ஆவாய் வருட, அடைக்கல -நாவாய்(கப்பல்)
முராரிஅதை தூக்கி முகத்தை அளிப்பு:
ஆவாய் வருட, அடைக்கல -நாவாய்(கப்பல்)
முராரிஅதை தூக்கி முகத்தை அளிப்பு:
நாகேஸ்வரி அண்ணாமலை
சென்ற வாரம் பத்திரிக்கையில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. நியூயார்க்கிலிருந்து லண்டன் செல்லவிருந்த ஒரு பெண், விமானத்தில் தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த நடைபாதைக்கு அருகில் இருந்த சீட்டில் உட்கார்ந்தார். அவர் சீட்டில் நன்றாக செட்டில் ஆகி இருந்த வேளையில் இன்னொரு பயணி அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த ஜன்னலுக்கு அருகே இருந்த சீட்டிற்கு வந்தார். தனக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருக்கப் போவது ஒரு பெண் என்று தெரிந்ததும் அந்தப் பெண் பக்கத்தில் தன்னால் உட்கார முடியாது என்றும் தன்னுடைய மதம் மனைவியல்லாத வெறொரு பெண்ணின் அருகில் உட்காருவதைத் தடை செய்கிறது என்றும் அதனால் தனக்கு இன்னொரு இடம் ஒதுக்கித் தருமாறும் விமானப் பணிப்பெண்ணைக் கேட்டாராம். அவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த அந்தப் பெண் முதலில் எரிச்சல் அடைந்தாலும் எதற்கு வம்பு என்று எண்ணி வேறு இடத்திற்கு மாற்றிக்கொண்டு போகச் சம்மதித்திருக்கிறார்.
இதே மாதிரி இன்னொரு தடவை நியூயார்க் வழியாக லாஸ் வேகஸிலிருந்து இஸ்ரேல் செல்லும் விமானப் பயணத்தின்போது ஒரு கணவனும் மனைவியும் பயணித்தார்கள். கணவனுக்கு நடைபாதைக்கு அருகில் இருந்த இருக்கையும் மனைவிக்கு நடு இருக்கையும் ஒதுக்கப்பட்டிருந்தன. அதே வரிசையில் ஜன்னலுக்குப் பக்கத்து இருக்கை ஒரு யூதருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அவர் அவருக்கு அருகில் உட்காரப் போகும் தம்பதியை கணவனை நடு இருக்கைக்கும் மனைவியை நடைபாதைக்கு அருகில் இருக்கும் இருக்கைக்கும் மாற்றிக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டாராம். ஆனால் அந்தப் பெண் மறுத்துவிட்டாராம்.
அமெரிக்காவிலிருந்து இஸ்ரேலுக்குச் செல்லும் விமானப் பயணங்களின்போது இம்மாதிரி நிறைய சம்பவங்கள் நடக்கின்றனவாம். பெண்களின் அருகில் உட்கார மறுப்பவர்கள் சநாதன யூதர்கள். இவர்கள் தங்கள் மதம் சொல்லும் எந்த போதனையையும் கண்ணை மூடிக்கொண்டு கடைப்பிடிப்பவர்கள். இவர்களால் அடிக்கடி இந்தப் பயணங்களின்போது சில சச்சரவுகள், காலதாமதம் ஏற்படுகிறதாம். சநாதன யூதர்களின் மதத்தலைவர் ஒருவர் மீடியாக்களில் பெரிதுபடுத்தப்படும் அளவிற்கு இது இல்லையென்று கூறியிருக்கிறார். பல சநாதன யூதர்கள் மதத்தலைவர் மோஷே ஃபெயின்ஸ்டைன் கூறியிருப்பதைப் பின்பற்றுகிறார்களாம். சிறிது நேர பயணத்தின்போது யூத ஆண்கள் பெண்களின் அருகில் அமர்ந்து பயணிப்பது தவறு இல்லையென்றும் ஆனால் தவறுதலாகப் பெண்ணைத் தொடும் சந்தர்ப்பம் நேர்ந்துவிட்டால் அதில் இன்பம் காண்பது தவறு என்று சொல்லியிருக்கிறார். யாரோ ஒரு பெண் பக்கத்தில் உட்கார்ந்து பயணம் செய்வதில் என்ன நேர்ந்துவிடப் போகிறது என்கிறார் ஒரு பயணி.
சநாதன யூதர்கள் நிறையக் குழந்தைகள் பெற்றுக்கொள்வதால் அவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டு போகிறதாம். அவர்களில் நிறையப் பேர் விமானத்தில் பயணம் செய்வதால் விமான கம்பெனிகளுக்கு அவர்களால் நிறைய வருமானம் வருவதால் அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தங்கள் கடமையாகிறது என்கின்றன விமானக் கம்பெனிகள்.
இப்படி சநாதன யூதர்கள் மனைவியரல்லாத பெண்களின் அருகில் உட்கார்ந்து பயணம் செய்வதில்லை என்று அறிந்தபோது நான் பல தசாப்தங்களுக்கு முன் மைசூரிலிருந்து தமிழ்நாட்டிற்குப் பேருந்தில் பயணம் செய்தபோது ஏற்பட்ட அனுபவங்கள் ஞாபகத்திர்கு வருகின்றன. அப்போது தமிழ்நாட்டு ஆண்கள் எல்லாம் சநாதன யூதர்களைப் போல் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது.
ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பதுகளில் மைசூரிலிருந்து மதுரைக்கு நேரடி பஸ் கிடையாது. கோயம்புத்தூர் போய்தான் மதுரைக்குப் போக வேண்டும். அப்போது மைசூர்-கோயம்புத்துர் பஸ்கள் சொகுசு பஸ்கள் இல்லை. அதனால் ஒரு பக்கம் இரண்டு இருக்கைகளும் இன்னொரு பக்கம் மூன்று இருக்கைகளும் அவற்றில் உண்டு. நான் என் மகள்கள் இருவரும் சிறு குழந்தைகளாக இருக்கும்போது அதில் பயணம் செய்வதில் மிகவும் சிரமப்பட்டிருக்கிறேன். என் மகள்கள் அரை டிக்கெட் எடுக்கும் வயதாக இருக்கும்போதே அவர்கள் இருவருக்கும் முழு டிக்கெட் வாங்குவேன். இதற்குக் காரணங்கள் இரண்டு. ஒன்று வேறு ஆண் பயணிகள் எங்கள் சீட்டில் உட்கார்ந்து இடைஞ்சல் கொடுக்கக் கூடாது என்பது. இரண்டாவது மூன்று பேர் சீட்டில் இடம் கொஞ்சம் தாராளமாக இருக்கும். குழந்தைகளுக்கும் முழு டிக்கெட் வாங்கினால் அந்த சீட் முழுவதையும் எடுத்துக்கொள்ளலாம். அப்படிப் பயணம் செய்யும்போது சில கிராமத்துப் பெண்கள் குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு பிரயாணம் செய்யக் கூடாதா என்று சண்டைக்கு வருவார்கள். நீண்ட தூரப் பயணம் எவ்வளவு களைப்படையச் செய்யும் என்பது அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் இடையில் ஏறி இடையில் இறங்கிவிடுவார்கள். மேலும் குழந்தைகளுக்கு முழு டிக்கெட் வாங்கியிருக்கிறேன் என்று அவர்களிடம் விளக்க முடியாது. ஏதோ நான் எல்லா சீட்டுகளையும் அடைத்துக்கொண்டு அவர்களுக்கு இடம் கொடுக்கவில்லை என்பதுபோல் குறை சொல்லிக்கொண்டே வருவார்கள்.
பின்னால் மதுரைக்கு மைசூரிலிருந்து நேரடி பஸ் விட ஆரம்பித்த பிறகு இன்னொரு விதமான கஷ்டம். பிள்ளைகள் இருவரும் பெரியவர்களான பிறகு தனியாகப் பயணம் செய்யும் தேவை ஏற்பட்டது. இரண்டு பக்கமும் இரண்டிரண்டு சீட்டுகள் இருக்கும். ஆனால் பெண்களுக்கென்று தனி சீட்டுகள் ஒதுக்கி இருக்க மாட்டார்கள். எங்கு உட்கார்ந்தாலும் இன்னொருவர் அருகில்தான் உட்கார வேண்டும். அந்த இன்னொருவர் பெண்ணாக இருந்துவிட்டால் பிரச்சினை இல்லை. ஆனால் ஆண் என்றால் பிரச்சினைதான். பத்து மணி நேர இரவுப் பயணத்தை எப்படித் தூங்கிவழிந்துகொண்டு ஒரு ஆணின் பக்கத்தில் கழிக்கப் போகிறோம் என்ற எண்ணமே தூக்கத்தைக் கெடுத்துவிடும். நடத்துனரிடம் சொல்லி ஒரு பெண்ணை அருகில் உட்கார வைக்குமாறு வேண்டுகோள் விடுப்பது அவ்வளவு எளிதல்ல. எல்லா நடத்துனர்களும் உதவி செய்யும் மனப்பாங்கில் இருக்க மாட்டார்கள். அப்படியே உதவுபவர்களாக இருந்தாலும் பயணிகள் ஒத்துழைப்பு கிடைப்பது கடினம். அதிலும் குறிப்பாகக் கணவனோடு பயணம் செய்பவர்கள் கணவனை விட்டு வேறு இடத்திற்குப் போக விரும்ப மாட்டர்கள். இதற்கு மேல் முன் சீட்டிலும் பின் சீட்டிலும் இருக்கும் ஆண் பயணிகள் செய்யும் சில்மிஷங்கள் வேறு.
ஒரு முறை ஒரு பயணத்தின்போது ஒரு ஆணின் பக்கத்தில்தான் எனக்கு இடம் கிடைத்தது. அதே பஸ்ஸில் பயணித்த ஒருவர் தன் ஏழெட்டு வயது மகளோடு எனக்குப் பின் சீட்டில் உட்கார்ந்திருந்தார். நான் நடத்துனரிடம் ஒரு பெண் பயணியை அருகில் உட்காரவைக்க முடியுமா என்று கேட்டுக்கொண்டதையும் அவர் எனக்கு உதவுவதற்கு சிரத்தை காட்டாததையும் பார்த்துவிட்டுத் தன் மகளை என் அருகில் உட்காரும்படி கூறினார். அந்தக் குழந்தைக்குத் தந்தையை விட்டுத் தனியாக உட்கார மனமில்லை. அப்படியும் அவர் வலுக்கட்டாயமாகக் குழந்தையை என் அருகில் உட்காரவைத்தார். அப்படி அவர் செய்தபோது அழ ஆரம்பித்த அந்தக் குழந்தை ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அழுது, அழுது அசந்துபோய் தூங்கிவிட்டது. நான் அந்தக் குழந்தைக்கு என்னென்னவோ விளையாட்டுக் காட்டிப் பார்த்தேன். ஒன்றுக்கும் அந்தக் குழந்தை மசியவில்லை. எனக்கே அந்தக் குழந்தையை அதன் தந்தையிடம் அனுப்பிவிடுவோமா என்றிருந்தது. குழந்தை தூங்க ஆரம்பித்ததும் இனித் தேவையில்லை என்று எண்ணி நானும் நிம்மதியாகத் தூங்க ஆரம்பித்தேன். அந்தத் தந்தையை இன்றளவும் அவ்வப்போது நினைத்துக்கொள்வேன்.
இது பற்றிப் போக்குவரத்து அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினேன். ‘பக்கத்தில் பயணிக்கப் பெண் பயணி இல்லையென்றால் நான் இரண்டு டிக்கெட்கள் வேண்டுமானாலும் வாங்குகிறேன்’ என்று அவர்களிடம் சொல்லிப் பார்த்தேன். அதற்கும் அவர்கள் இணங்கவில்லை. நான் கூறியவற்றிற்குப் பரிகாரமும் தேடவில்லை. இந்தியாவில் தனியாக, அதுவும் இரவு நேரப் பேருந்துகளில், பயணம் செய்யும் பெண்கள் அரிது என்பதால் போலும்.
இந்தச் சமயத்தில் இன்னொன்றும் நினைவுக்கு வருகிறது. எங்கள் பாட்டி இறந்ததற்கு துக்கம் கேட்கவந்த உறவினர்களில் எங்கள் பாட்டியின் சகோதரரும், அவருடைய மனைவியும் இன்னும் இரு சகோதரர்களின் மனைவிமார்கள் இருவரும் அடங்குவர். இவர்கள் நால்வரும் காரில் வந்திருந்தனர். போகும்போது அதே ஊரைச் சேர்ந்த உறவுக்காரப் பெண் இன்னொருவரையும் (அந்தப் பெண் வயதான விதவை; வரும்போது பஸ்ஸில் வந்திருந்தார்.) தங்களோடு அழைத்துச் சென்றனர். பெண்ணென்றாலும் அவரை என் பாட்டியின் தம்பியின் பக்கத்தில் முன் சீட்டில் உட்காரவைத்தனர். இவர் மேலே சொன்ன சநாதன யூதர் போல் நடந்திருந்தால் மனைவியைத் தன் பக்கத்தில் உட்காரும்படி வற்புறுத்தியிருப்பார். இந்தியாவிலும் பிற பெண்களை ஆண்கள் பக்கத்தில் உட்காரவைப்பதில்லை. ஆயினும் அன்று ஏனோ அவருடைய மனைவியும் மற்றப் பெண்களும் அப்படி நடந்துகொண்டிருந்திருக்கிறார்கள். மனைவி வசதியாகப் பின் சீட்டில் வரட்டும் என்று நினைத்தும் இருக்கலாம். . முன் இருக்கைகளைவிட பின் இருக்கைகள் விபத்து நடந்தால் கொஞ்சம் பாதுகாப்பானவை என்றும் நினைத்திருக்கலாமோ என்னவோ. முன்னால் உட்கார்ந்திருந்த என் பாட்டியின் தம்பி அந்தப் பெண்ணிடமிருந்து கூடியவரை தள்ளி உட்கார வேண்டும் என்று நினைத்து ஓட்டுனருக்கு மிக அருகில் உட்கார்ந்துகொண்டதாகக் கூறினார்கள். இதனால் ஓட்டுனருக்கு இடம் போதாமல் போய் அவர் ஸ்டியரிங்கைச் சரியாகக் கையாளாமல் எங்கள் வீட்டை விட்டுச் சென்ற பத்து மைல்களுக்குள்ளேயே ஒரு சிறு பாலத்தில் காரை மோதி அந்தக் காரில் பயணித்த மூன்று பேர்களுக்குப் பலத்த காயம் ஏற்பட்டு வெகு நாள் சிகிச்சை பெற வேண்டியதாயிற்று. அப்படி அடி வாங்கியவர்களுள் அந்த வயதான விதவைப் பெண்ணும் சேர்த்தி.
இந்தியாவில் எல்லா ஆண்களும் சநாதன யூதர்கள் போல் பெண்கள் பக்கத்தில் பயணம் செய்வதில்லை என்று அடம் பிடித்திருந்தால் எனக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் எந்தப் பெண்ணிற்கும் ஏற்பட்டிருக்காது.
அது போகட்டும். இன்னொரு சந்தேகம். பெண்கள் பக்கத்தில் உட்கார்ந்து பயணம் செய்ய விரும்பாத சநாதன யூதர்கள் எல்லோரும் ஏகபத்தினி விரதர்களா? யூதர்களில் இத்தனை ராமர்கள் இருக்கிறார்களா? சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்னால் ஒரு யூதமதத் தலைவர் தான் காதலித்த இன்னொரு பெண்ணை மணந்துகொள்ள வேண்டி தன் மனைவியையே அடியாட்கள் வைத்துக் கொலைசெய்தது ஞாபகத்திற்கு வருகிறது. மனைவி இருக்கும்போதுதான் மற்றப் பெண் பக்கத்தில் உட்காரக் கூடாது. மனைவியைக் கொன்றுவிட்டு இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்வது தவறில்லையோ என்னவோ!
சங்கர இராமசாமி
சென்னைப் பல்கலைக்கழக நிருவாகக் கட்டடக் கூட்டஅரங்கம் நிரம்பி வழிந்தது. அமர்வதற்கு மட்டுமல்ல; நிற்பதற்குக்கூட இடமில்லை. 1330 திருக்குறளையும் ஒப்புவித்த மாணாக்கர், பேச்சுப்போட்டி – கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி – கல்லூரி மாணாக்கர் ( மாணக்கர் என்பது இரு பாலரையும் குறிக்கும் பொதுச்சொல் ) , சிறந்த நூல்களை எழுதியமைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்பாளிகள், அந்தப் படைப்பாளிகளின் எழுத்துக்களைப் பிரசுரித்த பதிப்பகங்கள், அவர்களது பெற்றோர் சுற்றமும் நட்புமென என தமிழகம் முழுவதிலிருந்தும் தமிழினப்பற்றாளர்கள் வருகைதந்திருந்தனர். விடுமுறைநாளில் வருகைதந்த பெருந்திரள் கூட்டம் கண்டு எனதுளம் களிபேருவகை எய்தியது. ]
“இதுபோன்றதொரு கூட்டம் நடக்கிறது; நமக்குத் தெரிந்தோர் பலர் பரிசுகளைப் பெறுகின்றனர்; அவசியம் பங்கேற்கவேண்டும்;” எனவுரைத்த பன்முகத் திறனாளி வையவன் அவர்களுக்கு அகத்துள் பன்முறையும், கைப்பேசி வாயிலாக ஒரே ஒரு முறையும் நன்றி கூறினேன்.
தமிழக அரசின் மேனாள் கவிஞர் முத்துலிங்கம் தலைமையில் கவியரங்கம் நிகழ்ந்தது. கவிதாசன், சினேகன், ரேகா, பா.கிருஷ்ணன், தங்க.காமராசு, மணிகண்டன், ஆகிய கவிஞர்கள் பங்கேற்றனர். ”தாயே ! தமிழே!” என்பது கவிஞர்களுக்குத் தரப்பட்ட தலைப்பு. கவிபாடியோர், ஒருவருக்கொருவர் சளைத்தவர்களல்லர். ஒவ்வொரு வரியிலும், வார்த்தையிலும் அவரவர் திறமை பளிச்சிட்டது.
ஆனால், பார்வையாளர்களிடமிருந்து எழுந்த கரவொலி போதுமானதாக இல்லை. இது வருத்தம் தரும் தகவல். அந்நிய நாடுகளிலெல்லாம் ஒவ்வொருவரது நிகழ்ச்சிக்குப் பின்னும் அனைவரும் எழுந்துநின்று கரவொலி எழுப்புவர். கரவொலி தொடரும் நேரம் நிகழ்ச்சியின் சிறப்பிற்கேற்ப அதிகரித்துக்கொண்டே செல்லும். அப்படியொரு பழக்கம் நம்மிடையே இல்லை. நிகழ்ச்சியின் தன்மைக்கேற்ப கைதட்டிப் பாராட்டக் கூட முடியாதோரின் தமிழினச் சமூகப் பற்றினை எப்படி நொந்து கொள்வது ?
பரிசளிப்பு விழாவிற்கு வரவேற்புரை வழங்கியவர் , அரசுச் செயலாளர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை மூ.இராசாராம், சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் இரா. தாண்டவன் முன்னிலை வகித்தார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி சிறப்புரையாற்றி பரிசுகள் வழங்கினார். அமைச்சர் ஆற்றியவுரை தெளிந்த நீரோடைபோன்று ஆரவாரமற்ற தன்மையும், இனிமையும் கொண்டிருந்தது. அவர் மைக் கிடைத்ததென்று தனக்குத் தெரிந்ததையெல்லாம் பேசவில்லை. இம்மேடைக்கு எது பொருத்தமோ அவற்றை மட்டுமே பேசினார். என்ன பேச வேண்டும் என்பதைத் தீர்மானித்து எழுதி எடுத்துவந்து பார்த்து வாசித்தமை மிகச் சிறப்பாக அமைந்தது.
சென்னை ஆழ்வார்ப்பேட்டை கஸ்தூரிரங்கன் சாலையில் அமைந்துள்ளது, சோவியத் தூதரகம். அங்கேயும் ஓர் சிறப்பான அரங்கம் உண்டு. கூட்டங்களும் அடிக்கடி நடக்கும். முன்னறிவிப்புடன் முயன்றால் இலக்கிய நிகழ்வுகளை இலவசமாகவே ஆங்கே நடத்திக்கொள்ளலாம். சோவியத் நண்பர்கள் பங்கேற்கும் விழாக்களில் எல்லாம் இருவராகவே மேடைக்கு வருவர். பேச்சுக்கள் முன்னதாகவே செவ்வனே தயாரிக்கப் பட்டிருக்கும். ஒருவர் தங்கள் தாய்மொழியான ருஷ்யனில் எழுதி எடுத்து வந்ததைப் பார்த்துப் படிப்பார். உரிய இடைவெளியுடன் பிறிதொருவர் அதன் ஆங்கில மொழியாக்கத்தைப் படிப்பார். அவர்களது தாய்நாட்டுப் பற்று போற்றத்தக்கது. அதே போன்று பொருளார்ந்த கருத்துச் செறிவுமிகு உரையினைத் தயாரித்து வந்து நல்கிய அமைச்சரை எத்தனைமுறை பாராட்டினாலும் அது தகுதியுடைத்ததே ஆகும். தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் / இலக்கியவாதிகள் அனைவரும் இம்முறையைப் பின்பற்றினால் எல்லோருக்கும் காலமும் நேரமும் மிச்சமாகும். மேடையில் பட்டிமன்றம் நடத்திக்கொண்டு இடையிடையே கொச்சையான / அர்த்தமற்ற பேச்சுக்கள் மூலம் கலகலப்பூட்டுவதே நடைமுறையாகிக் கேலிக்கூத்தாகி வருகின்றது மேடைப் பிரசங்கம் !
இந்நிலையில் அமைச்சரின் பேச்சு பெரிதும் கவர்ந்தது. பாராட்டுவதுதானே சரியான வழி. சொல்வதைச் செயலிலும் காட்டும் வாய்ப்பும் எதிர்பாராமல் கிடைத்தது. “பேச்சின் சிறப்பை எடுத்துரைத்தபின், ஒரு கோரிக்கையையும் முன்வைக்கும் வாய்ப்புக் கிட்டியது..
தமிழைத் தாய்மொழியாகக் கொண்டோர் மட்டுமன்றி, பிறமொழியினருக்கும் 3 முதல் 6 வயதுக் குழந்தைகளுக்கு 30 நாட்களில் தமிழைப் பேச வைப்பதோடு மட்டுமன்றி, செய்தித் தாள்கள் படிக்குமளவிற்குக் கற்றுத்தர இயலும் என்ற பொள்ளாச்சி நசனின் ( thamizam.net – காண்க ) கருத்தையும் எடுத்துரைத்தேன். விரைந்து மண்டபத்தை விட்டுச் சென்று கொண்டிருந்த அமைச்சர், நின்று நிதானமாகக் கேட்டுக் கொண்டு, உதவியாளரிடம் எனது தொடர்பு எண்ணையும், முகவரியையும் குறித்துக்கொள்ளச் செய்தார். அவரின் வழிகாட்டுதலால் விருதுநகர் / மதுரை தமிழ் வளர்ச்சித்துறையின் உதவி இயக்குநர், வெ.குமாரிடம் தகவல்களைத் தர முடிந்தது.. அமைதியாகவும், பொறுமையுடனும் விபரங்களைக் கேட்டறிந்து உதவி இயக்குநர் குறித்துக்கொண்டார். tamilspeak.com , thamizham.net – குறித்தும் கூற முடிந்தது..
திருக்குறள் 1330-யும் ஒப்புவித்தோருக்கு தலா ரூ.10,000/- பரிசாகக் கிடைத்தது. பேச்சுப்போட்டி, கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டிகளில் வென்றோருக்கு முதல் பரிசு 15,000/-, இரண்டாம் பரிசு 12,000/- மூன்றாம் பரிசு 10,000 என வழங்கப்பட்டன. தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த நூலாசிரியர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.30,000/- வீதம் கிடைத்தது. சிறந்த பதிப்பகங்களுக்கு ரூ.10,000/- வீதம் பரிசுத் தொகை கிடைத்தது. அனைத்துமே ரொக்கமாக காசோலைமூலம் வழங்கியது சிறப்பானதாக இருந்தது. இவ்வகையில் 171 பேருக்குப் வழங்கப்பட்டன.
அனைத்து வகைப் பரிசுகளையும் இரு மடங்காக்கினால் சாலவும் நன்று. உரியோர் இதற்கான முயற்சிகளில் ஈடுபடுவர்; அடுத்த ஆண்டு பரிசுத்தொகை இரட்டிப்பாகும் என்று உறுதியாக எதிர்பார்ப்போம்.
”நாடு போற்றும் நான்காண்டு ஆண்டு ஆட்சியில் விஞ்சி நிற்பது தமிழ் வளர்ச்சியா ? தமிழக வளர்ச்சியா ? என்பது அன்று நிகழ்ந்த பட்டிமன்றத் தலைப்பாகும். நடுவராகத் திகழ்ந்தவர் கு.ஞானசம்பந்தன்.
நல்லதோர் நாளில் நல்லதோர் விழாவில் பங்கேற்கும் வாய்ப்புக் கிடைத்தமைக்குக் காரணமானோர் எல்லோருக்கும் நன்றி .
சங்கர இராமசாமி , அவர்தம் தந்தையார் கோ.சங்கரநாராயணன்
சங்கரன்கோவில் நூல் ஆசிரியர் ப.அருணகிரி
பவள சங்கரி
தலையங்கம்
மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் (Ministry of Human Resource Development) என்பது நம் இந்திய அரசால் மனிதவளத்தின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு அமைக்கப்பட்ட அமைச்சகம் . இந்த அமைச்சகம் இரண்டு பிரிவுகளாகச் செயல்படுகிறது. கல்வி வளர்ச்சி மற்றும் மக்களின் படிப்பறிவின் முன்னேற்றத்திற்காக செயல்படுவது ‘பள்ளிக் கல்வித் துறை ’. மாணவர்களின் உயர்கல்வி, மேற்படிப்பு ஆகியவற்றிற்காக செயல்படுவது, ‘உயர்கல்வி அமைச்சகம்’. இந்தியக் கல்விக் கழகங்கள் அனைத்தும் இந்த அமைச்சகத்தின் வரம்பிற்குள்தான் செயல்படுகின்றன.
“பாரதமும், சீனாவும் 100 ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வுலகின் தலைவிதியை நிர்ணயிக்கும் சக்தியைப் பெற்றிருக்கும்” என்று சுவாமி விவேகானந்தர் கூறியது 130 ஆண்டுகளுக்கு முன்னர்.
உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பது நம் இந்தியாதான். 2028 இல் இந்தியாவின் மக்கள் தொகை மேலும் அதிகரிக்கும் என சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட ஆய்வறிக்கையின் மூலமாக தெரியவந்துள்ளது. அதாவது நம் இந்திய மக்கள் தொகை 2030 இல் 160 கோடியாக அதிகரிக்குமாம். இந்தியா மற்றும் சீனாவில் இளம் வயதினர் மற்றும் அதிக அளவிலான மக்கள் தொகை இருக்குமாதலால் மூலதனத்துக்கு இது மிகப்பெரிய ஆதாரமாக இருக்கும் வாய்ப்பும் அதிகரிக்கும் என்கிறது உலக வங்கி சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில்.
இதுமட்டுமல்லாமல், வரும் 2030ம் ஆண்டில் இந்தியா பொருளாதார வல்லரசாக இருக்கும் எனவும், சீனாவைவிட மேன்மையடைந்து உலகப் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் எனவும் கோல்டுமேன் சாக்ஸ் என்ற பொருளாதார ஆய்வு அமைப்பு தமது அறிக்கையில் கூறியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக வல்லரசான அமெரிக்காவில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது சீனா உள்பட பல உலக நாடுகள் பாதிக்கப்பட்ட காலகட்டத்தில் நம் இந்தியாவும் சற்றே பாதிக்கப்பட்டாலும், உடனடியாக நாம் சுதாரித்துக் கொண்டோம். இதனால் உலக அரங்கில் அனைத்து நாடுகளும் நம்மை வியந்து நோக்கின.
உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்தியாக தற்போது இருக்கும் நம் இந்தியாவை விட முன்னணியில் இருக்கும் சீனாவின் நிலை , 2030ம் ஆண்டிற்கு பிறகு மாற்றம் பெறும். அதாவது நம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கத் துவங்கும் அதே வேளையில் தற்போதைய பொருளாதார வளர்ச்சி 8 முதல் 10 சதவீதம் வரை உள்ள சீனாவின் வளர்ச்சி குறையத் துவங்கும். ஆக 2030ம் ஆண்டில் நம் இந்தியா பொருளாதாரத்தின் வல்லரசாக இருக்கும். அடுத்த 20 ஆண்டுகளுக்கு உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி சராசரியாக 2.6 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாக இருக்கும். வளர்ந்து வரும் நாடுகளின் வளர்ச்சி 4.8 முதல் 5.6 சதவீதம் வரை இருக்கும். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கூட்டுறவு நாடுகளின் தாக்கம் குறைந்து, சீனாவின் நிதி கொள்கைகளும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கும். 2030 ஆம் ஆண்டில் உற்பத்தித் துறையை விட சேவைத் துறைக்கு அதிக தேவை இருக்கும் என்றும் உலக வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
கி.பி. 1750 வரை இந்தியாவே உலக அளவில் பொருளாதாரத்தில் முதன்மை வகித்தது. அதாவது உலக உற்பத்தியில் 33 சதவீதம் பங்களித்துவந்தது. அதையடுத்து சீனா 28 சதவீதம் பங்களித்துள்ளது என்ற தகவல் ஏங்கர் மேடிசன் என்ற பொருளாதார அறிஞர் எழுதிய, ‘இரண்டாயிரம் ஆண்டுகால உலகப் பொருளாதாரத்தின் போக்கு’ என்ற ஆய்வு நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2030 ம் ஆண்டுகளில், சீன சமுதாயத்தை பின்னுக்குத் தள்ளிவிட்டு இந்தியாவில் இளைஞர்களின் சமுதாயம் அதிக அளவில் உருவெடுக்கும் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இந்த நிலைப்பாடு இந்தியா வல்லரசு ஆவதற்கு பெருமளவில் உறுதுணை புரியும் என்பதில் ஐயமில்லை. மற்றொரு புள்ளி விவரம், இந்திய பொருளாதாரம் உலகளவில் மூன்றாவது இடத்தில் வரும் என்றும் கூறுகிறது.
மேலும், 2030ம் ஆண்டிற்கு பிறகு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியனைவிட அதிகமாக இந்தியாவில், நடுத்தர வர்க்கத்தினர் அதிக அளவில் நுகர்வோராக இருப்பார்கள். ஆனால் இந்தியா மற்றும் சீன நாடுகள் அடிப்படைத் தேவைகளான உணவு, தண்ணீர் மற்றும் எரிசக்தி பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டியது அவசியம். இல்லாவிட்டால், ஒட்டு மொத்த வருமானத்தில், நடுத்தர வருமானம் உடையவர்கள் சிரம்ப்பட நேரிடலாம். பொருளாதார வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு அறிவியல் துறைகளில் அதிக முதலீடு செய்ய வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எஸ் & பி யின் மதிப்பீடுகளுக்காக உள் கட்டமைப்புகளுக்கான நிதி ஒதுக்கீடுகளை குறைக்காமல் ஆய்வுத் துறைகளில் அதிக முதலீடுகள் செய்தும் உற்பத்தித் துறையை ஆதரித்தால் பொருளாதாரத்தில் மிகுந்த மேம்பாடு அடையலாம். அதே நேரத்தில் விவசாயத் துறையில் மத்திய அரசின் நிலைப்பாடு அச்சம் ஏற்படுத்துவதாக உள்ளது. உணவில் தன்னிறைவு அடைந்ததை தக்க வைத்துக்கொண்டாலே பொருளாதார வளர்ச்சியைப் பற்றி செயல்பட முடியும்.
தற்போது கிடைத்துள்ள மற்றும் சில புள்ளி விவரங்களின்படி புதிய தலைமுறையினருக்கு சரியான ஊட்டச்சத்துமிக்க உணவு கிடைப்பதில்லை. இதனால் அவர்களின் வளர்ச்சி விகிதம் குறைகிறது. இந்தியர்களின் சராசரி உயரம் 150 செ.மீ. என்பது பாரம்பரியத்தின் வழியில் அமைவது. ஆனால் இன்றைய நிலையில் அதிலிருந்து உயரம் குறைய ஆரம்பித்துள்ளதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. அதே சமயத்தில் ஐரோப்பிய நாடுகளில் குழந்தைகள் 3 அல்லது 4 அங்குலம் உயரம் அதிகமாகிறார்கள். நம் நாட்டில் ஊட்டச் சத்து குறைபாடு இருந்தாலும் அறிவு வளர்ச்சியில் குறைபாடு ஏற்படவில்லை என்பது ஆறுதலான விசயம். வல்லரசு ஆகும் முனைப்பில் இருக்கும் இத்தருணத்தில் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை கொண்டு அவர்களுக்கு ஊட்டச் சத்து கிடைப்பதற்கு அரசு ஆவண செய்யவேண்டும். மனிதவள மேம்பாட்டுத் துறை இவைகளில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியதும் அவசியமாகிறது. அப்பொழுதுதான் நம் நாடு வல்லரசு ஆவதற்குரிய அனைத்துத் தகுதியும் பெற்று நிலைத்து நிற்க முடியும். பொருளாதாரத் துறை மட்டுமன்றி, தொழில் வளர்ச்சி, கல்வி வளர்ச்சி, உள்கட்டமைப்பு ஆகிய முக்கியத் துறைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
உடல் ஆரோக்கியம், அறிவு வளர்ச்சி இவைகளை மட்டும் கருத்தில் கொள்ளாமல் இளைய சமுதாயத்தினரை நீதி போதனைகள் மூலமாக நல்வழிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்பதும் சமீப காலங்களில் அரங்கேறியுள்ள சில மோசமான நிகழ்ச்சிகள் எச்சரிக்கை விடுக்கின்றன. திரைப்படத் துறைக்கு தணிக்கை செய்யப்படுவது போல அனைத்து மற்ற ஊடகங்களும் தணிக்கை செய்யப்பட வேண்டிய நிலையில் உள்ளது. கட்டுப்பாடற்ற சுதந்திரத்தை சரியான முறையில் பயன்படுத்தத் தவறும் நிலையும் காண முடிகிறது.
பெரும்பாலான கல்வி நிலையங்களோ மதிப்பெண் அதிகம் பெறுவதற்காக மட்டுமே கவனம் செலுத்துகிறார்களே தவிர, மதிப்பு மிக்க சமுதாயத்தை உருவாக்க முனைவதில்லை. 100 சதவிகித மதிப்பெண்களை மட்டுமே இலக்காகக் கொள்கிறார்களே தவிர 100 சதவிகித மனித சமுதாயத்தை உருவாக்கத் தவறிவிடுகின்றனர். மனித வள மேம்பாட்டுத் துறை இந்தக் குறைகளையெல்லாம் களைந்து ஒரு நிறைவான வல்லரசை உருவாக்க உறுதியளிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
மூலம் : இரவீந்தரநாத் தாகூர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
உன் ஆனந்த மனப்பாங்கில்
என்னோடு ஆடிவரும்
எப்போதும் புதிதான
இத்திருவிளை யாடலின் பொருள்
என்ன வென்று சொல் ?
நான் பேச விழைவ தெல்லாம்,
சொல்ல விடுவ தில்லை நீ !
உதட்டி லிருந்து
வார்த்தைகளைப் பிடுங்குவாய்,
உள்ளே என்னுள்
உட்கார்ந்த வண்ணம் !
என் மொழிகளைக் கொண்டு
உன் வாசகத்தை
உரைப்பாய்,
இன்னிசை மூலமாக !
பேச நினைத்த தெல்லாம் நான்
பிறகு மறந்து போகிறேன் !
நான் சொல்ல
நீ விழைவ தெல்லாம்
நான் மட்டும் சொல்கிறேன் !
அலை மோதும் கீதங்களில்
எனக்குக்
கரை தெரி யாமல் போகும்
அறியாத
தொலைவுக் கப்பால் !
************
Original Source: A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mumbai : 400023
*********************
கவியோகி வேதம்
…. மனித மனத்தின் உளவியல் எண்ணங்கள்)_தத்துவத்தை முழுதும் ஆராய்ச்சி செய்த ‘ஹேன்ஸ் சைல்’ என்பாரின் கருத்துக்களை இப்போது சொல்கிறேன். இது யோகாவில் பின்பற்றவேண்டிய முக்கியமான ஒன்று. அவர் சொல்கிறார்.
“ மனித வாழ்க்கை என்பது எல்லோர்க்கும் இறைவன் அளித்த ஒரு நன்கொடை. எது இயற்கையோ, எது இயல்பாக நம்முள்ளே மனத்திற்குள் இன்பமாக விதைக்கப்பட்டிருக்கிறதோ, அதை நாம் அழகாக முழுதும் ‘உணர்ந்து’ பிறர்க்குத் தொந்தரவில்லாமல் அனுபவித்தால் அதைவிட நமக்குச் சிறந்த அனுபவம் இருக்க முடியாது. ஆனால் இன்றைய விஞ்ஞான வசதி நிறைந்த உலகில் அதை நாம் அழகாக உணர்ந்து அனுபவிக்கிறோமா? என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். எது எதற்கோ வீணாக ஆசைப்பட்டு, வாழ்க்கையைச் சுமையாக ஆக்கிக்கொண்டிருக்கிறோம்.. இயற்கையை உணரத் தவறுகிறோம்,’ என்பார்..
..இந்தப் புதிய கருவி அல்லது புதிய வசதி நமக்கு உண்மையான இன்பம் தருமா? அல்லது நாளடைவில் சுமையாக மாறிவிடுமா? என்று ஆராயாமலே அதை எவ்வளவு விலை கொடுத்தேனும், (பேராசை எண்ணங்களால்!)- வாங்கத் தவிக்கிறோம்.முதல் டென்ஷன் நமக்கு அப்போதுதான் ஆரம்பிக்கிறது.. சரி, அதை மிக சிரமப்பட்டு, உழைத்து,வாங்கியபின் கொஞ்சநாள் நமக்கு இன்பமாக இருக்கிறது.அது மகிழ்ச்சி கொடுப்பதாக உணர்கிறோம்.
..கருவியா மகிழ்ச்சி கொடுக்கிறது? என்பதை நாம் ஆராய்வதில்லை.. கொஞ்சநாளுக்குப்பின் அக்கருவியே, அல்லது அந்தப் புது வசதியே பல ரிப்பேர்களுக்கு உட்பட்டு நம் நிம்மதியைக் குலைக்கிறது. மீண்டும் டென்ஷன்!
வேறு ஒரு புதிய கருவி, அல்லது வசதி உங்களுக்கு இன்னும் நிறைய இன்பம்தரும் என்று வியாபார தந்திரம் சொல்கிறது.. மனம் சபலப்படுகிறது.வாங்கத்துடிக்கிறது. மீண்டும் டென்ஷனுடன் உழைத்து, காசு சேர்த்து அதை வாங்கி அது புதிய இன்பம் தருவதாக மகிழ்ச்சியில் திளைக்கிறோம். அதுவும் ரிப்பேர் ஆகிறவரை. ஆக, இயற்கையான மகிழ்ச்சி மனத்துள்ளேதான் என்று அறியாமலே காசையும், நிம்மதியையும் தொலைத்து மனத்தில் ஒரு ‘ஒற்றைக்காளை ’
பெரிய வண்டியைச் சுமப்பதுபோல்( நம் கிராமங்களில்!) பாரத்தை அனாவசியமாக
ஏற்றி என் வாழ்க்கையே ஒரு.. ‘ பெரிய சுமைதாங்கி’ சார்! என்று வீட்டுக்கு வருபவர் எல்லோரிடமும் ‘பீற்றிக்’ கொள்வதில் பெருமையடைகிறோம்..இந்த ஒரு ‘வண்டிச்சுமையை’ இயற்கையினின்றும் விலகி ஏதோ ஒரு மாயையில் சிக்குகிற மாயாமனம் அறிகிறதா, உணர்கிறதா என்றால் இல்லை..
…. எனக்குத் தெரிந்த ஒரு அறிஞர், நல்ல பேச்சாள நண்பர் இதுவரை ஒரு டெலிபோன் வசதிகூடச் செய்து கொள்ளவில்லை. செல்- கூட வைத்துக்கொள்வதில்லை. ஆனாலும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை இலக்கியக்கூட்டங்களில்பேசஅழைக்கப்படுகிறார்.
நகைச்சுவையும், கிண்டலும், அற்புதமான புதிய புதிய கருத்துக்களும் அவர் பேச்சில் அருவிபோல வந்து கொட்டும்.. அதனால் அவருக்கு எங்கும், எந்த ஊரிலும் பலத்த வரவேற்பு.
எப்படி சார் ஒரு டெலிபோனோ, அல்லது காரோ இல்லாமல் இத்தனைக் கூட்டங்களுக்கும் போய் அனாயாசமாகப் பேசுகிறீர்கள் என்று அவரைக்கேட்டேன்.
இருக்கிற இத்தனூண்டு மீசையைத்திருகியபடி அவர் சொல்வார்;- .. “வேதம் சார்!
சொல்லுங்கள்! இந்த செல்.. அல்லது டெலிபோனா போய்ப் பேசுகிறது?.
நான்..;- ‘இல்லை ஐயா!’..
அவர்..;– ‘இவற்றை நான் ஒரு சுமையாகக் கருதுகிறேன்..சார்! அதுகளை வைத்துக்கொண்டால் அனாவசியச் செலவு மாசாமாசம் எனக்கு…எவனாவது சும்மாவானாலும் தொடர்பு கொண்டு வீண் சந்தேகம் கேட்டுக்கொண்டிருப்பான்.என் நேரமும் வேஸ்ட்!.அந்த நேரத்தில் நான் ஒரு புதிய நூலைப் படிப்பேனே! ஏராளமான கருத்துள்ள நூலாக நான் தேர்ந்தெடுத்துப்படிப்பதால்தானே, சொல்வதால்தானே என்னைக் கூப்பிடுகிறார்கள்.. ஆர்வமுள்ளவர்கள் அவசியம் நேரில் என்னிடம் வருவார்கள். ஒப்புதல் தருவேன்.காரில் என்னை அழைத்துப்போனால்தான் பேசுவேன் என்பேன்.பேசவோ குறைந்த கட்டணம் தான் வாங்குவேன்.
அதனால் மற்றவர்களைவிட என்னை அழைத்துப் பேசவைத்தால் அவர்களுக்கும் லாபம். தொலைபேசித்தொல்லைகட்கு நான் பணம் கட்டாததால் எனக்கும் அவர்களுக்கும் ஒரு நேரடித் தொடர்பு கிட்டுகிறது.. நெருக்கம் அதிகமாகி எனக்கு இப்போ தமிழ்நாடு முழுதும் ஏராளமான நண்பர்கள்.
ஆக நான் விஞ்ஞானக் கருவிகளைச் சுமையாகக் கருதுவதால் அவற்றிலிருந்து ஒதுங்கி, தேவையானது மட்டும் வைத்துக்கொண்டு(அதாவது டி.வி மட்டும் அவர் வீட்டில் உண்டு- அதுவும் மனைவிக்காக,) காசையும் மிச்சப்படுத்துகிறேன். நேரத்தையும் கூட…. என்னை அழைக்க வருபவர்கள் இயற்கையான உண்மையான இலக்கியத் தாகத்துடன் வருவார்கள். அவர்களை நான் ஏமாற்றுவதேயில்லை.. என்ன வேண்டுமோ கொடுப்பேன். இதனால் நான் எக்காலத்திலும் டென்ஷனை மனத்தில் ஏற்றிக் கொள்வதில்லை.. என்மனைவியும் அப்படித்தான். இப்போதும் அவள் மிக்ஸி என்றால், கிரைண்டர் என்றால் எத்தனை கிலோ கனம்? எவ்வளோ செலவு? எவ்வளோ மின் ஆபத்து?என்பாள்.
நீங்களே பார்த்தீர்கள் அல்லவா? அவள் பக்கத்து வீட்டுக்காரிகளை விட கட்டு குண்டாய் இருக்கிறாள். ஆரோக்கியமாயும் உள்ளாள். ஒரு தலைவலி என்றுகூட அவள் படுத்ததில்லை. என்று சொல்லி கடகட எனச் சிரித்தார்… உண்மை !அவர் வீட்டில் இன்னும் கிராமத்திலிருந்து கொண்டுவந்த அயனான அம்மியும், ஆட்டுக்கல்லும்தான்.
….அவரது பதிலைக் கேட்டு ஆச்சர்யமும், பலத்த மகிழ்ச்சியும் அடைந்து என்னை அறியாமலே ‘சபாஷ்’ என்று கைதட்டினேன்… தெரிகிறதா இப்போது? அவர் உண்மையாக இயற்கையுடன் கைகோர்த்துக்கொண்டே வாழ்க்கையை மிக அழகாக, அமைதியாகக் கொண்டுபோகிற தூய தமிழ் அறிஞர் என்று..! அதனால் வீண் தொந்தரவுகளை அவர் விலை கொடுத்து வாங்குவதில்லை..
அவரை நெருங்கிய நண்பர்கள் ‘சுமை வேண்டா சுப்பன்’ என்று ரகசியமாக அழைப்பர்.
… இவ்வளவு ஏன்? அண்மையில் மறைந்த திரு. காஞ்சிமகான் கூட ஒரு காரையோ, செல் போனோ பயன்படுத்தியதே இல்லை.. அவரிடம் பேசணும் என்றால் பக்தர்கள் நேரில்தான் போய்ப் பேசுவர்.
எங்கு போக வேண்டும் என்றாலும் அவர் கால்நடையாகத்தான் செல்வார். அந்த அளவுக்கு அந்த மகான் இயற்கையோடு கலந்து வாழ்ந்திருந்தார்…இறுதிவரை.
.. உங்களுக்கு இன்னொன்று தெரியுமா? நம் எல்லோரது மனப்பான்மையையும் உற்றுக்கவனித்தீர்களானால், சுமைகளை மனத்தில் ஏற்று வீணாக டென்ஷன் படுகின்றோம்.
அதேசமயம் இந்த டென்ஷனை அனாவசியமாகப் பிறர்மேலும் திணிக்கின்றோம்..
சொகுசுக்கு ஆசைப்பட்டு என் பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் விலையுயர்ந்த ஆண்ட்ராய்டு செல்போன் வாங்கிவந்து போகிறவர் வருபவர் எல்லோரிடமும் கொஞ்சநாள் காட்டிப்பெருமைப் பட்டுக்கொண்டிருந்தார்..வாங்கிய பிறகு அதை எப்படி முறையாகப்பயன்படுத்துவது என்று தெரியவில்லை.. ஓரமாய் வைத்துவிட்டார்!அவரது மனைவியும் வீண்செலவு செய்துவிட்டீர்களே!
சரியான புடவை இல்லாமல் பழசைக்கட்டிக்கொண்டு அவஸ்தைப்படுகிறேனே. எனக்கு இரண்டு நல்ல புடவையாவது நீங்க அநாவசியமாகச் செலவழித்த காசில் எடுத்துக்கொடுத்திருக்கலாம்.. மனசில ஒரு சந்தோஷம் இருந்திருக்கும் என்று அடிக்கடி குத்திக்காட்டினாள்.
அவ்வளவுதான்! அவருக்கு டென்ஷன் ஏறிவிட்டது. பலநாட்கள் அவரால் நிம்மதியாகவே இருக்கமுடியவில்லை. எப்படியாவது அந்த வேண்டாத ஆண்ட்ராய்டு செல்லை வேறு ஒருவர்க்கு கொஞ்சம் விலைதள்ளியாவது விற்கப் படாது பட்டார்.அது அடுத்த டென்ஷன்.கடைசியில் அவரது அண்ணன் மகனே ஒரு விலை சொல்லி எடுத்துக்கொண்டபின் தான் அவர் மனம் அமைதியுற்றது. ஆக தான் பட்ட அவஸ்தையை இன்னொருவரிடம் தள்ளினால்தான் மனம் நிம்மதி அடைகிறது.
…அதனால்தான் ‘சைல்’ சொல்கிறார். உள் மனத்திலிருந்தோ, அல்லது பிறர் மனம் மூலமாகவோ வருகிற ஒரு வேண்டாத, கெட்ட தூண்டுதலே மன அமைதியை இழக்கச் செய்து டென்ஷன் என்னும் பரபரப்பு எண்ணம் உண்டாகிறது.அது தற்காலிகமாகவோ இல்லை நிரந்தரமாகவோ கூட இருக்கலாம்.ஒன்று ..ஜாக்கிரதையாக இருந்து ‘அது’ ஏற்படாமல் உங்கள் மனத்தைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.. இல்லையாயின் வந்தபின் பிராணாயாமம், தியானம் மூலம் நிச்சயம் அதிலிருந்து விடுபடுங்கள்.
இறைவன் கொடுத்த அழகிய சுதந்திர மனம் என்னும் பாத்திரத்துள் நீங்களே வேண்டாத குப்பையைப் போட்டீர்களாயின், நீங்களே தான் இறைத்தியானம் மூலம் அதனை வெளியே எடுத்து எறியவேண்டும்’ என்கின்றார்.எவ்வளவு உண்மையான பாஸிடிவ் ஆன உபதேசம் பாருங்கள்!
… எனவே அவர் சொல்கிற பிரகாரம் வெளித்தூண்டுதல்கள் ஆன அதிக வெய்யில், அதிகக்குளிர், அதிக மழை அல்லது பிறர் மனம் மூலம் வருகிற ‘ஸ்ட்ரெஸ்’ (மன அழுத்தம்) போன்றவற்றை மனோபலம், தியானம், எப்போதும் சாந்தமான எண்ணங்கள் முதலியவற்றால் போக்கிக்கொள்வோம்.அதே சமயம்
நாமே வீணாக சஞ்சல மனத்தால் உண்டாக்கிக்கொள்கின்ற கோபம், காமம், பேராசை,அதீத பாசம், ‘தான்’ எனும் அகந்தையின் மூலம் செய்யும் வேண்டாத செய்கைகள் இவற்றை மகான்களின் உபதேசம், அவர்தம் வரலாற்றை எப்போதும் படித்தல்,நல்ல நல்ல இலக்கியநூல்களை, கவிதைகளைப் படித்து அனுபவித்தல்போன்றவற்றால் மனம் என்னும் நல்ல தெய்வீகப்பாத்திரத்துள் பிரகாசத்தை(தெய்வ ஒளியை)ஏற்றிவைப்போமாக!
*********************
{தொடரும்)
படத்திற்கு நன்றி
— கவிஞர் காவிரிமைந்தன்.
அன்பே வா திரைப்படத்தில் ஆரம்பப் பாடலிது! உள்ளத்திலிருந்து ஒரு உற்சாகக் கங்கை பிரவகித்து ஓடி வருகிற வெள்ளம்! எழில்சிந்தும் காஷ்மீரின் இதயமாக விளங்கும் சிம்லாவின் அழகிலே நெஞ்சம் மயங்கலாம்! கதிரவன் காட்சிதரும் விடிகாலைப் பொழுதொன்றில் கதாநாயகன் எம்.ஜி.ஆர். கருப்பு சிவப்பு நிறத்தில் உடையணிந்து தலைப்பாகையுடன் கையில் ஒரு சூட்கேஸ் … என அமர்க்களமாய் குளிர்க்காற்றின் கதகதப்பில் ஓடியாடி வருகின்ற காட்சி! இன்றும் எம்.ஜி.ஆர். ரசிகர்களின் மத்தியிலே உறைந்திருக்கிறது! புதிய வானம் புதிய பூமி என்று ஒரு கையை மேலும் மறு கையை கீழும் காட்டும் எம்.ஜி.ஆரின் பாணி இன்றும் பிரபலம்தானே!! முத்திரை பதித்த நடிகராக உலா வந்த எம்.ஜி.ஆர் அவர்கள் தனது இரண்டு கரங்களை பயன்படுத்தி வெற்றி பெற்றதுபோல் இன்னொரு நடிகர் பெற்றிருக்கிறாரா என்பது கேள்விக்குறியே!
கவிஞர் வாலி அவர்களின் வரிகளில் இமயத்தின் உயரமும் இதயத்தின் ஈரமும் பிரதிபலிப்பதைப் பாருங்கள்! மக்கள் திலகம் துள்ளிவரும் பாதையிலே பள்ளிக் குழந்தைகளுடன் கொஞ்சி மகிழும் அழகென்ன? அவர்களின் முகத்தில் எதிர்காலம் உயர்ந்ததாக அமையும் என்கிற நங்கூர நம்பிக்கையைப் பாட்டு வரிகளில் விதைத்திருக்கிறார். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசைப் பாதையிட்டு கவிதைக்கு ரத்தினக் கம்பள வரவேற்பளித்திருக்கிறார். தனது குரல்வளத்தால் தமிழ்த்திரையை 50 ஆண்டுகாலமாக தன்வசப்படுத்தி வைத்திருந்த டி.எம்.செளந்திரராஜன் அவர்தம் கம்பீரக் குரலில் முழங்கிடும் பாடல் இன்றும் நம் இதயத்தைத் தொடுகிறது!!
படம் அன்பே வா
பாடல்: புதிய வானம் புதிய பூமி
வரிகள்: கவிஞர் வாலி
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
குரல்: டி எம் சௌந்தரராஜன்
______________________________________________
புதிய வானம் புதிய பூமி – எங்கும்
பனிமழை பொழிகிறது
நான் வருகையிலே என்னை வரவேற்க
வண்ணப் பூமழை பொழிகிறது ஒ ஒ ஓஹோ
லால்ல லாலால்லா ஓஓஓ லால்ல லாலால்லா
(புதிய வானம்)
புதிய சூரியனின் பார்வையிலே
உலகம் விழித்துக்கொள்ளும் வேளையிலே
இமயத்தில் எழுகின்ற குளிர்காற்று – என்
இதயத்தைத் தொடுகிறது
அன்று இமயத்திலே சேரன் கொடி பறந்த
அந்தக் காலம் தெரிகிறது
அந்தக் காலம் தெரிகிறது
(புதிய வானம்)
பிள்ளைக் கூட்டங்களைப் பார்க்கையிலே
பிஞ்சு மழலை மொழி கேட்கையிலே
நல்லவர் எல்லாம் நலம் பெறுவார் – என்ற
நம்பிக்கை தெரிகிறது
அவர் வரவேண்டும் நலம் பெறவேண்டும்
என்று ஆசை துடிக்கிறது
என்று ஆசை துடிக்கிறது
(புதிய வானம்)
எந்த நாடு என்ற கேள்வியில்லை
எந்த ஜாதி என்ற பேதமில்லை
மனிதர்கள் அன்பின் வழிதேடி – இங்கு
இயற்கையை வணங்குகிறார்
மலை உயர்ந்ததுபோல் மனம் உயர்ந்ததென்று
இவர் வாழ்வில் விளக்குகிறார்
இவர் வாழ்வில் விளக்குகிறார்
(புதிய வானம்)
https://youtu.be/xRPv3zgwT6I
காணொளி: https://youtu.be/xRPv3zgwT6I
நாகினி
சிறு துரும்பு நுழைவை
படபடவென அடித்து மூடி
விழி காக்கும் இமைகள்
உன் மொத்த உருவம்
உள்நுழைந்தும் இமைக்க
மறந்ததென்ன மாயமோ!
குழல் கானமன்ன நின்
குரல் மொழியோ!
நுரை கடலன்ன எழில்
கரை காணா உடலழகோ!
மயக்கும்விழி அசைவோ!
மருண்டு நோக்கும் பார்வையோ!
இழுத்ததென் மனதை
பழுத்ததென் காதல் உணர்வு..
குலம் கோத்திரம் அறியேன்
மதம் சாதி விருப்பங்கள் அறியேன்
பேசும் மொழி அறியேன்
உறவு அறிமுகமும் அறியேன்..
பேசாது பேசும் விழியசைவன்றி
வேறொன்றும் அறியா தருணம்
நொடிப்பொழுதில் உள் நுழைந்து
இதயவீட்டில் குடியேறியவனை..
தூசியென கண்கள் கசக்கிடவோ
பழுதென அறிவு துரத்திடவோ
இடம்தான் கொடுத்திட மனமின்மையால்…
இதயவீணையுனை மீட்டும் விரல்களாம்
கற்பனை எண்ணத்திற்கு வலுவூட்டுகிறது
இமைக்க மறந்த இமைகள்!!
.. நாகினி
– சுரேஜமீ.
முகங்கள் பார்த்து கதைகள் பேசிக் களித்த காலங்கள் கடந்து, நாம் வெகுதூரம் வந்ததற்கான சாட்சியே, நாம் இன்றைக்கு இணையத்தை, உற்ற தோழனாகவும்; தொடர்பாகவும் கொண்டுள்ள காட்சி எனலாம்! காலம் தன் வேகத்தைக் கூட்டவுமில்லை; குறைக்கவுமில்லை! ஏனோ நாம் மட்டும் இன்னமும், காலம் ஓடுகிறது என்ற சொல்லை; நம் இயல்புக்குத் தகுந்தவாறு பயன்படுத்தத் தவறுவதில்லை. மனிதத் தொடர்புகள் தூரமாகும்போது, அதனை நம் அருகே கொணரத் துணை புரியும் இணையத் தொடர்பு சாதனங்களையும், அதைக் கையாளும் முறைகளையும், சற்று உங்கள் மனதில் பதிய வைப்பதுதான், இந்தக் கட்டுரையின் நோக்கம்!
இந்தக் கட்டுரையில் மூன்று முக்கியத் தகவல் தொடர்பு முறைகளைப் பற்றியும்; அதனைக் கையாளும் வழிகள் பற்றியும் குறிப்பிட முனைகிறேன்;
முகநூல் (Facebook):
ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர்களுள் ஒருவரான மார்க் சுக்கெர்பெர்க் என்பவரால், தன் சக மாணவர்களோடு ஒரு தொடர்பினை ஏற்படுத்த செய்யப்பட்ட ஒரு முயற்சி, இன்று உலகத்தையே தன் தொடர்பில் வைத்திருப்பதோடு, உலக அளவில் ஒரு ஒப்பற்ற தகவல் தொடர்பு ஊடகமாகவும், மொத்த இந்தியாவின் மக்கள் தொகையை விஞ்சும் அளவிற்கு, சற்றேறக் குறைய 130 கோடிக்கும் மேலான பயனாளிகளைக் கொண்டதாகவும், சுமார் 21 ஆயிரம் கோடிக்கும் அதிகமான வருவாய் ஈட்டுவதாகவும் வளர்ந்திருக்கிறதென்று சொன்னால், அதன் வளர்ச்சியை உங்களின் மனக்கண் முன் கொண்டு வருவதில் மட்டற்ற மகிழ்ச்சி எனக்கு!
முகநூலின் பயன்
இற்றைக் காலங்களில், உலகம் ஒரு சின்ன உள்ளங்கைக்குள் அடங்குவது போன்று சுருங்கிவிட்டது. சிறுவனாக இருந்த பொழுது, முகவையிலிருந்து சென்னை பெருந்தூரமாகத் தெரிந்தது என் போன்றோர்க்கு; ஆனால், இன்று படித்த குடும்பங்களில், வீட்டுக்கு ஒரு பிள்ளை வெளிநாட்டில் பணி செய்யும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறது என்று சொன்னால், ஆச்சரியம் ஏதுமில்லை. இத்தகைய சூழலில், தொலைவில் இருப்பவர்களோடு, அடிக்கடித் தொடர்பில் இருப்பதற்கு, நாம் தொலைபேசியையோ, அலை பேசியையோ உபயோகப் படுத்தினால், மிகவும் அதிகமான செலவு பிடிக்கும். அதே வேளையில், நமக்கு ஒரு முகநூல் கணக்கு இருந்தால், நம்மால், சுலபமாக நம் உறவுகளை அவர்களின் முகநூல் கணக்கோடு இணைத்து, தினமும் செய்திகளப் பகிர்ந்துகொள்ள ஏதுவாக இருக்கும்! சரிதானே?
எப்படித் துவங்குவது?
படித்தவர்களே சில நேரங்களில், முதன் முதலாக ஒரு செயலைச் செய்யும்போது, ஒரு தயக்கம்; ஒரு சிறிய அச்சம் அல்லது ஏன்? எதற்கு என்னும் கேள்வியால், அச் செயலைக் காலம் தாழ்த்துவதோ அல்லது தவிர்ப்பதோ உண்டு! அவர்களுக்கான ஐயப்பாடுகளை நீக்குவதும், என்ன செய்யவேண்டும் எனப் பகர்வதும்தான், இணைத்துள்ள நிழற்படமும் அதற்கான விளக்கமும்!
இணைத்துள்ள படத்தில் எண் வரிசைப் படி, நாம் கொடுக்கவேண்டிய தகவல்களைப் பார்க்கலாம்;
இங்கு நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கியக் காரணியே, உண்மைத் தகவல் பகிர்வதா? அல்லது புனைப் பெயர் மற்றும் வெற்றுத் தகவல் பகிர்வதா என்பதே!
இதே தகவலை, இதற்கு அடுத்த தகவல் நிலையிலும் திரும்பப் பதிவிடுங்கள்
மேற்கூறிய தகவல்கள் நிலையிட்ட பின், “Sign Up” அழுத்த, உங்களின் முகநூல் கணக்கு துவங்கப்பட்டு, கணக்கு உங்களுடையதுதானா எனச் சரி பார்க்கும் மின்னஞ்சல் உங்களுக்கு அனுப்பப்படும். மின்னஞ்லில் குறிப்பிட்டுள்ள தொடர்பானைச் சொடுக்க, உங்கள் முகநூல் பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்!
என்ன முகநூல் கணக்குத் துவங்கலாமா? இந்தியாவில் இதுவரை 10 கோடிக்கும், அதிகமானவர்கள், முகநூல் கணக்கு வைத்திருப்பதாக ஒரு செய்தி சொல்கிறது கணக்குத் துவங்குவது சம்பந்தமாக, மேலதிகத் தகவலுக்கு, கீழே கொடுக்கப்பட்டுள்ள, இணைப்பானைச் சொடுக்கவும்!
http://www.wikihow.com/Set-up-a-Facebook-Account
குறைந்த பட்ச பாதுகாப்பு
முகநூல் கணக்கு வைத்திருப்பதன் நோக்கமே, நாம் நினைக்கும் செய்திகளைத் தன் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதுதான். அத்தகைய சூழலில், நாம் பகிரும் தகவல்களில், பெரும்பாலும், நம்முடைய அல்லது குடும்பத்தாருடைய நிழற்படங்கள்; காணொளிக் காட்சிகள், பிற ஆவணங்கள் என நிரம்பி இருக்கலாம்! ஆனால், மேற்கூறிய அனைத்தும், ஏதோ ஒரு வகையில், இன்றைக்கு இருக்கக் கூடிய விஞ்ஞான வளர்ச்சியில், திரித்துப் பகிரக் கூடிய வாய்ப்பு இருப்பதை நாம் அறிந்திருத்தல் அவசியம்!
அதற்கான சில பாதுகாப்பு குறித்த தகவலைப் பார்ப்போமா?
பெரும்பாலும், நிழற்படத்தின் வலதுமுனையில், பூமிப் பந்து போன்ற உருண்டைச் சின்னத்தில், சொடுக்க, அது மேற்காணும் தகவல்களைப் பகிரும்! அதற்கேற்றவாறு, உங்களின் நிழற்படம், யார் பார்க்க வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானிக்கலாம். குறிப்பாக, சில படங்களை நாம் சேமிப்பில் வைக்கவும் முகநூலை உபயோகிக்கலாம். அத்தகைய சூழலில், நிழற்படங்களை நாம் மட்டுமே பார்க்கக் கூடிய வகையில், பூட்டு சின்னம் (Only Me) அமைப்பில் சொடுக்க, அப்படம் மிகுந்த பாதுகாப்போடு, நாம் மட்டும் பார்க்க ஏதுவாக அமையும்.
என்ன உபயோகமான தகவல்தானே?
மேற்கூறிய இந்த ஐந்து தகவல்களும், உங்கள் முகநூல் கணக்கை நிச்சயம் ஒரு பாதுகாப்பாக வைத்திருக்கத் தேவையான மிக முக்கியக் கூறுகளாக இருக்கும் என நம்புகிறேன்! மேலும் அதிகத் தகவல்களுக்கு, முகநூல் பக்கத்தில் உள்ள பாதுகாப்பு குறித்த விளக்கங்களைப் பார்க்கவும்!
ஏகிநிற்பது என்ன? (Whatsapp):
அடுத்து நாம் காண இருப்பது ஏகிநிற்பது என்ன? (Whatsapp) என்ற தகவல் தொடர்பு முறை

இன்றைய அலைபேசி உலகில், அவரவர் கைகளை அலங்கரிப்பதில், நவீன கைப்பேசிகளின் பங்கை யாராலும் மறுக்க முடியாது. அவற்றுள் இரு முக்கிய மென்பொருள்கள் உலகளாவி இருக்கின்றன. அவை முறையே ஆன்ராய்டு மற்றும் ஆப்பிள் இயக்கிகள்! இவற்றுள் ஆன்ராய்டு இயக்கி மிக எளிமையாக, அனைத்து பயன்பாட்டுக்கும் சாதகமாக இருப்பதாக எண்ணுகிறேன். சமீப காலமாக, “ஏகிநிற்பது என்ன” எனும் பயன்பாட்டில், ஆன்ராய்டு இயக்கி மூலமாக, ஒருவருக்கொருவர் பேசவும் முடிவதாக அறிகிறேன்.
மிகக் குறுகிய காலத்தில், மிகப் பரவலாக்கப் பட்ட மகத்தான ஒரு தகவல் தொடர்பு முறை ஏகிநிற்பது என்ன? (Whatsapp) என்று சொன்னால் மிகையாகாது. இது முதன் முதலில் புழக்கத்திற்கு வந்தது 2009ம் ஆண்டு. கடந்த ஐந்து ஆண்டுகளில், இதன் அபரிமித வளர்ச்சி கண்டு, முகநூல் நிறுவனத்தார், இந்த தொடர்பு முறையை, அதன் உரிமையாளர்களிடமிருந்து, சற்றேறக்குறைய ரூபாய் இரண்டாயிரம் கோடிக்கு வாங்கியிருக்கிறார்கள், என்றால், இதன் வளர்ச்சி, எத்தகையது என்பதை வாசகர்களாகிய நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள்!
கடந்த ஜனவரி 2015 வரை, சுமார் 70 கோடி உபயோகிப்பாளர்கள் இருப்பதாக ஒரு தகவல் கூறுகிறது! அதில், சுமார் 7 கோடி உபயோகிப்பாளர்கள் இருப்பதாகவும் சொல்கின்றனர். (http://en.wikipedia.org/wiki/WhatsApp)
இன்று ஒவ்வொரு அமைப்பு சார்ந்த குழுமங்களும் பெரும்பாலும், தன் அங்கத்தினர்களுடனானத் தொடர்புக்கு, ஏகிநிற்பது என்ன? (Whatsapp) என்ற முறையைத் தான் பயன்படுத்துகின்றன.
அவை பற்றிச் சில குறிப்புகள்!
குறைந்த பட்ச பாதுகாப்பு முறைகள்
1. பல நேரங்களில், நம்முடைய கவனக் குறைவின் காரணங்களால், மிகுந்த கன அளவுடைய காணொளிக் காட்சிகள் மற்றும் நிழற்படங்கள், தானியங்கிப் பதிவிறக்கம் (Auto download) செய்யப்படுகின்றன. அதனால் நமக்கு ஏற்படும் பொருட்செலவு மிகுதியாகும். இதைத் தடுப்பதற்கு, கீழ்காணும் சுட்டியைக் கவனிக்கவும்.
2. நம்முடைய பயனீட்டு அளவுகளை அவ்வப்போது கண்காணிப்பது எப்படி என்பதை விளக்கும் சுட்டி
3. சில வேளைகளில், விரும்பத்தகாத செய்திகளும், காணொளிப் படங்களும் வரும்போது, அத்தகைய செய்தி அனுப்பும் நபர்களைத் தடை செய்வது எப்படி என்பதை விளக்கும் படம்.
4. பலருடைய அனுபவமே, நாம் விரும்பும்பொழுது, நம்முடைய கைப்பேசியில், தேவையான நிழற்படமோ, காணொளியோ எடுக்கப் போதுமான இடவசதி இல்லாமல் இருக்கும். இதற்குக் காரணம், நாம் அவ்வப்பொழுது அழிக்காமல் வைத்திருக்கும் சேமிப்புச் செய்திகளும்; படங்களுமே! அதனை எவ்வாறு சுத்தப்படுத்தி கைப்பேசிக்கான சேமிப்புப் பகுதியை தகுதிப்படுத்துவது என்பதை விளக்கும் படம்.
பெரும்பாலும் நாம் அறிந்த செய்திகளாகவே இருந்தாலும், சில வேளைகளில் அனைத்தும் ஒருங்கிணைத்து ஒரு தொகுப்பாகப் பார்க்கும்போது அது நம் மனதில் எளிதில் தங்கிவிட ஏதுவாக இருப்பதால், நிச்சயம் உங்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.
குறியீட்டுச் செய்தி (Twitter):

தகவல் பரப்பும் களமாக ஒரு குறுகிய காலத்தில் அசுர வேகத்தில் வளர்ந்ததுதான் இந்தக் குறியீட்டுச் செய்தி(Twitter) என்று சொன்னால் மிகையாகாது. 2006ம் ஆண்டில் நான்கு நபர்கள் ஒன்று சேர்ந்து உருவாக்கிய இந்தத் தகவல் பரிமாற்ற முறை, இன்று உலகில் ஏறக்குறைய 28 கோடி பயனீட்டாளர்களைக் கொண்டதாக உள்ளதாக ஒரு இணையச் செய்தி கூறுகிறது. (http://en.wikipedia.org/wiki/Twitter)
அவை பற்றிச் சில குறிப்புகள்!
முடிவுரை
இதுவரை நாம் பார்த்த இந்த மூன்று விதமான தகவல் பரிமாற்றக் களங்களையும், அதற்கேற்ற செயல் வடிவத்தில் பயன்படுத்த கீழ்க்காணும் விதத்தில் பிரிக்க முற்படுகிறேன்.
ஆக, நம் வாழ்வில் அன்றாடம் பயன்பாட்டில் உள்ள மிக முக்கிய மூன்று தகவல் பரிமாற்று வழிமுறைகளைப் பற்றி எனக்குத் தெரிந்த வகையில், உங்களின் சிந்தனைக்குப் பகிர்ந்த இந்த விடயங்கள், உங்களுக்கு உபயோகமாக இருந்திருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
-சுரேஜமீ
அரசியல் சாசன
ஆசான்!
அடித்தட்டு மக்களின்
நேசன்
அனைவரும் சமமேயென்ற 
தாசன்!
சட்டத்தின் சமத்துவம்
சரிநிகர் சென்று
சாமானியனை அடையச்
சரித்திரம் படைத்தோன்!
நாட்டிற்கு ஒரு சட்டம்
வீட்டிற்கும் அது பொருந்தும்
வீணில் எதற்கு ஒரு பிரிவு
விழிப்புடன் இருந்தால் என்றோன்!
ஒடுக்குதல் என்றும் தீதே
ஒற்றுமை நல்க வாழ்வே
ஏற்றுதல் வேண்டும் நாமே
வேற்றுதல் என்று ஒதுக்கா!
தாழ்ந்தவர் மேலே வந்தால்
தாழ்வே இல்லை வாழ்வில்
உயர்த்திட வேண்டிச் சட்டம்
செய்திட்ட அண்ணல் காரே!
சமூக நீதி வேண்டிச்
சாசனத் திருத்தம்
செய்த சாதனையாளர்
சாகேப் பிறந்த நாளிது!
நாளும் அவர்புகழ் பாடி
நாடும் போற்ற நாடி
நானிலத்தில் இனி
நசுக்கப்பட்ட இனமில்லை
என வாழ்ந்து காட்டுவோம் வாரீர்!
அண்ணல் அம்பேத்கார் சொல்பற்றி வாரீர்!!
வண்ணம் சிதறாமல் வானில் வரும் கதிரோன்
தன்னில் வருகின்ற கதிரொளியே நம் செல்வம்..
எண்ணம் சிறக்கின்ற ஏற்றம் புரிகின்ற – நாம்
எல்லோரும் இணைந்திங்கே வாழ்வதுவே வாழ்க்கை
ஆண்டு கணக்கிலொரு பக்கம் புரள்கிறது
அடுத்தப் பக்கத்தில் நன்மை பல வருகிறது
அன்னைத் தமிழுக்கு என்றும் இளமையென்று
மன்மத வருடம் இங்கே வாழ்த்துப் பாடுகிறது
அகிலம் முழுவதுமே உலகம் செழித்திடவும்
அமைதிப் பூங்காவில் உயிர்கள் வாழ்ந்திடவும்
வறுமைப் பசிப்பினிகள் பாரில் அகன்றிடவும்
சிகரம் வைத்தாற்போல் பாரதம் உயர்ந்திடவும்
வருகை தரும் நமது சித்திரைத் திருமகளை
இருகரம் நீட்டி இனிதே வரவேற்போம்
திறமை முழுவதையும் இன்னும் செலுத்தியே
உயரும் எண்ணத்தை இதயத்தில் விதைப்போம்!
அனைவருக்கும் உளம்நிறைந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் !!
என்றும் அன்புடன்…
—
கவிஞர் காவிரிமைந்தன்
நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர்
கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம்
பம்மல், சென்னை 600 075
தற்போது – அபுதாபி – அமீரகம்
00971 50 2519693
00971 50 4497052
kaviri2015@gmail.com
www.thamizhnadhi.com a
-சுரேஜமீ
இளமை பொங்க
மனங்கள் இனிக்க
உறவுகள் தழைக்க
உன்னதமாய் வரும்
மன்மத ஆண்டே! 
மாற்றங்கள் நிகழ்ந்து
ஏற்றங்கள் பெற்று
தோற்றங்கள் மாறிச்
சாற்றிட எங்கணும்!
அன்னைதந்தை போற்றி
அவர் நலம் காத்து
அகிலத்தில் எவரும்
அவர்நிகர் இல்லையென!
வீடுகள் தோறும்
வீணில் செல்நீரால்
பேணியே வளர்ப்போம்
பண்புடன் மரங்களென!
தேவைக்கு ஏற்பச்
செலவுகள் செய்துச்
சேவைக்கும் வாய்ப்பாய்ச்
சேமிப்பை வளர்ப்போமென!
மானுடம் போற்றும்
மரபுகள் காத்து
வான்மழை நிகராய்
வையகம் அணைப்போமென!
சாதிகள் தொலைந்தன
வீதிகள் கலைந்தன
நீதிகள் போற்றிநற்
சேதிகள் சொல்வோமென!
வரம்பல தந்திடும்
நலம்பல வந்திடும்
வளம்பல பெற்றுநல்
வாழ்வே சிறந்திடும்
இனிய தமிழின்
ஈராறு மாதங்களில்
முதலாய் வந்து
முத்தாய்த் தொடங்கும்
சித்திரை மலராள்
செங்கதிர் அணிந்தாள்
முத்திரை பதித்தே
எத்திசை முழங்க!
மன்மதன் தாங்கி
மானுடம் செழிக்க
மங்களமாய் வரும்
மங்கையும் அவளே!
புத்தாண்டு மகளே!!
இருகரம் கூப்பித் தமிழர்கள் அழைக்கின்றோம்
இனிய தமிழ்ப் புத்தாண்டே வா என!!
-செண்பக ஜெகதீசன்
சீர்மிகு மன்மதப் புத்தாண்டாய்
சித்திரை வந்தது சிறப்புடனே,
பேர்பெற நன்றாய் உழைத்திருந்தால்
பெருமை சேர்க்கும் இறையருளும்,
தேர்ந்திடு நல்ல வழியினையே
தோல்வி என்பதைப் புறந்தள்ள,
சேர்ந்திடும் வெற்றி நிலைபெறவே
சித்திரை நாளில் வாழ்த்துவமே!
-சுரேஜமீ
அன்பிற்குத் தாய் தந்தேன்
ஆற்றலுக்கு மனம் தந்தேன்
இயல்பிற்கு மொழி தந்தேன்
ஈகைக்குக் குணம் தந்தேன்
உறவுக்குக் கொடி தந்தேன்
ஊக்கத்திற்குக் கை தந்தேன்
எப்போதும் மகிழ்விற்கும்
ஏற்றதொரு வாழ்விற்கும்
ஐவகை நிலம் தந்தேன்
ஒற்றுமையாய் இருக்கவேண்டி
ஓதும் நெறிகள் பலதந்தேன்
ஒளவைத் தமிழும் தந்தேன்
அஃதெல்லாம் மறந்தாய்!
அணிசேர்த்தாய்
ஆற்றாது;
இன்சொல் பேச மறுத்தாய்;
ஈன்ற தாய்கூடப் புறக்கணித்தாய்;
உண்மையை
ஊமையாக்கினாய்;
எல்லாம் ‘நான்’
ஏகி நின்றாய்;
‘ஐயோ பாவம்’ அடியோடு மறந்து நின்றாய்;
ஒன்றும் புரியாமல்;
ஓடும் வாழ்க்கையில்
நிற்கும்
உனைப் பார்த்துச்
சிரிக்கின்றேன் நான்!
படைப்பில் குறையில்லை;
பார்த்தும் தெளிவில்லை!
புவியில் நீ ஆடும்
ஆட்டம் நிற்கும் வேளையிலே…
என்னை அழைக்கின்றாய்
குறையே சொல்கின்றாய்
நிறையை மறுக்கின்றாய்
பேதம் அறுக்கின்றாய்
வேதம் பேசுகிறாய்
வாழ்க்கை நீடிக்க
வேண்டுதல் செய்கின்றாய்!
வாழும் காலத்தில்
அத்தனை நான் செய்தும்
வழித் துணையாயிருந்தும் பேதையாயிருந்து
போதை தெளிந்ததுபோல்
நிற்கும் உனைப்பார்த்துச் சிரிக்கின்றேன் நான்!!
இருப்பே
இறப்பை மறந்துவிட்டு
இருப்பைக் கேலியாக்கும்
இதுவா வாழ்க்கை?
சிந்தி!
இறைவன் நானிருக்க;
எவனும் இல்லையெனும்
இறுமாப்பை விட்டொழித்து
இனிமையாய் வாழ்ந்து பார்!!
இருவரும் சிரிக்கலாம்
இனிமையாய் இருக்கலாம்!!
இங்கே சற்று உயிரோடு மெய் விளையாடியிருக்கிறேன்…
உன் பொய்யை
எடுத்துரைக்க!
எண்ணிப் பார்த்து
ஏற்றம் காண்!
சேர்ந்து சிரிப்போம்
அதுவரை
நான் சிரிக்கின்றேன்!!