உலகளாவிய தமிழிலக்கிய வரலாற்றில் ஒரு மைல்கல்

சங்கரி
சிங்கப்பூரைச் சேர்ந்த எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் அவர்களின் முன்னெடுப்பில், UNWINDING and other Contemporary Tamil Short stories என்ற 474 பக்கங்கள் கொண்ட பெருந்தொகுப்பு 43 சமகாலத் தமிழ்ச் சிறுகதைகளைக் கொண்டதாக 2019 ஜூலை மாதத்தில் எமரால்டு பதிப்பகத்தாரால் பிரசுரிக்கப் பெற்றது.
இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, ஃபிரான்ஸ், பிரிட்டன், ச்றிலங்கா ஆகிய 10 நாடுகளிலிருந்து அ. முத்துலிங்கம், இரா. முருகன், மாலன், நாகூர் ரூமி, சித்ரன், சத்யானந்தன், சத்யராஜ்குமார் உள்ளிட்டோரின் 37 படைப்பாளிகளின் ஆக்கங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. சிலருடைய, ஒன்றுக்கு மேற்பட்ட கதைகள் கொண்ட இந்நூலுக்குத் தொகுப்பாசிரியர் ஜெயந்தி சங்கர் மட்டுமின்றி வேறு மொழிபெயர்ப்பாளர்கள் சிலரும் மொழியாக்கத்தில் பங்காற்றியுள்ளனர்.
தமிழில் ஏராளமான அரிய படைப்பாளிகளிடமிருந்து சிறந்த படைப்புகள் வந்தபடியேதான் இருக்கின்றன. பிற மொழி, இன வாசகர்கள், தமிழ்ச் சிறுகதை உலகில் நிலவி வரும் போக்குகள் குறித்துச் சரியாக அறியவில்லை. அவ்வளவு ஏன், தமிழரில் கூட தமிழில் வாசிக்காமல் ஆங்கிலத்தில் வாசிப்பவர் நிறையப் பேர் இருக்கிறார்கள், அல்லவா? தேர்ந்தெடுக்கப்பெற்ற தமிழ்ச் சிறுகதைகள் ஆங்கிலத்தில் முன்னரும் சில தடவைகள் தொகுப்பாகப் பிரசுரம் கண்டுள்ளன. எனினும், திரும்பத் திரும்பத் தமிழகத்தைச் சேர்ந்த முன்னோடிப் படைப்பாளிகள் சிலரின் ஆக்கங்கள் மட்டுமே இடம்பெற்று வந்துள்ளன. இதன் காரணமாக ஒருவித இடைவெளி எப்போதுமே நிலவி வந்துள்ளது. தமிழ் வாசிக்காத தமிழர்களாகட்டும் பிற மொழியினராகட்டும் திரும்பத் திரும்ப அதே பத்திருபது பேர் தான் தமிழில் சமகாலத்தில் எழுதி வருகிறார்கள் என்பது போன்ற புரிதலுக்கு வழிவகுத்து வந்ததாகப் பல்லாண்டுகளுக்கு முன்னர் ஜெயந்தி சங்கர் உணர்ந்தார். அதன் நீட்சியாகவே இந்நூல் பிறந்துள்ளது. இதுபோன்ற தொகுப்பு முயற்சிகள், அந்த மாதிரியான இடைவெளிகளை இட்டு நிரப்ப வல்லவை. அவ்வகையில் இந்நூல் ஒரு முன்னோடி எனலாம். இந்தப் புத்தகத்துக்காக, ஒருநூறு பதிப்பாளர்களையாவது ஜெயந்தி சங்கர் அணுகியிருப்பார். இதனைப் பதிப்பித்த எமரால்டு பதிப்பகத்தார் பாராட்டுக்கு உரியவர்கள்.
வயது, நாடு, அனுபவம் போன்றவற்றைக் கடந்து. புதிதாக எழுதத் தொடங்கியவர்களின் சிறுகதைகளும் தொகுப்புக்காக பரிசீலிக்கப்பட்டன.
இந்த நூல் நான்காண்டுக் கால முழு உழைப்பைக் கோரியுள்ளது. உலகளாவிய நவீன தமிழிலக்கிய மொழியாக்க நூல் வரலாற்றில் இந்நூல் ஒரு மைல்கல் என்று நாம் துணிந்து கூறலாம்.
2010ஆம் ஆண்டு வாக்கில் இந்தத் தொகுப்பு நூல் திட்டத்தைப் பற்றி தொகுப்பாசிரியர், எழுத்தாளர் பாவண்ணன் அவர்களிடம் பேசினார். பதிப்பாளர் முடிவாகாமல் இது போன்ற வேலையைத் தொடங்காமல் இருப்பதே நல்லது என்று ஆத்மார்த்தமாக அவர் அறிவுறுத்தியதை அடுத்து இத்திட்டத்தை அப்படியே நிறுத்தி வைத்துள்ளார்.
தனது இலக்கிய நோக்கத்தைக் குறித்துப் புரிந்துகொண்டவர்களையும், அதற்குத் தங்கள் வசதிக்கேற்பவும் அறிவுக்கேற்பவும் அர்த்தங்கள் கற்பித்தவர்களும் என்று பலரையும் அறிந்து கொள்ள முடிந்திருக்கிறது. உப்புப் பெறாத காரணங்களுக்காக இறுதிக் கட்டத்தில் மூன்று பேர் தங்களது படைப்புகளைத் திரும்பப் பெற்றுக் கொண்டனர்.
தமிழ்ச் சிறுகதை மரபின் நூற்றாண்டுக் காலக் கொண்டாட்டத்தை ஒட்டி இந்நூல் பிரசுரம் காணும் என்று திட்டமிட்டு மீண்டும் 2016இல் இதனைக் கையில் எடுத்தார். அப்போதுதான் உலகளாவிய தொகுப்புநூல் என்று விவரித்ததை அடுத்து, மாலன் அவர்கள் மேலும் சிலரைப் பரிந்துரைத்தார். தம் கதையைத் தாமே மொழியாக்கம் செய்தளித்தார். ஏழெட்டு நாடுகளிலிருந்து சிறுகதைகள் என்றிருந்த திட்டம், பதினொரு நாடுகளிலிருந்து சிறுகதைகள் என்ற நிலைக்கு வளர்ந்தது. ஆனால், ஒருவரது சிறுகதை, ஆங்கிலத்துக்குக் கொண்டு வரக்கூடியதாக இருக்கவில்லை. ஆகவே, 10 நாடுகளிலிருந்து சிறுகதைகள் தொகுக்கப்பட்டன.
நீங்கள் ஒருவரே மொழியாக்கம் செய்வது மிகப் பெரிய பணி, மேலும் மொழிபெயர்ப்பாளர்களின் பங்களிப்பு உங்கள் வேலைப் பளுவை குறைக்கும் என்று அக்கறையோடு அறிவுறுத்தினார் எழுத்தாளர் சத்யானந்தன். அதற்கேற்ப படைப்பாளிகள் சிலர், தாங்களே மொழியாக்கம் செய்தனர். இன்னும் சிலர் தங்களுக்கு நன்றாகத் தெரிந்த மொழிபெயர்ப்பாளர்களைக் கொண்டு மொழியாக்கம் செய்தளித்தார். மூலப் பிரதியையும் மொழியாக்கத்தை ஒப்பிட்டுச் சரிபார்த்து, தொடர்ந்து படைப்பாளியோடு மின்னஞ்சலில் உரையாடி, பிரதியைச் சீர்ப்படுத்துவதில் ஈராண்டுகள் உருண்டன.
உரிய பதிப்பாளர் தேடவே ஈராண்டுகளுக்குப் போராடினார் ஜெயந்தி சங்கர். சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பகத்தில் இளைஞர் கார்த்திகேயன் முதலில் தொகுப்பின் மதிப்புணர்ந்து தானே வெளியிடமுடியுமா என்று யோசித்து, கிட்டத்தட்ட ஓராண்டுக் காலம் ஓடியது. டாக்டர் ரூமி அவர்கள்தான் தமது சிறுகதை மொழியாக்கம் செய்து கொடுத்ததோடு கார்த்திகேயனிடம் அறிமுகமும் செய்து வைத்தார். சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பகத்தின் கார்த்திகேயன், தனிப்பட்ட விஷயங்களுக்காகத் தமது பதிப்புப் பணியைச் சற்றே தாமதிக்க எண்ணியதால், அவரே எமரால்ட் பதிப்பகத்தின் ஒளிவண்ணன் அவர்களிடம் தொகுப்பைப் பரிந்துரைத்தார். அவ்வகையில் கார்த்திகேயனுக்கு இந்நூல் மிகக் கடமைப்பட்டுள்ளது.
நூலாசிரியர் குறிப்பு:
2015 முதல் முழுவீச்சில் ஆங்கிலத்தில் புனைவுகள் எழுதிவரும் ஜெயந்தி சங்கர் தற்போது ஆங்கிலத்தில் தனது முதல் நாவலை வெளியிட்டுள்ள நிலையில் இரண்டாவது ஆங்கில நாவலுக்கான பணியையும் தொடங்கிவிட்டார். தனது Dangling Gandhi என்ற இவரது ஆங்கிலச் சிறுகதைத் தொகுப்பில் ஆங்கிலச் சிறுகதைகளைச் சங்கரி என்ற தனது இல்லப்பெயரில் தானே மொழியாக்கம் செய்துள்ளார். இந்த மொழியாக்க நூல், இனிமேல் தான் அச்சாகவிருக்கின்றது. இதுவரை பல்வேறு விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பெற்றுள்ள Dangling Gandhi நூல், American book fest வழங்கும் 2020 International Book Award, Literary Titan award ஆகிய அனைத்துலக விருதுகளையும் வென்றுள்ளது. இவரது ஆக்கங்கள் வேற்றுமொழியில், குறிப்பாக ஆங்கிலம், ரஷ்யம், இந்தி, ஃபிரெஞ்சில் மொழிபெயர்ப்பு கண்டு வருகின்றன. ஆனந்தவிகடன் நம்பிக்கை விருது உள்ளிட்ட பல்வேறு பரிசுகளும் முக்கிய விருதுகளும் பெற்றுள்ள இவரது ஒவ்வொரு நூலும் ஏதோவொரு வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது. அண்மைக் காலமாக ஓவிய முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார். 1995 முதலே இலக்கியவுலகில் தொடர்ந்து இயங்கி வருகிறார்.