Blog
-
இப்படியும் ஆசிரியர்கள்!
-நிர்மலா ராகவன்
நலம்.. நலமறிய ஆவல் (149)

அள்ள அள்ளக் குறையாதது
கல்வியும் அனுபவங்களும் நம் அறிவைப் பெருக்குகின்றன. அறிவு சக்தியை அளிக்கிறது.
`செல்வம்’ என்று கல்வி குறிப்பிடப்பட்டாலும், இந்த இரண்டிற்கும் இடையே ஒரு வேற்றுமை: அள்ள அள்ளக் குறையாதது கல்வி.
ஆசிரியர்கள் எவ்வளவு புத்திசாலிகள்!
சிறு வயதில், `இந்த ஆசிரியர்கள்தான் எவ்வளவு புத்திசாலிகள்! எத்தனை விஷயங்களைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள்!’ என்று ஒருவரிடம் ஒருவர் கூறி, பிரமித்து இருப்போம்.
(இத்தொழிலுக்கு வந்தபின்தான் தெரிந்தது, ஒவ்வொரு நாளும் கற்பிக்கும் பாடத்தை முதல்நாள் கண்விழித்து, நாமே கற்க வேண்டியிருக்கும் என்பது! பல வருடங்கள் தொடர்ந்து ஒரே பாடத்தை கற்பித்தால் மட்டும்தான் அது நினைவில் நிற்கும். ஒரு விஷயத்தை நன்றாகக் கற்றுக்கொண்டால்தானே அப்படிப் பெற்ற அறிவைப் பிறருக்கு வழங்க முடியும்?)
என்னதான் தம் வாயிலிருந்து உதிரும் ஒவ்வொரு வார்த்தையையும் பிறர் உற்றுக் கவனிப்பது ஆசிரியர்களின் பெருமையைக் கூட்டுகிறது என்றாலும், அவர்கள் மேலானவர்கள் என்றாகாது. தாம் பெற்ற அறிவைப் பிறருடன் பகிர்ந்துகொள்கிறார்கள். அவ்வளவுதான். ஆசிரியருக்குத் தெரிந்ததெல்லாம் ஒரு மாணவனுக்கும் தெரிந்திருந்தால், அவன் ஏன் கற்க வருகிறான்?
ஆசிரியர்கள் என்ன கற்றுக்கொடுத்தார்கள் என்பது எவர் நினைவிலும் வெகு காலம் தங்குவதில்லை. ஆனால், அவர்களது பண்பும் அணுகுமுறையும் மறக்கவே மறக்காது.
கதை
என் சக ஆசிரியர் ஒருவர் பள்ளியில் நடந்த ஒரு கண்காட்சிக்கு மாணவர்களை அதிசயிக்க வைக்கவேண்டுமென்று மிகுந்த பிரயாசை எடுத்துக்கொண்டார்.
அவரது முயற்சியைப் பார்த்துவிட்டு, என்னிடம் ஓடி வந்தார்கள் சில மாணவர்கள். “டீச்சர்! ஸார் ஒரு ராக்கெட் பண்ணியிருக்கார். அது அவ்வளவு ஜோரா மேலே போச்சு, தெரியுமா?”
அவர்களுடைய ஆர்வத்தை ரசித்து, “அவரிடமிருந்து நீங்களும் கற்றுக்கொள்ளலாமே!” என்றேன்.
அவர்கள் முகம் உடனே வாடியது. “நாங்கள் கேட்டோம். சொல்லிக்கொடுக்க மறுத்துவிட்டார்!”
தான் மாணவர்களைவிட உயர்வு என்று காட்டிக்கொள்ள நினைத்திருக்கிறார் அந்த ஆசிரியர்!
அவருக்கு நேர் எதிரிடை என் இசை குரு, எஸ்.கல்யாணராமன்.
ஒரு நாள் பாட்டு சொல்லிக்கொடுக்கையில், ஏதோ ஒரு ராகத்தில் மிக வேகமாக, அவருக்கே உரிய பிருகாக்களுடன் ஆலாபனை செய்து காட்டியபோது, அயர்ந்துபோனேன். உடல் பின்னோக்கிப் போயிற்று. `நம்மால் முடியுமா?’ என்ற பயம்தான் எழுந்தது.
அவர் முகம் பெருமையுடன் விகசிக்கவில்லை. “உன்னை பிரமிக்க வைக்க நான் இப்படிப் பாடிக் காட்டவில்லை. நீயும் இப்படிப் பாடவேண்டும் என்பதற்காகத்தான்! கற்றுக்கொள்!” என்று சீறினார்.
நல்ல ஆசிரியரானவர் மாணவர்கள் தம்மை மெச்ச வேண்டும் என்று எதையும் செய்யமாட்டார். மாணவர்களின் அறிவைப் பெருக்குவதுதான் அவரது லட்சியமாக அமையும்.
இந்த நோக்குடன் அவரவருக்குத் தெரிந்த முறையைப் பயன்படுத்துவார்கள். (முன்பெல்லாம் பெண்களைத் திட்டியோ, ஆண்பிள்ளைகளானால் அடித்தாலோதான் விரைவாகக் கற்பார்கள் என்று கருதப்பட்டது. ஏற்கெனவே பயந்த சுபாவம் உடைய ஒரு பையனுக்கு வன்முறையால் படித்ததும் மறந்துவிடும் என்பதை அவர்கள் ஏனோ உணரவில்லை).
பிறருக்குக் கற்பிப்பது என்றால் நம் நண்பர்களிடையே பகிர்வதாகவும் இருக்கலாம். இப்படி நினைத்துத்தான் நான் பலருக்கும் என்னாலான உதவி செய்வேன். இது பலருக்கும் புரிவதில்லை.
கதை
பூகோள ஆசிரியையான ரோஸ் சான் என்னிடம் அடிக்கடி இந்தியாவைப்பற்றிய சந்தேகம் கேட்பாள். எனக்குத் தெரிந்ததை விளக்குவேன். நான் சொல்லச் சொல்லத் துருவுவாள்.
ஒரு முறை, ஏதோ புத்தகத்தில் எழுதியிருந்ததைப்பற்றி அவள் யாரிடமோ கூறிக்கொண்டிருந்தது என் காதில் விழுந்தது.
தெரியாத்தனமாக, “அந்த புத்தகத்தைக் கொண்டுவந்து காட்டுகிறாயா?” என்று நான் கேட்டுவிட்டேன்.
சற்றும் யோசியாது, “அது மூன்றே வெள்ளிதான்!” என்றாள் ஏளனமாக. `நீயே வாங்கிக்கொள்ள என்ன கேடு!’ என்ற அர்த்தம் அதில் பொதிந்திருந்தது.
நொந்துபோனேன்.
சுமார் ஓராண்டு காலமாக நான் கூறிவந்ததை பல புத்தகங்களைத் தேடிப் படித்து அவள் தெரிந்து கொண்டிருக்கலாம். சுலபமான வழி என்று என்னை அணுகியிருக்கிறாள்!
`இது என்னுடையது. உன்னுடையதையும் எனக்குக் கொடு!’ என்பதுபோல் சுயநலத்துடன் வாழ்பவர்கள் வாழ்க்கையில் வேகமாக உயரக்கூடும். இருப்பினும், எப்போதும் பிறரை மிஞ்சவேண்டும், அதனால் நம் அறிவைப் பகிர்ந்துகொள்ளக்கூடாது என்று நினைப்பவர்களுக்கு உண்மையான நண்பர்கள் வாய்க்கமாட்டார்கள். மகிழ்ச்சியும் கிட்டாது.
சில நாட்களுக்குப்பின், என்னிடம் ஏதோ சந்தேகம் கேட்க வந்தாள் ரோஸ் சான்.
“எனக்குத் தெரியாது!” என்றேன், விறைப்பாக.
வெவ்வேறு விதமாகக் கேட்டுப்பார்த்தாள். நான் பிடிகொடுக்கவில்லை.
எல்லாருக்கும் உதவி செய்து நம் சக்தியைச் செலவழிப்பதைவிட தமக்குத்தாமே உதவி செய்துகொள்ள இயலாதவர்களுக்கு மட்டும் உதவி செய்தால் — அவர்கள் நன்றியுடன் இருக்கிறார்களோ, இல்லையோ — பலனடைவார்களே என்று தோன்றிப்போயிற்று.
எழுத்தாளருக்கும் ஆசிரியருக்கும் இடையே சில ஒற்றுமைகள் இருக்கின்றன:
1 எல்லாவற்றையும் விளக்கிக்கொண்டே இருந்தால், அவர் சுமாரானவர்தான். இப்படி எழுதுவதை ஆங்கிலத்தில், “Telling” என்பார்கள். மாணவரோ, வாசகரோ, சிலவற்றை அவர் தாமே புரிந்துகொள்ள வழிவகுக்க வேண்டும்.
2 `இப்படிச் செய்யுங்கள்!’ என்று அதிகாரம் செய்பவர் மிகச் சுமார். (ஒரு கதையில், `நீங்களாவது இதிலிருந்து நீதி கற்றுக்கொள்ளுங்கள்!’ என்று எழுதுவது சிறுபிள்ளைகளுக்கான பள்ளிக்கூடப் புத்தகத்தில் வேண்டுமானால் பொருத்தமாக இருக்கலாம். பொழுதுபோக்காக நாம் படிப்பவைகளில் இம்முறை அலுப்பைத்தான் தரும்).
3 `இதைப்பற்றி மேலும் அறியவேண்டும்!’ என்ற உந்துதலை அளிப்பவர் சிறந்தவர். ஆசிரியர் அருகில் இல்லாவிட்டாலும். அவர் மாணவனுடனேயே போட்டியா!
கற்றுக்கொடுத்ததை சிறப்பாகச் செய்யும் தன்னம்பிக்கையை அளிப்பவர் அவர்.
தட்டிக்கொடுக்கலாமே!
அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும் குடும்பத்திலிருந்து வரும் மாணவனுக்கு கற்றுக்கொடுப்பது எளிது. வயதில் மூத்தவர்களிடம் மரியாதையாக நடப்பது அவனுக்கு இளம்வயதிலேயே போதிக்கப்பட்டிருக்கிறது. அவனிடம் பெற்றோர் காட்டிய அனுசரணையான போக்கால் அவனும் அப்படியே நடக்கிறான்.
அவனுக்கு நேர் எதிரிடையான பின்னணியிலிருந்து வரும் மாணவர்களைத் திட்டினாலோ, அடித்தாலோ அவர்களை நல்வழிப்படுத்த முடியாது. ஏனெனில், அது அவர்களுக்குப் பழகிப்போன சமாசாரம். நிலைமை இன்னும் மோசமாகத்தான் ஆகும்.
அன்பும் கண்டிப்பும் காட்டினால், `இந்த ஆசிரியருக்குத்தான் நம்மேல்தான் எவ்வளவு அக்கறை!’ என்று நெகிழ்ந்து போவார்கள்.
மட்டம் தட்டுவதைவிட தட்டிக்கொடுப்பது இருதரப்பினருக்கும் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் ஊட்டவல்லது.
போட்டி மனப்பான்மை
விழாக்காலங்களில், ஒரே நாளில் இரண்டு அல்லது மூன்று நாட்டியப்பள்ளிகள் கலந்துகொள்ள நேரும்போது, `என் மாணவிகள்தாம் முதலில் ஆடவேண்டும்!’ என்று ஏற்பாட்டாளர்களை வற்புறுத்தி, சண்டையும் பிடிக்கும் ஆசிரியைகளை அடிக்கடி பார்க்கிறேன்.
பெற்றோர்களிடமிருந்தும் ஆசிரியர்களிடமிருந்தும்தான் இளவயதினர் தம் பண்பைக் கற்கிறார்கள். `நம்மை முன்னிருத்திக்கொள்ள வேண்டும்!’ என்பது ஆசிரியர்கள் மாணவிகளுக்கு அளிக்கும் தவறான பாடம். மாணவிகளும் கர்வத்துடன் நடக்கத் தலைப்படுகிறார்கள்.
“என் மாணவன் என்னைவிட நன்றாக வாசித்துவிட்டான். அவனை இன்னொருமுறை எல்லாவற்றையும் வாசிக்கவைத்தேன்!” ஓர் இசைப்பதிவுக்குப்பின் ஆசிரியர் ஒருவர் என்னிடம் அதிர்ச்சியுடன் கூறினார்.
மாணவனுடனேயே போட்டியா!
சீடன் குருவை மிஞ்சினால் பெருமை அடைந்து பாராட்ட வேண்டாமா?
இசை, நாட்டியம் போன்ற நுண்கலைகள் இறைவனைத் துதிக்கும் வழிகள் என்பதை இப்போது பலரும் உணராமல் போனது காலத்தின் கோலமா?
-
உலகத் தொல்காப்பிய மன்றம் சிறப்புரை & தொல்காப்பியத் தொண்டருக்குப் பாராட்டு விழா
-மு.இளங்கோவன்
புதுச்சேரி உலகத் தொல்காப்பிய மன்றத்தின் சார்பில் சிறப்புரையும், தொல்காப்பியத் தொண்டருக்குப் பாராட்டு விழாவும் புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் (09.03.2019) நடைபெற்றது. ஆய்வறிஞர் கு. சிவமணி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதுவைப் பல்கலைக்கழகத்தின் முன்னைப் பேராசிரியர் எஸ். ஆரோக்கியநாதன் கலந்துகொண்டு மொழியியல் நோக்கில் தொல்காப்பியம் என்ற தலைப்பில் உரையாற்றினார். காரைக்குடி இராமசாமி தமிழ்க் கல்லூரியின் முன்னாள் முதல்வர் தெ.முருகசாமி சிலப்பதிகாரத்தில் தொல்காப்பியப் பதிவுகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

புதுச்சேரி அரசின் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் சிறப்பு விருந்தினராக நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அமெரிக்காவிலிருந்து வருகைபுரிந்த அறிவியல் அறிஞர் நா.க.நிதி அவர்களுக்குத் தொல்காப்பியத் தொண்டர் என்ற விருதினை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் வழங்கிப் பாராட்டிப் பேசினார்.
தூ. சடகோபன் வரவேற்புரையாற்றினார். முனைவர் ப.பத்மநாபன் அறிமுகவுரையாற்றினார். முனைவர் மு.இளங்கோவன் நோக்கவுரையாற்றினார். முனைவர் இரா. கோவலன் நன்றியுரையாற்றினார். புதுச்சேரியில் வாழும் தமிழறிஞர்கள் திரளாக நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

படத்தில்: புதுவை அரசின் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம், அமெரிக்கா நாட்டில் வாழும் அறிவியல் அறிஞர் நா.க.நிதிக்குத் தொல்காப்பியத் தொண்டர் என்ற விருது வழங்கிப் பாராட்டுதல்.அருகில் பேராசிரியர்கள் மு.இளங்கோவன், எஸ்.ஆரோக்கியநாதன், கு.சிவமணி.

-
ஸ்பேஸ்X ராக்கெட் ஏவிய விண்சிமிழ் முதன்முதல் அகில தேச விண்வெளி நிலையச் சந்திப்பு நிகழ்த்தி பாதுகாப்பாய் புவிக்கு மீண்டது
–சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng. (Nuclear), கனடாஸ்பேஸ்-X விண்சிமிழ் பாதுகாப்பாய் கடல் மீது இறங்கியது
4. https://www.space.com/nasa-spacex-clear-crew-dragon-for-first-launch.html
5. https://nkkn37.wordpress.com/2019/02/28/crew-dragon-demo-1-mission-by-spacex/
6. https://phys.org/news/2019-03-dragon-capsule-successfully-rocket-spacex.html#nRlv
6(a) https://spacenews.com/nasa-gives-go-ahead-for-spacex-commercial-crew-test-flight/
7. https://nkkn37.wordpress.com/2019/02/28/crew-dragon-demo-1-mission-by-spacex/
10.http://www.spacedaily.com/reports/SpaceX_launches_Dragon_test_capsule_to_ISS_999.html
12. https://www.bbc.com/news/science-environment-47453951
13. https://www.bbc.com/news/science-environment-47477617
14. https://www.spacex.com/news/2013/03/31/reusability-key-making-human-life-multi-planetary
ஸ்பேஸ் X டிராகன் விண்சிமிழ் முதன்முதல் விண் சந்திப்பு நிகழ்த்தி புவிக்கு மீண்டது.
2019 மார்ச் 8 இல் அமெரிக்காவின் முதல் தனித்துறை விண்சிமிழ் முதன்முதல் அகில தேச நிலையச் சந்திப்பை [ இணைப்பு + நீக்கம் ] [Space Station Docking] நிகழ்த்தி, புவிச் சூழ்வெளி வெப்பத்தைக் கடந்து, மீள் நுழைவு விபத்தின்றிப் பாது காப்பாய் அடலாண்டிக் கடலில் நான்கு பாராச்சூட் குடைகள் தாங்க வந்து இறங்கியது. இம்முயற்சி அமெரிக்கத் தனியார் துறை நுட்பச் செல்வந்தர் இலான் மஸ்க் [Elon Musk] புரிந்த பெரும் விண்வெளி வெற்றிச் சாதனையாகக் கருதப் படுகிறது. மனிதரற்ற விண்சிமிழில் நிலையத்துக்கு வேண்டிய சாதனங்கள், உணவுப் பண்டங்கள் மட்டுமே இருந்தன. புவி நோக்கி மீளும் போது, ஒலி மிஞ்சிய வேகத்தில் இறங்கிய விண்சிமிழுக்குப் போதிய வெப்பக் கவசம் பூசப்பட்டதால் “மீள் நுழைவு” [Re-Entry] இயக்கத்தில் விபத்து எதுவும் நேரவில்லை. டிராகன் விண்சிமிழ் பிளாரிடாவிலிருந்து 270 மைல் [450 கி.மீ] தூரத்தில் கடல் மீது மெதுவாக இறங்கியது.
டிராகன் விண்சிமிழ் விளக்கம்
2011 ஆண்டுவரை அகிலதேச விண்வெளி நிலையச் சந்திப்பு செய்து, விமானிகளையும் உணவுப் பண்டங்களையும் ஏற்றி இறக்கி வந்தவை விண்வெளி மீள்கப்பல்கள் [Space Shuttles]. குறைபாடுள்ள மீள்கப்பல்கள் இரண்டு பழுதடைந்து இருமுறை விபத்துகள் நேர்ந்து பல விமானிகள் உயிரிழந்தார். அதனால் விண்வெளி மீள்கப்பல்கள் ஓய்வு பெற்று நிறுத்தம் அடைந்தன. எட்டு ஆண்டுகள் கழிந்து, இப்போது தனியார் நிறுவனம் இலான் மஸ்க் தலைமையில் ஸ்பேஸ்-X அசுர ராக்கெட் பயிற்சி மூலம் அமெரிக்கா முதன்முதல் அகில்தேச விண்வெளி நிலையச் சந்திப்பு, ரஷ்யன் சோயஸ் ராக்கெட் பயன்பாட்டை நிறுத்தி உள்ளது. ரஷ்யாக்கு ஒருமுறை, ஒருவர் பயணச் சந்திப்புக்கு 80 மில்லியன் டாலர் அமெரிக்கா தரவேண்டும். 2019 ஜூலையில் டிராகன் -2 விண்சிமிழ் இரண்டு அமெரிக்க விமானிகளை [ Robert Behnken & Douglas Hurley ] அகிலதேச விண்வெளி நிலையத்துக்கு ஏந்திச் செல்லும்.
American Astronauts Robert Behnken & Douglas Hurley
Space Shuttle Docking with International Space Station
[ Space Shuttles Shut down in July 2011 ]
Space Shuttle Launches Hubble Telescope
++++++++
அண்டவெளி வேட்கையில் அமெரிக்கத் திட்டங்களின் இரண்டாம் கட்டம்!
முதற் கட்டத்தில் விண்வெளி விமானி ஒருவர் ஓட்டும் மெர்குறித் [Project Mercury] திட்டம், அடுத்து இருவர் இயக்கும் ஜெமினித் [Project Gemini] திட்டம், மூன்றாவது மூவர் செல்லும் அபோலோ [Project Apollo] போன்ற திட்டங்கள் பல வெற்றிகரமாய் நிறைவேறிச் சந்திரன், செவ்வாய், வெள்ளி, வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கோள்களை ஆராய்ந்த பிறகு, நாசா [NASA] விண்வெளிப் படையெடுப்பின் அடுத்த கட்டத்தை ஆரம்பித்தது. இரண்டாம் கட்டத்தில் ஏழு நபர் பயணம் செய்யும் விண்வெளி மீள்கப்பல், கொலம்பியா [Space Shuttle, Columbia] 1970 இல் உதயமாகி, 1977 இல் உருவாகி, 1981 ஏப்ரல் 12 ஆம் தேதி அதைப் பயிற்சிப் பயணத்திற்கு அனுப்பி, புதிய விண்வெளி யுகத்தை நாசா திறந்து வைத்தது! கொலம்பியா மீள்கப்பல் இருபதாம் நூற்றாண்டு உருவாக்கிய ஓர் நூதனப் பறக்கும் வாகனம்! அது ஏவுகணை போல் [Missile] ஏவப்பட்டு, அண்டவெளிச் சிமிழ்போல் [Spacecraft] சுழல்வீதியில் [Orbit] சுற்றி வந்து, இறக்கை முளைத்த ஜெட் விமானம் போல் [Aircraft], தரைதொட்டு இறங்கும் முத்திறம் உடைய, ஓர் ஒப்பில்லா பொறி நுணுக்க யந்திரம்!

மீள்கப்பல் ராக்கெட் முதுகில் ஏற்றப் பட்டு, பூமியின் சுழல்வீதியில் [Earth Orbit] சுற்றி வந்து, பணி முடிந்தபின் பூமிக்குச் சாதாரண ஊர்தி போல் மீளும் ஓர் சுமைதாங்கிக் கப்பல் [Cargo Ship]. மீண்டும் மீண்டும் பயன்படும் விண்வெளிப் பணிகளுக்காகவே, மீள்கப்பல் உருவாகி விருத்தி செய்யப் பட்டது. முதலில் தோன்றிய மெர்குரி, ஜெமினி, அபோலோ ஆகிய விண்சிமிழ்கள் யாவும் ஒருமுறை பயன்படுத்திய பின்பு உபயோகம் இல்லாமல், பின்னர் பொருட் காட்சியகத்தில் சரித்திர நினைவுச் சின்னங்களாய் ஓய்வு பெற்றன!
விண்வெளி மீள்கப்பல் திட்டத்தின் குறிக்கோள்கள்
விண்வெளி மீள்கப்பலின் சுமைதாங்கி அறை மிகவும் அகண்டது! அதில் ஐந்து ஆஃப்ரிக்க யானைகளை ஏற்றிக் கொண்டு விடலாம்! விண்வெளி ஆய்வகத்தைத் [Space Lab] தூக்கிச் செல்வது, அண்டவெளி நிலையத்திற்குப் [Space Station] பண்டங்கள் கொண்டு செல்வது, ஆய்வு செய்யும் பயணிகளை ஏற்றிச் செல்வது, பூமிச் சுழல்வீதியில் சுற்றி வரும் ஹப்பிள் தொலை நோக்கியைச் [Hubble Space Telescope] செப்பனிடுவது அல்லது புதுப்பிப்பது, செயலற்ற துணைக் கோள்களைக் [Satellites] கைப்பற்றிப் பூமிக்குக் கொண்டு வருவது, சுற்றி வரும் துணைக் கோள்களைப் பராமரிப்பது, அண்டவெளி ஆய்வகத்தில் ஆராய்ச்சிகள் நடத்துவது, அரசாங்கப் படைத்துறையின் உளவுப் பணிகளுக்கு [Military Missions] உதவுவது ஆகியவை குறிப்பிடத் தக்கவை.
திட்டப்படிக் கொலம்பியா [Columbia], சாலஞ்சர் [Challenger], டிஸ்கவரி [Discovery], அட்லாண்டிஸ் [Atlantis], என்னும் நான்கு மீள்கப்பல்கள் உருவாக்கப் பட்டு அண்டவெளியில் யாத்திரை செய்து வருகின்றன. 1980-1990 ஆண்டுகளுக் குள் இவை குறைந்தது ஆண்டுக்கு 50 பயணங்கள் வீதம் பணி புரியத் திட்டங்கள்! இவற்றில் சாலஞ்சர் 1986 இல் ஏவுதளத்தில் புறப்பட்டு ஏறும் போது வெடித்து விபத்துக்குள்ளாகி [Challenger Disaster] உள்ளிருந்த ஏழு விண்வெளி நிபுணர்களும் உயிரோடு வெந்து சாம்பலாயினர்! பிறகு சால்ஞ்சர் இடத்தைப் பூர்த்தி செய்ய எண்டவர் [Endeavour] மீள்கப்பல் அமைக்கப் பட்டது.விண்வெளி மீள்கப்பல் அமைப்பாடு சமயத்தில் அமெரிக்காவும், ரஷ்யாவும் பொறியியற் துறை நுணுக்கங்களைப் பரிமாறிக் கொண்டன என்பது மெச்சத் தகுந்த நிகழ்ச்சி! ரஷ்யாவில் 1978 இல் உதயமாகி, 1987 இல் மனிதரற்றுச் சுயக் கட்டுப்பாட்டில் ஏவப்பட்டு, 155 மைல் உச்சி வீதியில் சுற்றி 3:25 மணி நேரம் பயிற்சிப் பயணம் செய்து, வெற்றிகரமாய்ப் பூமிக்கு மீண்ட புரான் விண்வெளி மீள்கப்பல் [Buran Space Shuttle] ஏதோ ஒரு காரணத்தால் 1993 இல் தடைபட்டுப் பிறகு பயன்படுத்தப் படாமல் போனது! ஆனால் அமெரிக்கா தான் முதன் முதல் ஆக்கிய கொலம்பியா மீள்கப்பலை, ரஷ்யாவின் புரான் மீள்கப்பலின் பிரதியாக உருவாக்கிச் சில வேறுபாடுகளுடன் மாற்றி அமைத்தது! ஐந்து அண்டவெளி மீள் கப்பல்கள் தயாரிக்கப்பட்டு அவற்றில் இரண்டு விபத்துக்குள்ளாகி, அனைத்து விமானிகளும் இறந்தனர். அவைகள் 1981 முதல் 2011 வரை 135 விண்வெளிக் குறிப்பணிகள் புரிந்து, மூன்று நிரந்தரமாய் ஓய்வெடுத்தன. முக்கியப் பணிகள் : ஹப்பிள் தொலைநோக்கி ஏவியது; பல துணைக்கோள்கள் ஏவியது; அகில நாட்டு விண்வெளி நிலையத்துக்குச் சாதனங்கள் கொண்டு சென்றது குறிப்பிடத்தக்கவை.
விண்வெளி மீள்கப்பல் கட்டமைப்பின் முக்கிய உறுப்புக்கள்
கொலம்பியா மீள்கப்பல் 9 பில்லியன் டாலர் செலவில் ராக்வெல் கார்பொரேசன், பாம்டேல், காலிஃபோர்னியா [Rockwell Corporation, Palmdale, California] தொழிற் கூடத்தில் 1978 ஆண்டு உருவான விண்வெளி யந்திரம்! ஆரம்பத் தளச் சோதனைகள் முடிந்தபின், டிரைடென் பறப்பாய்வு மையகத்தில் [Dryden Flight Research Centre, Edwards California] அதன் பறப்பு முறைகள் யாவும் பயிற்சி செய்யப் பட்டன. ஏவு தளத்தில் நின்ற 187 அடி உயரமும், 2000 டன் எடையும் கொண்ட கூட்டமைப்பில் [Space Shuttle Assembly] இறக்கை யுள்ள சுற்று ஊர்தி [Winged Orbiter], எரித்திரவ வெளிக்கலன் [Liquid Fuel External Tank], எரித்திடவ இரட்டை ராக்கெட்டுகள் [Solid Fuel Twin Rockets] யாவும் ஒருங்கே இணைக்கப் பட்டிருந்தன. 154 அடி நீளமும் 29 அடி விட்டமும் கொண்டது, எரித்திரவ வெளிக்கலன். அதன் இருபுறமும் 150 அடி நீளம், 14 அடி விட்டமுள்ள ராட்சத ராக்கெட்கள்! விண்ணோக்கிய மூக்குடன் DC-9 ஜெட் விமானத் தோற்ற முடைய கொலம்பியா மீள்கப்பல், நீண்ட வெளிக்கலன் முதுகில் ஏறிக் கொண்டிருந்தது.

இரட்டை ராக்கெட்டுகள் அதி தீவிரமாய்ப் பற்றி எரியும் அலுமினியப் பொடியைத் [Aluminium Powder] திடக்கன எரிபொருளாய்ப் [Solid Fuel] பயன்படுத்தின. வெளிக்கலனில் திரவ ஹைடிரஜன் [Liquid Hydrogen 380,000 gallon], திரவ ஆக்ஸிஜன் [Liquid Oxygen 140,000 gallon] தனித்தனி கலன்களில் நிறைக்கப் பட்டிருந்தன. ராக்கெட் ஏவுதளத்தில் சுடப் படும் போது, இரண்டு திரவ வாயுக்களும் அதிக அழுத்தத்தில் கலந்து கனல் பற்றி, மீள்கப்பலின் பிரதம எஞ்சின் மூன்றும் இயங்கின. ஒவ்வொரு வினாடியும் 1000 பவுண்டு எரிதிரவம் எஞ்சின்களுக்குத் தேவைப்படுகிறது. மீள்கப்பல் பூமியின் சுழல்வீதியை நெருங்கும் முன்பே, வெளிக்கலன் காலியாகி அற்று விடப்பட்டு, வாயு மண்டல வெப்பத்தில் எரிந்து தூள் தூளாகிறது!

விண்வெளி மீள்கப்பலின் சாதனங்கள், இயக்க முறைகள்
மீள்கப்பலில் முன்புறம் கருவிகளை இயக்கும் விமானிகள், பல ஆய்வுச் சாதனங்கள், கட்டுப்பாடு செய்யும் மின்கணனிகள், மின்னியல் வன்கலன்கள் [Electronic Hardwares], நடுவே சுமை தாங்கும் கூடாரம், வால்புறத்தில் மூன்று பிரதம உந்து எஞ்சின்கள் யாவும் பொருத்தப் பட்டிருந்தன. 67 அடி நீளம், 15 அடி விட்டமுள்ள நடுக் கூடாரம் 29.5 டன் சுமையை விண்வெளிக்குத் தூக்கிச் செல்ல முடியும்! ஆனால் மீண்டும் பூமிக்கு இறங்கும் போது 14.5 டன் சுமையைத்தான் ஏற்றிக் கொள்ள முடியும்! சுமைதாங்கி அறையில் தொலைத் தொடர்பு [Communication], படைத்துறை [Military], வானியல் [Astronomical] ஆகியவற்றின் பணிகளைப் புரியும் துணைக்கோள்கள் [Satellites] சுழல்வீதி யிலிருந்து ஏவப்பட எடுத்துச் செல்லப்படலாம். மீள்கப்பல் பூமியின் சுழல்வீதியில் சுற்றி வரும் போது நுண்ணீர்ப்பு [Micro-gravity] என்று சொல்லப்படும் எடையின்மையை [Weightlessness] ஆராயலாம். நாசா பிற நாட்டினர் ஆய்வகங்களை ஏற்றிச் சென்று, விண்வீதியில் ஏவி விடலாம்.
ஏவுதளத்தில் 2000 டன் எடையுள்ள கொலம்பியா விண்வெளிக் கூட்டமைப்பு, பல்வேறு உந்து விசைச் சாதனங்களால் [Multiple Propulsion Systems] 3000 டன் உதைப்பில் [Thrust] நேர் செங்குத்தாக மேலே எழுகிறது! மீள்கப்பல் பூமியின் சுழல்வீதியில் பணிகளை முடித்து விட்டு, தனது ராக்கெட் எஞ்சின்களை இயக்கி, விண்வெளி யிலிருந்து திரும்பி, பூமியை நோக்கிக் கீழே பாய்ந்து, பூகோள வாயு மண்டலத்தின் கடும் வெப்ப உராய்வில் [Intense Friction Heat] வெந்து சிதைந்து விடாமல், பாதுகாப்பாய் இறங்கி, ஓர் சாதாரண விமானம் போல் தளமட்டத்தில் [Horizontal] தரையைத் தொடுகிறது! மீள்கப்பலில் விமானக் குழுவகத்தின் பின்னால் அமைந்த, தூரக் கையாட்சி ஏற்பாட்டில் [Remote Manipulator System] சுயமாய் இயங்கி, 50 அடி நீளும் கனடாக் கரம் [Canada Arm] சுமையைத் தூக்கவும், சுமையை இறக்கவும் பயன்படுகிறது.பூமி நோக்கிப் பாயும் மீட்சிப் [Re-entry] பயணத்தில், வாயு மண்டலத்தின் உராய்வு வெப்பத்தில் மீள்கப்பல் எரிந்து போகாதவாறு, சிலிகேட் நார் சூட்டுத் தடுப்புத் தகடுகள் [Silicate Fibre Thermal Insulation Tiles] உறைபோல் ஒட்டப்பட்டு பாதுகாப்பு செய்கின்றன. மீள்கப்பலின் சிலிகேட் நார்கள் குறைந்தது 100 விண்வெளிப் பயணங்களுக்குப் பிறகு நீக்கப் பட்டுப் புதுப்பிக்கப்பட வேண்டும். நலிந்த எடை கொண்ட அந்த காப்பு நார்கள் 1260 டிகிரி C உஷ்ணத்தைக் கூடத் தாங்கும் வலிமை யுள்ளவை!
டிரைடென் பறப்பாய்வு மையகத்தில் ஆரம்பச் சோதனைகள் யாவும் வெற்றிகரமாக முடிந்து கொலம்பியா மீள்கப்பல் போயிங் 747 [Boeing 747] முதுகில் ஏற்றப் பட்டு, பிளாரிடா கனாவரல் முனை [Cape Canaveral, Florida] ஏவு தளத்திற்குத் தூக்கிச் செல்லப் பட்டது!
முதல் மீள்கப்பல் கொலம்பியாவின் முன்னோடிப் பயிற்சிப் பயணம்
அமெரிக்காவின் கனாவெரல் ராக்கெட் ஏவுதள முனையில் 1981 மார்ச் 14 ஆம் தேதியே 187 அடி உயரக் கொலம்பியா கோபுரக் கூட்டமைப்பு தயாராக நின்று கொண்டிருந்தது. அதன் முதல் பயிற்சிப் பயணச் சோதனை நீடிப்பது, இரண்டு அல்லது மூன்று நாட்களே! அது பூமியைச் சுற்றி வரப் போகும் சுழல்வீதி [Earth Orbit] உயரம் 150 மைல், பயிற்சிக்காகத் தணிவாக்கப் பட்டுள்ளது! அதை இயக்கி முதலில் செல்பவர் இருவர்! அண்டவெளி விமானிகள் ஜான் யங், அடுத்தவர் ராபர்ட் கிரிப்பென் [Astronauts John Young, Robert Grippen]. கொலம்பியா வின் ஆணையாளர், 50 வயதுள்ள ஜான் யங் அபோலோ விண்வெளி நிலவுத் திட்டத்தில் [Apollo Moon Program] நான்கு முறை அண்ட வெளியில் சுற்றிச் சிறப்புற்றவர்! ராபர்ட் கிரிப்பென் முதலில் பயணம் செய்யும் ஓர் விமானி.
அவர்கள் இருவரும் கொலம்பியா மீள்கப்பல் இறக்கைகளின் நிலைபாட்டை [Stability of Wings] அண்டவெளியில் சோதிக்க 36 தடவைப் பூமியைச் சுற்றி வரப் போகிறார்கள்! முடிவில் செங்குத்தாகப் பாய்ந்து, மொஜாவே பாலைவனத்தில் [Mojave Desert, California] இறக்கம்! அந்த முதல் சோதனைப் பயிற்சி வெற்றிகரமாக முடிந்தால், அடுத்து 36 மீள்கப்பல் பயண ஏற்பாடுகள் தொடரத் திட்டமிடப் பட்டன! மீள்கப்பலில் எதிர்பாராத விபத்து எதுவும் ஏற்பட்டால், இருவரும் உயிர் தப்பிக் கொள்ள, வெளியேற்றும் ஆசனங்கள் [Ejection Seats] அமைக்கப் பட்டிருந்தன!திரட்சி எரிபொருள் [Solid Fuel] இயக்கும் முதற் கட்ட இரட்டை ஊக்கி ராக்கெட்டுகள் [First Stage Twin Booster Rockets], மற்றும் மூன்று மீள்கப்பல் ராக்கெட்டுகள் முதல் இரண்டு நிமிடங்கள் சுடப் பட்டு, மீள்கப்பல் மணிக்கு சுமார் 3000 மைல் வேகத்தில் நேர் மேலே எழுச்சி பெற்று 31 மைல் உயரத்தில் சென்றதும், இரட்டை ராக்கெட்டுகள் அற்றுக் குடை பிடித்துக் [Parachute] கொண்டு கடலில் விழுகின்றன. பிளாரிடாவுக்கு அருகே கடலில் காத்திருக்கும் கப்பல் ஒன்று, அவற்றைக் கடலில் கண்டு பிடித்து மறுபடியும் பயன்படுத்தக் கரை சேர்க்கிறது. இரண்டு ஊக்கி ராக்கெட்டுகள் ஓய்ந்த பின்னும், மீள்கப்பலின் மூன்று பிரதம ராக்கெட்டுகள் தொடர்ந்து இன்னும் ஆறு நிமிடங்கள் இயங்கி, மீள்கப்பலை 1200 டன் உதைப்புடன் [Thrust] 59 மைல் உயரத்தில் தள்ளி, 99% சுற்று வேகம் [Orbital Velocity] அடைந்து, பூமியின் சுழல்வீதியை நெருங்குகிறது. அப்போது, வெளிக்கலன் அற்று விடப்பட்டுத் தூளாகிச் சிதறி இந்து மகாக்கடலில் விழுகிறது. முடிவில் கப்பலின் இரண்டு சிறு எஞ்சின்கள் இறுதி உந்து விசை தந்து, மணிக்கு 17,500 மைல் வேகத்தில் மீள்கப்பல் பூமியின் சுழல்வீதியில் [Earth Orbit] சுற்றி வர 150 மைல் உயரத்தில் தள்ளி விடப் படுகிறது.
அண்டவெளி மீள்கப்பல் ஆட்சி அறை.
அண்டவெளிப் பணிகளை முடித்த பிறகு, மீள்கப்பலின் சிறு எஞ்சின்கள் இயங்கி மணிக்கு 17,600 மைல் வேகத்தில், கப்பல் சுழல்வீதி யிலிருந்து விடுபட்டுக் கொண்டு [De-Orbiting], அதன் மூக்கு பூமியை எதிர் நோக்கித் திரும்புகிறது. 50 மைல் உயரத்தில் வாயு மண்டலத்தின் கடும் உராய்வுக் கனலைத் தாங்கிக் கொள்ளக், கப்பல் சாய்ந்து 40 டிகிரிக் கோணத்தில் வயிற்றைக் காட்டிக் கொண்டு, புவியை நோக்கிப் பாய்கிறது. அப்போது அதன் அசுர வேகத்தைத் தணிக்க, கப்பலின் எதிர்ப்புற ராக்கெட்டுகள் [Retro-rockets] சுடப்படுகின்றன. மீள்கப்பல் அதன்பின் ஒரு விமானம் போல் தனது இறக்கைகளை இயக்கிக் கட்டுப்பாடு முறைகளைக் கையாண்டு தரையில் கம்பீரமாக வந்து இறங்குகிறது. அப்போது மணிக்கு 220 மைல் வேகத்தில் தரையில் ஓடும் விமானத்தின் வேகத்தைத் தணிக்க, வால்புறத்தில் ஒரு பாராசூட் குடை விரிகிறது. மீள்கப்பலின் தரைதொடும் [Touchdown] இயக்கப்பாடுகள் எல்லாம் சுமார் அரை மணி நேரத்துக்குள் நிகழ்ந்து விடுகின்றன.
விண்வெளி மீள்கப்பல்கள் ஆற்றிய அண்டவெளிப் பணிகள்
கொலம்பியா தனது முதற் சோதனைப் பயிற்சிப் பயணத்தை 1981 ஏப்ரலில் வெற்றிகரமாய் முடித்த பிறகு, ஐந்தாண்டுகள் சிறப்பான பணிகள் பல செய்யப் பட்டுள்ளன. 1983 ஏப்ரலில் சாலஞ்சர் தன் முதல் பயணத்தை முடித்து, நவம்பரில் அடுத்து அமெரிக்க, ஈரோப்பிய நாடுகளின் 71 விஞ்ஞானத் தேர்வுகள் [Scientific Experiments] புரிய, முதல் விண்வெளி ஆய்வகத்தைத் [Space Lab] தூக்கிச் சென்றது. 1984 ஏப்ரலில் பரிதியின் உச்சத் துணைகோள் [The Solar Maximum Satellite] சுழல்வீதியிலே செப்பனிடப் பட்டது.
அதே வருடம் நவம்பரில் முடமாய்ப் போன பலாப, வெஸ்டார் [Palapa, Westar] துணைக்கோள்கள் சுழல்வீதியிலிருந்து பற்றி இழுக்கப் பட்டு, பூமிக்கு எடுத்து வரப்பட்டன. 1985 ஆகஸ்டில் முதன் முதல் விண்வெளியில் ஒரு துணைக்கோள் [Syncon IV-3] ஏவப்பட, சாலஞ்சர் உதவி செய்தது. அடுத்து 1986 ஜனவரியில் சாலஞ்சர் புறப்படும் போது வெடித்து [Challenger Disaster] ஏழு நபர்கள் மாண்டபின், ஏறக் குறைய மூன்று ஆண்டுகள் மீள்கப்பலின் பயணங்கள் ஒத்திப் போடப் பட்டன! அச்சமயம் அதுபோல் விபத்து எதுவும் நேராதவாறு மீள்கப்பல்களில் பல புதிய பாதுகாப்புச் சாதனங்கள் சேர்த்திடப் பட்டன.
1986 ஆம் ஆண்டிலிருந்து 50 மேற்பட்ட மீள்கப்பல் குறிப்பணிகள் [Space Shuttle Missions] எவ்வித விபத்தும் நேராமல் முடிந்துள்ளன. முக்கியமாக மே மாதம் 1989 இல் வெள்ளி விண்கோளை நோக்கி ஏவிய மாஜெல்லன் [Magellan], அக்டோபர் 1989 இல் வியாழன் விண்கோளை நோக்கி ஏவிய காலிலியோ [Galileo], ஏப்ரல் 1990 இல் ஏவிய ஹப்பிள் விண்தொலை நோக்கி [Hubble Space Telescope], அக்டோபர் 1990 இல் பரிதியை ஆராய ஏவிய யுலிஸிஸ் [Ulysses] யாவும் சிறப்பாக, மீள்கப்பல் சுமைதாங்கி அறை யிலிருந்து ஏவிவிடப் பட்டவை.

Launching Space Hubble Telescope
1993 டிசம்பரில் முதன் முதல் ஹப்பிள் தொலைநோக்கிப் பராமரிப்புக் குழு காட்சிச் சாதனத்தைச் [Optics] செப்பனிட்டு, மின்னியல் ஏற்பாடுகளைச் [Electronic Systems] சீர்திருத்தியது. 1995-1998 ஆண்டுகளில் அமெரிக்காவின் மீள்கப்பல்கள் ஒன்பது தடவைப் பயணம் செய்து, ரஷ்யாவின் அண்டவெளி நிலையம், ‘சமாதானம் ‘ [MIR Space Station] என்பதோடு இணைப்பு [Docking or Linkup] செய்து, சரித்திரப் புகழ் பெற்றன. அப்பயிற்சி முறை அனுபவங்கள், அடுத்து 1998 ஆண்டில் தயாராகப் போகும் அகில நாட்டு அண்ட வெளி நிலைய [International Space Station] இணைப்புக்குப் பயன்படும்.
ஹப்பிள் தொலைநோக்கி ஏவுதல்
விண்வெளி மீள்கப்பல் சாலஞ்சர் ஏவிய பிறகு போது மரண விபத்து!
வெண்ணிலவை நோக்கி முயன்ற விண்வெளிப் படையெடுப் பில், அமெரிக்காவின் முதல் உயிர்ப்பலி 1967 ஜனவரி 27 ஆம் தேதி நிகழ்ந்தது! அபோலோ விண்சிமிழில் தினமும் பங்கு கொள்ளும் பயிற்சியின் போது, உள்ளே தீப்பற்றி மூன்று சிறந்த விமானிகள் எட்வர்டு ஒயிட் [Ed White], ராஜர் காஃபி [Roger Chaffee], விர்ஜில் கிரிஸ்சம் [Virgil Grissom] உயிரோடு எரிந்து சாம்பலாயினர்! பத்தொன்பது ஆண்டுகள் கழித்து, அதை விடக் கோர மரணம் 1986 ஜனவரி 28 ஆம் தேதி அன்று நிகழ்ந்தது! 1981 முதல் பயிற்சிக்குப் பின்பு 26 மீள்கப்பல் பயணங்கள் வெற்றிகர மாக நடந்தேறின. 1986 ஜனவரி 28 இல் ஏவுதளத்தில் எழும்பிடத் தயாராக இருந்த சாலஞ்சர் மீள்கப்பலில் ஏழு நபர்கள் தமது ஆசனத்தில் அமர்ந்திருந் தனர். ராக்கெட் எஞ்சின்கள் திட்ட நேரத்தில் தீக்கனலைக் கக்கி, சாலஞ்சர் மீள்கப்பல் பெருமிதமோடு மேலே கிளம்பியது. ஒரு நிமிடம் கழித்து 50,000 அடி உயரத்தில் பாய்ந்து ஊடுருவிச் செல்லும் போது, அடுத்த நிமிடப் பணி முடிந்து, ஊக்கி ராக்கெட்கள் [Booster Rockets] அற்று வீழ்ந்தன. அப்போது எதிர்பாரதவாறு ஏதோ தவறு நிகழ்ந்து விட்டது! அது மரணத் தவறு! மாபெரும் சிறு தவறு! மறக்க முடியாத தவறு! மன்னிக்க முடியாத தவறு!

உயிரிழந்த சாலஞ்சர் மீள் கப்பல் விமானிகள்
பயணம் துவங்கி ஒன்றரை நிமிடத்தில், சாலஞ்சர் கட்டிப் பிடித்துக் கொண்டிருந்த மாபெரும் எரித்திரவ வெளிக்கலன் [Liquid Fuel External Tank] திடாரென வெடித்தது! உடனே மீள்கப்பல் சுக்கு நூறாய் உடைந்து சிதறியது! அண்டவெளிப் பயணம் தொடங்கும் முன்பே, எல்லாம் முடிந்து விட்டது! உள்ளே அடைபட்டிருந்த ஏழு நபர்களுக்கும் வெளியே என்ன நிகழ்ந்து விட்டது என்பது தெரியாமலே போய் விட்டது! அகால மரணம் எய்த திறமைசாலிகளின் பெயர்கள் [இடமிருந்து வலம் முன்புறம்]: மைகேல் ஸ்மித், ஃபிரான்சிஸ் ஸ்கோபி, ரோனால்டு மெக்நாயர், [பின்புறம்] எல்லிஸன் ஓனிசுகா, கிரிஸ்டா மெக்காலிஃப், கிரிகரி யார்விஸ், ஜூடி ரெஸ்னிக்.
விபத்தின் விளைவுகளைச் சீராக உளவு செய்ததில், ஊக்கி ராக்கெட்டின் மேலுறை இணைப்பில் [Booster Rocket Casing Seams] உள்ள ரப்பர் O வளையத்தில் [Rubber O-Ring] பழுது ஏற்பட்டு அது பிளந்து, தீப்பற்றிய திடப் பொருள் கசிந்து, வெளியே உள்ள எரித்திரவ வெளிக்கலனைச் [Liquid Fuel External Tank] சூடாக்கவே, 154 அடி நீளமுள்ள வெளிக்கலன் வெடித்தது! ஒரு சிறு ரப்பர் வளையப் பழுது ஏழு விண்வெளி வீரர்கள் கோர மரணத்துக்கும், 9 பில்லியன் டாலர் பண விரையத்துக்கும் காரணம் ஆனது! அடுத்து மூன்று ஆண்டுகளுக்குத் திட்டமிட்ட பயணங்கள் யாவும் தடைப் பட்டு, அது போன்ற அபாய விபத்து எப்போதும் நேரா வண்ணம் பல பாதுகாப்புச் சாதனங்கள் மீள்கப்பலில் சேர்க்கப் பட்டன!
அண்டவெளி மீள் கப்பல் கீழ் இறங்குகிறது.நாசாவின் எதிர்கால விண்வெளி மீள்கப்பலின் குறிப்பணிகள்
இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் துவக்க ஆண்டுகளில், அகில நாட்டு அண்டவெளி நிலைய அமைப்புப் [International Space Station] பணிகளுக்கு மீள்கப்பல்களின் பெரும்பான்மை யான பயணங்கள் திட்டமிடப் பட்டுள்ளன. அப்பணிகள் 2004 இல் முடிவு பெறும். அகில நிலையம் தயாரானதும் அங்கு விமானிகள், ஆய்வாளர்கள், விஞ்ஞானிகள், பொறி நுணுக்கர், பராமரிப்பாளர் அடிக்கடி போய்வர விண்வெளி மீள்கப்பல் பயன்படும். 1998 இல் அட்லாண்டிஸ் [Atlantis] மீள்கப்பல் புது நிலையப் பணிகளுக்காகப் புதுப்பிக்கப் பட்டது. புதிய காட்சி முகப்புகள் [New Displays], முற்போக் கான கப்பல் நகர்ச்சிச் சாதனங்கள் [Navigational Equipment], அகில நிலையத்தோடு இணைக்க காற்றடைப்பு அறை [Airlock Chamber] ஆகிய புது ஏற்பாடுகள் சேர்க்கப் பட்டன. அதன் உந்து சக்தியும், குளிர்ப்புச் சாதனமும் [Power & Cooling System] பெருக்கப் பட்டன. அத்துடன் மீள்கப்பல்கள், ஹப்பிள் விண்தொலை நோக்கிப் பராமரிப்பு, துணைக் கோள் ஏவுதல், செயலற்ற துணைக் கோள் மீட்டுதல் போன்ற ஒழுங்காய் நிகழ்ந்து வரும் பணிகளுக்கும் பயன்படும்.
நாசா மீள் கப்பல் கட்டமைப்பு உறுப்புகள்
திட்டப்படி விண்வெளி மீள்கப்பல்கள் யாவும் 2012 ஆண்டில் ஓய்வு பெறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது! நாசா தற்போதைய மீள்கப்பலைப் போன்ற, சிறப்பு X-38 விண்கப்பலை அகில நிலையத்தின் அபாயக் காப்பு யந்திரமாக [Emergency Lifeboat] உருவாக்க திட்டமிட்டுள்ளது. 1998 இல் பயிற்சிச் சோதனைகள் யாவும் முடிந்து, X-38 பாதுகாப்புக் கப்பல் 2003 ஆண்டில் பறப்பதற்குத் தயாராகும்!
‘ஒரு கட்ட சுழல்வீதி எழுச்சி ராக்கெட் ‘ [Single Stage to Orbit Rocket] உடைய புதிய ராட்சதக் விண்கப்பல் [X-33] ஒன்று சோதனைக் களத்தில் இயங்கிச் சீரான முறையில் வளர்ச்சியாகி வருகிறது! 21 நூற்றாண்டின் ஆரம்ப ஆண்டுகளில் உருமிக் கொண்டு உயரப் போகும் அந்த அசுர ராக்கெட், ஒரே மூச்சில் ஊதப்பட்டு, ஒரே பாய்ச்சலில் தாவி விண்கப்பலைப் பூகோளச் சுழல்வீதியில் எறிந்துவிடும்!
****************************
தகவல் :
4. https://www.space.com/nasa-spacex-clear-crew-dragon-for-first-launch.html
5. https://nkkn37.wordpress.com/2019/02/28/crew-dragon-demo-1-mission-by-spacex/
6. https://phys.org/news/2019-03-dragon-capsule-successfully-rocket-spacex.html#nRlv
. https://nkkn37.wordpress.com/2019/02/28/crew-dragon-demo-1-mission-by-spacex/
10.http://www.spacedaily.com/reports/SpaceX_launches_Dragon_test_capsule_to_ISS_999.html
12. https://www.bbc.com/news/science-environment-47453951
13. https://www.bbc.com/news/science-environment-47477617
14. https://www.spacex.com/news/2013/03/31/reusability-key-making-human-life-multi-planetary</a
-
குறளின் கதிர்களாய்…(248)
-செண்பக ஜெகதீசன்
கூறாமை நோக்கிக் குறிப்பறிவா னெஞ்ஞான்றும்
மாறாநீர் வையக் கணி.-திருக்குறள் -701(குறிப்பறிதல்)
புதுக் கவிதையில்…
மன்னன் மனத்திலுள்ளதை
அவன் கூறாமலே
முகம் அல்லது
கண்ணை நோக்கியே
கருத்தறிந்துகொள்ளும்
அமைச்சன்,
என்றும் வற்றா நீர்நிறை
கடல்சூழ் உலகினுக்கோர்
அணிகலன் ஆவான்…!குறும்பாவில்…
கூறாமலே பிறர் உளக்குறிப்பறியும்
ஆற்றல்மிகு அமைச்சன் ஆவான்,
ஆழிசூழ் உலகிற்கு அணியாய்…!மரபுக் கவிதையில்…
மன்னன் மனதில் உள்ளதையே
மனமது திறந்து சொல்லாமலே,
அன்னான் முகத்தைக் கண்பார்த்தே
அறிந்து கொள்ளும் ஆற்றலதைத்
தன்னால் கொண்டே செயலாற்றும்
தன்மை மிக்க அமைச்சனவன்,
என்றும் வற்றா கடல்சூழ்ந்த
எழிலாம் உலகினுக் கணியாமே…!லிமரைக்கூ..
கருத்தறிவான் அரசனவன் கண்ணில்,
சொல்லாமலறிந்து செயல்படும் அமைச்சன்
அணிகலனாவான் கடல்சூழ் மண்ணில்…!கிராமிய பாணியில்…
செயல்படு செயல்படு
கொறயில்லாம செயல்படு,
குறிப்பறிஞ்சி செயல்படு..வாயத்தொறந்து ராசா சொல்லாமலே
அவரோட மொகத்தப் பாத்து
கண்ணப்பாத்து
குறிப்பறிஞ்சி வேலசெய்யிற
மந்திரி கெடச்சா
அவுரு
கடலுசூழ்ந்த ஒலகத்துக்கே
ஒரு ஒசந்த ஆபரணந்தான்..அதால
செயல்படு செயல்படு
கொறயில்லாம செயல்படு,
குறிப்பறிஞ்சி செயல்படு…! -
துணை அவள்!
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா (மெல்பேண், ஆஸ்திரேலியா)
பெண்புத்தி தனைக்கேட்டால்
பின்விளைவு நன்றாகும்!
நன்புத்தி நவில்பவளே
நம்முடைய தாயன்றோ!
துன்மதிகள் தானகல
துணிச்சலுடன் நின்றிடுவாள்!
துயர்துடைக்கும் கரமாக,
துணையாக அவளிருப்பாள்! -
பெண்மை போற்றிடு….!
கிரேசி மோகன்வேலை இருக்குது நிரம்ப -என்னை
வேகப் படுத்திடு தாயே –
பாலைச் சுரந்திடு தளும்ப – உந்தன்
பாதம் பணிந்திடும் சேய்நான்
ஆலை கரும்பெனெப் பிழிந்து – எந்தன்
ஆவி பிரிந்திடும் முன்னே
சோலை நகைச்சுவைக் காற்றை – இவன்
நாளும் நுகர்ந்திட அருள்வாய்…!கண்ணை இமைகாக்கும், தென்னை குலம்காக்கும்
அன்னை நமைகாக்கும் அற்புதம் -விண்ணை
இறங்கவைத்து மண்ணில் இருத்திய தாயின்
பிறந்தநாள் இன்றவளைப் போற்று….!உன்னையே நம்பி உனதா யுதமாக
அன்னையே வாழ அருள்புரி -முன்னை
இருந்த நிலையில் பொருந்தி இருக்க
திரும்ப மனதைத் திருத்து….!பொய்தந்த போதுமதை, மெய்த்தவமாய் மாற்றியிரு,
கைதந்து காத்துக் கரைசேர்க்கும், -சைதன்ய
சக்தியே, அன்னையே, சச்சிதா னந்தத்தின்,
சித்திநாளில், நீக்கென் சழுக்கு (குற்றம்)………! -
எங்கள் தோட்டிச்சியைப் பற்றிய ஒரு குமுறல்
நாகேஸ்வரி அண்ணாமலை
இந்தியாவில் மேட்டுக்குடி மக்களும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களும் பல வகையான உணவை உண்ணும் பாக்கியம் பெற்றவர்களாக இருக்கிறோம். இந்த வகுப்பைச் சேர்ந்த நாங்களும் அமெரிக்கா வந்த பிறகு எங்களுக்கு இன்னும் அதிகமாகப் பல வகையான உணவுகளை உண்ணும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தினமும் காலையில் அமெரிக்காவில்கூட இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி என்று இதில் எதையாவது ஒன்றைச் சாப்பிடுகிறோம். மதியம் சோறு, சாம்பார், ரசம், இரண்டு
பொரியல்கள், தயிர் இத்யாதி. இரவு மறுபடி சோறு அல்லது சப்பாத்தி, தொட்டுக்கொள்ளப் பல வகையான துணைக்கறிகள். இடையில் சாயந்திரம் ஏதாவது தின்பண்டங்கள் மற்றும் காப்பி. ஒவ்வொரு சாப்பாட்டிற்குப் பிறகும் இனிப்புகள் வேறு. இடையிடையே பார்ட்டிகள் வேறு. (வேலைக்குப் போகும் பெண்கள் இவ்வளவு சமைப்பதில்லை என்பதால் இவ்வளவு வகைச் சாப்பாடு
சாப்பிடுவதில்லை என்றாலும் வெளியில் நன்றாகச் சாப்பிடுகிறார்கள்.)நான் சிறுமியாக இருந்தபோது எங்கள் வீட்டில் எங்கள் கழிவுகளைச் சுத்தம் செய்த நாகா என்ற பெண்ணின் ஞாபகம் எனக்கு அடிக்கடி வந்தாலும் திடீரென்று இன்று அவளைப் பற்றிய ஞாபகம் அதிகமாக வந்தது. அப்போதே அவள் மீது எனக்கு ஒரு பரிவு உண்டு. கூட்டுக் குடும்பம் என்பதால் பழைய சாதம் எப்போதும் எங்கள் வீட்டில் இருக்கும். தினமும் நாகா பத்துமணி வாக்கில் எல்லோர் வீட்டிலும் வேலைகளை முடித்துவிட்டு எங்கள் வீட்டிற்கு வந்து நாங்கள் கொடுக்கும் பழைய சோற்றை உண்டு பசியாறுவாள். அப்போது அவளோடு பேசிக்கொண்டிருப்பது என்னுடைய
பொழுதுபோக்குகளில் ஒன்று.எப்போதும் பழைய சோறு, பழைய குழம்புதான். எப்போதாவது ஆட்டிறைச்சிக் குழம்பு இருந்தால் நான் கொடுப்பேன். அதை மிகவும் ரசித்துச் சாப்பிடுவாள். பழைய சாதத்திற்குத் தொட்டுக்கொள்ள வறுத்த மோர் மிளகாய் கொடுத்தால் மிகவும் ஆசையாகச் சாப்பிடுவாள். ஆறு மிளகாய் கொடுத்தால் நான்கை சோற்றோடு முடித்துவிட்டு இரண்டை பேப்பரில் சுற்றி முந்தானையில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு எடுத்துச் செல்வாள். வீட்டில் சாதம் மிஞ்சிவிட்டால் நாங்கள் கவலையே படுவதில்லை. தினமும் நாகா வருவதால் அவளுக்குத் தேவைப்படும் என்று வைத்திருப்போம்.
எப்போதாவது நான் பழைய சோறு சாப்பிட்டால் எனக்கு ஒரு பானைத் தயிர் வேண்டும். நாகாவுக்கு அப்படியல்ல. நீராகாரத்தோடு பழைய சோற்றைக் கொடுத்தால் நீராகாரத்தை முழுவதுமாகக் குடித்துவிட்டுப் பின் சோற்றை உருண்டை, உருண்டையாகப் பிடித்து ஒரு சொட்டுக் குழம்புடன் வாயில் போட்டுக்கொள்ளுவாள். எனக்குப் பழைய சோறு சாப்பிட ஒரு பானைத் தயிர் மட்டுமல்ல, ஒரு பானைக் குழம்பும் வேண்டும். நாகாவின் தினசரிச் சாப்பாடு இது.
காலையில் டீக்கடையில் அரை கப் காப்பி குடிப்பாள். பின் எங்கள் வீட்டில் நான் மேலே கூறிய பழைய சாதம், பழைய குழம்பு. மதியச் சாப்பாடாக வீட்டில் முந்தைய தினம் இரவு சமைத்த சாதத்தில் மற்றவர்கள் சாப்பிட்டது போக மிஞ்சியிருப்பதைச் சாப்பிட்டுக்கொள்வாள். இரவு மட்டும் சுடு சோறு, சுடச்சுட குழம்பு. அதுவும் பிரியாணி, பரோட்டா, சப்பாத்தி, குருமா, வெஜிடபிள் கட்லெட் என்று வகை வகையாகவா சாப்பிட்டாள்? எங்கள் ஊரில் கிடைக்கும் கருவாடும் கத்தரிக்காயும் போட்ட குழம்பு. கருவாடும் சாதாரணக் கருவாடுதான். விலையுயர்ந்த கருவாடெல்லாம் அவளால் வாங்க முடியாது. எப்போதாவது விலை குறைந்த மீன் வாங்கிக் குழம்பு செய்வாள். எப்போதாவது சாம்பாரும் சமைப்பாள். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை காலனிவாசிகள் எங்கிருந்தாவது அடிமாடு ஒன்றை வாங்கிவந்து அங்கேயே அடித்து மாமிசத்தைப் பங்கு போட்டுக்கொள்வார்கள். மறு நாள் அந்த மாமிசத்தைப் பெரிய பெரிய துண்டாகப் போட்டு, சமைத்துச் சாப்பிட்டதைப் பற்றிக் கூறுவாள். எப்போதாவது விருந்தாளிகள் வந்துவிட்டால் தான் வழக்கமாகச் சமைக்கும் சோறு அநேகமாகக் காலியாகிவிடும் என்றும் மறு நாள் காலையில் எதையாவது சமைத்துவைத்துவிட்டு வந்ததாகவும் கூறுவாள்.
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளின்போது கூட வீட்டில் வடை சுடுவதோ, பொங்கல் ஆக்குவதோ கிடையாது. ஏன் இட்லி, தோசை கூட அவளுடைய சக்திக்கு அப்பாற்பட்டதுதான். ஒவ்வொரு தீபாவளியன்றும் வீடு வீடாகச் சென்று பலகாரங்கள் வாங்கி வருவாள். சிலர் இட்லி கூடக் கொடுத்திருப்பார்கள், அது ஏதோ பெரிய பலகாரம் என்பதுபோல். யாரும் அதிரசமோ, முறுக்கோ கொடுப்பதில்லை. கிட்டத்தட்ட எல்லா மத்தியதரக் குடும்பங்களிலும் தீபாவளிக்கு அதிரசம், முறுக்கு கண்டிப்பாகச் செய்வார்கள். மைசூர்ப்பாக், குலோப் ஜாமூன் போன்ற
இனிப்புகளின் பெயர்கள்கூட அவளுக்குத் தெரியாது.அமெரிக்காவில் ஒவ்வொரு நாளும் எவ்வளவு புரதச் சத்து, எவ்வளவு மாச்சத்து, எவ்வளவு கொழுப்புச் சத்து கலந்த உணவு உண்ண வேண்டும் என்று பலர் குறித்துவைத்துக்கொள்ளுவார்கள். இதற்கு மேல் என்ன சாப்பிட வேண்டும் என்று யோசனை கூற சத்துணவு ஆலோசகர்கள் (nutritionists) வேறு. எங்கள் நாகா என்ன சாப்பிட்டாள், எவ்வளவு சாப்பிட்டாள் என்று இந்த ஆலோசகர்களிடம்
கூறி, அவள் எப்படி பெரிய வியாதிகள் எதுவும் இல்லாமல் எழுபது வயதுக்கு மேல் உயிர் வாழ்ந்தாள் என்று கேட்க வேண்டும் என்று எனக்கு வெகு நாளாக ஆசை.இப்படித்தான் எல்லோரும் சாப்பிட வேண்டும்; இப்படிச் சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருப்பார்கள் என்று நான் சொல்வதாக யாரும் எடுத்துக்கொள்ள வேண்டாம். அமெரிக்காவில் எல்லோருக்கும் பல விதமான உணவுகள் கிடைக்கின்றன. எங்களை எடுத்துக்கொள்ளுங்கள். வீட்டில் இந்திய உணவைச் சமைத்துக்கொள்ளுவதற்குத் தேவையான எல்லாச் சாமான்களும் கிடைக்கின்றன. அதற்குமேல் அமெரிக்கர்களின் உணவையும் வீட்டிலேயே சமைத்துக்கொள்ளலாம். அதற்குமேல் சீனர்களின் உணவு, தாய்லாந்து நாட்டின் உணவு, ஜப்பானியர்களின் உணவு, பிரெஞ்சு உணவு என்ற பல தரப்பட்ட நாடுகளின் உணவுகளையும்
உண்டு மகிழ ஓட்டல்கள் இருக்கின்றன. இதில் ஆயிரத்தில் ஒரு பங்குகூட எங்கள் நாகாவுக்குக் கிடைக்கவில்லையே என்பதை நினைக்கும்போது நெஞ்சு கனக்கிறது.பதினைந்து குடும்பங்கள் வசித்த ஒரு குடிசைக் காலனியில் வாழ்ந்துகொண்டு, உலகிலேயே அசுத்தமான தொழிலைச் செய்துகொண்டு, ஆகக் குறைந்த சம்பளத்தைப் பெற்றுக்கொண்டு, நாகா சந்தோஷமாகவே வாழ்ந்துவந்தாள் என்று நினைத்து ஆறுதலடைய வேண்டியது தானோ? அப்படி ஒரு ஆறுதல் கிடைத்தாலும் நாம் ஏன் இப்படிப்பட்ட இழிவான தொழிலைச் செய்தவர்களைக் கீழ்த்தனமாக நடத்தினோம் என்பதை நினைக்கும்போது ரத்தம் கொதிக்கிறது.
மனிதக் கழிவுகளை மனிதனே சுத்தம் செய்யும் அவலத்தை இனியாவது முழுவதுமாக ஒழிக்க வேண்டும். சட்டம் மட்டும் போதாது. ஸ்மார்ட் நகரங்களை நிர்மாணிப்பதில் அரசு கவனம் செலுத்துவதைவிட, நம் கழிவுகளைச் சுத்தம் செய்தவர்களின் வாழ்வைப் புதிதாக நிர்மாணிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
படத்திற்கு நன்றி – Sharmilee (https://www.sharmispassions.com)
-
உலகம் அளந்து பார்க்காத ஆழம், பெண்மை!
-விவேக்பாரதி
பெண்மை என்பதோர் ஆயுதம் – நம்
பெருமை அளந்திடும் சீதனம்
பெண்மை என்பதோர் பூவனம் – அது
பேண வேண்டிய தோர்வளம்!
பெண்மை காப்பதே நம்கடன் – அப்
பேறு வாய்ப்பதே தெய்வதம்
பெண்மை வாழ்கெனப் பாடுவோம் – எந்தப்
பெண்ணைக் கண்டாலும் போற்றுவோம்!ஆணின் பலமெலாம் ஊனிடம் – பெரும்
ஆன்ம பலமெலாம் பெண்ணிடம்
காண வேண்டிய கீர்த்திகள் – நம்
காரி கைவசம் பூர்த்திகள்
பேணும் நல்லறம் பெண்ணிடம் – பல
போரும் அமைதியும் பெண்ணிடம்
தூணைப் போலதைக் காத்துதான் – எதிர்
தோன்றும் போதெலாம் வாழ்த்துவோம்!வானின் மாமழை தாய்க்குணம் – அலை
வண்ணக் கடலும் காதல்மனம்
சேனை ஆயிரம் ரௌத்திரம் – பல
செழுமை பெண்கொளும் பூரணம்!
ஞானம் அவர்சொலும் போதனை – அவர்
நாமம் தேன்வரும் கீர்த்தனை
தானு ணர்ந்திதை ஏத்துவோம் – பெருந்
தண்மை பெண்களைப் போற்றுவோம்!! -
நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 19
நாங்குநேரி வாசஸ்ரீ
நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 19 –புறங்கூறாமை

குறள் 181:
அறங்கூறா னல்ல செயினும் ஒருவன்
புறங்கூறா னென்றல் இனிதுஒருத்தன் நல்லது செய்யலேன்னாலும் அடுத்தாளப் பத்தி பொறளி பேசமாட்டாம் னா அதுதான் அவனுக்கு நல்லது.
குறள் 182:
அறனழீஇ யல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகைஒருத்தன நேர்ல பாக்கும்போது பொய்சிரிப்பு சிரிச்சி பேசிபோட்டு, அவன் போன பின்னால பொறளி பேசுதது அறமில்லாத கெட்ட காரியத்த செய்தத விட கொடும.
குறள் 183:
புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாதல்
அறங்கூறும் ஆக்கந் தரும்ஒருத்தன காணும்போது பொய்யா நடிச்சு பொறத்தே பொறளி பேசி வாழுதத காட்டிலும் சாவுததே மேல்.
குறள் 184:
கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க
முன்னின்று பின்னோக்காச் சொல்ஒருத்தன் நேரா நிக்குதப்போ தயவுதாட்சண்யம் பாரம கடுமையா பேசிக்கிடலாம். அவன் இல்லாத சமயம் பின் விளைவ யோசிக்காம அவனப் பத்தி பேச வேண்டாம்.
குறள் 185:
அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையாற் காணப் படும்ஒருத்தன் மத்தவங்களப் பத்தி பொறளி பேசுதத வச்சே அவன் அற வழில நிக்காதவன் னு தெரிஞ்சுக்கிடலாம்.
குறள் 186:
பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளுந்
திறன்தெரிந்து கூறப் படும்அடுத்தவனப் பத்தி பொறளி பேசுதவனோட கொடுமையான குத்தங் குறைகள கண்டுபிடிச்சு மத்தவங்க அவனப் பத்தி பொறளி பேசுவாங்க.
குறள் 187:
பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்சந்தோசமா கூடிப் பழகி நட்ப வளக்கத்தெரியாதவங்க பொறளி பேசி நல்ல சேக்காளியையும் பிரிஞ்சி போக உட்ருவாங்க.
குறள் 188:
துன்னியார் குற்றமுந் தூற்றும் மரபினர்
என்னைகொல் ஏதிலார் மாட்டுநெருங்கி பழகினவங்களோட தப்ப அவங்க இல்லாத நேரம் பேசுதவங்க முன்ன பின்ன தெரியாதவங்கள பத்தி என்னதான் பேச மாட்டாங்க.
குறள் 189:
அறனோக்கி யாற்றுங்கொல் வையம் புறனோக்கிப்
புன்சொ லுரைப்பான் பொறைநேர்ல இல்லாத ஒருத்தனப்பத்தி பொறளி பேசுதவனோட ஒடம்ப, இவனயும் சுமக்குதது என்னோட தருமம் னு நெனைச்சி பூமி சுமக்குதோ.
குறள் 190:
ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னு முயிர்க்குபொறத்தியாரோட தப்ப பாக்குதது போலவே தன்னோட தப்பையும் பாத்தோம்னா நிலச்சு நிக்குத இந்த ஒலக வாழ்க்கைல துன்பம் வருமா.
______________________________________
கட்டுரையாளரைப் பற்றி
இயற்பெயர் – பத்மா ஸ்ரீதர்
புனைப் பெயர் – நாங்குநேரி வாசஸ்ரீ
தமிழார்வம் கொண்ட இல்லத்தரசி. முன்னாள் ஆசிரியை.
கதைகள், கவிதைகள் எழுதுவதில் விருப்பம் அதிகம்.
இதுவரை எழுதிய தளங்கள் : சிறுகதைகள்.காம், எழுத்து.காம், ப்ரதிலிபி.காம் -

மனநலம் காக்க மனவளக்கலை
த. சுதா
முனைவர் பட்ட ஆய்வாளர், யோகமும் மனித மாண்பும் துறை
பாரதியார் பல்கலைகழகம், கோவைமுன்னுரை
மனதை இதமாக வைத்திருப்பன் மனிதன். “மனமில்லாத மனிதனும் இல்லை, மனதை அறிந்த மனிதனும் இல்லை, மனதை அறிந்தவன் ஞானி”. சிறந்த ஆரோக்கியம் என்பது ஆரோக்கியமான உடலைப் பெற்றிருப்பது மட்டும் அல்ல. ஆரோக்கியமான மனதையும் பெற்றிருப்பதாகும்.
“மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம்
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே”என்ற பாடலில் அகத்தியர் மனம் செம்மையானால் மந்திரம் சொல்ல வேண்டியது இல்லை. மூச்சுக்காற்றை மூலாதாரத்திலிருந்து உயர்த்த வேண்டியது இல்லை. வாசி என்ற குண்டலி சக்தியை சக்கரத்தில் நிறுத்த வேண்டியது இல்லை என்று கூறியுள்ளார். அப்படிபட்ட மனநலத்தைக் காக்க மனவளக்கலையின் பங்கு என்ன என்பதைக் காணலாம்.
மனநலம்
ஆரோக்கியமான மனதைப் பெற்றிருப்பவர்கள், தெளிவாக சிந்திப்பவராகவும், வாழ்க்கையில் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளைத் தீர்வு கண்டு முடிவு எடுப்பராகவும் இருக்க வேண்டும். நண்பர்கள், உடன் பணிபுரிபவர்கள், குடும்பத்தினருடன் நல்லுறவு கொண்டவராகவும், சமுதாயத்தில் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியளிப்பவராகவும் விளங்கவேண்டும். மனம் சார்ந்த இந்த தன்மையே மனநலம் எனலாம்.
உடல் உறுதி மட்டும் ஆரோக்கியம் அல்ல
உள்ளத்தின் தெளிவும் இணைந்ததே ஆரோக்கியம். – ஆதிசங்கரர்.மனம் அடக்க நினைத்தால் அலையும்
அறிய நினைத்தால் அடங்கும் – வேதாத்திரி மகரிசிஅலையும் மனதை அடக்க முடியாது
அடக்க நினைப்பது புயலைத்தடுத்தச் செய்வதற்கு சமம் – பகவத் கீதை.மனதை அடக்க முடியாது, மனதை விலக்கவும் முடியாது. சும்மா இருந்தாலே மனம் விலகிவிடும். உடலும், மனமும் நாணத்தின் இரண்டு பக்கங்கள் போன்றதாகும். ஒன்றின் தன்மை மற்றொன்றில் பிரதிபலிக்கும் உடலுக்கு பாதிப்பு ஏற்படுவது போல் மனதிற்கும் பாதிப்பு ஏற்படுகிறது. இதனை மனநோய் எனலாம்.
குழந்தைகள் முதல் பெரியவர் வரை மனநோய்க்கு ஆளாகின்றனர். மனநலப் பாதிப்பிற்கு காரணமாக அமைவது இரண்டு விதமான உணர்ச்சிகள் மனச்சோர்வும், பதற்றம் ஆகியன.
அதிக வேலை, தேவைகள் நிறைவேறாமை, பேராசை, எதிர்பார்ப்பு, நிர்பந்தம் இதனால் மனநலம் பாதிக்கிறது என்கிறார் – அகத்தியர்.
அறுகுணமாகிய பேராசை, சினம், கடும்பற்று, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம், இவற்றால் மனநலம் பாதிக்கிறன்றது என்கிறார் – வேதாந்த மகரிஷி.
ஒவ்வொருவரும் தன் வாழ்நாளில் ஒரு முறையாவது மனச்சோர்வுக்கு ஆளாகின்றனர்.
மனநலத்தை பாதிக்கும் காரணிகள்
உடல் பாதிப்பு
அதிக அமிலச் சுரப்பு, நோய் எதிhப்பு சக்தி குறைவது, தானியங்கி நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகள் குறைவது. சிறுநீரக செயலிழப்பு, குழந்தையின்மை, புற்று நோய், கல்லீரல் பாதிப்பு, சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் பெண்களுக்கு மாதவிலக்கு நிற்கும் நேரத்தில் ஏற்படும் மன அழுத்தம் முதலியன.
உறவுகளில் பாதிப்பு
நெருங்கிய உறவினர்களின் திடீர் மரணம், விபத்துக்கள், பொருள் காணாமல் போதல், குழந்தைகள் தங்கள் பேச்சுக்கு மதிப்பு கொடுக்காமை. கணவன், மனைவிக்கு இடையே பிரச்சனைகள், விவாகரத்து தோன்றுவது, நெருங்கிய உறவினர்களுக்கு இடையே சண்டை, மனஸ்தாபம் தோன்றுவது, காட்டமான வாழ்க்கை பின்னனி, உறவினர் கொடுமை. தனிமை அன்புக்கு ஏங்கித் தவித்தல். மகிழ்ச்சியற்ற வாழ்க்கை, அன்பு கிடைக்காமை, சிறுவயத்தில் பாலியல் கொடுமைக்கு ஆளாகுவது, ஓரினச் சேர்க்ககை முதலியன.
மூளையில் தோன்றும் பாதிப்பு
மூளைக் காய்ச்சல், தலையில் அடிபட்டு கவனிக்காமல் விடுவதால், நரம்புகள் உணர்ச்சிகளை கடத்தாமை, நரம்புகளில் அழுத்தம் தோன்றுதல். நாளமில்லாச் சுரப்பிகளின் இயக்கம் குறைதல் ஆகியன.
மரபு மற்றும் சூழ்நிலை
பாரம்பரியம் வழியாகவும், நம் முன்னோர்கள் இரத்த சம்பந்தப்பட்டவர்கள் மனநலம் பாதித்து இருந்தால் தொடர்ந்து வருவது, சூழ்நிலை காரணமாகவும், மன நலம் பாதிக்கப்படுகின்றன.
சுற்றுப்புற சூழல்
சுற்றுப்புறச் சுழலில் காற்று மாசுபடுதல், இரச்சல் தேவையற்ற சத்தம் நம் காது கேட்கும் திறனை விட அதிக சத்தத்திற்கும் ஆளாகும் போதும் மனநலம் பாதிக்கப்படுகின்றன.
மனநலபாதிப்பின் அறிகுறிகள்
1. மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் எந்த செயலையும் செய்ய முடியாமை. இயலாமை, தாழ்வு மனப்பான்மை, தன்னம்பிக்கையின்மை.
2. நேர்மறையான எண்ணங்கள் தோன்றாமை, திட்டமிடாத சிந்தனை, நம்மால் நிச்சயம் முடியாது என்று எண்ணுவது.
3. சோர்வு, பயம், கவலை, தேவையில்லாத அழுகை, பசியின்மை, தூக்கமின்மை பெருமூச்சு விடுதல், இரத்த ஓட்டம் அதிகரித்தல்.
4. தசை இறுக்கம், அதிக வேர்வை, பொறுமையின்மை, சக்தியின்மை, விரக்தி போன்றவை மனநலம் பாதித்தவர்களுக்கு தோன்றும்.
5. மனக்குழப்பங்களுக்கு முக்கியக் காரணம் ஊர் என்ன சொல்லும், உறவினர்கள் என்ன சொல்வார்கள், அக்கம்பக்கம் என்ன சொல்வார்கள் என்ற பயம்தான். மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்று பயந்தான். பலர் தன் துன்பங்களை மனதில் மறைத்து அனுசரித்து வாழ்கிறார்கள்.
மனநலத்தைக் காக்க பயிற்சிகள்
வேதாந்திரி மகரிசி அருளிய மனவளக்கலையின் உடற்பயிற்சிகள்
தசை நார் மூச்சுப் பயிற்சி.
உடல் தளர்துதல் பயிற்ச்சி.
இப்பயிற்சியை செய்வதன் மூலம் மனச்சோர்வு மற்றும் பதற்றம் நீங்கும். மனம் வலுப்பெறுவதற்கு தவம் பயிற்சிகளும் தற்சோதனையும் அவசியம் தேவை.
மனம் தூய்மை அடைவதற்கு அகத்தூய்மை பயிற்சிகள். இதில் எண்ணம் ஆராய்தல்.
ஆசை சீரமைத்தல்.
சினம் தவிர்த்தல்.
கவலை ஒழித்தல்.வாழ்வின் நோக்கம்
இப்பயிற்சிகள் செய்து தன்னைப் பற்றியும், தன்தேவைகள் பற்றியும், தன் செயலின் விளைவைப் பற்றியும், தன் தகுதியை பற்றியும், தன் மதிப்பைப் பற்றியும் ஆராய்ந்து மனநலத்தை மேம்பாடு அடையச் செய்யலாம்.
முடிவுரை
நம் மனம் மிகவும் சஞ்சலமுடையது. இதைச் சீர் செய்ய மனவளக்கலை தியானம் உதவும். மனம் எப்போதும் கடந்த காலத்தையும், வருங்காலத்தையும் மட்டுமே சிந்திக்கும். இப்போது நடக்கும் நிகழ்காலத்தைப் பற்றி சிந்திக்க மறுக்கும். ஆனால் நிகழ்காலம் மட்டும் தான் நிச்சயம். நிகழ்காலம் தான் கடந்த காலமாக மாறுகிறது. நிகழ்காலம் தான் வருங்காலத்தை நிர்ணயிக்கிறது. மனநலம் வேண்டுமானால் நிகழ்காலத்தைப் பற்றி, சிந்தித்து செயல்பட வேண்டும்.
-
என்றோ
-பாஸ்கர் சேஷாத்ரி
என்றோ கேட்ட நாதம் இன்னும் செவிப்பறையில்
என்றோ பெய்த மழை நினைவின் ஓட்டையில்
என்றோ ஓடிய பள்ளி கிழிந்த சட்டை தொங்கி நிற்கும் .
என்றோ உடைந்த பல் துருத்தி துருத்தி தலை நீட்டும்
என்றோ உணர்ந்த ஸ்பரிசம் முதுமையை கோபிக்கும்
என்றோ கிழிந்த தாடை வலி வருஷம் தவி நிற்கும்
என்றோவில் வாழ்ந்து என்றோவில் நனைந்து
என்றோவில் செல்லும் காலம் .மூச்சுப்பைக்கு ஒன்றும் தெரியாது – கடைசி வரை .
-
(Peer Reviewed) இராமநாதபுரம் வட்டாரக் கல்வெட்டுகள் காட்டும் வணிகம்
முனைவர் ஆ.ராஜா,
அருங்காட்சியகத் துறை,
தமிழ்ப் பல்கலைக்கழகம்,
தஞ்சாவூர் – 10இராமநாதபுரம் வட்டாரக் கடற்கரைப் பகுதியில் சங்க காலம் முதல் இடைக்காலம் வரை கடல்சார் வணிகமும் உள்நாட்டு வணிகமும் சிறந்து விளங்கின. இவ்வணிகம் கி.பி.12-14ஆம் நூற்றாண்டுகளில் பிற்காலப் பாண்டியர்களின் எழுச்சியின் காரணமாகச் சிறந்த வளர்ச்சியை அடைந்தது. இக்காலக் கட்டத்தில் பல்வேறு வணிகக் குழுக்கள் அயல்நாட்டு, உள்நாட்டுப் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகித்தன. இராமநாதபுரம் கடற்கரைப் பகுதி, நிலவியல் அடிப்படையில் அதிகமான ஆற்று முகத்துவாரங்களைக் கொண்ட பகுதியாக அமைந்திருப்பதால் கடல்சார் வணிகச் செயல்பாடுகளுக்குப் பெரிதும் துணை புரிந்தன. அந்த வகையில் இராமநாதபுரம் வட்டாரத்தில் இடைக்காலத்தில் செயல்பட்ட வணிகக் குழுக்கள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் குறித்து ஆராயும் இக்கட்டுரை, கல்வெட்டுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டதாகும்.
வணிக நகரம்
இராமநாதபுரம் வட்டாரத்தில் அமைந்துள்ள தேவிப்பட்டினம் மற்றும் தீத்தாண்டதானபுரம் ஊர்களிலுள்ள கி.பி 13ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கல்வெட்டுகளும், கீழக்கரையிலுள்ள கி.பி.16ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கல்வெட்டுகளும் இராமநாதபுரம் வட்டாரக் கடற்கரைப் பகுதிகளில் செயல்பட்ட வணிகக் குழுக்கள், வணிகர்கள், பட்டினங்கள், வணிக நகரங்கள், அங்காடிகள், பெருந்தெருக்கள், வணிகப் பொருட்கள், சரக்குப் போக்குவரத்துச் சாதனங்கள் பற்றிய செய்திகளையும் குறிப்பிடுகின்றன.
வணிகக் குழுக்கள்
இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டத்திலுள்ள தீத்தாண்டதானபுரம் இடைக்கால பாண்டியர்கள் காலத்தில் பல்வேறு வணிகக் குழுக்களைச் சார்ந்தவர்கள் வாழ்ந்த சிறந்த வணிக நகரமாக விளங்கியுள்ளது. இவ்வூரை கி.பி.13ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கல்வெட்டு, ‘முத்தூற்றுக் கூற்றத்திலிருந்த தீத்தானம்’ என்று குறிப்பிடுகிறது1. இவ்வூரில், முதலாம் சடையவர்மன் வீரபாண்டியனின் (கி.பி.1253-1283) காலத்தில் பதினெண்விசயத்தார், அஞ்சுவண்ணத்தார், மணிக்கிராமத்தார், தென்னிலங்கை வளஞ்சியர், கைக்கோளர், பிரான்மலை வணிகர்கள், சாமந்த பண்டசாலி, தோயாவத்திரச் செட்டிகள் போன்ற வணிகக் குழுக்களும் வணிகர்களும் குடியேறி வணிகத்தில் ஈடுபட்டிருந்தனர்2. இவர்கள் தீத்தாண்டதானபுரத்திலுள்ள சர்வதீர்த்த உடைய நாயனார் கோயிலின் இடிந்த மண்டபத்தை மீண்டும் கட்டுவதற்கான செலவுகளுக்காக இவ்வூரில் விற்பனை செய்யப்படும் பொருட்களின் மீது ஒரு பகுதியை வரியாகச் சேகரித்து தானமாக வழங்கியுள்ளனர். மேலும், மேற்குறிப்பிட்ட ஊரிலுள்ள பாண்டிய மன்னர்களான மாறவர்மன் வீரபாண்டியன், சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் ஆகியோரின் கல்வெட்டுகள் வணிகர்களான கைக்கோளர்களும் செட்டிகளும் இவ்வூரிலுள்ள கோயிலுக்குச் சில தானங்கள் வழங்கியதைக் குறிப்பிடுகின்றன3.
இராமநாதபுரம் வட்டத்தில் கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள தேவிப்பட்டினம், பிற்காலப் பாண்டியர்களின் காலத்தில் கடல்சார் வணிகத்தில் சிறந்த துறைமுகப்பட்டினமாக இருந்துள்ளது. கி.பி.13ஆம் நூற்றாண்டைச் சார்ந்த பாண்டியர் கல்வெட்டானது இவ்வூரை செவ்விருக்கை நாட்டிலிருந்த சீறிளங்கோமங்கலமான உலகமாதேவிபட்டினம் என்றும், கி.பி.14ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கல்வெட்டில் ஸ்ரீவல்லபட்டினம் என்றும் குறிப்பிடுகின்றது4. இவ்வூரில் கி.பி.13ஆம் நூற்றாண்டின்போது நகரத்தார்கள், நானாதேசிகள் ஆகிய வணிகக் குழுக்கள் தங்கியிருந்து வணிகம் செய்து வந்தனர்5. இவர்களில் நானாதேசிகள், பன்னாட்டு வணிகக் குழுவினர் ஆவர். இவர்கள் பல இடங்களிலிருந்து வந்த சரக்குகளைக் கடல் வழியாகத் தொலைதூர நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளனர்.
பிற்காலப் பாண்டிய மன்னனான இரண்டாம் சடையவர்மன் விக்கிரம பாண்டியனின் ஆட்சிக் காலத்தில் (கி.பி.14ஆம் நூற்றாண்டு) தேவிப்பட்டினம் துறைமுகத்திலிருந்து கடல்வழியாகப் பல்வேறு நாடுகளுக்கு வணிகப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. அதே போன்று பல பகுதிகளிலிருந்து வந்த வணிகப் பொருட்கள் இத்துறைமுகத்தில் இறக்குமதியும் செய்யப்பட்டுள்ளன6. வணிகத்திற்காகத் தேவிப்பட்டினத்தில் தங்கியிருந்த நானாதேசிகள், அங்கிருந்த சிவன்கோயிலில் தங்கள் வணிகக் குழுவின் பெயரில் கட்டவிருந்த வாசலுக்கான செலவிற்காகத் தேவிப்பட்டினம் மற்றும் செவ்விருக்கை நாட்டிலிருந்த பிற துறைமுகங்களுக்கும் வந்து செல்லும் வணிகப் பொருட்களுக்கு வரி விதித்துள்ளனர்7.
இராமநாதபுரம் வட்டத்தில் கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள கீழக்கரை, கி.பி.16ஆம் நூற்றாண்டில் முத்து வணிகத்தில் சிறந்து விளங்கிய வணிகத் துறைமுகப் பட்டினமாகும். கி.பி.16ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகளில் இவ்வூர் ‘செம்பிநாட்டிலுள்ள அனுத்தொகைமங்கலம்’ என்றும் ‘கீழக்கரையான நினைத்தது முடித்தான் பட்டினம்’ என்றும் குறிப்பிடுகின்றது8. இக்காலக் கட்டத்தில் இவ்வூரிலும், இவ்வூருக்கு அருகிலிருந்த மூன்று துறைமுகப் பட்டினங்களிலிருந்தும் பதினெண் விசையத்தார், முத்து வணிகத்தில் ஈடுபட்டிருந்துள்ளனர். செம்பி நாட்டு அனுத்தொகைமங்கலத்திலிருந்த நினைத்தது முடித்தான் பிள்ளையார் கோயில் திருப்பணிக்கும், பூசைக்கும் இவர்கள் விற்கும் நூறு முத்துகளுக்கு அரைப்பணம் வீதம் தானம் கொடுத்துள்ளனர்9.
மேற்குறிப்பிட்ட வட்டத்திலுள்ள இராதானூரில் நெசவுத் தொழிலிலும், துணி வணிகத்திலும் ஈடுபட்ட மதுரையைச் சேர்ந்த கைக்கோளர்கள், அப்பகுதியில் தங்கியிருந்து வணிகம் மேற்கொண்டிருந்தனர்10.
வணிகம் செய்தவர்கள்
இராமநாதபுரம் வட்டாரக் கடற்கரைப் பகுதியிலுள்ள இடைக்காலப் பாண்டியர்களின் கல்வெட்டுகள், இப்பகுதியிலிருந்த தனி வணிகர்களைப் பற்றி குறிப்பிடுகிறது. திருவாடானை வட்டம், இராதானூரிலுள்ள கல்வெட்டு செம்பொன்மாரியைச் சேர்ந்த அவ்வைப் பெருந்தெரு வணிகன் சம்பந்தன் பள்ளியாழ்வான் என்ற மிதிக்குணநாயகன், அவ்வூரிலிருந்த சிவன் கோயிலுக்குத் தூண் ஒன்றைத் தானமாக வழங்கிய செய்தியைக் காட்டுகிறது11.
பட்டினம்
இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டத்தில் அமைந்துள்ள திருமாலுங்கண்டார்கோட்டை என்ற ஊரானது, இடைக்காலப் பாண்டியர் காலத்தில் எறிவீரர்களால் பாதுகாக்கப்பட்ட வணிக நகராக இருந்துள்ளது. கல்வெட்டில் திருமாலுங்கண்டார்கோட்டை என்ற ஊரை இடைவழியாகிய எறிவீரப்பட்டினம் என குறிப்பிடுவதை அறிய முடிகிறது12. பிற்காலப் பாண்டியர் ஆட்சியில் இராமநாதபுரம் வட்டாரக் கடற்கரைப் பகுதியில் தேவிப்பட்டினம், பெரியபட்டினம், கீழக்கரை, தொண்டி ஆகியவை முக்கிய துறைமுகப் பட்டினங்களாக இருந்து வந்துள்ளன13. இப்பகுதியில் தங்கியிருந்த பல வணிகக் குழுக்கள் இத்துறைமுகங்களை மையமாகக் கொண்டு வணிகம் செய்து வந்துள்ளன. இவற்றைத் தவிர உட்பகுதிகளில் உள்ள திருமாலுங்கண்டார்கோட்டை, இராதானூர் மற்றும் தீத்தாண்டதானபுரத்தில் முகமழகியான் பெருந்தெரு என்ற வணிகர்களின் குடியிருப்பும் இருந்துள்ளதை இவ்வூர்களிலுள்ள கல்வெட்டுகள் சான்று பகர்கின்றன14.
பொருட்கள்
இராமநாதபுரம் மாவட்டக் கடற்கரைப் பகுதிகளிலுள்ள இடைக்காலப் பாண்டியர்கள், விஜயநகர-நாயக்கர்க் காலக் கல்வெட்டுகள் இப்பகுதியில் வணிகம் செய்யப்பட்ட பொருட்களைப் பற்றிய குறிப்புகளைக் காட்டுகின்றது. தேவிப்பட்டினத்தில் மிளகு, பாக்கு, கருஞ்சரக்கு, புடவை போன்றவை, கி.பி.13ஆம் நூற்றாண்டு வாக்கில் அயல் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன15. இத்துறைமுகப் பட்டினத்திற்குப் பல பகுதிகளிலிருந்து சரக்குகள் வந்து பின்னர் அவை பல இடங்களுக்குச் சென்றுள்ளன. மேலும், இங்கு ஏறுவன, இறக்குவன, எடுப்பன, நிறுப்பன, விரிப்பன, பிடிப்பன, அளப்பன, முகப்பன ஆகிய தன்மைகளையுடைய பலதரப்பட்ட வணிகப் பொருட்கள் வணிகம் செய்யப்பட்டதை கல்வெட்டுச் சான்றுகள் வாயிலாக அறிய முடிகிறது16. முக்கிய வணிகப் பொருளாகக் கீழக்கரையில் கி.பி.16ஆம் நூற்றாண்டில் முத்து இருந்திருக்கிறது17.
போக்குவரத்துச் சாதனங்கள்
இராமநாதபுரம் வட்டாரக் கடற்கரைப் பகுதிகளில் கடல்சார் வணிகத்தில் பயன்படுத்தப்பட்ட சில போக்குவரத்துச் சாதனங்கள் பற்றிப் பிற்காலப் பாண்டியர் கல்வெட்டுகள் வாயிலாக அறிய முடிகிறது. தேவிப்பட்டினம் துறைமுகத்தில் சிற்றுரு, தோணி போன்ற கலங்கள், கடல்சார் வணிகத்தில் சரக்குப் போக்குவரத்திற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன18. மேலும், பொருட்களை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு எடுத்துச் செல்ல, ஆட்களையும் பயன்படுத்தியுள்ளனர்.
அயல்நாட்டு வணிகம்
இராமநாதபுரம் வட்டாரத்தில் கடற்கரையில் அமைந்துள்ள துறைமுகப் பட்டினங்களுக்கும் இலங்கை, அரேபிய நாடுகளுக்கிடையேயும் மிக நெருக்கமான கடல்சார் வணிகத் தொடர்பு இருந்துள்ளது. இவ்வணிகத் தொடர்பில் தென்னிலங்கையைச் சார்ந்த வளஞ்சியரும் இசுலாம் சமயத்தைச் சார்ந்த அரேபிய வணிகர்களான அஞ்சு வண்ணத்தாரும் ஈடுபட்டிருந்தனர்.
உள் வணிகம்
கி.பி.13-14ஆம் நூற்றாண்டில் இராமநாதபுரம் வட்டாரப் பகுதியில் அஞ்சுவண்ணத்தார், மணிக்கிராமத்தார், தென்னிலங்கை வளஞ்சியர், நகரத்தார், நானாதேசிகள், பதினெண்விசயத்தார், கைக்கோளர்கள் ஆகிய வணிகக் குழுக்கள், தேவிப்பட்டினம், பெரியபட்டினம், கீழக்கரை, தொண்டி ஆகிய கடற்கரை துறைமுகப் பட்டினங்களையும் தீத்தாண்டதானபுரம், இராதானூர், திருமாலுங்கண்டார்கோட்டை முதலிய கடற்கரைக்கு அருகில் உள்ள பகுதிகளையும் மையமாகக் கொண்டு கடல்சார் வணிக நடவடிக்கைகளைச் செய்து வந்துள்ளன. இதே காலக்கட்டத்தில் இராமநாதபுரம் வட்டாரத்திற்கு அருகே இருக்கும் சிவகங்கை வட்டாரத்தில் பெரும்பாலும் நகரத்தார்கள் நாட்டின் உட்பகுதியில் வணிகம் செய்து வந்தனர். இவர்கள் விற்ற பொருட்களைப் பற்றி, பிரான்மலை கல்வெட்டு குறிப்பிடுகிறது19. அதாவது உப்பு, நெல், அரசி, பயறு, அவரை, துவரை, ஆமணக்கு, பாக்கு, மிளகு, மஞ்சள், கடுகு, சுக்கு, சீரகம், நெல்லி, வெங்காயம், இரும்பு, பருத்தி, நூல், புடவை, எள் தைலம், குதிரை, யானை முதலியவற்றைப் பதினெண்விசையத்தார், திசையாயிரத்து ஐந்நூற்றுவர், நகரத்தார் ஆகிய வணிகக் குழுக்கள் வணிகம் செய்துள்ளன என்பதை அறிய முடிகிறது.
இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள திருவாடானை, முதுகுளத்தூர் பகுதிகள் இராமநாதபுரம் வட்டாரக் கடற்கரையிலுள்ள துறைமுகங்களையும், சிவகங்கை வட்டார உட்பகுதி வணிக நகரங்களையும் இணைக்கும் பகுதிகளாக இருந்துள்ளன. கடற்கரைப் பகுதிகள் மற்றும் உட்பகுதிகளிலிருந்த பல்வேறு வணிகக் குழுக்கள் குழு அமைப்பில் இயங்கியதால் இவர்கள் வணிகம் செய்த பகுதிகளிலிருந்த திருக்கோயில்களின் வழிபாட்டிற்கும் பராமரிப்பிற்கும் கொடைகள் வழங்கும்போது வணிகம் தொடர்பான தீர்மானங்களை இணைந்து எடுத்துள்ளனர்.
சான்றெண் விளக்கம்
- Annual report of indian epigraphy for 1926 – 27, Archaeological survey of India, New Delhi, No.599.
- Noboru Karashima (ed), Ancient and Medieval Commercial Activities in the Indian Ocean: Testimony of Inscription and Ceramic Sherds, Taisho University, Tokyo, 2002.P.269.
- Annual report of Indian epigraphy for 1926 – 27, Archaeological survey of india, New Delhi, 599, 601.
- V.Subrahmanya Aiyer, South Indian inscriptions, Vol.8, Archaeological survey of India, New Delhi, Nos.405, 404, 1937, p.215.
- V.Subrahmanya Aiyer, South Indian inscriptions, Vol.8, Archaeological survey of India, New Delhi, Nos.405, 404, 1937, p.215.
- V.Subrahmanya Aiyer, South indian inscriptions, Vol.8, Archaeological survey of India, New Delhi, No.403, 1937, pp.213 – 214.
- V.Subrahmanya Aiyer, South indian inscriptions, Vol.8, Archaeological survey of India, New Delhi, No.405, 1937, p.215.
- V.Srinivasa Rao, South indian inscriptions, Vol.23, Archaeological survey of india, New Delhi, Nos.396, 398, 1979, pp.296 – 298
- V.Subrahmanya Aiyer, South Indian inscriptions, Vol.8, Archaeological survey of India, New Delhi, No.396, 1937, p.209.
- V.Mahalingam, A Topographical list of Inscription in the Tamil Nadu and Kerala states, Vol.VI, Indian Council of Historical Research, New Delhi, 1978, P.410.
- மேலது, ப.411.
- மேலது, ப.224.
- பா.ஜெயக்குமார், தமிழகத் துறைமுகங்கள் (இடைக்காலம்), அன்பு வெளியீட்டகம், தஞ்சாவூர், 2001, பக்.83 – 107.
- V.Subrahmanya Aiyer, South indian inscriptions, Vol.8, Archaeological survey of india, New Delhi, No.403, 1937, p.214.
- V.Subrahmanya Aiyer, South indian inscriptions, Vol.8, Archaeological survey of india, New Delhi, No.405, 1937, p.215.
- V.Subrahmanya Aiyer, South indian inscriptions, Vol.8, Archaeological survey of india, New Delhi, No.403, 1937, p.214.
- South indian inscriptions, Vol.23, Archaeological survey of india, New Delhi, No.396, 1979, pp.296 – 297.
- V.Subrahmanya Aiyer, South indian inscriptions, Vol.8, Archaeological survey of india, New Delhi, No.405, 1937, p.215.
- V.Subrahmanya Aiyer, South indian inscriptions, Vol.8, Archaeological survey of india, New Delhi, No.442, 1937.
=================================================
ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):
ஆசிரியர் கூற்றுப்படியே இராமநாதபுரம் அதிகமான ஆற்று வடிநிலம் கொண்ட பகுதிதான். கல்வெட்டுகளின் அடிப்படையில் இராமநாதபுரம் 13 -16 நூற்றாண்டுகளில், சிறப்பாக, பிற்காலப் பாண்டியர் ஆட்சியில் வணிக மையமாய்ச் செழித்திருந்ததைத் தகுந்த சான்றுகளை வைத்துக் காட்டியுள்ளார். ஆசிரியர் தமது கடின உழைப்பை இதன் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். இதுகாறும் அறியப்படாத அரிய வணிகச் செய்திகளை நூல் ஆதாரங்கள் மூலம் எடுத்துத் தந்துள்ளார். இதில் தரப்பட்டுள்ள தரவுகள், எதிர்கால இளம் ஆய்வாளர்களுக்குத் தக்க முறையில் திசை காட்டுவதாக அமைந்துள்ளன.
=================================================
-
நீல ஜ்வாலைகள்
மூலம்: சி.வி.பாலகிருஷ்ணன்
மலையாளத்திலிருந்து தமிழில்: முனைவர் நா.தீபா சரவணன்
ஒருவன் மழையில் ஓடிவந்து ரெஸ்ட்டோரண்டின் கிழக்குப் புறமுள்ள படிக்கட்டு வழியாக பாருக்குள் நுழைந்தான். முழுவதுமாக நினைந்திருந்தபோதும் அவன் அதை பெரிதுபடுத்தவில்லை.
பகல் அப்போதுதான் முடியப்போகிறது. பாரில் பெரிய கூட்டமொன்றுமில்லை. அவனுக்கேற்ற சௌகர்யமான ஒரு இருப்பிடம் கிடைத்தது. தனது தோளில் தூக்கியிருந்த தோள்பையை அவன் பக்கத்து இருப்பிடத்தில் வைத்தான். ஒரு வெயிட்டர் அவனுடைய மேசைக்கருகில் வந்தான். அவன் ரெண்டு பெக் பிராண்டி சொன்னான்.
“சேர்த்து சாப்பிடறதுக்கு ஏதாவது? பீ நட் மசாலா, எக் அன்டு பீஸ் க்ராம் ஃப்ரை, சில்லிச்சிக்கன், போர்க்………..”
‘ஒன்னும் வேண்டாம் ஊறுகாய் இருந்தா கொஞ்சம் கொண்டு வந்தா போதும்’.
அவன் தனக்கு முன்னால் இருப்பவர்களையும் புதிதாய் வந்தவர்களையும் மேலோட்டமாகப் பார்த்தான். அவர்கள் யாரையும் அவனுக்குப் பழக்கமில்லை. பார் அறைக்குள் சிகரெட் புகை நிறைந்திருந்தது. ஒரு மூடுபனிபோல, புகையுடன் சேர்ந்து பலவகையான மதுக்களினுடையவும், உணவுப் பதார்த்தங்களினுடையவும் வாசனை சுற்றுப்புறத்தில் கலந்திருந்தது. இரண்டாவது பெக்கும் தீர்ந்தபோது அவனுக்குப் புது அனுபவம் தோன்றிற்று. அவனுக்கு சிகரெட் பழக்கமில்லை. கடைசி பெக்கிற்கு கொஞ்சம் நேரம் ஒதுக்கலாம் என்று அவனுக்குத் தோன்றியது. அதற்கிடையில் ஓர் இளைஞன் அதீத கோபத்துடன் கெளவுன்டருக்கு அருகில் செல்வதை அவன் கவனித்தான். ஒரு கையில் முடியப்போகும் நிலையில் சிகரெட். மறுகையில் வளைந்த பிடியுள்ள குடை.
வேறொன்றும் செய்வதற்கில்லாததால் அவன் இளைஞனைப் பார்த்துக் கொண்டிருந்தான். கௌன்டரின் அருகில் சென்றபிறகும் அவனது கோபம் தணியவில்லை. கண் இமைக்கின்ற வேகத்தில் முதல் டம்ளர் காலியானது. மீண்டும் ஒரு டம்ளர்க்கு சைகைக் காண்பித்து ஒரு சிகரெட்டைப் பத்தவைத்தான்.
“சார் …”
வெயிட்டர் மூன்றாவது பெக் பிராண்டியுடன் வந்தான்.
அவன் இளைஞனிலிருந்து கெண்ணெடுத்தான்
“பில்லு கொண்டு வந்திருங்க …”
வெயிட்டர் பில்லு கொண்டு வரும் போதும் அவன் கடைசி பெக்கைத் தொடவில்லை. பில்லின் தொகைக்கு மேல் ஐந்து ரூபாய் கூடுதலாகக் கொடுத்து வெயிட்டரை அனுப்பிவைத்தான். பிறகு அவன் பையிலிருந்து ஒரு சின்ன பாட்டில் விஷத்தை வெளியிலெடுத்தான். அது நீலநிறமாக இருந்தது. வெளியில் கனமழை பெய்து கொண்டிருந்து அவன் பிராண்டியில் விஷத்தைக் கலக்கின பிறகு காலி பாட்டிலை பையிலேயே வைத்தான். டம்ளரின் முக்கால் பாகத்திற்கு சோடா கலந்து அவன் தன்னுடைய கடைசி ட்ரிங்கை தயார் செய்து வைத்தான். அதோ சில நினைவுகளின் மின்னலோட்டம். கடந்தகாலத்தின் சில நிழலாட்டங்கள். பல குரல்கள். அவன் நிம்மதி பெருமூச்சுடன் கண்களை மூடினான். போதும் இனிமேல் முடியாது. கடைசி காலங்களை நினைக்கும் போது வாழ்க்கை ஒரு பெரிய விஷயமொன்றுமில்லை. முன்பு யாரோ கூறியதுபோல இந்த உலகம் பலதையும் பலவிதமாக பேசுகின்ற ஒரு முட்டாள். இதை யாரும் கொன்று புதைக்க வாய்ப்பில்லை. நம்மைக் காப்பாற்ற நம்மால் முடிந்ததை நாம்தான் செய்யவேண்டும். முன்னால் வைக்கப்பட்டுள்ள டம்ளரில் நீல ஜ்வாலைகள் படர்ந்தது. இனி இழப்பதற்கோ அடைவதற்கோ ஒன்றுமில்லை. காலம் முன்னோக்கிப் போகட்டும். எனக்கு ஓரடி கூட இனி போவதற்கில்லை. யாராவது என்றைக்காவது என்மேல் அன்பு காட்டியிருந்தால் அவர்கள் என்னை மன்னிக்கட்டும்.
அவன் கண்களைத் திறந்து விஷம் கலக்கி வைத்த டம்ளர்க்கு நேராக கைநீட்டத் தொடங்கும் போதுதான் பார்த்தான் கவுன்டர்க்கருகில் நின்ற இளைஞன் தனது மேசைக்கு எதிரில் நிற்கிறான்.
“அண்ணா எங்கிட்ட ரெண்டு லார்ஜீக்கு மட்டுந்தா காசு இருந்துச்சு. எனக்கு பத்தல. தப்பா எடுத்துக்காதீங்க. இன்னும் ஒண்ணு கூடுதலா எனக்கு வேணும். கண்டிப்பா நா இத எடுத்துக்கறேன்……… கட்டாயமா நான் இதை எடுக்கறேன்.
அவன் தடுப்பதற்கு முன்பே இளைஞன், அவன் தயாரித்து வைத்திருந்த மதுவை ஒரே மூச்சில் குடித்து முடித்தான்.
“சாரி … சாரி யா”
டம்ளரைக் கீழே வைத்து இளைஞன் கதவைப் பார்த்து நடந்தான். சூன்யமான டம்ளரை உற்றுப்பார்த்துக் கொண்டு அவன் அங்கேயே உட்கார்ந்தான்……..
-
படக்கவிதைப் போட்டி 202-இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி
இராமலக்ஷ்மி எடுத்திருக்கும் இப்படத்தை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்துப் படக்கவிதைப் போட்டி 202க்கு அளித்திருப்பவர் சாந்தி மாரியப்பன். வல்லமைமிகு பெண்கள் இவ்விருவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக!
திருநீற்றுப் பூச்சுடன் பக்திப்பழமாய் அமர்ந்தபடி, பொத்தகத்தில் சித்தத்தைச் செலுத்தியிருக்கும் இப்பெரியவரின் முகத்தில் தெரிவது கைப்பான அனுபவங்கள் தந்த வருத்தமா? வாழ்க்கை இவ்வளவுதான் என்பதை விளங்கிக்கொண்டதால் வந்த விரக்தியா? புரியவில்லை!
நம் ஐயத்தைத் தம் தீர்க்கமான கருத்துக்களால் தெளிவிக்கக் காத்திருக்கின்றனர் கவிஞர்கள் இருவர்; அவர்களை வாழ்த்தி வரவேற்போம்!
”கடவுள் இல்லையென்று மறுத்த கல்லா இளமை கழிந்து, முதுமை உடலில் புகுந்து, பிள்ளைகளும் விட்டகன்றே பின்னே, தனித்த முதுமை தெய்வத்தின் துணையை நாடுகின்றது” என்று வாழ்வியல் உண்மையை எளிமையாய் விளம்பியிருக்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.
வளர்ச்சி…
இளமையின் வேகம் கடவுள்களே
இல்லை யென்று சொல்லவைத்தது,
வளர்ந்து பிள்ளைகள் வேலைக்கென
வேறிடம் பார்த்துச் சென்றபின்னே
தளர்வுடன் உடல்வலு குறைந்தபோது
தனிமை முதுமையில் வந்ததுவே,
வளர்ந்தது பற்று தெய்வத்திடம்
வந்து விட்டார் கோவிலுக்கே…!*****
அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்வாகியிருப்பது…
நெறியில் பழுத்த பழம்
நெற்றியில் இழுத்த திருநீற்றுச் சிவம்
நேற்றைய பட்டறிவின் முதிர் நரை
நேரற்ற சுருக்கங்கள் முதுமையின் முக்தி நிலைஅச்சிட்ட தாளில் அப்படி என்ன தெரிகிறது?
அழிந்துபோன வாழ்க்கையின் தொலைந்த பக்கங்களா? இல்லை
அடுத்து வரும் நாட்களின் இருண்ட பக்கங்களா?
அழகானதோ அழுக்கானதோ அதுவும் ஒரு சுகம் தானே?எத்தனை சாதனைகள் எத்தனை சோதனைகள்
எண்ணிக்கையில்லாத வாழ்க்கையின் பின்னல் முடிச்சுகள்
எதிர்பார்ப்பும் ஏமாற்றமுமாய்
எல்லாமும் எப்படியோ அவிழ்க்கப்பட்டு விட்டது!சிரிப்பாகத்தான் இருக்கிறது நுனி மரத்துச்
சிறு குருத்து மட்டைகளுக்கு
சிவந்து பழுத்த அடி மட்டைகளைப் பார்க்கும்போது
சீக்கிரமே தாங்களும் பழுத்துவிடுவோம் என அறியாமல்!கடமைகள் முடித்தாகிவிட்டது
கடன்களும் அடைத்தாகிவிட்டது
கடந்த காலத்தில் தேட மறந்த
கடவுள் மட்டுமே துணை கடைசிக் காலத்தில்இனி எல்லாம் அவன்தான் அவனே அன்பின் கூடு
இயன்றதைச் செய்தே இன்புற்று வாழ,
இனியவை தேடி இறைவனை நாடு
இனி இல்லை என்றும் ஒரு கேடு!பட்டறிவின் முதிர்நரையோடு வீற்றிருக்கும் இந்த முதியவருக்கு அச்சிட்ட காகிதத்தில் தெரிவது என்ன? அழிந்துபோன வாழ்க்கையின் தொலைந்த பக்கங்களா? அடுத்து வரும் நாட்களின் இருண்ட பக்கங்களா? எதுவாக இருந்தால் என்ன? வாழ்வின் இறுதிக்கட்டத்துக்கு வந்தாகிவிட்டது! ஆதலால் கேடுநீங்க இறையை நாடி வந்துவிட்டது முதுமை!” என்று இம்முதியவரின் வாழ்க்கையை ஒரு சிறுகதையாய்த் தன் கவிதையில் தீட்டியிருக்கும் திரு. யாழ். பாஸ்கரனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுத்துப் பாராட்டுகின்றேன்.




























