படக்கவிதைப் போட்டி 142-இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி
புதிதாய் மன்றல்கண்ட மணமக்களை மாலையும் கழுத்துமாய்ப் படமெடுத்து வந்திருக்கின்றார் திருமிகு. அனிதா சத்யம். பூமாலை சூடிநிற்கும் இவர்களுக்குப் பாமாலை சூட்டுவதும் பொருத்தமே என்று இப்படத்தைப் படக்கவிதைப் போட்டிக்குப் பாசத்தோடு தெரிவுசெய்து தந்திருக்கின்றார் திருமதி. சாந்தி மாரியப்பன்.
நாணத்தோடு திரும்பிநிற்கும் மனையாட்டியைக் கண்டு மணவாளனின் முகத்தில் வெற்றிப்புன்னகை அரும்பிநிற்கக் காண்கிறோம்.
கவிஞர்கள் தம் கைவரிசையைக் காட்டத் தோதான புகைப்படமிது என்றே எண்ணுகின்றேன். அவர்களைக் கவிபாட அன்போடு அழைக்கின்றேன்!
*****
”ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழுங்கள்; உறவென்றும் பட்டுப்போகாது! பெண்ணே…! கணவனைக் கண்ணாய்க் கொண்டு உலகைக் கண்டால் உன் வாழ்வு சிறக்கும்!” என்று இணையருக்கு இல்லற சூக்குமத்தைப் பாட்டினிலே குழைத்துத் தந்திருக்கின்றார் திரு. ரா. பார்த்தசாரதி.
திருமணம்
வாழ்க்கை துணை நலம் நாடி, திருமண கோலத்துடன் காட்சியளிக்கின்றாய்
திருமணம் என்பது, இருமனங்கள் கொண்ட ஒருமனம் என உணர்வாய்
திருமணத்தில் ஏற்படும் மகிழ்ச்சி, இல்லறத்தில் இன்பமுடன் ஈடுபடுவாய்
இனி எச்செயலையும் இருவரின் தீர்மானத்தில் நடத்திக் காட்டிடுவாய்!
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்திடும் வரமே!
நீ மாண்புறுவதும், பெருமையடைவதும் அவள் வந்த நேரமே!
திருமதி ஒரு வெகுமதி என்று அழைப்பது வழக்கம்
அவள் பெயரை செல்லமாக அழைப்பதே பழக்கம்!
புகைப்படத்திற்காக இன்முகம் காட்டி சிரிக்கின்றீர்கள்
இல்லற வாழ்க்கையில் சிரிப்பு என்பது சில காலமே என உணருங்கள்!
ஒருவர்க்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்வதே சிறந்ததாகும்
இருப்பதைக் கொண்டு மனநிறைவுடன் வாழ்வதே மிக நன்மையாகும்.
காலங்களும், கோலங்களும், உலகில் என்றும் மாறும்
கணவன், மனைவி உறவே என்றும் நிலைத்து வாழும்!!
மலர்போன்று மலர்கின்ற மனம் வேண்டும் நற்பெண்ணே,
மண்வாசனை மாறாத குணம் வேண்டும் மணப்பெண்ணே!
பிறந்த வீட்டின் குலம் காக்க வேண்டும் ,
புகுந்த வீட்டின் நலம் காக்க வேண்டும்
கணவன் என்றாலே, கண்ணைப் போன்றவனாகும்,
அவன் வழியே உலகை காண்பவள் மனைவியாகும்!
அன்பும், அறனும் உடைத்தாயின், இல்வாழ்க்கை
பண்பும், பயனும் அது என்பது வள்ளுவர் வாக்கு.
*****
”மண்ணின் மணத்தோடு நிகழும் மணமிதில் ஒப்பனையும் இல்லை; தப்பெதுவும் இல்லை” என்று நிறைந்த மனத்தோடு மணமக்களை வாழ்த்துகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.
மண்ணின் மணம்…
ஒப்பனை காட்டும் முகங்களில்லை
ஒப்புக் காகச் சிரிக்கவில்லை,
தப்பிலாக் கிராமக் காதலிலே
தழைத்த திந்தத் திருமணமே,
செப்பிட வார்த்தை ஏதுமில்லை
சொந்த மண்ணின் நாணமிது,
இப்படித் தொடங்கிடும் மணவாழ்வில்
இனிதே வாழ்க மணமக்களே…!
*****
”கணவனைக் காணவும் நாணிநிற்கும் இந்நங்கையும் நம்பியும் ஈழமும் தமிழும்போல் நெடிதுநாள் இனிதுவாழ்க!” என்று வாழ்த்துகின்றார் திரு. எஸ். கருணானந்தராஜா.
மணமக்களுக்கு வாழ்த்து
நாணமும் பயிர்ப்பும் கொண்டு
நங்கைதன் முகந் திருப்பிக்
காணவும் கூசுகின்றாள்
கமராவைப் பக்கல் நிற்கும்
ஆணவன் சிரிப்பினூடு
அணைத்திட அவளைத் தன்னோ(டு)
ஏனடி வெட்கமென்று இழுப்பது
இனிய காட்சி.
வாழ்வினிலிணைந்த இந்த
மணமக்கள் நீடு வாழி
தோழமை குலையா தென்றும்
துயர்படா தினிது வாழி
ஊழ்வினையுருத்து வந்து
உயர்வினைத் தடுத்திட்டாலும்
ஈழமும் தமிழும் போலும்
இணைபிரியாது வாழி
தம்பதிகாள்!
அன்புக்கினிய தம்பதியாய்
அறிவும் திருவும் ஒரு சேர
இன்பத்தமிழே மூச்சாக
என்றும் வாழ்க இனிதாக!
*****
”மணமகனே! உனைக்கரம் பிடித்த இப்பெண்மணியே இனி உன் கண்மணி; மலரும் மணமுமாய், உடலும் உயிருமாய், குயிலும் குரலுமாய், அகந்தையை நீக்கி அன்பைத் தேக்கி நீவிர் நீடுவாழ்க!” என மணவாழ்த்துக் கூறுகின்றார் திரு. பழ. செல்வமாணிக்கம்.
உறவின் உன்னதம்:
இரு மனம் இணையும் திருமணம் !
ஊர் கூடி வாழ்த்தும் திருமணம்!
உறவின் பாலம் திருமணம்!
அழகுக் கோலம் திருமணம்!
வெட்கம் கலந்த சிரிப்புடனே மங்கை நல்லாள்!
ஆனந்தம் பொங்கும் முகத்துடனே மாப்பிள்ளை!
அகம் மகிழ்ந்து வாழ்த்துகிறோம்!
இல்லறம் சிறக்க வாழ்த்துகிறோம்!
உன்னைக் கரம் பிடித்தாள் இந்தப் பெண்மணி!
இனி இவள்தான் உந்தன் கண்ணின் மணி!
மலராய் அவள் இருக்க! நறுமணமாய் நீ இரு!
உடலாய் அவள் இருக்க! உயிராய் நீ இரு!
பயிராய் அவள் இருக்க!மழையாய் நீ இரு!
நிலவாய் அவள் இருக்க!வானாய் நீ இரு!
பாட்டாய் அவள் இருக்க! பொருளாய் நீ இரு!
குயிலாய் அவள் இருக்க! குரலாய் நீ இரு!
தெய்வமாய் அவள் இருக்க! கோவிலாய் நீ இரு!
உனக்காக அவள் விட்டது ஏராளம்!
தாய்,தந்தை விட்டு வந்தாள்!
வீட்டை விட்டு வந்தாள்!
தன்னை தொலைத்து விட்டு உன்னோடு
சேர வந்தாள்!
அவளுக்காய் நீயும் விடு:
உன் ஆணவத்தை!
உன் அகந்தையை!
விட்டு விடாதே:
உன் அன்பை!
உன் பண்பை!
உன் பரிவை!
உன் உயிரெனும் மேலான மனைவி எனும்
மங்கை நல்லாளை!!!!
*****
அல்லி விழிதனில் அஞ்சனமிட்டு, கல் வளையல்களும் காற்சிலம்புகளும் கவிபாட, எதிர்காலம் குறித்த எண்ணவோட்டத்தில் இடையிடும் நாணம் தடைபோட, தலைகுனிந்து நிற்கும் தாமரையை நமக்கு அறிமுகப்படுத்துகின்றார் திருமிகு. ஹேமா வினோத்குமார்.
நாணத்தில் நான்!!
அந்நாளிற்காக!!
செம்மண்ணில் கால்பழுக்க
கருவேல முள்குத்தி
அரப்பிலைகளைத் தேடி
அங்கிருந்த கருஞ்சீகயைச் சேர்த்து
ஆசையாய் அரைத்து வைத்தேன்!!
கொட்டைப்பாக்குடன்
சிறுதுளி மோர் சேர்த்து
மருதாணி இலைகளை
மையாய் அரைத்தெடுத்தேன்!!
கல்வளையல்களும்
கண்டாங்கிச் சேலையும்
கள்வா நீ வாங்கி வரக்
காத்திருந்தேன்!!!
உன் முற்றம் எம்மொழி சிறக்க
ஆயிரம் முத்துடைய
காற்சிலம்பைக் கண்டெடுத்தேன்!!
மும்மாதமும் மூன்று நாட்களைப்போல்
உருண்டோடின!!
தைத்திருநாளில்
மேகக்கண்ணி இருள்தனைஅப்பி
சூரியனார் மலைமுகடுகளில்
கம்பீரமாய் எட்டிப்பார்க்க
குளிர்க்குப் பச்சைக்கம்பளம் போர்த்திய
கைத்தமலை நடுவனிலே
பாங்காய்ப் பனையோலைப்பின்னிப்
பக்குவத்தோடு பச்சைமேடையமைத்துப்
பம்பையும் மேளமும்சூழ
பட்டாடை கட்டி
செஞ்சந்தனத் திலகமிட்டு
மகிழம்பூ குங்குமத்தோடு
மிடுக்காய் நீயும்!!
அல்லிவிழிதனில் அஞ்சனமிட்டு
உள்ளங்கை சிவக்கச்
செங்காந்தள் மலர்சூடி
கல்வளையல்களோடும்
காற்சிலம்புகலோடும்
உன் விழிப்பார்வைக்காக
நாணத்தில் நான்!!
நீ கட்டிய மஞ்சக்கொம்போடு
முவ்வேழு வருடங்கழித்து
பல்போன கிழடுகளாய்ப்
பிள்ளைகளோடும்
பேரப்பிள்ளைகளோடும்
கொஞ்சிவிளையாடும் தருணத்தில்
நீ அளிக்கும் கள்ளமுத்தத்தில்
செம்மேனி சிவந்து
நினைக்குமட்டும்
இக்கணமே!!!
நாணத்தில் நான்!!!
*****
மணக்கோலத்தில் மாப்பிள்ளை, பெண்ணைக் கண்ட மகிழ்ச்சியில் தங்கள் மனம்போட்ட கோலத்தைக் காலத்தால் அழியாக் கவிதைகளாக்கித் தந்திருக்கும் கவிவலவர்களுக்கு என் நன்றியும் பாராட்டும்!
இனி, இவ்வாரத்தின் சிறந்த கவிதை…
எளிய திருமணம்
எளிய முறையில் இங்கொரு திருமணம்! – உளக்
களிப்பில் குறைவிலா அழகிய திருமணம்!
பகட்டு என்பது சிறிதும் இல்லை!
திகட்டும் மகிழ்வில் குறைவேதும் இல்லை!
சாரட்டு வண்டியில் பூட்டிய குதிரை
சரிகைப் பட்டு ஏதும் இல்லை! – மலர்த்
தோரணம் ஏதும் தொங்க வில்லை!
காரணம் இல்லாத் துள்ளிசை இல்லை!
அதிர்வேட்டு ஏதும் முழங்க வில்லை!
சதிராட்டம் ஏதும் நடக்க வில்லை!
உணவுப் பொருட்கள் வீணடிப்பு இல்லை!
கனவுலகம் போன்ற அலங்காரம் இல்லை!
பொன் வைரம் சீர்வரிசை யெல்லாம்
கண்ணுக்கு குளிர்ச்சியாய்க் காட்சிப் படுத்தி
வண்டி வண்டியாய்க் கொட்டிக் கொடுத்தும்
வாங்கிட முடியுமா வாழ்வின் நிறைவை?
திருமணம் என்ற பெயராலே அனைவரும்
தேவையற்ற செலவைத் தவிர்த்திடுவோம்!
வாழ்க்கைக்காகப் பணம்தேடி நம்
வாழ்வு தொலைவதை உணர்ந்திடுவோம்!
சிக்கன வாழ்வைக் கடைப்பிடிப்போம்!
சிக்கலற்ற வாழ்க்கை வாழ்ந்திடுவோம்!
பொருள்சார் வாழ்வில் நிறைவைத் தருவது
பொதுவாய்ச் சிக்கனம் என்ற மந்திரமே!
மணவாழ்க்கையின் வெற்றி, பணம் சார்ந்ததில்லை; அது மணமக்கள் மனம் சார்ந்தது! ஆம், செல்வம் என்பது சிந்தையின் நிறைவே!
திருமணம் என்ற பெயரால் மக்கள் செய்யும் தேவையற்ற ஆடம்பரங்களைத் தவிர்த்து, எளிமையாய் மணமுடித்து இனிமையாய் வாழ்வதே உண்மையில் பொருளுள்ள வாழ்க்கை. அவ்வாறு எளிமையாய் மணம்புரிந்து களிப்போடு இல்லறத்தில் இணைந்திருக்கும் மணமக்களின் உயர்வையும், அவ் எளிய திருமணத்தின் ஏற்றத்தையும் சிறப்பாய்ப் பதிவுசெய்திருக்கும் இக்கவிதையின் ஆசிரியர் திரு. ஆ. செந்தில் குமாரை இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் என அறிவித்துப் பாராட்டுகின்றேன்.
சிறந்த கவிதையாகத் தேர்ந்தெடுத்த நடுவர் அவர்கட்கு மிக்க நன்றி. அனைத்துக் கவிஞர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.