படக் கவிதைப் போட்டி – 4
பவள சங்கரி
அன்பிற்கினிய நண்பர்களே!
வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?
நித்தி ஆனந்த் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (21.03.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை முனைவர் அண்ணாகண்ணன் தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.
படக்கவிதைப் போட்டி ( எம். ஜெயராமசர்மா ….. அவுஸ்த்திரேலியா .. மெல்பேண் )
————————————————————————————————————-
எனை அணைத்தாய் இனிப்பானாய்
உனையணைக்க நேரமிலா ஓயாது உழைத்தேனே
உனதருமை உணராமல் ஊரூராய்த் திரிந்தேனே
ஓய்வானேன் உனையணைத்தேன் உன்வாயில் இனிப்பானேன் !
மணமென்னும் நிகழ்வில்
மறுபாதி நீயென வந்தாய்
அடைத்திருந்த மனக்கதவை
தென்றல் நுழைய
விரிவாய் திறந்தாய்
வரும் கோபமெல்லாம்
மறைந்திடிடும் மறுகணம்
மாறா உன் புன்னகையிலே
மாறியிருந்தது என் உலகம்
கடந்து போன கால அளவை
மனம் அறியாது
சிந்தைக்குள் இனிக்குதடி
இன்னமும் உன் பக்கமிருப்பு
இல்லாது நான் போகும்
காலம்வரை
என் உயிரென்று
மாறியவளும் நீயன்றோ
படக் கவிதைப் போட்டி – 4
ஆண்டுகள் ஆயிரம் ஆனாலும்
அன்பெனும் ஊற்று இருக்கும்வரை
அணைத்தே செல்லும் ஆர்வம்
அனைவர்க்கும் இருப்பது இயல்பே.
மங்கல நாயகி முகமெங்கும்
ஆயிரம் நிலவின் நட்சத்திரம்
பொட்டும் பட்டும் பாட்டிசைக்க
பளிச்சிடும் புன்னகைப் பெண்சித்திரம்
அனுபவ வலிகள் மறைந்த
ஆனந்த சுமைகளின் முகவரிகள்
கொண்டவர் அருகிருக்க கோலமகள்
வாரிசுகள் ஆர்ப்பரித்து அகமகிழ
தொலைந்து கடந்த பிறந்தகாலம்
நினைவில் நழுவிய வேளையிலும்
குழந்தைமனம் மாறாக் குதூகலத்தில்
கூடிநின்று பாடிப் பரிசளித்து
இனிமைப் பொழுதை இனிப்பாலே
இதயம் நிறைத்த இல்லமிது
நெஞ்சம் கோரும் வரமாக
என்றும் வேண்டும் உறவாக
அடுத்தொரு பிறப்பிலும் சத்தியமாய்
மங்கள பந்தத்து சங்கிலியாய்
உள்ளம் உவந்த பிறவியிதை
வேண்டிப் போற்றும் பெற்ற உயிர்..!
பாட்டியின் மணி விழா
அகவை அறுபது என்றும் அருமையும், பெருமையும் உடையதன்றோ
குடும்பத்தின் ஆணி வேறாய் இருப்பதும் அவர்களன்றோ !
ஆயிரம் கைகள் மறைத்தாலும், ஆதவன் மறைவதில்லை
ஆயிரம் உறவுகள் இருந்தாலும், மனைவி கணவனை மறப்பதில்லை!
கண்ணின் அருகே இமை இருந்தும் கண்கள் இமையைப் பார்ப்பதில்லை!
கணவன் கல்மனம் கொண்டாலும், மனைவி அவரை மறப்பதில்லை!
காலமும், கோலங்களும் என்றும் வையகத்தில் மாறும் !
கணவன் மனைவி உறவே என்றும் நிலத்து வாழும்!
மகனும், மகளும், பேரனும், பேத்தியும் சேர்ந்து நடத்தும் மணிவிழா !
பாட்டியின் வாழ்த்தும், தாத்தாவின் ஆசிர்வாதமும் கிடைக்கும் விழா.
தாத்தாவும், மகனும், மகளும், இனிப்பை ஊட்டும் திரு விழா.
குடும்பத்தினர் எல்லோரும் மகிழ்ச்சி கடலில் திளைக்கும் விழா!
.
ரா.பார்த்தசாரதி
நாளும் இனிமை கூட்டியதும்
நாவில் இனிப்பை ஊட்டியதும்
காலம் முழுதும் இனித்திருக்கும்
கடவுள் அருளாய் மணத்திருக்கும்.
வாழும் பெண்ணின் உள்ளத்தில்
வசந்தம் தன்னை மணந்தவரே.
தோழன் போல துணைநிற்க
துயரக் காற்றைக் கண்டதில்லை.
பேரன் பேத்தி எடுத்தாலும்
பெயரா உறவும் நமதன்றோ.
வேர்கள் நாமே பரஸ்பரம்
வெற்றி கண்டோம் வாழ்வினிலே.
அன்பைத் தந்தாய் அனுதினமும்
அதிலே திகட்டல் ஏதுமில்லை.
உன்னை அன்றி வேறேதும்
உவந்த இனிப்பும் எனக்கிலையே.
இன்பம் வெற்றி உன்னாலே
இதயம் கண்டது தன்னாலே.
என்றும் காப்பான் இறையவனும்
இந்த வாழ்வின் இனிமையினை.
நன்றி சொல்லி வாழ்ந்திருப்போம்
நல்ல வாழ்க்கை அதற்கென்றே.
நின்று பார்க்கும் பிள்ளையார்
நேசப் பாடம் படிப்பீரே!
(கைப்பேசி வழியே…)
கைப்பேசி வழியே அனுப்பியதில் செல்லினம் தானே திருத்திக் கொண்ட கீழ்வரும் சொற்களை மாற்றிக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.:
பரஸ்பரம் = பரஸ்பரமே
பிள்ளையார் = பிள்ளைகளே
அடியேய், என் செல்லமே, எங்கோ பிறந்து வளர்ந்தாய்,
என் முகம் பார்க்காமல் என் கரம் பற்றினாய்,
கரம் பற்றிய நாள்முதல் என் குடும்பபாரம் சுமந்தாய்,
என் கருவை உன் கருவறையில் சுமந்து
எனக்கு தகப்பன் என்றொரு பட்டம் கொடுத்தாய்,
என் பசியாற்றி உன்மனம் நிறைவடைந்தாய்,
நம் பிள்ளையை தாலாட்டி உன் தூக்கம் மறந்தாய்,
நம் வாழ்க்கையென உன் பெயரையே மறந்தாய்,
என் பெயரையே உன் பெயராக சொன்னாய்,
என் நலமே பெரிதென என்னுள்ளே கரைந்தாய்,
ஓய்வு என்றால் என்ன என்பதையே மறந்து
என் நலமே உன் உலமாக வாழ்ந்தாய்,
எனக்குத் தெரியாமல் என்னையும் குழந்தையாய்
உன் நெஞ்சில் சுமந்தாயடி என் தங்கமே,
இப்போது இருப்பது நான் இல்லையடி
நான் என்பதும் நீதானடி என் கள்ளச்சிறுக்கி,
கடந்த காலங்களை என்னால் கொடுக்கமுடியாதடி,
நான் எப்படி இந்தக் கடனை தீர்ப்பேன்,
இந்த ஜென்மத்தில் என் வாழ்க்கையை
இந்த இனிப்பைப்போல இனிக்க வைத்தாய்,
அடுத்து வரும் ஜென்மத்தில் நீ என்
மகளாய் பிறந்து உன்னை நான் சீராட்ட வேண்டுமடி.
…….
(எழுதுவது இதுவே முதல்முறை – படத்தைப் பார்த்தவுடன் மனதில் தோன்றியதை அப்படியே எழுதியுள்ளேன்)
படக்கவிதைப் போட்டி ! ( எம். ஜெயராமசர்மா … அவுஸ்த்திரேலியா .. மெல்பேண் )
————————————————————————————————————-
பேரக்குழந்தைகள் சிரிப்பால் பெருமிதத்தில் நீ சிரிக்க
ஈரக்கண்ணால் உனைப்பார்த்து இனிப்புதனை நானூட்ட
வாய்திறந்து மனங்குளிர மகிழ்ந்துநிற்கும் மாதரசே
நோயற்ற பெண்ணாக நூறாண்டு வாழ்ந்திடுவாய் !
படக்கவிதைப் போட்டி ! ( எம். ஜெயராமசர்மா .. அவுஸ்த்திரேலியா .. மெல்பேண் )
உன்னருகே நானிருந்தால் உயிர்ப்பெனக்கு வருகுதடி
என்னருகே நீயிருந்தால் இன்பமெலாம் பெருகுதடி
தள்ளாத வயதினிலும் தாயாக இருப்பாயே
வல்லவளே இனிப்புடனே வாழ்கநீ பல்லாண்டு
பேரக்குழந்தைகளின் பெருஞ் சிரிப்பைப் பார்க்கின்றாய்
ஈரமனத்துடனே என் இனிப்பைச் சுவைக்கின்றாய்
வாழப்பிறந்தோமே எனவெண்ணி நீ சிரிப்பாய்
வைகத்தில் உன்னோடு வாழுவதால் மகிழ்கின்றேன் !
அன்பெனும் வேடமிட்டு வந்ததோர் அணிச்சல்(Cake)
அந்த அன்பினை அகவைகள் ஆனாலும் ஊட்ட,
நெஞ்சத்தில் வேண்டுமோர் அழகான துணிச்சல்
அன்னத்தை ஊட்டினால் வயிறு வளரும்
அன்பெடுத்து ஊட்டினால் வாழ்க்கை வளரும்
உடலோடு கலந்த அன்னம் கழிவாகிப் போகும்
உளத்தோடு கலந்த அன்பு அங்கேயே இருக்கும்
உடல்கொண்ட இளமை அது நிரந்தரமில்லை
நாம் அதைப்பற்றிக் கவலைப்பட அவசியமில்லை
உள்ளத்தில் அன்பென்னும் வெள்ளம் வந்து
வடியாமல் போனாலே என்றும் நன்று
உள்ளத்தின் இளமை அது உண்மை இளமை
அவ்விளமை இருந்தாலே அது வாழ்வின் வளமை
காமத்தில் புள்ளிவைத்து அன்பினிலே கோலம்போட்டு
தேகத்தில் ஓர்காதல் பயணம் போகும்
அந்தப் பயணத்தை நிறுத்தாமல் அனுமதிக்கணும்
அது நமக்கான பயணமென்று நாம் நினைக்கணும்
பிள்ளைகள் பிள்ளைகள் பெற்றாலும் நமக்கென்ன
இல்லாளை உளமார காதலிக்கணும்…
அந்தக் காதலில் பல்லாண்டு நாம் வாழணும்
வாழ்த்துவீர்!
ஆண்டுகள் கடந்து
அகவை கிழடானாலென்ன
ஆனந்தம் பொங்குமிங்கு
அன்பின் துணை அருகிருக்க!
வளங்கள் பல சேர்த்தபோதும்
வாய்ப்புகள் புகழ்மாலை தந்தபோதும்
வந்திடாது பேரின்ப ஆர்ப்பரிப்பு
வாய்த்த நல் இல்லாளின் அரவணைப்பு நிழலிருக்க!
கண்படுமிந்த காட்சி
காண கண்கோடி போதாது
கணப்பொழுதும் மனதால் நீங்காத
கானப்பறவைகளின் இல்லற பாடலிருக்க!
சோகச் சுவடு படர்ந்திடாது
செம்மை புரிந்துணர்ந்த தாம்பத்திய
சோலையின் தம்பதியரை வாழ்த்துவீர் முதுமையிலும்
செழுமை மகிழ்வில் ஒற்றுமையாய் இணைந்திருக்க!
.. நாகினி
வாய் திறந்த சிரிப்பில் தான் எந்தன்
நோயும் ஓடிப் போகுதே…
தாய் போல் ஊட்டும் இனிமை கண்டு
உன் சேயாய் மனமும் மாறுதே..
நாம் பெற்ற வரங்கள் எல்லாம்
நமைச் சுற்றி பேத்திகளாய்
மனம் நிறைந்த இனிமைக்கு
இனிப்பூட்டும் அழகே அழகு தான்..
கொண்டாட்டம் கும்மாளம் உற்சாகம்
எந்நாளும் வீடேறி வரவேண்டும்
நரை வந்து திரை விழுந்து தவித்தாலும்
அருகிருக்கும் ஆறுதலாய் நீ வேணும்
கண்மலர் காப்பாய் தோழா உந்தன்
கருணை இன்றெனைத் தாக்குதே கேள்
நீ வைத்த பொட்டிற்கு என்றென்றும்
வயதாவதில்லை ஏன் நண்பா சொல்
காலங்கள் உருண்டு போனாலும் நம்
எழில் நம்மை ரசிக்குதே கண்ணுக்குள்ளே
கைபிடித்த அன்று முதல் உயிர் வைத்து
மனம் பிடித்த உறவு இது ..புரியாதா
சொல் கொடுத்த தூண்டுதலில் நமக்கான
கவிதை மாலை மாற்றுவோம் பரஸ்பரமே
பெண் எனக்குள் உந்தன் மனம் மாசில்லாத
மாணிக்கமே உனக்கது ரகசியமே
இணைத்தான் சொர்க்கத்தில் இருவரையும்
இணைந்தோம் மனபந்தம் தொடர
என்றென்றும் உனக்கே துணையாவேன்
உனைத் தாங்கும் கோலாக நானாவேன்..!
ஜெயஸ்ரீ ஷங்கர்
வாழ்த்தி வணங்குவோம்…
அகவை அறுபதைத் தாண்டிடினும்
அன்பது என்றும் குறைவதில்லை,
முகமதில் மூப்பு வந்தாலும்
முதுமைக் காதல் தவறில்லை,
நகமும் சதையுமாய் வாழ்ந்தவர்கள்
நமக்கு நல்ல வழிகாட்டி,
இகத்தில் இவர்கள் இனிதுவாழ
இனிப்பு கொடுத்து வணங்குவமே…!
-செண்பக ஜெகதீசன்…
அங்கிங்கு எனாதபடி அன்பு மயம்
பொங்குது !
பரிவுக் கரங்கள் ஊட்டுவது
பால்கோவா இனிப்பா ?
புது வேட்டி ஏன் தாதா வுக்கு ?
பட்டுப் புடவை பாட்டிக்கும்;
செந்திலகப்
பொட்டு மின்னுது நெற்றியிலே;
வெட்டுது வைர மூக்குத்தி ;
வீட்டிலே என்ன விழா ?
கொட்டு மேளம் மட்டும் இல்லை !
கோமளா பாட்டிக்கு அறுபது பூர்த்தி !
காமிரா ஃபிளாஸ் நமது
கண்ணில் அடிக்குது !
சி. ஜெயபாரதன்
படக்கவிதைப் போட்டி ( எம். ஜெயராமசர்மா … அவுஸ்த்திரேலியா .. மெல்பேண் )
இருவர் மனமும் ஒன்றானல் எமது முதுமை இளசாகும்
உனது சுவையில் நான்கலப்பேன் எனது இனிமை நீயாவாய் !
கைபிடித்தேன் மெய்பிடித்தேன் காலமெலாம் சேர்ந்திருப்பேன்
உன்முகத்தைப் பார்த்தபடி உவப்புடனே இருந்திடுவேன் !
இனிப்புகழ் உன்னைச்சூழ இகபரம் தனைமறந்து
மனத்திலே கபடுமின்றி மலர்ச்சியாய் நிற்கின்றாயே !
மங்கையின் மணிவிழா > என் ஆருயிர் நங்கையே>
பொன் போலொரு மங்கையே>
அன்று என் கைத்தலம்>
வென்று என் நெஞ்சம் கொண்டவளே>
உயிரில் கலந்து என்>
உள்ளம் கவர்ந்தவளே>
கோடை மாமழை என
>
கூடலில் குளிர்ந்தவளே >
வெயிலின் வனாந்தரங்களை>
ஓய்விலா வாழ்வின் போழ்தை>
நிலாவின் குளிர்மை தந்து>
குலவி இருந்தவளே>
இல்லறப் பயிர் செய்து >
நல்லறம் விளைத்தவளே>
என் உயிர் உன் உதரத்தில் >
மேன்மையுடன் சுமந்து >
உயிர் தந்து மகிழ்ந்தவளே >
உத்தமப் பெண் நீயே ….
>
கைகோர்த்து மெய் சேர்த்து >
கண்கள் பேசி நின்ற
காதல் பொழுதுகளும் >
மெய் சோர்ந்து விழி கலங்கி >
மனம் நொந்து பொழுதினிலும் >
தோள் சேர்ந்து துயர் துடைத்து >
தேன் மொழிகள் சொட்டி -என் >
தேம்பலேல்லாம் துடைத்து >
ஆம்பல் எனப் பூத்திருந்து >
தேற்றி விட்ட போழ்துகளும்
>
இற்றைவரை என்னுடனே …. >
இனியவளே இனித்தது நம் வாழ்வு >
தனிமை கொல்லாமல் >
கனிவுடன் காத்தவளே
?
இன்று ஆல் போல் தழைத்து >
நின்று அறுகு போல் வேரூன்றி >
நற்றவத்தின் செல்வங்கள் >
நம்மைச் சூழ்ந்திருக்க >
அறுபதின் ஆண்டுகளை
>
அழகாய்ச செலவிட்ட >
அன்பின் பதிவுகளை
>
இன்பமாய் கொண்டாடி >
நன்றே சிரித்திருப்போம் >
நம் வாழ்வின் இறுதி வரை!
>
புனிதா கணேசன் (18.03.2015)
இங்கிலாந்து
அன்பான கணவருடன்
இன்பமான வாழ்க்கை
அளவில்லா ஆனந்தம்
ஆயிரம் பிறைகள்
காணப்போகும் எனக்கு
எழுபதாம் பிறந்த நாளாம்
இனிப்பான கேக்கை ஊட்டியே
களிப்பான இளைய பேத்தி
பாட்டொன்று பாடு என்றாள்
மலையோரம் வீசும் காற்று
மனதோரம் பாடும் பாட்டு
கேக்குதா கேக்குதா என்று
எனக்குப் பிடித்த
சினிமாப் பாட்டை
இனிமையாய் நானும்பாட
இன்னுமிந்த பாட்டிக்கு
வேண்டுமாம் கேக்கு
என்றவளும் ஓடிவந்தாள்
இதனைக் கண்ட
இன்னொரு பேத்தியும்
கேக்கோடு தான்வந்தாள்
குட்டிப் பெண்களின்
குறும்பான விளையாட்டு
கேக்கோடு என்றால்
இந்தக் கிழவருக்கும்
இப்போது வந்ததொரு
ஆசையைப் பாரேன்
இன்றுதான் கல்யாணம்
ஆனவர் போலவே
கொஞ்சுவதைப் கேளேன்
இருந்தாலும் இந்த
மகிழ்ச்சியான தருணம்
மறக்கமுடியாத ஒன்றுதான்
இத்தனை வருடம்
இன்பமாய் வாழ்ந்ததே
எங்களோட சாதனை
எங்களது வாழ்க்கை
இன்றைய இளசுகளுக்கு
தந்திடுமே போதனை
அன்புள்ளம் கூடி மகிழும் இனியநாள்
இனிமையை அள்ளித்தரும் பிறந்தநாள்
பாட்டிக்கு இந்த நாள் திருநாள்
தாத்தாவின் கண்களுக்குள் மணநாள்
இனிமை பெருநாள் புதுநாள் .!
இல்லறமும் நல்லறமும்
சேர்ந்துதான் வாழ்க்கை என்று
கற்பிக்கும் வகுப்பானதோ வாழ்வு..1
என்றென்றும் மனத்திரையில்
படிந்திடும் அரிச்சுவடி
நடந்திடுவோம் உங்கள் பாதை
வேறென்ன பரிசு வேண்டும்
இது போதுமே…!
காலங்கள் மாறும் மாறும்
கோலங்கள் போடும் நேரம்
நீங்கள் தான் எங்களுக்கு
ஒரே ஆதாரம்…!
(அன்புள்ளம் கொண்டு சேர்ந்த நல்லநாள்
இனிவரும் நாளெல்லாம் இன்ப நாள்
மனந்தனில் இது நாள் சுபநாள்
இன்பமே நீ என்னுடனே வரலாம்
இனிமை தரலாம் பெறலாம்….)
என்னை என் உணர்வுகளை
உண்ரமாட்டாய்யா ?
உன் கண்களால் கருணை காட்டி
அருள் மழை பொழிய மாட்டாயா ?
என் பக்கமிருந்து அருகமர்ந்து
ஆசையுடன் பேசமாட்டாயா ?
என்று எத்தனையோ நாள்
ஏங் கியிருப்பாய்
அத்தனைக்கும் முத்தாய்ப்பாய்
அகவை அறுபதில்தான் எனக்கு
நேரம் கிடைத்திருக்கிறது
பூத்தூவி கேக் ஊட்டி பிள்ளகள்
பேரப்பிள்ளைகள் சூழ
நெடு நாள் ஆசையை நிறைவேற்றி
என் நினைவலைகளையும் மீட்டிக்கொள்கிறேன்
நம் மக்களுக்கு வழிகாட்டியாய்
இல்லறத்தை நல்லறமாக்கிய உன்
வரலாறை சொல்லி சொல்லி வடிவமைப்போம் வா
சரஸ்வதி ராசேந்திரன்
முகத்தில் விழுந்த சுருக்கங்கள்
முடிந்து வைத்துள்ளது காலங்காலமாய்
பகிர்ந்து கொண்ட காதலை
பலங்கொண்ட ஆலம் விழுதுகளென !
விழித்திரை மூடி மனத்திரை திறக்க
கண் அவர் என்றானவர் அவ்விடம்
எழுந்தருள தித்தித்தது நாக்கு மட்டுமல்ல
நெஞ்சில் நிறைந்த இன்ப நினைவுகளுமே !
மனையாள் இங்கே மழலை ஆகிட
மணாளனோ அன்னையாய் வடிவெடுக்க
தாய்க்குப் பின் தாரமென வந்தவருக்கு
தாயுமானவராய் மாறிப்போன அற்புத காட்சி !
அனுசரித்து வாழ அறிவுரைகள் பலவோடு
அடியெடுத்து வைத்தேன் இல்லற வாழ்வினுள்ளே
அரவணைத்துப் போகும் அன்பானவர் தங்களோடு
அழகானதே நம் இல்லறம் நல்லறமாய் !
அன்பாலே அழகான குணவதி
அமைந்தாரே எந்தன் மணவாட்டியாய்
அன்னையாய் பிள்ளையாய் வாழ்ந்து
அழகாக்கினாரே எந்தன் வாழ்வு தனையே !
காலம் கடந்தும் கோலம் மாறியும்
இளமை மாறா இந்த இன்ப காதல்
தொடரட்டும் ஏழேழ் பிறப்பிலும் –
அழகாய் ஆக்கட்டும் காதல் தனையே !
படக்கவிதைப்போட்டி ( எம். ஜெயராமசர்மா .. அவுஸ்த்திரேலியா … மெல்பேண் )
———————————————————————————————————–
பொட்டிட்ட நிலவாய்நீ பூரித்து நிற்கின்றாய்
கட்டியவன் துணியிருப்பேன் கண்ணேநீ சிரித்துநில்லு !
சொத்தாக நீயிருந்தாய் சுகமெல்லாம் தந்துநின்றாய்
அத்தனையும் இப்போது அகமகிழ வைக்குதடி !
ஒன்றுமே தெரியாது ஊமையென இருந்தாலும்
வென்றுநான் வருவதற்கு விவேகமே நீதானே !
வற்றா கரிசனம் வார்த்தவன்கைப் பற்றிப் –
நெற்றித் திலகம் நிலைத்திருக்க முற்றிய
வாழ்வின் முதன்மை வசந்த முகவரி
சூழ்ந்த சுகவரி சுந்தரம் காட்ட
சுற்றிப் பெயரக் குழந்தைகள் அன்போடும்
வெற்றியைக் கொண்டாடும் வெள்ளி நிலவுக்கு.
பொற்காலம் பூத்த பொதும்பு.
*மெய்யன் நடராஜ்
திருத்தம்
வற்றா கரிசனம் வார்த்தவன்கைப் பற்றியவள்
ஆயிரங்காலப் பயிரின்
ஆனந்த வெற்றி விழா இன்று…
நம்மோடு சந்ததியும்
சந்ததமாய் பெருமை பாட
இனிக்கும் பொழுதில் எங்கும்
இனிமைச் சுவையொடு நாமும்
இல்லறத்தில் வெற்றிகண்ட நம்
நிறைந்த நெஞ்சங்களை வாழ்த்தி
பரிசளிக்கும் இணையத்தின் ‘வல்லமை’ கூட
நமதன்பின் வலிமைக்கு கனத்த
கவிதை மாலைகளால் அலங்கரித்து
பாராட்ட என்ன தவம் செய்தோம்..
அவர்கள் அன்புக்கு நன்றி சொல்ல
நாமே அங்கு செல்லலாம் வா…!
ஜெயஸ்ரீ ஷங்கர்.
கைப்பிடித்த நாளில் தேன்வண்டாய் சுவை அறிந்தேன் வருடங்கள் சென்றன வாழ்வில் எதிர்பார்த்த வசந்தம் தொலைந்து போனது. ஊர்மெச்ச சிரித்து உள்ளுக்குள் அழுது தூங்க இரவுதனை வெறுக்கின்ற பொழுதில் ஆரே அமுதே அன்னகிளியே நீ உரைத்த ஒருமொழி என் உள்ளம் மகிழ்ந்ததடி. கரு சுமக்கும் கருப்பை இல்லையென்றாலும் மனம் உள்ளதடா .மடிக்கு ஒரு மகவு தத்து எடுக்க என்றாய். பெற்றாள் ஒரு பிள்ளை பேர் சொல்ல எனக்கில்லை என்ற நானோ உன் சொல்லில் உருகி எடுத்தோமோ தத்தாய் பல முத்துகளை . மடிக்கு ஒன்று அல்ல விரல் பிடிக்க ஒன்றாக. இன்று எண்பதின் திருமண நாளாம் வந்திறங்கிய சொந்தம் பாரேன் . வாயேல்லாம் பல்லாகவாழ்து பா பாடுவதை. பேரன் பேத்தி சங்கமம் எனக்கோ மனம் முழுதும் சந்தோஷம் . கண்ணே உன் ஒரு சொல் இன்றுஒராயிரம் சொந்தமானதடி. இனிப்பு கரைந்து விடும் ஆனால் என் உள்ளம் முழுதும் இனிப்பாய் நீயடி.
திருக்குவளை கவிஞர் மீ.லதா
படக்கவிதைப்போட்டி … எம். ஜெயராமசர்மா .. அவுஸ்த்திரேலியா .. மெல்பேண்
————————————————————————————————————
நீபாதி நான்பாதி கண்ணே நினவெல்லாம் நீதானே கண்ணே
நானூட்டும் இனிப்பை நீயுண்ணு நலனோங்கச் சிரித்துமே நில்லு !
படக்கவிதைப்போட்டி .. எம். ஜெயராமசர்மா .. அவுஸ்த்திரேலியா ..மெல்பேண்
வயசானாலும் வடிவுகுறையா வண்ணமே
வாழ்நாளில் நான்பெற்ற செல்வமே
இனிப்பாக எம்வாழ்வு இருக்கட்டும்
ஏற்றிடுவாய் என்னினிப்பை அன்னமே !
எத்தனை வயதானாலும் நீயென்
பத்தரை மாற்றுச் செல்லமே.
இத்தனை காலம் வாழவைத்த
அத்தன் அவனுக்கு நன்றி.
சொத்தாம் பேரக் குழந்தைகள்
சூழ ”..ஆ..” வென்னடா என்
அன்புச் செல்லமே! நீ!.
ஆரோக்கியமாய் நீடு வாழ்க!
படக் கவிதைப் போட்டி – 4இன் முடிவுகள்: https://www.vallamai.com/?p=55666
நல்ல, சிறப்பான செயல்.நீண்டநாள் தொடர்பிருந்து ம், ஓய்வுபெற்ற பின்தான் உங்கள் வல்லமை யை பார்க்க முடிந்தது. இனி அடிக்கடி தொடர்பு கொள்கின்றேன். கவிஞர்கள் அனைவருக்கும் எனது பணிவான வணக்கங்கள். அண்ணா கண்ணன் உங்கள் தமிழ் தொண்டு மேலும் சிறக்க வாழ்த்துக்கள். கவிதை கணேசன் பண்ருட்டி தமிழ்நாடு இந்தியா