படக் கவிதைப் போட்டி – 4இன் முடிவுகள்

கிரிக்கெட்டின் ஆடுகளத்தில் பந்து எங்கே தொட்டு [பிட்ச் (pitch) ஆகி], எங்கே செல்கிறது என்று பார்ப்பதைப் போல், கவிதையிலும் சொல் எங்கே ‘பிட்ச்’ ஆகிறது என்று பார்க்க முடியும். இந்தப் படத்துக்கு அன்பர்கள் எழுதிய கவிதைகள் ஒவ்வொன்றிலும் அன்பின் நறுமணம் கமழ்கிறது. கவிதையின் கூர்மை, நேர்த்தி, செம்மை ஆகியவற்றில் சற்றே முன்பின் இருந்தாலும் காதலின் தனித்த சுடர், இந்த வரிகளை மேலும் ஒளிரச் செய்கின்றது. காட்சியில் உள்ளதை அப்படியே எழுத்தில் வடிக்கச் சிலர் முயன்றுள்ளார்கள். காட்சியை மையமாக வைத்து, அதன் வேர்களிலும் கிளைகளிலும் பலர் பயணித்துள்ளார்கள்.

அண்ணாகண்ணன்

அன்புக்கு ஏது வயது எனத் தம் குடும்ப விளக்கிற்கு இனிப்பூட்டும் கணவர், களிப்புடன் அதை ஏற்கும் இல்லத்தரசி, குதூகலத்தில் திளைக்கும் செல்லப் பிள்ளைகள்… என ஒரு கொண்டாட்ட மனநிலையை அழகாகப் படம் பிடித்த நித்தி ஆனந்துக்கு முதலில் பாராட்டுகள். வண்ணங்களின் கலவையும் உணர்வுகளின் வெளிப்பாடும் இந்தக் காட்சியில் சிறப்பாகப் பதிவாகியுள்ளன.

16483711086_5e9d5432f1_z

இந்தப் படத்துக்கு அன்பர்கள் எழுதிய கவிதைகள் ஒவ்வொன்றிலும் அன்பின் நறுமணம் கமழ்கிறது. கவிதையின் கூர்மை, நேர்த்தி, செம்மை ஆகியவற்றில் சற்றே முன்பின் இருந்தாலும் காதலின் தனித்த சுடர், இந்த வரிகளை மேலும் ஒளிரச் செய்கின்றது. காட்சியில் உள்ளதை அப்படியே எழுத்தில் வடிக்கச் சிலர் முயன்றுள்ளார்கள். காட்சியை மையமாக வைத்து, அதன் வேர்களிலும் கிளைகளிலும் பலர் பயணித்துள்ளார்கள். கிரிக்கெட்டின் ஆடுகளத்தில் பந்து எங்கே பட்டு [பிட்ச் (pitch) ஆகி], எங்கே பாய்கிறது என்று பார்ப்பதைப் போல், கவிதையிலும் சொல் எங்கே ‘பிட்ச்’ ஆகிறது என்று பார்க்க முடியும்.

மாறா உன் புன்னகையிலே
மாறியிருந்தது என் உலகம்

எனச் சங்கர் சுப்ரமணியனும்

வெயிலின் வனாந்தரங்களை
ஓய்விலா வாழ்வின் போழ்தை
நிலாவின் குளிர்மை தந்து
குலவி இருந்தவளே

எனப் புனிதா கணேசனும்

முகத்தில் விழுந்த சுருக்கங்கள்
முடிந்து வைத்துள்ளது காலங்காலமாய்
பகிர்ந்து கொண்ட காதலை
பலங்கொண்ட ஆலம் விழுதுகளென!

எனத் தமிழ்முகிலும்

இருவர் மனமும் ஒன்றானால் எமது முதுமை இளசாகும்
உனது சுவையில் நான்கலப்பேன் எனது இனிமை நீயாவாய்!

என ஜெயராமசர்மாவும்

முற்றிய வாழ்வின்
முதன்மை வசந்த முகவரி
சூழ்ந்த சுகவரி சுந்தரம் காட்ட

என மெய்யன் நடராஜும்

கணப்பொழுதும் மனதால் நீங்காத
கானப் பறவைகளின் இல்லற பாடல்

என நாகினியும் தீட்டிய வரிகளை ரசித்து மகிழ்ந்தேன்.

இந்த வாய்ப்பில் எஸ்.பழனிச்சாமி ஒரு சிறுகதை எழுத, மீ.லதா, ஒரு நாவல் சுருக்கத்தையே எழுதிவிட்டார். செந்திலகம் என்ற ஜெயபாரதனின் சொல், செம் திலகம், செந்தில் அகம் என்ற இரு பொருட்சுவை தருகின்றது. நிரஞ்சன் பாரதி, அணிச்சல் (Cake) என்ற சொல்லை ஒரு படைப்பினுள் முதன் முதலாகப் பயன்படுத்தியுள்ளார்.

சிற்சில சொற்கள், வரிகள் என்ற அளவில் பலவும் சிறப்புற இருந்தாலும், முழுமையான கவிதை என்ற அளவில் பார்க்கிறபோது, இப்னு ஹம்துன் எழுதிய இந்தக் கவிதை என்னைப் பெரிதும் கவர்ந்தது.

நாளும் இனிமை கூட்டியதும்
நாவில் இனிப்பை ஊட்டியதும்
காலம் முழுதும் இனித்திருக்கும்
கடவுள் அருளாய் மணத்திருக்கும்.

வாழும் பெண்ணின் உள்ளத்தில்
வசந்தம் தன்னை மணந்தவரே.
தோழன் போல துணைநிற்க
துயரக் காற்றைக் கண்டதில்லை.

பேரன் பேத்தி எடுத்தாலும்
பெயரா உறவும் நமதன்றோ.
வேர்கள் நாமே பரஸ்பரமே
வெற்றி கண்டோம் வாழ்வினிலே.

அன்பைத் தந்தாய் அனுதினமும்
அதிலே திகட்டல் ஏதுமில்லை.
உன்னை அன்றி வேறேதும்
உவந்த இனிப்பும் எனக்கிலையே.

இன்பம் வெற்றி உன்னாலே
இதயம் கண்டது தன்னாலே.
என்றும் காப்பான் இறையவனும்
இந்த வாழ்வின் இனிமையினை.

நன்றி சொல்லி வாழ்ந்திருப்போம்
நல்ல வாழ்க்கை அதற்கென்றே.
நின்று பார்க்கும் பிள்ளைகளே
நேசப் பாடம் படிப்பீரே!

இதில் ‘உன்னை அன்றி வேறேதும் உவந்த இனிப்பும் எனக்கிலையே’ என்று அழகுற உணர்ந்துரைத்த விதம் நன்று. இந்தக் கவிதையின் சிறப்பைப் பாராட்டி, இப்னு ஹம்துன் அவர்களை இந்த வாரத்தின் சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கிறேன்.

மங்கல நாயகி முகமெங்கும்
ஆயிரம் நிலவின் நட்சத்திரம்

பொட்டும் பட்டும் பாட்டிசைக்க
பளிச்சிடும் புன்னகைப் பெண்சித்திரம்

அனுபவ வலிகள் மறைந்த
ஆனந்த சுமைகளின் முகவரிகள்

கொண்டவர் அருகிருக்க கோலமகள்
வாரிசுகள் ஆர்ப்பரித்து அகமகிழ

தொலைந்து கடந்த பிறந்தகாலம்
நினைவில் நழுவிய வேளையிலும்

குழந்தைமனம் மாறாக் குதூகலம்

என வசீகரமாக வர்ணித்த ஜெயஸ்ரீ ஷங்கர் அவர்களை இந்த வாரத்தின் குறிப்பிடத்தக்க கவிஞராகத் தேர்ந்தெடுக்கிறேன்.

இந்த இரு கவிதைகளில் எதற்கு முதலிடம் எனக் கடுமையான போட்டி இருந்தது. ஏனெனில் ஜெயஸ்ரீயின் தொடக்கமும் இப்னுவின் முடிப்பும் மிகச் சிறப்பாக இருந்தன. எனினும் ஜெயஸ்ரீயின் கவிதை, பெரும்பாலும் காட்சிக்கு உள்ளே மட்டும் இருக்க, இப்னுவின் கவிதை, அதையும் கடந்து பயணித்தது. தெரிந்ததிலிருந்து தெரியாதவற்றுக்கும் அறிந்ததிலிருந்து அறியாதவற்றுக்கும் அழைத்துச் செல்வது, சிறந்த முறை. எனவே, இப்னு சிறந்த கவிஞர் என்ற பாராட்டைப் பெறுகிறார்.

இப்னு ஹம்துன், ஜெயஸ்ரீ ஷங்கர் இருவருக்கும் பாராட்டுகள். பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

பதிவாசிரியரைப் பற்றி

11 thoughts on “படக் கவிதைப் போட்டி – 4இன் முடிவுகள்

 1. சகோதரி   ஜெயஸ்ரீ  ஷங்கர் அவர்களுக்கும் சகோதரர் இப்னு ஹம்துன் அவர்களுக்கும் என் இனிய நல்வாழ்த்துகள் !
  எனது கவிதை வரிகளையும் இங்கு குறிப்பிட்டு கூறியமைக்கு நன்றிகள் பல.

 2. கவிதை எழுதியோரில் ஐம்பது விழுக்காட்டினருக்கும் அதிகமானோர் ஆணின் கோணத்திலேயே கவிதை எழுதியது கொஞ்சம் வியப்பு. பெண்ணின் கோணத்தில் கவிதைகளை வடித்தவர் இப்னுவும் ஜெயஸ்ரீயும் மட்டுமே என்பது நான் கவனித்த கோணம்.

  பேரன் பேத்தி எடுத்தாலும்
  பெயரா உறவும் நமதன்றோ….
  நின்று பார்க்கும் பிள்ளைகளே
  நேசப் பாடம் படிப்பீரே!…
  என்ற பாட்டியின் மனநிலையை … பாட்டியின் கோணத்திலேயே ….அந்த வயதிற்குரிய மனப்பாங்கை காட்டிய இப்னுவின் கவிதை அருமை. இப்னுவிற்கு வாழ்த்துகள்.

  மற்றொன்று… ஜெயஸ்ரீ மட்டுமே தாத்தாவின் கோணத்திலும், பாட்டியின் கோணத்திலும், விழாவில் பங்கெடுத்தோர் கோணத்திலும் கவிதைகளைத் தந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. பாராட்டுகள் தோழி

 3. வெற்றி பெற்ற இப்னு ஹம்தீன்     ஜெயஸ்ரீ அவ்ர்களுக்கு பாராட்டுக்கள்-சரஸ்வதி ராசேந்திரன்

 4. புகைப்படத்திற்கான அனைத்து சிறப்பான கவிதைகளிலும் எனது கவிதையும் குறிப்பிடத்தக்க
  இடத்தில் பொருந்தியதில் எனது மகிழ்வையும், தேர்ந்தெடுத்து அறிவித்ததற்கு எனது நன்றியையும்
  தெரிவித்துக் கொள்கின்றேன்.

  ஜெயஸ்ரீ ஷங்கர்

 5. நன்றிகள் பல வல்லமைக்கு. முதல் படைப்பில் பாராட்டு பெற்றேன் . இக்கவிதை போட்டியில் வெற்ற என் தோழமைகளுக்கு வாழ்த்துகள் .இனிதே பயணம் செய்வோம் தமிழ் வழியே .வாழ்க தமிழ். நன்றியுடன் கவிஞர் மீ.லதா

 6. இதய நன்றியும் இனிய மகிழ்ச்சியும்.

  அனைத்து கவிஞருக்கும் என் வாழ்த்துகள்.
  வாழ்த்திப் பாராட்டியோருக்கு நன்றி பல்.

  நீண்ட நாள்களுக்குப் பிறகு ‘வல்லமை’க்கு வருகை தந்தபோது படக்கவிதைப் போட்டியைக் கண்டு, அக்கணமே இதனை எழுதினேன். இப்படக்கவிதைக்கான இந்தப் பாராட்டும் அங்கிகாரமும் என் கவிவேகத்தைக் கூட்டும் வல்லமை கொண்டது என்றால் மிகையில்லை.

  மீண்டும் மகிழ்வும் நன்றியும்

 7. நண்பர் இப்னு ஹம்துன் சிறப்பாக எழுதியிருக்கிறார். வாழ்த்துகளும் பாராட்டுகளும் .. எளிய இலகுவான வார்த்தைகளுடன் கூடிய வாக்கிய அமைப்புகள் இந்த கவிதையின் பலம்.வாழ்த்துகள்.

 8.    “இருவர் மனமும் ஒன்றானால் எமது முதுமை இளசாகும்
      உனது சுவையில் நான்கலப்பேன் எனது இனிமை நீயாவாய்!”

  இந்தக் கவிதைவரிகளைப் பாராட்டியமைக்கு .. தேர்வுக்குழுவுக்கு .. எனது 
  மனமார்ந்த நன்றி.

  எம். ஜெயராமசர்மா.

 9. சிறந்த கவி இயற்றிய கவி வாழ்க > மற்றும் பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்

Leave a Reply

Your email address will not be published.