வார ராசி பலன்!…(15-04-13 – 21-04-13)
காயத்ரி பாலசுப்ரமணியன்
மேஷம்: அண்டை அயலாரின் மத்தியில் உங்கள் மதிப்பும், கௌரவமும் பெருகும். வேலை செய்யும் இடங்களில் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். எந்த பணியும் சுமையாய் இராது. நல்ல நட்பு, இனிமையான அனுபவம் என்று பொழுது இன்பமாகச் செல்லும். மாணவர்கள் வாகனம் ஓட்டுகையில் அதிக வேகம் வேண்டாம்.நீங்கள் காட்டும் அக்கறைக்கேற்ப பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உறவுகளின் வரவால் சில தர்ம சங்கடங்களை சமாளித்து செல்ல நேரிடும். சேமிக்க வேண்டும் என்று நினைத்த பணத்திலிருந்து சற்று செலவழித்து விடுவீர்கள்.
ரிஷபம்: நீங்கள் மேற்கொள்ளும் வெளியூர்ப் பயணங்கள் லாபகரமாக இருக்கும். மனைவி வழி உறவுகளோடு கருத்து மோதலில் இறங்க வேண்டாம். வியாபாரிகள் முக்கியமான பொறுப்புக்களை தங்கள் வசம் வைத்துக் கொள்ளுதல் நல்லது. பெண்கள் மனம் விரும்பிய ஆடை,அலங்காரப் பொருட்களை வாங்கி மகிழ்வர். சில நேரங்களில் வேலை முடிவதற்கு காத்திருக்க வேண்டி வரும்.வெளி இடங்களில் குடிக்கும் நீர் மற்றும் உண்ணும் உணவு வகைகளில் மிதமாக இருக்க, அஜீரணம், வயிற்றுவலி ஆகியவை உங்கள் அருகில் வராமலிருக்கும்.
மிதுனம்: கோபத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள். நட்பும், உறவும் உங்களை விட்டு விலகாது. துவங்கிய காரியங்கள் துரிதமாக நடப்பதால், மனதில் மகிழ்ச்சி தங்கும். பெண்கள் வீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவார்கள். உத்தியோகத்தில் உடன் பணி புரிபவர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும். சிலருக்கு வெளிநாடுகளுக்கு சென்று வரும் வாய்ப்பு கிட்டும். வாகன பராமரிப்புக்கு சற்று அதிக பணம் ஒதுக்க வேண்டியிருக்கும். கூட்டுத் தொழிலில் உள்ளவர்களுக்கு கையில் கணிசமான லாபத்தோடு ஒப்பந்தங்களும் வந்து சேரும்.
கடகம்: அலைந்து திரிந்தாவது, உங்கள் வேலைகளை முடித்துவிடுவீர்கள். வீட்டில் கலகலப்பும், சந்தோஷமும் கூடும்.முக்கியமான முடிவுகளை குடும்ப உறுப்பினரோடு கலந்து ஆலோசித்து செயல்படுவது நன்று. பெண்கள் விலை உயர்ந்த பொருட்களை கவனமாகக் கையாளவும். மறதியால் மாணவர்கள் சிறு மன உளைச்சலுக்கு ஆளாகலாம். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைகளை நிதானமாகக் கையாண்டால், இழப்புக்களைத் தவிர்ப்பதோடு, உறவுகளின் அனுசரணையையும் தக்க வைத்துக் கொள்ளலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
சிம்மம்: குடும்பத்தில் நிலவி வந்த பனிப்போர் விலகும். மனதுக்கு பிரியமானவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பிள்ளைகளின் பெருமை மிகு செயல்களால் உங்கள் மதிப்பும் உயரும்.என்னதான் நெருங்கிய நட்பு என்றாலும், அடுத்தவரின் அந்தரங்க விஷயங்களில் மூக்கை நீட்டாதிருப்பதே நல்லது. கலைத்துறையினருக்கு வெளிவட்டாரப் பழக்கம் மூலம் சில சலுகைகள் வந்து சேரும். வியாபாரிகள் அரசு தொடர்பான காரியங்களில் கவனமாக செயல்படுதல் அவசியம். பண விஷயங்களில் அறிமுகம் இல்லாதவரை நம்ப வேண்டாம்.
கன்னி: நீண்ட பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற ஆசை நிறைவேறும். மாணவர்கள் மற்றவர்கள் தூண்டுதலால் கேளிக்கை, கொண்டாட்டம் என்று இறங்க வேண்டாம். மேலதிகாரிகள் உங்கள் வேலைகளை விமர்சனம் செய்யும் சூழலுக்கு ஆளாக நேரிடும். எனவே எதனையும் நாளை என்று தள்ளிப்போடாதிருப்பது புத்திசாலித்தனம். பெண்கள் வாக்கு வன்மையால் வேண்டிய காரியங்களை சாதித்துக் கொண்டு விடுவார்கள். வயதானவர்களின் சிறு உடல் உபாதைகளை உடனுக்குடன் கவனித்து விடுவது நல்லது.
துலாம்: உங்களின் கல்யாணக் கனவுகள் நனவாகும். வீட்டை சீரமைத்து அழகு படுத்துவதில் பெண்கள் மும்மரமாக இருப்பார்கள். உடன் பிறப்புக்கள் வழியில் சிறு மனஸ்தாபங்கள் அவ்வப்போது தலை காட்டும். பண வரவு சீராக இருந்தாலும், செலவுகளின் மீதும் உங்கள் கவனம் இருப்பது நல்லது. மாணவர்கள்திட்டமிட்டப்படி வேலைகளை முடிப்பதோடு கூடுதல் மதிப்பெண்ணும் பெறுவர். கலைத்துறையில் இருப்பவர்கள் சாக்கு போக்கு சொல்லி நழுவும் நபர்களிடம் எந்த பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டாம். கடிதம் மூலம் நல்ல செய்தி வரும்.
விருச்சிகம்: உயர்பதவியில் இருப்பவர்கள் ,பாரபட்சமின்றி பிறருக்கு சலுகைகளை வழங்கினால், நிறுவன வேலைகள் சுறுசுறுப்பாக செல்லும். தம்பதிகள் இடையே இருந்த மனக் கசப்பு நீங்குவதால், மீண்டும் மகிழ்ச்சி பூக்கும். பெண்கள் அக்கம் பக்கத்தாரோடு பழகுவதில் ஒரு எல்லை வைத்துக் கொண்டால், தொல்லை ஏதும் இராது. உங்கள் சாமர்த்தியத்தால் வர வேண்டிய வரவுகளை வசூல் செய்து விடுவீர்கள். குல தெய்வப் பிரார்த்தனையை மறவாமல் செய்து வாருங்கள். குடும்பத்திலும், உள்ளத்திலும் நிம்மதி நிலைத்திருக்கும்.
தனுசு: துவங்கிய காரியங்கள் துரிதமாக நடைபெற, இதமான போக்கைக் கையாளும் வியாபாரிகளுக்கு அனைத்திலும் வெற்றிதான்! உறவினர் வருகையால், இல்லத்தில் பரபரபரப்பும் மகிழ்ச்சியும் கூடும். மாணவர்கள் சோம்பேறித்தனத்தை மூட்டை கட்டி வைத்து விட்டு செயல்பட்டால், பாடங்கள் சுமையாய் தோன்றாது. கர்ப்பிணிப் பெண்கள் அவ்வப்போது தேவையான மருத்தவ பரிசோதனைகளை மேற்கொள்ள, பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும். பெண்கள் இரவலாகப் பொருள்களை தருவதையும், பெறுவதையும் தவிர்த்தல் நலம்.
மகரம்: அரசுத் தொடர்பான காரியங்கள் நினைத்தவாறே முடியும். பெண்களுக்கு இல்லத் தேவைகளை இடுகட்டும் அளவிற்கு பணப்புழக்கம் இருக்கும். புதிதாக பணியில் அமர்ந்திருப்பவர்கள், வேண்டாத விவாகாரங்களிலிருந்து தள்ளியே இருங்கள். பொது வாழ்வில் இருப்பவர்கள், உடனிருப்பவர்களால் சில நெருக்கடிகளுக்கு ஆளாக நேரிடும். வேலையில் இருப்பவர்கள் பிறரிடமிருந்து பொறுப்புக்களை பெறும் போதும், தரும் போதும் விழிப்புடன் இருப்பது அவசியம். அதிக அலைச்சல், அதிக வேலை இரண்டும் உங்கள் உற்சாகத்தைக் குறைக்கலாம்.
கும்பம்: புதிய ஒப்பந்தங்கள் கலைஞர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். மாணவர்கள் சின்ன சின்னப் பிரச்னைகளுக்கு உணர்ச்சிவசப்படுவதை தவிர்த்தால், கல்வியில் அதிக கவனம் செலுத்தலாம். பெற்றோர்கள் பிள்ளைகள் விஷயத்தில் இதமான அணுகு முறையைக் கையாண்டால், பல பரச்னைகளுக்கு உடனடியான தீர்வு கிட்டும். பெண்கள் வரவுக்கு ஏற்ற செலவு என்பதில் கவனமாக இருந்தால், கடன் தொல்லையும் ஓரளவு கட்டுக்குள் இருக்கும். அனுசரித்து செல்லும் தம்பதியர் நடுவே அன்பும், பாசமும் பெருகும். புதியவரிடம் ரகசியங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
மீனம்: புது உறவுகளின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், கலகலப்பும் கூடும். பிள்ளைகள் உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வந்தால், மருத்துவச் செலவுகள் கணிசமாகக் குறையும். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவால், வேலைகளை ஆர்வத்துடன் செய்து முடிப்பீர்கள். பெண்களுக்கு குடும்பத்தாரோடு புதிய இடங்களுக்கு சென்று மகிழும் வாய்ப்பு கூடி வரும்.முக்கிய பொறுப்பு வகிப்பவர்கள், வீண் பழிகளைத் தவிர்க்க, கூடுதல் கவனத்துடனும், திறமையுடனும் செயல்பட்டு வருவது அவசியம்.