-நிலவளம் கு.கதிரவன்

முன்னுரை :-

வேயர் குலக்கொடியாம் ஆண்டாளும், மற்ற தோழியர்களும் பாவை நோன்பிற்காகத் தேவைப்படும் சங்கம், பறை, பல்லாண்டிசைப்பார், கோல விளக்கு, கொடி, விதானம் போன்றவற்றைக் கேட்டவர்கள் 27ஆம் பாடலான இப்பாசுரத்தில் நோன்பை முடித்தபின் தேவையானவற்றைக் கண்ணனிடம் கேட்கிறார்கள். 26 பாசுரங்கள் வரை மார்கழி நோன்பு, அதன் சிறப்பு, நோன்பு காலத்தில் கடைபிடிக்கப்பட வேண்டிய வழிமுறைகள்,மற்றும் நோன்பு காலத்தில் செய்யத் தகாத செயல்கள் எவையெவை? என்பது  விரிவாக விளக்கப்பட்டது.  ” கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா ” என்னும் இப்பாசுரம் பாவை நோன்பினை பாவையர்கள் முடித்துக் கொள்வதையும், முடித்துக் கொண்டதன் பயனாக கோரும் சம்மானங்களைப் பற்றியும் விரிவாக பேசுகிறது.

கூடாரவல்லி:-

”கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா”  – என்னும் பாசுரத்திற்கு போகும் முன்னர் கூடார வல்லி நாளின் சிறப்பினைப் பற்றி சுருக்கமாக காண்போம்.

கூடாரை வெல்லும் என்பது மருவிக் கூடார வல்லியானது.  கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா என்னும் பாசுரத்தைப் பாடியதும் திருமால் கோதைக்குத் திருமண வரம் தந்ததாக ஐதீகம்.  கூடார வல்லி என்ற நாளில் கோதை தன்னை கோபிகையாகப் பாவித்துக் கண்ணனை வேண்டி மற்ற கோபியர்களுடன் மாதம் முழுவதும் நோன்பிருந்த ஆண்டாள் அந்தக் குறை ஒன்றும் இல்லாத கோவிந்தனுடன் கூடிய நாள். தன்னிடத்தில் பக்தியில்லாதவர்களைக் கூட வெற்றி கொள்பவன் கோவிந்தன்.  தன்மேல் பக்தி கொண்டவர்களிடம் தோற்பவனும் அவனே.  மற்ற பாசுரங்களில் மார்கழி நோன்பிருக்கும் நியமங்களையும், செய்யத் தக்க, செய்யத் தகாத செயல்கள் யாது? என்பதைப் பற்றி பேசிய ஆண்டாள், இப் பாசுரத்தில் நோன்பை முடித்துக் கொள்ளும் முகத்தான், கண்ணனாகிய கோவிந்தனிடம் சன்மானம் கேட்கிறாள்.  எப்படிப்பட்ட சன்மானம்? இந்த உலகத்தில் உள்ளவர்கள் எல்லாம் மெச்சும் வண்ணம் கண்ணனையே சம்மானமாக கேட்கின்றாள்.  பரமனும் மனம் மகிழ்ந்து தூய்மையான பக்தையான கோதைக்கு தன்னையே அர்ப்பணிக்கின்றார்.

ருக்மணி, சீதா, ஆண்டாள் கல்யாண வைபவங்களில் ஆண்டாள்-அரங்கர் கல்யாணம் உயர்வானது. கண்ணன் ருக்மணியையும், ராமன் சீதாப் பிராட்டியையும் தத்தம் அவதாரங்களில் முறையே திருமணம்  செய்து கொண்டனர்.  ஆனாள் இப்பூவுலகில் மானிடராக அவதரித்த ஆண்டாள், தெய்வத்தையே திருமணம் செய்து கொள்வதற்கு எவ்வளவு கடுமையான பக்தி வேண்டும்?  அதனால்தான் ஆண்டாள்-அரங்கர் கல்யாணம் மிகவும் உயர்வானது என பூர்வாசிரியர்கள் கூறுகின்றனர்.

