அண்ணாகண்ணன்

சிலை வணக்கம் புரியும் சிறுவனின் மனத்தில் புகுந்து, கலை மணக்கும் கவிதை வடித்த அன்பர்களுக்கு வாழ்த்துகள். புதுவை சரவணன் எடுத்த நிழற்படத்தின் சாரத்தை நிஜப் படமாய் எழுத முயன்றீர்கள்.

16720185552_5ebd517bcb_o

தெய்வத்தை வணங்கும் தெய்வம் என்று முகநூலில் ராமன் ஜனனியும் ஒரு தெய்வம் கடவுளை வணங்குகிறது…! என்று வேலுச்சாமியும் வர்ணித்தது, இந்தப் படத்திற்கான அழகிய தலைப்பு.

வீட்டுச் சிக்கல்களையும் நாட்டுச் சிக்கல்களையும் சொந்தச் சிக்கல்களையும் தீர்க்க, இந்தச் சிறுவன் கடவுளை வேண்டுவதாக, கவிஞர்கள் அடுக்கிய விதத்தைக் கண்டோம். அதில்

எப்போதும் இதையே பேசிடாமல்
என்னை அவர்கள் கொஞ்சிடணும்

என எஸ்.பழனிச்சாமியும்

உன்னை வேண்டுவேன் படைத்தவனே
உலகினில் வேண்டாம் அனாதைகளே…!

என செண்பக ஜெகதீசனும் தீட்டிய வரிகளை ரசித்தேன்.

எனினும் ஒரு முழுக் கவிதை என்ற அளவில் பார்க்கையில், பி.தமிழ்முகிலின் படைப்பு என்னை அதிகம் கவர்ந்தது.

ஓட்டின் இடுக்கில் சின்னஞ்சிறு கூட்டில்
சிட்டுக்குருவியும் குஞ்சுகளும்
சுகமாய் தான் வாழனும்
பூனையிடமிருந்து காத்திடனும் சாமியே!

கோழிக் குஞ்சையும் வாத்து குஞ்சையும்
பருந்து காக்கையிடம் இருந்து
பத்திரமா காக்க வேணும் – அவையும்
என் கண் முன்னே சிறகடிச்சு பறக்கனும்!

கன்றுக் குட்டியும் ஆட்டுக் குட்டியும்
என்னைக் கண்ட மறு நொடியே
துள்ளி ஓடி வந்திடனும்
அன்புடன் நானும் அணைத்திடனும்!

சின்னச் சின்ன ஆசைகளின்
சின்னஞ்சிறு பட்டியலிது
பட்டியல் வளரும் வேளைதனில்
பட்டென்று சொல்லிடுவேன் உன்னிடமே!

பொய் பொறாமை புரட்டும் தான்
என் மனதை அண்டாது காத்திடனும்
அன்பும் பண்பும் எந்நாளும்
குறையாது நானும் வாழ்ந்திடனும்!

நாளும் உன்னைச் சந்தித்தே
நலமும் கேட்டு மகிழ்ந்திடுவேன்
நலமும் வளமும் உலகமெலாம்
நிலைத்திடவே வேண்டிடுவேன்!

இவற்றைச் சின்னஞ்சிறு ஆசைகளாகப் பார்த்தாலும் அர்த்தம் உண்டு. அதே நேரம், குறியீடுகளாகப் பார்த்தாலும் பொருள் உண்டு. மேலும் கடவுளை நலம் கேட்பது ஓர் அழகு என்றால், தனக்காக வேண்டாமல், உலகமெலாம் நலமும் வளமும் நிலைத்திட வேண்டுவது, இன்னும் அழகு. வேண்டும் என்பதன் பேச்சு வழக்கு வேணும் என்றே இருக்க வேணும். மூன்று சுழியை இரண்டு சுழியாக்கினாலும், கவிதை அம்சத்துக்காக, இந்த வாரத்தின் சிறந்த கவிஞராகப் பி.தமிழ்முகிலைத் தேர்ந்தெடுக்கிறேன்.

அத்தனை பேரும் கடவுளை வேண்டுகையில், கடவுளே குழந்தையிடம் உரையாடுவது போல் மாற்றி யோசித்ததோடு மட்டுமின்றி,

குட்டிச்செல்லமே…!
கூடவே நானிருப்பேன் – உன்
குட்டித்தோழனாக…!

