Blog

  • சேக்கிழார்  பா நயம் – 8

    =======================

    திருச்சி  புலவர் இராமமூர்த்தி

    ————————————————–

     

    நம்  நாட்டு வயல்களில் எரு விட்டு, நெல்நாற்றை நட்டு , நீர்பாய்ச்சி வளர்க்கிறோம். அந்த நாற்றுக்களில் பால் பிடித்து உயர்ந்து ,நெல் காய்த்து   முற்றிக்  கதிர்கள்  பெருத்து விளங்கும். பால் பிடித்த காலத்தில் நெற்பயிர் தலை நிமிர்ந்து நிற்கும். நெல் முற்ற, முற்றப்  பெரிய கதிர்கள் உருவாகும். அப்போது நெற்கதிரின் கனம் தாங்காமல்  பயிரே  தலை  சாய்ந்துத்  தரையை நோக்கும்.இதனைத்   திரைப்படங்களில்,

    ‘’பச்சை வண்ணச்  சேலைக்கட்டி முத்தம் சிந்தும் நெல்லம்மா!

         பருவம்  கொண்ட   பெண்ணைப் போல நாணம் என்ன  சொல்லம்மா!’’

    என்று கண்ணதாசனும்,

    ‘’வளர்ந்து விட்ட பருவப்பெண்போல் உனக்கு வெக்கமா ? – தலை

         வளைந்து சும்மா பாக்குறியே  தரையின் பக்கமா, – உன்னை

    வளர்த்துவிட்ட   தாய்க்குத் தரும்  ஆசை முத்தமா ?’’

    என்று மருதகாசியும்  பாடுகிறார்கள்.

    வயலில் நீர் பாய்ச்சுவதற்காகச்  சிறுவாய்க்கால்களை மண்வெட்டியால்  உருவாக்குவார்கள்! அதன் இருமருங்கிலும் மண்ணை அணைத்து  வரப்புக்களை அமைப்பார்கள்!  உயர்ந்து வளர்ந்த நெற்கதிர்கள்  நடு வரப்பில் தலை சாய்த்துக் கிடக்கும்.  பாத்தி பிரித்தாலும்  பயிர்கள் பாசத்துடன் ஒன்றையொன்று  தழுவிக் கிடக்கும் காட்சியைச் சேக்கிழார் பெருமான் பார்க்கிறார். அவர்,

    ‘’மொய்த்தநீள்  பத்தியின்பால்  முதிர்தலை வணங்கி ‘’

     

    நிற்கின்றன என்கிறார். அந்தக் காட்சி சேக்கிழார் திருவுள்ளத்தில் , வேறோர் அழகிய காட்சியை நினைவுக்கு கொண்டு வருகின்றது. சிறந்த சிவனடியார்கள்  ஒருவரை ஒருவர் காணும்போது, சிவபக்தி மேலிடச் சிவனடியார்களையம் சிவனென்றே எண்ணித்  தலைதாழ்ந்து வணங்குகிறார்கள். அந்தக் காட்சியை இந்த நெற்பயிர்கள் நினைவூட்டுகின்றன.

    நெல் நாற்று முளைத்து வளரும்போது பச்சைப் பாம்பு சூல்  கொண்டது போல் இடையில் பருத்து நுனியில் சிறுத்துக் காணப்படும். அதுவே மேலும் வளர்ந்து   முற்றாத கருக்காயுடன் இருந்தால், கீழானவர் சிறிது செல்வம் பெற்றால் எவ்வாறு தலை நிமிர்ந்து நிற்பாரோ அவ்வாறு நிற்கும், பின்னர் மேலும் வளர்ந்து தேர்ந்தெடுத்த நூற்கல்வியுடையார்  எவ்வாறு தலை வணங்கி நிற்பாரோ, அவ்வாறு தலைவணங்கிப் பயன்தரும்’’ என்று திருத்தக்க தேவர் சிந்தாமணியில்  கூறுகிறார்! இதனைச்

    ‘’சொல்லருஞ்  சூற்பசும்  பாம்பின் தோற்றம் போல்

     மெல்லவே    கருவிருந்    தூன்றி     மேலலார்

     செல்வமே   போல்தலை   நிறுவித் தேர்ந்தநூல்  

     கல்விசேர்  மாந்தரின் இறைச்சிக் காய்த்தவே!’’

    என்று கூறுகிறார். இவ்வாறு திருத்தக்க தேவர் பொதுவாகக் கூறிய உவமையை சேக்கிழார் மேலும் செழுமைப்  படுத்துகிறார்!  கல்விசேர் மாந்தர் கடவுளை மறுப்பவரானால் , சரியாகி விடுமா? கற்றதனால் ஆய பயன் இறைவன் நற்றாள் தொழுவதல்லவா? ஆகவே கற்றவர் கடவுளின் சிறப்பையும் அறிந்தவர் ஆதல் வேண்டும். கதங்காத்துக்  கற்றடங்கியவனே , அறத்தை நிலை நாட்டுவான். கல்லாதவரும் கடவுளின் உயர்வை உணர்ந்தால் கற்றவரைவிடச் சற்று விரைவாகக் கடவுளின் அருகே செல்வர்!ஆகவே இறைப்பற்றில் நிலைத்தவர் எங்கும் இறைவனையே காண்பர்! கற்றவரின் பரிபக்குவம் கடவுள்  நிலையைக் காட்டிவிடும். இதனையறிந்த  சேக்கிழார் பெருந்தகை, விளைந்த நெல் வளைந்து வீழ்வதைச்  சிவனடியாரின் பணிவைக் காட்டும் எடுத்துக் காடாகக் காண்கிறார். அதனால்

    ‘’ பத்தியின் பாலர் ஆகிப் பரமனுக்கு ஆளாம் அன்பர் தத்தமில்  கூடினார்கள்‘’ என்றால்அங்கேயே தலையினால் வணங்குவர்  என்கிறார். அவ்வணக்கத்துக்குக் காரணம் அவர்கள் கல்விகற்றதன் பயனாகக் கடவுள் நெறியைக் கற்றமைதான். அவர்களே  வித்தகர். விளைந்த நெல்லும், முதிர்ந்த அறிவினரும் வளைந்து  வணங்குவது, இருவகையும்  முற்றிப் பக்குவம் பெற்றதால்தான்!

    அக்காலத்தில்  திருஞான சம்பந்தர் திருவையாற்றில் வழிபாடு செய்து கொண்டிருந்தார்.அப்போதுஅருகில் உள்ள திருப்பூந்துருத்திக்கு திருநாவுக்கரசர் வருவதாகக் கேள்வியுற்றார். உடனே திருப்பூந்துருத்தி நோக்கிக் கிளம்பினார். அவர், இறைவன் அளித்த சிவிகையில் ஏறி விரைந்தார். திருப்பூந்துருத்தியை நெருங்கியவுடன்மிகுந்த ஆவலுடன், சிவிகை சுமந்து வந்தோரிடம் , ‘’எங்குற்றார்   அப்பர்!’’ என்று கேட்டார். உடனே விடைவந்தது! ‘’ உங்கள் சிவிகையைச்  சுமந்து வரும் பேறு  பெற்ற  அடியேன் இங்குற்றேன்!’’ என்ற குரல் சிவிகை  சுமப்பவருள் ஒருவராக நடந்து வந்த அப்பரடிகளிடமிருந்து வந்தது! துணுக்குற்றுக் கீழிறங்கிய  ஞானசம்பந்தர் அப்பரடிகளின் முன்னே தலைதாழ்த்தி வணங்கினார்!   இருவரும் பக்தியின் பாலராகிப் பரமனுக்கு ஆளாம் அன்பர்கள், ஆதலால்  எதிரெதிரே கண்டு வணக்கினர்!  இதனையே சேக்கிழார் பெருந்தகை,

    ‘’பத்தியின் பாலராகிப் பரமனுக்கு ஆளாம்  அன்பர்

     தத்தமில்   கூடினார்கள்  தலையினால்  வணங்குமாபோல் ‘’

    என்று பாடினார். தேவாரமும் ‘’தலையே நீ வணங்காய்!’’  என்றும், ‘’ வாழ்த்த வாயும்  நினைக்க மடநெஞ்சும்  தாழ்த்த சென்னியும் தந்த தலைவனை.’’ என்றும் பாடுகின்றன! வயலின் நெற்பயிர்கள் தலை சாய்த்து வணங்கிக் கிடக்கின்றன. அதற்குக் காரணம், வயலில் விளைந்து கதிர் முதிர்ந்தமையால், அதாவது முழுப்பக்குவம் பெற்றமையே  ஆகும். அவை  ஞானம் முற்றிய சிவனடியார்கள் போலத்  தமக்குள் தலைவணங்கிக் கிடக்கின்றன! ஆகவே முற்றிய ஞானம் பெற்ற  அடியார்கள் போல,  நெல்லும் கதிர்முற்றிப் பக்குவம் பெற்ற  நிலையில் தலை சாய்த்து வணங்குகின்றன!  இனி முழுப்பாடலையும்  ஒருமுறை படிப்போம்.

    ‘’பக்தியின்    பாலராகிப்     பரமனுக்கு     ஆளாமன்பர்

      தத்தமிற்   கூடினார்கள் தலையினால்  வணங்குமாபோல்

      மொய்த்தநீள்   பத்தியின்பால்  முதிர்தலை  வணங்கிமற்றை

      வித்தகர்   தன்மைபோல  விளைந்தன  சாலி எல்லாம்!’’

    தமிழிலக்கிய  நயமும், சைவ சமயப்  புலமையும் ஒருசேர விளங்கும் சேக்கிழார் பெருந்தகை இயற்றிய பற்பல  பாடல்களுள் இதுவும்  ஒன்று!

                                     ==============================================================

    Share
  • தோலுரிக்கும் வேலை!

    -முனைவர் ஆ.சந்திரன்

    மெரினா கடற்கரையைக் வங்கக்கடல் விழுங்க முயன்றபோது அந்த தொழிற்சாலையை உலகமயமாக்குவதாக அறிவித்தார்கள். அப்படிச் செய்வதால் அந்நிறுவனத்திற்கு உலகம் முழுதும் கிளைகள் உருவாகும் என்ற அலர் காற்றில் மிக வேகமாகப் பரவியது. அந்தச் செய்தியைக் கேட்டு மிகவும் மகிழ்ந்தவர்களில் நம்பியும் ஒருவன். அவனுக்கு எதிர்காலம் மிகவும் பிரகாசமாகத் தோன்றியது. அவனைப் போல் பலர் அவ்வாறு நினைத்திருந்தார்கள் என்பது பிறகுதான் தெரிந்தது.

    மெதுவாக நடக்கும் மக்கள் வாழும் ஊர். அங்குதான் அந்த தொழிற்சாலை வெகுகாலமாக நேர்மையாகச் செயல்பட்டு வந்தது. உலகமயமாக்கப்பட்ட உடனே அந்த தொழிற்சாலையின் தலைமையகத்தை எப்படியாவது தங்களுடைய தலைநகருக்குக் கொண்டுவந்துவிடவேண்டும் என்ற பகீரத முயற்சியில் சிலர் இறங்கினார்கள். அப்போது வேறு சிலர் அந்தொழிற்சாலை அங்கேயே இருப்பதுதான் சரியாக இருக்கும் என்று பெரிதும் விரும்பினார்கள்.

    அவ்வாறு சொன்னவர்கள் மீது தாய்நாட்டுப்பற்று இல்லாதவர்கள் என்ற வசை சொற்கள் வீசியெறியப்பட்டன. நம்முடைய மண்ணிற்கு அந்தத் தொழிற்சாலையின் தலைமையகம் வருவது நல்லதுதானே. அவ்வாறு வந்தால் நமக்கு இன்னும் கூடுதலான பலன்கள்  கிடைக்குமல்லவா? என்று நம்பிக்குத் தோன்றியதால் தொடக்கத்தில் அவனுக்கும் அவர்கள் மீது கோபம் ஏற்பட்டது. ஆனால், பிறகு அவனுடைய நினைப்பு தவறாய்ப் போனதை அவன் புரிந்துகொண்டான்.

    பலாப்பழங்களைப் பிரித்துச் சுவைப்பது; பலாக்கனிகளில் எத்தனை சுளைகள் இருக்கிறது என்று எண்ணிப்பார்ப்பது; சுவையுடையவற்றை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது எனப் பத்தம்சத் திட்டங்களை முதலில் செய்துமுடிப்பது “சிங்சங்” தொழிற்சாலையின் முதல் கட்ட நோக்கமாகச் சொல்லப்பட்டது. அதற்காகச் சில குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன. அவற்றில் பஞ்சக்குழுவும் அட்டக்குழுவும் முக்கியமானவை. ஏனெனில் அக்குழுக்களுக்குத்தான் இந்தப் பத்தம்சத் திட்டங்களைச் செயல்படுத்தும் அதிகாரம் வழங்கப்பட்டிருந்து.

    தொடக்கத்தில் நாடு முழுவதிலும் இருந்து அக்குழுக்களுக்கு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அவர்களில் பலர் பலாக்கனிகளைப் பற்றிய விவரங்களை அறிந்தவர்களாக இருந்தார்கள். கனிகளை உண்ணவரும் காக்கைளை விரட்டுபவர்கள் சிலரும் அக்குழுவில் சத்தமில்லாமல் இணைந்து கொண்டார்கள்.

    பெரும்பான்மையானவர்கள் ஆசைப்பட்டதுபோல் தொழிற்சாலை செயல்பட ஆரம்பித்த சில ஆண்டுகளிலேயே தலைமையகம் தலைநகருக்கு மாற்றப்பட்டது. சிலரது அயராத முயற்சியால்தான் அது நடந்தது என்ற குரல் அடங்கச் சில காலம் ஆனது. அதன் பிறகு அந்தத் தொழிற்சாலையின் செயல்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டுவருகின்றன என்றும், பத்தம்சத் செயல்திட்டங்களை விரைந்து முடிக்க விரும்புகிறார் அதன் தலைவா் என்றும் ரூமர் காற்றில் பரவியது.

    அப்போது மாம்பழத்தை ரசித்துக்கொண்டிருந்தவர்கள், வாழைப்பழங்களைச் சுவைத்துக் கொண்டிருந்தவர்கள், பூக்களின் வாசத்தை நுகர்ந்து கொண்டிருந்தவர்கள் எல்லாம் அவற்றைத் தூக்கி வீசியெறிந்துவிட்டுப் பலாப்பழங்களைத் தோலுரிப்பது எப்படி என்று கற்கத் தொடங்கினர்கள். அதற்குக் காரணம் பத்தம்சத் திட்டம் பற்றி வெளியான அந்த வதந்தி.

    அப்போது நம்பி வாழை சாகுபடி பற்றியும் அவற்றின் வரலாறு பற்றியும் அவனுடைய தந்தையிடம் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்தான். அவனிடம் சிலர் சொன்னார்கள் நீயும் பலாக்கனிகளைத் தேலுரிக்கக் கற்றுக்கொள். அப்படிக் கற்றுக்கொண்டால் உனக்கு உடனடியாக சிங்சங் நிறுவனத்தில் வேலை கிடைக்கும் என்று.

    அப்போது அதை அவன் ஏற்றுக்கொள்ளவில்லை. காரணம் மாங்கனி பயிரிடுவது பற்றி அறியத்தான் அவன் முதலில் விரும்பி இருந்தான். அவனுடைய அப்பாதான் அவனை வாழையைப் பயிரிடப் பழக்கினார். தொடக்கத்தில் விருப்பம் இல்லாமல் பயிற்சி மேற்கொண்டாலும் போகப்போக அது அவனுக்கு ரொம்பப் பிடித்துப்போனது. எனவே வாழைமரம் பற்றி முழுவதும் அறிந்து கொள்ளலாம். அதன்பிறகு வேண்டுமானால் பலாக்கனிப் பற்றிப் பார்க்கலாம் என்று நினைத்துக்கொண்டிருந்த வேளையில் அவனுடைய எதிர்காலம் கருதி பலாப்பழம் பற்றிய பயிற்சிக்குத் தன் அப்பாவால் நிர்ப்பந்திக்கப்பட்டான். வேறு வழியில்லாமல் பலாப்பழம் சாகுபடி அதன் வரலாறு பற்றி விரிவாகக் கற்க ஆரம்பித்தான். கனிகளின் வரலாற்றைத் தேடிக்கொண்டிருந்தபோது ஓர் அழைப்பு அவனைத் தேடிவந்தது.

    எதிர்ப்பார்த்தது போல் அந்த அழைப்பு சிங்சங் தொழிற்சாலையிலிருந்துதான் வந்திருந்தது. அப்போது கடிதத்தில் குறிப்பிட்டிருந்த அந்த வேலைக்கு முழுவதும் தயாராகவில்லை என்று நினைத்திருந்தான். ஆனால் அந்த வேலைக்குரிய எல்லாத் தகுதியும் அவனுக்கு இருக்கிறது என்று நம்பினார் அவன் தந்தை. அதனால் அவர் நேர்காணலுக்குப் போகச் சொன்னார்.

    நம்பிக்கு நேர்காணலுக்குப் போக விருப்பமில்லை. ஆனாலும் போகச் சம்மதித்தான். அதற்குக் காரணம் அவன் தந்தைமீதுஅவன் கொண்டிருந்த நம்பிக்கை. ஏனெனில் அவனுடைய தந்தை பிறரைப் போல் அன்றி மா, பலா, வாழை முதலானவற்றை நவீனமுறையில் பரிசோதித்துப் பார்த்துக்கொண்டிருந்தார். அது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவரிடம் இருந்து தொழில் கற்பதை அவன் தன் பாக்கியமாகக் கருதினான். எனவே அவருடைய பேச்சை மதித்து நேர்காணலுக்குப் புறப்பட்டான்.

    நேர்காணல் மேகம் தவழும் மலையடிவாரத்தில் நடந்தது. அந்த ஊருக்கு அவன் முதல் முறையாக அப்போதுதான் போனான். பொதிகை மலையின் சாரல் அங்கு எதிரொலிக்கும் என்று அங்கு அறிமுகமான நண்பர் ஒருவர் சொன்னார். மிகவும் ரம்மியமாக இருந்தது காற்றில் வந்த வாசம். நம்பியின் மனம் ஏதேதோ நினைத்தது. கால்கள் காற்றில் மிதந்துகொண்டிருந்தன. அவனைப்போல் பலர் அப்படிதான் இருந்தார்கள்.

    சிலர் நம்பிக்கையுடன் அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்கள் தம் தந்தையர்களால் என்பதை அங்குப் பேசிக்கொண்டிருந்த சிலரின் உரையாடல்களில் இருந்து அவன் தெரிந்துகொண்டான். அது அவனுக்கு வியப்பாக இருந்தது.

    சிலர் கருங்காக்கைகளின் படத்தைக் கையில் வைத்துக்கொண்டு அங்கும் இங்கும் திரிந்து கொண்டிருந்தார்கள். இன்னும் சிலர் வெண்கலச் செம்புகளில் தேவையில்லாமல் தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுடைய செயல்கள் நம்பிக்குப் புதுமையாகவும் வினோதமாகவும் தோன்றியது. அவர்களுடைய செயலை அவன் கவனித்துக்கொண்டிருப்பதைப் பார்த்த ஒருவர் அவனருகே வந்தார்.

    அவனைவிடச் சற்று உயரமாக இருந்தார். கொஞ்சம் கலராக இருந்தார். பார்க்க முரட்டுத்தனமாகத் தோன்றினார். அவர் முகத்தை உற்றுப்பார்த்தபோது தன்னைவிட வயதில் மூத்தவராக இருக்கலாம்  என்று நினைத்தான்.

    வந்தவர் என்ன தம்பி நேர்காணலுக்குப் புதுசா? என்றார்.

    “ஆமாங்க“ என்று வேகமாகத் தலையை ஆட்டிய நம்பிக்கு அவருடைய கேள்வியில் ஏதோ ஒன்று உள்ளதுபோல் தோன்றியது. ஆனால் அதைப் பற்றி அவரிடம் கேட்கவில்லை.

    நீங்கள்? என்ற அவனுடைய கேள்வியிலிருந்து அவ்விருவர் விவரங்களின் பறிமாற்றம் ஆரம்பமானது. ஊர், பிடித்தவை, நோக்கம் என்று நீண்டுகொண்டிருந்த உரையாடலுக்குத் தற்காலிக முற்றுப்புள்ளி வைத்தது. “நேர்காணலுக்கு வந்திருப்பவர்கள் அனைவரும் அருகிலுள்ள அறைக்குச் செல்லுங்கள்” என்ற ஒலி.

    நான் நீ என்று முண்டியடித்துக்கொண்டு அறையை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள் நேர்காணலுக்கு வந்தவர்கள். அவர்களின் செயல்களைப் பார்த்து அவனுக்குச் சிரிப்பு வந்தது. அதைக் கவனித்த இளங்கோ சிரித்துக்கொண்டே வா! தம்பி நாமும் போகலாம் என்றார். அவருடைய இருக்கைக்குப் பக்கத்து இருக்கையில் நம்பி அமர்ந்துகொண்டான்.

    கஞ்சியின் மடிப்பு மறையாத வெள்ளாடை அணிந்திருந்த இருவர், கதராடைக்கு ஏற்ற பேண்ட் அணிந்திருந்த ஒருவர் என மூவர் அறைக்குள் நுழைந்தார்கள். நேர்காணலுக்கு வந்திருந்த எல்லோரும் எழுந்து நின்றார்கள். வந்தவர்கள் மேடையில் இருந்த நாற்காலிகளில் பவ்யமாக அமர்ந்தார்கள்.

    பிறகு ஒருவர்பின் ஒருவராக மூவரும் அடுத்தடுத்துப் பிரசங்கம் நிகழ்த்தினார்கள். சுமார் இரண்டு மணிநேரம் அமர்க்களப்பட்டது அந்த அறை. அவர்கள் பேசிய செய்திகளை இளங்கோ திருக்குறள் போல் இரத்தினச் சுருக்கமாக நம்பியின் காதுகளுக்கு மட்டும் கேட்குமாறு சொன்னார்.

    அவருடைய அந்த அறிவுக்கூர்மை அவனை மிகவும் வியப்படையச் செய்தது. முகம் பிரகாசமாகத் தோன்றியது அவனுக்கு. தன்னை மறந்து இருந்தவன்  “இப்போது பலாக்கனி தோலுரிக்கும் நிகழ்வு ஆரம்பமாக உள்ளது“ என்ற குரல் கேட்டு தன்னிலைக்குத் திரும்பினான்.

    நேர்காணலுக்கு வந்திருப்பவர்கள் பெயர் அகரவரிசைப்படி அழைக்கப்படும். அவ்வாறு அழைக்கப்படும் நபர் மேடைக்கு வந்து பலாக்கனியை உரித்துக் காட்டவேண்டும். சரியாக உரிக்கத் தெரிந்தவர்கள் மட்டுமே வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்! நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது! என்று நீண்ட சொற்பொழிவாற்றியவர் முதல் பெயரை வாசித்தார் அன்பு என்று.

    அறையில் ஒரே அமைதி நிலவியது. யார் அந்த அன்பு?. அவர் எப்படி பலாக்கனியின் தோலை உரிக்கப்போகிறார்? என்று பார்க்கவேண்டும் ஆவலில். நம்பியின் முகத்திலும் அது குடிகொண்டிருந்தது.

    சலனமின்றி மேடையேறிய அன்பு இல்லாத பலாக்கனியை இருப்பதாகப் பாவித்து அற்புதமாக உரித்துக்காட்டினார். அவர் பலாக்கனி உரித்தது தன்னுடைய தந்தையின் செயலை நினைவுபடுத்தியது. நம்பி மனம் சொல்லியது இவருக்கு வேலை உறுதியாகக் கிடைக்கும் என்று. மேடையில் இருந்த நடுவர்களும் மகிழ்ந்தார்கள். அவர்களில் ஒருவர் வாய்த்திறந்து பாராட்டினார் தம்பி! நீங்க அருமையாகத் தோலுரித்தீர்கள்! வாழ்த்துகள்! என்று.

    இரண்டாவதாக இளங்கோ! என்ற பெயர் ஒலித்தது.

    தன்னுடன் பேசிக்கொண்டிருந்தவர் எழுந்து செல்வதை ரசித்துக் கொண்டிருந்த நம்பி அவர் தோலுரித்துக் காட்டியதை ரசித்துப் பார்த்தான். இப்படியும் தோலுரிக்க முடியுமா என்று வியந்தான். அவன் உள்மனம் நினைத்தது இவருக்கும் வேலை நிச்சயமென்று.

    தன் இருக்கையில் அமர வந்தவரிடம் மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்கள்! என்றான். நன்றி! என்றவர் சலனமின்றி அமர்ந்தார்.

    அவரைத் தொடர்ந்து கமல் என்று பெயர் அழைக்கப்பட்டது. ஓ! இவன் பெயர் கமலா என்று நினைத்தபோது அவன் செம்பில் தண்ணீர் பிடித்துக்கொண்டிருப்பதாகத் தோன்றியது. “இப்போதும் அவன் தண்ணீர் நிரம்பிய சொம்பைக் கையில் வைத்துக்கொண்டுதான் இருக்கிறான்” என்று இளங்கோ கூறிய பிறகுதான் அது பிரமையல்ல என்று உணர்ந்தான்.

    கம்பீரமாக மேடை ஏறியவன் ஐஸ்கட்டியாக உருகினான். அவனுடைய செய்கையைக் கண்டுப் பொறுக்கமுடியாமல் பக்கத்திலிருந்த இளங்கோவைப் பார்த்தபோது அவர் புன்னகை சிந்திக்கொண்டிருந்தார் சலனமின்றி.

    அறையில் ஒரே சலசலப்பு. கடைசிவரை அவன் என்ன செய்கிறான் என்று யாருக்கும் புரியவில்லை. அவனுக்குப்பிறகு ஏழெட்டுபேர் அவ்வாறே தொடர்ந்தார்கள்.

    நம்பியின் முறை வந்தது. மேடைக்குச் சென்ற அவன் தனக்குத் தெரிந்த அளவில் பலாக்கனியை உரித்துக் காட்டினான். அவன் உரித்தவிதம் புதுமையாக இருந்ததாகப் பாராட்டினார் நடுவர்களில் ஒருவர். இளங்கோவும் அதையே சொன்னார்.

    அவனுக்குப் பிறகு மேடையேறியவர்களில் பலர் நன்றாகத் தோலுரித்தார்கள். சிலர் நடுவர்களின் பாராட்டுகளையும் பெற்றார்கள்.

    இந்நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த வேளையில் சிலர் நேரமாகிறது என்று நேர்காணலில் பங்குபெறாமல் தம் வீடுகளுக்குப் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்களில் கமலுடன் பயிற்சிபெற்ற மாணிக்கமும் அடக்கம்.

    நேர்காணல் முடிந்தது.

    சரியாக இரண்டு மாதங்கள் கழித்து பலாக்கனி எண்ணும் அந்த வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பட்டியல் வெளியானது.

    அப்போது அன்புவும், இளங்கோவும் வயலில் விவசாயம் செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் வேலைசெய்து கொண்டிருந்த வயலில் நடப்பட்டிருந்த நெல் நன்றாக விளைந்திருந்தது. அதிக மகசூல் கிடைக்கும் என்று அவர்கள் திடமாக நம்பினார்கள்.

    *****

    கதாசிரியர் – உதவிப்பேராசிரியர்,
    தமிழ்த்துறை, தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி),
    திருப்பத்தூர், வேலூர்.

    Share
  • வரனா? வரமா?

     –சே.முனியசாமி

    ‘‘ரெண்டு புள்ளைகள கரசேத்தாச்சு.. இவனுக்கு ஒன்னும் அமைய மாட்டுதே. ஜோசியக்காரன் சொன்னதுபோல சொந்தத்துல பொண்ணெல்லாம்  அமையாது  மேற்கு தெசலைய தான் அமையும் போல… என் கவலையே அவந்தானு’’ பார்க்கிறவங்கிட்ட புலம்பிட்டே இருப்பாங்க கவின் அம்மா.

    கவின் அந்த ஊர்ல முதல் பட்டதாரி மட்டுமல்ல பி.எச்டி வரை படிச்சவன். பள்ளிப் படிப்பை முடிச்சு மேற்படிப்பிற்காக வெளியூர் போனவன் பதினேழு வருசமா படிப்பு படிப்புனு மூழ்கிட்டான். படித்துக் கொண்டேயிருக்கவும் வயது கடந்ததும் தெரியல. முற்றிய நெல்மணி போல வயசும் முப்பதுக்கும் மேல தாண்டியது.

    ஒருவழியாய்த் திருநெல்வேலி பக்கம் கல்லூரியில் பணி கிடைத்தது. கை நிரம்ப சம்பாத்யம் இல்லையென்றாலும் வெளியே நல்ல உத்தியோகத்தில் இருக்கேன் எனச் சொல்லுகின்ற அளவுக்கு இருந்தது. வயது ஒருபக்கம் கூடிக்கொண்டே யிருந்தாலும் நாலா பக்கமும் பெண் தேடுகிற போட்டாப் போட்டியில் உறவினர்கள் அக்கறை கொண்டிருந்தனர்.

    மாதத்திற்கு நான்கு முறையாவது ‘அந்த ஊர்ல பொண்ணு இருக்கு… இந்த ஊர்ல பொண்ணு இருக்குனு’ ஏதாவது தகவல் வந்துவிடும். ஏதோ ஒரு நம்பிக்கையில் சென்று பல ஏமாற்றங்களைச் சந்தித்தது கவினுக்கு புதிதல்ல. இவ்வாறு நாட்கள் புரண்டோடின. வேலை பார்க்கின்ற இடத்திலிருந்து ‘முப்பது கிலோ மீட்டர் தொலைவில் ஒரு பொண்ணு இருக்கு, டீச்சருக்கு படிச்சுருக்கு. டெட்டுல பாஸாகி இண்டர்வீயு போய்ட்டு வந்துருக்கு.. அடுத்த ரெண்டு மாசத்துல அரசு உத்தியோகம் கிடச்சரும்னு…’ பழக்கப்பட்ட மாணிக்கம் சார் மூலம் தகவல் கிடைத்தது. இவ்வளவு சொல்லியும் வேண்டமெனக் கூறினால் நன்றாக இருக்காதெனச் சரியென மொழிந்தான் கவின்.

     ‘‘தகப்பன் இல்லா பிள்ள … நல்ல பொண்ணுப்பா… உங்களுக்கு மேட்ச் ஆகும். நம்ம பார்த்ததுல செட் ஆகாம இருந்தது கிடையாதுனு..’’ அடுக்கிக் கொண்டே போனார் மாணிக்கம் சார். இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் போது எவ்வளவோ பாத்தாச்சு.. இதையும் பாத்துரலாமுனு கவின் மனதில் சிந்தனை ஊடுருவியது. இதுக்கு மேலையும் வேண்டாமெனச் சொன்னால் நல்லாயிருக்காது என எண்ணிப் பச்சைக் கொடி காட்டினான் கவின்.

    மாணிக்கம் சார் மத்திய அரசு ஊழியர். ஊரில் எல்லாராலும் மதிக்கக்கூடியவர். நாலு செய்தி தெரிந்தவரும்கூட. எங்காவது நல்லது கெட்டதுனா இவர்தான் முன்நிற்பார். அதனால் மாணிக்கம் சாருக்கு ஊர்ல மதிப்பு நிரம்பயிருந்தது. அவரை ஒரு தடவைப் பார்த்து பேசிப் பழகியதே தவிர மற்றபடி உறவுனு சொல்லிக்க முடியாத பழக்கம்.

    ‘தனக்குத்தான் சர்க்கார் வேலை இல்ல. தனக்கு வர்றவளுக்காவதுக்கு சர்க்கார் வேலையிருந்தா கொஞ்சம் உதவியாயிருக்குமென’ கவின் மனதில் துளிர்விட்டது. இப்படிச் சிந்தனையில் மூழ்கியிருக்கையில் ‘அடுத்த வாரம் பொண்ணு வீட்டுக்குப் போய் பொண்ண நேர்ல பாத்திடலாம் தம்பி…’ என மாணிக்கம் சார் சொன்னதும் தலையாட்டினான் கவின். உடனே தம்பி உங்க செல் நம்பரச் சொல்லுங்க எனக் கூறியதும், ஒன்பது ஏழு எட்டு ஆறு சைபர் எனத் தொடங்கி  சைபர்  எனக் கூறி முடித்தான். அப்படியே உங்க நம்பர்லயிருந்து ஒரு மிஸ்டுகால் கொடுங்க என்றதும் சில விநாடிகளில் மாணிக்கம் சார் எண்ணைச் சேமித்து நன்றி சார்னு விடைபெற்றான் கவின்.

    நியமிக்கப்பட்ட நாள் வந்தது. காலை பத்து மணியிருக்கும். கவின் எண்ணிற்கு மாணிக்கம் சார் அழைத்திருந்தார். வணக்கம் சார் என்றதும்,  ‘சாயந்தரம் நாலு மணிக்கு போகலாம்பா….’ அவங்க வீட்டுல உங்களப் பத்தியெல்லாம் சொல்லிட்டேன்பா… என மாணிக்கம் சார் கூறினார். சரிங்க சார் சரியான நேரத்திற்கு வந்துறேனு.. கூறி இணைப்பை துண்டித்தான்.  சரியாக மூன்று மணியிருக்கும் புது எண்ணிலிருந்து கவின் செல்லுக்கு அழைப்பு வந்தது. வழக்கம் போல வணக்கம் சொல்லுங்க என்றதும்…. ஒரு இளம்பெண்ணின் குரலில் ஹலோ…என்ற சப்தம் கேட்டு நிசப்தமாக இருந்தது. கொஞ்சம் சத்தத்தை உயர்த்தி  நீங்க யாருனு தெரிஞ்சுக்கலாமா? என்றான் கவின். உடைந்த குரலில் கண்ணீர் மல்க காரசாரமாய் மூன்று நிமிடங்கள் பேச்சு தொடர்ந்தது. ‘மாணிக்கம் சார் சொன்ன பொண்ணு பேசுறேன். இன்னைக்கு என்னைப் பொண்ணு பார்க்க வாரதீங்க..ப்ளீஸ்.. எண்ட்டா எதும் கேட்காதீங்க’….என்ற குரலில் புலம்பல் சத்தம் ஒலித்தது. ஏங்க எதும் பிரச்சனையா? என்ன காரணமுனு தெரிஞ்சுக்கலாமா? எனப் பல கோணங்களில் பரிவுடன் பேசினாலும் எதையும் கேட்காதீங்க ப்ளீஸ்…. புரிஞ்சுக்குங்க…ப்ளீஸ் என்ற பதில் மட்டும் வந்தது. முடிவாக நான் வரலையினா மாணிக்கம் சார அவமானப்படுத்தற மாறி ஆகிடும். ஏதோ பார்மாலிடிக்கு வந்துட்டு போயிடுறேனு சொல்லியும் தொடர்ந்து ப்ளீஸ் வராதீங்க… புரிஞ்சுகிடுங்க…. என்பது மட்டும் திரும்பத் திரும்ப வந்தது. கவின் எவ்வளவு சொல்லியும் கேட்டபாடில்லை. இணைப்பைத் துண்டித்து முகத்தை கழுவிக் கிளம்பத் தயாரானான்.

    சரியாய் நான்கு மணி. மாணிக்கம் சார் வீட்டை நோக்கிச் சென்றான். கவினைக் கண்டதும் வாப்பா… உக்காருப்பா என்றதும் அமர்ந்து கொண்டான். ப்ரெஞ்பேட் வைத்து தன் முகத்தை அழகுபடுத்திக் கொண்டிருந்தார். பத்து நிமிஷம் வைட் பண்ணுப்பானு… சென்று வெள்ளை நிற ஜிப்பா அணிந்ததும் போகலாம்னு கூறினார் மாணிக்கம் சார். கருமையான தோற்றதில் இருந்தாலும் நரைத்த தலையும், வெள்ளை நிற ப்ரெஞ்பேடும், ஜிப்பாவும் யாவரும் மதிக்கத்தக்க தோற்றத்தில் வெளிப்பட்டார். என் பைக்லேயே ரெண்டு பேரும் கிளம்பி போயிட்டு வந்தராலாம்பா என்றதும் பின்புறம் சீட்டில் ஏறி அமர்ந்த இருபது நிமிடத்தில் இருவரும் பெண் வீட்டை அடைந்தனர்.

    வண்டியை நிறுத்தி விட்டு வீட்டிற்குள் நுழைந்த போதுதான் தெரிந்தது, அது பொண்ணு வீடல்ல, மாணிக்கம் சாரின் நெருங்கிய உறவுமுறை பசீர் என்பவர் வீடென்று தெரிந்தது. பசீரும் மணியும் ஒரே உறவு முறையாய் இருந்தாலும் கால் நூற்றாண்டுகளுக்கு முன் இசுலாமிய மதம் மாறியவர். பஷீரின் மனைவி அரசு பள்ளியில் சத்துணவு அலுவலர். அதே பள்ளியில் அவருக்கு உதவியாக பணிபுரியும் பெண் பக்கத்து வீடு என்பதால் பாசமுடன் அப்பெண்ணுக்கு மண வாழ்வு அமைக்க முயற்சித்தனர் என்பதை அறிய முடிந்தது.

    பசீர் சாரிடம் நல விசாரிப்புகள் அதிகரித்துக் கொண்டேயிருந்து முடிவுக்கு வந்தது. பெண் வீட்டார் சார்பில் பெண்ணின் அம்மாவும் அண்ணனும் வந்திருந்தனர். ஒரு பொண்ணுதான் கஷ்டப்பட்டு படிக்க வைச்சுருக்கோம்… ஏதோ எங்களால முடிஞ்ச அளவுக்கு கடன கப்பிய வாங்கி செய்றோம் என அவரவர் பங்கிற்கு தங்களால் முடிந்த சொற்களை அசைபோட்டனர்.. பின்பு கவின் பற்றிய பின்புலத்தை அறிமுக நோக்கில் மாணிக்கம் சார் ஏற்ற இறக்கமாய் கூறிமுடித்தார். சரிமா பொண்ண வரச் சொல்லுங்க என்ற பஷீர் சார் சத்தத்தைக் கேட்டதும் நிசப்தம் ஆகியது. இடப்புறமும் வலப்புறமும் தலா இரண்டு சிறுபிள்ளைகளுடன் குனிந்த தலையுடன் பட்டுச் சேலை கட்டி பொண்ணு வரவழைக்கப்பட்டாள். வாமா… வந்து இந்த காப்பியே எல்லாருக்கும் கொடுமா.. என கணத்த குரலில் பஷீர் சார் சத்தம் கேட்க எல்லார் கையிலும் காபி இருந்தது. தம்பி நீங்க ஏதாவது பேசறதாயிருந்தா பேசிக்கிடுங்க என்றார் மாணிக்கம் சார். எப்படா கிளம்புவோமுனு என்ற சிந்தை மட்டும் கவினை ஆட்கொண்டது. கவின் தன் பங்கிற்கு ஏதோதோ பட்டும் படாமலும் பேசினான். இவருதாமா உன்னை பாக்க வந்துருக்காரு …நீ எதும் பேசனும்னா பேசிக்கமானு பஷீர் சார் மெல்லிய குரலில் புன்னகைத்தார். பதினாறாம் வாய்ப்பாடு தெரியாதவனிடம் தப்பில்லாமால் முழுவதுமாய் சொல்லு என கண்டிக்கும்போது, ஏற்படும் கலக்கத்தைப்  போல கலங்கி நின்றது பொண்ணு. எதாவது பேசுமா…. இந்த மாறி டெட்டுல பாஸாகி இண்டர்வீயு போய்ட்டு வந்தாச்சு.. அடுத்த ரெண்டு மாசத்துல அரசு உத்தியோகம் கிடச்சரும்னு’ உன் வாயால சொல்லுமா? என பஷீர் சார் முணுமுணுத்தார்.  பிரமை பிடித்திருந்தது போல முகம் இருந்தது. முகத்தில் கண்களில் தவிர மற்ற இடங்களிலிருந்து வியர்வை நதியாய் பெருக்கெடுத்து ஓடியது. சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளைப் போல நடுக்கத்துடன் பஷீர் சார் சொன்னதை கவினைப் பார்த்து சொல்லத் தொடங்கியது….

    அங்கு குழுமியிருந்தவர்கள் பொண்ணுக்குக் கூச்சமாயிருக்குமென்று பேசி சிலாயித்தார்கள். அப்போதுதான் மூன்று மணிக்கு வந்த அலைபேசியில் இளம்பெண்ணின் குரல் நினைவுக்கு வந்தது. ‘‘ வந்துராதிங்க ப்ளீஸ்… நான் டெட்டுல பாஸ் ஆகல. மார்க் ரொம்ப கம்மி. ஆனா ரிசல்ட் வந்த போது, பஷீர் சார் மார்க் என்னமானு கேட்டார் பெயிலுனு சொன்னா தப்பா எடுத்துருவாங்கனு பயத்துல தொண்ணுத்தி மூனு மார்க்னு, அடுத்த வாரம் சென்னையில சர்டிபிக்கட் வெரிப்பிக்கேஷனு சொல்லிட்டேன். நான் பாஸ்னு நம்பித்தான் உங்கள வரச் சொல்லிருக்காங்க.. எனக்கு என்ன பண்றதுனு தெரியலனு…’’ சத்தம் குறுகி அழுகை சத்தம் மட்டும் காதில் ஒலித்தது. அனைத்தும் தெரிந்திருந்தும் ஒரு பெண்ணைத் துன்பத்திற்குள் இழுத்துச் சென்று விட்டோமே என்ற கவலை கவினை வாட்டியது. தொண்டைய கரகரத்து… வீட்டுல பெரியவங்கள்ட பேசிட்டுப் பதில் சொல்றேனு சொல்லிட்டு புன்னகைத்தவாறே மாணிக்கம் சார் பைக்ல ஏறி இருபது நிமிட பயணத்தைத் தொடங்கினான் கவின்.

    *****

    கதாசிரியர் – தமிழ் உதவிப்பேராசிரியர்,
    ஜெ.பீ. கலை அறிவியல் கல்லூரி, அகரக்கட்டு, தென்காசி,
    திருநெல்வேலி மாவட்டம்
    மின்னஞ்சல்: muniyasethu@gmail.com

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    181023 Krishnapremi -mixed media – 9×12”Strathmore tinted paper 160gsm 72dpi lr

    ‘’மற்கடக்(குரங்குக்) குட்டியே, மாதா ரமணரை
    நிற்க அனுமதிப்பாய் நின்னுள்ளே -வர்கத்தின்
    பேதங்கள் போகும் பிறவிப் பிணிதீரும்
    மோதுங்கள் அண்ணா மலை’’….!

    வந்த மனக்குரங்கு வாயுள்ளே வாத்ஸல்யம்
    நந்த குமாரன் நவனீதம் -தந்தது:
    முற்றும் துறக்க முனிவனாய் மாறலாம்
    கற்ற களவை மற….கிரேசி மோகன்…!

    Share
  • குணாதிசயங்கள்!

    பவள சங்கரி

    ஒருவரின் பலதரப்பட்ட குணநலன்கள் ஒன்றையொன்று தாமே தூக்கிச் சாப்பிட்டுவிடுகின்றன. கலைவாணர் என்.எசு. கிருட்டிணன் மிகச்சிறந்த நகைச்சுவையாளர் மட்டுமல்ல. ஆகச்சிறந்த சீர்த்திருத்தவாதியும் கூட. அவர்தம் கருத்துகளை வாயளவில் பேசித் திரிபவராக மட்டும் இல்லை. அப்படியே வாழ்ந்தும் காட்டிய நல்லார்.

    ஒரு முறை இவர்தம் நகைச்சுவை கலையுணர்வில் மயங்கிய மகாராசா ஒருவர் அவரை அழைத்து விருந்துபச்சாரம் செய்து மகிழ்வித்ததோடு அவர்தம் திறன்களில் உச்சி குளிர்ந்து அதற்கு வெகுமதியாக, தம்முடைய மாளிகைகளில் ஒன்றை பரிசாகக் கொடுத்திருக்கிறார். கலைவாணர் சர்வ சாதாரணமாக அதை மறுத்திருக்கிறார். மகாராசர் பல முறை கட்டாயப்படுத்திய பின்பும் இந்த மனிதர் மறுத்துவிட்டதோடு அதற்காக அவர் சொன்ன காரணம்தான் உச்சம்… ஆம், அவர் சொன்னது, “என் வருங்காலச் சந்ததியினர் இத்தனை பெரிய சொத்தை வைத்துக்கொண்டு உழைக்காமல் உட்கார்ந்து உண்ணும் சோம்பேறி நிலைக்குத் தள்ளப்பட்டு விடக்கூடும். அதனால் இவ்வளவு பெரிய சொத்தெல்லாம் என் சந்ததியினருக்குத் தேவையில்லை. அவர்கள் உழைத்து வாழவேண்டும். தனக்கானதைத் தானே உழைத்து பெறட்டும்” என்றிருக்கிறார். ஆனால் இத்தகைய சீர்திருத்தவாதி நம் மனங்களில் அதிகபட்சம் ஒரு நகைச்சுவையாளராக மட்டுமே நிலைத்திருக்கிறார் என்பதே உண்மை!

    Share
  • படக்கவிதைப் போட்டி 183-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    மெழுகுவர்த்தியும் அழகான குழந்தையும் ஒருவரை ஒருவர் நோக்கி மௌனமாய்ப் பேசிக்கொள்ளும் இதமான காட்சியை நிழற்படமெடுத்து வந்திருப்பவர் திரு. வாசகன் பாலசூரியன். இந்தப் படத்தை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்துப் படக்கவிதைப் போட்டிக்கு வழங்கியிருப்பவர் திருமதி சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றி!

    ”ஒளியிலே தெரிவது தேவதையா?” என்று பாடத்தோன்றும் இந்தக் குழந்தையின் சுந்தர முகத்தில் ஏதோ சிந்தனைப் பின்னலும் இருக்கவே செய்கின்றது. பிஞ்சின் நெஞ்சில் நிழலாடும் எண்ணத்துக்குக் கவிவண்ணங் கூட்டி வாசகர்க்குக் காட்ட கவிஞர் பெருமக்களை அன்புடன் வரவேற்கின்றேன்.

    ***** 

    ”நங்காய்! எதிர்காலத்துக்கு ஒளியூட்டும் கல்வியில் கவனம் செலுத்தாது சித்தத்தைச் சிற்றொளியில் வைக்கலாமா? ஆழ்ந்து படி…வெற்றியைப் பிடி” என்று சிறுமியின் நல்வாழ்வுக்கு நம்பிக்கையொளி ஊட்டுகின்றார் திரு. சித்திரவேலு கருணானந்தராஜா. 

    பெதும்பைப் பெண்ணே!

    ஊடுருவிப் பார்க்கின்றாய் ஒளிரும் சுவாலைதனை
    தேடுவது எதையென்று தெரியவில்லையோ உனக்கு?
    புத்தகத்தின் முன்னிருந்து சித்தத்தைச் சிற்றொளியில்
    வைத்துள்ளாய் நீ அங்குன் வாழ்வினொளி காண்பாயோ?
    கற்பதனாலுன்றனுக்குக் கடுகளவும் தோல்விவரப்
    போவதில்லை ஆதலினால் பொழுதினை நீ வீணாக்கி
    உற்றுப்பார்க்காது உருகும் மெழுகுதனை
    சற்றேயுன் புத்தகத்தில் தலைகுனிந்து கவனம் வை.

    வாழ்வினொளி காண வை கவனம் கற்பதிலே
    தாழ்வில்லையென்றும் தலை குனிந்து கற்பவர்க்கு
    வீட்டில் விளக்கின்றி வீதிக்குச் சென்றங்கே
    தெருவிளக்கிற் கற்றுத் தேறிப் பரீட்சையிலே
    மேதாவிகளானோர் மிகுபலபேர் உள்ளார்கள்
    ஆதலினால் நங்காய் ஆழ்ந்து படி புத்தகத்தை
    மீதி விளைவதெல்லாம் வெற்றியன்றி வேறில்லை.

    *****

    ”மரணப் படுக்கையில் அன்னை; கள்ளுக்கடையில் அப்பன்; அழுகின்ற மெழுவர்த்தி ஒளியில் படித்து நான் யாரைக் காப்பாற்ற?” என்று வேதனையில் வெ(து)ம்பும் சிறுமியைக் காண்கிறோம் திரு. சி. ஜெயபாரதனின் கவிதையில்.

    அழுதிடும் மெழுகுவர்த்தி!

    எங்கள் வாழ்வே இருளானது!
    மங்கிப் போன விளக்கு!
    ஒருத்தி
    ஊதியமும் இல்லை!
    மரணப் படுக்கையில்
    தாய்! கையில்
    மருந்து வாங்கப் போன
    காசை
    பறித்துக் கொண்டு
    கள்ளுக் கடைக்குப் போனது
    அப்பன்!
    நாளைக்குத் தேர்வு!
    மங்கிய தெரு விளக்கும்
    மின்னலில் அணைந்தது!
    கடன் வாங்கிய
    மெழுகு வர்த்தி யானது
    அழுது, அழுது
    மெலிந்தது!
    நான் படித்து பட்டம் வாங்கி
    யாரைக் காப்பாற்ற?
    தாயையா ?
    குடித்து விட்டு வாசலில்
    வசை புராணம் பாடும்
    அப்பனையா?

    *****

    ”கலைமகளும் அலைமகளும் மலைமகளும் மகிழ்ந்தருள, வாழ்விலின்பம் வழியட்டும், துன்பங்கள் ஒழியட்டும்” என்று சிறுமிக்கு வாழ்த்துப்பா பாடுகின்றார் திரு. ஆ. செந்தில் குமார்.

    வாழ்க வளமுடன்…

    கன்னித் தமிழனைத்தும் கலைமகளும் உனக்கருள்க!
    எண்ணிய செல்வங்களை அலைமகளும் உனக்களிக்க!
    இன்னலில்லாப் பெருவாழ்வை மலைமகளும் மனமுவக்க!
    இன்னபிற நன்மைகளைப் பெறுவதற்குநீ முயல்க!

    அணையாத விளக்காக அன்பெங்கும் ஊற்றெடுக்க!
    துணையாகச் சொந்தங்கள் எப்போதும் உடனிருக்க!
    அணிகலனாய் நற்பண்பை இறுதிவரைநீ சுமக்க!
    இணைந்திருக்கும் நட்புகள் எப்போதுமுனை சூழ்க!

    மடைதிறந்த வெள்ளமென வாழ்விலின்பம் பொங்க!
    இடைத்தோன்றும் துன்பமெலாம் தவிடு பொடியாக!
    அடையத் துடிக்கும் இலக்கனைத்தும்நீ தொடுக!
    தடையேதும் இல்லாத தனிப்பாதைநீ பெறுக!

    *****

    சிறுமிக்கு  இனிய வாழ்த்துக்களையும், அவள் எதிர்காலத்துக்கு வளஞ்சேர்க்கும் நல்ல அறிவுரைகளையும் தம் பாக்களில் அள்ளி வழங்கியிருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள்!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதையை நாம் அறிந்துகொள்ளும் நேரமிது!

    வாழ்த்துங்கள்!

    வறுமையின் ஆட்சி வீட்டினிலே
    வரவினை மிஞ்சிடும் செலவினமே,
    பொறுமையின் வடிவிலே பெண்ணவள்தான்
    போதையின் பிடியில் ஆண்மகன்தான்,
    சிறுவராய்ப் பிள்ளைகள் சிரமத்திலே
    சீர்பெறக் கவனம் படிப்பினிலே,
    குறுகிய குடிசையில் விளக்கொளியில்
    கற்றிடும் குலமகள் வாழ்த்துவீரே…!

    ”வறுமையின் ஆட்சியைப் பொறுமையோடு சகிக்கும் தாய் ஒருபுறம்; அதுபற்றிய சிந்தனையேயின்றி போதையின் பாதையில் போகும் பொறுப்பற்ற தந்தை மறுபுறம்; இவர்கட்கு நடுவில் சிறிய விளக்கொளியில் சீரிய எதிர்காலத்துக்காகக் கல்விகற்கும் குலமகள் இவள்; இவளை வாழ்த்துங்கள்!” என்று ஈரநன்மொழி கூறும் இக்கவிதையின் ஆசிரியர் திரு. செண்பக ஜெகதீசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    181022 -Gov pattaabhishekam -mixedmedia-9×12” Strathmore 160g 72dpi wm

    “அந்தணர், மந்திரம், ஆடம் பரமின்றி,
    சந்திர வம்சத்து ஸ்ரீரங்கன்,-நந்தனின்,
    வீட்டுச்சேய் பால்வெளியில், வேந்தனாய் ஆவதைக்,
    காட்டிய கேசவ் கவி”….!

    “ராம கிரணமாய் ,ராத்திரி வந்தவனுக்கு,
    நாம கரணம் நடக்கும்முன், -காமதேனு,
    பால்சுரக்கப் போச்சு, பழையரா மாயணங்கள்,
    மால்பிறப்பு பாகவத மாச்சு”….கிரேசி மோகன்….!

    பசு பறந்து கொசுவானது….இந்த கொசு கடிக்காது, மடிப்பாலை மாலவர் மீது சுரக்கிறது….சபாஷ் கேசவ்….!

    அந்தணர், மந்திரம், ஆடம் பரமின்றி,
    மந்தா கினியாக மாடு்பால் -தந்திட:
    மாட்டினார் மன்னராய், மாடுகள் மேய்ப்பவர்,
    காட்டிய கேசவ் கவி”….!

    மந்தாகினி -ஆகாஸகங்கை….!

    “பாலா பிஷேகமே பட்டா பிஷேகமாய்
    கோலோ கலமாகக் கொண்டாடும் -மாலோலர்;
    ஆவிந்தன் பாலில் அபிஷேக நீராடி
    கோவிந்தன் கொண்டார் குளிப்பு”….கிரேசி மோகன்….!

    Share
  • இந்த வார வல்லமையாளர் (284)

    இந்த வார வல்லமையாளர் விருது!

    இந்த வார வல்லமையாளராக சமூகப் போராளி ‘தரனா பர்க்’ என்னும் அமெரிக்கப் பெண்மணியை அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது.

    உலகம் முழுவதிலும் நானும் (‘மி டூ’) என்னும் பெண்கள் இயக்கம் விரைவாக வளர்ந்து வருகிறது. சமூக ஊடகங்கள் வளர்ச்சியாலும், அவற்றை மொபைல் போன்களில் பார்த்து பதில் அளிப்பது பெருகிவருவதாலும் இந்த அதிவேகப் பரவல். ஹேஷ் டேக் (HashTag) போன்றவை ஏற்படுவதன் முன்னரே இந்த இயக்கத்தை 2006-லேயே தொடங்கியவர் தரனா பர்க் (Tarana Burke) என்னும் சமூகப் போராளி. பாலியல் வன்முறைகள், கொடுமைகள், அத்துமீறல்களை வெளிப்படையாகச் சொல்லாமல் உள்ளேயே மறுகி இருந்த பெண்கள் திரைப்பட, அரசியல் உலகங்களில் தமக்கு நிகழ்ந்த பாலியல் துன்பங்களை அம்பலப்படுத்தி வருகின்றனர், #MeToo என்னும் ஹேஷ்டேக் ட்விட்டரில் அலிஷா மிலானோ என்னும் நடிகை உருவாக்கியதில் இருந்து பலரும் பயன்படுத்திவருகின்றனர்.

    மும்பை திரையுலகத்தில் தனுஸ்ரீ தத்தா என்னும் நடிகை இந்த மிடூ இயக்கத்தை ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்த்திரை உலகத்திலும் இந்த இயக்கத்தின் தாக்கம் தெரிகிறது.

    https://www.reuters.com/article/us-india-harassment-actress/actress-who-helped-trigger-indias-metoo-movement-inspired-by-god-idUSKCN1MQ127
    https://en.wikipedia.org/wiki/Me_Too_movement

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், naa.ganesan@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் – http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 )

    Share
  • தேர்தல் திருவிழா!

    பவள சங்கரி

     

    தலையங்கம்

     

    இந்திய சனநாயகத்தில் தேர்தல் திருவிழா ஆரம்பமாகிறது! தற்போது 5 மாநிலங்களில், (மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம், சத்தீசுகர், தெலுங்கானா) தேர்தல் வர இருக்கிறது. அடுத்த ஆண்டு 2019இல் பாராளுமன்றத் தேர்தலும், அதோடு இணைந்து மீதமுள்ள அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டிற்கு பாராளுமன்றத்துடன் சேர்த்து தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தேர்தல்கள் எப்படி நடந்தாலும் ஊடகங்களின் துணையோடு தம்மைப் பூதாகரமாகக் காட்டிக்கொண்டுதான் ஒவ்வொரு கட்சியினரும் தேர்தலைச் சந்திக்கின்றனர். முன்பு தனி நபர்கள் வாக்காளர்களுக்கு வாக்களிக்க பரிசுகளாக காதணியிலிருந்து காலணி வரை, குக்கரிலிருந்து தட்டு முட்டு சாமான்கள் வரை பரிசுப்பொருட்களாகக் கொடுத்து வாக்குகளை வாங்கும் நிலை இருந்துவிட்டது. ஆனால் இன்றைய சட்டப்படி வாக்களிக்க பரிசுப்பொருட்களை பெற்றாலும், கொடுத்தாலும் இரண்டாண்டுகள் முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை உண்டு. வாக்களிக்க பரிசுப் பொருட்களைக் கொடுக்கும் கட்சிகளை முழுவதுமாகவே தேர்தலிலிருந்து தடை செய்யலாம். தனி நபர்களுக்கு 2 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை தரலாம். தன்னார்வம் மிக்க கட்சி சார்பற்ற தனி நபர்களும், தொண்டு நிறுவனங்களும் இந்திய நாட்டின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்தின் மீது அக்கறை கொண்டு தங்களுக்குக் கிடைக்கக்கூடியத் தகவல்களை ஊடகங்கள் மூலமாக பகிரங்கப்படுத்த வேண்டியது அவசியம். வழக்கு மன்றங்கள் இது போன்ற வழக்குகளைத் தாமாகவே முன்வந்தும் அந்த வழக்கை ஏற்று நடத்தும். குற்றம் செய்பவர்களை தண்டனைக்கு உள்ளாக்கும். கையூட்டு பெறும் அல்லது கையூட்டு அளிக்கும் கயவர்களிடமிருந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டியது ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமையும், உரிமையும் ஆகும்.

    ஊழலற்ற ஆட்சியும், கரை படியாத நிர்வாகமுமே இன்றையத் தேவை. வாக்களிக்க கையூட்டு பெறுவதும், கொடுப்பதுமே இதன் முதற்படி என்பதால் அதிலிருந்தே அதனை வேரறுக்கும் பணியைத் தொடங்க வேண்டும். இந்தியாவிலேயே ஒன்றுபட்ட ஆந்திரத்தில்தான் தேர்தலில் மிக அதிக பணப்புழக்கம் இருந்ததாகவும், தற்பொழுது தேர்தல் நடக்கவிருக்கும் தெலுங்கானாவில் மிக அதிக பணப்புழக்கம் இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் தெலுங்கு நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் இதற்குப் பொறுப்பாகிறார்கள் என்பதை உணர்ந்து, ஊழலற்ற அரசை உருவாக்க ஆவண செய்ய வேண்டியது இன்றைய அத்தியாவசியத் தேவை! சனநாயகம் நம் கையில் என்பதை பொது மக்கள் கருத்தில் கொண்டு விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய காலகட்டமிது என்பதை உணர வேண்டும். அல்லது சம்ப்பந்தப்பட்ட நேர்மையான சமூக ஆர்வலர்கள் மக்களுக்கு இதனை உணர்த்தி விழிப்படையச் செய்ய வேண்டும். தெற்கிலிருந்து வடக்கு வரை பரவ வேண்டிய பேரலையாக இது உருவாக வேண்டும் என்பதே மக்களின் பேராவல். சனநாயகம் வெற்றி பெற பாடுபட வேண்டியது ஒவ்வொரு இந்தியரின் கடமை!

    Share
  • படக்கவிதைப் போட்டி – 184

    பவள சங்கரி

     

    அன்பிற்கினிய நண்பர்களே!

     

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    பிக்சர்ஸ்க்யூஎல்எஃப்எஸ் எடுத்த இந்தப் படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (27.10.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • கு.ப.ரா. சிறுகதைகளில் பெண்மனப் பதிவுகள்

    முனைவர் ப.சு. மூவேந்தன்,

    உதவிப்பேராசிரியர்,

    தமிழியல்துறை,

    அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,

    அண்ணாமலைநகர் – 608 002.

    ————————————————————-

    முன்னுரை

    தமிழ்ச் சிறுகதைகளின் தொடக்கக் காலத்தில் சிறுகதைகள் எழுதிப் புகழ்பெற்றவர் கு.ப.ரா. ஆவார். அவரது சிறுகதைகள் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட, அடிமைப்படுத்தப்பட்ட இனமாகக் கருதப்பட்ட பெண்ணினத்தின் குரலாக ஒலிப்பதுடன் பெண்களின் மன உணர்வுகளை நுண்ணோக்கோடும் வெளிப்படையாகவும் அறிவிக்கின்றன. தமிழில் பெண்ணுர்வுகளைச் சிக்கல்களைச் சிறுகதைகளில் வெளிப்படுத்திய முதல் பதிவாளராக அவர் விளங்குகின்றார். அவரது ‘தனபாக்கியத்தின் தொழில்’, ‘குந்துமணி’ என்னும் இரு சிறுகதைகளில் வெளிப்படுத்தப்படும் பெண்மன உணர்வுப் பதிவுகள் குறித்து இக்கட்டுரையில் ஆராயப்படுகின்றது.

    மனச் செயல்பாடுகள்

    மனிதனது ஆறாவது அறிவு மனம் ஆகும். மனிதனது செயல்பாடுகள் யாவற்றினுக்கும் மனமே அடிப்படை அலகாக அமைகின்றது. மனம் உள்ளவன் மனிதன். அவ்வகையில் நமது இலக்கியங்கள் மனம் என்பதனைக் குறித்துப் பரவலாகப் பேசியுள்ளன. மனத்தின் செயல்பாடுகளாலேயே மனிதச் செயல்பாடுகள் அமையும் என்பதனைக் கருதியே திருவள்ளுவர் ‘மனத்துக்கண் மாசிலன் ஆதல்’ என்று அறிவுறுத்தினார். ஆனால் நடைமுறைச் சிந்தாத்தந்தில் மனத்தின் செயல்பாடுகள் ஒத்த தன்மையினதாக அமைவதில்லை. தன்னைப் போன்றே மற்றவர்களுக்கும் மனம் என்பது உண்டு என்று அறியவாய்ப்பே கொடுக்கப்படாமல் ஆதிக்கத்தை மட்டுமே கையில் வைத்துக் கொண்டு ஆண்டுவரும் மாக்களின் செயல்பாடுகளைத் தனது சிறுகதைகளின் மூலம் காட்டியுள்ளார் கு.ப.ரா.

    மனஉணர்வு என்பது ஆண் பெண் யாவர்க்கும் ஒன்றுதான். என்றாலும் மனத்தின் வழியான செயல்பாடுகளிலும் ஏற்றத்தாழ்வுகள் நிலவுகின்றன என்னும் கருத்தினை ‘தனபாக்கியத்தின் தொழில்’ (1934), ‘குந்துமணி’ (1934) என்னும் சிறுகதைகளின்வழி புலப்படுத்தியுள்ளார் கு.ப.ரா.

    ‘தனபாக்கியத்தின் தொழில்’ (1934), ‘குந்துமணி’ (1934) என்னும் இரு சிறுகதைகளும் அன்றைய சமூகத்தில் தள்ளிவைக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட பெண்ணினமான தேவதாசியர் நிலையைப் பேசுகின்றது. தேவதாசிச் சமூகத்தைச் சார்ந்த பெண்கள் ‘ஆடல் பாடல் வல்லாராகி;, இன்பமும் பொருளும் நல்கி, ஒருவர் மாட்டும் தங்காதார்’ என்ற கருத்து வலுப்பெற்றிருந்த காலகட்டத்தில் இக்கதைகள் படைக்கப்பட்டன என்பது கருத்தில் கொள்ளத் தக்கது. தாசியர் குலத்தைச் சார்ந்த பெண்கள் தங்கள் சமூகத்தின் இழிநிலையிலிருந்து மேலே வருவதற்கு அனுமதிக்காத சமூகத்தை இக்கதைகளின்வழி காட்டுகின்றார் கு.ப.ரா.

    தனபாக்கியத்தின் காதல்

    ‘தனபாக்கியத்தின் காதல்’ என்னும் சிறுகதையில் இடம்பெறும் தனபாக்கியம் தாசியர் குலத்தில் பிறந்தவள்; என்றாலும் அவள் உள்ளத்தில் தன்னைக் காதலிப்பதாகச் சொல்பவனுடன் சேர்ந்து மணமுடித்துக் கொண்டு வாழ்ந்திட வேண்டும் என்ற ஆர்வம் பிறக்கின்றது. இதனால் தன் குலத்தின் இழிவும், ஊரார் தூற்றும் பழியும் நீங்கும் என்று நினைக்கின்றாள். அவள் ஒரு புலவனைக் காதலிக்கின்றாள். புலவனோ தாசியரைப் பழிவாங்க நினைக்கும் ஒரு வஞ்சகனால் அவள் வீட்டுக்குக் கொண்டுவந்து விடப்படுகின்றான். என்றாலும் பாதகமில்லை; புலவனாகிய சண்முகசுந்தரம் தனபாக்கியத்தை உயிருக்கு உயிராகக் காதலிக்கின்றான்: என்றாலும் தன் ஏழ்மையைக் கருத்தில் கொண்டு அவள் தன்னை விட்டுவிட்டுச் செல்லக்கூடும் என்ற அச்சவுணர்வு அவன் உள்ளத்தில் எப்பொழுதும் நிறைந்திருக்கின்றது. தனபாக்கியத்தின் உள்ளத்திலோ தான் ஒரு தாசிதானே என்று கருதி, புலவன் தன்னைவிட்டுச் செல்லக்கூடும் என்ற உணர்வு மேலெழுந்து நிற்கின்றது.

    “காதல் தழைப்பதற்கு உலகத்தில் இடையூறுகள் உண்டா? உண்டு. உதாரணமாக உன் தாய் என்னை இங்கு வரவேண்டாமென்று தடுத்துவிட்டால்? எதற்காக? நன்றாயிருக்கிறது அவள்தானே”     (ப. 22)

    என்னும் பகுதியில் புலவனின் வறுமைவயப்பட்ட வாழ்வியல் நிலை இக்காதலுக்குத் தடையாக நிற்கும் என்ற நிலைப்பாட்டினையும்,

    “அடி தனம் ! இனிமேல் அந்தப் பரதைப்பயல் இந்த வாசல் நுழையக்கூடாது தெரியுமா? என்று தனத்தின் தாய் கமலம் வெடுக்கென்று பேசினாள். தொழிலில் கண்ணும் கருத்தும் உடையவள் அவள் …..இன்றைக்கு அவன் வந்தால் வீட்டை விட்டுத் துரத்து”  (ப. 22)

    என்னும் பகுதியில் தனத்தின் தாய் எதிர்நோக்கியிருக்கும் வியாபார நிலையினையும் காட்டுகின்றார் கு.ப.ரா.

    “உன்னை ஏமாற்றும் நோக்கிலேயே புலவன் உன்னைக் காதலிப்பதாகக் கூறுகின்றான்” என்ற தனபாக்கியத்தின் தாயாரது குரலுக்கு, தனபாக்கியம் “காதல் என்பது வலிந்து வரக்கூடிய விசயமில்லை” என்று மறுத்துரைக்கின்றாள்.

    “நீ சுத்த அசடாயிருக்கியேம்மா. அவன் செய்யவாவது? என் மனசை ஆக்க அவனால் ஆகுமா?”              (ப. 23)

    என்று கேள்வி எழுப்புகிறாள். இதனால் பெண்ணின் மனதை யாரும் குழப்பவும் குறைத்தும் மதிப்பிட்டுவிட முடியாது என்பதனை இப்பகுதியில் எடுத்துரைக்கின்றார் கு.ப.ரா.

    மீண்டும் புலவன் வந்து தனபாக்கியத்தைச் சந்திக்கும் போது, தங்கள் காதல் நிறைவேறாது என்று அவநம்பிக்கைக் கொள்ளுகிறான். தான் ஒரு ஏழைப்புலவன் என்று தெ ரிந்துவிட்டால் அவள் தன்னை மறுத்துவிடுவாள் என்று கருதி அவளை விலக நினைக்கின்றான்;. அப்போது தனபாக்கியத்தின் உள்ளத்தில் எழும் மன உணர்வுகளையும், தாசியர்களைப் பற்றிய சமூக மதிப்பீட்டினையும் கு.ப.ரா. இவ்விருவரது உரையாடலின் மூலம் தெளிவாக்குகின்றார்.

    “நீங்கள் பணக்காரரா?

    இல்லை. நான் ஏழைப்புலவன். ஆ! என்னை வெறுக்கிறாயல்லவா?

    நீ பணத்தை விரும்புவது சகஜந்தானே….?

    என் ஜாதிக்குச் சகஜம் என்று சொல்லிக்காட்டுகிறீர்களா? என் ஜாதி ஸ்வபாவத்துடனா நான் உங்களை-என் குலத்து வழக்கப்படியா உங்களை – என்று அவள் விம்மி விம்மிச் சொல்வதற்குள் கண்ணீர் நெஞ்சை அடைத்து விட்டது”             (பக். 23-24)

    என்னும் பகுதியில் தெளிவாக உணர்த்துகின்றார்.

    தனபாக்கியம் தன் குலத்தொழிலாகிய தாசியர் குலத்தொழிலைச்; செய்யாமல் ஏழைப்புலவனைத் திருமணம் செய்து கொண்டு எவ்வாறு வாழமுடியும் என்று கேள்வி எழுப்புகின்றாள் அவளது தாய் கமலம். இனி நீங்கள் இருவரும் இங்கிருக்கக் கூடாது என்று ஆணையும் இடுகின்றாள்.

    “வெளியே கமலத்தின்குரல் கேட்டது.

    அடியே, அவனை வெளியே போகச் சொல்லு !

    மாட்டேனம்மா !

    ஆனால், இருவரும் வெளியே போங்கள் !”                                         (ப. 24)

    என்று கதையை நிறைவு செய்கின்றார். உண்மையாகக் காதலித்தவனை மணந்து கொள்வதற்குத் தனது தாய் உரிமை தராதபோது தன் வாழ்க்கையினை அவளே கையில் எடுத்துக்கொள்கிறாள். தன் காதலனுடன் வீட்டைவிட்டு வெளியேறத் தயராகிவிட்டாள் என்று குறிப்பாக உணர்த்துகின்றார் கு.ப.ரா. இதில் பெண் மன உணர்வு வெளிப்பாட்டையும் சமூக எதிர்ப்புணர்வினையும், எதிர் வினையாற்றலையும் கதை நிகழ்ச்சிகளின் போக்கில் எடுத்துரைத்துள்ளார் கு.ப.ரா.

    தாசியர்குலப் பெண்கள் பணம் ஒன்றையே நோக்கமாகக் கொண்டு செயல்படுவார்கள் என்றும், தங்களிடம் வருகின்ற ஆண்களின் சொத்துக்களையெல்லாம் பறித்துக் கொள்வார்கள் என்ற கருத்தும் மேலோங்கி இருந்த காலகட்டத்தில் உண்மையான காதல் உணர்வால் உந்தப்பட்டு பொன்னையும் பொருளையும் இழப்பதற்குத் தயராகும் பெண்மன உணர்வினை இக்கதையின்வழி காட்டுகின்றார்.

    குந்துமணி

    காதலை மையமாக வைத்து எழுதப்பட்ட சிறுகதை ‘குந்துமணி’ ஆகும். இதில் பணக்கார இளைஞனான ராமு, தாசியர் குலத்தைச் சேர்ந்த ராஜலட்சுமியைக் காதலிப்பதாகப் பொய்சொல்லி அவளுடன் பழகுகின்றான். அவனது காதலை உண்மை என்று நம்பி அவனிடம் தன்னை ஒப்படைக்கின்றாள் ராஜலட்சுமி. நாட்கள் செல்லச் செல்ல அவளது உடல் மட்டுமே அவனுக்குத் தேவைப்படுகின்றது. அவளுக்கோ அவனால்  தனக்கு ஒரு வாழ்க்கை கிடைத்தால் தனது குலத்தொழிலை விட்டுவிட்டு தன்மானத்துடன் வாழலாமே என்ற உணர்வு எழுகின்றது. இந்தக் கதையிலும் அவளது தாய் பணக்கார ஆண்களின் மனஉணர்வினைத் தெளிவாக அறிந்துவைத்துள்ளாள்;. இதனால் இந்தக் காதல் நிலைக்காது என்ற கருத்தினைத் தன் வாய்மொழியாகப் பதிவுசெய்கிறாள்.

    “உங்களை வரவேற்பதில் என் தாயாருக்கு கொஞ்சம் கூட இஷ்டம் இல்லை.

    அவளிஷ்டம் எனக்கெதற்கு?

    நன்றாயிருக்கிறது! ….இல்லவேயில்லை. இப்படித்தான் புருஷர்கள் பேதைப் பெண்களின் மேல் பழியைச் சுமத்துவது”       (ப. 30)

    என்னும் பகுதியில் தன் தாயின் மறுப்பினையும், இளைஞனின் பொய்யைச் சொல்லி ஏமாற்ற நினைக்கும் மனப்பாங்கினையும் காட்டுகின்றான்.

    தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு ராமுவை வலியுறுத்துகின்றாள் ராஜலட்சுமி. அந்நிலையில் அவர்களிடையே நடைபெறும் உரையாடல் பகுதியால் பெண்மன உணர்வுகளைப் பதிவிடுகின்றார்.

    “எங்கள் ஜாதித் தொழிலை நான் பழகவேண்டுமென்று படுத்துகிறாள் – அதாவது நான் பொட்டுக் கட்டிக் கொள்ள வேண்டுமென்று வற்புறுத்துகிறாள்.

    அதற்கு நான் வந்துகொண்டிருப்பது தடையொன்றும் இல்லையே?

    இல்லை, இல்லை நான் தான் மாட்டேன் என்று சொல்லிவிட்டேனே…

    ஏன்?

    ஏனா? உங்களுக்கு இன்னும் விஷயம் புரியவில்லையா? சொல்லுகிறேன்- என் தாயார் என்னை விலைமாதா இருக்க வேண்டுமென்கிறாள்.

    நீ சொல்வது எனக்கு அர்த்தமே ஆகவில்லை. இப்பொழுதும் அப்படித்தான்-

    அதாவது நான்…

    ராஜத்தின் முகம் வெளுத்தது. கண்கள் பயத்தால் பெரிதாகிப் பரந்தன.

    என்ன, என்ன? என்ன சொன்னீர்கள்?

    ராஜம் ஏனிப்படிப் பதறுகிறாய்? நான் என்ன சொல்லிவிட்டேன்?

    நான் உங்களுடைய வைப்பு என்கிறீர்களா?

    அதிலென்ன உனக்குக் குறை? எந்தப் பெயரானால் என்ன?

    அவன் சொன்னது ஒன்றும் அவள் காதில் விழவில்லை. கண்களில் நீர்வடிய, குழந்தை போன்ற விக்கல் குரலுடன்,

    நான்-ஆனால் நான் உங்கள் தாஸி தானா?

    சுத்த அசடா யிருக்கியே? பின் என்னவென்று எண்ணிக் கொண்டிருந்தாய்?

    நீங்கள்… ஆனால், என்னை மணக்கப் போவதில்லையா?

    ……………………

    நீங்கள் கொடுத்த உறுதிகளெல்லாம் பொய்யா?               (பக். 31-32)

    இப்பகுதியில் சமூகத்தின் கொடூரப்பிடியிலிருந்து வெளியேறத் துடிக்கும் அவளது உள்ள உணர்வினையும் அதை அலட்சியமாகவும், அது சமூக நடைமுறைதான் என்று சொல்லித் தப்பிக்க நினைக்கும் ஆணாதிக்க எதேச்சதிகார நிலைப்பாட்டினையும் பதிவிடுகின்றார். பெண்கள் சமூகத்தில் எத்தகைய நிலையிலிருந்தாலும் அவர்களைப் பொருளாகக் கருதும் நிலைப்பாட்டினை இக்கதையின்வழி காட்டுகின்றார் கு.ப.ரா.

    இவர்களது உரையாடல் இவ்வாறே நீண்டு கொண்டு செல்கின்றது. ஒரு கட்டத்தில் ராமு, ராஜலட்சுமியைப் பார்த்து,

    “ஓஹோ! ஏது குலப்பெண்களுக்கு மேற்போய்விட்டதே உனது எண்ணம்?”  (ப.32)

    என்று சொல்லி அவளை அடக்கப் பார்க்கின்றான். அப்பொது பொங்கிவரும் தன் மன உணர்வினை ராஜலட்சுமி,

    “நற்குணத்தில் குலப்பெண்களுக்குத்தான் உரிமையோ? ஐயோ! என் கனவுகளெல்லாம் கானலாகவா போகவேண்டும்? என்னுயிர் ஏக்கங்கள் இத்துடன் இப்படியா முடிவடைய வேண்டும்?”                 (ப. 32)

    என்று சொல்லி புலம்புகின்றாள். தான் பிறந்த குலத்தின் இழிநிலையைக் கருதி வருந்தவும் செய்கின்றாள்.

    இறுதியில் ஆண்சமூகத்தை எதிர்த்து வாழ்வது தன்னால் இயலாத செயல் என்று தன் விதியை நொந்தபடி தாசியாகவே தன் வாழ்க்கையைக் கழிப்பது என்று முடிவெடுப்பதாகக் கதையை நிறைவுசெய்துள்ளார் கு.ப.ரா.

    இவ்விரு கதைகளிலும் பெண்களின் மன உணர்வுகளையும், ஏக்கங்களையும், உணர்வுக் குமுறல்களையும் எடுத்துரைத்துள்ள அதே வேளையில் சமூகத்தில் எதிர்த்து வாழத்துடிக்கும் நிலையினை ஒருகதையிலும், சமூகத்தை எதிர்த்து நின்று வாழத் துடித்தாலும் பெண்களை ஆண்சமூகம் அடிமைகளாகவே கருதும் நிலைப்பாடு உள்ளதனை அடுத்த கதையின் மூலமும் எடுத்துரைத்துள்ளார்.

    இக்கதைகள் எழுதப்பட்டு பல ஆண்டுகள் கழிந்துள்ள பின்னரும், இன்றைக்கும் பெண்களின் மனஉணர்வுகள் மதிக்கப்படாத நிலையில் இருக்கின்றது. தமிழின் தொடக்கக் காலச் சிறுகதைகளில் பெண்களின் மன உணர்வுகளை மிகத் துல்லியமாக வெளிப்படுத்திய படைப்பாளர்களின் கு.ப.ரா. தனித்து விளங்கும் திறன் இக்கட்டுரையின்வழி தெளிவாகிறது.

    ———————-

    கருவி நூல் :

    1. அ, சதீஷ், (ப.ஆ.) கு.ப.ரா. கதைகள், அடையாளம் வெளியீடு, சென்னை. பதி. 2008.

    மதிப்பீடு

    மனித உறவுகளின் நுட்பமான தருணங்களைத் தமது படைப்பின் வெளிப்பாடாகக் கொண்டிருந்தவர் கு.பா.ரா. ஆண், பெண் உறவுகளைப் பற்றி அதிகம் எழுதியவர். இவரின் தனபாக்கியத்தின் தொழில், குந்துமணி என்னும் இரு சிறுகதைகளில் பெண்களின் மன உணர்வுகள் எவ்வாறு சித்தரிக்கப்பட்டுள்ளது என்பதை மேற்கண்ட கட்டுரை ஆராய்ந்துள்ளது. கு.பா.ரா.வின் சமகால எழுத்தாளர்களின்  பெண் பற்றிய மனச்சித்தரிப்பிலிருந்து கு.பா.ரா.வின் பெண் பதிவுகள் எவ்வாறு தனித்துவம் பெறுகிறது என்று நோக்கியிருந்தால் இன்னும் அவரைப் புரிந்துகொள்ள வாய்ப்பாக அமைந்திருக்கும்.

    கல்பனாசேக்கிழார்.


     

    Share
  • நிறம் உதிர்க்கும் பட்டாம் பூச்சிகள்

    முனைவர் பா. ஜெய்கணேஷ்

    “முடிதான் இப்ப உன் பிரச்சனையா? வயசு முப்பது ஆயாச்சு. படிக்கிறேன்ற பேர்ல காலத்த ஓட்டிட்டு இப்ப வந்து நின்னுகிட்டு மாப்ள அப்படி வேணும் இப்படி வேணும்னு கேட்டா நாங்க என்ன பண்றது? இத்தோட ஐஞ்சி ஆறு பாத்தாச்சு. வரவன் மூஞ்சிய பாத்தா பரவால்ல. அவன் மண்டையதான் பாப்பன். அதுவும் டி.ஆர். மாதிரி முடி வேணும்னு சொல்ற. உங்க அப்பா கூடதான் கல்யாணத்துக்கு முன்னடி மண்ட முழுக்க முடி வச்சி இருந்தார். இப்ப பாரு பின்னடி இருந்து வழிச்சு விட்டாதான் முன்னடி வந்து நாலு விழுது. நான்லாம் குடும்பம் நடத்தல. அதுக்காக விட்டுட்டா போயிட்டன்னு” கலா சத்தமா பேசிக்கிட்டு இருந்தா.

    “அம்மா நிறுத்தும்மா. சும்மா ஏன் இப்படி கத்துற. நான் என்ன சொத்துபத்து வேணும், கார் வேணும், நல்ல வேல வேணும்னா கேட்டன். மண்டையில முடி இருக்கறவனாதான் கேட்டன். ஒன்னு முன் மண்ட வழுக்க, இன்னொன்னு பின் மண்ட வழுக்க, அப்புறம் ஒன்னு கூட்டிட்டு வந்தீங்களே அதுக்கு ரெண்டு பக்கம் பட்டயான்னு ஏறிக்கிட்டு கிடக்கு. அதல்லாம் கூட பரவா இல்ல இப்ப வந்துச்சே அது வழுக்க இல்ல மொட்ட. இப்படியா கூட்டிட்டு வந்து நிறுத்தி கல்யாணம் பண்ணிக்கோ பண்ணிக்கோன்னு சொன்னா நான் என்ன பண்ணுவன்” அப்படின்னு கோபத்துல கொப்பளிச்சா நிலா.

    “ஆவோன்னா அப்பா கல்யாணத்துக்கு முன்னடி எப்படி இருந்தாரு, இப்ப எப்படி இருக்காரு, பாரு பாருன்னு சொன்னா நான் என்ன பண்ணுவன். அவர் என் அப்பா. அவர் மண்டையில முடி இருந்தாலும் இல்லனாலும் பிரச்சன இல்ல. ஆனா நான் கட்டிக்கப்போறவன் மண்டையில நிச்சயமா முடி இருந்தே ஆகணும்.

    அதுவும் என் தலைவர் டி.ராஜேந்தர் மாதிரி இருந்தே ஆகணும். ஏன்னா அப்பதான் கல்யாணம் ஆயி, புள்ள பெத்து, வயசான கிழவியானாலும் அவருக்கு முடிகொட்டாது. நீ அப்பா தலைய சரியாப் பாக்கல. ஆனா நான் ரொம்ப விவரம்ல. முடி முன்னடி வந்து சரியணும். அப்படி இருக்கற மாப்பள எவன்னா இருந்தா கூட்டிக்கிட்டு வாங்க. இல்லனா  போய் வேலய பாருங்க”.

     “இது என்னடா வம்பா இருக்கு. ஊருல அந்தந்த அம்மாக்கு ஆயிரம் பிரச்சினைனா ஏன் பிரச்சன முடி பிரச்சனையா இருக்கே. ஊருல இருந்து சென்னைக்கு வர மாப்பிளலாம் முடியோடதான் வரானுங்க. ஆனா இங்கு வந்து உப்பு தண்ணியில குளிச்சாலே முடிலாம் தண்ணியோட வழிஞ்சி வழிஞ்சி ஓடிருதாம். இவ ஊரு பக்கம் எவனாவதுன்னு சொன்னா வேணாம்னு சொல்றா. சென்னை செட்டில்னா இந்தப் பிரச்சன.

    “முப்பத்தைஞ்சி வயசுக்காரன் கூட இருபத்தைஞ்சி, இருபத்தெட்டுனா சொல்லுங்க. அதுக்கு மேல வயசான பொண்ணுலாம் வேணாம்னு சொல்றானுங்கன்னு இந்த புரோக்கர் சொல்லிட்டுப் போறாரு. எனக்கே என்ன பண்றதுன்னு தெரியாம முழிக்கிறன். போன மாசம் கூட நியூஸ்ல படிச்சன் ஒரு பையன் முடி வளக்கறன்னு போயி தப்பான சிகிச்சையால செத்துப்போனத. பாவம் இந்தப் பசங்க மட்டும் என்ன பண்ணுவானுங்க. முடிவளக்கறதுக்காக உயிரயே விட்டுடறானுங்கன்னு” புலம்பிக்கிட்டே பாத்திரங்கள கழுவி அடுக்கிவைச்சுக்கிட்டு இருந்தா கலா.

    “நீ என்ன வேணா சொல்லு. ஆனா நான் சொல்றதுதான் நடக்கணும்… சரிசரி நீ ஏதாவது தனியாப் பேசிக்கிட்டே இரு. நான் புவனா வீட்டுவரைக்கும் போயிட்டு வந்துடறன்”னு தன்னோட வண்டிய தள்ளிக்கிட்டு கிளம்பினா நிலா.

    இரு பக்கங்களிலும் சீராக நின்றிருக்கிற புளியமரங்களின் இடையே ஓடும் சாலையைக் கடந்து புவனா வீட்டு வாசலில் போய் நின்ற வண்டியை ஓரம் நிறுத்திவிட்டு முன்வாசல் வழியாக நிலா உள்ளே நுழைந்த போதே “என்னடி நிலா எங்க ஆளயே காணோம். ஊருக்கு வந்து நாளுநாள் ஆச்சாம். பாக்கவே முடியல” என்றாள் புவனா.

    “அத ஏண்டி கேக்கற எங்க அப்பாவும் அம்மாவும் மாப்ள பாக்கறன்ர பேர்ல உயிர எடுக்கறாங்க. மண்டையில முடி இல்லாதவங்களா கூட்டிக்கிட்டு வந்து நிறுத்தினா? நான் என்ன பண்ணுவன். அதான் வந்ததுல இருந்து ஒரே சண்ட. சண்ட போடவே நேரம் சரியாப் போச்சுடி” என்று சொல்லியபடியே அருகிலிருந்த சோபாவின் மீது அமர்ந்தாள்.

    “ஏண்டி மண்டையில முடி இருக்கறவனதான் கட்டிக்குவன்னு அடம்பிடிக்கற. முடிலாம் ஒரு பிரச்சனையா.அதான் உன் உயிர் நண்பன்னு ஒன்னு இருந்துச்சே அதுக்கு மட்டும் என்ன மண்டையில முடியா இருந்துச்சு. அததான ஆறு வருஷமா கட்டிக்கிட்டு அழுத.

    ஆமாம் இப்ப எங்கடி அவன ஆளயே காணோம். போன்ல கூட பேசறதா தெரியலயே. நான்லாம் உனக்கு பேருக்குத்தான் பிரெண்டு” என்று புவனா தொடங்கும்போதே,

    “இப்ப உனக்கு பேசறதுக்கு வேற எதுவுமே இல்லயா?” என்று எரிச்சலுடன் கேட்டாள் நிலா.

    “இல்ல எனக்கு இப்பவே தெரிஞ்சாகணும். உங்களுக்குள்ள என்னதான் பிரச்சன. அந்த கதைய எனக்கு நீ முழுசா இதுவரை சொன்னதே இல்ல” என்று புவனா கேட்டுக்கிட்டே ஒரு ஆப்பிளை இரண்டு துண்டாக நறுக்கிவைத்தாள்.

    “ ஏண்டி ஆப்பிள். இன்ட்ரெஸ்டிங்கா திங்க நொறுக்குத்தீனி வேற எதுவுமே இல்லையா” என்று நிலா கேட்க கொஞ்சம் சலிப்புடன் “ஆப்பிள்தான் இருக்கு. அதயே தின்னு. இன்ட்ரெஸ்டிங்கா நீ உன் ‘நட்புக்காக’ கதையச் சொல்லு” என்றாள் புவனா.

    “அத இங்க சொன்னா யாருக்குமே புரியாதுடி. காலேஜ்ல நான் எம்.பில். படிச்ச சமயம். ஒருநாள் காலேஜோட பின்பக்கம் ஒரு அணில் அடிபட்டு கிடந்துச்சு. நான் பாத்துட்டு பதறியடிச்சு ஓடிப்போய் தூக்கிப் பாத்தான். மூச்சுவிடமுடியாம உயிருக்குப் போராடிக்கிட்டு இருந்துச்சு. கொஞ்ச நேரத்துல அது செத்தும் போயிருச்சு. எனக்கு என்ன பண்றதுனே தெரியல. அப்ப அங்க ஒல்லியா கருப்பா ஒரு உருவம் வந்து நின்னு இங்கதாங்கன்னு வாங்கி அத பத்தரமா பள்ளம் தோண்டி பொதச்சு மனுசங்களுக்கு சடங்கு பண்ற மாதிரியே பண்ணுச்சு.

    எங்கயோ அந்த அணில் நிம்மதியா தூங்குன உணர்வு கிடச்சி அது இறந்த உணர்வே இல்லாம ஆயிருச்சு எனக்கு. அப்புறம்தான் விசாரிச்சன் அது யாருன்னு. எம்.ஏ. படிக்கறாங்கன்னு சொன்னங்க. அடுத்தநாள் வராண்டவுல பாத்தன். கொஞ்சநாள்லயே பேச ஆரம்பிச்சு நல்லாப் பழகவும் ஆரம்பிச்சுருச்சு. இதோட வகுப்புலயே இருக்கற இன்னொருத்தனுக்கும் என்ன பிடிக்கும் போல. படிப்புலயே இதுக்கும் அவனுக்கும்தான் போட்டியாம்? அவனும் என் பின்னடியே திரிஞ்சான். இதால தாங்கிக்க முடியல போல. என்மேல இருந்த பாசம் கூட ஆரம்பிச்சுருச்சு.

    ஒருநாள் வந்து ஏன்கிட்ட நான் உன்ன விரும்பறன். கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டுச்சு.

    அந்த ஒரு கணம் அதிர்ச்சியா இருந்தாலும் கேட்டது அதுவா இருந்ததால என்னால மறுக்க முடியல.

    நானும் சரின்னு சொல்லிட்டேன். ஒருவாரம் ரொம்ப சந்தோஷமா இருந்தன். ஆனா எனக்குள்ள இருந்த அந்தக் குற்றஉணர்வு என்ன இயல்பா இருக்கவிடல. அத நான் சொல்லாம போனா பாவம் பண்ணவளா ஆயிருவன்னு அன்னைக்கு சொல்ல முடிவுபண்ணன்”.

    “என்னடி அப்படி ஒரு குற்ற உணர்ச்சி” என்று புவனா இடைமறித்துக் கேக்க “அதுவா இரு சொல்றன்னு” நிலா தொடர்ந்தா…

    “எனக்கு சின்ன வயசுல இருந்தே இருக்கற இதயப் பிரச்சன உனக்குத் தெரியும்ல. அதத்தான் அதுகிட்ட அன்னைக்கு சொன்னன். பின்னடி குழந்த பெத்துக்கறதுலயும் பிரச்சன இருக்கலாம்னு டாக்டர் சொன்னத சேத்தே சொன்னன். அந்த நிமிஷம் அது அந்த அணிலுக்குக் காட்டின இரக்கமும் பரிவும் என் கண்ணுக்கு முன்னடி வந்து நின்னுச்சு.

    கொஞ்சநேரத்துல வரன்னு எந்திரிச்சு போனதுதான் ஆளயே காணோம். அப்புறம் மாலையில போன் பண்ணுச்சு.“இங்க பாரு நிலா. எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும். நீயில்லாம நான் இல்ல. என்ன மாதிரி ஒரு ஆள இந்த உலகத்துலயே உன்னாலதான் பாத்துக்க முடியும்.ஆனா பொண்டாடியா இல்ல. ஒரு தோழியான்னு சொல்லுச்சு”.

    “எனக்கு ஒண்ணுமே புரியல. ஏன்னு கூட கேக்கல. காரணம் தெரிஞ்சதுதான். வாரிசு எவ்ளோ முக்கியம் ஒவ்வொருத்தருக்கும்னு நாம பாக்காததா. அத தர சக்தி இல்லாத நான் ஏன் அவ்ளோ ஆசப்படணும்னு நினைச்சன்.

    ஒண்ணும் சொல்லாம “பரவா இல்ல இந்த ஒரு வாரக் காதல் போதும் என் வாழ்க்கையில. யாரையும் காதலிக்கிற தகுதியும் எனக்கு இல்ல. நான் ஒரு தோழியாவே இருக்கன்னு” அன்னையில இருந்து ரெண்டு வருஷத்துக்கு முன்னடி வரைக்கும் அப்படியே தான் இருந்தன்.

    “அவன் பிரெண்டுன்னு சொன்னதும் பல்ல இளிச்சிக்கிட்டு போய் ரெண்டு வருஷம் முன்னடி வரைக்கும் உயிரக் கொடுத்த. அப்பறம் எப்படி ஒனக்கு ஞானம் பொறந்து அத விட்டுத் தொலைச்ச. அது பண்ணத நினைச்சா எனக்கே கடுப்பா வருது. நீ எப்படிதான் எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டியோ” என்று புவனா புலம்பினாள்.

    “எல்லா மனுஷங்களுக்கும் சுயநலம் இருக்கும். அதுக்காக நான் பொதுநலமா யோசிக்கறன்னு சொல்லல. ஒரு உயிரு என்னால வலி அனுபவிச்சிரக்கூடாதுன்னு மட்டும்தான் நினைச்சன். அதனாலதான் அத்தன வருஷமும் நான் ஒரு தோழியாவே இருந்தன். தோழின்னு மட்டும் இல்ல அதக் கடந்து சில நேரங்கள்ல ஒரு அம்மாவா, ஒரு சகோதரியாலாம் என்ன நானே கற்பனை பண்ணிக்குவன்”.

    ஏன் அப்படியெல்லாம் நான் யோசிச்சேன்னா அது என்ன விரும்பிட்டு இதயப் பிரச்சினையாலதான வேணாம்னு சொல்லுச்சு. அந்த குற்றவுணர்ச்சிக்காகத்தான் என்ன அது ரொம்ப பத்தரமா பாத்துக்கிறன்னும் பாத்துக்கிச்சு. எனக்கும் இந்த காதல் மேலலாம் நம்பிக்க இல்ல. நான் நினைச்ச எல்லாக் கதாப்பாத்திரங்களாகவும்  இருந்து அதோட துக்கங்கள்ல சந்தோஷங்கள்ல பங்கெடுத்துக்கறன்ற திருப்தி மட்டும் இருந்துச்சு.

    “சரி அவ்ளோ நம்பிக்கையில போன உங்க உறவுக்குள்ள வந்த சிக்கல் என்னதான்”. சொல்லண்டி மண்டையே வெடிச்சுரும் போல இருக்கு” எனக்குன்னு புவனா ஆர்வமாக கேட்டாள்.

    “அதுக்கு குழந்தைனா உயிரு. அதுவும் அழகான குழந்தையாத்தான் வேணும்னு தேடித் தேடி அழகான பொண்ணுங்களா காதலிச்சுகிட்டு இருந்துச்சு. ஆனா அதுங்களுக்கு எதுவும் இதப் பிடிக்கல”.

    “ஆமா ஆமா எல்லாம் உன்ன மாதிரி மூஞ்சியவே பாக்காம சரின்னு சொல்லிருங்களா? அணில பாத்தன், ஆட்டுக்குட்டிய பாத்தன்னு வேற ஒரு காரணம். மூஞ்சிய விட முழு மண்டையிலயும் முளைச்ச புல்லு, பூண்டெல்லாம் எப்ப போச்சுனே தெரியல. அப்புறம் எப்படி யாருக்கும் பிடிக்கும்னு” புவனா கடுப்பில் சொல்ல,

    “அதான் அதோட பிரச்சனையே. ஆனா தான் பிரச்சனைய அது புரிஞ்சிகிட்டதே கிடையாது. ஒவ்வொரு முறையும் நான் இத காதலிக்கறன், அத காதலிக்கறன்னு விதவிதமான பொண்ணுங்களோட போட்டாவா அனுப்பும். அதுல ஒரு பொண்ண இதுக்கு ரொம்பப் பிடிச்சிருச்சு. அந்தப் பொண்ணுக்கும் இத கொஞ்சம் பிடிக்க ஆரம்பிச்சிருச்சு. அன்னையில இருந்து எப்ப பாத்தாலும் அந்தப் பொண்ணு உன்னவிட  ரொம்ப அழகு, அவ அவ்ளோ நல்லவ, அவள மாதிரி மனிதாபிமானம் இங்க யாருக்கும் இல்லன்னு ஒப்பிட்டுப் பேசிக்கிட்டே இருக்கும்.

    ரொம்ப பொறுக்க முடியாம ஒருநாள் சொல்லிட்டன். “இங்க பாரு நான் உனக்கு ஒரு தோழி அவ்ளோதான். யாரோடயும் என்ன ஒப்பிட்டுப் பேசாதன்னு சொன்னன்”.

    அப்போ அது சொல்லுச்சு. “உனக்குப் பொறாம. அந்தப் பொண்ணு எனக்குக் கிடச்சிட்டான்னு”.

    “எனக்கு என்ன பொறாம. எது கிடைச்சாலும்தான் நீ எப்படியும் தூக்கிப் போட்டுடப் போறன்னு” நான் சொல்ல அதுக்கு அது, “ உன்ன நான் வேணாம்னு சொன்ன மாதிரி அவள நான் வேணாம்னு சொல்லவேண்டி அவசியம் இருக்காது. ஏன்னா அவ எனக்கு அழகான குழந்தையப் பெத்துத் தரதுல அவளுக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல”ன்னு சொல்லுச்சு.

    “அதுக்கு நீ என்னடி சொன்ன. வச்சி வாங்கி இருக்கக்கூடாது” என்று புவனா கோபத்தோடு கேட்டாள்.

    “கேட்டா மட்டும் என்ன ஆகப்போகுது. எனக்கு ஒன்னு மட்டும் அப்ப விளங்குச்சு. அப்படி ஒரு வெள்ள மனசோட எங்கிட்ட அது பழகலன்றது. அப்பதான் முடிவு பண்ணன். அதோட இனியும் பேசினா நான் பைத்தியமா ஆயிருவன்னு.

    மொத மொதலா  இது என் கிட்ட காதல வந்து சொன்னப்ப பக்கத்துல இருந்த ஒரு பொண்ணு சொன்னா அக்கா இவர் மண்டையில முடியே இல்லன்னு”. ஆனா அப்ப அது எனக்குப் பெருசாத் தெரியல. அப்படிப்பட்ட இது என்னோட குறைய என்ன காயப்படுத்தற மாதிரியே என்கிட்ட வந்து சொல்லுதுனா என்ன பத்தி இத்தன நாளா என்ன நெனச்சி இருந்திருக்கும்னு எனக்கு அப்பதோணுச்சு. “நட்பும் கிடையாது, நான் தோழியும் கிடையாதுன்னு அப்ப முடிவு பண்ணன்”.

    ஆனா அதுகிட்ட நான் வெளிக்காட்டிக்காம “உனக்குன்னு ஒருத்தி கிடைச்சிட்டா. இனி நான் உன் கிட்ட பேசனா அது உனக்கு நல்லது இல்லன்னு சொல்லிட்டு அதுக்கப்பறம் பேசறதையே விட்டுட்டன்.இதுவரை அதுவும் என்கிட்ட பேசறதே இல்ல” அப்படின்னு நிலா சொல்லி முடிச்சப்ப புவனா ஏதோ ஒரு மிருகத்த பாக்கற மாதிரி வித்தியாசமா பாத்துக்கிட்டு இருந்தா.

    “எப்படி இத்தன வருஷம் பொறுத்துகிட்டு இருந்தடி. காதலிக்கறன்னு சொல்லி ஒரே வாரத்துல தோழியா மாத்துன ஒரு ஆளுக்காக அதோட அவ்ளோ வலியையும் உள்ள வாங்கிட்டு இருந்திருக்க… அப்பாடா ஒரு வழியா ஓச்சியே அதன்னு” புவனா அத ஒரு சாதனையா சொல்லிக்கிட்டு இருந்தப்ப நிலா எந்த உணர்வும் இல்லாம திண்ணையில உக்காந்து காலாட்டிக்கிட்டே இருந்தா.

    “பாத்தியா இதுக்குதான் இந்தக் கதைய நான் யார்கிட்டயும் சொல்றதே இல்ல.எனக்கு இருந்த இதயப் பிரச்சினையும் ஒரு வருஷத்துக்கு முன்னடியே சரிபண்ணியாச்சு. அதல்லாம் தான் உனக்குத் தெரியுமே”.

    “ஆமா ஆமா தெரியும். ஹோ அதுக்காகத்தான் இப்படி முடியோட மாப்பிளை தேடிக்கிட்டு இருக்கியா?”

    “அய்யோ பழி எடுக்கலாம் இல்லடி. சின்னவயசுல இருந்தே அப்படி இருக்கறவங்க எனக்குப் பிடிக்கும். முடி இல்லனாலும் மனசு இருக்கேன்னு இத எனக்குப் பிடிச்சுது. ஆனா அதோட மனசுல என்ன எவ்ளோ மோசமா நினைச்சி வச்சிருந்திருக்கு. தான் ஒரு பொண்ண ஏமாத்திட்டோமேன்ற குற்ற உணர்ச்சியில இருந்து தப்பிக்க அது என்ன சுமையா தூக்கிட்டு திரிஞ்சிதா எனக்கு இப்ப தோணுது. எனக்கே அருவருப்பாவும் கஷ்டமாவும் இருந்துச்சுடி. என்னமோ போது.

    ஆனா அதுக்காகலாம் முடியோட மாப்ள தேடல. நல்ல மனசு எதுன்னு தேடிக்கண்டு பிடிக்க இங்க கஷ்டம். இனி யாரையும் காதலிக்கவும் விருப்பம் இல்ல. வரவன் மனச ஒரேநாள்ல புரிஞ்சிக்கவும் முடியாது. குறைஞ்சபட்சம் முடியோடாவது இருக்கட்டுமேன்னு இருக்கு. அதனாலதான் இப்ப முடி இருக்கறது என்னோட லட்சியமா ஆயிருச்சு”.

    “நல்ல லட்சியம்டி. உனக்கு பின்னடி இவ்ளோ பெரிய கதை இருக்கும்னு பாத்தா முடிக்குப் பின்னடி இருக்கற ஒரு கதைய சொல்லிட்டுப் போற”.

    “சரி எனக்கு ஒரு சந்தேகம் நிலா”.

    “என்னடி சந்தேகம்”

    “ஆம்பளைக்கு முடி இல்லனா சொத்து வீடு வாசல் வேலன்னு ஏதேதோன்னு சொல்லி சம்மதிக்க வச்சிராங்க. பொண்ணுங்க சொட்டையா இருந்த எந்த ஆம்பளையாவது கட்டிக்குவானாடி”ன்னு புவனா கேட்டா.

    “முடி கீழ வரைக்கும் தொங்கணும்றதுதான் ஆம்பளைங்களோட ஆசையே. அப்படி இருக்கறப்ப எந்த ஆம்பளடி கட்டிக்குவான். ஆம்பளை பொம்பளை இன்றதே இங்க ஒரு சிந்தனைதான். எல்லாமே ஆம்பளைங்களால உருவாக்கப்பட்டது. முடி இருந்தாலும் இல்லனாலும் அவன கட்டிக்கணும். முடி இல்லாம போன வாழ்நாள் பூரா ஒரு பொண்ணோட நிலமை”…

    “யோசிக்கவே முடியலடி. சரி விட்டுருவோம்”. புவனா நான் வந்து ரொம்பநேரம் ஆச்சு. அம்மா தேடுவாங்க கிளம்பறன்.

    சிலநாட்கள் கழிச்ச பிறகு நிலாக்கிட்ட அவ அம்மா கலா “என்னடி இப்ப சந்தோஷமா. முடி நல்லா நெத்தி வரைக்கும் வந்து விழுற மாப்பளையாவே கிடைச்சிட்டான். பொதுவா முடி இல்லனாதான் அறிவு அதிகம்னு சொல்லுவாங்க. ஆனா நீ அறிவு வேணாம். முடிதான் வேணும்னு அடம்பிடிச்ச பாரு. என்னமோ போ”.

    “இப்ப ஒனக்கு ஒரு பிரச்சனையும் இருக்காதுன்னு நம்புறன். தட்டுலாம் மாத்தியாச்சு. கல்யாணத்தோட முதல்நாள்லயே மண்டபத்துல நிச்சயம் வச்சிகலாம்ல. இல்ல தனியா நிச்சயம் வக்கணுமான்னு”கலா கேட்டப்ப போம்மா “அவரோட நான் வாழவே ஆரம்பிச்சுட்டன் மனசுல. இப்ப போய் நிச்சயம் கிச்சயம்னு பேசிக்கிட்டிருக்கன்னு சொல்லி அப்படியே தூங்கிப் போனா”.

    காலையிலலேயே நிலாவுக்கு அவன்கிட்ட இருந்து ஒரு போன். “நிலா உன் கிட்ட ஒண்ணு சொல்லணும்”.

    “என்ன சொல்லுங்க”.

    “இல்ல நேத்து இரவு ஒரு கனவு”.

    “என்ன கனவு ஏன் இவ்ளோ பொறுமையா பேசறீங்க”..

    “திடீர்னு ஒருநாள் நான் தூக்கத்துல இருந்து முழிச்சு பாக்கறன். மண்டையில இருந்த ஒரு பக்கம் முடி தலைக்காணி மேல கிடக்குது. பதறியடிச்சு எந்திரிச்சுப் போயி பாத்ரூம்ல வாஷ்பேசின்கிட்ட நின்னு தலையில அள்ளி தண்ணி ஊத்தினா மிச்ச முடியும் கீழ கொட்டுச்சு. முக்கா வழுக்க தலை. ஏன் இப்படி எனக்குக் கனவு வரணும். ஒன்னுமே புரியல”.

    ”என்னது மண்ட வழுக்கையான கனவா”? என்று நிலா அதிர்ச்சியடைந்து கேட்க…

    “அது மட்டும் இல்ல இன்னோன்னு”.

    ”இதுவரைக்கும் நான் கண்ட கனவு எதுவுமே எனக்குப் பலிக்காம போனதே இல்ல நிலா”….

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் – 130

    நிர்மலா ராகவன்

     

    கூடா நட்பும் தண்டனையும்

    “உனக்கு என்ன வந்துவிட்டது? நல்ல பையனாக இருந்தாயே?” என்று என் பதின்ம வயது மாணவன் நவாவியைக் கேட்டேன், மலாய் மொழியில்.

    சிறிதுகூட தயக்கமே இல்லாது வந்தது அவனது பதில்: “என் நண்பர்கள் அவ்வளவுபேரும் விஷம்!”

    “தகாத உறவு என்று தெரிந்தே ஏன் அவர்களுடன் தொடர்பு வைத்திருக்கிறாய்?” என்று நான் கேட்டபோது, அவனுக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை.

    ஏழைகளான பெற்றோருக்குப் பிள்ளைகளின் அத்தியாவசியத் தேவைகளை நிரப்புவதற்கே பொழுது போய்விடுகிறது, அதனால் தகுந்த கவனிப்பின்றி பிள்ளைகள் தான்தோன்றித்தனமாக நடக்கிறார்கள் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால், நவாவியைப்போல வசதிமிக்க குடும்பத்திலிருந்து வந்த சிறுவர்களும் பாதைமாறிப் போகிறார்களே, ஏன்?

    பல பெற்றோர் குழந்தைகள் தவறு செய்தாலும் கண்டிக்க மாட்டார்கள். கேட்டால், `அவர்கள் மனம் நொந்துவிடும். பெற்றோருக்கு நம்மிடம் அன்பில்லை என்று நினைத்து அவமானம் அடைந்துவிடுவார்கள்!’ என்று பலவாறாகச் சொல்வார்கள். ஒரு வேளை, திருத்த நினைத்தாலோ கெஞ்சலாகச் சொல்வார்கள். யாரும் அதைச் செவிகொடுத்துக் கேட்பதில்லை. இத்தகைய வளர்ப்புமுறையால் தான் என்ன செய்தாலும் சரிதான் என்று தோன்றிப்போகிறது சிறுவர்களுக்கு.

    அவர்களுக்குப் பன்னிரண்டு வயதாகும்போது, பெற்றோர் சற்று அடக்க முயல்கிறார்கள். ஐந்திலேயே வளைத்திருக்கவேண்டும். காலங்கடந்து திருத்துவது இயலாத காரியமாகிவிடுகிறது.

    அந்த வயதுக்கே உரிய எதிர்க்கும் குணத்துடன், `என் பெற்றோருக்கு என்னைப் புரிவதேயில்லை!’ என்று தம்மை ஒத்த மாணவர்களிடம் குறை கூறுகிறார்கள். நண்பர்களுடன் ஒன்றாக இணையும்போது, அவர்களுடைய பழக்கவழக்கங்களையும் ஏற்பது தனி மகிழ்ச்சி. தீய பழக்கங்களைப் பெற்றோர் கண்டித்தால், அவர்கள் வேண்டாதவர்களாகி விடுகிறார்கள்.

    பரவும் கசப்பு

    பெற்றோரிடம் கொண்ட காழ்ப்பு ஆசிரியைகளிடமும் பரவுகிறது. `என்னைப் புரிந்துகொள்கிறவர்கள் நண்பர்கள் மட்டும்தான்!’ என்பார்கள்.

    `உன் நண்பர்கள் உருப்படாதவர்கள்!’ இப்படிச் சொன்னால், எந்தப் பையன்தான் ஏற்பான்? (சில பெண்களும் இதில் சேர்த்தி).

    பொதுவாக, நண்பர்களைக் குறை கூறாது, அவர்களுடைய பழக்கவழக்கங்களை மட்டும் குறிப்பிடலாமே!

    “அவர்கள் சிகரெட்டில் ஆரம்பித்து, இன்று போதை மருந்துவரை போய்விட்டார்கள். இப்பழக்கம் சட்ட விரோதம் என்பது ஒருபுறமிருக்க, உன் ஆரோக்கியம் கெடும். படிப்பும் வீணாகும்,” என்று பொறுமையாக எடுத்துச்சொல்லும் பெற்றோர் மகனை சிறுகச் சிறுக மாற்ற முடியும்.

    ஒரு தண்டனையானது அதிலிருந்து கற்கும்படி அமையவேண்டும்.

    கதை

    சுந்தர் கல்வி பயின்ற பள்ளிக்கூடத்தில் பாடம் நடக்கையில் கைத்தொலைபேசியைப் பயன்படுத்தக்கூடாது என்ற விதிமுறை இருந்தது. மீறினால், மறுநாள்தான் தவறிழைத்த மாணவன் அதைத் திரும்பப் பெறமுடியும்.

    சுந்தர் நன்றாகப் படிப்பவன். அவனுடைய போதாத காலம், அவனுடைய கைத்தொலைபேசி பிடுங்கப்பட்ட அன்று வெள்ளிக்கிழமை. திங்கள்வரை அது இல்லாது, அவனுக்குக் கை ஒடிந்ததுபோல் ஆயிற்று! தலைமை ஆசிரியையிடம் எவ்வளவு கெஞ்சியும் பயனில்லாமல் போயிற்று. `நீயே இப்படிச் செய்யலாமா?’ என்று கைவிரித்துவிட்டாள்.

    இனி எந்த விதியையும் அலட்சியப்படுத்தக்கூடாது என்ற புத்தி வந்தது பையனுக்கு.

    தொலைகாட்சி, கணினி விளையாட்டுகளும் இளவயதினருக்கு மோகம் அளிக்கும் சாதனங்கள். உல்லாசமாகப் பொழுதைப் போக்க இவை இருக்கையில், யாராவது வீட்டுப்பாடம் செய்வார்களா!

    பள்ளி நிர்வாகத்தினரிடமிருந்து உண்மையை அறியும் பெற்றோர் குறிப்பிட்ட காலம் இவை இரண்டும் கூடாது, வீட்டுப்பாடத்தை முடிக்க வேண்டும் என்று தடை உத்தரவு போடலாம்.

    இங்கு `காலம்’ என்பது சில மாதங்கள். அவர்களுக்கு முதலில் பொறுக்க முடியாமல் இருக்கும். பிறகு பழகிவிடும். வகுப்பில் நல்ல பெயர் எடுக்கும்போது, தொலைகாட்சியின் முக்கியத்துவம் குறைய, பொறுப்பு வந்துவிடும்.

    வீண் தண்டனைகள்

    சிலவித தண்டனைகளால் பயனுள்ள எதையும் கற்க மாட்டார்கள் சிறுவர்கள். உதாரணமாக, `பாடம் படிக்காது, இன்னொரு முறை தொலைகாட்சிமுன் உட்கார்ந்தாயோ..!’ என்று மிரட்டினால் பயமும் எதிர்ப்பும்தான் எழும்.

    மாறாக, `அரைமணி நேரத்திற்குமேல் கணினி கூடாது. பரீட்சை நெருங்குகிறது! சிறப்பாகத் தேர்ச்சி பெற வேண்டாம்?’ என்று பொறுமையாக வழிகாட்டுவது சிறுவர்களைப் பொறுப்பானவர்களாக ஆக்கும்.

    எது கூடாத நட்பு?

    நன்றாகப் படித்து நிறைய மதிப்பெண்கள் வாங்கும் மாதவனை அவன் வகுப்பிலிருந்த பிற மாணவர்கள், “உரு! கடம்!’ என்றெல்லாம் கேலி செய்வதைக் கண்டிருக்கிறேன். எதையும் புரிந்துகொள்ள முயற்சி எடுக்காது, மணிக்கணக்காக மனப்பாடம் செய்கிறான், இப்படிச் செய்வது பெண்களின் குணம் என்று அந்த கேலிக்கு அர்த்தம்.

    மாதவனோ, தன் பொறுப்பை உணர்ந்திருந்தான். சக மாணவர்களின் கேலியை அலட்சியப்படுத்தினான். சில ஆண்டுகளுக்குப்பின் அவன் மேற்படிப்புக்கு ஆயத்தமாக, அவனை நையாண்டி செய்தவர்கள் பின்தங்கிப் போனார்கள்.

    முன்னேறவிடாத முட்டுக்கட்டைகள்

    சிறு குழந்தைகள் தாம் நல்லவர்களா, புத்திசாலியா என்று அறிய பெற்றோரது பாராட்டை எதிர்நோக்குவது இயற்கை.

    `நீ உருப்படமாட்டே!’ என்று சொல்லிக்கொண்டே இருந்தால் குழந்தைகளுக்கு நற்புத்தி வரும் என்று எண்ணிய பெற்றோர் வாய்த்திருந்தால், சிலர் பெரியவர்களானபின்னும் அதேபோல் பழிக்கும் நண்பர்களையே நாடுகிறார்கள். தம்மை அவர்கள் முன்னேறவிடாது தடுக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதில்லை.

    நாம் அடையும் மகிழ்வும், தன்னம்பிக்கையும் பிறரிடமிருந்துதான் பெறவேண்டும் என்ற நிலை ஓரளவு சரியாக இருக்கலாம். அதற்காக எப்போதும் பிறரையே நாடுவது பலகீனம் அல்லவா?

    நண்பர்கள் மட்டுமல்ல, சில சமயம், வாழ்க்கைத்துணைகூட ஒருவரை தாழ்த்தக்கூடியதுதான்.

    கதை: பயங்கொள்ளிகளின் ஆயுதம்

    தன்னைவிடப் பலவிதங்களில் சிறந்திருந்த மனைவியை ஓயாது மட்டம்தட்டி, பலர் முன்னிலையில் `முட்டாள்’ என்று பழித்தால் தான் உயர்ந்துவிட்டதாக எண்ணும் ஆண்களில் சுதாகரும் ஒருவன்.

    அவன் மனைவி சுமதிக்கு உற்றார் உறவினர் எவரும் அருகில் இருக்கவில்லை. அதனால் கணவன் அவளை எப்படி நிந்தித்தபோதிலும் அனுதாபம் காட்டவோ, அறிவுரை வழங்கவோ எவரும் இல்லை. படித்த பெண்ணானாலும் மரியாதை கருதி, `இதுதான் தமிழ் பெண்ணுக்கு அடையாளம்!’ என்று பொறுத்துப்போனாள்.

    மனைவியை மட்டுமின்றி, அவளுடைய பெண் உறவினர்கள் யாராவது வந்தால், அவர்களையும் தாக்குவதுபோல் பேசத் துணிந்தான் சுதாகர்.

    மனைவியை தாழ்த்திப் பேசும் ஆண்கள் உலகிலுள்ள எல்லாப் பெண்களையும் அப்படியே நடத்தலாம் என்று நினைக்கிறார்கள். அபூர்வமாக சில பெண்கள் எதிர்க்கையில், ஒரேயடியாகப் பயந்துவிடுவார்கள்.

    (என்னை ஒருவர் அப்படி நடத்தியபோது, நான் எழுதியவைகளின் நீண்ட பட்டியலை அவரிடம் மௌனமாகக் கொடுத்தேன். புரட்டிவிட்டு, `பயமா இருக்கே!’ என்றார். அதன்பின் ஒரே மரியாதை!)

    பயந்தாங்கொள்ளிகளின் ஆயுதம் அடங்கிப்போகும் பெண்களை மிரட்டுவதோ?

    அதன்மூலம் தாம் தைரியசாலிகள்தாம் என்று தமக்கே தைரியம் சொல்லிக்கொள்கிறார்களோ?

    ஆரம்பத்திலேயே எதிர்க்காது, விட்டுக்கொடுத்துப்போனது சுமதி செய்த தவறு. மனைவியின் எதிர்ப்பின்மை அவனுடைய பலத்தை அதிகப்படுத்துவதுபோல் இருக்க, வன்முறையில் இறங்கினான் சுதாகர்.

    பிறர் நம்மை ஏற்கவேண்டும் என்று நம் சுயகௌரவத்தை விட்டுக்கொடுத்தால் பிறருக்கு மட்டுமின்றி, நமக்கும் நம்மையே பிடிக்காதுபோகும் அபாயம் இருக்கிறது.

    நண்பர்களோ, உறவினர்களோ, நம் ஆற்றலை முழுமையாக வெளிக்காட்டாதிருக்க தடை போட்டால், அவர்கள் தொடர்பு வீண்.

    தொடருவோம்

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே 39

    க. பாலசுப்பிரமணியன்

    தோல்விகளுக்கு யார் காரணம் ?

    பல நேரங்களில் நாம் நம்முடைய தோல்விகளுக்கு மற்றவர்களைப் பொறுப்பாக்குகின்றோம். எப்பொழுதுமே நமது தோல்விகளுக்கு நாமே காரணமாக இருக்கின்றோம் என்பதை உணருவதில்லை அல்லது உணர மறுக்கின்றோம். தோல்விகளில் நம்முடைய பங்கு எவ்வளவு உண்மையானது என்பதை உணர்ந்தால் தன்னுடைய சுய கௌரவத்திற்கு தாக்குதல் ஏற்படுமோ என்ற பயத்தில் உண்மையிலிருந்து விலகி நிற்கின்றோம்.  மற்றவர்கள் நம்முடைய தோல்விக்காக நாம் ஏற்படுத்தும் சூழ்நிலைகளைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். நாம் ஏன் மற்றவர்களை நம்முடைய தோல்விகளுக்கு பொறுப்பாக்குகின்றோம்? இதற்கு சில காரணங்கள் இருக்கின்றன.

    1. நாம் நம்முடைய சுய தனித்திறன்களை அறிந்து கொள்வதிலும் . நம்முடைய தனித்திறன்கள் மீதும் நம்பிக்கை வைப்பதில்லை. அவைகளைக் குறைத்து மதிப்பிடுகின்றோம். அல்லது நமது திறன்கள் விலைபோகுமா என்ற ஒரு சந்தேகம் நமக்கு இருந்து கொண்டே இருக்கின்றது. நாம் நம்மை மற்றவர்களிடம் ஒப்பிடும் பொழுது பல நேரங்களில் நமது திறன்கள் மீது நாம் கொண்ட பார்வை துல்லியமாக இல்லாமல் பாரபட்சமாகவோ அல்லது ஒருவித தயக்கத்துடனோ இருக்கின்றது. இதை மற்றவர்கள் அறிந்து தங்களுடைய நம்பிக்கைகளின் அடிப்படையிலும் தங்களுடைய புத்திசாலித்தனமான உள்ளீடுகள் மூலமாகவும் தங்களுக்குச் சாதகமாக மாற்றிவிடுகின்றனர்.
    1. வெற்றிப்பாதைகளுக்கு ஏற்றவாறு நாம் நமது திறன்களை புதிப்பித்துக்கொள்வதில்லை. பல நேரங்களில் நாம் நம்முடைய பழைய அறிவுகள், சிந்தனைகள், கற்றல்கள், திறன்கள் ஆகியவற்றை பெரும் சொத்தாக நினைத்து அவைகளின் அடிவாரகங்களில் கட்டப்பட்ட மாளிகைகளில் சொகுசாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். காலப் போக்கில் இவைகள் உபயோகமற்றவைகளாகவும் தேவையற்றவைகளாகவும்  மாறி நமக்கு உதவாமல் உளுத்துப் போகின்றன. வேகமாக மாறிவரும் அறிவு மற்றும் திறன்களின் சந்தையில் நாம் தனிமரமாக தோல்வியின் சின்னமாக நின்றுவிடுகின்றோம். இதற்கு யார் பொறுப்பு? மற்றவர்களோ தங்கள் அறிவினையும் சிந்தனைகளையும் திறன்களையும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாகக் கூர்மையாக்கிக் கொண்டு வருகின்றனர்.  வெற்றிக்கனியை பிடிப்பதற்குத் தங்களை தயார் செய்து கொண்டு வருகின்றனர். பல நேரங்களில் அவர்கள் நம்மை விட அனுபவத்தில் குறைந்தவர்களாகவும் வயதில் குறைந்தவர்களாகவும் இருக்க வாய்ப்புண்டு. அந்த நேரங்களில் நாம் அவர்களைக் கண்டு பொறாமை கொண்டோ அல்லது வெறுப்புக் கொண்டோ அவர்களை நம்முடைய தோல்விகளுக்கு காரணமாகக் காட்டுகின்றோம். இதை வெல்ல ஒரே ஒரு வழி – நித்தம் நம்முடைய அறிவையும் திறன்களையும் சீர் செய்து கொண்டு இருப்பதுதான் !
    1. தோல்விகளைக் கண்டு துவளாமல் உயர்வது எப்படி என்று நாம் சிந்திப்பதில்லை.  ஒருமுறை எட்மண்ட் ஹில்லாரி (Edmund Hillary) எவரெஸ்ட் சிகரத்தை அடைவதற்காக தன்னுடைய முதல் முயற்சியை மேற்கொண்ட பொழுது தோல்வியைத் தழுவினார். அவர் இமயத்தை விட்டு கீழே இறங்கியதும் அந்தச் சிகரத்தை ஒரு முறை நோக்கி சொன்னார்: ” நீ இதைவிட பெரியதாக உயரமுடியாது. ஆனால் நான் இப்பொழுது இருப்பதைவிட பெரியவனாக உயர முடியும்.” என்னே! ஒரு மனப்பான்மை. தோல்விகள் நமக்கு கற்றலையும் துணிவையும் கொடுக்கக்கூடியவை. அதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளாமல் மற்றவர்களை அந்தத் தோல்விக்கு காரணமாக ஆக்குவது நமது குறுகிய மனப்பான்மையையும் நமது இயலாமையின் வெளிப்பாட்டையும் காட்டுகின்றது.
    1. சில நேரங்களில் தோல்விகளின் தாக்குதல்களிருந்து விடுபட நாம் மாறுபட்ட சிந்தனைகளைக் (Out of Box thinking) கையாள வேண்டும். நேர்கோட்டுச் சிந்தனை (Linear thinking) முறைகள் பல நேரங்களில் பயன் அளிப்பதில்லை. எனவே ஒவ்வொரு நேரத்தில் எப்படிப்பட்ட வழிமுறைகளைக் கையாள வேண்டும் என்று சிந்தித்து அதற்குத் தக்கவாறு கையாள வேண்டும். செகப்பிரியர் (Shakespeare) எழுதிய “வெனிஸ் நாடு வியாபாரி” (The Merchant of Venice) என்ற கதையிலே தன்னுடைய தேவைக்காக ஷைலக் (Shylock) என்பவரிடம் ஒரு தொகையைக் கடன் வாங்கிய அன்டோனியோ (Antonio) என்பவர் குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் அந்தக் கடனைத் திருப்பித் தருவதாக வாக்குறுதி அளிக்க, அது தவறினால் தன்னுடைய இதயத்திலிருக்கும் சந்தையிலிருந்து ஒரு பவுண்டு சதையைத் தருவதாக வாக்குறுதி அளிக்கின்றார். குறிப்பிட்ட காலத்தில் அந்தப் பணத்தை திருப்பித் தர முடியாததால் ஷைலக் ஒரு பவுண்டு இதயச் சதையைக் கேட்க பல நண்பர்கள் அதற்குப் பதிலாக பலமுறை அதிகமாகப் பணம் தருவதாகவும் தன்னுடைய கோரிக்கையைக் கைவிட்டுவிடுமாறும் ஷைலக்கை கேட்கின்றனர். இதற்குப் பணியாத அந்த வியாபாரி ஷைலக்கிடம் மாறுவேடத்தில் ஒரு வழக்குரைஞராக வந்த போர்ஷியா (Portia) என்ற பெண் அந்தக் கோரிக்கையை ஏற்று “உங்களுக்கு ஒரு பவுண்டு இதயச் சதை நிச்சயமாகக் கிடைக்கும். ஆனால் அதை எடுக்கும் பொழுது ஒரு துளி இரத்தம் வந்தாலும் உங்களுடைய பணம் மட்டுமின்றி உங்கள் வாழ்வும் போய்விடும் என்று கூறி அந்த வழக்கை வென்று விடுகின்றார். இந்த கதை ஒரு மாறுபட்ட சிந்தைக்கு (Lateral thinking) முகாந்திரமாக அமைகின்றது. பல நேரங்களில் மாறுபட்ட சிந்தனைகள் பல பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் தோல்விகளைத் தவிர்ப்பதற்கும் ஏதுவாக அமைகின்றது.
    2. தோல்விகள் நிரந்தரம் அல்ல; மற்றும் தோல்விகள் ஒரு முடிவின் வெளிப்பாடு அல்ல. வாழ்க்கை என்ற பயணத்திலும் முன்னேற்றம் என்ற பாதையிலும் தோல்விகள் சில நேரங்களில் தடைக்கற்கள். அவைகளைக் கடந்து செல்ல நாம் பயில வேண்டும். இந்த வழியிலே வெற்றிகண்டவர்கள் சரித்திரம் படைக்கின்றார்கள் ஆபிரஹாம் லிங்கனின் (Abraham Lincoln) வாழ்க்கை இதற்கு ஒரு சான்று. இது போன்று சரித்திரம் படைத்தவர்கள் பலர் இருக்கின்றனர். அவர்கள் வாழ்க்கை நமக்கு பாடங்கள் சொல்லித் தருகின்றன. அவர்கள் வழிகள் நம்முடைய பாதைகளுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. அனுபவங்கள் ஆசானாக இருக்கும்பொழுது தோல்விகளுக்குத் தோள்கொடுக்கத் துயரங்கள் வருவதில்லை. தோல்விகளைப் பாராட்டுபவர்கள் இருக்கும் இடத்திலேயே நின்று குரல் கொடுத்துக் கொண்டிருப்பவர்கள். அவர்களுடைய கதைகளைக் கேட்பதற்கு நபர்கள் மிகக் குறைவு.

    எனவே நாம் நிமிர்ந்து நிற்கப் பழகிக் கொள்ளவேண்டும். தோல்விகளைச்  சிறிய நிகழ்வுகளாகக் கருதி மேலே வாழ்க்கைப் பயணத்தைத் தொடர கற்றுக்கொள்ள வேண்டும்.

    என்ன, முயன்று பார்க்கலாமா ?

    (தொடரும் )

    Share
  • நவீனத்துவ தொடக்கமும் ஆதவனின் பிரதியாக்கமும்

    -செ.ர. கார்த்திக் குமரன்

    இலக்கியம் தொன்றுதொட்டு பலவிதப் பரிணாமங்களை எய்தியுள்ளது. அதைப்பொறுத்து அதனுடைய வடிவமுறைகளும் மாற்றம்பெற்றே வந்துள்ளது. இம்மாற்றங்களை ஏற்படுத்திய இலக்கியவாதிகள் ஒரு சிலரைக் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு வெளித்தெரியாமல் செய்துவிடுகின்ற நிலையும் தற்காலச் சூழலில் ஏற்படுகின்றது. அந்தவகையில், நவீன இலக்கியத்தில் தனக்கான தனித்த எழுத்தினைப் பதிவுசெய்த ஆதவன் என்ற படைப்பாளர் தற்காலத்தில் அதிகம் பேசப்படுவது கிடையாது. இதேபோல் கோபிகிருஷ்ணன், எம்.வி. வெங்கட்ராம், க.நா.சு, கிருஷ்ணன் நம்பி, நகுலன், ஜி.நாகராஜன், சம்பத், கரிச்சான் குஞ்சு என இதன் பட்டியல் நீள்கிறது. இவ்வெழுத்தாளர்களைப் பற்றி அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஒரு சில கட்டுரைகள் தற்போதுள்ள இதழ்களில் வெளிவருவது வரவேற்கத்தக்கது. மேலும், இதனை வாசிக்கும்போது நிகழ்ந்த ஆர்வமே, ஆதவன் குறித்த இக்கட்டுரை எழுதத்தூண்டியது.

    ஐரோப்பியர்களின் வருகையினாலும் நவீனக் கல்விமுறையில் அவர்கள் ஏற்படுத்திய மாற்றத்தினாலும் இலக்கியம் பல்வகை அர்த்தக்கட்டுமானங்களை உள்ளடக்கங்களாகக் கொண்டு பிரதிகள் வெளிவந்துள்ளன. இத்துடன், நவீனக் கோட்பாடுகளின் தாக்கங்களும், படைப்பாக்கத்தினால் பல புதிய புரிதல்களை இலக்கிய உலகிற்கு அளித்ததோடு, வாசகர்களின் ஆய்வாளர்களின் கல்வியாளர்களின் மனங்களில் சிந்தனை ரீதியாக மாற்றங்களுக்கும் வித்திட்டன. இதனால், எழுத்தாளர்கள் பலதரப்பட்ட விஷயங்களையும் கருத்துக்களையும் வெளிப்படையாகவே வெளிப்படுத்தி உள்ளனர். இதில் ஆதவன் தன் எழுத்தினூடாக நவீன இலக்கியத்திற்கு அளித்த பங்கினைக் காண்பதாகவே இக்கட்டுரை அமைவுபெறுகிறது.

    கே.எஸ்.சுந்தரம் என்ற இயற்பெயரைக் கொண்ட ஆதவன், 1942இல் கல்லிடைக்குறிச்சியில் பிறந்தவர். 1960களில் எழுதத்தொடங்கிய இவர், தமிழ்ப் படைப்புலகில் பலவாறான நவீனச் சிந்தனைகளை எடுத்துரைக்கும் வகையில் படைப்புகளைப் படைத்தவர். மத்தியதர வர்க்கத்தின் நிலைகளையும் நவீன சமூகத்தில் ஆண் – பெண்ணுக்கு ஏற்படும் காதல் மனஉணர்வுகளையும் அதனால் ஏற்படும் நெருக்கடிகளையும் அவர்கள் அணியும் முகமூடிகளையும் போடும் வேஷங்களையும் தோலுரித்துக் காட்டுவதாக இவருடைய கதைகள் அமைந்துள்ளன. “என் பெயர் ராமசேஷன்”, “காகித மலர்கள்” ஆகிய இரு புதினங்களும் அறுபது சிறுகதைகளும் எழுதியுள்ளார். இவர் படைத்த இப்புனைகதைகளின் வாயிலாகத் தற்காலச் சூழலின் இயங்குநிலையையும் அறியமுடிகின்றது. இவர் எழுதிய காலகட்டத்தில் நவீனத்துவ கோட்பாடானது பரவலாகப் பேசப்பட்டது. மேலும், இவருடைய எழுத்துக்களானது அக்கோட்பாட்டைச் சார்ந்ததாகவே உள்ளதோடு, இவருடைய எழுத்துக்களைத் தவிர்த்து நவீனத்துவத்தை புரிந்துகொள்ள முடியாத சூழலும் உள்ளது எனலாம்.

    நவீனம் (Modern) – நவீனமயமாதல் (Modernity)- நவீனத்துவம் (Modernism)

    நவீனம் என்பதை ஒரு கண்ணோட்டம், அணுகுமுறை மற்றும் வாழ்க்கைமுறை என்றே கூறலாம். இது, கி.பி.18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐரோப்பாவில் நிலவி வந்த அறிவொளிக் காலத்தில் எழுந்தது. “நவீன என்கிற அடைமொழி காலத்தைக் குறிக்கிறது. காலத்தினால் நமது இன்றைய வாழ்க்கைக்கு மிகவும் நெருங்கிய சம்பந்தமுடையது என்பதையும், அதனுடன் இந்தக் காலத்தில் சிறப்பாக எழுதப்பட்டதையும் குறிக்கிற வார்த்தை அது.”1   1127ஆம் ஆண்டு பாரிஸிலிருந்த ஒரு தேவாலயம் சீரமைக்கப்பட்டபோது சுசர் என்பவர், அது ‘நவீனப்’படுத்தப்பட்டதாகக் கூறியபோது தான் இச்சொல் புழக்கத்தில் வந்தது எனலாம். கட்டடக்கலையில் தோன்றிய இச்சொல்லானது, பிறகு ஓவியம், கலை இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டது. பொதுவாக, நவீனம் என்ற சொல்லுக்கு அகராதியில் பழையதிலிருந்து மாறுபட்டு, புதிய மாற்றங்களுக்கும் தேவைகளுக்கும் ஏற்ற முறைகளையும் தன்மையையும் கொண்டு அமைவது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. “பதினைந்தாம் நூற்றாண்டுக்குப் பிந்திய 20ஆம் நூற்றாண்டுக்காலம் வரைப்பட்ட சிந்தனைகளை உள்ளடக்கிய தத்துவக் காலகட்டத்தை நவீன காலம் என்பர்.”2 இக்காலகட்டத்தில் தான் அறிவியல் வளர்ச்சியின் மூலம் சமூக அமைப்பே மாறியது. ஐரோப்பியர்கள் காலனிய நாடுகளில் ஏற்படுத்திய வணிகத்தின் காரணமாக பிரபுத்துவச் சமூகம் இல்லாமலாகி முதலாளித்துவச் சமூகம் தோற்றம் பெற்றதுடன், புதிய புதிய போக்குகளுக்கும் சிந்தனைகளுக்கும் வழிவகை செய்தது.

    இதனை அடியொற்றி தோன்றிய நவீனமயமாதல் என்ற பெயர்ச்சொல், புதுமை, தற்காலம், புத்தியல் ஆகிய பொருண்மையைத் தருகிறது. இத்துடன் புதிய சாதனங்கள், தொழில்நுட்பங்கள் ஆகியவற்றின் வாயிலாக தற்காலத் தேவைக்கேற்ப பலனை அதிகப்படுத்துவதின் நோக்கில் மாற்றியமைத்தலையும் இச்சொல் குறிக்கிறது. இதனால், உற்பத்திப் பொருட்களில் புதுமைகளைப் புகுத்தி, அதன் தரத்தை கூட்டுவதற்கும் அதிகளவு பொருட்களைத் தயாரித்து, உலக சந்தையை கவர்வதற்கும் இது பயன்பட்டது. மேலுமிதைப் பல துறைகளிலும் கொண்டு சென்று, தங்களின் சுயத்தை நிலைநாட்டி, நிர்வாகம் சார்ந்த அமைப்பிலும் தன் முத்திரையைப் பதியச் செய்தனர்.

    “15ஆம் நூற்றாண்டுக்குப் பிந்தைய, இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதி உள்ளிட்ட காலகட்டத் தத்துவமாக ‘நவீனத்துவம்’ அடையாளங்காணப்படுகிறது.” இத்துடன் ‘நவீனத்துவம்’ என்றால் என்ன? இதன் பண்புகள் எவையென அறிய முற்படுமிடத்து,    எம்.ஜி.சுரேஷ் எடுத்தாளும் ஹ்கோவான் ஹாஃப்மன்ஸ்தால்  தரும் விளக்கம் பொருத்தமாக இருக்கும். “இன்று இரண்டு விதமான விஷயங்கள் நவீனமானவையாக இருக்கின்றன. வாழ்க்கையை ஆய்வு செய்தல், வாழ்க்கையிலிருந்து விலகிச் செல்லுதல். மனித மனத்தின் உள்ளார்ந்த வாழ்கையை அல்லது கனவுகளைப் பகுப்பாய்வு செய்வதையும், நம்ப முடியாத மாயத்தோற்றங்கள், கண்ணாடியில் தோன்றுவது போன்ற மாயப்பிம்பங்கள், கனவுத் தோற்றங்கள் போன்றவை மீது கவனம் செலுத்துவதையும் இதோடு சேர்த்துக் கொள்ளலாம். பழைய மேசை  நாற்காலிகளைப் போலவே புதிய கண்டுபிடிப்பான நியுரானும் நவீனமானதே. அறிவொளிக் காலத்தின் ‘நெருக்கடி’க்குள்ளான அறிவும் ரொமாண்டிச யுகத்தின் புத்தாய்வை நாடும் ஆர்வமும் சேர்ந்ததே நவீனத்துவத்தின் பண்பாகும் என்பனவே நவீனத்துவங்குறித்த விளக்கமாக இவரால் முன்வைக்கப்படுகின்றன. இவர் மேலும், 1890 முதல் 1930 வரையிலான காலகட்டத்தை நவீனத்துவத்தின் உச்சக்கட்டமாக மால்கம் பிராட்பரி, ஜேம்ஸ்மக் ஃபர்லேன் போன்ற கலை இலக்கிய ஆய்வாளர்கள் வரையறுத்துள்ளனர் எனவும் கூறுவர்.”3 நவீனத்துவத்தின் வாயிலாக கல்வி வளர்ச்சி, போக்குவரத்து வளர்ச்சி, கனரக இயந்திரங்கள் மூலம் அபரிமிதமான உற்பத்தி, தொழில் துறையில் முன்னேற்றம், மக்களாட்சிக் கோட்பாடுகளின் வருகை போன்றவைகள் இக்காலத்தில்தான் ஏற்பட்டது. இதன் இயல்புகளாக, எதையும் அப்படியே ஏற்காமல் தர்க்கபூர்வமான முறையில் ஆராய்ந்து, வர்ணனைகள், விவரணைகள் கொடுத்து வளர்க்காமல், சுருக்கமான முறையில் வெளிப்படுத்தி, தனிமனித மனஉணர்வுகளைப் புலப்படுத்தும் வகையில் அமையும். “பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தீவிரங்கொண்ட நவீனத்துவம் நகர்மயமாதல், வெகுசனமயமாதல், ஒருமுகமாதல் என மனித இயக்கங்களில் அரசியல், பண்பாடு, கலை, இலக்கியம், தொழில் என அனைத்துத் துறைகளையும் புதிய தாக்குதலுக்கு உள்ளாக்கியுள்ளது.”4 இந்நவீனத்துவத்தின் சாரம்சமாக, நிலவுடைமைச் சமூகத்தின் வீழ்ச்சியையும் முதலாளித்துவத்தின் ஊடாக அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியையும் ஏகாதிபத்தியத்தின் தோற்றத்தையும் குறிப்பிடலாம்.

    என் பெயர் ராமசேஷன்

    சமகால நவீனத்துவப் போக்கினை நாவல்களில் சிறந்த முறையில் உருவாக்கியவர் ஆதவன். மத்தியதர வர்க்கத்தின் சிந்தனைகளை, உணர்வுகளை, செயல்களை அப்பட்டமாக சித்திரித்தவர். நவீன வாழ்நிலையில் இளைஞன், தன் சுயநிரூபணத்திற்கான பரிதவிப்பையும் அடையாளத் தேடலையும் வெளிப்படுத்துவதாக இந்நாவல் படைத்துள்ளார். ராமசேஷன் என்ற இளைஞனை மையப்படுத்திய இக்கதை, விடுதியில் தங்கி, பொறியியல் கல்லூரியில் படிக்கும்போது அவனுக்கு ஏற்படும் அனுவங்களை, கிண்டல்களை, உணர்வுகளைச் சொல்வதாக உள்ளது. மேல்தட்டு வர்க்கத்தின் இயல்புகளையும் குணங்களையும் சகநண்பனின் குரோதத்தையும் கீழ் மத்தியதரப் பின்னணி கொண்ட ராமசேஷன் உணர்கிறான்.  இதிலிருந்து தான் விடுபடவும் சுயநிரூபனம் அடையவும் முயல்கிறான். எனினும் தன் (மத்தியதர வர்க்க)  உணர்வுகள் அவனை நிலைகுலைய வைக்கின்றன. இதனால், தனக்கு நேரும் விளைவுகளை ராமசேஷன் பிரதியின் வாயிலாக எள்ளலாக எடுத்துரைக்கிறான்.

    “முதல் நாள் என்னைப் பார்த்தவுடனேயே நான் எப்படிப்பட்டவனென்று தனக்குத் தெரிந்துவிட்டதாக மாமி சொன்னாள். என் கண்களைப் பார்த்தவுடனேயே தெரிந்துவிட்டது (முழுக்க முழுக்க விஷமத்தனம்). அவள் முட்டாளில்லை. என் போன்றவர்களை உள்ளும் புறமும் அவள் அறிவாள். … உன் நண்பனுடைய தாயையும் தங்கையையும் உன் தாயையும் தங்கையையும் போல நினைப்பது சிரமமானது. இந்தச் சிரமத்தை உங்கள் தலைமுறையினர் படத் தயாராயில்லை. இவை அனாவசியக் கட்டுப்பாடுகளாக, ஹிப்போக்ரிஸியாக உங்களுக்குத் தோன்றுகின்றன. உங்களைச் சொல்லியும் குற்றமில்லை. நீங்கள் வளரும் சூழ்நிலை அப்படியிருக்கிறது. … உன் மனதில் ஓடுவது ஒவ்வொன்றும் அணுஅணுவாகத் தெரியும். கீழ் மத்தியதர வகுப்புக்கே உரிய வஞ்சிக்கப்பட்டுவிட்ட களை உன் முகத்தில் எழுதி ஒட்டியிருக்கிறது. … நீ எங்களுக்கு புழுவுக்கு சமானம். எங்கள் மட்டத்துக்கு ஏற்ற சமூக நாகரிகத்தை ஒட்டி நாங்கள் காட்டும் நேச பாவத்தையும் இனிமையையும் உன் அசட்டு மனம் எப்படியெல்லாம் தப்பர்த்தம் செய்துகொண்டிருக்கிறதோ, என்னவோ … நீ இனி இந்த வீட்டுப்பக்கம் வராதேயென்று நான் சொல்லப்போவதில்லை. தாராளமாக வா. ஆனால் ஒரு ஜென்டில்மேனாக லட்சணமாக இரு. Don’t try your dirty tricks here…”5 மத்தியதர வர்க்கத்தின் போக்கினையும் அவர்களுடைய சிந்தனையையும் வெளிப்படையாகவும் அழுத்தமாகவும் காட்டியுள்ளார். நவீனகாலப் போக்கினால் இளைஞர்களுக்கு ஏற்படும் மாற்றத்தினை, மேல்தட்டு வர்க்கம் புரிந்துகொண்டதையும் மேலுமவர்கள் எச்சரிக்கைச் செய்வதையும் ஆதவன் தெளிவுபடுத்தியுள்ளார். தனிமனித, கல்லூரி மாணவனின் யதார்த்தப் போக்கினையும் மரபுகளிலிருந்து விடுபட்டு வாழ நினைப்பதையும் நவீனகாலத்திய இயங்குதளத்தில் ஏற்படும் நெருக்கடிகளையும் இப்பிரதியின் வழி ஆதவன் சித்திரித்துள்ளார். நவீனத்துவ இலக்கியப் போக்கினை முன்னெடுத்தவர்களில் மிகவும் முக்கியமானவராகவும் இவர் கருதப்படுபவர்.

    அப்பர் பெர்த்

    தில்லியிருந்து சென்னைக்கு இரயிலில் மூன்றாம் வகுப்பு அப்பர் பெர்த்தில் பயணம் செய்யும் சிதம்பரம் என்ற நடுத்தரவர்க்கத்தைச் சார்ந்த இளைஞனின் சுயதேடல் மற்றும் நவீன உலகில் தன் இருத்தல் குறித்த சிந்தனைகளை வெளிக்கொணரும் விதமாக இச்சிறுகதை அமைந்துள்ளது. மேலும், இவ்விளைஞன் தில்லி சமூகவாழ்க்கையில் திளைத்ததினால் ஏற்பட்ட உளவியல் (பாலின்ப) சார்ந்த உணர்வுகளையும் செயல்களையும் சொல்வதுடன், இந்திய – தமிழ்ப்பெண்களின் பாரம்பரிய பண்பாட்டு உணர்வுகளையும் மிக நேர்த்தியாக தன் எழுத்தினூடே சித்திரித்துள்ளார். “அவளை ஆதரவுடன் அணைத்துக்கொண்டு, ‘உன் மனசு எனக்குத் தெரியும், அபர்ணா!’ என்று மெல்லிய குரலில் அவளிடமும், ‘இவள்தான் என் உண்மைக்காதலி, தெரிந்துகொள்ளுங்கள்!’ , என்று மற்றவர்களிடமும் உரக்கச் சொல்லிவிட்டு, ரயிலைத் தவறவிட்டு அவளுடனேயே இருந்துவிடலாமா என்று தோன்றியது. … அபர்ணாவை மணந்துகொண்டால் வாழ்க்கையில் என்றைக்குமே அமைதியும் அழகும் மிளிரும். ஆனால், அவனுடைய ஆசைகள்? கனவுகள்? என்றும் சாதாரணமானவனாகவோ இருந்துவிட அவன் விரும்பவில்லை. என்றாவது ஒரு நாள் சமூகத்தில் பெரிய புள்ளியாக வர வேண்டும். ஒரு புத்திசாலித்தனமான கல்யாணத்தின் மூலம்இதற்கு அவன் அடிகோலலாம். காதலா, வாழ்வின் மேன்மையா என்று யோசித்தபொழுது, பிந்தையதைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது.”6  நவீன சமூகத்தில் செய்யும் காதலுக்கும் கல்யாணத்திற்கும் இடையே வாழ்வின் மேன்மையை அடைவதுதான் புத்திசாலித்தனம் என்ற சுயநலப்போக்கினைச் சொல்வதோடு, சாதாரணமாகவே தான் ஒருபோதும் இருந்துவிடக்கூடாது என்பதையும் சமூகத்தில் தனக்கான இடம்பெற, இளைஞர்கள் செய்யவேண்டியவற்றையும் எடுத்துரைக்கிறது.

    “எதிரே தூங்கிக்கொண்டிருந்த பெண்மணியின் தோற்றம் அவன் உள்ளத்தில் ஏதேதோ கற்பனைகளைக் கிளர்ந்தெழச் செய்தது!…

    காப்பிக்குப் பிறகு, பேச்சு. சிதம்பரம் நம் சினிமாக்களைக் கேலி செய்து ஏதேதோ பேசினான். அவள் சிரித்தாள். பிறகு அவளும் ஏதோ பேசினாள். இருவரும் பேசினார்கள். நிறையப் பேசினார்கள். அலுக்காமல் பேசினார்கள்.

    சிதம்பரத்துக்கு மெல்ல நம்பிக்கை பிறந்தது. தான் பாயக்கூடிய தொலைவுக்குள் வந்துவிட்ட இரையைப் பார்த்த புலிபோல, அவன் தயாரானான். …

    அடுத்த குகைக்குள் ரயில் நுழைந்ததும் அவன் யோசிக்கவே இல்லை. சட்டென்று அவளைக் கட்டியணைத்துக் கொண்டான். அவனுடைய கைப்பிடியில் அவளுடைய சதை அழுந்தியது. திடுக்கிட்டுத்தான் போய்விட்டான் அவன். எதிர்பாராத அதிர்ச்சியில் செயலற்றுப் போனாள். ஆனால் ஒரு கணம்தான். மறுகணமே பளாரென்று அவன் கன்னத்தில் ஓர் அறை விழுந்தது. நெருப்பைத் தீண்டினவன் போல அவன் சரேலென்று கைகளை எடுத்துக்கொண்டான்.”7 தில்லியின் சமூகச்சூழல்களில் வாழ்ந்த சிதம்பரம், அங்கு பழகிய பெண்களின் இயல்பு ஆகியவற்றைக் கொண்டு, அடுத்தவனின் மனைவியாகிய இப்பெண்ணினுடைய கணவனின் இயலாமையை அறிந்து, தன்போக்கில் நடந்துகொண்டான். வேண்டிய பொருட்கள் எல்லாம் தன் கையில் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் தான் செய்த செயலானது, அவனுக்கு அவநம்பிக்கையையும் வெட்கத்தையும் கொடுத்தது. ஃபிராய்ட் பிரித்த (இன்பமனம் – id, நீதிமனம் – ego, ஆழ்மனம் – super ego) மனிதமனங்களில் முதலாவதாக இருக்கும் இன்பமனத்தை நாடிய நவீன இளைஞன், மரபான பண்பாட்டு உணர்வுகொண்ட இந்தியச் சூழலில் அதனைத் தவிர்க்கும் நிலை உள்ளதை ஆதவன் தத்ரூபமாக வெளிப்படுத்தியுள்ளார். மேலும், அவன் இத்தகைய கேவலங்களை எல்லாம் ஒரு பொருட்டாகக் கருதாமல், வாழ்க்கையில் தான் அப்பர் பெர்த்தாகவே இருக்க, செய்யவேண்டிய செயல்களைப் பற்றிச் சிந்திப்பதாக கதை முடிவடைகிறது.

    இதைப்போலவே இவருடைய நிழல்கள் என்ற சிறுகதையும் ஆணின் காதல் குறித்த பார்வையும் நவீனச்சூழலில் பெண்ணின் உடல்சார்ந்த தற்காப்பு நிலையும் ஆண் x பெண், காதல் (உடல்) x கற்பு ஆகிய இரட்டை எதிர்நிலைகளுடன் (Binary Opposition) எழுத்துருவாக்கியுள்ளார். சமகாலத்திய காதல் பற்றிய கருத்தாக்கங்களை இருநிலைகளில் அதாவது ஆண், பெண் என்ற இருமனங்களின் உணர்வுகளினூடாக பதிவுசெய்துள்ளார்.

    “இந்தத் திரைகள் அவசியந்தானென்று நீ நினைக்கிறாயா?

     ‘இது கற்காலமல்ல.’

     ‘இதோ பார் – உன்னிடமிருந்து நான் வேண்டுவது அதுவல்ல – ஏதோ ஒன்றை நான் கவர முயற்சிப்பதாகவும் நீ காப்பாற்றுவதாகவும் நினைக்கிறாயே, அதுவல்ல; எனக்கு வேண்டியது நீ – பூரணமான திரைகளற்ற நீ; முழுமையான நீ – புரிகிறதா உனக்கு? எனக்கு வேண்டியது அதுமட்டுந்தான் என்றால், எங்கேயாவது ஒரு நாற்றமடிக்கும் சந்தில் யாரையாவது ….’

    ‘வெளிச்சம் வரும்போது, கூடவே நிழல்களும் வந்துவிடுகின்றன’ என்று அவன் நினைத்தான்.”8 கற்பு குறித்து மாற்றுக்கருத்துக்கள்கொண்ட (அக்னிப்பிரவேசம், பொன்னரகம்) போன்ற சிறுகதைகளினூடே, இக்கதை கற்பினைத் தாண்டிய பூரண மனஉணர்வை வெளிப்படுத்துகிறது. இன்றைய காலங்களில் பெண்களைப் பாலின வன்கொடுமைகளுக்கு ஆளாக்கும் பட்சத்தில் இக்கதையானது, பெண்ணுடலை மீறிய தத்துவார்த்தச் சித்தாந்தத்தை ஆணின் பார்வையில் எடுத்தியம்புகிறது. சமூகக் கட்டுமானங்களைத் தனிமனிதர்கள் மாற்றுத் திசையில் கொண்டு செல்ல முடியும் என்பதை ஆதவன் இதன்வழி தெரியப்படுத்தியுள்ளார்.

    இதற்கடுத்ததாக இவருடைய ‘இண்டர்வியூ’ மற்றும் ‘கனவுக்குமிழிகள்’ போன்ற கதைகள் தனிமனிதப் பிரச்சினைகளை, சுதந்திரத்தைக் கோருகின்றன. பொருளாதார நிலையில் ஒருவன் உயர்மட்டத்தை அடையவேண்டுமெனில் தன் சுயவிருப்பங்களுடன் செயல்படவேண்டுமென்றும் பிற உறவுகளைத் தவிர்க்கவேண்டுமென்றும் இதில் கூறப்படுகின்றது. பணம்தான் எல்லாம் என்ற தற்காலச் சமூகச்சூழலில்  ஆழ்ந்த அறிவுபெற்றிருந்தாலும் பணமில்லையென்றால் ஏற்படும் அவலநிலையையும் இது சித்திரிக்கிறது. மேலும், இந்தியாவின் படித்த இளைஞர்களின் மனத்தை, வாழ்க்கையை துல்லியமாகவும் தத்ரூபமாகவும் தம் படைப்புகளில் படைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து, இவருடைய ‘சிவப்பாக உயரமாக மீசை வச்சுக்காமல்…’, ‘புதுமைப்பித்தனின் துரோகம்’, ‘முதலில் இரவு வரும்’, ‘புகைச்சல்கள்’ போன்ற கதைகளும் முறையே ‘ஆண் – பெண்ணுக்கு இடையே நிலவும் egoக்கள்’ ‘எழுத்தாளனுடைய வாழ்க்கையைப் பற்றிய புரிதல்கள்’, ‘முந்தைய தலைமுறைச் சார்ந்த பெற்றோர் மனங்களில் விளையும் சிக்கல்கள்’, ‘திருமணம் முடிந்து, பாலின்ப வேட்கை தணிந்த பிறகு எழும் நிறை – குறைகள்’ எனத் தற்கால புதுயுக மாற்றத்தினால் நிகழும் பிரச்சினைகளைத் தன்னளவில் பிரத்யேகமான முறையில் எழுத்துருவாக்கியுள்ளார்.

    சமகாலப் படைப்பிலக்கியச் சூழலில் ஆதவனின் பிரதியாக்க முறையானது இன்றும் தனித்துவம் மிக்கதாகத் திகழ்வதுடன், காலத்திற்கேற்றவாறு மனிதமனங்களின் பிரக்ஞைகள் மாற்றம்பெறுவதை நுணுக்கமாகவும் அழகியல் தன்மையுடனும் நவீன இலக்கியத்திற்கு அளித்துள்ளதை இவரை வாசிக்கும் யாராலும் மறுக்க இயலாது.

    மேற்கோள் விளக்கக் குறிப்புகள்

    1. காவ்யா சண்முகசுந்தரம் (தொ.ஆ.), க.நா.சு. (க.ஆ.), இலக்கிய விமர்சனங்கள், க.நா.சு. கட்டுரைகள் – II, ‘நவீன இலக்கியம்’, ப.857.
    2. ஆ. பூமிச்செல்வம், பின்னை நவீனத்துவம், ப.40.
    3. மேலது., பக். 45-46.
    4. மேலது., ப.47.
    5. ஆதவன், என் பெயர் ராமசேஷன், பக்.41-42.
    6. ஆதவன் சிறுகதைகள், ‘அப்பர் பெர்த்’, ப.22.
    7. மேலது., பக். 36-37.
    8. ஆதவன் சிறுகதைகள், ‘நிழல்கள்’, ப.221.

    துணைநூற்பட்டியல்

    1. இலக்கிய விமர்சனங்கள், க.நா.சு. கட்டுரைகள் – II, காவ்யா பதிப்பகம், சென்னை, முதல் பதிப்பு : 2005.
    2. ஆதவன், என் பெயர் ராமசேஷன், உயிர்மை பதிப்பகம், சென்னை, நான்காம் பதிப்பு: நவம்பர் 2014.
    3. ஆதவன் சிறுகதைகள், கிழக்கு பதிப்பகம், சென்னை, முதல் பதிப்பு: டிசம்பர் 2005.
    4. ஆ. பூமிச்செல்வம், பின்னை நவீனத்துவம், அகரம் பதிப்பகம், தஞ்சாவூர், முதல் பதிப்பு: 2014.

    *****

    கட்டுரையாளர் – உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை,                  தியாகராசர் கல்லூரி, மதுரை.                                                                  செல் : 99443 77853, 70924 44193.

    Share