மனநலம் காக்க மனவளக்கலை

0

த. சுதா
முனைவர் பட்ட ஆய்வாளர், யோகமும் மனித மாண்பும் துறை
பாரதியார் பல்கலைகழகம், கோவை

முன்னுரை

மனதை இதமாக வைத்திருப்பன் மனிதன். “மனமில்லாத மனிதனும் இல்லை, மனதை அறிந்த மனிதனும் இல்லை, மனதை அறிந்தவன் ஞானி”. சிறந்த ஆரோக்கியம் என்பது ஆரோக்கியமான உடலைப் பெற்றிருப்பது மட்டும் அல்ல. ஆரோக்கியமான மனதையும் பெற்றிருப்பதாகும்.

  “மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம்
    மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா
    மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
    மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே”

என்ற பாடலில் அகத்தியர் மனம் செம்மையானால் மந்திரம் சொல்ல வேண்டியது இல்லை. மூச்சுக்காற்றை மூலாதாரத்திலிருந்து உயர்த்த வேண்டியது இல்லை. வாசி என்ற குண்டலி சக்தியை சக்கரத்தில் நிறுத்த வேண்டியது இல்லை என்று கூறியுள்ளார். அப்படிபட்ட மனநலத்தைக் காக்க மனவளக்கலையின் பங்கு என்ன என்பதைக் காணலாம்.

மனநலம்

ஆரோக்கியமான மனதைப் பெற்றிருப்பவர்கள், தெளிவாக சிந்திப்பவராகவும், வாழ்க்கையில் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளைத் தீர்வு கண்டு முடிவு எடுப்பராகவும் இருக்க வேண்டும். நண்பர்கள், உடன் பணிபுரிபவர்கள், குடும்பத்தினருடன் நல்லுறவு கொண்டவராகவும், சமுதாயத்தில் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியளிப்பவராகவும் விளங்கவேண்டும். மனம் சார்ந்த இந்த தன்மையே மனநலம் எனலாம்.

உடல் உறுதி மட்டும் ஆரோக்கியம் அல்ல
உள்ளத்தின் தெளிவும் இணைந்ததே ஆரோக்கியம். – ஆதிசங்கரர்.

மனம் அடக்க நினைத்தால் அலையும்
அறிய நினைத்தால் அடங்கும் – வேதாத்திரி மகரிசி

அலையும் மனதை அடக்க முடியாது
அடக்க நினைப்பது புயலைத்தடுத்தச் செய்வதற்கு சமம் – பகவத் கீதை.

மனதை அடக்க முடியாது, மனதை விலக்கவும் முடியாது. சும்மா இருந்தாலே மனம் விலகிவிடும். உடலும், மனமும் நாணத்தின் இரண்டு பக்கங்கள் போன்றதாகும். ஒன்றின் தன்மை மற்றொன்றில் பிரதிபலிக்கும் உடலுக்கு பாதிப்பு ஏற்படுவது போல் மனதிற்கும் பாதிப்பு ஏற்படுகிறது. இதனை மனநோய் எனலாம்.

குழந்தைகள் முதல் பெரியவர் வரை மனநோய்க்கு ஆளாகின்றனர். மனநலப் பாதிப்பிற்கு காரணமாக அமைவது இரண்டு விதமான உணர்ச்சிகள் மனச்சோர்வும், பதற்றம் ஆகியன.

அதிக வேலை, தேவைகள் நிறைவேறாமை, பேராசை, எதிர்பார்ப்பு, நிர்பந்தம் இதனால் மனநலம் பாதிக்கிறது என்கிறார் – அகத்தியர்.

அறுகுணமாகிய பேராசை, சினம், கடும்பற்று, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம், இவற்றால் மனநலம் பாதிக்கிறன்றது என்கிறார் – வேதாந்த மகரிஷி.

ஒவ்வொருவரும் தன் வாழ்நாளில் ஒரு முறையாவது மனச்சோர்வுக்கு ஆளாகின்றனர்.

மனநலத்தை பாதிக்கும் காரணிகள்

உடல் பாதிப்பு

அதிக அமிலச் சுரப்பு, நோய் எதிhப்பு சக்தி குறைவது, தானியங்கி நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகள் குறைவது. சிறுநீரக செயலிழப்பு, குழந்தையின்மை, புற்று நோய், கல்லீரல் பாதிப்பு, சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் பெண்களுக்கு மாதவிலக்கு நிற்கும்  நேரத்தில் ஏற்படும் மன அழுத்தம் முதலியன.

உறவுகளில் பாதிப்பு 

நெருங்கிய உறவினர்களின் திடீர் மரணம், விபத்துக்கள், பொருள் காணாமல் போதல், குழந்தைகள் தங்கள் பேச்சுக்கு மதிப்பு கொடுக்காமை. கணவன், மனைவிக்கு இடையே பிரச்சனைகள், விவாகரத்து தோன்றுவது, நெருங்கிய உறவினர்களுக்கு இடையே சண்டை, மனஸ்தாபம் தோன்றுவது, காட்டமான வாழ்க்கை பின்னனி, உறவினர் கொடுமை. தனிமை அன்புக்கு ஏங்கித் தவித்தல். மகிழ்ச்சியற்ற வாழ்க்கை, அன்பு கிடைக்காமை, சிறுவயத்தில் பாலியல் கொடுமைக்கு ஆளாகுவது, ஓரினச் சேர்க்ககை முதலியன.

மூளையில் தோன்றும் பாதிப்பு 

மூளைக் காய்ச்சல், தலையில் அடிபட்டு கவனிக்காமல் விடுவதால், நரம்புகள் உணர்ச்சிகளை கடத்தாமை, நரம்புகளில் அழுத்தம் தோன்றுதல். நாளமில்லாச் சுரப்பிகளின் இயக்கம் குறைதல் ஆகியன.

மரபு மற்றும் சூழ்நிலை 

பாரம்பரியம் வழியாகவும், நம் முன்னோர்கள் இரத்த சம்பந்தப்பட்டவர்கள் மனநலம் பாதித்து இருந்தால் தொடர்ந்து வருவது, சூழ்நிலை காரணமாகவும், மன நலம் பாதிக்கப்படுகின்றன.

சுற்றுப்புற சூழல் 

சுற்றுப்புறச் சுழலில் காற்று மாசுபடுதல், இரச்சல் தேவையற்ற சத்தம் நம் காது கேட்கும் திறனை விட அதிக சத்தத்திற்கும் ஆளாகும் போதும் மனநலம் பாதிக்கப்படுகின்றன.

மனநலபாதிப்பின் அறிகுறிகள் 

1. மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் எந்த செயலையும் செய்ய முடியாமை. இயலாமை, தாழ்வு மனப்பான்மை, தன்னம்பிக்கையின்மை.

2. நேர்மறையான எண்ணங்கள் தோன்றாமை, திட்டமிடாத சிந்தனை, நம்மால் நிச்சயம் முடியாது என்று எண்ணுவது.

3. சோர்வு, பயம், கவலை, தேவையில்லாத அழுகை, பசியின்மை, தூக்கமின்மை பெருமூச்சு விடுதல், இரத்த ஓட்டம் அதிகரித்தல்.

4. தசை இறுக்கம், அதிக வேர்வை, பொறுமையின்மை, சக்தியின்மை, விரக்தி போன்றவை மனநலம் பாதித்தவர்களுக்கு தோன்றும்.

5. மனக்குழப்பங்களுக்கு முக்கியக் காரணம் ஊர் என்ன சொல்லும், உறவினர்கள் என்ன சொல்வார்கள், அக்கம்பக்கம் என்ன சொல்வார்கள் என்ற பயம்தான். மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்று பயந்தான். பலர் தன் துன்பங்களை மனதில் மறைத்து அனுசரித்து வாழ்கிறார்கள்.

மனநலத்தைக் காக்க பயிற்சிகள் 

வேதாந்திரி மகரிசி அருளிய மனவளக்கலையின் உடற்பயிற்சிகள் 

தசை நார் மூச்சுப் பயிற்சி.

உடல் தளர்துதல் பயிற்ச்சி.

இப்பயிற்சியை செய்வதன் மூலம் மனச்சோர்வு மற்றும் பதற்றம் நீங்கும். மனம் வலுப்பெறுவதற்கு தவம் பயிற்சிகளும் தற்சோதனையும் அவசியம் தேவை.

மனம் தூய்மை அடைவதற்கு அகத்தூய்மை பயிற்சிகள். இதில் எண்ணம் ஆராய்தல்.
ஆசை சீரமைத்தல்.
சினம் தவிர்த்தல்.
கவலை ஒழித்தல்.

வாழ்வின் நோக்கம்

இப்பயிற்சிகள் செய்து தன்னைப் பற்றியும், தன்தேவைகள் பற்றியும், தன் செயலின் விளைவைப் பற்றியும், தன் தகுதியை பற்றியும், தன் மதிப்பைப் பற்றியும் ஆராய்ந்து மனநலத்தை மேம்பாடு அடையச் செய்யலாம்.

முடிவுரை

நம் மனம் மிகவும் சஞ்சலமுடையது. இதைச் சீர் செய்ய மனவளக்கலை தியானம் உதவும். மனம் எப்போதும் கடந்த காலத்தையும், வருங்காலத்தையும் மட்டுமே சிந்திக்கும். இப்போது நடக்கும் நிகழ்காலத்தைப் பற்றி சிந்திக்க மறுக்கும். ஆனால் நிகழ்காலம் மட்டும் தான் நிச்சயம். நிகழ்காலம் தான் கடந்த காலமாக மாறுகிறது. நிகழ்காலம் தான் வருங்காலத்தை நிர்ணயிக்கிறது. மனநலம் வேண்டுமானால் நிகழ்காலத்தைப் பற்றி,  சிந்தித்து செயல்பட வேண்டும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *