-நிர்மலா ராகவன்

நலம்.. நலமறிய ஆவல் (149)

அள்ள அள்ளக் குறையாதது

கல்வியும் அனுபவங்களும் நம் அறிவைப் பெருக்குகின்றன. அறிவு சக்தியை அளிக்கிறது.

`செல்வம்’ என்று கல்வி குறிப்பிடப்பட்டாலும், இந்த இரண்டிற்கும் இடையே ஒரு வேற்றுமை: அள்ள அள்ளக் குறையாதது கல்வி.

ஆசிரியர்கள் எவ்வளவு புத்திசாலிகள்!

சிறு வயதில், `இந்த ஆசிரியர்கள்தான் எவ்வளவு புத்திசாலிகள்! எத்தனை விஷயங்களைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள்!’ என்று ஒருவரிடம் ஒருவர் கூறி, பிரமித்து இருப்போம்.

(இத்தொழிலுக்கு வந்தபின்தான் தெரிந்தது, ஒவ்வொரு நாளும் கற்பிக்கும் பாடத்தை முதல்நாள் கண்விழித்து, நாமே கற்க வேண்டியிருக்கும் என்பது! பல வருடங்கள் தொடர்ந்து ஒரே பாடத்தை கற்பித்தால் மட்டும்தான் அது நினைவில் நிற்கும். ஒரு விஷயத்தை நன்றாகக் கற்றுக்கொண்டால்தானே அப்படிப் பெற்ற அறிவைப் பிறருக்கு வழங்க முடியும்?)

என்னதான் தம் வாயிலிருந்து உதிரும் ஒவ்வொரு வார்த்தையையும் பிறர் உற்றுக் கவனிப்பது ஆசிரியர்களின் பெருமையைக் கூட்டுகிறது என்றாலும், அவர்கள் மேலானவர்கள் என்றாகாது. தாம் பெற்ற அறிவைப் பிறருடன் பகிர்ந்துகொள்கிறார்கள். அவ்வளவுதான். ஆசிரியருக்குத் தெரிந்ததெல்லாம் ஒரு மாணவனுக்கும் தெரிந்திருந்தால், அவன் ஏன் கற்க வருகிறான்?

ஆசிரியர்கள் என்ன கற்றுக்கொடுத்தார்கள் என்பது எவர் நினைவிலும் வெகு காலம் தங்குவதில்லை. ஆனால், அவர்களது பண்பும் அணுகுமுறையும் மறக்கவே மறக்காது.

கதை

என் சக ஆசிரியர் ஒருவர் பள்ளியில் நடந்த ஒரு கண்காட்சிக்கு மாணவர்களை அதிசயிக்க வைக்கவேண்டுமென்று மிகுந்த பிரயாசை எடுத்துக்கொண்டார்.

அவரது முயற்சியைப் பார்த்துவிட்டு, என்னிடம் ஓடி வந்தார்கள் சில மாணவர்கள். “டீச்சர்! ஸார் ஒரு ராக்கெட் பண்ணியிருக்கார். அது அவ்வளவு ஜோரா மேலே போச்சு, தெரியுமா?”

அவர்களுடைய ஆர்வத்தை ரசித்து, “அவரிடமிருந்து நீங்களும் கற்றுக்கொள்ளலாமே!” என்றேன்.

அவர்கள் முகம் உடனே வாடியது. “நாங்கள் கேட்டோம். சொல்லிக்கொடுக்க மறுத்துவிட்டார்!”

தான் மாணவர்களைவிட உயர்வு என்று காட்டிக்கொள்ள நினைத்திருக்கிறார் அந்த ஆசிரியர்!

அவருக்கு நேர் எதிரிடை என் இசை குரு, எஸ்.கல்யாணராமன்.

ஒரு நாள் பாட்டு சொல்லிக்கொடுக்கையில், ஏதோ ஒரு ராகத்தில் மிக வேகமாக, அவருக்கே உரிய பிருகாக்களுடன் ஆலாபனை செய்து காட்டியபோது, அயர்ந்துபோனேன். உடல் பின்னோக்கிப் போயிற்று. `நம்மால் முடியுமா?’ என்ற பயம்தான் எழுந்தது.

அவர் முகம் பெருமையுடன் விகசிக்கவில்லை. “உன்னை பிரமிக்க வைக்க நான் இப்படிப் பாடிக் காட்டவில்லை. நீயும் இப்படிப் பாடவேண்டும் என்பதற்காகத்தான்! கற்றுக்கொள்!” என்று சீறினார்.

நல்ல ஆசிரியரானவர் மாணவர்கள் தம்மை மெச்ச வேண்டும் என்று எதையும் செய்யமாட்டார். மாணவர்களின் அறிவைப் பெருக்குவதுதான் அவரது லட்சியமாக அமையும்.

இந்த நோக்குடன் அவரவருக்குத் தெரிந்த முறையைப் பயன்படுத்துவார்கள். (முன்பெல்லாம் பெண்களைத் திட்டியோ, ஆண்பிள்ளைகளானால் அடித்தாலோதான் விரைவாகக் கற்பார்கள் என்று கருதப்பட்டது. ஏற்கெனவே பயந்த சுபாவம் உடைய ஒரு பையனுக்கு வன்முறையால் படித்ததும் மறந்துவிடும் என்பதை அவர்கள் ஏனோ உணரவில்லை).

பிறருக்குக் கற்பிப்பது என்றால் நம் நண்பர்களிடையே பகிர்வதாகவும் இருக்கலாம். இப்படி நினைத்துத்தான் நான் பலருக்கும் என்னாலான உதவி செய்வேன். இது பலருக்கும் புரிவதில்லை.

கதை

பூகோள ஆசிரியையான ரோஸ் சான் என்னிடம் அடிக்கடி இந்தியாவைப்பற்றிய சந்தேகம் கேட்பாள். எனக்குத் தெரிந்ததை விளக்குவேன். நான் சொல்லச் சொல்லத் துருவுவாள்.

ஒரு முறை, ஏதோ புத்தகத்தில் எழுதியிருந்ததைப்பற்றி அவள் யாரிடமோ கூறிக்கொண்டிருந்தது என் காதில் விழுந்தது.

தெரியாத்தனமாக, “அந்த புத்தகத்தைக் கொண்டுவந்து காட்டுகிறாயா?” என்று நான் கேட்டுவிட்டேன்.

சற்றும் யோசியாது, “அது மூன்றே வெள்ளிதான்!” என்றாள் ஏளனமாக. `நீயே வாங்கிக்கொள்ள என்ன கேடு!’ என்ற அர்த்தம் அதில் பொதிந்திருந்தது.

நொந்துபோனேன்.

சுமார் ஓராண்டு காலமாக நான் கூறிவந்ததை பல புத்தகங்களைத் தேடிப் படித்து அவள் தெரிந்து கொண்டிருக்கலாம். சுலபமான வழி என்று என்னை அணுகியிருக்கிறாள்!

`இது என்னுடையது. உன்னுடையதையும் எனக்குக் கொடு!’ என்பதுபோல் சுயநலத்துடன் வாழ்பவர்கள் வாழ்க்கையில் வேகமாக உயரக்கூடும். இருப்பினும், எப்போதும் பிறரை மிஞ்சவேண்டும், அதனால் நம் அறிவைப் பகிர்ந்துகொள்ளக்கூடாது என்று நினைப்பவர்களுக்கு உண்மையான நண்பர்கள் வாய்க்கமாட்டார்கள். மகிழ்ச்சியும் கிட்டாது.

சில நாட்களுக்குப்பின், என்னிடம் ஏதோ சந்தேகம் கேட்க வந்தாள் ரோஸ் சான்.

“எனக்குத் தெரியாது!” என்றேன், விறைப்பாக.

வெவ்வேறு விதமாகக் கேட்டுப்பார்த்தாள். நான் பிடிகொடுக்கவில்லை.

எல்லாருக்கும் உதவி செய்து நம் சக்தியைச் செலவழிப்பதைவிட தமக்குத்தாமே உதவி செய்துகொள்ள இயலாதவர்களுக்கு மட்டும் உதவி செய்தால் — அவர்கள் நன்றியுடன் இருக்கிறார்களோ, இல்லையோ — பலனடைவார்களே என்று தோன்றிப்போயிற்று.

எழுத்தாளருக்கும் ஆசிரியருக்கும் இடையே சில ஒற்றுமைகள் இருக்கின்றன:

1 எல்லாவற்றையும் விளக்கிக்கொண்டே இருந்தால், அவர் சுமாரானவர்தான். இப்படி எழுதுவதை ஆங்கிலத்தில், “Telling” என்பார்கள். மாணவரோ, வாசகரோ, சிலவற்றை அவர் தாமே புரிந்துகொள்ள வழிவகுக்க வேண்டும்.

2 `இப்படிச் செய்யுங்கள்!’ என்று அதிகாரம் செய்பவர் மிகச் சுமார். (ஒரு கதையில், `நீங்களாவது இதிலிருந்து நீதி கற்றுக்கொள்ளுங்கள்!’ என்று எழுதுவது சிறுபிள்ளைகளுக்கான பள்ளிக்கூடப் புத்தகத்தில் வேண்டுமானால் பொருத்தமாக இருக்கலாம். பொழுதுபோக்காக நாம் படிப்பவைகளில் இம்முறை அலுப்பைத்தான் தரும்).

3 `இதைப்பற்றி மேலும் அறியவேண்டும்!’ என்ற உந்துதலை அளிப்பவர் சிறந்தவர். ஆசிரியர் அருகில் இல்லாவிட்டாலும். அவர் மாணவனுடனேயே போட்டியா!

கற்றுக்கொடுத்ததை சிறப்பாகச் செய்யும் தன்னம்பிக்கையை அளிப்பவர் அவர்.

தட்டிக்கொடுக்கலாமே!

அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும் குடும்பத்திலிருந்து வரும் மாணவனுக்கு கற்றுக்கொடுப்பது எளிது. வயதில் மூத்தவர்களிடம் மரியாதையாக நடப்பது அவனுக்கு இளம்வயதிலேயே போதிக்கப்பட்டிருக்கிறது. அவனிடம் பெற்றோர் காட்டிய அனுசரணையான போக்கால் அவனும் அப்படியே நடக்கிறான்.

அவனுக்கு நேர் எதிரிடையான பின்னணியிலிருந்து வரும் மாணவர்களைத் திட்டினாலோ, அடித்தாலோ அவர்களை நல்வழிப்படுத்த முடியாது. ஏனெனில், அது அவர்களுக்குப் பழகிப்போன சமாசாரம். நிலைமை இன்னும் மோசமாகத்தான் ஆகும்.

அன்பும் கண்டிப்பும் காட்டினால், `இந்த ஆசிரியருக்குத்தான் நம்மேல்தான் எவ்வளவு அக்கறை!’ என்று நெகிழ்ந்து போவார்கள்.

மட்டம் தட்டுவதைவிட தட்டிக்கொடுப்பது இருதரப்பினருக்கும் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் ஊட்டவல்லது.

போட்டி மனப்பான்மை

விழாக்காலங்களில், ஒரே நாளில் இரண்டு அல்லது மூன்று நாட்டியப்பள்ளிகள் கலந்துகொள்ள நேரும்போது, `என் மாணவிகள்தாம் முதலில் ஆடவேண்டும்!’ என்று ஏற்பாட்டாளர்களை வற்புறுத்தி, சண்டையும் பிடிக்கும் ஆசிரியைகளை அடிக்கடி பார்க்கிறேன்.

பெற்றோர்களிடமிருந்தும் ஆசிரியர்களிடமிருந்தும்தான் இளவயதினர் தம் பண்பைக் கற்கிறார்கள். `நம்மை முன்னிருத்திக்கொள்ள வேண்டும்!’ என்பது ஆசிரியர்கள் மாணவிகளுக்கு அளிக்கும் தவறான பாடம். மாணவிகளும் கர்வத்துடன் நடக்கத் தலைப்படுகிறார்கள்.

“என் மாணவன் என்னைவிட நன்றாக வாசித்துவிட்டான். அவனை இன்னொருமுறை எல்லாவற்றையும் வாசிக்கவைத்தேன்!” ஓர் இசைப்பதிவுக்குப்பின் ஆசிரியர் ஒருவர் என்னிடம் அதிர்ச்சியுடன் கூறினார்.

மாணவனுடனேயே போட்டியா!

சீடன் குருவை மிஞ்சினால் பெருமை அடைந்து பாராட்ட வேண்டாமா?

இசை, நாட்டியம் போன்ற நுண்கலைகள் இறைவனைத் துதிக்கும் வழிகள் என்பதை இப்போது பலரும் உணராமல் போனது காலத்தின் கோலமா?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *