அழகார்ந்தநாயகி

 

அழகார்ந்தநாயகி பஞ்சகம்

 

சு. ரவி

 

 

அழகினுக் கழகைத் தந்த

அழகியே, அம்மை யே!பூம்

பொழிலிடைப் பூந்துருத்திப்

பொய்யிலி நாதர், கையில்

மழுவினை, மானை ஏந்தும்

மன்னவன் பாகம் கொண்டோய்!

பழவினைக் காட்டைத் தீய்க்கும்

பதமலர்    சரணம்   தாயே!    1

 

 

தேவியே, மறைகள் நான்கும்

தேடுமெய்ப் பொருளே! ஈசன்

ஆவியே, அமுதம் தோய்ந்த

அழகியே, அரனார் பாகம்

மேவிய மேன்மையே நின்

மென்மலர்ப் பாதம் பாக்கள்

தூவிநான் தொழுது போற்றத்

துணைவர வேண்டும் தாயே!    2

 

 

பிரமனங் கிருக்க ஒட்டான்

பிறப்பெனும் சிட்சை செய்வான்!

இரக்கமில் எமனோ என்னை

இவ்விடம் இருக்க ஒட்டான்!

உரமழிந் தோய்ந்தேன்,தேய்ந்தேன்

உதையுறு பந்தாய் ஆனேன்!

அரனொரு பாகம் சேர்ந்த

அழகியே, சரணம் தாயே!       3

 

 

பொன்னிலே விருப்பம் இல்லை

பொருளிலே நாட்டம் இல்லை

உன்னையன் றின்றி யாரும்

உறவெனக் கில்லை அம்மே!

இன்னமு தழகீ! ஈசன்

இடப்புறம் கவர்ந்த தாயே!

மின்னலாய் முதுகுத் தண்டின்

மிசையெழு சுடரே!போற்றி!        4

 

 

பூரண நிலவாய்ப் பூத்த

பூவன நாதர் வாழ்வே!

நீறணி நிமலர் பாகம்

நிறைவுசெய் அழகீ! அன்ன

பூரணீ! புதுமைக் கெல்லாம்

புதுமையே! உலகுக் காதி

காரணீ! காளீ! காக்கும்

கழலிணை சரணம் தாயே!         5

 

 

Share

Comments

6 responses to “அழகார்ந்தநாயகி”

  1. அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி,  அருமறைகள் துதிக்கும்  பொற்பாத மலர் கொண்ட செல்வித‌ன்  கழலிணைகள் போற்றித் துதிபாடும் கவிதை அற்புதம். மின்னலாய் முதுகுத் தண்டின் மிசையெழும் சுடரைப் போற்றி கன்னலின் சாறெனக் கவிதந்த ரவி அவர்களுக்கு வாழ்த்துக்கள் பல. பகிர்விற்கு நன்றிகள்.

  2. சச்சிதானந்தம்

    அழகார்ந்த நாயகியை ஆழமான சொற்களால் வர்ணிக்கும் கவிதை. ர்ஹிறு.ரவி அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

  3. சச்சிதானந்தம்

    அழகார்ந்த நாயகியை ஆழமான சொற்களால் வர்ணிக்கும் கவிதை. திரு..ரவி அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

  4. மேகலா இராமமூர்த்தி

    அழகார்ந்தநாயகியைப் போற்றும் பஞ்சகம் நம் நெஞ்சகத்தில் நிலையாக வீற்றிருக்கும் வண்ணம் தேர்ந்த சொற்சுவையும், பொருட்சுவையும் கொண்டு பக்திவெள்ளம் பாய்ச்சிய கவிஞர் திரு. இரவி அவர்களுக்குப் பாராட்டுக்கள்!!

  5. ஶ்ரீவைகுண்டம் கோதண்ட ராமன் (http://www.vallamai.com/?p=34456)
    அழகார்ந்தநாயகி (http://www.vallamai.com/?p=34426)
    ஆகிய இரு பதிவுகளுக்கும் வரைபட்டுள்ள ரவியின் ஓவியங்களும் அதற்கு துணை செய்யும் கவிதை வரிகளும் அருமையிலும் அருமை. தொடர்ந்து இது போன்ற படைப்புக்களை வழங்கவும்.
    அன்புடன் 
    ….. தேமொழி 

  6. சு.ரவி

    அன்புடையீர், பாராட்டுகளும் கருத்தும் தெரிவித்து ஊக்கமளிக்கும் அனைத்து நல்லிதயங்களுக்கும் நன்றி! என் தமிழ், ஓவியம் மற்றும் இசைஆர்வத்திற்கு வித்திட்ட குருவருளுக்கும், என்னுள் இருந்து என்னை இயக்கும் திருவருளுக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
    தொடர்பு தொடரும்..

    சு.ரவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *