படக்கவிதைப் போட்டி 281இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி
சிந்தனையில் ஆழ்ந்தபடி எதையோ வெறித்து நோக்கிக் கொண்டிருக்கும் பெண்மணியின் சிற்பத்தை பாரீஸ் சென்று அற்புதமாய்ப் படம்பிடித்து வந்துள்ளார் திரு. நித்தி ஆனந்த். வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து இப்படத்தைத் தேர்வுசெய்து வழங்கியிருப்பவர் திருமிகு. ராமலக்ஷ்மி. இவர்கள் இருவருக்கும் என் நன்றியைச் சமர்ப்பிக்கின்றேன்.
”மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா” என்றார் கவிமணி. ஆனால், மாதவம் செய்து பிறந்த அந்த மங்கையர்க்கு இந்தச் சமூகம் இழைக்கும் இன்னல்களும் இடும்பைகளும் கொஞ்சமில்லை. பெண்களின் நிலை இவ்வாறு இருப்பதற்குத் தீர்வென்ன என்றுதான் இந்தப் பெண்மணியும் ஆழ்ந்து சிந்திக்கின்றாரோ?
ஒன்றைமட்டும் அழுத்தமாய்ச் சொல்லமுடியும்…”பெண்களைப் போற்றும் நாடும் வீடும் சிறப்பது திண்ணம்!”
இனி, இந்தச் சிற்பமங்கை குறித்து நம் கவிஞர்களின் கருத்து என்ன என்பதை அறிந்துவருவோம்!
*****
”நம் கண்முன் இருக்கும் தெய்வமாம் அன்னையை வணங்கி மண்ணில் உய்வோம்” என்ற நல்வழியைக் கவிதையில் சொல்லியிருக்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.
கோபுரமாய்…
அன்னை என்பவள் கண்முன் தெய்வம்
அவளை வணங்கியே மண்ணில் உய்வோம்,
முன்னே காணும் முதலாம் கடவுள்
முறைப்படி பேணிடு தீபச் சுடராய்,
உன்னை உயர்த்த தன்னுயிர் தருவாள்
உயர்வில் அவளொரு கோபுர உருவே,
பின்னர் அவளைத் தவிக்க விடாதே
பிழையிது தந்திடும் உனக்கே இடரே…!
*****
”காரழகியே! வாடிய மலராய் அமர்ந்திராமல் வாயைத் திறந்து உன் கதையைச் சொல்லிவிடு!” என்று கவலையாய் அமர்ந்திருக்கும் காரிகையை அக்கறையோடு விசாரிக்கின்றார் திருமிகு. சுதா மாதவன்.
கவலை நிறைந்த முகத்தோடு
காலினை நீட்டி அமர்ந்தபடி
கண்ணினை நிலம் காண இருப்பவளே
உன் கதையைத் தான் சொல்லிவிடேன்?
கடற்கரையின் ஓரமது என்பதறிந்தே
உன் மன அலையும் அதனூடே பொங்கியெழச்
சுருக்கங்கள் உடலெங்கும் ஓவியமாய்க்
கருத்த நிறக் காரழகி நீ என்பதறிவேன்
காற்று கூட உன்னைத் தொடவில்லையா?
கரையடிக்கும் அலையதனை நீ உணரவில்லையா?
வாயைத் திறந்துப் பதில் சொன்னால் வாகாயிருக்கும்
வாடிய மலராய் அமர்ந்திருந்தால்
வாழ்வே கசக்கும்!
*****
”ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானம்! உள்ளத்தின் உள்நோக்கி உன்திறன் அறிந்தால் உச்சம் எட்டி உன்னதம் பெறலாம்!” என்று இம் மங்கைக்கு ஊக்கமூட்டுகின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.
வளம் பெறும் வழி
ஆணும் பெண்ணும்
சரி நிகர் சமானம்
அடையும் இலக்கில்
அவரவர் உயரம்
விடுதலை உணர்வு
விகிதத்தில் இல்லை
எட்டும் அறிவில்
இளைத்தவர் இல்லை!
உள்ளத்தின் உள் நோக்கி
உன் திறன் அறிந்தால்
உச்சம் எட்டி உன்னதம் பெறலாம்!
அச்சம் தவிர்த்து
அகிலத்தை வெல்லலாம்
வெற்றுப் புகழ்ச்சியை
ஒதுக்கி வைத்து
உண்மை அறிவை
உயர்த்தும் கல்வியை
வளர்த்து வளம்பெறும் வழியறிவாய்!
சிற்பப் பெண்ணுக்குச் சிந்தனையைத் தூண்டும் சிறந்த கவிதைகளைப் படையலிட்டிருக்கும் நம் கவிஞர்களுக்குப் பாராட்டுக்கள்!
அடுத்துவருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவுசெய்யப்பட்டிருப்பது…
தாயவளே தூயவளே!
தணியாத அன்பாலே
தரணிதனில் உயிர் தழைக்கத்
தன்னையே ஈந்தவளே தாயே!
உன்னில் இருந்து உயிர்த்தேன் அம்மா!
உன்கரம் பற்றியே உயர்ந்தேன் அம்மா!
உனக்கு இணை உலகில் நீயே அம்மா!
உனையன்றி தெய்வம் எனக்கேதம்மா!
கருத் தந்து உருத் தந்து உயிராக்கினாய்!
கருணையோடு எனை வளர்த்து உயர்வாக்கினாய்!
கரும்பாக உனைப்பிழிந்து என் வாழ்வை இனிப்பாக்கினாய்!
கருப்பான உன் கரத்தால் உழைத்தென்னைச் சிவப்பாக்கினாய்!
நிலவு நீ காட்டிச் சோறூட்டினாய்!
நிலத்தில் நடைபழக்கி வழிகாட்டினாய்!
நிழலாய் நீயிருந்து எனை மரமாக்கினாய்!
நிலைத்த உன்அன்பில் எனைக் குளிப்பாட்டினாய்!
விழி இரண்டின் ஒளியாலே
வெளிஎங்கும் அன்பு ஒளி பாய்ச்சினாய்!
மொழி அதிராமல் பேசியே என்றும் இன்பம்
பொழிகின்ற மழை மேகமாகத் தாலாட்டினாய்!
ஈன்ற தாயே இனியவளே அம்மா!
ஈடில்லா உன் உழைப்பாலே
ஈபிள் கோபுரம் போல் தலைநிமிர்ந்தேன்!
ஈந்த உன் கொடையால் இன்று உலகளந்தேன்!
”கருத் தந்து உருத் தந்து உயிராக்கினாய்; கருணையோடு எனைவளர்த்து உயர்வாக்கினாய்; கரும்பாக உனைப்பிழிந்து என் வாழ்வை இனிப்பாக்கினாய்; ஈடில்லா உன் உழைப்பாலே ஈபிள் கோபுரம்போல் நான் தலைநிமிர்ந்தேன்!” என்று அன்னையின் உழைப்பை, கைம்மாறு கருதாத அவள் ஈகத்தை எளிய வரிகளில் உணர்வுபூர்வமாய் விளக்கியிருக்கும் திரு. யாழ். பாஸ்கரனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவிப்பதில் மகிழ்கின்றேன்.