கடன் (சிறுகதை)

பாஸ்கர் சேஷாத்ரி
அப்படி எதிர்க்க திண்ணைல உக்காருங்க தம்பி.
வேணாம் சார். நிக்கறேன்
பேரு என்ன சொன்னப்பா
வாசு
என்ன படிச்சீங்க
பிளஸ் டூ பைல் சார்.
ஏன் மேலே எழுதலயா
இல்ல, எனக்கு நாட்டம் போச்சு
இங்க உனக்கு இந்த வீட்ல தான் வேல, எதை சொன்னாலும் செய்யணும்
சரி சார். சம்பளம் என்னான்னு கணக்காளர் சொல்வாரு
பின்னாடி சின்ன ரூம் இருக்கு. அங்கே தங்கிக்கோ.
சரி சார்.
ஓய்வா இருக்கும்போது என்னவேணா செய்யலாமா?
ம், என்ன செய்வ
செடி வளர்ப்பேன் சார். கொஞ்ச நாள் லீவுக்கு கிராமத்துக்குப் போனேன். அப்ப கத்துண்டேன்
செய்பா
நான் கொஞ்சம் கவிதை எழுதுவேன்.
அப்படியா அடி சக்கை. எனக்கும் கண்ணதாசன் பிடிக்கும்
நான் மில்டன் ரசிகன்
அவரு யாரு.
அவரும் பெரிய கவிஞர் சார். இங்கிலீஷ்ல எழுதுவாரு
என்னப்பா ஏதோ சொல்ற
ஒண்ணுமில்லை சார். மூணு வருஷம் கான்வன்ட்ல படிச்சேன்.
அப்ப எப்படிப்பா இந்த வேலைக்கு .
அதெல்லாம் ஒன்னுமில்ல சார். எல்லா வேலையும் ஒன்னுதான்.
உனக்கு எப்படி அக்கௌன்ட்ஸ் சாரதியை தெரியும் .
அவர் பையன் என்னோட கிளாஸ் மேட்.
அவர் தான் என்னை அடிக்க்ஷன் செண்டர் கூட்டிண்டு போனார்
உனக்கு இந்த வேலை ரொம்ப சின்னதுன்னு நினைக்கிறேன் .
இல்ல சார். எனக்கு இது வேணும். எனக்குன்னு ஒரு தண்டனையா பாக்கிறேன். என்னை வருத்திக்க இது ஒரு நல்ல வழியா பாக்கிறேன். எனக்குச் சாப்பாடும் தங்க இடமும் போதும். வேலை கொடுங்க அது போதும்.
இல்ல தம்பி. எனக்கு உன்கிட்ட வேலை வாங்க நிறைய தயக்கம் இருக்கு.
நான் உண்மையைப் பேசிட்டேன். எனக்கு வாய்ப்பு இல்லேன்னா நேர்மைக்கு மதிப்பு இல்லைன்னு ஆயிடும்.
பாத்தியா, இது போல எல்லாம் என்னால் பெரிசா யோசிக்க முடியல. நான் உன்கிட்ட வேலைக்கு வந்தாபோல உணர்வு வருது.
சார் எனக்கு உண்மை பேசவே பிடிக்கிறது. பொய் எதற்கும் சொல்ல பிடிக்கல. அதனால் தான் என் பழைய கதையைக் கூட சொன்னேன்.
சரி நாளைலந்து வாப்பா. நீ நல்லவன் தான். ஆனாலும் எதனா சிக்கல் வருமோனு பயமா இருக்கு.
நீங்க தயங்க வேண்டாம். எனக்கு வாய்ப்பு கொடுங்க.
சரி. சாரதி கிட்ட சொல்லு . ஒன்னு தெரியுமா? நீ சின்ன பையன். தெரியாது. உன் அப்பா என்னிடம் நிறைய கடன் வாங்கி வட்டிகூட கட்டாம தூக்குல தொங்கினான்.
எனக்குத் தெரியும் சார். சாரதி அங்கிள் சொன்னாரு.
அதெப்படிப்பா. என்கிட்டே வாங்கின கடனுக்கு, என்கிட்டே வேலை செஞ்சு, என் கடனை அடைக்கிறது ஒத்து வரலையே?
இல்ல சார் . நான் எங்கனா வேலை செஞ்சி கடனை அடைக்கிறது ரொம்ப தாமதம் ஆகும். இங்கன இருந்தா நீங்க பிடிச்சிண்டு கொடுக்கலாம்.
தம்பி நான் பெர்ய நேர்மையெல்லாம் இல்ல. வட்டி வியாபாரம். எனக்குக் குறி வேற.
இருக்கலாம். கடன் அடஞ்சவுடன் நானும் போயிடுவேன் சார்.
சரி நான் கிளம்பறேன். சரி சேர்ந்துடு. துணி மணி இருக்கா?
இருக்கு.
அரை டிராயர்லாம் போடகூடாது. பஜாருக்குப் போகும்போது யாராவது வட்டிக்குக் கேட்டால் சொல்லிவிடு.
அதை மட்டும் சொல்லமாட்டேன் சார்.