க. பாலசுப்பிரமணியன்

திருப்புளியன்குடி

images

அருள்மிகு காசினிவேந்தர் பெருமாள் திருக்கோவில் (கள்ளபிரான் திருக்கோவில்)

பார்போற்றும் வேதங்களைப்  பிரம்மனும் இழந்துவிடப்

பதுக்கிவைத்த  சோமகனைப் பிடித்தவனே பாண்டுரங்கா !

பாற்கடலும் வைகுந்தமும் விட்டுவந்தாய் புவினோக்கி

படைத்தாயே பூவுலகில் புதியதோர் வைகுந்தமே !

 

கறந்திடவே பாலனைத்தும் கண்மறைவில் பசுவொன்றும்

கலங்கிட்ட மன்னவனும் களம்காண வந்திடவே

கண்மறைவில் காலமெல்லாம் வாழ்ந்தவனே வைகுந்தா

கள்ளனன்றோ கார்மேகா கனிந்துவந்தாய் காட்சிதர !

 

கள்வனென்ற பெயரெடுத்தாய் வெண்ணையுண்டு கோகுலத்தில்

கள்ளபிரான் பெயர்கொண்டாய் கள்வனின் உடைதன்னில்

கள்ளத்தனம் எத்தனையோ கோபியர்கள் கூட்டத்தினில்

கள்ளமனம் ஏதுமின்றி கருணைசெய்வாய் என்னிடத்தில் !

 

கோலாட்ட போதையிலே நிலைமறைந்த கோபியரின்

போராட்ட மனத்தினிலே தேரோட்டம் விட்டவனே  !

மாறாட்டம் செய்யாமல் ஆடினாயே அனைவரோடும்

பாராட்ட வார்த்தையில்லை பரமாத்மா நீயன்றோ !

 

சரணமென்று வந்தவுடன் சங்கடங்கள் தீர்ப்பவனே

மரணமென்ற பயத்தினையே மனதிலிருந்து நீக்கிடுவாய்

கரணமிடும் வாழ்கையைக்  கலக்கமின்றி மாற்றிடுவாய்

சரணமென்றே வந்துவிட்டேன் சந்நிதியே திறந்திடுவாய் !

 

ஓரடியை முன்வைத்தால் ஓடிவரும் பரந்தாமா

ஈரடியை வைத்தவுடன் ஈகையுள்ளம் கொள்பவனே

மூவடியால் உலகளந்து முக்திதந்த முகுந்தா

நாலடியில் உனைப்பாட நற்கதியே தந்திடுவாய் !

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *