Blog

  • கனம் கோர்ட்டார் அவர்களே [ 24]

    இன்னம்பூரான்
    13 06 2016

    சட்டம் இயற்றுவது சட்டசபை; சட்டத்தை நிர்வகிப்பது நிர்வாகம்; சட்டத்தை மேன்மை படுத்துவது நீதிமன்றம். மூன்றும் இணக்கத்துடன் இணைந்து செயல்படுவது, அரசமைப்பு. ஒன்றில்லாமல் ஒன்றில்லை. நடைமுறையில் நுட்பங்களும், சிக்கல்களும், வழுக்களும், துணைமன்றங்களும், அவற்றின் நுட்பங்களும், சிக்கல்களும், வழுக்குகளும் ஊடே அமைந்து, கூட்டுறவாகவோ, ஊடுருவலாகவோ செயல்படுவதால், சில சமயம் திகைத்து நிற்கிறோம். அவரவர் அபிப்ராயங்களை கட்டவிழ்த்து ஜல்லிக்கட்டுகிறோம். இது நிற்க.

    சமன்செய்து சீர்தூக்குங் கோல்போ லமைந்தொருபாற்
    கோடாமை சான்றோர்க் கணி. [திருக்குறள் 118]

    ‘சமன் செய்து சீர்தூக்கும் கோல் போல் -துலாம் போல- அமைந்து ஒரு பால் கோடாமை சான்றோர்க்கு அணி.’ -பரிமேலழகர் உரை: வை.கோவிந்தன் பிரசுரம்.

    அத்தகைய சான்றோர் பணி புரிந்தால், நீதிமன்றங்கள் சட்டத்தை மேன்மைப்படுத்த முடியும். நடுவு நிலையில் நின்று பகர்ந்த தீர்வுகள் வாழ்வியலில் நலம் தரும் நடைமுறைகளை சாத்தியப்படுத்த முடியும். பற்பல படிநிலைகளில் நின்று அளித்தத் தீர்வுகளில் குற்றம் காண்பது, மனித இயல்பு. படிநிலை உயர உயர, விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் போது, தீர்வுகள் மாற்றப்படலாம்; ரத்து செய்யப்படலாம்; மாற்றுக்கருத்துக்கள் தலையெடுக்கலாம்.

    இன்றைய பதிவில் இரு கோர்ட்டார்கள் ஆஜர். தீர்வுகளின் சுருக்கத்தைப் படித்து விட்டு, நமது தீர்வுகளை அவரவர் மனதில் உலவ விடலாம். நீதிபதிகள் மீது அவதூறு செய்யக்கூடாது. ஆனால், பழிச்சொற்களை உதறாமல், தீர்வுகளை நாகரீகமாக அலசலாம். விருப்பம் உள்ளவர்கள் அலசுக.

    I. தடை.:

    ai
    எனக்குத் தெரிந்த நாள் முதல் சபரிமலையில் சபரிக்கு மோக்ஷம் கிடையாது. பெண்ணினம் தள்ளுபடி. சபரிமலை தேவஸ்வம் வாரியம் ஒரு ஆணுலகம். ‘சபரிமலைக் கோயிலுக்குள் நுழைய மாலையிட்டுக் கொண்டு, இருமுடி தாங்கி செல்லும் பக்தர்கள் கடும் விரதங்களையும் கடினபாடுகளையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது… நூற்றாண்டுகளுக்கும் மேலாக இந்தத் தடை பக்தர்கள் மனதில் உட்பொதிந்துள்ளது… கடவுள் ஒரு துறவி, அவரை வழிபடச்செல்லும் பக்தர்கள் ‘சுவாமி’ என்று அழைக்கப்படுகின்றனர்.’ என்ற வாதங்கள் எடுபடவில்லை.

    பெண்களை தடை செய்வதை நீக்க வேண்டும் என்று வழக்குத் தொடர்ந்தவர்கள், சட்ட மாணவர்கள். அவர்கள் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் மிகவும் பிரபலமான பெண்ணிய வழக்கறிஞர்: தாய்க்குலம். அவர் “பெண் பிரம்மச்சாரிகளும் இந்த உலகத்தில் உள்ளனர…அனைத்து ஆசைகளையும் துறந்து வாழ்வது ஆண்களுக்கு மட்டுமே உரியது அல்ல. நமது அரசியல் சாசன சட்டப்பிரிவு 25 அனைத்து மனித இனத்துக்கும் பொதுவான மத ஸ்தலங்களை திறந்து விடுங்கள் என்கிறது. நாங்கள் மனித இனத்தைச் சேர்ந்தவர்களல்லர் என்று கூற வருகிறீர்களா?” என்று காட்டமாக கேள்வி எழுப்பினார்.

    நீதிபதி தீபக் மிஸ்ரா அவர்கள் எழுப்பிய வினாக்கள்:

    ஆன்மிகம் முழுதும் ஆண்களுக்கு மட்டுமே உரித்தானதா? மதம் என்ற புலத்தில் பெண்கள் ஆன்மிக நிலையை அடைய லாயக்கற்றவர்கள் என்று கூறுகிறீர்களா?

    உங்கள் தாயை கோயிலுக்குள் நுழைய தடை விதிப்பீர்களா?

    அவருடைய அறிவுரை: “வழிபாட்டு பண்பாட்டில் ஒரு மையமான குழு இருக்கும். இதில் பிறரை வெளியாட்கள் என்று தடை உத்தரவுகளைப் பிறப்பிக்கும். ஆனால் மதம் என்பது முழுமைத்துவத்தை வலியுறுத்துவது, அதுதான் சனாதன தர்மம், பால், சாதி, இன வேறுபாடின்றி அனைவரையும் உள்ளடக்கியதே சனாதன தர்மம்”.

    நீதிபதி மிஸ்ரா, “அரசியல் சாசனத்தில் வலியுறுத்தப்படும் அடிப்படை உரிமையான சமத்துவம் என்பதை மீறி இந்த தடை மரபு நீடித்து நிலைக்கப் போகிறதா? வேதங்களிலும், உபநிடதங்களிலும் பெண்/ஆண் பாகுபாடு இல்லையெனும் போது, வரலாற்றில் எந்த காலக்கட்டத்தில் இந்தப் பாகுபாடு தொடங்கியது என்று கூறுங்கள்” என்று வலியுறுத்தினார்.

    உத்தரவு 1: தடைக்கு ஆதரவான ஆயிரமாண்டு கால நிரூபணத்தை ஆறு வாரங்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

    உத்தரவு 2: இந்த வழக்கிற்கு சட்ட, அரசியல் சாசன மற்றும் ஆன்மீக தளங்களில் ஆழமான ஆய்வு தேவைப்படுகிறது என்பதால் மூத்த வழக்கறிஞர் ராஜு ராமச்சந்திரன் என்பவரை நீதிமன்ற நடுநிலை அறிவுரையாளராக நியமனம் செய்கிறேன்.

    யான் கூற விழைவது: இப்போது பம்பா நதியின் நட்டாற்றில் நிற்கிறோம்.
    கேள்விக்கு என்ன பதில்?
    -#-

    II. உடை:

    அடுத்து வருவது:

    ai1
    ராமநாதபுரம் மாவட்டம், உத்தர கோசமங்கையில் 3,300 ஆண்டுகள் பழமையான மங்களநாத சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் மூலவர் மரகத நடராஜர் ஆண்டு முழுவதும் சந்தனக் காப்புடன் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். ஆருத்ரா தரிசனம் அன்று மட்டும் மரகத நடராஜர் சந்தனக் காப்பு இல்லாமல் காட்சியளிப்பார்.

    வழக்கறிஞர்கள் இல்லாமல் வழக்கா? ராமநாதபுரம் வழக்கறிஞர் முருகன் அவர்களுக்கு ஒரு வேட்கை [இன்னம்பூர் ஶ்ரீநிவாசர் கட்டாரி அணிந்துள்ளாரா? என்று தூக்கம் தொலைத்த சம்பத்துப் போல!]: இந்த நடராஜர் சிலை உண்மையில் மரகதத்தால் செய்யப்பட்டதா? இல்லையா? என்று அவர் தூக்கத்தைத் தொலைத்தது மட்டுமல்லாமல், [கண்ணகி சிலம்பை உடைத்தது போல]சிலையை உடைத்து மரகதமா இல்லையா? என்பதை ஆய்வு செய்ய அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும், வழக்குத் தொடர்ந்தார்.

    இதை விசாரித்து நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், என்.கிருபாகரன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:

    “அனைத்து மத நம்பிக்கைக ளையும் அறிவியலை பயன்படுத்தி ஆராய்ந்து கொண்டிருக்க முடி யாது. சில நம்பிக்கைகளை நம்பிக்கையாகவே இருக்க விடுவது நல்லது. மனுதாரர் மரகத நடராஜர் சிலை உண்மையில் மரகத்தால் செய்யப்பட்டது என நம்பினால் நம்பலாம். அவருக்கு அந்த நம்பிக்கை இல்லாவிட்டால், அவர் கோயிலுக்கு செல்வதை நிறுத்திக்கொள்வது நல்லது.

    மனுதாரர் மரகத நடராஜர் சிலையை உடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த மனுவை தாக்கல் செய்திருப்பதாக நாங்கள் கருதுகிறோம். ஏனெனில் ஒரு சிலையை உடைக்காமல் அந்த சிலை குறித்து ஆய்வு செய்ய முடியாது. அப்படி சிலை உடைக்கப்பட்டால் அந்த சிலை வழிபாட்டுக்கு தகுதியற்றதாகி விடும். மனுதாரர் இப்படிப்பட்ட தவறான உள்நோக்கத்துடன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

    உத்தரகோசமங்கை கோயி லுக்கு கோடிக்கணக்கான பக் தர்கள் வருகின்றனர். அவர்களின் நம்பிக்கையை கெடுக்கும் செயல்களை செய்வது சரியல்ல. மரகத நடராஜர் ஆண்டுதோறும் சந்தனக் காப்பில் இருப்பதை பெரிய பிரச்சினையாக்கி, அதை சரிசெய்ய சிலையை ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறுவதை ஏற்க முடியாது.

    இந்த மனுவை ரூ.1 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும். ஆனால், சுய கட்டுப்பாடு காரணமாக மனுதார ருக்கு அபராதம் விதிக்காமல் விட்டுவிடுகிறோம். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது “

    இனி உங்கள் பாடு, மரகத நடராஜர் பாடு, முருகன் பாடு. அவர் உச்சநீதி மன்றத்துக்கு விண்ணப்பம் செய்வாரானால், அவருக்கு நீங்கள் பரிந்துரை செய்யும் வாதங்கள் யாவை?

    என் தம்பிடி கருத்து: கனம் கோர்ட்டார் அபராதம் சிறிதளவாவது விதித்திருக்கவேண்டும்.
    -#-
    உசாத்துணை, இரவல் நன்றி, காப்புரிமை நன்றி: தி இந்து: 12 02 2016

    சித்திரங்களுக்கு நன்றி:
    http://ammandharsanam.com/magazine/April2013unicode/images/10-Sabari.jpg
    http://www.narthaki.com/info/articles/images/art3286.jpg

    இன்னம்பூரான்

    http://innamburan.blogspot.co.uk

    http://innamburan.blogspot.de/view/magazine

    www.olitamizh.com

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 54

    டாஹாவ் நாஸி சித்ரவதை முகாம் அருங்காட்சியகம், பாயார்ன், ஜெர்மனி

    முனைவர்.சுபாஷிணி

    1933ம் ஆண்டு மார்ச் மாதம் 22ம் தேதி அடோல்ப் ஹிட்லர் ஒன்றிணைக்கப்பட்ட ஜெர்மனியின் சான்சலராக நியமனம் செய்யப்பட்டார். இந்த நிகழ்வின் தொடர்ச்சியாக அரசியல் எதிரிகளைச் சிறைவைப்பதற்கென்றே பிரத்தியேகமாக ஒரு சித்ரவதைமுகாம் ஜெர்மனியின் தெற்குப் பகுதி மானிலமான பாயார்னில் டாஹாவ் என்ற கிராமப்பகுதியில் உருவாக்கப்பட்டது. இந்தச் சிறை அடுத்தடுத்து விரிவாக்கப்பட்ட ஜெர்மானிய ஆட்சிக்குட்பட்ட இடங்களில் அமைக்கப்பட்ட ஏனைய சிறைகளுக்கு ஒரு மாடலாக வன்முறைகளின் பள்ளிக்கூடமாக அமைந்தது. 12 ஆண்டுகள் இந்தச் சித்ரவதைமுகாம் பயன்பாட்டில் இருந்தது. இந்த 12 ஆண்டுகள் ஐரோப்பா முழுமையும் நாஸி ஆட்சியை எதிர்த்த அரசியல் கைதிகளை அடைத்து வைத்து சித்ரவதை செய்யும் கூடமாக இது திகழ்ந்தது. இந்த 12 ஆண்டு காலகட்டத்தில் இச்சித்ரவதை முகாமில் 200,000 சிறைக்கைதிகள் அடைக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 41,500 பேர் நாஸீ அதிகாரிகளால் வதைத்து துன்புறுத்தி கொல்லப்பட்டனர். அமெரிக்கப் படையினர் நாஸி ஜெர்மனியைத் தாக்கி ஹிட்லர் கொல்லப்படுவதற்கு ஒரு நாளைக்கு முன் அதாவது, 1945ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25ம் தேதி இச்சித்ரவதை முகாமில் அடைக்கப்பட்டோர் அமெரிக்கப் படையினரின் உதவியால் சுதந்திரக் காற்றை சுவாசித்தனர்.

    as
    ​

    இன்று காலம் எவ்வளவோ மாறிவிட்டது. இன்றைய ஜெர்மனியை அன்றைய ஜெர்மனியோடு ஒப்பிட முடியாது. மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசத்தை காண்கின்றோம். அன்று இருந்த ஆரிய சமுதாயம் என்ற இனவெறி, ஈடுபாடு இன்று இல்லை. அன்றைய ஆவணப் படங்களையும் அக்கால நிகழ்வை ஒட்டி எடுக்கப்படுகின்ற சினிமா படங்களையும் பார்க்கும் போது ஜெர்மனியில் இப்படியும் கூட நடந்திருக்குமா என்ற அய்யத்தை உருவாக்குவதை மறைக்க முடியவில்லை.

    அன்றைய நாஸி கொடுமைகளைப் பற்றி பேசி தன்னைத்தானே சுய பரிசோதனை செய்துகொள்ளும் தைரியசாலிகள் தான் இன்றைய ஜெர்மானியர்கள். தன் இனம் வேற்று இனத்திற்குச் செய்த தவற்றை தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் திறந்த மனத்துடன் பேச இம்மக்கள் தயங்குவதில்லை. நாஸி போதனைகளால் மயங்கிக் கிடந்த மனிதர்களில் எஞ்சியிருப்பவர்களைத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வரலாற்றில் முக்கிய நாட்களில் நடைபெறும் சில விவாத நிகழ்வுகளில் பார்க்கக்கூடிய வாய்ப்பு அமைகின்றது. அவர்களது அக்காலத்தைய மன நிலை, அவர்களை எவ்வாறு அவர் தம் குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டனர், ஏற்றுக்கொள்கின்றனர் என்பதை குடும்பத்தாரையெல்லாம் அழைத்து வந்து வைத்துக் கொண்டு அலசும் தைரியமும் மனத்திடமும் பாராட்டுதலுக்குறியது.

    எந்த இனம் அல்லது எந்த மனிதர் தன் தவற்றை தானே பார்த்து அலசி ஆராய்ந்து .. “ஆம் நான் இதனைச் செய்தேன். இது தவறு. அதற்கான விளைவுகளுக்கு நான் பொறுப்பேற்கின்றேன்” என நினைக்கின்றாரோ அவர் தன்னைப் புடம் போட்டுக் கொண்டு மேன்மையடையமுடியும். அவ்வினம் தன்னை திருத்திக் கொண்டு பரந்த நோக்கத்தைப் பெற முடியும். ஆனால் அதற்கு எதிர்மாராக “நான் செய்ததெல்லாம், செய்வதெல்லாம், செய்யப்போவதெல்லாம் நன்மை உண்மை” என்று வாதாடும் நபர்களும் சமூகமும் தன்னிலையை மேம்படுத்திக் கொள்ள இயலாது என்பது தான் சமூகவியல் உண்மை.அந்த வகையில் இக்கால ஜெர்மானிய சமூகம் நாஸி காலகட்டத்திலிருந்து பல பாடங்களைக் கற்று புடம்போட்டு செம்மை படுத்தப்பட்ட சமூகமாகத் திகழ்கின்றது. அதன் விளைவாக இன்றைய ஜெர்மனியில் இன்றைய வெளியுறவுக் கொள்கை என்பது மனிதாபிமானம் மிக்க ஒரு கொள்கையாக உலக நாடுகள் அங்கீகரிக்கின்ற ஒரு முத்திரையைப் பெற்றிருக்கின்றது.

    டாஹாவ் கிராமத்தில் இருக்கும் நினைவுச் சின்னப் பகுதி 1965 ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த சித்ரவதை முகாமை உருவாக்குவதில் வரலாற்று ஆய்வாளர்கள் மட்டும் பங்கெடுத்துக் கொள்ளவில்லை. இங்கு கைதிகளாக அடைக்கப்பட்டிருந்தோர் பலர் இணைந்து இந்த நினைவகத்தை முழுமையாக்கியிருக்கின்றனர்.

    ​as1
    டிக்கட் பெற்றுக் கொண்டு சித்ரவதை முகாம் நோக்கி செல்லும் பாதை

    டாஹாவ், பவேரியா மானிலத்தின் தலைநகரமான மூனீக் செல்வதற்கு முன்னராக இருக்கின்றது. இப்பகுதிக்குச் செல்லும் சாலையில் இச்சித்ரவதைமுகாம் பற்றிய தகவல் சாலைகளில் ஆங்காங்கே காணக்கூடியதாக இருப்பதால் இந்த இடத்தைச் சென்று சேர்வதில் எவ்வகைச் சிரமமும் இருக்காது. நான் வாகனத்தில் சென்றதால் நேரடியாக முகாமின் முன் வாசல் பகுதி வரை சென்று கார் நிறுத்தும் இடத்தில் நிறுத்தி விட்டு உள்ளே சென்றேன்.

    ​வழிகாட்டிப் பலகைas2

    இங்கே பெரியவர்கள் ஒவ்வொருவருக்கும் 8 யூரோ கட்டணம் வசூலிக்கப்படுகின்றது. மாணவர்களுக்கும் வயதானவர்களுக்கும் சலுகை உண்டு. மலேசியாலிருந்து என்னைச் சந்திக்க வந்திருந்த என் தோழி சரஸ்வதியையும் என் உறவினர் திலகேஸ்வரியையும் என்னுடன் அன்று அழைத்துச் சென்றிருந்தேன்.

    இச்சித்ரவதை முகாம் நினைவகத்தை அமைக்க பவேரிய மானிலம் பொருளாதார உதவியை வழங்கியுள்ளது. முகாம் இருக்கும் பகுதியில் ஓரிடத்தில் 2003ம் ஆண்டு வாக்கில் கண்காட்சி கூடம் ஒன்று நிர்மாணித்து முடிக்கப்பட்டது. இது, வதை முகாமில் இருந்த ஐரோப்பாவின் பல நாட்டு கைதிகள் பற்றிய தகவல்களைச் சொல்வதாகவும், அந்த நாடுகளில் அவர்களது அரசியல் நடவடிக்கைகளைப் பற்றி விவரிக்கும் தகவல் களஞ்சியமாகவும் இருக்கின்றது. இங்கே ஒரு தனி அறையில் தொடர்ச்சியாக குறும்படங்கள் குறிப்பிட்ட சில மொழிகளில் திரையிடப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டும் வருகின்றது.

    as3

    ​அன்று, அரசியல் கைதிகள் ரயிலில் அழைத்து வரப்படுகின்றனர்

    as4

    ​இன்று, அதே பகுதி

    டாஹாவ் சித்ரவதைமுகாம் சாலையை ஒட்டியே அமைந்துள்ளது. வெளியிலிருந்து பார்க்கும் போது இன்னாளைய சிறையை ஒத்த ஒரு அமைப்பு. அதனைத் தொடர்ந்து உள்ளே செல்லும் போது சிறிய கண்ணாடி கூடம் ஒன்று அமைந்துள்ளது. இங்கே தான் கட்டணம் கட்டி டிக்கட்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இங்கே நினைவுச் சின்னங்கள் விற்கும் கடை, உணவு அங்காடி ஆகிய பகுதிகள் இருக்கின்றன. வெளியே வந்ததும் அங்கே அம்பு குறியிடப்பட்ட பாதை வழிகாட்டியைப் பார்த்துக் கொண்டே ஒவ்வொரு பகுதியாக பார்த்து முடிக்கலாம். நாங்கள் டிக்கட்டை பெற்றுக் கொண்டு அம்புக்குறியிட்ட பாதையில் சித்ரவதை முகாமை நோக்கி நடக்கலானோம். முகப்புப் பகுதியிலிருந்து ஏறக்குறைய 150மீ தூரம் இந்த முகாம் உள்ளது. நடந்து வரும்போது நமக்கு வலது புரத்தில் இச்சித்ரவதை முகாம் இருக்கின்றது. இடது பக்கத்தில் ரயில் பாதை தண்டவாளம் இருக்கின்றது. இப்போது இங்கே ரயில் பயணச் சேவை நடப்பில் இல்லை. ஆனால் அன்று இருந்திருக்கின்றது. இந்த ரயிலில் தான் சிறைப்பிடிக்கப்பட்ட அரசியல் கைதிகளை முகாமிற்கு அழைத்து வருவார்கள். அங்கே நின்று அவர்கள் மன நிலையை சற்றே யோசித்துப் பார்க்கும் போது அச்சம், வேதனை, கோபம், ஆகியவற்றின் பிரதிபலிப்பின் உணர்வு அலைகள் நம்மையும் சூழ்வதை நம்மால் தடுக்க முடியாது.

    as5

    ​சித்ரவதை முகாம், முன் வாசலில்

    சரி, வலது புரம் திரும்பி சித்ரவதை முகாமிற்குள் செல்வோம். தொடர்ந்து வாருங்கள்!

    Share
  • இலக்கியச் சித்திரம் – இனிய பிள்ளைத்தமிழ்-12

    மீனாட்சி பாலகணேஷ்

    தேவாதிபர்சூழ் தென்னளகைத்திரு!

    தென்னளகை நகர்! எங்குள்ளது இது? இதுவே தென்தஞ்சாவூர் எனப்படும் லால்குடி. இதன் அழகான தமிழ்ப்பெயர் திருத்தவத்துறை என்பதாகும். இங்கு உறைபவள் பெருந்திருப்பிராட்டி அன்னை. வடமொழியில் ஸ்ரீமதி எனக்கூறுவர். உமையவளின் இன்னொரு வடிவமே இவள். அண்ணல் சிவபிரான் இங்கு சப்தரிஷீசுவரர் என அறியப்படுவார். இத்தலத்தில் அத்திரி, பிருகு, புலஸ்தியர், வசிஷ்டர், ஆங்கீரஸர், மரீசி ஆகிய ஏழு ரிஷிகள் தவம் செய்ததால் ஈசனுக்கு சப்தரிஷீஸ்வரர் எனப்பெயர்.

    நமது தமிழ்த்தாத்தா உ. வே. சா.வின் ஆசிரியரான திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றியுள்ள சந்தநயமும் தமிழ்நயமும் நிறைந்த பல பிள்ளைத்தமிழ் நூல்களுள் ஒன்று இத்திருத்தவத்துறையில் உறையும் பெருந்திருப்பிராட்டியார் மீதான பிள்ளைத்தமிழ்.

    *****

    ஏழெட்டு மாதங்கள் நிரம்பிய அழகிய பெண்குழந்தை; குறுநகை அரும்பித்தவழும் சிவந்த கனிவாய்; பச்சைமரகத மேனி; பரிவுடன் துலங்கும் இரு கருவிழிகள்; இளம் பிஞ்சுமகள்; பார்க்கும் தாய்க்குப் பெருமிதத்தில் நெஞ்சு விம்முகிறது. பக்கத்தில் தாதியரும் செவிலியும் நின்று, “கைவீசம்மா கைவீசு,” எனவும், “முத்தம் கொடடி கண்ணே,” எனவும் வேண்டுகின்றனர். “மாத்தேன் போ,” எனப் பொய்யாக மறுத்து, தன் சிவந்த கைகளைக் கொட்டி மகிழ்கிறாள் இந்தப் பச்சிளம்குழவி. பின் தனது குமுதவாயின் தேன்போலும் எச்சில் ஒழுக, அழுத்தமாக ஒரு முத்தத்தினை அன்னையின் கன்னத்தில் பதிக்கிறாள். பார்ப்போர் உள்ளமெலாம் பரவசத்திலாழ்ந்து அவளை, அக்குழந்தையைப் பராசக்தியின், பார்வதியின் வடிவமாகவே கண்டு களிக்கின்றனர். சிந்தையெலாம் களிகூர, தமது கற்பனைகளைத் திரட்டிக் காட்சிகளை மனக்கண்ணில் எழுப்புகின்றனர்.

    குழந்தையை அன்னை பராசக்தி எனத் தெளிந்து, அன்னையைக் குழந்தையாக்கி, அக்குழந்தையைக் குமரியாய், நீலகண்டனின் இல்லக்கிழத்தியாய், அகிலமெலாம் ஈன்ற பேரருள் வடிவாய்க் கண்டு களிகூரும் புலவர் வாக்கினில் சொற்சித்திரமாக வரையப்பட்ட ஒரு அற்புதக்காட்சி இது!


    சிவபெருமான்- எல்லா உலகுகளுக்கும் அவற்றிலுள்ள உயிர்களுக்கும் தலைவன்; அவனுடைமை அனைத்துமே வெண்மை நிறங்கொண்டது. வெண்மை நிறம் தெளிவு, மனவுறுதி ஆகிய தன்மைகளை விளக்குவது. ஈசன் வெள்ளிப்பனி படர்ந்த சிகரங்களைக் கொண்ட இமயத்தில் உறைபவன்; வெள்ளை நிறங்கொண்ட எருது அவனுடைய வாகனமாம்; இரண்டாயிரம் வெள்ளைக் கொம்புகளையுடைய வெள்ளைக்களிறு அவனுடையது; அதற்கு அயிராவணம் எனப்பெயர். இது இந்திரனுடைய அயிராவதத்தினின்றும் வேறுபட்டது. வெண்மையான பிறைச்சந்திரன் அவன் சடையில் ஒளிர்கிறான்; வெண்மையான ஒரு காளையைச் சின்னமாகக்கொண்ட வெண்மையான கொடியையுடையவன். வெண்மையான முத்துக்களை வாரியிறைக்கும் வெண்புனலான கங்கை அவன் சடையிலிருந்து பொங்குகின்றது; வெண்ணீற்றினை உடலெங்கும் பூசியவன்; வெண்சங்கினாலான இருகுழைகளைக் காதிலணிந்தவன். அதற்குப் பொருத்தமான வெள்ளிய சங்குமணி இவற்றாலான வடங்களைக் கழுத்திலணிந்தவன். வெள்ளைவெளேரென்ற தும்பைமலர்களாலான மாலையினை அணிந்துள்ளான். வண்டுகளின் ஆரவாரத்தினால் அதிலிருந்து மிகுதியாகத் தேன் துளிகள் திவலைகளாகப் பரந்தெழுகின்றன. இவ்வாறெல்லாம் பெருமைவாய்ந்த பிரான் ஒருசெயல் செய்கிறான்; அதுவே பெருந்திரு எனும் இம்மகளின் செவ்விதழ்களில் வெள்ளிய ஒரு புன்னகையை அரும்புவிக்கிறது.

    என்ன செய்தான் பிரான்? அவளுடைய அழிவற்ற செல்வம் நிலைபெற்ற தூய அடிகளில் தனது முடிவணங்கிப் பணிந்தானாம்- உமைக்கும் சிவனுக்கும் சிறுபிணக்கு- அதன் தொடர்பாக சிறு ஊடல்- ஊடலைத் தணிவிக்க ஐயன் அவளுடைய தாமரைத்திருவடிகளில் தன் சிரம்பதித்து வணங்கி நிற்கிறான் என்கிறார் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள்.
    இதன்காரணமாகவே அவளுடைய செவ்விதழ்களிலும் வெற்றிப்பெருமிதம் பொங்கும் வெள்ளிய இளமுறுவல் தவழ்கின்றதாம். அந்தக்காட்சியைக் கற்பனையில் கண்டு, “முறுவல்கொண்ட செவ்விதழ்களால் எமக்கு ஒரு முத்தம் தா கண்ணே! தேவரும் மூவரும் சூழ்ந்து நின்றுபணியும் தென்னளகை எனப்படும் தென்தஞ்சையின் திருவே- பெருந்திருவே (ஸ்ரீமதித்தாயே) எமக்கு ஒரு முத்தம்தா குழந்தாய்!” என வேண்டுகின்றனராம்.

    இப்பாடலில் ‘வெண்மை’ எனும் சொல்லாட்சியைக் கண்டு பிள்ளையவர்களின் கவித்திறத்தினை உணர்ந்து வியக்கலாம். அன்னையின் இதழ்களில் அரும்பும் நகையும்- முறுவலும்- ஐயனுடைய வெண்மைப் பொருட்களுக்கேற்ற வெண்ணகை என்பது பாராட்டத்தக்கது. வெள்ளைப்புன்னகை என்பது மனதில் களங்கமற்றதும் இதயத்தின் ஆழத்திலிருந்து வருவதுமாகும். இத்தகைய சொற்சிலம்பம் செய்யும் புலவோர்களை வித்தாரகவி என்பது வழக்கு. பிள்ளையவர்களின் தமிழ்ப்புலமையை நாம் உணர்ந்து ரசித்து மகிழ இந்நூல் வாய்ப்பளிக்கின்றது.

    வெள்ளிப் பொருப்பும் வெள்விடையும்
    வெள்ளை யிரண்டா யிரமருப்பு
    வெள்ளைக் களிறும் வெண்பிறையும்
    வெள்ளே றுயர்த்த வெண்கொடியுந்
    தள்ளித் தரளங் கொழித்துமறி
    தருவெண் புனலும் வெண்ணீறுஞ்
    சங்கிற் புரிந்த வெண்குழையுந்
    தகுவெண் மனவு மணிவடமுந்
    துள்ளிச் சுவைத்தே னுவட்டெடுக்குந்
    தும்பைப் புதுவெண் மலர்த்தொடையுந்
    தொலையா வுடைமை யாப்படைந்த
    தூயவடிகண் முடிவணங்கத்
    தெள்ளிச் சிறுவெண் ணகையரும்புஞ்
    செவ்வாய் முத்தந் தருகவே
    தேவா திபர்சூழ் தென்னளகைத்
    திருவே முத்தந்தருகவே.

    (திருத்தவத்துறைப் பெருந்திருப்பிராட்டியார் பிள்ளைத்தமிழ்-
    மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை)

    *****

    இக்குழந்தை, பெருந்திருப்பிராட்டி, அன்னையாக இருந்து தன்குழந்தையாகிய முருகனின் வாய்முத்தத்தினை நித்தம் பெற்று மகிழ்கிறாள்.

    இப்பாடல் முருகனின் வீரத்தினையும் மங்கையர் மயங்கும் அவனது பேரழகினையும் புயவலிமையையும் போற்றுகிறது.

    9a948df7-85ee-4b38-a628-7bd5c52537e7
    மாயவித்தை செய்யும் (இந்த்ரஜாலம் உருட்டி வரும்) அசுரர்களின் சேனை சமுத்திரமெனப் பொங்கிவருகின்றது. குமரப்பெருமானின் படையின் ஒன்பதின்மரான நவவீரர்கள் கூர்வேலினைக் கையிலெடுத்துச் சினம்பொங்க எழுச்சிபெற்று அந்தச் சேனாசமுத்திரத்தினுள் நுழைந்து வெட்டிச்சிதைத்த உடல்களின் மாமிசம் நாறுகின்றது (ஊன் நாறு). வானளாவ இந்த நாற்றம் பரவிடும்படி பச்சை மாமிசத்தினைச் சுவைத்து, அதன் கொழுப்பெனும் நெய்யொழுகக் குடலையுருவி ஈரலை வாயிலிட்டுக் குருதியைக் குடிக்குமாறு கொடியவில்லினை வளைத்துப் பல கணைகளை விடுத்து, அவர்களை இவ்வாறு வதைத்து, அமரர் எனப்படும் தேவர்கள் வாழும் நகரினைப் புதுப்பித்து நிற்கிறது குமரனின் வீரச்சேனை.

    இப்படிப்பட்ட வீரத்தைக் கொண்ட படையினைச் செலுத்தும் குமரனின் புயவலிமையைக் கண்டு மயங்காதவர்கள் யார்? அதுவும் அவன் அழகன்; இளைஞன். வீரனான அவனைக் காதலுடனும் வியப்புடனும் கண்கள் விரிய நோக்குகின்றனர் அரமங்கையர். அவர்கள் வாசமிக்கதும் தேன்சொரிவதுமான மலர்களைத் தம்கூந்தலில் சூடியுள்ளனர் (தேன்நாறு கூந்தல் அரமங்கையர்கள்). அவன் வளைத்த வில்லிற்கு ஈடாகத் தம் புருவமாகிய வில்லினை வளைத்துக் கண்அம்புகளை அவனுடைய திரண்ட புயத்தை நோக்கி எய்கின்றனர் (ஒளிர் கண் அம்பு திரள் புயத்தெய்ய). அந்த வீரத்திருமகன், செவ்வேள் எனப்படும் முருகப்பெருமான் கலாபமயில் மீதேறி வருகின்றவன். அவன் குழந்தையாக அன்னைமடியில் தவழ்ந்தபோது பால்மணம் (பால் நாறு) வீசும் அவனுடைய திருவாயின் முத்தத்தினை நீ பெற்றனையல்லவா? அந்த உனது செம்பவளவாயின் முத்தத்தினை நீ எமக்களித்தருளுவாயாக. தாமரைமலரில் உறையும் பிரமதேவன் போற்றும் மங்கலமான மகளே உனது பவளவாயின் முத்தத்தினை அருளுவாயாக.

    இவ்வாறு மகனைப்போற்றி, அன்னையைக் களிப்படையச் செய்து அவளது வாய்முத்தத்தினை யாசித்து நிற்கின்றனர் மற்ற தாதியரும் செவிலித்தாயும்! மிக வித்தியாசமான கற்பனை. வன்சிலை வளைத்துக் கணைகளைப் பகைவர் மேல்விடுவதுபோல் விற்புருவம் வளைத்துக் கண்ணாகிய கணைகளை முருகனின் தோள்மீது மங்கையர் விடுவதாகச் சொற்சிலம்பம் செய்து பாடி வைத்துள்ள நயம் சிந்தைக்கு விருந்தாகும்.

    ஊனாறு நுதிவைப் படைக்கைநவ
    வீரரொ டுருத்தெழுந் திந்த்ரஞால
    முருட்டிவரு சூர்முதற் சேனா
    சமுத்திரத் துழைநுழைந் துடல்பிளந்து,
    வானாறு பைந்தடி சுவைத்துநெய்
    யொழுகீருள் வாய்ப்பெய்து குருதிமாந்த
    வன்சிலை குனித்தடுங் கணைபல
    பணித்தமரர் வாழுநக ரம்புதுக்கித்
    தேனாறு கூந்தலர மங்கையர்கள்
    புருவமென் சிலைகுனித் தொளிர்கணம்பு
    திரள்புயத் தெய்யக் கலாபமயின்
    மீதுவரு செவ்வே ளெனுங்குழவிதன்,
    பானாறு மழலைவாய் முத்தங்கொ
    ணினதுசெம் பவளவாய் முத்தமருளே
    பங்கயத் திறைபரசு மங்கலர்க்
    கொருபுதல்வி பவளவாய் முத்தமருளே.
    (உருத்தெழுந்த- சினமுறத் தோன்றிய; உழை- இடம்; ஈருள்- ஈரல்;)
    (திருத்தவத்துறைப் பெருந்திருப்பிராட்டியார் பிள்ளைத்தமிழ்-
    மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை)

    திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை இன்னும்பல பிள்ளைத்தமிழ் நூல்களை இயற்றியுள்ளார். இன்னும் வரும் அத்தியாயங்களில் அவற்றின் சில பாடல்களின் நயத்தைக் கண்டு மகிழலாம்.

    மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
    {முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
    கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
    நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
    தமிழ்த்துறைத் தலைவர்.}

    ********************************

    Share
  • உன்னையறிந்தால் ….. (42)

    நிர்மலா ராகவன்

    வளர்ப்பு முறையில் வித்தியாசம்

    உனையறிந்தால்

    கேள்வி: இரு தலைமுறைகளுக்குமுன் சிறு குழந்தைகளுக்கு மூத்தவர்கள் விளையாட்டு காட்டி வளர்த்தார்கள். இப்போது வளர்க்கும் முறைதான் குழந்தைகள் வளர்வதில் வித்தியாசத்தை உண்டுபண்ணுகிறதா?

    விளக்கம்: ஒரு சிறு குழந்தைக்கு ஆகாரம் தூக்கத்திற்கு அடுத்தபடியாக பாதுகாப்பு தேவைப்படுகிறது. தானும் ஒரு உயிர் என்று பிறர் புரியவைத்தல் குழந்தைக்கு பாதுகாப்பும், களிப்பும் ஒருங்கே ஊட்டக்கூடியது.

    `குழந்தைக்குத்தான் பேசத் தெரியாதே!’ என்று மௌனமாகவே அதன் தேவைகளைப் பூர்த்தி செய்யாது, அதனுடைய கண்ணைப் பார்த்துப் பேசுதல் நல்லது. ஏதாவது கதைதான் பேசவேண்டும் என்பதல்ல. வாயால் விதவிதமான ஒலிகள் எழுப்பினால்கூடப் போதும். நம் முகத்தில் இருக்கும் அன்பும் சிரிப்பும் குழந்தையையும் தொத்திக்கொள்ளும்.

    மாறாக, அழவைப்பதையும், அச்சத்தை விளைவிப்பதையும் தவிர்க்க வேண்டும். நமக்கு வேடிக்கையாக இருப்பது மற்றவருக்கு ஒவ்வாததாக இருந்தால், அதில் என்ன வேடிக்கை? அன்பாக இருப்பவர்களுக்கு மட்டுமே இது புரிகிறது. பிறருக்கோ, குழந்தை ஒரு விளையாட்டுப் பொருள். அவ்வளவுதான்.

    குழந்தையை மகிழ்விப்பது எளிது. ஏனோ இது பலருக்கும் புரிவதில்லை. `உன் மகிழ்ச்சியில் எனக்கும் பங்குண்டு!’ என்பதுபோல், “என்ன பண்றே? சமத்தா தூங்கினியா?” என்றால்கூடச் சிரிக்கும்.

    இரண்டு நாய்கள் ஒன்றையொன்று துரத்துவதைப் பார்த்தால், நமக்கே பயமாக இருக்கும். ஆனால், அதை மறைத்து, `ஒண்ணுமில்லே. ஓடிப் பிடிச்சு விளையாடறது!’ என்று சொன்னால், பயமின்றி, பெரிய சிரிப்புடன் குழந்தை அந்த `விளையாட்டை’ ரசிக்கும்.

    இதுதான் அளவுகோல். குழந்தை சிரித்தால் நாம் செய்வது அதற்குப் பிடித்திருக்கிறது என்று அர்த்தம்.

    பிறந்ததிலிருந்தே குழந்தையின் பெயரை நீட்டி முழக்கி அழைத்தால், அடுத்தமுறை, தன்னைத்தான் விளிக்கிறார்கள் என்று புரிந்து, பொக்கைவாயைத் திறந்து சிரிக்கும். இதற்காக தனியாக நேரம் ஒதுக்க வேண்டுவதில்லை. நீங்கள் சமையலறையில் வேலையாக இருக்கும்போதோ, அல்லது கணினி வேலையைப் பார்க்கும்போதோ குழந்தையை அருகிலேயே படுக்க வைத்து, அவ்வப்போது அதன் பெயரைக் கூப்பிட்டுப் பாருங்கள். உற்சாகமாகக் காலை உதைக்கும். தன்னுடன் யாரோ உறவாடுகிறார்கள் என்ற உணர்வில் தனிமையாக உணராது. (இம்மாதிரி வளர்க்கப்பட்ட குழந்தைக்கு, சில வருடங்களுக்குப்பின், பள்ளி ஆசிரியைக்கே கற்றுக்கொடுக்கும் அளவுக்கு கணினி அறிவு வளர்ந்திருப்பதை என் அனுபவத்தில் கண்டிருக்கிறேன்).

    கதை: என் மகன், சசி, உட்கார ஆரம்பித்ததும், நான் சமைக்கும்போது அவனுக்கு ஒரு பெரிய எவர்சில்வர் பாத்திரத்தைக் கொடுத்துவிடுவேன். தரையில் மோதி, அது எழுப்பும் ஒலிதான் அவனுக்கு விளையாட்டு, மகிழ்ச்சி. அம்மா கண்ணெதிரிலேயே இருக்கிறாள் என்ற நிறைவும் பாதுகாப்பாக உணரச் செய்திருந்தது.

    நான்கு வயதில் அவன் நீரில் மூழ்கி இறந்ததும், அப்போது எங்களை வீட்டுக்கு வருகை புரிந்திருந்த என் தாயார், `இவ்வளவு பெரிய பாத்திரம் எப்படி நசுங்கியது?!’ என்று நம்பமுடியாது கேட்டபோது, நானும், மகளும் சேர்ந்து புன்னகைத்தோம், ஒரு சந்தோஷகரமான நினைவில். `அது சசியோட விளையாட்டுச் சாமான்!’ என்றேன். ஓருயிர் மகிழ்ச்சியாக இருக்க முடியுமென்றால், உயிரற்ற பொருட்கள் என்னவானால் என்ன!

    தலை நிற்க ஆரம்பித்ததும், சுமார் மூன்று மாதங்களான குழந்தைக்கு, `சாஞ்சாடம்மா சாஞ்சாடு,’ என்று ஆட்டுவார்களே பாட்டிமார்கள்? இது வெறும் விளையாட்டில்லை. குழந்தைகளின் முதுகெலும்பு பலப்பட வைக்கும் தேகப்பயிற்சி. நாம் தொடுதலும், தான் ஆடுவதும் குழந்தையை மகிழ்விப்பது. அதைக் காட்ட ஒரேயடியாகக் குதிக்கும்.

    இதேபோல் இன்னொன்று, `தென்ன மரத்திலே ஏறாதே!’ முதலில் கூறியது பக்கவாட்டில் ஆடுகிறதென்றால், இது நம் கணுக்காலில் உட்காரவோ, நிற்கவோ வைத்திருக்கும் குழந்தையை மேலும் கீழுமாக குழந்தையைத் தூக்கிப்போடுவது.
    இந்தப் பாட்டெல்லாம் முழுமையாகத் தெரியாவிட்டாலும், முதல் இரண்டு வார்த்தைகளை வைத்துக்கொண்டே சமாளிக்கலாம். மேலும் கீழுமாக இருக்கும் தொனிதானே குழந்தைகளுக்கு வேண்டும்!

    இம்மாதிரியான அங்க அசைவுகள் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானவை. அவர்கள் கலகலவென்று சிரித்தால், அது தன்வசம் இழக்கிறார்கள் என்று அர்த்தமல்ல. இப்படி நிகழ்காலத்திலேயே இருப்பது குழந்தைகளுக்கே கைவந்த விஷயம். அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய ஒன்று.

    ஒவ்வொரு குழந்தைக்கும் பிடித்தது, பிடிக்காதது வேறுபடும். பெண்குழந்தைகள் ரொம்ப அருமையாக வளர்க்கப்படும்போது, மேற்கூறிய விளையாட்டுகளால் பயந்து அழும்.

    நம் அனுபவங்களில் சிலவற்றையும் குழந்தையுடன் பகிரலாம். ஸ்விட்ச்சைப் போட்டால் மின்சார விளக்கு எரியும். இது நமக்குத் தெரியும். எட்டு மாதக் குழந்தையின் பிஞ்சு விரலை ஒரு ஸ்விட்ச்சின்மேல் வைத்து, நம் விரலால் அதை அமுக்கிவிட்டு, `ஹை! லைட் எரியறதுடா!’ என்று ஒரேயடியாக ஆச்சரியப்படுங்கள். குழந்தைக்கு எதையோ சாதித்துவிட்டதில் பெருமை தாங்காது. மகிழ்ந்து சிரிப்பான். அதுவே தினமும் அவன் காத்திருந்து செய்யும் வேலையாகப்போகும்.

    நடக்கத் தெரிந்த குழந்தையானால், தான் பக்கத்தில் இருப்பதையே பொருட்படுத்தாது, நாம் வேலையில் மும்முரமாக இருக்கும்போதுதான் படுத்தும். அதாவது, நம் கவனத்தை ஈர்க்க ஏதாவது குளறுபடி செய்யும். திட்டி என்ன பயன்! `என்னையும் கொஞ்சம் கவனியேன்!’ என்ற அதன் சொல்லத் தெரியாத வேண்டுகோளைப் புரிந்துகொள்ளாதது நம் தப்புதானே?

    முன்பு, ஒவ்வொரு கூட்டுக்குடும்பத்திலும் பொழுதுபோவது குழந்தைக்கு ஒரு பெரிய விஷயமாக இருக்கவில்லை. யார் மடியிலாவது உட்கார்ந்திருக்கும். எவராவது தூக்கிக்கொண்டு விளையாட்டுக் காட்டுவர். குழந்தையும் கலகலப்பாகப் பேசக் கற்கும்.

    இப்போதோ, டிவி-தான் உற்ற தோழன். கொஞ்சம் வளர்ந்ததும், கணினி. தனியாக அறையில் அமர்ந்து, தன்பாட்டில் ஏதோ செய்துகொண்டிருக்கும் சிறுவன்! யாரைக் குற்றம் சொல்வது?

    தொடருவோம்.

    Share
  • குறளின் கதிர்களாய்…(108)

    —செண்பக ஜெகதீசன்.

     
     

    வாள்போல் பகைவரை யஞ்சற்க வஞ்சுக
    கேள்போல் பகைவர் தொடர்பு.
    -திருக்குறள் -882(உட்பகை)
     
     
    புதுக் கவிதையில்…

    வெட்டும் வாள்போல்
    வெளிப்படையான பகைக்குக்கூட
    பயப்பட வேண்டாம்,
    வஞ்சம் மறைத்து
    உறவினர்போல் ஒட்டிக்கொள்ளும்
    பகைவர் தொடர்பு மட்டும்
    வேண்டவே வேண்டாம்…!
     
     
    குறும்பாவில்…

    வாள்போல் வெளிப்படைப் பகையைவிடப்
    பெரிதும் அஞ்சி ஒதுங்கத்தக்கது,
    வஞ்சமுடன் உறவினர்போல் வரும்பகையே…!
     
     
    மரபுக் கவிதையில்…

    வெட்டும் வாளின் தன்மையது
              வெளிப்படை யாகத் தெரிவதுபோல்
    கிட்டே நேரில் வரும்பகைவர்
              கண்டே அஞ்சிடத் தேவையில்லை,
    ஒட்டும் உறவென வந்துநமை
              ஒழிக்கும் வஞ்சம் கொண்டவராம்
    கெட்ட பகைவர்க் கஞ்சிடுவாய்,
              கூட்டது அவருடன் வேண்டாமே…!
     
     
    லிமரைக்கூ…

    வாளென வரும்பகைவர்க்கு அஞ்சாதே,
    அஞ்சிடு வஞ்சமுடன் வருவோர்க்கு,
    உறவாய் அவரைநம்பிக் கொஞ்சாதே…!
     
     
    கிராமிய பாணியில்…

    அஞ்சாத அஞ்சாத
    ஆளப்பாத்து அஞ்சாத,
    ஆளவெட்டும் வாளப்போல
    வெளிப்படயாப் பககாட்டும்
    ஆளப்பாத்து அஞ்சாத..

    ஆனா நீயும்,
    அஞ்சிடுவரய் அஞ்சிடுவாய்
    அவுனப்பாத்து அஞ்சிடுவாய்,
    ஒறவுபோல நடிச்சிக்கிட்டு
    ஒழிச்சிக்கெட்டப் பாக்கவுன
    வஞ்சகன எதிராளிய
    ஒருநாளும் நம்பிடாத,
    ஒண்ணாச்சேந்து போயிராத…!

     

     

     

    -செண்பக ஜெகதீசன்…

     

    Share
  • பூர்வ பூமியை வால்மீன்கள் தாக்கி உயிரின மூலவிகள் வீழ்ந்ததற்குப் புதிய சான்றுகள்

    — சி. ஜெயபாரதன்.

    Meteorite

     

     

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

     

     

    வால்மீன்கள் தென்படா யாசிப்போர் மரித்தால் !

    வானகமே மின்னி முழக்கும் மாவேந்தர் சாவை !

    வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]

     

    காலவெளிப் பிரபஞ்சத்தில்

    வால்மீன்கள்

    பால் ஒளிவீசும் விந்தையாய் !

    பரிதி ஈர்ப்பு வலையில்

    ஈசலாய்த்

    திரிபவை வால்மீன்கள் !

    வையகத்தில் உயிரினம் வளர

    விதை யிட்டவை !

    பரிதியை நெருங்கும் போது

    வால்மீனின்

    நீண்ட ஒளிவால்

    நமது பூமியைத் தொடுமென

    நர்லிகர் கூறுகிறார் !

    வால்மீன் ஹார்ட்லியில்

    சையனைடு

    வாயு வெளியேறும் !

    வால்மீனில் எழுந்திடும்

    வாயுத் தூள்களை

    வடிகட்டிப் பிடித்து வந்தார் !

    வால்மீன்

    வயிற்றில் எறிகணை ஏவி

    உட்கருவை ஆராயும்

    ஓர் விண்ணுளவி !

    அதே ஆழ்மோதி விண்கப்பல்

    அடுத்தோர்

    வால்மீனைச் சுற்றி

    ஆய்வு செய்யும் இப்போது !

    ++++++++++++++++

    வால்மீன்கள் பூமியில் மோதிய அந்தப் பேரதிர்ச்சி உதைப்படியிலும், பூதளக் கொந்தளிப்பு நிலையிலும் உயிரின ஆக்கச் செங்கல்கள் உடையாமல், சிதறாமல் அப்படியே திரட்சியாய் இருந்தன என்பது மெய்யென்று எமது ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன. வால்மீன்கள் என்பவை உயிர்த் தோற்ற இரசாயன வளர்ச்சிக்கு மூலாதாரமான அந்த உட்கூறுகளைக் பூமியில் கொட்டும் ஓர் பூரணப் பெட்டகம். நாங்கள் வால்மீன்களை நாடுவதற்குக் காரணம், அவற்றில் அமினோ அமிலங்கள், நீர் வெள்ளம், எரிசக்தி (Amino Acids, Water, Energy) ஆகிய மூன்றும் பேரளவில் இருப்பதால்.

    டாக்டர் ஜென்னிஃபர் பிளாங்க் (ஆய்வுக் குழு தலைவி)

    முன்னுரை : பல மில்லியன் மைல்கள் நீண்ட வாலுடைய வால்மீன்கள் உறைந்து போன வாயுக்கட்டிகள், பனிநீர்த் தொட்டிகள், தூசிக் களஞ்சியங்கள், பாறைகள் சுமந்து கொண்டு சூரியனைச் சுற்றிப் போகும் ஒருவித அண்டவெளிக் கோள்கள். அது பரிதியைச் சுற்றும் போது அதன் நீண்ட வால் பூமியைத் தடவிச் செல்கிறது என்று இந்திய வானியல் விஞ்ஞானி ஜெயந்த் நர்லிகர் கூறுகிறார். விஞ்ஞானிகள் அண்டவெளி வால்மீன்களை “அழுக்குப் பனிப் பந்துகள்” (Dirty Snowballs) என்று கேலியாகக் கூறுவார். இந்த் பனிப் பந்துகள் 10 அல்லது 10 மைலுக்கு மேற்பட்ட விட்டம் கொண்டிருக்கலாம் என்று கருதுகிறார். பரிதி மண்டலத்துக்கு அப்பால் உள்ள ஓர்ட் முகில் தொகுப்பிலிருந்து (Oort Cloud) அவை கிளம்பி வழிதவறி நழுவி நமது சூரிய மண்டலத்தின் ஈர்ப்பில் பிடிபட்டுச் சுற்றுபவை என்றும் அறியப்படுகிறது. ஒரு சீரிய சுற்று விதியைப் பின்பற்றி ஒருசில வால்மீன்கள் மீண்டும் மீண்டும் பரிதியை வலம் வருபவை என்பது தெரிகிறது.

    2012 மார்ச்சில் கூடும் அமெரிக்கன் இரசாயனக் குழுவகம் (American Chemical Sosiety) தனது 243 குழு ஒருங்கிணைப்பில் மேலும் சில புதிய கருத்துகளுக்கு ஆதாரம் அளிக்கிறது. பில்லியக் கணக்கான ஆண்டுகட்டு முன்பு பூமியை அடுத்தடுத்துத் தாக்கிக் கொண்டிருந்த வால்மீன்கள் பூதள உயிரினங்களின் விருத்திக்கு வேண்டிய உபரி இரசாயன மூலங்களையும், உட்கூறுகளையும் (Ingredients) சுமந்து போய்ப் பூமிக் கோளில் உயிர்கள் பூத்தெழக் கொட்டின என்பதை உறுதிப் படுத்துகிறது. உலகிலே மிகப்பெரிய அந்த அமெரிக்கக் கருத்தரங்குக்குச் சுமார் 15,000 விஞ்ஞானிகள் வருவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அவர்கள் வாசித்து வெளியிடப் போகும் விஞ்ஞானத தலைப்புகள், கண்டுபிடிப்புகள் சுமார் 11,700 அளவு எண்ணிக்கை என்றும் தெரிகிறது.

    விஞ்ஞானி ஜென்னிஃபர் பிளாங்க்கின் சமீபத்து ஆராய்ச்சி முடிவுகள் என்ன ?

    மூன்றரை பில்லியன் ஆண்டுகட்கு ஈசல்கள் போல் வால்மீன்களும், முரண்கோள்களும் (Asteroids) பூமியை மீண்டும் மீண்டும் பேரளவில் தாக்கின. அவற்றின் ஆழ் தடங்கள், குழிகள் இப்போதும் நிலாவின் பின்புறத்தில் தெரிகின்றன. விஞ்ஞான ஆதாரங்கள் மூலம் பூமியில் உயிரினங்களின் தோற்றம் சுமார் 3.5 பில்லியன் ஆண்டுகட்கு முன்பு உதித்தாக அறிய வருகிறது. அப்படியானால அப்போது நீர், அல்லது புரோட்டின் ஆக்கும் அமினோ அமிலங்கள் இருக்க எந்த ஆதாரமுமின்றி அத்தனை சீக்கிரம் எப்படி உயிரினம் தோன்றி இருக்க முடியும் ? காலிஃபோர்னியா நாசா-அமெஸ் ஆய்வு மையத்தின் விஞ்ஞானி ஜென்னிஃபர் பிளாங்க்கும் அவரது சகாக்களும் வால்மீன் மோதலுக்குப் பிறகு உயிரினச் செங்கற்கள் எனப்படும் அமினோ அமிலங்கள் முழுமைத் திரட்சியாய் இருந்தனவா என்று சோதிக்க ஆரம்பித்தனர். சில ஆண்டுகளுக்கு முன்பு நாசா விண்ணுளவி பூமிக்குக் கொண்டுவந்த வால்மீன் தூசியில் விஞ்ஞானிகள் அமினோ அமிலங்கள் இருப்பதை உறுதிப் படுத்தினார். இப்போது ஆய்வாளர் ஒரு சோதனையில் ஆற்றல் மிக்க எரிவாயுத் துப்பாக்கிகளைப் (Gas Guns) பயன்படுத்திப் பூர்வ பூமியில் அப்போதிருந்த பேரளவு உஷ்ணத்தை உண்டாக்கவும், பேரதிர்ச்சி எழுப்பவும் ஆய்வுக் கூடத்தில் பெரு முயற்சி செய்தார்கள்.

    ஆயிரக் கணக்கான கிலோ கிராம் எடையுள்ள எரிவாயுத் துப்பாக்கிகளைப் போலி அண்டங்களில் ஒலிகடந்த வேகத்தில் (Supersonic Speed) மோத விட்டுப் பேரழுத்தத்தில் வெடி அதிர்ச்சிகள் ஏற்படுத்தினர். அந்த வேகத்தில் எரிவாயுத் துப்பாக்கிகள் அமினோ ஆசிடுகள், நீர் மற்ற பண்டங்கள் இட்ட சிமிழ்களைச் சுட்டன. விளைவுகள் என்ன ? அமினோ ஆசிடுகள் உஷ்ணத்தாலோ, அதிர்ச்சியாலோ மோதலில் உடைய வில்லை. அவை அமினோ ஆசிட்களைப் பிணைத்து புரோடின் ஆக்கும் ‘பெப்டைடு இணைப்புகளை’ (Peptide Bonds) உண்டாக்கின. பல்லாண்டுகளாக வால்மீன்கள், முரண்கோள்கள், எரிகற்கள் (Comets, Asteroids amd Meteorites) ஆகிய மூன்றும் பன்முறை தம் பளுக்களை இறக்கி விதைத்தன வென்று ஜென்னிஃபர் பிளாங்க் ஆலோசனை கூறுகிறார். புதிய ஆய்வின் மற்றோர் கண்டுபிடிப்பு என்ன வென்றால் 2.5 பில்லியன் ஆண்டுகட்கு முன்னேதான் கொந்தளிப்பு ஏறி இறங்கிய சூழ்நிலையில் உயிர்வளி என்னும் பிராணவாயு (ஆக்ஸிஜன்) நமது புவிக்கோளில் சேரத் துவங்கியது என்றும் அறியப் படுகிறது.

    பூர்வ பூமி மீது வால்மீன்கள் மோதிய கணிப்பு வேகம் சுமார் மணிக்கு 25,000 மைல். வால்மீன்கள் ஆய்வுக் குழுவின் தலைவி ஜென்னிஃபர் பிளாங்க ஆய்வுக் கூடத்தில் சோதனை முறைகளை உருவகித்துக் வான்மீன்களின் உடலிலுள்ள் நிபந்தனை நிலைகளை உண்டாக்கிக் கணனி மாடல்களைத் தயாரித்துப் புதிதாய்க் கூறுவெதன்ன இப்போது ? அவரது ஆய்வு முடிவுகள் விரிவான விஞ்ஞான் முயற்சியின் ஒரு பகுதியே யாகும். பல பில்லியன் ஆண்டுகட்கு முன்னே பாலையாய்க் கிடந்த பூர்வ பூமியில் எவ்விதம் அமினோ அமிலங்கள் புரோட்டின்களை உண்டாக்கின என்பதே அவரது ஆய்வின் முக்கியக் குறிக்கோள். அந்தப் புரோட்டின்களே நுட்ப ஜந்துக்கள் முதல் மானிடர் வரை எல்லாவித உயிரினங்களைப் படைக்கும் “வினைக் குதிரைகள்” (workhorses) என்பதும் தெளிவாய் உறுதியாயின.

    அண்டார்க்டிக் ஏரியில் உயிரின மூலவிகள் எப்படிப் பூமியில் தடம் வைத்தன என்பதற்குச் சான்றுகள்

    2011 ஏப்ரலில் அண்டார்க்டிக் ஏரியில் பூர்வ பூமியின் அடிப்படை ஜீவ மூலவிகள் (Primitive Life Forms) வளர்ச்சி யுற்றதற்குச் சான்றுகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. காலிஃபோர்மனியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பூதள உயிரியல் விஞ்ஞானி (Geobiologist) டான் ஸம்னரும் (Dawn Sumner) அவரது துணைக் குழுவினரும் அண்டார்க்டிக்கில் உள்ள அண்டர்சீ ஏரியில் (Lake Untersee) ‘ஒளிச்சேர்க்கை நுண்ணுயிர் நீர்த்தடாக வளர்ச்சிகளைக்’ (Photosynthetic Microbial Stromatolites) கண்டுபிடித்துள்ளார். அந்தக் கடல் வளர்ச்சிகளை அடுக்கடுக்காய் கடல் அடித்தளத்திலிருந்து மூன்று பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வளர்த்திருப் பவை பாக்டீரியாக்கள். அவை இப்போது புராதனப் பழஞ் சின்னமாய்ப் (Fossil) பூர்வ ஜந்துக்களின் சான்றாய்ப் பதிவு செய்யப் பட்டுள்ளன. கிழக்கு அண்டாக்டிகாவின் மிகப் பெரிய பரப்பளவு ஏரியான அண்டர்சீ ஏரி கடல் மட்டத்துக்குச் சுமார் 560 மீடர் (1900 அடி) உயரத்தில் உள்ளது, அதன் பரப்பு 11.5 சதுர கி.மீடர். கடலில் பாக்டீரியாக்கள் விளைவிக்கும் பவளக் கொத்துகளை ஒத்தவை இந்த் நீர்த்தடாக வளர்ச்சித் தூண்கள். இவை பஹாமாஸ், தென்கரை ஆஸ்திரேலியா போன்ற ஒரு சில கடற் பகுதிகளில் மட்டுமே இப்போது காணப் படுகின்றன. அண்டார்க்டிக் தூயநீர் ஏரியிலும், ஆன்டிஸ் மலை உப்புநீர் ஏரிகளிலும் அவை தென்படுகின்றன.

    வால்மீன்களின் வானியல் போக்கை வகுத்த விஞ்ஞான மேதைகள்

    2300 ஆண்டுகளுக்கு முன்பே கிரேக்க மேதை அரிஸ்டாடில் [Aristotle (384-322 B.C.)] வால்மீன்களைப் பற்றித் தெளிவாகத் தனது அரிய கருத்துக்களைக் கூறி யிருக்கிறார்! வால்மீன்கள் விண்வெளி நிற வீச்சு [Aurora, Northern Lights] எரிமீன் [Shooting Star] போன்றவை என்று அரிஸ்டாடில் விளக்கினார்! ‘பித்தகோரியர் [Pythagoreans] எனப்படும் சில இத்தாலியர் வால்மீனை அண்டக் கோள் எனக் கருதியது சரியல்ல! வால்மீன்கள் நீண்ட கால இடைவெளியில் தோன்றி மறைபவை. அவை தொடுவானுக்குச் சற்று மேலே மட்டும் தென்படு பவை. வால்மீன்கள் வாயுக் கற்களும், ஆவிகளும் [Airy Meteors & Vapours] கொண்டவை ‘ என்றும் அரிஸ்டாடில் கூறினார்! புதிரான வால்மீன்களைப் பற்றிய அரிய கருத்துக்கள் பண்டைக் காலம் தொட்டே கிரேக்கர்களிடம் இருப்பினும், பிற்காலத்தில் மகத்தான அதன் விஞ்ஞானம் தொடரப் படாமல் புறக்கணிக்கப் பட்டு விட்டது என்று கவலைப் படுகிறார், வானியல் வல்லுநர் எட்மண்ட் ஹாலி!

    1540 இல் முதன் முதலாக வால்மீன் நகர்ச்சியைத் தொடர்ந்து கண்களால் நோக்கிப் படங்கள் வரைந்தவர், ஜெர்மன் விஞ்ஞானி பீட்டர் அப்பையன் [Peter Appian (1501-52)]. வால்மீனின் வால் எப்போதும் பரிதிக்கு எதிராகவே நீண்டிருக்கும் என்பதை முதலில் எடுத்துக் காட்டியவரும் அப்பையனே!

    1577 இல் டென்மார்க் விஞ்ஞானி டைசோ பிராஹே [Tycho Brahe] ஒளி மிக்க ஓர் வால்மீனைக் கண்டு, ஒரு நாள் தொடர்ந்து நோக்கியதில் இடத்திரிபு [Diural Parallax] இல்லாமல் இருப்பதைப் பார்த்து, அது பூமிக்கு நிலவை விட வெகு தூரத்தில் இருப்பதாகவும், அது சூரிய மண்டலத்தின் ஓரண்டம் என்றும் கூறினார்! நூறாண்டுகள் கழித்து நியூட்டனின் ஆப்த நண்பர், எட்மண்ட் ஹாலி வால்மீன்கள் யாவும் சூரிய குடும்பத்தின் கோள்கள் என்பதை முதன் முதல் நிலைநாட்டினார்! வான வீதியில் சென்ற 24 வால்மீன்களின் நகர்ச்சி வீதிகளை [Orbits] 1705 இல் நியூட்டன் நியதிப்படிக் கணக்கிட்டு எட்மண்ட் ஹாலி, அவற்றின் சுற்று வீதிகளைக் கணித்து, ‘வால்மீன்களின் வானியல் சுருக்க வரலாறு ‘ [A Synopsis of the Astronomy of Comets] என்னும் அரிய விஞ்ஞான நூலைப் படைத்தார்!

    வால்மீன்களின் போக்கை ஆராய்ந்த விஞ்ஞானி எட்மண்ட் ஹாலி

    முதலில் நியூட்டன்தான் வால்மீன்கள், அண்டக் கோள்களைப் போல் நீள்வட்ட வீதியில் செல்கின்றன என்று கணித்துக் காட்டியவர்! சில வால்மீன்களின் பாதை வளைநீட்சி [Ellipticity] நீண்டு பிறைவளைவு வீதியை [Parabolic Orbit] நெருங்குகிறது என்று கூறினார்! வால்மீனின் மூன்று நகர்ச்சி இடங்களை நோக்கிக் குறித்து, அதன் சுற்று வீதியைக் கணித்திட நியூட்டனே முதலில் வழி வகுத்தார்!

    ஆனால் எட்மண்ட் ஹாலியே வால்மீன்களின் போக்கை வரையறுத்து, விபரங்களைச் சேமித்து நூல் எழுதி வெற்றி பெற்றவர்! ஹாலி நியூட்டனின் தத்துவங்களைப் பயன்படுத்தி, மெய்வருந்தி உழைத்து 24 வால்மீன்களின் நகர்ச்சிகளை ஒப்பிட்டுக் கணித்து சுற்று வீதிகளைத் தீர்மானித்தார்! அவற்றில் மூன்று வால்மீன்கள் ஒரே மாதிரியானவை எனக் கண்டு மூன்றும் ஒன்றே என்று முடிவு செய்தார்! மூன்றில் முதலான வால்மீனை 1531 இல் ஜெர்மன் விஞ்ஞானி பீட்டர் அப்பையன் நோக்கினார்! இரண்டாவது ஒன்றை 1607 இல் ஜொஹான் கெப்ளர் [Kepler] கண்டார்! மூன்றாவது ஒன்றை ஹாலியே 1682 ஆம் ஆண்டில் கண்டார்! அதுவே ஹாலின் பெயரைப் பெற்றது! ஹாலி கண்டு பிடித்ததால் அந்த வால்மீன், அவரது பெயரை அடைய வில்லை! மீண்டும் 1758 இல் அது வரும் என்று ஹாலி உறுதியாகக் கூறி, அது மெய்யாக 1758 இல் திரும்பியதால், அந்த வால்மீனுக்கு ஹாலியின் பெயர் இடப் பட்டது! 1758 ஆண்டில் ஐந்து மாதங்களுக்கு வால்மீன் பலரது கண்ணில் தென்பட்டது!

    நீள்வட்ட வீதியில் பரிதியை மையமாகக் கொண்டு பெரும் பான்மையான வால்மீன்கள், குறிமையத்திலிருந்து [Focus] பல மில்லியன் மைல் தூர நீள் ஆரத்தில் [Aphelion] சுற்றி மீண்டும் பூமியை நோக்கி வருகின்றன! ஆனால் அவை சுற்றி வரும் பாதைகள், பரிதிக்குச் சீரான முறையில் இல்லாது, முரணாகவே அமைகின்றன! விண்வெளிச் [Interstellar] சேர்ந்த வால்மீன்களாக இருந்தால், அவை இணையும் நீள்வட்டத்தில் [Closed Ellipse] சுற்றாமல், பிறைவளைவு [Parabola] அல்லது விரிவளைவு [Hyperbolic Orbits] வீதிகளில் பயணம் செய்து, பரிதியை ஒரு முறை வலம் வந்த பின், மீண்டும் அவை வரமாட்டா! மேலும் விண்வெளியைச் சேர்ந்த வால்மீன்கள், பரிதி நகரும் அதே திசையில்தான் அவையும் பயணம் செய்து, சூரிய மண்டலத்தில் நுழைகின்றன! சூரியனின் சுழலீர்ப்பு விசையால் [Centripetal Force] தூரத்தில் பயணம் செய்யும் அன்னிய வால்மீன்கள், பரிதியை நோக்கி இழுக்கப் படுகின்றன! பூதக்கோள் வியாழன் மூட்டும் சனிக்கோளின் ஒழுங்கற்ற நகர்ச்சியால், அருகே நீள்வட்டத்தில் செல்லும் ஓர் வால்மீனின் நகர்ச்சி தடுமாறி, வேகம் மாறுபட்டு, பாதை வேறுபட்டு பிறைவளை வாகிறது.

    வால்மீன்களின் பிறப்பும், அவற்றின் விந்தை அமைப்பும்!

    வானியல் வல்லுநர் ஃபிரெட் விப்பிள் [Fred Whipple], வால்மீன்கள் விண்கற்களும், தூசிப் பனிக்கட்டிகளும் [Rocks & Dusty Ice] மண்டிய ‘குப்பைப் பனிப்பந்துகள் ‘ [Dirty Snowballs] என்று கூறுகிறார்! புதிராகவும், மர்மமாகவும் காணப்படும் வால்மீன்கள் எப்படித் தோன்றுகின்றன ? விண்வெளியில் புற்றீசல்கள் போலக் கிளம்பும் வால்மீன்கள் எங்கிருந்து எழும்புகின்றன ? வால்மீன் உடம்பில் என்ன பொருட்கள் இருக்கின்றன ? கண்கவரும் ஒளி அதற்கு எப்படி உண்டாகிறது ? வால்மீன்களை வயிற்றில் சுமந்து கொண்டிருக்கும் ஒரு பெரும் சேமிப்புக் கோளம் பரிதிக்குப் பல பில்லியன் மைல்களுக்கு அப்பால், புளுடோவைத் [Pluto] தாண்டி இருப்பதாக யூகிக்கப் படுகிறது! அந்த சேமிப்புக் கோளம் ‘ஓர்ட் மேகம் ‘ [Oort Cloud] என்று அழைக்கப் படுகிறது! அதை யூகித்த ஜான் ஓர்ட் [Jan H. Oort] வானியல் வல்லுநரின் பெயரில் அது குறிப்பிடப் பட்டது. தேனீக்களின் கூடு போன்ற அந்த கூண்டில் சுமார் 100 பில்லியன் வால்மீன்கள் அடங்கி இருக்கலாம் என்று ஓர்ட் கருதினார்! அடுத்து நெப்டியூன் கோளைத் தாண்டி ‘கியூப்பர் வளையம் ‘ [Kuiper] ஒன்று இருப்பதாக யூகிக்கப் பட்டது! சுற்றுக் காலம் [Period] 200 ஆண்டுகளுக்கு மேலான வால்மீன்கள் ஓர்ட் மேகத்திலிருந்து வருவதாகவும், சுற்றுக் காலம் 200 ஆண்டுகளுக்குக் குறைந்தவை கியூப்பர் வளையத்திலிருந்து கிளம்புவதாகவும் அனுமானிக்கப் படுகிறது!

    ஓர்ட் மேகக் கூண்டுக்கு அருகிலோ, அல்லது கியூப்பர் வளையத்திற்கு அண்டையிலோ போகும் விண்மீன்கள் வால்மீன் ஒன்றை இழுத்து வீசி எறியும் போது, சூரிய மண்டலத்துள் விழுந்தால், அதன் ஈர்ப்பியல் பிடியில் மாட்டிக் கொண்டு, அது நீள்வட்ட வீதியில் சுற்ற ஆரம்பிக்கிறது! வீசி எறியும் வேகம் அதிகமானால், வால்மீனின் சுற்று வீதி பிறைவளைவிலோ, அல்லது விரிவளைவிலோ மாறிச் பரிதியைச் சுற்றிச் செல்கிறது!

    வால்மீன் தலையின் நடுவே திடவமான ‘உட்கரு ‘ [Nucleus] உள்ளது. ஹாலி வால்மீனின் உட்கரு சுமார் 9 மைல் அகண்டது! அட்டக் கரியான உட்கருவில் கரி [Carbon] மிகுதியாக உள்ளது! கரியை மூடிய பனித் தோல் மீது, கற்தூசிகள் படிந்துள்ளது போல் தோன்றுகிறது! அதன் வாலின் நீளம் 1910 இல் வந்த போது 37 மில்லியன் மைல் நீண்டிருந்தது! ஹாலி வால்மீனின் முழு நிறை 25 மில்லியன் டன் என்று அமெரிக்க வானியல் நிபுணர் ஹென்ரி ரஸ்ஸெல் [Henry N. Russell (1877-1957)] விஞ்ஞானி மதிப்பீடு செய்தார்! வால்மீனின் தலைப் பரிதியை நெருங்கும் போது, அதன் உஷ்ணம் 330 டிகிரி கெல்வின் [330 K] ஏறியதாக அறியப்படுகிறது! பரியின் ஒளியை எதிர்ப்படுத்தியே வால்மீன் ஒளி வீசுகிறது! அதற்குச் சுய ஒளி கிடையாது! 400 மைல் அகண்ட உட்கரு கொண்ட விண்மீன்களும் விண்வெளியில் உள்ளன! துணைக் கோள் [Satellite] மூலம் நோக்கியதில் உட்கருவைச் சுற்றிலும் ஹைடிரஜன் வாயுக் கோளம் பேரளவில் சூழ்ந்துள்ளது என்று அறியப் பட்டது! உட்கருவைச் சுற்றியுள்ள வாயுக் கோமா [Gaseous Coma] 80,000 மைல் விட்டமுள்ளது! வாயுக் கோமாவில் மீதேன் [CH4], கார்பன் மொனாக்ஸைடு [CO], சையனஜென் [C2N2 Cyanogen] போன்ற வாயுக்கள் அடங்கி யுள்ளன!

    வாலின் நீளம் 200 மில்லியன் மைல் கூட விண்வெளியில் நீண்டிருக்கும்! பரிதியை நெருங்க நெருங்க வாலின் நீளம் அதிகமாகி, அதை விட்டு விலக விலக வாலின் நீளம் குன்றிப் பரிதிக்கு வெகு தொலைவில் வால்மீன் செல்லும் போது, வால் முழுவதும் இல்லாமல் போகிறது! அத்துடன் சூரிய ஒளி மங்குவதால், வால்மீன் ஒளி யிழந்து சுற்றுகிறது. அப்போது மிகக் குளிர்ந்து போகும் வால்மீன், தானாகச் சுய ஒளி வீசும் திறனற்றுப் போகிறது!

    சூரியன் அருகே வரும் போது சூரியக் காற்றும், கதிர்வீச்சு அழுத்தமும் [Radiation Pressure] வால்மீனின் வாயுக்களைச் சூடாக்கி, அப்பால் தள்ளுகிறது. அதுவே எதிரே வாலாய்ச் சிறிது சிறிதாய் நீள்கிறது! பரிதியின் ஒளிக் கதிர்கள், வால்மீனின் வாயுக்களையும், தூசியையும் வெண்ணிற ஒளியாய் மாற்றுகின்றன! வாயுக்களும் மின் கொடை [Electrically charged] பெற்று, தாமாய்ச் சுடரொளி வீசுகின்றன!

    மெதுவாய் ஊர்ந்து வரும் வால்மீன், பரிதிக்கு அருகே வருகையில் வேகம் அதிகரிக்கப் பட்டு, உச்சமாகி பரிதிக்கு அப்பால் போகும் போது, வேகம் சிறிது சிறிதாய்க் குறைகிறது! வால்மீன் வாலும் பரிதியை நெருங்க நெருங்க நீண்டும், பரிதியை விட்டு விலக விலகச் சுருங்கியும் போகிறது! அதாவது பரிதியின் அருகே வாலின் நீட்சிக்கும், வால்மீனின் வேகத்திற்கும் ஓர் தொடர்பு உள்ளது! சூரியக் கதிரழுத்தம் வாலை அப்பால் தள்ளுவதால், வால்மீனுக்கு முன்னோக்கி உந்து விசை உண்டாகி, ஏவுகணை [Rocket] போல் விரைவாகச் செல்கிறது!

    இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் [1986 February 9th] ஹாலி வால்மீன் கடைசியாகச் சூரியனச் சுற்றிச் சென்றது. அதே ஆண்டு மார்ச் மாதம், இரண்டு ரஷ்ய விண்வெளி ஆய்வுச்சிமிழ்கள் [Soviet Probes], வேகா-1, வேகா-2 [Vega-1, Vega-2], ஈரோப்பிய விண்வெளி ஆணையகத்தின் [European Space Agency] ஆய்வுச்சிமிழ் கியாட்டோ [Giotto], இரண்டு ஜப்பானியரின் விண்சிமிழ்கள் ஆகியவை யாவும், வெகு தூரத்தில் ஹாலி வால்மீன் போவதைப் படம் எடுத்துள்ளன.

    *********************

    Information :

    [Picture Credits: NASA Space Center, USA]

    1. The Stardust Mission, Silicone Chip Online-NASA Mission, To Catch a Comet [Jan 15, 2006] [www.siliconchip.com.au/cms]

    2. Stardust: How to Bring Home a Comet [http://stardust.jpl.nasa.gov/science/feature002.html] [Jan 15, 2006

    3. Public to Look for Dust Grains in Stardust Detectors By: Robert Sanders [Jan 10, 2006] [www.berkeley.edu/news/media/releases/2006/01/10_dust.shtml]

    4. Stardust Comet Sample Program [www.astronautix.com/craft/stardust.htm]

    5. Genesis Capsule Crash, Space Capsule Slams into Desert [www.abc.net.au/egi-bin] [Sep 9, 2004]

    6. Space Capsule Carrying Comet Dust Returns to Earth [http://usatoday]

    7. NASA – The Fiery Return of NASA ‘s Space Dust Cargo [Nov 29, 2005]

    8. Deep Impact Prepares for Comet Crash By: Declan McCullagh [www.news.com] July 2, 2005

    9. NASA Probe Could Reveal Comet Life, By UK Team Cardiff University, U.K. [July 5, 2005]

    10 Photo Credits NASA, JPL-Caltech, California [July 5, 2005] & Toronto Star Daily [July 5, 2005]

    11 Watch Deep Impact ‘s Comet Collision Via Webcast By: Tariq Malik [www.space.com July 1, 2005]

    12 NASA to Study Comet Collision http://www.PhysOrg.com

    13 NASA Looks for Signs of Success from Celestial Broadside http://www.PhysOrg.com [2005]

    14 Deep Impact Makes a Better Impact than Planned http://english.people.com.cn/ [July 5, 2005]

    815 Deep Impact Slams into Comet By: Anthony Duignan-Cabrera Space.com Managing Editor {July 4, 2005]

    15 Thinnai Article on Deep Impact http://www.thinnai.com/sc0707051.html

    16 Thinnai Article on the Significance of Deep Impact http://www.thinnai.com/sc0715051.html

    17 A Comet Tale By Paul Weissman, Senior Research Scientist, NASA ‘s Jet Propulsion Lab. Sky & Telescope Magazine [Feb. 2006]

    18. Wikipedia – Edmond Halley (Jan 22, 2011)

    19. Edmond Halley – Biography.

    20. https://jayabarathan.wordpress.com/2010/11/06/comet-hartley-2-flyby/ (Comet Hartley) (Nov 6, 2010)

    21 Did Comet Crashes Help Spark Earth Lfe By : Matt Schirber (September 24, 2009)

    22 Early Earth – Hazy Shades of Life on Early Earth (Mach 21, 2012)

    23 Comets Bombarding Early Earth Delivered the Amino Acids Needed for the Origins of Life (March 28, 2012)

    24 Early Earth – New Evidence that Comets Deposited Building Blocks of Life on Primordial Earth (March 28, 2012)

    29 Daily Galaxy – Ancient Antarctic Lake Reveals How Life Got a Foothold on Earth (March 29, 2012)

    30 https://jayabarathan.wordpress.com/2011/01/28/edmond-halley/ (வால்மீனின் போக்கை வகுத்த வானியல் விஞ்ஞானி எட்மண்ட் ஹாலி)

    ++++++++++++++++

    Share
  • காதலர் தினம் கவிதை

     

    தமிழ்த்தேனீ

     
    தோற்றதனால் எரித்தான் சிவன்
    வெற்றியினால் எரிந்தான் காமன்
    அந்தக் காமன் கணை தொடுக்க
    கனவுகள் தளம் அமைக்க

    நாடிகள் முறுக்கேற கற்பனை சூடேற
    கட்டியவளை அவன் அவனணைக்க
    கை விலக்கி அவள் சொன்னாள்
    இன்று உடல் நலமில்லையென்று
    அப்படியா என்று பதறிப்போய்

    இதமாகத் தொட்டுப் பார்த்து
    காய்ச்சலா தலைவலியா உன் நலமே
    முக்கியம் மருத்துவரிடம் போவோம் வா
    என்றவுடன் அதெல்லாம் ஒன்றுமில்லை

    ஆயினும் வெறும் களைப்புதான் என்றவுடன்
    தோற்ற ஈசனையும் வென்ற காமனையும்
    சேர்த்தே அடக்கி வீறிட்டெழுந்த காமம்
    போரிட்டு அடக்கி மனதிலே தேவனாய்

    மனிதரில் கடவுளாய் மாறியே
    சரி தூங்கும்மா என்றபடி
    என்று போர்வையை அவள்மேல்
    போர்த்தி விலகிப் படுத்த ஆண்மகன்

    கொண்டாடப்படாத காதல்
    ஆயினும் ஒவ்வோர் ஆண்மகனும்
    கைக்கொள்ள வேண்டிய காதல்
    இதுதான் காதல்

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

     

    ec8e27c6-f924-4c16-970e-567275ad2a5f

     

    ”அத்திரி இல்லாள் அனுஸூயா பார்த்ததும்,
    சித்திறை ஆச்சு சிசுவாக, -அத்திரி
    பத்திரி பாட்ஷா,கு பேரன் குசேலனாய்
    சுத்திவரச் செய்தாய்கே சவ்’’….கிரேசி மோகன்….ஓகேயா ஓவியரே….!

     

     

     

    Share
  • நெஞ்சு பொறுக்குதிலையே….!

    அற்புதமான ரவி வர்மன் ஓவியம்….ஏலத்தில் விடப் போகிறார்களாம்….நெஞ்சு பொறுக்குதிலையே….!

    becfac4a-b828-4d19-a068-0c1c1325b97a

    “ஏடு மணிமாலை ஏந்தும் கலசமோடு
    தோடுடைய காதன் ,திகம்பரன்,தென் -நாடுடைய
    தட்சிணா மூர்த்தியை திருரவி வர்மன்கை
    கச்சிதமாய்க் கண்முன் கொடுப்பு”….

    “ஏலம் விடலாமோ ஏகப் பரம்பொருளை
    காலம் கலியின் கொடுமையிது -ஆலத்தை
    ஆக்ரோ ஷமாயுண்ட ஆதிசிவன் கோலத்தை
    AUCTIONனில் விட்டோன் அசத்து”….கிரேசி மோகன்….

    Share
  • மனிதன் சூழ்நிலைக் கைதியா? (சுட்டும் விழிச்சுடர்)

    பவள சங்கரி

    காட்டிலோ, நாட்டிலோ ஒரு கொடிய மிருகத்தின் பிடியில் தனியாக அகப்பட்டுக்கொண்ட மனிதனின் நிலை என்ன? துணிச்சலும், சமயோசிதமும் தப்பிக்கவும், தற்காத்து உயிர் பிழைக்கவும் வழியமைக்குமா?

    tiger_attack

    பல மாதங்களுக்கு முன் தில்லி உயிரியல் பூங்காவில் +2 படிக்கும் மாணவர் ஒருவரை பூங்காவின் வளர்ப்பு மிருகமான வெள்ளைப் புலி ஒன்று அடித்துக் கொன்றது நினைவிருக்கலாம். இன்றைய நவீன உலகில் எதுவும் சாத்தியம் என்பதற்கிணங்க தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் அந்தப் புலி அம்மாணவனின் சதையைக் கிழித்து உயிரைக் குடிக்கும் கொடூரமான காட்சியை ஒருவன் நிதானமாகப் படம் பிடித்துள்ளான். பிரம்மாண்டமாக தம் எதிரில் கோரப் பற்கள் காட்டி நிற்கும் புலியை எதிர்கொள்ளத் துணிவில்லாமல், அதை அறியும் வல்லமையும் இன்றி செய்வதறியாது சுவருடன் சுவராக ஒடுங்கி, கையை ஆட்டி நெருங்காதே நெருங்காதே என்று கெஞ்சிக் கேட்கும் ஒரு பரிதாபமான சீவனை, தன் கண் முன்னால் ஒரு அப்பாவி இளைஞன் கடித்துக் குதறப்படுவதை வேடிக்கைப் பார்க்கும் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடர்புகொண்டு காப்பாற்ற முயற்சி எடுக்க எவருக்கும் தோன்றவில்லை என்பதோடு கல் மனதின் உச்சமாக ஒருவர் அதை காணொலிக் காட்சியாகப் பதிவு செய்து உலகம் முழுவதும் பரவவிடுகிறார். மனிதாபிமானம் என்பதன் சுவடே அறியாத ஒரு கொடூர மனம் படைத்தவனாகத்தான் அந்த மனிதனைக் காண முடிகிறது. வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களும் நவீனத்துவங்களும் மனித நேயத்தை முற்றிலும் அழித்துவிடுமோ என்று அஞ்சவும் தோன்றுகிறது.

    images

    சென்ற ஆண்டு 2015, ஆகஸ்ட் மாதம், அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தின் ஒரு பூங்காவில் நீண்ட நடைப் பயணம் மேற்கொண்ட கலைஞர் கிரா கோபெஸ்டோன்ஸ்கி என்பவருக்கு நேர்ந்த மற்றொரு அனுபவத்தைப் பார்க்கலாம். பல முறை இது போன்று தனிமையில் நீண்ட பயணம் செல்லும் வழமையுடையவர் என்றாலும் இவர் ஒருபோதும் காட்டு மிருகங்களை நேருக்கு நேர் கண்டவரில்லை. அன்று நடந்து கொண்டிருந்தவரின் பின்புறம் ஏதோ விநோதமான சத்தம் கேட்டதைத் தொடர்ந்து தன்னிச்சையாகத் திரும்பியவர் கண்களில்பட்டது மூன்று, நான்கு மீட்டர் இடைவெளியில் நெடிதுயர்ந்த ஒரு உருவம். அவ்வளவு நெருக்கத்தில் அத்தனை உயரமான ஒரு மலைச் சிங்கத்தை முதன் முதலில் கண்டவரின் கால்கள் பின்னிக்கொண்டதென்னவோ உண்மைதான். என்றாலும் அவர் தம்மை திடப்படுத்திக்கொண்டு சட்டென்று ஓடாமல், மெதுவாக பின்புறம் நகர ஆரம்பித்தார். அந்த சிங்கமும் மெல்ல முன்னேறுகிறது. கிரா நின்றுவிடுகிறார்; அந்தச் சிங்கமோ பதுங்குகிறது… (பாய்வதற்கோ?) உடனே கியாரா தன்னை ஒரு பெரிய வேட்டைக்காரர் போலக் காட்டிக்கொள்ளும் முயற்சியில் அருகில் இருந்த ஒரு மரத்தின் கிளையை வளைத்துப் பிடித்துக்கொண்டு நிற்கிறார். ஆனால் அந்த காட்டு ராசா அதற்கெல்லாம் மசியவில்லை. அடங்காமல் நிற்கிறது. கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் கிராவின் எந்த விதமான அசைவுகளையும் சட்டை செய்யாமல் மெல்ல முன்னேறுகிறார் அரசர். இன்னும் சில அடிகளே இடைவெளி! கிராவிற்கு எப்படியும் அந்த கொடிய மிருகத்தின் தாக்குதலிலிருந்து தப்பிவிட வேண்டும் என்ற மன உறுதி மட்டும் இருந்தது. ஆனால் அதன் கண்களில் இருந்த வெறியும், அதன் பிரம்மாண்ட உருவமும் தப்பிப்பது சாத்தியமா என்ற ஐயத்தையும் கொடுக்காமல் இல்லை. அடுத்து இன்னும் தீவிரமாக முயற்சி எடுக்கும் கட்டத்திற்கு வந்துவிட்டார். சுரப்பிகள் எல்லாம் தாறுமாறாக வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது. அடுத்து அவர் எடுத்த விவேகமான ஒரு முடிவுதான் அவரை காப்பாற்றியதோ?

    ஆம், கிராவின் அடுத்த நடவடிக்கை தம் பலம் முழுவதும் திரட்டி உச்சக் குரலில் ஓபராவின் பாடலைப் பாடியதுதான்! இசைக்கேட்டால் புவியே அசைந்தாடுமே! ஆச்சரியம், ஆனால் உண்மை. சிங்க ராசா மெல்ல பின் வாங்கினாராம். தம் காதுகளை தரையோடு வைத்தவர் பார்வையை உயர்த்தி கிராவை உற்று நோக்கியவாறு மெல்ல பின் வாங்கியவர் பின் திரும்பிப் போயேவிட்டார்! முயற்சி திருவினையாக்கிவிட்டது. பின் அவர் தம் தோழர்களை அழைத்து நடந்ததைக் கூறி அந்தப் பகுதியில் இருப்பவர்களுக்கு எச்சரிக்கை செய்யும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் தெரிவித்தார்.

    அந்த கொடிய காட்டு விலங்கிடமிருந்து தப்பித்தது குறித்து உயிரியலாளர் அமி ரோட்ரிக்ஸ், விலங்குகள் உலகில், ஓடிக்கொண்டிருப்பவையெல்லாம் உணவுகள் என்பது எழுதப்படாத சட்டம். தரையில் அழுத்தமாக நின்றுகொண்டு, பலமாக ஒலியெழுப்பிக்கொண்டிருந்ததால் அந்தச் சிங்கம் அது தனக்கான உணவு இல்லை என்பதை உணர்ந்துகொண்டு திரும்பிச் சென்றுவிட்டது என்றார். ஆக அந்த சிங்கம் கிராவின் பாட்டில் பயந்து ஓடிவிட்டதுபோலும்!

    காட்டு விலங்கிடமிருந்து தப்பிக்க ஒரு உபாயம் இருப்பது போன்று நாட்டு விலங்குகளிடமிருந்தும் தப்பிக்க வழியா இல்லை. தேவையானவையெல்லாம் சற்று நிதானமும், தெளிவான சிந்தனையும்தான். தேவையற்ற அச்சமும், படபடப்பும்தான் சூழ்நிலையை மேலும் சிக்கலாக்கிவிடக்கூடியது. பிரச்சனையை சமயோசிதமாக சமாளித்த சாமர்த்தியமான மங்கையிவள்!

    அமெரிக்காவில் காவல்துறை அவசர அழைப்பு எண் 911. ஒரு அமெரிக்க இளம் பெண் ஒரு குடிகார ஆண் நண்பனிடம் தனியாக மாட்டிக்கொண்டவள் மீண்டு வருவதற்கு ஒரு உபாயமும் கண்டுபிடித்தாள். தாம் குடிகாரனிடம் மாட்டிக் கொண்டிருப்பதை காவல் துறைக்கு தெரிவிக்க வேண்டிய சூழலில், அவனும் அதே அறையில் இருந்ததால் நேரடியாக புகார் அளிக்க முடியாத நிலை. அவள் காவல் துறை எண்ணான 911 என்பதற்கு அழைப்பு விடுத்து பீசா கடைக்குப் பேசுவது போல பேசுகிறாள். எதிர் முனையில் காவல் துறையினர் இது காவல் நிலைய அவசர உதவி, பீசா கடை அல்ல என்று சொன்னபோதும் அப்பெண் மீண்டும், மீண்டும் பீசா தேவை என்றும், அவசரம் என்றும் குறிப்பால் உணர்த்த, காவல் துறையினரும் சூழ்நிலையை ஒருவாறாக புரிந்துகொண்டவர்கள் மேலும் அது பற்றிய கேள்விகளைக் கேட்டு புரிந்து கொண்டதோடு விரைவில் வந்து அப்பெண்ணை காப்பாற்றியும்விட்டனர். மனம் இருந்தால் மார்கமுண்டு என்பதை உணர்ந்த அந்தப் பெண் சமயோசிதமாக தன்னைக் காத்துக்கொண்டாள்.

    பிரச்சனைகள் எவ்வளவுதான் பூதாகரமாக, உயிர் குடிக்கும் நிலையில் இருந்தால்கூட, தெளிந்த சிந்தனையுடன் அணுகும்போது மீண்டு வரும் வாய்ப்புகள் அதிகம் உண்டு என்பதை மேற்கண்ட சம்பவங்கள் உணர வைக்கின்றன அல்லவா…

    தில்லியில் கடந்த 2012-ஆம் ஆண்டு திசம்பர் 16-ஆம் தேதி இரவு ஓடும் பேருந்தில் பாலியல் வன்கொடுமைக்கும், குற்றவாளிகளின் தாக்குதலுக்கும் உள்ளாகி சில நாட்களுக்குப் பின் மருத்துவமனையில் உயிரிழந்த மருத்துவ மாணவி நிர்பயாவை மறக்கவும் முடியுமா.. இந்த கொடூர சம்பவத்திற்கு காரணமான பேருந்து ஓட்டுநர் ராம்சிங், அவரது சகோதரர் முகேஷ்சிங், வினய்ஷர்மா, பவன்குப்தா, அக்சய் குமார் சிங் மற்றும் ஒரு சிறுவன் உட்பட ஆறு நபர்களும் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். நீதிமன்றத்தில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ராம் சிங் சிறையிலேயே தூக்கிலிட்டுக்கொண்டான். மற்ற நால்வருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. நாட்டையே உலுக்கிய இந்தச் சம்பவத்தில், நிர்பயாவை உடல்ரீதியாக அதிகம் துன்புறுத்தி காயப்படுத்தியதில் 17 வயதேயான ஒரு சிறார் குற்றவாளிதான் முக்கிய நபர். குற்றம் நிகழ்ந்தபோது அவருக்கு 17 வயதுதான் ஆனது என்ற காரணத்திற்காக சுமார் 3 ஆண்டுகளில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். தற்போது 20 வயது நிரம்பியுள்ள நிலையில், விடுதலையாகி வெளியுலகுக்குச் செல்லும் அந்த சிறார் குற்றவாளியின் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. தில்லி மகளிர் ஆணையம் சார்பில் சனிக்கிழமை இரவு தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவை அவசர மனுவாக ஏற்று விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், திங்கள்கிழமை விசாரணைக்கு ஏற்பதாகக் கூறி விட்டது. நீதிபதிகள் ஏ.கே.கோயல், யு.யு. லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு இரவு 2 மணிக்கு இந்த மனுவை விசாரித்து, பிறகு ஒத்திவைத்தது. இந் நிலையில் 21.12.2015 அன்று மனுவை விசாரித்த உச்சநீதி மன்றம் மனுவை தள்ளுபடி செய்தது. சிறார் தண்டனை சட்டத்தில் கட்டாயம் திருத்தம் கொண்டு வரவேண்டிய நிலையில் அந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியும், நிர்பயாவிற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் தில்லியில் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் நிர்பயாவிற்கு ஆதரவு தெரிவித்து கிட்டத்தட்ட ஒரு இலட்சம் பேர் கையெழுத்திட்டுள்ளனர். நம் நாட்டில் திருத்தப்பட வேண்டிய பழம்பெரும் சட்டங்கள் பலவற்றில் இதுவும் ஒன்றாக முடங்கித்தான் போக வேண்டுமோ என்னவோ. காலம்தான் பதில் சொல்லக்கூடும்.

    இது தொடர்பான மற்றொரு முக்கியமான விசயம் இது குறித்து மத்திய பெண்கள் மற்றும் சிறார் மேம்பாடு துறை மந்திரி மேனகா காந்தி கூறியுள்ள செய்திதான். அதாவது  மைனர் குற்றவாளியின் தண்டனை நீட்டிக்க முடியாத நிலை உள்ளதால், விடுதலைக்குப் பின் அந்த குற்றவாளி வேறொரு குற்றம் செய்யும் வரை ஒன்றும் செய்ய முடியாது. நீதியை சட்டத்துடன் இணைத்து குழப்பிக் கொள்ளக்கூடாது. மைனர் குற்றவாளி சிறார் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்று சட்டம் தான் சொன்னது. சட்டப்படி தண்டனை முடிந்து மைனர் குற்றவாளி தற்போது விடுதலை ஆகிறார். விடுதலைக்குப் பின் அவர் வேறொரு குற்றம் செய்யும் வரை ஒன்றும் செய்ய முடியாது என்பதுதான்.  மத்திய மந்திரியாக உள்ள மேனகா காந்தி, இந்த வழக்கில் போதிய நீதி வழங்கப்படவில்லை என்று நேரடியாகக் கூறியுள்ளது சட்டத்தின் மீதான விமர்சனமாகத்தான் கருதப்படவேண்டியுள்ளது.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

    பழமொழி: நாய் கொண்டால் பார்ப்பாரும் தின்பர் உடும்பு

     

    கள்ளியகிலுங் கருங் காக்கைச் சொல்லும்போ
    லெள்ளல் கயவர்வா யின்னுரையைத் – தெள்ளிதி
    னார்க்கு மருவி மலைநாட! நாய்கொண்டாற்
    பார்ப்பாருந் தின்பா ருடும்பு.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    கள்ளி அகிலும், கருங் காக்கைச் சொல்லும்போல்,
    எள்ளற்க, யார் வாயும் நல் உரை!-தெள்ளிதின்
    ஆர்க்கும் அருவி மலை நாட!-நாய் கொண்டால்,
    பார்ப்பாரும் தின்பர், உடும்பு.

    பொருள் விளக்கம்:
    கள்ளியில் கிடைக்கும் அகிலையும் (அதன் மணத்திற்காகவும்), கருங்காக்கை கரைவதையும் (நல்நிமித்தம் சொல்கிறது என்று கருதியும்) ஏற்றுக் கொள்வதைப் போன்று, இகழாது கயமைப் பண்புள்ளோர் கூறும் நல்ல கருத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். தெளிவாக, ஒலிக்கும் அருவி வீழும் மலைநாட்டைச் சேர்ந்தவரே (வேட்டையின் பொழுது) நாய் கவ்விக் கொண்டுவந்ததாயிற்றே என்று புறக்கணிக்காமல், பார்ப்பனரும் உடும்பின் தசையின் சுவை கருதி அதனை உண்ணுவர்.

    பழமொழி சொல்லும் பாடம்: பிறப்பிடம் நோக்காது, உயர்ந்த பண்புகளைக் கண்டால் அதனை மதிக்க வேண்டும். கள்ளியில் தோன்றும் நறுமணம் கொண்ட அகிலையும், கருமையான காக்கையின் கத்தலை விருந்தினர் வருவதைக் கூறும் நல்ல நிமித்தம் என்றும் உயர்வாக மதிப்பது அல்லாமல், அவை தோன்றிய இடம் கண்டு இகழ்ச்சியாகக் கருதும் வழக்கமில்லை. வேட்டை நாய் தனது வாயால் கவ்விப் பிடித்த உடும்பினைக்கூட நாய் கவ்வியதாயிற்றே என்று பார்ப்பனரும் புறக்கணிக்காமல் அந்தப் புலாலின் சுவை கருதி உண்பர். அவ்வாறே, இழிந்தோர் நல்லுரை கூறினால் இகழாமல் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தும் இப்பாடல் கருத்தினுக்கு இணையாக வள்ளுவர் கூறும் குறள்,

    எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்ப தறிவு. (குறள்: 423)

    எந்த ஒரு பொருள் குறித்து எவர் என்ன கூறினாலும், அக்கருத்தில் காணும் உண்மையைக் கண்டறிந்து ஏற்றுக் கொள்வது அறிவுடமையாகும் என்கிறது.

    குறிப்பு: இப்பாடலில் பாடபேதங்கள் காணப்படுகின்றன. நாராயண ஐயங்கார் அவர்களின் நூலில் காணும் பாடல் “எள்ளல் கயவர் வாய் இன்னுரை” என்று கூறுவதை “எள்ளற்க யார் வாயும் நல்லுரை” என்று மற்ற சில நூல்கள் காட்டுகின்றன. அவ்வாறே, “நாய் கொண்டால்” என்பது பாடபேதமாக, “நோய் கொண்டால்” எனவும் இருக்கலாம் என்கிறார் நாராயண ஐயங்கார். அதனை ‘எதைத் தின்றால் பித்தம் தெளியும், என்ற உடல் நலம் கெட்ட நிலையில், உடல் நலம் கருதி உடும்பைக் கூட பார்ப்பனர் உண்பர் என்ற வகையிலும் பொருள் கொள்ளலாம். எப்படியாயினும், பொதுவாகப் பாடலின் கருத்து “சேற்றில் மலர்ந்த செந்தாமரை”, சிப்பியில் பிறக்கும் முத்து” ஆகியவற்றை எத்தகைய தாழ்ந்த நிலையில் தோன்றினாலும் இகழ்வாகக் கருதாது, அவற்றின் உயர்ந்த பண்பினைக் கண்டு ஏற்றுக் கொள்வது போலவே; கள்ளியில் பிறந்த அகிலையும், காக்கையின் கரைதலையும், நாய் கவ்விய உடும்பையும் மக்கள் ஏற்றுக் கொள்வதே வழக்கம். அவ்வாறே இழிவானவராக இருந்தாலும் அவர் கூற்றில் உண்மை இருந்தால் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பதே இப்பழமொழிப் பாடல் தரும் அறிவுரை.

    Share
  • அவன், அது , ஆத்மா – (46)

    (ஒரு எளிய மனிதனின் சுயசரிதை)

    மீ.விசுவநாதன்
    அத்யாயம்: 46

    “வசந்தா மேன்ஷன்”

    அவனும், அவனுக்கு நண்பன் ரகுவும் திருவல்லிக்கேணியில் வாடகைக்கு அறையெடுத்துத் தங்க எண்ணி, அங்கிருக்கும் ஒவ்வொரு இடமாகப் பார்த்து வந்தனர். திருவல்லிக்கேணியை “பிரும்மச்சாரி”களின் கோட்டை என்று அழைப்பார்கள். அந்தக் கோட்டைக்குள் அவர்கள் நுழைந்து தேடித் பிடித்தனர் “ஐஸ் ஹவுஸ்” பெசன்ட் சாலையில் உள்ள “வசந்தா மேன்ஷன்” என்ற விடுதியை. அங்கிருந்த விடுதியின் மேனேஜர் இராமசாமிப் பிள்ளை, அவர்களிடம்,” இங்கு ஒரே ஒரு அறைதான் காலியாக இருக்கிறது. அது பதிமூணாம் நம்பர் அறை. அதற்கு யாரும் வருவதில்லை.” என்றார். “எங்களுக்கு அது பரவாயில்லை…அந்த அறைக்கு என்ன வாடகை?” என்று கேட்டனர். “ஒரு கட்டிலுக்கு ஒரு மாத வாடகை முப்பது ரூபாய். “கெஸ்ட்” வந்து தங்கினால் ஒரு நாளைக்கு இரண்டு ரூபாய்” என்றார். “சரி” என்றனர்.

    இராமசாமிப் பிள்ளை, அவர்களுக்குப் பதிமூன்றாம் எண் அறையைத் திறந்து காட்டினார். ஒரே தூசிக் காடாக இருந்தது. “இத எல்லாம் நல்லா சுத்தப் படுத்தித் தந்துடுவோம் கவலைப் படவேண்டாம்” என்றார். 1977ம் ஆண்டு ஜூலை முதல் வாரத்தில் அவன் முதலில் அந்த அறைக்குள் குடிபுகுந்தான். சில தினங்களில் “ரகுவும்” சேர்ந்து கொண்டான். மிகவும் சௌகர்யமான அறை. நிறைய நண்பர்களையும், எழுத்தாளர்களையும் அவனுக்கு மிகவும் நெருக்கமாகச் செய்த அறை. அந்த விடுதிக்கு மிக அருகிலேயேதான் மெரீனா கடற்கரையும், பார்த்தசாரதி கோவிலும், மகாகவி பாரதியார் இல்லமும் இருந்தது. அந்த பாரதியார் இல்லத்தை அரசாங்கம் பொதுவுடைமை ஆக்குவதற்கு முன்பாக அந்த வீட்டில் பக்திப் பாடகர் கே.வீரமணியும், கே. சோமு அண்ணா குடும்பத்தினரும் வாடகைக்குக் குடி இருந்தனர். அவர்களுடன் அவனுக்கு நல்ல தொடர்பு ஏற்படக் காரணமே ஒருவகையில் அவன் குடிருந்த சூழல்தான்.

    “கலைமாமணி, கவிஞர் பொன்னடியான்”

    66ab4982-1ec3-4516-9bba-147d99bb0ce9

    ஒரு ஞாயிறு மாலையில் அவன் தனியாக மெரீனா கடற்க்கரைக்குச் சென்றான். அவனுக்கு கடல் மணலில் நடக்கவும், கடல் நீரில் முழங்கால் அளவு நீரில் நின்று கொண்டு கடலின் நீல வண்ணத்தில் தன்னைக் கரைத்துக் கொள்ளவும் ரொம்பவும் பிடிக்கும். அப்படி அவன் கடலை ரசித்துவிட்டுத் திரும்பும் பொழுது அந்த மணற்பரப்பில் சுமார் ஒரு இருபது கவிஞர்கள் வட்டமாக அமர்ந்து கொண்டு கவிதை படித்துக் கொண்டிருந்தனர். அவனும் அவர்களுடன் அமர்ந்து கொண்டான். அங்கு வாசிக்கப்படும் கவிதைகளை ஒருவர் நடுநாயகமாக அமர்ந்தபடி ரசித்தும், விமர்சித்தும், அந்தக் கவியரங்கத்தை ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்தார். மெலிந்த உருவம். வெள்ளை வேட்டி, ஜிப்பா, முகத்தில் ஒரு கண்ணாடியுடன் கூர்மையான கவனிப்புடனும் , மெல்லிய சிரிப்புடனும் இருந்த அவரை அவனுக்குப் பிடித்திருந்தது. அவனுக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு கவிஞரிடம் அவரைக் காட்டி,” அவர் யாரு…இங்க எதற்குக் கவிதை வாசிக்கிறார்கள்” என்றான். “இதற்குக் “கடற்கரைக் கவியரங்கம்” என்று பெயர். ஒவ்வொரு மாதமும் ஒரு ஞாயிற்றுக் கிழமை இங்கே இப்படி இந்தக் கவியரங்கம் நடைபெறும். “தமிழ்க் கவிஞர் மன்றம்” சார்பாக நடத்துகிற இவர்தான் கவிஞர் பொன்னடியான்” என்றார். அப்படி அவனுக்குச் சொன்னவர் பெயர் கவிஞர் சமதர்மன். அந்தக் கவியரங்கம் முடிந்தவுடன் அவன் கவிஞர் பொன்னடியான் அவர்களிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டான். அவர் மிக்க மகிழ்ச்சியுடன்,” நீங்கள் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் இந்த “கடற்கரைக் கவியரங்கத்திற்கு வாருங்கள். உங்களது கவிதையைப் படியுங்கள். தமிழ்க் கவிஞர் மன்றம் சார்பாக வெளிவரும் “முல்லைச்சரம்” கவிதை இதழுக்கும் உங்களது கவிதைகளை அனுப்பி வையுங்கள் என்று சொல்லி” அவனிடம் அந்த மாத முல்லைச்சரம் இதழைத் தந்து,” நீங்கள் எங்கள் வீட்டிற்கு வாருங்கள்” என்றும் அழைத்தார்.

    அடுத்த ஞாயிற்றுக் கிழமை மதியம் அவன் கவிஞர் பொன்னடியான் அவர்களின் இல்லத்திற்குச் சென்றான். அப்பொழுது அவரது வீடு கோடம்பாக்கம் அம்பேத்கர் சிலை அருகில் உள்ள ஒரு இடத்தில் இருந்தது. அவரது வீட்டு மாடியில் தென்னை ஓலையினால் கூரை போடப் பட்டிருக்கும். அங்குதான் அவனை அவர் அழைத்துச் சென்றார். அந்த அறையில் நிறைய புத்தகங்கள் இருந்தன. அவனிடம் அவர் மிகுந்த அன்புடன் பேசிக் கொண்டிருந்தார். அவரது மனைவியையும், குழந்தைகளையும் அவனுக்கு அறிமுகம் செய்து வைத்தார். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் கவிதைகளைப் பற்றியும், அவரோடு தனக்கு இருந்த பழக்கத்தின் பெருமைகளைப் பற்றியும் அவனுடன் பேசிக் கொண்டிருந்தார். அவன் “முல்லைச்சரம்” இதழுக்காக ஒரு கவிதையை அவரிடம் கொடுத்தான். அதைப் படித்துப் பாராட்டியதோடு மட்டுமின்றி அதை வெளியிடவும் செய்தார். தொடர்ந்து எழுதுங்கள் என்று ஊக்கப் படுத்தினார். அந்த இருபத்திரண்டு வயதில் அவனுக்கு அது நல்ல ஊட்டச் சத்தாக இருந்தது. அடிக்கடி அவன் அவரை சந்தித்தும், கடற்கரைக் கவியரங்கத்தில் கவிதைகளை வாசித்தும் வந்தான். அங்குதான் அவனுக்கு கவிமாமணி இளந்தேவனின் அறிமுகமும், நட்பும் கிடைத்தது.

    “உவமைக் கவிஞர் சுரதா”

    உவமைக் கவிஞர் சுரதாவின் மகன் கவிஞர் கல்லாடனின் தொடர்பும் அவனுக்குக் கிடைத்தது. கவிஞர் கல்லாடன் அவனை அசோக்நகரில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று தனக்குத் தந்தையார் “கவிஞர் சுரதா”விடம் அறிமுகம் செய்து வைத்தார். கவிஞர் சுரதா அவனைப் பார்த்து ,” நீ…பாப்பானா”…எங்கிருக்கிறாய் ” என்றார். “திருவல்லிக்கேணியில் ஒரு விடுதியில்” என்றான். “நீ கவிதை எழுதுவியா என்றார்”. “எழுதுவேன்” என்று ஒரு கவிதையைச் சொன்னான். அவனைத் தட்டிக் கொடுத்து, அவர் எழுதிய கவிதைப் புத்தகங்களை அவனுக்குப் பரிசளித்தார். அவரது “தேன்மழை”க் கவிதைத் தொகுப்பைப் படித்து விட்டு அதில் அவரது உவமை அழகை அவன் ரசித்திருக்கிறான். ஒரு முறை “வானவில் பண்பாட்டு மையம்” மகாகவி பாரதியாரின் பிறந்ததின விழாவை திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியாரின் நினைவு இல்லத்தில் நடத்தியது. ஜதிபல்லக்கு ஊர்வலம் முடிந்தபின்பு நடைபெற்ற கவிப்பொழிவை கவிஞர் சுரதா துவக்கி வைத்தார். அதில் அவன் பாரதியாரைப் பற்றி எட்டு வரியில் ஒரு கவிதையை வாசித்துவிட்டு மேடையில் இருந்து இறங்கி வரும் பொழுது கவிஞர் சுரதா அவனைத் தன்னருகே அழைத்து, ” நீ..பாப்பான் தானே…ஒன்னோடு கவிதைல நல்ல வீச்சிருக்கு…சிறப்பா வருவாய்” என்று வாழ்த்தினார். அவர் வாழ்த்திய கவிதை இதுதான்.

    “காளியைக் கண்களில் வைத்தவன்
    சாதனை செய்வதில் புதிறேது ?
    தூளியில் தொங்கியே பழகினால்
    துள்ளியே பறந்திட வழியேது ?
    தேவியாம் சரஸ்வதி களிப்பிலே
    தேடியே நாவிலே பதிந்திடவே
    தாவியே குதிக்கிறாள் கலக்குறாள்
    தங்கமாய் ஜொலிக்கிறான் பாரதியும் !

    11.02.2016

    அவன் மீண்டும் அடுத்தவாரம் வருவான்………..

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    2c44f2db-a912-4e89-9ade-b1d1550eb979
    பூரி ஜகன்நாதர் தங்கை சுபத்ரா, அண்ணன் பலராமன்,
    சமேதராய் பொறந்தாத்துப் பெருமையைக் காட்டுவதுபோல்
    காட்ஷி அளிப்பது “பூரியில்” …. கண்ணன் பால்பூரி….

    ”அண்ணன் பலராமன், பின்னை சுபத்ராவும்,
    உன்னொடு பூரியில் உற்சவராய் -நின்றிட,
    கண்ணா ஜகன்நாதா, கோர்த்தாய் பொறந்தாத்தை,
    என்னேவுன் கோகுல ஈர்ப்பு”….கிரேசி மோகன்….

    Share
  • காந்த அலைகள்

    க. பாலசுப்பிரமணியன்

     

    அணுவைத் துளைத்து ..

    அதன் கருவைக் கிழித்து ..

    அமைதியில் உறங்கும்… நான் !

    காலமும் ஞாலமும் உரசிடக் ..
    கதிராய்ப் பிறந்த கலைஞன் நான்!

    கண்ணின் ஒளிக்குள்..
    கைகளின் அசைவில் ..
    உடலிடும் கதிராய்..
    உயிரினுள் அன்பாய்,,..

    நடந்திடப் …பறந்திட..
    பாதைகள் வகுக்கும் பறவை .

    நானிலம் தேடிடும் ..
    நல்லவன்..வல்லவன்
    நான் காந்தன் !

    கால அளப்பில் ..
    சிறைப்படவில்லை!
    பிறப்பும் இறப்பும் ..
    என்னை வரிப்பதில்லை !

    கூட்டில் வாழும் உயிர்களுக்குள்
    கூடி வாழ்ந்தாலும் ..
    குறைகள் அறியா…
    கூத்தன் நான் !

    சக்தியும் சிவமும்
    ஆடிடும் சாஸ்வத நடனம் !
    அண்டங்கள் அனைத்தையும்
    அணைத்திடும் ஆற்றல் !

    புலனுக்குப் புரியா..
    புலவர்கள் அறியா
    கற்பனைச் சிகரம் ..
    கடவுள் தத்துவம்!

    Share
  • கடவுளின் அகல விரிந்த கைகள்…..

    –கவிஜி.

     

     

    புத்தனிடம் பேச
    எதுவுமில்லாத யசோதரையிடம்
    பேச நிறைய இருக்கிறது…
    ________________________________________________

    உலகின் முதல் கதையும்
    கடைசி கதையும்
    ‘கடவுள்’ ஆகவே இருக்கிறது…
    ________________________________________________

    கைகளை எவ்வளவு
    அகலமாக விரிக்க
    முடிகிறதோ
    அவ்வளவுதான் வானம்
    குழந்தைக்கு….
    ________________________________________________

    பூவைச் சூடிக்
    கொண்ட தோட்டம் என
    உன் கல்லறை…
    ________________________________________________

    உங்கள் வீட்டுப் பூனைகளிடம்
    கேட்டு விடாத கேள்விகளில்
    எங்கள் வீட்டு அடுப்பு
    கடைசியாய்
    எரிகிறது…
    ________________________________________________

    கவிஜி

    Share