எங்கள் தோட்டிச்சியைப் பற்றிய ஒரு குமுறல்

நாகேஸ்வரி அண்ணாமலை

இந்தியாவில் மேட்டுக்குடி மக்களும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களும் பல வகையான உணவை உண்ணும் பாக்கியம் பெற்றவர்களாக இருக்கிறோம். இந்த வகுப்பைச் சேர்ந்த நாங்களும் அமெரிக்கா வந்த பிறகு எங்களுக்கு இன்னும் அதிகமாகப் பல வகையான உணவுகளை உண்ணும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தினமும் காலையில் அமெரிக்காவில்கூட இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி என்று இதில் எதையாவது ஒன்றைச் சாப்பிடுகிறோம். மதியம் சோறு, சாம்பார், ரசம், இரண்டு
பொரியல்கள், தயிர் இத்யாதி. இரவு மறுபடி சோறு அல்லது சப்பாத்தி, தொட்டுக்கொள்ளப் பல வகையான துணைக்கறிகள். இடையில் சாயந்திரம் ஏதாவது தின்பண்டங்கள் மற்றும் காப்பி. ஒவ்வொரு சாப்பாட்டிற்குப் பிறகும் இனிப்புகள் வேறு. இடையிடையே பார்ட்டிகள் வேறு. (வேலைக்குப் போகும் பெண்கள் இவ்வளவு சமைப்பதில்லை என்பதால் இவ்வளவு வகைச் சாப்பாடு
சாப்பிடுவதில்லை என்றாலும் வெளியில் நன்றாகச் சாப்பிடுகிறார்கள்.)

நான் சிறுமியாக இருந்தபோது எங்கள் வீட்டில் எங்கள் கழிவுகளைச் சுத்தம் செய்த நாகா என்ற பெண்ணின் ஞாபகம் எனக்கு அடிக்கடி வந்தாலும் திடீரென்று இன்று அவளைப் பற்றிய ஞாபகம் அதிகமாக வந்தது. அப்போதே அவள் மீது எனக்கு ஒரு பரிவு உண்டு. கூட்டுக் குடும்பம் என்பதால் பழைய சாதம் எப்போதும் எங்கள் வீட்டில் இருக்கும். தினமும் நாகா பத்துமணி வாக்கில் எல்லோர் வீட்டிலும் வேலைகளை முடித்துவிட்டு எங்கள் வீட்டிற்கு வந்து நாங்கள் கொடுக்கும் பழைய சோற்றை உண்டு பசியாறுவாள். அப்போது அவளோடு பேசிக்கொண்டிருப்பது என்னுடைய
பொழுதுபோக்குகளில் ஒன்று.

எப்போதும் பழைய சோறு, பழைய குழம்புதான். எப்போதாவது ஆட்டிறைச்சிக் குழம்பு இருந்தால் நான் கொடுப்பேன். அதை மிகவும் ரசித்துச் சாப்பிடுவாள். பழைய சாதத்திற்குத் தொட்டுக்கொள்ள வறுத்த மோர் மிளகாய் கொடுத்தால் மிகவும் ஆசையாகச் சாப்பிடுவாள். ஆறு மிளகாய் கொடுத்தால் நான்கை சோற்றோடு முடித்துவிட்டு இரண்டை பேப்பரில் சுற்றி முந்தானையில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு எடுத்துச் செல்வாள். வீட்டில் சாதம் மிஞ்சிவிட்டால் நாங்கள் கவலையே படுவதில்லை. தினமும் நாகா வருவதால் அவளுக்குத் தேவைப்படும் என்று வைத்திருப்போம்.

எப்போதாவது நான் பழைய சோறு சாப்பிட்டால் எனக்கு ஒரு பானைத் தயிர் வேண்டும். நாகாவுக்கு அப்படியல்ல. நீராகாரத்தோடு பழைய சோற்றைக் கொடுத்தால் நீராகாரத்தை முழுவதுமாகக் குடித்துவிட்டுப் பின் சோற்றை உருண்டை, உருண்டையாகப் பிடித்து ஒரு சொட்டுக் குழம்புடன் வாயில் போட்டுக்கொள்ளுவாள். எனக்குப் பழைய சோறு சாப்பிட ஒரு பானைத் தயிர் மட்டுமல்ல, ஒரு பானைக் குழம்பும் வேண்டும். நாகாவின் தினசரிச் சாப்பாடு இது.

காலையில் டீக்கடையில் அரை கப் காப்பி குடிப்பாள். பின் எங்கள் வீட்டில் நான் மேலே கூறிய பழைய சாதம், பழைய குழம்பு. மதியச் சாப்பாடாக வீட்டில் முந்தைய தினம் இரவு சமைத்த சாதத்தில் மற்றவர்கள் சாப்பிட்டது போக மிஞ்சியிருப்பதைச் சாப்பிட்டுக்கொள்வாள். இரவு மட்டும் சுடு சோறு, சுடச்சுட குழம்பு. அதுவும் பிரியாணி, பரோட்டா, சப்பாத்தி, குருமா, வெஜிடபிள் கட்லெட் என்று வகை வகையாகவா சாப்பிட்டாள்? எங்கள் ஊரில் கிடைக்கும் கருவாடும் கத்தரிக்காயும் போட்ட குழம்பு. கருவாடும் சாதாரணக் கருவாடுதான். விலையுயர்ந்த கருவாடெல்லாம் அவளால் வாங்க முடியாது. எப்போதாவது விலை குறைந்த மீன் வாங்கிக் குழம்பு செய்வாள். எப்போதாவது சாம்பாரும் சமைப்பாள். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை காலனிவாசிகள் எங்கிருந்தாவது அடிமாடு ஒன்றை வாங்கிவந்து அங்கேயே அடித்து மாமிசத்தைப் பங்கு போட்டுக்கொள்வார்கள். மறு நாள் அந்த மாமிசத்தைப் பெரிய பெரிய துண்டாகப் போட்டு, சமைத்துச் சாப்பிட்டதைப் பற்றிக் கூறுவாள். எப்போதாவது விருந்தாளிகள் வந்துவிட்டால் தான் வழக்கமாகச் சமைக்கும் சோறு அநேகமாகக் காலியாகிவிடும் என்றும் மறு நாள் காலையில் எதையாவது சமைத்துவைத்துவிட்டு வந்ததாகவும் கூறுவாள்.

தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளின்போது கூட வீட்டில் வடை சுடுவதோ, பொங்கல் ஆக்குவதோ கிடையாது. ஏன் இட்லி, தோசை கூட அவளுடைய சக்திக்கு அப்பாற்பட்டதுதான். ஒவ்வொரு தீபாவளியன்றும் வீடு வீடாகச் சென்று பலகாரங்கள் வாங்கி வருவாள். சிலர் இட்லி கூடக் கொடுத்திருப்பார்கள், அது ஏதோ பெரிய பலகாரம் என்பதுபோல். யாரும் அதிரசமோ, முறுக்கோ கொடுப்பதில்லை. கிட்டத்தட்ட எல்லா மத்தியதரக் குடும்பங்களிலும் தீபாவளிக்கு அதிரசம், முறுக்கு கண்டிப்பாகச் செய்வார்கள். மைசூர்ப்பாக், குலோப் ஜாமூன் போன்ற
இனிப்புகளின் பெயர்கள்கூட அவளுக்குத் தெரியாது.

அமெரிக்காவில் ஒவ்வொரு நாளும் எவ்வளவு புரதச் சத்து, எவ்வளவு மாச்சத்து, எவ்வளவு கொழுப்புச் சத்து கலந்த உணவு உண்ண வேண்டும் என்று பலர் குறித்துவைத்துக்கொள்ளுவார்கள். இதற்கு மேல் என்ன சாப்பிட வேண்டும் என்று யோசனை கூற சத்துணவு ஆலோசகர்கள் (nutritionists) வேறு. எங்கள் நாகா என்ன சாப்பிட்டாள், எவ்வளவு சாப்பிட்டாள் என்று இந்த ஆலோசகர்களிடம்
கூறி, அவள் எப்படி பெரிய வியாதிகள் எதுவும் இல்லாமல் எழுபது வயதுக்கு மேல் உயிர் வாழ்ந்தாள் என்று கேட்க வேண்டும் என்று எனக்கு வெகு நாளாக ஆசை.

இப்படித்தான் எல்லோரும் சாப்பிட வேண்டும்; இப்படிச் சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருப்பார்கள் என்று நான் சொல்வதாக யாரும் எடுத்துக்கொள்ள வேண்டாம். அமெரிக்காவில் எல்லோருக்கும் பல விதமான உணவுகள் கிடைக்கின்றன. எங்களை எடுத்துக்கொள்ளுங்கள். வீட்டில் இந்திய உணவைச் சமைத்துக்கொள்ளுவதற்குத் தேவையான எல்லாச் சாமான்களும் கிடைக்கின்றன. அதற்குமேல் அமெரிக்கர்களின் உணவையும் வீட்டிலேயே சமைத்துக்கொள்ளலாம். அதற்குமேல் சீனர்களின் உணவு, தாய்லாந்து நாட்டின் உணவு, ஜப்பானியர்களின் உணவு, பிரெஞ்சு உணவு என்ற பல தரப்பட்ட நாடுகளின் உணவுகளையும்
உண்டு மகிழ ஓட்டல்கள் இருக்கின்றன. இதில் ஆயிரத்தில் ஒரு பங்குகூட எங்கள் நாகாவுக்குக் கிடைக்கவில்லையே என்பதை நினைக்கும்போது நெஞ்சு கனக்கிறது.

பதினைந்து குடும்பங்கள் வசித்த ஒரு குடிசைக் காலனியில் வாழ்ந்துகொண்டு, உலகிலேயே அசுத்தமான தொழிலைச் செய்துகொண்டு, ஆகக் குறைந்த சம்பளத்தைப் பெற்றுக்கொண்டு, நாகா சந்தோஷமாகவே வாழ்ந்துவந்தாள் என்று நினைத்து ஆறுதலடைய வேண்டியது தானோ? அப்படி ஒரு ஆறுதல் கிடைத்தாலும் நாம் ஏன் இப்படிப்பட்ட இழிவான தொழிலைச் செய்தவர்களைக் கீழ்த்தனமாக நடத்தினோம் என்பதை நினைக்கும்போது ரத்தம் கொதிக்கிறது.

மனிதக் கழிவுகளை மனிதனே சுத்தம் செய்யும் அவலத்தை இனியாவது முழுவதுமாக ஒழிக்க வேண்டும். சட்டம் மட்டும் போதாது. ஸ்மார்ட் நகரங்களை நிர்மாணிப்பதில் அரசு கவனம் செலுத்துவதைவிட, நம் கழிவுகளைச் சுத்தம் செய்தவர்களின் வாழ்வைப் புதிதாக நிர்மாணிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

படத்திற்கு நன்றி – Sharmilee (https://www.sharmispassions.com)

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “எங்கள் தோட்டிச்சியைப் பற்றிய ஒரு குமுறல்

  1. ////மனிதக் கழிவுகளை மனிதனே சுத்தம் செய்யும் அவலத்தை இனியாவது முழுவதுமாக ஒழிக்க வேண்டும். சட்டம் மட்டும் போதாது. ஸ்மார்ட் நகரங்களை நிர்மாணிப்பதில் அரசு கவனம் செலுத்துவதைவிட, நம் கழிவுகளைச் சுத்தம் செய்தவர்களின் வாழ்வைப் புதிதாக நிர்மாணிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.////

    1. மனிதக் கழிவுகளையும், தெருக் குப்பைகளையும் தினம் அப்புறப் படுத்த, சுத்தம் செய்ய ஊராட்சி, நகராட்சி ஊழியர் முறையான கட்டுமானத் திட்டங்களை வகுத்து நிறைவேற்ற வேண்டும்.

    2. மனிதக் கழிவுகளைச் சுத்தம் செய்வோருக்கும், குப்பைகளை அள்ளி அப்புறப் படுத்துவோருக்கும் ஊராட்சி, நகராட்சி போதிய ஊதியம், உணவு, உடை, வீடு, இலவசக் கல்வி, மருத்துவம், ஓய்வு ஊதியம் அனைத்தும் அளிக்க வேண்டும்.

    3. நோயின்றி வாழ ஊர்ச் சுத்தம், நகர்ச் சுத்தம் செய்வது, ஒரு தேசக் காவற் படையினர் போல் முக்கிய / அவசரப் பணியாகும். [Essential Service / Emergency Service]

    சி. ஜெயபாரதன்

Leave a Reply

Your email address will not be published.