விஜய ஆண்டில் புத்தாண்டு வாழ்த்துக்கள்
சக்தி சக்திதாசன்
பங்குனித் தாயின் திரு உத்தரத்தில்
பதமாய்ப் பிறந்த சித்திரைத் திருமகளே
பைந்தமிழ் அகவையின் பூ மகளே
பல நலம் கொண்டு நீ உதித்தாயோ ?
முத்தமிழ் மொழியின் நல் புத்தாண்டாய்
முப்பொருள் கொண்ட சுவைக் கற்கண்டாய்
வித்தகர் விளைந்த இந் நானிலத்தில்
விடியலைக் கொண்டு நீ வந்தாயோ ?
கற்றவர் சபையில் ஒளிரும் செம்மொழியின்
காலத்தின் பெருமைகொள் சரித்திரங்கள்
யாதும் ஊரெனப் பரந்திருக்கும் இன்ப
யவ்வன மொழியின் புதிய வருடமென்றேன்
இத்தரை மாந்தர்கள் மனங்களிலெல்லாம்
சித்திரைப் பூமகள் வலம் வந்திடுவாள்
முத்திரை பதித்திடும் பெருங் காவியங்கள்
பத்தரைப் பொன்னிலும் மிகும் செல்வங்களே
விஜய ஆண்டிதன் வரவதனை நாமும்
விரிந்திடும் மனம் கொண்டு மகிழ்ந்திடுவோம்
வாட்டிய வேதனைக் காலங்கள் அனைத்தும்
ஓட்டிய வருடம் இதுவென்றாகட்டும்
கிட்டாதன அனைத்தையும் வெட்டென மறந்து
கிட்டியவை அனைத்தாலும் சட்டென மகிழ்ந்து
மனதின் மகிழ்ச்சியின் மந்திரம் ஒன்றே
மகிழ்வோம் நம்மிடம் இருப்பதைக் கொண்டு
அன்பிலும் பண்பிலும் சிறந்து விளங்கிடும்
அன்பினும் இனிய உள்ளங்கள் அனைத்துக்கும்
விஜய ஆண்டில் புத்தாண்டு வாழ்த்துக்கள்
வாழிய அனைத்தும் பெற்றே உம் வாழ்வில்
படத்துக்கு நன்றி
//வாட்டிய வேதனைக் காலங்கள் அனைத்தும்
ஓட்டிய வருடம் இதுவென்றாகட்டும்
கிட்டாதன அனைத்தையும் வெட்டென மறந்து
கிட்டியவை அனைத்தாலும் சட்டென மகிழ்ந்து…..//
அருமையான வைர வரிகள் ஐயா. புத்தாண்டில் முத்தான சிந்தனைகளை மக்கள் மனத்தில் விதைத்த சக்திதாசன் ஐயாவிற்கு பாராட்டுக்களும், புத்தாண்டு வாழ்த்துக்களும்!!
—மேகலா
புத்தாண்டில், பொன்னான சிந்தனைகளைத் தூண்டும் வைர வரிகள். பகிர்விற்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்களுக்கும் வல்லமை நண்பர்கள் யாவருக்கும் என் உளங்கனிந்த தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.
http://www.aalosanai.blogspot.in