Blog

  • கற்பதெப்போ?

    -கவியோகி வேதம்

    வானவில் வளைவில் எழும்ஏழ் நிறங்களை
    வாகாய்க் குழைப்பவன் நீயா?
    கூனல் இளம்பிறைச் சில்லில் அழகினைக்
    கூட்டும் சிற்பியும் நீயா?

    வண்ணத்துப் பூச்சியின் ‘ றெக்கையைப்’ பிடித்தே
    வர்ணம் தீட்டுவோன் நீயா?
    சுண்ணம் தீட்டாது புறாவினில் வெண்மையைச்
    சுடரவே விட்டவன் நீயா?

    என்னஓர் விந்தையும் இஃதுபோல் செய்யாமல்
    எத்தனாய்ப் பீற்றல்கள் நெய்பவனே!
    சின்னதோர் வேலைக்கும் ஊழல் பெரிதாய்ச்
    செய்திடும் தன்னல மானிடனே!

    மேகம் கறுக்கையில் மயில்நடம் ஆடியே
    மெலிதாய் மகிழ்வினை ஊட்டுதல்போல்
    தாகம்கொள் ஏழைக்கு நீரேனும் தந்துநீ
    தளர்ச்சி குறைத்துக் களித்ததுண்டா?

    பாதையில் போகையில் வாகனம் மோதினால்
    பார்த்துநீ ‘அவரை’யே காத்ததுண்டா?
    சோதனைச் சிக்கலில் மாட்டிய ஏழைக்குச்
    சுணங்கா(து) உதவிகள் செய்ததுண்டா?

    பாம்பினைக் கண்டதும் ஓயாமல் கத்தும்
    பருத்த குரங்கதன் செய்கையைப்போல்,
    தேம்பிப் புலம்பிடும் பாட்டிபோல் பேசும்நீ
    ‘தேவனாய்’ உயர்–வழி என்றுகற்பாய்?

     

    Share
  • இணைந்த இதயங்கள் …

    —கலைமகள் ஹிதாயா.

    “வாழ்கையில் துன்பம் வருவது இயற்கை அதை நான் மறுக்க வில்லை. ஆனால் தொடர்ந்து துன்பம் தான் வாழ்க்கையாகி விட்டாள்…வாழ்வதில் என்னடி அர்த்தம்….?”

    “பரீனா, வாழ்க்கை பூராகவும் நீ துன்பத்தைத் தான் அனுவிக்க வேண்டுமென்று இறைவன் தலையில் எழுதியிருந்தால், அதை நானோ, நீயோ தடுத்து நிறுத்த முடியுமா என்ன? “ஓடும் நதி வழியே ஒருத்தி மட்டும் விதி வழியே” என்று கவிஞர் கண்ணதாசன் எழுத எண்ணினாராம். ஆமாம், விதி வழி என்ற ஒரு வழி இருக்கத்தான் செய்கிறது. அதனை ‘இறைவழி’ என்று அழைத்தாலும் பிழை இல்லை என்றே எண்ணுகிறேன். எனவே, எந்த நேரத்தில் எது வந்தாலும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு வாழ்வது தாண்டி வாழ்க்கை. ஆகவே நாம் தான் நாம் மனத்தைப் பண்படுத்திக் கொள்ள வேண்டும்.”

    அப்போ, காலமெல்லாம் கண்ணீர் வடித்துக் கொண்டு அவரோடு வாழ்வதற்காகவே என்னை அவரையே திருமணம் செய்யும் படி சொல்கிறாய்”…? பரீனா பரிதாபமாகக் கேட்டாள்.

    “என் உடலில் என் உயிர் உள்ளவரை என்னிதயத்திலிருந்து எந்தச் சக்தியாலும் உன்னைப் பிரிக்கவே முடியாது….உன்னைத் தவிர வேறு ஓர் ஆடவனின் நிழல் கூட என்னில்படுவதை ஒரு போதுமே விரும்பமாட்டேன் என்று, அன்று ஞாயிற்றுக் கிழமை பல்கலைக்கழக கேட்போர் ஹோல் மண்டபத்தில் வைத்து நஜீமிடம் சொன்னவற்றை இன்று கனவாக நினைத்து மறந்து போய் பேசுகின்றாய் என்று நினைக்கின்றேன். அன்று இதயத்திலே பாசம் படரும் போது சத்திய வாக்கை பனித் துளியாக தூவினாயே … நட்பு மலர் காதலாக செழித்து இல்லற வாழ்வில் நறுமணம் நல்லறமாக வீசவேண்டுமென்று எதிர் பார்த்தாயே … ஆனால் அது இன்று உனக்கெங்கே ஞாபகத்துக்குவரப் போகுது எல்லாமே காற்றோடு காற்றாக பறந்துவிட்ட தூசியாகிவிட்டதே” இர்பானா கிண்டலாகப் பேசினாள்.

    “இர்பானா, என் என் நிலைமையை உணராமல் ஏண்டி இப்படியெல்லாம் பேசுகின்றாய். “

    “நீ தான் பரீனா உன் நிலைமையை உணராமல் மூடத்தனமாக நிதானமிழந்து பேசுகிறாயா? பரீனா, கொஞ்சம் சிந்தித்துப்பார். நஜீம் வசதியாக இருந்த போது அவருக்கு காதலியாக இருந்து விட்டு இப்போ நீ ஓர் டாக்டராக மாறிவிட்டாய் என்பதற்காக அவரை விட்டு விலகி வாழ்கிறாயே மரம் விட்டு மரம் தாவும் குரங்குக்கும் உனக்கும் என்னடி வித்தியாசம்.”

    இர்பானா சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் பரீனாவின் உள்ளத்தை கரையான் அரிப்பது போல அரித்தது. பல்கலைக் கழக படிப்பை முடிந்தவுடன் திருமணம் செய்து கொள்ளத் துடியாத் துடித்தவர்களை பெற்றோர் பிரித்து வைத்தார்கள். பரீனா பெற்றோரின் கட்டுப் பாட்டுக்குளிருந்து மட்டக்களப்பு ஆதார வைத்தியசாலையில் டாக்டராக பணி புரிந்து கொண்டிருந்தாள். நஜீம் எதிர்புகளுக்கிடையில் பெற்றோரின் கட்டுப்பாடுகளை உடைத்தெறிந்து விட்டு தனிமையில் வாழத் தொடங்கினான்.

    நஜீம் கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் ஆசிரியராகப் பணிபுரிந்தான். பரீனா நஜீம் இருவருக்கிடையில் கடிதத் தொடர்புகளுமின்றி ஒருவர் நினைவில் ஒருவர் வாழத் தொடங்கினார்கள். இன்பமே நிறைந்திருந்த அந்த இளஞ்ஜோடிகளின் இதயத்தில் திடீரென்று ஒரு நாள் துன்பம் தடவிப் பார்த்தது. நஜீம் பரீனாவின் தற்காலிகப் பிரிவு தாங்கமுடியாமல் அல்சரா புகைப்பதில் பெரிதும் ஈடுபாடு கொண்டான். இதன் விளைவு வயிற்றில் புண்களை உருவாக்கியது. திரும்பத் திரும்ப புகைத்ததால் அல்சராக் கூடி கடுமையாக பாதிக்கப்பட்டான். இதனால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த நஜீமை அவனது பெற்றோர் உடனடியாக மட்டக்களப்பு ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்காக அனுமதித்தார்கள்.

    பரிசோதனை செய்வதற்காக வார்ட் நோக்கி வந்த பரீனா நஜீமின் நிலைமையை அறிந்து மனவேதனைப்பட்டாள். பனித் துளிகளைப் போல் கண்ணீரை தூவினாள். நண்பி என்ற முறையில், இர்பானாவிற்கு தன்னால் இயன்ற உதவிகளையெல்லாம் செய்து வந்தாள் பரீனா. தன்னோடு ஓர் தாதியாகவும் சேர்த்துக் கொண்டாள். நஜீம் மீது உயிரையே வைத்திருந்த பரீனா, அவரது கீழ்த்தரமான இந்தச் செயலை நினைத்து நினைத்து இரவு நேரங்களில் தலையனையை ஈர மாக்குவதுடன் சுடுமணலில் துடிக்கும் புழுவைப் போல் துடித்தாள்.

    உடல் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாத நஜீம் அவள் காதைப் பிடித்து கட்டிலுக்கு அழைக்கும் போதெல்லாம் அவனது மூளைக்கு அதிகம் வேலை கொடுக்கக்கூடதென்பதற்காக விலகிப் போவாள். சில நேரங்களில் தன்னையும் மறந்து நஜீம் மீது கோபமடைவாள். நாளமையில் அவனது உடல் நிலை பரீனாவிற்கு தாங்க முடியாத துயரத்தையும், சிந்தனைகளையும் ஏற்படுத்தியது. தன் வாழ்க்கை சோகமான வரலாறாகிவிட்டதாக நினைத்தாள். கடைசியில் நஜீம் நினைவை விட்டு விலகி தனிமையில் வாழ முடிவெடுத்தாள்.

    “இர்பானா நீ என்ன சொன்னாலும் சரிடி; நான் எடுத்த இந்த இறுதி முடிவை நான் ஒரு போதும் மாற்றிக்கவே மாட்டேன்டி”.

    “பரீனா …..இப்பத்தாண்டி தெரியுது ….உன் நஜீமை விட்டு விட்டு எதுக்காக நீ ஓர் இறுதி முடிவு எடுத்துள்ளாய் என்பது. எப்படியாவது நஜீம் மூளைக்கு அதிகமான வேலை கொடுக்காமல் அவரை பழைய நிலைக்கு மாற்ற வேண்டுமென்ற என்ற எண்ணம் உனக்கு இருக்கு. தானும் மாற வேண்டுமென்ற எண்ணம் அவருக்கும் உண்டு. இவர் இனி பிழைத்து மனிதராக மாட்டாரோ என்று நீ நினைத்து இப்படி ஓர் முடிவை எடுத்துக் கொண்டாயோ? “

    “அப்படியொரு எண்ணம் என் மனதில் இருந்திருந்தால் எப்பவோ நான் அவரைவிட்டு விலகி என் பெற்றோர் பேசி பிடிவாதமாக கட்டிக் கொள்ளும்படி கூறும் சொந்த மச்சானை திருமணம் செய்திருப்பேன். இத்தனை வருடகாலமாக இவருக்காக நான் இப்படி வாழ்ந்திருக்கவே மாட்டேன்”.

    பரீனா சொல்லி முடித்து தலை நிமிர,  தாதி ஒருவர் வந்து அழைத்தாள். பரீனா எழுந்து சென்று நஜீமை பார்க்கச் சென்றாள்.

    நஜீம், “பரீனா, என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என் வருத்தம் நல்லாச் சுகமாகி விட்டது. வீட்டுக்குச் செல்ல ஆசைப்படுகின்றேன். என் டிக்கட்டை வைத்தியசாலையிலிருந்து கட் பண்ணி விடுங்கள்”.

    சற்று நேர மௌனத்திற்குப் பின் பரீனா சொன்னாள் “நஜீம் வசதியான குடும்பத்தில் பிறந்த நீங்கள் சந்தோசமாக வாழ்ந்திருக்கலாமே? நான் உங்களுக்கு என்ன துரோகமா செய்தேன். இப்பே நீங்களாகவே நோயை தேடிக் கொண்டீர்களே”

    திடீரென்று பரீனா … பரீனா … என அழைக்கும் அழைப்பை கேட்டுத் திரும்பினாள்….அழைத்தவள் இர்பானா .

    ” என்னடி வந்திட்டியா?”

    “ஆமாடி “

    “எப்படி நஜீம் வருத்தமெல்லாம்?” இர்பானா கேட்டாள்.

    “கொஞ்சம் பரவாயில்லை இர்பானா “

    “பரீனா நஜீம் பாவம்டி, உன் பிரிவைத் தாங்க முடியாமல்தாண்டி அவர் இந்த நிலைக்கேத் தள்ளப்பட்டார். நீதாண்டி அவருக்கு நோய் ஏற்படக் காரணமாக அமைந்தவள்”

    இர்பானாவை முறைத்துப் பார்த்தாள் பரீனா, அவள் கண்கள் மட்டுமல்ல உள்ளமும் கண்ணீர் வடித்தது.

    “இதோ கேள் பரீனா….நஜீம் என் உடன்பிறந்த தம்பியடி. என் பெற்றோருக்கு இவன் மட்டுந்தாண்டி ஆண் செல்வம். என் தாய் இவனை கண்ணை இமை காப்பது போல் காத்து வந்தாள். என் தாய் காலமாக தந்தை இன்னும் ஓர் பெண்ணை திருமணம் செய்து கொண்டவர், இவனையும் கூடவே கூட்டிச் சென்று இந்த நிலைமைக்கு படிக்கவைத்தார். நான் என் சிறிய தாயிடம் இணைந்து கொண்டேன். அதனால் எங்கள் இருவரது பாசங்களும் பிரிவில் வாடியது என் தம்பியின் தரத்திற்கும், என் ஏழ்மையின் நிலைக்கும் இடைவெளிகள் பல…. அதனால்தாண்டி பரீனா என் தம்பியிடம் நான் யார் என்பதை காட்டிக் கொள்ளவில்லை. உன் மனதை விட மேலாக என் மனம் வேதனைத்தீயில் எரிந்து கொண்டிருக்கிறது.”

    “இர்பானா…..அப்போ நீ என் மைனியாடி….? ஏண்டி இத்தனை வருடமும் என்னிடம் மறைத்தாய்….” இறுக கட்டிப் பிடித்துக் கொண்டு இர்பானாவின் தலையை தடவிக் கொண்டே அழுதாள்.

    “இர்பானா என் வாழ்க்கையில் தான் துன்பமும்,வேதனையும் நிறைஞ்சிருக்கின்னு நினைச்சுக்கிட்டிருந்தேன். அது உன்னுடைய வாழ்க்கையிலேயும் நிறைஞ்சிருக்கு என்பதை இப்போ நான் தெரிஞ்சுக்கிட்டேன். இன்னும் சொல்லப் போனால், துன்பத்தின் மத்தியில் தான் இன்பமே உண்டு என்பதையும் புரிஞ்சுக்கிட்டேன்……இனிமேல் என்னவரை….ஆமாம், உன் ஆசைத் தம்பி நஜீமை விட்டுப் பிரிந்து ஒரு நிமிடம் கூட விலகி வாழவே மாட்டேன்னம்மா உறுதி”

    கன்னத்தில் கொட்டிக் கொண்டிருந்த கண்ணீர் துளிகளை துடைத்துக்கொண்டே பரீனா இர்பானாவை அழைத்துக் கொண்டு நஜீமை பார்க்கச் சென்றாள். இர்பானா நஜீமை கட்டியணைத்துக்கொண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தாள் நஜீம் ஒன்றும் புரியாது விழித்தான்.

    பரீனா விடயத்தை விபரமாகச் சொன்னாள். இருவர் கண்களிலும் கண்ணீர் வழிடிந்தோடின. அது ஆனந்தக் கண்ணீர்தான்.

    இர்பானா நஜீமிடம், ” தம்பி, பரீனா ஓர் பெயர் பெற்ற தரமான டாக்டர். இறைவன் துணையால் அவள் உன் நோயை சுகப்படுத்துவாள். முதலில் நீ என்னில்லம் போக வா……இரவைக்கே உங்கள் இருவரையும் நான் மனப்பூர்வமாக இணைத்து வைக்கின்றேன்”, என்று அன்போடு அழைத்தாள். பக்கத்து வீதியில் அமைந்திருந்த ஹோட்டலில் இருந்து வானலை ஊடாக….,
    நல்வாழ்த்து நான் சொல்வேன்………
    நல்லபடி வாழ்கவென்று….
    கல்யாணக் கோயிலிலே
    கணவன் ஓர் தெய்வம்மா……
    எனும் பாடல் தவழ்ந்து கொண்டிருந்தது.

    Share
  • குறளின் கதிர்களாய்…(63)

    -செண்பக ஜெகதீசன்

    களித்தானைக் காரணங் காட்டுதல் கீழ்நீர்க்
    குளித்தானைத் தீத்துரீஇ யற்று. (திருக்குறள்:929 – கள்ளுண்ணாமை)

    புதுக் கவிதையில்…

    விளக்கு வைத்துக்
    குளத்தில் விழுந்தவனைத்
    தேடிடும்
    வீணான செயல் போன்றதே,
    காரண காரியம் காட்டி
    அறிவுரை சொல்லிக்
    குடிகாரனைத்
    திருத்த முயல்வதும்…!

    குறும்பாவில்…

    குடித்தவன் திருந்தச்சொல்லும் அறிவுரையும்,
    குளத்துநீரில் விழுந்தவனைத் தேடக்
    கொளுத்திடும் பந்தமும் பயனில…!

    மரபுக் கவிதையில்…

    குளத்து நீரில் விழுந்தவனைக்
       கண்டு பிடித்துக் கரையேற்ற
    விளக்கு கொளுத்தித் தேடுதல்போல்
       வீணாம் செயலது ஏதுமில்லை,
    அளவை மிஞ்சிக் குடிப்பவர்க்கே
       அறியக் காரணம் சொன்னாலும்
    இளகி மனமது திருந்தாரே,
       இதுவும் அதுபோல் வீண்தானே…!

    லிமரைக்கூ…

    விழுந்தவனை விளக்குடன்தேடிப் பயனில்லை நீரில்,
    குடித்தவனைக் காரணம் பலசொல்லித்
    திருத்திவிடப் பார்ப்பதிலும் பலனேதுமில்லை பாரில்..!

    கிராமிய பாணியில்…

    தேடாத தேடாத
    தண்ணிக்குள்ள தேடாத,
    உழுந்தவனக் கண்டுபுடிக்க
    வெளக்குவச்சித் தேடாத,
    பந்தம்வச்சித் தேடுனாலும்
    பலனேதும் கெடயாதே…

    அதுபோல,
    சொல்லாத சொல்லாத
    காரணமெல்லாஞ் சொல்லாத,
    கள்ளுகுடிச்சவன் திருந்தமாட்டான்
    காதுலயும் வாங்கமாட்டான்,
    சொல்லாத சொல்லாத
    நல்லவார்த்த சொல்லாத…

    தேடாத தேடாத
    தண்ணிக்குள்ள தேடாத…!

     

    Share
  • தனிமை!

    -மெய்யன் நடராஜ், இலங்கை

    வாலிபத்தைத் தின்று தீர்த்து 
    வயோதிகத்தின் நுழைவாயிலில் நின்று 
    வரவேற்புச் செய்கிறது தனிமை! 

    ஞாபகச் சிறகசைத்து 
    அண்டங்கள் தாண்டிப் 
    பறக்கத்தொடங்கி விட்டது அது! 

    நிழலின் கரம் பிடித்து 
    நெடுந்தூரம் போன பின்னும் 
    இளைப்பாற இடம்தேடி 
    ஏக்கத்தில் தவிக்கத் தொடங்கியும் விட்டது! 

    துயரங்களின் சுரம் பிரித்துத் 
    துக்கங்களால் இசை அமைத்துத் 
    தோல்வியின் பாடல்களும் 
    பாடிக் கொள்கிறது! 

    இதயத்தைச் சுட்டெரிக்கும் 
    வாழ்வின் அவஸ்தைகளோடு 
    விடைகள் இல்லாத கேள்விகளின் 
    பாரம் சுமந்து 
    புன்னகை தொலைத்து 
    நாளையைப் பற்றிய போராட்டங்களோடு 
    புறப்பட்டுப் போகிறது! 

    மௌனத்தின் புலம்பல்களோடு 
    மயானத்தை தழுவத் துடித்து 
    ஊமையாய் ஊர்வலம் போகிறது ஒரு 
    ஊதாரித் தனிமை!

     

    Share
  • தாய்மை (2)

    ஜெயஸ்ரீ ஷங்கர்

    lfopy_199381

    தாய்மை தாங்கும் அச்சாணி
    வெறும் கவிதைக்குள்
    அடங்கி விடுமா தாய்மை…?

    உதிரம் பகிர்ந்த உறவுகளின்
    உணர்வை ஆணிவேராக
    இதயம் புகுந்து ஊன்றி
    விழுதுகள் மண் தொடும்
    நங்கூரம் தாய்மை..!

    இளமையில் இனிமையானது
    முதுமையில் தனிமையானது
    கடமையில் மேன்மையானது
    பொறுமையில் பூமியானது
    தூய்மையான கருணையே தாயானது..!

    சுழலும் பூமிக்கு அச்சாணி
    தவிக்கும் இதயத்தின் தோணி
    இலக்கில் உயர்த்தும் ஏணி..
    குடும்பத்தைக் காக்கும் ஜீவ ஊருணி..!

    மேன்மை கண்ட தாய்மை
    மென்மை கொண்ட பதுமை
    வறுமை இடத்தும் பெருமை
    கொள்ளும் அவள் அருமை
    மங்கை கொண்ட மகுடம் தாய்மை ..!

    கொட்டிக் கொடுத்தாலும்
    கிட்டாத சிம்ஹாசனம்
    அடையாளம் இல்லாத
    ஆத்மீக ரகசியம்..தாய்மை ..!

    வெடித்த பாறையில் பச்சிலை போல்
    விரிந்த வானத்தின் கார்மேகம் போல்
    பொங்கும் கடலின் தொடர் அலைபோல்
    இறைவன் தந்த சீதனம்..தாய்மை..!

    உன்னதத்தை உன்னதத்தால் உன்னதமாக்கும்
    உருவுக்குள் அடங்கி விடாது
    உணர்வுக்குள் முடங்கி விடாது
    கவிதைக்குள் வீழ்ந்து விடாது…தாய்மை ..!

    உயிருக்குள் உயிராக
    உலகுக்கே உயிராக
    பெருஞ்ஜோதியின் வரமான
    பெருங்கருணையல்லவா..தாய்மை ..!

    Share
  • படக் கவிதைப் போட்டி – 4

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    16483711086_5e9d5432f1_z

     

     

    நித்தி ஆனந்த் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (21.03.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை முனைவர் அண்ணாகண்ணன் தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

     

     

    Share
  • இழக்கக் கூடாததை இழந்தவர்களாய்!

    -கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

    உண்மை என்று நம்பியதற்காக
    வெற்றி பெறுவதற்குமுன்
    தீர்த்து விடவா
    இத்தனைப் பட்டாசுகளையும்
    தீர்த்துக் கட்டினாய்?

    தீமைகள்
    நல வழிப்பட்டதென்று
    எமது
    தியாக வரலாற்றின்
    தீர்வுகள்
    இருண்ட சாம்ராஜ்யங்கள்! 

    நமது
    சாவகாசங்கள்
    புஸ்வாணங்களும்
    பட்டாசுகளுந்தான்!
    அதனால்தான்
    நமது பட்டுக்களின் மேல்
    இச்சை தீர்க்கிறான்
    பக்கத்து வீட்டான்! 

    எட்டிப் பாருங்கள்
    எத்தனை யுவதிகள்
    இழக்கக் கூடாததை இழந்தவர்களாய்!

    பொத்திப் பொத்தி வளர்த்தானே
    நம் சகோதரன் – இன்று
    புட்டுக் கொண்டு வருவது
    வீரத்தின் விரல்கள் மட்டுமல்ல
    கதுப்புகளை நனைக்கும் கண்ணீரும்தான்! 

    கட்டுப் போட்டானே
    அச்சம், மடம், நாணம் என்று
    கசக்கிப் போட்டானே – கயவன்
    இச்சை கொண்ட மிருகம் என்று! 

    அமைதி காக்க அத்தாட்சிப் பத்திரங்கள் அதற்கு
    ஏந்தி வந்தான் துப்பாக்கியந்திரங்கள் -இந்தத்
    தப்பான தாத்பரியங்களுக்குத்
    தார்மீகத்தில்
    தியாகத் தீட்சைகள்! 

    அமைதி  ஒப்பந்தங்கள் – இவை
    அரசியல் தீப்பந்தங்ள் – அதில்
    நாம் இழந்தது உரிமைகளல்ல
    இராஜ தந்திரங்கள்
    இராணுவ ரகசியங்கள்! 

    தட்டி எழுப்பியவனே – எம்மைத்
    தட்டி உறங்க வைத்து விட்டுக்
    குரல் வளையை அறுத்துக்
    குருதி குடிக்கின்றான்! 

    காந்தியத்தின் தாயகமே
    கோர வெறியர்களை – நீயும்
    கொள்கைக் கொத்தர்களென்று
    கௌரவிக்கின்றாயே?!

    ஓ…!
    “கொல்” கைக் கொத்தர்கள்
    சேர்ந்து துகிலுரியும்
    கிருஸ்ண பரமாத்மாக்கள்!  

     

    Share
  • படக் கவிதைப் போட்டி – 3இன் முடிவுகள்

    அண்ணாகண்ணன்

    சிலை வணக்கம் புரியும் சிறுவனின் மனத்தில் புகுந்து, கலை மணக்கும் கவிதை வடித்த அன்பர்களுக்கு வாழ்த்துகள். புதுவை சரவணன் எடுத்த நிழற்படத்தின் சாரத்தை நிஜப் படமாய் எழுத முயன்றீர்கள்.

    16720185552_5ebd517bcb_o

    தெய்வத்தை வணங்கும் தெய்வம் என்று முகநூலில் ராமன் ஜனனியும் ஒரு தெய்வம் கடவுளை வணங்குகிறது…! என்று வேலுச்சாமியும் வர்ணித்தது, இந்தப் படத்திற்கான அழகிய தலைப்பு.

    வீட்டுச் சிக்கல்களையும் நாட்டுச் சிக்கல்களையும் சொந்தச் சிக்கல்களையும் தீர்க்க, இந்தச் சிறுவன் கடவுளை வேண்டுவதாக, கவிஞர்கள் அடுக்கிய விதத்தைக் கண்டோம். அதில்

    எப்போதும் இதையே பேசிடாமல்
    என்னை அவர்கள் கொஞ்சிடணும்

    என எஸ்.பழனிச்சாமியும்

    உன்னை வேண்டுவேன் படைத்தவனே
    உலகினில் வேண்டாம் அனாதைகளே…!

    என செண்பக ஜெகதீசனும் தீட்டிய வரிகளை ரசித்தேன்.

    எனினும் ஒரு முழுக் கவிதை என்ற அளவில் பார்க்கையில், பி.தமிழ்முகிலின் படைப்பு என்னை அதிகம் கவர்ந்தது.

    ஓட்டின் இடுக்கில் சின்னஞ்சிறு கூட்டில்
    சிட்டுக்குருவியும் குஞ்சுகளும்
    சுகமாய் தான் வாழனும்
    பூனையிடமிருந்து காத்திடனும் சாமியே!

    கோழிக் குஞ்சையும் வாத்து குஞ்சையும்
    பருந்து காக்கையிடம் இருந்து
    பத்திரமா காக்க வேணும் – அவையும்
    என் கண் முன்னே சிறகடிச்சு பறக்கனும்!

    கன்றுக் குட்டியும் ஆட்டுக் குட்டியும்
    என்னைக் கண்ட மறு நொடியே
    துள்ளி ஓடி வந்திடனும்
    அன்புடன் நானும் அணைத்திடனும்!

    சின்னச் சின்ன ஆசைகளின்
    சின்னஞ்சிறு பட்டியலிது
    பட்டியல் வளரும் வேளைதனில்
    பட்டென்று சொல்லிடுவேன் உன்னிடமே!

    பொய் பொறாமை புரட்டும் தான்
    என் மனதை அண்டாது காத்திடனும்
    அன்பும் பண்பும் எந்நாளும்
    குறையாது நானும் வாழ்ந்திடனும்!

    நாளும் உன்னைச் சந்தித்தே
    நலமும் கேட்டு மகிழ்ந்திடுவேன்
    நலமும் வளமும் உலகமெலாம்
    நிலைத்திடவே வேண்டிடுவேன்!

    இவற்றைச் சின்னஞ்சிறு ஆசைகளாகப் பார்த்தாலும் அர்த்தம் உண்டு. அதே நேரம், குறியீடுகளாகப் பார்த்தாலும் பொருள் உண்டு. மேலும் கடவுளை நலம் கேட்பது ஓர் அழகு என்றால், தனக்காக வேண்டாமல், உலகமெலாம் நலமும் வளமும் நிலைத்திட வேண்டுவது, இன்னும் அழகு. வேண்டும் என்பதன் பேச்சு வழக்கு வேணும் என்றே இருக்க வேணும். மூன்று சுழியை இரண்டு சுழியாக்கினாலும், கவிதை அம்சத்துக்காக, இந்த வாரத்தின் சிறந்த கவிஞராகப் பி.தமிழ்முகிலைத் தேர்ந்தெடுக்கிறேன்.

    அத்தனை பேரும் கடவுளை வேண்டுகையில், கடவுளே குழந்தையிடம் உரையாடுவது போல் மாற்றி யோசித்ததோடு மட்டுமின்றி,

    குட்டிச்செல்லமே…!
    கூடவே நானிருப்பேன் – உன்
    குட்டித்தோழனாக…!

    எனக் கடவுளைக் குட்டித் தோழனாக்கிய தனுவை இந்த வாரத்தின் குறிப்பிடத்தக்க கவிஞராக அறிவிக்கிறேன்.

    தமிழ்முகிலுக்கும் தனுவுக்கும் பாராட்டுகள். பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 157

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 04. ஊர் காண் காதை

    அங்காடி வீதி

    இரண்டு உருளையுடைய வண்டிகள்,
    மூடு வண்டிகள், அழகிய தேர் கொடிஞ்சி,
    உடலுக்குத் தேவையான கவசம்,                                      weapons.
    அனைவராலும் விரும்பப்படும்
    மணிகள் பதிக்கப்பெற்ற அங்குசங்கள்,
    தோலால் செய்யப்பட்ட கைகளுக்கான உறைகள்,
    இடுப்பில் அணியும் கச்சை உடைகள்,
    வளைதடிகள், வெண் சாமரங்கள்,
    பன்றிமுகக் கேடயங்கள்,
    சிறிய கேடயங்கள்,
    காட்டின் உருவம் பொறித்த கேடயங்கள்,
    குத்தும் கோல்கள்…

    செம்பு மற்றும் வெண்கலப் பொருட்கள்,
    கயிற்றால் முடிந்த பொருட்கள்
    நெட்டிப் புல்லால செய்யப்பட்ட மாலைகள்,
    ஈர்வாள் முதலிய கருவிகள்,
    தந்தத்தைக் கடைந்து செய்த வேலைப்பாடுகள்,
    வாசம் மிக்க புகைக்கான பொருட்கள்,
    பல வகைச் சாந்துகள்,
    பூவால் கட்டப்பட்ட மாலைகள்…

    இந்தப் பொருட்கள் அனைத்தும்
    ஒன்றுக்கொன்று வேறுபாடு தெரியாதபடி
    அனைத்தும் தம்முள் கலந்து கிடக்கின்ற
    அங்காடி வீதிகள்…

    இவ்வீதிகள் அரசரும் கண்டு மகிழும் வண்ணம்
    செல்வச்செழிப்பை உடையனவாய் இருந்தன.
    இவ்வீதிகளைக் கண்டுகொண்டே
    கோவலன் சென்றான்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 168 – 179

    http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1134-oorkankathai–

    படத்துக்கு நன்றி: கூகுள்

    Share
  • காதல் இனிது!

    -ஆர். எஸ். கலா

    இரு கண் நோக்கியதும் ஒரு ஈர்ப்பு
    இரு இதயம் இடம் மாறியதும் ஒருவித வியர்ப்பு
    இரு மனமும் இணைந்ததும் ஒருவிதத் தவிப்பு
    இரு வீட்டாரும் சம்மதித்ததும் ஒரே குதூகலிப்பு!

    இருகரம் இணைந்ததும் இல்லறம்
    இரு உடல் இணைந்ததும் இன்பம்
    இரு உயிர்களும் ஓர் உயிரானதும்
    விருப்பு வெறுப்பு சமபங்கு!

    காதல் என்னும் நாடகம் அரங்கேற்றம்
    கண்டது கணவன் மனைவியாக மேடையிலே
    தனிமையில் நோக்கிய கண்கள் இரண்டும்
    கைகோத்தது உறவினர் முன்னிலையிலே!

    முக்கனியும் செங்கரும்பும் என்ன இனிமை
    இக்குடும்பத்தில்  இனியது இனியது காதல் அல்லோ
    இவர்கள் இருக்கும் இடத்தில் பொழிந்து
    விடும் காதல் மழை அல்லோ!

    கனியான காதல் இனிப்பாகும்
    கலையாத கனவாய்  நிலையாகும்
    கணவன் கண்ணுக்கு நிலவாக மனைவியும்
    மனைவி நெஞ்சத்தில் சிலையாகக் கணவனும்
    காதல் காவியம் படிக்கலாம் இல்லறத்தில்
    படிப்படியாக!

    நம்பிக்கை என்னும் செடியில்
    பூக்கும் காதல் மலர் கொடுக்கும்
    இனிய காதல் கனியை இறுதி மூச்சை
    நிறுத்தி இறைவன் யாராயினும்
    இருவரில் ஒருவரை  அழைக்கும் வரை!

     

    Share
  • அந்தமானைக் காண வாருங்கள்!

    -ரா. பார்த்தசாரதி

    அந்தமானின்  அழகே  அழகு அதன் இயற்கை அழகைப் பருகு
    தென்னையும், கமுகும் ஒன்றோடுஒன்று கைகோர்த்து நிற்கும்
    கடலின் நடுவே நிற்கும் தீவாய்  நமக்குக் காட்சி  அளிக்கும்
    மனிதனின்   மனஅமைதிக்கு ஓர் உறைவிடமாய் இருக்கும்!   andaman

    வெள்ளி அலை மேலே  துள்ளி விளையாடும் கயல்கள்
    கடல் அடியில் சென்று  கடல் இனங்களைக் காணும் மக்கள்
    நீச்சல் தெரியாதவன் கூடக் கடல் அடியில் நடை போடுகிறான்
    அங்கே தன்னைச் சுற்றி வரும் மீன்களைக் கண்டு களிக்கின்றான்!

    சிறு படகும் இயந்திரப் படகும் பயணிக்கும் மக்கள்  கூட்டம்
    மனிதனுக்கு இயற்கை அழகை  மகிழ்வுடன் காண ஓர்  நாட்டம்
    கடலோரக் கவிதைகள் எழுத  மனிதனுக்கோர்  கண்ணோட்டம்
    காண்பதைக் கவிதை ஆக்குவதே  கவிஞனுக்குக் கொண்டாட்டம்!

    அந்தமான்  சிறையில் நமது தியாகிகள் பட்ட துன்பம்
    இதனைப் பொருட்காட்சியாக அமைத்த  விதம்
    சுதந்திரத்திற்காக அவர்கள்  சிந்திய ரத்தமும், தியாகமும்
    இன்று அதனை நினைக்காவிட்டால் நம் மனம் கலக்கமுறும்!

    சுற்றுலாப்  பயணிகள் கடற்கரையினைக் கண்டு களிக்கும் தீவு
    இரு தீவானாலும் ஒன்றில் பழங்குடியினர் வாழும் தீவு
    தேசத் தியாகிகள் பட்ட துன்பங்களைச் சித்தரிக்கும் தீவு
    நாட்டைவிட்டுத் தள்ளி இருப்பினும் தனித்தன்மை கொண்ட தீவு!

     

    Share
  • பேருந்துப் பயணம்!

    மீ.லதா, திருக்குவளை

    பரபரப்பான  காலைப்பொழுது
    அடித்துப் பிடித்துக் கிளம்பிச்
    சன்னலோர இருக்கை பிடித்து
    ’அப்பாடா!’ என்று பெருமூச்சி,
    பேருந்தில் அமர்ந்து
    காலை உண்ட உணவின்
    இடிபாடு தொண்டைக்குழிக்குள் சிறு அசைவாய்
    பல் இடுக்குகளிலும்!

    தனக்கு மட்டும்தான் இந்த வாழ்கை என்று புலம்பல்!
    அருகில் இருப்பவரை  மறந்து
    கொஞ்சமாக உரையாடலின்
    சத்தங்கள் மறந்து போன
    புத்தகம், எழுதாமல் விட்ட பக்கங்கள்,
    விடுமுறை இல்லையே என ஆதங்கத்தின் வெளிபாடு
    உறவு முறை விசாரிப்பு
    சற்று நேரத்தில் நிரம்பி வழிந்த பேருந்துகளில் சத்தங்களும்
    நடத்துனரின் கூக்குரலும்  ”டிக்கெட் யார் எடுக்க வில்லை?” என்று
    இவள் மனம் வீட்டிலேயே நின்றது
    மூடப்பட்டதா சமையல் பாத்திரங்கள்? சரியாகப் பூட்டப்பட்டதா?
    வீடு என்று
    இயந்திர வாழ்க்கையில் துருப்பிடித்த மனம்?

    Share
  • தந்தைக்கு ஒரு கவிதை!

    -றியாஸ் முஹமட்

    எழுத நினைக்கிறேன்
    ஒரு கவிதை,
    அடக்க முடியவில்லையே                son with sorrrow

    என் அழுகை!

    எழுது எழுது என்று
    நினைக்கிறது மனது
    அழுது அழுது

    என் பேனாவும் பழுது!

    என்ன வாப்பா அவசரம்?
    போகும் போதும் சொன்னீர்களாமே
    என்னைப் பத்திரம்!

    பேனாவை எடுத்தால்
    பேச்சு வரவில்லை வாப்பா
    ஏட்டை விரித்தால்

    எழுத்து வரவில்லை வாப்பா!

    காகிதமும் என் கண்ணீரால்
    கரைந்து போனதே வாப்பா
    தளை தட்டுது வாப்பா

    மூச்சு முட்டுது வாப்பா!

    எதுகை மோனை கூட
    அழுகை வேதனையாக ஆனதே வாப்பா
    நான் எழுதிய கவிதைகளும்

    கண்ணீர் வடித்துக் கதறுகிறதே வாப்பா!

    கூடவே இருப்பீர்கள் என்றுதானே
    கொடி போலப் படர்ந்தேன்
    பாதியில விட்டுப் போகவா

    பனமரம்போல வளர்ந்தேன்?

    என்ன வாப்பா அவசரம்?
    போகும் போதும் சொன்னீர்களாமே
    என்னைப் பத்திரம்!

    நான் சந்தி வழியிறங்கி
    பள்ளி செல்ல,
    சவூதி வழியிருந்து

    வழி சொல்வீர்களே வாப்பா!

    நாவலடிதானே போனீர்கள் வாப்பா
    காலடி கூட மாறவில்லையே
    மரணப்பிடி பிடிக்கையிலே

    என்னென்ன நினைச்சிருப்பீங்க
    தன்னந்தனியா தவிச்சிருப்பீங்க!

    போங்கள் போங்கள்!
    என் வாப்பா மண் மறைந்தார்
    என்று சொல்பவர்கள்
    என் கண் மறைந்து போங்கள்!

     

    Share
  • தேகமும் யோகமும் ..பகுதி 1-

    கவியோகி வேதம்

    images

    என்னிடம் யோகா-பயிற்சி பெற்ற அன்பர்களும் அவர்தம் நண்பர்களும் ‘சார்! ‘சார்! பிராணாயாமத்தைப்பற்றி கொஞ்சம் விரிவாகச் சொல்லுங்களேன் இல்லை,’ எந்த ஏட்டிலாவது,, இல்லை “வல்லமை’யிலாவது எழுதுங்களேன் என்றுஇடைவிடாது போன் மூலம் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். சொல்லலாம்தான். ஆனால் அது ஒரு தகுதியான குரு மூலமே கற்றுக்கொள்ளக்கூடியது. புத்தகத்தைப்பார்த்துக் கற்கும் வழி அன்று அது. மிக ஆழமான மூச்சு இழுத்தல் பற்றியும், மெதுவாகப் பின்பு விடுவதுபற்றியும் எவ்வளவுதான் இங்கே விவரித்தாலும் ஆசிரியர் மூலம் நீங்கள் கற்றால்தான் பயனளிக்கும். “ இனிஷியேஷன்’, அல்லது ஆசிரியர் உடல்தொட்டுப் பயிற்றுவிக்கும்( நேரடிக் கண்காணிக்கும்) வழிமுறைப்பயிற்சி அது.. ஏன் எனில் ஒரு ஆசான் பிராணாயாமம் சொல்லிக்கொடுக்கும்போது அவரது ‘வைப்ரேஷன்’ (-தொடு அதிர்வுகள்’ )மூலமே சீடனுக்கு அந்தத் தெய்வீகக்கலை வெற்றி கொடுக்கிறது. இது அனுபவ பூர்வ உண்மை. இதில் எள்ளளவும் ஐயமில்லை. மகான் விவேகாநந்தரின் சரித்திரத்தை ஆழமாகப்படிக்கும் எவரும் இதை ஒத்துக்கொள்வர். பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் அவரைத்தொட்டார். அவ்வளவுதான் தியானத்தில் ஆழ்ந்தார் விவேகாநந்தர்!!

    yoga

    ..1980இல் நான் இதுபற்றி விளக்கமாக என் ‘கசின்’ (பெரியப்பா பையன்)இடம் எடுத்துச் சொல்லியும், ஒரு தகுந்த ஆசான் மூலமே நீ மூச்சிழுத்தல் பற்றிக் கற்கவேண்டும். என் புத்தகத்தைப் படித்துச் செய்யாதே என்று பல தடவை அவனிடம் சொல்லியும் கேட்காமல் அவன்தன் வீட்டில் என் யோகா மற்றும் பிராணாயாமப் புத்தகத்தை முன்னால் வைத்துக்கொண்டு அதில் சொன்னவாறு செய்ய ஆரம்பித்தான்.

    சில இடங்கள் அவனுக்குப் புரியவில்லை. அப்படியும் மூச்சை ஏதோ ஒரு ரேஸ் குதிரை போல் காலைத் தூக்கிவைத்துக்கொண்டு(சீக்கிரமே இதில்) வெற்றி அடையவேண்டும் என்று தீவிர வெறியில்( என்மேல் பொறாமை?)_ மூச்சைப் பலமாக இழுத்து, ரொம்ப நேரம் கழுத்து நரம்புகள் புடைக்க நெற்றியில் மூச்சைத் தேக்கினான். வேகம் அதிகம் ஆனதால் மூன்றே நாளில் அவன் கழுத்துநரம்பு சுளுக்கிக்கொண்டது. மருந்து சாப்பிட்டுக் கொண்டே விடாமல் பலமாக இன்னும் மூன்று நாள் செய்தான். வெளியே விடும்போதும் உடல் பலத்தை அழுத்தி மூச்சைவிட்டான். புத்தகத்தையும் சரியாகப்படிக்கவில்லை.

    பத்துநாள் கழித்து அவன் வீட்டுக்குச் சென்றால் அவனது பெரியப்பா, “பாருடா இவனை. இரண்டுநாளாக ஏதோ மனம் பேதலித்தவன் மாதிரி ஆகாயத்தையே உற்று உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறான். யோகாவெல்லாம் பண்ற நீ இவனிடம் சொல்லி என்னவென்று கேட்டுச் சரி பண்ணக்கூடாதா? என்னிடம் பேசவே மாட்டேன் என்கிறானே,”- என்றுசொல்லிக் கண்கலங்கினார். நிதானமாகக் கேட்டதில், அவன் இது பற்றி என்னிடம் மெதுவாக விவரித்ததில் எல்லா விஷயமும் எனக்குப் புரிந்துபோச்! பிறகென்ன? ஒரு நரம்பு மற்றும் மன ஆலோசனை நிபுணரிடம் அவனை அழைத்துப்போய் எல்லாவற்றையும் சரி செய்தோம். அந்த அனுபவத்திற்குப்பிறகு அவனிடம் பிராணாயாமம் என்று ஆரம்பித்தாலே,அதோ அந்தத் ‘ தெனாலிராமனின் சூடான பால்கண்டால் நடுங்கும் பூனைமாதிரி’ பயப்பட்டான். தேவையா இது?

    ..அதனால்தான் சொல்கிறேன். மூச்சுப்பிராணாயாமம், தீவிர அழுத்தமான யோகா போன்றவற்றை ஒரு யோகா நிபுணர் மூலம் கற்றுக் கொள்வதே சாலச் சிறந்தது. எனினும் மெது மெதுவாக இத்தொடரில் ஆபத்து இல்லாத மிகலேசான ஆசனங்கள் பற்றியும் அதிக மூச்சிழுப்பு தேவையில்லாத ஒருவகை த்யானம் பற்றியும் விளக்க இருக்கிறேன்.ஆனால்,..

    ..-தியானம் பயில்வதற்குமுன் மனத்தைப் பக்குவப்படுத்த, எண்ணங்களை ஒரு ஒழுங்குக்குக் கொண்டு வரத் தேவையான பயிற்சிகளை முதலில் இங்கே விவரிக்கின்றேன். ஏன் எனில் அவை கட்டற்ற எண்ணங்களை அடக்கி தியானத்தில் நமக்கு வெற்றியைக் கொடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

    ..முதலாவதாக நம் ‘உள்மனதும் பழக்கவழக்கமும்’ எனும் மிகத் தேவையான விஷயம் பற்றி அலசுவோம். இது ஒரு அடிப்படைப் பயிற்சி ஆகும். கவனமாகப் படிக்கவும்.

    ஒருநல்ல தெய்வீகமான பழக்கத்தை உள்மனம் வரை வளர்ப்பது என்பது நல்ல நிலத்தை உழுவது போன்றது.இதற்குச் சிலகாலம் பிடிக்கும். பொறுமை தேவை.ஏன் எனில் அது மனசின் ‘உள்’ளிலிருந்து வரவேண்டும்.இந்த நல்ல பழக்கம் பிற துணைப்பழக்கங்களை உருவாக்கும். அவை மனிதனை சரியான வாழ்க்கைப்பாதையில் செலுத்தும். இதற்கு நாமே முயன்று ‘செயல்தூண்டுதல்’ கொடுக்கவேண்டும். பின்பு அதுவே இயல்பாகி விடும்.உதாரணத்திற்கு ஒருவன் விடாமல் சிகரெட்டாக ஊதித் தள்ளுகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அது கெடுதல் என்று தெரிந்தும் அவனால்சட்டென விட முடியாது. ஆனால் அப்பழக்கம், அவனுள் ஆஸ்த்மா என்னும் நோயை உண்டு பண்ணுகிறது. உடனே டாக்டரிடம் ஓடுகிறான்.அவர் அவனிடம்

    “டேய்! நீ எப்படியாவது பாடுபட்டு இந்த சிகரெட் பழக்கத்தை ஒழி. ஆனால்தான் நீ பிழைப்பாய்.. இல்லாவிடில் நீ அடுத்தவருடமே பயங்கர இழுப்புநோயால் காலி!” எனச்சொன்னார் என்றால் முயன்று அவன் மெல்லமெல்ல அப்பழக்கத்தை நிச்சயம் விட்டுவிடுவான். ஏன் எனில் அவனது உள்மனமே பயப்படுவதனால். நிச்சயம் இது சாத்தியம். இல்லையா?

    துன்பமான காலங்களில் தைரியத்தைக்காட்டும் திறனும், இச்சைப்படும்போதே சுயக்கட்டுப்பாட்டைக் காட்டும் வலிவும்,மனம் காயப்படும் போதும் மகிழ்ச்சியையே தேர்ந்தெடுக்கும் திறனும்,தடைகள் ஏற்படும்போது நல்லநம்பிக்கையுடன்(positive approach உடன்) நல்வாய்ப்பையே எதிர்பார்க்கும் ஆழமான எண்ணமும், ’தற்செயல்’ நிகழ்வுகள் இல்லை.ஏன் எனில் இவை நாம் மனரீதியிலும், உடல்ரீதியிலும் துணிச்சலுடன் கொடுக்கும் நிலையான, மாறாத ‘பயிற்சி’யின் பயனே ஆகும்.சரியா?அற்பமான சிறுசிறு விஷயங்களுக்கு எல்லாம் ஒரு கோழையைப்போன்று எதிர்மறையாக, அஞ்சியோ இல்லை எதிர்த்து நிற்கும் துணிவு இல்லாமல் ஒதுங்கியோ போனால், தியானம்
    சித்திக்காது. மாறாக அந்தத் தடைகளையே, துன்ப நினைவுகளையே எண்ணுவதால மனம் தியானத்தில் நிலைக்காது. ஆனால் விடாமல் இயல்புப் பழக்கத்தை மீறி ஒருவன் மேலே சொன்னபடி பயிற்சி செய்தால் எந்த நிலைமையிலும் கலங்காதிருப்பான் அதே மனிதன்! பெரிய விஷயங்களையும் அவன்தான் துணிவோடு செய்து வெற்றியையே பரிசாகப்பெறுவான். இது நம் அனுபவ உண்மை.

    ஆம்!பழக்கமாகும்வரை நாம் எந்த நல்லதைச் செய்யவேண்டும் என எண்ணுகிறோமோ அதை நீடித்து எப்போதுமே செய்ய முனைய வேண்டும்.அதில் தடை வந்தாலும் எதிர்த்து நல்லதையே செய்யவேணும்.பின் வாங்கலாகாது. ‘தீமை இது’ என்று ஒன்று தெரிந்துவிட்டால் அதிலிருந்து கட்டாயம் விலகி நிற்கக் கற்றுக் கொள்ளவேண்டும். பின்பு அதுவே நமக்குப் பழக்கமாகிவிடும்.தியானப் பயிற்சியாளனுக்கு அது வரும்முன்பே தீமை என்று தெரிந்துவிடும். விலகி விடுவான் உடனே. தெய்வீகப்பாதையில் போகும் பலனை உடனே அவன் அறுவடை செய்வான். மகிழ்வான். இனி நமது சிந்திக்கும் முறை பற்றியும், தற்காலக்காலகட்டத்தில் இந்த விஞ்ஞான வசதிகள் எப்படி நம்மை நேர்-
    பாதையிலிருந்து கவிழ்த்துவிடத் துடிக்கின்றன என்பது பற்றியும் அடுத்த வாரம் தீவிரமாக அலசுவோம்.(தொடரும்).

    Share
  • ஐந்திணை எழுபது – அகப்பொருள் மாண்பும் அமைப்பு முறையும்

    –முனைவர் க. துரையரசன்.

     

    தோற்றுவாய்:
    கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தக்குடியின் தமிழ் மொழிக்குச் செம்மொழித் தகுதியைப் பெற்றுக் கொடுத்த 41 நூல்களுள் ஒன்று ஐந்திணை எழுபது. இந்நூல் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். நீதி நூல்களின் தொகுப்பாகப் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் கருதப்பட்டாலும் அதில் உள்ளவை அனைத்தும் அறநூல்களில்லை. அத்தொகுப்பில் இடம் பெற்ற நூல்களில் 11 நூல்கள் அற இலக்கிய வகையைச் சார்ந்தவை; 6 நூல்கள் அக இலக்கிய வகையைச் சார்ந்தவை ; 1 நூல் புற இலக்கிய வகையைச் சார்ந்தது. ஐந்திணை எழுபது அக இலக்கிய நூலாகும்.

    நூலும் ஆசிரியரும்:
    இந்நூல் எழுபது அகப்பாடல்களைக் கொண்டுள்ளது. இது திணை தோறும் பதினான்கு பாடல்கள் வீதம் ஐந்து திணைகளுக்கும் எழுபது பாடல்களைக் கொண்டுள்ளமையால் ஐந்திணை எழுபது என்று அழைக்கப்படுகிறது. ஆயினும் 25, 26, 69, 70 ஆகிய நான்கு பாடல்கள் கிடைக்கவில்லை. எஞ்சிய 66 பாடல்களே கிடைக்கப்பெற்றுள்ளன. கடவுள் வாழ்த்துப் பாடல் ஒன்றும் இடம் பெற்றுள்ளது. இவற்றுள் 27 செய்யுள்கள் நேரிசை வெண்பாக்களாகவும், 40 செய்யுள்கள் இன்னிசை வெண்பாக்களாகவும் அமைந்துள்ளன. இந்நூலின் தொடக்கத்தில் விநாயகரைப் பற்றி கடவுள் வணக்கப் பாடல் ஒன்று சில பிரதிகளில் காணப்படுகிறது. இக்கடவுள் வாழ்த்து நூலுக்குப் புறம்பாக இருப்பதாலும் இப்பாடலுக்கு பழைய உரைகாரர் உரை எழுதாததாலும் இது நூலாசிரியரான மூவாதியாரால் இயற்றப்பட்டு இருக்காது என அறிஞர்களால் கருதப்படுகிறது.

    இந்நூலின் ஆசிரியர் மூவாதியார்; இவர் சமணர் என்பர். இவரைப் பற்றிய வேறு செய்திகள் கிடைக்கவில்லை. நூற்பெயர் ஒற்றுமையாலும், வேறுசில குறிப்புகளாலும் இவர் ஐந்திணை ஐம்பதை அடியொற்றியுள்ளனரோ என்று தோன்றுகிறது. இருநூல்களிலும் சில அடிகளும் கருத்துகளும் ஒன்றுபோலவே அமைந்துள்ளன. எடுத்துக்காட்டாக ஐந்திணை ஐம்பதில் உள்ள 38 ஆம் பாட்டில், “கள்ளத்தின் ஊச்சும் சுரம் என்பர், காதலர் உள்ளம் படர்ந்த நெறி” என்னும் வரிகள் அப்படியே, ஐந்திணை எழுபதில் உள்ள 36ஆம் பாட்டில் “கள்ளர் வழங்கும் சுரம் என்பர், காதலர் உள்ளம் படர்ந்த நெறி” என இடம்பெற்று உள்ளன.

    திணை – அமைப்பு முறை:

    முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
    சொல்லிய முறையால் சொல்லவும் படுமே
    (தொல். அகத். நூ. 5)

    நடுவண் ஐந்திணை நடுவனது ஒழியப்
    படுதிரை வையம் பாத்தியப் பண்பே
    (தொல். அகத். நூ. 2)

    என்று தொல்காப்பியர் ஐந்திணைகளை முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல் என்று வரிசைபடக் கூறுவது முன்னோர் வழக்கு என்று சுட்டிக்காட்டியுள்ளார். ஆயினும் இவ்வரிசை முறை பிற்காலத்தில் குறிஞ்சி, முல்லை, மருதம்,நெய்தல், பாலை என்றும் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல்,பாலை என்றும் மாறி அமைந்திருப்பதைக் காண முடிகிறது.

    இந்நூலிலும் திணை வரிசைமுறை தொல்காப்பிய வரிசையிலிருந்து மாறுபட்டுக் குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் என்று அமைந்துள்ளதைக் காணமுடிகிறது. அன்பு இன்பத்திற்கு முதன்மையானதாகும். இதனை, அழகும் இனிமையும் தோன்றக் கூறுவது இந்நூல். இன்பத்தின் தொடக்கமாகிய புணர்ச்சியினையும் அதற்குரிய நிமித்தங்களையும் குறிஞ்சி எனக்கூறி, அப்புணர்ச்சியால் பெற்ற அன்பினை நெகிழவிடாது அகத்திருத்தி அமைதலாகிய முல்லையினை அடுத்துரைத்து அவ்வன்பின் நிலைப்பேற்றினைக் கண்டறிவதற்குப் பிரிவாகிய பாலையினைப் பின்வைத்து, அவற்றின் பயனாகிய ஊடலும் கூடலுமென்ற மருதத்தினை விளக்கி, இவைப் பேரின்பத்தினை அடைவதற்குரிய பெருவழியே அன்றிப் பேறாகா எனத் தெளிய இரங்கலாகிய நெய்தலினை இறுதியிற் கூறிய எழில் போற்றத்தக்கதாகும் என்று இந்நூலுக்கு விளக்க உரை எழுதிய அ. நடராசபிள்ளை இந்நூலின் முகவுரையில் (பக்கம் 5, கழக வெளியீடு, 2007) குறிப்பிட்டுள்ளார்.

    நுவலும் பொருள்:
    இந்நூல், மக்களின் இன்பத்திற்கு உயிர் நிலையாகிய அன்பினை எழிலும் இனிமையும் தோன்ற எடுத்துரைக்கிறது. இதன்கண் அகப்பொருளின் முப்பொருள்களான முதற்பொருள், உரிப்பொருள், கருப்பொருள் நன்கு அமைந்துள்ளன. உள்ளுறை உவமங்கள் மற்றும் இலக்கியச்சுவை நிறைந்தவையாகப் பாடல்கள் அமைந்துள்ளன. பண்டைத் தமிழகத்தின் பழக்கவழக்கங்கள் பலவற்றை இந்நூலின் வழி அறியமுடிகிறது.

    • குறிஞ்சி: இத்திணையில் தலைவி தலைவனை இயற்பட மொழியும் திறன் சிறப்பாக அமைந்துள்ளது. அதற்கேற்ப இறைச்சிப் பொருளைக் கையாண்டுள்ளார். குறிஞ்சி நிலப் பண்புகள் நன்கு விவரிக்கப்பட்டுள்ளன.

    • முல்லை: இத்திணைப் பாக்கள் பதினான்கு அமைந்திருத்தல் வேண்டும். இரண்டு பாடல்கள் கிடைக்காமையால் பன்னிரண்டு பாடல்கள் மட்டுமே உள்ளன. இவை அனைத்தும் பருவம் கண்டு அழிந்த தலைவியின் கூற்றாகவே அமைந்துள்ளன. கார்கால இயல்பு, மாலை நேரக் காட்சி வருணனை ஆகியவை பாராட்டத்தக்க வகையில் அமைந்துள்ளன.

    • பாலை: இதற்கெனத் தனிநிலம் இல்லை என்பது இந்நூலின் வழியும் புலனாகிறது. முப்பத்தாறாவது பாடலில் முல்லையையும் பாலையையும் ஆசிரியர் குறிப்பிடுகின்றார். போரில் இறந்துபட்ட வீரர்களுக்குக் கல் நடுதல், அக்கல்லில் அவ்வீரர் பற்றிய சிறப்பானச் செய்திகளை எழுதி வைத்தல், ஆந்தை ஒலி, பல்லி ஒலி, இடக்கண் துடிப்பு, தும்மல் முதலியவற்றால் நிமித்தம் அறிதல் போன்ற செய்திகள் இத்திணைப் பாடல்களில் இடம் பெற்றுள்ளன.

    • மருதம்: இத்திணையில் தலைவன் புதல்வனைப் பெற்றெடுத்தல், புதல்வற்குப் பெயரிடுதல், பரத்தையர் தலைவனை மாலையால் பிணைத்துச் செல்லுதல், எருமையினைக் கழுத்தில் தொண்டு கட்டையிடல், உறுதிமொழிகளை எழுதி வைத்துக் கொள்ளுதல், பாணற்குத் தலைமகன் வாயில் மறுத்தல், தோழி தலைமகனத் தன் பேச்சாற்றலால் இணங்குவிக்கும் தன்மை, தோழி தலைமகளிடத்துக் கொண்டுள்ள பேரன்பு ஆகியவை நன்கு அமைக்கப்பட்டுள்ளன.

    • நெய்தல்: முல்லைத் திணையைப் போலவே இத்திணைப் பாக்களும் பதினான்கு அமைந்திருத்தல் வேண்டும். இரண்டு பாடல்கள் கிடைக்காமையால் பன்னிரண்டு பாடல்கள் மட்டுமே உள்ளன. திணையில் தலைமகள் தலைமகனை இயற்பட மொழியும் திறன், தோழி அன்றிலோடு கூறியாறும் அமைதி, தம் காதலுக்குக் குறுகினைச் சான்றாகக் கொள்ளுமாறு கூறுதல் முதலிய செய்திகள் மனம் கவர்கின்ற வகையில் அமைந்துள்ளன.

    துறைச் சொற்றொடர் விளக்கம்:
    இந்நூல், அகத்திணைக் கூறுகளான முப்பொருள்களையும் கொண்டிலங்குகின்றது. இதன் பாடல்களில் இடம் பெற்றுள்ள அகத்துறைச் சொற்றொடர்களை விளங்கிக் கொண்டால்தான் பாடல்களின் பொருளை நன்கு உணர முடியும். ஆகையால் அவை பற்றிய விளக்கத்தைக் கீழே காணலாம்.

    • வரைவு கடாதல் – திருமணம் புரிந்துகொள்ளும்படி தூண்டுதல்.
    • வரைவு தலைவரல் – தலைமகனைச் சார்ந்தார் திருமணம் பேசி வரல்.
    • வரைவு மலிதல் – திருமணப் பேச்சினை மேற்கொண்டு வரல்.
    • தலைமகன் சிறைப்புறத்தானாக – பாங்கியிற் கூட்டத்தினின்றும் பிரிந்த தலைமகன் தினைப்புனஞ் செல்லுந் தோழியினையும், தலைவியையும் சோலையின் வேலிப்புறமாக நின்று நோக்கினனாக.
    • இயற்பழித்தல் – தலைவனின் அன்பாகிய இயல்பினைக் குறைத்துக் கூறல்.
    • இயற்பட மொழிதல் – அன்பாகிய இயல்பு பொருந்துமாறு கூறல்.
    • மெலிவில் நயம் – துன்பங் கலவாத இன்பம்
    • புணர்ந்து நீங்கல் – பாங்கியிற் கூட்டத்தால் தலைவியைக் கூடிப் பிரிதல்.
    • பகற் குறி – தோழியின் உதவியால் பகல் நேரத்தில் தலைமகனைத் தலைமகள் கண்டு கூடுமிடம். இது தினைப்புனத்தின் அருகிலுள்ள சோலைக்கண்ணதாகும்.
    • படைத்து மொழி கிளவி – புதிதாக ஒன்றை அமைத்துக் கூறுதல்.
    • மன்றத்து உறுகல் – பலர் கூடும் வெளியில் பலரும் அமர்தற்குரியதாகப் பொருந்திய கற்கள்.
    • வெறியாட்டெடுத்தல் – வேலற்குப் பூசையிடல்.
    • அறத்தொடு நிற்றல் – உண்மையினை எடுத்துச் சொல்லித் தவறாகக் காரியங்களை நிகழவொட்டாது நடத்தல். பெரிதும் தலைமகன் மீது தலைமகள் கொண்ட அன்பினைத் தோழி செவிலியிடமும், செவிலி நற்றாயிடமும், நற்றாய் தந்தை தமையனிடமும் கூறுதல்.
    • செலவு – பொருள்தேடும் பொருட்டுப் பிரிந்து செல்லல்.
    • வரைவிடைப் பிரிவு – தலைமகளை மணத்தல் வேண்டிப் பொருள் தேடும் பொருட்டுத் தலைமகன் மேற்கொண்ட பிரிவு.

    (காண்க: மூவாதியார் இயற்றிய ஐந்திணை யெழுபது, மூலமும் உரையும், அ. நடராச பிள்ளை, பக்கம் 65, கழக வெளியீடு, 2007)

    திணை கண்டறிதல்:
    பாடல்களில் பயின்று வரும் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகியவற்றைக் கொண்டு திணைகளைக் கண்டறியலாம். திணைகளைக் கண்டறியும் முறை பற்றி தொல்காப்பியர்,

    நிலன் ஒருங்கு மயங்குதல் இல்லென மொழிப (தொல். அகத். நூ. 14)
    உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே (தொல். அகத். நூ. 15)

    என்று குறிப்பிடுகிறார். தொல்காப்பியரின் கருத்தைக் கீழ்க்கண்டவாறு தொகுத்துக் கூறலாம்…

    • பாடலில் பயின்று வரும் கருப்பொருள்களை வைத்து திணையை உறுதிப்படுத்த முடியாது.

    • நிலம், பொழுது ஆகிய இரண்டு முதற் பொருள்களில் காலத்தை வைத்துத் திணையை உறுதிப்படுத்த முடியாது; ஆனால் நிலத்தை வைத்து உறுதிப்படுத்தலாம்.

    • பாடலில் பயின்று வரும் உரிப்பொருளைக் கொண்டு திணையை உறுதிப்படுத்தலாம்

    எனவே, உரிப்பொருளையும் நிலத்தையும் அடிப்படையாகக் கொண்டு பாடல்களின் திணையை உறுதிப்பட வரையறை செய்யலாம்.

    குறிஞ்சித் திணைப் பாடல்கள்:

    “அவரை பொருந்திய பைங்குரல் ஏனல்
    கவரி மடமா கதூஉம் படர்சாரல்
    கானக நாட! மறவல் வயங்கிழைக்கு
    யான்இடை நின்ற புணை”
    (ஐந்திணை எழுபது, பா. 1)

    இப்பாடலில் கவரிமான், தினை ஆகிய இரண்டு கருப்பொருள்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றுள் கவரிமான் முல்லைத் திணைக்குரியது. ஏனல் என்னும் தினை குறிஞ்சித் திணைக்குரியது. இவற்றின் அடிப்படையில் இப்பாடலின் திணையை வரையறுக்க முயன்றால் இப்பாடல் குறிஞ்சித் திணை என்றும் முல்லைத் திணை என்றும் மயக்கம் ஏற்படும்.

    ஆனால் இப்பாடலில் பயின்று வந்துள்ள சாரல் கானக நாட என்பது மலை நாடனைக் குறிக்கிறது. மலை என்பது முதற்பொருளில் நிலத்தின் பாற்படும். தொல்காப்பியரும் நிலத்தைக் கொண்டு திணையை வரையறை செய்யலாம் என்று குறிப்பிட்டுள்ளமையால் இப்பாடல் குறிஞ்சித் திணைப் பாடல் என்று உறுதிப் படுத்தலாம்.

    மேலும் இப்பாடலில் இடம் பெற்றுள்ள ‘யான் இடை நின்ற புணை’ என்ற தொடருக்கு உரையாசிரியர் தோழி தெய்வம் போன்று நின்று புணர்ச்சியை நிகழ்வித்தாள் என்று குறிப்பிடுகிறார். எனவே இப்பாடலில் குறிஞ்சித் திணையின் உரிப்பொருளான புணர்தல் இடம் பெற்றுள்ளமையால் இதன் திணையைக் குறிஞ்சி என்று உறுதிப் படுத்தலாம்.

    “பிரைசம் கொளவீழ்ந்த தீம் தேன்இறாஅல்
    மரையான் குழவி குளம்பின் துகைக்கும்
    வரையக நாட! வரையாய் வரின் எம்
    நிரைதொடி வாழ்தல் இலள்”
    (ஐந்திணை எழுபது, பா. 9)

    மேற்கண்ட பாடலிலும் தேன், மான் ஆகிய கருப்பொருள்கள் இடம் பெற்றுள்ளன. இதனடிப்படையில் திணை கூற முற்பட்டால் குறிஞ்சித் திணை, முல்லைத்திணை என்று மயக்கம் ஏற்படும். ஆனால் மலை என்பதைக் கொண்டு திணை வரையறை செய்தால் மயக்கமில்லாமல் குறிஞ்சித்திணைப் பாடல் என்று அரிதியிட்டுக் கூறலாம்.

    “வரையாய் வரின் எம் நிரைதொடி வாழ்தல் இலள்” என்பது நீ தலைவியை வரையாது களவை நீட்டிப்பாயாயின் தலைவி உயிர் வாழாள் என்று தோழி கூறுவதால் இது புணர்தலின் பாற்படும். எனவே இப்பாடல் குறிஞ்சித் திணையாகும்.

    முல்லைத் திணைப் பாடல்கள்:

    “செங்கதிர்ச் செல்வன் சினம்கரந்த போழ்தினாற்
    பைங்கொடி முல்லை மணம்கமழ – வண்டுஇமிரக்
    காரோடு அலமரும் கார்வானம் காண்தொறும்
    நீரோடு அலமரும் கண்”
    (ஐந்திணை எழுபது, பா. 15)

    இப்பாடலில் “சினம்கரந்த போழ்து” என்பது மாலைப் பொழுது ஆகும். முல்லைத் திணைக்குரிய கார் காலம் இடம் பெற்றுள்ளது. இவை இரண்டும் முதற் பொருளாகும். முல்லை என்பது கருப்பொருளாகும். எனவே இப்பாடல் முல்லைத்திணைப் பாடல் என்று உறுதிப்படுத்தலாம்.

    “தண்நறுங் கோடல் துடுப்புஎடுப்பக் கார்எதிரி
    விண்உயர் வானத்து உரும்உரற்றத் – திண்ணிதின்
    புல்லுநர் இல்லார் நடுங்கச் சிறுமாலை
    கொல்லுநர் போல வரும்.”
    (ஐந்திணை எழுபது, பா. 17)

    இப்பாடலில் முதற்பொருளான கார், மாலை ஆகியவை இடம் பெற்றுள்ளன. ‘புல்லுநர் இல்லார் நடுங்கச் சிறுமாலை கொல்லுநர் போல வரும்’ என்பதில் உரிப்பொருளான இருத்தல் பயின்று வந்துள்ளது. எனவே இப்பாடல் முல்லைத் திணைப் பாடலாகும்.

    பாலைத் திணைப் பாடல்கள்:

    “வில்உழுது உண்பார் கடுகி அதர்அலைக்கும்
    கல்சூழ் பதுக்கைஆர் அத்தத்து இறப்பார்கொல்
    மெல்இயல் கண்ணோட்டம் இன்றிப் பொருட்குஇவர்ந்து
    நில்லாத உள்ளத் தவர்”
    (ஐந்திணை எழுபது, பா. 30)

    இப்பாடலில் “வில் உழுது உண்பார்” என்பது ஆறலைக் கள்வரைக் குறிக்கும். ‘கல்சூழ் பதுக்கை ஆர் அத்தம்’ என்பது பாலை நில சுரத்தைக் குறிக்கும். இங்ஙனம் இப்பாடலில் பாலைத் திணைக்குரிய கருப்பொருள்களே பயின்று வந்துள்ளன. வேறு திணைகளுக்குரியவை இப்பாடலில் இடம் பெறவில்லை. எனவே இப்பாடல் பாலைத் திணைப் பாடல் என்று வரையறை செய்யலாம்.

    “பீர்இவர் கூரை மறுமனைச் சேர்ந்து அல்கிக்
    கூர்உகிர் எண்கின் இருங்கிளை கண்படுக்கும்
    நீர்இல் அருஞ்சுரம் முன்னி அறியார் கொல்
    ஈரம்இல் நெஞ்சி னவர்”
    (ஐந்திணை எழுபது, பா. 34)

    இப்பாடலில் “நீர்இல் அருஞ்சுரம்” என்பது வறண்ட அரிய பாலை நிலத்தைக் குறிக்கும். இங்ஙனம் நிலத்தைக் குறித்து வந்தமையால் இப்பாடல் பாலைத்திணை ஆகும்.

    மருதத் திணைப் பாடல்கள்:

    “போத்துஇல் கழுத்தின் புதல்வன் உணச்சான்றான்
    மூத்தேம் இனியாம் வருமுலையார் சேரியுள்
    நீத்துநீர் ஊனவாய்ப் பாண!நீ போய்மொழி
    கூத்தாடி உண்ணினும் உண்”
    (ஐந்திணை எழுபது, பா. 45)

    இப்பாடலில் இடம் பெற்றுள்ள புதல்வன், பரத்தை, வாயில் மறுத்தல் முதலிய செய்திகளின் மூலம் மருதத்திணைப் பாடல் என்று உறுதி செய்ய முடிகிறது.

    “வளவயல் ஊரன் மருள்உரைக்கு மாதர்
    வளைஇய சக்கரத்து ஆழி – கொளைபிழையாது
    ஒன்றுஇடை இட்டு வருமேல்நின் வாழ்நாட்கள்
    ஒன்றி அனைத்தும் உளேன். “
    (ஐந்திணை எழுபது, பா. 56)

    இப்பாடலில் இடம் பெற்றுள்ள வயல், ஊரன், பரத்தை (மருள் உரைக்கு மாதர்) முதலிய கருப்பொருள்களால் இப்பாடல் மருதத்திணைப் பாடல் என்று உறுதிப்படுத்தலாம்.

    நெய்தல் திணைப் பாடல்கள்:

    “இடுமணல் எக்கர் அகன்கானல் சேர்ப்பன்
    கடுமான் மணிஅரவம் என்று – கொடுங்குழை
    புள்அரவம் கேட்டுப் பெயர்ந்தாள் சிறுகுடிய
    உள்அரவம் நாணுவர் என்று”
    (ஐந்திணை எழுபது, பா. 59)

    இப்பாடலில் அகன்கானல் என்பது கடற்கரைச் சோலையாகும். எனவே இது முதற்பொருளான நிலத்தைக் குறித்தது. சேர்ப்பன் என்பது கருப்பொருளான நெய்தல் நிலத் தலைவனைக் குறிக்கும். இவற்றின் அடிப்படையில் இப்பாடல் நெய்தல் திணை என்று குறிப்பிடலாம்.

    “மணிநிற நெய்தல் இருங்கழிச் சேர்ப்பன்
    அணிநலம் உண்டுஅகன்றான் என்கொல் எம்போல்
    தணிமணல் எக்கர்மேல்ஓதம் பெயரத்
    துணிமுந்நீர் துஞ்சா தது “
    (ஐந்திணை எழுபது, பா. 60)

    இப்பாடலில் நெய்தல் என்ற திணைப்பெயரே வந்துள்ளது. இருங்கழி என்பது உப்பங்கழியைக் குறிக்கும். சேர்ப்பன் என்பது நெய்தல் நிலத் தலைவனைக் குறிக்கும். ஓதம் என்பது அலையைக் குறிக்கும். முந்நீர் என்பது கடலைக் குறிக்கும். இவற்றின் அடிப்படையில் இப்பாடல் நெய்தல் திணை என்று துணியலாம்.

    முப்பொருள்கள் இடம் பெற்றுள்ளமை:

    • முல்லைத் திணைப் பாடல்களில் கார் (15, 17, 19, 20, 21, 23), கார் (17, 20-24, 27), முல்லை (15, 20, 21, 24) ஆகியவை பயின்று வந்துள்ளன.

    • குறிஞ்சித் திணைப் பாடல்களில் வரை (3, 10), மலை (4, 5, 6, 9, 12), அருவி (7, 11) ஆகியவை பயின்று வந்துள்ளன.

    • பாலைத் திணைப் பாடல்களில் சுரம் (29, 32-34, 36, 39), அதர் (30), ஆறலைப்போர் (30, 36) ஆகியவை பயின்று வந்துள்ளன.

    • மருதத் திணைப் பாடல்களில் புதல்வன் (43, 45, 47, 48, 55), பரத்தை (44, 46-48, 54), பாணன் (45, 46, 48, 49), எருமை (46), வயல் (46, 47, 53, 56) ஆகியவை பயின்று வந்துள்ளன.

    • நெய்தல் திணைப் பாடல்களில் நெய்தல் (60, 67), புன்னை (58), சேர்ப்பன் (58-60, 62, 65, 68), துறைவன் (57, 61, 63, 64), ஓதம் (60), முந்நீர் (60, 61), நாவாய் (61), இருங்கழி (64, 67, 68), கொடுங்கழி (63), சுறா (65), அலவன் (67), மீன் (68) ஆகியவை பயின்று வந்துள்ளன.

    தொகுப்புரை:
    பதினெண் கீழ்க்கணக்குத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள அகப்பொருள் நூல்கள் ஆறு ஆகும். இதில் திணை என்னும் பெயரில் ஐந்து நூல்கள் அமைந்துள்ளன. அவற்றுள் ஒன்று ஐந்திணை எழுபது. இந்நூல் திணையடிப்படையில் ஒவ்வொரு திணைக்கும் பதினான்கு பாடல்கள் வீதம் எழுபது பாடல்கள் இருத்தல் வேண்டும். முல்லை மற்றும் நெய்தல் திணைகளில் தலா இரண்டு பாடல்கள் வீதம்நான்கு பாடல்கள் கிடைக்கவில்லை.எனவே அறுபத்தாறு பாடல்கள் மட்டுமே உள்ளன. திணைக்குரிய முப்பொருள் அமைப்பு முறையில் நெய்தல் திணைப் பாடல்கள் மிகச் சிறப்பான முறையில் அமைக்கப் பெற்றுள்ளன. தொல்காப்பியர் கூறிய வழிமுறையில் இப்பாடல்களின் திணைப் பொருத்தும் குறித்து ஆய்கின்றபொழுது திணைமயக்கமுள்ள பாடல்கள் மிகக்குறைவாகவே உள்ளன. இந்நூல் மாணவர்களுக்குப் பாட அளவிலும் ஆராய்ச்சி அளவிலும் மிகுதியாகச் சென்று சேரவில்லை என்றே கூற வேண்டும். எனவே இந்நூல் மாணவர் மற்றும் ஆராய்ச்சியாளர்களால் மிகுதியும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டிய ஒன்றாகும்.

    பயன்பட்ட நூல்களும் இணைய தளங்களும்:
    1. தொல்காப்பியம், ச.வே.சுப்பிரமணியம் பதிப்பு.
    2. பதினெண் கீழ்க்கணக்கு, அ.நடராச பிள்ளை விளக்கவுரை, கழக வெளியீடு, 2007.
    3. ஐந்திணை எழுபதில் அகத்திணைக் கூறுகள் என்னும் கட்டுரை – சி. ஜெபஸ்டெல்லா, thoguppukal.wordpress.com/2011/01/29
    4. www.tamilvu.org
    5. www.projectmadurai.org

     

     

     

     

     

     

    முனைவர் க. துரையரசன்
    தமிழ் இணைப்பேராசிரியர் &
    தேர்வு நெறியாளர்
    அரசினர் கலைக் கல்லூரி (தன்.)
    கும்பகோணம் – 612 001
    தமிழ்நாடு

    Share