Advertisements
Featuredஇலக்கியம்பத்திகள்

தேகமும் யோகமும்..{பகுதி4..}

கவியோகி வேதம்

யோகாவும் ஆசைகளும்..

&&&&&&&&&&&&&&&&

yoga

                                      ….  மனித மனத்தின் உளவியல் எண்ணங்கள்)_தத்துவத்தை முழுதும் ஆராய்ச்சி செய்த  ‘ஹேன்ஸ் சைல்’ என்பாரின் கருத்துக்களை இப்போது சொல்கிறேன். இது யோகாவில் பின்பற்றவேண்டிய முக்கியமான ஒன்று.  அவர் சொல்கிறார்.

  “ மனித வாழ்க்கை என்பது எல்லோர்க்கும் இறைவன் அளித்த ஒரு நன்கொடை. எது இயற்கையோ, எது இயல்பாக நம்முள்ளே மனத்திற்குள் இன்பமாக விதைக்கப்பட்டிருக்கிறதோ, அதை நாம் அழகாக முழுதும்  ‘உணர்ந்து’ பிறர்க்குத் தொந்தரவில்லாமல் அனுபவித்தால் அதைவிட நமக்குச் சிறந்த அனுபவம் இருக்க முடியாது. ஆனால் இன்றைய விஞ்ஞான வசதி நிறைந்த உலகில் அதை நாம் அழகாக உணர்ந்து அனுபவிக்கிறோமா? என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். எது எதற்கோ வீணாக ஆசைப்பட்டு, வாழ்க்கையைச் சுமையாக ஆக்கிக்கொண்டிருக்கிறோம்.. இயற்கையை உணரத் தவறுகிறோம்,’ என்பார்..

      ..இந்தப் புதிய கருவி அல்லது புதிய வசதி நமக்கு உண்மையான இன்பம் தருமா? அல்லது நாளடைவில் சுமையாக மாறிவிடுமா? என்று ஆராயாமலே அதை எவ்வளவு விலை கொடுத்தேனும், (பேராசை எண்ணங்களால்!)- வாங்கத் தவிக்கிறோம்.முதல் டென்ஷன் நமக்கு அப்போதுதான் ஆரம்பிக்கிறது.. சரி, அதை மிக சிரமப்பட்டு, உழைத்து,வாங்கியபின் கொஞ்சநாள் நமக்கு இன்பமாக இருக்கிறது.அது மகிழ்ச்சி கொடுப்பதாக உணர்கிறோம்.

   ..கருவியா மகிழ்ச்சி கொடுக்கிறது? என்பதை நாம் ஆராய்வதில்லை.. கொஞ்சநாளுக்குப்பின்  அக்கருவியே, அல்லது அந்தப் புது  வசதியே பல ரிப்பேர்களுக்கு உட்பட்டு நம் நிம்மதியைக் குலைக்கிறது. மீண்டும் டென்ஷன்!

வேறு ஒரு புதிய கருவி, அல்லது வசதி உங்களுக்கு இன்னும் நிறைய இன்பம்தரும் என்று வியாபார தந்திரம் சொல்கிறது.. மனம் சபலப்படுகிறது.வாங்கத்துடிக்கிறது. மீண்டும் டென்ஷனுடன் உழைத்து, காசு சேர்த்து அதை வாங்கி அது புதிய இன்பம் தருவதாக மகிழ்ச்சியில் திளைக்கிறோம். அதுவும் ரிப்பேர் ஆகிறவரை. ஆக, இயற்கையான மகிழ்ச்சி மனத்துள்ளேதான் என்று அறியாமலே காசையும், நிம்மதியையும் தொலைத்து மனத்தில்  ஒரு ‘ஒற்றைக்காளை ’

 பெரிய வண்டியைச் சுமப்பதுபோல்( நம் கிராமங்களில்!) பாரத்தை அனாவசியமாக

ஏற்றி என் வாழ்க்கையே ஒரு.. ‘ பெரிய சுமைதாங்கி’ சார்! என்று வீட்டுக்கு வருபவர் எல்லோரிடமும்  ‘பீற்றிக்’ கொள்வதில் பெருமையடைகிறோம்..இந்த  ஒரு ‘வண்டிச்சுமையை’  இயற்கையினின்றும் விலகி ஏதோ ஒரு மாயையில் சிக்குகிற மாயாமனம் அறிகிறதா, உணர்கிறதா என்றால் இல்லை..

….  எனக்குத் தெரிந்த ஒரு அறிஞர், நல்ல பேச்சாள நண்பர் இதுவரை ஒரு டெலிபோன் வசதிகூடச் செய்து கொள்ளவில்லை. செல்- கூட வைத்துக்கொள்வதில்லை. ஆனாலும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை இலக்கியக்கூட்டங்களில்பேசஅழைக்கப்படுகிறார்.

நகைச்சுவையும், கிண்டலும், அற்புதமான புதிய புதிய கருத்துக்களும் அவர் பேச்சில் அருவிபோல வந்து கொட்டும்.. அதனால் அவருக்கு எங்கும், எந்த ஊரிலும் பலத்த வரவேற்பு.

எப்படி சார் ஒரு டெலிபோனோ, அல்லது காரோ இல்லாமல் இத்தனைக் கூட்டங்களுக்கும் போய் அனாயாசமாகப் பேசுகிறீர்கள் என்று அவரைக்கேட்டேன்.

 இருக்கிற இத்தனூண்டு மீசையைத்திருகியபடி அவர் சொல்வார்;- .. “வேதம் சார்!

சொல்லுங்கள்! இந்த செல்.. அல்லது டெலிபோனா போய்ப் பேசுகிறது?.

 நான்..;- ‘இல்லை ஐயா!’..

 அவர்..;–  ‘இவற்றை நான் ஒரு சுமையாகக் கருதுகிறேன்..சார்! அதுகளை வைத்துக்கொண்டால் அனாவசியச் செலவு மாசாமாசம் எனக்கு…எவனாவது சும்மாவானாலும் தொடர்பு கொண்டு வீண் சந்தேகம் கேட்டுக்கொண்டிருப்பான்.என்  நேரமும் வேஸ்ட்!.அந்த நேரத்தில் நான் ஒரு புதிய நூலைப் படிப்பேனே! ஏராளமான கருத்துள்ள நூலாக நான் தேர்ந்தெடுத்துப்படிப்பதால்தானே, சொல்வதால்தானே என்னைக் கூப்பிடுகிறார்கள்.. ஆர்வமுள்ளவர்கள் அவசியம் நேரில் என்னிடம் வருவார்கள். ஒப்புதல் தருவேன்.காரில் என்னை அழைத்துப்போனால்தான் பேசுவேன் என்பேன்.பேசவோ குறைந்த கட்டணம் தான் வாங்குவேன்.

 அதனால் மற்றவர்களைவிட என்னை அழைத்துப் பேசவைத்தால் அவர்களுக்கும் லாபம். தொலைபேசித்தொல்லைகட்கு நான் பணம் கட்டாததால் எனக்கும் அவர்களுக்கும் ஒரு நேரடித் தொடர்பு கிட்டுகிறது.. நெருக்கம் அதிகமாகி எனக்கு இப்போ தமிழ்நாடு முழுதும் ஏராளமான நண்பர்கள்.

 ஆக நான் விஞ்ஞானக் கருவிகளைச் சுமையாகக் கருதுவதால் அவற்றிலிருந்து ஒதுங்கி, தேவையானது மட்டும் வைத்துக்கொண்டு(அதாவது டி.வி மட்டும் அவர் வீட்டில் உண்டு- அதுவும் மனைவிக்காக,) காசையும் மிச்சப்படுத்துகிறேன். நேரத்தையும் கூட…. என்னை அழைக்க வருபவர்கள் இயற்கையான உண்மையான இலக்கியத் தாகத்துடன் வருவார்கள். அவர்களை நான் ஏமாற்றுவதேயில்லை.. என்ன வேண்டுமோ கொடுப்பேன். இதனால் நான் எக்காலத்திலும் டென்ஷனை மனத்தில் ஏற்றிக் கொள்வதில்லை.. என்மனைவியும் அப்படித்தான். இப்போதும் அவள் மிக்ஸி என்றால், கிரைண்டர் என்றால் எத்தனை கிலோ கனம்? எவ்வளோ செலவு? எவ்வளோ மின் ஆபத்து?என்பாள்.

 நீங்களே பார்த்தீர்கள் அல்லவா? அவள் பக்கத்து  வீட்டுக்காரிகளை விட கட்டு குண்டாய் இருக்கிறாள். ஆரோக்கியமாயும் உள்ளாள். ஒரு  தலைவலி என்றுகூட அவள் படுத்ததில்லை. என்று சொல்லி கடகட எனச் சிரித்தார்… உண்மை !அவர் வீட்டில் இன்னும் கிராமத்திலிருந்து கொண்டுவந்த அயனான அம்மியும், ஆட்டுக்கல்லும்தான்.

 ….அவரது பதிலைக் கேட்டு ஆச்சர்யமும், பலத்த மகிழ்ச்சியும் அடைந்து என்னை அறியாமலே  ‘சபாஷ்’ என்று கைதட்டினேன்… தெரிகிறதா இப்போது? அவர் உண்மையாக இயற்கையுடன்  கைகோர்த்துக்கொண்டே வாழ்க்கையை மிக அழகாக, அமைதியாகக் கொண்டுபோகிற தூய தமிழ் அறிஞர் என்று..! அதனால் வீண் தொந்தரவுகளை  அவர் விலை கொடுத்து  வாங்குவதில்லை..

அவரை நெருங்கிய நண்பர்கள் ‘சுமை வேண்டா சுப்பன்’ என்று ரகசியமாக அழைப்பர்.

 … இவ்வளவு ஏன்? அண்மையில் மறைந்த திரு. காஞ்சிமகான் கூட ஒரு காரையோ, செல் போனோ பயன்படுத்தியதே இல்லை.. அவரிடம் பேசணும் என்றால் பக்தர்கள் நேரில்தான் போய்ப் பேசுவர்.

எங்கு போக வேண்டும்  என்றாலும் அவர் கால்நடையாகத்தான் செல்வார். அந்த அளவுக்கு அந்த மகான் இயற்கையோடு கலந்து வாழ்ந்திருந்தார்…இறுதிவரை.

.. உங்களுக்கு இன்னொன்று தெரியுமா?  நம் எல்லோரது மனப்பான்மையையும் உற்றுக்கவனித்தீர்களானால், சுமைகளை மனத்தில் ஏற்று வீணாக டென்ஷன் படுகின்றோம்.

 அதேசமயம் இந்த டென்ஷனை அனாவசியமாகப் பிறர்மேலும் திணிக்கின்றோம்..

 சொகுசுக்கு ஆசைப்பட்டு என் பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் விலையுயர்ந்த ஆண்ட்ராய்டு செல்போன் வாங்கிவந்து போகிறவர் வருபவர் எல்லோரிடமும் கொஞ்சநாள் காட்டிப்பெருமைப் பட்டுக்கொண்டிருந்தார்..வாங்கிய பிறகு அதை எப்படி முறையாகப்பயன்படுத்துவது என்று தெரியவில்லை.. ஓரமாய் வைத்துவிட்டார்!அவரது மனைவியும் வீண்செலவு செய்துவிட்டீர்களே!

சரியான புடவை இல்லாமல் பழசைக்கட்டிக்கொண்டு அவஸ்தைப்படுகிறேனே. எனக்கு இரண்டு நல்ல புடவையாவது நீங்க அநாவசியமாகச் செலவழித்த காசில் எடுத்துக்கொடுத்திருக்கலாம்.. மனசில ஒரு சந்தோஷம் இருந்திருக்கும் என்று அடிக்கடி குத்திக்காட்டினாள்.

அவ்வளவுதான்! அவருக்கு டென்ஷன் ஏறிவிட்டது. பலநாட்கள் அவரால்  நிம்மதியாகவே இருக்கமுடியவில்லை. எப்படியாவது அந்த வேண்டாத ஆண்ட்ராய்டு செல்லை வேறு ஒருவர்க்கு கொஞ்சம் விலைதள்ளியாவது விற்கப் படாது பட்டார்.அது அடுத்த டென்ஷன்.கடைசியில் அவரது அண்ணன் மகனே ஒரு விலை சொல்லி எடுத்துக்கொண்டபின் தான் அவர் மனம் அமைதியுற்றது. ஆக தான் பட்ட அவஸ்தையை இன்னொருவரிடம் தள்ளினால்தான் மனம் நிம்மதி அடைகிறது.

  …அதனால்தான்  ‘சைல்’ சொல்கிறார். உள் மனத்திலிருந்தோ, அல்லது பிறர் மனம் மூலமாகவோ வருகிற ஒரு வேண்டாத, கெட்ட தூண்டுதலே மன அமைதியை இழக்கச் செய்து டென்ஷன் என்னும் பரபரப்பு எண்ணம் உண்டாகிறது.அது தற்காலிகமாகவோ இல்லை நிரந்தரமாகவோ  கூட இருக்கலாம்.ஒன்று ..ஜாக்கிரதையாக இருந்து  ‘அது’ ஏற்படாமல்  உங்கள்  மனத்தைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.. இல்லையாயின் வந்தபின் பிராணாயாமம், தியானம் மூலம் நிச்சயம் அதிலிருந்து விடுபடுங்கள்.

இறைவன் கொடுத்த அழகிய சுதந்திர மனம் என்னும் பாத்திரத்துள் நீங்களே வேண்டாத குப்பையைப் போட்டீர்களாயின், நீங்களே தான் இறைத்தியானம் மூலம் அதனை வெளியே எடுத்து எறியவேண்டும்’ என்கின்றார்.எவ்வளவு உண்மையான பாஸிடிவ் ஆன உபதேசம் பாருங்கள்!

… எனவே அவர் சொல்கிற பிரகாரம் வெளித்தூண்டுதல்கள் ஆன அதிக வெய்யில், அதிகக்குளிர், அதிக மழை அல்லது பிறர் மனம் மூலம் வருகிற  ‘ஸ்ட்ரெஸ்’ (மன அழுத்தம்) போன்றவற்றை மனோபலம், தியானம், எப்போதும் சாந்தமான எண்ணங்கள் முதலியவற்றால் போக்கிக்கொள்வோம்.அதே சமயம்

நாமே வீணாக சஞ்சல மனத்தால் உண்டாக்கிக்கொள்கின்ற கோபம், காமம், பேராசை,அதீத பாசம்,  ‘தான்’ எனும் அகந்தையின் மூலம் செய்யும் வேண்டாத செய்கைகள் இவற்றை மகான்களின் உபதேசம், அவர்தம் வரலாற்றை எப்போதும் படித்தல்,நல்ல நல்ல இலக்கியநூல்களை, கவிதைகளைப் படித்து அனுபவித்தல்போன்றவற்றால் மனம் என்னும் நல்ல தெய்வீகப்பாத்திரத்துள் பிரகாசத்தை(தெய்வ ஒளியை)ஏற்றிவைப்போமாக!

 *********************

{தொடரும்)

 படத்திற்கு நன்றி

Print Friendly, PDF & Email
Download PDF
Advertisements
Share

Comments (1)

  1. Avatar

    கருத்து சரிதான்.அறிவியல் கருவிகள் வரவால் ஏற்படும் விளைவு இது.ஆனால் அது தேவையில்லை என்பது அவரவர் குடும்பத்தின் தேவையைப் பொறுத்தது.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க