நாங்குநேரி வாசஸ்ரீ

பாடல் 55

வெண்குடைக்கீழ் வாழும் குடிகட்கு வேந்தனும்
செங்கோலன் அல்லாக்கால் செய்வதென் – பொங்கு
படுதிரைச் சேர்ப்ப! மற்று, இல்லையே, யானை
தொடுவுண்ணின் மூடுங் கலம்’

பழமொழி -‘இல்லையே, யானை தொடு வுண்ணின் மூடுங்கலம்’

சாய் சாய்… என தேநீர் விற்றுக்கொண்டு வரும் சிறுவனைப் பரிதாபமாகப் பார்த்தேன். அங்கிள் என என்னைச் சுரண்டி கூப்பிடும் அவனால் அந்தப் பாத்திரத்தைக் கூட சரியா புடிக்க முடியல. பேப்பர் கப்புகள கக்கத்துல இடுக்கிக்கிட்டு நிக்கறான். எங்கிட்ட வாங்கிக்கோ. அஞ்சு ரூபாதான். இஞ்சி டீ. இரயிலுக்குள்ள இதையே பத்து ரூபா சொல்லுவான். தூய ஹிந்தியில் வாதாடுகிறான்.

சும்மா குடுத்த பத்துரூபா நோட்ட வாங்கிக்க மறுத்த அவன் நேர்மை எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. உழைக்கணும்னு நினைக்கறான். அதனாலென்ன. இரண்டு டீ வாங்கிக்கொண்டு பத்துரூபாய்த் தாளை நீட்டினேன்.

நியூடில்லி இரயில்நிலையம் முதல் பிளாட்பாரத்திலிருந்து சென்னை செல்லவிருக்கும்  தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் இரயில் இன்னும் சிறிதுநேரத்தில் புறப்படும். அறிவிப்பைத் தொடர்ந்து பெட்டிக்குள் ஏறினேன். என்னுடையது சைட் பர்த் என்பதால் பெட்டியை இருக்கைக்கு அடியில் நுழைத்துவிட்டு சீட்டில் அமர்ந்தேன். எதிர்சீட்டில் ஆள் இல்லை. அக்கம்பக்கம் நோட்டம்விட ஆரம்பித்தேன்.

இராணுவஉடையில் நான்கைந்து வீரர்கள் எனக்குப் பின்னாலிருந்த பகுதியில் அமர்ந்திருக்கிறார்கள். மற்றபடி எல்லாரும் குடும்பம் குடும்பமா வந்திருக்காங்க போல. எனக்கு முன்னால் இருந்த ஆறு பெர்த்தையும் வடஇந்தியக் குடும்பம் ஆக்கிரமித்திருந்தது. எந்த மாநிலமோ. இரண்டு ஜோடிகளும் பதினைந்து பதினாறு வயது மதிக்கத்தக்க இரு பெண்குழந்தைகளும் அமர்ந்திருக்கிறார்கள். எந்த குடும்பமா இருந்தா என்ன. எப்படியும் சென்னை போறதுக்குள்ள கண்டுபிடிச்சிடலாம்.

நீண்ட தொலைவு இரயில் பயணங்களில் நாம கேக்கணும்னே  இல்ல. வந்து ஏறும்போது எல்லாரையும் சந்தேகத்தோடயே பாப்பாங்க. அப்பறம் நேரம் போகப்போக சாதாரணமா பேச ஆரம்பிப்பாங்க. ஒரு இரவு தூங்கி எழுந்தவொடனே ரொம்பவே சுமுகமா பழகிடுவாங்க. இதுதான் இந்த இருபது வருச இரயில் பயணத்துல நான் கத்துக்கிட்ட அனுபவம். ஆனா இப்பயெல்லாம் சின்னப் பசங்க மொபைல விட்டு முகத்த திருப்பறதேயில்ல.

அந்த வட இந்திய ஜோடிகளை கவனிக்க ஆரம்பிச்சேன். இளஞ்சோடி மகனும் மருமகளும் போல. அந்தப்பொண்ணு புடவைத்தலைப்பால முகத்தை மூடிக்கிட்டே அமர்ந்திருக்காங்க. எதிரில இருப்பவர் மாமனாராத்தான் இருக்கணும். ஒருவேளை பீஹார்காரங்களோ.

எதேச்சையாக அந்தப் பெரியவரும் என்னயப் பாக்கறார். ஒருசிறு புன்முறுவலுடன் தலையசைக்கிறார். நானும் பதிலுக்கு தலையசைத்து வணக்கம் சொல்கிறேன். இரயில் கிளம்பிவிட்டது. பிளாட்பாரத்தில் அவசரமா ஓடிவந்த ஒரு தமிழ்க்குடும்பம் இரயிலப் பிடிக்கமுடியாம நின்னுட்டாங்க. எந்த டிராபிக்ல மாட்டினாங்களோ. தமிழ்க்குடும்பங்கள் பொதுவா தெற்கு தில்லியில்தான் அதிகமா வசிப்பாங்க. உள்ளே நெய்மணம் தூக்குது. வீட்டில காய்ச்சின நெய் போல. அதுக்குள்ள யாரோ சாப்பாட்டுப்பொட்டலத்த திறந்துட்டாங்க. இதுவே சென்னையிலிருந்து கிளம்புற இரயிலா இருந்தா இலையோட சேர்ந்த இட்லிசட்னி வாசனை வரும். யோசனையுடன் கண்ணை மூடினேன். பழைய ஞாபகங்கள் அலைமோதின.

சின்ன வயசில கும்பகோணத்துல இருந்தோம். எங்கப்பா அங்க ஒரு ஹோட்டல் நடத்திட்டிருந்தாரு. மொத்த குடும்பமும் அதுக்காக உழைக்கும். அம்மாவும் பாட்டியும் வீட்டிலயே ஆட்டு உரலில இட்லிமாவும் வடைமாவும் அரைச்சு எடுத்துட்டுப் போவாங்க. மணி அய்யர்தான் எங்க ஹோட்டல் சரக்கு மாஸ்டர். ஒத்த ஆளா நின்னு மளமளனு காரியம் பாப்பார். சுடச்சுட இட்லி வடை இலையில பார்சல் பண்ணி ஆபீஸ் போறவங்களுக்குக் குடுப்பாரு. உக்காந்து சாப்பிட நேரமில்லாதவங்க அதை வாங்கிட்டுப்போவாங்க. எனக்கு விவரம் தெரிஞ்சு பதினைந்து வயசு வரை நல்லா ஓடிட்டு இருந்துது. திடீர்னு அப்பாவுக்கு கெட்ட நண்பர்கள் சேர்க்கை அதிகமாயிடுச்சு. தண்ணி அடிக்க ஆரம்பிச்சார். அப்பறம் சீட்டுவிளையாடற பழக்கம் வேற வந்திருச்சு. தினமும் வியாபாரத்தக் கவனிக்காம ஊர்சுத்திட்டு தன்னோட நண்பர்களையும் கூட்டிக்கிட்டு வந்து காசுவாங்காம சாப்பாடு குடுக்க ஆரம்பிச்சார்.

பாவம் மணி அய்யர். அம்மா, பாட்டி மேல இரக்கப்பட்டு சம்பளம் இல்லாமகூட பலமாசம் வேலை பாத்தாராம். அப்பறம் நகைகள அடகு வச்சு, பாத்திரங்கள வித்து கொஞ்சநாள் நடத்திட்டு வந்தாங்க. அதுவும் முடியாம ஹோட்டல வித்துட்டு துணி தச்சிக்குடுத்து சம்பாதிக்க ஆரம்பிச்சிட்டாங்க அம்மா. நோய்வந்து அப்பாவும் போய்ச்சேந்துட்டார்.

அரசுபள்ளியில பணம் கட்டவேண்டியதில்லங்கறதால என்னால படிக்க முடிஞ்சது. அப்பறமும் பலபேர் தயவால கல்லூரிப்படிப்ப முடிச்சிட்டு அரசு உத்தியோகத்துல சேந்தேன். ரிடையர்மென்ட்கு இன்னும் ரெண்டு வருசம்தான் இருக்கு.

யாரோ என்னைத் தொட்டு எழுப்புகிறார்கள். எதிரில் அந்த வட இந்திய மனிதர் கையில் பூரியுடன் நிக்கறார். பாயி…என அழைத்து தாங்கள் மதுராவிலிருந்து வருவதாக அறிமுகப்படுத்திக் கொள்கிறார். அங்கே பெரிய ஓட்டல் வைத்து நடத்துபவராம். இப்போ சென்னையில் ஆரம்பிக்கறதுக்காக போய்க்கிட்டிருக்காராம். என்னயப் பாத்தவொடனே சொல்லணும்னு தோணிச்சாம். சுத்த பசு நெய்யால செஞ்ச பூரி சாப்பிட்டுப் பாருங்கனு என்கிட்ட குடுக்கறார். இது அவரோட ஹோட்டல்ல குடுக்கற ஸ்பெஷலாம். வாங்கிக்கொண்டு வாழ்த்துக்கள் சொன்னேன். என் அப்பா கூட முன்னால் ஹோட்டல் நடத்தியவர்தான் என அறிமுகப்படுத்தியவுடன் அவர் பார்த்தீர்களா அதனாலதான் உங்களப் பாத்தவொடனே சொல்லணும்னு தோணிச்சு என்று சந்தோஷப்படுகிறார். அவருடைய நோக்கில் என் அப்பா ஏதோ பெரும் சாதனை படைத்தது போலவும் தாமும் அவ்வாறே வெற்றிபெறுவோம் எனவும் நினைக்கிறார் போல.

இருக்கட்டும். எனக்கு மட்டும்தானே தெரியும் ‘இல்லையே, யானை தொடு வுண்ணின் மூடுங்கலம்’ங்கற பழமொழி. யானையே தொட்டு உண்ணத் தொடங்கிட்டா அதற்கு மூடி மறைத்து வைக்க தகுதியான பாத்திரம்னு ஒண்ணு கிடையாதில்லையா. அதுமாதிரிதான் எங்கப்பா பண்ணின வேலையும்.

அந்த மனிதர் தன் குடும்பத்தார் கிட்ட என்னயப் பத்திசொல்லிட்டார்போல. எல்லாரும் என்னயத் திரும்பிப்பாக்கறாங்க.

உலகம் எவ்வளவு வித்தியாசமானது. எல்லா உண்மையையும் எப்பவும் சொல்லணும்னு இல்ல. இந்தக் குடும்பத்துக்கு இப்ப என்னால நம்பிக்கை கிடைச்சிருக்கு. அதனோட பிரதிபலிப்பா அவங்க எல்லார் முகத்திலயும் சந்தோசம். சென்னையில் கால்வைக்கும்போது அவங்க சந்தோசமா நம்பிக்கையோட இறங்குவாங்க. கண்டிப்பா நல்லா உழைச்சு முன்னுக்கு வருவாங்க. கைபேசியில் என் மகள் அழைக்கிறாள். அவளுடன் பேசத்தொடங்குகிறேன்.

பாடல் 56

உற்றான் உறாஅன் எனல்வேண்டா ஒண்பொருளைக்
கற்றானை நோக்கியே கைவிடுக்க – கற்றான்
கிழவனுரை கேட்கும் கேளான் எனினும்
‘இழவன்று எருதுண்ட உப்பு’.

பழமொழி – ‘இழவன்று எருதுண்ட உப்பு’

வாங்க மாமா. உக்காருங்கோ. ஊர்ல எல்லாரும் சௌக்கியமா? காபி சாப்பிட்டேளா விசாரிக்கிறாள் விசாலம். ஆமாம். பின்ன நான் வராம எப்படி. இந்த ஆத்துல நடந்த ஒவ்வொரு விசேசத்துக்கும் மொதல்ல நான்தான் ஆஜராவேன். கல்யாணம், காதுகுத்து, பிறந்தநாள்னு எவ்வளவு விசேசம் எடுத்து நடத்தியிருப்பேன். இப்ப கொஞ்சம் வயசாயிடுத்து அதனால வேத்துமனுசனா முந்தினநாள் வந்து இறங்கறேன். இருந்தாலும் பழக்கதோசம். எல்லாத்தையும் ஒருதடவை பாத்துடறேன். நீ ஒண்ணும் கவலப்படாத. சொல்லிவிட்டு என் கேள்விகள ஆரம்பிச்சேன்.

என்னம்மா வாத்தியக்காரன் நாதஸ்வரம் எல்லாத்துக்கும் சொல்லியாச்சா. சீர்வரிசை தட்டு தாம்பாளம் எல்லாம் ரெடிபண்ணியாச்சா. ஆட்கள் வர ஆரம்பிச்சாச்சு. சாயங்காலம் மாப்பிள்ளை அழைப்பு.  இன்னும் பன்னீர் சந்தனக்கிண்ணம் வெளியில வைக்கலயேமா.

நான் சொல்லறத காதுலயே வாங்கிக்காம விசாலம் யாருக்கோ காபி உபசாரம் பண்ணிண்டிருக்கா. எம் முன்னால உக்காந்துண்டிருக்கற பொண்ணரசி என்னயவே பாக்கறா. மரகழண்ட கேசு தானே பேசிக்கறதுனு நினைப்பாளோ. இருக்கட்டும். ஸ்டூல் மேல இருந்த வெற்றிலை சீவலை வாயில போட்டுக்கறேன்.

சாயங்கால டிபன் என்ன?. வாழக்காய் பஜ்ஜியும், கேசரியும் தானே. அதுல ஒண்ணும் மாறுதல் இல்லயே. நான் பாட்டுக்கு பேசிண்டே போறேன். யாரும் பதில் சொல்ல மாட்டேங்கறீளே. என்ன ஆயிடுத்து இங்க. அதுக்குமேல பொறுமையில்லாம…. வயசானதால யாரும் மதிக்கமாட்டேங்கறா. போல,  விசாலம் என் மூத்த அக்கா பொண்ணுதான்.  என்னயவிட ரெண்டு வயசு சின்னவள். அவள் பேத்திக்குதான் நாளைக்கு கல்யாணம். புலம்பிண்டே வாசப்பக்கம் வந்துட்டேன். விசாலம் பேச்சுக்கே மரியாத இருக்கோ என்னமோ அப்பறம்தானே என் பேச்சக் கேக்கறதுக்கு. இருந்தாலும் வாய் சும்மா இருக்கமாட்டேங்கறது.

ஏண்டாப்பா. பந்தக்காலக் கண்ணுலயே காணலயேடா. வாசப்பக்கம் ஓலப்பந்தல் போடுவேளா மாட்டேளா. வாழ மரம் எங்கடா?. அதுக்குப்பதில சீரியல் பல்ப மாட்டறேளா. பேஷ் பேஷ்.

வேல செஞ்சிண்டு நிக்கற நாலு பசங்களையும் யாரோ ஒருத்தன் திட்டிண்டு இருக்கான்.

வெரசலா லைட் அலங்காரம் பண்ணுடே. ஒரு வீட்டுக்கே இத்தன நேரம் எடுத்தா பெறகு கம்பெனிய இழுத்துமூடிட்டு படுத்து ஒறங்க வேண்டியதுதான். கத்திவிட்டு தள்ளிநின்னு துணிய கொசுவம் மடிச்சிண்டு நிக்கற பிள்ளையாண்டான் கிட்டப் போறான்.

ஏல துணிய சுருக்குமடிச்சு ஒரு ஆர்ச் போடத் தெரியல. உன்னயெல்லாம் வச்சி  நாளமுன்னயும்…..  என்னவேல செஞ்சு கிழிக்கப் போறேன். உங்க நாலு பேரையும் சொந்தக்காரம்னு நெனச்சி வேலைக்குச் சேத்தது என் தப்பு.

சொல்லிட்டு என்னையே பாக்கறான்.

சாமிக்கு எந்த ஊரு. உள்ளூர்ல பாத்ததில்லயே.

அப்பாடா வந்ததுக்கு ஒருத்தனாவது பேசறானேன்னு நினைச்சு பேச்சு குடுத்தேன். எனக்கு இந்த ஊருதாம்பா. குழந்தேளுக்கெல்லாம் கல்யாணம் பண்ணிக்குடுக்கற வர இந்தக் கோவில்ல தான் வேல பாத்துண்டிருந்தேன்.  பதினஞ்சு வருசமா இந்தப் பக்கமே வரல. எம்புள்ள என்னய பாம்பே கூட்டிண்டு போயிட்டான். அங்கதான் இருக்கேன். இப்போ இந்தக் கல்யாணத்த சாக்கு வச்சுண்டு இங்க வந்தேன். எம்புள்ளயும் வந்திருக்கான். அவனுக்குக் கொஞ்சம் டவுண்ல வேலை இருக்குனு என்னய இறக்கி உட்டுட்டுப் போயிட்டான்.

நீர்யாரு? பந்தல் போடறவரா? இன்னும் வேலயே ஆரம்பிக்கலயே அதான் கேக்கறேன்.

சாமி. நீங்க பழைய காலத்திலயே இருக்கீங்க. இப்ப யாரும் பந்தல் போட மாட்டாக. தெருவுல பாத்தீரா. தார் ரோடு போட்டிருக்கு. அதனால குழி தோண்டக்கூடாது. இப்பயெல்லாம் கல்யாணம் நடத்திக்குடுக்கறதுக்குன்னு கம்பெனிகள் வந்திருச்சு. அந்தக் கம்பெனி அலங்காரத்துலேந்து சமயல், பூமாலை வரை எல்லாமே செஞ்சு குடுத்துடும். வாசல்ல பன்னீர் சந்தனம்னு சொன்னீகளே அது கூட அவங்களே செஞ்சி போடுவாங்க. இன்னும் ஒருமணிநேரத்துக்குள்ளார  எல்லாத்தையும் வண்டியில கொணாந்து இறக்கி வச்சிருவாக. ஆட்களயும் அவுகளே கூட்டியாந்துருவாக.. பொண்ணுவீட்டு, மாப்பிள்ள வீட்டு சாதிசனத்துக்கு ஒரு சோலியுமில்ல. டென்சன் ஆவாம சந்தோசமா கல்யாணம் அட்டெண்ட் பண்ணுங்க. சொல்லிட்டு ஆர்ச் போடறவன்கிட்ட திரும்பப் போய் கத்திண்டிருக்கான்.

ஓய் இம்புட்டு நேரம் நீர் இவாள்கிட்ட பேசிண்டிருந்தத நான் கேட்டேன். அந்தப் பிள்ளையாண்டானுக்குதான் வேல சரியாத் தெரியலயே அப்பறம் எதுக்கு கட்டாயப் படுத்தறீர். சொந்தக்காரன்னு நினைச்சு நீர் வேலை குடுத்திருக்கீர். இப்ப உமக்கும் டென்சன். அவனாலயும் வேலை செய்யமுடியல. இதத்தான் முன்ன ‘இழவன்று எருதுண்ட உப்பு’னு பழமொழியா சொல்லுவா. ஒருவேலயப் படிச்சவனுக்கே அந்த வேலயக் குடுக்கணும். எருது உப்பைத் தின்னாலும், அதிக உரமுடையதா உரியவனுக்கு நல்லா உழைக்கும் அதுபோல படிச்சவனும் உழைப்பான் அப்டிங்கறது அதோட அர்த்தம். இனிமேலாவது உம்ம சொந்தக்காரன்னு பாக்காம வேலைய செய்யத் தெரிஞ்சவனுக்கே அந்த வேலையைப் போட்டுக்குடும். அவாளும் சந்தோசமா இருப்பா. நீரும் நிம்மதியா இருக்கலாம்னு சொல்லிட்டுத் திரும்பறச்சே பக்கத்தாத்து கிட்டு அதான் என் பால்ய சினேகிதனப் பாத்தேன். கம்பு ஊனிண்டு நிக்கறான். கொஞ்சநேரம் பழையகதைகளப் பேசலாம். ஆசையோட அவாத்துக்குப் போறேன்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.