ஶ்ரீவைகுண்டம் கோதண்ட ராமன்
சு. ரவி
சித்திரை, நவமி, புனர்வஸு நக்ஷத்திரம் கூடிய நன்னாளில் ஶ்ரீ ராம அவதாரம் நிகழ்ந்தது.
நைந்தவர்க்கு வழிகாட்ட
வேதமந்த்ர சுகமார்க்கம்-மண்ணில்
வாழ்ந்துகாட்ட வந்த மேகம்”
என்றும்,
“விழிகளரவிந்தம்-அதில்
கருணை மகரந்தம்
விதி கதி கலங்கவரும் கோதண்டம்”
என்றும்,
நணபன், கவிஞன் க.ரவியின் சொல்வண்ணத்திலே தீட்டப்பெற்ற
கோதண்ட ராமனின் நெடிதுயர்ந்த திருக்க்கோலத்தை, ஶ்ரீவைகுண்டம் கோயிலில் உள்ளபடி
அனுமன் மற்றும், சீதை சமேதனாகக் கோட்டோவியத்தில்
முயற்சித்துள்ளேன் (இணைப்பு காண்க).
பார்க்க, படிக்க, ரசிக்க…..
தனுவினை இடக்கரத்தில்
தாங்கிடும் தடந்தோள் வீரா
இனகுலம் விளங்க வந்த
இணையிலாக் கருணை ஊற்றே!
அனுமனை வலக்கரத்தால்
அணைந்து நீ நிற்கும் கோலம்
மனமெலாம் நிறைத்ததையா!
மலரடி சரணம் ராமா!
வில்லிலே வீரம் வைத்தாய்
விழியிலே ஈரம் வைத்தாய்
சொல்லிலே வாய்மை வைத்தாய்
செயலிலே நேர்மை வைத்தாய்
இல்லிலெம் ஜானகித்தாய்
ஒருத்தியை இருத்திவைத்தாய்
கல்லிலும் உயிர்கொடுத்தாய்
கழலிணை சரணம் ராமா!
விண்திரள் கார்மேகம் போல்
விளங்கிடும் கரியமேனி
கண்களோ பொய்கை பூத்த
கமலமாய் விரிந்திருக்கும்
திண்திறல் புஜங்கள் எங்கள்
துயரெலாம் தாங்கிக் கொள்ளும்
மண்ணிலே நடந்து சென்ற
மலரடி சரணம் ராமா!
கங்கையின் ஓடக்காரன்,
குகனொரு தம்பி என்றாய்
அங்கொரு வானரர் கோன்
அவனையும் தம்பிஎன்றாய்
வெங்களம் சரண்புகுந்த
வீடணன் தம்பியானான்
இங்கெனை ஏற்றுக் கொள்ள
இன்னுமேன் தயக்கம் ராமா!
வயோதிகம் நெருங்கும் போது
வார்த்தையும் வருவதில்லை!
வியாகுலம் சூழ்ந்த நெஞ்சில்
விளைவகள் விளங்கவில்லை
அயோத்தியின் அரசே, நானுன்
அடைக்கலம், ஏற்றுக்கொள்வாய்!
தயாபரா! தாமதம் ஏன்?
தளிர்ப்பதம் சரணம் ராமா!
சு.ரவி
Vice President – IT
Alicon Castalloy Limited
Gat No: 1426, Village Shikrapur, Tal. Shirur,
Dist. Pune 412 208 Maharashtra, India
வில்லை ஏந்திய ஏந்தலுக்குச் சொல்லால் நீர் தொடுத்த பாமாலை அற்புதம். இராமகாதையையே அழகிய பாட்டோவியமாகத் தீட்டியதோடு அண்ணலுடன், அனுமனும், அன்னையும் இருமருங்கிலும் இணைந்து நிற்கும் கோட்டோவியமும் தீட்டியிருப்பது அருமை. கண்ணுக்கும், கருத்துக்கும் விருந்தளித்த கவிஞர் சு. ரவி அவர்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்!!
தாரக மந்திரத்தைப் போற்றும் கவிதை அருமை. ஓவியம் அழகோவியம். வாழ்த்துக்கள். மிக்க நன்றி, திரு.ரவி அவர்களே!!!
//வில்லிலே வீரம் வைத்தாய்,
விழியிலே ஈரம் வைத்தாய்,
சொல்லிலே வாய்மை வைத்தாய்,
செயலிலே நேர்மை வைத்தாய்//
இனிமையான வரிகள். வாழ்த்துக்கள் திரு.ரவி அவர்களே!!
அழகார்ந்தநாயகி (https://www.vallamai.com/?p=34426)
ஶ்ரீவைகுண்டம் கோதண்ட ராமன் (https://www.vallamai.com/?p=34456)
ஆகிய இரு பதிவுகளுக்கும் வரைபட்டுள்ள ரவியின் ஓவியங்களும் அதற்கு துணை செய்யும் கவிதை வரிகளும் அருமையிலும் அருமை. தொடர்ந்து இது போன்ற படைப்புக்களை வழங்கவும்.
அன்புடன்
….. தேமொழி