அக இலக்கியச் சிறுபாத்திரங்கள் – 19 (பாகன்)

0

ச. கண்மணி கணேசன் (ப.நி.),
முன்னாள் முதல்வர் & தமிழ்த்துறைத் தலைவர்,
ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி.

முன்னுரை 

தலைவன் வேண்டும் இடமெங்கும் அவனை அழைத்துச் செல்லும் தேர்ப்பாகன்  அகப்பாடல்களில் நேரில் இடம்  பெறும் பாத்திரம் ஆவான்.  பாகனுக்குக் கூற்று நிகழ்த்தும் தகுதியை அகஇலக்கணம் வழங்கவில்லை ஆயினும்;  அவனிடம் பேசும் பாத்திரங்கள் பலர். பாகன் பேசியதாகப் பிற பாத்திரம் கூறும் ஒரே ஒரு பாடல் உள்ளது.

பாகனே வலவன்

பாகன் வலவன் என்றும் அழைக்கப்படுகிறான். வேகமாகக் குதிரையைச் செலுத்துவாயாக என்னும் பொருள்பட;

“கடுமா கடவுமதி பாக” (குறுந்.- 250)

எனத் தலைவியை விரைந்து காணவேண்டும் என்ற அவாவினால் தலைவன் உரைக்கிறான். அதே அவாவினால்;

“ஏமதி வலவ தேரே” (நற்.- 21; ஐங்.- 485)

என்றும் ஏவுகிறான்.

பாகனைச் சுட்டிப் பேசுவோர்

தலைவன், தோழி, தலைவி, காமக்கிழத்தி ஆகியோர் கூற்றில்  பாகன் இடம் பெறுகிறான்.

தோழி கூற்று

கணவன் பிரிந்து சென்றுள்ளானே என்று மனமழிந்த தலைவியைத் தேற்றும் தோழி ‘காட்டில் இன்துணை இரலை மடப்பிணை கண்டவுடன் உன்னை நினைத்துத் தேரைத் திருப்பச் சொல்லிப் பாகனை ஏவி வந்து விடுவான்’ என்கிறாள் (அகம்.- 74). மான் இணை தலைவனுக்குத் தலைவியின் நினைப்பைக் கொடுக்க ஏதுவாக அமையுமென்கிறாள்.

இயற்கைப் புணர்ச்சிக்குப் பின்னர் பிரிந்து செல்லும் தலைவனிடம் ‘நீ மீண்டு வருவதற்குள் இவள் இறந்து விடுவாள்; ஆதலால் உடன் மணம் புரிந்து கொள்ள ஏற்பாடு செய்’ எனச் சூழ்நிலையை அறிவுறுத்தும் போது;

“இனமணி நெடுந்தேர் பாகன் இயக்கச் செலீஇய” (நற்.- 19)

என்று பாகனை வைத்து ஓட்டும் பெரிய தேரோடு செல்வம் மிகுந்தவனாக இருப்பதைக் குறிப்பாகத் தலைவனிடம் வலியுறுத்துகிறாள்.

களவுக்காலத்தில் தலைவன் தலைவியைச் சந்திக்க வரும்போது  தோழி; ‘உன் பாகனோடு சேர்ந்து எம் ஊரில் இரவுப் பொழுதில் தங்கி விருந்தயர்க’ என்கிறாள் (அகம்.- 340) இரவுக்குறியில் யாருமறியா வண்ணம் ஓசையின்றித் தேரில் வந்த தலைவன் இப்போது மணிக்குரல் கேட்கப் பாகன் ஓட்டும் தேரில் வருவதால் அவன் மணந்து கொள்ள வருகிறான் என்பது திண்ணம் என்கிறாள் தோழி (நற்.- 78). செவிலியிடம் அறத்தொடு நிற்கும் போதும் (அகம்.- 190); அன்னை காவல் கொண்ட காரணத்தைக் கூறும் போதும் (அகம்.- 20); ஊரலர் எழுவது திண்ணம் என்று உரைக்கும் போதும் (குறுந்.- 311) பாகன் ஓட்டிய தேர் தோழியால்  காரணமாகக் கூறப்படுகிறது.

தலைவன் கூற்று

கற்பு வாழ்க்கையில் கால உணர்வோடு தன் மனைவியைச் சேர வேண்டும் என நினைக்கும் தலைவன் தேரோட்டியை விரையச் சொல்கிறான் (ஐங்.- 482, 483, 484; அகம்.- 204, 224, 244).

“செல்க பாகநின் செய்வினை நெடுந்தேர்” (நற்.- 221)

என்று துரிதப்படுத்துகிறான். தூங்கிக் கொண்டிருக்கும் புதல்வன் அருகில் இருந்து கொண்டு; தன்னைப் பார்த்தவுடன் மகன் அழைப்பதைப் போல ‘வந்தீக எந்தை’ என்று குரல் கொடுக்கும் மனைவியின் அழகை ரசிக்க விரும்புவதாகக் காரணமும் கூறுகிறான். பாகன் விரைந்து தேரைச்  செலுத்தினால் தலைவியின் நெற்றிப் பசப்பு நீங்கிவிடும் என்கிறான் (அகம்.- 354). போகும் வழியில் தேரின் வேகம் கண்டு இரிந்தோடிய மான்கூட்டத்தில் தன் குட்டியோடு களரின்கண் சென்ற பிணைமானைத் தேடும் கலைமானைப் பாகனுக்குக் காட்டித் தன் தவிப்பைக்  குறிப்பாகப் புலப்படுத்துகிறான் (நற்.- 242).

தலைவி கூற்று

புறத்தொழுகும் தலைவனைப் பிற மகளிரின் இருப்பிடத்திற்குத் தேரில் ஏற்றிச் செல்வதால் கோபம் கொள்ளும் தலைவி;

“வேட்டோர் திறத்து விரும்பிய நின் பாகனும்
நீட்டித்தாய் என்று கடாஅம் கடுந்திண்டேர்” (கலி.- 66)

எனத் தலைவனோடு பாகனையும் சேர்த்துச் சாடுகிறாள். ‘உன் விருப்பத்திற்கு உரிய பெண்களிடம் நீ செல்வதைப் பாகனும் விரும்பியதால்;  தேரை இங்கே நீண்ட நேரம் நிறுத்தாமல் செலுத்துவதற்கே  ஆயத்தமாகிறான்’ என்று குறைப்பட்டுக் கொள்ளும் தலைவியின் மேல் இரக்கம் தான் பிறக்கிறது.

பரத்தையின் இல்லம் நாடிச் சென்று கொண்டிருந்த தன் கணவனின் தேரை  வழிமறித்த தளர்நடைப் புதல்வனைக் கண்டவுடன்; ‘நிறுத்து பாகனே’ என்று சொல்லி இறங்கி மகனைத் தழுவிக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தான்  கணவன் என மகிழ்ந்துரைக்கிறாள் தலைவி (அகம்.- 66).

காமக்கிழத்தி கூற்று

புறத்தொழுகும் தலைவன் பிற மகளிரோடு  இன்புறத் துணை செய்பவன் என்னும் பழி பாகன் மேலும் விழுகிறது. பாணனை வசைபாடும் போது பாகனும் வசை பெறுகிறான். தலைவன் எந்தப் பெண்ணைத் தேடிச் சென்று இருக்கிறான் என்று அறிய; சேரிதோறும் சென்று வினவித் துன்புறும் காமக்கிழத்தி;

“தேரோடு திரிதரும் பாகனைப் பழிப்பேமோ”  (கலி.- 68)

என்று தன் இயலாமையை வெளிப்படுத்துகிறாள்.

பாகன் பேசியமை 

ஒரே ஒரு பாடலில் பாகன் பேசியதாகக் காமக்கிழத்தி கூறுகிறாள். தலைவன்  மணம் செய்யும் மனை என்று கருதிக் காமக்கிழத்தி மனையில் புகுந்து ‘பொலிக’ என்று ஆரவாரித்தான் பாகன். புலைத்தொழிலை உடைய பாணனைக் குறை கூறுவோமா; அன்றி பாகனைக் குறை கூறுவோமா என்று அங்கலாய்க்கிறாள் அவள். தேரைத் தொட்டுச் சூளுற்றுப் பாகன் பரத்தையரைக் கொண்டுவந்து விட்டதாகவும் கூறுகிறாள்.

“தேரொடும் தேற்றிய பாகன் வந்து ஈயான்கொல்” (கலி.- 71)

என்ற காமக்கிழத்தியின் நக்கலான பேச்சு ‘அப்பெண்டிர்க்கு நின்னை ஒழியப் பிறர் இல்லை என்பதை நினைத்துப் பார்’ எனப் பாகன் உரைத்தமையைக் கூறித் தொடர்கிறது.

பாகனின் சிறப்புகள்

பாகனைச் சுட்டிப் பேசும் தலைவன் அவனை நூலறிவு மிக்கவன் என்றும்; மதிநுட்பம் உடையவன் என்றும்; வினை வல்லவன் என்றும் சிறப்பிக்கிறான். பாகனின் திறமை அவனது கைவன்மையில் இருக்கிறது என்னும் பொருள்பட;

“கைவல் பாகன் பையென இயக்க” (அகம்.- 230)

எனத் தன் நெஞ்சோடு பேசுகிறான் தலைவன். திறமைமிக்க பாகன் ஆகையால் அவன் மெல்லெனச் செலுத்தியும் விரைந்து தலைவியைச் சேர முடிந்தது என்கிறான். பாகனின் அறிவுமிகுதி;

“மதியுடை வலவ” (ஐங்.- 487)

என்று அழைக்கப்படுவதால் தெரிகிறது. தேர்ப்பாகனுக்கு அக்காலத்தில் நூலறிவும் தேவைப்பட்டு இருந்தது.

“நூலறி வலவ கடவுமதி” (அகம்.- 114)

என்னும் அடிக்கு உரையாசிரியர் பொருள் கூறும் போது பரிநூல் அறிந்தவன் என்று பொருள் கூறுகிறார். தேர்ப்பாகன் குதிரைகளைப் பற்றி நன்கு பயின்று இருந்தான் என்பது பொருளாகும்.

பாகனுக்குரிய புகழ்மொழி

பாகனைப் பாராட்டும் தலைவன் தனக்கு மனைவியைத் தந்தவனே அவன் தான் என்கிறான். தலைவி பிரிவுத்துன்பத்தில் உயிரை விடுமுன் வீட்டிற்கு அழைத்து வந்தமையை மனதார நன்றியுடன் நினைத்துப் பேசுகிறான். நீண்டவழிப் பாதையில் சென்றால் காலதாமதம் ஆகுமென்று பருக்கைகளை உடைய மேட்டுநிலமாகிய கரம்பையில் புதுவழி உண்டாக்கி ஓட்டி விரைவில் தன்னை மனைசேர்த்த பாகனை;

“முரம்புகண் உடைய ஏகிக் கரம்பைப்
புதுவழிப் படுத்த மதியுடை வலவோய்
இன்று தந்தனை தேரோ
நோயுழந்து உறைவியை நல்கலானே” (குறுந்.- 400)

என்று புகழ்ந்து அமைகிறான் தலைவன்.

பாகன் தலைவன் நெருக்கம் 

பாகனுக்கும் தலைவனுக்கும் இடையில் இருந்த உறவு அவனை விருந்தினனாக ஏற்று உபசரிக்கும் அளவிற்கு நெருக்கமாக இருந்தது. ‘காற்றைப் பூட்டி ஓட்டினாயா? அல்லது குதிரைக்குப் பதிலாக உன் மனதைப் பூட்டி ஓட்டினாயா?’ என்ற கேள்விகளுடன் தேரை விட்டு இறங்கிய தலைவன் அவனை மார்புறத் தழுவி வீட்டிற்குள் விருந்தினனாக ஏற்றுச் சென்றமையை;

“உரைமதி வாழியோ வலவ எனத்தன்
வரைமருள் மார்பின் நளிப்பனன் முயங்கி
மனைக்கொண்டு புக்கனன் நெடுந்தகை
விருந்தேர் பெற்றனள் திருந்திழையோளே” (அகம்.- 384)

எனும் பாடல் காட்சிப்படுத்துகிறது.

தன் அந்தரங்கத்தைக் கூடப் பாகனிடம் பகிர்ந்து கொள்கிறான் தலைவன். காட்டைத் தாண்டி வரும்போது பேச்சுத் துணையாக அமைபவன் பாகன் மட்டுமே ஆவான் ஆதலால்; அவனிடம் முன்னர் நிகழ்ந்தவற்றை நினைவு கூர்கிறான். மழை பெய்ததும் ‘தவளைகளின்  ஒலியால் தேரின் மணியொலியைத் தலைவி அறியவியலாது; ஆதலால் நீவிர் போய்த் தெரிவிப்பீர்’ என்று இளையரை விடுத்ததையும்; அவர்கள் சென்று அறிவித்ததையும்; உடனே அவள் நீராடிப் புனைந்து கொண்டதையும்; அந்நேரத்தில் தான் சென்று சேர்ந்ததையும்; அணைத்து மகிழ்ந்ததையும் பாகனிடம் பகிர்ந்து கொள்வது இருவருக்கும் இடையில் இருந்த நெருக்கத்தைக் காட்டுகிறது (நற்.- 42).

பிரிவுணர்த்திய போது தனக்கு விடைகூற இயலாது பூங்கொத்தைத் தளிரோடு சேர்த்துப் பிதிர்த்த அறிவு மயக்கம் உற்ற தன் மனைவி பற்றியும்  (நற்.- 106); அவள் மேல் தான் கொண்ட காதல் வேட்கை பற்றியும்  தேர்ப்பாகனிடம் வெளிப்படுத்தத் தயங்கவில்லை (அகம்.- 154).

பாகன் தொழில் செய்யும் முறை

திணைமாந்தருள் கிணைப்பொருநர் ‘வார்’ என்று பொருள்படும் ‘வள்பு’ எனும் சொல்லோடு சேர்த்துச் சொல்லப்படுவது போல்; பாகனும் பலவிடங்களில் குதிரையை இழுத்துப் பிடிக்கும் வள்பு எனும் வாருடன் தொடர்புறுத்தப்படுகிறான் (ஐங்.- 486).

போர் முடிந்து தேரில் எறிய தலைவன் சிறிது நேரத்தில் சற்றும்   எதிர்பாராத வகையில் ‘இறங்குக’ என்ற சொல் கேட்டு மருண்டான். அவ்வளவு வேகமாகத் தன்னை இல்லம் கொண்டுவந்து சேர்த்த அவனை;

“… ………… ………… வள்பு ஆய்ந்து
இயக்குமதி வாழியோ கையுடை வலவ” (அகம்.- 344)

என்று தோலாலான கடிவாளத்தை இழுத்துச் செலுத்திய அவனது கைவன்மையை வாயாரப் புகழ்கிறான்.

பாகன் குதிரையைச் செலுத்தும் முறையுடன் வள்பு மட்டுமின்றி தாற்றுக்கோல், அதன் நுனியில் இருக்கும் முள் முதலியவை தொடர்புறுத்திப் பேசப்படுகின்றன.

“முள்ளிட்டு ஊர்மதி வலவ” (ஐங்.- 481)

என்று குதிரையின் வேகத்தைக் கூட்ட ‘தாற்றுக்கோலின் நுனிமுள்ளால் தூண்டு’ என்று கட்டளை இடுவதையும் காண்கிறோம்.

நான்கு குதிரைகள் பூட்டிய தேரைப் பாகன் ஓட்டியமை;

“நன்னால்கு பூண்ட கடும்பரி நெடுந்தேர்” (அகம்.- 104)

என்னும் அடியால் புலனாகிறது.

தேரினை அதன் உறுதிவாய்ந்த உருளை நிலத்தில் பதிந்து உருண்டு வரச் செலுத்துவாயாக என்பதை;

“வள்வாய் ஆழி உள்ளுறுபுருளக்
கடவுக காண்குவம் பாக” (அகம்.- 54)

என்னும் தலைவன் கூற்று பாணனின் தொழில் நுட்பத்தை அடியொட்டியது.

“…… ….. ……. … உளையணி
உலகு கடப்பன்ன புள்ளியல் கலிமா
வகையமை வனப்பின்” (அகம்.- 64)

என்பதால் உலகையே கடப்பது போன்ற தன்மையுடைய குதிரை பறவை பறப்பது போல் தேரிழுப்பதைப் பற்றிப் பாகனோடு சொல்லாடுகிறான் தலைவன். தாழ்ந்த நிலம் நோக்கிப் பாயும் வெள்ளம் போலக் குதிரைகள் பாய்ந்து சென்றிழுக்கும் தேரைத் தோழி காட்சிப்படுத்துகிறாள் (அகம்.- 400)

கழியைக் கடக்குங்கால்  சுறாமீன்  குதிரையைத் தாக்கப்;  போக்கு தடைப்பட்டமையால் நேர்ந்த தலைமக்கள் சந்திப்பு  குறித்துத் தோழி செவிலியிடம் அறத்தொடு நிற்கும் போது;

“வயச்சுறா எறிந்தென வலவன் அழிப்ப” (அகம்.- 190)

எனக் கூறுகிறாள். பாகனின் பணியில் நேரும் சிக்கல்; வேறு ஒரு குதிரையைக் கொண்டு வந்து சேர்த்த பிறகே தீருமாதலால் தலைமக்கள் நட்பு வளர ஏதுவானது என்கிறாள்.

பாகனால் இன்புறும் இளையர்

தலைவன் தேருக்குப் பின்னே ஓடிவரும் இளையர் இன்புறுவதும் பாகனின் திறமையில் பொருந்தி உள்ளது; ஏனெனில் அவர்களுக்கும் வினைமுடித்து வீடுதிரும்பும் காலம் விரைவில் வாய்ப்பது பாகனின் செயல்திறனைப் பொறுத்ததே.

“வென்வேல் இளையர் இன்புற வலவன்
வள்பு வலித்து ஊரின் அல்லது முள்ளுறின்” (அகம்.- 104)

என்று தோழி கூறுகிறாள்.

ஈரநெஞ்சு கொண்ட தலைவனும்  பாகனும்

காட்டுவழியில் தேரைச் செலுத்தி வரும்போது தேரின் மணியொலியோ; குதிரையின் குளம்பொலியோ கேட்காதவண்ணம் செலுத்துவாயாக என்று பாகனை வேண்டும் தலைவன்; மான் முதலிய அஃறிணை உயிர்களின் நடுநாள்  புணர்ச்சிக்கு இடையூறு செய்யக்கூடாது என்னும் கொள்கை உடையவன் ஆதலால்;

“இடிமறந்து ஏமதி வலவ” (அகம்.- 134)

என்கிறான். பாகனும் நெய்தல் நிலத்தில் தேரோட்டும் போது தன் தேர்ச் சக்கரத்தில் நண்டுகள் சிக்கி விடாதபடி பார்த்து ஓட்டியமை;

“ஆழி மருங்கின் அலவன் ஓம்பி
வலவன் வள்பு ஆய்ந்து ஊர” (நற்.- 11)

என்று புனைந்து உரைக்கப்படுகிறது.

பாகன் பாத்திரம் புலப்படுத்தும் தமிழ்ச் சமுகநிலை

வினைமுற்றி மீளும் தலைவன் பல பாடல்களிலும் வேந்தனுக்காகவோ அன்றி மன்னனுக்காகவோ போரில் பங்கேற்றுத் திரும்புபவனாக உள்ளான். அப்போர் விளைநிலமாகிய நாட்டை மன்னனிடம் திறைப்பொருளாகப் பெற்ற பிறகு முடிவு அடைவதைக் காண்கிறோம்.

வேந்தன் பகை தணிந்தமை கூறிக் கிளம்பச் சொல்கிறான் தலைவன்

“இருநிலம் குறையக் கொட்டிப் பரிந்தின்று
ஆதி போகிய அசைவில் நோன்தாள்
மன்னர் மதிக்கும் மாண்வினைப் புரவி
கொய்ம்மயிர் எருத்தில் மெய்ம்மணி ஆர்ப்பப்
பூண்கதில் பாக நின் தேரே……………………
உறுபகை தணிந்தனன் உரவுவாள் வேந்தே” (நற்.- 81)

என்று பாகனை ஏவும்போது தனது தேரையும் குதிரையையும் அறிமுகம் செய்கிறான் தலைவன். ‘அகன்ற நிலம் குழியும்படித் தன் கால்களால் கொட்டி நடந்து; விரைந்து ஆதி என்னும் நெறிப்படி நேராக ஓடுகின்ற குதிரையின் கொய்ம்மயிர் உடைய பிடரியில் கட்டிய மணிகள் ஒலிக்கத் தேரில் பூட்டுக’ என்கிறான். தனது குதிரை மன்னனும் விரும்பத் தக்கது என்று விதந்து கூறுவதால் அவன் மன்னனைச் சார்ந்திருக்கும் தலைவன் என்பதில் ஐயமில்லை.

மன்னர் திறை கொடுத்ததால் பகை நீங்கி; வேந்தனும் மன்னரும் நட்பினராகி விட்டனர் என்ற நிலையைக் கூறி;

“ஊர்க பாக” (அகம்.- 44)

என ஏவுவதையும் காண்கிறோம்.

தான் சார்ந்த வேந்தன் மன்னனிடம் இருந்து நன்செய் நிலங்களைத் திறையாகப் பெற்றமையால் வினை முடிந்தது என்று கூறித் தன் மனையை நோக்கி விரையச் சொல்கிறான் இன்னொரு தலைவன்.

“நாடு திறை கொண்டனம் ஆயின் பாக” (அகம்.- 334)

எனக் கூறிக் கிளப்புகிறான்.

புராணப் பாகன்

பரிபாடலில் சிவபெருமான் தன் காளை வாகனத்தை ஓட்டும் பாகனாகச் சித்தரிக்கப்படுகிறார்.

“செவ்விடைப் பாகன் திரிபுரம் செற்றுழி ” (பா.- 23)

எனத் திரிபுரம் எரித்த புராணக்கதை புனையப்பட்டுள்ளது.

முடிவுரை

பாகன் வலவன் என்றும் அழைக்கப்படுகிறான். தலைவன், தோழி, தலைவி, காமக்கிழத்தி ஆகியோர் கூற்றில் பாகன் இடம் பெறுகிறான். ஒரே ஒரு பாடலில் பாகன் பேசியதாகக் காமக்கிழத்தி கூறுகிறாள். குதிரைகள் பற்றிய நூலறிவு உள்ள பாகன் தோலாலான கடிவாளத்தை இழுத்து; முள் முனை உள்ள தாற்றுக்கோலால் தீண்டி; நான்கு குதிரைகள் பூட்டிய தேரைக் காற்றுப்  போலவும்; பள்ளம் நோக்கிப் பாயும் வெள்ளம் போலவும் செலுத்திய கைவன்மை மிக்கவன் ஆவான். மதிநுட்பம் மிக்க பாகன்; தேவைப்படும் போது புதுவழி உண்டாக்கித் தலைவனுக்கு உதவினான். தலைவன் தன்னுடைய அந்தரங்கத்தைக் கூடப் பாகனுடன் பகிர்ந்து அவனை விருந்தாக ஏற்றுப் போற்றினான். புறத்தொழுகும் தலைவனுக்கும் பாகன் உதவி; வசை பெறுகிறான். தேர் கழியைக் கடக்குங்கால்  சுறாமீன்  குதிரையைத் தாக்கப்;  போக்கு தடைப்படுவது பாகனுக்கு ஏற்படும் பெரிய சிக்கல் ஆகும். தலைவன் தேருக்குப் பின்னே ஓடிவரும் இளையர் இன்புறுவதும் பாகனின் திறமையில் பொருந்தி இருந்தது. அஃறிணை உயிர்களுக்கு இடையூறு செய்யக்கூடாது என்னும் கொள்கை தலைவனிடமும் பாகனிடமும் இருந்தது. வேந்தனுக்காகவோ அன்றி மன்னனுக்காகவோ போரில் பங்கேற்றுத் திரும்புபவனின் தேர்ப்பாகன் என்ற பாத்திரத்தின் பங்கேற்பு மூலம் அன்றைய தமிழ்ச் சமூகநிலையும் புலனாகிறது.. போரானது விளைநிலமாகிய நாட்டை மன்னனிடம் திறைப்பொருளாகப் பெற்ற பிறகு முடிவு அடைவதைக் காண்கிறோம். சிவபெருமான் தன் காளை வாகனத்தை ஓட்டும் பாகனாவார்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *