-மேகலா இராமமூர்த்தி

திரு. ஹஃபீஸ் இஸ்ஸாதீன் எடுத்த வர்ணசாலம் காட்டும் இவ் எழிற்படத்தை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து படக்கவிதைப் போட்டி 201க்கு வழங்கியிருக்கிறார் திருமதி. சாந்தி மாரியப்பன். நிழற்பட நிபுணர்க்கும், அதனைத் தெரிவுசெய்த நங்கைக்கும் என் நன்றி!

வண்ணங்களின் கலவையால் உருவானதே வனப்புமிகு இயற்கை. வண்ணங்களோடு தம் எண்ணங்களையும் பொருத்திப் பார்த்திருக்கின்றது இம் மன்பதை. ஆம்! மங்கலத்தின் அடையாளம் மஞ்சள்; வளமைக்குக் குறியீடு பசுமை; அச்சத்தின் வெளிப்பாடு சிவப்பு; தூய்மைக்குத் துணைநிற்கும் வெண்மை என்று வகைபிரித்து வைத்திருக்கின்றது அது!

வண்ணங்களுக்கு மனித உளவியலில் தாக்கத்தை உண்டாக்கும் தன்மையும் உண்டென்கிறது இன்றைய மருத்துவ அறிவியல்.

இதோ…நீர்த்துளிகளுக்குள் நிழற்படங்களாய் ஒளிரும் இப்பூக்களுக்குப் பாக்கள் புனையப் புறப்பட்டுவிட்டார்கள் நம் வல்லமைக் கவிஞர்கள்! அவர்களை வரவேற்போம்!

***** 

பளிங்குச் சிறைக்குள் ஒளிந்திருக்கும் பாவையோ? ஆதவ ஓவியன் ஆக்கிய அற்புதச் சித்திரமோ? அகந்தை இருளுக்குள் ஒளியாய்த் துலங்கும் மறைபொருளோ? என்று இப்புகைப்படம் குறித்த தன் ஐயங்களை வரிசையாய் வெளிப்படுத்தியிருக்கின்றார் திரு. ஆ. செந்தில் குமார்.

பளிங்குச் சிறைக்குள்ளே அகப்பட்ட பாவை…

பின்புலத்தில் இருக்கின்ற மஞ்சள் வண்ணப் பூவொன்று..
தன் நிறத்தால் அஞ்சனம் தீட்டிய அழகுப் பனித்துளிகள்..
தேன் துளிபோல் உருமாறிக் கண்களுக்கு விருந்தான நிகழ்வு..
வானத்து விண்மீன்கள் தரையிறங்கிப் படைத்த பொற்குமிழ்களாய்..!!

பளிங்குச் சிறைக்குள்ளே அகப்பட்ட..
பாவையாக மஞ்சள் மலர்..!!

வெளியுலகைக் காணுதற்கு மலர்ச்சியுடன்
வர ஆயத்தமாகும் கருக்குழந்தை..!!

தலைகீழாய்த் தொங்கியது மலைத்தொடர்..
தனைத்தாங்கும் இத்தரணியைக் காண..!!

பரப்பு இழுவிசையால் கட்டுண்ட..
பனித்துளிகளின் படை அணிவரிசை..!!

ஆதவனெனும் ஓவியன் ஒளித்தூரிகையால்..
ஆக்கிய அற்புத வண்ணச் சித்திரம்..!!

அகந்தையெனும் கரிய மாயத்திரையுள்ளே..
அறிவாய் ஒளியாய் விளங்கும் மறைபொருள்..!! 

***** 

”நீர்த்துளிகளுக்குள் அழகாய் முகங்காட்டும் மலர்களைப்போல் அயர்வின்றி முயன்றால் முன்னேற்றப் பாதையும் மனத்துக்குள் காட்சியாய் விரியும்” என்று நம்பிக்கையூட்டும் நன்மொழிகளை நவில்கின்றார் திருமிகு. நாங்குநேரி வாசஸ்ரீ.

கடவுள் காட்டிய காட்சி

சோர்ந்துவிடாதே மனிதா
சோகப்படாதே சோம்பலில்லாமல்
தேட விழைந்தால் காணலாம்
தேடிய பொருளைக் கண்ணெதிரே
உன்னால் முடியாதது என
உலகில் எப்போதும் இல்லை ஒன்று.
மனம் இருந்தால்
மார்க்கம் உண்டு
தினமும் அறிவுரை கூறி
திருத்த முயன்ற ஞானி
புரிந்துகொள்ளாமல் மனிதர்கள்
புத்திகெட்டு அலைவதைக்கண்டு
வருத்தமுற்று கடவுளிடம்
வழிகாட்ட வேண்டியதால்
புதுவிதமாய் மனிதனுக்கு
புத்திபுகட்ட கடவுள்
காட்டிய எடுத்துக்காட்டே
காட்சியாய்க் கண்ணெதிரே
வண்ண வண்ண மலர்கள் இங்கே
வரிசையாய் உள்ள துளிகளுக்குள்ளே
திரும்பிப் பார்த்தால் தெரியும் அதன்
தெளிவான முழு உருவம் அதுபோல்
முயற்சித்துப் பார் ஒளிந்துள்ள
முன்னேற்றப்பாதை தெரியும்
கடவுள் சொன்ன வார்த்தைகளைக்
காதால் கேட்டு முயற்சித்தால்
வாழ்க்கை வளமாகும்
வசந்தங்கள் வாடிக்கையாகும்.

 *****

”திரவியம் தேடி தினம் ஓடும் மனிதா…! உதிக்கும் சூரியன்; உதிரும் இலைகள், மூக்குக் கண்ணாடியாய்ப் பனித்துளி; அதிலே முகங்காட்டும் மார்கழிப் பூ என்று தினந்தோறும் நான் நிகழ்த்தும் வர்ணசாலங்களைக் கண்டு இரசித்ததுண்டோ நீ?” என்று இயற்கையன்னையின் சார்பாய் வினாவெழுப்புகின்றார் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ்.

பாடம் புகட்டிய பனித்துளிகள்

உதிக்கும் சூரியன், உலா வரும் நிலா
உதிரும் இலைகள், மலரும் பூக்கள்
கூவும் குயில்கள் என
இயற்கையின் அழகு
அரங்கேறும் தினந்தோறும்
திரவியம் தேடி
தினம் ஓடும் மனிதா
இதை என்றேனும் கண்டு ரசித்ததுண்டோ?
தாயின் மடியில்
உறங்கும் சுகம் தேடி
பூமித்தாயின் மடியில் படர்ந்தாயோ?
நடுங்கும் குளிரில் அவளைக் காத்திட
வெண்போர்வையாய் விழுந்தாயோ?
காலைக் கதிரவன் கைகளாய்க்
கதிர்கள் வந்து உன்னை எழுப்பிட
எழ மறுத்து அழுதாயோ?
பனி உருகி நீராய்க் கரைந்தாயோ?
நித்தம் நிகழும் நிகழ்வுகளைத்
தெள்ளத்தெளிவாய்க் கண்டிட
இயற்கை தந்த மூக்குக்கண்ணாடியோ
இந்தப் பனித் துளிகள்?
பனியில் நனைந்து
பகலவன் கண்டு
மலர்ந்த மார்கழிப் பூவைப்
பனித்துளிக்குள்
படம் பிடித்து வைத்தாயோ?
ஓடும் மனிதா!
ஒரு நிமிடம் நின்று இந்த
ஒளிப்படத்தை கண்டிடு
என்னுள் ஒளிந்திருக்கும்
ஓராயிரம் அழகுகளைக் கண்டு ரசித்திடு!

*****

மென்காலைப் புலர்பொழுது பொன்மஞ்சள் மலர் கொய்து வெண்பனியாம் நூலெடுத்து நெய்த கண்ணாடிச் சித்திரச் சேலையோ இது? என்று இப்புகைப்படக் காட்சியை வி(ந)யக்கிறார் திரு. யாழ். பாஸ்கரன்.

முத்து முத்துப் பனித்துளியில்
முகம் காட்டிச் சிரிக்கும் மலர் இதழ்களை
முத்தமிடத் துடிக்கும் வண்டினங்கள்
நித்தம் நித்தம் தவிக்கிறது

மென் காலைப் புலர் பொழுது
பொன் மஞ்சள் மலர் கொய்து
மின் வெண்பனி நூலெடுத்து நெய்த
கண்ணாடிச் சித்திரச் சேலையோ இது?

கண்கள் மயங்கும் காட்சிப்பிழைதான்
காணக்கிடைக்காத கலை எழிலின் நிலைதான்!
காற்று நுழைந்தால் கலைந்து விடும்
கவனம் சிதைந்தால் கணத்தில் மறைந்துவிடும்

சின்னச் சின்ன நீர்க்குமிழிகளுக்குள்
சித்திரத் தூரிகைக் கொண்டு வரைந்த
சிதைவுறா இயற்கையின் சிறந்த படைப்பு ஒளிச்
சிதறலில் விளைந்த அழகின் சிரிப்பு

விந்தைகள் படைக்கும் இயற்கை ஒரு தீராத விளையாட்டுப் பிள்ளை
விரியட்டும் வியப்பின் எல்லை இந்த
விடியலின் விடுகதை அழகை
விழி பருகி மதி மயங்காதார் யார் ஒருவர் உண்டோ?

*****

வண்ண மலர்களுக்கும் அவற்றைத் தாங்கிநிற்கும் பனித்துளிகளுக்கும் தம் எண்ணத் தூரிகைகொண்டு சொல்லோவியம் தீட்டியிருக்கும் பெருமக்களுக்கு என் பாராட்டுக்கள்!

இவ்வாரத்தின் சிறந்த கவிதை இனி…

நிரந்தரமா…?

தற்காலிகத் தஞ்சமாய்க்
கிளையில் தொங்கும்
நீர்த்துளிகள்…

கிடைத்த தருணத்தை
விடாத
மஞ்சள் மலர்கள்,
முகம் பார்க்கின்றன
நீர்த்துளிக் கண்ணாடியில்-
தற்காலிக இலவசங்களால்
தடம்மாறும் மனிதன்போல்!

சுடு கதிர்கள் காட்டிச்
சூரியன் வருகிறான்,
கதை முடிக்க…

நிரந்தரத்தின் முன்
தற்காலிகங்கள்
நிலைகெட்டுப் போவதுதான்
இயற்கையோ…?!

”தற்காலிகத் தஞ்சமாய்க் கிளையில் தொங்கும் நீர்த்துளிகளில் முகம்பார்க்கும் மலர்களைப் போல், தற்காலிக இலவசங்கள்பால் வசப்பட்டு நிலைகெட்டுப்போகும் மாந்தனே! என்றுணர்வாய் நீ நிரந்தரத்தின் மகத்துவத்தை?” என்ற தன் வருத்தத்தைப் பாவில் பதிவுசெய்திருக்கும், திரு. செண்பக ஜெகதீசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *