நலம்… நலமறிய ஆவல்…. (147)
-நிர்மலா ராகவன்
மதிப்பீடுகள்
`எதிர்வீட்டில் என்ன, இப்படி கண்ணில் அறைகிறமாதிரி சுவருக்கு வண்ணம் பூசியிருக்கிறார்களே!’
`இவ்வளவு குண்டாக இருக்கிறாள்! இவள் தினமும் உடுத்துவதோ கெட்டிச்சரிகைபோட்ட பட்டுப்புடவைதான்! நன்றாகவா இருக்கிறது?’
ஒருவரை அறிமுகப்படுத்தினால், மேலும் கீழுமாகப் பார்த்து அவரை எடைபோடுவர் சிலர் — நம் ஆடையணிகள் நம் குணத்தை அப்படியே பறைசாற்றிவிடுவதுபோல்!
அவன் என்ன அப்படி, இவள் என்ன இப்படி!
பிறர் செய்வதில் தனக்கு என்னென்ன பிடிக்கவில்லை என்று ஆராய்ந்து, அதை வெளிப்படையாகக் கூறுவது சராசரி மனிதனின் குணம்.
ஏன் மனிதனுக்கு இப்படி ஒரு குணம்?
தன்னைப்பற்றி உயர்வாக எண்ணுகிறான், அல்லது தன் குறைகளைப் பிறர் அறிவதற்குமுன் தான் முந்திக்கொள்ளவேண்டும் என்ற துடிப்பு.
எப்போதும் பிறரைக் குறைவாக மதிப்பிடுபவர்கள் தம்மையே பிறர் குறைகூறினால் கொதித்து எழுவார்கள்.
நாம் ஒருவரிடம் என்னென்ன குணங்கள் பிடிக்கவில்லை என்கிறோமோ, அவையே நம்மிடமும் இருக்கிறது என்பதுதான் விந்தை.
`கண்ணில் அறைகிறமாதிரி’ வீட்டின் வெளியே வண்ணம் பூச அந்த வீட்டுக்காரர் மூன்று இடங்களில் வேலை பார்த்து, நிறையச் செலவழித்து, தன் திருப்திக்கேற்ப அமைத்திருக்கிறார். அதைக் குற்றம் கூறப் பிறருக்கு என்ன தகுதி?
பட்டுப்புடவைகளையே உடுத்துபவளுக்கு அதை வாங்க வசதி இருக்கிறது. அவளுக்குப் பிடித்ததைச் செய்கிறாள். `உடலை விமானப் பணிப்பெண்போல் ஆக்கிக்கொண்டு பிறகு அம்மாதிரியான புடவைகள் வாங்கலாம் அல்லது, இதற்காகவே இன்னொரு பிறவி எடுக்கலாம்,’ என்ற நியாயமான ஆசைகளைத் தள்ளிப்போட முடியுமா? பிறர் தன்னை ஏற்கும்படி அவள் எதற்காக நடக்க வேண்டும்?
பிடிக்காதவர்களைப்பற்றியோ அல்லது பொறாமையாலோ, சிலர் அவதூறாகப் பேசுவது முற்றிலும் உண்மையாக இருக்காது.
`நான் செய்வதுதான் சரி!’ என்று சாதிப்பவர்களால் பிறரைப் புரிந்துகொள்ள முடியாது. இவர்கள் சில வெற்றிகளை அடைந்திருக்கலாம். அதனால் மட்டும் அவர்கள் எண்ணங்கள் எல்லாமே சரியாகிவிடுமா?
`ஒருவர் தன் மனதைப் பாதித்தவைகளைப்பற்றிக் கூறுவதை எவராலும் புரிந்துகொள்ளமுடியாது – அவர்களும் அதேபோல் ஒன்றை அனுபவித்திருந்தாலே ஒழிய,’ என்பவரின் கதையைக் கேட்போமா?
கோபாலனின் காதல் திருமணம் சில ஆண்டுகளுக்குள் அவர் விவாகரத்து கேட்கும் அளவுக்கு முறிந்துபோயிற்று. தான் எவ்வளவு அனுசரணையாக இருந்தாலும் அதைப் பெரிதாக நினைக்காது, தனது கடந்தகால வாழ்க்கையை ஓயாது குத்திக்காட்டியவளுடன் வாழ்நாள் முழுவதும் இணைந்து வாழ்வது இயலாத காரியம் என்று தோன்றிப்போனதுதான் காரணம். பலரிடம் அதுபற்றிச் சொல்லி, தன் மனப்புண்ணுக்கு மருந்து தேடினார்.
“ஒருத்தருக்குமே புரியவில்லை. `அப்படியா?’ என்று பட்டுக்கொள்ளாது கேட்டுவிட்டுப் போய்விடுகிறார்கள். இல்லையேல், அறிவுரை கூற ஆரம்பித்துவிடுகிறார்கள்,” என்று அரற்றினார் என்னிடம்.
ஒருவர் மனம் நொந்து நம்மிடம் பேச ஆரம்பிக்கும்போது, அவருக்கு அந்த சமாசாரம் எவ்வளவு முக்கியம் என்று புரிந்து வாய் திறவாது கேட்டுக்கொள்ள வேண்டும்.
