புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
விளார் புறவழிச்சாலை, 
தஞ்சை மாவட்டம் – 613006.                  
மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

 வள்ளுவர் சொன்ன கதையும் பரிமேலழகர் எழுதிய உரையும்

முன்னுரை

தமிழிலக்கணம் எழுத்து, சொல், பொருள் என்னும் முத்திறத்தன. அதில் யாப்பு, அணி என்பனவற்றைக் கூட்டிய வழக்கு பிற்காலத்தது. எனின் யாப்பு பொருளுக்குள்ளேயே அடங்கும், அது செய்யுள் கட்டுமானம் பற்றயதாதலின். செய்யுளின் உள்ளடக்க உத்தியைத் தொல்காப்பியத்தின் பொருளியல் விளக்குகிறது. எனவே அணி என்பது தமிழ்நெறியாகாது. ‘செய்யுளுக்கு அணி’ என்பது பெண்ணுக்கு அணிகலன் என்பதுபோலப் புற அழகைக் கூட்டுமேயன்றி அகத்துக்கு அழகுதராது. தமிழ்க்கவிதைகளின் வெற்றி அவற்றின் யாப்பில் இல்லை. பொருளில்தான் அடங்கியுள்ளது. யாப்பினால் ஒரு கவிதையோ காப்பியமோ வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை. அது புலவர்களின் திறங்கூறலாம்.

“வெண்பாவிற்புகழேந்தி பரணிக்கோர்
சயங்கொண்டான் விருத்தமென்னும்
ஒண்பாவிற் குயர்கம்பன் கோவையுலா
அந்தாதிக் கொட்டக் கூத்தன்
கண்பாய கலம்பகத்திற் கிரட்டையர்கள்
வசைபாடக் காள மேகம்
பண்பாகப் பகர்சந்தம் படிக்காச
லாலொருவர் பகரொ ணாதே.”

பலபட்டடைச் சொக்கநாதப் புலவரும் மூன்று புலவர்களைத் தவிர மற்றவருக்கான பெருமையை அவர்தம் கவிதைகளின் பொருண்மைக்கு ஏற்றியுரைப்பதைக் காணலாம். எனவே செய்யுளணி என்பது மிகவும் பிற்காலத்தது. தண்டியலங்காரம் செய்த ‘தமிழ்வினை’ அது. உவமம் அணியாகாது என்பதும் அதனைத் தவிர வேறு எதனையும் தமிழ்க்கவிதைகள் செறித்துக் கொள்வதில்லை என்பதும் தனி ஆய்வுக்குரியது. பொருட்பகுதியான உவமத்தைப் பின்னாலே வந்தவர்கள் அணியாக வரித்துக் கொண்டது அவர் விருப்பம் ஆயிற்று. ஆகவே பொதுமக்களாலும் பிறராலும் அவ்வணிகள் புறக்கணிக்கப்பட்டன. அல்லது அணியை முன்னிறுத்தி எழுதப்படும் இலக்கியங்கள் தோல்வி கண்டன. திருவள்ளுவர் காலத்திலோ தொல்காப்பியர் காலத்திலோ அணியிலக்கணச் சிந்தனை தமிழில் இருந்ததற்கான அடையாளம் ஏதுமில்லை. ஆனால் திருக்குறளுக்குத் தாம் எழுதிய உரையில் பரிமேலழகர் பல இடங்களில் அணியிலக்கணத்தைப் பொருத்திக் காட்டுவதைக் காணலாம். அந்த அடிப்படையில் பிறிதுமொழிதல் அணி பற்றிய அழகரின் விளக்கம் விரிவாகவும் ஆய்வதையே இக்கட்டுரை தனது நோக்கமாகக் கொண்டு அமைகிறது.

பழமொழிகளும் சமுதாயமும்

சமுதாயத்தின் சாயலே இலக்கியம். அதாவது சமுதாயச் சிந்தனைகளின் நிழல் படியாத இலக்கியம் கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும்.  சமுதாயச் சிந்தனைகள் என்னும் தொடர் மக்கள் வழக்காறுகளையும் உள்ளடக்கியதே. மொழி மக்களுக்கானது. ‘வழக்கும் செய்யுளும்’ என்பது தொல்காப்பியம். மக்கள் வழக்கில் ஒரு முறை காணப்படுகிறது. அந்த முறை என்னவென்றால் கசப்பான கருத்துக்களையோ இன்றியமையாக் கருத்துக்களையோ நேரடியாகக் கூறின் கேட்பார் மனம் புண்படும் எனக் கருதிக் குறிப்பாகச் சொல்லுவது. பிறரைக் காட்டிச் சொல்லுவது. உவமங்களால் சொல்லுவது என இது பலதிறத்தவாகும். சான்றாகக் ‘காற்றுள்ள போதே தூற்றிக்கொள்’ என்பது. இது நெல் மணியைக் காணாதவனுக்குப் பொருந்துமா? ஒரு செயலைச் செய்து முடிக்கும் காலச் சூழல் நிலையாக இருக்காது., தொடராது. எனவே அந்தச் சூழல் அமைகிற அந்தக் குறித்த குறைந்த காலத்திலேயே அதனை முடித்துக் கொள்ள வேண்டும் என்பதைத்தான் இந்தப் பழமொழி உணர்த்துகிறது. அன்றிக் காற்றைப் பற்றியும் தூற்றுவதைப் பற்றியும் கூறுவதாகாது. ‘கள்ளன் பெண்சாதி கைம்பெண்’ என்பது ஒரு பழமொழி. ‘மற்றவர் பெண்சாதி கைம்பெண் ஆகமாட்டார்களா?’ என்றால் இல்லை. கள்ளன் திருடுவதையே தொழிலாகக் கொண்டிருப்பதால் கொலை எப்போதும் நிகழலாம். அவன் மனைவிக்கு மங்கல வாழ்க்கை நிலையில்லை. திருடச் சென்ற கணவன் உயிரோடு திரும்புவான் என்பதற்கு உறுதியில்லை. எனவேதான் மனைவியாகவே இருந்தாலும் கள்ளனுக்கு வாழ்க்கைப்பட்டால் விதவையாகவே வாழ வேண்டும்’ என்பதை உணர்த்துகிறது.

பழமொழியே பிறிது மொழிதலணி

பிறிது மொழிதல் அணி பற்றிய தண்டியலங்காரக் கருத்து இப்படி அமைந்திருக்கிறது.

“கருதிய பொருள் ஒத்தது புலப்படுத்தற்கு
ஒத்தது ஒன்று உரைப்பின் அஃது ஒட்டென மொழிப” (தண்டி-52)

“கருதிய பொருளை மறைத்து, ஆனால் அதனை வெளிப்படுத்தற்குப் பொருத்தமான பிறிதொன்றனைச் சொல்வது ஒட்டு என்னும் அலங்காரமாம்” என்னும் உரை இந்த அணி விளக்கத்திற்கு மட்டுமன்று முந்தைய பத்தியில் கூறப்பட்டிருக்கும் பழமொழிக்கான பொருளுணர்த்தும் பாங்கிற்கும் பொருந்துவதைக் காணலாம். தண்டியலங்கார உரையாசிரியர் இதனை ‘உவமப்போலி’ எனவும் ‘பிறிது மொழிதல்’ எனவும் ‘நுவலா நுவற்சி’ எனவும்  ‘புனைவிலிப் புகழ்ச்சி’ எனவும் அணியின் பிறபெயர்களைக் கூறுகிறார். ‘சுருக்கணி என்பது வீரசோழியம்’ சொல்ல வேண்டியதைப் பிறிதொன்றால் விளக்குவது ஆதலின் பிறிது மொழிதல் ஆயிற்று. ‘சொல்லாமல் சொல்வது’ என்பதால் நுவலா நுவற்சி ஆயிற்று.

ஆனால் உவமப்போலி என்பது அகப்பொருள் பொருள் புலப்பாட்டு உத்தி. இதனை ‘உள்ளுறை உவமம்’ என்பதும் வழக்கு. இது அகப்பொருளுக்கே உரியது. பிறிது மொழிதல் அணியோ புறப்பொருளுக்கு உரியது. அகத்தில் உவமப்போலியாக இருப்பது புறத்தில் பிறிதுமொழிதல் அணியாகுமா என்பதற்கும் போதிய விளக்கம் பெறுமாறு இல்லை. புறத்திணையில் கருத்துக்களை வெளிப்படுத்துகிற முறையாக புறநிலை வாழ்த்து, வாயுறை வாழத்து, செவியறியுறூஉ என்பன போலப் பல உள்ளன. எனவே பிறிதுமொழிதல் அணியை ‘உவமப்போலி’ என்பது பொருந்தாதாயினும் உள்ளுறை உவமத்தில் பொருளுணரும் பாங்கும் பிறிதுமொழிதலணியில் பொருளுணரும் பாங்கும் ஓரளவு ஒத்திருப்பதால் இதனை ஏற்கலாம்.

பிறிதுமொழிதல், ஒட்டு, நுவலாநுவற்சி, உள்ளுறை உவமம், இறைச்சி ஆகியவையெல்லாம் ‘பழமொழி’ என்னும் மக்கள் வழக்கின் இலக்கிய இலக்கண உருவாக்கங்களே என்பது தள்ளிவிடக் கூடிய கருத்தன்று.

திருக்குறளில் பிறிது மொழிதல்

திருக்குறளில் இவ்வாறு பிறிது மொழிதலணியாகக் கருதக்கூடிய பாடல்கள் அமைந்ததற்கு அணியிலக்கணச் சிந்தனை காரணமன்று. முந்தைய பத்திகளில் பதிவு செய்யப்பட்ட வழக்கியல் சார்ந்த சிந்தனைகளும் பழமொழிப்  பயன்பாடுகளுமே எனலாம். கடுஞ்சொல்லை விலக்கி இன்சொல்லை முன்னெடுக்கும் திருவள்ளுவர்க்கு இது இயல்பாகவும் இருந்திருக்க முடியும்.  அதனால்தான் ஒட்டுமொத்த திருக்குறள் நூலில் அதாவது ஆயிரத்து முந்நூற்று முப்பது பாடல்களில் வெறும் எட்டு பாடல்களில் மட்டுமே இத்தகைய பதிவுகள் காணக்கிடக்கின்றன. அவையும் பொருட்பாலில் மட்டுமே அமைந்துள்ளதும் நோக்கத்தக்கது.

எதற்கும் அளவுண்டு எளியர்க்கும் வலிவுண்டு

‘நாலாறு கூடினால் பாலாறு’ என்பது பழமொழி. துன்பத்தைப் பாரம் என்பது வழக்கு. ‘மனப்பாரம்’, ‘தலைப்பாரம்’ என்னும் வழக்கு நோக்குக. பாரம் அதிகமானால் மனம் உடையும். பொருள் அளவு மிக, வண்டியின் அச்சும் முறியும். இந்த உள்ளடக்கத்தையும் எடுத்துக்காட்டையும் பொருட்பாலில் வலிமைமிகுந்த மன்னனைப் பார்த்து வள்ளுவர் கூறுகிறார்.

“பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்” (475)

என்று. இந்தக் குறட்பாவிற்கு உரையெழுதிய பரிமேலழகர் “பீலியேற்றிய சகடமும் அச்சு முறியும். அப்பீலியை அது பொறுக்கும் அளவின்றி மிகுத்து ஏற்றின்” என்னும் பொழிப்புரையில் ‘பொறுக்கும் அளவின்றி’ என்னும் தொடர் பயின்றிருப்பது காண்க.

“எளியர் என்று பலரோடு பகைகொள்வான், தான் வலியனே ஆயினும் அவர் தொக்க வழி வலியழியும், என்னும் பொருள் தோன்ற நின்றமையின், இது பிறிது மொழிதல் என்னும் அலங்காரம்.”

என்று எழுதிக் காட்டுகிறார். எளியவர்க்கு வலிமை குறைவே. ஆனால் அவ்வெளிமையே கூட்டணி அமைத்துக் கொண்டால் எளிமை வலிமையாகும். வலிமை எளிமையாகும். இன்றையக் காலக்கட்டத்து அரசியல் நுட்பத்தை அன்றே திருவள்ளுவர் கண்டுணர்ந்து எழுதியிருப்பதைக் காணலாம். இந்தப் பாடலில் திருவள்ளுவர் மயிற்பீலி மென்மையானது என்பதைச் சொல்லவோ அதனை அளவுக்கதிகமாக ஏற்றினால் வண்டியின் அச்சு முரிந்துவிடும் என்பதைச் சொல்லவோ வரவில்லை. இவையெல்லாம் அந்தக் காலத்துச் சமுதாயத்து நடைமுறைகள். அனைவரும் அறிந்த உண்மை. சாதாரண மனிதனுக்குத் தெரிந்த வழக்கியல் உண்மையை வைத்து நாட்டை ஆளும் மன்னனுக்கு அவன்தன் வலிமையின் அளவுணர்த்தும் அறிவுரை என்பதைப் பரிமேலழகர் விளக்கிக் காட்டுகிறார்.

எதற்கும் எல்லையுண்டு

‘கரும்பு இனிக்குதென்று வேரோடும் பிடுங்காதே’, ‘போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து’ என்பன சிற்றூர் வழக்கு. ‘கொடுக்கிறான் என்பதற்காகத்  தொந்தரவு செய்யாதே’ என்பதைச் சொல்லவந்தவர், சொல்ல வேண்டியதை மறைத்து வேறு வாய்பாட்டில் சொல்லிய பழமொழிகள் இவை. இவை போன்ற பொருள் தரும் பழமொழிக் கருத்தினைத் திருவள்ளுவர்,

“நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந்தூக்கின்
உயிர்க்கு இறுதியாகி விடும்” (476)

என்னும் குறட்பாவில் பதிவு செய்திருக்கிறார். “ஒரு மரக்கோட்டினது நுனிக்கண்ணே ஏறி நின்றார் தம் ஊக்கத்தால் அவ்வளவினைக் கடந்து மேலும் ஏற ஊக்குவாராயின் உயிர்க்கு இறுதியாகிவிடும்” என்று பொழிப்புரை தரும் பரிமேலழகர்,

“பகைமேல் செல்வான் தொடங்கித் தன்னால் செல்லலாம் அளவும் சென்று நின்றான். பின் அவ்வளவின் நில்லாது மன எழுச்சியான் மேலும் செல்லுமாயின், அவ்வெழுச்சி வினை முடிவிற்கு ஏதுவாகாது அவன் உயிர் முடிவிற்கு ஏதுவாம்” என்னும் பொருள் தோன்ற நின்றமையின் இதுவும் மேலை அலங்காரமாம்.”

முந்தைய பாட்டில் தனியொரு பகைவன் எளியன் என்று எண்ணாதே அவனையொத்தார் இணைந்து கொண்டால் தனியொரு வல்லாளன் வலிமை குறைந்தவனாக்கப்படுவான் என்பதைக் கூறிய திருவள்ளுவர் இந்தப் பாடலில் உன் ஊக்கம் பெரிது என்பதற்காகவும் எதிர்ப்பார் யாரும் இல்லை என்பதற்காகவும் அளவு கடந்து போகாதே என்னும் உண்மையைக் கூறுகிறார். ஊக்கம் வினைமுடிக்க உதவ வேண்டும். ஆனால் மனவெழுச்சியால் முந்துறுகிற பொழுது அந்த ஊக்கமே அவனைக் கொன்று விடுகிறது. ‘வினை முடிவிற்கு ஏதுவாகாது உயிர் முடிவிற்கு ஏதுவாம்’ என்னும் சுருங்கச் சொல்லி விளக்கும் அழகரின் உரைத்திறன் சொல்லி மாளாது.

முதலைக்கு முடிவு தரையில்

‘சேற்றிலே புதைந்த யானையைக் காக்கை கொத்தும்’ என்பது பழமொழி! பகைவலிமை அறிந்து செயல்பட வேண்டிய அரசனுக்கு வழிசொன்ன திருவள்ளுவர் கள நிலவரத்தை ‘இடனறிதல்’ என்னும் சொல்லால் அறிவுறுத்துகிறார்.

“நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற” (495)

என்னும் குறட்பாவிற்கு “முதலை ஆழமுடைய நீரின்கண் ஆயின் பிறவற்றையெல்லாம் தான் வெல்லா நிற்கும். அப்புனலின் நீங்குமாயின் அதனைப் பிறவெல்லாம் வெல்லா நிற்கும்” எனப் பொழிப்புரை எழுதிய பரிமேலழகர் எழுதிக்காட்டும் விளக்கவுரை அவருடைய நுண்ணியத்தைக் காட்டுவதாக அமைந்திருக்கிறது.

“மேற்செல்லும் அரசன் பகைவன் நிற்றலாற்றா இடமறிந்து செல்வராயின் அவர்  தமக்கு எளியராவரன்றித் தாம் நிற்கலாற்றர் இடத்துச் செல்வராயின் அவர்க்கு எளியராவர் என்னும் பொருள் தோன்ற நின்றமையின் இது பிறிது மொழிதல் என்னும் அலங்காரமாம்.”

“எதிரி நிற்கமுடியாத இடத்தில் தான் நின்று கொண்டு அவன் நிற்க முடியாத இடத்தில் அவனை எதிர்ப்பதே வெற்றி தரும் போர்முறை. மாறாக தான் நிற்கமுடியாத இடத்தில் தான் நின்று கொண்டு உறுதியான இடத்தில் நிற்கும் எதிரியை எதிர்த்தால் நமக்கு எளியராய் இருந்திருக்க வேண்டிய எதிரிக்கு நாம் எளியவர் ஆகிவிடுவோம்” என்று அறிவுறுத்துகிறார் திருவள்ளுவர். முதலைக்கு இறுதி தரையில் என்பதை அறிந்து கொண்டு அதனைத் தாக்கியழிப்பதைப்போலப் பகைவர்களை அழிக்க வேண்டுமாம் என்பது வரலாறு. இதனை உள்வாங்கி எழுதும் அழகரின் விளக்கவுரை பலமுறை படித்து இன்புற்று வியக்கத்தக்கதாம்.

கப்பலுக்குக் கடலே வீதி! தேருக்குத் தெருவே வீதி!

‘ஆனைக்கொரு காலம் வந்தா பூனைக்கொரு காலம் வரும்’ என்பதும் ‘ஓடமும் ஒருநாள் வண்டியிலேறும் வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும்’ என்பதும் தமிழகப் பழமொழிகள். இவையொத்தன இன்னும் இருக்கலாம். இதன் சாரத்தை இலக்கிய மதிப்பீட்டுக்கும் பொருட்பாலின் பொருளடர்த்திக்கும் பயன்படுத்திக் கொள்ளும் திருவள்ளுவரின் சதுரப்பாடு பின்வரும் குறட்பாவில் அறியப்படுகிறது.

“கடல்ஓடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து” (496)

“நிலத்தின்கண் ஓடும் கால்வலிய நெடுந்தேர்கள் கடலின்கண் ஓடமாட்டா. இனி அக்கடலின்கண் ஓடும் நாவாய்கள் தாமும் அந்நிலத்தின்கண் ஓடமாட்டா” எனப் பொழிப்புரை எழுதிய பரிமேலழகர்,

‘மேற்சென்றார் பகைவர் இடங்களை அறிந்து அவற்றிற்கு ஏற்ற கருவிகளான் வினை செய்க என்பது தோன்ற நின்றமையின் இதுவும் மேலை அலங்காரமாம்.

என விளக்கவுரை எழுதியிருக்கிறார். பொழிப்புரையிலேயே அவருடைய நுண்ணியம் வெளிப்படுவதை அறியலாம். கடலோடும் நாவாய் என்பதைக் கொண்டு ‘நிலத்தோடும் தேர்’ என்று எழுதுகிறார். ஓடுதற்குரிய வலிய கால்கள் இருந்தாலும் அவையின்றி நீந்தும் நாவாய் ஆகாது. இதுபோலவே பாய்மரம், பாய், சுக்கான் முதலிய கடல் நீந்தும் கருவிகள் இருந்தாலும் நாவாய் தரையோடும் தேராகாது. ‘ஏற்ற கருவிகளால் வினைசெய்க’ என்பதுதான் திருவள்ளுவர் சொல்லவரும் கருத்து. ‘கப்பலுக்குக் கடலே வீதி’ என்பதும் ‘தேருக்குத் தெருவே வீதி’ என்பதும் தெரியாத பொருளல்ல. தெரிந்த பொருளைக் காட்சிப்படுத்தியதன் நுட்பத்தை உணர்ந்துகொண்டு பரிமேலழகர் எழுதும் பாட்டுக்கு அப்பாற்பட்டு நிற்கும் ஆழமான பொருளை அதிகாரப் பொருண்மைக்கேற்ப இயைபுபடுத்தி உரைக்கும் உரைத்திறன் உணர்க.

நரிக்கதை சொன்ன நாயனார்

பாட்டி சுட்ட வடையைக் கவ்விக் கொண்ட காக்கையை நரி ஏமாற்றிய கதையைப் பள்ளியில் படித்தவர்கள் நாம். ஆனால் நரியை அதன் சூழல்பற்றி மதயானையை வெல்லும் என்ற அதன் திறனைப் பாடியிருக்கிறார். இங்கே நரியைப் பாடுவது திருவள்ளுவர் நோக்கமன்று. யானையின் தோல்வியைப் பாடுவதுதான் அவர் நோக்கம். அவர் பாடுகிறார்.

“காலாழ் களரின் நரியடும் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு” (500)

இந்தப் பாட்டிற்குப் “பாகர்க்கு அடங்காவுமாய் வேலாள்களைக் கோத்த கோட்டவுமாய களிறுகளை அவை கால் ஆழும் இயல்பிற்றாய சேற்று நிலத்துப் பட்டுழி நரி கொல்லும்” என்று பொழிப்புரை எழுதும் பரிமேலழகர் அந்தப் போர்க்களக் காட்சியை அப்படியே சித்திரித்துக் காட்டுகிறார்.

பரிமேலழகர் சித்திரித்துக் காட்டும் காட்சி வள்ளுவருடையது. சித்திரிப்பு அழகருடையது. களிற்றின் முகத்தில் ஆட்கள் தொங்குகிறார்கள். எப்படி? அவர்கள் அந்த யானையை எதிர்த்தபோது கையில் வேலைத் தாங்கிய வீரர்கள். அவர்கள் வேலொடு நின்றபோது எதிர்சென்று குத்தித் தூக்கிய யானையின் தந்தத்தில் அவர்கள் தொங்குகிறார்களாம். அத்தகைய வல்லமை உள்ள களிறு.  இது யானையின் ஒரு வகை வீரம். இன்னொரு வீரத்தை ஒரு சொல்லால் திருவள்ளுவர் குறிக்கிறார். அந்தச் சொல் ‘கண்’ என்பது. கண் என்றால் மூங்கில். பாகன் கையில் வைத்திருக்கும் கோல் மூங்கிலால் ஆனது. முகப்பு இரும்பால் நங்கூரம்போல் இருக்கும். எனவே அது அந்தக் கோலுக்கு ஆகி வந்தது ஆகுபெயர். பிறகு அந்தக் கோலைத் தாங்கிய பாகனுக்கு ஆகிவந்ததும் ஆகுபெயர். அதாவது ஒரு பொருளின் இயற்பெயர் மற்றொரு பொருளைக் குறித்து அதுவும் இன்னொரு பொருளைக் குறிக்குமானால் அது இருமடியாகுபெயர். எனவே ‘கண் அஞ்சா களிறு’ என்றால் மூங்கிலால் செய்யப்பட்ட அங்குசத்தைக் கையில் தாங்கிய பாகனுக்கும் அடங்காது என்பது இன்னொரு வீரம். கண்ணஞ்சா களிறு என்றும், வேலாள் முகத்த களிறு என்றும் தனித்தனியும் கூட்டலாம். கண்ணஞ்சா வேலாள் முகத்த களிறு என ஒரு தொடராகவும் ஆக்கலாம். இவ்வளவு விளக்கமாகப் பரிமேலழகர் சொன்னதற்குக் காரணம் சுருங்கக் கூறிய வள்ளுவரின் களக்காட்சியைச் சித்திரிக்கவும் யானையின் வலிமை கூறவுமே. இத்தகைய யானை அதாவது வட்டமான பெரிய அடிகளையுடைய யானை சேற்று நிலத்தில் சிக்கிக்கொண்டால் அதனின் மிக எளிமையான நரியால் வெல்லப்படும் என்பதாம்.

“ஆண்மையும் பெருமையும் உடையாரும் தமக்கு ஏலா நிலத்துச் செல்லின் அவற்றால் பயனின்றி மிகவும் எளியரால் அழிவர் என்பது தோன்ற நின்றமையின் இதுவும் அவ்வலங்காரமாம்.”

பிறிதுமொழிதல் அணியைப் பொருத்தவரையிலும் பள்ளிக்கல்வியில் மாணவர்கள் அறிவது அணியிலக்கணம் என்ற அளவிலேயே. தமிழாசிரியப் பெருமக்களும் அமைதியடைவார்கள். திருக்குறளில் பிறிதுமொழிதலணி வாய்பாட்டில் சொல்லப்பட்டுள்ள அரசியல் நுட்பங்களை அறிந்த மாணவரை நாம் இனிதான் தேடிக் கண்டறிய வேண்டும்.

வேங்கையைக் கண்டால் வேழத்திற்கும் வேர்க்கும்!

‘வெறுங்கை என்பது மூடத்தனம்! விரல்கள் பத்தும் மூலதனம்’ என்பது ஒரு கவிதை வரி. ‘கீழே விழுவதெல்லாம் எழுந்திருப்பதற்காகவே’ என்பது அறிஞர் வாக்கு. ‘சுமக்கும் வரைதான் பாரம். கடக்கும் வரைதான் தூரம்’, ‘கிழக்கு இல்லையெனின் மேற்கு ஏது? தோல்வி இல்லாவிடின் வெற்றி ஏது’ என்பனவெல்லாம் சிந்தனையாளர்களின் கருத்துரைகள். இந்த ஆற்றல் யானைக்குக் கிடையாது. அது தன் பருத்த உடம்பை நம்பும். நீண்ட இரு தந்தங்களை நம்பும். என்ன ஆகும்? அதற்கு இருக்கும் அவ்விரண்டும் இல்லாத புலி சீறினால் பதுங்கும். காரணம் ஊக்கம் இன்மை. நரியிடம் தோற்ற யானை இப்பொழுது புலியிடம் நடுங்குவதை வள்ளுவர் காட்சிப்படுத்துகிறார்.

“பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்” (599)

இந்தக் குறட்பாவிற்கு “எல்லா விலங்கினும் தான் பேருடம்பினது அதுவேயும் அன்றிக் கூரிய கோட்டையும் உடையது ஆயினும் யானை தன்னைப் புலி எதிர்ப்படின் அதற்கு அஞ்சும்” எனப் பொழிப்புரை எழுதிய பரிமேலழகர்,

“புலியின் மிக்க மெய்வலியும் கருவிச் சிறப்பும் உடைத்தாயினும் யானை ஊக்கமின்மையான் அஃதுடைய அதற்கு (புலிக்கு) அஞ்சும் என்ற இது. “பகைவரின் மிக்க மெய்வலியும் கருவிச் சிறப்பும் உடையராயினும், அரசர் ஊக்கமிலராயின், அஃதுடைய அரசர்க்கு அஞ்சுவர்” என்பது தோன்ற நின்றமையின், பிறிதுமொழிதல்.”

என்னும் விளக்கவுரையில் திருவள்ளுவரின் அரசியல் நுட்பங்களை நிரல்படுத்துவதைக் காணலாம். மெய்வலியும் கருவிச்சிறப்பும் காவற்சாகாடு உகைத்தற்கு உதவினும் ‘ஊக்கம்’ தலையாயது. அதனால்தான் திருவள்ளுவர் ‘ஊக்கமுடைமை’ என்பதையும் ‘ஆள்வினை உடைமை’ என்பதையும் பொருட்பாலில் பாடியிருக்கிறார். எல்லாவகையிலும் ஆற்றல் உள்ளவர்கள் தாம் தோற்கமாட்டோம் என எண்ணுவது அரசியலில் இயல்பு. திருவள்ளுவர் அத்தகையோரை எச்சரிக்கும் வகையில் கூறும் அறிவுரைகளை நயமாகக் கூறுகிறார். வழக்கில் சொன்னால் ‘நாசுக்காகக்’ கூறுகிறார் எனலாம்.

ஆயிரம் கோழைகளும் ஒரு வீரனும்

‘ஆயிரம் காக்கைக்கு ஓர் கல்’ என்பது பழமொழி. காக்கைகள் ஆயிரம் என எண்ணிக்கையால் ஆயிரம் இருந்தாலும் உயிரற்ற ஒரு கல் அவை அத்தனையையும் துரத்துதற்குப் போதுமானவை. இந்தப் பழமொழியை வைத்து முன்றுரையறையனார் எழுதுகிறார்.

“மறுமனத்தான் அல்லாத மாநலத்த வேந்தன்
உறுமனத்தன ஆகி ஒழுகின் – தெறுமனத்தார்
பாயிரம் கூறிப் படை தொக்கால் என் செய்ப?
ஆயிரம் காக்கைக்கு ஓர் கல்” பழமொழி (165)

அறிவுடைமை, நீதிநெறி பின்பற்றுதலாகிய ஒற்றுமைத் துணையும் படை, பொருள் முதலிய வேற்றுமைத் துணையும் உடைய மன்னன் தோன்றிய அளவிலேயே பகைவர் அழிவர் என்பது பாட்டின் கருத்தாக அமைந்திருக்கிறது.

“ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடும்” 763

என்னும் குறட்பாவிற்கு “எலியாய பகை கடல்போல ஒலித்தால் நாகத்திற்கு என்ன ஏதம் வரும்? அந்நாகம் உயிர்த்த துணையானே அது தானே கெடும்” எனப் பொழிப்புரை எழுதிய பரிமேலழகர்,

“வீரர் அல்லாதார் பலர் திரண்டு ஆர்த்தால் அவற்கு வீரன் அஞ்சான்: அவன் கிளர்ந்த துணையானே அவர்தாம் கெடுவர் என்பது தோன்ற நின்றமையின், இது பிறிது மொழிதல் என்னும் அலங்காரம்.”

என்று விளக்கவுரை தருகிறார். விளக்கவுரையின் இறுதியில் ‘வீரரல்லாதார் பலரினும் வீரனொருவனே ஆடல் நன்று’ என்பதாம் எனப் பொருள் முடிவு கூறுவார். இந்தக் குறட்பாவின் உருவகத்தால் ஈர்க்கப்பட்ட கம்பர் தமது காப்பியத்தில் ‘எலியெலாம் இப்படை அரவம் யானென’ (2312) எனப் பயன்படுத்தியிருப்பது காண்க. ‘எலிக்குப் பாம்பு பகை’ என்பது உலகியல் சார்ந்த உண்மையே. நாகம் விடும் மூச்சுக்கே எலிக்கூட்டம் பறந்துவிடும் என்பதனால் ஆண்மை கொண்ட வீரன் ஒருவனுக்கு ஆண்மையற்ற ஆயிரம் வீரரும் ஈடாகார் என விளக்குகிறார். தனியொரு வீரனைப் பற்றி இவ்வாறு திருக்குறள் சொல்லுதற்கான காரணத்தைக் குறிப்பிடுகிறார் பரிமேலழகர். அங்கங்களுள் படை சிறந்தது என்பதும் அது தன்னுள்ளும் மூலப்படை சிறந்தது என்பதும், அது தன்னுள்ளும் வீரன் சிறந்தான் என்பதும் கூறப்பட்டன என்னும் அவர்தம் விளக்கவுரையே பேருரையாக அமைகிறது.

செடியை மரமாக நோக்கிய திருவள்ளுவர்

‘நகத்தால் கிள்ள வேண்டியதைக் கோடாரிக் கொண்டு வெட்டுகிறான்’ என்பதும் “வேலிக்குப் போட்ட முள் காலுக்கு வினையாச்சு” என்பதும் தமிழகத்தில் பெருவழக்கு.

“இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்தவிடத்து” 879

என்னும் குறட்பாவிற்குக் “களைய வேண்டுவதாய முள் மரத்தை இளைதாய நிலைமைக்கண் களைக. அன்றியே முதிர்ந்த நிலைமைக்கண் களையலுறின் களைவார் கையினை அதுதான் களையும்” எனப் பொழிப்புரை எழுதிய பரிமேலழகர்,

“களையப் படுவதாய தம் பகையை அது மெலிதாய காலத்தே களைக. அன்றியே வலிதாய காலத்துக் களையலுறின் நம்மை அதுதான் களையும் என்பது தோன்ற நின்றமையின் இது பிறிது மொழிதல்”

என்னும் விளக்கவுரையைத் தருகிறார். ‘முள்ளை முள்ளிலே களைந்துவிடு, அதுவளர்ந்தபின் களைய எண்ணினால் எண்ணுகிற உன்கையை அது காயப்படுத்திவிடும் என்பதன்று திருவள்ளுவர் கூறநினைத்தது. ‘கேடுசெய்யும் பகைவர்கள் இவர்கள் என்று அடையாளம் கண்டபின் அவர்களை விட்டுவைப்பது தமக்கே கேடாக முடியும். இது அரசியல் கொள்கை. எனவே அவர்கள் வலிமை குன்றியிருக்கும்போதே அழிப்பதே நெறி. இல்லையாயின் அவர்கள் நம்மால் களைய முடியாத அளவுக்கு வலிமை பெற்று நம்மை அழித்து விடுவார்கள் என்பதாம். ‘இளைதாக’ என்பதற்கேற்ப ‘மெலிதாக’ என்றும் கைகொல்லும் என்பதற்குக் ‘களைவார் கையை’ என எழுவாய் வருவித்தும் எழுதும் பரிமேலழகர் நுண்ணியத்தையும் செடியாக இருக்கிறபோதே அதனை மரமாகக் கண்டு ‘முள்மரம்’ என்று காட்சிப்படுத்திய திருவள்ளுவர் படைப்பாற்றலையும் ஒருசேர எண்ணி மகிழலாம்.

நிறைவுரை

அணியிலக்கணச் சிந்தனையில்லாத காலத்தில் திருக்குறள் உருவாக்கம் செய்யப்பட்டது என்னும் கருத்தியலை ஏற்றுக் கொண்டாலே இந்தக் கட்டுரையின் அருமை புரியும். அடுத்து மக்கள் வாழ்க்கையையும் வழக்கையும் இலக்கியப் பதிவுகளில் கொண்டு வரும் முயற்சி திருவள்ளுவர் காலத்திலும் இருந்திருக்கிறது என்பதையும் அறிதல் வேண்டும். அரசு பற்றிய தனது சிந்தனைகளில் ‘ஆலமரத்தடிக் கதைகளைத்’ திருவள்ளுவர் சொல்லியதற்கு வேறு என்ன காரணம் இருந்திருக்க முடியும்?. ‘வலியறிதலில்’ இரண்டும், ‘இடனறிதலில்’ மூன்றும், ‘உட்பகை’, ‘ஊக்கமுடைமை’, ‘படைமாட்சி’ என்னும் அதிகாரங்களில் அதிகாரத்திற்கு ஒன்றுமாக எட்டுப்பாடல்களில் திருவள்ளுவர் சொல்லியிருக்கும் இயற்கை உண்மைகளுக்குப் பரிமேலழகர் தனது பொருளறிவு (அர்த்த சாஸ்திரம்) சான்ற உரையைத் தந்திருக்கிறார். ‘பழமொழிகளையே திருவள்ளுவர் பாடலாக்கியிருக்கலாம்’ என்பது அனுமானமாகலாம். ஆனால் அதற்குப் பரிமேலழகர் சொல்லியிருக்கும் கருத்துரை அனுமானமன்று. ஆழ்ந்த அரசியல் கருத்துக்கள். கருத்துக்குத்தான் கதை சொல்வார்கள். பரிமேலழகர் கதைக்குக் கருத்துரை தந்திருப்பதுதான் அவருடைய உரைத்திறன்.

(தொடரும்…)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *