Blog

  • மார்கழி மணாளன் (மூன்றாம் பகுதி) – 26

    க. பாலசுப்பிரமணியன்

    திருப்புளியன்குடி

    images

    அருள்மிகு காசினிவேந்தர் பெருமாள் திருக்கோவில் (கள்ளபிரான் திருக்கோவில்)

    பார்போற்றும் வேதங்களைப்  பிரம்மனும் இழந்துவிடப்

    பதுக்கிவைத்த  சோமகனைப் பிடித்தவனே பாண்டுரங்கா !

    பாற்கடலும் வைகுந்தமும் விட்டுவந்தாய் புவினோக்கி

    படைத்தாயே பூவுலகில் புதியதோர் வைகுந்தமே !

     

    கறந்திடவே பாலனைத்தும் கண்மறைவில் பசுவொன்றும்

    கலங்கிட்ட மன்னவனும் களம்காண வந்திடவே

    கண்மறைவில் காலமெல்லாம் வாழ்ந்தவனே வைகுந்தா

    கள்ளனன்றோ கார்மேகா கனிந்துவந்தாய் காட்சிதர !

     

    கள்வனென்ற பெயரெடுத்தாய் வெண்ணையுண்டு கோகுலத்தில்

    கள்ளபிரான் பெயர்கொண்டாய் கள்வனின் உடைதன்னில்

    கள்ளத்தனம் எத்தனையோ கோபியர்கள் கூட்டத்தினில்

    கள்ளமனம் ஏதுமின்றி கருணைசெய்வாய் என்னிடத்தில் !

     

    கோலாட்ட போதையிலே நிலைமறைந்த கோபியரின்

    போராட்ட மனத்தினிலே தேரோட்டம் விட்டவனே  !

    மாறாட்டம் செய்யாமல் ஆடினாயே அனைவரோடும்

    பாராட்ட வார்த்தையில்லை பரமாத்மா நீயன்றோ !

     

    சரணமென்று வந்தவுடன் சங்கடங்கள் தீர்ப்பவனே

    மரணமென்ற பயத்தினையே மனதிலிருந்து நீக்கிடுவாய்

    கரணமிடும் வாழ்கையைக்  கலக்கமின்றி மாற்றிடுவாய்

    சரணமென்றே வந்துவிட்டேன் சந்நிதியே திறந்திடுவாய் !

     

    ஓரடியை முன்வைத்தால் ஓடிவரும் பரந்தாமா

    ஈரடியை வைத்தவுடன் ஈகையுள்ளம் கொள்பவனே

    மூவடியால் உலகளந்து முக்திதந்த முகுந்தா

    நாலடியில் உனைப்பாட நற்கதியே தந்திடுவாய் !

     

    Share
  • தமிழ் உருபனியல் பகுப்பாய்வி (Tamil Morphological Parser) உருவாக்கம்

    -முனைவர் ஆர். சண்முகம்  

    கட்டுரைச் சுருக்கம்

     தமிழ் இன்று கணினியில் உலா வரத் துவங்கியுள்ளது என்பது மிகவும் வரவேற்கத்தகுந்த ஒன்றாகும். ஆயினும் அது ஆங்கிலத்தை அரவணைத்துக்கொண்டே உலா வருவது நாம் அனைவரும் சற்றுச் சிந்திக்க வேண்டிய ஓன்றாகும். தனித்து இயங்கல் என்பது செம்மொழியாக அறிவிக்கப்படுவதற்கு உள்ள தகுதிகளுள் ஒன்றாகும் அதை ஒருங்கே பெற்றதால் தமிழ் அத்தகுதியைப் பெற்றது. தமிழ்க் கணினியில் தனித்து இயங்க வேண்டுமெனில் அதற்கென மொழிக்கருவிகள் உருவாக்கப்படுவதென்பது மிகவும் அவசியமாகும் இதற்காக மேற்கொள்ளப்படும் ஆய்வை இயற்கை மொழி ஆய்வு என்கிறோம் அதாவது மனித மூளை போன்று கணினியும் மொழியைப் புரிந்து கொள்ளும் விதத்தில் அதனை வடிவமைப்பதாகும். இப்பணியை நாம் மேற்கொள்ள சில அடிப்படைக் கருவிகளை உருவாக்குவது தவிர்க்க இயலாத ஓன்று. அத்தகைய அடிப்படைக் கருவிகளுள் உருபனியல் பகுப்பாய்வி (Morphological Parser) ஒன்றாகும். இவ்வுருபனியல் பகுப்பாய்வியை எவ்வாறு தமிழுக்கு உருவாக்கலாம் என்பதும் அதற்குத் தேவையானவை எவை என்பதையும் விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

    அறிமுகம்

    தமிழின் இன்றைய வளர்ச்சி அதனைப் பல்வேறு துறைகளுக்கு அழைத்துச் சென்றுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. கலைகள் மற்றும் இலக்கியங்கள் வாயிலாக வாழ்ந்துவந்த தமிழ் தற்போது இணையம் மூலம் உலகெங்கும் பயணிக்கத் துவங்கியுள்ளது. குறிப்பாகத் தகவல் தொழில்நுட்பத் துறையில் தினமும் முன்னேற்றம் காண ஆரம்பித்துள்ளது. மொழித் தொழில்நுட்பத்திலும் (Language Technology) தமிழ் முத்திரை பதிக்கத் தவறவில்லை. அத்தகைய மொழித் தொழில்நுட்பத்திற்கு வலு சேர்க்கும் ஆய்வுகளில் ஒன்று இயற்கை மொழி ஆய்வு (Natural Language Processing). அதாவது மனிதனைப் போலவே கணினியானது, மொழியைக் கையாளும் விதத்தில் அதனை மேம்படுத்துவதை இயற்கை மொழி ஆய்வு என்கிறோம். இயற்கை மொழி ஆய்வின் முதல் நிலையாக உருபனியல் பகுப்பாய்வியைக் கூறலாம்.  ஏன் எனில் நாம் பயன்படுத்துகிற அனைத்து வாக்கியங்களுக்கும் அடிப்படை அது கொண்டுள்ள சொற்களும் அச்சொற்களுக்கிடையே அமைந்துள்ள பொருண்மைத் தொடர்புகளுமே  (Semantic Relationship between words) ஆகும்.  இதனைப் பொறுத்தே ஒரு முழுச் வாக்கியத்தின் பொருள் அமைகிறது. எனவே சொற்களைப் பற்றியும் அவற்றுக்கிடையே உள்ள பொருண்மை தொடர்புகளைப் பற்றியும் அறிவது அவசியமாகிறது. சொற்களைப்பற்றி அறிய உருபனியல் பகுப்பாய்வியும் (Morphological Parser) , அவற்றுக்கிடையே உள்ள பொருண்மைத் தொடர்பறிய தொடரியல் பகுப்பாய்வியும் (Syntactic Parser) துணைபுரிகின்றன. இதனை உருவாக்கத் துணைபுரியும் அறிவியலைக் கணினி மொழியியல் (Computational Linguistics) என்கிறோம். அதாவது மொழியில் உள்ள கணினி மூலம் கையாளத் தகுந்த மொழியியல் கூறுகளை (Linguistic Properties)   படிக்கப் பயன்படும் அறிவியலாக இதைக் கூறலாம். 

    உருபனியல்  பகுப்பாய்வி

    ஒரு சொல்லில் உள்ள விகுதிகளைக் கண்டறிந்து அதன் இலக்கணக் குறிப்பையும் அச்சொல்லின் முழு இலக்கணக் குறிப்பையும் வெளியிடும் கருவியை உருபனியல் பகுப்பாய்வி என்கிறோம். 1958-ஆம் ஆண்டு பெர்க்கோ என்ற அறிஞர் முதன்முதலில் மக்களின் உருபன் பற்றிய அறிவையும் இரு வெவ்வேறு சொற்களுக்கிடையே உள்ள ஒற்றுமைக்கான காரணங்களைப் பற்றியும் உளவியல் மொழியியல் நோக்கில் (psycho linguistics) ஆராய்ந்தார். இச்சோதனைகளின் முடிவில் அவர் மனிதர்களுக்கு இரு வேறு சொற்களுக்கு இடையே உள்ள உறவுகளைக் கணிப்பதில் மிகுந்த சிரமம் இல்லாததை உணர்ந்தார். இவரைத் தொடர்ந்து  டெர்விங் (1976) மற்றும் ஸ்மித்(1977) ஆகியோரும் இதே போன்று பல சோதனைகளை மேற்கொண்டு உருபன் அறிதலின் (Morpheme Recognition) முக்கியத்துவத்தை உணர்ந்தனர். இதன் விளைவாகக் கர்ட்டுனன் , ஆண்ட்வொர்த்  மற்றும் கொஸ்க்கினிமி (1983) ஆகியோர் இதைக் கணினிவழி மேற்கொள்ள ஏதுவாகச் சில கோட்பாடுகளை நிறுவினர். இரட்டை நிலை உருபனியல் (two-level Morphology)மற்றும் கிம்மோ உருபன் பகுப்பாய்வியும் (Kimmo parser) இதற்குத் தக்கச் சான்றுகளாகும். இதனால் தமிழுக்கும் இதைச் செயல்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன , மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னைப் பல்கலைக்கழகம் , அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் மொழியியல் பிரிவுகள் இதில் பெரும் ஆர்வம் செலுத்தின. அண்ணா பல்கலைக்கழகமும் இதில் ஆர்வம் காட்டியது. இன்றளவும் உருபன் பகுப்பாய்வியைச் செவ்வனே உருவாக்குவதற்கான முயற்சிகள் தொடர்ந்து பல்வேறு நிறுவனங்களின் மூலம் நடைபெற்று வருகிறது.

    உருபன்  பகுப்பாய்வியை   உருவாக்கத்  தேவையானவைகள்

    ஒரு மொழிக்கென உருபன் பகுப்பாய்வியை உருவாக்கிடக் கீழ்க்கண்டவை மிகவும் முக்கியமானவை,

    1.தரவுத்தளம் (Database)

    2.சந்தி விதிகள (Morphophonemics Rules)

    3.உருபன்கள் (Morphemes)

    4.உருபன் வரிசைமுறை (Morphotactics)

    5.கணினி மொழியியல் கோட்பாடுகள் மற்றும் நிரல் மொழி.

    தரவுத்தளம்

    கணினியால் மனித மூளை போன்று ஒரு சொல் தன்னுடைய மொழியைச் சார்ந்ததா அல்லது இல்லையா என்பதை கண்டறிய இயலாது. பூஜ்ஜியமும் ஒன்று என்ற எண்ணுமே அதற்குப் பரிச்சயம். இதனைச் செயல்படுத்தத் தரவுத்தளம் மிகவும் உதவிகரமாக இருக்கும். பொதுவாகத் தரவுத்தளம் என்பது ஒரே வகையைச் சார்ந்த சொற்களின் பட்டியல் ஆகும். இதை இரண்டாகப் பிரிக்கலாம் வேர்ச்சொல் தரவுத்தளம் மற்றும் விகுதித் தரவுத்தளம். வேர்ச்சொற்களின் பட்டியல் அடங்கிய கோப்பைத் வேர்ச்சொல் தரவுத்தளம் என்கிறோம். பொதுவாக உருபனியல் பகுப்பாய்வுக்கென முதன்மை இலக்கண வகைகளான பெயர்ச்சொல், வினைச்சொல், வினையடை மற்றும் பெயரடை ஆகியவற்றைப் வேர்ச்சொல் தரவுத்தளத்திற்குப் பயன்படுத்தலாம். விகுதித் தரவுத்தளம் என்பது விகுதிகளின் பட்டியல் அதாவது பெயர்ச்சொல்லுக்குரிய பன்மை, வேற்றுமை விகுதிகள் மற்றும் பின்னொட்டுக்கள், வினைச்சொல்லுக்குரிய கால இடைநிலைகள், திணையெண்பால் விகுதிகள் வினைப்பாங்கு மற்றும் வினைநோக்கு விகுதிகள் ஆகியவற்றைக் கூறலாம். இத்தரவுத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம் கணினியால் பயனாளர் மூலம் உள்ளிடப்பட்ட சொல்லையும் அது கொண்டுள்ள விகுதிகளையும் சரியானவை எனத் தீர்மானிக்க முடியும். இத்தரவுத்தளத்தில் இடம்பெற்றுள்ள சொற்களின் எண்ணிக்கையைப் பொறுத்தே உருபனியல் பகுப்பாய்வியின் தரம் அமையும் எனலாம்.

    சந்தி விதிகள்

    வேர்ச்சொல்லோடு விகுதிகளோ அல்லது விகுதிகளுடன் விகுதிகளோ சேரும்போது அவைகளுக்கிடையே தோன்றல்,திரிதல்,கெடுதல் ஆகியவற்றை உள்ளடக்கிய மாற்றங்கள் நிகழும் இவற்றைத் தக்க விதிகளைக் கொண்டு நிறுவ முடியும் காட்டாக அம் இறுதிப்பெயர்ச்சொற்கள் ஓரசையாக இல்லாதவிடத்து விகுதிகளோடு குறிப்பாக வேற்றுமைகளோடு சேரும்போது அத்துச்சாரியை பெறுவதைக் கூறலாம் (மரம்+ஐ = மரத்தை). இதுபோல ஒவ்வொரு மாற்றங்களையும் தக்க விதிகள் மூலம் நிறுவுவதால் சொற்களைப் விகுதிகளில் இருந்து பிரிக்க முயலும்போது மிகச்சில இடங்களைத் தவிர பெரும்பாலும் பிரிப்பது சாத்தியமாகிறது. மிகச்சில இடங்கள் என இங்குக் குறிப்பிட்டது பொருள் மயக்கம் தரும் இடங்களாகும். காட்டாக “காலை” என்னும் சொல் காலை வேளையையும் கால் + ஐ வேற்றுமை விகுதியை உள்ளடக்கிய சொல் போலவும் தோன்றும் இதுபோன்ற இடங்களில் கணினியால் பகுப்பாய்வைச் செவ்வனே மேற்கொள்ள இயலாது. அச்சொல் பயின்று வந்துள்ள சூழலைப்பொறுத்தே இதனை நம்மால் முடிவு செய்ய இயலும். நம் தமிழ் இலக்கணத்தில் உள்ள சந்தி விதிகள் அனைத்தையும் கணினிக்குப் புரியும் விதத்தில் விதிகளாக மாற்றியமைப்பது சொற்களை எளிமையாகப் பிரிப்பதற்குத் துணைபுரியும்.

    உருபன்கள்

     நாம் பொதுவாக விகுதிகளை உருபன்கள் என்கிறோம். காட்டாக வேற்றுமை விகுதிகள், (-ஐ,-ஆல்,-கு,-இன்,-அது,-கண்) கால இடைநிலைகள்(நிகழ்,இறந்த,எதிர் கால இடைநிலைகள்), பின்னொட்டுக்கள் (விட,பற்றி), மிதவை ஒட்டுக்கள் (மட்டும்,மாத்திரம்) ஆகியவற்றைக் கூறலாம். இவையனைத்தும் தனித்தியங்கும் ஆற்றலற்றவை என்பதால் இவற்றை கட்டுருபன்கள் என்கிறோம். பெயர், வினை, வினையடை, பெயரடை ஆகியவை தனித்தியங்கும் ஆற்றலுள்ளவை என்பதால் அவற்றை தனித்தியங்கும் உருபன்கள் என்கிறோம்.ஒரு உருபன் பகுப்பாய்வியை உருவாக்க அந்த குறிபிட்ட மொழியிலுள்ள மொத்த உருபன்களைப் பற்றிய விவரங்கள் மிகவும் இன்றியமையாததாகும்.

    உருபன்  வரிசைமுறை

    உருபன் வரிசைமுறை என்பது ஒவ்வொரு விகுதிக்குப் பின்னும் எவ்விதமான விகுதிகள் வர வேண்டும் என்று வரிசைப்படுத்துவதாகும். காட்டாக ஒரு பெயர்ச்சொல் உடனடியாகப் பன்மையையும் அதன்பிறகு வேற்றுமையையும் அதற்குப்பிறகு பின்னொட்டு மற்றும் மிதவை ஒட்டுக்களைக் கொண்டு அமையலாம். இந்த அமைப்பு சீராகவே இருக்கும் மிதவை ஒட்டுக்களையும் சாரியைகளையும் தவிர எந்த ஒரு விகுதியும் தன்னுடைய வகையைச் சார்ந்த மற்றொரு விகுதியுடன் சேர்ந்து வராது. (கடலைப்பற்றிமட்டுந்தானாடா , மரத்தினைக்கூட). இதைப்போலவே வினைச்சொல்லும் வினையடிச்சொல்லுக்குப் பிறகு கால இடைநிலைகளையும், திணையெண்பால் விகுதிகளையும் அதன் பிறகு மிதவை ஒட்டுக்களையும் கொண்டு வரலாம். இவ்வுருபன் வரிசை முறையைப் பயன்படுத்தி உருபன் பகுப்பாய்வியை வடிவமைப்பது சற்று எளிதாகிறது காட்டாக, உருபன் பகுப்பாய்வி எந்த உருபை முதலில் கையாளவேண்டும் போன்ற பல்வேறு செயல்முறைகளுக்கு இது மிகவும் பயன்படுகிறது இதனால் பகுப்பாய்வியின் வேகத்தையும் குறிப்பிட்ட அளவு அதிகரிக்க முடியும். மேலும் உள்ளீடு செய்யப்பட்ட சொல்லில் எந்தெந்த உருபன்கள் இடம்பெற்றுள்ளன என்பதையும் அவற்றின் இலக்கணக்குறிப்பையும் எளிதாக நம்மால் அறிய முடியும். 

     கணினி மொழியியல்   கோட்பாடுகள்   மற்றும்   நிரல் மொழி

    இக்கோட்பாடுகள் கணினிக்கு ஏற்ற வகையில் நம் இலக்கண விதிகளை மாற்றியமைக்கவும், கணினிக்கு உணர வைக்கவும் மிகவும் பயன்படுகின்றன. காட்டாகக் குறிப்புத் தொடர்கள் (Regular Expression) மற்றும் FSA ஆகியவற்றைக் கூறலாம். இவை கணினிக்கு ஒரு சொல்லையோ அல்லது அதன் பகுதியையோ கண்டறிய பெரிதும் உதவுகின்றன. பகுப்பாய்விக்குச் சொல்லையும் அதன் பகுதியாகிய அது கொண்டுள்ள விகுதியையும் உணர்ந்து அறிவது அவசியமாகிறது நாம் இத்தகைய கோட்பாடுகளைப் பயன்படுத்துவது அதனை எளிமைப்படுத்துகிறது. காட்டாக, தமிழில் உள்ள மொத்த கால இடைநிலைகளையும் கணினி உணர வேண்டும் எனில் கீழ்க்கண்ட ஒரு குறிப்புத் தொடர் வாக்கியம் போதுமானது.

    நிரல் மொழி என்பது கணினியுடன் நாம் ஊடாடுவதற்கு உதவக்கூடிய ஒன்று இதனைக் கணினிக்கும் நமக்கும் இடையே உள்ள ஒரு மொழிப்பெயர்ப்பாளர் என்று சொன்னால் மிகையாகாது. குறிப்பாக இயற்கை மொழி ஆய்வுகளுக்கு பெரும்பாலும் நிரலாளர்கள் பைத்தான், பேர்ல், ஜாவா, சி++ போன்ற நிரல்களைத் தேர்வு செய்வார்கள். இவற்றுள் பைத்தான் நிரல் மொழி மிகவும் நெகிழ்வுடன் இருக்கும். ஏன் எனில் இந்நிரல் மொழியில் ஏற்கனவே இயற்கை மொழி ஆய்வுக்கென பல வல்லுனர்கள் வடிவமைத்த நிரல்திட்டங்கள் பயன்படுத்தும் வடிவத்தில் கிடைக்கின்றன. எனவே மேற்கூறிய தலைப்புகளில் கவனம் செலுத்துவதன்மூலம் ஒரு மொழிக்கு உருபனியல் பகுப்பாய்வியை உருவாக்குவது எளிதாகிறது. இவ்வாறு உருவாக்கப்படும் உருபனியல் பகுப்பாய்வியின் வெளியீடு (output) தொடரியல் பகுப்பாய்வி (Syntactic Parser)எனப்படும் கருவிக்கு உள்ளீடாக வழங்கப்பட்டு இயந்திர மொழிபெயர்ப்பை (Machine Translation) மேற்கொள்ள மிகவும் துணைபுரியும். இதுபோன்ற கருவிகளைத் தமிழாசிரியர்களும் , மொழியியல் வல்லுனர்களும் , கணினி வல்லுனர்களும் இணைவதன்மூலம் மட்டுமே துல்லியமாகச் செய்ய இயலும்.

    துணைநூற்பட்டியல்

    1.Chomsky, Noam. Logical syntax and Semantics – Their linguistic Relevance- Language Volume 31. No.1 (Jan-Mar 1995).

    2.Cook, Vivian – Mark Newson. Chomsky’s Universal grammar- Blackwell Publications

    3.Daniel , Jurafsky – James H. Martin Speech and Language Processing – 2000, A Simon & Schuster Company

    4.DeivaSundaram N. கணினித்தமிழ் வளர்ச்சிக்கான அடிப்படைத்திட்டப் பணிகள் – An article presented in infitt conference 2010.

    5.Kothandaraman-.Pon. A grammar of contemporary literary Tamil.  IITS -1997.

    6 Kothandaraman-.Pon. Tamil studies selected papers. Ambuli Publication-2001.

    7.Kothandaraman-.Pon. ‘நீங்களும் தவறின்றித் தமிழில் எழுதலாம்’. Ambuli Publication-2001.

    8.Krishnamoorthy, Badriraju. The Dravidian Languages. Cambridge University Press -2003

    9.Verma S.K, N. Krishanaswami. Modern Linguistics -An Introduction- Oxford University Press – 1989.

     

     

     

    Share
  • கூடார வல்லி!

    -நிலவளம் கு.கதிரவன்

    முன்னுரை :-

    வேயர் குலக்கொடியாம் ஆண்டாளும், மற்ற தோழியர்களும் பாவை நோன்பிற்காகத் தேவைப்படும் சங்கம், பறை, பல்லாண்டிசைப்பார், கோல விளக்கு, கொடி, விதானம் போன்றவற்றைக் கேட்டவர்கள் 27ஆம் பாடலான இப்பாசுரத்தில் நோன்பை முடித்தபின் தேவையானவற்றைக் கண்ணனிடம் கேட்கிறார்கள். 26 பாசுரங்கள் வரை மார்கழி நோன்பு, அதன் சிறப்பு, நோன்பு காலத்தில் கடைபிடிக்கப்பட வேண்டிய வழிமுறைகள்,மற்றும் நோன்பு காலத்தில் செய்யத் தகாத செயல்கள் எவையெவை? என்பது  விரிவாக விளக்கப்பட்டது.  ” கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா ” என்னும் இப்பாசுரம் பாவை நோன்பினை பாவையர்கள் முடித்துக் கொள்வதையும், முடித்துக் கொண்டதன் பயனாக கோரும் சம்மானங்களைப் பற்றியும் விரிவாக பேசுகிறது.

    கூடாரவல்லி:-

    ”கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா”  – என்னும் பாசுரத்திற்கு போகும் முன்னர் கூடார வல்லி நாளின் சிறப்பினைப் பற்றி சுருக்கமாக காண்போம்.

    கூடாரை வெல்லும் என்பது மருவிக் கூடார வல்லியானது.  கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா என்னும் பாசுரத்தைப் பாடியதும் திருமால் கோதைக்குத் திருமண வரம் தந்ததாக ஐதீகம்.  கூடார வல்லி என்ற நாளில் கோதை தன்னை கோபிகையாகப் பாவித்துக் கண்ணனை வேண்டி மற்ற கோபியர்களுடன் மாதம் முழுவதும் நோன்பிருந்த ஆண்டாள் அந்தக் குறை ஒன்றும் இல்லாத கோவிந்தனுடன் கூடிய நாள். தன்னிடத்தில் பக்தியில்லாதவர்களைக் கூட வெற்றி கொள்பவன் கோவிந்தன்.  தன்மேல் பக்தி கொண்டவர்களிடம் தோற்பவனும் அவனே.  மற்ற பாசுரங்களில் மார்கழி நோன்பிருக்கும் நியமங்களையும், செய்யத் தக்க, செய்யத் தகாத செயல்கள் யாது? என்பதைப் பற்றி பேசிய ஆண்டாள், இப் பாசுரத்தில் நோன்பை முடித்துக் கொள்ளும் முகத்தான், கண்ணனாகிய கோவிந்தனிடம் சன்மானம் கேட்கிறாள்.  எப்படிப்பட்ட சன்மானம்? இந்த உலகத்தில் உள்ளவர்கள் எல்லாம் மெச்சும் வண்ணம் கண்ணனையே சம்மானமாக கேட்கின்றாள்.  பரமனும் மனம் மகிழ்ந்து தூய்மையான பக்தையான கோதைக்கு தன்னையே அர்ப்பணிக்கின்றார்.

    ருக்மணி, சீதா, ஆண்டாள் கல்யாண வைபவங்களில் ஆண்டாள்-அரங்கர் கல்யாணம் உயர்வானது. கண்ணன் ருக்மணியையும், ராமன் சீதாப் பிராட்டியையும் தத்தம் அவதாரங்களில் முறையே திருமணம்  செய்து கொண்டனர்.  ஆனாள் இப்பூவுலகில் மானிடராக அவதரித்த ஆண்டாள், தெய்வத்தையே திருமணம் செய்து கொள்வதற்கு எவ்வளவு கடுமையான பக்தி வேண்டும்?  அதனால்தான் ஆண்டாள்-அரங்கர் கல்யாணம் மிகவும் உயர்வானது என பூர்வாசிரியர்கள் கூறுகின்றனர்.

    இன்றைய நாளில் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் சன்னிதியில் ஆண்டாள் சிம்மாசனத்தில் ஸ்ரீதேவி-பூதேவியுடன் ஸ்ரீபெரியபெருமாள் எழுந்தருளி, அவருடன் ஸ்ரீ ஆண்டாள், ரங்கமன்னார், கருடாழ்வார், மற்ற ஆழ்வார்கள், ஆசாரியர்கள் எழுந்தருளி சேவை சாதிப்பர்.

    கூடார வல்லியான இந்தச் சிறப்பான நன்னாளில் பெருமாளுக்கு அக்கார அடிசில் என்ற பால்சோறு நைவேத்யம் செய்யப்படுகிறது.  திருமண வரம் வேண்டும் கன்னிப் பெண்கள் விரதமிருந்து இன்று ஆண்டாள்-அரங்கரை சென்று சேவித்தால் திருமண  வரம் கைகூடுவது உறுதியாகும்.

    பாசுரம் :-

    கூடாரை வெல்லும்சீர் கோவிந்தா உந்தன்னைப்
    பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்
    நாடு புகழும் பரிசினால் நன்றாகச் சூடகமே
    தோள்வளையே தோடே செவிப்பூவே
    பாடகமே என்றனைய பல்கலனும் யாம்அணிவோம்
    ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
    மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
    கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

    பாசுரத்தின் பொருள் :-

     தன் அடி பணியாதவர்களையும் வெற்றி கொள்ளக் கூடிய சீர்மையான கல்யாண குணங்களைக் கொண்ட கோவிந்தனே!! உன்னை  வாயாரப் பாடி, வாய் படைத்த பயன் பெற்றமையால் நாங்கள் பெறும் வெகுமாதியானது யாதெனில், இந்த உலகமே புகழக் கூடிய பரிசினை உன்னிடமிருந்து பெற்று, எங்களை நாங்களே கை வளை, தோள் வளை, காதுகளுக்கு அணிந்து கொள்ளும் தோடும், செவிப்பூவான கர்ணப்பூவினையும், கால்களில் அணியக்கூடிய பாடகமாகிய பாத கடகத்தையும், இது போன்ற பல ஆபரணங்களையும் அணிந்து கொள்வோம்.  அதன் பின்னர் புதிய ஆடையை உடுத்திக் கொண்டு, நெய்யினால் மூடப்பட்ட பால் சோற்றினை உன்னோடும், நப்பின்னை பிராட்டியோடும், மற்ற தோழியர்களோடும்  சேர்ந்து, கூடியிருந்து குளிர்ந்து உண்போம். வந்திடுவாய் கண்ணா என்று கோதைப் பிராட்டி கூறுகிறாள்.

    விளக்கவுரை:-                         

    இப் பாசுரத்தில் கோவிந்த நாமத்தினையும், அத்தகையை கோவிந்தனுக்கு கூடியவர் யார்? கூடாதார் யார்?, பாவையர்கள் அணிந்து கொள்ளும் பல்கலன்கள், நோன்பை முடிப்பதற்கு கண்ணனிடம் கேட்கும் வெகுமதிகள், விரதம் முடித்த பின்னர் கூடியிருந்து உண்ணும் அக்கார அடிசிலாகிய பாற்சோறு போன்ற பல்வேறு செய்திகளை ஆண்டாள் விளக்குகிறார்.

    கூடாரை வெல்லும் சீர்மை:-

    தம்மோடு மாற்றுக் கருத்து கொண்டவர்களை, தன்னோடு இல்லாதவர்களை, தன்னை ஏற்றுக் கொள்ளாதவர்களைக் கூட எதிரி, பொல்லாதவர் என்று கடுமையாகக் கூறாமல் கூடாரை என்று மென்மையான சொல்லை ஆண்டாள் கையாளுகிறார். மாற்றாறை மாற்றழிக்க வல்லானை என்று பாடியவள் அல்லவா?  அப்படிப்பட்ட சர்வேஸ்வரனான நாராயணன் நாமத்தினை சங்கீர்த்தனம் செய்யாதவர்கள், அவன் திவ்ய கல்யாண குணங்களை பாடிப் புகழாதவர்கள் என அனைவரையும் தன்னுடைய சீர்மைக் குணங்களால் எளிதில் வெற்றி கொள்பவன் கோவிந்தன்.  அதாவது கூடாரை வெற்றி கொண்டு அருள்  பாலிப்பான்.  கூடினவர்களிடம் தான் தோற்று அருள் புரிவான்.  அரக்கர்களை வதம்செய்து திருத்துவான்.  அடியவர்களிடம் தோற்று மகிழ்விப்பான். அம்பினால் தோற்கச் செய்வான். அன்பினில் வசப்படுவான்.  அவனே அரங்கன்.  அவனே கோவிந்தன்.  அவனே பரமேஸ்வரன்.

    இப்படி அடியார்களை வதைக்கும் பகைவர்களையும், அரங்கனின் அருமை தெரியாமல் எதிர்க்கும் விரோதிகளையும் வெற்றி கொள்வான்.  பள்ளி கொண்ட அரங்கனின் திருமுற்றத்து அடியார்கள், மால்கொள் சிந்தையரான மெய்யடியார்கள், பேராளன் பேரோதும் பெரியோர்களை  ஒருக்காலும் பிரிய மாட்டேன் என்றிருக்கும் அடியார்களிடம் தோற்று மகிழச் செய்வான்.

    கோவிந்தன் நாமம் :-

    ஸ்ரீ ஆண்டாள் முந்தைய இருபத்தாறு பாசுரங்கள் வரை, பரமாத்மாவின் பல்வேறு திருவவதாரங்களைப் பற்றி பேசி பரவசப் பட்டவள், இப் பாசுரத்தில் மட்டும் கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா என்று கோவிந்த நாம சங்கீர்த்தனத்தை கூறுகிறார். இதைத் தொடர்ந்து இருபத்தெட்டாவது பாசுரத்தில் ” குறைவொன்றுமில்லாத கோவிந்தா ”, என்றும், இருபத்தொன்பதாவது பாசுரத்தில் ” இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா”, எனவும் தொடர்ந்து மூன்று பாசுரங்களில் கோவிந்தன் புகழ் பாடுகிறார்.  காரணம் பாவை நோன்பு முடிந்துவிட்டது.  பறை என்கின்ற கைங்கர்ய ஞானத்தைப் பெற வேண்டும்.  ஆடை அணிகலன்களைப் பெற வேண்டும்.  தவிரவும் நோன்பு முடித்த பின்னர் கண்ணனோடும், நப்பின்னை பிராட்டியோடும் சேர்ந்து பாற்சோறு உண்ண வேண்டும்.  இவற்றை அளிப்பவன் சர்வேஸ்வரனான பகவான் கோவிந்தன் மட்டுமே.  அவனால் மட்டுமே முடியும். அளிப்பவனும் அவனே. அளித்துக் காப்பவனும் அவனே.

    கோ- என்றால் உயிர்கள், விந்தன்- என்றால் காப்பாற்றுபவன். நம்மை எல்லாம் அருகில் இருந்து காப்பவனே கோவிந்தன். மேலும், கோவிந்தா என்றால் எல்லா இடத்திலும், எல்லா காலத்திலும் நம்மோடு நீக்கமற நிறைந்திருப்பவன் என்று பொருள்.  இதைத்தான் ஸர்வத்ர கோவிந்த நாம சங்கீர்த்தனம் என்று கூறும்பொழுது, அனைவரும், கோவிந்தா, கோவிந்தா என்று அவன் நாமத்தைக் கூறுகின்றனர்.  கோவிந்தா என்பதற்கு பல பொருள் உண்டு. பகவானின் தசாவதாரங்களை குறிப்பது கோவிந்தா.  கோவிந்தா என்றால் வாக்கு, பசு,மாடு, கன்று, பூமி, மோட்சம் அளிப்பவர், நீர், ஆயுதம், பர்வதம் என்னும் மலை, புலன்கள், புலன்களை அடக்கி ஆள்பவர், வேதமோதுவதால் அடையக் கூடியவர்., கூப்பிடு தூரத்தில் இருப்பவர், துதிக்கும் அல்லது துதிக்கப்படுபவர் என்று பல அர்த்தங்களை பூர்வாசிரியர்கள் கூறுகின்றனர்.

    ஆதிசங்கரர் தனது பஜகோவிந்தத்தில், கோவிந்தா என்ற திருநாமம், மனிதன் வாழ வேண்டிய முறை, அது ஒரு தத்துவ உபதேசம், நமக்கு விவேகத்தையும், வைராக்கியத்தையும் அளிக்கும் ஞானச் சொல் என்று கூறுகிறார்.  எனவே கோவிந்தா என்றால் பாவம் விலகும். மோட்சத்திற்கான தடைகள் விலகும்.

    கலியுகத்தில் பகவானை தரிசிப்பதற்கு ஒரே வழி நாம சங்கீர்த்தனம் இசைப்பதுதான். அவன் நாமம் இசைக்கும்போது நமக்கு மிக அருகில் வருகின்றான் கோவிந்தன்.  இப்படி பகவானின் பஞ்ச நாமாக்களான, ராமா, கிருஷ்ணா, கோவிந்தா, நாராயணா, நரசிம்மா என்பதில் நடுநாயகமாக இருக்கும் கோவிந்த நாமத்தை ஆண்டாள் சிறப்பித்துக் கூற காரணம் நாமெல்லாம் அவன் திருநாமத்தை கூறி உய்வடைய வேண்டும்.  தினசரி நாம சங்கீர்த்தனத்தை இசைத்து அவன் அன்பைப் பெற வேண்டும் என்பதற்காகத்தான்.

    நாடு புகழும் பரிசு:-

    ”உன்றன்னைப் பாடிப்பறை கொண்டு யாம்பெறு சம்மானம், நாடு புகழும் பரிசினால் நன்றாக” – என்று பாடுகிறார் ஆண்டாள். வாயினால் பாடி, கேசவனைப் பாட, முகில்வண்ணன் பேர்பாட, மைத்துனன் பேர்பாட என்று மற்ற பாசுரங்களில் நாம சங்கீர்த்தனத்தில் பாடி மகிழ்ந்தவள் கோதை.  அப்படிப் பாடிய நானும், தோழியரும் உன்னிடமிருந்து  கைங்கர்ய ஞானம் என்ற பறையை பெற்றுக் கொண்ட பின்னர்,  இந்த உலகமே புகழும் வண்ணம், எவ்வித அபிப்ராய பேதமும் இல்லாமல், எல்லோரும் ஏற்கும்படியான உயர்ந்த சபையில் பெறப்படும் பரிசினை பெறப் போகிறேன் கண்ணா என்கிறாள் ஆண்டாள்.

    உலகமே ஆமோதிக்கும்படியான, புகழும்படியான பரிசு எப்படிப்பட்டதாக இருக்கும்? அப்பரிசு எவ்வகையில் உயர்ந்ததாக இருக்கும்? ராமர் பட்டாபிஷேகத்தின்போது, சீதாப்பிராட்டி அனுமனுக்கு அளித்த முத்து மாலையைப் போன்றோ, பலராமனாக இருக்கின்றபோது ராமர் பட்டாபிஷேக காட்சியைக் காண்பதற்காக, அனுமனை அழைத்து வர பெரிய திருவடியான கருடாத்மனையே தனது தோளில் சுமந்து வர அனுப்பினாரே பரமாத்மா. அப்படிப்பட்ட ஒன்றாக இருக்குமா? திரௌபதிக்கு தக்க சமயத்தில் வஸ்திரம் தந்து காத்தாரே அப்படிப்பட்டதா? பஞ்ச பாண்டவர்களுக்கு யுத்த வெற்றி வழங்கி தர்மத்தை நிலைநாட்டினாரே அப்படிப்பட்ட பரிசா? அல்லது அதற்கும் மேலானதாகவா? என்று  நாம் ஆச்சர்யிக்கும் வகையில் கேட்கிறாள் கோதை.

    பல்கலனும் யாமணிவோம் :-

    பரமாத்மாவிடம் நாடு புகழும்படியான பரிசினை தந்தருள வேண்டும் என்று கேட்ட ஆண்டாள் தொடர்ந்து, இந்த நோன்பு முடிந்த பின்னர் நாங்கள் அணியத் தக்க புதிய ஆடைகளை நீ தந்து நாங்கள் அணிய வேண்டும். அதோடு கையில் அணியக் கூடிய காப்பும், தோளில் அணியக் கூடிய வளைகள், காதுகளில் அணிந்து கொள்ளும் தோடு, காதின் மேலே அணியும் செவிப்பூ என்னும் கர்ணப்பூ,  காலுக்கு அணியக் கூடிய பாத கடகம் என்னும் பாடகம் இவற்றோடு மேலும் புதுப்புது அணிகலன்களை கிருஷ்ணனாலும், நப்பின்னை பிராட்டியாலும் வழங்கப்பட்டு அவைகளை நாங்கள் அணிந்து கொள்வோம் என்று பூரிக்கிறார்கள்.

    அக்கார அடிசில் :-

    “ஆடையுடுப்போம், அதன்பின்னே பாற்சோறு, மூடநெய் பெய்துமுழங்கை வழிவார ”-  இதுகாறும் இயம நியமங்களோடு பாவை நோன்பு இருந்தாகிவிட்டது.  இன்று நோன்பை முடித்துக் கொள்ளும் நாள். இன்றைக்கு விரதத்தை முடிப்பதற்காக ஸ்ரீ கிருஷ்ணனுக்கு நைவேத்யம் செய்து பின்னர் நாம் பிரசாதத்தை உண்ண வேண்டும்.  எப்படிப்பட்ட பிரசாதம்? அதை எப்படி உண்பதாம்? சொல்கிறாள் ஆண்டாள்.  அதாவது அரிசி ஒருமடங்கும், பால் இரண்டு மடங்கும் சேர்த்து வேகவைத்து, பாலிலே வெந்த சோறு மறையும் வண்ணம், ”நெய்யிடை நல்லதோர் சோறும்” என்றாரே பெரியாழ்வார், அப்படி நெய்மிதக்க இனிப்புச் சோறு தயாரித்து, படையலிட்டு பின்னர் அதை அள்ளி, நெய்யெல்லாம் முழங்கையில் ஒழுகும் வண்ணம் ரசித்து, சுவைத்து  உண்பார்களாம்.  ஸ்ரீ ஆண்டாளுக்கு மிகவும் உவப்பான இப்பாற் சோறுதான் அக்கார அடிசில் என்றழைக்கப்படுகிறது.  நூறுதடா அக்கார அடிசில் உனக்கு சமர்ப்பிப்பேன் என்று திருமாலிருஞ்சோலை பெருமானிடம் வேண்டிக் கொண்ட ஆண்டாள், அது நிறைவேறுவதற்குள் ரங்கமன்னாருடன் இரண்டறக் கலந்ததனால் அவ்வாக்கு ஆண்டாள் மானிடராய் இருக்கும் வரை நிறைவேறவில்லை.  பின்னர் வந்த ஸ்ரீ ராமானுஜர்தான் நூறுதடா அக்கார அடிசிலைப் பெருமாளுக்கு படையலிட்டு ஆண்டாள் வாக்கை நிறைவேற்றியவர்.  இதனால் ராமானுஜர், கோதை பிராட்டியால் ” எங்கள் அண்ணலே வாரும் ” என்று அழைக்கப்பட்டார்.

     கூடியிருந்து குளிர்வோம் :- 

    ”நைவேத்யம் பகவானுக்கு இல்லை, பக்தருக்கத்தான் “ – என்று கூறுவார் காஞ்சி மஹாப் பெரியவர். அதனால் விரதம் இருந்தாலும் பிரசாதத்தை மறுக்கக் கூடாது என்று கூறுவார்கள்.  அதனால் கண்ணன் கொடுத்த பரிசை ஆண்டாள் உண்டு நோன்பை நிறைவு செய்து கொள்கிறாள்.  தான் மட்டும் தன்னிச்சையாக உண்ணவில்லை.  கண்ணனை அழைக்கிறாள், நப்பின்னைப் பிராட்டியை அழைக்கிறாள். கூடியுள்ள தோழிமார்களை எல்லாம் அழைத்து, நாமே கண்ணனின் சோறாகவும், கண்ணனே நமக்கு சோறாகவும் கூடியிருந்து உண்டு பேரின்பம் காண்போம்!!  வாருங்கள் என்று   கூட்டத்தை அழைக்கிறாள். சமபந்தி போஜனா முறையை அன்றே நமக்கு அறிமுகப்படுத்தியவள் கோதை நாச்சியார்.  இப்படி கூடியிருந்து குளிர்ந்து நோன்பை முடித்த பின்னர், கோதைக்கு தன்னையே பரிசாக, இவ்வுலகம் ஏற்கும் வண்ணம் அளித்தாராம் அரங்கன்.

    பாசுர உள்ளுறை :-

    மேலோட்டமாகப் பார்த்தால் நோன்பு முடித்தல், பாவையர் அணிந்துகொள்ளும் அணிகலன்கள், பாற்சோறு என்பதாகத்தான் நம்மால் அறிய முடிகிறது.  ஆனால் உள் பொருளாக, மறையாக ஞான தத்துவத்தை நமக்கு போதிக்கிறாள் ஆண்டாள்.

    1. பல்கலன் என்று சொல்வது ஞானம், பக்தி, வைராக்யத்தைக் குறிக்கும்.
    2. சூடகம் என்பது நம்மையெல்லாம் ரட்சித்துக் காக்கும் கடவுளை காப்பாக உருவகப்படுத்துகிறது.
    3. ஸ்ரீவைஷ்ணவர்கள் தங்கள் தோளில் அணியும் சங்கு, சக்கர முத்திரைகள் தோள்வளையாக கூறப்படுகிறது.
    4. த்வயம் என்று சொல்லக் கூடிய பக்தி செவிப்பூவாக உணர்த்தப்படுகிறது.
    5. காலுக்கணியும் பாடகம் என்பது சரணாகதியை போதிக்கிறது.
    6. அடியார்கள் பரமனுக்கு உரிமையானவர் என்பதைக் கூறுகிறது ஆடை என்ற சொல்.
    7. பகவத் கைங்கர்யத்தைப் பாங்காய் விளக்குகிறது பாற்சோறு.
    8. மூட நெய்பெய்து என்ற சொல்லாடலால், ஆத்மார்த்தமாக அகந்தையின்றி செய்யப்படும் பகவத் சேவையை வலியுறுத்துகிறது.
    9. இறுதியில் கூடியிருந்து குளிர்வோம் என்பதன் மூலம் மோட்ச சித்தியை அடைவோம் வாருங்கள் என அழைக்கும் வண்ணத்தில் உள்ளுறையாக உணர்த்தப்பட்டுள்ளது.

    முடிவுரை :-

    ஸ்ரீ ஆண்டாளின் திருப்பாவை முப்பது பாசுரங்களில், இப்பாசுரம் மிகவும் தனித்துவம் வாய்ந்ததாகும். இதை பக்தி சிரத்தையுடன் பாராயணம் செய்தால் பக்திச் செருக்கு, ஞானச் செருக்கின்றி வைராக்யத்துடன் வாழலாம்.  மேலும் திருமணமாகாத பெண்கள் விரதமிருந்து, இப்பாடலை பாராயணம் செய்தால் விரைவில் திருமணம் கைகூடும்.  அவர்களுக்கு எவ்விதத் தடைகளும், எதிரிகளும் இருக்கமாட்டார்கள். வாருங்கள் நாமும் அரங்கனுக்கு அக்கார அடிசில் நைவேத்யம் செய்து ஸ்ரீஆண்டாள்-அரங்கன் பேரருளைப் பெறுவோம்.

                                      ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்!!

    Share
  • திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் 43

    க. பாலசுப்பிரமணியன்

    பற்றற்ற நிலைக்கு எப்படிச் செல்வது?

    திருமூலர்

    எல்லா உறவுகளையும் விலக்கிவிட்டு இறைவனோடு சிந்தனையால் ஒன்றாகி இருப்பது என்பது விரும்பத்தக்க ஒன்றுதான். ஆனால் ஒரு குடும்பத்தில் ஒரு சமூகத்தில் அங்கத்தினராக இருக்கின்ற நாம் எவ்வாறு அனைத்தையும் துறந்து வாழமுடியும்? உலகம் என்பது அனைத்து மக்களோடும் சேர்ந்து இருப்பது தானே என்ற எண்ணம் நமக்குள் எழுகின்றது. எல்லோராலும் உண்மையான துறவு என்ற நிலைக்குச் செல்லமுடியாது. அதற்கான அவசியமும் இல்லை. இறைவனை உணருவதற்கு நாம் இந்த சமூகத்தில் அங்கத்தினராக இருப்பதில் எந்தத் தவறுமில்லை. ஆனால், இந்த உறவுகளுக்குள் ஏற்படும் பற்றுக்களை ஆசாபாசங்களை நாம் அறிந்து கொண்டு அவைகளுக்கு அடிமையாகாமல் இருப்பது அவசியம். உறவுகள் அன்பை வளர்க்கவும் செய்யும். ஆனால் அதே உறவில் அளவற்ற பற்று வைத்துவிட்டால் அதுவே துன்பத்திற்கு அடிப்படையாக அமையவும் வாய்ப்புக்கள் உண்டு. அதனால்தான் முன்காலத்தில் நமது பெரியோர்கள் “தாமரையிலைத் தண்ணீர் போல் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று அறிவுறுத்தினார்கள்.

    இந்த சம்சார வலைக்குள் விழுந்து துயரப்பட்ட பட்டினத்தாரோ இவ்வாறு புலம்புகின்றார்:

    மெய்வாழ்வை நம்பி விரும்பிமிக வாழாமல்

    பொய்வாழ்வை நம்பிப் புலம்பினேன் பூரணமே

     பெண்டுபிள்ளை தந்தைதாய் பிறவியுடன் சுற்றமிவை

    உண்டென்று நம்பி யுடலழிந்தேன் பூரணமே

    உறவு என்னும் பந்தத்தில் இருந்து ஆசைக்கு அடிமையாகி பிறப்பு-இறப்பு என்னும் சக்கரத்தில் மாட்டிக்கொண்டு படுகின்ற துயரை தனக்கே உரிய பாணியில் மாணிக்கவாசகர் கூறுகின்றார்

    எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்

    மெய்யே உன் பொன்னடிக் கண்டின்று வீடுற்றேன்

    இந்தத் துயரை நாம் வள்ளலாரிடமும் காண்கின்றோம்.

    தாயா ரிருந்தென்ன தந்தையு மிருந்தென்ன

    தான்பிறவி யுறவு கோடி

    தனமலை குவித்தென்ன கனபெயரெடுத்தென்ன

    தாரணியை யாண்டுமென்ன …

    …,,,,,,,,,,,,,,

    யார் மீது உன்மன மிருந்தாலு முன்கடைக்

    கண்பார்வை யது போதுமே…

    இதனை அறிந்தபின்பும் கூட நாம் வாழ்க்கை என்ற மாயச்சக்கரத்தில் விழுந்து ‘எனக்கு இது வேண்டும் அது வேண்டும்” என்றும் “இது இல்லாமல் நான் எப்படி உயிர் வாழ்வது’ என்பது போன்ற தவறான கருத்துக்களை வாழ்க்கைக்கு முதலீடாக்கி வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.  இதை விளக்கும் வகையில் அமைந்துள்ளது திருமூலரின் ப்பாடல்

    மனத்தில் எழுந்ததோர் மாயக்கண்ணாடி

    நினைப்பின் அதனில் நிழலையும் காணார்

    வினைப்பயன் போக விளக்கியும் கொள்ளார்

    புறக்கடை இச்சித்து போகின்ற வாறே

    மனப் பக்குவம் அடையாதவருக்கு நமது மனம் ஒரு மாயக்கண்ணாடியாகத் தான் விளங்கும். இந்த மாயையை அறிந்துகொள்வதும், அதன் நிழலிலிருந்தும் விடுபட்டிருப்பதும்தான் வாழ்க்கையின் சீரிய நோக்கம்

    இந்த உடல் சார்ந்த, உள்ளம் சார்ந்த, உறவு சார்ந்த  மாயப் பற்றினை அறிந்திட   முயற்சித்தல் மிக்க அவசியம். பற்றற்றவர்களாகத் திரிந்த ஞானியர்கள் யோகிகள் இந்தக் கருத்தைப் பின்பற்றியது மட்டுமின்றி அதே குறிக்கோளுடன் வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கு இருந்த ஒரே பற்று இறைவனின் திருவடி ஒன்றுதான். இதை விளக்கும் வகையில் அமைந்துள்ளது திருமூலரின் கீழ்கண்ட பாடல்

    பற்றற் றவர்பற்றி நின்ற பரம்பொருள்

    கற்றற் றவர்கற்றுக் கருதிய கண்ணுதல்

    சுற்றற் றவர்சுற்றி நின்றாய் சோதியைப்

    பெற்றுற் றவர்கள் பிதற்றொழிந் தாரன்றே

    இந்தப் பற்றற்ற நிலையை அடைவதற்கு அந்த இறைவனின் தாள்களையே சரணடைய வேண்டும். இந்தக் கருத்தை வள்ளுவரும் அழகாக வலியுறுத்துகின்றார்

    பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்

    பற்றுக பற்று விடற்கு

    ஆனால் நிஜ வாழ்க்கையில் பலர் பற்றற்றவர்கள் போல் நடித்து உள்ளத்தில் பற்றுக்களை பேணிக்கொண்டும் வளர்த்துக்கொண்டும் வருகின்றனர். இதைவிடக் கொடிய செயல் ஒன்றுமில்லை என்பது வள்ளுவர் கருத்து

    நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து

    வாழ்வாரின் வன்கணா ரில்

    பற்றற்ற நிலையை அடைவதற்கு இறைவன் அருள் தேவைப்படுகின்றது. ஆனால் இறைவனிடம் நம்பி சரணடைந்தால் நமக்கு அவனுடைய பரவச நிலையின் அடையாளம் தெரிகின்றது. அந்தப் பரவச நிலையை நம்மிடையே மாணிக்க வாசகர் தெளிவாக்குகின்றார்

    வினைப்பிறவி என்கின்ற வேதனையில் அகப்பட்டுத்

    தனிச்சிறிதும் நினையாதே தளர்வெய்திக் கிடப்பேனை

    எனைப்பெரிதும் ஆட்கொண்டென் பிறப்பறுத்த இணையிலியை

    அனைத்துலகத் தொழுந்தில்லை  அம்பலத்தே கண்டனே …

    (தொடருவோம்)

    Share
  • உணர்ச்சி சிதையாதே

     

    சரஸ்வதிராசேந்திரன்

     

    அருமை மகனே அன்புருவே

    ஆசைமகனே கேளாயோ

    உடலில் பலமே இருந்தென்ன

    உள்ளத்தில் திறமே வேண்டுமடா

    நடையில் பணிவுடன் நற்குணமும்

    நாவில் நற்சொல் நல்மனமும்

    கொண்டால் அல்லவா நீ மனிதன்

    உறக்கம் போக்கு வையத்தில்

    ஊக்கம் பிறக்க பாடுபடு

    தேடும் வாழ்வில் வெற்றிதனை

    சேர்க்கும் மணக்கும் நல்லுணர்வே

    நல்லோர் ஏற்க நன்மைசெய்

    உயர்ச்சிஅடைய வழி சொன்னேன்

    உணர்ச்சி சிதைந்தால் வாழ்கையில்லை

    சரஸ்வதிராசேந்திரன்

    Share
  • இந்த வார வல்லமையாளர் (256)

    இந்த வார வல்லமையாளராக இளமுனைவர் திரு பொன்.சரவணன் அவர்களை தேர்ந்தெடுப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது.

    திருத்தம் சரவணன் எனும் பெயரில் வலைபதிவுகளில் எழுதிவரும் சரவணன், கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணியாற்றுகிறார். தமிழ் இலக்கியங்களை புதுமையான பார்வையில் திருத்தி எழுதும் இவரது வழிமுறையை ஒட்டி தன் பெயரை ‘திருத்தம் சரவணன்’ என மாற்றிக்கொண்டதாக குறிப்பிடுகிறார்.

    சங்க இலக்கியத்தில் கழுதை, சங்க இலக்கியத்தில் குதிரை எனும் இவரது கட்டுரைகளை பாராட்டி இவரை வல்லமையாளராக அறிவிக்கிறோம்.

    1

    கட்டுரையில் இவர் குறிப்பிடுவதாவது

    “கழுதை – என்றாலே தெருக்களில் ஆங்காங்கே திரிந்தவாறு காகிதங்களையும் சுவரொட்டிகளையும் தின்றவாறும் கண்ட இடங்களில் படுத்துக்கொண்டும் இருப்பதான அந்த ‘பாவப்பட்ட’ விலங்குதான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். இப்போது காகிதங்களுக்குப் பதிலாக நெகிழிப்பைகள் பெருகிவிட்டதால் பாவம் இந்தக் கழுதைகள் அறியாமல் அவற்றைத் தின்று செரிக்கமுடியாமல் மரணத்தைத் தழுவிக் கொண்டிருக்கின்றன. விளைவு? துணியை வெளுக்கும் தொழிலைச் செய்வோரிடம் தவிர வேறெங்கும் கழுதைகளையே பார்க்கமுடியாத நிலை தோன்றிவிட்டது. கழுதைப்பாலுக்கு அவ்வப்போது மவுசு கூடுவதால் கழுதைகளை இன்னும் உயிருடன் நடமாட விட்டிருக்கின்றார்கள். ஒருகாலத்தில் பொருள் போக்குவரத்துக்கு மிகவும் உதவியாய் இருந்துவந்தது கழுதை இனம் தான். மாடுகளும் உதவும் என்றாலும் அதற்கு வண்டி கட்டவேண்டும். கழுதைக்கு மட்டும் தான் வண்டியே தேவையில்லை. எவ்வளவு பெரிய பாரத்தினையும் தாங்கிக்கொண்டு செல்லும். பொதி சுமப்பதற்கென்றே பிறந்த இந்த விலங்கினைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் கூறும் செய்திகளை இங்கே விரிவாகக் காணலாம்.

    கழுதை – வேறு பெயர்களும் காரணங்களும்:

    கழுதை என்னும் விலங்கினைக் குறிக்க கழுதை என்னும் பெயரைத் தவிர, அத்திரி, வேசரி ஆகிய பெயர்களையும் சங்க இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. இவற்றுள் அத்திரியும் வேசரியும் கோவேறு கழுதையைக் குறிக்கவே பயன்படுத்தப் பட்டுள்ளன.

    கோவேறு கழுதை என்பது கழுதைக்கும் குதிரைக்கும் கலப்பினமாகப் பிறந்ததாகும். அத்துதல் என்பது தனித்தனியான இரண்டு பொருட்களை இணைத்து ஒன்றாக்குதல் என்னும் பொருளைத் தரும். கழுதை இனத்தையும் குதிரை இனத்தையும் கலந்து உருவாக்கிய இனம் என்பதால் கோவேறு கழுதைக்கு ‘அத்திரி’ என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம்.

    சங்க இலக்கியத்தில் கழுதை:

    சங்க இலக்கியங்களில் கழுதையைப் பற்றியும் கோவேறுகழுதையைப் பற்றியும் சில பாடல்களில் கூறப்பட்டுள்ளன. கழுதைளைப் பற்றிக் கூறும்போது அதன் செவிகள் நீளமானவை என்றும் உட்குழிந்த நிலையில் இருப்பவை என்றும் கூறப்பட்டுள்ளது. கழுதைகளின் வாயானது வெளுப்பாக இருந்ததாகச் சங்க இலக்கியம் கூறுகிறது. உப்பளங்களில் விளைந்த உப்பின் மூட்டைகளையும் மிளகுப் பொதிகளையும் கழுதைகளின்மேல் ஏற்றிக்கொண்டு வணிகர்கள் சென்றதைப் பதிவுசெய்துள்ளன. போரில் வெற்றிபெற்ற மன்னர்கள், தோற்ற மன்னர்களின் ஊர்களில் இருந்த தெருக்களில் எல்லாம் கழுதைகளைப் பூட்டி உழுது அவர்களை அவமானப்படுத்திய செய்திகள் சங்க இலக்கியங்களில் காணப்பெறுகின்றன. கோவேறுகழுதைகளைப் பற்றிக் கூறுமிடத்து, கடற்கழிகளிலும் கடற்கரைகளிலும் அத்திரி பூட்டிய தேரில் தலைவன் தலைவியைச் சந்திக்க வந்துசென்ற நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வையை ஆற்றில் புனலாட்டு விழாவின்போது அத்திரிகளைப் பயன்படுத்திய செய்தியும் கூறப்பட்டுள்ளது. இனி கழுதைகளைப் பற்றியும் கோவேறுகழுதைகள் ஆகிய அத்திரிகளைப் பற்றியும் சங்க இலக்கியங்கள் கூறுகின்ற செய்திகளைத் தனித்தனித் தலைப்புக்களின் கீழ் விரிவாகக் காணலாம்.

    கழுதை:

    இந்தியாவில் குறிப்பாகச் சங்ககாலத் தமிழர்களால் வளர்க்கப்பட்ட கழுதைகளின் விலங்கியல் பெயர் ஈகூஸ் ஆப்ரிகானஸ் அசினஸ் ( ஏஃஊச் ஆfரிcஅனுச் ஆசினுச் ) ஆகும். கழுதைகளில் கருப்பு, பழுப்பு, வெளுப்பு உட்பட பல்வேறு நிறங்கள் உண்டென்றாலும் உடலமைப்புக் கூறுகளும் பயன்பாடும் அனைத்துக்கும் பொதுவானவையே. இதைப்பற்றிய சில செய்திகளைக் கீழே காணலாம்.

    கழுதையின் உடலமைப்பு:

    கழுதையின் செவிகள் குதிரைகளைக் காட்டிலும் நீளமானவை. சொல்லப்போனால், குதிரைக்கும் கழுதைக்கும் இருக்கும் முதல் வேறுபாடே செவிகள் தான். கீழ்க்காணும் சங்க இலக்கியப் பாடல் கழுதையின் நீண்ட செவிகளைப் பற்றிக் கூறியுள்ளது.

    நெடும் செவிக் கழுதை – அகம். 343

    கழுதையின் செவிகளைப் பற்றிக் கூறுமிடத்து, அவை உட்குழிந்து காணப்படும் என்று கீழ்க்காணும் பாடல் கூறுகிறது.

    அணர் செவிக் கழுதை – பெரும்.80

    இப்பாடலில் வரும் அணர்தல் என்ற சொல் உட்குழிதல் என்ற பொருள்படும்.

    கழுதையின் வாயைப் பற்றிக் கூறுமிடத்து, அவை வெண்மை நிறத்துடன் இருந்ததாகக் கீழ்க்காணும் பாடல்களில் பதிவு செய்துள்ளனர் சங்கப் புலவர்கள்.

    வெள் வாய்க் கழுதை – புறம். 15, 350.

    கழுதையின் பயன்பாடு:

    சங்ககாலத்தில் தமிழர்கள் பொதிசுமந்து செல்வதற்கே கழுதைகளைப் பெரிதும் பயன்படுத்தி இருக்கின்றனர். பெரும்பாலும் உப்பளங்களில் விளைந்த உப்பினை மூட்டைகளாகக் கட்டிக் கழுதையின் முதுகில் ஏற்றிப் பல இடங்களுக்குக் கொண்டு சென்றுள்ளனர். கடுமையான வெயிலைப் பொறுத்துக்கொண்டு கரடுமுரடான நிலங்களில் உப்புமூட்டைகளைச் சுமந்துகொண்டு கழுதைக் கூட்டம் சென்ற காட்சியினைக் கீழ்க்காணும் அகநானூற்றுப் பாடல் அப்படியே நம் கண்முன்னால் கொண்டுவந்து நிறுத்துவதைப் பாருங்கள்.

    அணங்கு உடை முந்நீர் பரந்த செறுவின்
    உணங்கு திறம் பெயர்ந்த வெண்கல் அமிழ்தம்
    குட புல மருங்கின் உய்ம்மார் புள் ஓர்த்து
    படை அமைத்து எழுந்த பெரும் செய் ஆடவர்
    நிரை பர பொறைய நரைப்புறக் கழுதை
    குறை குளம்பு உதைத்த கல் பிறழ் இயவின்
    வெம் சுரம் போழ்ந்த அஞ்சுவரு கவலை – அகம். 207

    கிழக்குக் கடலோரங்களில் கடல்நீர் பரந்த உப்பளங்களில் காய்ச்சலால் உண்டான வெண்கல் அமிழ்தமான உப்பினை மேற்குப் பகுதிகளுக்குக் கொண்டுசெல்ல வேண்டி, நல்நிமித்தம் பார்த்து, படைகொண்ட ஆடவர்கள் சூழ, உப்புமூட்டைகளைச் சுமந்தவண்ணம் வரிசையாகச் செல்கின்ற வெண்ணிற முதுகினை உடைய கழுதைகள் உதைத்ததால் பிறழ்ந்த கற்களையும் கடுமையான வெப்பத்தையும் உடைய அச்சந்தரும் வழியில்… என்று அந்த வழியைப் பற்றி விவரிக்கிறது மேற்காணும் பாடல்வரிகள்.

    உப்பு மட்டுமின்றி பல்வேறு விளைபொருட்களையும் கழுதைகளின் முதுகில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளனர். மஞ்சள்நிறத் துணிகளில் மிளகுகளைப் பெரும்பொதிகளாகக் கட்டிக்கொண்டு அவற்றைக் கழுதைகளின் முதுகில் ஏற்றிக்கொண்டு வணிகர்கள் வேறிடம் நோக்கிச் செல்கின்றனர். அப்போது அந்தப் பொதிமூட்டைகள் பார்ப்பதற்குப் பழுத்த பலாப்பழங்களைப் போலத் தோன்றியதாகக் கீழ்க்காணும் பாடல் கூறுகிறது.

    தடவுநிலைப் பலவின் முழுமுதல் கொண்ட
    சிறுசுளைப் பெரும்பழம் கடுப்ப மிரியல்
    புணர்ப்பொறை தாங்கிய வடுவாழ் நோன்புறத்து
    அணர்செவிக் கழுதைச் சாத்தொடு வழங்கு – பெரும்.80

    பரந்து விரிந்து வளர்ந்திருந்த பலாமரத்தின் அடியில் காய்த்திருந்த பல சுளைகளையுடைய பெரிய பலாப்பழத்தின் மேற்புறம் போலத் தோன்றுகின்ற மிளகுப்பொதியினைத் தாங்கியதும் முதுகில் வடுக்களையுடையதும் உட்குழிந்த செவிகளையுடையதும் ஆன கழுதைக்கூட்டம் செல்கின்ற காட்சியை மேற்பாடல் வரிகள் விளக்குகின்றன.

    கழுதைகளைப் பொதிசுமப்பதற்கு மட்டுமின்றி உழவுக்கும் பயன்படுத்துவது பொதுவான வழக்கமே. ஆனால், சங்க காலத்தில் உழவர்கள் கழுதைகளைக் கொண்டு தமது விளைநிலங்களில் உழவு செய்ததாகப் பதிவுகள் இல்லை. காரணம், மாடுகளைப் பூட்டி உழுதல் என்பது பெருமைக்குரியதாகவும் கழுதைகளைப் பூட்டி உழுதல் என்பது பெருமையற்றதாகவும் அக்காலத்தில் கருதப்பட்டது. போரில் வெற்றிபெற்ற மன்னர்கள், தோற்றுப்போன மன்னர்களை அவமானப்படுத்துவதற்காக, அம்மன்னர்களின் கோட்டைக்குட்பட்ட நிலங்களில் கழுதைகளைப் பூட்டி உழுது வெள்ளைவரகு, கொள்ளு போன்றவற்றை வித்தியதாகக் கீழ்க்காணும் புறநானூற்றுப் பாடல்கள் கூறுகின்றன.

    உரு கெழு மன்னர் ஆர் எயில் கடந்து
    நிணம் படு குருதி பெரும் பாட்டு ஈரத்து
    அணங்கு உடை மரபின் இரும் களம்தோறும்
    வெள்வாய்க் கழுதைப் புல்இனம் பூட்டி
    வெள்ளை வரகும் கொள்ளும் வித்தும்
    வைகல் உழவ வாழிய பெரிது என – புறம். 392

    கடும்தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்
    வெள்வாய்க் கழுதைப் புல்இனம் பூட்டிப்
    பாழ் செய்தனை – புறம். 15

    கோவேறு கழுதை:

    கோவேறுகழுதை என்பது கழுதைக்கும் குதிரைக்கும் கலப்பினமாகப் பிறந்தது என்பதால் இரண்டின் குணங்களையும் கொண்டிருக்கும். எனவே இதன் விலங்கியல் பெயர் ஈகுஸ் அசினஸ் x ஈகுஸ் கபாலஸ் ( ஏஃஊச் அசினுச் x ஏஃஊச் cஅபல்லுச் ) ஆகும். கழுதைகள் பொதிசுமக்கும் திறன் கொண்டவை; ஆனால் கழுதைகளால் வேகமாக ஓடவோ நெடுந்தூரம் ஓடவோ இயலாது. குதிரைகள் வேகமாக நெடுந்தூரம் ஓடும் திறன் கொண்டவை. ஆனால், அவற்றால் பொதிசுமக்க இயலாது. குதிரை மற்றும் கழுதைகளின் கலப்பினமான கோவேறு கழுதைகளால் பொதிசுமக்கவும் முடியும்; நன்கு வேகமாக ஓடவும் முடியும். சங்க இலக்கியங்களில் அத்திரி என்றும் வேசரி என்றும் இவை குறிப்பிடப்பட்டுள்ளன.

    கடற்கரை மணற்பரப்பிலும், கடலின் கழிமுகப் பகுதிகளில் காணப்படும் சேற்றுநிலங்களிலும் நீரிலும் கூட அத்திரிகள் பாய்ந்தோட வல்லவை. அதனால் தலைவன் தலைவியைச் சந்திக்க அத்திரி பூட்டிய தேரில் வந்து செல்வது வழக்கம். இதைப்பற்றிக் கூறும் சில சங்கப்பாடல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

    கொடு நுகம் நுழைந்த கணைக்கால் அத்திரி
    வடி மணி நெடும் தேர் பூண ஏவாது …. – அகம். 350

    கழிமுகப் பகுதியில் இருந்த சேற்றின்மேல் ஓடிவந்ததால், அத்திரியின் உடலெல்லாம் சேறுபூசி இருந்ததாகவும் அதன் குளம்புகளின் கீழே செந்நிற இறால்கள் சிக்கி இருந்ததாகவும் கூறும் பாடல்வரிகள் கீழே:

    கழி சேறு ஆடிய கணைக்கால் அத்திரி
    குளம்பினும் சேஇறா ஒடுங்கின – நற். 278

    கழிமுகப் பகுதியில் இரவிலே தலைவன் அத்திரியின்மீது ஏறி வரும்போது கடற்கழி நீரில் இருந்த சுறாக்கள் அத்திரியின் காலைக் கடித்துப் புண் உண்டாகியதால் அது தளர்வாகச் சென்றதைக் கூறும் பாடல்வரிகள் கீழே:

    கழிச்சுறா எறிந்த புண் தாள் அத்திரி
    நெடு நீர் இரும் கழி பரி மெலிந்து அசைஇ – அகம். 120

    வையை ஆற்றில் புதுப்புனல் வந்தபோது புனலாட்டுத் திருவிழாவிற்கு ஆடவரும் பெண்டிரும் கூட்டம் கூட்டமாகச் செல்கின்றனர். அப்போது அவர்களுடன் குதிரைகளும் யானைகளும் கோவேறுகழுதைகளும் மக்களையும் பொருட்களையும் சுமந்துகொண்டு ஆற்றின்கரையே இடிந்துவிழுவதைப் போலச் செல்கின்றன. இதைப்பற்றிக் கூறும் பரிபாடல் வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

    மாவும் களிறும் மணி அணி வேசரி
    காவு நிறைய கரை நெரிபு ஈண்டி – பரி. 22

    முடிவுரை:

    கழுதைகள் மற்றும் கோவேறுகழுதைகளைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் பதிவுசெய்துள்ள செய்திகளை மேலே கண்டோம். சங்ககாலத்தில் மட்டுமின்றி இன்றுவரையிலும் கழுதைகள் தொடர்பான செய்திகள் தொடர்ந்து பதிவுசெய்யப்பட்டே வந்துள்ளன. கழுதைகள் தொடர்பாக வழங்கப்பட்டுவரும் பழமொழிகளே இதற்கொரு சான்றாகும். கழுதை கெட்டால் குட்டிச்சுவர், கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது ஆகியவை அப்பழமொழிகளில் சிலவாகும். இப்பழமொழிகள் உணர்த்தும் உண்மையான பொருட்களை அறிந்துகொள்ள ‘கழுதையும் கட்டெறும்பும் குட்டிச்சுவரும் ‘ என்ற ஆய்வுக்கட்டுரையினைப் படிக்கலாம்.”

    வல்லமையாளர் பொன்.சரவணன் அவர்களுக்கு நம் நல்வாழ்த்துகள்.

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180109 - Tiruppavai 25 -lr - watercolour -24x32cms Oruthi maganai Piranthu.. Andal says: “Krishna, the treasure we want is only you, nothing else…”
    180109 – Tiruppavai 25 -lr – watercolour -24x32cms Oruthi maganai Piranthu..
    Andal says: “Krishna, the treasure we want is only you, nothing else…”

    ”வேண்டாமே கண்ணனே வேறேதும், புள்ளின்வாய்
    கீண்டானே நீமட்டும் போதுமே: -ஆண்டாளின்
    முப்பதைக் கேட்டது மூவா முகுந்தரும்
    அப்பனிடம்(பெரியாழ்வார்) கேட்டார் அவள்(கோதை)’’…..கிரேசி மோகன்….!

    ”ஒருத்தி மகனை ஒருபத்து மூன்றில்
    இருத்திஆனாள் வைகுண்ட இல்லாள், -கருத்தவன்
    ஆரா அமுதன் அடைந்து மணத்தானே,
    நாரவள் பூநார ணன்’’….!

    ’’ஒருத்தி கருத்தரிக்க, வேறொருத்தி காத்த,
    கருத்தவரே கம்ஸவதக் கர்த்தா -திருப்புத்தூர்(திருவில்லி புத்தூர்)
    கோதை திருப்பாவை பாதை வழிசென்று
    கீதை உரைத்தவரே காப்பு’’….கிரேசி மோகன்….

    Share
  • மார்கழி மணாளன் (மூன்றாம் பகுதி) – 25

    க. பாலசுப்பிரமணியன்

     

    திருக்குளந்தை

    அருள்மிகு மாயக்கூத்தர் திருக்கோவில்

    26219293_1732776533440727_6333504764046447991_n

     

    அச்சமின்றி ஆடினாயே தக்கத்திமி தாளமிட்டு

    அச்சமானின் ஆணவத்தை மிச்சமின்றி அழித்துவிட்டு

    அச்சுதனே !  மாயவனே ! மாதவனே !மாயக்கூத்தனே !

    அச்சமெல்லாம் நீங்கிடுதே ஆதிமூலா என்றழைக்க !!

     

    வேங்கடனாய் நின்றகோலம் நினைவிருக்கும் முக்காலம்

    வேண்டிவரும் அடியார்கள் விழைகின்ற அருட்கோலம்

    வேதரசன் திருமகளும் விரும்பியழைத்த திருக்கோலம்

    வேதவனின் திருமார்பில் கௌஸ்துபத்தின் விழாக்கோலம் !

     

    பெருங்குளத்தில் பேரழகாய் நின்றவனே பெருமாளே

    வருந்துயரை வருமுன்னே விலக்கிடுவாய் வாசுதேவா !

    கருமங்கள் அனைத்தையுமே காலடியில் சமர்பித்தேன்

    தருமங்கள் முன்னிறுத்தி தந்திடுவாய் நல்வாழ்வை !

     

    காலையிலே உனைக்கண்டால் கவலையெல்லாம் தீர்ந்திடுமே

    மாலையிலே உனைக்கண்டால் மனமென்றும் மகிழ்ந்திடுமே

    போதையன்றோ உன்காட்சி புவனமெல்லாம் உன்அரசாட்சி !

    பாதையெல்லாம் துணைவந்தால் ஆனந்தத்தின் அருளாட்சி !!

     

    நாளெதற்கு கோளெதற்கு நானுன்னைப்  பார்ப்பதற்கு ?

    நடுநிசியும் நண்பகலும் நல்லுறவை வளர்த்திடுமோ ?

    நாலுவேதமும் நாலாயிரமும் போற்றிடவே போதிடுமோ?

    நன்நெஞ்சில் உனைவைத்தால் நல்விருந்தாய் வாராயோ ?

     

    பாலோடு தேன்சேர்த்துப் பன்னீரால் நீராட்டி

    பாயசத்தைப் பருகிடவே நானுன்னை வேண்டேன் !

    பானகத்தை படைத்தவுடன் பசிதீர்ந்து நிற்பவனே

    பாற்கடலை விட்டுடனே பறந்தோடி வருவாயோ ?

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180108 - Tiruppavai 24 - Mangalashasanam Andal extols Krishna. watercolour. Stratmore paper. 35.5x27 cms
    180108 – Tiruppavai 24 – Mangalashasanam
    Andal extols Krishna. watercolour. Stratmore paper. 35.5×27 cms

    ‘’அன்றிவ் உலகம் அளந்தோன் அடிபோற்றி,
    சென்றவ்வை குண்டத்தைச் சேர்ந்தவளின் -தென்றல்
    திருப்பாவைக் காற்றினை தூற்றிக்கொள் வோரை
    விருப்போடு போற்றி வணங்கு’’….கிரேசி மோகன்…

    Share
  • படக்கவிதைப் போட்டி (143)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    26754309_1529076437146550_1328870918_n
    வெங்கட் சிவா எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (13.01.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 142-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    newly weds

    புதிதாய் மன்றல்கண்ட மணமக்களை மாலையும் கழுத்துமாய்ப் படமெடுத்து வந்திருக்கின்றார் திருமிகு. அனிதா சத்யம். பூமாலை சூடிநிற்கும் இவர்களுக்குப் பாமாலை சூட்டுவதும் பொருத்தமே என்று இப்படத்தைப் படக்கவிதைப் போட்டிக்குப் பாசத்தோடு தெரிவுசெய்து தந்திருக்கின்றார் திருமதி. சாந்தி மாரியப்பன்.

    நாணத்தோடு திரும்பிநிற்கும் மனையாட்டியைக் கண்டு மணவாளனின் முகத்தில் வெற்றிப்புன்னகை அரும்பிநிற்கக் காண்கிறோம்.

    கவிஞர்கள் தம் கைவரிசையைக் காட்டத் தோதான புகைப்படமிது என்றே எண்ணுகின்றேன். அவர்களைக் கவிபாட அன்போடு அழைக்கின்றேன்!

    *****

    ”ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழுங்கள்; உறவென்றும் பட்டுப்போகாது! பெண்ணே…! கணவனைக் கண்ணாய்க் கொண்டு உலகைக் கண்டால் உன் வாழ்வு சிறக்கும்!” என்று இணையருக்கு இல்லற சூக்குமத்தைப் பாட்டினிலே குழைத்துத் தந்திருக்கின்றார் திரு. ரா. பார்த்தசாரதி.

    திருமணம்

    வாழ்க்கை துணை நலம் நாடி, திருமண கோலத்துடன் காட்சியளிக்கின்றாய்
    திருமணம் என்பது, இருமனங்கள் கொண்ட ஒருமனம் என உணர்வாய்
    திருமணத்தில் ஏற்படும் மகிழ்ச்சி, இல்லறத்தில் இன்பமுடன் ஈடுபடுவாய்
    இனி எச்செயலையும் இருவரின் தீர்மானத்தில் நடத்திக் காட்டிடுவாய்!
    மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்திடும் வரமே!
    நீ மாண்புறுவதும், பெருமையடைவதும் அவள் வந்த நேரமே!
    திருமதி ஒரு வெகுமதி என்று அழைப்பது வழக்கம்
    அவள் பெயரை செல்லமாக அழைப்பதே பழக்கம்!
    புகைப்படத்திற்காக இன்முகம் காட்டி சிரிக்கின்றீர்கள்
    இல்லற வாழ்க்கையில் சிரிப்பு என்பது சில காலமே என உணருங்கள்!
    ஒருவர்க்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்வதே சிறந்ததாகும்
    இருப்பதைக் கொண்டு மனநிறைவுடன் வாழ்வதே மிக நன்மையாகும்.
    காலங்களும், கோலங்களும், உலகில் என்றும் மாறும்
    கணவன், மனைவி உறவே என்றும் நிலைத்து வாழும்!!
    மலர்போன்று மலர்கின்ற மனம் வேண்டும் நற்பெண்ணே,
    மண்வாசனை மாறாத குணம் வேண்டும் மணப்பெண்ணே!
    பிறந்த வீட்டின் குலம் காக்க வேண்டும் ,
    புகுந்த வீட்டின் நலம் காக்க வேண்டும்
    கணவன் என்றாலே, கண்ணைப் போன்றவனாகும்,
    அவன் வழியே உலகை காண்பவள் மனைவியாகும்!
    அன்பும், அறனும் உடைத்தாயின், இல்வாழ்க்கை
    பண்பும், பயனும் அது என்பது வள்ளுவர் வாக்கு.

    ***** 

    ”மண்ணின் மணத்தோடு நிகழும் மணமிதில் ஒப்பனையும் இல்லை; தப்பெதுவும் இல்லை” என்று நிறைந்த மனத்தோடு மணமக்களை வாழ்த்துகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    மண்ணின் மணம்…

    ஒப்பனை காட்டும் முகங்களில்லை
    ஒப்புக் காகச் சிரிக்கவில்லை,
    தப்பிலாக் கிராமக் காதலிலே
    தழைத்த திந்தத் திருமணமே,
    செப்பிட வார்த்தை ஏதுமில்லை
    சொந்த மண்ணின் நாணமிது,
    இப்படித் தொடங்கிடும் மணவாழ்வில்
    இனிதே வாழ்க மணமக்களே…!

    *****

    ”கணவனைக் காணவும் நாணிநிற்கும் இந்நங்கையும் நம்பியும் ஈழமும் தமிழும்போல் நெடிதுநாள் இனிதுவாழ்க!” என்று வாழ்த்துகின்றார் திரு. எஸ். கருணானந்தராஜா.

    மணமக்களுக்கு வாழ்த்து

    நாணமும் பயிர்ப்பும் கொண்டு
    நங்கைதன் முகந் திருப்பிக்
    காணவும் கூசுகின்றாள்
    கமராவைப் பக்கல் நிற்கும்
    ஆணவன் சிரிப்பினூடு
    அணைத்திட அவளைத் தன்னோ(டு)
    ஏனடி வெட்கமென்று இழுப்பது
    இனிய காட்சி.

    வாழ்வினிலிணைந்த இந்த
    மணமக்கள் நீடு வாழி
    தோழமை குலையா தென்றும்
    துயர்படா தினிது வாழி
    ஊழ்வினையுருத்து வந்து
    உயர்வினைத் தடுத்திட்டாலும்
    ஈழமும் தமிழும் போலும்
    இணைபிரியாது வாழி

    தம்பதிகாள்!
    அன்புக்கினிய தம்பதியாய்
    அறிவும் திருவும் ஒரு சேர
    இன்பத்தமிழே மூச்சாக
    என்றும் வாழ்க இனிதாக!

    ***** 

    ”மணமகனே! உனைக்கரம் பிடித்த இப்பெண்மணியே இனி உன் கண்மணி; மலரும் மணமுமாய், உடலும் உயிருமாய், குயிலும் குரலுமாய், அகந்தையை நீக்கி அன்பைத் தேக்கி நீவிர் நீடுவாழ்க!” என மணவாழ்த்துக் கூறுகின்றார் திரு. பழ. செல்வமாணிக்கம்.

    உறவின் உன்னதம்:

    இரு மனம் இணையும் திருமணம் !
    ஊர் கூடி வாழ்த்தும் திருமணம்!
    உறவின் பாலம் திருமணம்!
    அழகுக் கோலம் திருமணம்!
    வெட்கம் கலந்த சிரிப்புடனே மங்கை நல்லாள்!
    ஆனந்தம் பொங்கும் முகத்துடனே மாப்பிள்ளை!
    அகம் மகிழ்ந்து வாழ்த்துகிறோம்!
    இல்லறம் சிறக்க வாழ்த்துகிறோம்!
    உன்னைக் கரம் பிடித்தாள் இந்தப் பெண்மணி!
    இனி இவள்தான் உந்தன் கண்ணின் மணி!
    மலராய் அவள் இருக்க! நறுமணமாய் நீ இரு!
    உடலாய் அவள் இருக்க! உயிராய் நீ இரு!
    பயிராய் அவள் இருக்க!மழையாய் நீ இரு!
    நிலவாய் அவள் இருக்க!வானாய் நீ இரு!
    பாட்டாய் அவள் இருக்க! பொருளாய் நீ இரு!
    குயிலாய் அவள் இருக்க! குரலாய் நீ இரு!
    தெய்வமாய் அவள் இருக்க! கோவிலாய் நீ இரு!
    உனக்காக அவள் விட்டது ஏராளம்!
    தாய்,தந்தை விட்டு வந்தாள்!
    வீட்டை விட்டு வந்தாள்!
    தன்னை தொலைத்து விட்டு உன்னோடு
    சேர வந்தாள்!
    அவளுக்காய் நீயும் விடு:
    உன் ஆணவத்தை!
    உன் அகந்தையை!
    விட்டு விடாதே:
    உன் அன்பை!
    உன் பண்பை!
    உன் பரிவை!
    உன் உயிரெனும் மேலான மனைவி எனும்
    மங்கை நல்லாளை!!!!

    ***** 

    அல்லி விழிதனில் அஞ்சனமிட்டு, கல் வளையல்களும் காற்சிலம்புகளும் கவிபாட, எதிர்காலம் குறித்த எண்ணவோட்டத்தில் இடையிடும் நாணம் தடைபோட, தலைகுனிந்து நிற்கும் தாமரையை நமக்கு அறிமுகப்படுத்துகின்றார் திருமிகு. ஹேமா வினோத்குமார். 

    நாணத்தில் நான்!!

    அந்நாளிற்காக!!
    செம்மண்ணில் கால்பழுக்க
    கருவேல முள்குத்தி
    அரப்பிலைகளைத் தேடி
    அங்கிருந்த கருஞ்சீகயைச் சேர்த்து
    ஆசையாய் அரைத்து வைத்தேன்!!
    கொட்டைப்பாக்குடன்
    சிறுதுளி மோர் சேர்த்து
    மருதாணி இலைகளை
    மையாய் அரைத்தெடுத்தேன்!!
    கல்வளையல்களும்
    கண்டாங்கிச் சேலையும்
    கள்வா நீ வாங்கி வரக்
    காத்திருந்தேன்!!!
    உன் முற்றம் எம்மொழி சிறக்க
    ஆயிரம் முத்துடைய
    காற்சிலம்பைக் கண்டெடுத்தேன்!!
    மும்மாதமும் மூன்று நாட்களைப்போல்
    உருண்டோடின!!

    தைத்திருநாளில்
    மேகக்கண்ணி இருள்தனைஅப்பி
    சூரியனார் மலைமுகடுகளில்
    கம்பீரமாய் எட்டிப்பார்க்க
    குளிர்க்குப் பச்சைக்கம்பளம் போர்த்திய
    கைத்தமலை நடுவனிலே
    பாங்காய்ப் பனையோலைப்பின்னிப்
    பக்குவத்தோடு பச்சைமேடையமைத்துப்
    பம்பையும் மேளமும்சூழ
    பட்டாடை கட்டி
    செஞ்சந்தனத் திலகமிட்டு
    மகிழம்பூ குங்குமத்தோடு
    மிடுக்காய் நீயும்!!
    அல்லிவிழிதனில் அஞ்சனமிட்டு
    உள்ளங்கை சிவக்கச்
    செங்காந்தள் மலர்சூடி
    கல்வளையல்களோடும்
    காற்சிலம்புகலோடும்
    உன் விழிப்பார்வைக்காக
    நாணத்தில் நான்!!

    நீ கட்டிய மஞ்சக்கொம்போடு
    முவ்வேழு வருடங்கழித்து
    பல்போன கிழடுகளாய்ப்
    பிள்ளைகளோடும்
    பேரப்பிள்ளைகளோடும்
    கொஞ்சிவிளையாடும் தருணத்தில்
    நீ அளிக்கும் கள்ளமுத்தத்தில்
    செம்மேனி சிவந்து
    நினைக்குமட்டும்
    இக்கணமே!!!

    நாணத்தில் நான்!!!

    *****

    மணக்கோலத்தில் மாப்பிள்ளை, பெண்ணைக் கண்ட மகிழ்ச்சியில் தங்கள் மனம்போட்ட கோலத்தைக் காலத்தால் அழியாக் கவிதைகளாக்கித் தந்திருக்கும் கவிவலவர்களுக்கு என் நன்றியும் பாராட்டும்!

    இனி, இவ்வாரத்தின் சிறந்த கவிதை…

    எளிய திருமணம்

    எளிய முறையில் இங்கொரு திருமணம்! – உளக்
    களிப்பில் குறைவிலா அழகிய திருமணம்!
    பகட்டு என்பது சிறிதும் இல்லை!
    திகட்டும் மகிழ்வில் குறைவேதும் இல்லை!

    சாரட்டு வண்டியில் பூட்டிய குதிரை
    சரிகைப் பட்டு ஏதும் இல்லை! – மலர்த்
    தோரணம் ஏதும் தொங்க வில்லை!
    காரணம் இல்லாத் துள்ளிசை இல்லை!

    அதிர்வேட்டு ஏதும் முழங்க வில்லை!
    சதிராட்டம் ஏதும் நடக்க வில்லை!
    உணவுப் பொருட்கள் வீணடிப்பு இல்லை!
    கனவுலகம் போன்ற அலங்காரம் இல்லை!

    பொன் வைரம் சீர்வரிசை யெல்லாம்
    கண்ணுக்கு குளிர்ச்சியாய்க் காட்சிப் படுத்தி
    வண்டி வண்டியாய்க் கொட்டிக் கொடுத்தும்
    வாங்கிட முடியுமா வாழ்வின் நிறைவை?

    திருமணம் என்ற பெயராலே அனைவரும்
    தேவையற்ற செலவைத் தவிர்த்திடுவோம்!
    வாழ்க்கைக்காகப் பணம்தேடி நம்
    வாழ்வு தொலைவதை உணர்ந்திடுவோம்!

    சிக்கன வாழ்வைக் கடைப்பிடிப்போம்!
    சிக்கலற்ற வாழ்க்கை வாழ்ந்திடுவோம்!
    பொருள்சார் வாழ்வில் நிறைவைத் தருவது
    பொதுவாய்ச் சிக்கனம் என்ற மந்திரமே! 

    மணவாழ்க்கையின் வெற்றி, பணம் சார்ந்ததில்லை; அது மணமக்கள் மனம் சார்ந்தது! ஆம், செல்வம் என்பது சிந்தையின் நிறைவே!

    திருமணம் என்ற பெயரால் மக்கள் செய்யும் தேவையற்ற ஆடம்பரங்களைத் தவிர்த்து, எளிமையாய் மணமுடித்து இனிமையாய் வாழ்வதே உண்மையில் பொருளுள்ள வாழ்க்கை. அவ்வாறு எளிமையாய் மணம்புரிந்து களிப்போடு இல்லறத்தில் இணைந்திருக்கும் மணமக்களின் உயர்வையும், அவ் எளிய திருமணத்தின் ஏற்றத்தையும் சிறப்பாய்ப் பதிவுசெய்திருக்கும் இக்கவிதையின் ஆசிரியர் திரு. ஆ. செந்தில் குமாரை இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் என அறிவித்துப் பாராட்டுகின்றேன். 

     

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (89)

    நிர்மலா ராகவன்

    `உடனே வேண்டும்!’

    நலம்

    என்ன மனிதரோ! யாருடனும் ஒத்துப்போகாத ஜன்மம்!’

    அந்த ஒத்துப்போகாத மனிதர் – கோபு — எப்போதும் தன் அறையில் படித்துக்கொண்டு இருப்பார். அதன்மூலம் புதிய விஷயங்களைக் கற்பார். இல்லாவிட்டால், ஏதாவது சாதனத்தைப் பிரித்து, மீண்டும் பொருத்துவதில் முனைவார்.

    மனைவி மீனாவோ, “யாராவது பேசுவதைக் கேட்டுக்கொண்டே இருந்தால், எனக்கு சாப்பாடு, தூக்கமே வேண்டாம்!” என்னும் வர்க்கம். பெரிய குடும்பத்தில் வளர்ந்ததாலோ, என்னவோ, இவளுக்கு ஓயாத சத்தம் ஒரு பொருட்டில்லை. சிறிது நேரம் தனியாகக் கழிக்க நேர்ந்தால், தவித்துப்போய்விடுவாள். யாருடைய குரலையாவதைக் கேட்டாக வேண்டும் — அது தொலைகாட்சி அல்லது தொலைபேசிவழி இருந்தாலும்!

    படிப்பது என்ன வழக்கமோ!

    கோபு வீட்டில் எப்போதும் ஏதாவது படித்துக்கொண்டிருப்பார்.

    “வயதான காலத்திலே அக்கடா என்று இருக்காமல், அப்படி என்ன படிப்போ!” என்று கண்டனம் செய்பவளை அமைதியாக எதிர்ப்பார் கோபு: “பில் கேட்ஸ் (Bill Gates) வாரத்தில் ஐந்து மணி நேரமாவது படிச்சு புதுசு புதுசா எதையாவது கத்துக்கறார், தெரியுமா?”

    மீனா அயல்நோக்கு கொண்டவள். படிக்கும் பழக்கம் இருப்பவர்களுக்குப் பிற மனிதர்களுடன் தொடர்பு அற்றுப்போய்விடும், படிப்பதெல்லாம் பள்ளி, கல்லூரி நாட்களில் பரீட்சையில் தேர்ச்சி பெறத்தான் என்று சாதிக்கும் கட்சி. ஆகையால் அமைதியையும் மௌனத்தையும் நாடும் கணவரது குணம் புரியாமல் போனதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

    ஏன் படிக்கணும்?

    படிப்பதால் மூளைக்கு வேலை அளிக்கப்படுகிறது. வயதானவர்களுக்குச் இயற்கையிலேயே ஏற்படும் மறதிசார்ந்த நோய்கள் அதிகம் படிப்பவரை அணுகுவதில்லை.

    ஓயாமல் கதை புத்தகங்கள் படிப்பவர்கள் கதாபாத்திரங்களுடன் தம்மை ஐக்கியப்படுத்திக்கொள்வார்கள். இதனால் தம்மைத் தாமே புரிந்துகொள்வதும் சிலருக்குச் சாத்தியமாகிறது.

    உள்நோக்கும் அயல்நோக்கும்

    உள்நோக்கு உடையவர்களுக்கு தனிமையில் செய்யக்கூடிய காரியங்களில்தான் நாட்டம் போகும். உடலில் இறுக்கமின்றி ஓய்வாக இருக்க படிப்பது, எழுதுவது, வரைவது, வாத்தியம் இசைப்பது போன்ற ஏதாவது ஒரு காரியத்தில் முழுமூச்சுடன் ஈடுபடுவார்கள்.

    கல்யாண வீடு போன்ற இரைச்சல் அதிகமாக இருக்கும் இடங்களுக்கு இவர்களை அழைத்துப்போனால், மரியாதைக்குக் கொஞ்சம் பேசுவார்களே தவிர, சீக்கிரமாகவே உடலும் மனமும் சோர்ந்துபோக, சிறு குழந்தைகள்போல், `போகலாமா?’ என்று நச்சரிப்பார்கள்.

    இப்படிப்பட்டவர்களுக்குப் பிற மனிதர்களுடன் தொடர்பு அநாவசியம் என்பதில்லை. ஆனால் சந்திப்பவர்கள் அனைவருடனும் `என்றைக்காவது உதவும்!’ என்ற மனப்பான்மையுடன் தோழமை கொள்வது இவர்களுடைய தன்மை இல்லை. தம்மைப் புரிந்துகொண்டு ஊக்குவிக்கும் சிலருடன் ஆழ்ந்த நட்புடன் பழகுவார்கள். பொதுவாக, ஒத்த மனதுடைய ஒருவர் எதிரே இருந்தால், அவருடன் நிறையப் பேசுவார்கள்.

    பல தம்பதிகள் இப்படித்தான் மாறுபட்ட குணத்தவராக இருக்கிறார்கள். `இவர் ஏன் என்னைப்போல் இல்லை?’ என்ற எரிச்சல் அயல்நோக்குடையவர்களுக்கு எழுகிறது.

    குட்டிக்கதை

    அவளும் பாடகிதான். ஆனாலும், ஒரே இடத்தில் அமர்ந்து நெடுநேரம் வயலின் வாசிக்கும் கணவரை `கரையான்!’ என்று பழிப்பாள்! தன்மேல் முழுக்கவனமும் செலுத்தாமல், வேறு எதிலோ ஆழ்ந்திருக்கிறாரே என்ற ஏக்கத்தில் பிறந்த கசப்பு அது.

    அவரோ, வாய்திறவாது, தம் காரியத்திலேயே கண்ணாக இருப்பார்! பலகீனமானவர் என்பதில்லை. தான் மனைவியிடமிருந்து வித்தியாசப்பட்டிருக்கிறோம், மாறினால் மனவருத்தம்தான் மிகும் என்பதைப் புரிந்துகொண்ட விவேகம்.

    கதை

    மைமூனாவுக்கு அடிக்கடி வீட்டிலுள்ள நாற்காலி, சோபா போன்றவைகளை இடம் மாற்றி, மாற்றி வைத்துக்கொண்டே இருக்கவேண்டும். கணவர் நாவிக்கோ மாறுதலே பிடிக்காது. தான் பேசுவதைவிட பிறர் பேசுவதில் ஆழ்ந்த கவனம் செலுத்துவார். யாராவது கேட்டால்தான் நாவி தன் அபிப்ராயத்தைக் கூறிவாரேயொழிய, தன் `குரலைக் கேட்பதற்கென்று’ பேசுவது இவரால் இயலாத காரியம். அதாவது, பலர் கூடியிருக்கும் சபையில் தனித்திருப்பவர். எதையும் தீர்க்கமாக யோசித்துத்தான் முடிவெடுப்பார். அசாத்திய திறமை இருந்தாலும், எல்லாரும் தன்னைக் கவனிக்கவேண்டும் என்ற துடிப்பு கிடையாது.

    மீனா மற்றும் மைமூனாவை ஒத்தவர்கள் பலருடன் பழகினாலும், அவர்களுடன் நெருக்கம் இருக்காது. கவனக்குறைவு வேறு! இத்தகையவர்களுக்கு பிறரைப்பற்றி அறிவதில்தான் ஆர்வம்.

    எப்போதும் பேசிக்கொண்டும், பிறர் பேசுவதைக் கேட்டுக்கொண்டும் இருப்பதால், `நன்றாகப் பழகுகிறாள்!’ என்று பிறர் பாராட்டலாம். ஆனால், மனமும் உடலும் சோர்ந்துவிடாதா! அதனால், அநாவசியமாக கோபம் எழும். எப்போதோ நடந்தவைகளை நினைத்து, எதிரிலிருப்பவருடன் காலங்கடந்து சண்டை போடுவார்கள்!

    தனிமை எதற்கு?

    நாம் இனிமையாகப் பேச, பிறர் கூறுவதை ஆழ்ந்து கவனிக்க வேண்டுமென்றால், தனிமையில் கழிக்க சிறிது நேரத்தை ஒதுக்க வேண்டுவது அவசியம். உடலுக்குத் தேவையான ஓய்வு அப்போது கிடைத்துவிடுகிறது.

    புகழ்பெற்ற நாவலாசியர்களைக் கேட்டால், `எனக்கு எழுத வருகிறது. எழுதுகிறேன். ஆனால் தனிமையில் பல நாட்கள், பல மணி நேரத்தை செலவிட வேண்டியிருப்பது கொடுமை!’ என்று அலுத்துக்கொள்வார்கள்.

    இப்படிச் சலித்துக்கொள்பவர்களுக்கு கற்பனை வரண்டுவிடாதா!

    கற்பனை வரட்சியிலிருந்து மீள சில வழிகள்

    இரவில் தூங்குமுன், அடுத்து என்ன எழுதுவது, இந்தக் கதாபாத்திரம் எப்படி யோசிக்கும் என்ற கேள்வியை நமக்குள் எழுப்பிவிட்டுத் தூங்கினால், மறுநாள் தொடர்ச்சியாக மீண்டும் எழுத இயலும்.

    அதேபோல், யோகா பயின்றால், உள்மனதில் ஆழமாகப் பதிந்து போயிருப்பவை — நாம் எப்போதோ கண்டது, கேட்டது எல்லாம் மேலே எழ, ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது புலனாகும்.

    தியானமும் யோகா மாதிரிதான். `இம்மாதிரியான தருணங்களில் எவரும் வெறுமையாக உணர்வது கிடையாது. மனம் அமைதியாக இருக்கும்,’ என்பவர்கள் உள்நோக்குடையவர்கள். மேலும், மனம் பழைய அனுபவங்களை அசைபோட, செய்த தவற்றை தவிர்க்கும் வழிகள் புலனாகும். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவு பிறக்கும் என்பதை நடைமுறையில் கண்டிருக்கிறேன்.

    அயல் + உள் நோக்குபவர்கள்

    மிகச் சிலர் இருவித குணங்களையும் கொண்டிருப்பர். இவர்களுக்குத் தனிமையும் பிடிக்கும், பிறருடன் பழகுவதும் கைவரும் குணம். பல சாதனையாளர்கள் இத்தன்மை கொண்டவர்கள்தாம்.

    இவர்களுடைய கலகலப்பான சுபாவத்தை ஒரு முறை பார்த்து ரசித்தவர்கள், அதனால் அகமகிழ்ந்து, எப்போதும் அவர்களை மகிழ்விக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் நடந்துகொள்வார்கள்.

    இவர்களோ, கார் பேட்டரியை அவ்வப்போது சார்ஜ் செய்வதுபோல், எப்போது தனிமையை நாடவேண்டும் என்று புரிந்துவைத்திருப்பவர்கள். அதனால், சோர்வு அதிகரிக்குமுன் விலகிவிடுவார்கள்.

    `மாறிப்போயிட்டா!’ என்று சற்று ஏக்கத்துடன் இவர்களைக் குறிப்பிடுகிறவர்களுக்கு இவர்களுடைய தேவை, அது என்னவென்று இவர்கள் புரிந்துவைத்திருப்பது, புரிவதில்லை.

    மனிதர்கள் பலவிதம். எல்லாரும் நம்மைப்போலவே இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது நடக்கிற காரியமா? இதற்காக கோபமும், மனவருத்தமும் கொள்வது சக்தியை விரயமாக்கும் முயற்சிதான்.

    யாரை மணக்கலாம்?

    எதிர்மறையான குணமிருப்பவர்கள்தான் முதலில் ஈர்க்கப்படுகிறார்கள். இருந்தாலும், நாளடைவில், `இவள் ஏன் தன்னைப்போல் இல்லை?’ என்ற எரிச்சல் உண்டாகிறது.

    இம்மாதிரியான சண்டையைத் தவிர்க்க ஒரு சாரார் தம்மை மாற்றிக்கொள்கிறார்கள். இறுதியில் விரக்திதான்.

    சிலர் மாற மறுத்து, தம் போக்கிலேயே நடக்க முற்படுகிறார்கள்.

    `சண்டை வருமே?’ என்கிறீர்களா?

    எந்தக் குடும்பத்தில்தான் எப்போதும் அமைதி நிலவுகிறது!

    அத்துடன், `மாற்ற முடியாது!’ என்று புரிந்துபோனதும், அடங்கி விடுவார்கள்.

    யாரை மணக்கலாம்?

    இம்மாதிரியான குழப்பங்களைத் தவிர்க்க, ஒரேமாதிரியான குணம் உடையவர்கள் ஒன்று சேர்ந்தால்தான் இல்வாழ்க்கையில் ஒற்றுமை நிலவும் என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.

    குணத்திற்கேற்ற தொழில்

    குடும்ப வாழ்க்கையில் மட்டுமில்லை, ஒருவர் தேர்ந்தெடுக்கும் தொழிலும் அவரது குணத்திற்கு ஏற்றவாறு இருக்கவேண்டும்.

    கதை

    இயற்கையிலேயே கூச்ச சுபாவம் கொண்டவர் கமலநாதன். இவருக்கோ, பலருடன் பழக வேண்டிய வேலை! தடுமாற்றம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.

    தனக்குத் தைரியம் போதவில்லை என்று முடிவெடுத்து, மது அருந்த ஆரம்பித்தார் கமலநாதன். அதன்பின், பழகுவதில், அவுட்டுச் சிரிப்புச் சிரிப்பதில் கஷ்டம் இருக்கவில்லை. ஆனால், முரட்டுத்தனமும் சேர்ந்துவர, அவருடைய குடும்பத்தினர்தாம் அவரை அனுசரித்துப் போகச் சிரமப்பட்டார்கள்.

    பல வருடங்கள் கழித்து, `என் உத்தியோகத்தால் கெட்டுப்போனேன்!’ என்று புலம்புகிறார்.

    அவரது சுபாவத்துக்கு ஏற்றபடி, தனித்துச் செய்யும் உத்தியோகத்தில் அவர் ஈடுபட்டிருந்தால், நிம்மதியும், நிறைவும் கிடைத்திருக்கும். வெற்றிகளும் குவிந்திருக்கும்.

    நாம் எத்தன்மையர் என்று புரிந்துகொண்டால், பிறரை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக மாறி, நம்மையே வருத்திக்கொள்ள வேண்டியிருக்காது.

    தொடருவோம்

    Share
  • குறுந்தொகையில் பாலைநில உணவுகள் சுட்டும் சூழலமைவு

    -முனைவர் பா. உமாராணி

    மனித வாழ்க்கை மாறிக்கொண்டே இருக்கும் தன்மையுடையது. அது காலத்திற்குக் காலம் தன்னைச் செம்மைப்படுத்தியும், மெருகுபடுத்தியும் வாழும் இயல்பினையுடையது. அதனடிப்படையில் நோக்கும்போது மனித வாழ்க்கையை அடிநாதமாகக் கொண்டு படைக்கப்படும் இலக்கியங்களும் காலத்திற்குக் காலம் தன்னை மெருகுபடுத்திக் கொண்டு வந்துள்ளதை நாம் அவதானிக்க முடிகிறது. எனினும் இன்றளவும் பழமையின் வேர்கள் ஆழ ஊன்றியதாய் அமைந்த தமிழர்தம் வாழ்வியலை எத்தகையதொரு பின்னணியில் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது என்பதை இன்னும் நாம் உணராமலிருக்கிறோம்.

    ஒரு சமூகம் தான் கட்டமைக்கப்பட்ட ஆதிசூழலில் தன் வேர்களை அனைத்து நிலைகளிலும் பதியவைத்துக் கொண்டே வந்துள்ளது என்பதை சங்கப்பாடல்கள் வழி அறியமுடிகிறது. பழந்தமிழர்கள் தம் வாழ்வியலை, அதனோடு தொடர்புடைய பழக்கவழக்கங்களை இலக்கியங்களில் ஏடேற்றிவந்துள்ளனர். இதனை அடிப்படையாகக் கொண்டே இன்றைய தமிழ் சமூகப்பரப்பை, விரிந்த அதன் பண்பாட்டுச் சூழலை உய்த்துணர முடிகிறது. இத்தகையதொரு சிறப்பினையுடைய சங்கப் பாடல்களில் மனித உணர்வுகளைத் தௌ்ளிதின் விளக்கும் தன்மையுடையதும், நுணுகிக் காணும் தன்மையுடையதுமான குறுந்தொகைப் பாடல்கள் பாலைநில மக்களின் வாழ்வியலை, வாழ்வியலோடு தொடர்புடைய உணவுச் சூழலை எவ்வாறு பதிந்துள்ளது என்பதை இக்கட்டுரை ஆய்கிறது.

    பாலைத் திணை சுட்டும் உணவுகள்

    குறுந்தொகையில் பாலைநில உணவுகள் என்பவை பெரும்பான்மையும் இறைச்சியும், வெப்பத்தைத் தாங்கும் தன்மையுடையதுமான சிறுதானிய உணவுகளுமேயாகும். இயற்கையின் ஆளுமையையும் அதன் கூறினையும் ஒருங்கே உணர்ந்தவர்கள் சங்கத் தமிழர்கள். அவர்களின் உணவுகள் இயற்கையோடு தொடர்புடையனவாகவும், இயற்கைசார்ந்த சமூகச் சூழலை முன்வைப்பனவாகவும் அமைந்துள்ளன. பாலைநில உணவுச் சூழலை நாம் இரு நிலைகளில் காணலாம்.

    1.விலங்குகளின் உணவு
    2.மனிதா்களின் உணவு

    என்ற இரண்டு உணவுச் சூழலை முன்வைத்தோம் என்றால் அதில் உணவினைப் பதியவைத்தல் என்ற தன்மையிலிருந்து விலகி சமூகச் சூழலை முன்வைப்பதற்காகவே உணவுச் சூழல் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை உணரலாம்.

    விலங்குகளின் உணவு – சூழலமைவு

    தலைவன், தலைவியின் துயரினை மிகுத்து ஓதும் விதமாகப் பாலைத் திணையில் விலங்குகள் குறித்த உணவுப் பதிவுகள் அமைந்துள்ளன. தலைவனுக்கோ, தலைவிக்கோ ஏற்படும் பிரிவாற்றமையையும், அவர்களின் உள்ளத்தின் வேதனையையும் மிகுவித்துக் கூறும் விதமாக விலங்குகளின் உணவுச் சூழல் பதியப்பட்டுள்ளது. பிரிவாற்றாமையின் காரணமாக தலைவனோ, தலைவியோ அடையும் துயரினை விலங்குகளின் உணவுக்கான செய்திகளோடு தொடா்புபடுத்திக் கூறும்போது பெரும்பாலும் ஆண் விலங்குகள் தங்கள் பிணையோடு இருக்கும் அன்பினிற்கினிய செய்திகளை முன்வைத்தே கூறப்பட்டுள்ளது. இயற்கையில் நிகழும் இக்காட்சிகளைக் கண்ணுறும் தலைவன், தலைவியின் துயரினை உணா்ந்து கொள்வான் என்று ஆற்றுப்படுத்தும் பாடல்களாகப் பெரும்பாலான பாலைத்திணைப் பாடல்கள் அமைந்துள்ளன.

    தலைவன் தலைவியைப் பிரிந்து வினைமேற் செல்கின்றான். குறிப்பிட்ட பருவத்தே வருவதாகக் கூறிச்சென்ற தலைவன் பருவம் வந்தும் வாராமையை உணா்த்தும் விதமாகப் பல பாடல்கள் அமைந்துள்ளன. இத்தகு பாடல்கள் தலைவியின் உள்ளத்தே தோன்றும் வேதனைகளை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளன. வழியின் ஏதம் போன்றவற்றைக் குறிக்காமல் பருவம் வந்தும் பொருள்மேல் தலைவன் கொண்ட ஈர்ப்பினை முன்வைத்துக் கூறும் இப்பாடல்கள் தலைவியின் தன்னிரக்க நிலையினை முன்வைக்கின்றன. மேலும் தலைவன் சென்ற வழியினையும், வினைமுடித்து தலைவன் திரும்பி வருவான் என்பதையும் கூறி தலைவியை ஆற்றுப்படுத்தும் பாடல்களும் இடம்பெற்றுள்ளன. இதனை,

         “உள்ளார் கொல்லோ? தோழி உள்ளியும்
         வாய்ப் புணா்வு இன்மையின் வாரார் கொல்லோ
         மரற் புகா அருந்திய மாஎருத்து இரலை
         அரற்கால் யானை ஒடித்து உண்டு எஞ்சிய
         யாஅ வரி நிழல் துஞ்சும்
         மாயிருஞ் சோலை மலை இறந்தோரே”  (232)

    என்ற பாடல் உணா்த்துகிறது. பாலை நிலத்தில் வேறு உணவு ஏதுமில்லாததால் வருந்திய மான், தான் உண்ணலாகாத மரலை உணவாக உண்டது. யானை பசியினால் உண்பதற்கு ஒடித்துச் சென்ற யாமரத்தின் நிழலில் அது உறங்கும். இங்ஙனம் உண்பதற்கும், உறங்குவதற்கும் இடா்ப்படுவதை ‘மாஇருஞ் சோலை’ என்ற தொடா் குறிக்கும். இத்தகு பாலைப் பகுதியில் மழைபெற்றுத் பயிர்கள் தளிர்த்தால் அங்குவாழும் உயிர்கள் உயிர்பெறும். அதுபோல தலைவனின் தலையளி பெற்றுத் தலைவியும் மகிழ்வாள் என்று பொருள்பட இப்பாடல் அமைந்துள்ளது.

    தலைவன் வினைமேற்சென்ற வழியானது விலங்கினங்கள் அன்போடு தன் பிணையுடன் வதியும் காட்சியினை உடையபகுதி. அதனைக் கண்ணுற்ற தலைவன் தன் நிலையறிந்து திரும்பி வரமாட்டானா? என்ற பெண்ணின் ஏக்கம் தொனிக்கும் குரலாக சில பாலைத் திணைப் பாடல்களில் விலங்குகளின் உணவு குறித்த பதிவுகள் அமைந்துள்ளன. சான்றாக,

    “நசை பெரிது உடையா் நல்கலும் நல்குவா்
    பிடிபசி களைஇய பெருங்கை வேழம்
    மென்சினை யாஅம் பொளிக்கும்
    அன்பின – தோழி! – அவா் சென்ற ஆறே”   (37)

    என்ற பாடல் தலைவன் பிரிந்துசென்ற வழியானது ‘பெண் யானையின் பசியை நீக்குவதற்காகப் பெரிய கையையுடைய ஆண்யானையானது, மெல்லிய கிளைகளையுடைய யா மரத்தின் பட்டையை உரித்து, அதன் நீரைப் பிடியினைப் பருகச் செய்யும் அன்புடை இடமாக உள்ளது. எனவே தலைவனும் இடைச்சுரத்தின் கண் கண்ட காட்சிகளினால் நின் நிலையறிந்து விரைந்து வருவான் என தோழி தலைவிக்கு ஆறுதல் அளிக்கின்றாள்.

    தலைவன் குறித்துச் சென்ற பருவத்தினை நினைவூட்டும் விதமாகவும் (பா.169),  தலைவன் முன்னா் தலைவியுடன் இருக்கும் காலத்தில் இனிமையுடையவனாக இருந்ததையும், பிரிவுக் காலத்தில் அதனை நினைத்து தலைவி ஆற்றியிருக்கும் தன்மையினையும் முன்வைக்கும் விதமாக (பா. 252, 209, 213) பல பாடல்கள் அமைந்துள்ளன. தலைவனைப் பிரிந்து தலைவி ஆற்றியிருக்கும் காலத்தில் தன் அழகும் இளமையும் பயனற்றுப் போவதையும் இத்திணைப் பாடல்கள் சுட்டுகின்றன. தலைவன் தன் அழகினையும், இளமையினையும் நினையாது சென்ற செய்கையானது,

    “கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
    நல்ஆன் தீம்பால் நிலத்து உக்கா அங்கு
    எனக்கும் ஆகாது என்னைக்கும் உதவாது
    பசலை உணீஇயா் வேண்டும்
    திதலை அல்குல் என் மாமைக் கவினே”  (27)

    என்று வௌ்ளிவீதியார் குறிப்பிடுகின்றார். தன் அழகும், இளமையும் யாருக்கும் பயன்படாமல், தனக்கும் பயனில்லாமல் கழியும் வலியினை இப்பாடல் முன்வைக்கிறது.

    தலைவன் மணந்து கொள்ளாமல் காலநீட்டிப்புச் செய்கிறான். இதனால் தலைவி அவன் பிரிவினைத் தாங்க இயலாமல் வருந்துகின்றாள். அங்ஙனம் அவன் காலம் நீட்டித்தவழி தலைவிக்கு உடல்சார்ந்த இடா்ப்பாடுகளும், உள்ளம் சார்ந்த இடா்ப்பாடுகளும் தீமை விளைவிப்பதோடு, அலா் ஏற்படவும் காரணமாக அமைகின்றது. பெற்றோர் மணத்திற்கு உடன்படாத நிலையில் தலைவி தனக்கு அலா் போன்ற துன்பங்களிலிருந்து காத்துக்கொள்ள உடன்போக்கு நிகழ்த்துவதையும் (பா.149, 255…) இப்பாடல்கள் முன்வைக்கின்றன. மேலும் செலவழுங்கல் என்னும் தன்மையில் அமையும் பாடல்களும் (பா. 249,211…) காணப்படுகின்றன. விலங்குகளின் உணவு குறித்த பதிவுகள் தலைவியின் தன்னிரக்கத்தை மிகுவிக்கும் பகுதிகளாக அமைவதை இப்பாடல்கள் வழி அறியமுடிகிறது.

    மனிதா்களின் உணவு

    வினைமேல் சென்ற தலைவன் திரும்பி வருவதற்கான நிமித்தங்கள் கிடைத்தவழி தலைவி தலைவனுக்காக தெய்வத்தை வழிபட்டு இடும் பலி உணவாக காக்கைக்குச் சிறப்புச் செய்வதையும் இத்திணைப் பாடல்கள் முன்வைத்துள்ளன. மனிதா்கள் உண்ணும் உணவு பலிச்சோறாக விலங்குகளுக்குப் படைக்கப்படுவதை,

         “திண்தோ் நள்ளி கானத்து அண்டா்
         பல்ஆ பயந்த நெய்யின் தொண்டி
         முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோறு
         எழுகலத்து ஏந்தினும் சிறிது – என் தோழி
         பெருந்தோள் நெகிழ்த்த செல்லற்கு
         விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே”  (210)

    என்ற பாடல் உணா்த்துகின்றது. இதில் ‘திண்ணிய தேரினையுடைய நள்ளி என்பவனுடைய காட்டிலுள்ள இடையா்கள் வளா்த்த பலபசுக்கள் தந்த நெய்யோடு, தொண்டி என்னும் ஊரிலுள்ள வயல்களில் பருவம் தப்பாது விளைந்த வெண்ணெல் அரிசியால் ஆக்கிய விரும்பத்தக்க சோற்றினை, ஏழு கலங்களில் நிறைத்துத் தோளில் தாங்கி நின்றாலும் தன் தோழியாகிய தலைவியின் பெருந்தோளை நெகிழச்செய்த துன்பத்தை நீக்குவதற்கு விரிந்தினா் வருவதைக் கரைந்துகூறிய காக்கைக்கு இடும் பலி உணவு சிறிய அளவினதேயாகும்’ என்று கூறுவதிலிருந்து தலைவியின் வருத்தமும், வேதனையும் புலப்படுத்தப்படுகின்றது.

    விருந்தினரைப் போற்றும் முகமாக உணவுப் பொருட்கள் பற்றிய குறிப்பு இத்திணைப் பாடல்களில் காணப்படுகிறது. வினைமேல் சென்ற தலைவன் திரும்பிவந்து தலைவியுடன் வதியவேண்டி அறிவுரை வினவுதலும், அதன் பொருட்டுத் துறவோர்க்கு எதிர்தலாகிய அறத்தைப் புரிவதற்கு வழிகோலுதலையும் முன்வைக்கும் விதமாக,

         “ஆசுஇல் தெருவின் ஆசுஇல் வியன்கடை
      செந்நெல் அமலை வெண்மை வௌ்இழுது
         ஓர்இல் பிச்சை ஆர மாந்தி
         அறிசர வெய்ய வெப்பத் தண்ணீர்
         சேமச் செப்பில் பெறீஇயரோ, நீயே
         ‘மின்னிடை நடுங்கும் கடைப்பெயல் வாடை
         எக்கல் வருவது?’ என்றி
         அக்கால் வருவா் எம் காதலோரே”  (277)

    என்ற பாடல் குறிப்பிடுகிறது. ‘பொய், கொலை, களவு, கள், காமமாகிய குற்றங்கள் கடிந்தார் உறையும் தெருவில் நாயில்லாத அகன்ற வாயிலில் செந்நெல் சோற்றுத் திரளை, நரை எருமையின் வெண்ணெயோடு, எட்டு இல்லங்களில் சென்று எண்கவளம் பிச்சையாகப் பெறாமல் எம்முடைய ஒரு மனையின் கண்ணே அப்பிச்சை முழுவதும் பெறுவதுடன், இனிய நீரினையும் பெற முடியும். ஆதலால் தலைவன் வரும் காலத்தைக் குறித்து கூற வேண்டுகிறாள் தோழி.’ மனிதா்கள் உண்ணும் உணவு வகைகளான வரகு, நெல், கரும்பு, பால், மீன், மான் இறைச்சி, இறைச்சி உணவுகள் போன்றவற்றைச் சுட்டும் பாடல்களாக (282, 331, 352, 356, 396,398) பல பாடல்கள் அமைந்துள்ளன. இப்பாடல்கள் அனைத்தும் தலைவன், தலைவியரின் பிரிவுத்துயரினை எடுத்தோதும் விதமாகவே அமைக்கப்பட்டுள்ளன. தனித்த உணவுப் பதிவுகளாக அமையாமல் பலியிடுதல், அறிவா்க்கு உணவு வழங்கல், விருந்து படைத்தல் என்ற நிலைக்களன்களில் இப்பாடல்கள் அமைந்துள்ளன. இவையன்றி பல பாடல்களில் விலங்குகள் தம் உணவுகளைத் துணையோடு உண்ணும் காட்சிப்படுத்தல் காணப்படுகிறது. இக்காட்சிகள் தலைவன் தன் நெஞ்சுக்குக் கூறுவதாகவும், தலைவி தோழியிடம் கூறும் முகமாகவும், தோழி தலைவியை ஆறுதல்படுத்தும் நோக்கிலும் புனையப்பட்டுள்ளன.

    இயற்கையில் காணப்படும் உணவுகளை அவற்றின் நிலச்சூழலோடு தொடா்புடையதாகவும், மனித மனத்தின் உணா்வுகளோடு பிணைத்துக் காணுவதாகவும் ஒருசேரப் படைத்துக்காட்டுகின்ற தன்மையினைச் சங்கப் பாடல்கள் வழி அறியமுடிகிறது. அத்தகு ஒரு சூழலையே பாலைத்திணைப் பாடல்களும் முன்வைத்துள்ளன.

    *****

    பார்வை நூல்கள்:

    1. அகத்திணைக் கொள்கைகள், ந. சுப்புரெட்டியார்
    2. திணை சங்கல்பம், ஐயப்ப பணிக்கா்
    3. குறுந்தொகை, நியூ செஞ்சுரி புக்கவுஸ்

    *****

    கட்டுரையாளர்
    உதவிப் பேராசிரியர்
    கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம்
    கோவை – 21.

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

    Share
  • மார்கழி மணாளன் (மூன்றாம் பகுதி) – 24

    க. பாலசுப்பிரமணியன்

     

    திருக்கோலூர்

     

    அருள்மிகு  வைத்தமாநிதி பெருமாள் திருக்கோவில்

    381119_314017728697527_90541614_n

    சங்கநிதி பதுமநிதியோடு  செழிப்பளிக்கும் நவநிதியும்

    அங்கத்திலே அழகுடனே அணிந்தாலும் குபேரன்

    கண்விழியைக் காமத்திலே கலங்கிடச் செய்தானே

    கையிருந்த நிதியெல்லாம் கைகழுவி நின்றானே !

     

    செய்ததவறால் சிந்தைவருந்திச் சிவனருளைத் தேடியவன்

    மெய்வருத்தித் தவமிருந்தே மாதவனின் அருள்நாட

    எய்தகணை இடம்சேரக் கண்திறந்து கண்ணனுமே

    மெய்சிலிர்க்க மரக்காலால் மனம்நிறையக் கொடுத்தானே !

     

    திருமகளின் விழியருளால் தழைத்தோங்கும் நவநிதியைத்

    திருமாலும் மனமிறங்கித் தந்திடுவான் தடையின்றி

    திங்களெல்லாம் மும்மாரி பெய்திடுதல் போலெங்கும்

    திகட்டும்வரை மரக்காலால் அளந்திடுவான் மாநிதியே !

     

    நல்மகனாய் தயரதனுக்குப் பெருமை சேர்த்தாய்

    நலம்காத்த யசோதையை தாயாக்கித் தாள்பணிந்தாய்

    நம்பிவந்த அனுமனையோ அரவணைத்தது நின்றாய்

    நாரணனே ! நாயகனே ! நற்கதியே தந்தருள்வாய்

     

    பூங்காற்று அணைத்திருக்கப் பூமணத்தின் போதையிலே

    பூங்குழலின் நாதத்திலே பூவுலகைக் காப்பவனே

    பூங்கோதை துணையிருக்க  புவியெல்லாம் வியந்திருக்கப்

    பூந்தமிழில்  உனைப்பாட புலனெல்லாம் சிலிர்க்குதய்யா

    Share
  • ஓடிப் போய்விடு உயிருடன்!

    மூலம் : பீட்டில்ஸ் பாடகர்
    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    jaya

    +++++++++++

    இன்னொருவன் மார்பில் புரளும்
    சின்னப் பெண்ணே ! நீ
    செத்துப் போவது நல்லதென நான்
    சிந்திக்கிறேன்!
    சிரம் நிமிர்ந்து நிற்க வேண்டும்
    சின்னப் பெண்ணே!

    இன்றேல் எனக்குத் தெரியாது நான்
    எப்படிப் பட்டவன் என்று!
    உயிரைப் பற்றிக் கொண்டு
    இயன்றால் நீ
    ஓடிப் போவது நல்லது
    சின்னப் பெண்ணே!
    மண்ணுக்குள் புதைத்துக் கொள்
    மண்டையை
    சின்னப் பெண்ணே! 

    அடுத்தவன் அணைப்பில் நீ இருப்பின்
    முடியும் உன் அற்ப ஆயுள்
    சின்னப் பெண்ணே!
    முன்பே தெரியும் உனக்கு நான்
    மூர்க்கன் என்பது!
    பொறாமை பிடித்தே பிறந்தவன் நான்
    சின்னப் பெண்ணே!

    உன்னை மாற்ற வாழ்நாள் முழுதும்
    என்னால் முடியாது!
    ஓடிப் போவது நல்லது
    உயிருடன்
    சின்னப் பெண்ணே!

    அடுத்தவ னோடு படுப்பதைப்
    பார்த்தால்,
    முடியும் உன் அற்ப ஆயுள்
    சின்னப் பெண்ணே!

     

     

     

    Share