நம் முகபாவத்திலிருந்தே, `இவளுக்கு நாம் சொல்ல வருவது புரியும்,’ என்ற நம்பிக்கை வர, மேற்கொண்டு பேசுவார்கள். சற்றே அமைதி பெறவும் வழியிருக்கிறது.
ஆனால், பிறர் பேசிக்கொண்டிருக்கும்போதே, `அடுத்து நாம் என்ன சொல்லலாம்?’ என்றுதானே யோசனை போகிறது!
கோபாலன் ஆறுதலை நாடினார் – மதுவில்.
இப்போது உலகம் அவரைப் பழித்தது: `இந்தக் குடிகாரனுடன் எவளால் வாழமுடியும்?’
அவர் அப்படி நடக்கும் சூழ்நிலை ஏன் அமைந்தது என்று யாருமே யோசிக்கவில்லை.
பிறரைப் புரிந்துகொண்டு, அவர்களது கண்ணோட்டத்தில் பார்த்தால் எதுவும் தவறாகத் தோன்றாது.
கதை
தாய்லாந்தில் ஓர் உணவுக்கடையில் நானும் என் மகளும் உட்கார்ந்திருந்தோம். ஒரு பெண் குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கும் ஒலி கேட்டு, நான் திரும்பிப் பார்த்தேன்.
சற்றுத் தொலைவில் பதினைந்து வயது மதிக்கத்தக்க அந்நாட்டுப் பெண் ஒருத்தியும், அவளைவிட முதியவர்களான இரு வெள்ளைக்காரர்களும் அமர்ந்திருந்தனர். அவர்கள் என்ன சொன்னாலும் அவள் சிரித்துக்கொண்டிருந்தாள்.
`இவ்வளவு சிறிய பெண் இத்தொழிலைப்போய் செய்கிறாளே!’ என்ற அதிர்ச்சி எழுந்தது.
என் கண்களை சந்தித்த அப்பெண்ணின் முகத்தில் சிரிப்பு மறைந்தது. அவமானம் எழ, தலை குனிந்தது.
இந்தச் சிறுமியை நோகடித்துவிட்டோமே என்று என்னையே நான் கடிந்துகொண்டேன்.
அதன்பிறகு என் மகள் என்னுடன் சண்டை பிடித்தாள்: “ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்திருப்பாள். விலைமாதுவாக இருப்பது அவள் தேர்ந்தெடுத்த தொழில். அவள் சம்பாதித்து, குடும்பத்தைக் காக்கவேண்டிய நிலை இருக்கலாம். இந்த தொழிலைச் செய்பவர்கள் சில முறையாவது பாலியல் ரீதியாக வன்முறைக்கு ஆளாகி இருப்பார்கள். நம் நிலையிலிருந்து அவர்களை எடைபோடக்கூடாது!”
எவ்வளவு உண்மை!
அன்று நான் ஒரு நல்ல பாடம் கற்றேன்.
கதை
கோலாலம்பூரில் நடந்த ஒரு குறும்பட நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன். பெண்ணைப்போல் ஆடையணிகள் அணிந்திருந்த இளைஞன் வரவேற்பாளராக அமர்ந்திருந்தான்.
முதலில் நான் அவனைச் சரியாகக் கவனிக்கவில்லை. அவன் கொடுத்த காகிதத்தைப் பார்த்ததும் எந்த இடத்திலிருந்து வந்திருக்கிறான் என்று புரிய, சட்டென தலையை நிமிர்த்தி அவனைப் பார்த்தேன். அடையாளக்கார்டு மறுக்கப்பட்ட நிலையில், வயிறு பிழைக்க வேறு எந்தத் தொழிலுக்கும் போகமுடியாத அவலம். எங்களிருவர் கண்களும் சந்தித்தன. அவனை அங்கீகரிக்கும் விதத்தில் லேசாகப் புன்னகைத்துவிட்டு அங்கிருந்து அகன்றேன்.
நான் என் இருக்கையில் அமர்ந்தபின், யதேச்சையாகத் திரும்ப, “ஹாய்!” என்று முகமெல்லாம் சிரிப்பாக முகமன் கூறினான் அதே இளைஞன்.
நான் கையை உயர்த்தி, அதையே திரும்பக் கூறினேன்.
தன் பக்கத்தில் இருந்தவளிடம் (இருந்தவனிடம்?), “என் ஃப்ரெண்ட்!” என்று பெருமையாகச் சொல்லிக்கொண்டான்.
மற்றவன் என்னை ஏக்கத்துடன் பார்க்க, “Hello! How are you?” என்று அவனுக்கும் சற்று உரக்கவே முகமன் கூறினேன்.
கையை உயர்த்தி, ஆர்ப்பாட்டமாக `ஹலோ’ சொல்வது என் வழக்கமில்லை. இருந்தாலும், இவர்களுக்குப் பிறர் தம்மை ஏற்பது எவ்வளவு முக்கியம் என்று புரிந்திருந்தது. அவனுடைய முகத்தில் அப்போது தோன்றிய மகிழ்ச்சி!
எவரையும் அவர் இருப்பதுபோலவே ஏற்றால் வாழ்க்கை அமைதியாக இருக்கும்.
தன்னையே பிடித்துப்போனவர்கள் பிறரைத் தாழ்வாக எடைபோட மாட்டார்கள். நாம் இருப்பதுபோலவே நம்மை நாமே ஏற்க என்ன தடை!