குறளின் கதிர்களாய்…(248)
-செண்பக ஜெகதீசன்
கூறாமை நோக்கிக் குறிப்பறிவா னெஞ்ஞான்றும்
மாறாநீர் வையக் கணி.
-திருக்குறள் -701(குறிப்பறிதல்)
புதுக் கவிதையில்…
மன்னன் மனத்திலுள்ளதை
அவன் கூறாமலே
முகம் அல்லது
கண்ணை நோக்கியே
கருத்தறிந்துகொள்ளும்
அமைச்சன்,
என்றும் வற்றா நீர்நிறை
கடல்சூழ் உலகினுக்கோர்
அணிகலன் ஆவான்…!
குறும்பாவில்…
கூறாமலே பிறர் உளக்குறிப்பறியும்
ஆற்றல்மிகு அமைச்சன் ஆவான்,
ஆழிசூழ் உலகிற்கு அணியாய்…!
மரபுக் கவிதையில்…
மன்னன் மனதில் உள்ளதையே
மனமது திறந்து சொல்லாமலே,
அன்னான் முகத்தைக் கண்பார்த்தே
அறிந்து கொள்ளும் ஆற்றலதைத்
தன்னால் கொண்டே செயலாற்றும்
தன்மை மிக்க அமைச்சனவன்,
என்றும் வற்றா கடல்சூழ்ந்த
எழிலாம் உலகினுக் கணியாமே…!
லிமரைக்கூ..
கருத்தறிவான் அரசனவன் கண்ணில்,
சொல்லாமலறிந்து செயல்படும் அமைச்சன்
அணிகலனாவான் கடல்சூழ் மண்ணில்…!
கிராமிய பாணியில்…
செயல்படு செயல்படு
கொறயில்லாம செயல்படு,
குறிப்பறிஞ்சி செயல்படு..
வாயத்தொறந்து ராசா சொல்லாமலே
அவரோட மொகத்தப் பாத்து
கண்ணப்பாத்து
குறிப்பறிஞ்சி வேலசெய்யிற
மந்திரி கெடச்சா
அவுரு
கடலுசூழ்ந்த ஒலகத்துக்கே
ஒரு ஒசந்த ஆபரணந்தான்..
அதால
செயல்படு செயல்படு
கொறயில்லாம செயல்படு,
குறிப்பறிஞ்சி செயல்படு…!