ஜெயஸ்ரீ ஷங்கர்

lfopy_199381

தாய்மை தாங்கும் அச்சாணி
வெறும் கவிதைக்குள்
அடங்கி விடுமா தாய்மை…?

உதிரம் பகிர்ந்த உறவுகளின்
உணர்வை ஆணிவேராக
இதயம் புகுந்து ஊன்றி
விழுதுகள் மண் தொடும்
நங்கூரம் தாய்மை..!

இளமையில் இனிமையானது
முதுமையில் தனிமையானது
கடமையில் மேன்மையானது
பொறுமையில் பூமியானது
தூய்மையான கருணையே தாயானது..!

சுழலும் பூமிக்கு அச்சாணி
தவிக்கும் இதயத்தின் தோணி
இலக்கில் உயர்த்தும் ஏணி..
குடும்பத்தைக் காக்கும் ஜீவ ஊருணி..!

மேன்மை கண்ட தாய்மை
மென்மை கொண்ட பதுமை
வறுமை இடத்தும் பெருமை
கொள்ளும் அவள் அருமை
மங்கை கொண்ட மகுடம் தாய்மை ..!

கொட்டிக் கொடுத்தாலும்
கிட்டாத சிம்ஹாசனம்
அடையாளம் இல்லாத
ஆத்மீக ரகசியம்..தாய்மை ..!

வெடித்த பாறையில் பச்சிலை போல்
விரிந்த வானத்தின் கார்மேகம் போல்
பொங்கும் கடலின் தொடர் அலைபோல்
இறைவன் தந்த சீதனம்..தாய்மை..!

உன்னதத்தை உன்னதத்தால் உன்னதமாக்கும்
உருவுக்குள் அடங்கி விடாது
உணர்வுக்குள் முடங்கி விடாது
கவிதைக்குள் வீழ்ந்து விடாது…தாய்மை ..!

உயிருக்குள் உயிராக
உலகுக்கே உயிராக
பெருஞ்ஜோதியின் வரமான
பெருங்கருணையல்லவா..தாய்மை ..!

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “தாய்மை (2)

  1. ஆழ்ந்த சிந்தனை.. .. அழகிய கவிதை…
    உறவின் பெருமைகள் பலவும் இருந்தாலும் 
    உதிரம் சொல்வது தாய்மை என்பதே…
    உள்மனமெங்கிலும் உருகிய உணர்வுகள்…
    சொற்களில் எடுத்துக்  கொடுத்தவர் வாழ்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *