படக்கவிதைப் போட்டி – 202
அன்பிற்கினிய நண்பர்களே!
வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?
ராமலக்ஷ்மி எடுத்த இந்தப் படத்தை, சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (02.03.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.
ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்
வளர்ச்சி…
இளமையின் வேகம் கடவுள்களே
இல்லை யென்று சொல்லவைத்தது,
வளர்ந்து பிள்ளைகள் வேலைக்கென
வேறிடம் பார்த்துச் சென்றபின்னே
தளர்வுடன் உடல்வலு குறைந்தபோது
தனிமை முதுமையில் வந்ததுவே,
வளர்ந்தது பற்று தெய்வத்திடம்
வந்து விட்டார் கோவிலுக்கே…!
செண்பக ஜெகதீசன்…
நெறியில் பழுத்த பழம்
நெற்றியில் இழுத்த திருநீற்றுச் சிவம்
நேற்றைய பட்டறிவின் முதிர் நரை
நேரற்ற சுருக்கங்கள் முதுமையின் முக்தி நிலை
அச்சிட்ட தாளில் அப்படி என்ன தெரிகிறது
அழிந்துபோன வாழ்க்கையின் தொலைந்த பக்கங்களா இல்லை
அடுத்து வரும் நாட்களின் இருண்ட பக்கங்களா
அழகானதோ அழுக்கானதோ அதுவும் ஒரு சுகம் தானே
எத்தனை சாதனைகள் எத்தனை சோதனைகள்
எண்ணிக்கையில்லாத வாழ்க்கையின் பின்னல் முடிச்சுகள்
எதிர்பார்ப்பும் ஏமாற்றமுமாய்
எல்லாமும் எப்படியோ அவிழ்க்கப்பட்டு விட்டது
சிரிப்பாகத்தான் இருக்கிறது நுனி மரத்து
சிறு குருத்து மட்டைகளுக்கு
சிவந்து பழுத்த அடி மட்டைகளை பார்க்கும்போது
சீக்கிரமே தாங்களும் பழுத்துவிடுவோம் என அறியாமல்
கடமைகள் முடித்தாகிவிட்டது
கடன்களும் அடைத்தாகிவிட்டது
கடந்த காலத்தில் தேட மறந்த
கடவுள் மட்டுமே துணை கடைசி காலத்தில்
இனி எல்லாம் அவன் தான் அவனே அன்பின் கூடு
இயன்றதைச் செய்தே இன்புற்று வழ
இனியவை தேடி இறைவனை நாடு
இனி இல்லை என்றும் ஒரு கேடு
யாழ். நிலா. பாஸ்கரன்
ஓலப்பாளையம்
கரூர்- 639136
9789739679
basgee@gmail.com
noyyal.blogspot.in