இன்றைய நாளில் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் சன்னிதியில் ஆண்டாள் சிம்மாசனத்தில் ஸ்ரீதேவி-பூதேவியுடன் ஸ்ரீபெரியபெருமாள் எழுந்தருளி, அவருடன் ஸ்ரீ ஆண்டாள், ரங்கமன்னார், கருடாழ்வார், மற்ற ஆழ்வார்கள், ஆசாரியர்கள் எழுந்தருளி சேவை சாதிப்பர்.

கூடார வல்லியான இந்தச் சிறப்பான நன்னாளில் பெருமாளுக்கு அக்கார அடிசில் என்ற பால்சோறு நைவேத்யம் செய்யப்படுகிறது.  திருமண வரம் வேண்டும் கன்னிப் பெண்கள் விரதமிருந்து இன்று ஆண்டாள்-அரங்கரை சென்று சேவித்தால் திருமண  வரம் கைகூடுவது உறுதியாகும்.

பாசுரம் :-

கூடாரை வெல்லும்சீர் கோவிந்தா உந்தன்னைப்
பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச் சூடகமே
தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாம்அணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

பாசுரத்தின் பொருள் :-

 தன் அடி பணியாதவர்களையும் வெற்றி கொள்ளக் கூடிய சீர்மையான கல்யாண குணங்களைக் கொண்ட கோவிந்தனே!! உன்னை  வாயாரப் பாடி, வாய் படைத்த பயன் பெற்றமையால் நாங்கள் பெறும் வெகுமாதியானது யாதெனில், இந்த உலகமே புகழக் கூடிய பரிசினை உன்னிடமிருந்து பெற்று, எங்களை நாங்களே கை வளை, தோள் வளை, காதுகளுக்கு அணிந்து கொள்ளும் தோடும், செவிப்பூவான கர்ணப்பூவினையும், கால்களில் அணியக்கூடிய பாடகமாகிய பாத கடகத்தையும், இது போன்ற பல ஆபரணங்களையும் அணிந்து கொள்வோம்.  அதன் பின்னர் புதிய ஆடையை உடுத்திக் கொண்டு, நெய்யினால் மூடப்பட்ட பால் சோற்றினை உன்னோடும், நப்பின்னை பிராட்டியோடும், மற்ற தோழியர்களோடும்  சேர்ந்து, கூடியிருந்து குளிர்ந்து உண்போம். வந்திடுவாய் கண்ணா என்று கோதைப் பிராட்டி கூறுகிறாள்.

விளக்கவுரை:-                         

இப் பாசுரத்தில் கோவிந்த நாமத்தினையும், அத்தகையை கோவிந்தனுக்கு கூடியவர் யார்? கூடாதார் யார்?, பாவையர்கள் அணிந்து கொள்ளும் பல்கலன்கள், நோன்பை முடிப்பதற்கு கண்ணனிடம் கேட்கும் வெகுமதிகள், விரதம் முடித்த பின்னர் கூடியிருந்து உண்ணும் அக்கார அடிசிலாகிய பாற்சோறு போன்ற பல்வேறு செய்திகளை ஆண்டாள் விளக்குகிறார்.

கூடாரை வெல்லும் சீர்மை:-

தம்மோடு மாற்றுக் கருத்து கொண்டவர்களை, தன்னோடு இல்லாதவர்களை, தன்னை ஏற்றுக் கொள்ளாதவர்களைக் கூட எதிரி, பொல்லாதவர் என்று கடுமையாகக் கூறாமல் கூடாரை என்று மென்மையான சொல்லை ஆண்டாள் கையாளுகிறார். மாற்றாறை மாற்றழிக்க வல்லானை என்று பாடியவள் அல்லவா?  அப்படிப்பட்ட சர்வேஸ்வரனான நாராயணன் நாமத்தினை சங்கீர்த்தனம் செய்யாதவர்கள், அவன் திவ்ய கல்யாண குணங்களை பாடிப் புகழாதவர்கள் என அனைவரையும் தன்னுடைய சீர்மைக் குணங்களால் எளிதில் வெற்றி கொள்பவன் கோவிந்தன்.  அதாவது கூடாரை வெற்றி கொண்டு அருள்  பாலிப்பான்.  கூடினவர்களிடம் தான் தோற்று அருள் புரிவான்.  அரக்கர்களை வதம்செய்து திருத்துவான்.  அடியவர்களிடம் தோற்று மகிழ்விப்பான். அம்பினால் தோற்கச் செய்வான். அன்பினில் வசப்படுவான்.  அவனே அரங்கன்.  அவனே கோவிந்தன்.  அவனே பரமேஸ்வரன்.

இப்படி அடியார்களை வதைக்கும் பகைவர்களையும், அரங்கனின் அருமை தெரியாமல் எதிர்க்கும் விரோதிகளையும் வெற்றி கொள்வான்.  பள்ளி கொண்ட அரங்கனின் திருமுற்றத்து அடியார்கள், மால்கொள் சிந்தையரான மெய்யடியார்கள், பேராளன் பேரோதும் பெரியோர்களை  ஒருக்காலும் பிரிய மாட்டேன் என்றிருக்கும் அடியார்களிடம் தோற்று மகிழச் செய்வான்.

கோவிந்தன் நாமம் :-

ஸ்ரீ ஆண்டாள் முந்தைய இருபத்தாறு பாசுரங்கள் வரை, பரமாத்மாவின் பல்வேறு திருவவதாரங்களைப் பற்றி பேசி பரவசப் பட்டவள், இப் பாசுரத்தில் மட்டும் கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா என்று கோவிந்த நாம சங்கீர்த்தனத்தை கூறுகிறார். இதைத் தொடர்ந்து இருபத்தெட்டாவது பாசுரத்தில் ” குறைவொன்றுமில்லாத கோவிந்தா ”, என்றும், இருபத்தொன்பதாவது பாசுரத்தில் ” இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா”, எனவும் தொடர்ந்து மூன்று பாசுரங்களில் கோவிந்தன் புகழ் பாடுகிறார்.  காரணம் பாவை நோன்பு முடிந்துவிட்டது.  பறை என்கின்ற கைங்கர்ய ஞானத்தைப் பெற வேண்டும்.  ஆடை அணிகலன்களைப் பெற வேண்டும்.  தவிரவும் நோன்பு முடித்த பின்னர் கண்ணனோடும், நப்பின்னை பிராட்டியோடும் சேர்ந்து பாற்சோறு உண்ண வேண்டும்.  இவற்றை அளிப்பவன் சர்வேஸ்வரனான பகவான் கோவிந்தன் மட்டுமே.  அவனால் மட்டுமே முடியும். அளிப்பவனும் அவனே. அளித்துக் காப்பவனும் அவனே.

கோ- என்றால் உயிர்கள், விந்தன்- என்றால் காப்பாற்றுபவன். நம்மை எல்லாம் அருகில் இருந்து காப்பவனே கோவிந்தன். மேலும், கோவிந்தா என்றால் எல்லா இடத்திலும், எல்லா காலத்திலும் நம்மோடு நீக்கமற நிறைந்திருப்பவன் என்று பொருள்.  இதைத்தான் ஸர்வத்ர கோவிந்த நாம சங்கீர்த்தனம் என்று கூறும்பொழுது, அனைவரும், கோவிந்தா, கோவிந்தா என்று அவன் நாமத்தைக் கூறுகின்றனர்.  கோவிந்தா என்பதற்கு பல பொருள் உண்டு. பகவானின் தசாவதாரங்களை குறிப்பது கோவிந்தா.  கோவிந்தா என்றால் வாக்கு, பசு,மாடு, கன்று, பூமி, மோட்சம் அளிப்பவர், நீர், ஆயுதம், பர்வதம் என்னும் மலை, புலன்கள், புலன்களை அடக்கி ஆள்பவர், வேதமோதுவதால் அடையக் கூடியவர்., கூப்பிடு தூரத்தில் இருப்பவர், துதிக்கும் அல்லது துதிக்கப்படுபவர் என்று பல அர்த்தங்களை பூர்வாசிரியர்கள் கூறுகின்றனர்.

ஆதிசங்கரர் தனது பஜகோவிந்தத்தில், கோவிந்தா என்ற திருநாமம், மனிதன் வாழ வேண்டிய முறை, அது ஒரு தத்துவ உபதேசம், நமக்கு விவேகத்தையும், வைராக்கியத்தையும் அளிக்கும் ஞானச் சொல் என்று கூறுகிறார்.  எனவே கோவிந்தா என்றால் பாவம் விலகும். மோட்சத்திற்கான தடைகள் விலகும்.

கலியுகத்தில் பகவானை தரிசிப்பதற்கு ஒரே வழி நாம சங்கீர்த்தனம் இசைப்பதுதான். அவன் நாமம் இசைக்கும்போது நமக்கு மிக அருகில் வருகின்றான் கோவிந்தன்.  இப்படி பகவானின் பஞ்ச நாமாக்களான, ராமா, கிருஷ்ணா, கோவிந்தா, நாராயணா, நரசிம்மா என்பதில் நடுநாயகமாக இருக்கும் கோவிந்த நாமத்தை ஆண்டாள் சிறப்பித்துக் கூற காரணம் நாமெல்லாம் அவன் திருநாமத்தை கூறி உய்வடைய வேண்டும்.  தினசரி நாம சங்கீர்த்தனத்தை இசைத்து அவன் அன்பைப் பெற வேண்டும் என்பதற்காகத்தான்.

நாடு புகழும் பரிசு:-

”உன்றன்னைப் பாடிப்பறை கொண்டு யாம்பெறு சம்மானம், நாடு புகழும் பரிசினால் நன்றாக” – என்று பாடுகிறார் ஆண்டாள். வாயினால் பாடி, கேசவனைப் பாட, முகில்வண்ணன் பேர்பாட, மைத்துனன் பேர்பாட என்று மற்ற பாசுரங்களில் நாம சங்கீர்த்தனத்தில் பாடி மகிழ்ந்தவள் கோதை.  அப்படிப் பாடிய நானும், தோழியரும் உன்னிடமிருந்து  கைங்கர்ய ஞானம் என்ற பறையை பெற்றுக் கொண்ட பின்னர்,  இந்த உலகமே புகழும் வண்ணம், எவ்வித அபிப்ராய பேதமும் இல்லாமல், எல்லோரும் ஏற்கும்படியான உயர்ந்த சபையில் பெறப்படும் பரிசினை பெறப் போகிறேன் கண்ணா என்கிறாள் ஆண்டாள்.

உலகமே ஆமோதிக்கும்படியான, புகழும்படியான பரிசு எப்படிப்பட்டதாக இருக்கும்? அப்பரிசு எவ்வகையில் உயர்ந்ததாக இருக்கும்? ராமர் பட்டாபிஷேகத்தின்போது, சீதாப்பிராட்டி அனுமனுக்கு அளித்த முத்து மாலையைப் போன்றோ, பலராமனாக இருக்கின்றபோது ராமர் பட்டாபிஷேக காட்சியைக் காண்பதற்காக, அனுமனை அழைத்து வர பெரிய திருவடியான கருடாத்மனையே தனது தோளில் சுமந்து வர அனுப்பினாரே பரமாத்மா. அப்படிப்பட்ட ஒன்றாக இருக்குமா? திரௌபதிக்கு தக்க சமயத்தில் வஸ்திரம் தந்து காத்தாரே அப்படிப்பட்டதா? பஞ்ச பாண்டவர்களுக்கு யுத்த வெற்றி வழங்கி தர்மத்தை நிலைநாட்டினாரே அப்படிப்பட்ட பரிசா? அல்லது அதற்கும் மேலானதாகவா? என்று  நாம் ஆச்சர்யிக்கும் வகையில் கேட்கிறாள் கோதை.

பல்கலனும் யாமணிவோம் :-

பரமாத்மாவிடம் நாடு புகழும்படியான பரிசினை தந்தருள வேண்டும் என்று கேட்ட ஆண்டாள் தொடர்ந்து, இந்த நோன்பு முடிந்த பின்னர் நாங்கள் அணியத் தக்க புதிய ஆடைகளை நீ தந்து நாங்கள் அணிய வேண்டும். அதோடு கையில் அணியக் கூடிய காப்பும், தோளில் அணியக் கூடிய வளைகள், காதுகளில் அணிந்து கொள்ளும் தோடு, காதின் மேலே அணியும் செவிப்பூ என்னும் கர்ணப்பூ,  காலுக்கு அணியக் கூடிய பாத கடகம் என்னும் பாடகம் இவற்றோடு மேலும் புதுப்புது அணிகலன்களை கிருஷ்ணனாலும், நப்பின்னை பிராட்டியாலும் வழங்கப்பட்டு அவைகளை நாங்கள் அணிந்து கொள்வோம் என்று பூரிக்கிறார்கள்.

அக்கார அடிசில் :-

“ஆடையுடுப்போம், அதன்பின்னே பாற்சோறு, மூடநெய் பெய்துமுழங்கை வழிவார ”-  இதுகாறும் இயம நியமங்களோடு பாவை நோன்பு இருந்தாகிவிட்டது.  இன்று நோன்பை முடித்துக் கொள்ளும் நாள். இன்றைக்கு விரதத்தை முடிப்பதற்காக ஸ்ரீ கிருஷ்ணனுக்கு நைவேத்யம் செய்து பின்னர் நாம் பிரசாதத்தை உண்ண வேண்டும்.  எப்படிப்பட்ட பிரசாதம்? அதை எப்படி உண்பதாம்? சொல்கிறாள் ஆண்டாள்.  அதாவது அரிசி ஒருமடங்கும், பால் இரண்டு மடங்கும் சேர்த்து வேகவைத்து, பாலிலே வெந்த சோறு மறையும் வண்ணம், ”நெய்யிடை நல்லதோர் சோறும்” என்றாரே பெரியாழ்வார், அப்படி நெய்மிதக்க இனிப்புச் சோறு தயாரித்து, படையலிட்டு பின்னர் அதை அள்ளி, நெய்யெல்லாம் முழங்கையில் ஒழுகும் வண்ணம் ரசித்து, சுவைத்து  உண்பார்களாம்.  ஸ்ரீ ஆண்டாளுக்கு மிகவும் உவப்பான இப்பாற் சோறுதான் அக்கார அடிசில் என்றழைக்கப்படுகிறது.  நூறுதடா அக்கார அடிசில் உனக்கு சமர்ப்பிப்பேன் என்று திருமாலிருஞ்சோலை பெருமானிடம் வேண்டிக் கொண்ட ஆண்டாள், அது நிறைவேறுவதற்குள் ரங்கமன்னாருடன் இரண்டறக் கலந்ததனால் அவ்வாக்கு ஆண்டாள் மானிடராய் இருக்கும் வரை நிறைவேறவில்லை.  பின்னர் வந்த ஸ்ரீ ராமானுஜர்தான் நூறுதடா அக்கார அடிசிலைப் பெருமாளுக்கு படையலிட்டு ஆண்டாள் வாக்கை நிறைவேற்றியவர்.  இதனால் ராமானுஜர், கோதை பிராட்டியால் ” எங்கள் அண்ணலே வாரும் ” என்று அழைக்கப்பட்டார்.

 கூடியிருந்து குளிர்வோம் :- 

”நைவேத்யம் பகவானுக்கு இல்லை, பக்தருக்கத்தான் “ – என்று கூறுவார் காஞ்சி மஹாப் பெரியவர். அதனால் விரதம் இருந்தாலும் பிரசாதத்தை மறுக்கக் கூடாது என்று கூறுவார்கள்.  அதனால் கண்ணன் கொடுத்த பரிசை ஆண்டாள் உண்டு நோன்பை நிறைவு செய்து கொள்கிறாள்.  தான் மட்டும் தன்னிச்சையாக உண்ணவில்லை.  கண்ணனை அழைக்கிறாள், நப்பின்னைப் பிராட்டியை அழைக்கிறாள். கூடியுள்ள தோழிமார்களை எல்லாம் அழைத்து, நாமே கண்ணனின் சோறாகவும், கண்ணனே நமக்கு சோறாகவும் கூடியிருந்து உண்டு பேரின்பம் காண்போம்!!  வாருங்கள் என்று   கூட்டத்தை அழைக்கிறாள். சமபந்தி போஜனா முறையை அன்றே நமக்கு அறிமுகப்படுத்தியவள் கோதை நாச்சியார்.  இப்படி கூடியிருந்து குளிர்ந்து நோன்பை முடித்த பின்னர், கோதைக்கு தன்னையே பரிசாக, இவ்வுலகம் ஏற்கும் வண்ணம் அளித்தாராம் அரங்கன்.

பாசுர உள்ளுறை :-

மேலோட்டமாகப் பார்த்தால் நோன்பு முடித்தல், பாவையர் அணிந்துகொள்ளும் அணிகலன்கள், பாற்சோறு என்பதாகத்தான் நம்மால் அறிய முடிகிறது.  ஆனால் உள் பொருளாக, மறையாக ஞான தத்துவத்தை நமக்கு போதிக்கிறாள் ஆண்டாள்.

  1. பல்கலன் என்று சொல்வது ஞானம், பக்தி, வைராக்யத்தைக் குறிக்கும்.
  2. சூடகம் என்பது நம்மையெல்லாம் ரட்சித்துக் காக்கும் கடவுளை காப்பாக உருவகப்படுத்துகிறது.
  3. ஸ்ரீவைஷ்ணவர்கள் தங்கள் தோளில் அணியும் சங்கு, சக்கர முத்திரைகள் தோள்வளையாக கூறப்படுகிறது.
  4. த்வயம் என்று சொல்லக் கூடிய பக்தி செவிப்பூவாக உணர்த்தப்படுகிறது.
  5. காலுக்கணியும் பாடகம் என்பது சரணாகதியை போதிக்கிறது.
  6. அடியார்கள் பரமனுக்கு உரிமையானவர் என்பதைக் கூறுகிறது ஆடை என்ற சொல்.
  7. பகவத் கைங்கர்யத்தைப் பாங்காய் விளக்குகிறது பாற்சோறு.
  8. மூட நெய்பெய்து என்ற சொல்லாடலால், ஆத்மார்த்தமாக அகந்தையின்றி செய்யப்படும் பகவத் சேவையை வலியுறுத்துகிறது.
  9. இறுதியில் கூடியிருந்து குளிர்வோம் என்பதன் மூலம் மோட்ச சித்தியை அடைவோம் வாருங்கள் என அழைக்கும் வண்ணத்தில் உள்ளுறையாக உணர்த்தப்பட்டுள்ளது.

முடிவுரை :-

ஸ்ரீ ஆண்டாளின் திருப்பாவை முப்பது பாசுரங்களில், இப்பாசுரம் மிகவும் தனித்துவம் வாய்ந்ததாகும். இதை பக்தி சிரத்தையுடன் பாராயணம் செய்தால் பக்திச் செருக்கு, ஞானச் செருக்கின்றி வைராக்யத்துடன் வாழலாம்.  மேலும் திருமணமாகாத பெண்கள் விரதமிருந்து, இப்பாடலை பாராயணம் செய்தால் விரைவில் திருமணம் கைகூடும்.  அவர்களுக்கு எவ்விதத் தடைகளும், எதிரிகளும் இருக்கமாட்டார்கள். வாருங்கள் நாமும் அரங்கனுக்கு அக்கார அடிசில் நைவேத்யம் செய்து ஸ்ரீஆண்டாள்-அரங்கன் பேரருளைப் பெறுவோம்.

                                  ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்!!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *