Blog

  • படக்கவிதைப் போட்டி 281இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 281இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    சிந்தனையில் ஆழ்ந்தபடி எதையோ வெறித்து நோக்கிக் கொண்டிருக்கும் பெண்மணியின் சிற்பத்தை பாரீஸ் சென்று அற்புதமாய்ப் படம்பிடித்து வந்துள்ளார் திரு. நித்தி ஆனந்த். வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து இப்படத்தைத் தேர்வுசெய்து வழங்கியிருப்பவர் திருமிகு. ராமலக்ஷ்மி. இவர்கள் இருவருக்கும் என் நன்றியைச் சமர்ப்பிக்கின்றேன்.

    ”மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா” என்றார் கவிமணி. ஆனால், மாதவம் செய்து பிறந்த அந்த மங்கையர்க்கு இந்தச் சமூகம் இழைக்கும் இன்னல்களும் இடும்பைகளும் கொஞ்சமில்லை. பெண்களின் நிலை இவ்வாறு இருப்பதற்குத் தீர்வென்ன என்றுதான் இந்தப் பெண்மணியும் ஆழ்ந்து சிந்திக்கின்றாரோ?

    ஒன்றைமட்டும் அழுத்தமாய்ச் சொல்லமுடியும்…”பெண்களைப் போற்றும் நாடும் வீடும் சிறப்பது திண்ணம்!”

    இனி, இந்தச் சிற்பமங்கை குறித்து நம் கவிஞர்களின் கருத்து என்ன என்பதை அறிந்துவருவோம்!

    *****

    ”நம் கண்முன் இருக்கும் தெய்வமாம் அன்னையை வணங்கி மண்ணில் உய்வோம்” என்ற நல்வழியைக் கவிதையில் சொல்லியிருக்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    கோபுரமாய்…

    அன்னை என்பவள் கண்முன் தெய்வம்
    அவளை வணங்கியே மண்ணில் உய்வோம்,
    முன்னே காணும் முதலாம் கடவுள்
    முறைப்படி பேணிடு தீபச் சுடராய்,
    உன்னை உயர்த்த தன்னுயிர் தருவாள்
    உயர்வில் அவளொரு கோபுர உருவே,
    பின்னர் அவளைத் தவிக்க விடாதே
    பிழையிது தந்திடும் உனக்கே இடரே…!

    *****

    ”காரழகியே! வாடிய மலராய் அமர்ந்திராமல் வாயைத் திறந்து உன் கதையைச் சொல்லிவிடு!” என்று கவலையாய் அமர்ந்திருக்கும் காரிகையை அக்கறையோடு விசாரிக்கின்றார் திருமிகு. சுதா மாதவன்.

    கவலை நிறைந்த முகத்தோடு
    காலினை நீட்டி அமர்ந்தபடி
    கண்ணினை நிலம் காண இருப்பவளே
    உன் கதையைத் தான் சொல்லிவிடேன்?

    கடற்கரையின் ஓரமது என்பதறிந்தே
    உன் மன அலையும் அதனூடே பொங்கியெழச்
    சுருக்கங்கள் உடலெங்கும் ஓவியமாய்க்
    கருத்த நிறக் காரழகி நீ என்பதறிவேன்

    காற்று கூட உன்னைத் தொடவில்லையா?
    கரையடிக்கும் அலையதனை நீ உணரவில்லையா?
    வாயைத் திறந்துப் பதில் சொன்னால் வாகாயிருக்கும்
    வாடிய மலராய் அமர்ந்திருந்தால்
    வாழ்வே கசக்கும்!

    *****

    ”ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானம்! உள்ளத்தின் உள்நோக்கி உன்திறன் அறிந்தால் உச்சம் எட்டி உன்னதம் பெறலாம்!” என்று இம் மங்கைக்கு ஊக்கமூட்டுகின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

    வளம் பெறும் வழி

    ஆணும் பெண்ணும்
    சரி நிகர் சமானம்
    அடையும் இலக்கில்
    அவரவர் உயரம்
    விடுதலை உணர்வு
    விகிதத்தில் இல்லை
    எட்டும் அறிவில்
    இளைத்தவர் இல்லை!

    உள்ளத்தின் உள் நோக்கி
    உன் திறன் அறிந்தால்
    உச்சம் எட்டி உன்னதம் பெறலாம்!
    அச்சம் தவிர்த்து
    அகிலத்தை வெல்லலாம்
    வெற்றுப் புகழ்ச்சியை
    ஒதுக்கி வைத்து
    உண்மை அறிவை
    உயர்த்தும் கல்வியை
    வளர்த்து வளம்பெறும் வழியறிவாய்!

    சிற்பப் பெண்ணுக்குச் சிந்தனையைத் தூண்டும் சிறந்த கவிதைகளைப் படையலிட்டிருக்கும் நம் கவிஞர்களுக்குப் பாராட்டுக்கள்!

    அடுத்துவருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவுசெய்யப்பட்டிருப்பது…

    தாயவளே தூயவளே!
    தணியாத அன்பாலே
    தரணிதனில் உயிர் தழைக்கத்
    தன்னையே ஈந்தவளே தாயே!

    உன்னில் இருந்து உயிர்த்தேன் அம்மா!
    உன்கரம் பற்றியே உயர்ந்தேன் அம்மா!
    உனக்கு இணை உலகில் நீயே அம்மா!
    உனையன்றி தெய்வம் எனக்கேதம்மா!

    கருத் தந்து உருத் தந்து உயிராக்கினாய்!
    கருணையோடு எனை வளர்த்து உயர்வாக்கினாய்!
    கரும்பாக உனைப்பிழிந்து என் வாழ்வை இனிப்பாக்கினாய்!
    கருப்பான உன் கரத்தால் உழைத்தென்னைச் சிவப்பாக்கினாய்!

    நிலவு நீ காட்டிச் சோறூட்டினாய்!
    நிலத்தில் நடைபழக்கி வழிகாட்டினாய்!
    நிழலாய் நீயிருந்து எனை மரமாக்கினாய்!
    நிலைத்த உன்அன்பில் எனைக் குளிப்பாட்டினாய்!

    விழி இரண்டின் ஒளியாலே
    வெளிஎங்கும் அன்பு ஒளி பாய்ச்சினாய்!
    மொழி அதிராமல் பேசியே என்றும் இன்பம்
    பொழிகின்ற மழை மேகமாகத் தாலாட்டினாய்!

    ஈன்ற தாயே இனியவளே அம்மா!
    ஈடில்லா உன் உழைப்பாலே
    ஈபிள் கோபுரம் போல் தலைநிமிர்ந்தேன்!
    ஈந்த உன் கொடையால் இன்று உலகளந்தேன்!

    ”கருத் தந்து உருத் தந்து உயிராக்கினாய்; கருணையோடு எனைவளர்த்து உயர்வாக்கினாய்; கரும்பாக உனைப்பிழிந்து என் வாழ்வை இனிப்பாக்கினாய்; ஈடில்லா உன் உழைப்பாலே ஈபிள் கோபுரம்போல் நான் தலைநிமிர்ந்தேன்!” என்று அன்னையின் உழைப்பை, கைம்மாறு கருதாத அவள் ஈகத்தை எளிய வரிகளில் உணர்வுபூர்வமாய் விளக்கியிருக்கும் திரு. யாழ். பாஸ்கரனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவிப்பதில் மகிழ்கின்றேன்.

     

    Share
  • இங்கிலாந்தில் இலையுதிர்காலம்

    இங்கிலாந்தில் இலையுதிர்காலம்

    அண்ணாகண்ணன்

    இங்கிலாந்தில் வசிக்கும் நண்பர் சக்தி சக்திதாசன், என் வேண்டுகோளை ஏற்று, இங்கிலாந்தின் இலையுதிர்காலக் காட்சிகளை நம் அலைவரிசைக்காகப் படம் எடுத்து அனுப்பியுள்ளார். அவருடைய இனிய வர்ணனை, நாம் அதை நேரில் காண்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. இருந்த இடத்திலிருந்தே இங்கிலாந்தின் வனப்பைக் காண்போம், வாருங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • இந்து சமய அறநிலையத்துறையின் வலைத்தளத்தில் Church என்ற சொல் உள்ளதா?

    இந்து சமய அறநிலையத்துறையின் வலைத்தளத்தில் Church என்ற சொல் உள்ளதா?

    இந்து சமய அறநிலையத்துறையின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் முத்தாரம்மன் கோவில், மாரியம்மன் கோவில் ஆகியவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்பாக Mutharamman Church, Mariamman Church என வருகின்றது. இது மதமாற்ற முயற்சி, இந்து சமய அடையாளங்களை அபகரிக்கும் முயற்சி என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் உண்மைத் தன்மை என்ன என்பதை இந்தப் பதிவில் சான்றுகளுடன் பாருங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மீள்பயன்பாடு – சுதா மாதவன் குறிப்புகள்

    மீள்பயன்பாடு – சுதா மாதவன் குறிப்புகள்

    இதோ தீபாவளி நெருங்கிவிட்டது. கம்பி மத்தாப்பைக் கொளுத்திய பிறகு அந்தக் கம்பியைக் கொண்டு என்னவெல்லாம் செய்யலாம் தெரியுமா? உங்கள் எரிவாயு உருளையை (சிலிண்டரை) என்றைக்குப் பயன்படுத்தத் தொடங்கினீர்கள்? அது எவ்வளவு நாளைக்கு வருகிறது என்று உங்களால் துல்லியமாகச் சொல்ல முடியுமா? இன்னும் பல பயனுள்ள குறிப்புகளை நமக்கு வழங்குகிறார், சுதா மாதவன்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சி.சு.செல்லப்பா என்னும் விமர்சன ஆளுமை

    சி.சு.செல்லப்பா என்னும் விமர்சன ஆளுமை

    முனைவர் ம. இராமச்சந்திரன்
    உதவிப் பேராசிரியர்
    ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி)
    ஊத்தங்கரை கிருஷ்ணகிரி மாவட்டம்.

    தமிழில் நவீன இலக்கியம் நிலை பெற வேண்டும் என்று போராடிய இலக்கிய ஆளுமைகளில் சி.சு.செவும் ஒருவர். இவர் சிறுகதை, நாவல், குறுநாவல், கட்டுரை, கவிதை, மொழிபெயர்ப்புகள் என்று தீவிரமாகச் செயல்பட்ட காந்தியவாதி. விமர்சனம் வளர வேண்டும் என்ற எண்ணம் சி.சு.செ மனதில் ஆழப் பதிந்துவிட்டது. இதற்குக் காரணம் “இலக்கியத் தரம் என்று ஒன்று இருக்கிறது; அதற்கான குணங்கள் வேறு. வாசகப் பெருக்கம் அதற்கு உதவாது; வியாபாரத்துக்கு உதவலாம் “என்று அன்றைய தமிழ் எழுத்தில் ஒரு புதிய விவாதத்தைத் தொடங்கி வைத்தார் க.நா.சு.

    இது ஒரு தொடக்கமே. சொல்ல வேண்டியதைச் சொல்லியாச்சு என்று க.நா.சு விட்டுவிடவில்லை. தொடர்ந்து சுதேசமித்திரனில் இடம் கிடைத்தவரை எழுதி தொடர்ந்து விவாதத்தை ஏற்படுத்தியதேயாகும்.

    செல்லப்பாவும் விமர்சன வளர்ச்சி மற்றும் செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இவர்கள் எழுத்தைக் கண்டனம் செய்வோர் எண்ணிக்கையில் பிராபல்யத்தில் அதிகம் என்பதாலும் இது ஒரு இயக்கமாகத் தொடர்ந்ததாலும் தமிழில் இந்தப் புதிய பார்வை வேரூன்றியது. சுதேசமித்திரன் கிளப்பிவிட்ட சர்ச்சை அங்கு தொடராவிட்டாலும் ‘சரஸ்வதி’ பத்திரிகை அவருக்கு இடமளித்தது.

    பிறகு விமர்சனம் சார்பு இல்லாமல் வெளிவர வேண்டும் என்ற எண்ணத்தில் சி.சு.செ எழுத்தைத் தொடங்கினார். பலரின் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளானார். இவற்றைப் பற்றிக் கவலைப்படாமல் தொடர்ந்து செயல்பட்டு வந்தார். இதனை, “அதைத் தொடர்ந்து 1959-இல் செல்லப்பா இனி மற்ற பத்திரிகைகளை நம்பிப் பயனில்லை என்று  இதற்கென ‘எழுத்து’ என ஒரு தனி பத்திரிகையை வெளிக்கொணர்ந்தார். செல்லப்பாவே பின்னர் இரண்டு மூன்று இடங்களில் சொன்னது போல, இலக்கியத் தரம் என்ற ஒன்றை விமர்சனம் இல்லாது ஸ்தாபித்துவிடமுடியாது, தரமற்றது தானே அழியும், தரமானது என்றோ ஒரு நாள் தன்னைத் தானே ஸ்தாபித்துக்கொள்ளும், கால வெள்ளம் இதையெல்லாம் சரிசெய்துவிடும் என்று நம்பி இருப்பது சரியில்லை என்று சொல்லிச் சொல்லி முதலில் இதில் நம்பிக்கையில்லாத செல்லப்பாவையும் விமரிசனத்தில் தீவிரமாக ஈடுபடச் செய்தது க.நா.சு. குளவி கொட்டக் கொட்ட செல்லப்பாவும் குளவியானார்” என்று வெங்கட் சாமிநாதன் கூறியுள்ளார். மேலும்

    க.நா.சு.வும் ‘இலக்கிய வட்டம்’ என்று ஒரு தனி பத்திரிகை தொடங்கினார். ‘சரஸ்வதி’பத்திரிகையில் தொடங்கியது எழுத்திலும் இலக்கிய வட்டத்திலும் தொடர்ந்தது. மிக ஆச்சரியமும் மகிழ்வும் தரும் ஒரு விளைவு, அன்று வரை வெளித்தெரியாத, எழுதுவதற்கு வாய்ப்பில்லாத, ஒரு புதிய தலைமுறை, புதிய எழுச்சியுடன், பார்வையுடன் எழுந்தது. தமிழ் எழுத்தில், கவிதை, விமர்சனம்,, நாவல், சிறுகதை என பல இலக்கிய வடிவங்களிலும் ஒரு புதிய தலைமுறை, பெரும் கூட்டமாக என்றுதான் சொல்ல வேண்டும், தெரிய வந்தனர். க.நா.சுவும் அவரைத் தொடர்ந்து சி.சு.செல்லப்பாவும் பின்னர் அவர்களைத் தொடர்ந்து இன்னும் பலரும் இப்புதிய குரலை எழுப்பாதிருந்தால், இது சாத்தியப்பட்டிருக்குமா என்பது சந்தேகம்தான். ஒரு சிறு வட்டத்துக்குள்ளாவது விமர்சனம் என்று தமிழுக்கு பழக்கமில்லாத ஒரு புதுத் துறை வேர்கொண்டது. அதன் முதல் விதை க.நா.சு விதைத்ததுதான். அந்த முதல் நாற்றங்காலுக்குச்  சொந்தக் காரர்கள், முதன்மையாக க.நா.சு.வும் சி.சு.செல்லாப்பாவும் தான். தங்கள் படைப்பு ஈடுபாட்டைச் சற்று ஒதுக்கி, சக எழுத்தாளர்களின் பகையையும் பொருட்படுத்தாது, விமர்சனத்தில் ஈடுபட்டது,“நமக்கு ஏன் வம்பு?” என்னும் பாரம்பரியத் தமிழ் மரபார்ந்த சிந்தனைக்கு எதிரான செயல் இது. எனக்குத் தெரிந்து இரண்டாயிரம் வருஷ நீட்சி கொண்ட ஒரு மரபுக்கு எதிரான செயல் இது என்று வெ.சா கூறினார்.

    “அந்த இதழின் (எழுத்து) வழியாக செல்லப்பா நவீனத் தமிழ் இலக்கியத்திற்காக எவ்வளவு தூரம் ஓடியோடி உழைத்திருக்கிறார். எவ்வளவு கனவு கண்டிருக்கிறார். எத்தனை எழுத்தாளர்களை உருவாக்கியிருக்கிறார் என்ற உண்மை துல்லியமாகப் புலப்பட்டது. தன் விருப்பத்தின் வழியே மட்டுமே அவர் பயணம் செய்திருக்கிறார். தமிழ் இலக்கியத்தைச் சமகால உலக இலக்கியத்திற்குச் சமமானதாக உருமாற்ற வேண்டும் என்ற வேட்கை அவருக்குள் தீவிரமாக இருந்திருக்கிறது.

    குறிப்பாகத் தமிழ் விமர்சனத் துறையை ஆங்கில இலக்கியத்தின் நவீன விமர்சனத் துறைக்கு நிகரானதாக உருவாக்கவேண்டும் என்பதில் கூடுதலாகவே அக்கறை கொண்டிருக்கிறார். அதே வேளையில் தனது கருத்துகளோடு உடன்படாத பல முக்கியப் படைப்புகளையும் அவர் பிரசுரம் செய்திருக்கிறார்” என்று எஸ்.ராமகிருஷ்ணனும் எடுத்துக் கூறியுள்ளார்.

    எழுத்து பத்திரிகை மூலம் பல புதியவர்கள் எழுத வந்தனர். அதில் நானும் ஒருவன் என்று வெ.சா கூறியுள்ளார். “செல்லப்பா தான் என்னை எழுத்துக்கும் ‘எழுத்து’ பத்திரிகைக்கும் இழுத்து வந்தவர் என்று சொல்ல வேண்டும். முதலில் எனக்குத் தெரியவந்த அதிகம் பல பத்திரிகைகளிலும் நான் படித்து உற்சாகம் பெற்றது க.நா.சு.வால் தான். ஆனால் நான் ‘எழுத்து’ பத்திரிகையில் எழுதத் தொடங்கிய சமயம் க.நா.சு.வுக்கு எழுத்து பத்திரிகையுடனும் சி.சு.செல்லப்பாவின் விமர்சனத்துடனும் அபிப்ராய பேதங்கள் கொண்டிருந்த சமயம். அந்தச் சமயத்தில் க.நா.சு தொடங்கிய விமர்சன எழுத்துக்குப் பெரும் பங்களிப்பைப் புதிய தலைமுறையிலிருந்து பலரை அறிமுகப்படுத்தியது ‘எழுத்து’ பத்திரிகை தான். முக்கியமாக விமர்சனத்திற்கும் புதுக்கவிதைக்கும் ‘எழுத்து’ மூலம் சேர்ந்த புதிய தலைமுறை வளம் மிக முக்கியமானது. அந்த வளம் புதிய தலைமுறையிலிருந்து புதியவர்களிடமிருந்து வருதல் மிக விசேஷமானது” என்கிறார் வெ.சா.

    தமிழில் விமர்சனக் கலை வளர வேண்டுமென்றால் அதனைப் பற்றிய கோட்பாட்டு அறிவு தேவையென்பதை விரைவில் உணர்ந்து கொண்டார். இதற்கு மேலைய விமர்சன நூல்களைக் கடும் முயற்சியில் படிக்கத் தொடங்கினார். இதனை, “பத்திரிகை நடத்த ஆரம்பித்தபோது ரொம்பப் பிரமாதமாக நடத்தினார்  முதலில் அவருக்கு விமர்சனத்தில் அவ்வளவு பழக்கம் கிடையாது. பெரிய பெரிய நூல் நிலையங்களுக்குப் போய், பணம் கொடுத்து சந்தாதாரராக ஆகிக்கொள்ளும் வசதிகள் எல்லாம் அவருக்கு இருக்கவில்லை. பிரிட்டிஷ் லைப்ரரி, அமெரிக்கன் லைப்ரரிகளில் அதிகச் செலவு இல்லாமல் புத்தகங்களை எடுத்துக்கொள்ள முடியும். அந்த நூல் நிலையத்தைக் கவர்ச்சிகரமாக அவர்கள் நடத்திக்கொண்டிருந்த காலத்தில் அந்த இரண்டு நூல் நிலையத்துக்கும் மாறி மாறிப் போய் விமர்சனம் சம்பந்தமான புத்தகங்களை ஒன்று விடாமல் படித்துவந்தார். நான் எப்போது போய்ப் பார்த்தாலும் விமர்சனம் சம்பந்தமான புத்தகங்கள்தான் அவர் கையில் இருக்கும். அந்தச் சமயத்தில் நாவலோ சிறுகதைகளோ அவர் படித்து நான் பார்த்ததில்லை. விமர்சனம் சம்பந்தமாக அவர் அப்படிப் படித்து வந்தவற்றின் பாதிப்பை எழுத்துவில் வெளிவந்த கட்டுரைகளில் பார்க்க முடிந்தது என்று சுந்தரராமசாமி கூறியுள்ளார்.

    “மேலை இலக்கியத்தில் எதை அறிமுகம் செய்யவேண்டும், அதை எப்படி அறிமுகம் செய்ய வேண்டும், விமர்சனம் என்பதன் முக்கியத்துவம் என்ன? கோட்பாடுகள் எப்படி அமைய வேண்டும் என்று துல்லியமான எண்ணங்கள் செல்லப்பாவிடம் இருந்தன. அத்தோடு எவரையும் எதிர்பாராமல் தன் எழுத்தின் திசையில் போராடிச் செல்லும் மனவுறுதியும் அவரிடமிருந்தது” என்று வெளி ரங்கராஜனும் கூறியுள்ளார்.

    இவ்வாறு தனி மனிதராகவும் எழுத்து இதழின் மூலமாகவும் அயராத உழைப்பினாலும் மன உறுதியாலும் நவீன தமிழ் இலக்கியத்தை விமர்சனத்தை நிலை நிறுத்திய சி.சு.செ அவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்பதை “செல்லப்பாவின் பங்களிப்பு மகத்தானது. அவரது படைப்புகள் மறுவாசிப்புக்கு உள்ளாகவே வேண்டும் என்பதோடு அவரது இலக்கியப் பணிகள் முழுமையாக சமகால வாசகர்களின் பார்வையில் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும்.

    சி.சு.செல்லப்பா எழுத்தையும் இலக்கியத்தையும் நம்பி வாழ்ந்த ஒரு ஆளுமையின் அடையாளம். தமிழ் இலக்கியத்தை வளப்படுத்திய முன்னோடிக் கலைஞன். இன்றும் அவருக்கு உரிய இடமும் கௌரவமும் கிடைக்கவில்லை என்பதே உண்மை. வாசகனைத் தேடிச் சென்ற எழுத்தாளனின் பாதை இன்று தூர்ந்து போயே கிடக்கிறது.

    விமர்சகராக அவர் உருவாக்கிய கருத்துக்கள் பிரிட்டிஷ் விமர்சன மரபின் பாதிப்பைப் பெற்றவை. தமிழில் விமர்சன மரபைத் தோற்றுவிக்க முயன்ற புலவர்களும் இந்த மரபில்தான் நம்பிக்கை வைத்தார்கள். அவர்கள் தாங்கள் உருவாக்கிய அளவுகோலைப் பண்டைய இலக்கியத்தைப் பார்க்க எடுத்துச் சென்றபோது செல்லப்பா ஏறத்தாழ அதே அளவுகோலைப் புதுமை இலக்கியத்துக்கு கொண்டுவந்தார். இந்த அளவில் அவரை ஒரு நவீனப் புலவர் என்று அழைக்கலாம் என்று வெளி ரெங்கராஜன் எடுத்துக் கூறியுள்ளார்.

    சி.சு.செல்லப்பா விமர்சனக் கோட்பாடுகளை வெளிப்படுத்தும் படைப்பியல் என்ற ஆய்வு நூலை எழுதியுள்ளார். மேலும் தமிழில் சிறுகதை பிறக்கிறது, என் சிறுகதைப் பாணி, பி.எஸ்.ராமையாவின் சிறுகதைப் பாணி, இலக்கியச் சுவை, ஏரிக்கரை முதலிய விமர்சன நூல்களை எழுதியுள்ளார். க.நா.சுவால் தூண்டப்பட்டாலும் அவரது விமர்சன முறையிலிருந்து விலகி தனக்கான பாதையை அமைத்துக் கொண்டு புதுப்பாதையில் பயணித்த ஒற்றை ஆளுமை சி.சு.செ.

    எந்தச் சார்பும் இல்லாமல் மனதில் பட்டதை அறிவில் புகுத்தி ஒப்பனைகள் இல்லாமல் தனது எண்ணங்களை வெளிப்படுத்திய சி.சு.செ இலக்கியக் கடலில் திசை தெறியாமல் தத்தளித்த பல புதிய படைப்பாளிகளுக்கு உரமாக, கலக்கரை விளக்காக விளங்கினார். அவரின் அடிச்சுவட்டில் என்று தமிழ் விமர்சனத்துறை பயணித்துக் கொண்டிருப்பதைச் சிந்திக்க வேண்டியதும் சி.சு.செவைக் கொண்டாட வேண்டியதும் அவசியம்.

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 103 (தொண்டனார்க்கு)

    சேக்கிழார் பாடல் நயம் – 103 (தொண்டனார்க்கு)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    பாடல் :

    தொண்டனார்க்கு   இமயப்    பாவை   துணைவனார்   அவர்முன்  தம்மைக்
    கண்டவாறு      எதிரே   நின்று   காட்சிதந்து    அருளி,  மிக்க
    அண்டவா   னவர்கட்கு    எட்டா  அருட்கழல்    நீழல்   சேர
    கொண்டவாறு   இடையறாமல்   கும்பிடும்  கொள்கை  ஈந்தார்.  

    பொருள் :

    சிந்தை செய்த தொண்டனாருக்குப் பார்வதியம்மையார் கொழுநராகிய சிவபெருமான் அவர் முன் பன்னாளும் தம்மைக் கருத்தினில்வைத்துக் கண்டிருந்த வண்ணமே வெளிப்பட அவர் எதிரிலே வந்து காட்சி கொடுத்து அருள்புரிந்து, மிகுந்த தேவர்களுக்கும் எட்டாத தமது அருளாகிய சீபாதநீழல் சேரும்படி அருள் கொடுத்து, இடையறாமற் கும்பிட்டிருக்கும் பேற்றினையும் ஈந்தருளினார்.

    விளக்கம் :

    தொண்டனார் என்ற சீர், இறைவனது  தொண்டராகவே தம்மை  வைத்துச்  சிந்தை செய்தார் ஆகலின். முன்பு ‘கொற்றவன்’ என்றும் ‘புரவலர்’ என்றும் அந்தந்த  நிலைக்கேற்பக்  குறித்த சேக்கிழார்,  இங்குத்   ‘தொண்டனார்’ என்று வழங்கிய அழகும் தகுதியும் காண்க.  தொண்டனார் என்றதற்கேற்ப  இறைவன்  கழல் நிழலிலே   இடையறாமல்  இருந்து கும்பிடும்   சிறப்பை   ஈந்ததும்  காண்க.

    இமயப்பாவை துணைவனார் என்ற தொடர், சிவகாம வல்லியாருடன் வெளிப்பட்டுத் தந்த காட்சியை  விரித்துக் கூறியதைக்   காட்டியது.

    அவர்முன்  தம்மைக்  கண்டவாறு என்ற  தொடர், முன்பு பலகாலமும் சிந்தித்தும், வந்தித்தும்  அகத்தே கண்ட படியே, தில்லையம்பல  வாணரையே  தம் ஆத்மார்த்த  நாயகராக வணங்கியவர்  ஆதலின், அந்த அம்பலவரே  அம்மையுடன் எழுந்தருளிய  சிறப்பைக் காட்டியது. இக்காரணம்  பற்றியே   இங்கே  இடப வாகனம் கூறாது  விட்டார்.

    எதிரே  நின்று  காட்சி  தந்தருளி , என்ற தொடர் முன் உள்ளப் புண்டரிகத்து  உள்ளிருந்து காட்சி தந்தருளினவர், இப்போது அகம்புறம் என்பதின்றி யாங்கணும் விரிந்து நின்று காணுமாறு காட்சி யளித்தருளி. அவ்வாறு – காட்சி தந்தருளியவாறு. “விறகிற் றீயினன் பாலிற் படுநெய்போல்,

    மறைய நின்றுளன் மாமணிச் சோதி யான்
    உறவு கோல்  நட்டு  உணர்வு கயிற்றினான்,
    முறுக வாங்கிக் கடையமுன் னிற்குமே“,

    “நெஞ்சுண்டென் நினைவாகி நின்றான் றன்னை“

    “இவனென்னைப்  பன்னாள்  அழைப்பொழி யான்  என்று எதிர்ப்படுமே“

    முதலிய திருவாக்குக்கள்  இதனை  விளக்குகின்றன,

    மிக்க  அண்ட   வானவர்கட்கு  எட்டா  அருள் கழல் ‘’ என்ற தொடர்  மக்கள், தேவர், நரகர் என்னும் மூவகை உயர்திணையிலும் புலமை, ஆயுள், தவம், ஒளி முதலிய பலவற்றாலும் மிகுந்த தேவர்களுக்கும் எட்டமுடியாத கழலைக்  குறித்தது

    அண்ட வானவர் – அண்டங்களாகிய மேலுலகங்களை ஆட்சி புரியும் வானவர்கள். பிரமன் – விட்ணு – இந்திரன் முதலியோர்.

    “ஆரேனுந் தன்னடியார்க்  கணியான்   தன்னை,
    அமரர்களுக்கு   அறிவரிய அளவில்  லானை’’   முதலியவை காண்க.

    கழல் நிழல் – திருவடி வியாபகத்தின் நிறைவே நீழல் எனப்பெறும். பிறவித் துன்பமாகிய வெயிலுக்கு மறைவு தந்து ஆற்றுவிக்கும் நிழல். வெயிலின் வெப்பம்  மாற்றும் நிழல்போலத் துன்பம்  நீக்கி,  இன்பமான குளிர்ச்சி  தருவதனாலே நிழல் என்று  உருவகப்படுத்திப் பேசப்பெறும்.

    “தண்ணிழலாம்பதி“ என்பது சிவஞானபோதச் சூத்திரம்.

    “சுழலார் துயர்வெயில்  சுட்டிடும் போது  அடித்
    தொண்டர் துன்னு, நிழலாவன…..ஐயாற னடித்தலமே“

    என்ற திருவிருத்தத்தில் அப்பர் பெருமான் இவ்வுருவகத்தை முற்றும்  விரித்தருள்வது காண்க. நீண்ட  நிழல், நீழல்  எனப்பட்டது.

    நீழல் சேரக்கொண்டு – திருவருள் வியாபகத்தில் அவர் கலந்திருக்க ஏற்றுக்கொண்டு “முத்தி, நான்ற மலர்ப்பதத்தே நாடு“ என்றபடி ஆடுங் கழலே முத்திநிலையாம். அதனையே அவர் வந்தித்தார்; அதனையே சிந்தித்தார்; ஆதலின் இறைவன் அதனையே அவர் சேரக்கொண்டார் என்க.       

    இடையறாமல் கும்பிடும் கொள்கை – இதுவே சைவ சித்தாந்தத்தின்படி, முத்தியினதிலக்கணமாம். முத்தி நிலையினும் உயிர் இறைவனுக்கு அடிமையேயாகி அவனைக் கும்பிட்டு இன்புற்றிருக்கும் என்பது. “மறக்குமாறிலாத வென்னை“என்ற ஆளுடைய பிள்ளையார் திருத்துருத்தித் தேவாரமும்,

    “பண்டு திருவடி மறவாப் பான்மையோர்“ என்ற ஆளுடைய பிள்ளையார் புராணமும் காண்க. இடைவிடாது. சிந்தித்துக்கொண்டிருத்தல்.

    “குஞ்சித்த சேவடியுங் கும்பிட்டேயிருப்பர்“ (சிவஞானசித்தியார்)

    கொள்கை – கும்பிடுதலை உட்கொண்ட நிலை.

    இப்பாடலில் மெய்ப்பொருள்  நாயனார்  தம் செயலால்  கிறைவனின் திருவருளை முற்றவும் பெற்றமையாலே அவர் இறைவியோடு எழுந்தருளி தம் மலரடி நிழலில் என்றென்றும், இடையறாமல்  இருந்து கும்பிடும் சிறந்த  நிலையைப்  பெற்றார்! என்பது  நமக்கு   ஊக்கமும், நம்பிக்கையும் தருகிறது. மெய்ப் பொருள்  நாயனார்  அருள்  வரலாறு  இத்துடன் நிறைகிறது.

    Share
  • கதை வடிவில் பழமொழி நானூறு – 27

    கதை வடிவில் பழமொழி நானூறு – 27

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பாடல் 55

    வெண்குடைக்கீழ் வாழும் குடிகட்கு வேந்தனும்
    செங்கோலன் அல்லாக்கால் செய்வதென் – பொங்கு
    படுதிரைச் சேர்ப்ப! மற்று, இல்லையே, யானை
    தொடுவுண்ணின் மூடுங் கலம்’

    பழமொழி -‘இல்லையே, யானை தொடு வுண்ணின் மூடுங்கலம்’

    சாய் சாய்… என தேநீர் விற்றுக்கொண்டு வரும் சிறுவனைப் பரிதாபமாகப் பார்த்தேன். அங்கிள் என என்னைச் சுரண்டி கூப்பிடும் அவனால் அந்தப் பாத்திரத்தைக் கூட சரியா புடிக்க முடியல. பேப்பர் கப்புகள கக்கத்துல இடுக்கிக்கிட்டு நிக்கறான். எங்கிட்ட வாங்கிக்கோ. அஞ்சு ரூபாதான். இஞ்சி டீ. இரயிலுக்குள்ள இதையே பத்து ரூபா சொல்லுவான். தூய ஹிந்தியில் வாதாடுகிறான்.

    சும்மா குடுத்த பத்துரூபா நோட்ட வாங்கிக்க மறுத்த அவன் நேர்மை எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. உழைக்கணும்னு நினைக்கறான். அதனாலென்ன. இரண்டு டீ வாங்கிக்கொண்டு பத்துரூபாய்த் தாளை நீட்டினேன்.

    நியூடில்லி இரயில்நிலையம் முதல் பிளாட்பாரத்திலிருந்து சென்னை செல்லவிருக்கும்  தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் இரயில் இன்னும் சிறிதுநேரத்தில் புறப்படும். அறிவிப்பைத் தொடர்ந்து பெட்டிக்குள் ஏறினேன். என்னுடையது சைட் பர்த் என்பதால் பெட்டியை இருக்கைக்கு அடியில் நுழைத்துவிட்டு சீட்டில் அமர்ந்தேன். எதிர்சீட்டில் ஆள் இல்லை. அக்கம்பக்கம் நோட்டம்விட ஆரம்பித்தேன்.

    இராணுவஉடையில் நான்கைந்து வீரர்கள் எனக்குப் பின்னாலிருந்த பகுதியில் அமர்ந்திருக்கிறார்கள். மற்றபடி எல்லாரும் குடும்பம் குடும்பமா வந்திருக்காங்க போல. எனக்கு முன்னால் இருந்த ஆறு பெர்த்தையும் வடஇந்தியக் குடும்பம் ஆக்கிரமித்திருந்தது. எந்த மாநிலமோ. இரண்டு ஜோடிகளும் பதினைந்து பதினாறு வயது மதிக்கத்தக்க இரு பெண்குழந்தைகளும் அமர்ந்திருக்கிறார்கள். எந்த குடும்பமா இருந்தா என்ன. எப்படியும் சென்னை போறதுக்குள்ள கண்டுபிடிச்சிடலாம்.

    நீண்ட தொலைவு இரயில் பயணங்களில் நாம கேக்கணும்னே  இல்ல. வந்து ஏறும்போது எல்லாரையும் சந்தேகத்தோடயே பாப்பாங்க. அப்பறம் நேரம் போகப்போக சாதாரணமா பேச ஆரம்பிப்பாங்க. ஒரு இரவு தூங்கி எழுந்தவொடனே ரொம்பவே சுமுகமா பழகிடுவாங்க. இதுதான் இந்த இருபது வருச இரயில் பயணத்துல நான் கத்துக்கிட்ட அனுபவம். ஆனா இப்பயெல்லாம் சின்னப் பசங்க மொபைல விட்டு முகத்த திருப்பறதேயில்ல.

    அந்த வட இந்திய ஜோடிகளை கவனிக்க ஆரம்பிச்சேன். இளஞ்சோடி மகனும் மருமகளும் போல. அந்தப்பொண்ணு புடவைத்தலைப்பால முகத்தை மூடிக்கிட்டே அமர்ந்திருக்காங்க. எதிரில இருப்பவர் மாமனாராத்தான் இருக்கணும். ஒருவேளை பீஹார்காரங்களோ.

    எதேச்சையாக அந்தப் பெரியவரும் என்னயப் பாக்கறார். ஒருசிறு புன்முறுவலுடன் தலையசைக்கிறார். நானும் பதிலுக்கு தலையசைத்து வணக்கம் சொல்கிறேன். இரயில் கிளம்பிவிட்டது. பிளாட்பாரத்தில் அவசரமா ஓடிவந்த ஒரு தமிழ்க்குடும்பம் இரயிலப் பிடிக்கமுடியாம நின்னுட்டாங்க. எந்த டிராபிக்ல மாட்டினாங்களோ. தமிழ்க்குடும்பங்கள் பொதுவா தெற்கு தில்லியில்தான் அதிகமா வசிப்பாங்க. உள்ளே நெய்மணம் தூக்குது. வீட்டில காய்ச்சின நெய் போல. அதுக்குள்ள யாரோ சாப்பாட்டுப்பொட்டலத்த திறந்துட்டாங்க. இதுவே சென்னையிலிருந்து கிளம்புற இரயிலா இருந்தா இலையோட சேர்ந்த இட்லிசட்னி வாசனை வரும். யோசனையுடன் கண்ணை மூடினேன். பழைய ஞாபகங்கள் அலைமோதின.

    சின்ன வயசில கும்பகோணத்துல இருந்தோம். எங்கப்பா அங்க ஒரு ஹோட்டல் நடத்திட்டிருந்தாரு. மொத்த குடும்பமும் அதுக்காக உழைக்கும். அம்மாவும் பாட்டியும் வீட்டிலயே ஆட்டு உரலில இட்லிமாவும் வடைமாவும் அரைச்சு எடுத்துட்டுப் போவாங்க. மணி அய்யர்தான் எங்க ஹோட்டல் சரக்கு மாஸ்டர். ஒத்த ஆளா நின்னு மளமளனு காரியம் பாப்பார். சுடச்சுட இட்லி வடை இலையில பார்சல் பண்ணி ஆபீஸ் போறவங்களுக்குக் குடுப்பாரு. உக்காந்து சாப்பிட நேரமில்லாதவங்க அதை வாங்கிட்டுப்போவாங்க. எனக்கு விவரம் தெரிஞ்சு பதினைந்து வயசு வரை நல்லா ஓடிட்டு இருந்துது. திடீர்னு அப்பாவுக்கு கெட்ட நண்பர்கள் சேர்க்கை அதிகமாயிடுச்சு. தண்ணி அடிக்க ஆரம்பிச்சார். அப்பறம் சீட்டுவிளையாடற பழக்கம் வேற வந்திருச்சு. தினமும் வியாபாரத்தக் கவனிக்காம ஊர்சுத்திட்டு தன்னோட நண்பர்களையும் கூட்டிக்கிட்டு வந்து காசுவாங்காம சாப்பாடு குடுக்க ஆரம்பிச்சார்.

    பாவம் மணி அய்யர். அம்மா, பாட்டி மேல இரக்கப்பட்டு சம்பளம் இல்லாமகூட பலமாசம் வேலை பாத்தாராம். அப்பறம் நகைகள அடகு வச்சு, பாத்திரங்கள வித்து கொஞ்சநாள் நடத்திட்டு வந்தாங்க. அதுவும் முடியாம ஹோட்டல வித்துட்டு துணி தச்சிக்குடுத்து சம்பாதிக்க ஆரம்பிச்சிட்டாங்க அம்மா. நோய்வந்து அப்பாவும் போய்ச்சேந்துட்டார்.

    அரசுபள்ளியில பணம் கட்டவேண்டியதில்லங்கறதால என்னால படிக்க முடிஞ்சது. அப்பறமும் பலபேர் தயவால கல்லூரிப்படிப்ப முடிச்சிட்டு அரசு உத்தியோகத்துல சேந்தேன். ரிடையர்மென்ட்கு இன்னும் ரெண்டு வருசம்தான் இருக்கு.

    யாரோ என்னைத் தொட்டு எழுப்புகிறார்கள். எதிரில் அந்த வட இந்திய மனிதர் கையில் பூரியுடன் நிக்கறார். பாயி…என அழைத்து தாங்கள் மதுராவிலிருந்து வருவதாக அறிமுகப்படுத்திக் கொள்கிறார். அங்கே பெரிய ஓட்டல் வைத்து நடத்துபவராம். இப்போ சென்னையில் ஆரம்பிக்கறதுக்காக போய்க்கிட்டிருக்காராம். என்னயப் பாத்தவொடனே சொல்லணும்னு தோணிச்சாம். சுத்த பசு நெய்யால செஞ்ச பூரி சாப்பிட்டுப் பாருங்கனு என்கிட்ட குடுக்கறார். இது அவரோட ஹோட்டல்ல குடுக்கற ஸ்பெஷலாம். வாங்கிக்கொண்டு வாழ்த்துக்கள் சொன்னேன். என் அப்பா கூட முன்னால் ஹோட்டல் நடத்தியவர்தான் என அறிமுகப்படுத்தியவுடன் அவர் பார்த்தீர்களா அதனாலதான் உங்களப் பாத்தவொடனே சொல்லணும்னு தோணிச்சு என்று சந்தோஷப்படுகிறார். அவருடைய நோக்கில் என் அப்பா ஏதோ பெரும் சாதனை படைத்தது போலவும் தாமும் அவ்வாறே வெற்றிபெறுவோம் எனவும் நினைக்கிறார் போல.

    இருக்கட்டும். எனக்கு மட்டும்தானே தெரியும் ‘இல்லையே, யானை தொடு வுண்ணின் மூடுங்கலம்’ங்கற பழமொழி. யானையே தொட்டு உண்ணத் தொடங்கிட்டா அதற்கு மூடி மறைத்து வைக்க தகுதியான பாத்திரம்னு ஒண்ணு கிடையாதில்லையா. அதுமாதிரிதான் எங்கப்பா பண்ணின வேலையும்.

    அந்த மனிதர் தன் குடும்பத்தார் கிட்ட என்னயப் பத்திசொல்லிட்டார்போல. எல்லாரும் என்னயத் திரும்பிப்பாக்கறாங்க.

    உலகம் எவ்வளவு வித்தியாசமானது. எல்லா உண்மையையும் எப்பவும் சொல்லணும்னு இல்ல. இந்தக் குடும்பத்துக்கு இப்ப என்னால நம்பிக்கை கிடைச்சிருக்கு. அதனோட பிரதிபலிப்பா அவங்க எல்லார் முகத்திலயும் சந்தோசம். சென்னையில் கால்வைக்கும்போது அவங்க சந்தோசமா நம்பிக்கையோட இறங்குவாங்க. கண்டிப்பா நல்லா உழைச்சு முன்னுக்கு வருவாங்க. கைபேசியில் என் மகள் அழைக்கிறாள். அவளுடன் பேசத்தொடங்குகிறேன்.

    பாடல் 56

    உற்றான் உறாஅன் எனல்வேண்டா ஒண்பொருளைக்
    கற்றானை நோக்கியே கைவிடுக்க – கற்றான்
    கிழவனுரை கேட்கும் கேளான் எனினும்
    ‘இழவன்று எருதுண்ட உப்பு’.

    பழமொழி – ‘இழவன்று எருதுண்ட உப்பு’

    வாங்க மாமா. உக்காருங்கோ. ஊர்ல எல்லாரும் சௌக்கியமா? காபி சாப்பிட்டேளா விசாரிக்கிறாள் விசாலம். ஆமாம். பின்ன நான் வராம எப்படி. இந்த ஆத்துல நடந்த ஒவ்வொரு விசேசத்துக்கும் மொதல்ல நான்தான் ஆஜராவேன். கல்யாணம், காதுகுத்து, பிறந்தநாள்னு எவ்வளவு விசேசம் எடுத்து நடத்தியிருப்பேன். இப்ப கொஞ்சம் வயசாயிடுத்து அதனால வேத்துமனுசனா முந்தினநாள் வந்து இறங்கறேன். இருந்தாலும் பழக்கதோசம். எல்லாத்தையும் ஒருதடவை பாத்துடறேன். நீ ஒண்ணும் கவலப்படாத. சொல்லிவிட்டு என் கேள்விகள ஆரம்பிச்சேன்.

    என்னம்மா வாத்தியக்காரன் நாதஸ்வரம் எல்லாத்துக்கும் சொல்லியாச்சா. சீர்வரிசை தட்டு தாம்பாளம் எல்லாம் ரெடிபண்ணியாச்சா. ஆட்கள் வர ஆரம்பிச்சாச்சு. சாயங்காலம் மாப்பிள்ளை அழைப்பு.  இன்னும் பன்னீர் சந்தனக்கிண்ணம் வெளியில வைக்கலயேமா.

    நான் சொல்லறத காதுலயே வாங்கிக்காம விசாலம் யாருக்கோ காபி உபசாரம் பண்ணிண்டிருக்கா. எம் முன்னால உக்காந்துண்டிருக்கற பொண்ணரசி என்னயவே பாக்கறா. மரகழண்ட கேசு தானே பேசிக்கறதுனு நினைப்பாளோ. இருக்கட்டும். ஸ்டூல் மேல இருந்த வெற்றிலை சீவலை வாயில போட்டுக்கறேன்.

    சாயங்கால டிபன் என்ன?. வாழக்காய் பஜ்ஜியும், கேசரியும் தானே. அதுல ஒண்ணும் மாறுதல் இல்லயே. நான் பாட்டுக்கு பேசிண்டே போறேன். யாரும் பதில் சொல்ல மாட்டேங்கறீளே. என்ன ஆயிடுத்து இங்க. அதுக்குமேல பொறுமையில்லாம…. வயசானதால யாரும் மதிக்கமாட்டேங்கறா. போல,  விசாலம் என் மூத்த அக்கா பொண்ணுதான்.  என்னயவிட ரெண்டு வயசு சின்னவள். அவள் பேத்திக்குதான் நாளைக்கு கல்யாணம். புலம்பிண்டே வாசப்பக்கம் வந்துட்டேன். விசாலம் பேச்சுக்கே மரியாத இருக்கோ என்னமோ அப்பறம்தானே என் பேச்சக் கேக்கறதுக்கு. இருந்தாலும் வாய் சும்மா இருக்கமாட்டேங்கறது.

    ஏண்டாப்பா. பந்தக்காலக் கண்ணுலயே காணலயேடா. வாசப்பக்கம் ஓலப்பந்தல் போடுவேளா மாட்டேளா. வாழ மரம் எங்கடா?. அதுக்குப்பதில சீரியல் பல்ப மாட்டறேளா. பேஷ் பேஷ்.

    வேல செஞ்சிண்டு நிக்கற நாலு பசங்களையும் யாரோ ஒருத்தன் திட்டிண்டு இருக்கான்.

    வெரசலா லைட் அலங்காரம் பண்ணுடே. ஒரு வீட்டுக்கே இத்தன நேரம் எடுத்தா பெறகு கம்பெனிய இழுத்துமூடிட்டு படுத்து ஒறங்க வேண்டியதுதான். கத்திவிட்டு தள்ளிநின்னு துணிய கொசுவம் மடிச்சிண்டு நிக்கற பிள்ளையாண்டான் கிட்டப் போறான்.

    ஏல துணிய சுருக்குமடிச்சு ஒரு ஆர்ச் போடத் தெரியல. உன்னயெல்லாம் வச்சி  நாளமுன்னயும்…..  என்னவேல செஞ்சு கிழிக்கப் போறேன். உங்க நாலு பேரையும் சொந்தக்காரம்னு நெனச்சி வேலைக்குச் சேத்தது என் தப்பு.

    சொல்லிட்டு என்னையே பாக்கறான்.

    சாமிக்கு எந்த ஊரு. உள்ளூர்ல பாத்ததில்லயே.

    அப்பாடா வந்ததுக்கு ஒருத்தனாவது பேசறானேன்னு நினைச்சு பேச்சு குடுத்தேன். எனக்கு இந்த ஊருதாம்பா. குழந்தேளுக்கெல்லாம் கல்யாணம் பண்ணிக்குடுக்கற வர இந்தக் கோவில்ல தான் வேல பாத்துண்டிருந்தேன்.  பதினஞ்சு வருசமா இந்தப் பக்கமே வரல. எம்புள்ள என்னய பாம்பே கூட்டிண்டு போயிட்டான். அங்கதான் இருக்கேன். இப்போ இந்தக் கல்யாணத்த சாக்கு வச்சுண்டு இங்க வந்தேன். எம்புள்ளயும் வந்திருக்கான். அவனுக்குக் கொஞ்சம் டவுண்ல வேலை இருக்குனு என்னய இறக்கி உட்டுட்டுப் போயிட்டான்.

    நீர்யாரு? பந்தல் போடறவரா? இன்னும் வேலயே ஆரம்பிக்கலயே அதான் கேக்கறேன்.

    சாமி. நீங்க பழைய காலத்திலயே இருக்கீங்க. இப்ப யாரும் பந்தல் போட மாட்டாக. தெருவுல பாத்தீரா. தார் ரோடு போட்டிருக்கு. அதனால குழி தோண்டக்கூடாது. இப்பயெல்லாம் கல்யாணம் நடத்திக்குடுக்கறதுக்குன்னு கம்பெனிகள் வந்திருச்சு. அந்தக் கம்பெனி அலங்காரத்துலேந்து சமயல், பூமாலை வரை எல்லாமே செஞ்சு குடுத்துடும். வாசல்ல பன்னீர் சந்தனம்னு சொன்னீகளே அது கூட அவங்களே செஞ்சி போடுவாங்க. இன்னும் ஒருமணிநேரத்துக்குள்ளார  எல்லாத்தையும் வண்டியில கொணாந்து இறக்கி வச்சிருவாக. ஆட்களயும் அவுகளே கூட்டியாந்துருவாக.. பொண்ணுவீட்டு, மாப்பிள்ள வீட்டு சாதிசனத்துக்கு ஒரு சோலியுமில்ல. டென்சன் ஆவாம சந்தோசமா கல்யாணம் அட்டெண்ட் பண்ணுங்க. சொல்லிட்டு ஆர்ச் போடறவன்கிட்ட திரும்பப் போய் கத்திண்டிருக்கான்.

    ஓய் இம்புட்டு நேரம் நீர் இவாள்கிட்ட பேசிண்டிருந்தத நான் கேட்டேன். அந்தப் பிள்ளையாண்டானுக்குதான் வேல சரியாத் தெரியலயே அப்பறம் எதுக்கு கட்டாயப் படுத்தறீர். சொந்தக்காரன்னு நினைச்சு நீர் வேலை குடுத்திருக்கீர். இப்ப உமக்கும் டென்சன். அவனாலயும் வேலை செய்யமுடியல. இதத்தான் முன்ன ‘இழவன்று எருதுண்ட உப்பு’னு பழமொழியா சொல்லுவா. ஒருவேலயப் படிச்சவனுக்கே அந்த வேலயக் குடுக்கணும். எருது உப்பைத் தின்னாலும், அதிக உரமுடையதா உரியவனுக்கு நல்லா உழைக்கும் அதுபோல படிச்சவனும் உழைப்பான் அப்டிங்கறது அதோட அர்த்தம். இனிமேலாவது உம்ம சொந்தக்காரன்னு பாக்காம வேலைய செய்யத் தெரிஞ்சவனுக்கே அந்த வேலையைப் போட்டுக்குடும். அவாளும் சந்தோசமா இருப்பா. நீரும் நிம்மதியா இருக்கலாம்னு சொல்லிட்டுத் திரும்பறச்சே பக்கத்தாத்து கிட்டு அதான் என் பால்ய சினேகிதனப் பாத்தேன். கம்பு ஊனிண்டு நிக்கறான். கொஞ்சநேரம் பழையகதைகளப் பேசலாம். ஆசையோட அவாத்துக்குப் போறேன்.

    Share
  • கடன் (சிறுகதை)

    கடன் (சிறுகதை)

    பாஸ்கர் சேஷாத்ரி

    அப்படி எதிர்க்க திண்ணைல உக்காருங்க தம்பி.

    வேணாம் சார். நிக்கறேன்

    பேரு என்ன சொன்னப்பா

    வாசு

    என்ன படிச்சீங்க

    பிளஸ் டூ பைல் சார்.

    ஏன் மேலே எழுதலயா

    இல்ல, எனக்கு நாட்டம் போச்சு

    இங்க உனக்கு இந்த வீட்ல தான் வேல, எதை சொன்னாலும் செய்யணும்

    சரி சார். சம்பளம் என்னான்னு கணக்காளர் சொல்வாரு

    பின்னாடி சின்ன ரூம் இருக்கு. அங்கே தங்கிக்கோ.

    சரி சார்.

    ஓய்வா இருக்கும்போது என்னவேணா செய்யலாமா?

    ம், என்ன செய்வ

    செடி வளர்ப்பேன் சார். கொஞ்ச நாள் லீவுக்கு கிராமத்துக்குப் போனேன். அப்ப கத்துண்டேன்

    செய்பா

    நான் கொஞ்சம் கவிதை எழுதுவேன்.

    அப்படியா அடி சக்கை. எனக்கும் கண்ணதாசன் பிடிக்கும்

    நான் மில்டன் ரசிகன்

    அவரு யாரு.

    அவரும் பெரிய கவிஞர் சார். இங்கிலீஷ்ல எழுதுவாரு

    என்னப்பா ஏதோ சொல்ற

    ஒண்ணுமில்லை சார். மூணு வருஷம் கான்வன்ட்ல படிச்சேன்.

    அப்ப எப்படிப்பா இந்த வேலைக்கு .

    அதெல்லாம் ஒன்னுமில்ல சார். எல்லா வேலையும் ஒன்னுதான்.

    உனக்கு எப்படி அக்கௌன்ட்ஸ் சாரதியை தெரியும் .

    அவர் பையன் என்னோட கிளாஸ் மேட்.

    அவர் தான் என்னை அடிக்க்ஷன் செண்டர் கூட்டிண்டு போனார்

    உனக்கு இந்த வேலை ரொம்ப சின்னதுன்னு நினைக்கிறேன் .

    இல்ல சார். எனக்கு இது வேணும். எனக்குன்னு ஒரு தண்டனையா பாக்கிறேன். என்னை வருத்திக்க இது ஒரு நல்ல வழியா பாக்கிறேன். எனக்குச் சாப்பாடும் தங்க இடமும் போதும். வேலை கொடுங்க அது போதும்.

    இல்ல தம்பி. எனக்கு உன்கிட்ட வேலை வாங்க நிறைய தயக்கம் இருக்கு.

    நான் உண்மையைப் பேசிட்டேன். எனக்கு வாய்ப்பு இல்லேன்னா நேர்மைக்கு மதிப்பு இல்லைன்னு ஆயிடும்.

    பாத்தியா, இது போல எல்லாம் என்னால் பெரிசா யோசிக்க முடியல. நான் உன்கிட்ட வேலைக்கு வந்தாபோல உணர்வு வருது.

    சார் எனக்கு உண்மை பேசவே பிடிக்கிறது. பொய் எதற்கும் சொல்ல பிடிக்கல. அதனால் தான் என் பழைய கதையைக் கூட சொன்னேன்.

    சரி நாளைலந்து வாப்பா. நீ நல்லவன் தான். ஆனாலும் எதனா சிக்கல் வருமோனு பயமா இருக்கு.

    நீங்க தயங்க வேண்டாம். எனக்கு வாய்ப்பு கொடுங்க.

    சரி. சாரதி கிட்ட சொல்லு . ஒன்னு தெரியுமா? நீ சின்ன பையன். தெரியாது. உன் அப்பா என்னிடம் நிறைய கடன் வாங்கி வட்டிகூட கட்டாம தூக்குல தொங்கினான்.

    எனக்குத் தெரியும் சார். சாரதி அங்கிள் சொன்னாரு.

    அதெப்படிப்பா. என்கிட்டே வாங்கின கடனுக்கு, என்கிட்டே வேலை செஞ்சு, என் கடனை அடைக்கிறது ஒத்து வரலையே?

    இல்ல சார் . நான் எங்கனா வேலை செஞ்சி கடனை அடைக்கிறது ரொம்ப தாமதம் ஆகும். இங்கன இருந்தா நீங்க பிடிச்சிண்டு கொடுக்கலாம்.

    தம்பி நான் பெர்ய நேர்மையெல்லாம் இல்ல. வட்டி வியாபாரம். எனக்குக் குறி வேற.

    இருக்கலாம். கடன் அடஞ்சவுடன் நானும் போயிடுவேன் சார்.

    சரி நான் கிளம்பறேன். சரி சேர்ந்துடு. துணி மணி இருக்கா?

    இருக்கு.

    அரை டிராயர்லாம் போடகூடாது. பஜாருக்குப் போகும்போது யாராவது வட்டிக்குக் கேட்டால் சொல்லிவிடு.

    அதை மட்டும் சொல்லமாட்டேன் சார்.

    Share
  • ஐரோப்பிய நாடுகளில் குடியுரிமை பெறுவது எப்படி? – 2

    ஐரோப்பிய நாடுகளில் குடியுரிமை பெறுவது எப்படி? – 2

    Zoom சந்திப்பு : அண்ணாகண்ணன் 

    குடியுரிமை பெற மிக எளிய வழி எது? தங்கக் கடவுச்சீட்டு (Golden Passport) என்றால் என்ன? இரட்டைக் குடியுரிமை பெற முடியுமா? ஐரோப்பாவில் பிறந்தாலே குடியுரிமை உண்டா? வீடு வாங்குவதன் மூலமாகக் குடியுரிமை பெற முடியுமா?  ஊழியர் ஒருவர், தன்னைச் சார்ந்துள்ளோர் (Dependant) என யார் யாரை அழைக்கலாம்? யாரை அழைக்க இயலாது? ஐரோப்பாவில் எவ்வளவு வருமான வரி கட்ட வேண்டும்? அதிகக் குழந்தைகள் பெற்றவர்களுக்கு அதிகப் பயன்கள் உள்ளன எனில், மக்கள் ஏன் அதிகக் குழந்தைகள் பெறுவதில்லை? இப்படிப் பல கேள்விகளுக்குப் பெல்ஜியத்திலிருந்து மாதவன் இளங்கோ விரிவாகப் பதில் அளித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு ஐரோப்பிய நாடுகளில் குடியுரிமை பெறுவது தொடர்பான உரையாடலின் இந்த இரண்டாம் பகுதியைப் பாருங்கள்.

    ஐரோப்பியக் குடியுரிமை தொடர்பாக உங்களுக்கு ஏதும் கேள்விகள் இருந்தால், பின்னூட்டத்தில் எழுப்புங்கள். மாதவன் இளங்கோ அவற்றுக்குப் பதில் அளிப்பார்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நூற்றாண்டு காணும் காந்தியவாதி, டி. டி. திருமலை

    நூற்றாண்டு காணும் காந்தியவாதி, டி. டி. திருமலை

    தி. விப்ரநாராயணன்

    (டி. டி. திருமலை அவர்களின் மகன்)

    ஒரு கட்டடத்தின் வெளியே வெள்ளை வேட்டியும் வெள்ளை கதர் ஜிப்பாவும் அணிந்துகொண்டு உயரமான, சிவப்பான, அறுபது வயது மதிக்கத்தக்க மனிதர் ஒருவர், அலுவலக சாமான்களின் நடுவே அமர்ந்திருந்தார். அந்தத் தெரு வழியாகப் போகிறவர்கள், வருகிறவர்கள் எல்லோரும் அவரை விசாரிக்கிறார்கள். எல்லோருக்கும் சிரித்துக்கொண்டே “அலுவலகத்தைக் காலி செய்யவேண்டுமென்று கட்டடச் சொந்தக்காரர் பல தடவை சொல்லியும் நான் காலி செய்யவில்லை. அதனால்தான் இந்த நிலை” என்று சொன்னார். இப்படி இரண்டு நாட்கள் வெளியிலேயே இருந்தார். பிறகு அவரின் நண்பர்கள் அந்த இடத்தின் சொந்தக்காரரிடம் பேசி அவர் அலுவலகத்தை அங்குத் தொடர்ந்து நடத்த அனுமதி பெற்றுத் தந்தனர். பிறகு சில நாட்கள் கழித்து,  தக்கர் பாபா வளாகத்திற்கு மாற்றிக்கொண்டார். இவர் வேறு யாருமல்ல. காந்தியவாதி திரு டி. டி. திருமலை அவர்கள்.

    பிறப்பு

    ஸ்ரீவில்லிபுத்தூரில் 1921ஆம் ஆண்டு அக்டோபர் 26ஆம் நாள், தோத்தாத்திரி தெய்வநாயகம்  அய்யங்கார் – ஜானகி அம்மாள் தம்பதிக்கு மூத்த மகனாகப் பிறந்தார்.

    குடும்பப் பின்னணி

    வைணவ வைதீகக் குடும்பம். நிரம்ப சொத்துகள் — தோப்புகள், சொந்த வீடுகள் / அறுவடை காலங்களில் நெல் வண்டிகள் தெரு முழுவதும் நிற்குமாம். தான தர்மங்களுக்கு அள்ளிக் கொடுப்பாராம். இவர் குடும்பம், திருப்பதி ஜீயர் பரம்பரைக் குடும்பம். தோத்தாத்திரி அய்யங்காரைத் தவிர்த்து அவர் மூதாதையர்களுக்கும் திருப்பதி கோவிலுக்கும் தொடர்பு இருந்து வந்திருக்கிறது. நான்கு ஆண்டுகள் கழித்துப் பிறந்ததால் இவரைத் திருமலைப் பட்டு என்றுதான் அழைப்பார்களாம்.

    அதனால்தான் இவருக்கு  ஐந்தாவது வயதில் உபநயனம், திருப்பதியில் நடந்திருக்கிறது.

    இவருடன் கூடப் பிறந்தவர்கள் இரண்டு தங்கைகள். இவர்கள் இவருக்குப் பின் பத்து ஆண்டுகள் கழித்துப் பிறந்தவர்கள். மூத்த தங்கை நடனத்திலும் இசையிலும் சிறந்தவளாக விளங்கினாள். எட்டு வயதிலேயே மேடைகளில் நடனம் ஆடவும் பாட்டுப் பாடவும் தொடங்கிவிட்டாள். அதனால் நடன ஆசிரியர்களும் பிரபல வித்வான்களும் வீட்டிற்கு வந்து தங்குவார்களாம். இருவருக்கும் 14 வயதிலேயே திருமணம் ஆகிவிட்டது

    திருமலையின் கல்வி

    பத்தாம் வயதில்தான் இவர் கல்வி பயிலத் தொடங்கினார். அவ்வூரிலுள்ள இந்து உயர்நிலைப் பள்ளியில் படித்தார். பின் திருநெல்வேலியில் இருக்கும் இந்து கல்லூரியில் நான்கு ஆண்டுகள் படித்தார்.

    ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது காந்தியின்  சத்திய சோதனை நூலைப் படித்து, போட்டியில் பரிசு பெற்றுள்ளார். ஆறாம் வயதில் ராஜபாளையத்திற்குக் காந்தி வந்தபோது, இவருக்கு இவர் அப்பா, கதர்ச் சட்டை அணிவித்தாராம். அதிலிருந்து கதர் தொடக்கமாயிற்றாம்.

    பத்தாம் வகுப்பு படிக்கும்போது நேருவைப் பார்க்க ராஜபாளையம் போனதற்காக, நான்கணா அபராதம் கட்டினாராம். அதனால் பள்ளிப் பிராயத்திலேயே தேசிய உணர்வு அரும்பியிருக்கிறது.

    1942இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் சேர்ந்து, சிறை சென்றிருக்கிறார்; ஆனால் அவர் அப்பா அவரைச் சிறையிலிருந்து அழைத்து வந்துவிட்டார். இருப்பினும் எட்டு மாதம் மறைவாக இருந்து ரகசியமாகத் துண்டு பிரசுரங்களை அச்சடித்து வழங்கியிருக்கிறார்; அதனால் பட்டப் படிப்பு  தடைபட்டது.

    1942ஆம் ஆண்டு பிற்பகுதியில் இவருக்குத் திருமணம் நடைபெற்றது. இவருடைய மனைவியின் பெயர் சீதா. அவ்வூரைச் சேர்ந்தவர். ஒரே தெருவில் வாழ்ந்தவர்கள். இவர்களுக்கு மூன்று மகன்கள், மூன்று மகள்கள் என மொத்தம் ஆறு குழந்தைகள்.

    இதற்குப் பின்  ஸ்ரீவில்லிபுத்தூரில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து,  அக்கட்சியின் தலைவராக இருந்த ரா.கிருஷ்ணசாமி நாயுடு அவர்களின் தலைமையின்கீழ் பணியாற்றிருக்கிறார். அப்பொழுதும் தேசிய உணர்வை மாணவர்களிடையே பரப்ப, பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் சென்றிருக்கிறார்.

    நகராட்சியில் துணைத் தலைவராக ஆறு வருடங்கள்  இருந்து ஊருக்கு வேண்டிய வசதிகளைச் செய்திருக்கிறார். குடிதண்ணீர் வசதிக்காக மந்திரிகளைப் பார்த்து ஆவன செய்திருக்கிறார்.

    கலை இலக்கியம்

    கல்லுரியில் படிக்கும்போது ஆஷாடபூதி என்ற ஆங்கில நாடகத்தில் நடித்து, நீதிபதி மகராஜன் அவர்களின் பாராட்டைப் பெற்றிருக்கிறார். இவரும் பேராசிரியர் அ.சீ.ரா.வும் நண்பர்கள். அ.சீ.ரா., இவருக்கு ஆங்கிலப் பேராசிரியராக இருந்தார். தாமிரபரணி நதிக்கரையில் பாடமும் இலக்கிய விமர்சனமும் நடக்கும். அங்கே மகராஜன் அவர்களும் வருவாராம். இதன் மூலம் திருமலை அவர்களுக்கும் நீதிபதி அவர்களுக்கும் நட்பு ஏற்பட்டிருக்கிறது. இலக்கியத்தில் ஆர்வம் ஏற்படுத்தியவர்கள், இவர்கள் இருவரும் தான். அதன்  விளைவாக ஸ்ரீவில்லிபுத்தூரில் கலை இலக்கியக் கழகம் ஒன்றை நிறுவி அங்குள்ள பெரிய நூலகமான பென்னிங்டன் நூலகத்தில் கூட்டம்  நடத்தினார். மகராஜன் அவர்களின் பங்கு அளப்பரியது. ஊர்மக்கள் இவரது ஆர்வத்தைப் பாராட்டினர். மதிப்பு உயந்தது. மகராஜன் மூலம், ரசிகமணி டி.கே.சி. அவர்களின் உறவு 1946இல் கிடைத்தது. அவரை இலக்கியக் கழகத்தில் பேச வைத்தார். ரசிகமணி அவர்களுக்குத் திருமலை அவர்களிடம் தனி மதிப்பு ஏற்பட்டு, அவர் இறக்கும் வரை தொடர்ந்தது. அவர் நூற்றாண்டு விழாவின்போது ஒரு மலர் தயாரித்து வெளியிட்டார்.

    அ.சீ.ரா. மகராஜன், டி.கே.சி அவர்களின் மூலம்தான் தனக்கு வாழ்க்கையின் பொருள் புரிந்ததாகவும், அவை காந்திஜியைப் புரிந்துகொள்வதற்குப் பெரிதும் உதவின என்றும் சொல்லுவார். மூவரும் இவருக்கு ஆசான்கள்.

    குடும்ப நிலை

    சமுதாயத்தில் மதிப்பு வளர்ந்தது, சொத்துகள் கரைந்தன. எல்லாம் தர்மத்தினால். ஆண்டாள் புத்தகாலயம் என்ற ஒன்றை நடத்தினார். புத்தகங்கள் படிப்பதில் ஆர்வமிக்கவர்கள், இலவசமாகவே புத்தகங்களை எடுத்துச் செல்வார்கள். குடும்பம் நடுத்தெருவிற்கு வந்துவிட்டது. ஆனால் அவரோ அவர் அப்பாவோ அதைப் பற்றி கவலைப்படவில்லை. சந்தோஷமாக ஏற்றுக்கொண்டனர். இப்பண்புதான் எதற்கும் கலங்காத நிலையைக் கற்பித்தது. பிள்ளைகள், மனைவி ஆகியோரை மாமனாரிடம் ஒப்படைத்துவிட்டு வேலை தேடச் சென்றுவிட்டார். 1953இல் இது நடந்தது. பம்பாய் சென்றார்; வேலை கிடைக்கவில்லை, 1944இல் தினமணியில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். 1954 முதல் 1955 வரை பூதான இயக்கத்திலும், 1956-57இல் பாரத் சேவக் சமாஜ அமைப்பாளராகவும் பணியாற்றினார். பின்னர் மதுரை காந்தி நினைவு நிதியில் தத்துவப் பிரசாரக் வேலை பார்த்தார்.

    இந்தக் காலம் பொன்னானது. மதுரையில் காந்தி மன்றம், பள்ளி – கல்லூரிகளில் காந்தியச் சிந்தனை வகுப்புகள் நடத்துவது, மாணவர்களுக்காகப் பயிலரங்கம் – கருத்தரங்கம் நடத்துவது, மாணவர்களுக்குக் காந்தி பற்றிய செய்திகளைச் சொல்லுதல்  முதலியன இவரது பணிகளாக இருந்தன. அதனால் இவரைச் சுற்றி எப்பொழுதும் இளைஞர் படை இருக்கும். அதில் கிடைத்தவர்கள் தான் இவர் வாரிசாக இன்று தொண்டாற்றிவரும் குழந்தைசாமி அவர்களும் அண்ணாமலை அவர்களும். காந்தி ஜயந்தி விழாவில்  சாலமன் பாப்பையா, குமரி அனந்தன், நா. பாலுசாமி, சிற்சபேசன், மேலும் பிரபல கல்லூரிப் பேராசிரியர்கள் காந்தியத் தலைவர்கள் பங்கு கொள்வார்கள்.

    1967-70 காந்தி நூற்றாண்டு விழா, கமிட்டிப் பொறுப்பாளராக இருந்து தென் மாநிலங்களைக் கவனித்தார். அஞ்சல் மூலம் காந்தி  என்ற புதுத் திட்டத்தைத் தொடங்கினார். காந்தி அமைதி நிலையச் செயலாளராக மதுரையிலும் சென்னையிலும் பொறுப்பேற்று காந்திஜியின் வாழ்க்கையயும் தத்துவங்களையும் மாணவர்களிடையேயும் பொதுமக்களிடமும்  எடுத்துரைத்தார்.

    காந்தி அமைதி நிறுவனத்தில் 60 வயது வரை பணியாற்றினார். பின்னர் அப்பொழுது அமைச்சராயிருந்த ஆர்.வெங்கட்ராமன் அவர்களின் அறிவுரையின்படி காந்தி கல்வி நிலையத்தைத் தொடங்கி இறுதி வரை வளர்த்தார்.

    1993இல் ஆகஸ்டு 11 ஆம் நாள் அவர் மறைந்தார்.

    ஜே.கிருஷ்ணமூர்த்தி

    படிப்பு முடிந்ததுமே பிரம்ம ஞான சபையுடன் இவருக்குத் தொடர்பு எற்பட்டது. அந்த நூல்களைப் படிப்பார். ஜே கிருஷ்ணமூர்த்தி அவர்களின் சொற்பொழிவைத் தொடர்ந்து கேட்பார். அவருக்கும் திருமலை அவர்களுக்கும் நட்பு ஏற்பட்டது. அவர் வாழ்த்தினைப் பெற்றார்.

    ஜெயப்பிரகாஷ் நாராயண்

    சர்வோதயத் தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயண் அவர்களின் மீது மிகுந்த மரியாதையும் பக்தியும் உண்டு. அவரை மாணவர்கள் மகாநாட்டிற்கு அழைத்து வந்தார்.

    பொருளாதார நிபுணரும், காந்தியின் சீடருமான ஜே சி குமரப்பா அவர்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

    கிருஷ்ணம்மாள் ஜகன்னாதன், க அருணாசலம், அவினாசலிங்கம் செட்டியார், நா மகாலிங்கம், கே எஸ் சுவாமிநாதன், காகா கலேல்கர் போன்றோரையும் அறிமுகப்படுத்தியுள்ளார். ஆர் ஆர் திவாகர், இவரின் மானசீக குரு.

    காந்திதான் அவருக்கு உயிர், அவரைப் பற்றி எடுத்துச் சொல்வதில் வல்லவர். வீடு வீடாக மதுரையிலும் சென்னையிலும் செல்வார். அப்பொழுது கதரைப் பற்றிப் பேசுவார். காந்திய நூல்களை விற்பார். உடன் அவர் உதவியாளர்கள் வருவர்.

    ஒருமுறை, ஒரு பணக்கார வக்கீலிடம் சென்றிருக்கிறார். அவரிடம் காந்தி என்று தொடங்கினாராம். உடனே அவர் கோபப்பட்டு எழுந்து, ’செல்லுங்கள். நன்கொடை எதுவும் கிடையாது’ என்றாராம். இவர், ‘நீங்கள் நன்கொடை தரவேண்டாம். நான் சொல்வதைக் கேளுங்கள்’ என்றாராம். காந்தியைப் பற்றிப் பேசாது, வாழ்வதன் பயனைப் பற்றிப் பேசினாராம். இவர் பேச்சில் மயங்கி, நூறு ரூபாய் நன்கொடை தந்தாராம்.

    மற்றொரு சம்பவம் ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியரிடம், ‘உங்கள் மாணவர்களிடம் காந்தியைப் பற்றிப் பேச வேண்டும். பேச அனுமதி தாருங்கள்’ என்றாராம்.

    அவர் ’அதெல்லாம் முடியாது’ என்றாராம்.

    பின் ’உங்கள் ஆசிரியர்களுக்காகவாவது’ என்றாராம்.

    அதுவும் ’முடியாது’ என்றாராம்.

    உங்களுக்காகவாவது என்றவுடன் அவர் சிரித்துவிட்டாராம். பின்னர் மாணவர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து பேசச் சொன்னாராம்.

    மக்கள் மனத்தைக் கவர்வதில் சமர்த்தர். எல்லாம் தன்னலத்திற்கில்லை, காந்திக்காக.

    சொற்பொழிவுகள்

    எல்லாத் தரப்பட்ட மனிதர்களிடையேயும் பேசியிருக்கிறார். 45 ஆண்டுகள் சொற்பொழிவு செய்திருக்கிறார். ஆவேசமாகப் பேசுவார், அன்பாகப் பொருள்பட நகைச்சுவையாகப் பேசுவார். இவர் நகைச்சுவையைக் கேட்கவே, மக்களும் மாணவர்களும் இளைஞர்களும் வருவர்.  ரௌத்ரம் பழகு என்பதற்கிணங்க தலைவர்களிடத்தும் தவறுகள் இருந்தால் துணிச்சலுடன் சாடுவார், அவரிடம் பொய்யில்லை. வறுமையிருந்தும் நேர்மையுண்டு. ஆங்கிலத்திலும் நன்றாகப் பேசுவார்.

    திருச்சி, சென்னை வானொலி நிலையங்களில் பேசியிருக்கிறார்.

    அவர் எழுதிய நூல்கள்

    காந்தி என்ற வாழ்க்கை வரலாற்று நூல், பல பதிப்புகள் வந்தன.

    வினோபா, காந்தியின் ஆத்ம நண்பர். இவருக்கும் ஆத்ம நண்பர். அதற்காக அவர் வாழ்க்கை வரலாற்றை எழுதினார்.

    பல இதழ்களில் கட்டுரைகள் வெளிவந்துள்ளன.

    உலக இதய ஒலி என்ற மும்மாத இலக்கிய இதழ் ஒன்றை நடத்தினார். 1970 இலிருந்து 20 ஆண்டுகள் நொண்டி நொண்டி நடந்து வந்தது. அ சீ ரா அவர்களும், மகராஜன் அவர்களும்  ஊக்குவிக்க இவ்விதழ் வெளிவந்தது. அ சீ ராவின் ஒரு நூற்றாண்டுத் தமிழ்க் கவிதை என்ற கட்டுரை இதில் வெளிவந்தது. பின்னர் இது நூலாக வந்தது. மகராஜன், டி கே சி, நா பா, அகிலன், வல்லிக் கண்ணன், ல சண்முகசுந்தரம், துறைவன் மற்றும் பிரபல எழுத்தாளர்களின் கட்டுரைகள் இதில் இடம் பெற்றன.

    இதில் இடம்பெற்றுள்ள தலையங்கங்கள் சிறப்பு வாய்ந்தவை. அவர் நினைவாக அமுத கலசம் என்ற தலையங்கத் தொகுதியைக் காந்தி கல்வி நிலையம் வெளியிட்டது.

    காந்திஜியின் வாழ்வும் வாக்கும், Voice of Gandhiji,  Joy of living  என்ற இதழ்களையும் நடத்திவந்தார்.

    வட்டத்தொட்டி

    ரசிகமணி டிகேசி  வட்டத்தொட்டி  உறுப்பினராக இருந்தார். அங்கு நடக்கும் இலக்கிய விமர்சனங்களை எல்லாம் ரசித்தார்.  உறுப்பினர்கள் அனைவரும் அவருக்கு நண்பர்கள். கல்கி, மீ. ப. சோமு, ராஜாஜி, பி ஸ்ரீ, சுந்தா, போன்ற பிரபலங்களுடைய தொடர்பு கிட்டியது. சென்னையில் அதே வட்டத்தொட்டியை  ஜஸ்டிஸ் மகராஜன் ஆரம்பித்தார். மகராஜன் அவர்களுடன்  இலக்கியம் பற்றி இரவெல்லாம் பேசுவார்.  டி கே சி யின் முதன்மை ரசிகர் ல  சண்முகசுந்தரம் அவர்களுடன் நிகழ்ந்த இலக்கிய உரையாடல் பிரமிக்கத்தக்கதாக இருக்கும்.

    குடும்ப நிலை

    1953இலிருந்து 1980 வரை தடுமாற்றம்தான். ஆனால் அவர் அதைப் பற்றிக் கவலைப்படமாட்டார், ஸ்ரீவில்லிபுத்தூர், மதுரை, சென்னை முதலிய இடங்களில் வாழ்க்கை அவர் மனைவியால்தான் நடைபெற்றது. அவருடைய கொள்கைப் பிடிப்புக்கு உறுதுணையாயிருந்தது அவர் மனைவிதான், விருந்தினர்களை அழைத்து வருவார், பணம் இருக்காது. கடன் வாங்கித்தான் பிழைப்பு நடக்கும். மேலும், பின்தங்கியோரைத் தம் வீட்டில் தங்க வைத்துப் படிக்க வைப்பார். எப்பொழுதும் சிலர் வீட்டிற்குச் சாப்பிட வருவார்கள். எப்பொழுதும் பூஜ்யமாகவே இருக்க வேண்டும் என்பார், சொத்தோ பணமோ சேர்க்கும் எண்ணம் வரக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருப்பார். அவருடைய உதவியாளர்களும் அப்படியே கடைப்பிடித்து வந்தனர்.

    எத்தனையோ குடும்பங்களைச் சேர்த்து வைத்திருக்கிறார். மண முறிவுகளைத் தவிர்த்திருக்கிறார். மன அழுத்தம் உள்ள இளைஞர்கள், பெரியவர்கள் முதலியோருக்கு ஆலோசனை வழங்கிச் சரிசெய்திருக்கிறார்.

    இவர் பணியைப் பாராட்டிச் சமுதாயம் ‘’காந்திய மாமணி‘ ’என்ற பட்டத்தைக் கொடுத்தது. வைணவக் குடும்பத்தில் பிறந்து, ஆச்சார அனுஷ்டானங்களைத் தவிர்த்து, அண்ணல் வழியில் சென்று, ஹரிஜன முன்னேற்றத்திற்காகவும் கதரின் வளர்ச்சிக்காகவும் பாடுபட்ட என் தந்தையார் T. D. திருமலை அவர்களுக்கு இன்றிலிருந்து நூற்றாண்டு விழா தொடங்குகிறது என்பதை  மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    Share
  • பெல்ஜியத்தில் ஒரு தாரகை, அம்ருத சாய்

    பெல்ஜியத்தில் ஒரு தாரகை, அம்ருத சாய்

    Zoom சந்திப்பு: அண்ணாகண்ணன்

    பெல்ஜியத்தில் வாழும் எழுத்தாளர் மாதவன் இளங்கோ – தேவிப்பிரியா தம்பதியரின் மகன் அம்ருத சாய், பல துறைகளில் ஒரு தாரகையாக உருவாகி வருகிறார். 11 வயதுடைய இவர், தமிழ், ஆங்கிலத்துடன் டச்சு மொழியிலும் வல்லவர். அம்ருத பாலி என்ற கற்பனை உலகத்தைப் படைத்து, அதற்கு அரசனாக விளங்குகிறார். இதன் அடிப்படையில், ஆறு பாகங்கள் உள்ள ஒரு பெரிய நாவலை ஆங்கிலத்தில் எழுதி வருகிறார். ஒவ்வொரு நாளும் 100 பக்கங்கள் படித்து வருகிறார். இரண்டு யூடியூப் சானல்களை நடத்தி வருகிறார். கீபோர்டு, பியானோ, மேற்கத்திய இசை ஆகியவற்றைப் பயின்று வருகிறார். கேமிங் விளையாட்டுகளிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார். நிரலாக்க மொழிகளையும் கற்று வருகிறார். இவ்வளவு துறைகளைக் கற்கும் போதும், ஒவ்வொன்றுக்கும் நேரம் ஒதுக்கி, சிறப்பாக மேலாண்மை செய்து வருகிறார். தமிழுக்கும் இந்தியாவுக்கும் பெல்ஜியத்துக்கும் மட்டுமில்லை, உலகிற்கே ஒரு தாரகையாக இவர் உருவாகி வருகிறார். இந்த நேர்காணலில் அம்ருத சாய், தனது பல்வேறு ஆக்கங்களையும் முயற்சிகளையும் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். மழலைக் குரலில் விரியும் அவரது புதிய உலகத்தை இங்கே கண்டு மகிழுங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 17

    கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 17

    -மேகலா இராமமூர்த்தி

    ”இராமனை எளிய மானுடன் என எண்ணவேண்டா” என்று அகம்பனன் சொன்ன அறிவுரையை அகத்திலே கொள்ளாது புறந்தள்ளினான் கரன். அரக்கர் சேனைக்கும் இராமனுக்கும் போர் மூண்டது. கரனின் படைத்தலைவர்கள் ஆவேசமாகப் போரிட்டு மாண்டனர். அடுத்து முத்தலைக் குரிசிலான திரிசிரனின் படையினர் இராமனை அஞ்சாது எதிர்த்து வெஞ்சமர் புரிந்தனர்.

    அழகிய இறகுகளையுடைய குளவி தன்னிடம் அடைக்கலமாய்ச் சேர்ந்த புழுக்களைத் தன் வடிவமாய்ச் செய்யும் தன்மைபோல அருள்வள்ளலான இராமன், அவ் வஞ்சத்து அரக்கரை வளைத்துக் கொண்டு தன்னுடைய சிறந்த அம்புகளின் தூய்மையால் அவர்களைத் தேவராக்கினான்.

    அஞ்சிறை அறுபதம்
         அடைந்த கீடத்தைத்
    தஞ்சு எனத் தன் மயம்
         ஆக்கும் தன்மைபோல்
    வஞ்சகத்து அரக்கரை வளைத்து
         வள்ளல்தான்
    செஞ் சரத் தூய்மையால்,
         தேவர் ஆக்கினான். (கம்ப: கரன்வதைப் படலம் – 3096)

    குளவியால் கொட்டப்பட்டுப் புழுக்களும் குளவியாதல் போல, அரக்கரும் உயர்குணத்தோனான இராமனின் சரத்தால் உயிர்நீத்துத் தேவராயினர் என்று அரக்கர் இறந்துபட்ட நிகழ்வுக்கு ஏற்றந்தந்து சுவைபட விவரிக்கின்றார் கம்பர்.

    அடுத்து இராமனும் திரிசிரனும் நேருக்கு நேர் போர் புரிந்தனர். தான் ஒருவன் போர் செய்தலே இருநூறு பேர் போர் செய்வதுபோலத் தோன்றும்படி பெரும் மாயையின் துணையொடு கடும்போர் செய்த திரிசிரன் எனும் அந்த முத்தலை அரக்கனின் இரு தலைகளை ஒன்றன்பின் ஒன்றாக இராமனின் கணைகள் உருட்டித் தள்ள, மீதமிருந்த ஒரு தலையோடு ஆகாயத்தில் மாயப்போர் புரிந்தான் திரிசிரன்.

    இராமனின் சரங்கள் அவன் தாள்களையும் தோள்களையும் அப்போது துணித்தன. தன் உடலுறுப்புக்களை இழந்தபோதும் திரிசிரனின் போர்வெறி அடங்கவில்லை. தன் வாயினை அகலத்திறந்து இராமனை விழுங்கப் பார்த்தான் அவன். அவ்வேளையில் இராமனின் சரம் அவன் ஒற்றைத் தலையையும் கொய்தெறிந்தது. அதைக்கண்ட அரக்கர் சேனை அச்சங்கொண்டு ஓடத் தொடங்கியது. அதனால் கடுங்கோபம் கொண்ட கரனின் இளவலான தூடணன்,

    ”பழிப்புக்கு இடமான பயத்தை உளத்திலே கொண்டு உயிர்வாழ்கின்ற இழிந்த மனிதரை அழகான வளையணிந்த வனிதையரும் மதியாது பழிப்பர்; மனத் துணிவு எனும் கவசமே நிலையானது; அதுவன்றி அச்சமெனும் குணம் அரிய உயிர்க்குத் துணையாமோ?” என்று அவர்களை நோக்கி இடித்துரைத்தான்.

    வச்சைஆம் எனும் பயம் மனத்துஉண்டு என வாழும்
    கொச்சை மாந்தரைக் கோல்வளை மகளிரும் கூசார்
    நிச்சயம்எனும் கவசம்தான் நிலைநிற்பது அன்றி
    அச்சம்என்னும் ஈது ஆர்உயிர்க்கு அருந் துணை ஆமோ.
    (கம்ப: கரன் வதைப் படலம் – 3113)

    அடுத்து, தூடணனுக்கும் இராமனுக்கும் கடும்போர் நடைபெற்றது. இராமன் எய்த பகழி, தூடணனின் தலையை அவன் உடலிலிருந்து அகற்றியது. அதனைத் தொடர்ந்து இராமனும் கழலணிந்த வீரனாம் கரனும் பொருதனர். இறுதியில் இராமனின் கரம் விடுத்த சரத்தால் கரனும் மரணத்தைச் சந்தித்தான்.

    இராமன் தமியனாய் நின்று அரக்கர் சேனையை முற்றாய் அழித்தமை கண்டு உவகைக் கலுழ்ச்சியுற்றனர் இலக்குவனும் சீதையும்!

    சூர்ப்பனகையின் நிலையோ அதற்கு நேர்மாறாயிருந்தது. அவள் தம் சோதரர்கள் போரில் அழிந்துபட்டதைக் கண்டு துடித்தாள்; வயிற்றிலடித்துக் கொண்டு கண்ணீர் வடித்தாள்.

    ”இராமன் மீது நான்கொண்ட ஆசை என் மூக்கோடு முடியவில்லை; என் வாக்கினால் உங்கள் வாழ்க்கையையும் அல்லவா போக்கினேன்? பாவியேன் நான்!” என்று மாண்டுகிடந்த சோதரர்களின் உடலங்களைக் கண்டு புலம்பியவள், நிகழ்ந்தவற்றை அறிவிக்க இராவணனைத் தேடிச்சென்றாள்.

    ஆக்கினேன் மனத்து ஆசை அவ்ஆசை என்
    மூக்கினோடு முடிய முடிந்திலேன்
    வாக்கினால் உங்கள் வாழ்வையும் நாளையும்
    போக்கினேன் கொடியேன் என்று போயினாள்.
    (கம்ப: கரன்வதைப் படலம் – 3162)

    இனிதான் நாம் இராமாயணத்தின் எதிர்நிலைத் தலைவனும் இணையற்ற பெருவீரனுமான இராவணனை இராமகாதையில் சந்திக்கப் போகின்றோம்!

    இலங்கை அரண்மனையில் தேவதச்சனான விசுவகர்மா தன் சிற்ப நூலறிவு அனைத்தும் சிறப்பாய்ப் புலப்படும் வகையில் அமைத்த ஒப்பற்ற மணிமண்டபத்தில் இராவணன் கம்பீரமாய் வீற்றிருக்கின்றான்.

    தேவர்களுள் புலியின் தோலை உடுத்த சிவனும், பொன்னாடை புனைந்த திருமாலும், பூவில் தோன்றிய பிரமனும்கூட இராவணனை வெல்லும் ஆற்றல் பெற்றவர் அல்லர்; தேவரின் நிலையே ஈதெனில் பிறரின் நிலைகுறித்து நவிலவும் வேண்டுமோ? சிறுத்த இடையும் பருத்த முலையும் மூங்கிலிளந்தோள்களும் செவ்வரி ஓடிய கண்களும் கொண்டு ஆடவரை அழகால் வெல்லும் மாதராரின் நெடிய ஊடலைத் தீர்க்கும்பொருட்டுக்கூட வணங்காத முடியை உடையவன் இராவணன் என்று அவனுடைய வீரத்தையும் மிடுக்கான இயல்பையும் பாங்குற ஒரு பாட்டில் விளக்குகின்றார் கம்பர்.

    புலியின் அதள் உடையானும் பொன்னாடை
         புனைந்தானும் பூவினானும்
    நலியும் வலத்தார் அல்லர் தேவரின் இங்கு
         யாவர் இனி நாட்டல் ஆவார்
    மெலியும் இடை தடிக்கும் முலை வேய் இளந்
    தோள் சேயரிக் கண் வென்றி மாதர்
    வலிய நெடும் புலவியினும் வணங்காத
         மகுட நிரை வயங்க மன்னோ. (கம்ப: மாரீசன் வதைப் படலம் – 3166)

    ஊடற்காலத்து, தம் மனைவியரின் ஊடலைத் தணிக்க ஆடவர்கள் அவர்களிடம் பணிந்து நடந்துகொள்ளுதல் பிழையில்லை என்பது தொல்காப்பியப் பொருளதிகாரம் உரைக்கும் பொருள்பொதிந்த கருத்து.

    மனைவி உயர்வுங் கிழவோன் பணிவும்
    நினையுங் காலைப் புலவியுள் உரிய.
    (தொல்: பொருளியல் – 223)

    ஆனால் இராவணனோ ஊடற்காலத்தில்கூடத் தம் உரிமை மகளிரிடம் அடிபணிந்து நடந்துகொள்ள மாட்டான் என்று கம்பர் குறிப்பிடுவதன் வாயிலாய் எப்படிப்பட்ட சூழலிலும் யாரிடமும் அவன் தலைவணங்க விரும்புவதில்லை எனும் அவனது உறுதியான உளஇயல்பை நாம் தெளிவாய் உணர்ந்துகொள்ள முடிகின்றது.

    இராவணனின் எழிலார் மணிமண்டபத்தில் தும்புரு எனும் வீணை வல்லானும், நாரத முனிவனும் வீணை மீட்டி இராவணனின் புகழை ஓதி அவனை மகிழ்வித்துக்கொண்டிருக்க, சுந்தர வடிவுகொண்ட அந்தரமகளிரும் அங்கே பணிப்பெண்களாய்த் தொண்டுபுரிந்துகொண்டிருக்க, மாந்தர்தம் உயிரைக் கவரும் கணிச்சிக் கூர்ம்படை கடுந்திறலானான எமனும் தன் சூலாயுதத்தைத் துறந்து, மேலாடையால் வாய்பொத்தி, பேரிகைகள் முழங்கும் நேரத்திலெல்லாம் நாழிகைக் கணக்கை அளவிட்டு இராவணனிடம் உரைத்துக் கொண்டிருந்தான்.

    இப்படித் தேவர்களெல்லாரும் இராவணனுக்கு ஏவலராய் அவன் அரண்மனையில் சேவகம் செய்துகொண்டிருந்த வேளையில், மூன்றுலகாளும் இராவணனின் தங்கையான சூர்ப்பனகை, மூக்கறுந்த கோலத்துடனும் அழுகை ஓலத்துடனும் அரண்மனையின் வடக்கு வாயிலில் வந்து தோன்றினாள்.

    அவளின் நிலைகண்ட இலங்கை மக்கள் காரணமறியாது கலங்க, விரைந்து அரண்மனைக்குள் நுழைந்தவள், குன்றின் அடியில் வந்துபடிந்த கருமேகமென இராவணனின் காலடியில் வீழ்ந்து புரண்டாள்.

    [தொடரும்]

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.
    2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
    3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.
    4. கம்பனில் மக்கள் குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17

     

    Share
  • கேதார கெளரி விரதம் உணர்த்தும் வாழ்வியல் தத்துவம்

    கேதார கெளரி விரதம் உணர்த்தும் வாழ்வியல் தத்துவம்

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, 
    மெல்பேண்,  ஆஸ்திரேலியா

    விரதம் என்றால் என்ன? பசித்திருப்பது.  தனித்திருப்பது, விழித்திருப்பது. அதே வேளை மனத்தை ஒரு நிலைப்படுத்தி ஒரே நோக்கோடு இருப்பது. இரண்டுமே வாழ்வில் நன்மைக்கு வழிவகுக்கும் என்பதால் இரண்டுமே பொருந்தும்.

    விரதங்கள் என்று பார்க்கும் பொழுது எங்கள் சமயமானது நாளுக்கான விரதம். வாரத்துக்கான விரதம், மாதத்துக்கான விரதம் என்று வருடம் முழுவதுக்குமே விரதங்கள் பல அமையுமாறு வழி வகுத்து விட்டிருக்கிறது. வருடம் முழுவதும் தெய்வீக சிந்தனையுடன் மனத்தை வைத்திருக்க வேண்டும் என்பதுதான் இதன் அடிப்படை எனலாம்.

    இன்பமும் துன்பமும் கலந்ததுதான் இந்த உலக வாழ்க்கையாகும். நம்முடைய முன்வினைப் பயன்களே இன்பத்துக்கும் துன்பத்துக்கும் காரணமாய் அமைகிறது என்பதுதான் சமயத்தின் நிலையாகும். இப்படியான வினைகளிலிருந்து விடுபட்டு இன்பங்களைப் பெருக்கிக்கொள்ள அமைந்த வழிதான் விரதங்கள் எனலாம்.

    இறைவனை எப்பொழுதுமே சிந்தையில் நிறுத்திக் கொள்ளுவது என்பது ஞானிகளுக்கு எளிதானதாகும். இல்லறத்தில் ஈடுபட்டு வாழ்ந்து கொண்டு இருப்பவர்களுக்கு இது அவ்வளவு எளிதன்று. எனவேதான் ஒரு குறிப்பிட்ட நாட்களை நிர்ணயித்துக் காட்டிய பாதைதான் விரதங்களாக வந்து அமைந்திருக்கின்றன என்பது மனமிருத்த வேண்டிய கருத்தெனலாம்.

    சிவனைக் குறிக்க கார்த்திகைச் சோமவார விரதம் , கார்த்திகை உமா மகேஸ்வர விரதம், மார்கழி திருவாதிரை விரதம், தைமாத சூல விரதம், மாசிமாத மகா சிவராத்திரி விரதம், பங்குனி உத்தரத் திருக்கல்யாண விரதம், வைகாசிமாத அஷ்டமி ரிஷப விரதம், ஐப்பசி மாத கேதார கெளரி விரதம் என்று வகுக்கப்பட்டிருக்கிறது. நவராத்திரி நிறைவு பெறும் விஜயதசமி அன்று கேதார கெளரி விரதம் ஆரம்பமாகி இருபத்தொரு நாட்கள் அனுடிக்கப்பட்டு வருகிறது. நவராத்திரி நிறைவில் ஆரம்பித்து தீபாவளி அன்று இவ்விரதம் நிறைவுறுகிறது. நவராத்திரியில் பெண்மை போற்றப்படுகிறது. கெளரவிரதத்திலும் பெண்மை போற்றப்படுகிறது. தீபாவளிக்கும் அடிப்படையின் பெண்மையான சக்தி என்பதும் நோக்கத்தக்கதேயாகும். மூன்றுமே சக்தியுடன் இணைந்து பெண்மைக்கு, தாய்மைக்கு முக்கியத்தைக் கொடுக்கிறது என்பது வாழ்வியலுடன் இணைகிறது அல்லவா?

    சிவனும் பார்வதியும் கயிலாயத்தில் இருக்கும் பொழுது தரிசனம் செய்வதற்கு பிருங்கு முனிவர் அங்கு வருகிறார். வந்தவர் சிவனை மட்டுமே வலம்வந்து வணங்கி நிற்கிறார். பிருங்கு முனிவர் சிவனைமட்டுமே வணங்கியது எதற்காக என்று பார்வதி, சிவனிடம் வினவுகிறார். உலகத்தின் இயக்கத்தையே உணர்ந்த சிவன், பார்வதியின் உள்ளக் கிடக்கையினை அவரின் வினாவினால் உணந்துகொண்டார். அன்பும் சிவமும் இரண்டல்ல ஒன்றேதான் என்பது போல – “சிவனும் சக்தியும் இரண்டல்ல ஒன்றேதான்” என்று எண்ணினார். இறைவன் நினைப்பு பார்வதிதேவியிடம் பதிந்தது. பார்வதி தேவியார் இறைவனைக் குறித்து இருபத்தொரு நாட்கள் விரதம் இருந்தார். பார்வதியின் விரதத்தைக் கண்ணுற்ற சிவன் அவர்முன் தோன்றி “உனக்கு வேண்டியதைக் கேள்” என்றார்.  “இந்த உலகில் ஆண்களும் பெண்களும் சமம் என்பதை உணர்த்த, உலகின் முதல்வனான நீங்கள் உங்களில் பாதியை எனக்குத் தரவேண்டும்”  என்று வேண்டிக்கொண்டார். இறைவனும் தன்னுடம்பில் பாதியை அன்னை பார்வதிக்கு கொடுத்து “சிவனும் சக்தியும் ஒன்றே” என்னும் நிலையினை ஆக்கினார்.

    இங்கே கேதார கெளரி விரதம் பற்றிய நிலை கதைவடிவில் புராணமாய் வழங்கி வருகிறது. இங்கே சிறந்ததோர் வாழ்வியல் தத்துவம் வெளிப்பட்டு நிற்பதுதான் மிகவும் முக்கியம் எனலாம்.

    மனித வாழ்வில் இல்லற வாழ்க்கை என்பது அன்பின் அடிப்படையில் அமைதல் மிக மிக அவசியமாகும். அன்பு என்பதுதான் இல்லறத்தின் ஆணி வேராகும்.அன்பு மலரும் இல்லறம்தான் நல்லறமாக மலரமுடியும். பெண்கள் என்பவர்கள் சக்தியின் வடிவமாவர். ஆணுக்கு வாழ்க்கையில் அருந்துணையே பெண்தான். இதனால்த்தான் வள்ளுவம் “வாழ்க்கைத்துணை” என்னும் தேடற்கரிய பெயரினைச் சூட்டியது எனலாம். வாழ்க்கையின் துணையான பெண்தான் இல்லறத்தின் உயிர்நாடியாகிறாள். அந்தப் பெண்மைக்கு முக்கியத்துவம் நல்குவதுதான் “கேதார கெளரி விரதம்” ஆகும்.

    சுமங்கலியாய் வாழ்வதையே இல்லறத்தில் இருக்கும் எல்லாப் பெண்களும் பெருமையாய் பெருவரமாய் எண்ணுகிறார்கள். அந்தப் பெருவரத்தை அவர்களுக்குப் பெற்றுத்தரும் விரதமாக “கேதார கெளரி விரதம்” அமைவதுதான் வாழ்வியலின் மிகச்சிறந்த நிலை எனலாம்.

    ஜோதிடவியல் வழியில் சூரியனும் சந்திரனும் மிகவும் முக்கியமான கிரகங்களாகும். இரண்டுமே மனித வாழ்வியலோடு இணைந்தே நிற்கின்றன.

    சூரியனை தந்தைக் கிரகமென்றும் சந்திரனை தாய்க்கிரகமென்றும், சூரியனுக்கு உரிய தேவதையாக பரமேஸ்வரனையும் சந்திரனுக்குரிய தேவதையாக கெளரியையும் காட்டும் நிலை ஜோதிடத்தில் இருக்கிறது.

    கேதார கெளரி விரதம் இடம்பெறும் காலத்தில் சூரியன் தனது வலிமையை இழந்து காணப்படுகிறது. அவ்வேளை சந்திரன் இணையும் நிலையில் அதாவது  அமைவாசையில் நல்லதொரு சங்கமம் நிகழ்கிறது. தந்தையான சூரியனும் தாயான சந்திரனும் இணையும் காலம் கேதார கெளைரி விரதம் பூர்த்தியாகும் நாளாக அமைவதும் “ஆணான சிவனும் பெண்ணான பார்வதியும்” இணைவதும் மிகவும் பொருத்தமாய் அமைகிறது என்று ஜோதிட நிலை காட்டுகிறது.

    எந்த நிலையில் பார்த்தாலும் ஆணும் பெண்ணும் இணையும் அற்புத நிகழ்வு கேதார கெளரி விரதத்தின் வாழ்வியல் முறை என்றே எடுத்துக் கொள்ளலாம்.

    இல்லறத்தின் உயிர்நாடியே இந்த இணைப்பு அல்லவா? அந்த இணைப்பை நல்கிடும் “கேதார கெளரி விரதம்” நல்லதோர் வாழ்வியல் தத்துவமாக மலர்ந்து நிற்கிறது மனங்கொள்ளத்தக்கதாகும்.

    மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
    எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலைக்
    கண்ணில் நல்லஃதுறுங் கழுமல வளநகர்ப்
    பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே

    Share
  • உலகளாவிய தமிழிலக்கிய வரலாற்றில் ஒரு மைல்கல்

    உலகளாவிய தமிழிலக்கிய வரலாற்றில் ஒரு மைல்கல்

    சங்கரி

    சிங்கப்பூரைச் சேர்ந்த எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் அவர்களின் முன்னெடுப்பில், UNWINDING and other Contemporary Tamil Short stories என்ற 474 பக்கங்கள் கொண்ட பெருந்தொகுப்பு 43 சமகாலத் தமிழ்ச் சிறுகதைகளைக் கொண்டதாக 2019 ஜூலை மாதத்தில் எமரால்டு பதிப்பகத்தாரால் பிரசுரிக்கப் பெற்றது.

    இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, ஃபிரான்ஸ், பிரிட்டன், ச்றிலங்கா ஆகிய 10 நாடுகளிலிருந்து அ. முத்துலிங்கம், இரா. முருகன், மாலன், நாகூர் ரூமி, சித்ரன், சத்யானந்தன், சத்யராஜ்குமார் உள்ளிட்டோரின்  37 படைப்பாளிகளின் ஆக்கங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. சிலருடைய, ஒன்றுக்கு மேற்பட்ட கதைகள் கொண்ட இந்நூலுக்குத் தொகுப்பாசிரியர் ஜெயந்தி சங்கர் மட்டுமின்றி வேறு மொழிபெயர்ப்பாளர்கள் சிலரும் மொழியாக்கத்தில் பங்காற்றியுள்ளனர்.

    தமிழில் ஏராளமான அரிய படைப்பாளிகளிடமிருந்து சிறந்த படைப்புகள் வந்தபடியேதான் இருக்கின்றன. பிற மொழி, இன வாசகர்கள், தமிழ்ச் சிறுகதை உலகில் நிலவி வரும் போக்குகள் குறித்துச் சரியாக அறியவில்லை. அவ்வளவு ஏன், தமிழரில் கூட தமிழில் வாசிக்காமல் ஆங்கிலத்தில் வாசிப்பவர் நிறையப் பேர் இருக்கிறார்கள், அல்லவா? தேர்ந்தெடுக்கப்பெற்ற தமிழ்ச் சிறுகதைகள் ஆங்கிலத்தில் முன்னரும் சில தடவைகள் தொகுப்பாகப்  பிரசுரம் கண்டுள்ளன. எனினும், திரும்பத் திரும்பத் தமிழகத்தைச் சேர்ந்த முன்னோடிப் படைப்பாளிகள் சிலரின் ஆக்கங்கள் மட்டுமே இடம்பெற்று வந்துள்ளன. இதன் காரணமாக ஒருவித இடைவெளி எப்போதுமே நிலவி வந்துள்ளது. தமிழ் வாசிக்காத தமிழர்களாகட்டும் பிற மொழியினராகட்டும் திரும்பத் திரும்ப அதே பத்திருபது பேர் தான் தமிழில் சமகாலத்தில் எழுதி வருகிறார்கள் என்பது போன்ற புரிதலுக்கு வழிவகுத்து வந்ததாகப் பல்லாண்டுகளுக்கு முன்னர் ஜெயந்தி சங்கர் உணர்ந்தார். அதன் நீட்சியாகவே இந்நூல் பிறந்துள்ளது. இதுபோன்ற தொகுப்பு முயற்சிகள், அந்த மாதிரியான இடைவெளிகளை இட்டு நிரப்ப வல்லவை.  அவ்வகையில் இந்நூல் ஒரு முன்னோடி எனலாம். இந்தப் புத்தகத்துக்காக, ஒருநூறு பதிப்பாளர்களையாவது ஜெயந்தி சங்கர் அணுகியிருப்பார். இதனைப் பதிப்பித்த எமரால்டு பதிப்பகத்தார் பாராட்டுக்கு உரியவர்கள்.

    வயது, நாடு, அனுபவம் போன்றவற்றைக் கடந்து. புதிதாக எழுதத் தொடங்கியவர்களின் சிறுகதைகளும் தொகுப்புக்காக பரிசீலிக்கப்பட்டன.

    இந்த நூல் நான்காண்டுக் கால முழு உழைப்பைக் கோரியுள்ளது. உலகளாவிய நவீன தமிழிலக்கிய மொழியாக்க நூல் வரலாற்றில் இந்நூல் ஒரு மைல்கல் என்று நாம் துணிந்து கூறலாம்.

    2010ஆம் ஆண்டு வாக்கில் இந்தத் தொகுப்பு நூல் திட்டத்தைப் பற்றி தொகுப்பாசிரியர், எழுத்தாளர் பாவண்ணன் அவர்களிடம் பேசினார். பதிப்பாளர் முடிவாகாமல் இது போன்ற வேலையைத் தொடங்காமல் இருப்பதே நல்லது என்று ஆத்மார்த்தமாக அவர் அறிவுறுத்தியதை அடுத்து இத்திட்டத்தை அப்படியே நிறுத்தி வைத்துள்ளார்.

    தனது இலக்கிய நோக்கத்தைக் குறித்துப் புரிந்துகொண்டவர்களையும், அதற்குத் தங்கள் வசதிக்கேற்பவும் அறிவுக்கேற்பவும் அர்த்தங்கள் கற்பித்தவர்களும் என்று பலரையும் அறிந்து கொள்ள முடிந்திருக்கிறது.  உப்புப் பெறாத  காரணங்களுக்காக இறுதிக் கட்டத்தில் மூன்று பேர் தங்களது படைப்புகளைத் திரும்பப் பெற்றுக் கொண்டனர்.

    தமிழ்ச் சிறுகதை மரபின் நூற்றாண்டுக் காலக் கொண்டாட்டத்தை ஒட்டி இந்நூல் பிரசுரம் காணும் என்று திட்டமிட்டு மீண்டும் 2016இல் இதனைக் கையில் எடுத்தார். அப்போதுதான் உலகளாவிய தொகுப்புநூல் என்று விவரித்ததை அடுத்து, மாலன் அவர்கள் மேலும் சிலரைப் பரிந்துரைத்தார். தம் கதையைத் தாமே மொழியாக்கம் செய்தளித்தார். ஏழெட்டு நாடுகளிலிருந்து சிறுகதைகள் என்றிருந்த திட்டம், பதினொரு நாடுகளிலிருந்து சிறுகதைகள் என்ற நிலைக்கு வளர்ந்தது. ஆனால், ஒருவரது சிறுகதை, ஆங்கிலத்துக்குக் கொண்டு வரக்கூடியதாக இருக்கவில்லை. ஆகவே, 10 நாடுகளிலிருந்து சிறுகதைகள் தொகுக்கப்பட்டன.

    நீங்கள் ஒருவரே மொழியாக்கம் செய்வது மிகப் பெரிய பணி, மேலும் மொழிபெயர்ப்பாளர்களின் பங்களிப்பு உங்கள் வேலைப் பளுவை குறைக்கும் என்று அக்கறையோடு அறிவுறுத்தினார் எழுத்தாளர் சத்யானந்தன். அதற்கேற்ப படைப்பாளிகள் சிலர்,  தாங்களே மொழியாக்கம் செய்தனர். இன்னும் சிலர் தங்களுக்கு நன்றாகத் தெரிந்த மொழிபெயர்ப்பாளர்களைக் கொண்டு மொழியாக்கம் செய்தளித்தார். மூலப் பிரதியையும் மொழியாக்கத்தை ஒப்பிட்டுச் சரிபார்த்து, தொடர்ந்து படைப்பாளியோடு மின்னஞ்சலில் உரையாடி, பிரதியைச் சீர்ப்படுத்துவதில் ஈராண்டுகள் உருண்டன.

    உரிய பதிப்பாளர் தேடவே ஈராண்டுகளுக்குப் போராடினார் ஜெயந்தி சங்கர். சிக்ஸ்த்  சென்ஸ் பதிப்பகத்தில் இளைஞர் கார்த்திகேயன் முதலில் தொகுப்பின் மதிப்புணர்ந்து தானே வெளியிடமுடியுமா என்று யோசித்து, கிட்டத்தட்ட ஓராண்டுக் காலம் ஓடியது. டாக்டர் ரூமி அவர்கள்தான் தமது சிறுகதை மொழியாக்கம் செய்து கொடுத்ததோடு கார்த்திகேயனிடம் அறிமுகமும் செய்து வைத்தார். சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பகத்தின் கார்த்திகேயன், தனிப்பட்ட விஷயங்களுக்காகத் தமது பதிப்புப் பணியைச் சற்றே தாமதிக்க எண்ணியதால், அவரே எமரால்ட் பதிப்பகத்தின் ஒளிவண்ணன் அவர்களிடம் தொகுப்பைப் பரிந்துரைத்தார். அவ்வகையில் கார்த்திகேயனுக்கு இந்நூல் மிகக் கடமைப்பட்டுள்ளது.

    நூலாசிரியர் குறிப்பு:

    2015 முதல் முழுவீச்சில் ஆங்கிலத்தில் புனைவுகள் எழுதிவரும் ஜெயந்தி சங்கர் தற்போது ஆங்கிலத்தில் தனது முதல் நாவலை வெளியிட்டுள்ள நிலையில் இரண்டாவது ஆங்கில நாவலுக்கான பணியையும் தொடங்கிவிட்டார். தனது Dangling Gandhi என்ற இவரது ஆங்கிலச் சிறுகதைத் தொகுப்பில்  ஆங்கிலச் சிறுகதைகளைச் சங்கரி என்ற தனது இல்லப்பெயரில் தானே மொழியாக்கம் செய்துள்ளார்.  இந்த மொழியாக்க நூல், இனிமேல் தான் அச்சாகவிருக்கின்றது. இதுவரை பல்வேறு விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பெற்றுள்ள Dangling Gandhi நூல், American book fest வழங்கும் 2020 International Book Award, Literary Titan award ஆகிய அனைத்துலக விருதுகளையும் வென்றுள்ளது. இவரது ஆக்கங்கள் வேற்றுமொழியில், குறிப்பாக ஆங்கிலம், ரஷ்யம், இந்தி, ஃபிரெஞ்சில் மொழிபெயர்ப்பு கண்டு வருகின்றன. ஆனந்தவிகடன் நம்பிக்கை விருது உள்ளிட்ட பல்வேறு பரிசுகளும் முக்கிய விருதுகளும் பெற்றுள்ள இவரது ஒவ்வொரு நூலும் ஏதோவொரு வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது. அண்மைக் காலமாக ஓவிய முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார். 1995 முதலே இலக்கியவுலகில் தொடர்ந்து இயங்கி வருகிறார்.

    Share
  • அக இலக்கியச் சிறுபாத்திரங்கள் – 19 (பாகன்)

    அக இலக்கியச் சிறுபாத்திரங்கள் – 19 (பாகன்)

    ச. கண்மணி கணேசன் (ப.நி.),
    முன்னாள் முதல்வர் & தமிழ்த்துறைத் தலைவர்,
    ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி.

    முன்னுரை 

    தலைவன் வேண்டும் இடமெங்கும் அவனை அழைத்துச் செல்லும் தேர்ப்பாகன்  அகப்பாடல்களில் நேரில் இடம்  பெறும் பாத்திரம் ஆவான்.  பாகனுக்குக் கூற்று நிகழ்த்தும் தகுதியை அகஇலக்கணம் வழங்கவில்லை ஆயினும்;  அவனிடம் பேசும் பாத்திரங்கள் பலர். பாகன் பேசியதாகப் பிற பாத்திரம் கூறும் ஒரே ஒரு பாடல் உள்ளது.

    பாகனே வலவன்

    பாகன் வலவன் என்றும் அழைக்கப்படுகிறான். வேகமாகக் குதிரையைச் செலுத்துவாயாக என்னும் பொருள்பட;

    “கடுமா கடவுமதி பாக” (குறுந்.- 250)

    எனத் தலைவியை விரைந்து காணவேண்டும் என்ற அவாவினால் தலைவன் உரைக்கிறான். அதே அவாவினால்;

    “ஏமதி வலவ தேரே” (நற்.- 21; ஐங்.- 485)

    என்றும் ஏவுகிறான்.

    பாகனைச் சுட்டிப் பேசுவோர்

    தலைவன், தோழி, தலைவி, காமக்கிழத்தி ஆகியோர் கூற்றில்  பாகன் இடம் பெறுகிறான்.

    தோழி கூற்று

    கணவன் பிரிந்து சென்றுள்ளானே என்று மனமழிந்த தலைவியைத் தேற்றும் தோழி ‘காட்டில் இன்துணை இரலை மடப்பிணை கண்டவுடன் உன்னை நினைத்துத் தேரைத் திருப்பச் சொல்லிப் பாகனை ஏவி வந்து விடுவான்’ என்கிறாள் (அகம்.- 74). மான் இணை தலைவனுக்குத் தலைவியின் நினைப்பைக் கொடுக்க ஏதுவாக அமையுமென்கிறாள்.

    இயற்கைப் புணர்ச்சிக்குப் பின்னர் பிரிந்து செல்லும் தலைவனிடம் ‘நீ மீண்டு வருவதற்குள் இவள் இறந்து விடுவாள்; ஆதலால் உடன் மணம் புரிந்து கொள்ள ஏற்பாடு செய்’ எனச் சூழ்நிலையை அறிவுறுத்தும் போது;

    “இனமணி நெடுந்தேர் பாகன் இயக்கச் செலீஇய” (நற்.- 19)

    என்று பாகனை வைத்து ஓட்டும் பெரிய தேரோடு செல்வம் மிகுந்தவனாக இருப்பதைக் குறிப்பாகத் தலைவனிடம் வலியுறுத்துகிறாள்.

    களவுக்காலத்தில் தலைவன் தலைவியைச் சந்திக்க வரும்போது  தோழி; ‘உன் பாகனோடு சேர்ந்து எம் ஊரில் இரவுப் பொழுதில் தங்கி விருந்தயர்க’ என்கிறாள் (அகம்.- 340) இரவுக்குறியில் யாருமறியா வண்ணம் ஓசையின்றித் தேரில் வந்த தலைவன் இப்போது மணிக்குரல் கேட்கப் பாகன் ஓட்டும் தேரில் வருவதால் அவன் மணந்து கொள்ள வருகிறான் என்பது திண்ணம் என்கிறாள் தோழி (நற்.- 78). செவிலியிடம் அறத்தொடு நிற்கும் போதும் (அகம்.- 190); அன்னை காவல் கொண்ட காரணத்தைக் கூறும் போதும் (அகம்.- 20); ஊரலர் எழுவது திண்ணம் என்று உரைக்கும் போதும் (குறுந்.- 311) பாகன் ஓட்டிய தேர் தோழியால்  காரணமாகக் கூறப்படுகிறது.

    தலைவன் கூற்று

    கற்பு வாழ்க்கையில் கால உணர்வோடு தன் மனைவியைச் சேர வேண்டும் என நினைக்கும் தலைவன் தேரோட்டியை விரையச் சொல்கிறான் (ஐங்.- 482, 483, 484; அகம்.- 204, 224, 244).

    “செல்க பாகநின் செய்வினை நெடுந்தேர்” (நற்.- 221)

    என்று துரிதப்படுத்துகிறான். தூங்கிக் கொண்டிருக்கும் புதல்வன் அருகில் இருந்து கொண்டு; தன்னைப் பார்த்தவுடன் மகன் அழைப்பதைப் போல ‘வந்தீக எந்தை’ என்று குரல் கொடுக்கும் மனைவியின் அழகை ரசிக்க விரும்புவதாகக் காரணமும் கூறுகிறான். பாகன் விரைந்து தேரைச்  செலுத்தினால் தலைவியின் நெற்றிப் பசப்பு நீங்கிவிடும் என்கிறான் (அகம்.- 354). போகும் வழியில் தேரின் வேகம் கண்டு இரிந்தோடிய மான்கூட்டத்தில் தன் குட்டியோடு களரின்கண் சென்ற பிணைமானைத் தேடும் கலைமானைப் பாகனுக்குக் காட்டித் தன் தவிப்பைக்  குறிப்பாகப் புலப்படுத்துகிறான் (நற்.- 242).

    தலைவி கூற்று

    புறத்தொழுகும் தலைவனைப் பிற மகளிரின் இருப்பிடத்திற்குத் தேரில் ஏற்றிச் செல்வதால் கோபம் கொள்ளும் தலைவி;

    “வேட்டோர் திறத்து விரும்பிய நின் பாகனும்
    நீட்டித்தாய் என்று கடாஅம் கடுந்திண்டேர்” (கலி.- 66)

    எனத் தலைவனோடு பாகனையும் சேர்த்துச் சாடுகிறாள். ‘உன் விருப்பத்திற்கு உரிய பெண்களிடம் நீ செல்வதைப் பாகனும் விரும்பியதால்;  தேரை இங்கே நீண்ட நேரம் நிறுத்தாமல் செலுத்துவதற்கே  ஆயத்தமாகிறான்’ என்று குறைப்பட்டுக் கொள்ளும் தலைவியின் மேல் இரக்கம் தான் பிறக்கிறது.

    பரத்தையின் இல்லம் நாடிச் சென்று கொண்டிருந்த தன் கணவனின் தேரை  வழிமறித்த தளர்நடைப் புதல்வனைக் கண்டவுடன்; ‘நிறுத்து பாகனே’ என்று சொல்லி இறங்கி மகனைத் தழுவிக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தான்  கணவன் என மகிழ்ந்துரைக்கிறாள் தலைவி (அகம்.- 66).

    காமக்கிழத்தி கூற்று

    புறத்தொழுகும் தலைவன் பிற மகளிரோடு  இன்புறத் துணை செய்பவன் என்னும் பழி பாகன் மேலும் விழுகிறது. பாணனை வசைபாடும் போது பாகனும் வசை பெறுகிறான். தலைவன் எந்தப் பெண்ணைத் தேடிச் சென்று இருக்கிறான் என்று அறிய; சேரிதோறும் சென்று வினவித் துன்புறும் காமக்கிழத்தி;

    “தேரோடு திரிதரும் பாகனைப் பழிப்பேமோ”  (கலி.- 68)

    என்று தன் இயலாமையை வெளிப்படுத்துகிறாள்.

    பாகன் பேசியமை 

    ஒரே ஒரு பாடலில் பாகன் பேசியதாகக் காமக்கிழத்தி கூறுகிறாள். தலைவன்  மணம் செய்யும் மனை என்று கருதிக் காமக்கிழத்தி மனையில் புகுந்து ‘பொலிக’ என்று ஆரவாரித்தான் பாகன். புலைத்தொழிலை உடைய பாணனைக் குறை கூறுவோமா; அன்றி பாகனைக் குறை கூறுவோமா என்று அங்கலாய்க்கிறாள் அவள். தேரைத் தொட்டுச் சூளுற்றுப் பாகன் பரத்தையரைக் கொண்டுவந்து விட்டதாகவும் கூறுகிறாள்.

    “தேரொடும் தேற்றிய பாகன் வந்து ஈயான்கொல்” (கலி.- 71)

    என்ற காமக்கிழத்தியின் நக்கலான பேச்சு ‘அப்பெண்டிர்க்கு நின்னை ஒழியப் பிறர் இல்லை என்பதை நினைத்துப் பார்’ எனப் பாகன் உரைத்தமையைக் கூறித் தொடர்கிறது.

    பாகனின் சிறப்புகள்

    பாகனைச் சுட்டிப் பேசும் தலைவன் அவனை நூலறிவு மிக்கவன் என்றும்; மதிநுட்பம் உடையவன் என்றும்; வினை வல்லவன் என்றும் சிறப்பிக்கிறான். பாகனின் திறமை அவனது கைவன்மையில் இருக்கிறது என்னும் பொருள்பட;

    “கைவல் பாகன் பையென இயக்க” (அகம்.- 230)

    எனத் தன் நெஞ்சோடு பேசுகிறான் தலைவன். திறமைமிக்க பாகன் ஆகையால் அவன் மெல்லெனச் செலுத்தியும் விரைந்து தலைவியைச் சேர முடிந்தது என்கிறான். பாகனின் அறிவுமிகுதி;

    “மதியுடை வலவ” (ஐங்.- 487)

    என்று அழைக்கப்படுவதால் தெரிகிறது. தேர்ப்பாகனுக்கு அக்காலத்தில் நூலறிவும் தேவைப்பட்டு இருந்தது.

    “நூலறி வலவ கடவுமதி” (அகம்.- 114)

    என்னும் அடிக்கு உரையாசிரியர் பொருள் கூறும் போது பரிநூல் அறிந்தவன் என்று பொருள் கூறுகிறார். தேர்ப்பாகன் குதிரைகளைப் பற்றி நன்கு பயின்று இருந்தான் என்பது பொருளாகும்.

    பாகனுக்குரிய புகழ்மொழி

    பாகனைப் பாராட்டும் தலைவன் தனக்கு மனைவியைத் தந்தவனே அவன் தான் என்கிறான். தலைவி பிரிவுத்துன்பத்தில் உயிரை விடுமுன் வீட்டிற்கு அழைத்து வந்தமையை மனதார நன்றியுடன் நினைத்துப் பேசுகிறான். நீண்டவழிப் பாதையில் சென்றால் காலதாமதம் ஆகுமென்று பருக்கைகளை உடைய மேட்டுநிலமாகிய கரம்பையில் புதுவழி உண்டாக்கி ஓட்டி விரைவில் தன்னை மனைசேர்த்த பாகனை;

    “முரம்புகண் உடைய ஏகிக் கரம்பைப்
    புதுவழிப் படுத்த மதியுடை வலவோய்
    இன்று தந்தனை தேரோ
    நோயுழந்து உறைவியை நல்கலானே” (குறுந்.- 400)

    என்று புகழ்ந்து அமைகிறான் தலைவன்.

    பாகன் தலைவன் நெருக்கம் 

    பாகனுக்கும் தலைவனுக்கும் இடையில் இருந்த உறவு அவனை விருந்தினனாக ஏற்று உபசரிக்கும் அளவிற்கு நெருக்கமாக இருந்தது. ‘காற்றைப் பூட்டி ஓட்டினாயா? அல்லது குதிரைக்குப் பதிலாக உன் மனதைப் பூட்டி ஓட்டினாயா?’ என்ற கேள்விகளுடன் தேரை விட்டு இறங்கிய தலைவன் அவனை மார்புறத் தழுவி வீட்டிற்குள் விருந்தினனாக ஏற்றுச் சென்றமையை;

    “உரைமதி வாழியோ வலவ எனத்தன்
    வரைமருள் மார்பின் நளிப்பனன் முயங்கி
    மனைக்கொண்டு புக்கனன் நெடுந்தகை
    விருந்தேர் பெற்றனள் திருந்திழையோளே” (அகம்.- 384)

    எனும் பாடல் காட்சிப்படுத்துகிறது.

    தன் அந்தரங்கத்தைக் கூடப் பாகனிடம் பகிர்ந்து கொள்கிறான் தலைவன். காட்டைத் தாண்டி வரும்போது பேச்சுத் துணையாக அமைபவன் பாகன் மட்டுமே ஆவான் ஆதலால்; அவனிடம் முன்னர் நிகழ்ந்தவற்றை நினைவு கூர்கிறான். மழை பெய்ததும் ‘தவளைகளின்  ஒலியால் தேரின் மணியொலியைத் தலைவி அறியவியலாது; ஆதலால் நீவிர் போய்த் தெரிவிப்பீர்’ என்று இளையரை விடுத்ததையும்; அவர்கள் சென்று அறிவித்ததையும்; உடனே அவள் நீராடிப் புனைந்து கொண்டதையும்; அந்நேரத்தில் தான் சென்று சேர்ந்ததையும்; அணைத்து மகிழ்ந்ததையும் பாகனிடம் பகிர்ந்து கொள்வது இருவருக்கும் இடையில் இருந்த நெருக்கத்தைக் காட்டுகிறது (நற்.- 42).

    பிரிவுணர்த்திய போது தனக்கு விடைகூற இயலாது பூங்கொத்தைத் தளிரோடு சேர்த்துப் பிதிர்த்த அறிவு மயக்கம் உற்ற தன் மனைவி பற்றியும்  (நற்.- 106); அவள் மேல் தான் கொண்ட காதல் வேட்கை பற்றியும்  தேர்ப்பாகனிடம் வெளிப்படுத்தத் தயங்கவில்லை (அகம்.- 154).

    பாகன் தொழில் செய்யும் முறை

    திணைமாந்தருள் கிணைப்பொருநர் ‘வார்’ என்று பொருள்படும் ‘வள்பு’ எனும் சொல்லோடு சேர்த்துச் சொல்லப்படுவது போல்; பாகனும் பலவிடங்களில் குதிரையை இழுத்துப் பிடிக்கும் வள்பு எனும் வாருடன் தொடர்புறுத்தப்படுகிறான் (ஐங்.- 486).

    போர் முடிந்து தேரில் எறிய தலைவன் சிறிது நேரத்தில் சற்றும்   எதிர்பாராத வகையில் ‘இறங்குக’ என்ற சொல் கேட்டு மருண்டான். அவ்வளவு வேகமாகத் தன்னை இல்லம் கொண்டுவந்து சேர்த்த அவனை;

    “… ………… ………… வள்பு ஆய்ந்து
    இயக்குமதி வாழியோ கையுடை வலவ” (அகம்.- 344)

    என்று தோலாலான கடிவாளத்தை இழுத்துச் செலுத்திய அவனது கைவன்மையை வாயாரப் புகழ்கிறான்.

    பாகன் குதிரையைச் செலுத்தும் முறையுடன் வள்பு மட்டுமின்றி தாற்றுக்கோல், அதன் நுனியில் இருக்கும் முள் முதலியவை தொடர்புறுத்திப் பேசப்படுகின்றன.

    “முள்ளிட்டு ஊர்மதி வலவ” (ஐங்.- 481)

    என்று குதிரையின் வேகத்தைக் கூட்ட ‘தாற்றுக்கோலின் நுனிமுள்ளால் தூண்டு’ என்று கட்டளை இடுவதையும் காண்கிறோம்.

    நான்கு குதிரைகள் பூட்டிய தேரைப் பாகன் ஓட்டியமை;

    “நன்னால்கு பூண்ட கடும்பரி நெடுந்தேர்” (அகம்.- 104)

    என்னும் அடியால் புலனாகிறது.

    தேரினை அதன் உறுதிவாய்ந்த உருளை நிலத்தில் பதிந்து உருண்டு வரச் செலுத்துவாயாக என்பதை;

    “வள்வாய் ஆழி உள்ளுறுபுருளக்
    கடவுக காண்குவம் பாக” (அகம்.- 54)

    என்னும் தலைவன் கூற்று பாணனின் தொழில் நுட்பத்தை அடியொட்டியது.

    “…… ….. ……. … உளையணி
    உலகு கடப்பன்ன புள்ளியல் கலிமா
    வகையமை வனப்பின்” (அகம்.- 64)

    என்பதால் உலகையே கடப்பது போன்ற தன்மையுடைய குதிரை பறவை பறப்பது போல் தேரிழுப்பதைப் பற்றிப் பாகனோடு சொல்லாடுகிறான் தலைவன். தாழ்ந்த நிலம் நோக்கிப் பாயும் வெள்ளம் போலக் குதிரைகள் பாய்ந்து சென்றிழுக்கும் தேரைத் தோழி காட்சிப்படுத்துகிறாள் (அகம்.- 400)

    கழியைக் கடக்குங்கால்  சுறாமீன்  குதிரையைத் தாக்கப்;  போக்கு தடைப்பட்டமையால் நேர்ந்த தலைமக்கள் சந்திப்பு  குறித்துத் தோழி செவிலியிடம் அறத்தொடு நிற்கும் போது;

    “வயச்சுறா எறிந்தென வலவன் அழிப்ப” (அகம்.- 190)

    எனக் கூறுகிறாள். பாகனின் பணியில் நேரும் சிக்கல்; வேறு ஒரு குதிரையைக் கொண்டு வந்து சேர்த்த பிறகே தீருமாதலால் தலைமக்கள் நட்பு வளர ஏதுவானது என்கிறாள்.

    பாகனால் இன்புறும் இளையர்

    தலைவன் தேருக்குப் பின்னே ஓடிவரும் இளையர் இன்புறுவதும் பாகனின் திறமையில் பொருந்தி உள்ளது; ஏனெனில் அவர்களுக்கும் வினைமுடித்து வீடுதிரும்பும் காலம் விரைவில் வாய்ப்பது பாகனின் செயல்திறனைப் பொறுத்ததே.

    “வென்வேல் இளையர் இன்புற வலவன்
    வள்பு வலித்து ஊரின் அல்லது முள்ளுறின்” (அகம்.- 104)

    என்று தோழி கூறுகிறாள்.

    ஈரநெஞ்சு கொண்ட தலைவனும்  பாகனும்

    காட்டுவழியில் தேரைச் செலுத்தி வரும்போது தேரின் மணியொலியோ; குதிரையின் குளம்பொலியோ கேட்காதவண்ணம் செலுத்துவாயாக என்று பாகனை வேண்டும் தலைவன்; மான் முதலிய அஃறிணை உயிர்களின் நடுநாள்  புணர்ச்சிக்கு இடையூறு செய்யக்கூடாது என்னும் கொள்கை உடையவன் ஆதலால்;

    “இடிமறந்து ஏமதி வலவ” (அகம்.- 134)

    என்கிறான். பாகனும் நெய்தல் நிலத்தில் தேரோட்டும் போது தன் தேர்ச் சக்கரத்தில் நண்டுகள் சிக்கி விடாதபடி பார்த்து ஓட்டியமை;

    “ஆழி மருங்கின் அலவன் ஓம்பி
    வலவன் வள்பு ஆய்ந்து ஊர” (நற்.- 11)

    என்று புனைந்து உரைக்கப்படுகிறது.

    பாகன் பாத்திரம் புலப்படுத்தும் தமிழ்ச் சமுகநிலை

    வினைமுற்றி மீளும் தலைவன் பல பாடல்களிலும் வேந்தனுக்காகவோ அன்றி மன்னனுக்காகவோ போரில் பங்கேற்றுத் திரும்புபவனாக உள்ளான். அப்போர் விளைநிலமாகிய நாட்டை மன்னனிடம் திறைப்பொருளாகப் பெற்ற பிறகு முடிவு அடைவதைக் காண்கிறோம்.

    வேந்தன் பகை தணிந்தமை கூறிக் கிளம்பச் சொல்கிறான் தலைவன்

    “இருநிலம் குறையக் கொட்டிப் பரிந்தின்று
    ஆதி போகிய அசைவில் நோன்தாள்
    மன்னர் மதிக்கும் மாண்வினைப் புரவி
    கொய்ம்மயிர் எருத்தில் மெய்ம்மணி ஆர்ப்பப்
    பூண்கதில் பாக நின் தேரே……………………
    உறுபகை தணிந்தனன் உரவுவாள் வேந்தே” (நற்.- 81)

    என்று பாகனை ஏவும்போது தனது தேரையும் குதிரையையும் அறிமுகம் செய்கிறான் தலைவன். ‘அகன்ற நிலம் குழியும்படித் தன் கால்களால் கொட்டி நடந்து; விரைந்து ஆதி என்னும் நெறிப்படி நேராக ஓடுகின்ற குதிரையின் கொய்ம்மயிர் உடைய பிடரியில் கட்டிய மணிகள் ஒலிக்கத் தேரில் பூட்டுக’ என்கிறான். தனது குதிரை மன்னனும் விரும்பத் தக்கது என்று விதந்து கூறுவதால் அவன் மன்னனைச் சார்ந்திருக்கும் தலைவன் என்பதில் ஐயமில்லை.

    மன்னர் திறை கொடுத்ததால் பகை நீங்கி; வேந்தனும் மன்னரும் நட்பினராகி விட்டனர் என்ற நிலையைக் கூறி;

    “ஊர்க பாக” (அகம்.- 44)

    என ஏவுவதையும் காண்கிறோம்.

    தான் சார்ந்த வேந்தன் மன்னனிடம் இருந்து நன்செய் நிலங்களைத் திறையாகப் பெற்றமையால் வினை முடிந்தது என்று கூறித் தன் மனையை நோக்கி விரையச் சொல்கிறான் இன்னொரு தலைவன்.

    “நாடு திறை கொண்டனம் ஆயின் பாக” (அகம்.- 334)

    எனக் கூறிக் கிளப்புகிறான்.

    புராணப் பாகன்

    பரிபாடலில் சிவபெருமான் தன் காளை வாகனத்தை ஓட்டும் பாகனாகச் சித்தரிக்கப்படுகிறார்.

    “செவ்விடைப் பாகன் திரிபுரம் செற்றுழி ” (பா.- 23)

    எனத் திரிபுரம் எரித்த புராணக்கதை புனையப்பட்டுள்ளது.

    முடிவுரை

    பாகன் வலவன் என்றும் அழைக்கப்படுகிறான். தலைவன், தோழி, தலைவி, காமக்கிழத்தி ஆகியோர் கூற்றில் பாகன் இடம் பெறுகிறான். ஒரே ஒரு பாடலில் பாகன் பேசியதாகக் காமக்கிழத்தி கூறுகிறாள். குதிரைகள் பற்றிய நூலறிவு உள்ள பாகன் தோலாலான கடிவாளத்தை இழுத்து; முள் முனை உள்ள தாற்றுக்கோலால் தீண்டி; நான்கு குதிரைகள் பூட்டிய தேரைக் காற்றுப்  போலவும்; பள்ளம் நோக்கிப் பாயும் வெள்ளம் போலவும் செலுத்திய கைவன்மை மிக்கவன் ஆவான். மதிநுட்பம் மிக்க பாகன்; தேவைப்படும் போது புதுவழி உண்டாக்கித் தலைவனுக்கு உதவினான். தலைவன் தன்னுடைய அந்தரங்கத்தைக் கூடப் பாகனுடன் பகிர்ந்து அவனை விருந்தாக ஏற்றுப் போற்றினான். புறத்தொழுகும் தலைவனுக்கும் பாகன் உதவி; வசை பெறுகிறான். தேர் கழியைக் கடக்குங்கால்  சுறாமீன்  குதிரையைத் தாக்கப்;  போக்கு தடைப்படுவது பாகனுக்கு ஏற்படும் பெரிய சிக்கல் ஆகும். தலைவன் தேருக்குப் பின்னே ஓடிவரும் இளையர் இன்புறுவதும் பாகனின் திறமையில் பொருந்தி இருந்தது. அஃறிணை உயிர்களுக்கு இடையூறு செய்யக்கூடாது என்னும் கொள்கை தலைவனிடமும் பாகனிடமும் இருந்தது. வேந்தனுக்காகவோ அன்றி மன்னனுக்காகவோ போரில் பங்கேற்றுத் திரும்புபவனின் தேர்ப்பாகன் என்ற பாத்திரத்தின் பங்கேற்பு மூலம் அன்றைய தமிழ்ச் சமூகநிலையும் புலனாகிறது.. போரானது விளைநிலமாகிய நாட்டை மன்னனிடம் திறைப்பொருளாகப் பெற்ற பிறகு முடிவு அடைவதைக் காண்கிறோம். சிவபெருமான் தன் காளை வாகனத்தை ஓட்டும் பாகனாவார்.

    Share