எனக் கடவுளைக் குட்டித் தோழனாக்கிய தனுவை இந்த வாரத்தின் குறிப்பிடத்தக்க கவிஞராக அறிவிக்கிறேன்.

தமிழ்முகிலுக்கும் தனுவுக்கும் பாராட்டுகள். பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “படக் கவிதைப் போட்டி – 3இன் முடிவுகள்

  1. கவிதைகள் யாவற்றையும் படிக்கும் பொழுது சிறந்த கவிதையென ஒன்றைத் தேர்ந்தெடுப்பது நடுவருக்கு கடினமான ஒரு செயலாக இருந்திருக்குமெனத் தெரிகிறது.  தோழி கவிஞர் தமிழ்முகிலுக்கு வாழ்த்துகள். 

  2. இந்த வாரத்தின் சிறந்த கவிஞர் திரு. தமிழ்முகில் அவர்களுக்கு,
    வாழ்த்துக்கள்..
    கருத்தைக் கவவர்ந்த திருவாளர்கள் தனு, பழனிச்சாமி ஆகியோருக்கும்
    வாழ்த்துக்கள்..
    எனது கவிதையையும் குறிப்பிட்ட திரு அண்ணாகண்ணன் அவர்களுக்கு,
    மிக்க நன்றி…! 

  3. பிள்ளையாரப்பா இந்தப்
    பிள்ளையைப் பாரப்பா
    பூசாரி போலே உனக்குப்
    படையல் வைக்க ஆசைதான்
    காசில்லாத எனக்கு நீ
    ஆசை மட்டும் ஏன் குடுத்தே?
    உனக்குப் பிடித்த கொழுக்கட்டை
    வாங்கி வரவே காசுகுடு

    வெறும் கையாலே
    கும்பிட்டால் நீ கேட்டதைத்
    தரவே மாட்டியாமே…
    புல்லு வெச்சு கும்பிட்டால்
    நீ புத்தி நிறையத் தருவியா ?

    அவ்வைப் பாட்டிக்கெல்லாம் நீ அள்ளி
    அள்ளிக் கொடுத்தியே – உன்னால்
    பிறந்த பிள்ளை நான் எனக்கு
    புத்தி தர வேண்டாமா?
    எல்லாம் தெரிஞ்சும் நீ ஏனோ
    கண்ணைத் திறந்து பார்க்கலே

    எப்படிப் பிறந்தேன் தெரியலியே
    ஏன் இங்கு வந்தேன் புரியலையே
    உன்னைத் தவிர உலகத்துலே
    சொந்தம் எனக்கில்லை தெரியுமில்லே
    யாருமில்லாத உலகத்துலே
    எதுக்கோ என்னை நீ படைச்சிருக்கே

    நானே தேடி கண்டெடுக்க
    ரொம்ப நாளாகும் புரியுமில்லே
    நீயே சொல்லிட்டால் நானும் தான்
    நிம்மதி அடைய மாட்டேனா?
    கும்பிட்டுக் கேட்கிறேன் விநாயகா
    காரணம் காட்டிடுவாய் கணநாதா..!

  4. எனது கவிதையை தேர்ந்தெடுத்த திரு. அண்ணா கண்ணன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். பாராட்டிய அன்பு உள்ளங்கள் சகோதரி தேமொழி மற்றும் திரு. செண்பக ஜெகதீசன் ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

  5. குறிப்பிடத்தக்க கவிஞராக தேர்ந்தெடுத்தமைக்கு  திரு. அண்ணா கண்ணன் அவர்களுக்கு இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்!…பாராட்டிய திரு.செண்பகா ஜெகதீசன் ஐயா அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

  6. இந்த வாரத்தின் சிறந்த கவிஞராக தேர்வு பெற்ற சகோதரி தமிழ் முகில் அவர்களுக்கும், பாராட்டுப் பெற்ற திரு. தனு மற்றும் திரு. செண்பக ஜெகதீசன் அவர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பங்குபெற்ற கவிதைகளில் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுக்கும் கடினமான
    பணியை மேற்கொண்டிருக்கும் திரு. அண்ணாகண்ணன் அவர்களுக்கும் பாராட்டுக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *