அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 54
டாஹாவ் நாஸி சித்ரவதை முகாம் அருங்காட்சியகம், பாயார்ன், ஜெர்மனி
முனைவர்.சுபாஷிணி
1933ம் ஆண்டு மார்ச் மாதம் 22ம் தேதி அடோல்ப் ஹிட்லர் ஒன்றிணைக்கப்பட்ட ஜெர்மனியின் சான்சலராக நியமனம் செய்யப்பட்டார். இந்த நிகழ்வின் தொடர்ச்சியாக அரசியல் எதிரிகளைச் சிறைவைப்பதற்கென்றே பிரத்தியேகமாக ஒரு சித்ரவதைமுகாம் ஜெர்மனியின் தெற்குப் பகுதி மானிலமான பாயார்னில் டாஹாவ் என்ற கிராமப்பகுதியில் உருவாக்கப்பட்டது. இந்தச் சிறை அடுத்தடுத்து விரிவாக்கப்பட்ட ஜெர்மானிய ஆட்சிக்குட்பட்ட இடங்களில் அமைக்கப்பட்ட ஏனைய சிறைகளுக்கு ஒரு மாடலாக வன்முறைகளின் பள்ளிக்கூடமாக அமைந்தது. 12 ஆண்டுகள் இந்தச் சித்ரவதைமுகாம் பயன்பாட்டில் இருந்தது. இந்த 12 ஆண்டுகள் ஐரோப்பா முழுமையும் நாஸி ஆட்சியை எதிர்த்த அரசியல் கைதிகளை அடைத்து வைத்து சித்ரவதை செய்யும் கூடமாக இது திகழ்ந்தது. இந்த 12 ஆண்டு காலகட்டத்தில் இச்சித்ரவதை முகாமில் 200,000 சிறைக்கைதிகள் அடைக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 41,500 பேர் நாஸீ அதிகாரிகளால் வதைத்து துன்புறுத்தி கொல்லப்பட்டனர். அமெரிக்கப் படையினர் நாஸி ஜெர்மனியைத் தாக்கி ஹிட்லர் கொல்லப்படுவதற்கு ஒரு நாளைக்கு முன் அதாவது, 1945ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25ம் தேதி இச்சித்ரவதை முகாமில் அடைக்கப்பட்டோர் அமெரிக்கப் படையினரின் உதவியால் சுதந்திரக் காற்றை சுவாசித்தனர்.
இன்று காலம் எவ்வளவோ மாறிவிட்டது. இன்றைய ஜெர்மனியை அன்றைய ஜெர்மனியோடு ஒப்பிட முடியாது. மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசத்தை காண்கின்றோம். அன்று இருந்த ஆரிய சமுதாயம் என்ற இனவெறி, ஈடுபாடு இன்று இல்லை. அன்றைய ஆவணப் படங்களையும் அக்கால நிகழ்வை ஒட்டி எடுக்கப்படுகின்ற சினிமா படங்களையும் பார்க்கும் போது ஜெர்மனியில் இப்படியும் கூட நடந்திருக்குமா என்ற அய்யத்தை உருவாக்குவதை மறைக்க முடியவில்லை.
அன்றைய நாஸி கொடுமைகளைப் பற்றி பேசி தன்னைத்தானே சுய பரிசோதனை செய்துகொள்ளும் தைரியசாலிகள் தான் இன்றைய ஜெர்மானியர்கள். தன் இனம் வேற்று இனத்திற்குச் செய்த தவற்றை தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் திறந்த மனத்துடன் பேச இம்மக்கள் தயங்குவதில்லை. நாஸி போதனைகளால் மயங்கிக் கிடந்த மனிதர்களில் எஞ்சியிருப்பவர்களைத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வரலாற்றில் முக்கிய நாட்களில் நடைபெறும் சில விவாத நிகழ்வுகளில் பார்க்கக்கூடிய வாய்ப்பு அமைகின்றது. அவர்களது அக்காலத்தைய மன நிலை, அவர்களை எவ்வாறு அவர் தம் குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டனர், ஏற்றுக்கொள்கின்றனர் என்பதை குடும்பத்தாரையெல்லாம் அழைத்து வந்து வைத்துக் கொண்டு அலசும் தைரியமும் மனத்திடமும் பாராட்டுதலுக்குறியது.
எந்த இனம் அல்லது எந்த மனிதர் தன் தவற்றை தானே பார்த்து அலசி ஆராய்ந்து .. “ஆம் நான் இதனைச் செய்தேன். இது தவறு. அதற்கான விளைவுகளுக்கு நான் பொறுப்பேற்கின்றேன்” என நினைக்கின்றாரோ அவர் தன்னைப் புடம் போட்டுக் கொண்டு மேன்மையடையமுடியும். அவ்வினம் தன்னை திருத்திக் கொண்டு பரந்த நோக்கத்தைப் பெற முடியும். ஆனால் அதற்கு எதிர்மாராக “நான் செய்ததெல்லாம், செய்வதெல்லாம், செய்யப்போவதெல்லாம் நன்மை உண்மை” என்று வாதாடும் நபர்களும் சமூகமும் தன்னிலையை மேம்படுத்திக் கொள்ள இயலாது என்பது தான் சமூகவியல் உண்மை.அந்த வகையில் இக்கால ஜெர்மானிய சமூகம் நாஸி காலகட்டத்திலிருந்து பல பாடங்களைக் கற்று புடம்போட்டு செம்மை படுத்தப்பட்ட சமூகமாகத் திகழ்கின்றது. அதன் விளைவாக இன்றைய ஜெர்மனியில் இன்றைய வெளியுறவுக் கொள்கை என்பது மனிதாபிமானம் மிக்க ஒரு கொள்கையாக உலக நாடுகள் அங்கீகரிக்கின்ற ஒரு முத்திரையைப் பெற்றிருக்கின்றது.
டாஹாவ் கிராமத்தில் இருக்கும் நினைவுச் சின்னப் பகுதி 1965 ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த சித்ரவதை முகாமை உருவாக்குவதில் வரலாற்று ஆய்வாளர்கள் மட்டும் பங்கெடுத்துக் கொள்ளவில்லை. இங்கு கைதிகளாக அடைக்கப்பட்டிருந்தோர் பலர் இணைந்து இந்த நினைவகத்தை முழுமையாக்கியிருக்கின்றனர்.
டிக்கட் பெற்றுக் கொண்டு சித்ரவதை முகாம் நோக்கி செல்லும் பாதை
டாஹாவ், பவேரியா மானிலத்தின் தலைநகரமான மூனீக் செல்வதற்கு முன்னராக இருக்கின்றது. இப்பகுதிக்குச் செல்லும் சாலையில் இச்சித்ரவதைமுகாம் பற்றிய தகவல் சாலைகளில் ஆங்காங்கே காணக்கூடியதாக இருப்பதால் இந்த இடத்தைச் சென்று சேர்வதில் எவ்வகைச் சிரமமும் இருக்காது. நான் வாகனத்தில் சென்றதால் நேரடியாக முகாமின் முன் வாசல் பகுதி வரை சென்று கார் நிறுத்தும் இடத்தில் நிறுத்தி விட்டு உள்ளே சென்றேன்.
இங்கே பெரியவர்கள் ஒவ்வொருவருக்கும் 8 யூரோ கட்டணம் வசூலிக்கப்படுகின்றது. மாணவர்களுக்கும் வயதானவர்களுக்கும் சலுகை உண்டு. மலேசியாலிருந்து என்னைச் சந்திக்க வந்திருந்த என் தோழி சரஸ்வதியையும் என் உறவினர் திலகேஸ்வரியையும் என்னுடன் அன்று அழைத்துச் சென்றிருந்தேன்.
இச்சித்ரவதை முகாம் நினைவகத்தை அமைக்க பவேரிய மானிலம் பொருளாதார உதவியை வழங்கியுள்ளது. முகாம் இருக்கும் பகுதியில் ஓரிடத்தில் 2003ம் ஆண்டு வாக்கில் கண்காட்சி கூடம் ஒன்று நிர்மாணித்து முடிக்கப்பட்டது. இது, வதை முகாமில் இருந்த ஐரோப்பாவின் பல நாட்டு கைதிகள் பற்றிய தகவல்களைச் சொல்வதாகவும், அந்த நாடுகளில் அவர்களது அரசியல் நடவடிக்கைகளைப் பற்றி விவரிக்கும் தகவல் களஞ்சியமாகவும் இருக்கின்றது. இங்கே ஒரு தனி அறையில் தொடர்ச்சியாக குறும்படங்கள் குறிப்பிட்ட சில மொழிகளில் திரையிடப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டும் வருகின்றது.
அன்று, அரசியல் கைதிகள் ரயிலில் அழைத்து வரப்படுகின்றனர்
இன்று, அதே பகுதி
டாஹாவ் சித்ரவதைமுகாம் சாலையை ஒட்டியே அமைந்துள்ளது. வெளியிலிருந்து பார்க்கும் போது இன்னாளைய சிறையை ஒத்த ஒரு அமைப்பு. அதனைத் தொடர்ந்து உள்ளே செல்லும் போது சிறிய கண்ணாடி கூடம் ஒன்று அமைந்துள்ளது. இங்கே தான் கட்டணம் கட்டி டிக்கட்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இங்கே நினைவுச் சின்னங்கள் விற்கும் கடை, உணவு அங்காடி ஆகிய பகுதிகள் இருக்கின்றன. வெளியே வந்ததும் அங்கே அம்பு குறியிடப்பட்ட பாதை வழிகாட்டியைப் பார்த்துக் கொண்டே ஒவ்வொரு பகுதியாக பார்த்து முடிக்கலாம். நாங்கள் டிக்கட்டை பெற்றுக் கொண்டு அம்புக்குறியிட்ட பாதையில் சித்ரவதை முகாமை நோக்கி நடக்கலானோம். முகப்புப் பகுதியிலிருந்து ஏறக்குறைய 150மீ தூரம் இந்த முகாம் உள்ளது. நடந்து வரும்போது நமக்கு வலது புரத்தில் இச்சித்ரவதை முகாம் இருக்கின்றது. இடது பக்கத்தில் ரயில் பாதை தண்டவாளம் இருக்கின்றது. இப்போது இங்கே ரயில் பயணச் சேவை நடப்பில் இல்லை. ஆனால் அன்று இருந்திருக்கின்றது. இந்த ரயிலில் தான் சிறைப்பிடிக்கப்பட்ட அரசியல் கைதிகளை முகாமிற்கு அழைத்து வருவார்கள். அங்கே நின்று அவர்கள் மன நிலையை சற்றே யோசித்துப் பார்க்கும் போது அச்சம், வேதனை, கோபம், ஆகியவற்றின் பிரதிபலிப்பின் உணர்வு அலைகள் நம்மையும் சூழ்வதை நம்மால் தடுக்க முடியாது.
சித்ரவதை முகாம், முன் வாசலில்
சரி, வலது புரம் திரும்பி சித்ரவதை முகாமிற்குள் செல்வோம். தொடர்ந்து வாருங்கள்!
இது மிகவும் முக்கியமான பதிவு. 1945ல் நான் பள்ளி மாணவன். சுபாஷிணி சொல்லிய நிகழ்வை அப்போதே என் தந்தை விவரமாக எனக்கு விளக்கினார, கண்ணீர் மல்க.
அன்றைய நாஸி கொடுமைகளைப் பற்றி பேசி தன்னைத்தானே சுய பரிசோதனை செய்துகொள்ளும் தைரியசாலிகள் தான் இன்றைய ஜெர்மானியர்கள். தன் இனம் வேற்று இனத்திற்குச் செய்த தவற்றை தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் திறந்த மனத்துடன் பேச இம்மக்கள் தயங்குவதில்லை என்பதை ஜெர்மனி சென்றபோதெல்லாம் வெளிப்படையாகக் கண்டேன்.
ம்னிதன் ஒரு புதிர். ஹிட்லரை ஓஹோ என்று ஜெர்மானியர்கள் ஹிண்டன்பெர்க் வீழ்ச்சியின் போது புகழ்ந்தார்கள். அதன் காரணம் சராசரி மனிதனை ஏமாற்றுவது எளிது என்பதே. இந்தியாவில் அந்த அபாயம் கண்கூடு.
கொலோனில் ஒரு அதிசயமான. இறவா புகழ் வாய்ந்த மாதாகோயில் இருக்கிறது. இங்கிலாந்து விமானப்படையினரால் சேதப்படுத்தபட்டது. அவர்களே தங்கள் தனிமனிதர் சேமிப்பிலிருந்து அந்த கோயிலின் புனரமைப்பு செய்தார்கள்.
யுத்தத்தின் போது கிருஸ்த்மஸ் பண்டிகை அன்று இரு தரப்பு ராணுவத்தினரும் சண்டையை நிறுத்தி கால்பந்து விளையாடினர். இந்தோ பாகிஸ்தான் ப்பர்டரிலும் இந்த சினேகிதத்தைப் பார்த்திருக்கிறேன்.
சுருங்கச்ச்சொல்லின்,
1. இத்தகைய அலசல்கள் மாணவ சமுதாயத்தை அடைய வேண்டும்.
2. மனிதன் நல்லவன்; அவனை தீயவனாக ஆக்குவது ஹிட்லர் போன்ற பிசாசுகளுக்கு எளிது.
3. வல்லமை பொருட்டு ஒரு கருத்து. நியூ யார்க் டைம்ஸில் ஒரு அருமையான கடுரை படித்தேன். 1425 பின்னூட்டங்கள். ஒவ்வ்வொன்றும் மெருகு ஏற்றின, விமர்சனம் செய்தன. கட்டுரையை பலமடங்கு மேன்படுத்தின. நம் வாசகர்களோ காஷ்டமவுனம். ஏனோ?