குறளின் கதிர்களாய்…(324)

செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்...(324)
ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னு முயிர்க்கு.
– திருக்குறள் – 190 (புறங்கூறாமை)
புதுக் கவிதையில்...
புறங்கூறல் பொருட்டு
பிறரிடமுள்ள குற்றங்களை
அறிந்து ஆராய்தல் போலத்
தம்மிடமுள்ள குற்றங்களையும்
கண்டு தெளிந்தால்
நிலை நின்று வாழும்
உயிர் வாழ்க்கைக்குத்
தீது ஏதுமில்லை…!
குறும்பாவில்...
புறங்கூறிட பிறர் குற்றங்களைக்
கண்டறிதல்போல் தம்குற்றங்களைக் கண்டுதெளிந்தால்,
நிலைபெறும் வாழ்வில் தீதிலையே…!
மரபுக் கவிதையில்...
அறமிலாச் செய்கையாம் புறங்கூறிட
அடுத்தவர் குற்றம் அறிந்திடல்போல்
கறையாம் தமது குற்றங்களைக்
கண்டே தெளிந்து விட்டதனால்
குறைகள் தவிர்த்து வாழ்ந்தாலே
குவலயம் தன்னில் வாழ்வதுதான்
நிறைவுடன் சிறிதும் தீதின்றி
நிலைபெற ஏதும் தடையிலையே…!
லிமரைக்கூ..
பிறர்குற்றம் காணல் தீது,
அதுபோல் தன்குற்றம் கண்டு தெளிபவர்க்கு
நிலைபெறும் வாழ்விலிடர் ஏது…!
கிராமிய பாணியில்...
பேசாத பேசாத
பொறஞ்சொல்லு பேசாத,
அதுக்குப் பாக்காதே பாக்காதே
அடுத்தவன் குத்தம் பாக்காதே..
பொறஞ்சொல்லு பேசுறதுக்கு
அடுத்தவன் குத்தத்த
ஆராஞ்சி பாக்கறதுபோல
அவனவன்
தங்குத்தத்தயும் ஆராஞ்சி பாத்துத்
தெளிவானா
ஒலகத்துல நெலச்சி வாழக்
கெடுதி ஒண்ணும் வராதே..
அதால
பேசாத பேசாத
பொறஞ்சொல்லு பேசாத,
அதுக்குப் பாக்காதே பாக்காதே
அடுத்தவன் குத்தம் பாக்காதே…!