கண்ணையாவின் கை (சிறுகதை)

0

பாஸ்கர் சேஷாத்ரி

கண்ணையா பற்றி நிறைய பேருக்குத் தெரிந்து இருக்காது. அந்தக் காலத்து ஆசாமி. நான் படித்த பீ எஸ் ஹை ஸ்கூல் பெல் மேன். எழுபதுகளில் நான் படித்த காலத்தில் அவர் தான் என் நிஜ ஹீரோ. வாத்தியார்கள் எல்லாம் அப்புறம் தான். அவருக்கு அப்போதே சுமார் அம்பது வயதுக்கு மேல். நீல நிற தொளதொளவென்று அரைக்கை சட்டை. மடித்துக் கட்டிய வேட்டி. சவரம் செய்யாத முகம். வெள்ளை வெளேர் தலைமுடி. முகத்தில் எப்போதும் குங்குமப் பொட்டு. இன்னும் கொஞ்சம் சொல்ல வேண்டுமானால் இன்றைய என்னைப் போலவே கொஞ்சம் கூன் போடுவார். அது அந்தக் கனமான மணியைத் தினமும் தூக்கியதால் கூட இருக்கலாம்.

நான் அவரைப் பல கோணங்களில் ரசித்து இருக்கிறேன். அவர் அந்த பள்ளி மாடியில் இடது ஓரம் நின்று சரியாக நேரம் பார்த்து மணி அடிக்கும் லாவகம் இருக்கிறதே, அதற்கு நூறு மதிப்பெண் கொடுக்கலாம். முதலில் ஓர் ஆரம்ப தொனியில் ரீங்கார பாணியில் தொடங்கி அதையே இசைப் பாடல் போல மெல்லக் கோத்து அப்படியே ஓர் இசை அமைப்பாளர் போல அதனை அவர் நடத்தும் பாங்கு எனக்குப் பெரிய ஒரு மெய்சிலிர்ப்பு. எல்லோரும் மணி அடித்தவுடன் ஓடினாலும் எனக்கு அவர் பிம்பம் தான் தெரியும். கூட்டத்தின் இடுக்கில் அவரைப் பார்த்துக்கொண்டே நிற்பேன்.

ஆரம்ப காலத்தில் அந்தப் பள்ளியில் ஒரு தண்டவாளத் துண்டு ஓரிடத்தில் தொங்கும். அதற்கென பிரத்யகேமாய் ஒரு தடிமனான கம்பி. அதுவும் ரீங்காரம் தான். அதையும் கண்ணையா அடித்து அதன் அதிர்வைக் கைகளால் உணர்ந்து அவர் என்னைத் துரத்திய காலமும் உண்டு. தண்டவாளம் வழக்கொழிந்து, பின்னர் இந்த வெண்கல மணி வந்தது. வீட்டுப் பாத்திரம் போலப் பளிச்சென அது இருக்கும். வயது கூடக்கூட சின்ன விஷயங்களின் ஈர்ப்பு போகும் என்பார்கள். ஆனால் அது எனக்குக் கூடவே செய்தது.

பத்தாம் வகுப்பு படிக்கும் போது ஒரு சனிக்கிழமை, அரை நாள் விடுமுறை. கண்ணையாவைப் பார்த்து ஒரு முறை மணி அடிக்க வேண்டும் என்றேன். போ அப்பால என்றார். நான் நகரவில்லை. கொஞ்ச நேரம் கழித்து இன்னுமா நிக்கற என்றார். நான் அந்த மணியைப் பார்த்துக்கொண்டே நின்றிருந்தேன். கொஞ்ச நேரம் கழித்து என்ன உனக்கு மணியை அடிக்கணுமா எனக் கேட்டார். வேகமாகத் தலையை ஆட்டினேன். நான் சொல்றப்ப வரையா என்றார். ம் என்றேன்.

சொன்னபடி ஒரு மணிக்கு வா என்றார். நான் மணியைக் கொடுக்க மாட்டேன். நான் அடிக்கும்போது நீ என் கையைப் பிடிச்சுக்கோ என்றார். கையைப் பிடி என்றார். அவர் அடிக்க அடிக்க, எனக்கு உடல் சிலிர்த்துப் போனது. அதே ரீங்காரம். அதே பாணி இசை. அதே கணீர் சப்தம். அந்த நிறைவான இசை.

போதுமா என்றார். பதில் சொல்ல முடியவில்லை. அவர் கையைப் பற்றின அந்த ஸ்பரிசம் நெடு நேரம் போகவில்லை. பள்ளியில் சேர்ந்த நாளில் பலப்பம் கொடுத்துச் சொல்லிக் கொடுத்த ஆசானாக அவர் அன்று மாறிப் போனார். நேற்று அதே மாதிரியான மணியின் நாதத்தைக் கேட்டபோது என் கையைப் பார்த்தேன். இன்னும் கண்ணையா என் கையைப் பிடித்துக்கொண்டிருப்பது போல இருந்தது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *