தந்தைக்கு ஒரு கவிதை!

-றியாஸ் முஹமட்

எழுத நினைக்கிறேன்
ஒரு கவிதை,
அடக்க முடியவில்லையே                son with sorrrow

என் அழுகை!

எழுது எழுது என்று
நினைக்கிறது மனது
அழுது அழுது

என் பேனாவும் பழுது!

என்ன வாப்பா அவசரம்?
போகும் போதும் சொன்னீர்களாமே
என்னைப் பத்திரம்!

பேனாவை எடுத்தால்
பேச்சு வரவில்லை வாப்பா
ஏட்டை விரித்தால்

எழுத்து வரவில்லை வாப்பா!

காகிதமும் என் கண்ணீரால்
கரைந்து போனதே வாப்பா
தளை தட்டுது வாப்பா

மூச்சு முட்டுது வாப்பா!

எதுகை மோனை கூட
அழுகை வேதனையாக ஆனதே வாப்பா
நான் எழுதிய கவிதைகளும்

கண்ணீர் வடித்துக் கதறுகிறதே வாப்பா!

கூடவே இருப்பீர்கள் என்றுதானே
கொடி போலப் படர்ந்தேன்
பாதியில விட்டுப் போகவா

பனமரம்போல வளர்ந்தேன்?

என்ன வாப்பா அவசரம்?
போகும் போதும் சொன்னீர்களாமே
என்னைப் பத்திரம்!

நான் சந்தி வழியிறங்கி
பள்ளி செல்ல,
சவூதி வழியிருந்து

வழி சொல்வீர்களே வாப்பா!

நாவலடிதானே போனீர்கள் வாப்பா
காலடி கூட மாறவில்லையே
மரணப்பிடி பிடிக்கையிலே

என்னென்ன நினைச்சிருப்பீங்க
தன்னந்தனியா தவிச்சிருப்பீங்க!

போங்கள் போங்கள்!
என் வாப்பா மண் மறைந்தார்
என்று சொல்பவர்கள்
என் கண் மறைந்து போங்கள்!

 

1 thought on “தந்தைக்கு ஒரு கவிதை!

 1. எழுது எழுது என்று
  நினைக்கிறது மனது
  அழுது அழுது 
  என் பேனாவும் பழுது!
  என்னும் உன் வரிகளைத் தொழுகிறேன்.  
  தாய்க்கு நிகராக வாழும் தந்தைபற்றி தரணியில் பதிவுகள் இல்லை….
  சிந்தையில் நிறைந்த தந்தையைப் பற்றி நீ தந்ததை வரவேற்கிறேன்..
  சிலிர்க்கும் உணர்வின் சிகரம் தந்தை.. நாம் சீரும் சிறப்பும் பெற்றதெல்லாம் 
  அவர் தந்ததன்றி வேறில்லை அன்றோ?
  இதயப் பதிவிது… ஈரமாக என்றும்…
  காவிரிமைந்தன் 

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க