மூலம்: சி.வி.பாலகிருஷ்ணன்

மலையாளத்திலிருந்து தமிழில்: முனைவர் நா.தீபா சரவணன்

ஒருவன் மழையில் ஓடிவந்து ரெஸ்ட்டோரண்டின் கிழக்குப் புறமுள்ள படிக்கட்டு வழியாக பாருக்குள் நுழைந்தான். முழுவதுமாக நினைந்திருந்தபோதும் அவன் அதை பெரிதுபடுத்தவில்லை.

பகல் அப்போதுதான் முடியப்போகிறது. பாரில் பெரிய கூட்டமொன்றுமில்லை. அவனுக்கேற்ற சௌகர்யமான ஒரு இருப்பிடம் கிடைத்தது. தனது தோளில் தூக்கியிருந்த தோள்பையை அவன் பக்கத்து இருப்பிடத்தில் வைத்தான். ஒரு வெயிட்டர் அவனுடைய மேசைக்கருகில் வந்தான். அவன் ரெண்டு பெக் பிராண்டி சொன்னான்.

“சேர்த்து சாப்பிடறதுக்கு ஏதாவது? பீ நட் மசாலா, எக் அன்டு பீஸ் க்ராம் ஃப்ரை, சில்லிச்சிக்கன், போர்க்………..”

‘ஒன்னும் வேண்டாம் ஊறுகாய் இருந்தா கொஞ்சம் கொண்டு வந்தா போதும்’.

அவன் தனக்கு முன்னால் இருப்பவர்களையும் புதிதாய் வந்தவர்களையும் மேலோட்டமாகப் பார்த்தான். அவர்கள் யாரையும் அவனுக்குப் பழக்கமில்லை. பார் அறைக்குள் சிகரெட் புகை நிறைந்திருந்தது. ஒரு மூடுபனிபோல, புகையுடன் சேர்ந்து பலவகையான மதுக்களினுடையவும், உணவுப் பதார்த்தங்களினுடையவும் வாசனை சுற்றுப்புறத்தில் கலந்திருந்தது. இரண்டாவது பெக்கும் தீர்ந்தபோது அவனுக்குப் புது அனுபவம் தோன்றிற்று. அவனுக்கு சிகரெட் பழக்கமில்லை. கடைசி பெக்கிற்கு கொஞ்சம் நேரம் ஒதுக்கலாம் என்று அவனுக்குத் தோன்றியது. அதற்கிடையில் ஓர் இளைஞன் அதீத கோபத்துடன் கெளவுன்டருக்கு அருகில் செல்வதை அவன் கவனித்தான். ஒரு கையில் முடியப்போகும் நிலையில் சிகரெட். மறுகையில் வளைந்த பிடியுள்ள குடை.

வேறொன்றும் செய்வதற்கில்லாததால் அவன் இளைஞனைப் பார்த்துக் கொண்டிருந்தான். கௌன்டரின் அருகில் சென்றபிறகும் அவனது கோபம் தணியவில்லை. கண் இமைக்கின்ற வேகத்தில் முதல் டம்ளர் காலியானது. மீண்டும் ஒரு டம்ளர்க்கு சைகைக் காண்பித்து ஒரு சிகரெட்டைப் பத்தவைத்தான்.

“சார் …”

வெயிட்டர் மூன்றாவது பெக் பிராண்டியுடன் வந்தான்.

அவன் இளைஞனிலிருந்து கெண்ணெடுத்தான்

“பில்லு கொண்டு வந்திருங்க …”

வெயிட்டர் பில்லு கொண்டு வரும் போதும் அவன் கடைசி பெக்கைத் தொடவில்லை. பில்லின் தொகைக்கு மேல் ஐந்து ரூபாய் கூடுதலாகக் கொடுத்து வெயிட்டரை அனுப்பிவைத்தான். பிறகு அவன் பையிலிருந்து ஒரு சின்ன பாட்டில் விஷத்தை வெளியிலெடுத்தான். அது நீலநிறமாக இருந்தது. வெளியில் கனமழை பெய்து கொண்டிருந்து அவன் பிராண்டியில் விஷத்தைக் கலக்கின பிறகு காலி பாட்டிலை பையிலேயே வைத்தான். டம்ளரின் முக்கால் பாகத்திற்கு சோடா கலந்து அவன் தன்னுடைய கடைசி ட்ரிங்கை தயார் செய்து வைத்தான். அதோ சில நினைவுகளின் மின்னலோட்டம். கடந்தகாலத்தின் சில நிழலாட்டங்கள். பல குரல்கள். அவன் நிம்மதி பெருமூச்சுடன் கண்களை மூடினான். போதும் இனிமேல் முடியாது. கடைசி காலங்களை நினைக்கும் போது வாழ்க்கை ஒரு பெரிய விஷயமொன்றுமில்லை. முன்பு யாரோ கூறியதுபோல இந்த உலகம் பலதையும் பலவிதமாக பேசுகின்ற ஒரு முட்டாள். இதை யாரும் கொன்று புதைக்க வாய்ப்பில்லை. நம்மைக் காப்பாற்ற நம்மால் முடிந்ததை நாம்தான் செய்யவேண்டும். முன்னால் வைக்கப்பட்டுள்ள டம்ளரில் நீல ஜ்வாலைகள் படர்ந்தது. இனி இழப்பதற்கோ அடைவதற்கோ ஒன்றுமில்லை. காலம் முன்னோக்கிப் போகட்டும். எனக்கு ஓரடி கூட இனி போவதற்கில்லை. யாராவது என்றைக்காவது என்மேல் அன்பு காட்டியிருந்தால் அவர்கள் என்னை மன்னிக்கட்டும்.

அவன் கண்களைத் திறந்து விஷம் கலக்கி வைத்த டம்ளர்க்கு நேராக கைநீட்டத் தொடங்கும் போதுதான் பார்த்தான் கவுன்டர்க்கருகில் நின்ற இளைஞன் தனது மேசைக்கு எதிரில் நிற்கிறான்.

“அண்ணா எங்கிட்ட ரெண்டு லார்ஜீக்கு மட்டுந்தா காசு இருந்துச்சு. எனக்கு பத்தல. தப்பா எடுத்துக்காதீங்க. இன்னும் ஒண்ணு கூடுதலா எனக்கு வேணும். கண்டிப்பா நா இத எடுத்துக்கறேன்……… கட்டாயமா நான் இதை எடுக்கறேன்.

அவன் தடுப்பதற்கு முன்பே இளைஞன், அவன் தயாரித்து வைத்திருந்த மதுவை ஒரே மூச்சில் குடித்து முடித்தான்.

“சாரி … சாரி யா”

டம்ளரைக் கீழே வைத்து இளைஞன் கதவைப் பார்த்து நடந்தான். சூன்யமான டம்ளரை உற்றுப்பார்த்துக் கொண்டு அவன் அங்கேயே உட்கார்ந்தான்……..

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *