Blog
-
விஜய ஆண்டில் புத்தாண்டு வாழ்த்துக்கள்
சக்தி சக்திதாசன்பங்குனித் தாயின் திரு உத்தரத்தில்பதமாய்ப் பிறந்த சித்திரைத் திருமகளேபைந்தமிழ் அகவையின் பூ மகளேபல நலம் கொண்டு நீ உதித்தாயோ ?முத்தமிழ் மொழியின் நல் புத்தாண்டாய்முப்பொருள் கொண்ட சுவைக் கற்கண்டாய்வித்தகர் விளைந்த இந் நானிலத்தில்விடியலைக் கொண்டு நீ வந்தாயோ ?கற்றவர் சபையில் ஒளிரும் செம்மொழியின்காலத்தின் பெருமைகொள் சரித்திரங்கள்யாதும் ஊரெனப் பரந்திருக்கும் இன்பயவ்வன மொழியின் புதிய வருடமென்றேன்இத்தரை மாந்தர்கள் மனங்களிலெல்லாம்சித்திரைப் பூமகள் வலம் வந்திடுவாள்முத்திரை பதித்திடும் பெருங் காவியங்கள்பத்தரைப் பொன்னிலும் மிகும் செல்வங்களேவிஜய ஆண்டிதன் வரவதனை நாமும்விரிந்திடும் மனம் கொண்டு மகிழ்ந்திடுவோம்வாட்டிய வேதனைக் காலங்கள் அனைத்தும்ஓட்டிய வருடம் இதுவென்றாகட்டும்கிட்டாதன அனைத்தையும் வெட்டென மறந்துகிட்டியவை அனைத்தாலும் சட்டென மகிழ்ந்துமனதின் மகிழ்ச்சியின் மந்திரம் ஒன்றேமகிழ்வோம் நம்மிடம் இருப்பதைக் கொண்டுஅன்பிலும் பண்பிலும் சிறந்து விளங்கிடும்அன்பினும் இனிய உள்ளங்கள் அனைத்துக்கும்விஜய ஆண்டில் புத்தாண்டு வாழ்த்துக்கள்வாழிய அனைத்தும் பெற்றே உம் வாழ்வில்படத்துக்கு நன்றி -
தமிழ்ப் புத்தாண்டில்…
இரண்டாய், மேலாய்க் கிடைத்திடவே
சித்திரை வந்தது சிறப்புடனே
சீர்மிகு விஜய புத்தாண்டாய்,
நித்தமும் இனிமேல் நந்நாளென
நம்பியே உழைத்து நலம்பெறுவோம்,
தத்துவம் இதுதான் தழைத்திடெனத்
தமிழர் ஆண்டில் வாழ்த்துவமே…!
-செண்பக ஜெகதீசன்…
படத்திற்கு நன்றி:
http://messages.365greetings.com/holiday/tamil-new-year/tamil-new-year-wishes.html
-
அழகார்ந்தநாயகி
அழகார்ந்தநாயகி பஞ்சகம்
சு. ரவி
அழகியே, அம்மை யே!பூம்
பொழிலிடைப் பூந்துருத்திப்
பொய்யிலி நாதர், கையில்
மழுவினை, மானை ஏந்தும்
மன்னவன் பாகம் கொண்டோய்!
பழவினைக் காட்டைத் தீய்க்கும்
பதமலர் சரணம் தாயே! 1
தேவியே, மறைகள் நான்கும்
தேடுமெய்ப் பொருளே! ஈசன்
ஆவியே, அமுதம் தோய்ந்த
அழகியே, அரனார் பாகம்
மேவிய மேன்மையே நின்
மென்மலர்ப் பாதம் பாக்கள்
தூவிநான் தொழுது போற்றத்
துணைவர வேண்டும் தாயே! 2
பிரமனங் கிருக்க ஒட்டான்
பிறப்பெனும் சிட்சை செய்வான்!
இரக்கமில் எமனோ என்னை
இவ்விடம் இருக்க ஒட்டான்!
உரமழிந் தோய்ந்தேன்,தேய்ந்தேன்
உதையுறு பந்தாய் ஆனேன்!
அரனொரு பாகம் சேர்ந்த
அழகியே, சரணம் தாயே! 3
பொன்னிலே விருப்பம் இல்லை
பொருளிலே நாட்டம் இல்லை
உன்னையன் றின்றி யாரும்
உறவெனக் கில்லை அம்மே!
இன்னமு தழகீ! ஈசன்
இடப்புறம் கவர்ந்த தாயே!
மின்னலாய் முதுகுத் தண்டின்
மிசையெழு சுடரே!போற்றி! 4
பூரண நிலவாய்ப் பூத்த
பூவன நாதர் வாழ்வே!
நீறணி நிமலர் பாகம்
நிறைவுசெய் அழகீ! அன்ன
பூரணீ! புதுமைக் கெல்லாம்
புதுமையே! உலகுக் காதி
காரணீ! காளீ! காக்கும்
கழலிணை சரணம் தாயே! 5
-
அறுமுகநூறு (9)
சச்சிதானந்தம்
குக் குடத்துக் கொடியோன் அடியை,
இக் குடத்துக் கடியேன் பற்றி,
முக் குடத்துக் கடுநோய் நீக்கிச்,
சிக் கெடுத்துக் காக்கப் பணிந்தேன்! 41
பங்குனிக் கொண்டாட்டம் சித்திரை வரைக்கும்,
பக்தர்கள் கொண்டாட்டம் பாருள்ள வரைக்கும்,
சங்கரன் கொண்டாடும் சரவணன் படைத்த,
மங்கலச் செந்தமிழ் நம்மை வழிநடத்தும்! 42
தைப்பூசம் என்றால் தமிழ்மணம் வீசும்,
கைபூசும் சந்தனம் திருமேனி எங்கும்,
பைபூசும் கிளிகளின் செவ்வலகு போல,
தைப்பூச நாயகன் அழகிதழ் சிவக்கும்! 43
சிற்றின்ப பேரின்ப பேதங்கள் இன்றி,
உற்றின்ப முனைக்கண்டு நின்றோமே ஐயா!
சற்றுன்னை மனமாரக் கண்டிடும் பொழுது,
பற்றின்றி வாழ்ந்திடப் பழகினோம் ஐயா! 44
அலகினைச் சுமந்திடும் கன்னம், முருகன்
அழகினைச் சுமந்திடும் பக்தனின் எண்ணம்,
அமைதியில் நிறைந்திடும் அலகேற்ற உள்ளம்,
அருளினை அடைந்திடும் அழகுற்று நெஞ்சம்! 45
-
நல்வாழ்க்கை வாழ வழிகாட்டிகள் – 30 (கடைசிப் பகுதி )
பெருவை பார்த்தசாரதி
நமக்கு நேரம் கிடைக்கும் போது, அதை நல்வழியில் செலவழிக்க விரும்புவதையே அனைவரும் விரும்புவோம் அல்லவா!…. கேளிக்கை என்று வரும்போது சினிமா, நாடகம், கடற்கரை மணலில் காற்று வாங்குதல், அலைபேசியில் அரட்டை அடித்தல், டிவி நிகழ்ச்சிகளைக் கண்டு களித்தல், அனேகமாக இதுபோன்ற ஏதாவொதொன்றில் நேரம் கழிந்துவிடுவது சகஜம்.
அனேகமாக எல்லா நாட்களும் இது போன்று கழிந்து விடுகின்ற நிலையில், ஒரு மாதத்தில், ஒரு நாளில், ஒரு 2 மணி நேரத்தை நல்ல விஷயங்களைக் கேட்க சத்சங்களுக்குச் சென்று வந்தால் என்ன என்று தோன்றும். அச்சமயத்தில், மற்றவர் பேசுவதைக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்துவதே, இந்த சத்சங்கத்தின் நோக்கம். ‘கற்றலில் கேட்டலே நன்று’ என்பது போல. கண்ணால் பார்த்து களிப்படைவதும், வாயால் உண்டு மகிழ்வதும், மூக்கால் வாசனை முகர்ந்து மலர்வதும், மெய்யால் உற்றறிதலும், காதால் நன்னெறிகளைக் கேட்டலும் சரிவர நடைபெற்றால்தான் உடலில் உள்ள உறுப்புகளுக்கு ஊக்கம் அளித்து உடலைச் சரிவர இயக்க முடியும்.
ஏனைய மற்ற உடல் உறுப்புகளில் கண்ணுக்கும், காதுக்கும் தனிப்பட்ட சிறப்பு உண்டு. நாம் காணுகின்ற ஒரு பொருளின் ‘தோற்றம்’, செவியின் மூலமாக வரும் ‘ஒலி’ இவையிரண்டும் மூளையில் பதிவு செய்யப்படுகிறது. செவிப்புலனுக்கு கண்புலனை விட சற்று மதிப்பு அதிகம். மனிதன் பெற்ற செல்வத்துள் செவிச்செல்வம் ஒப்பற்றது. அதனால்தான் “செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்” என்ற சிறப்பை செவிப்புலன் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. வாயால் கற்பித்தல் என்று வரும்போது காதால் கேட்டல் என்பதும் கூட வருகிறதல்லவா!….
கற்பிப்பவரின் அறநெறிகள், அறிவுரைகள், போதனைகள், கேட்பவரின் செவி வழியே சென்று அறிவைப் புகட்டுகிறது. சிந்தனையைத் தூண்டுகிறது. மனதில் தோன்றும் எண்ணங்களை வடிகட்டி, தீயவைகளைக் களைந்து, நல்ல எண்ணங்களுக்கு வழி வகுப்பது சிந்தனை ஒன்றுதான். கேட்டலும், சிந்தனையும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. கேட்கும் திறன் குறைவாக இருந்தால் சிந்தனையும் குறைவாகத்தான் இருக்கும். நாம் எப்போதுமே பேசிக்கொண்டிருக்கிறோம், என்றைக்காவது யாராவது சொல்வதை நின்று நிதானித்துக் கேட்டதை காதில் வாங்கிக்கொண்டு சிந்தித்திருக்கிறோமா?.. முயற்சி செய்து பார்த்தால் கேட்டலின் திறம் சிந்தைனை மூலம் புலப்படும்.
இந்தக் தொடரின் கடைசி பகுதியின் மூலம், எனக்குத் தோன்றிய ஒரு சிறிய கருத்தையும் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். சிலசமயங்களில் நாம் பேசுவதை சற்று நிறுத்திவிட்டு, அறிவார்ந்த அறிஞர் பெருமக்கள் பலர் சொல்வதைக் காது கொடுத்து பொறுமையாகக் கேட்டாலே வாழ்க்கை முறைக்குப் பயனுள்ள தகவல்களையும், வழிகாட்டுதல்களையும் மிக எளிதாகப் பெற்றுவிட முடியும். நேரம் கிடைக்கும் போது, குடியிருப்புக்கு அருகில் நடந்து கொண்டிருக்கும் ஏதாவதொரு சத்சங்கத்திற்குச் செல்லும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் அதனால் ஏற்படும் எண்ணற்ற பலன்களையும், அனுபவங்களையும் எளிதாக உணர்ந்து கொள்ளமுடியும்.
அனுதினமும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் நமக்கு, சற்று நேரம் மன நிம்மதிக்காகவும், மன மகிழ்ச்சிக்காகவும் சத்சங்கங்கள் துணைபுரிகின்றன. நமது வாழ்க்கையில் இடம்பெரும் அத்தியாவசிய அங்கங்களில் சத்சங்கங்களும் விலக்க முடியாத ஒன்றாகி விட்டது என்பதே உண்மை.
நன்னெறிகளைக் கேட்பதின் மூலம் சில சங்கடங்கள் கூடத் தீரும் என்பதற்கு பாகவதம் ஒரு சிறந்த உதாரணம். “இன்னும் ஏழு நாட்களே உயிரோடிருப்பேன், அதற்குள் ஞானம் பெறுவது எப்போது” என்று கேட்ட பரீட்சித்து மகராஜாவிற்கு, சுக முனிவரின் உபதேசம் சாந்தி அளித்து, முக்திக்கும், ஞானத்திற்கும் வழிகாட்டும் கருவியாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. இங்கு சுகர் சொல்வதை பரீட்சித்து பொருமையாக கவனித்து காதில் வாங்கிக்கொள்வதை கவனத்தில் கொள்ளவேண்டும். பரீட்சித்து மகராஜாவின் தொடர்ந்து வரும் கேள்விக்கெல்லாம், பதிலாக வருகின்ற சுகரின் பகவத் தத்துவத்தை விளக்குகின்ற முறையில் சொல்லும் விதமாகவும் கேட்கும் விதமாகவும், அமைந்த “ஸ்ரீமத் பாகவதம்” 18000 சுலோகங்கள் கொண்டது. வியாச பகவான் இயற்றிய இந்த உபதேசம் வாழ்க்கைக்கு வழிகாட்டுகின்ற அரிய பொக்கிஷங்கள் அடங்கிய 18 புராணங்களில் சிறந்த ஒன்று. பாரதத்தை ஒரே தேசமாக அடையாளம் காட்டிய பெருமை மகாபாரதத்துக்கும், இராமாயணத்துக்கும், 18 புராணங்களுக்கும் உண்டு.
‘சத்’ என்றால் உண்மை, ‘சங்கம்’ என்றால் ‘சங்கமித்தல்’ அல்லது ஒன்றாகச் சந்திப்பது என்பது பொருள். பலர் ஒன்றாக, ஒரு இடத்தில் குழுமியிருந்து, செவிக்கு இனிமையான, இசையோடு கூடிய சொற்பொழிவாற்றலை கேட்பது அல்லது கேள்வி, பதில் போன்றவற்றால் உரையாடுவது என்பதே “சத்சங்கம்” என்றழைக்கப்படுகிறது. இப்போதெல்லாம், அலுவலகத்தில் அல்லது வீட்டிலிருந்தபடியே, சத்சங்களில் நடப்பதை செலவில்லாமல் தொலைக்காட்சி மூலமாகவும் பார்க்க முடிகிறது. அதிகாலை ஒவ்வொரு தொலைக்காட்சியிலும், யாராவது ஒரு மஹான் அல்லது குருஜி, மக்கள் மத்தியிலே சத்சங்கம் நிகழ்த்திக் கொண்டிருப்பதைக் காணலாம்.
இன்றைய காலகட்டத்தில் நடத்தப்படும் சத்சங்கங்களுக்கும், பண்டைய காலத்தில் நடத்தப்பட்டவைக்கும் இருந்த வேறுபாடு என்னவென்றால், பழங்காலத்தில் எவ்வித பலனும் இன்றி நேர்மையோடும், நாணயத்தோடும் சத்சங்கம் நடத்தினார்கள், ஆனால் இன்று அப்படி இல்லை, நம் கையில் கொஞ்சம் நாணயம்(பைசா) இருந்தால்தான் இது போன்ற மஹாசத்சங்களில் பங்கேற்க முடியும் என்பதற்கு, தலா 200 ரூபாய் கொடுத்து வாங்குகின்ற நுழைவுச் சீட்டே ஆதாரம். கலந்து கொண்ட பிறகு பணவிஷயம் மேலும் தொடரலாம் என்பது நுழைவுச் சீட்டின் பின்புறம் மிகச்சிறிய எழுத்தில் படிக்கமுடியாதபடி அச்சடிக்கப்பட்டிருக்கும்.
கோடானு கோடி மக்களுக்கு மானசீக குருவாகத் திகழ்ந்த ஸ்ரீஆதிசங்கரர், தனது வாழ்நாள் முழுவதும் உஞ்சவிருத்தி செய்த படியே சத்சங்கம் நிகழ்த்தியதாகவும், சத்சங்கத்தின் அருமை, பெருமைகளை தனது பஜகோவிந்தத்தில் நிறைய இடத்தில் குறிப்பிட்டு இருப்பதாகவும் ஒரு நூலில் படித்திருக்கிறேன். இன்று பொருளாதார வசதியில்லாதவர்களுக்கென்றே, நகரத்தில் சில இடங்களில் நித்திய சத்சங்கள் நடத்தப்படுகிறது என்பது மகிழ்ச்சியான செய்தி. போதிய இடவசதி இல்லையென்றாலும், சாலையோரத்தில் ஓரமாக நின்று கொண்டு, நல்வாழ்க்கைக்கு வேண்டிய அறநெறிகளையும், தத்துவங்கள், போதனைகள் போன்றவற்றைப் பெற்றுவிடமுடியும்.
சத்சங்களில் கலந்து கொள்வதால் என்ன பலன்?…என்று கேட்கிறவர்களுக்கு!….இறுகிய மனது இளகி, இயல்பான நிலைக்குத் திரும்ப வழி செய்கிறது என்பது மஹான்களின் ஆலோசனை. அங்கிருக்கும் நிசப்தமான சூழ்நிலை, மெல்லிய இசை, உரை நிகழ்த்துபவரின் கூச்சல் இல்லாத பேச்சு இவையெல்லாம் எந்திரத் தன்மை பெற்ற நம் மனதை சிந்திக்க வைத்து, மனதுக்கு இதமளிக்கிறது என்பது அனுபவத்தில் கண்ட உண்மை. இதுபோன்ற பல காரணங்களால், மனம் அமைதி பெற்று, மறுபடி செல்லவேண்டும் என்ற ஒரு வித ஈர்ப்பு சக்தியை நம்மிடம் பரவச் செய்யும்.
ஒரு புத்திசாலிக்குக் கூட சில சமயம் முடிவு எடுக்க முடியாமல் தத்தளிக்கும் நேரம் வருவதுண்டு. அச்சமயத்தில் அவருக்குச் சரியான பாதை தெரியாமல் விழிக்கும் போது, சாதுக்களும், ஞானிகளும் வழிகாட்டுகிறார்கள். கோடா வெங்கடேஸ்வர சாஸ்திரிகள் நடத்திய ஆன்மீகச் சொற்பொழிவில் வெளிவந்த, இக்கட்டுரைத் தொடருக்கு தொடர்புடைய தகவல் ஒன்றை இங்கே நினைவு கூற விரும்புகிறேன்.
ஞானிகள் என்றுமே அசத் சங்கத்தை விரும்பாதவர்கள். அவர்களுடைய பேச்சு என்றுமே உண்மையானதாகவும், நேர்மையானதாகவும், ஆத்ம ஞானத்தைப் பற்றியே இருக்கும். தனது இயல்பு நிலையிலிருந்து, மனிதன் உயர்வு நிலைக்குச் செல்ல, வாழ்வில் சத்சங்கம் இருக்கவேண்டும், ஆனால் அசத்சங்கம் ஒரு போதும் இருக்கக் கூடாது.
பொய் பேசும் மனிதனுக்கு மன நிம்மதி என்பது இராது. ஒரு பொய்யைச் சொல்லி பிறகு அதை மறைக்க பல பொய்களை மேலும் சொல்லி, முடிவில் மன சஞ்சலத்தை அடைந்து அதிலிருந்து வெளிவரமுடியாமல் உழலும் நிலைக்குத் தள்ளப்படுகிறான். மன சஞ்சலத்திற்க்கும், மன உளைச்சலுக்கும் ஆளான மனிதன், ஞானிகளின் அறிவுரைப்படி நடந்தால், மனத்தெளிவு பெற்று நல்முடிவு எடுக்கும் நிலையை அடைந்து, மன ஆரோக்கியத்தை எளிதில் பெறமுடியும். ஒரு பலனையும் எதிர்பார்க்காமல், பிறருக்கு உதவி செய்தால், தனக்கு வேண்டிய உதவி பிறரிடமிருந்து தானாகவே வந்து சேரும் என்பதற்கு ஒரு சின்ன கதையையும் சொல்லி இருக்கிறார்.
ஒரு ஏழை, தினமும் ஒரு ஞானிக்கு உணவளிப்பதைக் கடமையாகக் கொண்டிருக்கிறான். ஒரு நாள் தன்னுடைய மூதாதையர்களுக்குத் திதி கொடுப்பதற்கு தன்னிடம் எவ்வித பொருளும் இல்லாததால், ஞானியிடம் சென்று உதவி கேட்கிறான். தன்னிடம் கொடுப்பதற்க்கு எதுவும் இல்லாத ஞானி, ஒரு காய்ந்த சுரைக்காயை அவனிடம் கொடுக்கிறார். மனைவியிடம் விபரத்தைச் சொல்லி வெறுப்போடு, அச்சுரைக்காயைக் வைத்து ஏதாவது செய் என்று சொல்கிறான். வேறு ஒன்றும் கைகொடுக்காததால், இருக்கின்ற சுரைக்காயை வைத்து திதி கொடுத்து விடலாம் என்று நினைத்து, மிகவும் சிரத்தையோடு சுரைக்காயை நறுக்குகிறாள் மனைவி. அச்சமயத்தில் ஒரு அதிசயம் நிகழ்கிறது. சுரைக்காய்க்குள் இருக்கும் விதைகள், வைரக் கற்களாகப் பளிச்சிடுகின்றன. இருட்டாக இருந்த அவனது வாழ்க்கைக்கு, ஞானியின் தவ சக்தியின் மூலமாக வெளிச்சம் கிடைத்தது. தன்னிடம் கொடுப்பதற்கு எதுவுமே இல்லாத ஞானி, இறைவனின் மூலமாக, நேர்மையோடும், நாணயத்தோடும் பிரதிபலனை எதிர்பார்க்காமல் உதவி செய்த ஒருவனுக்கு, உயர்ந்த நிலையை அடைய வழிகாட்டுகிறார். இது கதையாகத் தோன்றினாலும் “பிறருக்கு நீ உதவினால், மற்றவர் உனக்கு உதவுவார்” உண்மையைப் பிரதிபலிக்கிறது.
தனி மனிதனுக்கு வரும் துன்பங்களுக்கும், அவசர யுகத்தில் அழுத்தம் நிரம்பிய அல்லல் வாழ்க்கைக்கு ஆறுதல் பெறவும், அருமருந்தாகச் செயல்படுவது ‘சத்சங்கம்’ என்ற கூடம். சமுதாயத்தைச் சார்ந்துதான் தனிமனிதன் வாழமுடியுமே தவிர, தனக்காக மட்டும் வாழ்வது என்பது இயலாத காரியம் என்பது சத்சங்கத்தின் விளக்கம். சத்சங்கங்களுக்கு சென்று உங்களுக்கு வரக்கூடிய சங்கடங்கள் சற்று விலகும் என்றும், பெரிய அளவில் வரும் ஆபத்துகள் தவிர்க்கப்படலாம் எனவும் ஸ்வாமி சின்மயானந்தர் அறிவுருத்துகிறார். சத்சங்கங்களில் மூலம் தங்களுக்குக் கிடைத்த அறிய செய்திகளை, இந்நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள இயலாதவர்களுடன் பகிர்ந்து கொண்டால்?….சத்சங்கங்களுக்கு மட்டுமல்லாமல், அதை மற்றவர்களுக்கு தெரியப் படுத்தியவர்களுக்கும் பெருமைதானே?….
சத்சங்கங்களுக்குச் செல்ல முடியாதவர்கள், அதிகாலையில் டிவி சேனல்களைத் திறந்து பாருங்கள். இனிமையான காலை வேளையில்,சத்சங்கங்களில் மனதுக்கு இனிமையான வார்த்தைகளால் சொற்பொழிவாற்றி, ஆன்மிக சம்பத்தப் பட்டசந்தேகங்களுக்கும் விளக்கமளித்துக் கொண்டிருக்கிறார்கள். இறைவன் அவதாரம் செய்த இடங்களைத் தேர்ந்தெடுத்து, சத்சங்கம் நிகழ்த்துபவர் சிலர். இன்னொருவர், நாம சங்கீர்த்தனத்தோடு சத்சங்கத்தையும் சேர்த்து அனைவரையும் மகிழ்வித்துக் கொண்டேயிருக்கிறார். வெளிநாட்டவரையும், அண்டை மாநிலத்தவரையும் ஒன்றாக்குகிறது இந்த சத்சங்கம். சத்சங்கத்தை உதாசீனப் படுத்தாமல், மதிப்பவர்கள் என்றுமே இறைவனுக்கு பிரியமானவர்கள் என்பது மேலே குறிப்பிட்ட அனைவரும் ஒரு மனதாகச் சொல்லும் அறிவுரை. இவர்களில் சிலர் உலகில் அதிக இடங்களுக்குச் சென்று, மஹாசத்சங்கம் நிகழ்த்தியவர்களும் உண்டு. சைனாவில் சத்சங்கம் நிகழ்த்துவதற்காக, நம்நாட்டு பிரஜைக்கு அந்நாட்டு அரசாங்கம் ஒரு தனி இடத்தையே கொடுத்திருக்கிறது என்பது பத்திரிகைச் செய்தி. இவர்கள் அனைவரையும் விட, முக்கியமாக ஒருவர் சத்சங்கம் மூலம் இந்தியாவை உலகளவில் பிரபலப்படுத்திய பெருமை சுவாமி விவேகானந்தரைச் சாரும்.
தாம் பெற்ற அறிவை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும்போது, மறைமுகமாக மற்றவருக்கு உதவி செய்கிறோம் என்று அர்த்தமாகிவிடுகிறது. சத்சங்கம் அதற்குத் உறுதுணையாக நிற்கிறது. ஒரு மனிதன் முழு அளவில் வாழ்க்கைக்கு வேண்டிய அனைத்தையும் ‘சத்சங்கங்களின்’ மூலம் கேட்டறிந்து கொண்டால், அது என்றும் நம் நல்வாழ்விற்கு வழிகாட்டும் என்பதில் ஐயமில்லை.ஒர் அறிவிப்பு::
இத்துடன் எனது “நல்வாழ்க்கை வாழ வழிகாட்டிகள்” கட்டுரைத் தொடர் முடிவடைகிறது. தொடர்ந்து முப்பது (30) கட்டுரைகளுக்கும் மதிப்பளித்து, பொறுமையாகப் படித்து, தங்கள் கருத்துக்களையும் தவறாமல் பதிவேற்றம் செய்த அனைத்து எழுத்தாளர்கள், வாசகர்கள், நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
******* முற்றும் *******
-
வாழ்க்கை நலம் – 6
குன்றக்குடி அடிகள்
6. அறன் வலியுறுத்தல்
இந்த உலக இயக்கம் குறிக்கோளுடையது. குறிக்கோள் இலாது இயங்கும் எதுவும் இல்லை. மானுட வாழ்க்கையும் குறிக்கோளுடையது. மானுடத்தின் குறிக்கோள் என்ன? வாழும் உயிரினம் அனைத்திற்கும் தலைமை தாங்குவது மானிடமே! மானுட வாழ்வைச் சார்ந்துதான் மற்ற உயிர்கள் வளர்கின்றன; வாழ்கின்றன. நிலம் முதலிய ஐம்பூதங்களும்கூட மானுடத்தின் மூலமே பயன்பாடுறுகின்றன. ஆதலால் மானுட வாழ்க்கை அருமையானது. மிக மிக உயர் குறிக்கோளுடையது.
மானுடத்தின் குறிக்கோள் அறம். அறம், செய்தலன்று; வாழ்தல். அறமே வாழ்வு; வாழ்வே அறம்! மனம், புத்தி சித்தம் ஆகிய அகநிலை உறுப்புக்களை அன்பில் தோயச் செய்து யார் மாட்டும் அன்புடையராக வாழ்தல் அறம். அறத்திற்குப் பகை, பகையேயாம். அதனாலன்றோ இறைவன் திருமேனியில் மாறுபட்டவைகள் பகை நீங்கி அணிகளாகத் திகழ்கின்றன. அறத்தில் சிறந்தது மனத்தில் மாசின்றி இருத்தல். மனதிற்கு மாசு இயற்கையன்று. மனதிற்கு மாசு கொள்முதலேயாம்.நமது பொறிகள் – மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியன தகவலைச் சேகரிக்கும் கருவிகள் – ஆன்மாவிற்குத் தகவலைத் தரும் கருவிகள். இந்தக் கருவிகள் அறியும் தன்மையுடையன. ஆனால், அறிவுடையன அல்ல. இந்தப் பொறிகள் ஆன்மாவின் அறிவோடும் புலன்களோடும் தொடர்பு கொண்டு இயங்கின் மனத்திற்குத் தீங்கு வாரா! மாசும் வாரா!
ஆனால் பொறிகள் தன்னிச்சைப் போக்குடையன; விரைவுத் தன்மையுடையன. எல்லா இடங்களுக்கும் வரையளவுமின்றி, நெறிமுறையின்றிச் செல்லும் தன்மையான. இந்தப் பொறிகள் வாயிலாகவே மனத்திற்கு மாசு வந்தடைகிறது. ஆதலால் பொறிகள் மீது நமக்கு மேலாண்மை தணியராசாணை செலுத்த உறுதிவேண்டும். ஆக மனத்துக்கண் மாசிலராக வாழ்தல் அற வழக்கை.
எந்த ஒரு நன்மைக்கும் களம் தூய்மையாக வேண்டும் அதுபோல வாழ்க்கையெனும் களத்தில் ஆடச் செய்ய அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் ஆகிய களைகள் அகற்றப்படுதல் வேண்டும். அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் ஆகியன அன்பின்மையால் வருவன. மற்றவர் வாழ்தலில் நமக்கு ஆர்வமும், மன நிறைவும் மகிழ்ச்சியும் கொள்ளப் பழகினாலேயே இத்தீமைகள் அகலும். இதற்குப் பெயர்தான் அன்பு.
அறத்தின் பெயர் இன்பம். அறத்தின் பயன் அமைதி. அறத்தின் பயன் ஒருமைப்பாடு. அறத்தின் பயன் எல்லோரும் வாழ்தல் – நன்றாக வாழ்தல், இதுவே நியதி.
அறத்தின் பயன் செல்வம், சிவிகையூர்தல் என்று சொல்லப்படுவது உண்மைக்குப் புறம்பானவை. இக்கருத்துக்கள் வல்லாண்மையில் வாழ்வாருக்குத் தாளம் போடும் கருத்துக்கள்!
கடவுள், மழை, நீத்தார் ஆகியன பயன்பாடுடையான என்று நிரூபணம் செய்வதே அறம்தான். அறநெறி நிற்போம். அறநெறிச் சிந்தனையில் தோய்வோம். அறநெறி சார்ந்த அறிவினைப் பெறுவோம். அறநெறிச் சான்ற மனத்தினையே பெற்றுயர்வோம்! அதனாலேயே அறன் வலியுறுத்தப்படுகிறது.
படம் உதவி: https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcQTwBRUQVPT2IXhWk8N8w7ZwcAs2i_A-47gBr0Peq9Lz_yBDjrX-w
_________________________________
REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது நிதியாண்டு 2007-2008 ல்மின்பதிப்பாக்க உதவி: தேமொழி
-
திருமுருகன் துதிமாலை (6)
சத்திய மணி
நோயிடம் மாட்டி நொடியெலாம் போக்கும்
ஊழ்வினைத் தீர்க்க வேண்டும்
பாயிரம் நான்பாட பதிலுக்கு நீயாடி
பரவசம் காட்ட வேண்டும்
சேயிடம் கேட்டு செய்யாமல் நீயாகத்
தேவைகள் சேர்க்க வேண்டும்
தாயிடம் கேட்டுதான் பெறவேண்டுமோசொல்
தரணியில் முருகவேலே
மயில்தோகை விரித்தாடும் எழிலோடுஏறி
விளையாடும் வேலகுகனே
துயில்நீங்கத் துணைவியர் துதிபாடக் காதல்
முகங்காட்டும் சக்திமகனே (6)
-
இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . (53)
சக்திசக்திதாசன்
அன்பினியவர்களே !
இங்கிலாந்துப் பிரதமர்களில் அதிகளவு சர்ச்சைக்குள்ளாக்கியவரும் மிகவும் பிரபலமானவரும், சரித்திரத்தில் இடம் பெற்றவருமான திருமதி மார்கரெட் தாச்சர் (Mrs.Margeret Thatcher) தனது 87 வது வயதில் லண்டனினுள்ள ரிட்ஸ் (Ritz) எனும் ஹோட்டல் அறையிலே காலமான செய்தியைத் தாங்கி இம்மடல் உங்களை வந்தடைகிறது.இங்கிலாந்து நாட்டின் பிரதமர்களில் மிகவும் பிரசித்தி பெற்றவராக திருமதி மார்கரேட் தாட்சர் விளங்கியதற்குக் காரணங்கள் பலவுண்டு.
இங்கிலாந்து நாட்டின் பிரதமர்களில் முதலாவது பெண் பிரதமரும், இதுவரை ஒரேயொரு பெண் பிரதமரும் ஆகிய காரணம் இவற்றில் முக்கியமான காரணங்களாகும்.
அடுத்து இங்கிலாந்து நாட்டின் அரசியல் வரலாற்றில் மிகவும் துணிச்சலான பல கொள்கைகளை எடுத்த வகையில் பிரபலமடைந்திருந்தார்.
இங்கிலாந்து நாட்டில் லிங்கன்சையர் (Lincolnshire) என்னும் இடத்தைச் சேர்ந்த ராபெர்ட்ஸ் (Roberts) எனும் ஒரு பலசரக்குக் கடை உரிமையாளரின்
மகளாக 1925ம் ஆண்டு ஜனித்தார் திருமதி தாட்சர். இவரது இயர்பெயர் மார்கரேட் ஹில்டா ராபெர்ட்ஸ் ( Margret Hilda Roberts ) ஆகும்.ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில் பட்டம் பெற்ற இவர் இரசாயணவியல் ஆராய்ச்சியாளாரகப் பணியாற்றினார். அதன் பின்பு 1951ம் ஆண்டு வெல்வ வளம் கொழித்த வர்த்தகரான டெனிஸ் தாட்சர் (Dennis Thatcher) அவர்களை மணமுடித்தார். வழக்குரைஞர் கல்வியில் அதிபர் பட்டமான பாரீஸ்டர் பட்டம் பெறுவதற்கான பயிற்சியை மேற்கொண்டு 1955ம் ஆண்டு அதை நிறைவு செய்தார்.
தன் தந்தைவழி கன்சர்வேடிவ் கட்சியின் அரசியலில் குதித்த இவர் 1959ம் ஆண்டு இலண்டனிலுள்ள ஃபின்ச்லி (Finchly) எனும் இடத்தின் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து இதே தொகுதியில் தொடர்ந்து 1992ம் ஆண்டு வரை பாராளுமன்ற அங்கத்தினராகத் தெரிவு செய்யப்பட்டார்.
இவரது முதலாவது பாராளுமன்ற அமைச்சுப்பதவி 1964ம் ஆண்டு ஹரோல்டு மக்மிலன் (Harold Macmillan) எனும் பிரதம மந்திரியின் கீழ் ஓய்வூதியத் துறையின் துணை அமைச்சர் பதவியேயாகும்.
அதைத் தொடர்ந்து எட்வேர்டு ஹீத் (Edward Heath) கன்சர்வேடிவ் பிரதம மந்திரியாக விருந்த சமயம் கல்வித்துறை அமைச்சர் பதவி வகித்தார்.
1972ம் ஆண்டு எட்வேர்டு ஹீத் அவர்களின் தலைமையில் கன்சர்வேடிவ் கட்சித் தேர்தலில் தோல்வியைத் தழுவிய போது அவரின் தலைமைத்துவத்திற்கு எதிராகப் போட்டியிட்டு பலரின் ஆச்சர்யத்திற்குள்ளாக கன்சர்வேடிவ் கட்சியின் தலைமைப் பதவியை ஏற்றார்.
அதைத் தொடர்ந்து 1979ம் ஆண்டுத் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி தேர்தலில் வெற்றியடைந்ததும் அதன் பிரதம மந்திரியாகப் பதவியேற்று இங்கிலாந்து நாட்டின் முதல் பெண் பிரதமர் எனும் சரித்திரம் படைத்தார்.
அரசு நிறுவனங்களையும், தேசிய ஸ்தாபனங்களையும் தனியார் மயப்படுத்தும் கொள்கையில் மிகவும் அழுத்தமான் கொள்கைகளைக் கொண்டிருந்தார். இவரது முக்கிய அரசியல் விஞஞாபங்களாக சமூக சேவைகளுக்கான செலவுகளைக் குறைப்பதும், மக்களின் வரிப்பணத்தைக் குறைப்பதும் ஆன கொள்கைகள் முக்கிய இடங்களை வகித்தன.
இவரது பதவிக் காலத்தில் பண்வீக்கத்தைக் குறைத்தாலும் வேலையில்லாதோர் தொகை அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
1982ம் ஆண்டு அர்ஜெண்டீனா இங்கிலாந்து நாட்டின் இறைமையிலிருந்த வோக்லண்ட்ஸ் (Falklands) தீவினை ஆக்கிரமித்த போது தனது நாட்டின் படையை அனுப்பி அத்தீவினை மீட்டெடுத்தது இங்கிலாந்து மக்களிடையேயும், சர்வதேச அளவிலும் இவரது செல்வாக்கை அதிகரித்தது. அதைத் தொடர்ந்து வந்த 1082ம் ஆண்டு தேர்தலில் மாபெரும் வெற்றியீட்டி மீண்டும் பிரதமரானார்.
அக்காலப்பகுதியில் அமெரிக்க ஜ்னாதிபதியாக இருந்த ரொனால்ட் ரீகன் (Ronald Regan) அவர்களுடன் மிக நெருக்கமான அரசியல் உறவுகளைப் பேணி வந்தார். இருவருக்கும் கம்பூனிசத்தின் மீது இருந்த எதிர்ப்புத்தன்மையும், கட்டுப்பாடற்ற வியாபாரக் கொள்கையில் இருந்த ஈடுபாடும் இவர்களைப் பலமாக இணைத்தது.அந்நாளைய சோவியத் யூனியனால் இவரது அழுங்குப்பிடியான கொள்கைகளினால் “இரும்பு மனுஷி” (Iron Lady) என்று அழைக்கப்பட்டார்.
அப்போதைய சோவியத் யூனியனின் அதிபரான் கோர்பச்சேவ் அவர்களின் கம்பூனிசத் தளர்வுக் கொள்கைக மனப்பான்மையை அறிந்து கொண்ட தாட்சர் அவர்கள் அவரை மேற்குலக ஜனநாயகப் பாணியிலான அரசியலமைப்பை நோக்கி நகர்த்தும் முயற்சிகளில் முன்னின்றார்.
1987ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றியீட்டி மூன்றாவது முறையாக பிரதமராகிய முதலாவது நபர் எனும் சரித்திரம் படைத்தார். இக்காலகட்டத்தில் இவரது கட்சியின் அடிமட்டத் தொண்டர்களின் அபிலாஷைகளைப் புரிந்து கொள்ள முடியாத தலைவர் எனும் பெயர் பெருமளவிற்கு பொதுமக்களால் மிகவும் எதிர்க்கப்பட்ட “போல் டக்ஸ்” (Poll Tax) எனும் கொள்கை உட்பட பல கொள்கைகளை அமுல்படுத்த முயன்றதினால் இவரது கட்சிக்குள்ளிருந்தே இவருக்கு எதிர்ப்புக் கிளம்பியது.
விளைவாக ,
1990ம் ஆண்டு நவம்பர் மாதம் தலைமைத்துவப் போட்டியில் ஜான் மேஜர் (John Major) அவர்களினால் தனது தலைமைப் பதவியை இழந்தார்.
1992ம் ஆண்டு இவர் பாராளுமன்ற அரசியலில் இருந்து விலகினார். இவருக்கு இங்கிலாந்து நாட்டின் அரசியல் கெளரவமான ” லேடி” எனும் பட்டம் வழங்கப்பட்டது. 1995ம் ஆண்டு தாட்சர் பவுண்டேஷன் எனும அமைப்பைத் தோற்றுவித்து புதிதாக கம்யூனிச கட்டமைப்பில் இருந்து விடுபட்ட கிழக்கு ஜரோப்பிய நாடுகளுக்கு ஜனநாயகத்தைப் பற்றிய பல சொற்பொழிவுகளையும், விரிவுரைகளையும் செய்தார்.
பல சிறிய ஸ்ட்ரோக் எனும் இதய வியாதிகளால் பாதிக்கப்பட்டதினால் 2002ம் ஆண்டிலிருந்து பொது வாழ்க்கையில் இருந்து ஒதுங்கினார்.
இவரது கொள்கைகள் நாட்டினைப் பிளவு படுத்தியது எனும் வாதம் இவரின் மறைவிற்குப் பின்னரும் கூட இன்றும் பலமூலைகளில் விவாத வடிவில் விவாதிக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றது.
நிலககரிச் சுரங்கத் தொழிலாளர்களின் யூயனின் பலத்தைச் சிதைத்து இங்கிலாந்தில் பல யூனியன்களின் பலத்தை தான் கொண்டு வந்த சட்டங்களின் மூலம் பலமிழக்கச் செய்தார்.
வீடு வாங்கும் வசதியர்ரோருக்கு மாநகர சபைகளினால் வழங்கப்பட்டு வந்த அர்சாங்க வாடகை வீடுகளை அவ்வீடுகளில் குடியிருப்போருக்கு மிகவும் குறைந்த விலையில் அநேகர் வீட்டுச் சொந்தக்காரர் ஆக்கினார்.
இது பலருக்கு வாழ்வில் தகுதியை உயர்த்த உதவியது என்ற வாதம் இவரது ஆதரவாளர்களால் முன்னெடுக்கப்பட்டாலும் பலர் இன்றைய சமூக வீடுகளின் தட்டுப்பாட்டுக்கு இவரே காரணம் என்று மறுபகுதியினர் குற்றம் சாட்டுகின்றனர்.
ஜாரோப்பிய யூனியன் இக்கூட்டமைப்பைச் சேர்ந்த நாடுகளின் மீது பல அநியாயமான கட்டுப்பாடுகளை விதித்து நாட்டின் இறைமையைப் பாதிக்கின்றன எனும் வாதத்தை மிகவும் ஆணித்தரமாக முன்னெடுத்தவர்களில் இவர் முதன்மையானவர்.
இன்றைய ஜரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார நெருக்கடிகள் இவரது வாதத்திற்கு வலுச் சேர்க்கிறதோ என்று எண்ணச் செய்யும் வகையில் இன்றைய நிலைமைகள் இருக்கின்றன.
சரியான வகையிலோ அன்றித் தவறான வகையிலோ பிரித்தானிய சரித்திரத்தில் ஒரு திருப்புமுனையாக இவரது ஆட்சிக்காலம் அமைந்திருக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மை.
இங்கிலாந்தின் முதலாவது பெண் பிரதமர் எனும் பெயரெடுத்திருந்த போதும் தனது பதவிக்காலத்தில் பெண்களை அரசியலில் முன்னனிக்கு கொண்டுவருவதற்காக இவர் எவ்வகையிலும் சேவை ஆற்றவில்லை என்று பல பெண்ணியவாதிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
இவரது மாற்றங்களின் தாக்கம் இங்கிலாந்தைப் பொறுத்தவரை எவ்வகையில் அமைந்தது என்பதற்கான தீர்ப்பை சரித்திரம் வழங்கும்.
“அயர்ன் லேடி” என்று அழைக்கப்பட்ட இவ்வுறுதி மனத்தைக் கொண்ட தலைவியின் ஆத்ம சாந்திக்காக இப்புலம்பெயர் தமிழனின் மனம் பிரார்த்திக்கின்றது.
அடுத்த மடலில் சந்திக்கும்வரை
சக்தி சக்திதாசன்
லண்டன்
10.04.2013http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan
-
வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (9)
பவள சங்கரி
புன்னகைக் கவசமிடுவோம்!

ஒவ்வொரு முறையும் யாரையாவது பார்த்து நீங்கள் புன்னகைக்கும்போது அது அவருக்கு நீங்கள் அளிக்கும் ஒரு ஒரு அழகான அன்புப் பரிசாகிறது ..தொடுதலின் சக்தி, ஒரு புன்னகை, அன்பான ஒரு சொல், கேட்கும் ஓர் செவி, நேர்மையான ஒரு பாராட்டு, அல்லது அக்கறையான ஒரு சிறிய செயல், இவையனைத்தும் நம் வாழ்க்கையையே புரட்டிப்போடும் வல்லமை கொண்டது என்பதை அடிக்கடி நாம் குறைத்து மதிப்பிட்டுவிடுகிறோம்.
அன்னை தெரெசாஒரு சாதாரண புன்னகை எத்துனை மகத்தான மாற்றங்களை ஏற்படுத்தவல்லது என்பதை சிந்தித்துப் பார்ப்போம். புன்னகையை எந்த இடத்தில் நாம் தொலைக்கிறோம் என்பதை முதலில் சிந்திப்போம்.
1. கோபம் எட்டிப்பார்த்தால் புன்னகை ஓடி ஒளிந்து கொள்கிறது.
2. அன்பு குறைய ஆரம்பித்தால் புன்னகை மறைந்து சிடுமூஞ்சித்தனம் தலைகாட்ட ஆரம்பித்துவிடுகிறது.
3. உடலில் ஆரோக்கியம் குன்றினால் வேதனையில் புன்னகை தொலைந்து விடுகிறது.
4. வேதனையான சம்பவங்கள் ஏதும் நடந்துவிட்டால் புன்னகை காணாமல் போகிறது.
5. நாம் நினைத்தது நடக்கவில்லையென்றால் திரை போட்டு மறைத்துக் கொள்கிறது புன்னகை.
6. தேவையற்ற வெறுப்பு புன்னகையை உண்டுவிடுகிறது.இப்படி பல்வேறு காரணங்களால் புன்னகை நம்மைவிட்டு விலக்கப்படுகிறது. இதில் வேதனையான சம்பவங்கள் போன்ற சிலவற்றைத் தவிர மற்ற எதுவாயினும் வலுக்கட்டாய்மாகவாவது புன்னகையை வரவழைத்துப் பாருங்கள். அப்போதுதான் அதன் வலிமை நம்க்குப் புரியும். ஆம் அந்தப் புன்னகை நம்க்குள்ளும், நம்முடன் இருப்பவர்களுக்குள்ளும் நம்ம முடியாத பெரும் மாற்றத்தை ஏற்படுத்திவிடும். ஆனால் அடுத்தவர் மனநிலையையும் சற்றே உணர்ந்து கொள்ள வேண்டியது அவசியம். அவர் வேதனையான மன நிலையில் இருக்கும் போது நம் புன்னகையை வீசாமல் அன்பான பார்வையால் அவரை அமைதிப்படுத்திவிட்டு பின்பு நம் புன்னகையை வெளிப்படுத்தி அவரையும் அமைதி கொள்ளச் செய்வது உத்தமம். இந்த ஒரு சிறு புன்னகை மந்திரம் நம்மையும் அமைதிப்படுத்தி ஆக்கப்பூர்வமாகச் செயல்படச் செய்வதோடு, அடுத்தவரையும் அமைதியாக்கி நமக்கு ஆதரவாக செயல்படவும் செய்துவிடும்.
யாரையும் மாற்ற முயற்சி செய்ய வேண்டியதில்லை!
ஆம், யாரையும் மாற்றுவது என்பது தேவையற்ற கால விரயம் செய்யக்கூடிய ஒரு செயல். காரணம் ஒருவரை அவருடைய இயல்பான தன்மையிலிருந்து மாற்றுவது சாத்தியமில்லாத காரியம், அது என்றுமே நடக்க முடியாத ஒரு வெட்டி வேலையாகக்கூடும். ஆனால் பல நேரங்களில் நாம் நம்மை அறியாமலே இதைச் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம். நாம் எந்த வழியில் சென்று மாற்ற முயன்றாலும் அது வீண் வேலை மட்டுமே.தொடர்ந்த சமாதான வார்த்தைகளாலோ, மகிழ்ச்சியற்ற அமைதியான சைகைகளாலோ, அவரிடம் நாம் எதிர்பார்க்கும் மாற்றத்தை வெளிப்படையாகச் சொல்லியோ அல்லது ஒரு வார்த்தையும் சொல்லாமல் புரிய வைக்க முயன்றாலோ என இப்படி எதுவும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை என்பதுதான் நிச்சயம். நம்முடைய நெருங்கிய உறவாகவோ, இரத்த சம்பந்தம் உள்ளவரோ அல்லது நெருங்கிய நண்பரோ இப்படி யாராக இருந்தாலும் இதே நிலைதான். உண்மையில் எவ்வளவு அதிகமாக நாம் அவர் மாற்றம் வேண்டி அழுத்தம் கொடுக்கிறோமோ அதைவிட ஒரு படி மேலாக திரும்ப அந்த அழுத்தம் நமக்கே வந்து சேரும். ஒரு புள்ளியில் அது ஒரு சச்சரவாகக்கூட மாறும் வாய்ப்பாகிவிடும். மாற்றத்தை ஏற்றுக் கொள்வது அவரவர் விருப்பம். அது அவருடைய உரிமையும் கூட. அதனால் நாம் எதையும் மாற்ற முயற்சித்து காலத்தையும் விரயம் செய்து, மன அமைதியும் கெடுத்துக்கொண்டு, எதிர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்வதைக் காட்டிலும், உள்ளதை உள்ளவாறு அப்படியே ஏற்றுக் கொண்டு அதற்கேற்றார்போல் நம் பாதையையும் அமைத்துக்கொண்டால் அவருக்கும் சுதந்திரம் கிடைப்பது போல வெற்றிகரமாக நமக்கும் விடுதலை கிடைத்துவிடுகிறது.
வாழு! பிறரையும் வாழவிடு!
தொடர்வோம்
-
யுகாதி ఉగాది, ಯುಗಾದಿ) गुढीपाडवा
நவீன பஞ்சாங்க படனம்
இன்னம்பூரான்
10/11.04 2013
யுகாதி பண்டிகையை முன்னிட்டு உலக மாந்தர்கள் யாவருக்கும் வாழ்த்துக்கள்.
சுபிக்ஷமாக உங்கள் வாழ்க்கை அமையும். முயற்சியையும், பயிற்சியையும் கை விடேல்’
குடும்பமும், பரிவாரமும், சுற்றமும், சமுதாயமும் செழித்தோங்கும். மனித நேயமே துணை.
தனி நபர்களின் முன்னேற்றம், அவர்கள் கையில். ஓதாமல் ஒரு நாளும் இருக்கவேண்டாம்.
இறைவனை தொழு. தன் கையே தனக்கு உதவி என்பதை மறக்காதே.
முதுமையை பழிக்காதே. குழவியை விரட்டாதே. யாரையும் இகழாதே.
நேசம் ஒரு பிணைப்பு. அன்பு ஒரு பிடிப்பு. கனிவு ஒரு பண்பு.
ஒரு அசரீரி சொல்ல, கை எழுத, நானும் பஞ்சாங்க படனம் கேட்டுக்கொண்டேன்.
ஜய விஜயீ பவ!
அன்றொரு நாள் கல்கியின் பார்த்திபன் கனவு படித்தது, ‘விஜய’ வருஷத்தின் விஜயம் போது கண்ணில் தென்பட்டது
“…உறையூரில் அன்று அதிகாலையிலிருந்து அல்லோலகல்லோலமாயிருந்தது…வீட்டுக்கு வீடு தென்னங்குருத்துக்களினாலும் மாவிலைகளினாலும் செய்த தோரணங்கள் தொங்கிக் கொண்டிருந்தன. வீடுகளின் திண்ணைப் புறங்களிலெல்லாம், புதிய சுண்ணாம்பும் சிவப்புக் காவியும் மாறிமாறி அடித்திருந்தது. ஸ்திரீகள் அதிகாலையிலேயே எழுந்திருந்து, தெருவாசலைச் சுத்தம் செய்து, அழகான கோலங்கள் போட்டு, வாசலில் குத்து விளக்கு ஏற்றி வைத்தார்கள்…விடிய ஒரு சாமம் இருக்கும்போதே, அரண்மனையிலுள்ள பெரிய ரண பேரிகை முழங்கத் தொடங்கியது. அதனுடன் வேறு சில சத்தங்களும் கலந்து கேட்கத் தொடங்கின… இவ்வளவுடன், வழக்கத்துக்கு முன்னதாகவே துயில் நீங்கி எழுந்த பறவைகளின் கல கல சத்தமும் சேர்ந்து ஒலித்தது. சூரிய உதயத்துக்கு முன்னாலிருந்தே அரண்மனை வாசலில் போர் வீரர்கள் வந்து குவியத் தொடங் கினார்கள். படைத் தலைவர்கள் அவர்களை அணிவகுத்து நிற்கச் செய்தார்கள்…இந்த மாதிரி அணிவகுப்பு நடந்து கொண்டிருக்கையில் அடிக்கடி போர் வீரர்கள் “வீரவேல்” “வெற்றிவேல்” என்று முழங்கிக் கொண்டிருந்தார்கள். சிறிது நேரத்திற்கெல்லாம் அரண்மனை முன் வாசலில் கலகலப்பு ஏற்பட்டது. “மகாராஜா வருகிறார்!” “மகாராஜா வருகிறார்!” என்று ஜனங்கள் பேசிக் கொண்டார்கள். அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அரண் மனைக் குள்ளேயிருந்து கட்டியக்காரர்கள் இருவர், “சோழ மண்டலாதிபதி பார்த்திப மகாராஜா வருகிறார்! பராக் பராக்!” என்று கூவிக் கொண்டு வெளியே வந்தார்கள். வீதியில் கூடியிருந்த அந்தணர்களும் முதியோர்களும் “ஜய விஜயீபவா!” என்று கோஷித்தார்கள்…”
சுபம். “ஜய விஜயீபவா!”
சித்திரத்துக்கு நன்றி: http://www.tamilnews.cc/admin/uploads/imagesCAZDWK5U.jpg
-
நாகரிக மனிதனின் வியாதிகளும், காட்டுமிராண்டி உணவுமுறையும்- 5
செல்வன்
இன்றைய மருத்துவர்களால் பரிந்துரைக்கபடும் உடல்நல குறிப்புக்களை ஆதிமனிதன் பின்பற்றி இருந்தால் மனித இனமே பரிணாம வளர்ச்சியில் பின் தங்கி இருக்கும். அந்த அளவு மோசமான அறிவுரைகள் மருத்துவர்களால் பரிந்துரைக்கபடுகின்றன. உதாரணம் முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் உண்ணச் சொல்லி இவர்கள் கொடுக்கும் அறிவுரை. முட்டையில் உள்ள மினரல்கள், வைட்டமின்கள் எல்லாமே மஞ்சள் கருவில் தான் உள்ளன. முட்டையின் மஞ்சள் கரு என்பது ஒரு உயிருக்குத் தேவையான அனைத்து மூலப்பொருளையும் கொண்டது. அத்தகைய சத்தான மஞ்சள் கருவை தூக்கி எறிந்து வெள்ளைக் கரு ஆம்லட்களை உண்டு பலரும் உடல்நலனை கெடுத்து கொண்டார்கள். முட்டைக்கு பதில் கடைகளில் விற்பனைக்கு வந்த எக் ஒயிட்டில் பல கெமிக்கல்கள், பிரசர்வேடிவ்கள் கலக்கப்பட்டு இருந்தன.
இதே மாதிரி பாலைக் குடிக்க வேண்டாம் எனச் சொல்லி கொழுப்பு நீக்கிய ஸ்கிம் மில்க்கை குடி என இவர்கள் கூறிய அறிவுரையையும் சேர்த்துக் கொள்ளலாம். கொழுப்பு எடுத்த பாலை கொட்டிய பால் என தமிழகத்தில் அழைப்பார்கள். அதில் புரதம், கால்ஷியம் தவிர்த்து எதுவும் கிடையாது. பாலில் இருக்கும் கொழுப்பை நீக்கியவுடன் அதில் உள்ள வைட்ட்மின் ஏ, வைடமின் டி எல்லாம் அகன்றுவிடும். அதனால் செயற்கையாக வைட்டமின் ஏவையும், வைட்டமின் டியையும் கொட்டிய பாலில் கலந்து வந்தார்கள். ஆனால் வைட்டமின் ஏவும், வைட்டமின் டியும் கொழுப்பில் கரையும் வைட்டமின்கள். பாலில் உள்ள கொழுப்பு இன்றி அவை உடலில் சேருவது இல்லை. கழிவில் அப்படியே அந்த வைட்டமின்கள் வந்துவிடும். கொட்டிய பாலில் செயற்கையாக சேர்க்கப்பட்ட அந்த வைட்டமின்கள் நம் உடலில் சேரவேண்டும் எனில் கொட்டிய பாலை உண்கையில் பாலுடன் வெண்ணையை உண்ண வேண்டும்!!!!
கொட்டிய பால் உடலுக்கு நல்லது என மருத்துவர்கள் பரிந்துரைத்ததும் பால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார்கள். அதற்கு முன் கொட்டியபாலை அவர்கள் விற்காமல் கொட்டித்தான் வந்தார்கள். அதற்கு இப்படி ஒரு சந்தை கிடைத்ததும் அவர்களுக்கு மகிழ்ச்சி.
2 வயது முதல் குழந்தைகளுக்கு கொட்டியபாலை கொடுக்கச் சொல்லி மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். சமீபத்தில் இரு ஆண்டுகளுக்கு முன் உங்கள் வயது ஐம்பதை தாண்டி உங்களுக்கு ரத்த அழுத்தம் இருந்தால் உங்களுக்கு ஸ்டாடினை பரிந்துரைக்கலாம் என எப்.டி.ஏ ஒரு விதியை அறிமுகபடுத்தியது. இதனால் கொலஸ்டிரால், இதய அடைப்பு பிரச்சனை எதுவும் இல்லாத 65 லட்சம் அமெரிக்கர்கள் ஸ்டாடினை உட்கொள்ளக்கூடிய நிலைக்கு ஆளானார்கள்.
ஆனால் ஆய்வுகள் இதுகுறித்து என்ன கூறுகின்றன? மந்காட்டன், நியூயார்க் பகுதியில் வாழ்ந்த முதியவர்கள் 2277 பேரைப் பத்து ஆண்டுகள் தொடர்ந்து ஆராய்ந்ததில் கிடைத்த புள்ளிவிவரங்கள் கொல்ஸ்டிராலும், எல்டிஎல்லும் மோசமானவை எனக் காட்டவில்லை. மாறாக எத்தனைக்கெத்தனை கொலஸ்டிராலும், எல்டிஎல் விகிதமும் அதிகமாக இருந்ததோ அத்தனைக்கு அத்தனை அவர்கள் அதிகமாக உயிர்வாழ்ந்தார்கள்.
இந்த ஆய்வின்படி மொத்த கொலஸ்டிரால் அளவு 175க்கு கீழ் இருந்தவர்களில் 97% 10 ஆண்டுகளில் உயிர் இழந்தார்கள்.
கொலஸ்டிரால் 176ல் இருந்து 200 வரை இருந்தவர்களில் 78% பேர் 10 ஆண்டுகளில் உயிர் இழந்தார்கள்.
கொலஸ்டிரால் 200 தாண்டியதும் மரணங்கள் கிட்டத்தட்ட சரிபாதியாக (57%) குறைந்தன.
அதேபோல் கெட்ட கொலஸ்டிரால் எனப்படும் எல்டிஎல் கொலஸ்டிரால் 97க்கு கீழ் இருந்தவர்களில் 90% பேர் 10 ஆண்டுகளில் உயிர் இழந்தார்கள். ஒப்பீட்டளவில் மருத்துவர்கள் ஸ்டாடின் கொடுக்கும் அளவு “மோசமாக” கருதப்படும் 144 என்ற அளவைத் தாண்டி எல்.டி.எல் இருப்பவர்களில் 53% பேர் 10 ஆன்டுகளில் மரணம் அடைந்தார்கள்.
இன்றைய மருத்துவர்கள் பரிந்துரைக்கும் அதிகபட்ச எல்.டி.எல், மொத்த கொலஸ்டிரால் அளவு என்ன?எல்.டி.எல் 130.மொத்த கொலஸ்டிரால் 200. நீங்கள் வயதானவராக இருந்து, மருத்துவர் சொல்லும் அளவுகளுக்கு உங்கள் கொலஸ்டிராலை குறைத்தால் என்ன ஆகும்?
முட்டையை குறித்து நடத்தபட்ட்ட ஆய்வுகள் மருத்துவ அறிவுரைகள் எவ்வளவு தவறானவை எனக் காட்டின.
கிட்டத்தட்ட 10 லட்சம் பேரை வைத்து சீனாவில் நடத்தபட்ட இந்த மெகா அனாலிசிஸ் ஆய்வு முட்டை உண்பதற்கும், ரத்தத்தில் உள்ள கொலஸ்டிரால் அளவுக்கும், இதயநோய்களுக்கும் ஸ்னானபிராப்தி இல்லை என்றது. உங்களுக்கு சக்கரை இருந்தால் முட்டை உங்களுக்கு இதய்நோயை வரவழைக்கும் (ஆனால் அது இந்த நிலையில் கூட ஒரு சந்தேகத்துக்கு உரிய கருதுகோள் தான்). டயபடிஸ் இல்லாதவர்கள் முட்டையை உண்டால் அது அவர்கள் ரத்தத்தில் உள்ள கொலஸ்டிரால் அளவை எந்த விதத்திலும் பாதிப்பது இல்லை, இதயநோயும் வருவது இல்லை என்கிறது பேராசிரியர் லியூவின் ஆய்வு.
முட்டையின் வெள்ளைக் கருவை உண்டு, கொழுப்பு எடுத்த பாலை குடித்துத் தான் நம் முன்னோர்கள் ஆரோக்கியமாக இருந்தார்களா என்ன?
(தொடரும்)
-
அமெரிக்கப் பெண்கள்
நாகேஸ்வரி அண்ணாமலை
அமெரிக்கப் பெண்கள் எல்லாவற்றிலும் ஆண்களுக்குச் சமமாகத் தாங்களும் செயல்பட வேண்டும் என்று நினைக்கிறார்கள். இப்போது ராணுவத்திலும் ஆண்களோடு சமஉரிமை வேண்டும் என்று கேட்கிறார்கள். ஆண்களுக்குத் தரப்படும் எல்லாப் பதவிகளும் இவர்களுக்கும் கொடுக்கப்பட வேண்டுமாம். ஆண்கள் செய்யும் எல்லா முரட்டு வேலைகளையும் (பெரிய பளுக்களைத் தூக்குவது இதில் ஒன்று), செய்வது, ஈவு இரக்கமற்று எதிரிகளைக் கொல்வது, சண்டையில் சகாக்கள் அடிபட்டு வேதனையால் துடிப்பதையும் உயிருக்குப் போராடுவதையும் பார்த்து மனதைக் கல்லாக்குவது என்று ஆண்கள் செய்யும் எல்லாவற்றையும் இவர்களும் செய்ய வேண்டுமாம். இதற்காக இராணுவத்தில் எல்லா வேலைகளையும் பெண்களுக்கும் கொடுக்க வேண்டும் என்ற விதியை ராணுவ அமைச்சர் அமுகலுக்குக் கொண்டுவந்திருக்கிறார். சம உரிமைகளுக்காகப் போராடுவதற்கு ஒரு எல்லையே இல்லையா? நான் எப்போதும் கூறுவதுபோல் இயற்கை பெண்களையும் ஆண்களையும் ஒன்றாகப் படைக்கவில்லை. ஆணின் உடம்பிற்குள்ள பலம் பெண்ணின் உடம்பிற்கு இல்லை. பெண்ணால்தான் பிள்ளை பெற முடியும். சம உரிமை வேண்டும் என்பதால் ஆண்களையும் பிள்ளை பெறும்படி இவர்களால் பணிக்க முடியுமா?
மேலும் இராணுவத்தில் பணிபுரியும் பல பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுகிறார்கள். ஆண்களுக்கும் இந்தக் கொடுமை நடக்கிறதாம். இருந்தாலும் இப்படிப் பெண்கள் தேவையில்லாமல் ஆபத்திற்குத் தங்களை உட்படுத்திக்கொள்ள வேண்டுமா?
எனக்குத் தெரிந்த ஒரு பெண் ஒரு டிபார்ட்மெண்ட் கடையில் மெத்தைகள் விற்கும் பகுதியில் மேனேஜராக வேலைபார்க்கிறாள். இவள் மேனேஜர் என்பதால் மெத்தைகளை இவளே தூக்க வேண்டியதோ நகர்த்த வேண்டியதோ இல்லை. ஆனாலும் குழந்தை பெற்றுக்கொண்ட ஒன்றரை மாதங்களிலேயே வேலைக்குச் சேர்ந்து (அதற்கு மேல் விடுமுறை இல்லை) கனமான மெத்தைகளைத் தூக்குகிறாள். தன்னால் இனியும் இந்த மாதிரி வேலைகளைச் செய்ய முடியும் என்பதைப் பிறருக்கு எடுத்துச் சொல்வது போல் இருக்கும் இவள் செய்யும் வேலை
குழந்தை பெறுவது மட்டுமில்லை, அதன் பிறகு கொஞ்ச காலத்திற்காவது பாலூட்டி வளர்க்க வேண்டியது பெண்ணின் கடமை ஆகிறது. இந்தக் கடமையையும் ஆண் சேர்ந்து சுமக்க வேண்டும் என்கிறார்களா? பாலுறவுச் சுதந்திரம் வேண்டும் என்று கேட்டதால் இன்று சமூகத்தின் தூண்களில் ஒன்றான குடும்பம் என்ற அமைப்பு வலுவிழந்து போயிருக்கிறது. இப்போது இராணுவத்தில் பணிபுரிய விரும்புவதால் இந்த அமைப்பு இன்னும் வலுவிழக்கும் என்று ஏன் இவர்கள் உணரவில்லை? மேலும் பல ஆண் போர்வீரர்களே இராணுவத்தில் பணிபுரியும்போது அங்குள்ள கோரங்களைப் பார்த்துவிட்டு மனவியதியால் (Post traumatic disorder) பாதிக்கப்படுகிறார்கள். சிலர் இந்த வியாதியின் காரணமாக கொலைகாரர்களாகவும் மாறுகிறார்கள். ஆண்களே இவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டால் பெண்கள் எவ்வளவு தூரம் பாதிக்கப்படுவார்கள்? பெண்கள் தங்கள் புத்திசாலித்தனத்தை உபயோகித்துச் செய்யக் கூடிய வேலைகள் எத்தனையோ இருக்கின்றன. இராணுவத்தில் சில வேலைகள் பெண்களுக்கு மறுக்கப்படுவதால் பெண்களுக்கு ஆண்களோடு சம வேலைவாய்ப்புகள் இல்லையாம். அதனால் போராடித் தங்கள் உரிமைகளைப் பாதுகாத்துக்கொண்டார்களாம்! அமெரிக்கா செல்லும் திசை சரியில்லை என்று நான் நினைப்பதற்குப் பல காரணங்கள் உண்டு. இராணுவத்தில் எந்த வேலைக்கும் பெண்களும் நியமிக்கப்படலாம் என்ற விதியும் அந்தக் காரணங்களில் ஒன்று.
சில தினங்களுக்கு முன் வந்த ஒரு செய்தி பெண்கள் குற்றம் புரிவதிலும் ஆண்களோடு தங்களுக்குச் சமஉரிமை வேண்டும் என்று கேட்பது போல் இருக்கிறது.
டெலவேர் என்னும் மாநிலத்திலுள்ள லிங்கன் என்னும் ஊரைச் சேர்ந்த மார்கரெட் ஸ்மித் என்னும் 89 வயதான மூதாட்டி வரப் போகும் ஈஸ்டர் பண்டிகைக்காக தன் வீட்டிற்கு வரப் போகும் உறவினர்களுக்குப் பரிசுகள் வாங்கக் கடைக்கு தன் பியூக் காரில் சென்றார். இவர் உயரம் 4’ 11” தான். தாட்டியான உடம்பில்லை. காரின் ஸ்டியரிங்கைப் பிடித்து ஓட்டுவதற்கு டிரைவர் இருக்கையின் மீது ஒரு தலையணைய உயரத்திற்காக வைத்திருந்தார். வழியில் ஒரு இடத்தில் ஐஸ்கிரீம் சாப்பிடலாம் என்று எண்ணி அந்தக் கடையின் முன் உள்ள கார்கள் நிறுத்துமிடத்தில் காரை நிறுத்தினார்.
இவருடைய வாழ்க்கைச் சரித்திரத்தைக் கொஞ்சம் பார்ப்போம். லிங்கன் ஊரின் ஸ்லாட்டர் நெக் என்னும் தெருவில் பெற்றோரின் பன்னிரெண்டு குழந்தைகளில் ஒருவராக மார்ச் 1924-இல் பிறந்தார். தந்தை தொழிற்சாலையில் வேலைபார்த்ததோடு விவசாயமும் செய்துவந்தார். பெரும்பான்மையாக கருப்பு அமெரிக்கர்கள் வாழும் இடம் ஸ்லாட்டர் நெக். அவர்கள் வீடு, நிலம், பள்ளி எல்லாம் அங்குதான். அவர்கள் இறைவனை வழிபடும் சர்ச் கூட அங்குதான் இருக்கிறது. அங்குள்ள பள்ளியிலேயே பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு பிலடெல்பியாவிற்குப் போய் முடி அலங்காரம் செய்யும் படிப்பை முடித்துவிட்டு மறுபடி ஸ்லாட்டர் நெக்கிற்கே திரும்பி அங்கு ஒரு அழகு நிலையத்தைத் துவங்குகிறார். முதல் திருமணம் விவாகரத்தில்முடிந்தது; இரண்டாவது கணவர் இளவயதிலேயே இறந்துவிட்டார். மூன்றாவது கணவரோடு 42 வருடங்கள் வாழ்ந்தார். 2010-இல் அவர் இறந்துவிட்டார்.
எல்லோரிடமும் மார்கரெட் அன்பாகப் பழகுவார். சர்ச்சில் பாட்டுப் பாடுவார். தன்னார்வத் தொண்டு செய்வார். இவருடைய அழகு நிலையத்திற்கு பல மைல் தொலைவிலிருந்து வருபவர்களும் உண்டு. உள்ளூரில் இவருக்கு நல்ல பெயர். பத்து வருடங்களுக்கு முன் தொழிலிருந்து ஓய்வு பெற்றார். பக்கத்து வீட்டுக்காரர் இறந்து போனதும் அவருடைய பூனையை மிகவும் அன்போடு வளர்த்து வந்தார்.
கார் நிறுத்துமிடத்தில் காரை நிறுத்தியிருந்த இவரை இரண்டு இளம் பெண்கள் – வயது 15,14 – அணுகி நகரின் அடுத்த கோடிக்குப் போக வேண்டும் என்றும் தங்களை அவர் அவருடைய காரில் கூட்டிச் சென்றால் பனம் கொடுத்துவிடுவதாகவும் கூறினர். முதலில் தயங்கிய மூதாட்டி பின் அவருக்கே உரிய இரக்க சுபாவத்தினால் அவர்களைத் தன் காரில் கொண்டுவிடுவதாகவும் ஆனால் பணம் எதுவும் கொடுக்க வேண்டாம் என்றும் கூறி அவர்களைத் தன் காரில் ஏற்றிக்கொண்டார். அந்தப் பெண்கள் மீது இரக்கம் காட்டியதுதான் அவர் செய்த பெரிய தவறாகப் போய்விட்டது.
காருக்குள் ஏறியவுடனேயே கார்ச் சாவியை மூதாட்டியிடமிருந்து பறித்துக்கொண்ட அந்த இரு பெண்களும் மூதாட்டியை கார் டிக்கிக்குள் தள்ளிப் பூட்டிவிட்டு காரை ஓட்டத் தொடங்கினர். இடையில் ஒரு இடத்தில் காரை நிறுத்தி டிக்கியைத் திறந்து மூதாட்டியிடமிருந்த 500 டாலர் பணத்தைப் பறித்துக்கொண்டு மறுபடி டிக்கியிலேயே வைத்துப் பூட்டினர். அவரிடமிருந்த செல்போனையும் பறித்துக்கொண்டனர். இரண்டு நாட்கள் நாற்பது டிகிரி குளிரில் ஆகாரமும் இருதய வியாதிக்கும் இரத்த அழுத்தத்திற்கும் தேவையான மருந்துகளும் இல்லாமல் அந்த டிக்கியில் காலம்கழித்த அவரை மறுநாளைக்கு மறுநாள் டிக்கியிலிருந்து விடுவித்து ஒரு கல்லறைத் தோட்டத்தில் விட்டுவிட்டு அந்தப் பெண்கள் ஓடிவிட்டனர்.
எங்கிருக்கிறோம் என்பதே தெரியாமல் மூதாட்டி வெறும் கால்களோடு அந்த மண் ரோட்டில் தவழ்ந்து வந்துகொண்டிருந்ததை நல்ல வேளையாக ஒரு பெண் பார்த்து அவரை அருகிலுள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்தார்.
ஒரு மூதாட்டியை இப்படி வஞ்சித்து அவரிடமிருந்து பணத்தைத் திருடி, அவரை டிக்கியில் இரண்டு நாட்கள் இருக்கும்படி செய்து, பட்டினி போட்டு அரக்கத்தனமாக ஆள் நடமாட்டமில்லாத ஒரு கல்லறைத் தோட்டத்தின் அருகில் அம்போ என்று விட்டுவந்த இந்த அரக்க அமெரிக்கப் பெண்களை எதில் சேர்ப்பது? இவர்கள் ஆண்களுக்கு நிகராகக் குற்றம் புரிகிறார்களா?
இந்தியாவில் இப்படிப்பட்ட வக்கிர நடத்தை கொண்ட பதின்ம வயதுப் பெண்களை சமூகம் உருவாக்காது என்று நினைக்கிறேன்.
அமெரிக்கப் பெண்கள் தங்கள் உடல் அமைப்பை மீறி இயற்கை எல்லையைத் தாண்டினால் அது அமெரிக்காவின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்று நினைக்கிறேன்.







