கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 17

-மேகலா இராமமூர்த்தி

”இராமனை எளிய மானுடன் என எண்ணவேண்டா” என்று அகம்பனன் சொன்ன அறிவுரையை அகத்திலே கொள்ளாது புறந்தள்ளினான் கரன். அரக்கர் சேனைக்கும் இராமனுக்கும் போர் மூண்டது. கரனின் படைத்தலைவர்கள் ஆவேசமாகப் போரிட்டு மாண்டனர். அடுத்து முத்தலைக் குரிசிலான திரிசிரனின் படையினர் இராமனை அஞ்சாது எதிர்த்து வெஞ்சமர் புரிந்தனர்.

அழகிய இறகுகளையுடைய குளவி தன்னிடம் அடைக்கலமாய்ச் சேர்ந்த புழுக்களைத் தன் வடிவமாய்ச் செய்யும் தன்மைபோல அருள்வள்ளலான இராமன், அவ் வஞ்சத்து அரக்கரை வளைத்துக் கொண்டு தன்னுடைய சிறந்த அம்புகளின் தூய்மையால் அவர்களைத் தேவராக்கினான்.

அஞ்சிறை அறுபதம்
     அடைந்த கீடத்தைத்
தஞ்சு எனத் தன் மயம்
     ஆக்கும் தன்மைபோல்
வஞ்சகத்து அரக்கரை வளைத்து
     வள்ளல்தான்
செஞ் சரத் தூய்மையால்,
     தேவர் ஆக்கினான். (கம்ப: கரன்வதைப் படலம் – 3096)

குளவியால் கொட்டப்பட்டுப் புழுக்களும் குளவியாதல் போல, அரக்கரும் உயர்குணத்தோனான இராமனின் சரத்தால் உயிர்நீத்துத் தேவராயினர் என்று அரக்கர் இறந்துபட்ட நிகழ்வுக்கு ஏற்றந்தந்து சுவைபட விவரிக்கின்றார் கம்பர்.

அடுத்து இராமனும் திரிசிரனும் நேருக்கு நேர் போர் புரிந்தனர். தான் ஒருவன் போர் செய்தலே இருநூறு பேர் போர் செய்வதுபோலத் தோன்றும்படி பெரும் மாயையின் துணையொடு கடும்போர் செய்த திரிசிரன் எனும் அந்த முத்தலை அரக்கனின் இரு தலைகளை ஒன்றன்பின் ஒன்றாக இராமனின் கணைகள் உருட்டித் தள்ள, மீதமிருந்த ஒரு தலையோடு ஆகாயத்தில் மாயப்போர் புரிந்தான் திரிசிரன்.

இராமனின் சரங்கள் அவன் தாள்களையும் தோள்களையும் அப்போது துணித்தன. தன் உடலுறுப்புக்களை இழந்தபோதும் திரிசிரனின் போர்வெறி அடங்கவில்லை. தன் வாயினை அகலத்திறந்து இராமனை விழுங்கப் பார்த்தான் அவன். அவ்வேளையில் இராமனின் சரம் அவன் ஒற்றைத் தலையையும் கொய்தெறிந்தது. அதைக்கண்ட அரக்கர் சேனை அச்சங்கொண்டு ஓடத் தொடங்கியது. அதனால் கடுங்கோபம் கொண்ட கரனின் இளவலான தூடணன்,

”பழிப்புக்கு இடமான பயத்தை உளத்திலே கொண்டு உயிர்வாழ்கின்ற இழிந்த மனிதரை அழகான வளையணிந்த வனிதையரும் மதியாது பழிப்பர்; மனத் துணிவு எனும் கவசமே நிலையானது; அதுவன்றி அச்சமெனும் குணம் அரிய உயிர்க்குத் துணையாமோ?” என்று அவர்களை நோக்கி இடித்துரைத்தான்.

வச்சைஆம் எனும் பயம் மனத்துஉண்டு என வாழும்
கொச்சை மாந்தரைக் கோல்வளை மகளிரும் கூசார்
நிச்சயம்எனும் கவசம்தான் நிலைநிற்பது அன்றி
அச்சம்என்னும் ஈது ஆர்உயிர்க்கு அருந் துணை ஆமோ.
(கம்ப: கரன் வதைப் படலம் – 3113)

அடுத்து, தூடணனுக்கும் இராமனுக்கும் கடும்போர் நடைபெற்றது. இராமன் எய்த பகழி, தூடணனின் தலையை அவன் உடலிலிருந்து அகற்றியது. அதனைத் தொடர்ந்து இராமனும் கழலணிந்த வீரனாம் கரனும் பொருதனர். இறுதியில் இராமனின் கரம் விடுத்த சரத்தால் கரனும் மரணத்தைச் சந்தித்தான்.

இராமன் தமியனாய் நின்று அரக்கர் சேனையை முற்றாய் அழித்தமை கண்டு உவகைக் கலுழ்ச்சியுற்றனர் இலக்குவனும் சீதையும்!

சூர்ப்பனகையின் நிலையோ அதற்கு நேர்மாறாயிருந்தது. அவள் தம் சோதரர்கள் போரில் அழிந்துபட்டதைக் கண்டு துடித்தாள்; வயிற்றிலடித்துக் கொண்டு கண்ணீர் வடித்தாள்.

இராமன் மீது நான்கொண்ட ஆசை என் மூக்கோடு முடியவில்லை; என் வாக்கினால் உங்கள் வாழ்க்கையையும் அல்லவா போக்கினேன்? பாவியேன் நான்!” என்று மாண்டுகிடந்த சோதரர்களின் உடலங்களைக் கண்டு புலம்பியவள், நிகழ்ந்தவற்றை அறிவிக்க இராவணனைத் தேடிச்சென்றாள்.

ஆக்கினேன் மனத்து ஆசை அவ்ஆசை என்
மூக்கினோடு முடிய முடிந்திலேன்
வாக்கினால் உங்கள் வாழ்வையும் நாளையும்
போக்கினேன் கொடியேன் என்று போயினாள்.
(கம்ப: கரன்வதைப் படலம் – 3162)

இனிதான் நாம் இராமாயணத்தின் எதிர்நிலைத் தலைவனும் இணையற்ற பெருவீரனுமான இராவணனை இராமகாதையில் சந்திக்கப் போகின்றோம்!

இலங்கை அரண்மனையில் தேவதச்சனான விசுவகர்மா தன் சிற்ப நூலறிவு அனைத்தும் சிறப்பாய்ப் புலப்படும் வகையில் அமைத்த ஒப்பற்ற மணிமண்டபத்தில் இராவணன் கம்பீரமாய் வீற்றிருக்கின்றான்.

தேவர்களுள் புலியின் தோலை உடுத்த சிவனும், பொன்னாடை புனைந்த திருமாலும், பூவில் தோன்றிய பிரமனும்கூட இராவணனை வெல்லும் ஆற்றல் பெற்றவர் அல்லர்; தேவரின் நிலையே ஈதெனில் பிறரின் நிலைகுறித்து நவிலவும் வேண்டுமோ? சிறுத்த இடையும் பருத்த முலையும் மூங்கிலிளந்தோள்களும் செவ்வரி ஓடிய கண்களும் கொண்டு ஆடவரை அழகால் வெல்லும் மாதராரின் நெடிய ஊடலைத் தீர்க்கும்பொருட்டுக்கூட வணங்காத முடியை உடையவன் இராவணன் என்று அவனுடைய வீரத்தையும் மிடுக்கான இயல்பையும் பாங்குற ஒரு பாட்டில் விளக்குகின்றார் கம்பர்.

புலியின் அதள் உடையானும் பொன்னாடை
     புனைந்தானும் பூவினானும்
நலியும் வலத்தார் அல்லர் தேவரின் இங்கு
     யாவர் இனி நாட்டல் ஆவார்
மெலியும் இடை தடிக்கும் முலை வேய் இளந்
தோள் சேயரிக் கண் வென்றி மாதர்
வலிய நெடும் புலவியினும் வணங்காத
     மகுட நிரை வயங்க மன்னோ. (கம்ப: மாரீசன் வதைப் படலம் – 3166)

ஊடற்காலத்து, தம் மனைவியரின் ஊடலைத் தணிக்க ஆடவர்கள் அவர்களிடம் பணிந்து நடந்துகொள்ளுதல் பிழையில்லை என்பது தொல்காப்பியப் பொருளதிகாரம் உரைக்கும் பொருள்பொதிந்த கருத்து.

மனைவி உயர்வுங் கிழவோன் பணிவும்
நினையுங் காலைப் புலவியுள் உரிய.
(தொல்: பொருளியல் – 223)

ஆனால் இராவணனோ ஊடற்காலத்தில்கூடத் தம் உரிமை மகளிரிடம் அடிபணிந்து நடந்துகொள்ள மாட்டான் என்று கம்பர் குறிப்பிடுவதன் வாயிலாய் எப்படிப்பட்ட சூழலிலும் யாரிடமும் அவன் தலைவணங்க விரும்புவதில்லை எனும் அவனது உறுதியான உளஇயல்பை நாம் தெளிவாய் உணர்ந்துகொள்ள முடிகின்றது.

இராவணனின் எழிலார் மணிமண்டபத்தில் தும்புரு எனும் வீணை வல்லானும், நாரத முனிவனும் வீணை மீட்டி இராவணனின் புகழை ஓதி அவனை மகிழ்வித்துக்கொண்டிருக்க, சுந்தர வடிவுகொண்ட அந்தரமகளிரும் அங்கே பணிப்பெண்களாய்த் தொண்டுபுரிந்துகொண்டிருக்க, மாந்தர்தம் உயிரைக் கவரும் கணிச்சிக் கூர்ம்படை கடுந்திறலானான எமனும் தன் சூலாயுதத்தைத் துறந்து, மேலாடையால் வாய்பொத்தி, பேரிகைகள் முழங்கும் நேரத்திலெல்லாம் நாழிகைக் கணக்கை அளவிட்டு இராவணனிடம் உரைத்துக் கொண்டிருந்தான்.

இப்படித் தேவர்களெல்லாரும் இராவணனுக்கு ஏவலராய் அவன் அரண்மனையில் சேவகம் செய்துகொண்டிருந்த வேளையில், மூன்றுலகாளும் இராவணனின் தங்கையான சூர்ப்பனகை, மூக்கறுந்த கோலத்துடனும் அழுகை ஓலத்துடனும் அரண்மனையின் வடக்கு வாயிலில் வந்து தோன்றினாள்.

அவளின் நிலைகண்ட இலங்கை மக்கள் காரணமறியாது கலங்க, விரைந்து அரண்மனைக்குள் நுழைந்தவள், குன்றின் அடியில் வந்துபடிந்த கருமேகமென இராவணனின் காலடியில் வீழ்ந்து புரண்டாள்.

[தொடரும்]

*****

கட்டுரைக்குத் துணைசெய்தவை:

  1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.
  2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
  3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.
  4. கம்பனில் மக்கள் குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *