தாள்: “ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்திருப்பாள். விலைமாதுவாக இருப்பது அவள் தேர்ந்தெடுத்த தொழில். அவள் சம்பாதித்து, குடும்பத்தைக் காக்கவேண்டிய நிலை இருக்கலாம். இந்த தொழிலைச் செய்பவர்கள் சில முறையாவது பாலியல் ரீதியாக வன்முறைக்கு ஆளாகி இருப்பார்கள். நம் நிலையிலிருந்து அவர்களை எடைபோடக்கூடாது!”

    எவ்வளவு உண்மை!

    அன்று நான் ஒரு நல்ல பாடம் கற்றேன்.

    கதை

    கோலாலம்பூரில் நடந்த ஒரு குறும்பட நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன். பெண்ணைப்போல் ஆடையணிகள் அணிந்திருந்த இளைஞன் வரவேற்பாளராக அமர்ந்திருந்தான்.

    முதலில் நான் அவனைச் சரியாகக் கவனிக்கவில்லை. அவன் கொடுத்த காகிதத்தைப் பார்த்ததும் எந்த இடத்திலிருந்து வந்திருக்கிறான் என்று புரிய, சட்டென தலையை நிமிர்த்தி அவனைப் பார்த்தேன். அடையாளக்கார்டு மறுக்கப்பட்ட நிலையில், வயிறு பிழைக்க வேறு எந்தத் தொழிலுக்கும் போகமுடியாத அவலம். எங்களிருவர் கண்களும் சந்தித்தன. அவனை அங்கீகரிக்கும் விதத்தில் லேசாகப் புன்னகைத்துவிட்டு அங்கிருந்து அகன்றேன்.

    நான் என் இருக்கையில் அமர்ந்தபின், யதேச்சையாகத் திரும்ப, “ஹாய்!” என்று முகமெல்லாம் சிரிப்பாக முகமன் கூறினான் அதே இளைஞன்.

    நான் கையை உயர்த்தி, அதையே திரும்பக் கூறினேன்.

    தன் பக்கத்தில் இருந்தவளிடம் (இருந்தவனிடம்?), “என் ஃப்ரெண்ட்!” என்று பெருமையாகச் சொல்லிக்கொண்டான்.

    மற்றவன் என்னை ஏக்கத்துடன் பார்க்க, “Hello! How are you?” என்று அவனுக்கும் சற்று உரக்கவே முகமன் கூறினேன்.

    கையை உயர்த்தி, ஆர்ப்பாட்டமாக `ஹலோ’ சொல்வது என் வழக்கமில்லை. இருந்தாலும், இவர்களுக்குப் பிறர் தம்மை ஏற்பது எவ்வளவு முக்கியம் என்று புரிந்திருந்தது. அவனுடைய முகத்தில் அப்போது தோன்றிய மகிழ்ச்சி!

    எவரையும் அவர் இருப்பதுபோலவே ஏற்றால் வாழ்க்கை அமைதியாக இருக்கும்.

    தன்னையே பிடித்துப்போனவர்கள் பிறரைத் தாழ்வாக எடைபோட மாட்டார்கள். நாம் இருப்பதுபோலவே நம்மை நாமே ஏற்க என்ன தடை!

    Share
  • சுவரற்ற வீட்டில் எனக்கான தனியறை

    -கவிஞர் பூராம்

    உடல்பூத்து மலர்ந்த நாளொன்றில்
    காற்றின் இருத்தலைப் போலக் காமம்
    வாடையின் காற்று உள்ளத்தை உருக்குலைக்க
    இரவுகள் இங்கிதம் மறந்தொழிய
    ஊற்றெடுக்கும் உள்ளொளியில் துணைதேடி
    கனவுகளோடு நானும்

    தொடுதலின் வெற்றுக் கற்பனைகளில்
    பண்பாட்டுப் பாறையின் சுமையில்
    நிறம் மாறிய ஓவியமாக மனம்!

    துணையின் தேவையில் கண்டடைந்த
    வாழ்க்கையில் காத்திருக்கிறேன்
    முதல் காமமுத்தத்திற்காக!

    அவனோடு வாழ்ந்துவிட
    துணிந்துவிட்ட துணிச்சலில் சிறு உடைப்பு
    உதடுகளின் உரசலில் நாசியில்
    மோதிச் சென்ற வாசனை
    தன்னிலை இழந்த வயிறும் மனமும்

    காமத்தின் தேவையில்
    சேர்த்துவைத்த பொக்கிஷங்கள்
    கேட்பாறற்றுக் குப்பைத்தொட்டியில்
    முகச்சிரிப்பில் உடல் பூரிப்பில்
    கடந்துசெல்லும் ஒவ்வொரு இரவிலும்
    நகும் காலம்!

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(246)

    – செண்பக ஜெகதீசன்

    அழிவி னவைநீக்கி யாறுய்த் தழிவின்க

    ணல்ல லுழப்பதாம் நட்பு.

           -திருக்குறள் -787(நட்பு)

     

    புதுக் கவிதையில்…

    அழிவுதரும்

    தீவழிச் செல்கையில்

    தடுத்து நிறுத்தி,

    ஆக்கந்தரும் நல்வழி

    செல்லாதபோது

    செல்லவைத்து,

    அழிவு வரும்போது

    கைவிட்டு அகன்றிடாமல்,

    உடனிருந்து

    துன்பம் அனுபவிப்பதே

    தூய நட்பு…!

     

    குறும்பாவில்…

    தீயவழி செல்லாமல் தடுத்து நிறுத்தி,

    நல்வழியில் நடக்கவைத்து, அழிவுவந்தால்

    உடனிருந்து துன்புறுதலே நட்பு…!

     

    மரபுக் கவிதையில்…

    அழிவைத் தந்திடும் தீவழியில்

    ஆசையில் செல்கையில் தடுத்தேதான்

    வழியது நல்லதாய்க் காட்டியதன்

    வழியே நம்மைச் செல்லவைத்து,

    அழிவது வாழ்வில் வரும்பொழுதில்

    அகன்றே நம்மைக் கைவிட்டிடும்

    பழியதைப் பெறாமல் இடரிலும்நம்

    பக்க மிருப்பதே நட்பாமே…!

     

    லிமரைக்கூ..

    தீயவழியில் நாம்செல்வதைத் தடுத்து

    நல்வழியில் நமைச்செலுத்தி, நல்லநண்பர்,

    நம்துன்பத்திலும் துணையிருப்பார் அடுத்து…!

     

    கிராமிய பாணியில்…

    நட்பிதுதான் நட்பிதுதான்

    நல்ல நட்பிதுதான்,

    துன்பத்திலயும் தொணயிருக்கும்

    நல்ல நட்பிதுதான்..

     

    கெட்டவழியில நாமபோனா

    கேடுவராமத் தடுத்துநெறுத்தி

    நல்லவழியில நம்ம நடக்கவச்சி,

    கேடுவாற காலத்தில ஓடாம

    கூடயிருந்தே துன்பப்படுறதுதான்

    கொறயில்லாத நட்பாவும்..

     

    அதால

    நட்பிதுதான் நட்பிதுதான்

    நல்ல நட்பிதுதான்,

    துன்பத்திலயும் தொணயிருக்கும்

    நல்ல நட்பிதுதான்…!

     

     

     

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 14

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 14 – ஒழுக்கம் உடைமை

     

    குறள் 131:

    ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
    உயிரினும் ஓம்பப் படும்

    ஒழுக்கம் அத உடையவங்கள ஒசத்தியா காட்டுததால அத நம்ம உயிர விட மேம்பட்டதா நெனைச்சி போற்றுதோம்.

    குறள் 132:

    பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கந் தெரிந்தோம்பித்
    தேரினும் அஃதே துணை

    எதனாலயும் அழிஞ்சி போவாத ஒழுக்கத்த விரும்பி காத்துக்கிடணும். ஏம்னா எல்லா அறத்திலயும் வாழ்க்கைக்கு தொணையா நிக்குதது ஒழுக்கம் மட்டுந்தான்.

    குறள் 133:

    ஒழுக்க முடைமை குடிமை இழுக்கம்
    இழிந்த பிறப்பாய் விடும்

    ஒழுக்கம் ஒடையவரா வாழுதது தான் ஒசந்த குடிப்பிறப்புக்கு பெருமை. ஒழுக்கம் தவறினவங்கல்லாம் இழிந்த குடில பொறந்ததாவே நெனைக்கப்படுவாங்க.

    குறள் 134:

    மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
    பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்

    பார்ப்பான் தான் கத்துகிட்ட வேதத்த மறந்தாக்கூட பொறவு இன்னொருக்க படிச்சிக்கிடலாம். ஆனா அவன் பொறந்த ஒசந்த குலத்துக்குண்டான ஒழுக்கத்திலேந்து பிசகினாம்னா குலத்திலயும் தாழ்ந்துட்டதாவே நெனைப்பாங்க.

    குறள் 135:

    அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன் றில்லை
    ஒழுக்க மிலான்கண் உயர்வு

    பொறாமைல புழுங்குதவனுக்கு செல்வம் இல்லாம போகுதது போல ஒழுக்கம் இல்லாதவனுக்கு ஒசந்த வாழ்க்க இல்லாம போவும்.

    குறள் 136:

    ஒழுக்கத்தி னொல்கார் உரவோர் இழுக்கத்தின்
    ஏதம் படுபாக் கறிந்து

    ஒழுக்கம் தவறினா குத்தம் கொற உண்டாவும்னு அறிஞ்சி நெஞ்சுறுதி இருக்க படிச்ச பெரியவங்க எத்தன சங்கடம் வந்தாலும் ஒழுக்கமா நடந்துகிடுவாங்க.

    குறள் 137:

    ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை இழுக்கத்தின்
    எய்துவ ரெய்தாப் பழி

    ஒழுக்கத்தினால ஒருதங்களுக்கு ஒசத்தி உண்டாவும். ஒழுக்கம் இல்லாதாவங்கள வேண்டாத பழி பாவம் அண்டும்.

    குறள் 138:

    நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கந் தீயொழுக்கம்
    என்றும் இடும்பை தரும்

    நல்லொழுக்கம் சந்தோசமா நல்லா வாழுததுக்கு தொணையா நிக்கும். தீயொழுக்கம் எப்பமும் தீராத துன்பத்த மட்டுமே கொடுக்கும்.

    குறள் 139:

    ஒழுக்க முடையவர்க் கொல்லாவே தீய
    வழுக்கியும் வாயாற் சொலல்

    மறதியால கூட தீய சொல்ல தங்க வாயால சொல்லுதது ஒழுக்கம் ஒடையவங்களால ஏலாது.

    குறள் 140:

    உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றுங்
    கல்லா ரறிவிலா தார்

    ஒலகத்து ஒசந்தவங்க ஏத்துக்கிட்ட ஒழுக்கம் ங்குத கொணத்தோட வாழ கத்துக்கிடாதவங்க எத்தன படிச்சிருந்தாலும் புத்தியில்லாதவங்க தான்.

    ______________________________________

    கட்டுரையாளரைப் பற்றி

    இயற்பெயர் –  பத்மா ஸ்ரீதர்
    புனைப் பெயர் – நாங்குநேரி வாசஸ்ரீ
    தமிழார்வம் கொண்ட இல்லத்தரசி. முன்னாள் ஆசிரியை.
    கதைகள், கவிதைகள் எழுதுவதில் விருப்பம் அதிகம்.
    இதுவரை எழுதிய தளங்கள் : சிறுகதைகள்.காம், எழுத்து.காம், ப்ரதிலிபி.காம்

    Share